இப்பூமியில் நீதி நிலை நாட்டப்பட வேண்டும்; அனைத்து அநீதிகளும் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்பது அல்லாஹ்வின் சட்டம். சர்வ வல்லமை கொண்ட அல்லாஹ்வே தன் மீது அநீதியை ஹறாமாக்கியிருக்கிறான். "என் அடிமைகளே! என் மீதே அநீதியை ஹறாமாக்கியிருக்கிறேன். எனவே, நீங்கள் ஒருவருக்கொருவர் அநீதி இழைக்காதீர்கள்" என்றும் கூறியுள்ளான். (முஸ்லிம் 2577)
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தமது இறுதி ஹஜ்ஜின் போது செய்த உருக்கமான உபதேசத்தில் பின்வருமாறு கூறினார்கள்: "உங்களின் புனிதமிக்க இந்த நகரத்தில், புனிதமிக்க இந்த மாதத்தில் இன்றைய தினம் எந்த அளவு புனிதமானதோ (அதாவது, அதன் புனிதத்தைக் குழைப்பது ஹறாமானதோ) - அந்த அளவிற்கு உங்கள் உயிர்களும் உங்கள் சொத்துக்களும் உங்கள் மானமும் உங்களுக்குப் புனிதமானவையாகும் (அதாவது, உங்களில் ஒவொருவருக்கும் மற்றவர்களின் உயிர், சொத்து, மானம் ஆகியவை ஹறாமானவையாகும்.) நீங்கள் (மறுமையில்) உங்களுடைய இறைவனைச் சந்தீப்பீர்கள். அப்போது அவன் உங்களிடம் உங்கள் செயல்கள் குறித்து விசாரணை செய்வான்". (புகாரி 4406)
அநீதிக்கு பல வடிவங்கள் இருக்கின்றன. அவற்றுள் ஒன்று தான் மற்றவரின் செல்வத்தை அவரின் அனுமதியின்றி அனுபவிப்பது அல்லது அபகரிப்பது. இல்லை, இல்லை மற்றவர் தனது செல்வத்தில் அனுமதித்தால் கூட, அதனை அவர் மனம்விரும்பி அனுமதிக்காவிட்டால் அதுவும் ஹறாம் என்கிறது இஸ்லாம். அதாவது ஒருவர் மனதால் பொருந்திக் கொள்ளாமல் நிர்ப்பந்தம், நாட்டின் சட்டம் போன்ற காரணங்களால் அனுமதித்தாலும் அதனை அனுபவிப்பது மற்றவருக்கு ஹறாமாகும்.
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَاْكُلُوْۤا اَمْوَالَـكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ اِلَّاۤ اَنْ تَكُوْنَ تِجَارَةً عَنْ تَرَاضٍ مِّنْكُمْ وَلَا تَقْتُلُوْۤا اَنْـفُسَكُمْ اِنَّ اللّٰهَ كَانَ بِكُمْ رَحِيْمًا
நம்பிக்கை கொண்டவர்களே! உங்களில் ஒருவருக்கொருவர் *பொருந்திக் கொள்ளும் முறையில்* ஏற்படுகிற வர்த்தகம் அல்லாமல், ஒருவர் மற்றொருவரின் பொருட்களை தவறான முறையில் உண்ணாதீர்கள்; நீங்கள் உங்களையே கொலைசெய்து கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 4:29)
செல்வத்தில் நடைபெறும் அநீதிகளில் ஒன்று தான், மற்றவருக்கு சொந்தமான நிலத்தை அல்லது அசையாச் சொத்தை அபகரித்துக் கொள்வதாகும். அது ஒரு சாண் அளவாக இருந்தாலும் சரியே. இதனை மிகப் பெரிய பாவம் என்று சொல்கிறது இஸ்லாம். இதற்காக கப்ரிலும் மறுமையிலும் கிடைக்கும் தண்டனைகள் மிகவும் கொடூரமானவை. அவையாவன:
1- அபகரிக்கப்பட்ட நிலம் நரக நெருப்பின் ஒரு துண்டு
2- இப்படியான அநீதியை செய்பவன் மறுமை நாளில் அல்லாஹ்வை சந்திக்கும் போது அல்லாஹ் இவன் மீது கோபமுற்றவனாக இருப்பான்
3- அபகரித்து விட்டு பொய் சத்தியம் செய்பவன், அல்லாஹ்வுடன் செய்த உடன்படிக்கையையும், சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்பவன்...
