பராஅத் இரவின் சிறப்புக்கள் - ஓர் ஆய்வுப் பார்வை.

- உஸ்தாத் SM. இஸ்மாயீல் நத்வி

 பராஅத் இரவு என்ற பெயரில் முஸ்லிம்களால் ஒரு இரவு விசேடமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய இரவில் நின்று வணங்கியும், நோன்பு நோற்றும் மூன்று வகையான பிரார்த்தனைகளை 
1. உணவு விஸ்தீரணம், 
2. நீண்ட ஆயுள், 
3.எல்லாவித துன்பங்களை விட்டும் நீங்கியிருத்தல் போன்ற துஆக்களை கேட்டும் மூன்று யாசீன் ஒதியும் விஷேடமான தொழுகைகளை நடாத்தியும் இன்னும் இது போன்ற செயல்களையும் செய்கிறார்கள். பள்ளி வாசல்களிலும் விசேடமான நிகழ்ச்சிகளும் ஒழுங்கு செய்யப்படுகின்றன. வீடுகளும் அலங்கரிக்கப்பட்டு நீய்யத்து சாப்பாடு எனும் பெயரில் விஷேட உணவும் வழங்கப் படுகின்றன.,  

“யார் பராஅத் இரவில் மூன்று யாசீனை ஒதி, ரொட்டியும், வாழைப் பழத்தையும் கொடுக்கிறாரோ, அவைகள் மறுமை நாளில் குடையாக நிழல் தரும். அதாவது வாழைப்பழம் குடையின் பிடியாகவும், ரொட்டி மேல் துண்டாகவும் வரும் என்று ஒரு கதையையும் வழமையாக, பழமையாக சொல்லி வருகிறார்கள்.

பராஅத் இரவின் பெயரால் செயற்படும் காரியங்களுக்கு ஆதாரங்கள் உண்டா? என்பதை நாம் அறிந்து கொள்ளுதல் அவசியமாகும்.

ஷாஃபி மத்ஹபின் தலைசிறந்த இமாமான இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் இந்த இரவில் நூறு ரகஃஆதுகள் குறிப்பிட்டு தொழுவதும், மஃரிப் இஷா தொழுகைக்கு மத்தியில் 12 ரக்காத்துகள் தொழுவதும் (ஸலாதுர் ரகாயிப்- صلاة الرغائب) மறுக்கப்பட வேண்டிய பித்அத்துகள் ஆகும்,

இந்த இரண்டு தொழுகைகளும் ஹிஜ்ரி 386 ல் வஃபாதான அறிஞர் அபூ தாலிப்  அல் மக்கி ரஹிமஹுல்லாஹ் அவர்களுடைய பிரபலமான புத்தகமான قوت القلوب - கூதுல் குலூபி ,
இன்னும் ஹிஜ்ரி 505 ல் மரணத்த அபூ ஹாமித் அல்கஸ்ஸாலி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் பிரபலமான இஹ்யாவுல் உலூமிதீனிலும் கூடும் என்று எழுதப்பட்டிருந்தாலும் அதைக் கொண்டு யாரும் பெருமை கொள்ளக் கூடாது இது இழிவான முறையில் மறுக்கப்பட வேண்டிய அனாசாரங்களாகும் என்பதாக தனது புத்தகமான அல்மஜ்மூஃ- المجموع ல் கூறியிருக்கிறார்.

நூல்: அஸ்ஸுனனு வல்முப்த திஆது-
السنن و المبتدعات

وقال الإمام النووي في كتاب المجموع: الصلاة المعروفة بـ: صلاة الرغائب، وهي: اثنتا عشرة ركعة بين المغرب والعشاء ليلة أول جمعة من رجب، وصلاة ليلة النصف من شعبان مائة ركعة، هاتان الصلاتان بدعتان منكرتان، ولا يغتر بذكرهما في كتاب قوت القلوب وإحياء علوم الدين، ولا بالحديث المذكور فيهما، فإن كل ذلك باطل، ولا يغتر ببعض من اشتبه عليه حكمهما من الأئمة، فصنف ورقات في استحبابهما، فإنه غالط في ذلك وقد صنف الشيخ الإمام أبو محمد عبد الرحمن بن إسماعيل المقدسي كتابا نفيسا في إبطالهما، فأحسن فيه وأجاد، وكلام أهل العلم في هذه المسألة كثير جدا، ولو ذهبنا ننقل كل ما اطلعنا عليه من كلامهم في هذه المسألة لطال بنا الكلام، ولعل فيما ذكرنا كفاية ومقنعا لطالب الحق. انتهى.

رابط المادة: http://iswy.co/e147hn

1) ஸுரதுத் துகானின் ஆரம்ப வசனங்கள் பராஅத் இரவின் சிறப்புக்கான ஆதாரமாக முன்வைக்கப்படுகிறது. 

'ஹாமீம், தெளிவான இந்த வேதத்தின் மீது சத்தியமாக! இதனை நாம் பாக்கியம் நிறைந்த ஓர் இரவில் இறக்கிவைத்தோம். ஏனெனில் நாம் மக்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்ய நாடியிருந்தோம். அந்த நாளில் ஒவ்வொரு விவகாரத்துக்குமான விவேகமிக்க தீர்ப்பு பிரித்துக் கொடுக்கப்படுகின்றது. (44:1-4)

இந்த வசனத்தில் வந்துள் உள்ள 'பாக்கியம் நிறைந்த ஓர் இரவு' என்ற வார்த்தையை சிலர் ரமழான் மாதத்தில் வரும் லைதுல் கத்ர் இரவு என்றும் வேறு சிலர் ஷஃபான் மாதம 15ம் நாள் இரவு என்றும் குறிப்பிடுவர்.

தப்ஸீர் கலை இமாம்களான இப்னு அப்பாஸ், கதாதா, இப்னு ஜுபைர், முஜாஹித், இப்னு ஸைத், ஹஸன் ஆகிய அனைவரும் இந்த இரவு லைலதுல் கத்ர் இரவே என அறிவித்துள்ளனர். இதுவே சரியான கூற்று என இமாம் தபரியும் தனது தப்ஸீரில் தெரிவித்துள்ளார். இதே கருத்தை இமாம் நைஸாபூரியும் தனது தப்ஸீரில் வலியுறுத்திக் கூறிவிட்டு, இது ஷஃபான் 15ம் நாள் இரவு எனக் கருதுவோருக்கு எந்த அடிப்படையும் கிடையாது எனவும் விமர்சித்துள்ளார்.

கருத்துவேறுபாட்டிற்குரிய இந்த வசனத்தின் பலமான கருத்து அது ரமழான் மாதத்தில் உள்ள லைலதுல் கத்ர் இரவு என்பதே. அதனை பராஅத் இரவிற்கான சிறப்பை கூறும் அல்குர்ஆன் வசனம் என்று ஆதராம் காட்ட முடியாது.

2) 'ஷஃபான் மாதத்தின் பதினைந்தாம் இரவு வந்துவிட்டால் அவ்விரவில் நின்று வணங்குங்கள். பகலில் நோன்பு பிடியுங்கள். அன்றைய நாளில் சூரியன் மறைந்த பின் அல்லாஹ் கடைசி வானத்திற்கு இறங்கி வந்து 'என்னிடம் பாவமன்னிப்பு கோருபவர் உண்டா? நான் அவருக்க மன்னிப்பு வழங்குகிறேன். என்னிடம் உணவு கேட்பவர் உண்டா? நான் அவருக்கு உணவளிக்கி றேன். சோதனைக்கு ஆளாவனவர் உண்டா? அவருக்கு நிவாரணம் வழங்குகிறேன் என்று சுபுஹ் நேரம் வரை கேட்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அலி (ரழி) அறிவிக்கிறார்கள். பராத் இரவின் சிறப்பு பற்றி கூறும் இந்தச் ஹதீஸ் இப்னு மாஜா மற்றும் பைஹகீ ஆகிய கிரந்தங்களில் பதிவாகியுள்ளது.

இது ஒரு பலவீனமான அறிவிப்பாளர் வரிசையைக் கொண்ட ஹதீஸ். இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் வரும் 'இப்னு அபீ புஸ்ரா' என்பவர் பலவீனமாவர். இவர் பொய்யான ஹதீஸ்களை இட்டுக் கட்டக் கூடியவர் என இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்களும், இமாம் இப்னு முயீன் (ரஹ்) அவர்களும் குறிப்பிடுகின்றனர்.

3) ஆயிஷா (ரழி) அறிவிக்கிறார்: 'நான் நபி (ஸல்) அவர்களை இரவில் படுக்கையில் காணாததால் அவர்களைத் தேடி வெளியில் சென்றேன். அப்போது அவர்கள் மதீனா மையவாடியான 'பகீயில்' வானத்தை நோக்கி தலையை உயர்த்தியவர்களாக பிராத்தனையில் இருந்தார்கள். ஆயிஷா (ரழி) அவர்களைக் கண்டதும் ஆயிஷாவே! அல்லாஹ்வும், அவனது தூதரும் உனது விவகாரத்தில் அநீதி இழைத்துவிடுவர் என நீ பயப்படுகின்றீரா? அதற்கு ஆயிஷா (ரழி) ஒருபோதும் இல்லை. அவ்வாறு நான் எண்ணவுமில்லைல. ஆனால் நீங்கள் என்னை விட்டு விட்டு வேறு மனைவியரிடம் வந்து விட்டதாக நினைத்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள்: 'ஷஃபான் மாதத்தின் நடுப்பகுதியான 15ம் இரவில் அல்லாஹ் கடைசி வானத்திற்கு இறங்கி வந்து 'கல்ப்' கோத்திரத்திரத்திற்கு சொந்தமான ஆடுகளின் ரோமங்களின் எண்ணிக்கை அளவை விட அதிகமாக பாவமன்னிப்பு வழங்குகிறான் என்று கூறினார்கள்' ஆதாரம் திர்மிதீ, இப்னுமாஜா.

இதுவும் ஒரு பலவீனமான ஹதீஸ். இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் 'ஹஜ்ஜாஜ் இப்னு அர்தாத்' என்பவர் இடம்பெறுகிறார். இவர் தான் ஹதீஸை பெற்றதாக குறிப்பிடும் அறிவிப்பாளரான யஹ்யா இப்னு அபூ கஸீல் என்பவரிடம் எந்த செய்தியையும் செவியுற்றதில்லை. இது பலஹீனமான ஹதீஸ் என்று இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளதாக இமாம் திர்மிதி (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

4) 'ஷஃபான் மாதத்தின் பதினைந்தாம் இரவில் அல்லாஹ் தன்னுடைய எல்லா படைப்பினங்களுக்கும் பாவ மன்னிப்பு வழங்குகிறான். இணைவைப்பவனையும், (இன்னொரு அறிவிப்பில் கொலைகாரானையும்) பரஸ்பரம் குரோதம் பாரட்டுபவனையும் தவிர என நபி (ஸல்) கூறினார்கள். (இப்னுமாஜா, முஸ்னத் அஹ்மத்)

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் இப்னு லஹீஆ என்பவர் பலஹீனமானவர் என்றும் வலீத் இப்னு முஸ்லிம் என்பவர் செய்திகளை இருட்டடிப்பு செய்பவர் என்றும் ஹதீஸ் துறை அறிஞர்கள் விமர்சனம் செய்கிறார்கள். இருப்பினும் இந்த ஹதீஸின் ஏனைய அறிவிப்பாளர் வரிசையை கருத்திற் கொண்டு இது ஹஸனான ஹதீஸ் என அல்லாமா அல்பானி (ரஹ்) கூறியுள்ளார்கள்.

எனவே சுருக்கமாக கூறுவதாயின் பராத் இரவு குறித்து வந்தள்ள ஹதீஸ்கள் அனைத்தும் குறைபாடுகள் கொண்டதாகவும் ஹதீஸ் கலை வல்லுனர்களின் விமர்சனத்துக்கு உட்பட்டதாகவுமே காணப்படுகிறது. 
 
இந்த ஹதீஸ்கள் பலவீனமானது, விமர்சனங்களுக்கு உட்பட்டது என்பதை முழுமையாக ஏற்பதுடன், குறித்த அந்த இரவுக்கு ஏனைய இரவுகளைவிட ஒரு சிறப்பு இருக்கிறது என்பதனை காட்டுவதற்கு அது போதுமானதே என்ற முடிவுக்கு வரமுடியும். இது இமாம்கள் பலவீனமான ஹதீஸ்களை அணுகும் ஒரு வழிமுறையாகும். ஆனால் அமல்களின் சிறப்புக்களை கூறும் பலவீனமான ஹதீஸ்களை அடிப்படையாக கொண்டு ஒரு புதிய இபாதத்தை உருவாக்க முடியாது. நோன்பு, கியாமுல்லைல் போன்ற அமல்களை ஷரீஅத்தில் உள்ளபடி ஒருவர் அந்த இரவில் செய்கிறார் என்றால் அது ஆகுமானதே. அதை தடுக்கவேண்டிய அவசியம் கிடையாது. அமல்களின் சிறப்புக்களை கூறும் பலவீனமான ஹதீஸ்களை அடிப்படையாக கொண்டு ஷரீஆ அங்கீகாரம் வழங்கியுள்ள அமல்களை செய்வது தவறல்ல. ஆனால் ஆதாரமே இல்லாத ஒன்றை வணக்க வழிபாடாக எடுப்பதற்கு இந்த விதியை பயன்படுத்த முடியாது.

பொது மக்கள் மத்தியில் நிலவும் நம்பிக்கையும், அமல்களும்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~`

1) ஷஃபான் 15ம் நாள் இரவு ஒவ்வொரு விவகாரத்துக்குமான விவேகமிக்க தீர்ப்பு பிரித்துக் கொடுக்கப்படுகின்றது என்ற நம்பிக்கை. இது ஸுரா துகான் கூறும் பாக்கியம் நிறைந்த இரவு என்பதை ஷஃபான் பதினைந்தாம் நாள் என தவாறாக புரிந்து கொண்டதினால் வந்த விளைவே என்பதை  குறிப்பிட்டுள்ளோம்.

2) பராத் இரவில் மக்ரிப் தொழுகைக்கு பிறகு பள்ளிவாசலில் ஓதப்படும் துஆப் பிராத்தனைக்கும் விசேட தொழுகைக்கும் யார் சமூகம் தருகின்றாறோ அவர் இந்த வருடத்தில் மரணிக்கமாட்டார். அவருடைய காலக்கெடு திருத்தப்படுகிறது. அவ்வாறு சமூகம்தர தவறும் போது அவர்கள் துர்ப்பாக்கியசாலிகளாக கருதப்படுவர். இது வடிகட்டிய மூட நம்பிக்கை. இதற்கு மார்க்கத்தில் எந்த அடிப்படையும் கிடையாது.

3) அன்றைய இரவில் மஃரிப் தொழுகைக்குப் பின் மூன்று யாசீன் ஓதப்படும். ஒன்று உணவு விஸ்திரணத்திற்கு, இரண்டாவது ஆயுள் நீடிப்புக்கு, மூன்றாவது பலாய் முஸீபத் நீங்குவதற்கு. இதற்கு ஷரீஅத்தில் எந்த ஆதராமும் இல்லை. அல்குர்ஆனை எப்போதும் ஓத முடியும் என்பது உண்மைதான். ஆனால் குறிப்பிட்ட ஒரு ஸுராவை குறித்த ஒரு நாளில் விசேட அமைப்பில் ஓதுவதற்கு ஸஹீஹான ஆதாரம் தேவை. இந்த விடயத்தில் எந்த ஸஹீஹான ஆதராமும் கிடையாது.

4) பராஅத் இரவில் ஸலாதுல் கைர் என்ற பெயரில் விசேட தொழுகை இருப்பதாக மக்கள் நம்புகின்றனர். அது நூறு ரக்அத் கொண்ட தொழுகை. ஒவ்வொரு ரக்அத்திலும் பாதிஹா ஸுராவிற்குப் பிறது ஸுரதுல் இக்லாஸ் பதினொரு தடைவ ஓதவேண்டும். இதனை சுருக்கித் தொழுவதற்கான குறுக்கு வழிமுறைகளும் சமூகத்தில் இருக்கின்றன. இமாம் கஸ்ஸாலி அவர்கள் இந்த விடயத்ததை இஹ்யாவில் குறிப்பிட்டுள்ளார்கள். இந்த தொழுகையின் சிறப்புக்கள் பற்றியும் இட்டுக் கட்டப்பட்ட போலி ஹதீஸ்கள் உள்ளன. எனவே இதுவும் எந்த ஆதாரமும் அற்ற ஷரீஆ அங்கீகரிக்காத ஒரு நூதன தொழுகை முறையாகும்.
Previous Post Next Post