بسم الله الرحمن الرحيم
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. ஸலவாத்தும், ஸலாமும் அகிலத்திற்கு அருட்கொடையாக வந்த எங்கள் உயிரிலும் மேலான இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீது உண்டாவதாக.
இஸ்லாம் என்ற ஒன்றே அல்லாஹ்விடமிருந்து கிடைக்கப் பெற்ற மார்க்கமாகும். இதுவே உலகில் தோன்றிய முதல் மனிதர் தொடக்கம் உலகில் தோன்ற இருக்கும் இறுதி மனிதர்வரை அனைவராலும் பின்பற்றப்பட வேண்டிய சீரான மார்க்கமாகும்.
அல்லாஹ்கூறுகிறான்: 'நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம்தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும். (அல்குர்ஆன் 03:19),
“நிச்சயமாக நாம்தாம் “தவ்ராத்"தையும் இறக்கிவைத்தோம்; அதில் நேர்வழியும் பேரொளியும் இருந்தன. (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் வழிப்பட்ட நபிமார்கள், யூதர்களுக்கு அதனைக் கொண்டே (மார்க்கக்) கட்டளையிட்டு வந்தார்கள்; இறை பக்தி நிறைந்த மேதை(ரப்பனிய்யூன்)களும், அறிஞர்(அஹ்பார்)களும்- அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தைப் பாதுகாக்க கட்டளையிடப்பட்டவர்கள் என்பதனாலும், இன்னும் அவ்வேதத்திற்குச் சாட்சிகளாக அவர்கள் இருந்தமையாலும் அவர்கள் (அதனைக் கொண்டே) தீர்ப்பளித்து வந்தார்கள்;” (அல்குர்ஆன் 05:44).
ஏகத்துவத்தின் மூலம் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு, அடிபணிதல், வணக்க வழிபாடுகளின் மூலம் அவனை நெருங்குதல், இணைவைப்பை விட்டும் நீங்கியிருத்தல் போன்றன இஸ்லாம் என்ற சொல்லுக்கான பொதுவான கண்ணோட்டமாக இருக்கின்றன.
முஹம்மத் (ஸல்) அவர்களின் வருகைக்குப்பின் இஸ்லாம் என்பது பிரத்தியேகமான கண்ணோட்டத்தில் நோக்கப்படுகிறது. அல்லாஹ் அவருக்கு வழங்கிய நேரான வழியை மக்கள் மத்தியில் பரவச் செய்து, அதனைப் பின்பற்றும் மக்களே முஸ்லிம்கள் என அறிவித்தமை இம்மார்க்கத்தின் பிரத்தியேகத் தன்மையை எடுத்துக்காட்டுகிறது. இதற்கு முன்னால் இஸ்லாம் என அல்லாஹ்வால் மக்களுக்கு அறிவிக்கப்பட்ட செய்திகள் அனைத்தும் ரத்துச் செய்யப்பட்டு, இறுதியாக வழங்கப்பட்ட இம் மார்க்கமே அனைவருக்குமான பொது மார்க்கமாக பிரகடனப்படுத்தப்பட்டது.
அல்லாஹ் கூறுகிறான்:”இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக்கொள்ளப் படமாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில்தான் இருப்பார்.” (அல்குர்ஆன் 03:85).
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஹம்மதின் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக, இச்சமூகத்தில் யூதர்களோ, கிறிஸ்தவர்களோ நான் சொல்வதைக் கேட்காமல், நான் எதைக்கொண்டு அனுப்பப்பட்டேனோ அதை விசுவாசம் கொள்ளாமல் மரணித்தால் அவர் நரகவாசிகயாக மாறிவிடுவார்”. (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 153.)
இவ்வாறு அல்லாஹ்வால் வழங்கப்பட்ட மார்க்கத்தை பின்பற்றுபவர்களுக்கு முஸ்லிம்கள் என அவன் பெயர் சூட்டியுள்ளான், அல்லாஹ் கூறுகிறான், இதுதான் உங்கள் பிதாவாகிய இப்ராஹீமுடைய மார்க்கமாகும்; அவன்தாம் இதற்கு முன்னர் உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான்.” (அல்குர்ஆன் 22:78).
எனினும் படைப்பினங்கள் தமக்கு மத்தியில் கருத்து வேற்றுமைப்பட்டு, பிரிந்து செல்வார்கள் என்ற அல்லாஹ்வின் நியதிக்கமைய பிரிவினைகள் தோற்றம் பெற்றதால் வெற்றிபெற்ற கூட்டமாக அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாஅத்தினர் பிரகடனப்படுத்தப்பட்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:”அறிந்துகொள்ளுங்கள், உங்களுக்கு முன் சென்ற வேதக்காரர்கள் எழுபத்தி இரண்டு பிரிவினர்களாகப் பிரிந்தார்கள். இந்த (எனது) சமூகம் எழுபத்தி மூன்று பிரிவினர்களாகப் பிரிவார்கள். அதில் எழுபத்தி இரண்டு கூட்டத்தினர் நரகில் நுழைவர். ஒரு கூட்டத்தினரே சுவனத்தில் நுழைவார்கள். அவர்கள் தான் நானும் என்னுடைய தோழர்களும் கடைபிடிக்கும் வழியைப் பின்தொடர்பவர்கள்". (அறிவிப்பவர்: முஆவியா இப்னு அபூ ஸுப்யான் (ரலி ), நூல்: அஹ்மத் 16937, அபூதாவுத் 4597).