4- மறுமையில் அபகரிக்கப்பட்ட நிலம் அபகரித்தவனின் கழுத்தில் ஏழு பூமிகளில் இருந்தும் மாலையாக கட்டித் தொங்க விடப்படும்
5- கப்ரிலும் கூட மறுமை நாள் வரும் வரை இந்த தண்டனை வழங்கப்படும்
6- தான் அபகரித்த நிலத்தின் மண்ணை மஹ்ஷர் வரை சுமப்பதற்கு பணிக்கப்படுவான்
7- அவன் மறுமை நாளில் ஏழு பூமிகளுக்குக் கீழே அழுந்தி கொண்டு செல்லப்படுவான்
8- இந்த உலகிலும் அல்லாஹ் அவனுக்கு அதிலே பறகத் செய்யமாட்டான்
9- அபகரிப்பதற்காக நிலத்தின் எல்லையை மாற்றுபவனை அல்லாஹ் சபிக்கின்றான்
10- நிலமோசடியே அல்லாஹ்விடம் மிக மோசமான மோசடி
மேற்படி தண்டனைகள் பற்றிய ஹதீஸ்களை பார்ப்போம்:
நீதிபதியின் தீர்ப்பால் அல்லது உலக சட்டங்களால் மற்றவரின் செல்வம் உமக்கு ஹலாலாகாது
ஹதீஸ் - 1
عن أُمّ سَلَمَةَ ـ رضي الله عنها - عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ سَمِعَ خُصُومَةً بِبَابِ حُجْرَتِهِ، فَخَرَجَ إِلَيْهِمْ، فَقَالَ " إِنَّمَا أَنَا بَشَرٌ وَإِنَّهُ يَأْتِينِي الْخَصْمُ، فَلَعَلَّ بَعْضَكُمْ أَنْ يَكُونَ أَبْلَغَ مِنْ بَعْضٍ، فَأَحْسِبُ أَنَّهُ صَدَقَ، فَأَقْضِيَ لَهُ بِذَلِكَ، فَمَنْ قَضَيْتُ لَهُ بِحَقِّ مُسْلِمٍ فَإِنَّمَا هِيَ قِطْعَةٌ مِنَ النَّارِ، فَلْيَأْخُذْهَا أَوْ فَلْيَتْرُكْهَا ". صحيح البخاري 2458
அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், தம் அறையின் வாசலுக்கருகே (சிலர்) சச்சரவிட்டுக் கொண்டிருந்ததைச் செவியுற்றார்கள். அவர்களிடம் சென்று, 'நான் ஒரு மனிதனே. என்னிடம் வழக்காடுபவர்கள் வருகிறார்கள். உங்களில் ஒருவர் மற்றவரை விட வாக்கு சாதுர்யம் மிக்கவராக இருக்கலாம். அதனால் அவர்தான் உண்மையைப் பேசியுள்ளார் என்று கருதி, நான் அவருக்கு சாதகமாகத் தீர்ப்பளித்து விடுவேனாயின், எவருக்கு ஒரு முஸ்லிமின் உரிமையை எடுத்துக் கொள்ளும்படி (யதார்த்த நிலை அறியாமல்) நான் தீர்ப்பளிக்கிறேனோ *(அவருக்கு) அது நரக நெருப்பின் ஒரு துண்டேயாகும். அவன் (விரும்பினால்) அதை எடுத்துக் கொள்ளட்டும்; அல்லது அதை (எடுத்துக் கொள்ளாமல்)விட்டு விடட்டும்'* என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்: உம்மு ஸலமஹ் (றளியல்லாஹு அன்ஹா)
[ஸஹீஹுல் புகாரி : 2458.
அத்தியாயம் : 46. அநீதிகளும் அபகரித்தலும்]
ஒருவர் தனது சொத்தை நிரூபிக்க சாட்சியை கொண்டு வர வேண்டும் அல்லது சத்தியம் செய்ய வேண்டும். பொய் சத்தியம் செய்பவனுக்கு நரகில் கடூழிய தண்டனை.
