அல்லாஹ்வை திக்ர் செய்வது; அதிலும் முக்கியமாக
தக்பீர் கூறுவது இந்த நாட்களில் பிரதானமாக செய்யவேண்டிய அமலாகும்.
﴿وَيَذكُرُوا اسمَ اللَّهِ في أَيّامٍ مَعلوماتٍ عَلى ما رَزَقَهُم مِن بَهيمَةِ الأَنعامِ﴾
... அல்லாஹ் அவர்களுக்கு கொடுத்த (குர்பானிப் பிராணிகளான ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) நாற்கால் பிராணிகள் மீது *அறியப்பட்ட நாட்களில்*அவன் பெயரைக் கூறுவதற்காகவும் (ஹஜ்ஜிற்கு வருவார்கள்.) (அல்குர்ஆன் : 22:28)
இந்த ஆயத்தில் *அறியப்பட்ட நாட்களில் அல்லாஹ்வை திக்ர் செய்வது* பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. *அறியப்பட்ட நாட்கள்* என்பதில் துல்ஹிஜ்ஜஹ் மாதத்தின் முதல் பத்து நாட்களும் அடங்கும் என்பதை இப்னு அப்பாஸ் (றழியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் உட்பட ஸலபுகளில் இருந்த பல குர்ஆன் விரிவுரையாளர்களின் விளக்கத்தில் இருந்து புரிந்து கொள்ளலாம்.
இப்னு உமர் (றழியல்லாஹு அன்ஹுமா), அபூஹுறைறஹ் (றழியல்லாஹு அன்ஹு) ஆகியவர்கள் துல்ஹிஜ்ஜஹ் மாதத்தில் முதல் பத்து நாட்களில் கடைத் தெருவுக்குச் சென்று தக்பீர் கூறுவார்கள். அதை (கேட்டுக்) கொண்டு மனிதர்களும் தக்பீர் கூறுவார்கள்.
ஆதாரம்:
(كان ابنُ عُمرَ وأبو هُرَيرَة يَخرُجانِ إلى السوقِ في أيَّامِ العشرِ يُكبِّرانِ، ويُكبِّر الناسُ بتكبيرِهما)
رواه البخاري معلَّقًا بصيغة الجزم قبل حديث (969)، ورَوى أثرَ ابنِ عُمر موصولًا ابنُ أبي شَيبةَ في ((المصنف)) (2/164)، والبيهقيُّ (3/279) (6348). صحَّحه الألباني في ((إرواء الغليل)) (651). ويُنظر ((تغليق التعليق)) لابن حجر (2/377، 378).
சிறப்புமிக்க பத்து நாட்களும் அவற்றின் இரவுகளும்:
﴿وَلَيالٍ عَشرٍ﴾ [الفجر: ٢]
பத்து இரவுகளின் மீதும் சத்தியமாக!
(அல்குர்ஆன் : 89:2)
அல்லாஹ் இவ்வசனத்தில் பத்து இரவுகள் மீது சத்தியம் செய்திருக்கிறான். குறிப்பிட்ட இப்பத்து இரவுகளும் எவை என்பதை அல்குர்ஆன் இறங்கிய காலத்தில் வாழ்ந்தவர்கள் அறிந்திருகலாம்; அதனால் அவை எவை என்ற விபரம் இவ்வசனத்தில் குறிப்பிடப்படவில்லை. துல்ஹிஜ்ஜஹ் மாதத்தின் முதல் பத்து இரவுகளையும் இது குறிக்கும் என்று மிக முக்கியமான குர்ஆன் விரிவுரையாளரான இப்னு அப்பாஸ் (றளியல்லாஹு அன்ஹுமா) உட்பட ஸலபுகளில் வாழ்ந்த பல குர்ஆன் விரிவுரையாளர்களும் தெளிவுபடுத்தியுள்ளனர்.
(பார்க்க: தஃப்ஸீருத்-த(b)பரி)
அல்லாஹ் பத்து இரவுகளின் மீது சத்தியம் செய்திருப்பதால் அவ்விரவுகள் மாத்திரம் சிறப்புக்குரியவையா? அல்லது அவ்விரவுகளின் பகல்களும் சிறப்புக்குரியவையா?
மேற்படி ஆயத்தில் இரவுகளைக் குறிக்க 'லயாலி' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 'லைல்' என்ற சொல்லின் பன்மைச் சொல்லாகும்.
அறபு மொழியில் 'லைல்' என்பது சூரியன் மறைந்ததிலிருந்து சூரியன் உதிக்கும் வரையுள்ள நேரத்தைக் குறிக்கும். மார்க்க வழக்கில் சூரியன் மறைந்ததிலிருந்து ஃபஜ்ர் உதயமாகும் வரையுள்ள நேரத்தைக் குறிக்கும்.
