ஸலபுகள் எனப்படுவோர் யார்? அவர்களின் வழியில் ஈமான் கொள்ள வேண்டியதன் அவசியம்


நமக்கு முன்னால் வாழ்ந்து, நாம் எந்த ஏகத்துவக் கொள்கையை நிலை நாட்டுவதற்காக பாடுபடுகின்றோமோ அதே கொள்கையில் வாழ்ந்து அந்த கொள்கையில் நம்மை விடவும் உறுதியாக இருந்து, அதே கொள்கையை மக்களுக்குக் கொண்டு போய் சேர்ப்பதற்காக நம்மை விடவும் பன்மடங்கு தியாகங்கள் செய்த அந்த உத்தமர்கள் வழிமுறையில் தான் இன்றுவரை ஒவ்வொரு சத்திய கொள்கைவாதியும் சரியான கொள்கை எது எனத் தெரிந்து அதை ஏற்றுப் பின்பற்றிக் கொண்டிருக்கின்றனர். 

குர்ஆன், சுன்னாவை தங்கள் வாழ்க்கையில் அமுல்படுத்திய அந்த சத்திய விசுவாசிகளின் வாழ்க்கை வரலாற்றில் சிறந்த பாடங்கள் உள்ளன. அவர்கள் வழியாகத்தான் இஸ்லாமிய மார்க்கமும், அந்த மார்க்கத்தின் தூயகொள்கையும் உலகத்தின் நாலா பக்கங்களிலும் வாழ்ந்த மக்களிடையில் சென்றடைந்தது. அவர்கள் மூலம்தான் அல்லாஹ்வுடைய வேதமான குர்ஆனும், அவனுடைய தூதரின் போதனைகளான சுன்னாவும் நம் வரை வந்து கிடைத்துள்ளது. இதை யாராலும் மறுக்க முடியாது. 

அறிவிலிகளும், அகம்பாவமும் ஆணவமும் கொண்டு, இஸ்லாமை இழிவுபடுத்த நினைக்கக் கூடியவர்களையும் தவிர வேறு எந்த எவரும் இதை நிராகரிக்க மாட்டார்கள். 

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்து அவர்கள் வாழ்க்கை முறைகளை அப்படியே தங்கள் வாழ்க்கையில் கடை பிடித்த சத்திய நபித்தோழர்கள், அந்த நபித்தோழர்களைப் பின்தொடர்ந்து வந்து, சத்தியப் பாதையில் நிலைத்து நின்றவர்கள், இஸ்லாத்தின் சரியான கொள்கையில் உறுதியாக நின்றவர்கள் இப்படிப்பட்டவர்களைக் குறிக்கின்ற சொல்தான், ‘ஸலஃப்’ என்ற சொல். இஸ்லாமிய கொள்கையை விளக்குகின்ற அறிஞர்களுக்கிடையில் “ஸலஃபுஸ் ஸாலிஹீன்” என்று அறிமுகமாகியுள்ளது. 

அதாவது ”முன் சென்ற நல்லவர்கள்” என்று பொருள், இந்த சொல், வழக்கில் வருவதற்குரிய காரணம் என்ன என்பதை நாம் தெரிய கடமைப் பட்டுள்ளோம். 


ஸலப் என்றால் என்ன?


அறபி மொழி நடையில் "ஸலப்" என்ற சொல்லானது, "ஸலப" என்ற வினைச் சொல்லிலிருந்து பிழந்தெடுக்கப்பட்ட ஒன்றாகும்.


"ஸலப" என்றால் "முன்சென்றுவிட்டான்"  என்று கருத்துப்படும். மற்றும் இது ஸாலிப் என்ற சொல்லின் பன்மையாகும்.  மொத்தத்தில் ஸலப் என்பது முன்சென்றவர்களைக் குறிக்கின்றது.


அல்லாஹ் தஆலா கூறுகின்றான்:-

நாம், அவர்களை ஸலபுகளாக (அதாவது) முன்சென்றவர்களாகவும், (அவர்களுக்கு) பின்னால் வருபவர்களுக்குஉதாரணமாகவும் ஆக்கினோம்.