ஹதீஸ் - 2
عَنْ أَبِي وَائِلٍ، قَالَ قَالَ عَبْدُ اللَّهِ ـ رضى الله عنه -: مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ، يَسْتَحِقُّ بِهَا مَالاً وَهْوَ فِيهَا فَاجِرٌ، لَقِيَ اللَّهَ وَهْوَ عَلَيْهِ غَضْبَانُ، فَأَنْزَلَ اللَّهُ تَصْدِيقَ ذَلِكَ {إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلاً} فَقَرَأَ إِلَى {عَذَابٌ أَلِيمٌ}.ثُمَّ إِنَّ الأَشْعَثَ بْنَ قَيْسٍ خَرَجَ إِلَيْنَا فَقَالَ: مَا يُحَدِّثُكُمْ أَبُو عَبْدِ الرَّحْمَنِ؟ قَالَ: فَحَدَّثْنَاهُ قَالَ: فَقَالَ: صَدَقَ لَفِيَّ وَاللَّهِ أُنْزِلَتْ، كَانَتْ بَيْنِي وَبَيْنَ رَجُلٍ خُصُومَةٌ فِي بِئْرٍ فَاخْتَصَمْنَا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " شَاهِدُكَ أَوْ يَمِينُهُ ". قُلْتُ إِنَّهُ إِذًا يَحْلِفُ وَلاَ يُبَالِي. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ يَسْتَحِقُّ بِهَا مَالاً هُوَ فِيهَا فَاجِرٌ، لَقِيَ اللَّهَ وَهْوَ عَلَيْهِ غَضْبَانُ ". فَأَنْزَلَ اللَّهُ تَصْدِيقَ ذَلِكَ، ثُمَّ اقْتَرَأَ هَذِهِ الآيَةَ {إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلاً} إِلَى {وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ}. صحيح البخاري 2515, 2516
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(றளியல்லாஹு அன்ஹு), 'எவன் ஒரு சொத்தை அடைவதற்காகப் பொய் சத்தியம் செய்கிறானோ அவன், *தன் மீது அல்லாஹ் கோபமுற்ற நிலையில் அவனைச் சந்திப்பான்'* என்னும் நபிமொழியைக் கூறிவிட்டு, இந்த நபிமொழியை உறுதிப்படுத்தி அல்லாஹ், *'அல்லாஹ்வுடன் செய்த உடன்படிக்கையையும், சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்பவர்களுக்கு மறுமையில் எவ்வித நற்பேறுமில்லை. இறுதித் தீர்ப்பு நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களை (ஏறெடுத்துப்) பார்க்கவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். மாறாக, அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனைதான் இருக்கிறது'* என்னும் (திருக்குர்ஆன் 03:77) வசனத்தை அருளினான்' என்று கூறினார்கள்.
பிறகு, அஷ்அஸ் இப்னு கைஸ் (றளியல்லாஹு அன்ஹு) எங்களிடம் வந்து, 'அபூ அப்திர் றஹ்மான் (இப்னு மஸ்வூத்) உங்களிடம் என்ன பேசினார்?' என்று கேட்டார். நாங்கள் அவர் (இப்னு மஸ்வூத் (றளியல்லாஹு அன்ஹு) சொன்னதை எடுத்துரைத்தோம். அதற்கு அவர், 'அவர் உண்மையே சொன்னார். என் விவகாரத்தில்தான் அது அருளப்பட்டது. எனக்கும் இன்னொரு மனிதருக்குமிடையே ஒரு கிணற்றின் விஷயத்தில் தகராறு இருந்து வந்தது; எனவே, நாங்கள் அல்லாஹ்வின் தூதரிடம் (எங்கள்) வழக்கைத் தாக்கல் செய்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், *'நீ இரண்டு சாட்சிகளைக் கொண்டு வர வேண்டும்; அல்லது (பிரதிவாதியான) அவர் (குற்றத்தை மறுத்து) சத்தியம் செய்ய வேண்டும்'* என்று கூறினார்கள். அதற்கு நான், 'அப்படியென்றால் அவர் (பொய்) சத்தியம் செய்வாரே, (பொய் சத்தியம் செய்கிறோமே என்று) கவலைப்பட மாட்டாரே' என்று கூறினேன். அதற்கு நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் 'ஒரு செல்வத்தை அடைந்து கொள்வதற்காகப் பொய்சத்தியம் செய்கிறவர் (மறுமையில்) தன் மீது அல்லாஹ் கோபம் கொண்டிருக்கும் நிலையில் அவனைச் சந்திப்பார்' என்று கூறினார்கள். பிறகு, இந்த நபிவாக்கை உறுதிப்படுத்தி அல்லாஹ் (தன் வேதத்தில்) வசனம் ஒன்றை அருளினான்' என்று கூறிவிட்டு, 3:77ம் வசனத்தை (இறுதி வரை) ஓதிக் காட்டினார்கள்.