அதேபோன்று அறபு மொழியில் 'யவ்ம்' (நாள்) என்பது சூரியன் உதித்ததிலிருந்து சூரியன் மறையும் வரையுள்ள நேரத்தைக் குறிக்கும். மார்க்க வழக்கில் ஃபஜ்ர் உதித்ததிலிருந்து சூரியன் மறையும் வரையுள்ள நேரத்தைக் குறிக்கும்.
இவையே இவ்விரு சொற்களுக்குமுரிய அடிப்படை அர்த்தங்களாக இருந்தாலும் 24 மணித்தியாலங்களைக் கொண்ட முழு நாளைக் குறிப்பதற்கும் இரு சொற்களில் ஒவ்வொன்றும் பயன்படுத்தப்படும். அதாவது சில நேரங்களில் 'யவ்ம்' என்பது இரவையும் பகலையும் உள்ளடக்குகின்ற 24 மணித்தியாலங்களைக் கொண்ட ஒரு நாளைக் குறிப்பதற்கும் பயன்படுத்தப்படும். இது பரவலாக அறபு மொழி தெரிந்த அனைவரும் அறிந்ததே. இதேபோன்று சில நேரங்களில் 'லைல்' என்ற பதம் இரவையும் அந்த இரவை அடுத்துவரும் பகலையும் உள்ளடக்கிய 24 மணித்தியாலங்களைக் கொண்ட ஒரு நாளைக் குறிப்பதற்கும் பயன்படுத்தப்படும்.
இதனடிப்படையில் மேற்படி *{பத்து இரவுகளின் மீதும் சத்தியமாக}* என்ற ஆயத்திலும் இரவுகள் என்பதன் மூலம் இரவும் பகலும் அடங்கலான 24 மணித்தியாலங்களைக் கொண்ட பத்து நாட்களும் உள்ளடங்குகின்றன.
அல்லாஹ் குர்ஆனில் தான் விரும்பிய தனது படைப்புக்கள் மீது சத்தியம் செய்கின்றான். இது அப்படைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டும். அந்த வகையில் மேற்படி ஆயத், துல்ஹிஜ்ஜஹ் மாதத்தின் முதல் பத்து நாட்களின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்றது.
நபி ﷺ அவர்களும் இம்மாதத்தின் முதல் பத்து நாட்களும் ஒரு வருடத்தின் ஏனைய நாட்களை விடச் சிறந்த நாட்கள்; அவற்றில் செய்யும் அமல் ஏனைய நாட்களில் செய்யும் அமலை விடச் சிறந்தது என்று தெளிவுபடுத்தியுள்ளார்கள். (பார்க்க: புகாரி 969)
நாள் என்பதைக் குறிப்பதற்கு 'யவ்ம்' என்ற சொல்லின் பன்மைச் சொல்லான 'ஐயாம்' என்ற சொல்லே மேற்படி ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
'யவ்ம்' என்ற சொல் முழு நாளைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்களில் அது அடிப்படையில் பகலையும், இரண்டாம் தரமாக இரவையும் உள்ளடக்கும். அதேபோன்று 'லைல்' என்ற சொல் முழு நாளைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்களில் அது அடிப்படையில் இரவையும், இரண்டாம் தரமாக பகலையும் உள்ளடக்கும்.
குறிப்பு: அல்லாஹ் இந்த ஆயத்திலும் வேறு பல ஆயத்களிலும் தன் படைப்புகளின் மீது சத்தியம் செய்து அவற்றின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியிருக்கின்றான். ஆனால் அவனது படைப்புகளாகிய நாம் அவன் மீது மாத்திரமே சத்தியம் செய்ய வேண்டும். அல்லாஹ் அல்லாதவர்கள் மீது சத்தியம் செய்வதை நபிகள் நாயகம் ﷺ அவர்கள் தடை செய்திருக்கிறார்கள். எம்மிடத்தில் அல்லாஹ்வை விட முக்கியமான எதுவும் கிடையாது; அவனே மிகப் பெரியவன். நாம் ஒரு விடயத்தை உறுதிப்படுத்துவதற்கு, நாம் மிகப் பெரியவனாகவும் மிக மகத்தானவனாகவும் நம்பும் அல்லாஹ்வின் மீது மாத்திரமே சத்தியம் செய்ய முடியும்.
இப்பத்து நாட்களிலும் உள்ள விசேடமான நாட்கள்:
இப்பத்து நாட்களில் 'யவ்முத்தர்வியஹ்' எனும் எட்டாவது நாளில் ஹாஜிகள் 'மினா'விற்குச் செல்கின்றனர்.
'யவ்முஅறஃபஹ்' எனும் ஒன்பதாவது நாளில் 'அறஃபஹ்' மைதானத்தில் ஹாஜிகள் ஒன்று கூடுகின்றனர்.
