கலைச்சொற்கள்

அஹ்காம்: சட்டங்கள் என்று பொருள். இஸ்லாமிய மார்க்கத்தில் சட்டங்களை ஐந்து வகைப்படுத்துவார்கள். அவை:
கட்டாயமானவை (ஃபர்ள்) - இவற்றுக்கு மாறு செய்தால் கடும் தண்டனை உண்டு. இவை இரண்டு வகை.

அ) ஃபர்ள் அய்ன்- ஒவ்வொரு மனிதர் மீதும் கட்டாயமானவை. உதாரணமாக தொழுகை, நோன்பு போன்றவை.
ஆ) ஃபர்ள் கிஃபாயா- சமுதாயத்தில் ஒரு சிலராவது நிறைவேற்ற வேண்டியவை. உதாரணமாக ஜனாஸா தொழுகை
ஆர்வமூட்டப்பட்டவை (முஸ்தஹப்பு) - இவற்றைச் செய்வது கட்டாயம் அல்ல. உதாரணமாக சுன்னத் தொழுகைகள், ஸதகா தர்மங்கள்
சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டவை (ஹலால்) - உதாரணமாக நல்ல உணவுவகைகள்
வெறுக்கப்பட்டவை (மக்ரூஹ்) - இவை தடை செய்யப்பட்டவை அல்ல என்றாலும் வெறுக்கப்பட்டவை. உதாரணமாக தலாக், மார்க்க விஷயத்தில் கேள்வி மேல் கேள்வி கேட்பது
தடைசெய்யப்பட்டவை(ஹறாம்) - உதாரணமாக விபசாரம்
 
அஜ்வா: மதீனாவில் விளையும் பேரீச்சம் பழங்கள்
 
சவ்ம் அல்லது சியாம்: நோன்பு
 
பாபுர் ரய்யான்: சொர்க்கத்தின் எட்டு வாசல்களில் ஒன்று. மறுமை நாளில் இதன் வழியாகவே நோன்பாளிகள் சொர்க்கத்தில் நுழைவர்.
 
பைத்துல்மால்: வறியவர்கள், ஏழைகளின் நலனுக்காக இஸ்லாமியச் சேமிப்பு நிதியாகும். இதிலிருந்து செல்வந்தர்கள், தலைவர்களுக்கு நிதி வழங்கப்படாது.
 
தீனார்: பழங்காலத் தங்க நாணயம்
 
திர்ஹம்: ஐம்பது பார்லி அரிசிகளின் எடையளவு உள்ள வெள்ளி நாணயமாகும். மதிப்பில் இது பன்னிரண்டில் ஒரு பங்கு தங்க ஊக்கியாவுக்குச் சமமாகும்.

ஈதுல்ஃபித்ர்: ரமளானின் முடிவில் கொண்டாடப்படும் பெருநாள். இஸ்லாமிய மாதங்களில் பத்தாவது மாதமான ஷவ்வால் முதல் பிறையில் இது கொண்டாடப்படுகிறது.
 
ஃபரீளா: முஸ்லிம்கள் மீதுள்ள கடமை என்று பொருள். ஃபராயிள் இதன் பன்மை.
 
ஃபித்யா: வணக்கத்தில் ஒன்றை விட்டதற்காகவோ, தவறாகச் செய்ததற்காகவோ செய்யப்படும் பரிகாரம். பொதுவாக ஃபித்யா என்பது பணமாக அல்லது உணவாக அல்லது ஒரு பிராணியை அறுத்துப்பலியிடுவது அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்வது ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படுவதாகும். கஃப்பாராவைப் போன்றதாகும்.
 
ஹசனாத்: அல்லாஹ்வின் பாதையில் செய்யப்படும் நற்செயல்கள். இச்செயல்களைக் கொண்டுதான் அல்லாஹ் மனித இனத்திற்கும் ஜின் இனத்திற்கும் அவர்கள் சொர்க்கம் செல்ல அனுமதியளித்து தீர்ப்பளிப்பான். இதன் ஒருமை ஹசனத் என்பதாகும்.
 