[ஸஹீஹுல் புகாரி : 2515, 2516.
அத்தியாயம் : 48. அடைமானம்]
மாற்றான் நிலத்தை அபகரித்தனுக்கு அணிவிக்கப்படும் ஏழு பூமியில் இருந்து எடுக்கப்படும் மாலை
ஹதீஸ் - 3
عن أَبي سَلَمَةَ أَنَّهُ، كَانَتْ بَيْنَهُ وَبَيْنَ أُنَاسٍ خُصُومَةٌ، فَذَكَرَ لِعَائِشَةَ ـ رضى الله عنها ـ فَقَالَتْ يَا أَبَا سَلَمَةَ اجْتَنِبِ الأَرْضَ، فَإِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ ظَلَمَ قِيدَ شِبْرٍ مِنَ الأَرْضِ طُوِّقَهُ مِنْ سَبْعِ أَرَضِينَ ". صحيح البخاري 2453
அபூ ஸலமஹ் (றளியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்:
எனக்கும் வேறு சிலருக்கும் இடையே ஒரு நிலம் சம்பந்தமான தகராறு இருந்து வந்தது. அதை நான் ஆஇஷஹ் (றளியல்லாஹு அன்ஹா) அவர்களிடம் கூறினேன். அவர்கள் சொன்னார்கள்; அபூ ஸலமஹ்வே! நிலத்தை (எடுத்துக் கொள்வதைத்) தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், 'ஓர் சாண் அளவு நிலத்தை அநியாயமாக அபகரித்துக் கொள்கிறவரின் *கழுத்தில் அது ஏழு பூமிகளில் இருந்தும் மாலையாக (மறுமையில்) கட்டித் தொங்க விடப்படும்'* என்று கூறினார்கள்.
[ஸஹீஹுல் புகாரி : 2453.
அத்தியாயம் : 46. அநீதிகளும் அபகரித்தலும்]
ஏழு பூமிகளுக்குள் ஆழ்த்தி செல்லப்படும் பயங்கர தண்டனை
ஹதீஸ் - 4
عَنْ ابن عمر ـ رضى الله عنها ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم : " مَنْ أَخَذَ مِنَ الأَرْضِ شَيْئًا بِغَيْرِ حَقِّهِ خُسِفَ بِهِ يَوْمَ الْقِيَامَةِ إِلَى سَبْعِ أَرَضِينَ ". صحيح البخاري 2454
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு நிலத்திலிருந்து ஒரு பகுதியைத் தனக்கு உரிமையின்றி எடுத்துக் கொண்டவன் *மறுமை நாளில் ஏழு பூமிகளுக்குக் கீழே அழுந்திச் செல்ல வைக்கப்படுவான்.*
[அறிவிப்பாளர்: இப்னு உமர் (றளியல்லாஹு அன்ஹுமா)
ஸஹீஹுல் புகாரி : 2454.
அத்தியாயம் : 46. அநீதிகளும் அபகரித்தலும்]
தனக்கு உரிமையில்லாத நிலத்தை அபகரிப்பவன் அதன் மண்ணை மஹ்ஷர் மைதானத்திற்கு சுமந்து செல்ல வேண்டும்
ஹதீஸ் - 5
مسند أحمد
17558 سمعت يعلى بن مرة الثقفي ، يقول : سمعت رسول الله صلى الله عليه وسلم، يقول : " من أخذ أرضا بغير حق كلف أن يحمل ترابها إلى المحشر ".