'யவ்முந்நஹ்ர்' எனும் பத்தாவது நாளின் இரவில் 'முஸ்தலிபஹ்'வில் தங்குகின்றனர். பின்னர் காலையில் சூரியன் உதிப்பதற்கு சற்று முன்னர் மினாவிற்குச் சென்று, 'ஜம்றஹ்'விற்குக் கல்லெறிதல், அறுத்துப் பலியிடல், தலைமுடியை மழித்தல் அல்லது குறைத்தல் பின்னர் தவாஃபுல் இஃபாளாஹ் செய்யச் செல்லல் போன்ற வணக்கங்களில் ஈடுபடுகின்றனர்.
இந்த நாளே ஹஜ்ஜுப் பெருநாளாகவும் இருக்கின்றது. 'யவ்முந்நஹ்ர்' என்பதன் அர்த்தம் அறுத்துப் பலியிடும் நாள் என்பதாகும். இப்பத்து நாட்களில் இந்நாளுக்கு மிகப் பெரிய சிறப்பு இருக்கிறது.
வருடத்தின் மிகச் சிறந்த நாளும் வாரத்தின் மிகச் சிறந்த நாளும்:
வருடத்தின் சிறந்த நாட்களான துல்ஹிஜ்ஜஹ் மாதத்தின் முதல் பத்து நாட்களில் இருக்கின்றோம். இப்பத்து நாட்களில் எமக்குக் கிடைத்திருக்கும் ஒரே ஒரு வெள்ளிக்கிழமை நாள் இன்றுதான். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அஸ்ருக்கு பிறகுள்ள நேரம் மிக முக்கியமானது. துஆக்கள் கபூல்செய்யப்படும் வெள்ளிக்கிழமை நாளின் கடைசி நேரமும் ஒரு வருடத்தின் சிறந்த நாட்களில் ஒன்றும் எமக்கு கிடைத்திருக்கிறது இதனை நல்ல முறையில் பயன்படுத்திப் பயன் பெறுவோமாக!
இந்த நாட்களின் அடையாளச் சின்னம் திக்ராகும்:
துல்ஹிஜ்ஜஹ் மாதத்தின் முதல் 10 நாட்கள் மற்றும் தொடர்ந்து வருகின்ற அய்யாமுத் தஷ்ரீக் மூன்று நாட்களுடன் மொத்தமாக 13 நாட்கள் அல்லாஹ்வை திக்ர் செய்வதற்குரிய நாட்கள் என்பதை குர்ஆன் மற்றும் ஸுன்னஹ்வில் இருந்தும் தெரிந்து கொள்ளலாம். இந்நாட்கள் ஏனைய காலங்களில் நாங்கள் அல்லாஹ்வை திக்ர் செய்வதற்கான ஒரு பயிற்சியாக அமைந்திருக்கின்றன. இந்நாட்களின் அடையாளச் சின்னமே அல்லாஹ்வை திக்ர் செய்வதாகும். நபித்தோழர்களின் நடைமுறையிலும் இதனைக் காண முடிகின்றது. மக்கள் அதிகமாக அல்லாஹ்வை மறந்திருக்கக்கூடிய இடங்கள் கடைத்தெருக்களாகும். அந்த இடங்களுக்கு அபூஹுறைறஹ் (றளியல்லாஹு அன்ஹு) மற்றும் இப்னு உமர் (றளியல்லாஹு அன்ஹுமா) ஆகிய நபி தோழர்கள் சென்று அல்லாஹ்வை திக்ர் செய்வதை ஞாபகமூட்டுவார்கள். அவர்கள் இந்த நோக்கத்திற்காகவே அங்கு செல்லவார்கள். எனவே, இந்த நாட்களில் எங்களுடைய நாவுகளுக்கு அல்லாஹ்வை அதிகமாக திக்ர் செய்வதற்குப் பயிற்சியளித்துக் கொள்வோம்.
மார்க்கம் பூரணமாக்கப்பட்ட தினம் எது?
عن طارق بن شهاب، عن عمر بن الخطّابِ، أنَّ رَجُلًا، مِنَ اليَهُودِ قالَ له: يا أمِيرَ المُؤْمِنِينَ، آيَةٌ في كِتابِكُمْ تَقْرَؤُونَها، لو عَلَيْنا مَعْشَرَ اليَهُودِ نَزَلَتْ، لاتَّخَذْنا ذلكَ اليومَ عِيدًا. قالَ: أيُّ آيَةٍ؟ قالَ: {اليومَ أكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وأَتْمَمْتُ علَيْكُم نِعْمَتي ورَضِيتُ لَكُمُ الإسْلامَ دِينًا} [المائدة: 3] قالَ عُمَرُ: قدْ عَرَفْنا ذلكَ اليَومَ، والمَكانَ الذي نَزَلَتْ فيه على النبيِّ ﷺ، وهو قائِمٌ بعَرَفَةَ يَومَ جُمُعَةٍ.
