வறுமை ஒழிய

உலகில் இறைவன் பல வகையான மனிதர்களைப் படைத்திருக்கிறான். அவர்களுக்கு மத்தியில் பல ஏற்றத் தாழ்வுகளையும் உண்டாக்கியிருக்கிறான்.

நிறத்தால், மொழியால், உருவ அமைப்பால், குணத்தால், அறிவால் வேறுபடுகிற மனிதர்களைப் பார்க்கிறோம்.

இப்படிப்பட்ட வேறுபாடுகளில் ஒன்று தான் பொருளாதாரத்தால் வேறுபட்டிருப்பது.

உலகில் வாழுகிற எல்லா மனிதர்களும் பணக்காரர்களாகவும் இல்லை, எல்லா மனிதர்களும் ஏழைகளாகவும் இல்லை.

இது இறைவனின் ஏற்பாடு.

அல்லாஹ் தன் திருமறையில் தான் நாடியோருக்கு அல்லாஹ் வாழ்வாதாரத்தை அதிகப்படுத்தித் தருகிறான், தான் நாடியோருக்கு அளவோடு வழங்குகிறான் என்று கூறுகிறான்.

ஆக வாழ்வாதாரம் தாராளமாக வழங்கப்பட்டவர்கள் இல்லாதோருக்கு தர்மம் வழங்க வேண்டும்,ஜக்காத்தும் வழங்க வேண்டும்.

திருமறைக்குர்ஆனில் அல்லாஹ் எங்கெல்லாம் தொழுகையை சொல்லிக்காட்டுகிறானோ அங்கெல்லாம் ஜக்காத்தையும் தான தர்மங்களையும் சொல்லிக் காட்டுகிறான்.

‘தொழுகையை நிலை நிறுத்துங்கள் ஸகாத்தையும் கொடுங்கள்”

(திருக்குர்ஆன் 02:43,02:83, 02:110)

மூஃமின்களுடைய பண்புகளைச் சொல்லிக் காட்டும் போது அவர்கள் இறைவன் வழங்கியதிலிருந்து தான தர்மம் செய்வார்கள் என்று பல இடங்களில் புகழ்ந்து சொல்கிறான்.

செல்வம் செல்வந்தர்களிடையே மட்டும் சுற்றிக் கொண்டிருக்க கூடாது

உங்களிலுள்ள செல்வந்தர்களுக்குள்ளேயே (செல்வம்) சுற்றிக் கொண்டிருக்காமல் இருப்பதற்காக (இவ்வாறு பங்கிட்டுக் கொடுக்கக்கட்டளையிடப் பட்டுள்ளது), 59:7

ரமலானில் வாரி வழங்குவோம்

நபி(ஸல்) அவர்கள் மக்களுக்கு நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தனர். ஜிப்ரீல் (அலை) ரமலான் மாதத்தில் நபி(ஸல்) அவரிகளைச் சந்திக்கும் வேளையில் நபி(ஸல்)அதிகமதிகம் வாரி வாரி வழங்குவார்கள். ஜிப்ரில்(அலை) ரமலானின் ஒவ்வொரு இரவும் – ரமலான் முடியும்வரை – நபி (ஸல்) அவர்களைச் சந்திப்பார். நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரிலிடம் குர்ஆனை ஓதிக் காட்டுவார்கள். ஜிப்ரில் (அலை) தம்மைச் சந்திக்கும்போது மழைக் காற்றை விட அதிகமாக நபி (ஸல்) அவர்கள் வாரி வழங்குவார்கள். இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.புகாரி 1902

ஜக்காத் பெற தகுதியுடையோர்

(ஜகாத் என்னும்) தானங்கள் தாரித்திரர்களுக்கும் ஏழைகளுக்கும் தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும் இஸ்லாத்தின் பால் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும் அடிமைகளை விடுதலை செய்வதற்கும் கடன்பட்டிருப்பவர்களுக்கும் அல்லாஹ்வின் பாதையில் (போ ர்புரிவோருக்கும்) வழிப்போக்கர்களுக்குமே உரியவை.(9:60).

தானதர்மம் செய்வது என்பது மூஃமின்களின் பண்பு. மாறாக கஞ்சத்தனம் என்பது நயவஞ்சகர்களின் பண்பாகும்.

நாம் கஞ்சத்தனம் மேற்கொண்டால் இறைக்கோபத்திற்கு ஆளாகி நமக்கு அழிவு ஏற்படுவது நிச்சயம்.

