அஹ்லுஸ் ஸுன்னாவின் அகீதாவிலிருந்து

- தொகுப்பு: அஹ்ஸன் இப்னு அபீபக்கர்


‎بسم الله الرحمن الرحيم

01. நாங்கள் அல்லாஹ்வையும் அவனின் மலக்குகளையும் அவனின் வேதங்களையும் அவனின் தூதர்களையும் மறுமை நாளையும் அவன் ஏற்படுத்திய விதியின் நல்லதையும் தீயதையும் விசுவாசம் கொள்கிறோம்.

02. நாங்கள் அனைத்து விடயங்களையும் செயல்களையும் படைப்பவனும் ஆட்சி செய்பவனும் அடக்கி ஆள்பவனும் அல்லாஹ் மாத்திரம் தான் என்று (குறைஷிக் காபிர்கள் ஏற்றுக்கொண்ட) ருபூபிய்யத்தை ஈமான் கொள்கிறோம்.

03. நாங்கள் (குறைஷிக் காபிர்கள் மறுத்த தவ்ஹீதுல் உலூஹியாவான) வணங்கப்படுவதற்குத் தகுதியானவன் அல்லாஹ் மாத்திரம் தான் என்பதை ஈமான் கொள்கிறோம். அவன் தவிர்ந்த மற்றைய வணங்கப்படுபவைகள் பிழையானவை மறுக்கப்பட வேண்டியவை என்ற தவ்ஹீதுல்  உலூஹிய்யாவை  நம்புவோம்.

04. ஸலபிகளான நாங்கள் அல்லாஹ்வுக்கு மிக அழகான பெயர்கள் இருக்கின்றன என்றும் உயர்ந்த பூரணமான பண்புகள் இருக்கின்றன என்றும் தவ்ஹீதின் மூன்றாவது வகையான அஸ்மாஉ வஸ்ஸிபாத்தை ஈமான் கொள்கிறோம்.

05. அல்லாஹுத்ஆலா பரிபாலிக்கும் விடயத்திலும் வணங்கப்படும் விடயத்திலும் அவனுக்குரிய அழகான பெயர், பண்பு விடயத்திலும் அவன் தனித்தவன் அவனுக்கு நிகராக, இணையாக அவனைப் போன்று  யாரும் எதுவும் கிடையாது என்று நாங்கள் நம்புவோம்.

இவைகளுக்கு  ஆதாரம் ஸூரா மரியமின் 65ஆம் வசனமாகும். இவ்வசனத்தில் "வானங்கள், பூமி, அவ்விரண்டுக்கும் மத்தியில் உள்ளவற்றின் "றப்" - படைத்தவன், பரிபாலிப்பவன் -  அவன் தான்  என்று கூறுகின்றான். இதன் மூலம் ருபூபிய்யத்தை உறுதிப்படுத்துகிறான்.

மேலும், "அவனை வணங்கி அவ்வணக்கத்தில் பொறுமையாக இருப்பிராக" என்ற வசனம் மூலம் உலூஹிய்யத்தை உறுதிப்படுத்துகிறான்.

"அவனுக்கு நிகரான எதையும் நீர் அறிவீரா” என்ற வசனம் மூலம்  அஸ்மாஉ வஸ்ஸிபாத்தை உறுதிப்படுத்துகின்றான்.

06. நாங்கள் குர்ஆனிய வசனங்களில் மிக மகத்தான வசனமாகிய ஆயதுல் குர்ஷியில் உள்ளடங்கியுள்ள விடயங்களை விசுவாசம் கொள்கிறோம்.

அவ்வசனத்தின் பொருளாவது: "அல்லாஹ் அவனைத் தவிர வணங்கப்படுபவன் வேறுயாரும் இல்லை. அவன் என்றும்  உயிருள்ளவன், .நிலைத்திருப்பவன். அவனை சிறு தூக்கமோ  பெருந்தூக்கமோ ஆட்கொள்ளாது அவனுக்கே வானங்கள், பூமியில் உள்ளவை சொந்தமானது. அவன் அனுமதியின்றி அவனிடம் பரிந்துரை செய்பவன் யார் தான் இருக்கிறார்? அவன் அவர்களுக்கு முன் இருப்பதையும் அவர்களுக்கு பின் இருப்பதையும் நன்கறிவான். அவன் நாடியவற்றைத்தவிர அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறிய முடியாது. அவனின் (பாதத்தை வைத்திருக்கும் அந்த) குர்ஷி வானங்கள், பூமியை வியாபித்திருக்கிறது. அவ்விரண்டையும் பாதுகாப்பது அவனுக்கு சிரமமில்லை. அவன் மிக உயர்ந்தவன். மகத்துவம் மிக்கவன்." (ஸூரதுல் பகரா: 255)

07. நாங்கள் அவன் தான் அல்லாஹ், உண்மையில் வணங்கப்படுபவன் அவனைத்தவிர வேறு யாரும் இல்லை, அவன் மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் நன்கறிபவன், அவன் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையவன் என்று ஈமான் கொள்கிறோம். (ஸூரதுல் ஹஷ்ர் 59:22 )

08. நாங்கள் அவன்தான் அல்லாஹ், உண்மையாக வணங்கப்படுபவன் அவனைத்தவிர வேறுயாரும் இல்லை, (அவன் மாத்திரம் தான் தனிமையாக) ஆட்சி செய்பவனும், பரிசுத்தமானவனும், சாந்தியானவனும், பாதுகாப்பவனும், கண்காணிப்பவனும், அனைத்தையும் மிகைத்தவனும், அடக்கியாளுபவனும், பெறுமைக்குரியவனும் ஆவான் (என்றும்), அவர்கள் - காபிர்கள் - இணைவைப்பதை விட்டும் அல்லாஹ் தூய்மையானவன், அவன் தான் படைப்பவனும், இல்லாமையிலிருந்து உருவாக்குபவனும், உருவமைப்பவனுமாவான். அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. வானங்கள், பூமியில் உள்ளவைகள் அவனைத் துதிக்கின்றன. அவன் யாவற்றையும் மிகைத்தவனும், ஞானமிக்கவனுமாவான் என்றும் ஈமான் கொள்கிறோம். (ஸூரதுல் ஹஷ்ர் 59:23,24 ஆம் வசனங்கள்)

09. வெற்றி பெற்ற கூட்டத்தினர் வானம் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்குச் செந்தமானது என்றும் அவன் நாடியதைப் படைப்பான், அவன் நாடியவனுக்கு பெண் குழந்தையை வழங்குவான், அவன் நாடியவனுக்கு ஆண் குழந்தையை வழங்குவான், அல்லது ஆண் பெண் இருவரையும் சோடியாக  கொடுப்பான், அவன் நாடியவர்களை மலடாகவும் ஆக்குவான், அவன் நன்கறிந்தவனும் ஒவ்வோரு பொருளின் மீதும் சக்தி பெற்றவனுமாவான் என்றும் ஈமான் கொண்டிருக்கின்றனர். (ஸூரதுஷ் ஷூரா 42:49,50ம் வசனங்கள்)

10. நாங்கள் அல்லாஹ்வை அவனின் அனைத்து செயல்களிலும்  ஒருமைப்படுத்துகிறோம். அதாவது அல்லாஹ்வும் பார்க்கிறான் அவனின்  படைப்புக்களும் பார்க்கின்றன இப்படி இருக்கும் போது இதில் எப்படி அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவது என்றால், அல்லாஹ்வின் பார்வை குறைகளை விட்டும் நீங்கியது என்றும் படைப்புக்களின் பார்வையில் பற்பல குறைகள் இருக்கின்றன என்றும் அதேபோல் அஹ்லுஸ்ஸுன்னாக்களாகிய நாங்கள் அல்லாஹ்வின் பார்வையை படைப்பினங்களில் எந்தப்படைப்புக்கும் ஒப்பிடாமல் அல்லாஹ்வின் அந்தஸ்துக்கு ஏற்ற விதத்தில் அவன் பார்க்கிறான் என்றும் அவனின் பார்வையை விட்டும் எதுவும் மறைந்து விடமாட்டாது என்றும் இது போன்று ஏனைய அல்லாஹ்வின் செயலிலும் பண்புகளிலும் மற்றும் அவனின் பெயர்களிலும் அல்லாஹ்வை  ஒருமைப்படுத்துகிறோம்.

11. நாங்கள் (அல்லாஹ்வாகிய) அவனைப் போன்று எதுவும் இல்லை, அவன் செவியேற்பவனும் (கண்களால்) பார்ப்பவனுமாவான் என்ற நம்புகிறோம்.

அவனுக்கே வானங்கள், இப்பூமியின் திறவுகோல் (அதிகாரம்) உரியன.அவன் தான் நாடியவர்களுக்கு உணவைத் தாராளமாகவும் அளவோடும் வழங்குகிறான். “நிச்சயம் அவன் யாவற்றையும் நன்கறிந்தவன்” என்றும் ஈமான் கொள்வோம். (ஸூரதுஷ் ஷூரா 42: 11, 12)

நாங்கள் அல்லாஹ் பற்றிய விடயங்களுக்கு “அவனைப் போன்று எதுவும் இல்லை அவன் யாவற்றையும் பார்ப்பவனும் செவியேற்பவனும் ஆவான்” என்ற குர்ஆனிய  வசனத்தை ஒரு கோட்பாடாக எடுத்து, அதன் மூலம் அல்லாஹ்வுடன் சம்பந்தப்பட்ட விடயங்களுக்கு  விளக்கம் கூறுவோம். (ஸூரதுஷ் ஷூரா  42:11)

உ+ம்: அல்லாஹ்வுக்கு இரு கண்கள் இருப்பதாகக் குர்ஆன் கூறுகிறது. படைப்புக்கும் இரு கண்கள் இருக்கின்றன. இப்படி இருக்கும் போது அஹ்லுஸ்ஸுன்னாவாகிய நாம் கண் என்று வரும் வசனங்களுக்கு வேறு விளக்கம் கொடுக்காமல் அது கண் தான் என்று கூறி, அக்கண் படைப்புகளுக்கு இருக்கும் கண் போன்று இல்லாமல் அவ்விரண்டும் அவனின் அந்தஸ்துக்கு ஏற்ற விதத்தில் பூரணமானதாக, குறையற்ற கண்ணாக இருக்கிறது என்பதை அக்கோட்பாட்டின் மூலம் விளக்கம் கூறுவோம்.

12. நாங்கள் பூமியில் உள்ள எந்த உயிரினமாயினும் அவைகளுக்கு உணவளிக்கும் பொறுப்பு அல்லாஹ்வின் மீது மாத்திரமே உள்ளது. அவைகளின் வாழ்விடத்தையும் அவை சென்றடையுமிடத்தையும் அவன் நன்கறிந்தவன், இவையனைத்தும் தெளிவான பதிவேட்டில் இருக்கின்றன” என்றும் விசுவாசம் கொள்கிறோம். (ஸூரதுல் ஹூத்: 06ம் வசனம்)

13. நாங்கள் நிச்சயமாக அல்லாஹ்விடம் மட்டுமே மறுமை பற்றிய அறிவு இருக்கிறது. அவனே மழையை இறக்குகிறான். இன்னும், அவன் கருவறையில் உள்ளவற்றை அறிவான். எந்தவோர் ஆத்மாவும் தான் நாளை எதைச் சம்பாதிக்கும் என்பதை அறிய மாட்டாது. மேலும், எந்த ஆத்மாவும் தான் எந்தப் பூமியில் மரணிக்கும் என்பதை அறியமாட்டாது. “நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனும் மிக நுட்பமானவனுமாவான்” என்று விசுவாசம் கொள்வோம். (ஸூரது லுக்மான்: 34ம் வசனம்)

14. நாங்கள் அல்லாஹ் எதைப் பேச நாடுகிறானோ, எப்போது எப்படி யாருடன் பேச நாடுகிறானோ அப்போது அவன் செவிமடுக்க முடியுமான வார்த்தைகள் மூலம் பேசுகிறான், பேசுவான்.
இன்னும், “அல்லாஹ் மூஸாவுடன்  உறுதியாகப் பேசினான்.” என்றும் ஈமான் கொள்வோம் (ஸூரதுன் நிஸா: 164)

இன்னும் அல்லாஹ் “நாம் குறிப்பிட்ட நேரத்திற்கு மூஸா வந்து அவருடன் அவரின் றப்பு பேசினான்.” (ஸூரதுல் அஃராப்: 143)

இன்னும், “தூர்ஸினா மலையின் வலது புறத்திலிருந்து நாம் (மூஸாவாகிய) அவரை சப்தமிட்டு அழைத்தோம். இரகசியமாகப் பேச நாம் அவரை நெருங்கிவரச் செய்தோம். (ஸூரது மர்யம்: 54) இப்படி அல்லாஹ் தான் நாடிய போது பேசுகிறான் என்று  ஸலபிகளாகிய நாம் நம்புவோம்.

15. எனது ரப்பின் வார்த்தைகளை எழுத கடல் நீர் மையாக இருந்தாலும் எனது ரப்பின் வார்த்தைகள் எழுதி முடிவதற்கு முன் கடல் நீர் முடிந்து விடும். அது போன்ற ஒன்றை மீண்டும் உதவிக்குக் கொண்டு வந்தாலும் சரியே! அவைகளும் முடிந்துவிடும். (ஸூரதுல் கஹ்ப்: 109) என்று வெற்றி பெற்ற கூட்டமாகிய நாம் நம்புகிறோம்.

இன்னும், “பூமியில் உள்ள மரங்கள் எழுதுகோலாகவும் கடலும் அதனுடன் சேர்ந்து இன்னும் ஏழுகடல்கள் மையாக இருந்த போதிலும் அல்லாஹ்வின் வார்த்தைகள் எழுதி முடிந்து விடமாட்டாது. நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவனும் ஞானமிக்கவனுமாவான்” என்றும் நாம் நம்புவோம். (ஸூரது லுக்மான்: 27)

16. நாம் அல்லாஹ்வின் வார்த்தைகள், வார்த்தைகளிலே மிகவும் பூரணமானது என்றும் செய்திகளிலே மிகவும் உண்மையானது என்றும் சட்டங்களிலே மிக நீதமானது என்றும் பேச்சில் மிக அழகானது என்றும் ஈமான் கொள்கிறோம். ஏனெனில், அல்லாஹ் ஸூரதுல் அன்ஆம் 06: 155  “இல் உமது றப்பின் வார்த்தைகள் உண்மையிலும் நீதத்திலும் மிகப் பூரணமானது” என்று கூறுகிறான். அதேபோல், ஸூரதுந் நிஸா 04: 87 இல் “பேச்சில் அல்லாஹ்வைவிட உண்மை கூறுபவன் யார் இருக்கிறான் என்று கேட்கிறான் என்பதற்காகவும் இப்படி ஈமான் கொள்கிறோம்.

17. அல்குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தை, அது படைக்கப்பட்ட ஒன்றல்ல. அக்குர்ஆன் மூலம் அல்லாஹ் உண்மையாகச் செவிமடுக்க முடியுமான சொற்களைக் கொண்டு பேசினான். இன்னும், அதை அவன் ஜிப்ரீலின் மீது போட்டான். பின் அதை ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம்  முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உள்ளத்தில் இறக்கினார். என்று குர்ஆன் விடயத்தில் இப்படியான நம்பிக்கையில் இருக்கிறோம். ஏனெனில், அல்லாஹ் ஸூரதுந் நஹ்லில் 27:102 இல் “உமது றப்பிடமிருந்து உண்மையாக யதார்த்தமாக ரூஹுல் அமீன் ஆகிய ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் (குர்ஆனாகிய) அதை இறக்கி வைத்தான்” என்று கூறியிருப்பதற்காக வேண்டியும். (ஸூரதுஷ் ஷுஅராவில் 27: 192,195) “நிச்சயமாக அக்(குர்ஆனை) அகிலத்தில் வணங்கப்படுபவனாகிய அவன் இறக்கி வைத்தான். தெளிவான அரபு மொழியில் இருக்கும் அக்(குர்ஆனுடன்) ரூஹுல் அமீனாகிய ஜிப்ரீல் (நபியாகிய) உம் உள்ளத்தில் நீங்கள் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரில் இருப்பதற்காக வேண்டி இறக்கினார்” என்றும் கூறியிருப்பதற்காகவும் இப்படி ஈமான் கொள்கிறோம்.