صحيح البخاري
யூதர்களில் ஒருவர் உமர் (றழியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் 'அமீருல் முஃமினீன் அவர்களே! நீங்கள் உங்கள் வேதத்தில் ஓதிக் கொண்டிருக்கும் ஒரு ஆயத் யூதர்களாகிய எங்கள் மீது இறங்கியிருந்தால் அந்நாளை நாங்கள் ஒரு பெருநாளாக்கிக் கொண்டிருப்போம்' என்றார். அதற்கு உமர் (றழியல்லாஹு அன்ஹு) 'அது எந்த ஆயத்?' எனக் கேட்டார்கள். அதற்கவர்,
{الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الإِسْلاَمَ دِينًا}.
{இன்றைய தினம் உங்களின் மார்க்கத்தை உங்களுக்கு நிறைவுபடுத்திவிட்டேன். உங்களின் மீது என்னுடைய அருள் கொடையை முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தையே உங்களுக்கான மார்க்கமாகத் திருப்தி(யுடன் அங்கீகரித்துக்) கொண்டேன்} (05:03) (என்ற ஆயத்) என்று கூறினார். அதற்கு உமர் (றழியல்லாஹு அன்ஹு), 'நபி ﷺ அவர்கள் ஒரு வெள்ளிக்கிழமை தினத்தில் அறஃபஹ்வில் நின்று கொண்டிருக்கும்போது அந்த ஆயத் இறங்கிய அந்த நாளையும் அந்த இடத்தையும் நாங்கள் அறிவோம்' என்றார்கள்.
புகாரி 45, முஸ்லிம் 3017
துல்ஹிஜ்ஜஹ் மாதத்தின் 9, 10, 11, 12, 13 ஆகிய ஐந்து நாட்கள்:
عن عقبة بن عامر عن النبي ﷺ قال:
يومُ عرفةَ ويومُ النحرِ وأيامُ التشريقِ عيدنا أهلَ الإسلامِ، وهيّ أيامُ أكلٍ وشربٍ.
أبو داود (٢٤١٩)، والترمذي (٧٧٣)، والنسائي (٣٠٠٤) واللفظ لهم، وأحمد (١٧٣٧٩)
صححه الألباني والوادعي وش الأرناؤوط.
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:
அறஃபஹ் நாள் (9), நஹ்ருடைய நாள்(10), தஷ்ரீக்குடைய நாட்கள் (11, 12, 13) ஆகியவை இஸ்லாமியர்களாகிய எங்களது "ஈத்" நாட்களாகும். அவை உண்பதற்கும் பருகுவதற்கும் உரிய நாட்களாகும்.
அறிவிப்பவர்: உக்பது-ப்னு ஆமிர் (றழியல்லாஹு அன்ஹு)
அபூ தாவூத் 2419, திர்மிதீ 773, நஸாஈ 3004, அஹ்மத் 17379
இந்த ஹதீஸை ஹதீஸ் கலை ஆய்வாளர்களான அல்பானி, வாதிஈ, ஷுஐப் அல்-அர்னாஊத் ஆகியோர் ஸஹீஹ் - ஆதாரபூர்வமானது என்று உறுதி செய்துள்ளனர்.
விளக்கக் குறிப்புகள்:
துல்ஹிஜ்ஜஹ் மாதத்தின் 9, 10, 11, 12, 13 ஆகிய ஐந்து நாட்களும் முஸ்லிம்கள் சந்தோஷப்படுகின்ற நாட்களாகும்.
ஒன்பதாவது நாளில் அறஃபஹ்வில் இருப்பவர்கள் நோன்பு நோற்காமல் இருப்பது ஸுன்னஹ் ஆகும். அங்கு நபி ﷺ அவர்கள் நோன்பு நோற்கவில்லை. ஹஜ் செய்யாதவர்கள் ஒன்பதாவது நாளில் அறஃபஹ் நோன்பு நோற்பது ஸுன்னத்தாகும்.
10, 11, 12, 13 ஆகிய நாட்களில் அனைவரும் நோன்பு நோற்காமல் இருப்பது அவசியம்.
ஆனால் தமத்துஃ அல்லது கிறான் முறையில் ஹஜ் செய்பவர்களில் 'ஹதீ' எனும் பலிப் பிராணியைக் கொடுப்பதற்கு வசதியற்றவர்கள், பத்தாவது நாளுக்கு முன்பு மூன்று நோன்புகள் நோற்க முடியாது போனால் 11, 12, 13 ஆகிய தஷ்ரீக்குடைய நாட்களில் நோன்பு நோற்பார்கள்.