கஞ்சத்தனத்தை விட்டும் உங்களை நான் எச்சரிக்கிறேன் அதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்,ஏனெனில் இந்தக் கஞ்சத்தனம் தான் உங்களுக்கு முன்னால் வாழ்ந்த சமுதாயத்தை அழித்தது என்று நபியவர;கள் கருமித்தனத்தின் விளைவை எச்சரிக்கிறாகர்ள்.

கஞ்சத்தனம் நயவஞ்சகத்தின் அடையாளமாகும்

அவர்களில் சிலர் அல்லாஹ் தன் அருட்கொடையிலிருந்து நமக்கு(ச்செல்வத்தை) அளித்தால் மெய்யாகவே நாம் (தாராளமாக தான)தர்மங்கள் செய்து நல்லடியாகர்ளாகவும் ஆகிவிடுவோம் என்று அல்லாஹ்விடம் வாக்குறுதி செய்தார்கள்.(அவ்வாறே) அவன் அவர்களுக்குத் தன் அருட்கொடையிலிருந்து வழங்கிய போது அதில் அவர்கள் உலோபித்தனம் செய்து அவர்கள் புறக்கணித்தவகர்ளாக பின் வாங்கி விட்டனர்.

எனவே அவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிக்கு மாறு செய்ததாலும், அவர்கள் பொய் சொல்லிக் கொண்டே இருந்ததனாலும் அல்லாஹ் அவர்களுடைய உள்ளங்களில் தன்னைச் சந்திக்கும் (இறுதி) நாள் வரையில் நயவஞ்சகத்தைப் போட்டுவிட்டான்.(9:75,76,77)

ஜக்காத் வழங்கவில்லையெனில் அழிவு நிச்சயம்

முந்திய காலகட்டத்தில் வாழ்ந்த ஒருவர் விளைச்சலில் ஒரு பங்கை வழமையாக வழங்கி வந்தார் மரணம் நெருங்கவே தன் பிள்ளைகளை அழைத்து அறுவடை செய்யும் போது ஏழைகளுக்கும் ஒரு பங்கு கொடுங்கள் அது தான் முறை என்று சொல்லிவிட்டு மரணமடைந்து விட்டார் பிள்ளைகள் தந்தையின் உபதேசத்தை மறந்து விட்டு இரவோடிரவாக அறுவடை செய்யசென்றனர் ஆனால் அல்லாஹ் அத்தோட்டத்தை அழித்து சாம்பலாக்கிவிட்டான்.

நிச்சயமாக நாம் தோட்டமுடையவர்களைச் சோதித்தது போலவே நாம் அவர்களைச் சோதித்தோம். அ(த் தோட்டத்திற்குடைய)வர்கள் அதில் உள்ள கனிகளை அதிகாலையில் சென்று பறித்து விடுவோம் என்று சத்தியம் செய்தார்கள்.

அல்லாஹ் நாடினால் என்று அவர்கள் கூறவில்லை.

எனவே அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த போது உம் இறைவனிடமிருந்து சுற்றக் கூடிய(நெருப்பின் ஆபத்)து சுற்றி(த் தோட்டத்தை) அழித்து விட்டது.

(நெருப்புக் கரித்து விட்ட படியால் அத்தோட்டம்) காலையில் கருத்த சாம்பலைப் போல ஆகியிருந்தது.

(இது அறியாது) காலையில் எழுந்த அவர்கள் ஒருவரையொருவ ர்அழைத்தனர்.

நீங்கள் (விளைந்த) கனிகளைக் கொய்பவர்களாக இருந்தால் உங்கள் தோட்டத்திற்கு அதிகாலையில் செல்லுங்கள் (என்று கூறிக் கொண்டனர்).

எனவே அவர்கள் (பிறர் அறியாது) மெதுவாகப் பேசிக் கொண்டு சென்றனர்.

எந்த ஏழை எளியவரும் இன்று உங்களிடம் அ(த்தோட்டத்)தில் நிச்சயமாகப் பிரவேசிக்கக் கூடாது (என்று).

உறுதியுடன் சக்தியுடையவர்களாகக் காலையில் சென்றனர்.