இபாதா: அல்லாஹ்வுக்கு மிகவும் கீழ்ப்படிந்து, மிகுந்த அன்புடன் செய்கின்ற வணக்கங்களை இப்படிச் சொல்லப்படும். வேறு சொற்களில் கூற வேண்டுமானால், அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுத் தருகிற ஒவ்வொரு சொல்லும் செயலும் அவை வெளிப்படையாகவோ மறைவாகவோ எப்படி இருப்பினும் வணக்கங்கள் ஆகும். இவற்றில் உள்ளங்களின் செயல்கள் மற்றும் உடல் உறுப்புகளின் செயல்களும் அடங்கும். நேசம், அச்சம், பயபக்தி, ஆதரவுவைத்தல், பொறுப்புச் சாட்டுதல் ஆகியன உள்ளங்களின் வணக்கங்களாகும். தொழுகைகள், ஒருவரின் தேவைகளை நிறைவேற்றுதல், பிரார்த்தனை செய்தல், அல்லாஹ்வுக்காக அறுத்துப்பலியிடல் ஆகியவை உடல் உறுப்புகளின் வணக்கங்களாகும். இவை அனைத்தும் வணக்கங்களின் வெவ்வேறு வடிவங்கள். இபாதா என்பது அல்லாஹ்வை அவனுக்குப் பிடித்த முறையில் வணங்குவதாகும்.
 
ஈமான்: அல்லாஹ், மலக்குகள், வேதங்கள், தூதர்கள், மறுமை, விதியின் நன்மை தீமை ஆகிய மறைவான விஷயங்களின் மீது நம்பிக்கை வைத்து அவற்றை உண்மை என்று ஏற்றுக் கொள்வதாகும்.
 
இம்சாக்: நோன்பு வைப்பதற்குரிய நேரத்தின் தொடக்கம். அதிகாலையின் முதல் ஒளிக்கீற்று தெரிவதை இப்படிக் கூறுவர். அது ஃபஜ்ர் வந்து பாங்கு சொல்வதிலிருந்து ஆரம்பிக்கிறது.
 
இஃதிகாஃப்: அல்லாஹ்வை வணங்குவதற்காக நோன்பு வைத்த நிலையில் மஸ்ஜிதில் தனித்தவராகத் தங்கியிருப்பதாகும். இஃதிகாஃப் இருப்பவர் தவிர்க்க முடியாத தேவைகள் தவிர வேறு எதற்காகவும் மஸ்ஜிதை விட்டு வெளியேறக்கூடாது. எடுத்துக்காட்டாக, இயற்கை உபாதை, ஒரு முஸ்லிமின் துன்பத்தை நீக்க செல்லுதல் போன்றவை.
 
இஃதிகாஃப் இரண்டு வகை:
ஃபர்ள்- ஒருவர் தமது பிரார்த்தனை ஏற்கப்பட்டால் அல்லாஹ்வுக்காக இஃதிகாஃப் இருப்பதாக நேர்ச்சை செய்திருப்பது. உதாரணமாக, எனது மகன் ஏழுநாட்களில் குணமாகிவிட்டால் நான் இஃதிகாஃப் இருப்பதாக வாக்களிக்கிறேன் என்று கூறுதல். இவருடைய பிரார்த்தனை ஏற்கப்பட்டுவிட்டால் இவர் ஏழுநாட்கள் இஃதிகாஃப் இருப்பது கட்டாயமாகும்.
சுன்னத்தான இஃதிகாஃப். இது உபரியானதாகும். கட்டாயமில்லை. நபியவர்கள் ரமளானின் கடைசிப்பத்தில் இஃதிகாஃப் இருந்தார்கள். அதைப் பின்பற்றி நாமும் இருப்பது.
 