9 ஆவது நாள் ஹஜ்ஜில் இருப்பவர்களுக்கும் 10, 11, 12, 13 ஆகிய நாட்கள் ஹஜ்ஜில் இருப்பவர்கள் மற்றும் ஹஜ்ஜுக்குச் செல்லாத அனைத்து முஸ்லிம்களுக்கும் உண்பதற்கும் பருகுவதற்கும் அல்லாஹ்வை நினைவு கூர்வதற்கும் உரிய நாட்களாகும்.
அதிகமானவர்கள் நரகிலிருந்து விடுதலை பெற்றுக் கொள்ளும் நாள் எது?
عن عائشة رضي الله عنها قالت: إن رسول الله ﷺ، قال: "ما من يوم أكثر من أن يعتق الله فيه عبدا من النار من يوم عرفة، وإنه ليدنو، ثم يباهي بهم الملائكة، فيقول: ما أراد هؤلاء".
صحيح مسلم 1348
அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: அறஃபஹ் நாளை விட அல்லாஹ் அடியார்களை நரகத்தில் இருந்து அதிகமாக விடுதலை செய்யும் வேறு எந்த ஒரு நாளும் இல்லை. நிச்சயமாக அவன் (அறஃபஹ்வில் உள்ளவர்களுக்கு) நெருங்குகிறான். பின்னர், அவர்கள் குறித்து மலக்குகளிடம் புகழ்பாராட்டி, இவர்கள் எதை விரும்புகிறார்கள்? என்று கூறுவான்.
அறிவிப்பவர்: ஆஇஷஹ் (றளியல்லாஹு அன்ஹா)
முஸ்லிம் 1348
عن عبد الله بن عمرو: أنّ النَّبيَّ ﷺ كان يقولُ: إنّ اللهَ عز وجل يُباهي مَلائكتَه عَشيَّةَ عَرفةَ بأهلِ عَرفةِ، فيقولُ: انظُروا إلى عِبادي، أتَوْني شُعثًا غُبرًا.
أحمد 7089
صححه الألباني، وحسنه الوادعي، وش الأرناؤوط.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறக்கூடியவர்களாக இருந்தார்கள்: நிச்சயமாக கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் அறஃபஹ்வின் மாலைப் பொழுதில் அறஃபஹ்வில் இருக்கும் மக்களைக் குறித்து தனது மலக்குமார்களிடம் புகழ் பாராட்டுகின்றான்; என்னுடைய அடியார்களைப் பாருங்கள்; அவர்கள் பரட்டைத் தலையர்களாக, புழுதி படிந்தவர்களாக என்னிடம் வந்திருக்கிறார்கள் என்று கூறுவான்.
அறிவிப்பவர்:அப்துல்லாஹ் இப்னு அமர் (றளியல்லாஹு அன்ஹுமா) அஹ்மத் 7089
விளக்கக் குறிப்புகள்:
அல்லாஹ் சில காலங்களை விடச் சில காலங்களைச் சிறப்பித்திருக்கிறான். அவ்வாறு சிறப்பிக்கப்பட்ட நாட்களில் ஒன்றுதான் அறஃபஹ் தினமாகும்.
அறஃபஹ் நாளில் தான் அதிகமானவர்கள் நரகிலிருந்து விடுதலை செய்யப்படுகின்றனர்.
துல்ஹிஜ்ஜஹ் மாதத்தில் ஒன்பதாவது நாளில் மக்கஹ்வுக்கு 22 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அறபஹ் மைதானத்தில் ஹாஜிகள் ஒன்று கூடுகின்றனர். அவர்கள் அல்லாஹ்விடத்தில் தங்கள் இம்மை, மறுமைத் தேவைகளை முறையிடுகின்றனர். அவனிடத்தில் பாவமன்னிப்பு வேண்டுகின்றனர். அல்லாஹ் அந்த நாளில் அவர்களிடம் மிகவும் நெருங்குகின்றான்.
அல்லாஹ் அவனுக்குத் தகுதியான முறையில் அடியார்களை நெருங்குகின்றான். அதே நேரத்திலே அவன் அர்ஷ் எனும் சிம்மாசனத்திற்கு மேலால் உயர்ந்தும் இருக்கின்றான். அவன் எவருக்கும் எதற்கும் ஒப்பற்றவன். அவனை அவனது படைப்புக்களைப் போன்று கற்பனை செய்வது மிகப் பெரும் தவறாகும்.
அல்லாஹ் அறஃபஹ்வில் கூடியிருக்கும் ஹாஜிகள் குறித்து தனது வானவர்களிடம் புகழ்ந்துரைகின்றான். அவர்களின் சிறப்பையும், அழகான செயலையும் எடுத்துரைத்து, அவர்களைப் பாராட்டுகின்றான்.