قال شعيب الأرناؤوط: إسناده حسن
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: எவர் ஒரு நிலத்தை உரிமையில்லாமல் எடுத்துக் கொள்கிறாரோ அவர் *அதிலுள்ள மண்ணை (மறுமையில்) மஹ்ஷர் வரை சுமப்பதற்கு பணிக்கப்படுவார்.*
[ஆதாரம்: முஸ்னத் (17558)
அறிவிப்பவர்: யஃலா அஸ்ஸகஃபி (றளியல்லாஹு அன்ஹு)
இந்த ஹதீஸ் ஆதாரபூர்வமானது - ஹஸன் என்பதை ஹதீஸ் ஆய்வாளர் ஷுஐப் அல்-அர்ணாஊத் உறுதி செய்துள்ளார்.]
காணி மோசடியில் ஈடுபட்டவனுக்கு கப்ரிலும் ஏழு பூமிகளின் மாலை மாட்டப்படும்
மோசடிகளிலே மிகப்பெரிய மோசடி அருகிலுள்ள காணியில் இருந்து ஒரு துண்டை அகரிப்பதாகும்; அது ஒரு முழமாக இருந்தாலும் சரியே
ஹதீஸ் - 6
مسند أحمد
17799 عن أبي مالك الأشجعي ، عن النبي صلى الله عليه وسلم، قال : " أعظم الغلول عند الله ذراع من الأرض، تجدون الرجلين جارين في الأرض، أو في الدار، فيقتطع أحدهما من حظ صاحبه ذراعا، فإذا اقتطعه طوقه من سبع أرضين إلى يوم القيامة ".
قال شعيب الأرناؤوط: إسناده حسن
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்விடம் மிக மோசமான மோசடி நிலத்தில் ஒரு முழத்தை அபகரித்துக் கொள்வதாகும். ஒரு நிலத்தில் அல்லது ஒரு வசிப்பிடத்தில் இரு மனிதர்கள் அயலவர்களாக இருந்துவிட்டு, அவர்களில் ஒருவர் மற்றவரின் பங்கிலிருந்து ஒரு முழத்தை அபகரித்துக் கொள்வதை காண்பீர்கள். அதனை அவர் அபகரித்துக் கொண்டால் *ஏழு பூமியிலிருந்தும் எடுக்கப்பட்டு அதனை அவருக்கு மறுமை நாள் வரையில் மாலையாக போடப்படும்.*
ஆதாரம்: முஸ்னத் (17799)
[அறிவிப்பாளர்: அபூ மாலிக் அல்-அஷ்ஜஈ (றளியல்லாஹு அன்ஹு).
இந்த ஹதீஸ் ஆதாரபூர்வமானது - ஹஸன் என்பதை ஹதீஸ் ஆய்வாளர் ஷுஐப் அல்-அர்ணாஊத் உறுதி செய்துள்ளார்.
*இத்தகைய வார்த்தை கப்ரில் வழங்கப்படும் தண்டனையை குறிக்கும்.]
காணி எல்லையை மாற்றுவது அல்லாஹ்வின் சாபத்தை ஏற்படுத்தும்
ஹதீஸ் - 7
صحيح مسلم
1978 ( 44 ) عن أبي الطفيل قال: قلنا لعلي بن أبي طالب : أخبرنا بشيء أسره إليك رسول الله صلى الله عليه وسلم. فقال : ما أسر إلي شيئا كتمه الناس، ولكني سمعته، يقول : " لعن الله من ذبح لغير الله، ولعن الله من آوى محدثا، ولعن الله من لعن والديه، ولعن الله من غير المنار ".
அபுத்துஃபைல் (றளியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (கலீஃபஹ்) அலீ இப்னு அபீதாலிப் (றளியல்லாஹு அன்ஹு) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், உங்களுக்கு இரகசியமாகச் சொன்ன ஏதேனும் விஷயத்தை எங்களுக்குச் சொல்லுங்கள்" என்று கேட்டோம்.