ஜஹன்னம்: பொதுவாக நரகத்தை இப்பெயரால் குறிப்பிடப்படும். உண்மையில் இது நரகத்தின் அடுக்குகளில் ஒரு வகையாகும். மொத்தம் நரகத்திற்கு ஏழு அடுக்குகள் உள்ளன.
ஜஹீம்- இது நரகில் ஆழமற்ற அடுக்காகும். அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொண்ட பிறகும் அவனது கட்டளைகளைச் செயல்படுத்தாமல் அலட்சியம் காட்டியவர்கள் இதில் இருப்பார்கள்.
ஜஹன்னம்- இது ஆழமான நரகம். சிலை வணங்கிகள் மறுமையில் இதில் எறியப்படுவார்கள்.
சஈர்- நெருப்பு வணங்கிகளுக்காக ஒதுக்கப்பட்ட நரகம்.
சகர்- அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளாதவர்களும் தொழாதவர்களும் இதில் இருப்பர்.
லளா- யூதர்களின் நரகத்தங்குமிடம்.
ஹாவியா- கிறித்துவர்களின் நரகத்தங்குமிடம்.
ஹுத்தமா- மிகவும் ஆழமான நரக அடுக்கு. இங்குதான் நயவஞ்சகர்கள் இருப்பார்கள். இவர்கள்தாம் அல்லாஹ்வின் படைப்புகளில் மிக மோசமானவர்கள். மனிதர்கள், ஜின்கள் இரண்டு சாராரிலும் இப்படிப்பட்டவர்கள் இருப்பார்கள். இவர்கள் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் வெளிப்படையில் ஏற்றுக்கொண்டு உள்ளுக்குள் நிராகரித்தவர்கள்.
 
ஜன்னத்(அ) ஜன்னா: சொர்க்கம் அல்லாஹ்வையும் அவனுடைய எல்லாத்தூதர்களையும் நம்பிக்கை கொண்டு இஸ்லாமிய வாழ்வு வாழ்ந்தவர்களுக்கு அல்லாஹ் படைத்து வைத்துள்ள இன்பத் தங்குமிடம். இதற்கு எட்டு நுழைவாயில்கள் உண்டு. ஒவ்வொரு நுழைவாயிலிலும் பதினொருகதவுகள் உண்டு.
சொர்க்கத்தின் எட்டு நுழைவாயில்களின் பெயர்கள்:
பாபுல் ஈமான்,
பாபுல் ஜிஹாத்,
பாபுல் காதிமீனுல்கைள்,
பாபுர் ரய்யான்,
பாபுர் ரதியீன்,
பாபுஸ் ஸதகா,
பாபுத் தவ்பா,
பாபுஸ் ஸலாத்.
 
ஜனாபா: நாடியோ நாடாமலோ விந்து வெளியான நிலை. இந்நிலையில் உள்ளவர் குளித்தால் தவிர தொழ முடியாது.
 
கஃப்பாரா: பரிகாரம் தவறான செயல்களுக்கும் கடமைகளை விட்டதற்கும் பரிகாரம் செய்தல். உதாரணமாக, ஒருவர் அல்லாஹ்வின்மீது சத்தியமிட்டு வாக்களிக்கிறார். ஆனால் பிறகு அந்த வாக்குறுதியைக் காப்பாற்றும் நிலையில்தான் இல்லை என்பதை உணர்கிறார். இப்போது அவர் கஃப்பாரா செய்ய வேண்டும். கஃப்பாரா என்பது பலவழிகளில் செய்யப்படும். ஓர் அடிமையை விடுதலை செய்தல், பசியுள்ளவருக்கு உணவளித்தல் அல்லது குறிப்பிட்ட சில நாட்கள் நோன்பு வைத்தல் ஆகியவற்றின் மூலம் கஃப்பாரா செய்யப்படும்.
 
லைலத்துல் கத்ர்: ரமளான் மாதத்தின் கடைசி பத்தின் ஒற்றைப்படை இரவுகளில் ஒன்றாகும். இந்த இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது.
 
லஹ்வ்: பொய்யான, வீணானபேச்சுகள்
 
மக்ரூஹ்: வெறுக்கப்பட்டது. ஆனால் தடை செய்யப்பட்டதல்ல.
 
மசாகீன்: மிகவும் ஏழ்மையான, தேவையுள்ள மக்கள். அவர்களைப் பார்த்தால் தான் இது தெரியவேண்டும் என்றில்லை. உதவி தேவைப்படாதவர்களாகத் தெரிந்தாலும் எதார்த்தத்தில் அவர்கள் மிகவும் ஏழ்மையில் இருப்பார்கள் ஒருமை: மிஸ்கீன்
 
முஅதகிஃப்: இஃதிகாஃப் இருப்பவர்
 
முபாரக்: அருள் புரியப்பட்டவர். அல்லாஹ்வின் அருளைப் பெற்றவர்.
 
நஃபிளா: உபரியான தொழுகை.
இதில் இரண்டு வகை உண்டு: (1) சுன்னத்- ஃபர்ளான தொழுகைகளுக்கு முன்பும் பின்பும் உள்ள தொழுகைகள். இவையும் இரண்டு வகையாகும்: (அ) முஅக்கத்- உறுதிசெய்யப்பட்டவை இந்தவகை தொழுகைகள் நபியவர்களால் தினசரி தொழப்பட்டவை. (ஆ) கைர்மு அக்கத்- உறுதிசெய்யப்படாதவை. இந்த வகையான தொழுகைகள் நபியவர்களால் எப்போதாவது தொழப்பட்டவை.(2) மற்றவை- ஒருவர் தாமாக விரும்பி தொழுகின்ற மற்ற தொழுகைகளைக் குறிப்பிடும் உதாரணமாக, ஒரு துஆவுக்காக இரண்டு ரக்அத்துகள் தொழுது கேட்பது. வித்ர் தொழுகை தவிர மற்ற எல்லா நஃபிளா தொழுகைகளும் இரண்டு ரக்அத்துகள்தாம். நவாஃபில் என்பது இச்சொல்லின் பன்மை.
 
நார்: நெருப்பு என்று பொருள். ஆனால் பொதுவாக நரகத்தின் எல்லா அடுக்குகளின் நெருப்பை இது குறிப்பிடும்.
 
களாவகத்ர்: விதி. களா என்றால் எல்லா உலகங்களுக்கும் அல்லாஹ் நிர்ணயித்து விட்டதாகும். களாவை மாற்ற முடியாது. அல்லாஹ் விதித்ததுதான் முடிவானது. கத்ர் என்பது தனி மனிதர்களின் விதி அல்லது அல்லாஹ்வின் ஒவ்வொரு தனிப்படைப்புக்கும் உரிய விதியாகும். இதுவும் மாற்ற முடியாதுதான். ஆனால் சில சமயங்களில் அல்லாஹ் அதில் திருத்தம் செய்வான். “அல்லாஹ் அனைத்து விஷயங்களின் மீதும் பேராற்றல் மிக்கவனாக உள்ளான்.” (அல்குர்ஆன்5.19)
 
அல்கத்ர்: ஆற்றல். அல்லாஹ்வினது இரவின்ஆற்றல்.(காண்கஅல்குர்ஆன்97 அத்தியாயம்)
 
லைலத்துல் கத்ர்: குர்ஆன் இறக்கப்பட்ட கண்ணியமிக்க இரவு.
 
குர்ஆன்: ஓதப்படுவது எனப் பொருள். குர்ஆனை அல்ஃபுர்கான் என்றும் கூறப்படும். அதாவது, நன்மை தீமையைப் பிரித்துக் காட்டக் கூடியது. குர்ஆன்தான் அல்லாஹ்வின் இறுதிவேதம். மறுமை நாள் வரை இதில் எந்த மாற்றமோ திருத்தமோ வராதபடி பாதுகாக்கும் பொறுப்பை அல்லாஹ் ஏற்றுக் கொண்டுள்ளான். பொதுவாக இதனை முஸ்லிம்களின் வேதம் என்று நினைக்கின்றனர். அது தவறு. இது மனிதர்கள், ஜின்கள் அனைவருக்கும் இறக்கப்பட்டவேதம்.
 
ரலியல்லாஹுஅன்ஹு/அன்ஹா: அல்லாஹ் அவரைப் பொருந்திக் கொள்ளட்டும் என்று பொருள். இந்த வாக்கியத்தைப் பெரும்பாலும் நபியின் தோழர், தோழியருக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். ரலியல்லாஹு அன்ஹும் என்றால் அல்லாஹ் அவர்கள் அனைவரையும் பொருந்திக் கொள்ளட்டும் என்று பொருள்.
 
ரமளான்: இஸ்லாமிய மாதங்களில் ஒன்பதாவது மாதம். இதுதான் இஸ்லாமிய உலகில் மிகவும் முக்கியமான மாதம்.
இதில்தான் உலகில் உள்ள முஸ்லிம் ஆண் பெண்களில் பருவமடைந்த, சக்தியுள்ள ஒவ்வொருவரும் நோன்பு நோற்பார்கள். அதிகாலை முதல் சூரியன் மறையும் வரை உண்ணாமல் பருகாமல் இருப்பார்கள்.
இதில்தான் குர்ஆன் நபி முஹம்மதுக்கு இறக்கப்பட்டது.
இம்மாதத்தில்தான் லைலத்துல்கத்ர் எனும் கண்ணியமிகு இரவு உள்ளது.
இதில்தான் பத்ர் எனும் இஸ்லாமிய வரலாற்றின் முதல்போர் நடந்து வெற்றியும் கிட்டியது.
இம்மாதத்தில்தான் மக்கா வெற்றிகொள்ளப்பட்டது.
 
ருக்ன்: தூண். பன்மை: அர்கான்
 
சதகா: அல்லாஹ்வின் திருப்திநாடி செய்யப்படும் எந்தவிதமான தர்மத்தையும் இச்சொல் குறிக்கும். மேலும் சொர்க்கத்தின் எட்டு நுழைவாயில்களில் ஒன்று.
 
ஸஹீஹ்: பலமானது. குறையற்றது. நபிமொழிகளின் விஷயத்தில் ஆதாரப்பூர்வமானது என்பதைக் குறிப்பிட இச்சொல் பயன்படுத்தப்படும்.
 
ஸஹீஹுல்புகாரீ: இமாம் புகாரீ அவர்களால் தொகுக்கப்பட்ட ஆதாரப்பூர்வமான நபிமொழிகளின் தொகுப்பு.
 
ஸஹீஹ்முஸ்லிம்: இமாம் முஸ்லிம் அவர்களால் தொகுக்கப்பட்ட ஆதாரப்பூர்வமான நபிமொழிகளின் தொகுப்பு.
 
ஷைத்தான்: ஒரு தீய ஜின். மனிதர்களையும் ஜின்களையும் அல்லாஹ்வுக்கு எதிராகத் தூண்டக்கூடியது. அதன் தீங்கிலிருந்து நாம் அல்லாஹ்விடமே பாதுகாவல் தேடுகிறோம். பன்மை: ஷையாத்தீன்.
 
ஷரீஆ: அல்லாஹ்வின் இஸ்லாமிய மார்க்கச்சட்டம். மொழிரீதியாக இதற்கு பாதை என்று பொருள். ஷரீஆதான் மக்கள் தங்களின் இறைத்தூதரின் வழியாக பெற்றுக்கொள்ளும் இறைச் செய்தியாகும். இறுதியான ஷரீஆ என்பது நபி முஹம்மது(ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட இஸ்லாம் ஆகும். இது முந்திய எல்லா ஷரீஆக்களையும் காலாவதியாக்கிவிட்டது. மனிதர்களில் எங்கிருப்பவருக்கும் இதுவே பின்பற்றத் தேவையான பாதையாகும்.
 
ஷவ்வால்: இஸ்லாமிய மாதங்களில் பத்தாவது மாதம்.
 
ஸிராத்துல் முஸ்தகீம்: மொழிரீதியாக ‘நேரானபாதை’ என்று பொருள். குர்ஆன்மற்றும் ஹதீஸ்கள் வழியாக நபி முஹம்மது(ஸல்) அவர்கள் எந்தப் பாதையை இந்த மனிதகுலத்திற்குக் காட்டிச் சென்றார்களோ அதுவே அப்பாதை. அது சொர்க்கத்திற்கு இட்டுச் செல்கிறது.
 
சிவாக்: அல்அராக் எனும் மரத்தின் சிறியகுச்சி. இது பல்துலக்கப் பயன்படுத்தப்படும்.
 
தஃப்சீர்: விரிவுரை. குர்ஆனுடைய வசனங்களுக்கு நம்பகமான விரிவுரைகள் பல உண்டு. எ.கா. இப்னுகஸீர், ஜலாலைன், அல்குர்துபீ, தஃப்சீர்சஅதீ.
 
தஹாரா: தூய்மை. இதைப் பலவழிகளில் கடைப்பிடிக்கவேண்டும். உதாரணமாக,
உள்ளங்கள்- ஒருவர் தமது உள்ளத்தைத் தூய்மையாக ஆக்கிக்கொண்டால் மட்டுமே அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து முஸ்லிமாக இருக்க முடியும்.
உடல்கள்- இவற்றைத் தயம்மும், வுளூ, குஸ்ல் ஆகியவற்றின் மூலம் தூய்மைப்படுத்திக் கொள்ளவேண்டும். இது சூழ்நிலைக்கு ஏற்ப அமையும்.
ஆடை அணிதல்- மூன்று விஷயங்கள் ஓர் ஆடை அசுத்தமாக உள்ளது என்பதைக் காட்டிவிடும். அப்போது அதைக் கழுவவேண்டும். அ) அதில் துர்நாற்றம் வீசுவது. ஆ) அது விந்தின் ஈரத்துடன் இருப்பது. இ) அதில் கறை இருப்பது.
 
தக்பீர்: அல்லாஹு அக்பர்(அல்லாஹ்மிகப்பெரியவன்) என்று கூறுதல். இது தொழுகையைத் தொடங்கும் போதும் அதன் ஒவ்வொரு நிலைகளின் போதும் கூறப்படுவதாகும்.
 
தக்வா: அல்லாஹ்வைப் பற்றிய அச்சம். எச்சரிக்கை உணர்வு. ஒரு மனிதர் அல்லாஹ்வைக் குறித்த அச்சத்தால் தன்னைப் பாவகாரியங்களை விட்டு பாதுகாத்துக் கொள்கிறார். அவனது திருப்தியைத் தரும் செயல்களில் ஈடுபடுகிறார். அல்லாஹ்வுக்கு அவன் காட்டிய முறையில் உண்மையாகப் பயப்பட வேண்டும்.
 
தராவீஹ்: நஃபில் எனும் உபரித் தொழுகை. ரமளான் மாதத்தில் இஷா தொழுகைக்குப் பிறகு தொழுவது. அதில் முழுவதுமாகவோ, முடிந்தவரையோ குர்ஆனை ஓதுவது. இத்தொழுகை ஜமாஅத்தாக நடைபெறும். அதேசமயம் தனியாகவும் தொழலாம்.
 
தவ்பா:
ஒருவர் தாம் செய்த பாவத்திற்காக வருந்தி அல்லாஹ்விடம் மன்னிப்புக்கேட்பது.
சொர்க்க நுழைவாசல்களில் ஒன்றின் பெயர்.
குர்ஆனுடைய ஒன்பதாம் அத்தியாயத்தின் பெயர்.
 
ஸவாப்: மனிதர்கள், ஜின்கள் செய்த நற்செயல்களுக்கு அல்லாஹ் வழங்கும் கூலி.
 
திலாவத்: இதற்குப் பல பொருள்கள் உண்டு. இடத்திற்கு ஏற்ப அவை அமையும்.
குர்ஆனைப் புரிந்து கொள்ளவேண்டிய முறையில் கற்றுக் கொள்வது. காண்க அல்குர்ஆன் 2.121.
ஒருவர் தமது வாழ்வையும் அறிவையும் வளப்படுத்திக் கொள்ள குர்ஆனை வாசித்துச் சிந்திப்பது.
ஒருவர் தமக்குத்தாமே குர்ஆனை ஓதுவது.
ஒருவர் குர்ஆனை வாசித்து அதன் பொருளைப் பிறருக்கு எடுத்துரைப்பது.
ஒருவர் குர்ஆனை வாசித்து சிந்தித்து அதனைப் பின்பற்றி நடப்பது. அதன் மூலம் தனது வாழ்க்கையைச் சீராக்கிக் கொள்வது. பாவமான, வெட்கக்கேடான செயல்களை விட்டுவிடுவது. காண்க அல்குர்ஆன்29:45
 
உம்றா :ஹஜ்ஜுக்காலத்தில் இல்லாமல் வேறு காலங்களில் மக்காவுக்கு யாத்திரை செல்வது. இதையே சிறிய ஹஜ்ஜு என்றும் கூறுவார்கள்.
 
வஹ்யி: இறைச்செய்தி அறிவிப்பு. இறைத்தூதர்களுக்கு அல்லாஹ் தனது செய்தியை அவர்களின் உள்ளத்திலோ சிந்தனையிலோ வெளிப்படுத்துதல்.
 
வித்ர்: ஒற்றைப்படை எண்ணிக்கையில் தொழப்படும் ஒரு தொழுகை. முதலில் இரண்டு ரக்அத்தும் பிறகு ஒரு ரக்அத்தும் தொழப்படுவது. இது ஒருவர் தூங்குவதற்கு முன் இறுதியாகத் தொழுவதாகும். அல்லது அதைத் தாமதப்படுத்தி தூங்கி இரவின் இறுதிப்பகுதியில் தஹஜ்ஜுத் நேரத்தில் எழுந்து தொழுவதாகும்.
 
ஸகாத்: முஸ்லிமின் செல்வத்திலிருந்து செலுத்தப்பட வேண்டிய வரி. ஆண்டுக்கு ஒருமுறை தனது செல்வத்திலிருந்து 2.5 சதவீதத்தை ஏழை முஸ்லிம்களுக்கு வழங்கவேண்டும். 85 கிராம்கள் தங்கத்தை வைத்துள்ளவர் மீது இது கடமையாகிவிடும். இன்னும், வெள்ளி, கால்நடைகள், விளைச்சல்கள் உள்ளவர் மீதும் கடமையாகும். இது குறித்த சட்டங்களை துறைசார்ந்த நூல்களில் படித்துத் தெரிந்து கொள்ளவேண்டும். காண்க அல்குர்ஆன் 2:43, 110, 177, 277, 4:162, 5:58.
 
ஸகாத்துல்ஃபித்ர்: நோன்புப் பெருநாள் அன்று ஒவ்வொரு முஸ்லிம் ஆண் மெண்மீதும் கடமையான சிறியவகை தர்மமாகும். இது உணவுப்பொருளாக ஏழைகளுக்குத் தரப்படவேண்டும்.

தபர்ருஜ்: மொழிரீதியாக இதன் கருத்து ஒரு பெண் தன் அழகை வெளிக்காட்டுவது, அவளது முகத்தை வெளிக்காட்டுவது; அவளது உடல்மைப்பை வெளிக்காட்டுவது: அத்தோடு தன் கணவரல்லாத மற்ற ஆண்களைக் கவருவதற்காக எல்லா வகையான வழிகளையும் கையாள்வது எனப்படும். இஸ்லாமிய மரபுப்படி இதன் கருத்து, பெண் தன் அழகை வெளிக்காட்டுவது எனப்படும். மேலும் அவள் எடுப்பான தோற்றம் தருகின்ற வகையில் நடப்பதும் அங்க அசைவில் பாவனை செய்வதுமாகும்.

அந்நிய கண்களுக்கு அழகாகத் தெரிவதற்கு என ஒரு பெண் தன்னை என்னென்ன வகையில் அலங்கரித்துக்கொள்கின்றாளோ அவை எல்லாமே தபர்ருஜ் ஆகும் என்பதாகும். சிலவேளை ஒரு பெண் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் எண்ணத்துடன் தலையை மூடும் துணியைப் பளிச்சிடும் பல வண்ண நிறத்தில் கவர்ச்சிகரமாக அணிந்தால் அதுவும் ஜாஹிலிய்யா (அறியாமைக் கால) தபர்ருஜ் எனும் கவர்ச்சி காட்டுதலாகும்.
Previous Post Next Post