[ஸூரா அல்  மாஇதா:156]


இமாம் பகவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள்:-

"ஸலப் என்பவர்கள்  முன்சென்றவர்களாவர். பின்னால் வருபவர்கள் உபதசேம் பெறுவதற்காக அவர்களை அல்லாஹ் முந்தியவர்களாக ஆக்கினான்" என்று இந்த திருக்குர்ஆன் வசனத்திற்கு விளக்கம் கூறுகின்றார்கள். [பார்க்க:- 7/218 ]


இப்னு மன்ழூர் ரஹிமஹுல்லா அவர்கள் கூறுகின்றார்கள் :- 

ஸலப் என்போர் உனக்கு முன் வாழ்ந்த  உனது பெற்றோர்கள் மற்றும் உனது குடும்பத்தினருமாவர். அவர்கள்உன்னை விட வயதிலும், சிறப்பிலும் மேற்பட்டவர்களாவர். இதன் காரணமாகவே,  ஸஹாபாக்களைத் தொடர்ந்து வந்த தாபிஈன்களின் முதல் சாரார் "அஸ்ஸலபுஸ்ஸாலிஹ்" என்று அழைக்கப்படுகின்றனர். [லிஸானுல் அரப்: 9/159] 


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தனது அருமை மகளான பாத்திமா ரழியல்லாஹு அன்ஹா அவர்களிடம்  "நிஃமஸ் ஸலபு அன லகி" அதாவது,"(அல்லாஹ்விடம்) உனக்கு முன் செல்பவர்களில் நான் சிறந்தவனாவேன்" என்று கூறினார்கள்.) [நூல்கள் :- புஹாரி-1286, முஸ்லிம்-2480] . 


பார்க்க :-

"மா ஹிய அஸ்ஸலபிய்யா"

(ஸலபிய்யா என்றால் என்ன?) என்ற கலாநிதி அஷ்ஷைஃக்  அப்துல்லாஹ் இப்னு அப்துர்ரஹீம் அவர்களின் புத்தகத்திலிருந்து..


எனவே, இது வரையில் ஸலப் என்றால் அரபுமொழி ரீதியாக என்ன? என்பதை அல்குர்ஆன், அஸ்ஸுன்னா மற்றும் உலமாக்களின் கருத்துக்களினூடாக பார்த்தோம். 



இஸ்லாத்தின் பார்வையில் ஸலப் என்போர் யாவர்?


இது குறித்து பல கருத்துகள் சொல்லப்பட்ட போதிலும், அவைகளில் மிகவும் ஏற்றமான கருத்தானது :- 

"ஸஹாபாக்கள், அவர்களைப் பின்தொடர்ந்தவர்களான தாபிஈன்கள் மற்றும் அவர்களைப் பின்தொடர்ந்த தபஉத்தாபிஈன்களாவர்." 

[பார்க்க: "பதாவா நூருன் அலத்தர்ப் லிப்னி உஸைமீன்" 2/4] (1)


இக்கருத்தை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள்:- 


1. அல்லாஹ் கூறுகின்றான்:- 


முஹாஜிரீன்களிலும், அன்ஸாரிகளிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும், நல்ல முறையில் அவர்களைப்பின் தொடர்ந்தோரையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக்கொண்டனர். அவர்களுக்கு சுவர்க்கத்தின் சோலைகளை அவன் தயாரித்து வைத்திருக்கிறான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தானவெற்றியாகும். 

[ஸூரா அத்தௌபா: 100]


2. அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:- 


 மக்களில் சிறந்தவர்கள் என் நூற்றாண்டைச்  சேர்ந்தவர்கள். பிறகு  (சிறந்தவர்கள்) அவர்களை அடுத்துவருபவர்கள். பிறகு  அவர்களை  அடுத்து வருபவர்கள். [அறிவிப்பவர்:- இம்ரான் பின் ஹுசைன் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்] [நூல்: புகாரி 2651] 


எனவே, ஸலபுகள் என்போர் சிறப்பிலும், அறிவிலும் மற்றும் ஈமானிலும் நம்மை முந்தியவர்களாக இருப்பார்கள். அத்துடன், ஸஹாபாக்களைப் பொருத்தவரையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பின்உலகத்தில் மிகச் சிறந்தவர்களாகவர்.


