தொழக்கூடாத பத்து இடங்கள்

بسم الله الرحمن الرحيم


1. அடக்கஸ்தலம்

அடக்கம் செய்யப்பட்டது ஒரு ஜனாஸாவாக இருந்தாலும் அதுவும் அடக்கஸ்தலமாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “யூதர்களின் மீதும் கிறிஸ்தவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்! அவர்கள் தங்களது நபிமார்களின் கப்ருகளைப் பள்ளிவாசல்களாக எடுத்துக் கொண்டார்கள்”. (புஹாரி, முஸ்லிம்)

2. கப்ருகளின் மீது கட்டப்பட்ட பள்ளிவாசல்கள்

ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகின்றார்கள்: “உம்மு ஹபீபா, உம்மு ஸலமா ரழியல்லாஹு அன்ஹுமா ஆகியோர் ஹபஷாவில் கண்ட உருவப்படங்கள் உள்ள ஓர் ஆலயம் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கூறினார்கள்”. அது குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: “அவர்களைப் பொறுத்தவரையில் அவர்களில் ஒரு நல்ல மனிதர் மரணித்தால் அவரது கப்ரின் மீது அவர்கள் பள்ளிவாசலைக் கட்டுவார்கள். அதிலே அவரின் உருவப்படங்களை அமைப்பார்கள். மறுமை நாளில் அவர்களே அல்லாஹ்விடம் படைப்பினங்களில் மிக மோசமானவர்கள்”. என்று கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்)

3. ஒட்டகம் கட்டும் இடங்கள்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “நீங்கள் ஆட்டுத் தொழுவங்களில் தொழுது கொள்ளுங்கள்! ஒட்டகங்கள் கட்டப்படும் இடத்தில் தொழ வேண்டாம்!” (அஹ்மத்)

4. மலசலகூடங்கள்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “பூமி முழுவதும் தொழுமிடமாகும். மலசலகூடத்தையும் அடக்கஸ்தலத்தையும் தவிர”. (இப்னு ஹிப்பான்)

5. ஷைத்தான் ஒதுங்கும் இடங்கள்

மோசமான இடங்கள், காபிர்களின் ஆலயங்கள் போன்ற இடங்களைக் குறிப்பிடலாம்.

அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்: “நாங்கள் இரவில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஓய்வெடுத்தோம். சூரியன் உதயமாகும் வரை நாங்கள் விழிக்கவில்லை. பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்: ‘ஒவ்வொருவரும் தனது வாகனத்தின் – கால்நடை – தலையைப் பிடித்துக் கொண்டு இந்த இடத்தை விட்டும் செல்லட்டும்! ஏனெனில், இந்த இடத்தில் ஷைத்தான் நம்மிடம் வந்துவிட்டான்’ என்று கூறினார்கள். நாங்கள் அவ்வாறே (பயணம்) செய்தோம். பிறகு (சிறிது தூரம் சென்றதும்) தண்ணீர் கொண்டுவரச் சொல்லி வுழூச் செய்து கொண்டார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட பஜ்ர் தொழுவித்தார்கள்”. (முஸ்லிம்)

6. அபகரிக்கப்பட்ட பூமி

அபகரிக்கப்பட்ட பூமியில் தொழக்கூடாது என்பது அறிஞர்களின் ஏகோபித்த கருத்து என்பதை இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

7. குபா பள்ளிவாசலுக்கு அருகில் காணப்பட்டு வந்த “ளிரார்” என்ற பள்ளிவாசல் மற்றும், (இப்பள்ளிவாசலைப் போன்று) தீங்கு விளைவிக்கும் நோக்கிலும் முஸ்லிம்களுக்கு மத்தியில் பிரிவினையை உண்டுபண்ணும் நோக்கிலும் கட்டப்பட்ட பள்ளிவாசல்கள்

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: “எவர்கள் (தங்கள் உள்ளங்களிலுள்ள) நிராகரிப்பின் காரணமாக நம்பிக்கையாளர்களுக்கிடையில் பிரிவினையை உண்டுபண்ணி தீங்கு இழைப்பதற்காக முன்னர் அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் போர் புரிந்தவர்களுக்குப் பதுங்குமிடமாக இருப்பதற்கு ஒரு பள்ளியைக் கட்டியிருக்கின்றார்களோ அவர்கள் (தங்கள் குற்றத்தை மறைத்துவிடக் கருதி) ‘நிச்சயமாக நாங்கள் நன்மையையன்றி (தீமையைக்) கருதவில்லை’ என்று சத்தியம் செய்கின்றனர். ஆனால், அல்லாஹ்வோ நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள் என்று சாட்சி கூறுகின்றான்”. (அத்தவ்பா: 107)

8. பூமி அதிர்வு போன்ற அல்லாஹ்வின் வேதனை இறங்கிய இடங்கள்

பொதுவாக இந்த இடங்களில் நுழைய முடியாது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹிஜ்ர் பிரதேசத்தைக் கடந்து சென்ற போது: “அக்கிரமம் புரிந்தவர்களின் வசிப்பிடங்களில் அவர்களுக்குக் கிடைத்த அதே தண்டனை உங்களுக்குக் கிடைத்துவிடுமோ என்றஞ்சி அழுதபடியே தவிர நுழையாதீர்கள்!” என்று கூறினார்கள். பிறகு அவர்கள் சேண இருக்கையின் மீது இருந்தபடியே தம் போர்வையால் (தம்மை) மறைத்துக் கொண்டார்கள். (புஹாரி)

9. மஃமூம்களை விட உயரமாக ஓர் இடத்தில் இமாம் நின்று தொழுதல்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மஃமூம்கள் பின்னால் தாழ்வான இடத்தில் இருக்க, இமாம் உயரமான ஒன்றின் மீது நின்று தொழுவதைத் தடை செய்தார்கள். (தாரகுத்னி, ஹாகிம்)

10. தூண்களுக்கு மத்தியில் மஃமூம்கள் வரிசையாக நின்று தொழுதல்

அப்துல் ஹமீத் இப்னு மஹ்மூத் என்பவர் கூறுகிறார்: “நாம் ஒரு தலைவருக்குப் பின்னால் மஃமூம்களாகத் தொழுதோம். மனிதர்கள் எம்மை நெருக்கடிக்கு ஆளாக்கினர். எனவே, நாம் இரு தூண்களுக்கு மத்தியில் தொழுதோம். அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு எம்மை விட்டும் பின்வாங்கி விட்டார். நாம் தொழுது முடித்தபோது அவர்கள்: ‘தூண்களுக்கு மத்தியில் தொழும் இச்செயலை நாம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது காலத்தில் பயப்படக்கூடியவர்களாக இருந்தோம்’ என்று கூறினார்”. (நஸாஈ, திர்மிதி, அல்ஹாகிம், அஹ்மத்)



– தொகுத்தளித்தவர்: அஷ்ஷெய்ஹ் முஹம்மத் நாஸிருத்தீன் அல்பானி ரஹிமஹுல்லாஹ்.

– நூல்: அஸ்ஸமருல் முஸ்ததாப் (357-409)
– தமிழில்: அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்
Previous Post Next Post