இந்த அஹ்லுஸ் ஸுன்னாக்கள் அல்குர்ஆனையும், சரியான நபிமொழிகளின் அடிப்படையில் அமைந்த ஸுன்னாவையும் எவ்வித மனோ இச்சைகளுக்கும், சுய கருத்துக்களுக்கும், பகுத்தறிவு வாதத்திற்கும், புதிதாக உருவாக்கிக் கொள்ளும் மனோபாவத்திற்கும் உட்படாமல் ஸஹாபாக்களும், தாபியீன்களும், தபஉத்தாபியீன்களும் விளங்கிக் கொண்ட விதத்தில் விளங்கி, செயற்படுபவர்கள். இவர்கள் ஸ்தாபகரோ, தலைவரோ. கருத்தியல் நிபுணத்துவமோ அற்ற முற்றிலும் அல்குர்ஆன், ஸுன்னாவை மாத்திரமே அடிப்படையாகக் கொண்ட பிரிவினர் ஆவார்கள்.
இவர்கள் பற்றி நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார்கள் “என் சமுதாயத்தினரில் ஒரு குழுவினர் அல்லாஹ்வின் கட்டளையைச் செயல்படுத்திய வண்ணமே இருப்பார்கள். அவர்களுக்கு இடைஞ்சல் செய்பவர்கள் அவர்களுக்குத் தீங்கிழைக்கமுடியாது. அவர்களை எதிர்ப்பவர்களும் அவர்களுக்குத் தீங்கு செய்ய முடியாது. இறுதியில், அவர்கள் அதே நிலையில் நீடித்திருக்க, அல்லாஹ்வின் ஆணை (இறுதிநாள்) அவர்களிடம் வரும்.” (அறிவிப்பவர்: முஆவியா (ரலி), நூல்: புஹாரி 3641, முஸ்லிம் 1037, 4955).
அஸ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தினர்:
இமாம் நாஸிர் அல் ஸஃதி (ரஹ்) கூறுவதாவது: தெளஹீத், இறைத்தூது, விதி, ஈமானின் கடமைகள் போன்ற விஷயங்களில் நபி(ஸல்) அவர்களும், நபித்தோழர்களும் சில அடிப்படைகளைப் பின்பற்றி நடந்துள்ளனர். எனவே, பித்அத்துக்களில் ஈடுபடாமல் அவர்கள் பின்பற்றிய அதே அடிப்படைக் கொள்கைளைப் பேணி நடப்பவர்கள் அனைவரும் அஸ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தினர் ஆவர். (நூல்: அல்பதாவா அல்ஸஃதிய்யா: பக்கம் 63).
இதுபற்றி பல அறிஞர்களும் கூறியுள்ள கருத்துக்களை ஆராய்ந்து பார்க்கும்போது அல்குர்ஆன், ஹதீஸ், ஸஹாபாக்கள் மத்தியில் முரண்பாடில்லாத முன்மாதிரிகள், இஜ்மாஃ ஆகிய அடிப்படைகளைப் பின்பற்றி நடந்த நம் முன்னோர்களும், இன்றுவரை அவைகளைப் பின்பற்றுகின்ற அனைவரும் அஹ்லுஸ் ஸுன்னா என்றழைக்கப்படுவர். அவ்விஷயத்தில் உலமாக்கள், பாமரர்கள் என்ற எந்த வேறுபாடும் இல்லை.
ஒரு மனிதன் அஹ்லுஸ் ஸுன்னாவைச் சார்ந்தவர் என்று சொல்வதற்கு அவரிடம் மூன்று அடிப்படைகள் இருக்க வேண்டும். அவையாவன:
1) குர்ஆன், ஹதீஸ் பற்றிய அறிவு.
2) இவ்வறிவின் அடிப்படையில் அமல் செய்தல்,
3) வழிகெட்ட கொள்கைகள், பித்அத்துக்கள் போன்றவற்றில் ஈடுபடாதிருப்பதோடு, அவைகளில் ஈடுபடுபவர்களிடமிருந்து விலகி இருத்தல்.
எனவே, நபிவழி, ஸஹாபாக்களின் முன்மாதிரிகள் போன்ற இரண்டையும் புறக்கணிப்பவர்களோ, பித் அத்துக்களில் ஈடுபடுபவர்களோ அஹ்லுஸ் ஸுன்னா என்றழைக்கப்பட எந்த அருகதையும் அற்றவர்களே! மேலும், இவர்கள் அஹ்லுஸ் ஸுன்னாவின் எல்லையிலிருந்து வெளியேறியவர்களாகவே கருதப்படுவர்.
அஹ்லுஸ் ஸுன்னாக்களான இவர்கள் அனைத்திலும் நடுத்தரத்தைக் கையாள்பவர்கள்:
அல்லாஹ்வின் பண்புகளை ஒப்புவமை செய்யவோ, மறுத்திடவோ, மாற்று விளக்கம் கொடுத்திடவோ அல்லது அதன்மீது கேள்வி எழுப்பிடவோ மாட்டார்கள்.
அல்லாஹ்வின் செயற்பாடுகளை விளங்குவதில் ஜஹமிய்யாக்களையோ, கத்ரிய்யாகளையோ, ஜபரிய்யாக்களையோ, முஃதஸிலாக்களையோ, ஸுஃபியாக்களையோ அல்லது அஷ்அரிய்யாக்களையோ சார்ந்திருக்கமாட்டார்கள்.
ஈமானை விளங்குவதில் முர்ஜிஆக்களையும், வாதிய்யாக்களையும் சார்ந்திருக்கமாட்டார்கள்.