பார்க்க :- 

"மா ஹிய அஸ்ஸலபிய்யா" 

(பக்கம் :14-16)

"நூருன் அலத்தர்ப் லிப்னி உஸைமீன்"


 குறிப்பாக:-


(1) அஷ்ஷைஃக் இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லா அவர்கள் கூறிய கருத்தையே பல உலமாக்கள் கூறியுள்ளார்கள். 


1. இமாம் ஸப்பாரீனி ரஹிமஹுல்லா அவர்கள்  [லவாமிஉல் அன்வார் :1/20]


2. இப்னு தைமியா ரஹிமஹுல்லா அவர்கள். 

[தர்உ தஆரிலுல் அக்லி வந்நக்லி: 1/207]


3. இமாம் அஷ்ஷௌகானி ரஹிமஹுல்லா அவர்கள். 

[அத்துஹப் பீ மதாஹிபிஸ் ஸலப்: 7]


இன்னும் பல உலமாக்கள்......



இங்கே ஒரு கேள்வி எழலாம்? அதாவது, "முன்னால்  கூறிய மூன்று நூற்றாண்டுகளில் வாழ்பவர்கள் அனைவருமே ஸலபுகளின் பட்டியலில் நுழைந்துவிடுவார்களா?"


காலத்தை  மாத்திரம் வைத்து ஸலபுகள் யாரென்பதை குறிக்க முடியாது. இதற்கு மாறாக, அவர்களுடைய செயற்பாடுகள் அல்குர்ஆனுக்கும் அஸ்ஸுன்னாவுக்கும் மற்றும் ஸஹாபாக்களின் விளக்கங்களுக்கும் நேர்பாடாக இருப்பது அவசியமாகும். 


இதன் காரணமாகவே, ஸுன்னாவுடைய உலமாக்கள் "ஸலப்" என்ற வார்த்தையுடன் "ஸாலிஹ்" என்ற வார்த்தையை இணைத்து "அஸ்ஸலபுஸ் ஸாலிஹ்" என்று அவர்களை அழைக்கின்றனர். 


எனவே தான், இந்த சிறந்த நூற்றாண்டுகளில் வாழ்ந்த சிலர் அஸ்ஸலபுஸ் ஸாலிஹீன்களின் பட்டியலில் சேர்க்கப்பட மாட்டார்கள். மாறாக, மனோஇச்சையை பின்பற்றி மார்க்கத்தில் பித்அத்தான காரியங்களை செய்பவர்களின் பட்டியலிலே சேர்க்கப்படுகின்றனர். 


அந்த மூன்று நூற்றாண்டுகளில் தோன்றிய சில வழிகெட்ட கூட்டத்தினரை இதற்கு உதாரணமாகக் கூறலாம்..


1. அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லா அன்ஹுமா அவர்களிடம், அவர்களின் காலப்பகுதியில் தோன்றிய"கதரிய்யாக்கள்" பற்றி கேட்கப்பட்டது. 

அதற்கவர்கள், "அவர்களை விட்டும் நான் நிரபராதியாவேன்." என்று பதிலளித்தார்கள். 

[ஆதாரம்: ஸஹீஹு முஸ்லிம் -1]


2. அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சிக் காலத்தில் "ஹவாரிஜ்கள்" எனப்படும் வழிகெட்டகூட்டத்தினர் தோன்றினர். இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அவர்களுடன் தர்கித்துஅவர்களின் வழிகேட்டை தெளிவுபடுத்தினார். அப்போது அவர்களிடம் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹுஅன்ஹுமா அவர்கள் கூறினார்கள்:- "அந்த ஸஹாபாக்களிலிருந்து, உங்களில் யாரும் இல்லை என்பதை நீங்கள்பார்த்துக் கொள்ளுங்கள்"  [முஸ்தத்ரகுல் ஹாகிம்- 2/150, அஹ்மத்- 2/656]


எனவே, முன்னால் கூறிய கூட்டத்தினர் சிறந்த நூற்றாண்டுகளில் வாழ்ந்த போதிலும் அவர்கள் அஸ்ஸலபுஸ்ஸாலிஹீன்களில் சேர்க்கப்பட மாட்டார்கள் என்பது இதிலிருந்து நிரூபணமாகின்றது. 