அல்லாஹ் தனது இவ்வடியார்களைப் பற்றி "இவர்கள் என்ன விரும்புகிறார்கள்?" என்று மலக்குகளிடம் இவர்களின் மகிமையைப் பறைசாற்றுவதில் இருந்து, இவர்கள் தங்கள் குடும்பங்களையும் நாடுகளையும் பிரிந்து, செல்வங்களையும் செலவு செய்து, உடல்களாலும் சிரமப்பட்டு இங்கே கூடியிருப்பது எதற்காக? பாவமன்னிப்பைப் பெற வேண்டும் என்பதற்காக அல்லவா? அவனது பொருத்தத்தையும் நெருக்கத்தையும் பெற வேண்டும் என்பதற்காக அல்லவா? எனவே இவர்கள் விரும்புவது இவர்களுக்குக் கிடைக்கும்; இவர்களது பாவங்கள் மன்னிக்கப்படும் என்பது தெளிவாகிறது.
அல்லாஹ் அவனது மகத்துவத்திற்கும் கண்ணியத்திற்கும் ஏற்ற விதத்தில் அடியார்களை நெருங்குதல், வானவர்களிடம் புகழ் பாராட்டுதல், கதைத்தல் ஆகிய அவனது சில பண்புகள் இந்த ஹதீஸில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரதான உசாத்துணைகள்:
- مشروع موسوعة الأحايث النبوية
- الموسوعة الحديثية، الدرر السنية
வருடத்தின் சிறந்த நாள் எது?
قال النبي صلى الله عليه وسلم: «أَعْظَمُ الْأَيَّامِ عِنْدَ اللَّهِ يَوْمُ النَّحْرِ، ثُمَّ يَوْمُ الْقَرِّ»
مسند أحمد (31/ 427) [19075] وسنن أبي داود (2/ 148) [1765]
நபி ﷺ கூறினார்கள்:
*அல்லாஹ்விடத்தில் நாட்களில் மிக மகத்தானது (-சிறந்தது ஹஜ்ஜுப் பெருநாளாகிய) அறுத்துப் பலியிடும் நாளாகும். பின்னர் (அதை அடுத்து வரும் பதினோராவது நாளாகிய – மினாவில் தங்கும்) கர்ருடைய நாளாகும்.*
(அஹ்மத்: 19075 , அபூதாவூத்: 1765)
பைஹகி, அல்பானி, வாதிஈ போன்றோர் இந்த ஹதீஸை ஆதாரப்பூர்வமானது என குறிப்பிட்டுள்ளனர்.
எனவே இந்நாட்களில் அல்லாஹ்வை அதிகம் அதிகம் நெருங்குவோம்.
துல்ஹிஜ்ஜஹ் பத்தாம் நாளின் சிறப்பு:
*يوم الحج الأكبر*
*யவ்முல்_ஹஜ்ஜில்_அக்பர் - மாபெரும் ஹஜ்ஜின் நாள் எது?*
யவ்முன்னஹ்ர் அறுத்துப் பலியிடும் நாள் = ஹஜ்ஜுப் பெருநாள் தினம்:
நபி ﷺ அவர்கள் மினாவில் இருந்தபோது, 'இது எந்த நாள் என்பதை நீங்கள் அறிவீர்களா?' எனக் கேட்டார்கள். அதற்கு மக்கள் 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்!' என்றனர். உடனே அவர்கள் *'இது புனிதமிக்க தினமாகும்!* இது எந்த நகரம் என்பதை நீங்கள் அறிவீர்களா?' என்று கேட்க மக்கள் 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்!' என்றனர். உடனே அவர்கள் '(இது) புனித மிக்க நகரமாகும்! இது எந்த மாதம் என்பதை அறிவீர்களா?' என்றதும் மக்கள், 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்!' என்றனர். பிறகு நபி ﷺ அவர்கள் '(இது) புனிதமிக்க மாதமாகும்!' எனக் கூறிவிட்டு, 'உங்களுடைய இந்த (புனித) நகரத்தில் உங்களுடைய இந்த (புனித) மாதத்தில் *உங்களுடைய இந்த நாள் எவ்வளவு புனிதமானதோ* அது போன்றே, அல்லாஹ் உங்கள் உயிர்களையும் உடைமைகளையும் உங்கள் மானம் மரியாதைகளையும் புனிதமாக்கியுள்ளான்!' எனக் கூறினார்கள்.