ஸஹாபாக்கள் விடயத்தில் ஷீஆக்களையும் ஹவாரிஜ்களையும் சார்ந்திருக்க மாட்டார்கள்.
அல்லாஹ்வை ஏகத்துவப்படுத்தி வணங்கி வழிபடுவதிலும் அவனிடம் வஸீலா தேடுவதிலும் கப்ரு வணங்கிகளின் வழிமுறையை பின்பற்ற மாட்டார்கள்.
இத்தகைய வழிகெட்ட, மோசமான, மனிதக் கையூடல்கள் மூலம் மாசு படிந்த கொள்கைகளை விட்டும் அஹ்லுஸ்ஸுன்னாவல் ஜமாஆ எனும் தலைவரோ, ஸ்தாபகரோ அற்ற இக்கொள்கையினர் பரிசுத்தமானவர்கள்.
இவர்கள் வெவ்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு இடங்களில் கூட்டமாக வாழ்ந்தாலும், தனி மனிதனாக வாழ்ந்தாலும் இவர்கள் அனைவரும் அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஆ எனும் ஒரே கூட்டத்தைச் சேர்ந்தவர்களாகவே கருதப்படுவர்.
அல்லாஹ் இவர்களுக்கு சீரிய அறிவைக் கொடுத்து, உள்ளத்தில் ஒளியை உதிக்கச்செய்து, சிறந்த மக்களாக இவர்களை ஆக்கியிருப்பது இவர்களுக்கான அல்லாஹ்வின் அருள் கிடைக்கப் பெற்றுள்ளது என்பதை எடுத்துக் காட்டுகிறது.
அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத்தினரின் அடிப்படையான கொள்கைகள் மற்றும் பண்புகள் - கேள்வி பதில் வடிவில் சுருக்கமாக
கேள்வி: முஸ்லிம்களில் நரகை விட்டும் பாதுகாப்பும் பெறும் கூட்டத்தினர் யாவர்?
நரகை விட்டும் பாதுகாப்புப் பெறும் கூட்டத்தினர் அஹ்லுஸ்ஸுனா வல் ஜமாத்தினர் ஆவார்கள்.
கேள்வி: அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாத்தினர் என்போர் யார்?
நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், நம்பிக்கை சார்ந்த வெளிப்படையான, உள்ரங்கமான அனைத்து விடயங்களையும் அச்சொட்டாகப் பின்பற்றுபவர்களே அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத்தினர் ஆவார்கள். நபி (ஸல்) அவர்கள் கொண்டு வந்த, தமக்கு முன்சென்றோர் செய்த சரியான இஸ்லாமிய வாழ்கை நெறியை இவர்கள் பின்பற்றுகின்றனர். இதனாலே இவர்கள் “ஸலபிகள்' எனவும் அழைக்கப்படுகின்றனர்.
கேள்வி: அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத்தினர் என இவர்களுக்குப் பெயர் வரக் காரணம் யாது?
“அஹ்லுஸ்ஸுன்னா' (ஸுன்னாவைப் பின்பற்றுபவர்கள்) என்ற பெயர், இவர்கள் நபி (ஸல்) அவர்களின் நேரிய வழியைப் பின்பற்றுவதால் வைக்கப்பட்டது. “அஹ்லுல் ஜமாஅத்” (கூட்டாக இருப்பவர்கள்) என்ற பெயர், ஸுன்னாவைப் பின்பற்றுவதில் ஒன்று சேர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் வைக்கப்பட்டது.
கேள்வி: இவர்கள் “ஸலபுகள்” என்று அழைக்கப்படுவதற்கான காரணம் யாது?
இவர்கள் தமக்கு முன்னிருந்த இஸ்லாமிய தலைசிறந்த மேதைகள் அல்குர்ஆனையும், ஹதீஸையும் பின்பற்றிய வழியில் பயணிப்பவர்கள். அதற்காக வேண்டி அழைப்புப் பணி புரிபவர்கள். அதன் படி நடப்பவர்கள். இதனாலேயே இவர்கள் ஸலபுகள் என்ற பெயரால் அழைக்கப்படுகின்றனர்.
கேள்வி: அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத்தினர் நரகை விட்டும் பாதுகாப்பும் பெற்றவர்கள் என்பதற்கான ஆதாரம் யாது?
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “யஹுதிகள் எழுபத்தியொரு கூட்டமாகப் பிரிந்தார்கள். கிறிஸ்தவர்கள் எழுபத்திரண்டு கூட்டமாகப் பிரிந்தனர். இந்த சமுதாயம் எழுபத்தி மூன்று கூட்டங்களாகப் பிரிவார்கள். ஒரு கூட்டத்தினரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் நரகிலே இருப்பார்கள்”. அப்போது, “அவர்கள் யார் அல்லாஹ்வின் தூதரே?” என வினவப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நானும், எனது தோழர்களும் இன்று இருக்கும் இதே நிலையில் இருப்பவர்கள்” எனக் கூறினார்கள்.” இன்னொரு அறிவிப்பில் “கூட்டத்தினர் என அறிவிக்கப்பட்டுள்ளது. (ஆதாரம்.திர்மிதி 2641, அபூதாவுத் 4596, இப்னு மாஜா 3996]
கேள்வி: அல்லாஹ்வின் உயர்வு (உலுவ்வு) மற்றும் நிலைபெறல் (இஸ்திவாஃ) முதலிய பண்புகளை நிறுவுவதில் அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத்தினரின் நிலைப்பாடு யாது?