18. நாங்கள் அல்லாஹ்வாகிய அவன் தன் தோற்றத்திலும் தன் பண்புகளிலும் படைப்புகளை  விட உயர்ந்தவனும்  மேலே உயரத்தில் இருக்கிறான் என்று நம்புகிறோம். ஏனெனில், நாங்கள் இப்படி நம்புவது  அல்லாஹ் பின்வருமாறு கூறியிருக்கிறான் என்பதற்காகவேயாகும்.

ஸூரதுல் பகாறா: 255 ம் “அவன் மிக மேலானவனும் மகத்துவம் மிக்கவனுமாவான்.”

ஸூரதுல் அன்ஆம் 06: 18 ம் வசனத்தில் “அவன் அவனின் அடியார்களுக்கு மேல் இருந்து கொண்டு அவர்களை அடக்கி ஆள்கிறான். இன்னும், அவன் மிக்க ஞானமுள்ளவனும் தீர்க்கமான அறிவுடையவனுமாவான்” என்று கூறுகிறான்.

19. நாங்கள் (அல்லாஹ்வாகிய) “அவன் வானங்களையும்  பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்பு அவன் (ஏழு வானங்களுக்கு மேலால் இருக்கும் சிம்மாசனமாகிய அந்த) அர்ஷின் மீது உயர்ந்தான். அவன் இப்படி அர்ஷில் இருந்து கொண்டு கவனிப்பு, கண்காணிப்பு விடயத்தில் பிடறி நரம்பைவிடச் சமீபமாக இருக்கிறான்” என்று ஈமான் கொள்கிறோம்.

(ஸூரது யூனுஸ் 10:03)ம் வசனத்தில் அவன் அர்ஷின் மீது உயர்வதென்பது, அவனின் (தாத் - ذات) தோற்றத்துடன்  அவனின் அந்தஸ்துக்குத் தக்க விதத்திலும் அவனின் கண்ணியத்திற்குத் தக்க விதத்திலும் உயர்வதாகும். அவன் எப்படி உயர்ந்தான் என்பதை அவனைத் தவிர வேறு யாரும் அறியமாட்டார்கள் என்றும் ஈமான் கொள்கிறோம். இன்னும், இமாம் மாலிக் رحمه الله கூறிய கூற்றான: “அல்லாஹ் உயர்ந்தான் என்பது அறியப்பட்ட விடயம், எப்படி உயர்ந்தான் என்பது அறியப்படாத ஒரு விடயம், அதுபற்றி (அறிந்து பிடிவாதமாகக்) கேள்வி கேட்பது பித்அத்தாகும். உயர்ந்தான் என்பதை ஈமான் கொள்வது கட்டாயமாகும்” என்ற இக்கூற்றை அல்லாஹ்வின் செயல் சார்ந்த பண்புகள் விடயத்தில் கொட்பாடாக எடுத்துள்ளோம்.

20. அல்லாஹுத்ஆலா தன் தோற்றத்தில் அர்ஷில் இருந்து கொண்டு, அறிவுடனும் கண்காணிப்பு விடயத்தில் படைப்புக்களுடன் பிடறி நரம்பைவிட சமீபமாக இருக்கிறான் என்று நாங்கள் ஈமான் கொள்கிறோம்.

அல்லாஹ் கூறுகிறான்: “(அல்லாஹ்வாகிய) ரஹ்மான் அர்ஷின் மீது உயர்ந்துவிட்டான்.” (ஸூரது தாஹா: 05 )

மேலும் கூறுகிறான்: “நாங்கள் அந்த (மனிதனுக்கு) பிடறி நரம்பைவிட மிக சமீபமாக இருக்கிறோம்.” (ஸூரது காப்: 16 ) ஆக எமது நம்பிக்கை இருக்கிறது.

21. அல்லாஹுத்ஆலா அர்ஷில் இருந்து கொண்டு உறங்காது படைப்பினங்களின் நிலமைகளை அறிவான். இன்னும், அவற்றின் வார்த்தைகளை கேட்கிறான். அவைகளின் செயல்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். அவற்றை அடக்கி ஆளுகிறான். மேலும், நிருவகிக்கிறான் என்று நாம் ஈமான் கொண்டுள்ளோம். ஏனெனில், அல்லாஹ் பின்வருமாறு கூறியிருக்கிறான்:

'என் அருமை மகனே! (உன் நன்மையோ, தீமையோ) அது கடுகின் வித்தளவாக இருந்து, அது ஒரு பாறைக்குள் அல்லது வானம் பூமியில் (மறைந்திருந்தாலும்) அவைகளை அல்லாஹ் கொண்டுவருவான். நிச்சயம் அல்லாஹ் மிக நுட்பமானவனும் நன்குணர்பவனுமாவான்.' (ஸூரா லுக்மான்-  31: 16)

'(நபியே!) உம்மிடம் தன் கணவனைப் பற்றி தர்க்கித்து அல்லாஹ்விடமும் முறைப்பட்ட (அப்பெண்ணின்) கூற்றை திட்டமாக அல்லாஹ் செவிமடுத்துவிட்டான்.' (ஸூரதுல் முஜாதலா- 58: 01)

'(நபியே!) நீங்கள் நின்று வணங்கும் போது  அவன் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.' (ஸூரதுஷ் ஷுஅரா - 26: 218)

'(...பின்பு அவன் அர்ஷின் மீது உயர்ந்து சகல காரியங்களையும் நிர்வகிக்கின்றான். அவனின் அனுமதிக்குப் பின்பே தவிர பரிந்துரைப்போர் எவரும் இல்லை.'  (ஸூரது யூனுஸ் - 10: 03)

22. 'அல்லாஹ்வே! ஆட்சியின் அதிபதியே! நீ நாடியவனுக்கு ஆட்சியைக் கொடுக்கிறாய். இன்னும், நீ நாடியவரிடமிருந்து ஆட்சியை பிடுங்கிக் கொள்கிறாய்! இன்னும், நீ நாடியவனை கண்ணியப்படுத்துகிறாய்! மேலும், நீ நாடியவனை இழிவுபடுத்துகிறாய்! நன்மைகள் யாவும் உன் கைவசமே உள்ளன. நீ ஒவ்வொரு பொருளின் மீதும் பேராற்றலுள்ளவன்.' (ஸூரது ஆலஇம்ரான் - 03: 26) என்று  அல்லாஹ்வின் செயல் சார்ந்த பண்புகளை மாற்று விளக்கம் கொடுக்காது  நம்புவோம்.

23. நாங்கள் ஜஹ்மிய்யாக்களில் உள்ள ஹுலூலிய்யாக்கள் கூறுவதைப் போன்று 'அல்லாஹ் படைப்புக்களுடன் பூமியில் இருக்கிறான்' என்று கூறமாட்டோம். மாறாக, அல்லாஹ் தன் தோற்றத்தில் அர்ஷில் இருந்து கொண்டு அறிவுடனும் கண்காணிப்புடனும் படைப்புக்களுடன் இருக்கிறான் என்று கூறி எந்த குர்ஆன் வசனங்களையும் மறுக்காது மாற்று விளக்கம் கொடுக்காது அவ்வசனங்களை அவ்வாறே நம்புவோம்.

24. ஹுலூலிய்யாக்களின் கூற்றான: 'அல்லாஹ் படைப்புக்களுடன் பூமியில் இருக்கிறான்' என்ற கூற்றை யார் கூறுகிறாரோ அவர் காபிர் மற்றும் வழிகெட்டவர் என்று ஸலபிகளான நாங்கள் கூறுவோம். ஏனெனில், அவன் அல்லாஹ்வுக்குத் தகுதியற்ற குறையான ஒன்றைக் கொண்டு அல்லாஹ்வை வரணித்தான் என்பதற்காகவேயாகும்.

25. நாங்கள் (மறைவானவற்றில் உள்ளடங்கக்கூடிய) அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகள் விடயத்தில் அல்லாஹ்வும், அவனின் தூதர் முஹம்மத் நபி صلى الله عليه وسلم அவர்களும் எவைகளை உறுதிப்படுத்தினார்களோ அவைகளை அப்படியோ உறுதிப்படுத்துவோம். எவைகளை அவ்விருவரும் மறுத்தார்களோ அப்படியானவைகளை நாங்களும் மறுப்போம். அதேபோல் அவ்விருவரும் எந்த விடயங்களிள் மௌனமாக இருந்தார்களோ அப்படியான விடயங்களில் நாங்களும் மௌனமாக இருப்போம்.

உதாரணம்: 01
அல்லாஹ்வுக்கு இரு கண்கள், பாதம், விரல்கள், இரண்டு கைகள் (அவ்விரண்டும் வலது கைகள்) உள்ளன போன்றவை.

உதாரணம்: 02
அல்லாஹ்வுக்கு சிறு தூக்கம், பெருந்தூக்கம், மனைவி, பிள்ளை, படைப்புக்களிடம் குறையுள்ளதாகக் கருதப்படும் அனைத்து விடயங்கள் போன்றன இருக்காது.

உதாரணம்: 03
அல்லாஹ்வுக்கு காது உள்ளதா? இல்லையா? நகங்கள் உள்ளனவா? இல்லையா? போன்றன தொடர்பான ஆராய்ச்சி.

அதேபோல் நாங்கள் மேலே குறிப்பிடப்பட்ட அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகள் விடயத்தில் எந்த ஒரு திரிவும் செய்யாமலும் உரிய கருத்தைக் கொடுக்காது மறுக்காமலும் எந்த ஓர் அமைப்பையும் கற்பிக்காமலும், படைப்பினங்களில் எந்த ஒன்றிற்கும் ஒப்பிட்டுக் காட்டாமலும் அவ்விருவரும் கூறியது போன்று நாங்களும் கூறுவோம்.

திரிவுபடுத்தலுக்கு உதாரணம்: அல்லாஹ்வின் முகம் என்றால் அல்லாஹ்வின் கூலி என்று சரியான கருத்தைக் கொடுக்காது வேறுகருத்துகளைக் கொடுப்பது.

மறுத்தலுக்கு உதாரணம்: அல்லாஹ்வின் முகம் என்பது வெறும் மூன்று எழுத்துக்களைக் கொண்ட ஒரு சொல். கருத்துக்கிடையாது. அல்லது, அதற்கு எமக்குக் கருத்துத் தெரியாது, அல்லாஹ் மாத்திரம் தான் அறிவான் போன்ற கருத்துக்களைக் கூறுவது.

அமைப்பு கற்பித்தலுக்கு உதாரணம்: அல்லாஹ்வின் முகம் என்றால் அது இப்படித்தான் இருக்கும் என்று கூறுவது.

உவமித்தலுக்கு உதாரணம்: அல்லாஹ்வின் முகம் என்றால் அது மனிதனின் முகத்தைப் போன்றது அல்லது, குறித்த படைப்பின் முகத்தைப் போன்றது என்று ஒப்பிட்டுக் காட்டுவதாகும்.

இந்த நான்கையும் நன்றாகக் கட்டாயம் பிரித்து விளங்கிக் கொள்ளுங்கள்! வழிதவறி வழிகேட்டில் செல்லாதீர்கள்!

26. நாங்கள் அல்லாஹ்வும் நபி  صلى الله عليه وسلم அவர்களும் அறிவித்தவைகளை ஈமான் கொள்வோம். நபி صلى الله عليه وسلم கூறினார்கள்: 'எம் றப்பான  அல்லாஹ்வாகிய அவன் ஒவ்வோர் இரவும் அதன் மூன்றில் கடைசிப் பகுதி எஞ்சியிருக்கும் நிலையில் உலகத்தின் வானத்திற்கு இறங்குகிறான். (அவ்வாறு) இறங்கி, யார் என்னை அழைக்கிறாரோ அவருக்கு நான் விடையளிப்பேன். இன்னும், யார் என்னிடம் கேட்கிறானோ அவருக்கு நான் கொடுப்பேன். மேலும், யார் என்னிடம் பாவமன்னிப்பு வேண்டுகிறாரோ அவருக்கு நான் மன்னிப்பு வழங்குவேன்' என்று அல்லாஹ் கூறுவதாக  நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுறைரா رضى الله عنه , ஆதாரம்: புஹாரி - 1145, முஸ்லிம் - 168)

27. அல்லாஹ்வின் செயல்சார்ந்த பண்புகள்

01 - 'இறங்குதல்'

இந்த ஹதீஸ் மூலம் ஸலபிகளாகி நாங்கள் அல்லாஹ்வுக்கு 'இறங்குதல்' என்ற செயல் சார்ந்த பண்பு இருக்கிறது என்று உறுதிப்படுத்துவதுடன், அல்லாஹ் அர்ஷில் இருந்து கொண்டு ஒவ்வொரு இரவினதும் மூன்றில் ஒரு பகுதியான கடைசிப் பகுதியில் அடிவானத்திற்கு இறங்குகிறான் என்றும் ஈமான் கொள்கின்றோம். மேலும், எங்கள் புத்திகளை அல்லாஹ்வுடன் தொடர்புபட்ட விடயங்களில் நுழைக்கமாட்டோம். ஹதீஸ் ஸஹீஹாக இருந்தால் அப்படியே ஈமான் கொள்வோம்.

02 - 'வருதல்'
நாங்கள் அல்லாஹுதஆலா மறுமை நாளில் அடியார்களிக்கு மத்தியில் தீர்ப்புக் கூறுவதற்காக வருவான் என்று நம்பி, 'வருதல்' என்ற செயல்சார்ந்த பண்பை அல்லாஹ்வுக்கு உறுதிப்படுத்துவோம்.
ஏனெனில், அல்லாஹ் ஸூரதுல் பஜ்ரின் 89: 21- 23 ஆகிய வசனங்களில் கூறுகிறான்: 'அவ்வாறல்ல பூமி துண்டு துண்டாகத் தகர்க்கப்பட்டு நொறுக்கப்படும் போது, மலக்குமார்கள் அணியணியாக நின்று கொண்டிருக்க உமது றப்பு வருவான்.’

அந்நாளில் நரகம் கொண்டுவரப்படும். அந்நாளில் தான் மனிதன் உணர்வு பெறுவான். அவ்வுணர்வு அவனுக்கு எப்படிப் பயனளிக்கும்?

28. அல்லாஹ்வின் செயல் சார்ந்த பண்புகள்

03 - 'விரும்புதல்'
நாங்கள் அல்லாஹ்வுக்கு 'விரும்புதல்' என்ற செயல் சார்ந்த பண்பு இருக்கிறது என்று நம்புவோம். ஏனெனில், அல்லாஹ்  ஸூரது ஆலஇம்ரான் 31 ஆம் வசனத்தில் 'நீங்கள் அல்லாஹ்வை விரும்புபவர்களாக இருந்தால் (நபியாகிய) என்னைப் பின்பற்றுங்கள் (அப்படிப் பின்பற்றினால்) அவன் உங்களை விரும்புவான் என்று நபியே நீ கூறுவீராக!' என்று அல்லாஹ் கூறுகிறான்.

29. அல்லாஹ்வின் செயல் சார்ந்த பண்புகள்

04 - 'பொருந்திக் கொள்ளுதல்'
நாங்கள் அல்லாஹ்வுக்கு 'பொருந்திக் கொள்ளுதல்' என்ற செயல் சார்ந்த பண்பு இருக்கிறது என்று நம்புவோம். ஏனெனில், அல்லாஹ்  ஸூரதுல் பைய்யினாவில்  98: 8 ஆம் வசனத்தில் கூறும் போது: 'அல்லாஹ்வும் அவர்களைப் பொருந்திக் கொண்டான். அவர்களும் (அல்லாஹ்வாகிய) அவனைப் பொருந்திக் கொண்டார்கள் ' என்று கூறுகிறான்.

30. அல்லாஹ்வின் செயல் சார்ந்த பண்புகள்

05 - 'கோபப்படுதல்'
நாங்கள் அல்லாஹ்வுக்குக் 'கோபப்படுதல்' என்ற செயல் சார்ந்த பண்பு இருக்கிறது என்று நம்புவோம். ஏனெனில், அல்லாஹ் ஸூரதுந் நிஸா 04: 93 ஆம் வசனத்தில் கூறும் போது: 'யார் வேண்டுமென்று ஒரு முஃமினை கொலை செய்கிறாரோ அவனின் கூலி நரகமாகும். அதில் நிரந்தரமாக இருப்பான். மேலும், அவன் மீது அல்லாஹ் கோபப்படுவான்' என்று தனக்குக் கோபம் என்ற பண்பை உறுதிப்படுத்துகிறான்.

31. அல்லாஹ்வின் செயல் சார்ந்த பண்புகள்

06. வெறுத்தல்
ஸலபிகளான நாங்கள் அல்லாஹுத்தஆலா தான் நாடியவைகளை வெறுக்கிறான் என்று ஈமான் கொண்டுள்ளோம். நாங்கள் ஏன் இப்படி 'வெறுத்தல்' என்ற செயலை உறுதிப்படுத்துகின்றோம் என்றால், அல்லாஹ்வும் இச்செயலை உறுதிப்படுத்தியிருக்கிறான் என்பதற்காகவேயாகும்.

 அல்லாஹ் ஸூரதுத் தவ்பாவின் 46ம் வசனத்தில் '...எனினும் அவர்கள் (உம்முடன்) புறப்படுவதை அல்லாஹ் வெறுத்து, அவர்களை தடுத்து விட்டான்' என்று கூறுகிறான்.

32. அல்லாஹ்வின் செயல் சார்ந்த பண்புகள்

07. தண்டித்தல்
அஹ்லுல் ஹதீஸான நாங்கள் அல்லாஹுத்தஆலா தான் நாடியவரை தண்டிக்கிறான் என்று ஈமான் கொண்டு தண்டித்தல் என்ற செயல் சார்ந்த பண்பை அல்லாஹ்வுக்கு உறுதிப்படுத்துகின்றோம். அல்லாஹ் கூறும் போது: 'அவர்கள் எங்களைக் கோபப்படுத்தியபோது  நாம் அவர்களைத் தண்டித்தோம் பின் அவர்கள் அனைவரையும் மூழ்கடித்தோம்' என்று ஸூரதுஸ் ஸுஹ்ருப்: 55ம் வசனத்தில் கூறுகிறான்.

33. அல்லாஹ்வின் செயல் சார்ந்த பண்புகள்

08. சந்தோசப்படுதல்
அஹ்லுல் ஹதீஸான நாங்கள் அல்லாஹுத்தஆலா சந்தோசப்படுகிறான், அவனுக்கு சந்தோசம் என்ற செயல் சார்ந்த பண்பு இருக்கிறது என்று ஈமான் கொள்கிறோம். இதுபற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறும்போது: 'பாலைவனத்தில் பிரயாணம் செய்யும் போது உங்களின் ஒருவரின் கட்டிச் சாதனம் உள்ள வாகனம் காணாமல் போய் பின்பு அவ்வாகனத்தைப் பெற்றுக் கொண்டால் நீங்கள் எவ்வளவு சந்தோசப்படுவீர்களோ அதைவிட அல்லாஹ் அவனின் அடியான் அவனிடம் பாவமீட்சி பெறும் போது சந்தோசப்படுகிறான்' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்)

34. அல்லாஹ்வின் செயல் சார்ந்த பண்புகள்

09. சிரித்தல்
நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறிய வார்த்தையை திரிவுபடுத்தாது நம்புவோம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: 'இரு மனிதர்கள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள்.  அவ்விருவரில் ஒருவர் மற்றவரைக் கொலை செய்து, (கொலை செய்தவர் தண்டிக்கப்படாது) அவ்விருவரும் சுவனம் நுளைவதைப் பார்த்து அல்லாஹ் சிரிக்கிறான்.'
அவ்விருவரில் ஒருவர் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்து கொல்லப்படுகிறார். அல்லாஹ் அம்மனிதனைக் கொலை செய்தவரை மன்னிக்கும் முகமாக அவரையும் யுத்தத்தில் (பங்கேற்க வைத்து) கொலை செய்யப்படவைக்கின்றான். (இருவரும் சுவனவாசிகளாக மாறுகிறார்கள்) இச்செயலைப் பார்த்து அல்லாஹ் சிரிக்கிறான்.

35. அல்லாஹ்வின் செயல் சார்ந்த பண்புகள்

10. ஆச்சரியப்படுதல்
நாங்கள் அல்லாஹுத்தஆலாவை அவனின் அந்தஸ்திற்குத் தக்கவிதத்தில் ஆச்சரியப்படுகிறான் என்றும் அவ்வாச்சரியம் படைப்புகள் ஆச்சரியப்படுவது போன்று அறியாமையின் பின் அறிவதன் மூலம் ஏற்படும் ஆச்சரியம் போன்றதல்ல என்றும் அவ்வாச்சரியம் ஏற்படுவது அல்லாஹ் அறிந்த ஒன்று படைப்பின் வழமைக்கு மாற்றமாக நடைபெறுமாயின் அப்படியான விடயத்தைப் பார்த்து அல்லாஹ் ஆச்சரியப்படுகிறான் என்று ஈமான் கொள்கிறோம்.
ஒரு முறை ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு மனிதர் வந்து: 'அல்லாஹ்வின் தூதரே! எனக்கு கடும் பசி ஏற்பட்டுள்ளது' என்று கூறினார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருவரை தன் மனைவிகளின் வீடுகளை நோக்கி அனுப்பி ஏதாவது உள்ளதா என விசாரித்தார்கள். அவர்களிடத்தில் எதையும் நபியவர்கள் பெற்றுக் கொள்ளவில்லை. அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்; 'இம்மனிதனுக்கு விருந்தளிப்பவர் எவர் இருக்கிறார்? அல்லாஹ் அவருக்கு அருள் செய்யட்டும்!' எனக் கூறியபோது, அன்ஸாரிகளைச் சேர்ந்த ஒரு மனிதர் எழுந்து: 'அல்லாஹ்வின் தூதரே! நான் என்று கூறினார்.' பின் அந்த ஸஹாபி அம்மனிதரை அவர் வீடுக் கூட்டிச் சென்றார். அல்லாஹ்வின் தூதரின் விருந்தாளி வந்துள்ளார் எனத் தன் மனைவியிடம் கூறி, ஏதாவது சேர்த்து வைத்துள்ளீரா? என வினவினார். அதற்கு, 'பிள்ளைகளின் உணவைத்தவிர வேறு எதுவும் என்னிடம் இல்லை' என அம்மனைவி கூறினாள். அப்போது அவர் 'பிள்ளைகள் இரவு உணவை நாடினால் அவர்களை உறங்கச் செய்! பின் நீர் வந்து விளக்கை அனைத்து விடு! நாங்கள் சாப்பிடுவது போன்று பாசாங்கு செய்வோம்' என்று கூறினார். அவ்வாறே அவளும் செய்தாள். அவ்விருந்தாளியும் சாப்பிட்டார். மறுநாள் அந்த ஸகாபி காலைப்பொழுதில் ரஸூலுல்லாஹ்வை அடைந்தார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்: 'இன்னின்னார்களின் செயலைப் பார்த்து அல்லாஹ் ஆச்சரியப்பட்டான்' என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ் ஸூரதுல் ஹஷ்ரின் 09ம் வசனத்தை இறக்கினான். அவ்வசனமாவது: 'மேலும் தமக்குத் தேவையிருந்தபோதிலும் தம்மைவிட அவர்களையே முற்படுத்துவார்கள்.' (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: புஹாரி)

36. அல்லாஹ்வின் செயல் சார்ந்த பண்புகள்

11. ரோஷப்படுதல்
நாங்கள் அல்லாஹ்வுக்கு 'ரோஷப்படுதல்' என்ற செயல் சார்ந்த பண்பை அவனின் அந்தஸ்திற்குத் தக்க விதத்தில்  உறுதிப்படுத்துகின்றோம். ஏனெனில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: 'புஹாரியில் அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளதாவது:  'நிச்சயமாக அல்லாஹ் ரோஷப்படுகிறான். ஒரு விசுவாசி அல்லாஹ் ஹராமாக்கிய ஒன்றை செய்யும்போது அல்லாஹ் ரோஷப்படுகிறான்' என்று கூறினார்கள்.

37. அல்லாஹ்வின் செயல் சார்ந்த பண்புகள்

12. கூறுதல்
அல்லாஹ் தான் நாடிய விடயங்களை நாடியபோது நாடியவிதத்தில் மற்றவர்களுக்குக் கூறுகிறான் என்று நாங்கள் நம்புகின்றோம். ஏனெனில், ஸூரதுல் பகரா: 30ம் வசனத்தில்: '(நபியே!) நிச்சயமாக நான் பூமியில் தலைமுறையை படைக்கப்போகிறேன் என்று கூறியதை நினைவு கூறுவீராக!' என்று அல்லாஹ் தான் கூறிய விடயத்தை அல்குர்ஆனில் கூறுகிறான்.

38. அல்லாஹ்வின் செயல் சார்ந்த பண்புகள்

13. பார்த்தல்
நாங்கள் பின்வரும் ஹதீஸை ஈமான் கொள்கின்றோம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 'நிச்சயமாக அல்லாஹ் உங்கள் உடம்புகளையும் தோற்றங்களையும் பார்க்கமாட்டான். மாறாக, அவன் உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கிறான்' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: முஸ்லிம்)

39. அல்லாஹ்வின் செயல் சார்ந்த பண்புகள்

14. உயர்தல்
வணங்கப்படத்தகுதியான அல்லாஹ் வானத்தை நோக்கி உயர்ந்து தற்போது அவன் ஏழுவானத்திற்கு மேல் உள்ள ஜன்னதுல் பிர்தவ்ஸின் முகடான அர்ஷ் எனும் சிம்மாசனத்தில் இருந்து படைப்பினங்களின் விடயங்களை கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்று ஈமான் கொண்டு அல்லாஹ்வுக்கு உயர்தல் என்ற செயல் சார்ந்த பண்பை நாங்கள் உறுதிப்படுத்துகின்றோம்.

அல்லாஹ் கூறுகிறான்: 'பின்பு அவன் வானத்தின் பக்கம் உயர்ந்தான் அ(வ்வானமான)து புகை மண்டலமாக இருந்தது. பின் அவன் அதற்கும் பூமிக்கும் 'நீங்கள் இருவரும் விரும்பியோ, வெறுத்தோ வாருங்கள்' எனக் கூறினான். அப்போது அவ்விரண்டும் நாம் விரும்பியவர்களாக வருகிறோம் எனக் கூறின.' (ஸூரா புஸ்ஸிலத்: 11)

40. அல்லாஹ்வின் செயல் சார்ந்த பண்புகள்

15. கட்டளையிடுதல்
அல்லாஹ் கூறும்போது: 'படைப்பதும் கட்டளையிடுவதும் (அல்லாஹ்வாகிய) அவனுக்கே உறியது என்பதை அறிந்து கொள்ளுங்கள்' என்று கூறுகிறான். (ஸூரதுல் அஹ்ராப்: 54) ஆதலால், ஸலபிகளாகிய நாங்கள் கட்டளையிடுவதும், ஏவுவதும் அல்லாஹ்வின் செயல் சார்ந்த பண்புகளில் உள்ளவையாகும் என்றும் அவை அல்லாஹ்வாகிய அவனிலே இருக்கும் வார்த்தை, பேச்சுடன் தொடர்புபட்ட விடயங்களில் உள்ளடங்கக் கூடியவை  என்றும் நம்புகிறோம்.

41. அல்லாஹ்வின் செயல் சார்ந்த பண்புகள்

16. அழகாக்குதல்
நாங்கள் அழகாக்குதல் அல்லாஹ்வின் பண்புகளில் உள்ள ஒரு பண்பாகும் என்றும் அது அல்லாஹ்வின் அந்தஸ்துக்குத் தக்கவிதத்தில் இருக்கும் என்றும் ஈமான் கொண்டுள்ளோம். நாங்கள் இதற்கு ஆதாரமாக ஸூரதுல் முஃமினின் 64ம் வசனமான: 'அவன் உங்களை உருவமைத்து, பின்பு உங்கள் தோற்றங்களையும் அழகாக்கினான்' என்ற வசனத்தையும் இதே போன்ற இன்னும் பல வசனங்களைக் கொண்டும் உறுதிப்படுத்துகின்றோம்.

42. அல்லாஹ்வின் செயல் சார்ந்த பண்புகள்

17. தடுமாற்றமடைதல்
ஸலபி இமாமான இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்: 'தடுமாற்றம் என்ற பண்பை பொதுப்படையாக அல்லாஹ்வுக்கு உறுதிப்படுத்துவது கூடாது. ஏனெனில், அல்லாஹுத்தஆலா தடுமாற்றத்தை முஃமினின் உயிரைக் கைப்பற்றும் விடயத்தில் தான் கூறியுள்ளான். அது குறித்த ஹதீஸுல் குத்ஸியானது: 'என் முஃமினான அடியானின் உயிரைக் கைப்பற்றும் போது நான் தடுமாற்றமடைவது போன்று எந்த விடயத்திலுல் நான் தடுமாற்றமடைவதில்லை.' (புஹாரி: 6502) 

இத்தடுமாற்றம் ஆதமின் பிள்ளைகள் தடுமாற்றமடைவது போன்று சந்தேகத்தின் மூலம் ஏற்படுவது கிடையாது. மாறாக, அது அவ்வடியானுடன் உள்ள இரக்கத்தினால் ஏற்படும் தடுமாற்றமாகும்.' (லிகாஉல் பாபில் மப்தூஹ்)

43. அல்லாஹ்வின் செயல் சார்ந்த பண்புகள்

18. சோர்வடைதல்
அபூ அப்திர் ரஹ்மான் யஹ்யா இப்னு அலி அல்ஹஜூரி ஹபிழஹுல்லாஹ்  கூறுகிறார்: 'சோர்வடைதல் என்ற பண்பானது, புஹாரி முஸ்லிமில் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களைத் தொட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்: 'நிச்சயமாக நீங்கள் சோர்வடையும் வரை அல்லாஹ் சோர்வடைய மாட்டான்' நாங்கள் இந்த ஹதீஸில் வருவதுபோன்று உறுதிப்படுத்துவோம். மேலும், அது விடயத்தில் நாம் அல்லாஹ் கூறுவது போன்று: 'அவனைப்போன்று எதுவும் இல்லை. அவன் பார்ப்பவனும் கேட்பவனுமாவான்' என்றும் கூறுவோம்.' (அஷ்ஷூரா: 11) (அல்கன்ஸுஸ் ஸமீன்)

44. அல்லாஹ்வின் செயல் சார்ந்த பண்புகள்

19. வாசனையை நுகர்தல்
அஹ்லுல் ஹதீஸில் உள்ள இமாம் அப்துல் அஸீஸ் இப்னு அப்தில்லாஹ் இப்னி பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அல்லாஹ்வின் பண்பான 'வாசத்தை நுகர்தல்' என்ற விடயத்தில் கூறும் போது: 'நோன்பாளியின் வாயிலிருந்நு வரும் வாடையை அல்லாஹ் நுகர்வதைப் பொறுத்தமட்டில் அது அல்லாஹ்வின் உயர்ந்த பண்புகளில் உள்ளதாகும். அதை படைப்புகளுடன் ஒப்பிடாமல் ஈமான் கொள்வது கட்டாயமாகும்.' என்று கூறியுள்ளார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறும்போது: 'என் ஆத்மா எவன் கரம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாசம் அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியின் வாசத்தைவிட மிக வாசமுடையதாக இருக்கும் என்று கூறினார்கள்.' (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

45. அல்லாஹ்வின் செயல் சார்ந்த பண்புகள்

20. மிகைத்தல்
ஸலபிகளைச் சேர்ந்த அறிஞர் அபூ முஹம்மத் அப்துல் ஹமீத் இப்னு யஹ்யா இப்னு ஸைத் அல்ஹஜூரி ஹபிழஹுல்லாஹ் அவர்களிடம் ஸூரது யூசுபின் 21ம் வசனமான: 'அல்லாஹ் தனது காரியத்தில் மிகைப்பவன். எனினும், மக்களில் அதிகமானோர் அறியமாட்டார்கள்' என்ற வசனத்தில் வரும் 'மிகைப்பவன்' என்பது அல்லாஹ்வின் பெயரில் உள்ளதா? அல்லது அவனின் பண்புகளில் உள்ளதா? எனக் கேட்கப்பட்டபோது, அதற்கு பதிலாக: 'அது அல்லாஹ்வின் பண்புகளில் உள்ளதாகும், அவனின் பெயர்களில் உள்ளதல்ல' என்று கூறினார்கள்.

46. அல்லாஹ்வின் செயல் சார்ந்த பண்புகள்

21. மறந்தது போன்று விட்டுவிடுதல்
நாங்கள் இப்பண்பை அஹ்லுஸ் ஸுன்னாவின் இமாமான அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறிய விளக்கத்தைப் போன்று விளங்குவோம். அவ்விளக்கமாவது: அல்லாஹ்வின் கூற்றான ஸூரதுல் ஜாஸியாவின் 34ம் வசனத்தில் 'உங்களது இந்நாளில் சந்திப்பை நீங்கள் மறந்தது போல் உங்களை நாம் மறந்துவிடுவோம்' என்றால் இதன் விளக்கம்: 'உங்களது இந்நாளின் சந்திப்பை மறந்து அமலை விட்டது போன்று நாம் உங்களை நரகத்தில் விட்டுவிடுவோம்' என்பதாகும். (அர்ரத்து அலஸ் ஸனாதிகதி வல் ஜஹ்மிய்யா)

47. அல்லாஹ்வின் செயல் சார்ந்த பண்புகள்

22. சாபமிடுதல்
அஷ்ஷெய்க் கலீல் ஹர்ராஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அல்லாஹ்வின் வார்த்தையான 'யார் ஒரு முஃமினை வேண்டுமென்று கொலை செய்கிறானோ, அவனின் கூலி நரகமாகும். இன்னும், அல்லாஹ் கோபப்பட்டு அவனை சபிப்பான்' என்ற அந்நிஸா அத்தியாயத்தின் 93ம் வசனத்தைப் பற்றி அவர்கள் கூறும்போது: 'இந்த வசனங்கள் அல்லாஹ்வின் செயல் சார்ந்த சில பண்புகளை உறுதிப்படுத்துவதை பொதிந்துள்ளன. அவை பொருந்திக்கொள்ளல், கோபப்படுதல், சபித்தல், வெறுத்தல் போன்றவையாகும். இப்பண்புகள் அல்லாஹ்வின் அந்தஸ்துக்குத் தக்கவிதத்தில் உண்மையானவையாகும். இவைகளிலிருந்து படைப்புகளுக்கு ஒன்றையும் ஒப்பாக்க முடியாது. அதேபோல் இவைகளிலிருந்து படைப்புகள் வேண்டி நிற்பதை வேண்டி நிற்கவும் மாட்டாது' என்று கூறினார்கள். (ஷரஹுல் அகீததில் வாஸிதிய்யா)

48. அல்லாஹ்வின் செயல் சார்ந்த பண்புகள்

23. கவ்னிய்யா - அமைப்பு ரீதியாக - நாடுதல்
அஹ்லுஸ் ஸுன்னாக்கள் அல்லாஹ்வின் நாட்டத்தை இரு வகையாகப் பிரிப்பார்கள்.

முதலாவது: கவ்னிய்யா - அமைப்பு ரீதியாக - நாடுதல்
இரண்டாவது: ஷரஇய்யா - சட்ட ரீதியாக - நாடுதல்

கவ்னிய்யாவாக அல்லாஹ் நாடுவது என்பது: அல்லாஹ் விரும்புகின்ற விடயமான ஈமான் கொள்ளல், தொழுதல், அவனை திக்ர் செய்தல் போன்ற விடயங்களிலும் நிகழும், அவன் விரும்பாத களவெடுத்தல், பித்அத் செய்தல், மது அருந்துதல் போன்ற விடயங்களிலும் நிகழும். இவ்வகை நாட்டம் கட்டாயம் நிகழ்ந்தே தீரும். ஏனெனில், நல்லவற்றைப் படைத்தவனும் அல்லாஹ் தான் மோசமான கெட்டவைகளைப் படைத்தவனும் அல்லாஹ் தான். உதாரணம் மூலம் கூறுவதென்றால், அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஈமான் கொள்ள வேண்டும் என்று அமைந்த அல்லாஹ்வின் நாட்டம் கவ்னிய்யாவாக உள்ளது. இதை நாங்கள் அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஈமான் கொண்டு முஃமீன்களில் உள்ளவராக மாறினார் என்பதன் மூலம் அறிந்து கொள்கிறோம். ஆனால், அல்லாஹுத்தஆலா அபூ ஜஹ்ல் ஈமான் கொள்ள வேண்டும் என்பதை கவ்னிய்யனாக நாடவில்லை. இதை நாம் அபூஜஹ்ல் ஈமானை மறுத்து காபிர்களில் உள்ளவனாக மாறிவிட்டான் என்பதன் மூலம் அறிந்து கொள்கிறோம். இந்த கவ்னிய்யாவான நாட்டம் இருவரில் ஒருவருக்குத்தான் கிடைத்தது.

49. அல்லாஹ்வின் செயல் சார்ந்த பண்புகள்

24. சட்ட ரீதியாக நாடுதல்
அல்லாஹ்வின் நாட்டத்தில் இரண்டாவது வகை ஷரஇய்யாவாக - மார்க்க சட்ட ரீதியாக - அல்லாஹ் நாடுவதாகும். இந்த நாட்டம் அல்லாஹ் விரும்புகின்ற விடயத்தில் மாத்திரம் தான் நிகழும். இந்த நாட்டம் முஃமின்களின் விடயத்தில் மாத்திரம் நடைபெறும்.
வழிகெட்ட கூட்டம் அல்லாஹ்வின் நாட்டத்திற்குக் கொடுத்த விளக்கமும் ஸலபிகளான நமது விளக்கமும்

1. ஜபரிய்யா
இவ்வழிகெட்ட கூட்டம் அல்லாஹ்வின் நாட்டம் என்பது அல்லாஹ் விரும்பும் விடயங்கள் என்று கூறுகின்றது. அப்படியாயின் நிராகரிப்பு, விபச்சாரம், களவு போன்றவைகள் குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன? என்று கேட்டால், அதற்கு அவர்கள் அல்லாஹ் தடுத்த விடயங்களும் அல்லாஹ்வுக்கு விருப்பமானவை என்றும் அகிலத்தில் உள்ள அனைத்தும் அல்லாஹ்வுக்கு விருப்பமானவை என்றும் கூறுகிறார்கள். இது பிழையான பாதிலாகும். இப்படியான கருத்துக்களைக் கூறுவதை விட்டும் அல்லாஹ் எம்மைப் பாதுகாப்பானாக!

2. கதரிய்யா
இவ்வழிகெட்ட கூட்டமும் அல்லாஹ்வின் நாட்டம் என்பது அல்லாஹ் விரும்பும் விடயங்களாகும் என்று கூறி இது விடயத்தில் ஜபரிய்யாக்களுக்கு இவர்கள் உடன்படுகிறார்கள். ஆனால், இவர்களிடத்தில் அப்படியாயின் நிராகரிப்பு, விபச்சாரம், களவு போன்றவைகளில் உங்கள் நிலைப்பாடு என்ன? என்று கேட்டால், இவ்வழிகெட்ட கூட்டமான கதரிய்யாக்கள் இப்படியான அல்லாஹ்வுக்கு விருப்பமில்லாத செயல்களை அல்லாஹ் படைக்கவில்லை என்றும் இவைகளை மனிதன் தான் படைத்துக் கொள்கிறான் என்றும் கூறுகின்றது. இதுவும் பிழையான பதிலாகும். இப்படியான கருத்துக்களை கூறுவதை விட்டும் எம்மை அல்லாஹ் பாதுகாப்பானாக!
இம்மையிலும் மறுமையிலும் வெற்றிபெற்ற ஸலபிகளான எமது விளக்கமாவது: எங்களைப் பொறுத்தவரை நாங்கள் வழிகேடர்களின் கூற்றுகளிலிருந்து எம்மைப் பாதுகாக்கும் முகமாக அல்லாஹ்வின் நாட்டத்தை இரு வகைகளாகப் பிரிப்போம்.

முதலாவது: கவ்னிய்யா
இரண்டாவது: ஷரஇய்யா

கவ்னிய்யாவான நாட்டத்தைப் பொறுத்தவரை அது அல்லாஹ் விரும்பும் விடயத்திலும் நிகழும் அல்லாஹ் விரும்பாத விடயத்திலும் நிகழும். இரு நாட்டமும் நிகழ்ந்தே தீரும். இவ்விரண்டை படைத்தவன் அல்லாஹ் மாத்திரம் தான் என்றும், அல்லாஹ்வின் ஷரஇய்யாவான நாட்டம் அல்லாஹ் விரும்புகின்ற விடயத்தில் மாத்திரம் தான் நிகழும் என்றும் நம்புவோம். அதேபோல், செயல்களில் நல்லதும் கெட்டதும் அல்லாஹ்வின் படைப்புக்களாகும் என்றும் ஏற்றிருக்கின்றோம்.

மேலும், கவ்னிய்யாவைப் பொறுத்தவரை அதன் மூலம் அல்லாஹ்வின் நாட்டம் நடைபெறும். அது அல்லாஹ்வுக்கு விருப்பமாக இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. இந்நாட்டம் சிலவேளை அல்லாஹ் விரும்பும் விடயத்திலும் நிகழும், அவன் விரும்பாத விடயத்திலும் நிகழும். உதாரணம்: அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஈமான் கொள்ள வேண்டும் என்பது அல்லாஹ் விரும்பும் நாட்டம். அதன்படி அது நிகழ்ந்தது. அதேபோல், அபூஜஹ்ல் நிராகரிக்க வேண்டும் என்பது அல்லாஹ் விரும்பாத கோபத்துக்குரிய நாட்டம். அதுவும் நிகழ்ந்தது. அல்லாஹ் எம் அனைவரையும் இந்த வெற்றி பெற்ற கூட்டத்தில் வாழ்ந்து அதிலே மரணிக்கவும் செய்வானாக!

50. அல்லாஹ்வின் செயல் சார்ந்த பண்புகள்

25. அவன் நாடுபவைகளை செய்பவன்
அல்லாஹ் ஸூரதுல் புரூஜ்: 06ம் வசனத்தில் கூறும் போது: 'அவன் நாடியதை செய்பவன்' எனக் கூறுகிறான்.

ஆக, ஸலபிகளான எங்களுக்கு அல்லாஹ்வின் பெயர்கள், அவனின் செயல்கள் இவ்வளவு தான் என வரையறுக்க முடியாது. ஆதலால், அல்லாஹ்வின் செயல் சார்ந்த பண்புகள் 25ஐ நாம் இங்கு கொண்டுவந்தோம். இன்னும், அதிகரிப்பதாயின் அல்லாஹ்வின் அழகிய ஒவ்வொரு பெயர்களிலிருந்தும் பல செயல் சார்ந்த பண்புகளை எடுக்க முடியும். உதாரணமாக: அல்லாஹ்வின் பெயர்களில் உள்ளது தான் 'அல்ஹாலிக்' என்பது. இப்பெயரிலிருந்து படைத்தல், அறிதல் இது போன்ற செயல் சார்ந்த பண்புகள் எடுக்கப்படும். அதேபோல், படைப்புகளிடம் எதுவெல்லாம் குறையற்ற, பூரணமான செயல்களாக இருக்கிறனவோ அவைகளையும் நாம் ஆதாரம் இருந்தால் ஆதாரத்துடன் அவைகளை அல்லாஹ்வின் அந்தஸ்துக்குத் தக்க விதத்தில் உறுதிப்படுத்துவோம். இதனடிப்படையில் அல்லாஹ்வின் செயல் சார்ந்த பண்புகளில் உள்ளவையாக: அனுப்புதல் (105:3), விரிவுபடுத்துதல், தயார்படுத்துதல் (65:10), எழுதுதல் (58:21), பலப்படுத்துதல் (58:22) இது போன்றவைகளை அல்லாஹ்வின் அந்தஸ்துக்குத் தக்க விதத்தில் உறுதிப்படுத்துவோம்.

மேலும் அல்லாஹ்வின் செயல்களை எம்மால் இத்தனைதான் என்று மட்டிட முடியாது. ஏனெனில், அவன் நாடுபவைகளைச் செய்கிறான்.
அல்லாஹ் சூரதுல் புரூஜின் 16ம் வசனத்தில் கூறும்போது: 'அவன் நாடியதைச் செய்கிறான்' எனக் கூறுகிறான். எனவே, எங்களுக்கு அல்லாஹ்வின் பெயர்களை மற்றும் அவனின் செயல்களை இவ்வளவுதான் என்று மட்டிட முடியாது.

நாம் அல்லாஹ்வின் செயல் சார்ந்த பண்புகளில் 25ஐப் படித்தோம். இன்னும் மேலதிகமாகக் கூறுவதாயின்...

01.   அல்லாஹ்வின் அழகிய ஒவ்வொரு பெயரிலுமிருந்தும் பல செயல் சார்ந்த பண்புகள் எடுக்கப்படுகின்றன. உதாரணமாக: அல்ஹாலிக் படைப்பவன். இப்பெயரில் இருந்து படைத்தல், அறிதல், நுட்பமாகச் செயற்படுதல் இதுபோன்ற செயல் சார்ந்த பண்புகள் எடுக்கப்படுகின்றன.

02.   அதேபோல் படைப்புக்களின் செயல்களில் எதுவெல்லாம் குறையற்ற பூரணமான செயல்களாக இருக்கின்றனவோ அவைகளையும் நாம் ஆதாரத்துடன் அல்லாஹ்வின் அந்தஸ்துக்குத்தக்க விதத்தில் அல்லாஹ்வின் செயல் சார்ந்த பண்புகளாக உறுதிப்படுத்துவோம். உதாரணமாக:
01.   அனுப்புதல் (105: 03)
02.   விரிவுபடுத்துதல் (94: 01)
03.   தயார்படுத்துதல் (65: 10)
04.   எழுதுதல் (58: 21)
05.   பலப்படுத்துதல் (58: 22) போன்றவைகளை அல்லாஹ்வின் அந்தஸ்துக்குத் தக்கவிதத்தில் அவன் செய்கிறான் என்று நாம் நம்புவோம்.

51. அல்லாஹ்வின் அழகிய பெயர்கள்
எங்களைப் பொறுத்தமட்டில் அல்லாஹ்வின் அழகிய பெயர்கள் இத்தனை தான் என்று மட்டிட முடியாது. ஏனெனில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு முறை: 'இறைவா! உனக்குரிய அனைத்துப் பெயர்களைக் கொண்டும் நான் உன்னிடத்தில் கேட்கிறேன். அப்பெயர்கள் நீ உனக்கே வைத்துக் கொண்ட பெயர்களாக இருந்தாலும் அல்லது நீ அவைகளை உனது வேதத்தில் கூறியதாக இருந்தாலும் அல்லது நீ உனது அடியார்களில் யாருக்காவது கற்றுக் கொடுத்தவையாக இருந்தாலும் அல்லது உனது மறைவான அறிவில் மறைத்து வைத்தவையாக இருந்தாலும் சரியே! அப்படியான அனைத்துப் பெயர்களைக் கொண்டும் நான் உன்னிடம் கேட்கிறேன்' என்று பிராத்தித்தார்கள். (அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: அஹ்மத் - 4091)

எனவே, இந்த ஹதீஸ் மூலம் படைப்புகள் அறியாத அல்லாஹ்வின் பெயர்கள் பல இருக்கின்றன எனவும் எம்மால் அவைகளை மட்டிட முடியாது எனவும் புரிந்து கொள்ளலாம்.

அப்படியான மட்டிட முடியாத அல்லாஹ்வின் பெயர்களிலிருந்தும் சிலவற்றைப் பற்றிப் பேசக்கூடிய செய்தியான 'நிச்சயமாக அல்லாஹ்வுக்கு நூறில் ஒன்று குறைவான தொன்னூற்றொன்பது பெயர்கள் உள்ளன. அவைகளை யார் மட்டிடுகிறாரோ அவர் சுவனம் நுழைவார்.' (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்) என்பதை ஏற்றுக் கொள்வோம். 

இன்னும், குர்ஆனிலும் ஸுன்னாவிலும் அல்லாஹ்வின் பெயர்கள் பல இடம்பெற்றுள்ளன. 
அவைகளை நாம் தொடர்ந்து படிப்போம்.
1. அல்லாஹ் - வணங்கப்படுபவன் (அல்பகரா: 255)
2. அல்இலாஹ் - வணங்கப்படுபவன் (அல்பகரா: 256)

அல்லாஹ் என்ற பெயரைப் பொறுத்தவரையில் ஏனைய அல்லாஹ்வின் பெயர்களால் பின்தொடரப்பட்டு வரும் ஒரு பெயராக விளங்குகின்றது. அல்லாஹ் சூரா இப்ராஹீமின் 1, 2 ஆகிய வசனங்களில் அவனின் அழகிய பெயர்கள் சிலவற்றை முதலில் கூறிவிட்டு அவ்வழகிய பெயர்கள் யாரை குறிக்கின்றன என்பதைப் பற்றிக் கூறும் போது 'அல்லாஹ்' என்ற பெயரை சுட்டிக்கட்டி தெளிவுபடுத்துகின்றான். ஆகவே, அல்லாஹ் என்ற பெயரானது ஏனைய அல்லாஹ்வின் பெயர்களைக் கொண்டு தொடரப்பட்டு வரும் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

அதேபோன்று அல்லாஹ் என்ற பெயர் 'வணங்கப்படுபவன்' என்ற கருத்தைத்தரும். மேலும், இப்பெயா் இலாஹ் என்ற சொல்லிலிருந்து எடுக்கப்பட்டதாகும்.

3. அர்ரஹ்மான் - இவ்வுலகில் முஸ்லிம் காபிர் என்று வேறுபாடு இன்றி இரக்கம் காட்டுவன் (அல்பகரா: 02)
அல்லாஹ்வின் இப்பெயரிலிருந்து பூரணமாக இரக்கம் காட்டுதல் என்ற செயல் சார்ந்த பண்பு எடுக்கப்படும்.

ஒரு முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சில சிறைக்கைதிகள் வந்தார்கள். அப்போது அச்சிறைக்கைதிகளில் உள்ள ஒரு பெண் தன் குழந்தைக்கு மார்பகத்திலிருந்து பால் புகட்ட நாடி நெஞ்சுடன் அணைத்துக் கொண்டு பால் புகட்டினாள். (இச்செயலை அவதானித்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: 'இப்பெண் தன் குழந்தையை நெருப்பில் வீசுவதை விரும்புவாளா?' எனக் கேட்டார்கள். அதற்கு அங்கிருந்தவர்கள்: 'இல்லை!' எனக் கூற, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: 'இப்பெண் தன் குழந்தைக்குக் காட்டும் இரக்கத்தைவிட அல்லாஹ் தன் அடியார்களுக்கு இரக்கம் காட்டுகிறான்' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: உமர் ரழியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்)

நாம் இச்செய்தி மூலம் அல்லாஹ்வுக்கு இரக்கம் காட்டுதல் என்ற செயல் சார்ந்த பண்பை உறுதிப்படுத்தி, இரக்கம் காட்டக்கூடியவன் என்ற பெயர் அல்லாஹ்வின் பெயர்களில் நின்றும் உள்ளதாகும் என்று நம்புவோம்.
தாய் தனது பிள்ளைக்குக் காட்டும் அன்பைவிடப் பண்மடங்கு இரக்கமுள்ளவனே! எழுப்பப்படும் அந்நாளில் எங்களை இழிவுபடுத்திவிடாதே! எந்தச் செல்வமும் பிள்ளைகளும் பிரயோசனமளிக்காத அந்நாளில் எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக!

4. அர்ரஹீம் - மறுமையில் முஃமீன்களுக்கு மாத்திரம் இரக்கம் காட்டுபவன் (அல்பகரா: 02)
அல்லாஹ் சூரா அஹ்ஸாபின் 43ம் வசனத்தில் கூறும்போது: '(அல்லாஹ்வான) அவன் முஃமீன்களுடன் இரக்கமுள்ளவனாக இருக்கிறான்.'
மேலும், இப்பெயரைப் பெறுத்தவரை அல்லாஹ்வின் பெயர்களான அர்ரஹ்மான், அல்பர், அல்கபூர், அல்அஸீஸ், அத்தவ்வாப், அர்ரஊப் போன்றவற்றுடன் இணைந்து வந்துள்ளன. இப்படி இணைந்து வருவது அல்லாஹ்வின் ஒவ்வொரு பெயரையும் தனித்தனியாகக் கவனிக்கும் போது அழகையும் பூரணத்துவத்தையும் அறிவிக்கின்றன. இவைகள் அல்லாத வேறு அல்லாஹ்வின் பெயர்களுடன் இணைந்து வரும் போது பூரணத்துவத்திற்கு மேல் பூரணத்துவத்தை அறிவிக்கின்றன.

இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ்  தனது நூலான 'அல்கவாஇதுல் முஸ்லா' என்ற நூலில் முதலாவது கோட்பாடாகக் கூறும் போது: 'அல்லாஹ்வின் அனைத்துப் பெயர்களும் அழகானவை, அழகின் உச்ச நிலையை அடைந்தவை' என்று கூறியுள்ளார்.

5. அல்மலிக் - ஆட்சியாளன் (அல்ஹஷ்ர்: 23)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூற அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். “ஒவ்வோர் இரவும் இரவின் மூன்றில் முதல் பகுதி முடியும் போது அல்லாஹ் உலகின் வானத்திற்கு இறங்கி: நான் தான் அரசன்! நான் தான் அரசன்!” என்று கூறுவான். மேலும், “யார் என்னை அழைக்கிறாரோ அவருக்கு நான் விடையளிப்பேன். யார் என்னிடம் கேட்கிறாரோ அவருக்கு நான் கொடுப்பேன். யார் என்னிடம் பாவமன்னிப்புக் கேட்கிறாரோ அவருக்கு நான் மன்னிப்பு வழங்குவேன்” என்று கூறுவான். இப்படி அவன் வெளிக்கும் வரை இருக்கிறான் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: முஸ்லிம்)

இச்செய்தி மூலம் அல்லாஹ் அல்மலிக் எனும் ஆட்சியாளனாக இருக்கிறான் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

அஷ்ஷெய்ஹ் முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல்உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் தனது அல்கவாஇதுல் முஸ்லா என்ற புத்தகக்தில் இரண்டாவது கோட்பாடாகக் கூறும் போது: “அல்லாஹ்வின் பெயர்கள் அனைத்தும் (அவன் ஒருவனுக்கு மாத்திரம் வைக்கப்பட்ட) பெயர்களும் பண்புகளுமாகும். எனவே, அல்லாஹ்வின் 'ஆட்சி செய்பவன்' என்ற பெயர் ஆட்சி செய்தல் என்ற (செயல் சார்ந்த) பண்பை அறிவிக்கின்றது” என்கிறார்.

6. அல்குத்தூஸ் - பரிசுத்தமானவன் (அல்ஹஷ்ர்: 23)

7. அஸ்ஸலாம் - சாந்தியானவன் (அல்ஹஷ்ர்: 23)

அல்லாஹ்வின் பெயர்கள் பற்றி இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் தனது அல்கவாஇதுல் முஸ்லா என்ற புத்தகத்தில் கூறும்போது: “அல்லாஹ்வின் பெயர்கள் படைப்புகளுடன் தொடர்புபடாத பண்புகளை அறிவிக்குமாயின் அப்பெயர்கள் இரண்டு விடயங்களைப் பொதிந்திருக்கும்:
1.    அப்பெயரை அல்லாஹ்வுக்கு உறுதிப்படுத்துவோம்.
2.    அப்பெயர் பொதிந்திருக்கும் பண்பை அல்லாஹ்வுக்கு நாம் உறுதிப்படுத்துவோம்.”

உதாரணமாக அல்குத்தூஸ் - பரிசுத்தமானவன், அஸ்ஸலாம் - சாந்தியானவன்
இப்பெயர்களுக்குப் படைப்புடன் எந்தத் தொடர்புமில்லை. பரிசுத்தமாக இருத்தல், சாந்தியாக இருத்தல் என்பது அல்லாஹ்வுடன் மாத்திரம் தொடர்புபட்ட இரு பெயர்களாகும். எனவே, இப்பெயர்களை நாம் அல்லாஹ்வுக்கு உறுதிப்படுத்தி அப்பெயர்கள் பொதிந்திருக்கும் பண்புகளான பரிசுத்தமாக இருத்தல், சாந்தியாக இருத்தல் ஆகிய பண்புகளையும் அல்லாஹ்வுக்கு உறுதிப்படுத்துவோம்.

8. அல்முஃமின் - அற்புதங்கள் மூலம் உண்மைப்படுத்துபவன் (அல்ஹஷ்ர்: 23)

9. அல்முஹய்மின் - கண்காணிப்பவன் (அல்ஹஷ்ர்: 23)

10. அல்அஸீஸ் - யாவற்றையும் மிகைப்பவன் (அல்ஹஷ்ர்: 23)

அல்கவாஇதுல் முஸ்லாவில் மூன்றாவது கோட்பாடாக ஷேய்ஹ் அவர்கள் கூறும்போது: “அல்லாஹ்வின் பெயர்கள் படைப்புகளுடன் தொடர்புபட்ட பண்புகளை அறிவிக்குமாயின் அப்பெயர்களில் மூன்று விடயங்கள் பொதிந்து காணப்படும்.
1.    அப்பெயரை நாம் அல்லாஹ்வுக்கு உறுதிப்படுத்துவோம்.
2.    அப்பெயர் பொதிந்திருக்கும் செயல் சார்ந்த பண்பையும் அல்லாஹ்வுக்கு உறுதிப்படுத்துவோம்.
3.    அப்பெயர் பொதிந்திருக்கும் சட்டத்தை உறுதிப்படுத்துவோம்.”

உதாரணமாக அல்முஹய்மின் - கண்காணிப்பவன் இப்பெயரைப் பொறுத்தவரை இதற்கு படைப்புகளுடன் தொடர்பு இருக்கிறது. எனவே, நாம் இப்பெயரை அல்லாஹ்வுக்கு உறுதிப்படுத்துவோம். அதேபோன்று, இப்பெயர் பொதிந்திருக்கும் பண்பான கண்காணித்தல் என்ற பண்பையும் அல்லாஹ்வுக்கு உறுதிப்படுத்துவோம். அவ்வாறே, சிறிய பெரிய அற்பமான  இரகசியமான பரகசியமான இப்படி அனைத்தையும் கண்காணிக்கிறான் என்று நாம் கூறுவோம்.

11. அல்ஜப்பார் - அடக்கியாள்பவன் (அல்ஹஷ்ர்: 23)

12. அல்முதகப்பிர் - பெறுமைக்குரியவன் (அல்ஹஷ்ர்: 23)

13. அல்ஹாலிக் - படைப்பவன் (அல்ஹஷ்ர்: 24)

14. அல்பாரி - தோற்றுவிப்பவன் (அல்ஹஷ்ர்: 24)

15. அல்முஸவ்விர் - உருவமமைப்பவன் (அல்ஹஷ்ர்: 24)

இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அல்கவாஇதுல் முஸ்லாவில் ஜந்தாவது தியரியாக: “அல்லாஹ்வின் பெயர்கள் விடயத்தில் மார்க்கம் எந்த இடத்தில் நின்றதோ அந்த இடத்தில் நின்றுகொள்ள வேண்டும். அதிலே புத்தியை நுழைக்க எந்த இடமும் கிடையாது” என்று கூறியுள்ளார். அல்லாஹ் ஸூரதுல் அஹ்ராப் :33 இல் சில விடயங்களை ஹராமானவை என்று கூறிக்கொண்டுவந்து நீங்கள் அறியாதவைகளை அல்லாஹ்வின் மீது கூறுவதையும் ஹராமாக்கித் தடுத்துள்ளான்” என்று கூறுகிறான். எனவே, நாம் அல்லாஹ்வின் பெயர்கள் விடயத்தில் இப்படி நடந்து கொள்வோம்.

16. அல்கப்பார் - மிக்க மன்னிப்பவன்  (ஸாத்: 66)

17. அல்கஹ்ஹார் - அடக்கியாளுபவன் (அர்ரஃது: 16)

18. அல்வஹ்ஹாப் - கொடையாளன் (ஸாத்: 09)

19. அர்ரஸ்ஸாக் - வாழ்வாதாரம் அளிப்பவன் (அத்தாரியாத்: 58)

20. அல்பத்தாஹ் - சிறந்த தீர்ப்பாளன் (ஸபஃ: 26)

ஒருமுறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்: “அல்லாஹ்வே! நான் உனக்குரிய ஒவ்வொரு பெயர்கள் மீலமும் உன்னிடம் கேட்கிறேன். அப்பெயர்கள் நீ உனக்கு வைத்ததாக இருக்கட்டும் அல்லது, உன் வேதத்தில் இறக்கியவையாக இருக்கட்டும். அல்லது, உன் படைப்பில் யாருக்காவது கற்றுக்கொடுத்தவையாக இருக்கட்டும். அல்லது, உன் மறைவான அறிவில் மறைத்து வைத்தவையாக இருக்கட்டும் இப்படியான உன் அனைத்துப் பெயர்களைக் கொண்டும் உன்னிடம் நான் கேட்கிறேன்” என்று பிராத்தித்தார்கள். (அஹ்மத், ஹாகிம்)

எனவே, அல்லாஹ் தனது மறைவான அறிவில் மறைத்து வைத்த பெயர்கள் இவ்வளவுதான் என்று யாருக்கும் கூற முடியாது. 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கூற்றான: “நிச்சயமாக அல்லாஹ்வுக்கு நூற்றில் ஒன்று குறைவான தொண்ணூற்றொன்பது பெயர்கள் உள்ளன. அவைகளை யார் மட்டிடுகிறாரோ அவர் சுவனம் நுழைவார்” என்ற கூற்றைப் பொறுத்தவரை இந்த அளவு தான் என்று வரையறுக்க முடியாது. வரையறுப்பதாக இருந்தால் அல்லாஹ்வுக்கு என்று வராமல் அல்லாஹ்வின் பெயர்கள் 99 என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியிருக்க வேண்டும். இப்படிக் கூறாமல் அல்லாஹ்வுக்கு என்று கூறியிருக்கிறார்கள். ஆகவே, இந்த ஹதீஸின் விளக்கம் அல்லாஹ்வுக்கு நாம் அறிந்த (அறியாத) பல பெயர்கள் உள்ளன அவைகளில் 99 பெயர்கள் உள்ளன. அவைகளை யார் கண்டறிந்து அதன்படி வாழ்கிறாரோ அவர் சுவனம் நுளைவார்” என்பதாகும். (கவாஇதுல் முஸ்லா எனும் நூலின் ஆறாவது தியரி)

21. அல்அலீம் - நன்கறிந்தவன் - (அல்ஹதீத்: 03)

22. அல்காபிழ் - பற்றிப்பிடிப்பவன் - (அபூதாவுத்: 3450)

23. அல்பாஸித் - விசாலப்படுத்துபவன் - (அபூதாவுத்: 3450)

24. அல்ஹாபிழ் -  பாதுகாவலன் - (யூஸுப்: 64)

25. அர்ராஸிக் - வாழ்வாதாரம் அளிப்பவன் - (அபூதாவுத்: 3450)

"அல்லாஹ்வுக்கு தொண்ணூற்றொன்பது பெயர்கள் உள்ளன. அவைகளை யார் கணக்கிட்டுக் கொள்கிறாரோ, அவர் சுவனம் நுழைவார்” என்ற ஹதீஸின் கருத்து ஒரு தாளில் அவைகளை எழுதி மனனமாகும் வரை மீட்டுவதல்ல. இன்னும், அவைகளைப் பாட்டுப்பாடுவது போன்று பாடுவதுமல்ல. மாறாக, அதன் கருத்து:
01.  அவைகளின் சொற்களையும் எண்ணிக்கைகளையும் தேடிப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
02.  அதன் கருத்துக்களையும் அவை அறிவிக்கக் கூடியவைகளையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.
03.  அவைகள் மூலம் பிராத்திக்க வேண்டும். 

அல்லாஹ்வின் பெயர் மூலம் பிரார்த்தனை செய்வதற்கு இரு முறைகள் உள்ளன. உதாரணமாக 'கப்பார்' என்ற வார்த்தையைக் கொண்டு பிரார்த்திக்கும் போது:
01. யா கப்பார்! அதிகம் மன்னிப்பவனே! என்னை மன்னிப்பாயாக! என்று பிராத்திக்க வேண்டும்.
02. அல்லாஹ் கப்பார் ஆக இருக்கிறான். ஆகையால் மன்னிப்பைப் பெற்றுத்தரும் செயல்களைச் செய்ய வேண்டும். (முஹம்மத் இப்னு ஹாலிஹ் அல்உஸைமீன் ரஹிமஹுல்லாஹ்) இப்படியே நாமும் இந்த ஹதீஸை விளங்குவோம்.

26. அல்கதீர் - அனைத்திலும் ஆற்றல் பெற்றவன் - (புஹாரி: 6398)

27. அல்லதீப் - நுட்பமானவன் - (அல்முல்க்: 14)

28. அல்ஹபீர் - நன்கறிந்தவன் - அல்முல்க்: 14)

29. அல்ஹலீம் - சகிப்புத்தன்மையுடையவன் - (அத்தகாபுன்: 17)

30. அல்அழீம் - மிக மகத்தானவன் - (அல்பகரா: 255)

31. அல்கபூர் - மிக்க மன்னிப்பவன் - (அல்புரூஜ்: 15)

32. அஷ்ஷகூர் - நன்றி செலுத்துபவன் - (அத்தகாபுன்: 17)

33. அல்அலீ - மிக உயர்ந்தவன் - (அல்பகரா: 255)

34. அல்கபீர் - மிகப்பெரியவன் - (அர்ரஹ்து: 09)

35. அல்ஹபீழ் - கண்கானிப்பவன் - (அல்ஹூத்: 57)

எங்களுக்கு அல்லாஹ் என்ற ஒருவன் இருக்கிறான் என்பதை நான்கு விடயங்கள் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

01.  இயற்கைத் தன்மையின் மூலம்
02.  புத்தியின் மூலம்
03.  மார்க்கத்தின் மூலம்
04.  உணர்வு ரீதியாக இப்படி 04 முறைகள் மூலம் அறியலாம். 

இவை ஒவ்வொன்றைப் பற்றியும் தனித்தனியாகக் காண்போம்.

01. இயற்கைத் தன்மையின் மூலம் அறிதல்:
ஒவ்வொரு படைப்பும் எந்த ஒரு முன்னறிவுமின்றி தன்னைப் படைத்த ஒருவன் இருக்கிறான் என்ற நம்பிக்கையுடன் பிறக்கின்றது. எமக்கு ஏதாவது ஆபத்து ஏற்படும் போது உடனே எம்மை அறியாமலே எங்கள் முகங்களும் உள்ளங்களும் வானத்தின் பக்கம் உயர்வதை அவதானிக்கலாம். இப்படியான நிகழ்வுகள் இயற்கையிலே அல்லாஹ் ஒருவன் இருக்கிறான். அவன் தான் எம்மைப் படைத்தான் என்பதை அறிவிக்கின்றன. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒருமுறை  கூறும்போது: "பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் அல்லாஹ்வை ரப்பாக ஏற்றுக் கொள்ளும் சுபாவத்தில் பிறக்கின்றது. அவைகளின் பெற்றோர்களே யூதனாக அல்லது கிருஸ்தவனாக அல்லது நெருப்புவணங்கியாக மாற்றுகிறார்கள்” என்று கூறினார்கள்.

எனவே, அல்லாஹ் என்ற ஒருவன் இருக்கிறான் என்பதை இயற்கையாகவே எம்மால் அறிய முடியும் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

02. புத்தி ரீதியாக அறிதல்:
நாம் படைப்புகளை சற்று சிந்திக்கும் போது அவைகளுக்கு ஒரு படைப்பாளன் இருக்க வேண்டும் என்றும் அவைகள் ஒருபோதும் தானாக உண்டாகுவதில்லை என்றும் எதுவும் தன்னைத்தானே படைத்துக்கொள்ள சக்தி பெறமாட்டாது என்றும் எம் புத்தி மூலம் அறிய முடியும். அல்லாஹ் கேட்கிறான் (ஸுரதுத் தூர்: 35-37) "எந்தப் பொருளுமின்றி அவர்கள் படைக்கப்பட்டவர்களா அல்லது, அவர்கள் தான் படைக்;கக்கூடியவர்களா அல்லது, அவர்கள் வானங்கள் பூமியை படைத்தனரா” என்று கேட்கிறான்.
எனவே, எம் புத்தியும் இப்பிரபஞ்சத்தை படைத்த ஒருவன் இருக்கிறான் என்பதை ஏற்றுக் கொள்கின்றது. அவன் தான் அல்லாஹ் என்பதையும் ஏற்றுக் கொள்கின்றது.

03.  மார்க்கத்தின் மூலம் அறிதல்:
வானத்திலிருந்து இறக்கப்பட்ட ஒவ்வொரு வேதமும் இதுபற்றிப் பேசுவதை எமக்கு அவதானிக்க முடியும். இன்னும், அவ்வேதங்களில்  படைப்பினங்களுக்கு உள்ள சீர்திருத்தம், அதேபோல் அவைகளில் உள்ள ஒன்றுக்குகொன்று முரண்பாடற்ற சட்டங்கள், மற்றும் அவைகளிள் உள்ள நவீனம் உண்மைப்படுத்தும் தகவல்கள் ஆகிய அனைத்தும் அல்லாஹ் ஒருவன் இருக்கிறான் என்பதை அறிவிக்கின்றன. எமக்கு இதன் மூலமும் அல்லாஹ்வை அறிய முடியும்.

04.  புலன்களால் அறிதல்:
அல்லாஹ் ஒருவன் இருக்கிறான் என்பதை துஆக் கேட்பவனின் துஆ ஏற்றுக் கொள்ளப்படுகின்றதன் மூலமும் கஷ்டத்தில் இருப்பவனின் கஷ்டம் நீங்குகின்றதன் மூலமும் அறிய முடியும்.
இதுபற்றி புஹாரியில் அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்பட்ட செய்தியாவது: "ஒரு முறை வெள்ளிக்கிழமையன்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜுமுஆ உரையாற்றிக் கொண்டிருக்கும் போது ஒரு நாட்டுப்புற அரபி சமுகம் தந்து: “அல்லாஹ்வின் தூதரே! சொத்துக்கள் அழிந்துவிட்டன. குடும்பங்கள் பசிபட்டினியில் உள்ளனர். எனவே, எங்களுக்காக அல்லாஹ்விடம் துஆக் கேளுங்கள்” என்றார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது இரு கைகளையும் உயர்த்தி துஆக் கேட்டார்கள். அப்போது  மேகங்கள் மலைகள் போன்று ஒன்று சேர்ந்து நீரைக் கொட்டின. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிம்பரிலிருந்து இறங்கும் போது அவரது தாடியிலிருந்து நீர் வடிந்துகொண்டிருந்தது. அடுத்த ஜுமுஆவில் அதே நாட்டுப்புற அரபி எழுந்து: “அல்லாஹ்வின் தூதரே! கட்டிடங்கள் இடிந்துவிட்டன. சொத்துக்கள் மூழ்கிவிட்டன. எங்களுக்காக அல்லாஹ்விடத்தில் துஆக் கேளுங்கள்” என்று வேண்டினார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது கரத்தை உயர்த்தி: “அல்லாஹ்வே! எங்களைச் சூழ மழையை இறக்குவாயாக! எங்களுக்குப் பாதிப்பாக அதை ஆக்கிவிடாதே!” என்று பிராத்தித்தார்கள். அப்போது அம்மழை மேகங்கள்  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எந்தத் திசையை சுட்டிக் காட்டினார்களோ அத்திசையை நோக்கிச் சென்றன. எனவே, இச்சம்பவமும் அல்லாஹ் ஒருவன் இருக்கிறான் என்பதை எமக்கு உணர்த்துகின்றது.

அல்லாஹ், அவனைப்பற்றி எங்களுக்கு எப்படி  வர்ணித்தானோ அப்படியே நாம் ஈமான் கொள்வது எங்களுக்கு மிக மகத்தான பிரதிபலன்களைப் பெற்றுத்தருகின்றன.

முதலாவது: கவலையான சந்தர்ப்பங்களிலும் சந்தோஷமான சந்தர்ப்பங்களிலும்;  அல்லாஹ் அல்லாதவைகளை வணங்காது அல்லாஹ்வை மாத்திரம் வணங்க வழிவகுக்கின்றது.

இரண்டாவது: அல்லாஹ்வின்  அழகிய பெயர்களும் அவனின் உயர்ந்த பண்புகளும் எவைகளைப் பொதிந்துள்ளனவோ அப்படியான முறையில் அல்லாஹ்வை விரும்புவதற்கும் அவனை கண்ணியப்படுத்துவதற்கும் வழிவகுக்கின்றது.

மூன்றாவது: அல்லாஹ் எவைகளை ஏவினானோ அவைகளை எடுத்தும் அவன் எவைகளைவிட்டும் எங்களைத்தடுத்தானோ அப்படிப்பட்ட விடயங்களைத் தவிர்ந்தும் உரிய முறையில் அல்லாஹ்வை வணங்க வழிவகுக்கின்றது.

36.   அல்முகீத் - கண்காணிப்பவன் -  (அன்னிஸா: 85)

37.   அல்ஹஸீப் - விசாரணை செய்பவன் - (ஆலு இம்ரான்: 173)

38.   அல்ஜமீல் - மிக அழகானவன் - (முஸ்லிம்: 91)

39.   அல்கரீம் - கண்ணியமானவன் - (அல்இன்பிதார்: 06)

40.   அர்ரகீப் - கண்காணிப்பவன் - (அல்மாஇதா: 117)

அல்லாஹ்வின் அனைத்துப் பெயர்களும் மிக அழகானவையும் அழகில் உயர் நிலையை அடைந்தவையுமாகும். அவ்வகை  அழகில் உள்ளவைதான்:

முதலாவது: அல்லாஹ்வின் பெயர்களில் புகழை அறிவிக்காத ஒரு பெயர்கூடக் கிடையாது.

இரண்டாவது: அல்லாஹ்வின் பெயர்கள் வெறும் பெயர்கள் மாத்திரம் கிடையாது. மாறாக, அவைகள் அல்லாஹவின் பெயர்களும் பண்புகளுமாகும்.

மூன்றாவது: அல்லாஹ்வின் ஒவ்வொரு பெயரும்; மிகப் பூரணமான, வெளிப்படையான, மிக கண்ணியமான பண்புகளை அறிவிக்கின்றன.

நான்காவது: அல்லாஹ் அவனின் பெயர்கள் மூலம் அவனிடம் பிரார்த்தனை செய்யும்படி ஏவியுள்ளான். ஏனெனில், அவைகள் அல்லாஹ்வை நெருங்கும் சாதனங்களாகும். இன்னும், அப்பெயர்களை மனனமிடுபவர்களையும் அவைகளின் கருத்துக்களைத் தேடுபவர்களையும் அல்லாஹ் விரும்புகிறான். இன்னும், சுவனத்தில் நூழைவிக்கிறான்.

ஐந்தாவது: அல்லாஹ்வின் பெயர்கள் அல்குர்ஆனிலும் அஸ்ஸுன்னாவிலும் கூறப்பட்டுள்ளன.

41.   அல்முஜீப் - பதிலளிப்பவன் - (ஹூத்: 61)

42.   அல்வாஸிஉ - விசாலமானவன் - (அல்பகரா: 247)

43.   அல்ஹகீம் - ஞானம்மிக்கவன் - (அல்ஹஷ்ர்: 24)

44.   அல்வதூத் - மிக்க நேசிப்பவன் - (அல்புரூஜ்: 15)

45.   அல்மஜீத் - கீர்த்திமிக்கவன் - (அல்புரூஜ்: 15)

நாம் அல்லாஹ்வின் அழகிய பெயர்கள் அனைத்தும் படைக்கப்படாதவை என்று ஈமான் கொள்வோம்.

ஒருமுறை யஃகூப் அத்தவ்ரகி என்பவர்: "அல்குர்ஆன் படைக்கப்பட்ட ஒன்று” என்று கூறுகின்ற மனிதன் பற்றி இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் கேட்டார். அப்போது இமாம் அவர்கள் யார் அல்லாஹ்வின் அறிவும் அவனின் பெயர்களும் படைக்கப்பட்டது என்று கூறுகிறாரோ அவர் காபிராவார். மேலும், ஆலு இம்ரான் 61ம் வசனத்தைக் கூறிவிட்டு இவ்வசனம் பேசுவது குர்ஆனைப்பற்றியல்லவா? என வினவிவிட்டு, மேலும் யார்; அல்லாஹ்வின் அறிவும் அவனின் பெயர்களும் படைக்கப்பட்டது என்று கருதுகிறாரோ அவர் காபிராவார். இது விடயத்தில் சந்தேகப்பட வேண்டிய அவசியம் கிடையாது என்று பதில் கூறினார்கள். (இமாம் ஆஜுரி அவர்களின் அஷ்ஷரீஆ: 170)

அதேபோல், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: "அல்லாஹ்வே! உனக்குரிய அனைத்துப் பெயர்களைக் கொண்டும் நான் உன்னிடம் கேட்கிறேன்...” என்று பிராத்தித்தார்கள். (அஹ்மத், இப்னு ஹிப்பான்) ஆகவே, அல்லாஹ்வின் பெயர்கள் படைக்கப்பட்ட ஒன்றாக இருந்தால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் இப்படிப் பிராத்தனை செய்திருக்கமாட்டார்கள்.
இதன் காரணமாக நாங்கள் அல்லாஹ்வின் அழகிய பெயர்கள் அனைத்தும் மனிதன் வைக்காத, அல்லாஹ்வே அவனுக்கு வைத்த பெயர்கள் என்றும் அவைகள் மூலம் அவன் யதார்தமாகப் பேசினான் என்றும், அவனின் பெயர்களும் பண்புகளும் அறிவும் படைக்கப்படாதவையென்றும் ஈமான் கொள்வோம். இதுவே அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத்தின் அகீதாவாகும்.

அல்லாஹ்வின் பெயர்கள், பெயர்களும் பண்புகளுமாகும் என்றும், அவைகள் வெறும் பெயர்கள் மாத்திரம் கிடையாது என்றும் விசுவாசம் கொள்கிறோம்.

அல்லாஹ்வின் பெயர்கள் அனைத்தும் அவனின் தோற்றத்தைக் கவனிக்கும் போது அல்லாஹ் என்ற ஒருவனுக்கு மாத்திரம் உரிய பெயராகவே இருக்கின்றன. அப்பெயர்களின் கருத்துக்களைக் கவனிக்கும் போது அல்லாஹ்வுக்குரிய பலதரப்பட்ட பண்புகளாகவும் அவைகள் இருக்கின்றன. அவனின் ஒவ்வொரு பெயரும் தனித்தனியான பண்புகளை அறிவிக்கின்றது.

உதாரணமாக: அல்ஹய், அல்அலீம், அல்கதீர், அர்ரஹ்மான், அர்ரஹீம் போன்றவை அல்லாஹ் ஒருவனின் பெயர்களாகும்.

இவைகளின் கருத்துக்களைக் கவனிக்கும் போது அல்அலீம் (அனைத்தையும் அறிந்தவன்) என்ற கருத்து, அல்ஹய்யுன் (என்றும் உயிருள்ளவன்) என்ற கருத்தில் இருந்தும் வேறுபட்டதாக இருக்கின்றது. இவ்வாறே அனைத்துப் பெயர்களும் தோற்றத்தைக் கவனிக்கும் போது அல்லாஹ் ஒருவனின் பெயராகவும், கருத்துக்களைக் கவனிக்கும் போது அல்லாஹ் ஒருவனுக்கு இருக்கின்ற பல பண்புகளாகவும் காணப்படுகின்றன.

அல்லாஹ் தன்னைப் பற்றிப் பெயராகக் கூறும் போது: 'அவன் மன்னிப்பவனும் இரக்கமுள்ளவனும் ஆவான்” என்று கூறுகிறான்.

அல்லாஹ், மேற்கூறிய அவனின் பெயரை பண்பாகக் கூறும் போது: 'உமது இரட்சகன் மன்னிப்பவன், இரக்கம் உடையவன்” என்று கூறுகிறான்.

சிலவேளை, ஒரு மனிதனின் பெயர் ஜமீல் (அழகானவன்) என்று இருக்கும் ஆனால், அவன் அழகற்றவனாக இருப்பான். இதற்கு மாற்றமாக அல்லாஹ்வின் பெயர்கள், பெயர்களாகவும் பண்புகளாகவும் இருக்கின்றன என்று ஈமான் கொள்கிறோம்.

அல்லாஹ்வின் விடயத்தில் பெயர்கள் நான்கு வகைப்படும்:

முதலாவது: சில பெயர்கள் எந்த முறையில் பார்த்தாலும் பொதுவாகவே பூரணத்துவத்தை அறிவிக்கும். இவ்வகைக்கு ثُـبُـوْتِـيَّـةُ  (ஸுபூதிய்யா) என்று கூறப்படும். இவ்வகைப் பெயர்களை அல்லாஹ்வுக்குப் பெயராகவும் பண்பாகவும் கூறுவோம்.

உதாரணமாக: التواب (மிக்க மன்னிப்பவன்) என்ற பதத்தைப் பெயராகவும் அல்லாஹ் மன்னிக்கின்றான் என்று பண்பாகவும் கூறுவோம்.

இரண்டாவது: பொதுவாகக் குறையை அறிவிக்கும் பெயர்கள். இவ்வகைப் பெயரிலும் பண்பிலும் பூரணம் இருக்காது. இப்படியான பெயர்களை அல்லாஹ்வுக்குப் பெயராகவும் பண்பாகவும் கூறமாட்டோம். இதற்கு سَـلْـبِـيَّـةُ  (ஸல்பிய்யா) என்று அரபியில் கூறப்படும்.

உதாரணமாக: இயலாதவன், ஏழ்மையானவன். இப்படியான குறையுள்ள பெயர்கள் அல்லாஹ்வுக்குப் பெயராகவோ செயல் சார்ந்த பண்பாகவோ கூறமாட்டோம்.

மூன்றாவது: சில பெயர்கள் பூரணத்துவத்தை அறிவிக்கும். ஆனால்,  தங்கள் புத்தியால் மட்டிடும் போது குறையானதாகத் தோன்றும். இப்படியான பெயர்களை அல்லாஹ்வுக்குப் பெயராக நாம் கூறமாட்டோம். ஆனால், செயல் சார்ந்த பண்பாகக் கூறுவோம்.

உதாரணமாக: பேசுதல், நாடுதல். இச்செயல்களை வைத்து அல்லாஹ் அல்முதகல்லிம் (பேசக்கூடியவன்), அல்முரீத் (நாடக்கூடியவன்) என்று கூறமாட்டோம். மாறாக, அல்லாஹ் பேசுகிறான், அவன் நாடுகிறான் என்று செயலாகக் கூறுவோம்.

நான்காவது: சில பெயர்கள் ஒரு நிலையில் பார்க்கும் போது குறையை அறிவிக்கும், வேறு நிலையில் பார்க்கும் போது பூரணத்துவத்தை அறிவிக்கும். இப்படியான பெயர்களைப் பொதுவாக மறுக்கவும் மாட்டோம், அதேபோல் பொதுவான பெயராகக் கூறவும் மாட்டோம்.

உதாரணமாக: சூழ்ச்சி செய்தல், பரிகாசம் செய்தல் இச்செயல்களை வைத்து: சூழ்ச்சி செய்பவன் என்பது அல்லாஹ்வின் பெயர்களில் ஒன்று என்று கூறமாட்டோம். அதேபோல், ஒரேயடியாக அல்லாஹ் சுழ்ச்சி செய்வதில்லை என்று மறுக்கவும் மாட்டோம். இதுவே எமது நம்பிக்கையாகும்.

எந்த நிலையிலும் அடியார்களுக்குக் கூறமுடியாத, வைக்க முடியாத சில பெயர்கள் இருக்கின்றன. உதாரணமாக: அல்லாஹ், அர்ரஹ்மான் இப்படியான பெயர்களை அடியார்களுக்கு எந்த நிலையிலும் நாம் கூறமாட்டோம்.

அதேபோல், அல்லாஹ்வின் பண்புடன் தொடர்புபடும் போது அவசியம் அவனுக்கு இருக்க வேண்டிய பெயர்களும், அடியார்களின் பண்புடன் தொடர்புபடும் போது சில வேளை இருக்க முடியுமான பெயர்களும் இருக்கின்றன.

உதாரணமாக: அல்ஆலிம் (அறிந்தன்), அல்காதிர் (சக்தி பெற்றவன்) இப்படியான பெயர்களை அடியார்களுக்கு வைப்பதில் தடைகிடையாது.
அல்லாஹ்வின் உரிமை விடயத்தில் அவசியமாக அவனுக்கு இருக்க வேண்டிய பெயராகவும், அடியார்களின் விடயத்தில் அவர்களுக்கு இருக்க முடியாத சில பெயர்களும் உள்ளன.

உதாரணமாக: அல்ஜப்பார் (அடக்கி ஆல்பவன்), அல்முதகப்பிர் (பெருமைக்குரியவன்) இப்படியான பெயர்களை அல்லாஹ்வுக்கு மாத்திரம் தான் கூறுவோம் அடியார்களுக்குக் கூறமாட்டோம்.

அல்லாஹ்வுக்கும் அடியார்களுக்கும் பண்பாகக் கூறமுடியுமான சில பெயர்கள் இருக்கின்றன. ஆனால், அல்லாஹ்வுடன் தொடர்புபடும் போது ஓரு கருத்திலும், அடியார்களுடன் தொடர்புபடும்போது இன்னொரு கருத்திலும் அவை இருக்கும்.

உதாரணமாக: அல்ஹாலிக் (படைப்பவன்) இப்பெயர் அல்லாஹ்வுடன் தொடர்புபடும் போது இல்லாமையிலிருந்து படைத்தல் என்ற கருத்திலும், அடியார்களுடன் தொடர்புபடும் போது வரைதல் போன்ற கருத்தில் அமையும்.

எம்மால் மட்டிட முடியாத அழகிய திருநாமங்கள் பல அல்லாஹ்வுக்கு உள்ளன. "நிச்சயமாக அல்லாஹ்வுக்கு 99 பெயர்கள் இருக்கின்றன. யார் அவைகளைத் தேடிப் பெற்றுக்கொண்டு, (மனனமிட்டு, அவைகள் மூலம் அமல் செய்து, அவைகளைக் கொண்டு பிராத்தனையும் செய்கிறாரோ) அவர் சுவனம் நுளைவார்” என்ற ஹதீஸ் மூலம் நாடப்படும் அல்லாஹ்வின் 99 திருநாமங்கள் இவைகளாக இருக்கும் என்று நாம் அல்லாஹ்விடம் ஆதரவு வைக்கின்றோம். அந்த 99 திருநாமங்களும் பின்வருமாறு

05 - اللهُ  ،  الإِلَـهُ  ،  الرَّحْمنُ  ،  الرَّحِـيْـمُ  ،  الـمَـلِـكُ
10 - القُـدُّوْسُ  ،  السَّـلَامُ  ،  الـمُؤْمِنُ  ،  الـمُـهَـيْـمِـنُ  ،  العَـزِيْـزُ
15 - الجَـبَّارُ  ،  المُـتَـكَـبِّـرُ  ،  الـخَـالِـقُ  ،  الـبَـارِئُ  ،  المُـصَـوِّرُ
20 - الـغَـفَّـارُ  ،  الـقَـهَّـارُ  ،  الوَهـَّابُ  ،  الرَّزَّاقُ  ،  الفَـتَّـاحُ
25 - الـعَـلِـيْـمُ  ،  الـقَـابِـضُ  ،  الـبَـاسِـطُ  ،  الْحَافِـظُ  ،  الـرَّازِقُ
30 - الـطَّـيِّـبُ  ،  الـطَّـبِـيْـبُ  ،  الـسَّـمِـيْـعُ  ،  الْـبَـصِـيْـرُ  ،  الْـحَـكَـمُ
35 - الْـقَـدِيْـرُ  ،  الـلَّـطِـيْـفُ  ،  الْـخَـبِـيْـرُ  ،  الْـحَـلِـيْـمُ  ،  الْـعَـظِـيْـمُ
40 - الـغَـفُـوْرُ  ،  الـشَّـكُـوْرُ  ،  الْـعَـلِـيُّ  ،  الْـكَـبِـيْـرُ  ،  الْـحَـفِـيْـظُ
45 - الْـمُـقِـيْـتُ  ،  الْـحَـسِـيْـبُ  ،  الْـجَـمِـيْـلُ  ،  الْـكَـرِيْـمُ  ،  الـرَّقِـيْـبُ
50 - الْـمُجِـيْـبُ  ،  الـوَاسِـعُ  ،  الْـحَـكِـيْـمُ  ،  الْـوَدُوْدُ  ،  الْـمَـجِـيْـدُ
55 - الـرَّفِـيْـقُ  ،  الـشَّـهِـيْـدُ  ،  الْـحَـقُّ  ،  الْـوَكِـيْـلُ  ،  الْـقَـوِيُّ
60 - الْـمَـتِـيْـنُ  ،  الْـوَلِـيُّ  ،  الْـحَـمِـيْـدُ  ،  الْـخَـلَّاقُ  ،  الْـمُـسَـعِّـرُ
65 - الْـمُـحِـيْـطُ  ،  الـرَّبُّ  ،  الْـمُـبِـيْـنُ  ،  الْـحَـيُّ  ،  الْـقَـيُّـوْمُ
70 - الْـقَـاهِـرُ  ،  الْـعَـالِـمُ  ،  الْـوَاحِـدُ  ،  الْأَحَـدُ  ،  الـصَّـمَـدُ
75 - الْـقَـادِرُ  ،  الْـمُـقْـتَـدِرُ  ،  الْـمُـقَـدِّمُ  ،  الْـمُـؤَخِّـرُ  ،  الْأَوَّلُ
80 - الْآخِـرُ  ،  الـظَّاهِـرُ  ،  الْـبَـاطِـنُ  ،  الـشَّـافِـيْ  ،  الْـمُـتَـعَـالُ
85 - الْـبَـرُّ  ،  الـتَّـوَّابُ  ،  الْـمَـنَّـانُ  ،  الْـمُـسْـتَـعَـانُ  ،  الْـعَـفُـوُ
90 - الـرَّءُوْفُ  ،  الـمَـالِـكُ  ،  الْأَكْـرَمُ  ،  الْـخَـيْـرُ  ،  الْـقَـرِيْـبُ
95 - الْـغَـنِـيُّ  ،  الْأَعْـلَـى  ،  الْـمُـعْـطِـيْ  ،  الْـمَـلِـيْـكُ  ،  الـسَّـيِّـدُ
99 - الـشَّـاكِـرُ  ،  الـنُّـوْرُ  ،  الـسُّـبُّـوْحُ  ،  الْـوِتْـرُ

அல்லாஹ்வின் பண்புகள் இருவகைப்படும்

01-   அல்லாஹ் தனக்கு இருப்பதாக உறுதிப்படுத்திய பண்புகள். இதற்கு அரபியில் صِفَاتٌ ثُـبُوْتِـيَّـةٌ என்று கூறப்படும். இது மூன்று வகைப்படும்.

02-   அல்லாஹ் தனக்கு இல்லையென்று மறுத்த பண்புகள். இதற்கு அரபியில் صِفَاتٌ سَلْبِيَّةٌ என்று கூறப்படும்

அல்லாஹ் தனக்கு இல்லையென்று மறுத்த இவ்வகையின் ஒவ்வொரு பண்பும் இரண்டு விடயங்களைப் பொதிந்திருக்கும்.

01-   அப்பண்பை நாம் அல்லாஹ்வுக்கு மறுத்தல்.

02-   அப்பண்பின் எதிர் பண்பை அல்லாஹ்வுக்கு உறுதிப்படுத்தல்.

அல்லாஹ் தனக்கு இல்லை என்று மறுத்த பண்புகள்

01.    மரணமடைதல்
அல்லாஹ் தனக்கு இல்லையென்று மறுத்த பண்புகளில் "மரணமடைதல்” என்ற பண்பைக் குறிப்பிடலாம். இப்பண்பை அல்லாஹ்வுக்கு மறுக்கும் போது, "மரணிக்காத உயிருடன் இருப்பவனின் மீது நீ பொருப்புச் சாட்டுவீராக!” (ஸுரதுல் புர்கான்: 58) என்ற வசனத்தின் அடிப்படையில் மறுக்க வேண்டும்.
எனவே, நாமும் அல்லாஹ்வுக்கு "மரணமடைதல்” என்ற பண்பை மறுத்து, அப்பண்பின் எதிர் பண்பான, "எப்போதும் உயிருடன் இருக்கிறான்” என்ற பண்பை அவனுக்கு உறுதிப்படுத்துவோம்.

02.    மடமை, மறதி
அல்லாஹுத்தஆலாவுக்கு மடமை, மறதி இல்லை என்பது பற்றி நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள்  பின்வருமாறு கூறுகின்றார்கள்:  "என் ரப்பு தவறவிடவும் மாட்டான், மறந்துவிடவும் மாட்டான்”. இவ்வார்த்தையை அல்லாஹ்வும் தனது திருமறையில் அங்கீகரித்துக் கூறியுள்ளான். (ஸுரா தாஹா: 52)
எனவே, நாமும் அல்லாஹ்வுக்கு மடமை ஏற்படமாட்டாது என்று நம்பி அப்பண்பின் எதிர் பண்பான, அனைத்தையும் அறிவான் என்ற பண்பை அவனுக்கு உறுதிப்படுத்துவோம்.

இப்படி அல்லாஹ் தன்னைவிட்டும் மடமையை மறுத்திருப்பது அல்லாஹ்வின் அறிவின் பூரணத்துவத்தின் காரணமாகவேயாகும். 

அல்லாஹ்வின் அறிவு படைப்புகளின் அறிவைப் போன்றதல்ல. படைப்பின் அறிவு முதலில் மடமையில் இருந்து பின்பு தேடுவதன் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்டதாகும்.

ஆனால், அல்லாஹ்வின் அறிவைப்பொறுத்தவரை அவனின் அறிவுக்கு முன் மடமை என்ற ஒன்று கிடையவே கிடையாது. அவன் நடந்து முடிந்தவையையும் அறிகிறான், நடந்து கொண்டிருப்பதையும் அறிகிறான், நடக்க இருப்பதையும் அறிந்தவனாக இருக்கிறான். அவனின் அறிவின் விசாலத்தின் காரணமாகவே அல்லாஹ் தன்னைவிட்டும் மடமை என்ற பண்பை மறுத்திருக்கிறான். இவ்வாறே நாமும் நம்புவோம்.

03 - இயலாமை
இந்த இயலாமை என்ற பண்பைப் பொறுத்தவரை அல்லாஹ் தனக்கு இல்லையென்று மறுத்த பண்புகளில் ஒன்றாகும். இது பற்றி அல்லாஹ் ஸூரா பாதிர்: 44ல் கூறும் போது: 'தமக்கு முன்பிருந்தவர்களின் இறுதி முடிவு என்னவாயிற்று என்பதைப் பார்க்க வேண்டாமா? அவர்கள் இவர்களைவிட மிக பலமிக்கவர்களாக இருந்தனர். (என்று கூறிவிட்டு) வானங்களிலோ பூமியிலோ இருக்கும் எந்தவென்றாலும் அல்லாஹ்வை தோற்கடிக்க, இயலாமையில் ஆக்க முடியாது” என்று கூறுகிறான்.

இப்படி அல்லாஹ் கூறிவிட்டு காரணத்தைக் கூறும்போது தொடர்ந்து இவ்வாறு கூறுகிறான்: "நிச்சயமாக அவன் நன்கறிந்தவனும் பேராற்றலுடையவனுமாக இருக்கிறான்” என்று கூறுகிறான். ஆக அல்லாஹ்வுக்கு இயலாத ஒன்றும் இல்லை. ஏனெனில், அவன் பேராற்றல் உடையவனும் பலம் மிக்கவனும் விசாலமான அறிவுடையவனுமாவான்.

04. அநியாயம் செய்தல்
அநியாயத்தைப் பொறுத்தவரை அல்லாஹ்வுக்கு இயலுமான ஒரு விடயமாக இருந்தும் அவன் அநியாயம் செய்தல் என்ற பண்பை தனக்கு இல்லையென்று கூறியிருக்கிறான். இப்படி மறுப்பது அநியாயத்தின் எதிர்ப்பண்பான அவனின் நீதத்தின் வெளிப்பாடாகும். அல்லாஹ் யாருக்காவது அநியாயம் செய்ய நாடினால் அவ்வநியாயத்தைத் தட்டிக்கேற்க இவ்வுலகில் யாரும் கிடையாது, யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை. 

இதைத் தான் நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடத்தில் கூறினார்கள். (ஸுரதுல் மாஇதா 05:117-118)

நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடத்தில் அல்லாஹ் கேட்கிறான்: "மர்யமின்  மகனான ஈஸாவே! அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயையும் இரு கடவுள்களாக எடுத்துக் கொள்ளும்படி நீ கூறினாயா? என்று அல்லாஹ் கேட்பான். அதற்கு நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நீ தூய்மையானவன் என்று கூறி பின்பு சில பதில்களைக் கூறுகிறார்கள். நீ அவர்களைத் தண்டித்தால் அவர்கள் உனது அடிமைகள் (நீதமாகத் தண்டித்தாலும் அநீதமாகத் தண்டித்தாலும் தட்டிக்கேட்க யாருக்கும் அருகதை இல்லை) நீ அவர்களை மன்னித்தால் நிச்சயமாக நீயே மிகைத்தவனும் ஞானமுடையவனுமாக இருக்கின்றாய்” என்று கூறினார்கள்.

படைப்புகள் மற்றவர் மீது அடந்தேர முடியாது என்ற பலவீனத்துக்காகவோ அல்லது, தன்னைவிட பலத்தில் கூடியவனாக எதிரி இருக்கிறான் என்ற காரணத்திற்காகவோ அநியாயம் செய்வதை விட்டுவிடுகிறான். ஆனால், அல்லாஹ் அவன் அநியாயம் செய்ய சக்தியிருந்தும் அநியாயம் செய்வதைத் தனக்குத் தானே ஹராமாக்கியுள்ளான்;. இப்படி தனக்குத் தானே ஹராமாக்குவது அநீதத்தின் எதிர் பண்பான அவனின் நீதத்தின் வெளிப்பாடாகும்.

05. சிறு தூக்கம், பெருந்தூக்கம் பீடிக்க மாட்டாது
அல்லாஹுத்தஆலா தூங்குபவனாக இல்லை. "அவனை சிறு தூக்கமோ உறக்கமோ பீடிக்காது” (அல்பகரா: 255) என்று கூறுகின்றான்.
இப்படி அல்லாஹ் தனக்கு சிறு தூக்கமே பெருந்தூக்கமோ ஏட்படுவதில்லை என்று மறுத்திருப்பது அவனின் வாழ்வு பூரணமானது, அவனின் கண்காணிப்பு, பராமரிப்பு பூரணமானது என்பதை எடுத்துக் காட்டுகிறது. அவனின் கண்காணிப்பிலிலுந்து யாருக்கும் தப்ப முடியாது, மறைந்துவிட முடியாது என்பதையும் எடுத்துக் காட்டுகின்றது.

அல்லாஹ்வின் கண்காணிப்பு சிறு தூக்கத்துடனோ பெருந்தூக்கத்துடனோ இணைந்ததல்ல. மாறாக, அக்கண்காணிப்பு பூரணமானது, பரந்து விரிந்தது. அல்லாஹ்வின் அடியார்களில் ஓர் அடியாரான லுக்மான் அலைஹிஸ்ஸலாம் தனது பிள்ளைக்குக் கூறும்போது: "என் அருமை மகனே! நிச்சயமாக (நன்மையோ தீமையோ) அது கடுகின் வித்தளவு இருந்து, அது ஒரு பாறைக்குள்ளேயோ அல்லது, வானங்களிலோ அல்லது, பூமியிலோ இருந்தாலும் அதையும் அல்லாஹ் கொண்டுவருவான் நிச்சயமாக அல்லாஹ் நுட்பமானவன், நன்கறிபவன்” என்று கூறினார்கள்.

ஆக, அல்லாஹ் தனக்கு தூக்கம் ஏட்படமாட்டாது என்று மறுத்திருப்பது அல்லாஹ்வின் கண்காணிப்பு, வாழ்வு பூரணமானது என்பதற்காகவேயாகும் என்று நாம் நம்புவோம்.

 06. களைப்பு, சோர்வு ஏற்பட மாட்டாது
அல்லாஹ் ஸுரா காப் (50:38) இல் "நிச்சயமாக நாம் வானங்களையும் பூமிகளையும் மற்றும், அவ்விரண்டுக்குமிடையில் உள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தோம். எமக்கு எந்த சோர்வும் ஏற்படவில்லை” என்று கூறுகிறான்.

இவ்வசனம் அல்லாஹ் களைப்படையமாட்டான் சோர்வடையமாட்டான் என்று கூறுகிறது.
நாம் ஒரு பொருளை விட்டு அல்லது, ஒரு படைப்பை விட்டு குறித்த ஒரு பண்பை அல்லது, குறித்த ஒரு செயலை மறுப்பதாயின் இரண்டு காரணங்களுக்காக மறுப்போம்

01-  அதற்கு இயலாமை என்ற ஒன்று இருக்கிறது என்பதற்காக...
02-  அடிப்படையிலே அப்பொருள் அப்பண்பை ஏற்கக்கூடியதாக இல்லை என்பதற்காக...

உதாரணமாக: "பேனை களைப்படையாது” என்று கூறுவது. பேனை அடிப்படையில் களைப்பு என்ற பண்பை ஏற்காது என்றும், அவ்வார்த்தை பேனைக்கு புகழைச் சேர்ப்பதாக அமையாது என்றும் எமக்குத் தெரியும்.

ஆனால், அல்லாஹ்வைப் பொறுத்தவரை இவ்விரண்டு காரணங்களில் ஒன்றுக்காகத்தான் அவன் தனக்கு சில செயல்களையும் மற்றும் சில பண்புகளையும் மறுக்கிறான் என்று நாம் கூறமாட்டோம்.

மாறாக, அல்லாஹ் கூறுவது போன்று "அல்லாஹ்வுக்கு உயரிய பண்புகள் உள்ளன” (ஸுரதுந் நஹ்ல் 16:60) என்பதற்காகவும், அல்லாஹ்வுக்குப் புகழையும் பூரணத்தையும் சேர்க்கிறோம் என்பதற்காகவும் நாம் இதுபோன்ற குறையுள்ள பண்புகளை அல்லாஹ்வுக்கு மறுப்போம்.

07. படைப்புகளிடத்தில் எவையெல்லாம் குறையுள்ள பண்புகளாக இருக்கிறனவோ அப்படியான அனைத்துப் பண்புகளும் நிராகரிக்கத்தக்கன. உதாரணமாக நோய்வாய்ப்படுதல், பசியேற்படுதல்;;, தாகம் ஏற்படுதல்

அல்லாஹ் ஹதீஸுல் குத்ஸியில் கூறுகின்றான்: "ஆதமின் மகனே! நான் நோய்வாய்ப்பட்டேன், நீ என்னை நோய் விசாரிக்கவில்லை. ஆதமின் மகனே! நான் உன்னிடம் உணவு கேட்டேன், நீ எனக்கு உணவளிக்கவில்லை. ஆதமின் மகனே! நான் உன்னிடம் நீர் புகட்டும்படி வேண்டினேன், நீ எனக்கு நீர் புகட்டவில்லை...” என்று கூறுவான். (முஸ்லிம்: 2569)

இந்த ஹதீஸை வெளிப்படையாகப் பார்க்கும் போது அல்லாஹ் நோய்வாய்ப்படுகிறான், அவனுக்கு பசி, தாகம் ஏற்படுகின்றது என்று விளங்குகிறது. இது பிழையான விளக்கமாகும். மாறாக, இந்த ஹதீஸை முழமையாகப் பார்ப்போமேயானால் அல்லாஹ் நோயோ பசியோ தாகமோ அதே போல், படைப்புகளித்தில் எதுவெல்லாம் குறையான பண்புகளாக இருக்கின்றனவோ அப்படியானவைகளும் அல்லாஹ்வுக்கு ஏற்படுவதில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

அந்த ஹதீஸில் தொடர்ந்து அல்லாஹ் கூறுகிறான்: "என்னுடைய அடியானான இன்ன நபர் நோய்வாய்ப்பட்டான், நீ அவனை நோய்விசாரிக்கச் செல்லவில்லை என்பதை நீ அறியவில்லையா? என்னுடைய அடியானான இன்ன நபர் உன்னிடம் உணவு கேட்டான், நீ அவனுக்கு உணவளிக்கவில்லை என்பதை அறியவில்;லையா? என்னுடைய  இன்ன அடியான் உன்னிடம் நீர் புகட்டும்படி வேண்டினான், நீ அவனுக்கு நீர் புகட்டவில்லை என்பதை அறியமாட்டாயா?” என்று அல்லாஹ் மறுமையில் கேட்பான்"

ஆக, எமக்கு இப்படியான ஹதீஸ்கள் மூலம் படைப்புகளிடத்தில் எதுவெல்லம் குறையுள்ள பண்புகளாக இருக்கின்றனவோ அப்படியான பண்புகள் அல்லாஹ்வுக்கு இல்லை என்பதைப் புரிந்து கொள்ள முடியும். இப்படியான குறையுள்ள பண்புகளை நாம் அல்லாஹ்வுக்கு மறுப்போம்.

அல்லாஹ்வுக்கு பிள்ளையோ மனைவியோ கிடையாது. 

அல்லாஹுத்தஆலா, அவனுக்கு பிள்ளை இல்லை என்று மறுக்கும் போது: "அல்லாஹ் தனக்கென எந்தப் பிள்ளையையும் எடுத்துக் கொள்ளவில்லை. அவனுடன் வேறு எந்தக் கடவுளும் இல்லை, அவ்வாறாயின் ஒவ்வொறு கடவுளும் தான் படைத்தவற்றுடன் சென்று சிலர் சிலரை மிகைத்திருப்பர். அவர்கள் வர்ணிப்பதை விட்டும் அல்லாஹ் மிகத் தூய்மையானவன்”. (அல்முஃமினூன்: 91) என்று கூறுகின்றான்.
மேலும், (ஸுரா அல்அன்ஆம்: 101) "அவனே வானங்களையும் பூமியையும் எந்தவொரு முன்மாதிரியுமின்றிப் படைத்தான். அவனுக்கு மனைவி இல்லாதிருக்க அவனுக்குப் பிள்ளை எப்படி இருக்க முடியும்” என்று வினவுகின்றான்.
மேலும், ஸூரா மர்யம் 19:90-93 இல், வானங்கள் வெடித்து பூமி பிளந்து மலைகள் இடிந்து சிதறுண்டு விழப் பார்க்கின்றன. (அல்லாஹ்வாகிய) அர்ரஹ்மானுக்கு பிள்ளை இருப்பதாக அவர்கள் வாதாடியதே  இதற்குக் காரணமாகும். "ஒரு பிள்ளையை எடுத்துக்கொள்ள அர்ரஹ்மானுக்கு எந்த அவசியமும் இல்லை” என்று கூறுகின்றான்.
ஆக, அல்லாஹ்வுக்கு மனைவியோ பிள்ளையோ இல்லையென்றும் அது அவனுக்குத் தேவையில்லை என்றும் இது போன்ற குறையான அம்சங்கள் அல்லாஹ்வுக்கு இல்லையென்றும் நாம் ஈமான் கொள்வோம்;.

أحدث أقدم