பார்க்க :- 

"மா ஹிய அஸ்ஸலபிய்யா" 

(பக்கம் :14-16)

"நூருன் அலத்தர்ப் லிப்னி உஸைமீன்"



ஸலபுஸ் ஸாலிஹீன்களின் வழியில் மார்க்கத்தைப் பின்பற்றுகிற மக்களுக்குரிய வேறு சில பெயர்கள்:


ஸுன்னா உடைய உலமாக்கள், ஸலபுஸ் ஸாலிஹீன்களின் வழியில் மார்க்கத்தைப் பின்பற்றுகிற மக்களை வேறு சில பெயர்களைக் கொண்டு அழைத்துள்ளனர். அவைகள் அனைத்தும் ஒரே விடயத்தையே அறிவிக்கின்றன. 


அவைகளில்:- 


1."அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாஆ"


இமாம் ஸுப்யானுஸ் ஸௌரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள் :- 

ஸுன்னாவை பின்பற்றுகின்ற ஒருவர் கிழக்கில் இருக்கின்றார், இன்னொருவர் மேற்கில் இருக்கிறார் என்றசெய்தி உன்னை எத்திக்கொண்டால், அவ்விருவருக்கும் நீ உன் ஸலாத்தை எத்தி வை. மேலும், அவ்விருவருக்கும் துஆ செய்து கொள். (ஏனெனில்) அஹ்லுஸ் ஸுன்னாக்கள் குறைந்து விட்டார்கள்.

["ஷர்ஹு உஸூலி இஃதிகாதி அஹ்லிஸ் ஸுன்னா" 1/50]


இப்னு தைமியா ரஹிமஹுல்லா அவர்கள் கூறினார்கள்:- 

"ஸுன்னா" என்ற வார்த்தை "ஜமாஆ" என்ற வார்த்தையுடன் எவ்வாறு இணைக்கப்படுகின்றதோ அவ்வாறே, "பித்ஆ" என்ற வார்த்தை "பிர்கா" என்ற வார்த்தையுடனே இணைக்கப்படுகின்றது.

[அல் இஸ்திகாமா: 1/42]


மேலும் கூறினார்கள் :- 

அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாஆ உடைய போக்கானது பழையதாகும். அது அபூஹனீபா, மாலிக், ஷாபிஇ மற்றும் அஹ்மத் போன்றோர் படைக்கப்பட முன்னரே அறிமுகமானதாகும். அதுவே, ஸஹாபாக்களின் போக்காகும். இதற்கு யார் மாறுசெய்கிறாரோ, அவர் ஸுன்னா உடைய உலமாக்களிடம் பித்அத் செய்பவராககருதப்படுவார்.

["மின்ஹாஜு அஹ்லிஸ் ஸுன்னா" 2/601]


பார்க்க :- 

"மா ஹிய அஸ்ஸலபிய்யா?" 

(பக்கம்: 20-21)


2. ஸலபி: ஸஹாபாக்கள், தாபியீன்கள், தபஉத் தாபியீன்கள் என முதல் மூன்று நூற்றாண்டுகளில் தோன்றிய நன்மக்களின் வழிமுறையில் ஈமான் கொண்டு; மார்க்கத்தைப் பின்பற்றுவோரான பின்வந்த மக்களே ‘ஸலபிகள்’ அதாவது (நாங்கள்) ‘ஸலபுகளைச் சார்ந்தவர்கள்’ எனத் தங்களைப் பித்அத்வாதிகளிடமிருந்து வேறுபடுத்திக்காட்டுவதற்காக அறிவித்துக் கொள்கின்றனர்.



ஸலபுகளின் வழிமுறையை பின்பற்ற வேண்டியதன் அவசியம்:

ஒவ்வொரு இறைத்தூதரும் தங்களுடைய காலத்தில் படைத்த இறைவன் அல்லாஹ்வைப் பற்றியும், அவனுடைய பண்புகள் அவனுடைய தன்மைகள் பற்றியும் மக்களுக்கு எடுத்துச் சொல்லி சரியான இறை நம்பிக்கையின்பால் அழைத்து, அந்த நம்பிக்கையில் உறுதியாக இருக்கின்ற ஒரு சமூகத்தை உருவாக்கிவிட்டுச் சென்றார்கள். 