அல்லாஹ்வின் உயர்வு மற்றும் அவனின் நிலைபெறல் ஆகிய பண்புகளை ஸஹாபாக்களும், முன் சென்ற அல்லாஹ்வின் தூதர்களும் நிறுவியது போன்றே இவர்களும் நிறுவுகின்றனர். அல்லாஹ் தனது அனைத்துப் படைப்பினங்களுக்கும் மேலால் வானத்தில் உள்ளான். அவன் தனது மகத்துவத்திற்கும், தனக்கு தகுந்தாற் போலும் தனது சிம்மாசனத்தில் அமர்ந்துள்ளான். அல்லாஹ்வின் பண்புகளோடு அவனது படைப்புக்கள் என்றும் ஒப்பாக முடியாது.
கேள்வி: அல்லாஹ்வின் உயர்வை (உலுவ்வு) உறுதிப்படுத்துவதற்கு அல்குர்ஆனில் உள்ள ஆதாரங்கள் யாது?
ஆம், அதிகமான அல்குர்ஆன் வசனங்கள் இருக்கின்றன. அல்லாஹ் கூறுகிறான், “வானத்தில் உள்ளவன் பூமியில் உங்களைப் புதையச் செய்வதில் பயமற்று இருக்கிறீர்களா?” (அல்குர்ஆன் 67:16), மேலும், “மிக உயர்ந்த உமது இறைவனின் பெயரைத் துதிப்பீராக!” (அல்குர்ஆன் 87:01].
கேள்வி: அல்லாஹ்வின் உயர்வை (உலுவ்வு) உறுதிப்படுத்துவதற்கு ஸுன்னாவில் இருந்து ஒர் ஆதாரத்தைக் குறிப்பிடுக?
ஓர் அடிமைப் பெண்ணிடம் “அல்லாஹ் எங்கே இருக்கிறான்?” என நபி (ஸல்) அவர்கள் வினவினார்கள். அதற்கு அவள், “வானத்தில் இருக்கிறான்” என பதிலளித்தாள். பின்னர், “நான் யார்?” என நபி (ஸல்) அவர்கள் வினவ, “நீங்கள் அல்லாஹ்வின் தூதர்' என பதிலளித்தாள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், “இவளை உரிமையிடுங்கள். இவள் இறை விசுவாசியாக (முஃமினாக) இருக்கிறாள்" எனக் கூறினார்கள். (ஆதாரம் :முஸ்லிம் 537]
கேள்வி: அல்லாஹ்வின் நிலைபெறலை (இஸ்திவாஃ) உறுதிப்படுத்துவதற்கான ஆதாரங்கள் யாவை?
அல்லாஹ் கூறுகிறான், “அளவற்ற அருளாளன் அர்ஷின் மீது நிலைபெற்றுவிட்டான்.” (அல்குர்ஆன் 20:05), மேலும், “பின்னர் அர்ஷின் மீது நிலைபெற்றுவிட்டான்” (அல்குர்ஆன் 07:54). இதே வாசகம் அல்குர்ஆனில் ஆறு இடங்களில் இடம்பெற்றுள்ளது. (அல்குர்ஆன் 10:03, 13:02, 25:59, 32:04, 57:04)
கேள்வி: நிலைபெறல் (இஸ்திவாஃ) என்பதன் அர்த்தம் யாது?
இதற்கு உயர்வு என்ற அர்த்தமும் உண்டு. சிம்மாசனத்தின் மீது நிலைகொண்டு விட்டான் என்றும் பொருள் கொள்ளலாம். இவ்வாறே அறபு மொழியில் இதற்கு பொருள் கொள்ளப்படும். ஆனால் இதன் முறைமை தான் எவருக்கும் தெரியாது. இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள், “சிம்மாசனத்தின் மீது நிலைகொள்ளல் என்பது அறிய முடியுமான விடயமாகும். அதன் முறைமை அறிய முடியாத விடயமாகும். அதனை நம்புவது கட்டாயமாகும். அதனைப் பற்றி வினா எழுப்புவது பித்அத்தாகும்”. இதுவே அல்லாஹ்வின் பண்புகள் அனைத்திற்கும் நிறுவப்படும் பொது விதியாக இருக்கின்றது. அல்லாஹ்வின் பண்புகளின் பொருள் அனைவராலும் விளங்கிக் கொள்ள முடியும். ஆனால் அதன் முறைமை எவராலும் அறிந்திட முடியாது.
கேள்வி: அல்குர்ஆன் தொடர்பான அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாத்தினரின் நிலைப்பாடு யாது?
அல்குர்ஆனின் எழுத்துக்களும், அதன் பொருள்களும் அல்லாஹ்வின் வார்த்தைகளாகும். இது படைக்கப்படாமல் இறக்கப்பட்டது. அல்லாஹ்விடமிருந்து வந்த இவ் வேதம் அவனிடமே திரும்பவும் சென்று விடும். அல்குர்ஆனில் உள்ள வார்த்தைகளை அல்லாஹ் யதார்த்தமாகவே பேசியுள்ளான். அதனை ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கு வழங்கி, முஹம்மத் (ஸல்) அவர்களின் உள்ளத்தில் இறக்கி வைத்தான் என்பதுவே அல்குர்ஆன் தொடர்பில் இவர்களின் நிலைப்பாடாகும்.
கேள்ளி: அல்குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தை என்பதற்கான ஆதாரம் யாது?