மற்றோர் அறிவிப்பில் 'நபி ﷺ அவர்கள், தாம் ஹஜ் செய்தபோது *நஹ்ருடைய நாளில் (ஹஜ்ஜுப் பெருநாளில்)* ஜம்றஹ்களுக்கிடையே நின்று கொண்டு, *'இது மாபெரும் ஹஜ்ஜின் தினமாகும்!'* எனக் கூறினார்கள். மேலும், 'அல்லாஹ்வே! நீயே சாட்சி!' என்றும் கூறி மக்களிடம் இறுதி விடை பெற்றார்கள். எனவே, மக்களும் 'இது நபி ﷺ அவர்கள் (நம்மிடம்) விடை பெற்று (உலகைவிட்டு)ச் செல்கிற ஹஜ்ஜாகும்!' எனப் பேசிக் கொண்டார்கள்.'
அறிவித்தவர்: இப்னு உமர் (றளியல்லாஹு அன்ஹுமா)
புகாரி 1742.
அல்_ஹஜ்ஜுல்_அக்பர் என்பது பெரிய ஹஜ் என்று அர்த்தம். யவ்முல்_ஹஜ்ஜில்_அக்பர் = பெரிய ஹஜ்ஜின் நாள் என்பது துல்ஹிஜ்ஜஹ் மாதத்தின் பத்தாவது நாளைக் குறிக்கும் என்பதை மேற்படி ஹதீஸில் இறுதி ஹஜ்ஜில் நபி ﷺ அவர்கள் கூறியதில் இருந்து புரிந்துகொள்ளலாம். அதேபோன்று அதற்கு முன்னுள்ள வருடமான ஒன்பதாவது வருடத்தில் நபி ﷺ அவர்கள் அபூபக்ர் (றளியல்லாஹு அன்ஹு) அவர்களை ஹஜ்ஜுக்கு தலைமை தாங்குவதற்காக அனுப்பி வைத்தார்கள். பின்னர், அலீ (றளியல்லாஹு அன்ஹு) அவர்களையும் அனுப்பி, ஸூறதுத் தவ்பஹ்வின் வசனங்களை ஹஜ்ஜில் யவ்முல்_ஹஜ்ஜில்_அக்பர் = பெரிய ஹஜ்ஜின் நாளில் மக்களுக்கு அறிவிக்குமாறு கட்டளையிட்டார்கள். அவ்வசனங்களில் இடம் பெற்றிருக்கும் யவ்முல்_ஹஜ்ஜில்_அக்பர் = பெரிய ஹஜ்ஜின் நாள் என்பது துல்ஹிஜ்ஜஹ் பத்தாவது நாள் என்பதை புகாரியின் பின்வரும் ஹதீஸும் தெளிவுபடுத்துகிறது.
புகாரி: அத்தியாயம் : 65,
பாடம் 3:
{மாபெரும் ஹஜ்ஜுடைய நாளில் அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் சார்பில் எல்லா மக்களுக்கும் விடுக்கப்படும் பொது அறிவிப்பு என்னவெனில், இணைவைப்பவர்களைவிட்டு அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நிச்சயமாக விலகிவிட்டார்கள். ஆகவே, (இறைமறுப்பிலிருந்தும் ஒப்பந்த மீறலிலிருந்தும்) நீங்கள் விலகிக்கொண்டால் அது உங்களுக்குத்தான் நல்லது. (அவ்வாறின்றி) நீங்கள் புறக்கணித்தால், அல்லாஹ்வை நீங்கள் தோல்வியுறச் செய்ய முடியாது என்பதை நன்கறிந்துகொள்ளுங்கள். மேலும், (நபியே!) கடுமையான தண்டனை உண்டெனும் “நற்செய்தி'யை இறைமறுப்பாளர்களுக்கு அறிவிப்பீராக!} எனும் (9:3ஆவது) இறைவசனம் ...
4656. அபூஹுறைறஹ் (றளியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதாவது:
அபூபக்ர் (றளியல்லாஹு அன்ஹு) அவர்கள் (தமது தலைமையில் நடந்த) அந்த ஹஜ்ஜின்போது “துல்ஹிஜ்ஜஹ் மாதம் பத்தாம் (நாளான நஹ்ருடைய) நாளில் மினாவில் “இந்த ஆண்டிற்குப் பிறகு இணைவைப்பவர் எவரும் ஹஜ் செய்யக் கூடாது என்றும், இறையில்லத்தை நிர்வாணமானவர் எவரும் சுற்றி (தவாஃப்) வரக் கூடாது' என்றும் அறிவிப்புச் செய்யும்படி அனுப்பிவைத்த அறிவிப்பாளர்களுடன் என்னையும் (ஒருவனாக) அனுப்பிவைத்தார்கள்.