அந்த இறைத்தூதருக்குப் பின்னால் அந்த சமூகம் தங்கள் தூய கொள்கையில் தங்கள் அறிவை நுழைத்துஅதற்கு புதிய விளக்கங்களை கற்பிக்கலானார்கள். அவர்கள் இறைக் கொள்கையில் பல்வேறுபட்ட குழுக்களாக பிரிந்தார்கள். எல்லா பிரிவுகளும் தங்களுடைய நபியை உரிமை கொண்டாடினார்கள். எல்லோருமே தாங்கள் கொண்ட கொள்கைதான் சரியான கொள்கை என வாதாடினார்கள். இவர்களில் உண்மையான கொள்கையுடைய ஒரு கூட்டம் இருந்து கொண்டிருந்தது. 

இந்த நிலை நபி மூஸா(அலை) அவர்களுக்குப் பின்னாலும் இருந்தது. நபி ஈஸா(அலை) அவர்களுக்குப் பின்னாலும் நிகழ்ந்தது. இந்த நிலையை அறிந்திருந்த இறுதி நபி முஹம்மது(ஸல்) அவர்கள் தனது சமுதாயத்தைப் பற்றியும் முன்னறிவிப்புச் செய்து விட்டுச் சென்றார்கள். 

இதைப் பற்றி அல்லாஹ்வும் தனது திருமறையில்:
”தங்களுக்கு தெளிவான விளக்கங்கள் கிடைத்த பின் தங்களுக்கிடையில் பிரிந்து, கருத்து வேறுபாடு கொண்டு சிதறி விட்டார்களே அவர்களைப் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள்.
அல்குர்ஆன் 3:105

கடந்த கால சமூகங்களைப் போன்று கொள்கையில் பிரிந்து சென்றுவிட வேண்டாம் என அல்லாஹ் தடுத்துள்ளான். 

அதையே நபி(ஸல்) அவர்களும் ” யூத, கிருத்தவ சமூகங்கள் பல பிரிவினராக பிரிந்து சிதறிவிட்டனர்” அப்படிப்பட்ட நிலை எனக்குப் பின்னால் எனது சமூகத்திலும் உருவாகிவிடும். அந்த நேரத்தில் ஒரே ஒரு கூட்டம் மட்டுமே சரியான கொள்கையில் நிலைத்திருப்பார்கள் என்று அறிவித்துள்ளார்கள். (ஹதீஸ் கருத்து) நூல் : திர்மிதி, இப்னுமாஜா

”என்னுடைய உம்மத்தில் ஒரு கூட்டம் சத்திய கொள்கையில் என்றென்றைக்கும் நிலைத்திருப்பார்கள், எந்த சதிமோசக்காரர்களின் தீங்கும் அவர்களை ஒன்றும் செய்துவிடாது. இந்த நிலை அழிவு நாள் வரை நீடிக்கும் எனநபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் : முஸ்லிம் 

அந்த சத்தியக் கூட்டம் நாங்கள் தான் என ஒவ்வொரு கூட்டமும் வாதாடமல் இருப்பதற்காக அந்தகூட்டத்திற்கான அடையாளத்தையும் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ”நானும் எனது தோழர்களும் இன்றைய தினம் எந்த கொள்கையில் இருக்கின்றோமோ அதே கொள்கையில் இருக்கின்ற கூட்டம் என்று அடையாளம் காட்டியுள்ளார்கள். 

நபி(ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தது போன்று, அவர்களுக்குப் பின்னால் இந்த சமுதாயம் பல பிரிவுகளாகப் பிரிந்தனர். மாற்றாரின் கலாச்சாரம் இவர்களிடையில் நுழைந்ததின் காரணத்தினால், இறைக் கொள்கையில் தங்கள் அறிவைப் பயன்படுத்தி, புது புது, வியாக்கியானங்களை கொடுக்க ஆரம்பித்தார்கள்.

அல்லாஹ்வுடைய பண்புகள் பற்றிய குர்ஆன் வசனங்களுக்கும் நபியின் போதனைகளுக்கும் தமது மனோ இச்சையின் அடிப்படையில் விளக்கங்கள் கொடுத்தார்கள். 

இதுபோன்ற ரசனையான விளக்கங்கள் பால் ஈர்க்கப்பட்ட முஸ்லிம்கள் பல பிரிவுகளாக பிரிந்தார்கள். 

ஒவ்வொரு சாராரும் அவர்கள் கொண்டுள்ள கொள்கைத்தான் சரியானது என்று வாதிட்டனர். 

குர்ஆன் வசனங்களை தங்களுக்கு சாதகமாக வளைத்து திரித்துக் கூறினார்கள். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில் எந்த சாரார் சொல்லும் கொள்கை உண்மையான கொள்கை என்றும், எந்த சாரார் கொடுக்கும் விளக்கம் சரியானது என்றும் தெரியாமல் தவிக்கும் மக்களுக்கு கலங்கரை விளக்காகத்தான்அல்லாஹ்வுடைய தூதர்(ஸல்) அவர்களுடைய முன்னறிவிப்பு அமைந்து விடுகிறது. 

அதாவது இப்படிப்பட்ட குழப்பமான நிலையில் நானும் என்னுடைய தோழர்களும் எந்த கொள்கையில் இருக்கின்றோமோ அதே கொள்கையில் யாரெல்லாம் இருக்கிறார்களோ அவர்கள் மட்டுமே நேரான வழியில் இருக்கிறார்கள் என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம். 

எனவே எந்த கால கட்டத்திலும் அந்த சத்திய நபித்தோழர்களான ஸலஃபுஸ் ஸாலிஹீன்கள், (முன் சென்ற சத்திய விசுவாசிகள்) ஏற்றிருந்த கொள்கைதானா இது? என்று கேட்டு தெரிய முற்படுவோமானால் சத்தியக்கூட்டத்தை எளிதில் கண்டுபிடித்துவிடலாம். 

சத்திய கொள்கைவாதிகளை அசத்திய கொள்கைவாதிகளிடமிருந்து பிரித்தறிவதற்கே “ஸலஃப்” என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. 

இந்த சொல் பிரயோகம் இன்று நேற்றல்ல, நீண்ட நெடிய காலமாகவே முஸ்லிம்களிடம் இருந்து வருகிறது. 

இது ஏதும் புதுமையானதாகவோ மார்க்கத்திற்கு விரோதமானதாகவோ இல்லை. 

சத்திய கொள்கைவாதிகளுக்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறிய அடையாளத்தை தெரிய வேண்டிய ஒரு கட்டாயத்தில் இன்று இஸ்லாமிய சமுதாயம் இருக்கிறது. 

அல்லாஹ்வை நம்புவதிலும், அல்லாஹ்வின் பண்புகளை நம்புவதிலும் கடந்த காலங்களில் இருந்தது, போன்று இன்றும் புதுப் புதுப் பெயர்களில் தலை தூக்கியிருக்கின்றன. 

அல்லாஹ் எங்கே இருக்கிறான்? அர்ஷில் இருக்கிறானா, எங்கும் இருக்கிறானா? அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கி வருவானா வரமாட்டானா? அல்லாஹ்வுக்கு முகம், கை உண்டா இல்லையா? அல்லாஹ் பேசுவானா பேசமாட்டானா? அல்லாஹ்வை பார்க்க முடியுமா, பார்க்க முடியாதா? சொர்க்கம், நரகம் படைக்கப்பட்டுவிட்டதா படைக்கப்படவில்லையா? பெரும் பாவம் செய்தவன் சொர்க்கம் செல்ல முடியுமா செல்ல முடியாதா? இதுபோன்ற விஷயங்களில் பல்வேறு கொள்கையுடையவர்கள் முஸ்லிம்கள் என்ற பெயரில் இருப்பதை இன்றும்நாம் பார்த்து வருகிறோம்.

ஒவ்வொருவரும் தங்கள் அறிவைப் பயன்படுத்தி, மனம் போன போக்கில் விளக்கங்களைக் கொடுத்து, நம்பிவருகின்றனர். அந்த நம்பிக்கையை மக்களிடையில் பிரச்சாரம் செய்தும் வருகின்றனர். இந்த நிலையில் யார் சொல்வது சரியான கொள்கை? என்பதைத் தெரிய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம். எனவே அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் பிரகாரம் நபித்தோழர்களான ஸலஃபுஸ் ஸாலிஹீன்களும் அவர்கள் நம்பி வந்த கொள்கையை யாரெல்லாம் நம்புகிறார்களோ அதுவே சரியான கொள்கை, அதுவே சரியான வழி என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

சத்திய சீலர்கள் என நபி(ஸல்) அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட அந்த நபித்தோழர்களின் கொள்கை வழிகெட்ட கொள்கையானால் உலகத்தில் வேறுயாருடைய கொள்கை தான் சரியானது? 

இன்றைய காலத்தில் நாம் வாழும் தமிழகத்தில் கூட, முஸ்லிம்கள் என்று கூறிக் கொள்ளக் கூடியவர்களில்அல்லாஹ்வை நம்பும் விஷயத்தில் அல்லாஹ் எங்கும் நிறைந்திருக்கிறான் என்று கூறக் கூடியவர்கள் இருக்கிறார்கள். 

தங்களை சுத்த தவ்ஹீத் என்று கூறிக் கொள்ளக் கூடியவர்கள், அல்லாஹ் வானத்திலிருந்து இறங்கி வருகிறான் என்பதெல்லாம் பொய் என்று நம்புகின்றனர். 

வேறு சிலர் அல்லாஹ்வுக்கு கை, முகம் இருக்கிறது என்று நம்புவது கூடாது என்று கூறுகின்றனர். 

இன்னும் சிலர் அல்லாஹ்வை மறுமையில் யாராலும் பார்க்க முடியாது என்று நம்புகின்றனர். 

இவர்கள் எல்லோருமே குர்ஆன் வசனங்களைத் தங்களுக்கு சாதகமாக எடுத்து விளக்குகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் யார் நம்பி வந்த கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும்? யாருடைய கொள்கை சரியானது என்பதை உறுதிபடுத்துகின்ற முறையைத் தான் நபி(ஸல்) அவர்கள் விளக்கும் போது, என்னுடைய தோழர்களான சத்திய சஹாபாக்கள் என்ற ஸலஃபுஸ் ஸாலிஹீன்கள் அல்லாஹ்வுடைய விஷயத்தில் எப்படி நம்பிவந்தார்களோ அப்படியே நம்ப வேண்டும் என்று அறிவித்துச் சென்றுள்ளார்கள். 

இதைப் புரிந்து விடுவோமானால் ஸஃலபுஸ் ஸாலிஹீன் என்பவர்கள் யார்? அவர்கள் சரியான கொள்கையில்இருந்தார்களா அல்லது தவறான கொள்கையில் இருந்தார்களா? என்பதை புரிந்து கொள்ளலாம். 

ஆகவேதான் அல்லாமா, முஹத்திஸ் முஹம்மத் இப்னு நாஸிருத்தீன் அல்அல்பானீ ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்:

" நேர்வழியில் செல்லும் ஸலபிய்யா இஸ்லாமிய்ய அழைப்புப் பணியின் அடிப்படைகள் மூன்று  அடித்தளங்களில் அமைவது அவசியமாகும்:

1: இறைவனின் வேதமாகிய புனித அல் குர்ஆன்

2: சரியான ஆதாரபூர்வமான நபியின் ஸுன்னா

3: ஸஹாபாக்கள், தாபிஈன்கள் மற்றும் அவர்களைப் பின் வந்தவர்கள் போன்ற நேர்வழியில் சென்ற சிறந்த ஸலபுகளது வழியில் (போக்கில்) இதனை விளங்குதல்.

பழங்காலம் தொட்டு இன்று வரையிலான அனைத்து பிரிவுகளும் வழிகெடுவதற்கான ஒரே காரணம் இம்மூன்றாவது அடிப்படையை கை விட்டமையாகும்"

( மஜல்லதுல் அஸாலதில் அதத் : 23 ) 

எனவே, “ஸலபுஸ் ஸாலிஹீன்களின் வழிகெட்ட கொள்கை”, என்று வாய் கூசாமல் உளறக்கூடியவர்கள் அல்லாஹ்வை அஞ்சி நல்வழிக்குத் திரும்ப வேண்டும்!
Previous Post Next Post