அல்லாஹ் கூறுகிறான், “இணை கற்பிப்போரில் யாரும் உம்மிடம் அடைக்கலம் தேடினால் அல்லாஹ்வின் வார்த்தைகளைச் செவியுறுவதற்காக அவருக்கு அடைக்கலம் அளிப்பீராக” (அல்குர்ஆன் 09:06). இங்கு அல்லாஹ்வின் வார்த்தைகள் என்ற வாசகம் அல்குர்ஆனையே குறிப்பிடுகின்றது.
கேள்வி: அல்குர்ஆன் படைக்கப்படாமல் இறக்கப்பட்டது என்பதற்கான ஆதாரம் யாது?
அல்குர்ஆன் இறக்கப்பட்டது என்பதை அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான், “(பொய்யையும் உண்மையையும்) பிரித்துக் காட்டும் வழி முறையை அகிலத்தாருக்கு எச்சரிக்கை செய்யக் கூடியதாக தனது அடியார் மீது இறக்கியவன் பாக்கியமானவன்.”(அல்குர்ஆன் 25:01)
அல்குர்ஆன் படைக்கப்படவில்லை என்பதை அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்,
“கவனத்தில் கொள்க! படைத்தலும், கட்டளையும் அவனுக்கே உரியன.” (அல்குர்ஆன் 07:54).
கட்டளையை அல்லாஹ் இங்கு வேறுபிரித்துக் கூறுவதன் மூலம், அது படைப்பில் சேராது என்பது தெளிவாகின்றது. அல்குர்ஆன் அல்லாஹ்வின் கட்டளையாகும். இதனை பின்வரும் வசனம் தெளிவுபடுத்துகின்றது, “இவ்வாறே நமது கட்டளையில் உயிரோட்டமானதை உமக்கு அறிவித்தோம்.” (அல்குர்ஆன் 42:52).
அல்லாஹ்வின் பேச்சு என்பது அவனது பண்புகளில் ஒன்றாகும். அல்லாஹ்வின் பண்புகள் என்றுமே படைக்கப்பட முடியாது.
கேள்வி: மறுமையில் அல்லாஹ்வை பார்க்கும் விடயத்தில் அஹலுஸ்ஸுன்னா வல் ஜமாஅத்தினரின் நிலைப்பாடு யாது?
இறை விசுவாசிகள் மறுமை நாளிலும், சுவனத்திலும் அல்லாஹ்வை வெற்றுக் கண்களால் நேரடியாகக் காண்பார்கள் என்பதே இவர்களின் நிலைப்பாடாகும்.
கேள்வி: மறுமை நாளில் இறை விசுவாசிகள் அல்லாஹ்வைக் காண்பார்கள் என்பதற்கான ஆதாரம் யாது?
அல்லாஹ் கூறுகிறான், “அந்நாளில் சில முகங்கள் மலர்ந்து இருக்கும். தமது இறைவனைப் பார்த்துக் கொண்டிருக்கும்.” (அல்குர்ஆன் 75:22-23), மேலும், “நன்மை செய்தோருக்கு நன்மையும், (அதை விட) அதிகமாகவும் உண்டு.” (அல்குர்ஆன் 10:26).
ஹதீஸில் இடம்பெற்றுள்ளவாறு, நன்மை என்பது சுவனத்தையும், அதிகம் என்பது அல்லாஹ்வின் திருமுகத்தைக் காண்பதையும் குறிக்கின்றது. (ஆதாரம் :முஸ்லிம் 181).
கேள்வி: நம்பிக்கை (ஈமான்) கொள்வதில் அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஇத்தினரின் நிலைப்பாடு யாது?
உள்ளத்தால் ஏற்று, வாயால் மொழிந்து, உடல் உறுப்புக்களால் செயற்படுத்துவதையே இவர்கள் இஸ்லாமிய நம்பிக்கை (ஈமான்) எனக் கூறுகின்றனர். வணக்க வழிபாடுகள் செய்வதன் மூலம் இது அதிகரிக்கின்றது. பாவ காரியங்களை செய்வதன் மூலம் குறைகின்றது. இதுவே இஸ்லாமிய நம்பிக்கை சார்ந்த இவர்களின் நிலைப்பாடாகும்.
கேள்வி: சொல்லும், செயலும் இஸ்லாமிய நம்பிக்கையை (ஈமானை) சார்ந்தது என்பதற்கான ஆதாரம் யாது?
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “இஸ்லாமிய நம்பிக்கை (ஈமான்) என்பது எழுபதுக்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டுள்ளது. அதில் மிகவும் சிறந்தது லா இலாஹ இல்லல்லாஹ்” என்று கூறுவதாகும். அதில் மிகவும் கீழ் நிலையில் உள்ளது பாதையில் நோவினை ஏற்படுத்தும் விடயங்களை நீக்குவதாகும். வெட்கம் இஸ்லாமிய நம்பிக்கையின்(ஈமானின்) ஒரு கிளையாகும்” (ஆதாரம் புஹாரி 09, முஸ்லிம் 35).
கேள்வி: இஸ்லாமிய நம்பிக்கை (ஈமானை) அதிகரிக்கும், குறைவடையும் என்பதற்கான ஆதாரம் யாது?
அல்லாஹ் கூறுகிறான், “நம்பிக்கை கொண்டோர் நம்பிக்கையை அதிகமாக்கிக் கொள்ளவும் (இவ்வாறு அமைத்தோம்)” (அல்குர்ஆன் 74:31). நம்பிக்கை அதிகரிக்கும் என்பதற்கான ஆதாரம் அது குறையும் என்பதற்கும் ஆதாரமாகவும் அமையும்.