அதற்கு அலீ (றளியல்லாஹு அன்ஹு) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மக்களிடம் மறைத்து விட்டு எதையும் என்னிடம் மட்டும் இரகசியமாகச் சொல்லவில்லை. ஆயினும் அவர்கள், "அல்லாஹ் அல்லாத மற்றவர் பெயரில் (பிராணியை) அறுத்தவனை அல்லாஹ் சபிக்கின்றான். (மார்க்கத்தில் இல்லாத) புதிய விஷயங்களை (மார்க்கத்தின் பெயரால்) உருவாக்கியவனுக்கு அடைக்கலம் அளித்தவனை அல்லாஹ் சபிக்கின்றான். தம் பெற்றோரைச் சபித்தவனை அல்லாஹ் சபிக்கின்றான். *பூமியின் (எல்லைக்கல், வரப்பு உள்ளிட்ட) அடையாளங்களை மாற்றியமை(த்து தனக்கு சொந்தமில்லாத நிலத்தை அபகரி)ப்பவனை அல்லாஹ் சபிக்கின்றான்"* என்று கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்.
[ஸஹீஹ் முஸ்லிம் : 1978]
அபகரித்த நிலத்தில் பறகத் இல்லை
ஹதீஸ் - 8
وفي مسند أحمد (1649) عن سعيد بن زيد مرفوعا: ... ومن اقتطع مال أخيه بيمينه ؛ فلا بارك الله له فيه ".
قال شعيب الأرناؤوط: إسناده قوي
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள் : ... எவர் தனது சகோதரனின் சொத்தை சத்தியம் செய்து அபகரித்துக் கொள்கிறாரோ அல்லாஹ் அவருக்கு *அதிலே பறகத் செய்யமாட்டான்.*
[முஸ்னத் (1649). இந்த ஹதீஸ் ஹஸன் தரத்தில் - ஆதாரபூர்வமானது என்பதை ஹதீஸ் ஆய்வாளர் ஷுஐப் அல்-அர்ணாஊத் உறுதி செய்துள்ளார்.]
தனது நிலத்தை அபகரித்து விட்டதாக மற்றவர் மீது பொய்க்குற்றச்சாட்டு சுமத்துபவருக்கு பெரும் ஆபத்து
ஹதீஸ் - 9
عَنْ سَعِيدِ بْنِ زَيْدِ بْنِ عَمْرِو بْنِ نُفَيْلٍ، أَنَّهُ خَاصَمَتْهُ أَرْوَى فِي حَقٍّ زَعَمَتْ أَنَّهُ انْتَقَصَهُ لَهَا إِلَى مَرْوَانَ، فَقَالَ سَعِيدٌ أَنَا أَنْتَقِصُ مِنْ حَقِّهَا شَيْئًا، أَشْهَدُ لَسَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ: "مَنْ أَخَذَ شِبْرًا مِنَ الأَرْضِ ظُلْمًا، فَإِنَّهُ يُطَوَّقُهُ يَوْمَ الْقِيَامَةِ مِنْ سَبْعِ أَرَضِينَ". صحيح البخاري 3198
'அர்வா' என்னும் பெண், தனக்கிருக்கும் ஒரு (நிலத்தின்) உரிமையில் zஸஈத் இப்னு ஸைத் (றளியல்லாஹு அன்ஹு) அவர்கள் அபாகரிப்புச்செய்து தனது நிலத்தைக் குறைத்துவிட்டதாக (மதீனஹ்வின் ஆளுநர்) மர்வான் அவர்களிடம் ஸஈத் அவர்களுக்கெதிராக வழக்குத் தொடுத்தார். (விசாரணையின் போது) "நான், 'அவரின் உரிமையில் எதையும் குறைவைப்பேனா?' *'ஒரு சாண் அளவு நிலத்தை அநியாயமாக அபகரித்துக் கொள்கிறவரின் கழுத்தில் மறுமை நாளில் அது ஏழு பூமிகளில் இருந்தும் (வளையமாக) மாட்டப்படும்'* என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சொல்ல நான் கேட்டிருப்பதாக சாட்சியமளிக்கிறேன்" என்று ஸஈத் இப்னு ஸைத் (றளியல்லாஹு அன்ஹு) கூறினார்கள்.
[ஸஹீஹுல் புகாரி 3198]
صحيح مسلم 1610 ( 139 ) عن عروة بن الزبير أن أروى بنت أويس ادعت على سعيد بن زيد أنه أخذ شيئا من أرضها، فخاصمته إلى مروان بن الحكم فقال سعيد : أنا كنت آخذ من أرضها شيئا بعد الذي سمعت من رسول الله صلى الله عليه وسلم. قال : وما سمعت من رسول الله صلى الله عليه وسلم ؟ قال : سمعت رسول الله صلى الله عليه وسلم يقول : " من أخذ شبرا من الأرض ظلما طوقه إلى سبع أرضين ". فقال له مروان : لا أسألك بينة بعد هذا، فقال : اللهم إن كانت كاذبة فعم بصرها واقتلها في أرضها. قال : فما ماتت حتى ذهب بصرها، ثم بينا هي تمشي في أرضها إذ وقعت في حفرة فماتت.
