நாய் வளர்ப்பு..


நாய் என்றாலே அதையொரு தீண்டத் தகாத எதிரியைப் போல் வெறுப்போடு பார்ப்பதும், அதன் காலடி பட்ட இடமெல்லாம் தீட்டுப் பட்டவை போல் கருதுவதுமான ஒரு மனநிலை மார்க்கப் பற்றுள்ளோர் மத்தியில் பரவலாக நிலவுவதை நாம் பார்க்கலாம்.
.
இந்நிலைக்குக் காரணம், நாயைப் பக்கத்தில் சேர்க்கக் கூடாதெனும் கருத்துப்பட நபி (ஸல்) கட்டளையிட்டிருக்கும் சில ஹதீஸ்கள் தாம் என்று கூறினால், அது மிகையில்லை.
.
இப்படி ஒருபுறம் நாயை நம்மிடமிருந்து தூரமாக்கும் ஹதீஸ்கள் பதிவாகியிருக்கும் அதே வேளை, அதே நாயை நம் அன்றாடத் தேவைகளுக்கு உபயோகப் படுத்திக் கொள்ள அனுமதிக்கும் வேறு பல ஹதீஸ்களும் இன்னொரு புறம் பதிவாகியிருப்பதைப் பார்க்க முடிகிறது.
.
ஒன்றுக்கொன்று மாறுபட்ட இவ்விரு மார்க்க நிலைபாடுகளுக்கும் இடையிலுள்ள சம்பந்தங்களைச் சரிவரப் புரிந்து கொள்ள நேரம் ஒதுக்க விரும்பாத பல முஸ்லிம்கள், நமக்கெதுக்கு வம்பு? என்பது போல், மொத்தமாகவே நாய்களை வெறுத்து ஒதுக்கி விடுவது வழமை.
.
அனைத்திலும் நடுநிலை பேணும் விதமாகவே இஸ்லாம் எனும் இம்மார்க்கம் அமைந்துள்ளது. எந்தவொரு விடயத்தையும் அளவு கடந்து விரும்பவோ, அல்லது வெறுக்கவோ ஒரு முஸ்லிமை இறைவன் அனுமதிக்கவில்லை.
.
இந்த அடிப்படையில், நாய் எனும் இறைவனின் படைப்போடு ஒரு முஸ்லிமுக்கு இருக்க வேண்டிய தொடர்புகளையும் மார்க்கம் வரையறுத்துள்ளது. அந்த வரையறைகளைத் தாண்டி நாயோடு கொஞ்சிக் குலாவுவதை மார்க்கம் தடுத்துள்ளது.
.
அதே நேரம், மார்க்கத்தின் இந்தத் தடையையே ஒரு காரணமாக வைத்து, நாய் இனத்தையே வெறுப்போடு நடத்துவதும், எங்கு பார்த்தாலும் அதைத் துன்புறுத்த முனைவதும் வரம்பு மீறும் காரியங்கள். வரம்பு மீறுவோரை இறைவன் ஒருபோதும் நேசிப்பதில்லை.
.
தாகத்தில் தவித்த ஒரு நாய் மீது இரக்கப் பட்டு, அதற்குத் தண்ணீர் கொடுத்த ஒரே காரணத்துக்காக, ஒரு விபச்சாரியையே மன்னித்து சுவர்க்கத்தில் நுழைவித்தவன் இறைவன். எனவே, நாயைத் தூரமாக்குவதையே சாக்காக வைத்து அதைக் கொடுமை செய்வதை இஸ்லாம் ஊக்குவிக்கவில்லை.
.
ஒவ்வொரு மனிதனும் தன் அன்றாட வாழ்வில் அடிக்கடி எதிர்கொள்ள நேரும் மிருகங்களில் நாயும் ஒன்று. எனவே, அதனுடன் பழகுவது தொடர்பான மார்க்க வரையறைகளையும், அவற்றுக்கான காரணங்களையும் ஒவ்வொரு முஸ்லிமும் தெளிவாக அறிந்திருப்பது அவசியம். இந்த அவசியத்தைக் கருத்திற் கொண்டே இந்த ஆக்கம் எழுதப் படுகிறது.
.
இதற்கமைய, நாய்கள் குறித்த மார்க்க நிலைபாடுகளையும், அவற்றுக்கான காரணங்களையும் இனி ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
.