கேள்வி: ஜமாஅத்தோடு ஒன்றியிருக்க வேண்டுமென்பதில் அஹலுஸ்ஸுன்னா வல் ஜமாஅத்தினரின் நிலைப்பாடு யாது? ஆதாரத்துடன் குறிப்பிடுக.
முஸ்லிம்கள் அனைவரும் ஒரே கூட்டமாகவே இருக்க வேண்டும். என்றும் அவர்கள் பிரிந்து விடக் கூடாது. இது கட்டாயக் கடமை என இவர்கள் நம்புகின்றனர். அல்லாஹ் கூறுகிறான், “அல்லாஹ்வின் கயிற்றை (அல்குர்ஆனை) அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்” (அல்குர்ஆன் 03:103)
கேள்வி: தலைவர்களுக்குக் கட்டுப்பட்டு நடந்திட வேண்டுமென்பதில் அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்தினரின் நிலைப்பாடு யாது? ஆதாரத்துடன் குறிப்பிடுக.
தலைவர்கள் கெட்டவர்களாக இருப்பினும் நல்ல விடயங்களில் அவர்களுக்குக் கட்டுப்பட்டு நடப்பது கட்டாயக் கடமை என்பதே இவர்களின் நிலைப்பாடாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “விருப்பிலும், வெறுப்பிலும் ஓர் முஸ்லிம், தலைவருக்குக் கட்டுப்படுதல் அவசியமாகும். அவர் பாவமான காரியத்தைச் செய்வதற்கு ஏவினால், அப்போது அவர்களுக்குக் கட்டுப்படுவது அவசியமாகாது” (ஆதாரம் :புஹாரி 7144 முஸ்லிம் 1839).
கேள்வி: பெரும் பாவங்கள் புரிவோரின் விடயத்தில் அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஇத்தினரின் நிலைப்பாடு யாது? ஆதாரத்துடன் குறிப்பிடுக.
பெரும் பாவங்கள் புரிபவர்கள் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிடவோ, நரகில் நிரந்தரமாக தங்கிடவோ மாட்டார்கள். அவரின் விடயத்தை அல்லாஹ்வே பொறுப்பேற்பான். தான் நாடினால் அவரின் பாவத்திற்கேற்ப தண்டிப்பான். தான் நாடினால் மன்னித்திடுவான் என்பதே இவர்களின் நிலைப்பாடாகும். அல்லாஹ் கூறுகிறான், “தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள பாவத்தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான்.” (அல்குர்ஆன் 04:48]
கேள்வி: ஒர் முஸ்லிமை இறை நிராகரிப்பாளர் (காபிர்) எனக் கூறுவதன் சட்டம் யாது? அதற்கான ஆதாரத்தைக் குறிப்பிடுக.
ஓர் முஸ்லிமை இறை நிராகரிப்பாளன் (காபிர்) எனக் கூறுவது தடுக்கப்பட்டதாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “யார் ஓர் முஸ்லிமை இறை நிராகரிப்பாளன் (காபிர்) எனக் கூறுகிறானோ, அவன் அவனைக் கொன்றவன் போலாவான்” (ஆதாரம் : புஹாரி 6105).
கேள்வி: ஸஹாபாக்கள் விடயத்தில் அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத்தினரின் நிலைப்பாடு யாது?
ஸஹாபாக்கள் மீது குரோதம், கோபம், எதிர்ப்பு போன்ற எதையும் உள்ளத்தளவில் வைத்துக்கொள்ள மாட்டார்கள். குத்திக்காட்டல், ஏசுதல் போன்ற எதையும் வாயளவில் கூட பேச மாட்டார்கள். அவர்கள் மீது பாசமாய் இருப்பார்கள். அவர்களை பொருந்திக்கொண்டு, அவர்களை நல்ல முறையில் பின்பற்றுவார்கள். அல்லாஹ் கூறிய பிரகாரம் அவர்களுக்காகப் பிரார்த்திப்பார்கள். “எங்கள் இறைவா! எங்களையும், நம்பிக்கையுடன் (ஈமானுடன்) எங்களை முந்தி விட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக!” (அல்குர்ஆன் 59:70.)
கேள்வி: நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தார்கள் விடயத்தில் அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத்தினரின் நிலைப்பாடு யாது?
இவர்கள் நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தார் மீது இரண்டு விடயத்திற்காக பாசமாக இருக்கின்றனர்.
1 அவர்கள் அனைவரும் அல்லாஹ்வை நம்பியவர்கள் (ஈமான்கொண்டவர்கள்).
2- அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். என்றாலும் அல்லாஹ்வை விட்டுவிட்டு இவர்களை வணங்கும் அளவிற்கு இவர்கள் விடயத்தில் எல்லை மீறிச் செயற்படவோ, அவர்கள் அனைவரும் பாவம் செய்வதிலிருந்தும் பரிசுத்தமானவர்கள் என்று நம்பவோ மாட்டார்கள்.
கேள்வி: சேர்ந்து நடத்தல் (அல்வலா), விலகி நடத்தல் (அல்பரா) என்ற விடயத்தில் அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத்தினரின் நிலைப்பாடு யாது?
சேர்ந்து நடத்தல், விலகி நடத்தல் ஆகிய இரண்டுமே இஸ்லாமிய நம்பிக்கை சார்ந்த அம்சங்களாகும். அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்ற வாசகமும் இதனையே வேண்டி நிற்கின்றது.