உர்வஹ் இப்னு அஸ்-Zஸுபைர் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறினார்கள்:
ஸஈத் இப்னு ஸைத் (றளியல்லாஹு அன்ஹு) அவர்கள் தமது நிலத்தில் ஒரு பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டார் என அர்வா பின்த் உவைஸ் என்ற பெண் குற்றம் சாட்டினார். (அப்போதைய மதீனஹ்வின் ஆளுநர்) மர்வான் இப்னுல் ஹகமிடம் ஸஈதுக்கு எதிராக அவர் வழக்குத் தொடுத்தார். (விசாரணையின்போது) ஸஈத் இப்னு ஸைத் (றளியல்லாஹு அன்ஹு) அவர்கள், "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடமிருந்து (ஒரு ஹதீஸை) செவியுற்ற பிறகும் அவளது நிலத்தில் ஒரு பகுதியை அபகரிப்பேனா?" என்று கேட்டார்கள். அதற்கு மர்வான் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடமிருந்து நீங்கள் என்ன செவியுற்றீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு ஸஈத் (றளியல்லாஹு அன்ஹு) அவர்கள், *"யார் ஒரு சாண் நிலத்தை அநியாயமாகக் கைப்பற்றிக்கொள்கிறாரோ அவரது கழுத்தில் அந்த நிலத்திலிருந்து ஏழு பூமிகள்வரை (செல்லும் பகுதி) மாலையாக மாட்டப்படும்"* என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள். அதற்கு மர்வான், "இதற்குப் பின் உங்களிடம் நான் எந்த சான்றும் கேட்கமாட்டேன்" என்றார்கள். அப்போது ஸஈத் இப்னு ஸைத் (றளியல்லாஹு அன்ஹு) அவர்கள், *"அல்லாஹ்வே! இவள் பொய் சொல்லியிருந்தால் அவளது பார்வையைப் பறித்துவிடு. அந்த நிலத்திலேயே அவளைக் கொன்றுவிடு"* என்று பிரார்த்தித்தார்கள். பிறகு *பார்வை பறிபோனவளாகவே அவள் இறந்தாள். அவள் தனது நிலத்தில் நடந்து கொண்டிருந்தபோது ஒரு குழியில் விழுந்து மாண்டுபோனாள்.*
[ஸஹீஹ் முஸ்லிம் 1610]
صحيح مسلم 1610 ( 138 ) ... قال محمد بن زيد: فرأيتها عمياء تلتمس الجدر تقول : أصابتني دعوة سعيد بن زيد، فبينما هي تمشي في الدار مرت على بئر في الدار فوقعت فيها فكانت قبرها.
முஹம்மத் இப்னு ஸைத் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பின்னர் நான் அந்தப் பெண்ணைப் பார்வையற்றவளாகப் பார்த்தேன். அவள் சுவர்களைத் தடவிக்கொண்டு இருந்தாள். *"ஸஈத் இப்னு ஸைதின் பிரார்த்தனை எனக்குப் பலித்துவிட்டது"* என்று கூறுவாள். இந்நிலையில் அவள் (ஒரு நாள்) தனது இடத்தில் நடந்துகொண்டிருந்தபோது, அந்த இடத்திலிருந்த கிணறு ஒன்றை அவள் கடந்து சென்றாள். *அப்போது அதில் அவள் (தவறி) விழுந்துவிட்டாள். அதுவே அவளது கப்ராக அமைந்தது.*
[ஸஹீஹ் முஸ்லிம் 1610]
ஸுன்னஹ் அகாடமி:
Sunnah Academy:
facebook.com/Sunnah.Acad
instagram.com/sunnah_academy
youtube.com/@Sunnah_academ
Telegram:
t.me/sunnah_academy
WhatsApp:
chat.whatsapp.com/E1aiTCVMAzL9u1N1vGRKdp