பிறகு, நபி ﷺ அவர்கள் (அபூபக்ர் றளியல்லாஹு அன்ஹு அவர்களுக்குப் பின்னால்) அலீ இப்னு அபீதாலிப் (றளியல்லாஹு அன்ஹு) அவர்களை அனுப்பி, (இணைவைப்பாளர்களிடமிருந்து அல்லாஹ்வும் அவனுடைய தூதரும்) விலகிக்கொண்டது (பறாஅத்) குறித்துப் பொது அறிவிப்புச் செய்யும்படி கட்டளையிட்டார்கள்.
ஆகவே, எங்களுடன் அலீ (றளியல்லாஹு அன்ஹு) அவர்களும் *நஹ்ருடைய (ஃதுல்ஹிஜ்ஜஹ் பத்தாம்) நாளன்று* மினாவாசிகளிடையே (இணைவைப்போரிடமிருந்து அல்லாஹ்வும் அவனுடைய தூதரும்) விலகிக்கொண்டனர் என்றும், இந்த ஆண்டுக்குப் பிறகு இணைவைப்பாளர் எவரும் ஹஜ் செய்யக் கூடாது என்றும் இறையில்லத்தை நிர்வாணமானவர் எவரும் சுற்றி (தவாஃப்) வரக் கூடாது என்றும் அறிவிப்புச் செய்தார்கள்.
மற்றொரு அறிவிப்பில் (புகாரி 3177): அபூஹுறைறஹ் (றளியல்லாஹு அன்ஹு) கூறினார்கள்: யவ்முல்_ஹஜ்ஜில்_அக்பர்’ என்பது இந்த 'யவ்முன்_நஹ்ர்’ (பத்தாம் நாள்)தான். இது, 'பெரிய ஹஜ்' என்று அழைக்கப்பட்டதற்குக் காரணம் மக்கள் (உம்றஹ்வை) 'சிறிய ஹஜ்’ என்று அழைத்ததேயாகும்.
*أيام التشريق*
அய்யாமுத் தஷ்ரீக்:
صحيح مسلم
1141 ( 144 ) عن نبيشة الهذلي ، قال : قال رسول الله ﷺ : " أيام التشريق أيام أكل وشرب وذكرٍ لِله ".
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:
தஷ்ரீக்குடைய நாட்கள் உண்ணுவதற்கும் பருகுவதற்கும் அல்லாஹ்வை நினைவு கூர்வதற்குமுரிய நாட்களாகும்.
(முஸ்லிம் 1141)
ஹதீஸ் விளக்கம்:
அய்யாமுத் தஷ்ரீக் என்பது துல்ஹிஜ்ஜஹ் மாதத்தின் 11, 12, 13 ஆகிய ஹஜ்ஜுப் பெருநாளை அடுத்து வரும் மூன்று நாட்களுமாகும்.
இப்பெயரைக் கொண்டு இந்நாட்கள் அழைக்கப்படுவதற்கான காரணம் யாதெனில்: ஆரம்ப காலத்தில் இம்மூன்று நாட்களிலும் மனிதர்கள் உழ்ஹிய்யஹ் இறைச்சிகளைப் பாதுகாத்து வைப்பதற்காக; அவற்றை வெட்டித் துண்டாக்கி, பதப்படுத்தி வெயிலில் காய்வதற்கு விடக் கூடியவர்களாக இருந்தனர். இவ்வாறு பதப்படுத்தும் செயல்பாட்டுக்கு *தஷ்ரீக்* என்று அறபியில் கூறப்படும்.
இம்மூன்று நாட்களும் நோன்பு நோற்பதற்குரிய நாட்களல்ல; உண்ணுவதற்கும் பருகுவதற்கும் உரிய நாட்களாகும். ஹஜ்ஜில் இருப்பவர்களுக்கு 'ஹதீ' (هدي) என்னும் குர்பானிப் பிராணி கிடைக்கவில்லையாயின் அவர்களுக்கு நோன்பு நோற்பதற்கு அனுமதியுண்டு.
இந்நாட்கள் அதிகமாக அல்லாஹ்வை திக்ர் செய்வதற்குரிய நாட்களாகும். அல்லாஹ் எமக்கு அருளியிருக்கின்ற இந்த உணவிற்காக அவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்.
இந்த ஹதீஸ் இஸ்லாத்தில் இருக்கும் இலகுவான தன்மைக்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றது. இந்நாட்களில் நோன்பு நோற்பது தடை செய்யப்பட்டு; தாராளமாக வீண்விரையமின்றி உண்டு, பருகி சந்தோசப்படுவதை இஸ்லாம் வரவேற்கிறது. முழு வருடமும் நோன்பு நோற்பதை இஸ்லாம் தடை செய்துள்ளது.
Sunnah Academy:
facebook.com/Sunnah.Acad
instagram.com/sunnah_academy
youtube.com/@Sunnah_academ
Telegram:
t.me/sunnah_academy
WhatsApp:
chat.whatsapp.com/E1aiTCVMAzL9u1N1vGRKdp