சேர்ந்து நடத்தல் என்பது, இறை நம்பிக்கையாளர்களோடு (முஃமின்களோடு) மார்க்கத்திற்காக பாசமாக இருப்பதையும், அவர்களோடு ஒட்டி உறவாடுவதையும் குறிக்கின்றது.
விலகி நடத்தல் என்பது, இறை நிராகரிப்பாளர்களின் (காபிர்களின்) இறை நிராகரிப்பு (குப்ர்) எனும் விடயத்தை எதிர்த்தலையும், அதை விட்டும் விலகி இருத்தலையும், அவர்களுக்கென்றே இருக்கும் சிறப்பம்சங்களை தாமும் செய்து, அவர்களுக்கு ஒப்பாகுவதை விட்டும் தூரமாகி இருப்பதையும் குறிக்கின்றது.
இறை நிராகரிப்பாளர்களை விட்டும் விலகியிருத்தல் என்பதற்கு, அவர்களுக்கு அநீதமிழைக்க வேண்டுமென்றோ, அவர்கள் மீது எல்லை மீறிச் செயற்பட வேண்டுமென்றோ, அவர்களோடு உறவாடுவதை துண்டித்திட வேண்டுமென்றோ பொருள் கொள்ளக் கூடாது.
கேள்வி: ஈஸா (அலை) அவர்கள் விடயத்தில் அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத்தினரின் நிலைப்பாடு யாது?
ஈஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும், தூதருமாவார்கள். இவர் வணங்கப்பட முடியாத ஓர் அடிமை, பொய்ப்பிக்கப்பட முடியாத ஓர் தூதர், இவர் ஆதம் (அலை) அவர்களின் பரம்பரையில் வந்த ஓர் மனிதர், தந்தையின்றி, தாயின் மூலமாக படைக்கப்பட்ட ஓர் படைப்பு என்பதே இவர்களின் நிலைப்பாடாகும்.
கேள்வி: உலகில் மீதமிருக்கும் மார்க்கங்களான யூத, கிறிஸ்தவர்களின் மதங்கள் பற்றி அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத்தினரின் நிலைப்பாடு யாது? அதற்கான ஆதாரத்தையும் குறிப்பிடுக.
நிச்சயமாக இஸ்லாமிய மார்க்கம், இதற்கு முன்னர் இறக்கப்பட்ட அனைத்து மார்க்கங்களுக்கு மாற்றீடாக இருக்கின்றது. முஹம்மத் (ஸல்) அவர்களின் வருகைக்குப் பின் இஸ்லாம் மார்க்கத்தைத் தவிர வேறு எந்த மார்க்கமும் அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. ஏனைய மார்க்கங்கள் அனைத்தும் போலியானவை என்பதே இது விடயத்தில் இவர்களின் நிலைப்பாடாகும்.
கேள்வி: இஸ்லாமிய மார்க்கமே உண்மையானது, மற்ற அனைத்தும் போலியானது என்பதற்கு அல்குர்ஆனிலிருந்து ஒர் ஆதாரத்தைக் குறிப்பிடுக.
அல்லாஹ் கூறுகிறான், “இஸ்லாம் அல்லாத மார்க்கத்தை யாரேனும் விரும்பினால் அவரிடமிருந்து அது ஏற்கப்படாது. அவர் மறுமையில் இழப்பை அடைந்தவராக இருப்பார்.” (அல்குர்ஆன் 03:85].
கேள்வி: முஹம்மத்(ஸல்) அவர்கள் கொண்டு வந்த இஸ்லாமிய மார்கத்தை அவசியம் நம்பவேண்டுமென்பதற்கு ஸுன்னாவிலிருந்து ஓர் ஆதாரத்தைக் குறிப்பிடுக.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “முஹம்மதின் உயிர் யாருடைய கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! இந்த(இறுதி)ச் சமுதாயத்திலுள்ள யூதரோ கிறிஸ்தவரோ யாரேனும் ஒருவர் என்(மார்க்கத்தி)னைப் பற்றிக் கேள்விப்பட்ட பிறகும்கூட நான் கொண்டுவந்த (மார்க்கத்)தை நம்பிக்கை கொள்ளாமல் இறந்துவிட்டால், அவர் நரகவாசிகளில் ஒருவராகவே இருப்பார்.” (ஆதாரம் : முஸ்லிம் 153)
கேள்வி: அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாஅத்தினரின் மூலாதாரங்கள் எவை?.
அல்குர்ஆன், சரியான ஹதீஸ்கள் இஜ்மா போன்றவை ஆகும். இவற்றிலிருந்தே இஸ்லாமிய தூய கொள்கை (அகீதா), இஸ்லாமிய சட்டக்கலை (பிக்ஹ்), இஸ்லாமிய நற்பண்புகள் ஸுலூக் முதலியன பெறப்படுகின்றன. இவற்றில் மனிதக் கையூடல்களோ, பகுத்தறிவு வாதமோ, தனிமனித வழிபாட்டிற்கமைவான உட்பூசல்களோ கண்மூடித்தனமான மத்ஹபு கருத்துக்களோ நுழைக்கப்படமாட்டாது.
கேள்வி: அல்குர்ஆன், ஸுன்னா பற்றிய அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத்தினரின் நிலைப்பாடு யாது? ஆதாரத்துடன் குறிப்பிடுக.
