சிரம் சாய்த்தார்களா? இல்லையா? - அல்குர்ஆன் 2:34 விளக்கவுரை

திருகுர்ஆன் வசனம்:
நாம் வானவர்களை நோக்கி, “ஆதமுக்கு சிரம்பணியுங்கள்” என்று சொன்னபோது இப்லீஸைத் தவிர மற்ற அனைவரும் சிரம் பணிந்தனர். அவன் (சிரம் பணிய) மறுத்தான்; பெருமையும் கொண்டான்; மேலும் அவன் நிராகரிப்பவர்களைச் சார்ந்தவனாகிவிட்டான். " (2:34).

 இந்த வசனத்தின் கருத்து திருகுர்ஆனில் 7:11, 17:61, 18:50, 20:116 ஆகிய வசனங்களிலும் இடம் பெறுகிறது.

ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் படைத்து அவர்களுடைய அறிவின் மேன்மையை வானவர்களுக்கு முன்னிலையில் நிரூபித்த பின் அவர்களுக்கு வானவர்கள் அனைவரும் சிரம் பணிய வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்ட போது அவர்கள் அனைவரும் சிரம் பணிந்தனர், இப்லீஸ் மட்டும் சிரம் பணியவில்லை என்ற செய்தி இவ்வசனங்களில் கூறப்படுகிறது.

இங்கு சிரம் பணியுங்கள் என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ள வார்தையின் அரபி மூலம், أسجدوا  உஸ்ஜுதூ (சுஜூது செய்யுங்கள்) என்றுள்ளது.
அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் சுஜுது செய்யக்கூடாது என்று அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் தடுத்துள்ளார்கள். இது சத்திய இஸ்லாத்தின் தெளிவான நிலைப்பாடு.

ஆனாலும் மேற்கண்ட வசனங்களில் ஆதம் (அலை) அவர்களுக்கு சுஜூது செய்யும் படி அந்த அல்லாஹ்வே உத்தரவிட்டதால் அல்லாஹ்வுடைய உத்தரவுக்கு கட்டுப்படுதல் என்ற அடிப்படையில் வானவர்கள் சுஜூது செய்தார்கள்.

இங்கு படைக்கப்பட்டவருக்கு சுஜூது செய்யக்கூடாதே என்ற காரணத்தினால் வானவர்களின் சுஜூது குறித்து இரு தரப்பினரால் தவறான வியாக்கியானங்கள் கொடுக்கப்பட்டுள்ளன, அந்த வியாக்கியானங்களில் உள்ள குறைபாடுகளையும் இதனை சரியாக புரிந்து கொள்வது எவ்வாறு என்பதையும் பார்ப்போம்.

ஒரு தரப்பின் வியாக்கியானம்:

ஆதம் (அலை) அவர்களுக்கு வானவர்கள் சுஜூது செய்தார்கள் என்பதன் கருத்து அவர்களெல்லாம் அவருக்கு பணிவை வெளிப்படுத்தினார்கள் என்பதுதான். நேரடியாக நாம் புரியும் விதத்தில் அவர்கள் சுஜூது செய்யவில்லை.

இவ்வாறு வியாக்கியானம் கூறும் இவர்கள் தங்கள் கருத்துக்கு ஆதாரமாக கீழ்வரும் வசனத்தை காட்டுகிறார்கள். அது:

வானங்களிலுள்ளவர்களும் பூமியிலுள்ளவர்களும் சூரியனும் சந்திரனும் நட்சத்திரங்களும் மலைகளும் மரங்களும் பிராணிகளும் மனிதர்களில் அதிகமானோரும் அல்லாஹ்வுக்கு சுஜூது செய்கின்றன என்பதை நீர் பார்க்கவில்லையா? (22:18)

இங்கு சொல்லப்பட்டுள்ளவையெல்லாம் அல்லாஹ்வுக்கு பணிகின்றன என்ற கருத்திலேயே அவை சுஜூது செய்கின்றன என்று கூறப்படுகிறது. நாம் செய்வது போன்ற சுஜூது செய்கின்றன என்ற கருத்திலல்ல.

பணிதல் என்ற கருத்திலேயே 13:15, 16:48,49 வசனங்களிலும் சுஜூது என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு இவர்கள் வியாக்கியனம் கூறுகிறார்கள்.
மேற்கண்ட வசனங்களில் சுஜூது என்பது பணிதல் என்கிற கருத்தில் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் இதை வைத்து ஆதம் நபிக்கு வானவர்கள் சுஜூது செய்ததும் இந்த அர்த்தத்தில் தான் என்று கூறுவது தவறாகும். 

ஏனென்றால் நாம் புரிவது போன்று நேரடியான சுஜூது தான் இதன் கருத்து என்பதற்கு குர்ஆனிலும் ஹதீஸிலும் தெளிவான ஆதாரம் உள்ளது.
அல்லாஹு தஆலா ஆதம் (அலை) அவர்களுக்கு வானவர்கள் சுஜூது  செய்ய வேண்டுமென்று கட்டளையிட்டது பற்றி கூறுவது:

“… நான் அவரைச் செவ்வைப்படுத்தி, எனது ரூஹிலிருந்து அவருக்குள் ஊதும் போது அவருக்கு சுஜூது செய்தவர்களாக விழுங்கள் என்று கூறினான்”. (15:29)

இதே, சுஜூது செய்தவர்களாக விழுங்கள் என்ற வாக்கியம் 38:72 லும் இடம் பெறுகிறது.

இதன் மூலம் வானவர்கள் சுஜூது செய்தனர் என்பது யதார்த்தமான, நாம் செய்வது போன்ற சுஜூது தான் என்பதை புரியலாம்.

இது ஹதீஸிலும் தெளிவாக கூறப்பட்டுள்ளது. 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஆதமின் மகன் ஸஜ்தாவின் வசனத்தை ஓதி சுஜூது செய்தால் ஷைத்தான் அழுதவனாக அவனிடமிருந்து விலகிச் செல்வான். தொடர்ந்து , நாசமே! ஆதமின் மகன் சுஜூது செய்யும் படி கட்டளையிடப்பட்டான். அவன் சுஜூது செய்து விட்டான். அதனால் அவனுக்கு சொர்க்கம்! நான் சுஜூது செய்யும் படி கட்டளையிடப்பட்டேன் ஆனால் நான் மறுத்தேன் அதனால் எனக்கு நரகம்! என்று கூறுவான்."
இந்த நபிமொழி இப்னுமாஜா (1052), அஹ்மத் (9713), இப்னு குஸைமா (549) இப்னு ஹிப்பான் (2759) உள்ளிட்ட பல நூல்களிலும் இடம் பெறுகிறது.

இதன் மூலம் ஷைத்தான் ஆதம் (அலை) அவர்களுக்குச் செய்ய மறுத்த சுஜூது, நாம் செய்வது போன்ற சுஜூது தான் என்பது தெள்ளத் தெளிவாக புரிகிறது.

அடுத்து, வானவர்கள் ஆதம் (அலை) அவர்களுக்கு யதார்த்தமான சுஜூது செய்யவில்லை என்று கூறும் மற்றொரு தரப்பினர் கொடுக்கும் வியாக்கியானத்தை பார்ப்போம், அது:

“வானவர்கள் ஆதம் (அலை) அவர்களுக்கு சுஜூது செய்தார்கள் என்பதன் கருத்து, ஆதம் (அலை) அவர்களை கிப்லாவாக மட்டும் வைத்து அல்லாஹ்வுக்கே சுஜூது செய்தார்கள்”.
இந்த வியாக்கியானம், “ஆதமுக்கு சுஜூது செய்யுங்கள்” என்று சாதாரணமாக சொல்லப்படும் வாசனங்களை வைத்து சொல்லப்படுகிறது. (இப்படிப்பட்ட வசனங்களுக்கும் இந்த வியாக்கியானம் முரணானது தான்.) இவ்வாறு சொல் பவர்கள், அந்த சுஜூது ஆதமுக்குத்தான் என்று அழுத்தம் திருத்தமாக சொல்லும் வசனங்களை கவனிக்கத் தவறிவிட்டார்கள்.

கீழ்வரும் திருகுர்ஆன் வசனங்களை படியுங்கள்:

இப்லீஸே! நான் என்னிரு கைகளால் படைத்தவருக்கு ஸுஜூது செய்வதை விட்டும் உன்னைத் தடுத்தது எது? பெருமையடிக்கிறாயா? அல்லது நீ உயர்ந்தவர்களில்  (ஒருவனாக) ஆகிவிட்டாயா? என்று (அல்லாஹ்) கேட்டான்.

நானே அவரைவிட மேலானவன்; (ஏனெனில்) என்னை நீ நெருப்பிலிருந்து படைத்தாய்; ஆனால் அவரையோ நீ களிமண்ணிலிருந்து படைத்தாய் என்று (இப்லீஸ்) கூறினான். (38:75,76)

மேற்கண்ட வசனங்களில் அல்லாஹ் தன்னிருகைகளால் படைத்த ஆதமுக்குத்தான் சுஜூது செய்யும் படி கட்டளையிட்டான் என்பதும் ஆதமை விட தான் மேலானவன் என்ற வாதத்தின் அடிப்படையில் ஆதமுக்கு சுஜூது செய்வதைத் தான் இப்லீஸ் மறுத்தான் என்பதும் தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

அதே போல் அல்லாஹ் படைத்த மனிதருக்கு, தான் சுஜூது செய்வதற்கில்லை என்று இப்லீஸ் கூறியதாக 15:33 வசனத்தில் கூறப்பட்டுள்ளது.

ஆக ஆதமுக்கு சுஜூது செய்யுங்கள் என்று வானவர்களிடம் கூறப்பட்டதின் கருத்து நேரடியாக ஆதமுக்கே சுஜூது செய்ய வேண்டும் என்பது தான் என்று புலனாகிறது.

இது வரை நாம் கண்ட விளக்கங்கள் மூலம் வானவர்கள் ஆதமுக்கு செய்த சுஜூது தொடர்பாக கொடுக்கப்படும் மேற்கண்ட இரண்டு வியாக்கியானங்களும் தவறானவை என்று புரிந்து கொள்கிறோம்.

சரியான விளக்கம்:

சுஜூது செய்வது (சிரம் சாய்த்து மரியாதை செய்வது) மனிதர்கள் தங்களுக்குள் செய்து கொள்ளக் கூடாது என்றிருந்தாலும் அல்லாஹ்வே அதனைச் செய்யும் படி கட்டளையிடும் போது அதைச் செய்யத் தான் வேண்டும். அப்போது அது அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு நடந்ததாகவே ஆகும்.

நபி (ஸல்) அவர்களுக்கு முன்னர் இவ்வாறு மனிதர்களுக்கு சுஜூது செய்து மரியாதை செய்வது அனுமதிக்கப்பட்டதாக இருந்துள்ளது. யூசுஃப் அலை அவர்களின் சரித்திரத்தில் அல்லாஹ் கூறுவது:
அவர் தம் தாய் தந்தையரை அரியாசனத்தின் மீது உயர்த்தி (அமர்த்தி)னார்; அவர்கள் (எல்லோரும்) அவருக்கு (மரியாதை செலுத்தியவர்களாக) சிரம் பணிந்து வீழ்ந்தனர். (12:100)

இங்கு சிரம் பணிந்தனர் என்று வெறுமனேசொல்லாமல் வீழந்தனர் என்று அல்லாஹ் சொல்லுகிறான். இதிலிருந்து அவர்கள் விழுந்து சுஜூது செய்துள்ளனர் என்பது புலனாகிறது.

நமது மார்க்கத்தில் இவ்வாறு செய்வது அறவே தடுக்கப்பட்டுள்ளது. நபி (ஸல்) அவர்களுக்கு சுஜூது செய்ய வேண்டுமென்று நபித்தோழர்கள் அனுமதி கேட்ட போது வெவ்வேறு சந்தர்ப்பஙகளில் நபி (ஸல்) அவர்கள் அதனை அறவே தடுத்துவிட்டார்கள்.
(பார்க்க: இப்னு மாஜா (1853), இப்னுஹிப்பான் (4162), அஹ்மது (12614)).

ஆகவே யாரும் யாருக்கும் சிரம் தாழ்த்தி மரியாதை செய்வது கூடவே கூடாது.

மேலும் மலக்குமார்கள், ஆதம்(அலை) அவர்களுக்கு இறைவனின் கட்டளைப்படி நாம் எதார்த்தமாக புரிந்துகொள்வது போலவே விழுந்து ஸஜ்தா செய்தார்கள்.
 
 -M. அப்துர்ரஹ்மான் மன்பஈ, MA. ,M.phil
أحدث أقدم