நாய் வளர்ப்பின் கட்டுப்பாடுகள்:
.
மதீனாவில் நபி (ஸல்) வாழ்ந்த ஆரம்ப காலப் பகுதிகளில், மஸ்ஜிதுன் நபவியைச் சுற்றி நாய்களின் நடமாட்டம் அதிகம் இருந்துள்ளதை ஹதீஸ்களில் பார்க்க முடிகிறது.
.
உதாரணத்துக்கு, பள்ளிவாயிலுக்கு உள்ளே அவ்வப்போது வந்து போகும் நாய்கள், உள்ளே தரையில் சிறுநீர் கழித்து விட்டும் செல்வதுண்டு. இது குறித்து நபியவர்கள் அன்று கடுமையான நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை. மேலும், நாய்கள் சிறுநீர் கழித்து விட்டுச் செல்லும் மண் தரையைச் சுத்தப் படுத்தவும் நபியவர்கள் உத்தரவிடவில்லை. மண்ணில் உறிஞ்சப்படும் நாய்களின் சிறுநீர் அதுவாகவே காய்ந்து விடுவதே அன்றைய வழமையாக இருந்தது. (ஆதாரம்: புகாரி 174 / அபூதாவூத் 382)
.
இது போக, அன்றைய மதீனா வாசிகள் தம் அன்றாடத் தேவைகளுள் பலவற்றுக்காக நாய்களை வளர்க்கும் வழக்கம் கொண்டவர்களாகவே இருந்தார்கள்.
.
விவசாய நிலங்கள், பன்னைகள், மற்றும் வியாபாரத் தளங்கள் போன்றவற்றைக் காவல் காப்பதற்கென்று சிலர் நாய்களை வளர்த்து வந்தார்கள்.
.
மேலும் சிலர், தம் ஆடுகளை மேய்ப்பதற்கு இடையர்களைப் பணிக்கு அமர்த்துவதற்குப் பதிலாக, நாய்களைப் பயிற்றுவித்து, அந்த நாய்களின் பொறுப்பில் மந்தைகளை மேய விடுவோராகவும் இருந்துள்ளார்கள்.
.
இன்னும் சிலருக்கு வேட்டையாடுவதே பிரதான தொழிலாக இருந்ததால், வேட்டைக்கென்றே பிரத்தியேகமாகப் பயிற்றுவிக்கப் பட்ட நாய்களை அவர்கள் வைத்திருந்தார்கள்.
.
இது போன்ற தேவைகளுக்காக அன்று மதீனா வாசிகள் நாய்களை வளர்த்ததை நபியவர்கள் ஒருபோதும் தடை செய்ததில்லை.
(ஆதாரம்: புகாரி2322/ முஸ்லிம் பாடம் 10, ஹதீஸ் 3814 / இப்னுமாஜா 3324 / நஸாஈ 4279 / திர்மிதி 1488 / நஸாஈ 336 / நஸாஈ 4277 / அபூதாவூத் 74)
.
இவ்வாறு தொழில் சார்ந்த அன்றாடத் தேவைகளுக்கு நாய்களை வளர்க்க ஒருபுறம் தாராளமாக அனுமதித்த நபியவர்கள், மறுபுறம் இதற்கு நேர்மாரான ஒரு நிலைபாட்டோடு, வீடுகளில் செல்லப் பிராணிகளாக நாய்களை வளர்ப்பதை முற்றாகத் தடை செய்தார்கள். இந்தத் தடையை நபியவர்கள் இரண்டு வடிவங்களில் விதித்திருந்தார்கள்.
.
தடை 1:
எவரது வீட்டில் நாய் வளர்க்கப் படுகிறதோ அவரது நல்லமல்களில் இருந்து தினமும் இரண்டு கீராத் அளவு நன்மைகள் குறைக்கப் பட்டுக் கொண்டே இருக்கும். (ஆதாரம்: புகாரி 2322 / புகாரி 5480 / நஸாஈ 4291 / அபூதாவூத் 2844 / திர்மிதி 1487 / நஸாஈ 4286)
.