அல்குர்ஆன், ஸுன்னாவிற்கு முற்றிலும் கட்டுப்பட்டிட வேண்டும். அதன் பக்கமே ஒதுங்கிட வேண்டும். பகுத்தறிவின் மூலமோ, தர்க்கவியல் மூலமோ அதற்கு முரணாகச் செயற்படக் கூடாது என்பதே இவர்களின் நிலைப்பாடாகும். அல்லாஹ் கூறுகிறான், “(முஹம்மதே) உம் இறைவன் மேல் ஆணையாக! அவர்கள் தமக்கிடையே ஏற்பட்ட சண்டையில் உம்மை நீதிபதியாக ஏற்று, பின்னர் நீர் வழங்கிய தீர்ப்பில் தமக்குள் அதிருப்தி கொள்ளாமல், முழுமையாகக் கட்டுப்படும் வரை அவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்.” (அல்குர்ஆன் 04:65).
கேள்வி: அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாஅத்தினரின் அல்குர்ஆன், ஸுன்னாவை விளங்கிக் கொள்ளும் வழிமுறை என்ன?.
இதனை தமக்கு முன் சென்ற ஸஹாபாக்கள், தாபியீன்கள், தபஉத் தாபியீன்கள் விளங்கி, செயற்பட்ட முறையில் விளங்கி செயற்படவேண்டும். அதைத் தவிர்த்து தத்துவவாதிகள் மற்றும் ஏனைய வழிகெட்ட கொள்கைவாதிகள் போல் விளங்கி, செயற்பட முனைந்திடக் கூடாது.
அல்லாஹ் கூறுகிறான்,“எவனொருவன் நேர்வழி இன்னது என்று தனக்குத்தெளிவானபின்னரும்,(அல்லாஹ்வின்)இத்தூதரை விட்டுப் பிரிந்து, முஃமின்கள் செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனைஅவன் செல்லும் (தவறான) வழியிலேயே செல்லவிட்டு நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம்; அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும்.” (அல்குர்ஆன் 04:115).
இவ்வசனம் இறக்கியருளப்பட்ட அத் தருணத்தில் ஸஹாபாக்கள் மாத்திரமே இப்பூமியில் முஃமின்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கேள்வி: அல்லாஹ்வின் பாதையில் போரிடுதல் தொடரில் அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத்தினரின் நிலைப்பாடு யாது?
அல்லாஹ்வின் பாதையில் போரிடுதல் என்பது இஸ்லாத்தின் தலையாய அம்சமாகும். அல்லாஹ்வின் வார்த்தை உயர்ந்ததாக இருப்பதற்காக வேண்டி இது கடமையாக்கப்பட்டுள்ளது. என்றாலும் இதற்கென சில நிபந்தனைகள் இருக்கின்றன. அவற்றில் வலிமையும், சக்தியுமே மிக முக்கியமானவைகளாகும். முஸ்லிம்களின் தலைவருக்குக் கட்டுபட்டு, ஒரே கொடியின் கீழால் அணி திரள வேண்டும் என்பதுவே இவர்களின் நிலைப்பாடாகும்.
கேள்வி: ஜிஹாத் என்ற பெயரைத் தாங்கிக் கொண்டு, பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடும் கும்பல்கள் பற்றி, அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத்தினரின் நிலைப்பாடு யாது?
ஜிஹாத் என்ற பெயரில் இயங்கிக் கொண்டிருக்கும் பயங்கரவாத அமைப்புக்களை இவர்கள் வெறுக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் ஹவாரிஜ்களின் போக்கைக் கடைபிடிக்கின்றனர். இஸ்லாத்தை சீர்குலைக்கும் செயற்பாடுகளையே அவர்கள் செய்து வருகின்றனர். பாதுகாப்பாக இருக்க வேண்டியவர்களை பயமுறுத்துகின்றனர். அப்பாவிகளைக் கொல்கின்றனர். இஸ்லாமிய உலகில் பல தீங்குகளையும், அட்டகாசங்களையும் புரிகின்றனர்.
எனவே, முடிவாக..
அல்-குர்ஆனையும் அஸ்-ஸுன்னாவையும் மேற்சொன்ன விதத்தில் ஸலபுஸ் ஸாலிஹீன்கள் எவ்வாறு விளங்கி எடுத்து நடந்தார்களோ அவ்வாறு விளங்கி எடுத்து நடப்பதுதான் ஸலபிகள் அல்லது அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத்தினர் என அழைக்கப்படுகின்ற நேர்வழி பெற்ற மக்களாகிய எமது கொள்கையும் வழிமுறையுமாகும்.
(நபியே!) நீர் கூறுவீராக! இதுவே எனது நேரான வழியாகும், நான் (உங்களை) அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன், தெளிவான ஞானத்தின் மீதே, நானும் என்னைப் பின்பற்றியவர்களும் இருக்கிறோம். (ஸூரத்து யூஸுஃப்: 108)
(இக் குர்ஆன் வசனம் இறக்கியருளப்பட்ட தருணத்தில் நபி (ஸல்) அவர்களை பின்பற்றிய நிலையிலிருந்தவர்கள் யார்?, யார் தெளிவான ஞானத்தின் மீது இருப்பதாக அல்லாஹ் சாட்சி கூறுகிறான்? என்பதை வாசகர்கள் மீண்டும் சிந்தித்துக் கொள்ளட்டும்)
அல்லாஹ் எம் அனைவரையும் பொருந்திக் கொண்டு, இஸ்லாமியகொள்கையை தூயவடிவில் அறிந்து கொள்ள அருள்புரிவானாக.
எங்கள் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும், அவரின் குடும்பத்தார் தோழர்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக.