அரபி மூலம்: இமாம் முஹம்மத் இப்னு அப்தில் வஹ்ஹாப் ரஹிமஹுல்லாஹ்
بسم الله الرحمن الرحيم
மொழிபெயர்த்தோன் உரை:
إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله.
يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون
يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساءا واتقوا الله الذي تسائلون به والأرحام إن الله كان عليكم رقيبا
يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما
أما بعد:
فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار.
இவ்வுலகைப் படைத்துப் பரிபாலிக்கக்கூடிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் உரித்தாகும். அவனது மார்க்கத்தை இப்பூமியில் பரிபூரணமாக எத்திவைத்த அருமைத் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது அல்லாஹ்வின் கருணையும் சாந்தியும் உண்டாகட்டும்.
இவ்வுலகில் முஸ்லிமாக வாழக்கூடிய அனைவர் மீதும் அல்லாஹ்வை உரிய முறையில் வணங்குவது கடமையான ஒன்றாகும். அவனை உரிய முறையில் வணங்குவதாயின் ஒரு முஸ்லிம் மார்க்க அறிவின்றி அதனை மேற்கொள்ள முடியாது. மார்க்க அறிவை அவன் கற்றுக்கொள்ளும்போதே அவனுக்கு அல்லாஹ்வை வணங்கும் முறைபற்றி தெளிவு கிடைக்கின்றது. அதனடிப்படையில் மார்க்க அறிவைக்கற்றுக் கொள்வது அனைத்து முஸ்லிம்களின் மீதும் கடமையாக ஆகிவிடுகின்றது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: அறிவைத் தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும். - ஸஹீஹ் இப்னுமாஜா
மிகமுக்கியமாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய மூன்று அம்சங்கள் காணப்படுகின்றன. அம்மூன்று அம்சங்களையும் எவரும் தெரிந்து வைக்காமல் அல்லாஹ்வை வணங்க முடியாது. யாரும் அந்த மூன்று விடயங்களைப் படிப்பதைவிட்டும் விதிவிலக்குப்பெற முடியாது. அவை: ஓர் அடியான் அல்லாஹ்வை, அவனது நபியை, அவனது மார்க்கத்தைத் தெரிந்து கொள்வதாகும். இம்மூன்று அம்சங்களும் மிகமுக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. அல்லாஹ்வை வணங்கும் அனைவர்களும் கற்க வேண்டிய விடயங்களாகவும் காணப்படுகின்றன.
இம்மூன்று அடிப்படைகளையும் அதிகமான அறிஞர்கள் உரையாற்றியிருக்கின்றார்கள். இன்னும் நூற்களாகவும் எழுதியுள்ளார்கள். அந்நூற்களில் மிகப் பிரதானமான நூலாக இமாம் முஹம்மத் இப்னு அப்தில் வஹ்ஹாப் ரஹிமஹுல்லாஹ் அவர்களுடைய அல்உஸூலுஸ்ஸலாஸா என்ற நூல் காணப்படுகின்றது. இந்நூல் இந்த மூன்று அம்சங்களையும் ஆதாரங்களுடன் உள்ளடக்கியுள்ளது.
ஒரு மனிதன் இஸ்லாமிய அகீதாவைப் படிப்பதாயின் இந்நூலைக்கொண்டே அவன் தனது அகீதா அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். அகீதா அறிவில் ஓர் ஆரம்ப அறிவாக இந்நூல் காணப்படுகின்றது. ஒரு விடயத்தை நாம் கற்றுக்கொள்ளும்போது அதனுடைய சிறிய விடயங்களில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும். இன்று உலகில் வாழ்கின்ற அஹ்லுஸ்ஸுன்னாத் வல்ஜமாஅத்தினர்களைச் சார்ந்த பல அறிஞர்களும் இந்நூலைக்கொண்டே அவர்களுடைய அகீதாப் பாடத்தை ஆரம்பித்திருக்கின்றார்கள்.
ஆகவே, இந்நூலைப் படித்து அதன் மூலம் சிறந்த பயனைப் பெறுவதற்கு நாம் அனைவரும் முயற்சிக்க வேண்டும். இதில் நாம் எதைக் கற்றுக் கொள்கின்றோமோ அவற்றை எமது வாழ்விலும் நாம் கடைபிடிக்க வேண்டும்.
அல்உஸூலுஸ்ஸலாஸா என்ற நூலை தமிழ்வடிவத்தில் இங்கு உங்களுக்கு நாம் தொகுத்துத்தர இருக்கின்றோம். மேலும், அல்உஸூலுஸ்ஸலாஸா என்ற நூல் பொதிந்துள்ள அம்சங்கள்:
1. ஒரு முஸ்லிம் அவசியமாகத் தெரிந்து கொள்ள வேண்டிய நான்கு விடயங்கள்.
2. அறிவு என்றால் என்ன?
3. அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய மூன்று அம்சங்கள்
4. ஷிர்க் மற்றும் தவ்ஹீத் பற்றிய விளக்கம்
5. ஹனீபிய்யா மார்க்கம் குறித்த விளக்கம்
6. சில வணக்க வழிபாடுகளும் அவற்றின் ஆதாரங்களும்
7. இஸ்லாம், ஈமான், இஹ்ஸான் பற்றிய விளக்கங்கள்
8. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பற்றிய குறிப்பு
9. ஹிஜ்ரத் பற்றிய தெளிவு
10. நபிமார்களின் அழைப்புப் பணி பற்றிய விடயங்கள்
11. தாகூத் என்பதன் விளக்கம்
அல் உஸுலுஸ் ஸலாஸா
முதலாவது அடிப்படை:
நீ அறிந்து கொள்! அல்லாஹ் உனக்கு அருள்புரிவானாக! நிச்சயமாக நான்கு விடயங்களைக் கற்றுக்கொள்வது எங்கள் மீது கடமையாகும்.
முதலாவது: அறிவாகும், அது அல்லாஹ்வை மற்றும் அவனது நபியை மற்றும் இஸ்லாம் மார்க்கத்தை ஆதாரங்களுடன் அறிந்து கொள்வதாகும்.
இரண்டாவது: அதனைக் கொண்டு அமல் செய்வது.
மூன்றாவது: அதன்பால் அழைப்பு விடுத்தல்.
நான்காவது: அதில் உள்ள நோவினையின் போது பொறுமையாக இருத்தல்.
ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். காலத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். விசுவாசம் கொண்டு நல்லமல்கள் புரிந்து சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும், பொறுமையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்பவர்களைத்தவிர.
- அல்அஸ்ர்: 1-3
இமாம் ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் இந்த சூராவைத்தவிர அவனுடைய படைப்பினங்களுக்கு ஆதாரமாக வேறு ஒன்றையும் இறக்காவிட்டால் அதுவே அவர்களுக்குப் போதுமானதாகும்.
இமாம் புஹாரீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: சொல்வதற்கும் செய்வதற்கும் முன்னால் அறிந்து கொள்ளுதல் பற்றிய பாடம்.
ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: நிச்சயமாக வணங்கப்படுவதற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை என்பதை - நபியே! - நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். எனவே, உங்களது பாவங்களுக்கு நீங்கள் மன்னிப்புத் தேடுங்கள்.
- முஹம்மத்: 19
எனவே, அவன் சொல்வதற்கும் செய்வதற்கும் முன்பு அறிவைக்கொண்டு ஆரம்பித்துள்ளான்.
நீ அறிந்துகொள், அல்லாஹ் உனக்கு அருள்புரிவானாக! ஒவ்வொரு முஸ்லிமான ஆணின் மீதும் முஸ்லிமான பெண்ணின் மீதும் இந்த மூன்று விடயங்களைக் கற்றுக்கொள்வதும் அவைகளைக் கொண்டு அமல் செய்வதும் கடமையாகும்.
முதலாவது: நிச்சயமாக அல்லாஹ் எங்களைப் படைத்தான். எங்களுக்கு ரிஸ்க் அளித்தான். எங்களை அவன் வீணாக விட்டுவிடவில்லை. மாறாக, எங்களுக்கு அவன் ஒரு தூதரை அனுப்பினான். யார் அவரை வழிப்படுகிறாரோ அவர் சுவனம் நுழைவார். யார் அவருக்கு மாறுசெய்கிறாரோ அவர் நரகம் நுழைவார்.
ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: நாம் பிர்அவ்னுக்கு ஒரு தூதரை அனுப்பியது போல் உங்களுக்கு சாட்சி கூறக்கூடிய ஒரு தூதரை உங்களுக்கு நிச்சயமாக நாம் அனுப்பி வைத்தோம். எனினும், பிர்அவ்ன் அத்தூதருக்கு மாறுசெய்தான். எனவே, நாம் அவனை மிகக் கடுமையாகப் பிடித்தோம். - அல்முஸ்ஸம்மில்: 15, 16
இரண்டாவது: நிச்சயமாக அல்லாஹ் அவனுடன் அவனுடைய வணக்கத்தில் ஒருவன் இணைவைக்கப்படுவதை பொருந்திக்கொள்ளமாட்டான். நெருக்கமான வானவராக இருந்தாலும் அனுப்பப்பட்ட நபியாக இருந்தாலும் பொருந்திக்கொள்ளமாட்டான்.
ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: நிச்சயமாக பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்குரியதாகும். எனவே, அவனுடன் நீங்கள் ஒருவரையும் அழைக்காதீர்கள்.
- அல்ஜின்: 18
மூன்றாவது: யார் தூதரை வழிப்பட்டாரோ இன்னும் அல்லாஹ்வை ஒருமைப்படுத்தினாரோ அவருக்கு அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறுசெய்தவர்களை நேசிப்பது ஆகுமாகமாட்டாது. அவர் தன்னுடைய நெருக்கமானவர்களில் மிக நெருங்கியவராக இருந்தாலும் சரியே.
ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொள்ளும் எந்த ஒரு கூட்டத்தினரையும் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறாக செயற்படுகின்றவர்களை நேசிப்பவர்களாக நபியே! நீர் காணமாட்டீர். அவர்கள் தமது பெற்றோர்களாகவும், பிள்ளைகளாகவும், சகோதரர்களாகவும், நெருங்கிய உறவினர்களாகவும் இருந்தாலும் சரியே! இத்தகையோரின் உள்ளங்களில் அவன் ஈமானைப் பதிவுசெய்து தன்னிடமிருந்துள்ள உதவியின் மூலம் இவர்களைப் பலப்படுத்தினான். மேலும், இவர்களைச் சுவனச்சோலைகளில் நுழைவிப்பான். அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். அவற்றில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக்கொண்டான். அவர்களும் அவனைப் பொருந்திக்கொண்டனர். இவர்கள் தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினராவர். அறிந்துகொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினரே வெற்றியாளர்கள்.
- அல்முஜாதலா: 22
நீ அறிந்துகொள்! அல்லாஹ் அவனுக்கு வழிபடுவதின்பால் உன்னை நேர்வழிப்படுத்துவானாக. இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மார்க்கமாகிய ஹனீபிய்யா ஆகிறது மார்க்கத்தை அவனுக்கே தூய்மைப்படுத்தியவனாக நீ அல்லாஹ்வை மாத்திரம் வணங்குவதாகும். அதனைக்கொண்டே அல்லாஹ் அனைத்து மனிதர்களையும் ஏவினான். அதற்காகவே அவர்களைப் படைத்தான். அல்லாஹுத்தஆலா கூறுவதைப்போல்: நான் ஜின்களையும் மனிதர்களையும் என்னை அவர்கள் வணங்குவதற்காகவே அன்றி படைக்கவில்லை.
- அத்தாரியாத்: 56
வணங்குவதற்காகவே என்பதன் கருத்து ஒருமைப்படுத்துவதற்காகவே என்பதாகும்.
அல்லாஹ் ஏவியவற்றில் மிக மகத்தானது தவ்ஹீதாகும். அது வணக்க வழிபாடுகளைக்கொண்டு அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதாகும். அல்லாஹ் தடுத்தவற்றில் மிக மகத்தானது ஷிர்க்காகும். அது அவனுடன் அவன் அல்லாத ஒன்றை அழைப்பதாகும்.
ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: நீங்கள் அல்லாஹ்வை வணங்குங்கள். அவனுக்கு எந்த ஒன்றையும் இணைவைக்காதீர்கள்.
- அந்நிஸா: 36
மனிதன் அறிந்து கொள்வது கடமையாகக்கூடிய மூன்று அடிப்படைகளும் எவை? என்று உன்னிடம் கேட்கப்பட்டால் அடியான் தனது இறைவனை அறிந்துகொள்வதும், அவனுடைய மார்க்கத்தை அறிந்துகொள்வதும், அவனுடைய நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அறிந்துகொள்வதுமாகும் என்று நீ கூறு.
உன்னுடைய இறைவன் யார்? என்று உன்னிடம் கேட்கப்பட்டால் என்னையும் அனைத்து அகிலத்தாரையும் தன்னுடைய அருளைக்கொண்டு பரிபாலிக்கக்கூடிய எனது இறைவன் அல்லாஹ் என்று நீ கூறு. அவன்தான் என்னால் வணங்கப்படக்கூடியவன். அவனைத்தவிர வேறு வணங்கப்படக்கூடியவன் எனக்கு இல்லை.
ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் உரித்தாகும்.
- அல்பாதிஹா: 2
அல்லாஹ்வைத்தவிர உள்ள அனைத்தும் அகிலமாகும். அந்த அகிலத்தில் நானும் ஒருவனாவேன்.
உன்னுடைய இறைவனை எவ்வாறு நீ அறிந்து கொண்டாய்? என்று உன்னிடம் கேட்கப்பட்டால் அவனுடைய அத்தாட்சிகளையும் படைப்பினங்களையும் கொண்டு என்று என்று நீ கூறு. அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவைகள் தான் சூரியன் மற்றும் சந்திரனாகும். அவனுடைய படைப்பினங்களில் உள்ளவைகள் தான் ஏழு வானங்கள், ஏழு பூமிகள், அவைகளில் உள்ளவைகள், அவ்விரண்டிற்கும் மத்தியில் உள்ளவைகளாகும்.
ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவைகள் தான் இரவு, பகல், சூரியன், சந்திரனாகும். நீங்கள் சூரியனுக்கோ சந்திரனுக்கோ சிரம்பணியாதீர்கள். நீங்கள் அவனையே வணங்குபவர்களாக இருந்தால் அவைகளைப் படைத்த அல்லாஹ்வுக்கே நீங்கள் சிரம்பணியுங்கள்;.
- புஸ்ஸிலத்: 37
மேலும், அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: நிச்சயமாக உங்கள் இறைவன் அல்லாஹ்தான் வானங்கள் மற்றும் பூமியை ஆறு நாட்களில் படைத்து பின்னர் - தன் தகுதிக்கேற்றவாறு - அர்ஷின் மீது உயர்ந்தான். அவன் இரவைப் பகலால் மூடுகின்றான். அது - இரவாகிய - அதை வேகமாகத் தொடர்கிறது. சூரியனையும் சந்திரனையும் நட்சத்திரங்களையும் தனது கட்டளைக்கு வசப்படுத்தப்பட்டவைகளாக-ப் படைத்துள்ளான். - அறிந்துகொள்ளுங்கள்! படைத்தலும் கட்டளையிடுதலும் அவனுக்கே உரியனவாகும். அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ் பாக்கியமுடையவனாகிட்டான்.
- அல்அஃராப்: 54
இறைவன் அவன்தான் வணங்கப்படக்கூடியவன்.
ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: மனிதர்களே! உங்களையும் உங்களுக்கு முன்னால் உள்ளவர்களையும் படைத்த உங்கள் இறைவனை நீங்கள் வணங்குங்கள். நீங்கள் இறையச்சமுடையவர்களாக ஆகிவிடலாம். அவன் எத்தகையவனென்றால் உங்களுக்கு அவன் பூமியை விரிப்பாகவும் வானத்தை முகடாகவும் ஆக்கினான். மேலும், அவன் வானத்திலிருந்து நீரை இறக்கினான். அதன் மூலம் அவன் உங்களுக்கு ரிஸ்க்காக கனிவர்க்கங்களிலிருந்து வெளிப்படுத்தினான். எனவே, நீங்கள் அறிந்தவர்களாக அல்லாஹ்வுக்கு இணையாளர்களை ஏற்படுத்தாதீர்கள்.
- அல்பகறா: 21-22
இப்னு கஸீர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்: இந்த விடயங்களைப் படைத்தவன்தான் வணங்கப்படுவதற்கும் தகுதியானவன்.
அல்லாஹ் ஏவிய வணக்க வழிபாடுகளின் வகைகள் இஸ்லாம், ஈமான், இஹ்ஸான் ஆகியவைகளைப் போல் உள்ளவைகள், மற்றும் அவற்றில் உள்ளவைகள் தான் துஆச் செய்தல், பயப்படுதல், ஆதரவு வைத்தல், பொறுப்புச்சாட்டுதல், ஆசைவைத்தல், அச்சம்கொள்ளல், உள்ளச்சமடைதல், மறைவில் பயப்படுதல், அல்லாஹ்விடம் மீளுதல், உதவிதேடல், பாதுகாப்புத்தேடல், கடுமையான நேரத்தில் உதவிதேடல், அறுத்துப்பலியிடல், நேர்ச்சை வைத்தல் இவைகள் அல்லாத அல்லாஹ் ஏவிய இபாதத்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்கேயாகும்.
ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: நிச்சயமாக பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்குரியதாகும். எனவே, நீங்கள் அல்லாஹ்வுடன் எந்த ஒருவரையும் அழைக்காதீர்கள்.
- அல்ஜின்: 18
இவைகளில் ஒன்றை அல்லாஹ் அல்லாதவருக்கு யாராவது திருப்பினால் அவர் முஷ்ரிக் மற்றும் காபிராவார்.
ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: யார் அல்லாஹ்வுடன் வேறு இறைவனை அழைக்கின்றானோ அதற்கு அவனுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை. அவனது விசாரனை அவனது இரட்சகனிடமே இருக்கின்றது. நிச்சயமாக நிராகரிப்பாளர்கள் வெற்றிபெறமாட்டார்கள்.
- அல்முஃமினூன்: 117
துஆ என்பது வணக்கத்தின் மூளையாகும் என்று ஹதீஸில் இடம்பெற்றுள்ளது.
ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: நீங்கள் என்னை அழையுங்கள் நான் உங்களுக்கு விடையளிப்பேன். எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடிக்கின்றார்களோ அவர்கள் இழிவடைந்தவர்களாக நரகம் நுழைவார்கள் என உங்கள் இரட்சகன் கூறுகின்றான்.
- அல்முஃமின்: 60
பயப்படுதல் - வணக்கத்தில் நின்றும் உள்ளது - என்பதற்கு ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: நீங்கள் அவர்களைப் பயப்பட வேண்டாம். நீங்கள் விசுவாசிகளாக இருந்தால் என்னையே நீங்கள் பயப்படுங்கள்.
- ஆல இம்ரான்: 175
ஆதரவு வைத்தல் - வணக்கத்தில் நின்றும் உள்ளது - என்பதற்கான ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: யார் தன்னுடைய இறைவனை சந்திப்பதை ஆதரவு வைக்கக்கூடியவராக இருக்கின்றாரோ அவர் நல்ல அமல்களை புரியட்டும். தன்னுடைய இறைவனை வணங்குவதில் அவர் யாரையும் இணையாக்க வேண்டாம்.
- அல்கஹ்ப்: 110
பொறுப்புச்சாட்டுதல் - வணக்கத்தில் நின்றும் உள்ளது - என்பதற்கான ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: நீங்கள் விசுவாசிகளாக இருந்தால் அல்லாஹ்வின் மீதே பொறுப்புச்சாட்டுங்கள்.
- அல்மாஇதா: 23
யார் அல்லாஹ்வின் மீது பொறுப்புச்சாட்டுகின்றாரோ அவன் அவருக்கு போதுமானவனாவான்.
- அத்தலாக்: 3
ஆசை வைத்தல், அச்சம் கொள்ளல், உள்ளச்சம் கொள்ளல் ஆகியன - வணக்கத்தில் நின்றும் உள்ளன - என்பதற்கான ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: நிச்சயமாக அவர்கள் நல்ல விடயங்களில் விரைந்து செல்லக்கூடியவர்களாக இருந்தார்கள். மேலும், எங்களை ஆசையுடனும் பயத்துடனும் அவர்கள் அழைக்கக்கூடியவர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் எங்களை இறையச்சம் கொள்பவர்களாகவும் இருந்தார்கள்.
- அல்அன்பியா: 90
மறைவில் பயப்படுதல் - வணக்கத்தில் நின்றும் உள்ளது - என்பதற்கான ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: அவர்களை நீங்கள் பயப்பட வேண்டாம். என்னை நீங்கள் பயப்படுங்கள்.
- அல்மாஇதா: 3
அல்லாஹ்விடம் மீளுதல் - வணக்கத்தில் நின்றும் உள்ளது - என்பதற்கான ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: உங்கள் இறைவனின் பக்கம் நீங்கள் மீளுங்கள். அவனுக்கே நீங்கள் கட்டுப்படுங்கள்.
- அஸ்ஸுமர்: 54
உதவிதேடுதல் - வணக்கத்தில் நின்றும் உள்ளது - என்பதற்கான ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். உன்னிடமே நாங்கள் உதவிதேடுகின்றோம்.
- அல்பாதிஹா: 5
நீ உதவி தேடினால் அல்லாஹ்விடமே உதவிதேடு என்று ஹதீஸில் இடம்பெற்றுள்ளது.
பாதுகாப்புத் தேடுதல் - வணக்கத்தில் நின்றும் உள்ளது - என்பதற்கான ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: நான் வைகறைப் பொழுதின் இறைவனைக்கொண்டு பாதுகாவல் தேடுகிறேன் என்று - நபியே! - நீங்கள் கூறுங்கள்.
- அல்பலக்: 1
மேலும் அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: மனிதர்களின் அரசனாகிய மனிதர்களின் இறைவனைக்கொண்டு நான் பாதுகாவல் தேடுகிறேன் என்று - நபியே! - நீங்கள் கூறுங்கள்.
- அந்நாஸ்: 1-2
கடுமையான நேரத்தில் உதவிதேடுதல் - வணக்கத்தில் நின்றும் உள்ளது - என்பதற்கான ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: உங்கள் இரட்சகனிடம் நீங்கள் உதவி தேடியபோது அவன் உங்களுக்கு பதிலளித்தான்.
- அல்அன்பால்: 9
அறுத்துப் பலியிடுதல் - வணக்கத்தில் நின்றும் உள்ளது - என்பதற்கான ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: நிச்சயமாக என்னுடைய தொழுகையும், என்னுடைய அறுத்துப் பலியிடுதலும் நான் வாழ்வதும் நான் மரணிப்பதும். அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரியதாகும். அவனுக்கு எந்த இணையாளனும் இல்லை. அதைக்கொண்டே நான் ஏவப்பட்டுள்ளேன். நான் முஸ்லிம்களில் முதலாவதாக இருக்;கின்றேன்.
- அல்அன்ஆம்: 162-163
ஹதீஸிலிருந்து ஆதாரம்: அல்லாஹ் அல்லாதவருக்கு யார் அறுத்துப் பலியிடுகின்றாரோ அவரை அல்லாஹ் சபிப்பான்.
நேர்ச்சை வைத்தல் - வணக்கத்தில் நின்றும் உள்ளது - என்பதற்கான ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: அவர்கள் நேர்ச்சையை நிறைவேற்றுவார்கள். தீமைகள் பரவிக்கிடக்கக்கூடிய ஒரு நாளையும் அவர்கள் பயப்படுவார்கள்.
- அல்இன்ஸான்: 7
இரண்டாவது அடிப்படை:
ஆதாரங்களைக்கொண்டு இஸ்லாம் மார்க்கத்தை அறிந்துகொள்வதாகும். அது ஒருமைப்படுத்துவதைக்கொண்டு அல்லாஹ்விடம் சரணடைவதும் கட்டுப்படுவதைக்கொண்டு அவனுக்கு வழிபடுவதும் இணைவைப்பிலிருந்து விலகியிருப்பதுமாகும். அது மூன்று படித்தரங்களாகும்.
1. இஸ்லாம்
2. ஈமான்
3. இஹ்ஸான்
ஒவ்வொரு படித்தரங்களிற்கும் தூண்கள் உள்ளன. இஸ்லாத்தின் தூண்கள் ஐந்தாகும். வணங்கப்படுவதற்கு தகுதியானவன் அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவன் இல்லை மற்றும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று சான்று பகர்தல், தொழுகையை நிலைநாட்டுதல், ஸகாத் கொடுத்தல், ரமழான் மாதத்தில் நோன்பு நோற்றல், சங்கையான வீட்டை ஹஜ் செய்தல் ஆகியனவைகளாகும்.
சான்று பகர்வதற்கான ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: நிச்சயமாக - உண்மையாக - வணங்கப்படத்தகுதியானவன் தன்னைத் தவிர வேறு யாருமில்லை என்று நீதியை நிலைநாட்டியவனாக அல்லாஹ் சாட்சி கூறுகிறான். மேலும், வானவர்களும் அறிவுடையோரும் - சாட்சி கூறுகின்றனர். உண்மையாக - வணங்கப்படத்தகுதியானவன் அவனைத் தவிர வேறு யாருமில்லை. அவன் யாவற்றையும் மிகைத்தவனும் ஞானமிக்கவனுமாவான்.
- ஆல இம்ரான்: 18
இதன் கருத்து அல்லாஹ்வை மாத்திரமே தவிர உரிமையைக் கொண்டு வணங்கப்படுபவன் இல்லை என்பதாகும். இறைவன் இல்லை என்ற வார்த்தை அல்லாஹ்வையன்றி வணங்கப்படக்கூடிய அனைத்தையும் இல்லாமல் செய்கிறது. அல்லாஹ்வைத்தவிர என்ற வார்த்தை அல்லாஹ்வுக்கு மாத்திரம் வணக்கத்தை உறுதிப்படுத்துகின்றது. அவனுடைய ஆட்சியில் அவனுக்கு இணையாளன் இல்லையோ அதுபோன்று அவனுக்கு வணக்கம் செலுத்துவதிலும் அவனுக்கு இணையாளன் இல்லை. இதனைத் தெளிவுபடுத்தும் விளக்கம் - பின்வரும் வசனமாகும் - அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: இப்றாஹீம் தன் தந்தையிடமும் தனது சமூகத்தாரிடமும் என்னைப் படைத்தவனைத் தவிர நீங்கள் வணங்குபவற்றை விட்டும் நிச்சயமாக நான் விலகிக்கொண்டவன். நிச்சயமாக அவனே எனக்கு நேர்வழி காட்டுவான் எனக்கூறியதை - நபியே! நீர் எண்ணிப்பார்ப்பீராக - மேலும், அவர்கள் மீண்டுவிடும் பொருட்டு அதனைத் தனக்குப் பின்னே நிலையான வார்த்தையாக ஆக்கினார்.
- அஸ்ஸுஹ்ருப்: 26-28
மேலும், அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: வேதங்கொடுக்கப்பட்டவர்களே! அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் நாம் வணங்கமாட்டோம் மேலும், அவனுக்கு எதனையும் இணையாக்க மாட்டோம். அல்லாஹ்வையன்றி எங்களில் சிலர் சிலரை கடவுளர்களாக எடுத்துக்கொள்ளவும் மாட்டோம் என்ற எங்களுக்கும் உங்களுக்குமிடையில் சரியானதொரு கொள்கையின் பக்கம் வாருங்கள் என - நபியே! - நீர் கூறுவீராக! எனினும் அவர்கள் புறக்கணித்தால் நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள் என்று நீங்கள் கூறுங்கள்.
- ஆல இம்ரான்: 64
முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று சான்று பகர்வதின் ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: நிச்சயமாக உங்களில் இருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கிறார். நீங்கள் சிரமப்படுவது அவருக்கு வருத்தத்தை அளிக்கின்றது. உங்கள் விடயத்தில் அவர் அதிக ஆர்வமுடையவராக இருக்கிறார். நம்பிக்கையாளர்களுடன் கருணையும் இரக்கமும் உடையவராக இருக்கிறார்.
- அத்தவ்பா: 128
முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று சான்று பகர்வதின் கருத்து: அவர் ஏவிய விடயத்தில் அவரை வழிப்படுவது, அவர் அறிவித்த விடயங்களை உண்மைப்படுத்துவது, அவர் தடுத்தவற்றை தவிர்ந்துகொள்வது, அவர் மார்க்கமாக்கிய ஒன்றைக் கொண்டல்லாது அல்லாஹ் வணங்கப்படாமல் இருப்பதாகும்.
தொழுகை, ஸகாத், தவ்ஹீதின் விளக்கம் ஆகியவற்றுக்கான ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: நேரிய வழி நின்று கலப்பற்றவர்களாக அவனுக்கே கட்டுப்பட்டு அல்லாஹ்வை வணங்குமாறும் தொழுகையை நிலைநாட்டி ஸகாத்தையும் கொடுத்து வருமாறுமே தவிர அவர்கள் ஏவப்படவில்லை. இதுதான் நேரிய மார்க்கமாகும்.
- அல்பய்யினா: 5
நோன்பின் ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: விசுவாசம் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளும் பொருட்டு உங்களுக்கு முன்சென்றவர்கள் மீது கடமையாக்கப்பட்டது போன்று உங்களுக்கும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.
- அல்பகறா: 183
ஹஜ்ஜுடைய ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: மனிதர்களில் சென்றுவர சக்தி பெற்றவர்கள் மீது அல்லாஹ்வுக்காக அவ்வீட்டை ஹஜ் செய்வது கடமையாகும். எவர் நிராகரிக்கின்றாரோ நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தாரைவிட்டும் தேவையற்றவன்.
- ஆலஇம்ரான்: 97
இரண்டாவது படித்தரம்: ஈமான்
அது எழுபத்தி சொச்சம் கிளைகளைக் கொண்டது. அவைகளில் மிக உயர்ந்தது லாஇலாஹ இல்லல்லாஹ் என்ற வார்த்தையாகும். அவைகளில் மிகத் தாழ்ந்தது பாதையை விட்டும் நோவினை தரக்கூடியவற்றை அகற்றுவதாகும். வெட்கம் ஈமானில் இருந்தும் உள்ள ஒரு கிளையாகும்.
அதனுடைய தூண்கள் ஆறாகும். அவை நீ அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய வேதங்களையும் அவனுடைய தூதர்களையும் மறுமைநாளையும் கத்ரின் நன்மை மற்றும் தீமைகளையும் நம்புவதாகும்.
இந்த ஆறு தூண்களுக்குமான ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: கிழக்கு, மேற்குப் பக்கம் உங்கள் முகங்களை நீங்கள் திருப்புவது மட்டும் நன்மையாகாது. மாறாக, அல்லாஹ்வையும் இறுதிநாளையும், வானவர்களையும், வேதங்களையும், நபிமார்களையும் நம்புவோரும் நன்மை செய்பவர்களே.
- அல்பகறா: 177
கத்ருக்குரிய ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: நிச்சயமாக நாம் ஒவ்வொரு பொருளையும் அதற்குரிய அளவோடு படைத்துள்ளோம்.
- அல்கமர்: 49
மூன்றாவது படித்தரம்: இஹ்ஸான்
இதற்கு ஒரேயொரு தூண் உள்ளது. அது நீ அல்லாஹ்வைப் பார்ப்பதுபோல் வணங்குவதாகும். நீ அவனைப் பார்க்காவிட்டால் நிச்சயமாக அவன் உன்னைப் பார்க்கிறான் என்ற எண்ணத்தில் வணங்குவதாகும்.
ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: நிச்சயமாக அல்லாஹ் தன்னை அஞ்சி நடப்பவர்களுடனும் நன்மை செய்பவர்களுடனும் இருக்கின்றான்.
- அந்நஹ்ல்: 128
மேலும், அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: இன்னும் யாவற்றையும் மிகைத்தவன், நிகரற்ற அன்புடையவன் மீது முழுமையாக நம்பிக்கை வைப்பீராக! நீர் நின்று வணங்கும்போதும், நீர் ஸஜ்தா செய்பவர்களுடன் இணைந்து இயங்கும் போதும் அவன் உம்மைப் பார்க்கின்றான். நிச்சயமாக அவன் யாவற்றையும் செவியேற்பவன், நன்கறிந்தவன்.
- அஷ்ஷுஅரா: 217-220
மேலும், அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: நீர் எக்காரியத்தில் இருந்தாலும் குர்ஆனில் இருந்து எதையேனும் ஓதினாலும் எந்தச் செயலையேனும் நீங்கள் செய்தாலும் நீங்கள் அதில் ஈடுபட்டிருக்கும்பொழுது நாம் உங்களை கண்காணித்தவர்களாக இருக்கின்றோம்.
- யூனுஸ்: 61
ஹதீஸிலிருந்து ஆதாரம்: ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிரபல்யமான ஹதீஸாகும். உமர் இப்னுல் கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கூறினார்கள்: நாம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் உட்கார்ந்தவர்களாக இருந்தபோது கடும் வெள்ளை நிற ஆடையுடைய, கடும் கறுப்பு நிற முடியுடைய ஒரு மனிதர் எங்களிடம் தோன்றினார். பிரயாணத்தின் அடையாளம் அவரிடம் காணப்படவில்லை. எங்களில் யாரும் அவரை அறிந்திருக்கவில்லை. அவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் உட்கார்ந்து அவருடைய இரு முழங்கால்களுடன் தன்னுடைய முழங்கால்களை சேர்த்து வைத்தார். இன்னும் தனது இரு கைகளை அவருடைய இரு தொடைகளின் மீது வைத்து அவர் கூறினார்: முஹம்மதே! எனக்கு இஸ்லாத்தைப்பற்றி அறிவித்துத் தாருங்கள். அதற்கவர்கள்: நீ வணங்கப்படுவதற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் அல்லாஹ்வின் தூதர் என்றும் சான்று பகர்வதும், தொழுகையை நிலைநாட்டுவதும், ஸகாத்தைக் கொடுப்பதும், ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பதும், சென்றுவர சக்திபெற்றால் - கஃபதுல்லாஹ் எனும் - வீட்டை ஹஜ் செய்வதுமாகும் எனக் கூறினார்கள். அதற்கு அம்மனிதர்: நீர் உண்மை கூறிவிட்டீர் என்று கூறினார். நபியவர்களிடம் கேட்டு அவர்களை உண்மைப்படுத்துவது குறித்து நாம் ஆச்சரியப்பட்டோம். எனக்கு ஈமானைப்பற்றி அறிவித்துத் தாருங்கள் என்று அவர் கேட்டார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: நீ அல்லாஹ்வையும் அவனது வானவர்களையும் அவனது வேதங்களையும் அவனது தூதர்களையும் மறுமை நாளையும் கத்ரில் நன்மை தீமைகளையும் நம்புவதாகும் எனக்கூறினார்கள். அதற்கு அம்மனிதர்: நீர் உண்மை கூறிவிட்டீர் என்று கூறினார். இஹ்ஸானைப்பற்றி எனக்கு அறிவித்துத் தாருங்கள் என்று அவர் கேட்டார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: நீ அல்லாஹ்வை பார்ப்பதுபோல் வணங்குவதாகும். நீ அவனைப் பார்க்காவிட்டால் நிச்சயமாக அவன் உன்னைப் பார்க்கிறான் என்ற எண்ணத்தில் வணங்குவதாகும் என்று கூறினார்கள். அப்போது அம்மனிதர், மறுமை நாளைப்பற்றி எனக்கு அறிவித்துத் தாருங்கள் என்று கூறினார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: அதைப்பற்றி கேட்பவரைவிட கேட்கப்படுபவர் மிக்க அறிந்தவரல்ல என்று கூறினார். எனக்கு அதனுடைய அடையாளங்களைப்பற்றி அறிவித்துத் தாருங்கள் என்று அவர் கேட்டார். அதற்கவர்கள்: அடிமைப்பெண் தனது எஜமாட்டியைப் பெற்றெடுப்பதும், செருப்பின்றி, ஆடையின்றி பரம ஏழைகளாக ஆடு மேய்க்கக்கூடியவர்களாக இருந்தவர்கள் பெரும் கட்டிடங்களில் உலா வருவதை நீ பார்ப்பதுமாகும் என்று கூறினார்கள். உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: நான் நீண்ட நேரம் வெளியில் தங்கியிருந்தோன், பிறகு நபியவர்களை சந்தித்தபோது: இவர்தான் ஜிப்ரீல், உங்களுக்கு உங்களது மார்க்கத்தைக் கற்றுக்கொடுக்க வந்தார் எனக் கூறினார்கள்.
மூன்றாவது அடிப்படை:
உங்களது நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பற்றி அறிந்துகொள்வதாகும்.
அவர் முஹம்மத் இப்னு அப்தில்லாஹ் இப்னி அப்தில் முத்தலிப் இப்னி ஹாஷிம் ஆவார். ஹாஷிம் குறைஷி வம்சத்தைச் சார்ந்தவராவார். குறைஷி வம்சம் அறபிகளில் ஒரு வம்சமாகும். அறபிகள் இஸ்மாஈல் இப்னு இப்றாஹீம் அல்ஹலீல் அவர்களின் சந்ததியைச் சார்ந்தவர்கள். அவர் மீதும் எங்களது நபியின் மீதும் மிகச்சிறந்த கருணையும் சாந்தியும் உண்டாகட்டும்.
அவருடைய ஆயுட்காலம் 63 வருடங்களாகும். அவற்றில் 40 வருடங்கள் நுபுவ்வத்திற்கு முன்பாகும். 23 வருடங்கள் நபியாகவும் ரஸூலாகவும் இருந்தார். இக்ரஃ என்ற சூராவைக்கொண்டு நபித்துவம் வழங்கப்பட்டார். முத்தஸ்ஸிர் என்ற சூராவைக்கொண்டு தூதுத்துவம் வழங்கப்பட்டார். அவருடைய நகரம் மக்காவாகும். அல்லாஹ் அவரை ஷிர்க்கை விட்டும் எச்சரிக்கை செய்வதைக்கொண்டும் தவ்ஹீதின்பால் அழைப்பு விடுப்பதற்கும் அனுப்பினான்.
ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: போர்த்திக்கொண்டிருப்பவரே! எழுந்து எச்சரிக்கை செய்வீராக! இன்னும், உமது இரட்சகனைப் பெருமைப்படுத்துவீராக! இன்னும், உமது ஆடைகளைத் தூய்மைப்படுத்துவீராக! மேலும், அசுத்தத்தை வெறுப்பீராக! அதிகமாகக் கிடைக்க வேண்டும் என்பதற்காக வேண்டி நீர் உபகாரம் செய்யாதீர். உமது இரட்சகனுக்காகவே பொறுமையுடன் இருப்பீராக!
- அல்முத்தஸ்ஸிர்: 1-7
எழுந்து எச்சரிக்கை செய்வீராக என்பதின் கருத்து: ஷிர்க்கை விட்டும் எச்சரிக்கை செய்வதும் தவ்ஹீதின்பால் அழைப்பு விடுப்பதுமாகும்.
உமது இரட்சகனைப் பெருமைப்படுத்துவீராக: என்பதின் கருத்து தவ்ஹீதைக்கொண்டு அவனை மகத்துவப்படுத்துவாயாக என்பதாகும்.
உனது ஆடையை தூய்மைப்படுத்துவீராக என்பதின் கருத்து: உனது செயல்களை ஷிர்க்கைவிட்டும் தூய்மைப்படுத்துவீராக என்பதாகும்.
அசுத்தமானதை வெறுப்பீராக என்பதின் கருத்து: அசுத்தமானதென்றால் அது சிலைகளாகும். அதனை வெறுப்பதென்றால் அதனையும் அதைச் செய்பவர்களையும் விட்டுவிடுவதும் அதைவிட்டும் அவற்றைச் சார்ந்தவர்களை விட்டும் நீங்கிக்கொள்வதாகும்.
பத்து வருடங்கள் தவ்ஹீதின்பால் அழைப்பு விடுக்கக்கூடியவராக அவர் தொடர்ந்திருந்தார். பத்து வருடங்களுக்குப் பின் வானத்தின் பக்கம் உயர்த்தப்பட்டார். ஐந்து நேரத்தொழுகைகள் அவர்மீது கடமையாக்கப்பட்டது. மூன்று வருடங்கள் மக்காவில் அவர் தொழுதார். அதற்குப்பின் மதீனாவுக்கு ஹிஜ்ரத் மேற்கொள்ளுமாறு ஏவப்பட்டார்.
ஹிஜ்ரத் என்பது ஷிர்க்குடைய நாட்டிலிருந்து இஸ்லாமிய நாட்டுக்கு நகர்வதாகும். ஷிர்க்குடைய நாட்டிலிருந்து இஸ்லாமிய நாட்டுக்கு ஹிஜ்ரத் மேற்கொள்வது இந்த உம்மத் மீது கடமையான ஒன்றாகும். மறுமை நிகழும் வரைக்கும் அது நிலைத்திருக்கும்.
ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: நிச்சயமாக எவர்கள் தமக்குத்தாமே அநியாயம் செய்து கொண்டிருந்தார்களோ அவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும்போது நீங்கள் எந்த நிலையில் இருந்தீர்கள்? என கேட்பார்கள். அவர்கள் நாங்கள் பூமியில் பலவீனப்படுத்தப்பட்டவர்களாக இருந்தோம் என்று கூறுவார்கள். அல்லாஹ்வின் பூமி விசாலமானதாக இருக்கவில்லையா? அதில் நீங்கள் ஹிஜ்ரத் செய்திருக்க வேண்டாமா? என அவர்கள் கேட்பார்கள். அவர்களது ஒதுங்குமிடம் நரகமாகும். செல்லுமிடத்தில் அது மிகக் கெட்டதாகும். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் ஆகியோரில் பலவீனமாக்கப்பட்டவர்களைத் தவிர. இவர்கள் எவ்விதத் தந்திரம் செய்வதற்கும் சக்திபெறமாட்டார்கள். இன்னும் - வெளியேறிச் செல்ல - எவ்வித வழியையும் அறியமாட்டார்கள். எனவே, அவர்களை அல்லாஹ் பிழை பொறுப்பவனாகவும் மிக்க மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்.
- அந்நிஸா: 97-99
மேலும், அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: விசுவாசம் கொண்ட என்னுடைய அடியார்களே! நிச்சயமாக என்னுடைய பூமி விசாலமானதாக இருக்கின்றது. நீங்கள் என்னையே வணங்குங்கள்.
- அல்அன்கபூத்: 56
அல்பகவீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்: இந்த வசனம் இறங்குவதற்கான காரணம் ஹிஜ்ரத் செய்யாமல் மக்காவில் இருந்த முஸ்லிம்களின் விடயமாகும். அல்லாஹ் அவர்களை ஈமானின் பெயரைக்கொண்டு அழைத்தான்.
ஹிஜ்ரத்துக்கு ஹதீஸிலிருந்து ஆதாரம்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: தவ்பா துண்டிக்கப்படும் வரை ஹிஜ்ரத் துண்டிக்கப்படமாட்டாது. சூரியன் அதனுடைய மேற்கிலிருந்து உதிக்கும் வரை தவ்பா துண்டிக்கப்படமாட்டாது.
அவர் மதீனாவில் தரிபட்டபோது ஏனைய இஸ்லாமிய சட்டதிட்டங்களைக்கொண்டு ஏவப்பட்டார். உதாரணம்: ஸகாத், நோன்பு, ஹஜ், அதான், ஜிஹாத், நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல், இன்னும் இவைகள் அல்லாத இஸ்லாமிய சட்டதிட்டங்கள்.
இதன் மீது அவர்கள் பத்து வருடங்கள் தொடர்ந்திருந்தார்கள். அவருடைய மார்க்கமோ எஞ்சியிருக்கின்ற நிலையில் அவர்கள் மரணித்தார்கள். அவர் மீது அல்லாஹ்வின் கருணைகளும் சாந்தியும் உண்டாகட்டும். இதுதான் அவருடைய மார்க்கமாகும். அவர் இந்த உம்மத்திற்கு அறிவிக்காத எந்த நலவும் இல்லை. அவர் எச்சரிக்காத எந்த தீங்கும் இல்லை. அவர் அறிவித்த நலவு தவ்ஹீதும் அல்லாஹ் விரும்பக்கூடிய பொருந்திக்கொள்ளக்கூடிய அனைத்துமாகும். அவர் எச்சரித்த தீங்கு ஷிர்க்கும் அல்லாஹ் வெறுக்கக்கூடிய அனைத்துமாகும். அவரை அல்லாஹ் அனைத்து மனிதர்களுக்குமாக அனுப்பினான். ஜின்கள், மனிதர்கள் ஆகிய இருபாலாரின் மீதும் அவருக்கு வழிப்படுவதை கடமையாக்கினான்.
ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: - நபியே! - நீங்கள் கூறுங்கள் மனிதர்களே நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வுடைய தூதராவேன்
- அல்அஃராப்: 185
அவரைக்கொண்டு அல்லாஹ் மார்க்கத்தைப் பூர்த்தியாக்கினான்.
ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: இன்றைய தினம் உங்களுக்கு உங்களுடைய மார்க்கத்தை நான் பூர்த்தியாக்கிவிட்டேன். இன்னும் என்னுடைய அருட்கொடையை உங்கள் மீது நான் பரிபூரணப்படுத்திவிட்டேன். உங்களுக்கு நான் இஸ்லாத்தை மார்க்கமாக பொருந்திக்கொண்டுவிட்டேன்.
- அல்மாஇதா: 3
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மரணத்திற்கு ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: நிச்சயமாக நீரும் மரணிக்கக்கூடியவரே. இன்னும் அவர்களும் மரணிக்கக்கூடியவர்களே. பின்னர் நிச்சயமாக நீங்கள் மறுமை நாளில் உங்கள் இரட்சகனிடத்தில் தர்க்கித்துக்கொள்வீர்கள்.
- அஸ்ஸுமர்: 30-31
மனிதர்கள் மரணித்தால் எழுப்பப்படுவார்கள்.
ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: அதிலிருந்தே நாம் உங்களைப் படைத்தோம். மேலும், அதிலேயே நாம் உங்களை மீட்டுவோம். இன்னும் அதிலிருந்து மீண்டும் ஒருமுறை நாம் உங்களை வெளியேற்றுவோம்.
- தாஹா: 55
மேலும் அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: அல்லாஹ்தான் பூமியிலிருந்து உங்களை உற்பத்தி செய்தான். பின்னர் அவன் அதில் உங்களை மீட்டுவான். மேலும், உங்களை - அதிலிருந்தே - வெளிப்படுத்துவான்.
- நூஹ்: 17-18
எழுப்பப்பட்டதன் பின்பு அவர்கள் விசாரிக்கப்படுவார்கள். அவர்களுடைய செயல்களைக்கொண்டு அவர்கள் கூலி வழங்கப்படுவார்கள்.
ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன. தீமை செய்தோருக்கு அவர்கள் செய்தவற்றுக்குக் கூலி வழங்குவதற்காகவும் நன்மை செய்தோருக்கு நன்மையைக்கொண்டு கூலி வழங்குவதற்காகவும் - மறுமையை - ஏற்படுத்தியுள்ளான்.
- அந்நஜ்ம்: 31
யார் எழுப்பப்படுவதை பொய்ப்பிக்கின்றாரோ அவர் நிராகரித்துவிட்டார்.
ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: நிராகரித்தோர் எழுப்பப்படமாட்டோம் என எண்ணுகின்றனர். அவ்வாறல்ல, எனது இரட்சகன் மீது சத்தியமாக நிச்சயமாக நீங்கள் எழுப்பப்படுவீர்கள். நீங்கள் செய்தவை குறித்து பின்னர் உங்களுக்கு அறிவிக்கப்படும். இது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதாகும் என - நபியே! - நீர் கூறுவீராக!
- அத்தகாபுன்: 7
அல்லாஹ் அனைத்து தூதர்களையும் நன்மாராயம் கூறக்கூடியவராகவும் எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பினான்.
ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: தூதர்களுக்குப் பின்னரும், அல்லாஹ்வுக்கு எதிராக குற்றம் பிடிப்பதற்கு மனிதர்களுக்கு எவ்வித ஆதாரமும் இருக்கக்கூடாது என்பதற்காக - மேலும் பல - தூதர்களை நன்மாராயம் கூறுவோராகவும் எச்சரிப்போராகவும் அனுப்பி வைத்தோம்.
- அந்நிஸா: 165
அவர்களில் ஆரம்பமானவர் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களாவர். அவர்களில் இறுதியானவர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆவர். அவர் நபிமார்களில் இறுதி முத்திரை பெற்றவராவார். அவர்களில் ஆரம்பமானவர் நூஹ் அலைஹிஸ்ஸலாம் என்பதற்கு ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: நூஹுக்கும் அவர்களுக்குப் பின்னால் வந்த நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போன்று நிச்சயமாக நாம் உமக்கும் வஹீ அறிவித்திருக்கின்றோம்.
- அந்நிஸா: 163
அல்லாஹ்வை மாத்திரம் வணங்க வேண்டும் என்று ஏவியவனாகவும் அல்லாஹ் அல்லாதவைகளை வணங்குவதைவிட்டும் தடுக்கக்கூடியவனாகவும் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் முதல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரை அல்லாஹ் அனைத்து சமுதாயத்திற்கும் தூதரை அனுப்பினான்.
ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: அல்லாஹ்வை வணங்குங்கள், மேலும், அல்லாஹ் அல்லாதவைகளாகிய தாகூத்களை விட்டும் விலகிக்கொள்ளுங்கள் எனக்கூறும் தூதரை ஒவ்வொரு சமூகத்திலும் நிச்சயமாக நாம் அனுப்பி வைத்தோம்.
- அந்நஹ்ல்: 36
அல்லாஹ் அனைத்து அடியார்களின் மீதும் தாகூத்களை நிராகரிப்பதையும் அல்லாஹ்வை ஈமான் கொள்வதையும் கடமையாக்கினான். இப்னுல் கைய்யிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: தாகூத் என்பதின் கருத்து ஓர் அடியான் வணங்கப்படுபவன், பின்பற்றப்படுபவன், வழிப்படப்படுபவன் ஆகியோரில் எல்லை மீறுவதாகும்.
தாகூத்கள் அதிகமாக உள்ளனர். அவர்களின் தலைவர்கள் ஐவர். இப்லீஸ் அவனை அல்லாஹ் சபிப்பானாக, தான் பொருந்திக்கொண்ட நிலையில் வணங்கப்படுபவன், தன்னை வணங்குவதின்பால் மக்களை அழைப்பவன், மறைவான அறிவில் உள்ள ஒன்றை தான் அறிவதாக வாதிடக்கூடியவன், அல்லாஹ் இறக்கியதல்லாத ஒன்றைக்கொண்டு தீர்ப்பு வழங்கியவன்.
ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகிறான்: இம்மார்க்கத்தில் எவ்வித நிர்ப்பந்தமும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி மிகத்தெளிவாகிவிட்டது. எவர் தாகூத்தை நிராகரித்து அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கிறாரோ அவர் நிச்சயமாக அறுந்துபோகாத பலமான கயிற்றைப் பற்றிப் பிடித்துக்கொண்டவராவார். மேலும், அல்லாஹ் யாவற்றையும் செவியேற்பவனும் நன்கறிந்தவனுமாவான்.
- அல்பகறா: 256
இதுதான் லாஇலாஹ இல்லல்லாஹ் என்பதின் கருத்துமாகும். ஹதீஸில் - பின்வருமாறு - இடம்பெற்றுள்ளது. - நான் கொண்டு வந்த விடயங்களின் - தலையான அம்சம் இஸ்லாமாகும். அதன் தூண் தொழுகையாகும். அதில் உயர்வானது அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் புரிவதாகும்.
அல்லாஹ் மிக அறிந்தவன். அல்லாஹ் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவருடைய குடும்பத்தினர், தோழர்கள் மீதும் ஸலாமும் ஸலவாத்தும் கூறுவானாக!