தடை 2:
நாய் இருக்கும் வீட்டுக்குள் அருள் சார்ந்த வானவர்கள் பிரவேசிப்பதில்லை. (ஆதாரம்: புகாரி 3322 / புகாரி 5949 / நஸாஈ 4276 / நஸாஈ 5347 / அபூதாவூத் 4157)
.
இந்தத் தடைகளுக்கு மேலதிகமாக, வீடுகளில் புழங்கும் பாத்திரங்களில் வாய் வைக்க நாயை அனுமதிப்பதிலும் நபியவர்கள் கடுமையான நிலைபாட்டைக் கடைப்பிடித்தார்கள். இதற்கமைய, நாயின் எச்சில் பட்ட பாத்திரங்களை ஏழு தடவை நீரைக் கொண்டும், எட்டாவது தடவை மண்ணைக் கொண்டும் கழுவ வேண்டுமென்றும் நபி (ஸல்) கூறினார்கள்.
(ஆதாரம்: புகாரி 172 / முஸ்லிம் 280 (பாடம் 2, ஹதீஸ் 551) / நஸாஈ 336 / இப்னுமாஜா 395 / அபூதாவூத் 74 / திர்மிதி 91)
.
ஒருபுறம் காவல், வேட்டை, ஆடு மேய்ப்பு என்று தொழில் சார் தேவைகளுக்கு நாய் வளர்ப்பதைப் பூரணமாக அனுமதித்த நபியவர்கள், மறுபுறம் வீட்டில் நாய் வளர்ப்பதற்கும், பாத்திரங்களில் வாய் வைக்க அதை விடுவதற்கும் கடுமையான தடைகளை விதித்திருப்பதற்கான காரணம் தான் என்ன?
.
இதற்கான காரணங்களை இரண்டு அடிப்படைகளில் நாம் புரியலாம்.
.
காரணம் 1: நாயின் அசுத்தம்:
.
நாயின் முழு உடலுமே அசுத்தம் எனும் நிலைபாட்டை உறுதிப்படுத்தும் எந்த ஆதாரங்களும் மார்க்கத்தில் இல்லை.
.
அதே நேரம், வேறெந்த உயிரினங்களிலும் இல்லாத, தனித்துவமான ஒரு வகை அசுத்தம் நாயின் எச்சிலில் இருப்பதாகவே மார்க்கம் கூறுகிறது. இதனால் தான், அது வாய் வைத்த பாத்திரங்களை ஏழு தடவை நீரைக் கொண்டும், எட்டாவது தடவை மண்ணைக் கொண்டும் அவசியம் கழுவ வேண்டுமென்று நபி (ஸல்) பணித்துள்ளார்கள்.
.
இப்படிக் கூறியதும், உடனே, நாயின் வாயிலிருக்கும் கிருமிகளையே அதன் அசுத்தமாக இஸ்லாம் கூறுகிறதென்று நாமாக இஷ்டத்துக்கு மனோ இச்சையைப் புகுத்தி அறிவியல் விளக்கம் கொடுப்பதும் தவறு. இது போன்ற அடிப்படைகளில் நாயின் அசுத்தத்தை அடையாளப் படுத்தும் எந்த மார்க்க ஆதாரங்களும் இல்லை.
.
உண்மையில், நாயின் வாயிலிருக்கும் அசுத்தமாக மார்க்கம் அடையாளப் படுத்துவது, மலம் / சலம் போன்ற பௌதீகப் பதார்த்தங்களை அடிப்படையாகக் கொண்டதோர் அசுத்தமும் கிடையாது. அது ஒரு தனித்துவமான அசுத்தம். எனவே தான், அதை நீக்குவதற்கும் தனித்துவமான ஒழுங்குகளைக் கடைப்பிடிக்குமாறு மார்க்கம் வலியுறுத்துகிறது.
.
நாயின் அசுத்தத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளும் வசதிகள் நம்மிடம் இல்லாத போதும், கிட்டத்தட்ட அது எந்த வகையாஅன அசுத்தம் என்பதைப் புரிந்து கொள்ள ஓர் எளிய நடைமுறை உதாரணம் கூறலாம்.
.
குளிப்பு கடமையானவர்களது உடல்கள் அசுத்தமடைந்து விடுவதாகவே மார்க்கம் கூறுகிறது. இந்த அசுத்தம் நீங்க வேண்டுமென்றால், அவர்கள் குளித்தே ஆக வேண்டும். குளிக்க முடியாத நிலையில் மண்ணைக் கொண்டு தயம்மும் செய்து தமது அசுத்தத்தை அவர்கள் தற்காலிகமாக நீக்கிக் கொள்ளலாம்.
.
இந்த மார்க்கச் சட்டத்துக்குக் கிருமிகளை அடிப்படையாகக் கொண்டு நாம் அறிவியல் விளக்கம் தேடப் போனால், கடைசி வரை விடை கிடைக்காது. காரணம், ஜனாபத் மூலம் ஏற்படும் அசுத்தம் என்பது பௌதீக ரீதியான உடல் அசுத்தம் அல்ல. அது நம் அறிவுக்குப் புலப்படாத வேறொரு வகை அசுத்தம். இதனால் தான் கொஞ்சம் மண்ணைத் தொட்டுத் தயம்மும் செய்யும் போது கூட அந்த அசுத்தம் நீங்குகிறது.
.
இதே போன்றதோர் அடிப்படையிலேயே நாயின் வாயிலுள்ள அசுத்தத்தையும் நாம் புரிய வேண்டும். அந்த அசுத்தத்தைப் போக்க ஏழு தடவை நீரும், எட்டாவது தடவை மண்ணும் தேவைப் படுவதில் கூட இந்த யதார்த்தம் நமக்குப் புரிகிறது.
.
மண்ணைக் கொண்டு கழுவுவதை வைத்து மட்டும் இவ்விளக்கத்தை நாம் கூறவில்லை. நாயின் அசுத்தம் நமது பௌதீக நிதர்சனங்களுக்கும் அப்பாற்பட்டது என்பதைப் புரிவதற்கு வேறு விதமான மார்க்க ஆதாரங்களும் உண்டு.
.
உதாரணத்துக்கு, வேட்டை நாய்களைப் பயன்படுத்தும் விடயத்தில் மார்க்கம் வரையறுத்துள்ள சட்டங்கள் அனைத்தும், நாயின் வாயிலிருப்பது வெறும் பௌதீக அசுத்தம் கிடையாது எனும் உண்மையைப் பின்வருமாறு நமக்கு உறுதிப் படுத்துகின்றன.
.
அல்லாஹ்வின் பெயரைக் கூறி வேட்டைக்கு ஏவி விடப்படும் நாயினால் கவ்விப் பிடிக்கப்படும் வேட்டைப் பிராணி நஜீஸ் கிடையாது. அது சுத்தமான ஹலாலான ஆகாரமாகும். வேட்டை நாயின் பிடியில் வேட்டைப் பிராணி செத்து விட்டாலும், அதை நாம் உண்ண முடியும்.
(ஆதாரம்: புகாரி 175 / முஸ்லிம் பாடம் 21, ஹதீஸ் 4733 / முஸ்லிம் பாடம் 21, ஹதீஸ் 4734 / நஸாஈ 4269 / நஸாஈ 4272 / இப்னுமாஜா 3329 / அபூதாவூத் 2848 / திர்மிதி 1470 )
.
அதே நேரம், வேட்டை நாய் விரட்டிப் பிடித்த பிராணிக்குப் பக்கத்தில் வேறொரு நாய் கூட இருப்பதை நாம் கண்டால், அந்த வேட்டைப் பிராணியை உண்ன நமக்கு அனுமதியில்லை. அல்லாஹ்வின் பெயர் கூறப்படாத அடுத்த நாயும் அந்த வேட்டைப் பிராணியைப் பிடித்திருக்கலாம் எனும் சந்தேகமே இந்தத் தடைக்குக் காரணம்.
(ஆதாரம்: முஸ்லிம் பாடம் 21, ஹதீஸ் 4734 / நஸாஈ 4272 / இப்னுமாஜா 3329 / முஸ்லிம் பாடம் 21, ஹதீஸ் 4737 / திர்மிதி 1470 / நஸாஈ 4274)
.
மேலும், வேட்டைப் பிராணியைப் பிடித்த வேட்டை நாயே அதை உண்ண ஆரம்பித்து விட்டால், அதைப் பறித்துண்ணக் கூடாதென்றும் நபியவர்கள் தடுத்தார்கள். அப்பிராணியை அந்த நாய் தனது பசிக்காகவே பிடித்தது என்பதால், அதை அந்த நாய் உண்பதே சரி என்று நபியவர்கள் இதற்குக் காரணமும் கூறினார்கள்.
(ஆதாரம்: முஸ்லிம் பாடம் 21, ஹதீஸ் 4734 / நஸாஈ 4272 / இப்னுமாஜா 3329 / அபூதாவூத் 2848 / திர்மிதி 1470 / நஸாஈ 4274)
.
அதே நேரம், அல்லாஹ்வின் பெயர் கூறி ஏவி விடப்பட்ட நாய், வேட்டைப் பிராணியைப் பிடித்து, அதைத் தனது பசி தீர சாப்பிட்டு முடித்த பிறகு மிச்சமிருப்பதை நாம் விரும்பினால் சாப்பிடலாம் என்றும் நபியவர்கள் கூறியுள்ளார்கள்.
(ஆதாரம்: முவத்தா மாலி பாடம் 25, ஹதீஸ் 1058 /  முவத்தா மாலிக் பாடம் 25, ஹதீஸ் 1060)
.
ஆக மொத்தத்தில், நாயின் வாயிலிருக்கும் அசுத்தம் என்பது கிருமிகளையோ, பௌதீக அசுத்தங்களையோ குறிப்பது அல்ல என்பதை இந்த மார்க்க சட்டங்கள் அனைத்தும் நமக்குத் தெளிவு படுத்துகின்றன.
.
அதாவது, பிஸ்மில்லாஹ் எனும் ஒரு வார்த்தை கூறப்பட்ட அடுத்த நொடியிலேயே வேட்டை நாயின் வாயிலிருக்கும் அசுத்தம் முற்றாக நீங்கி விடுகிறது. இதன் விளைவாக, வேட்டையாடப்படும் பிராணியின் உடலில் அந்த நாயின் எச்சில் எவ்வளவு ஊறினாலும், அதன் சதைப் பகுதிகளில் அந்த நாயின் பற்கள் எவ்வளவு ஆழத்துக்கு இறங்கினாலும், அதை நாம் தாராளமாக உண்ணலாம். ஏனெனில், பிஸ்மில்லாஹ் கூறப்பட்ட அந்தச் சந்தப்பத்தில் மட்டும் அந்த நாயின் எச்சிலில் எந்த அசுத்தமும் இருப்பதில்லை.
.
இதிலிருந்து, நாயின் வாயிலுள்ள நஜீஸ் எனும் அம்சம், பௌதீக ரீதியான அசுத்தம் கிடையாது. அதற்கும் கிருமிகளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அதைத் தீண்டுவோரெல்லாம் நோய்வாய்ப் பட்டு விடுவார்கள் என்றும் கிடையாது. குளிப்புக் கடமையானோரிடம் ஏற்படுவது போல், அல்லாஹ்வின் பார்வையில் அசுத்தமாகக் கருதப்படும் வேறேதோ ஓர் அம்சமே நாயின் வாயிலுள்ள நஜீஸ்.
.
எனவே, இந்த அசுத்தத்துக்கு அறிவியல் விளக்கம் கூறப் புகுவதே அடிப்படையில் தவறு. அப்படியே அறிவியல் அர்த்தம் கொடுத்தாலும், அது நகைப்புக்குரிய அர்த்தமாகவே மாறி விடும். ஏனெனில், தினமும் நாய்களின் எச்சிலில் குளிக்கும் அளவுக்கு அவற்றோடு குடித்தனம் நடத்தும் கோடிக் கணக்கான முஸ்லிம் அல்லாத மக்கள் உலகில் வாழ்கிறார்கள். 

அறிவியல் விளக்கம் கூறுவோரின் காரணங்கள் உண்மையாக இருந்திருந்தால், நாய் வளர்க்கும் கோடிக் கணக்கான மக்கள் இந்நேரத்துக்கு நோய்வாய்ப் பட்டும், செத்தும் போயிருக்க வேண்டும். நிதர்சனத்தில் அப்படி எதுவும் இல்லை. இதிலிருந்தும், நாயின் அசுத்தம் என்பது பௌதீக ரீதியிலானது இல்லை என்பது நிரூபனமாகிறது.
.
காரணம் 2: நாய்க்கும் ஜின்களுக்கும் உள்ள தொடர்புகள்:
.
அசுத்தத்தைக் காரணம் காட்டி நாய்களைத் தூரமாக்கச் சொன்னதற்கு மேலதிகமாக, மதீனாவிலிருந்த நாய்களைக் கொல்லுமாறு நபி (ஸல்) ஏவியதாகவும் பல ஹதீஸ்களைப் பார்க்க முடிகிறது.
(ஆதாரம்: புகாரி 3323 / முஸ்லிம் பாடம் 10, ஹதீஸ் 3814 / இப்னுமாஜா 3322 / நஸாஈ 4276 / அபூதாவூத் 2846 / முஸ்லிம் பாடம் 10, ஹதீஸ் 3809 / அபூதாவூத் 4157)
.
நபியின் இந்தக் கட்டளையை நிறைவேற்றப் புறப்பட்ட ஸஹாபாக்கள், கண்ணில் பட்ட நாய்களையெல்லாம் கொல்ல ஆரம்பித்தார்கள். இதனால், வேட்டைக்கும், ஆடு மேய்க்கவும், காவலுக்கும் பயிற்றுவிக்கப் பட்ட சில நாய்கள் கூட கொல்லப் பட்டன.
.
இது குறித்து நாய்களின் உரிமையாளர்கள் நபியிடம் முறையிடவே, வேட்டைக்கும், காவலுக்கும், மேய்ப்புக்கும் பயிற்றுவிக்கப் பட்ட நாய்களை விடுத்து, உரிமையாளர் இல்லாமல் ஊருக்குள் சுற்றும் தெரு நாய்களை மட்டும் கொல்லுமாறு மேலதிக அறிவுறுத்தல்களை நபியவர்கள் வழங்கினார்கள்.
(ஆதாரம்: முஸ்லிம் பாடம் 2, ஹதீஸ் 551 / முஸ்லிம் பாடம் 10, ஹதீஸ் 3814 / இப்னுமாஜா 3324 / நஸாஈ 4279 / நஸாஈ 4284 / திர்மிதி 1488 / நஸாஈ 336 / நஸாஈ 4277 / அபூதாவூத் 74 / அபூதாவூத் 4157 )
.
தெரு நாய்களைக் கொல்வதிலும், குறிப்பாகக் கறுப்பு நிற நாய்களையே அவசியம் கொல்ல வேண்டுமென்று நபி (ஸல்) பணித்தார்கள்.
(ஆதாரம்: முஸ்லிம் பாடம் 10, ஹதீஸ் 3811 / முஸ்லிம் பாடம் 10, ஹதீஸ் 3813 / திர்மிதி 1489 / அபூதாவூத் 2846 / அபூதாவூத் 2845)
.
மதீனாவில் ஆரம்ப காலங்கள் நாய்களோடு மென்மையான போக்கைக் கடைப்பிடித்த நபியவர்கள், திடீரென்று, தெருவில் சுற்றும் எல்லாக் கறுப்பு நாய்களையும் கொல்லுமாறு கட்டளை பிறப்பித்ததன் பின்னணி என்ன? இந்தக் கேள்விக்கு இரண்டு பதில்கள் உண்டு.
.
ஆரம்ப காலங்களில், வீடுகளில் நாய் வளர்ப்பதை அல்லாஹ் தடை செய்திருக்கவில்லை. இதற்கமைய, நபி (ஸல்) அவர்களது பேரப் பிள்ளை ஹஸன் (ரழி) அவர்கள், தனது செல்லப் பிராணியாக வீட்டில் ஒரு நாய்க் குட்டியை வளர்த்து வந்தார்கள். ஒரு நாள், வாக்களித்த உரிய நேரத்தில் வீட்டுக்கு வராமல் வெளியே காத்துக் கொண்டிருந்த ஜிப்ரீல் (அலை) அவர்களிடம், அதற்கான காரணத்தை நபி (ஸல்) வினவிய போது, நாய்களும், உருவத் திரைச் சீலைகளும் உள்ள வீடுகளுக்குள் வானவர்கள் நுழைவதில்லை என்று ஜிப்ரீல் (அலை) காரணம் கூறினார்கள். உடனே நபியவர்கள் வீட்டிலிருந்த திரைச் சீலைகளை அகற்றியதோடு, கட்டிலுக்கு அடியிலிருந்த ஹஸன் (ரழி)யின் நாய்க் குட்டியையும் வெளியே போட்டார்கள். அதன் பிறகே ஜிப்ரீல் (அலை) வீட்டினுள் நுழைந்தார். இந்தச் சம்பவம் நடந்த மறு தினத்திலேயே நாய்களைக் கொல்லுமாறு பொதுவான கட்டளையை நபியவர்கள் பிறப்பித்தார்கள்.
(ஆதாரம்: புகாரி 3227 / அபூ தாவூத் 4157 / அபூ தாவூத் 4158)
.
அதே நேரம், வேட்டைக்கும், காவலுக்கும், மேய்ப்புக்கும் பழக்கப்பட்ட நாய்களை விட்டு, கறுப்பு நாய்களைப் பிரத்தியேகமாகக் கொல்லுமாறு நபியவர்கள் பிறப்பித்த இரண்டாவது கட்டளைக்கு வேறொரு காரணமும் உண்டு.
.
ஜின்கள் எனும் படைப்பில் பல்வேறு இனங்கள் உண்டு. இதை நாம் ஏற்கனவே வேறொரு தொடரில் விரிவாகப் பார்த்தோம். அதில் குறிப்பாக, பாம்பு, மற்றும் நாய் ஆகியவற்றின் வடிவில் மக்களிடையே நடமாடும் சில ஜின் இனங்களும் உண்டு.
(ஆதாரம்: முஷ்கிலுல் அஸார் 2473 / தபராணி)
.
இவ்வாறான விலங்கு வகை சார்ந்த பல ஜின்கள், ஃகந்தக் யுத்தத்தம் நடந்த காலப் பகுதியில் மதீனா நகருக்குள் பரவலாக ஊடுறுவ ஆரம்பித்தன. அதில், பாம்பு வடிவில் ஊருக்குள் வந்த சில ஜின்கள் இஸ்லாத்தைத் தழுவி முஸ்லிமாகி விட்டன. எனவே, அவற்றைக் கொல்ல வேண்டாமென்று நபியவர்கள் பிரத்தியேகக் கட்டளை போட்டார்கள்.
(ஆதாரம்: முஸ்லிம் பாடம் 26, ஹதீஸ் 5557 / முவத்தா மாலிக் பாடம் 54, ஹதீஸ் 1798)
.
அதே நேரம், இஸ்லாத்தைத் தழுவாத ஏனைய ஜின்கள், கறுப்பு நாய்களின் வடிவில் ஷைத்தான்களாகவே ஊருக்குள் உலவித் திரிய ஆரம்பித்தன. இந்த ஷைத்தான்களைக் கொல்லும் நோக்கத்தை முன்னிறுத்தியே கறுப்பு நாய்களைக் கொல்லுமாறு நபியவர்கள் பிரத்தியேகக் கட்டளை போட்டார்கள்.
(ஆதாரம்: முஸ்லிம் பாடம் 4, ஹதீஸ் 1032 / முஸ்லிம் பாடம் 10, ஹதீஸ் 3813 / இப்னுமாஜா 3331 / நஸாஈ 750 / அபூதாவூத் 702 / திர்மிதி 338)
.
கறுப்பு நாய்கள் ஜின் இனத்தைச் சார்ந்த ஷைத்தான்கள் எனும் இந்த உண்மையை உறுதிப் படுத்தும் விதமாக மேலும் பல செய்திகளையும் ஹதீஸ்களில் பார்க்கலாம்.
.
உதாரணத்துக்கு, ஒருவர் தொழுது கொண்டிருக்கும் போது, அவருக்குக் குறுக்கே கறுப்பு நாய் சென்றால், அவரது தொழுகை முறிந்து விடும் என்று நபி (ஸல்) கூறினார்கள். எல்லா நாய்களுக்கும் இச்சட்டத்தைக் கூறாமல், கறுப்பு நாய்க்கு மட்டும் இதை நபியவர்கள் கூறியது கூட ஷைத்தானின் இடையூறை முன்னிறுத்தித் தான்.
(ஆதாரம்: முஸ்லிம் 510 (பாடம் 4, ஹதீஸ் 1032) / இப்னுமாஜா 1003 / இப்னுமாஜா 1004 / அபூதாவூத் 702 / திர்மிதி 338 / நஸாஈ 750 / நஸாஈ 751)
.
இது மட்டுமல்லாமல், பொதுவாகவே நாய்களுக்கும் ஜின் இனங்களுக்கும் இடையில் ஏதோ ஒரு தொடர்பு இருப்பதையும் மார்க்கம் நமக்கு மறைமுகமாகக் கூறுகிறது.
.
உதாரணத்துக்கு, நாய், மற்றும் மணி ஆகியவற்றைக் கூட வைத்திருப்போர் இருக்கும் / பயணிக்கும் இடங்களுக்கு அருளுக்குரிய வானவர்கள் வருவதில்லை என்று நபி (ஸல்) கூறியுள்ளார்கள்.
(ஆதாரம்: அபூதாவூத் 2555 / முஸ்லிம் பாடம் 24, ஹதீஸ் 5277 / திர்மிதி 1703)
.
மணியை ஷைத்தானின் புல்லாங்குழல் என்று நபியவர்கள் கூறிய வேறு ஹதீஸ்கள் உண்டு. மணியையும், நாயையும் ஒன்றாகக் கோர்த்து மேலுள்ள ஹதீஸை நபியவர்கள் கூறியிருப்பதிலிருந்து, ஷைத்தானிய ஜின்களை ஈர்க்கும் ஏதோ ஒரு தன்மை நாயிடம் இருப்பதைப் புரிய முடிகிறது.
.
இது மட்டுமல்லாமல், இரவில் நாய் ஊளையிடும் சத்தம் கேட்டால், ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புத் தேடுமாறும் நபி (ஸல்) கூறியுள்ளார்கள். நம் கண்ணுக்குத் தெரியாத ஷைத்தானிய சக்திகளை அவை பார்ப்பதனாலேயே இரவில் அவை ஊளையிடுவதாக இதற்கு நபியவர்கள் காரணமும் சொன்னார்கள்.
(ஆதாரம்: அபூதாவூத் 5103 / அதப் அல் முஃப்ரத் பாடம் 1, ஹதீஸ் 1233 )
.
இதிலிருந்தும், நாய்க்கும் ஜின்களுக்கும் உள்ள தொடர்புகள் இன்னும் நமக்குப் புலப்படுகின்றன.
.
இதுவரை நாம் பார்த்த நிலைபாடுகளைக் கருத்திற் கொண்டு, ஸூரத்துல் கஹ்ஃபில் குறிப்பிடப்படும் குகையில் தூங்கிய இளைஞர்களது நாயைப் பற்றியும் நாம் அழகாகப் புரியலாம்.
.
இஸ்லாத்தைப் பின்பற்றிய ஒரே காரணத்துக்காக அச்சுறுத்தலுக்கு உள்ளானவர்களே குகையில் தூங்கிய இளைஞர்கள். உயிரைக் காத்துக் கொள்வதற்காக அவர்கள் குகையில் தஞ்சம் புகுந்த போது, கூடவே அவர்களது நாயும் அங்கு தஞ்சம் புகுந்தது. முன்னூற்று ஒன்பது வருடங்கள் அவ்விளைஞர்களை அக்குகையில் அல்லாஹ் உறங்கச் செய்த போது, அவர்கள் விழித்தெழும் வரை, குகை வாசலில் கால்களைப் பரப்பி அமர்ந்து கொண்டு அந்த நாய் தான் காவல் காத்தது.
.
நாய் குறித்த ஹதீஸ் பின்னணிகளோடு இச்சம்பவத்தை வைத்துப் பார்க்கும் போது, குகையில் தங்கிய அவ்விளைஞர்கள் வேட்டைக் காரர்களாகவோ, அல்லது விவசாயிகளாகவோ இருந்திருக்க வேண்டும் என்பதையும், அவர்களது வேட்டை / காவல் நாயாகவே அது இருந்திருக்க வேண்டும் என்பதையும் ஓரளவு புரிய முடிகிறது.
.
இதன் நிறைகள் அனைத்தும் அல்லாஹ்வைச் சாரும்; குறைகள் அனைத்தும் என்னையே சாரும். அல்லாஹ்வே அனைத்தும் அறிந்தவன்.
.
- அபூ மலிக்
أحدث أقدم