ஆனால் அவர்கள் அதை (தோட்டத்தை அழிந்து போன நிலையில்)கண்ட போது: “நிச்சயமாக நாம் வழி தவறி (வேறு தோட்டத்திற்கு) வந்து விட்டோம் என்று கூறினார்கள்

(பின்னர் கவனித்துப் பார்த்துவிட்டு) “இல்லை! (ஏழை எளியோர்க்கு எதுவும் கிடைக்காமல் செய்த) நாம் தான் பாக்கியம் இழந்தவர்களாக ஆகிவிட்டோம் (என்றும் கூறிக் கொண்டனர்).

அவர்களில் நடுநிலையுள்ள ஒருவர் “நீங்கள் தஸ்பீஹு செய்திருக்க வேண்டும் என்று நான் உங்களுக்குக் கூறவில்லையா? என்று கூறினார்.

எங்கள் இறைவன் தூயவன். நாம் தாம் நிச்சயமாக அநியாயம் செய்தவர்கள் ஆகிவிட்டோம் என்றும் கூறினர்.

பின்னர் அவர்களில் சிலர் சிலரை நிந்தித்தவர்களாக முன்னோக்கினர்.

அவர்கள் கூறினார்கள்: “எங்களுக்குண்டான கேடே! நிச்சயமாக நாம் வரம்பு மீறியவர்களாக இருந்தோம்.

எங்களுடைய இறைவன் இதைவிட மேலானதை எங்களுக்கு மாற்றித்தரக்கூடும். நாங்கள் (தவ்பா செய்து) நிச்சயமாக எங்கள் இறைவன் மீதே ஆதரவு வைக்கிறோம் (எனக் கூறினர்)..(68:17-32 மேலும் பார்க்க2:266)

கடுமையான எச்சரிக்கை

நபி (ஸல்) அவர்கள் மரணித்து அபூபக்கர் (ரலி) (ஆட்சிக்கு) வந்ததும் அரபிகளில் சிலர் (ஸகாத்தை மறுத்ததன் மூலம்) இறைமறுப்பாளர்களாகி விட்டனர். (அவர்களுடன் போர் தொடுக்க அபூபக்கர்(ரலி)தயாரானார் (உமர்(ரலி), லா இலாஹ இல்லல்லாஹ் கூறியவர் தம் உயிரையும் உடைமையையும் என்னிடமிருந்து காத்துக் கொண்டார் தண்டனைக்குரிய குற்றம் புரிந்தவரைத் தவிர அவரின் விசாரணை அல்லாஹ்விடமே உள்ளது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கும்போது, நீங்கள் எவ்வாறு இந்தமக்களுடன் போரிட முடியும்? என்று கேட்டார். அபூ பக்கர்(ரலி), உமரை நோக்கி, அல்லாஹ்வின் மீது ஆணையாக, தொழுகையையும் ஸகாத்தையும் பிரித்துப் பார்ப்போருடன் நிச்சயமாக நான் போரிடுவேன். ஸகாத் செல்வத்திற்குரிய கடமையாகும் அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி(ஸல்) அவர்களிடம் வழங்கி வந்த ஓர் ஆட்டுக் குட்டியை இவர்கள் வழங்க மறுத்தால் கூட அதை மறுத்தற்காக நான் இவர்களுடன் போரிடுவேன் என்றார். இது பற்றி உமர்(ரலி), அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூபக்கரின் இதயத்தை (தீர்க்கமான தெளிவைப் பெரும் விதத்தில்) அல்லாஹ் விசாலாமாக்கியிருந்தாலேயே இவ்வாறு கூறினார். அவர் கூறியதே சரியானது என நான் விளங்கிக் கொண்டேன் என்றார்.

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.புகாரி 1399-1400

மறுமையில் கொடிய வேதனை கிடைக்கும்:

எவர்கள் பொன்னையும் வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றாகர்ளோ, (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக!(நபியே! அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக!) அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும் முதுகுகளிலும் சூடு போடப்படும் – (இன்னும்) “இது தான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள் (என்று கூறப்படும்). (9:34,35)

அல்லாஹ் யாருக்கேனும் செல்வதைக் கொடுத்து அவன் அதற்கான ஜகாத்தை நிறைவேற்றவில்லையாயின் கியாமத் நாளில் அச்செல்வம் கடுமையான நஞ்சுடைய பாம்பாக மாறும். அது அவனுடைய கழுத்தில் சுற்றிக் கொண்டு தன்னுடைய இரண்டு விஷப் பற்களால் அவனுடைய தாடையைக் கொத்திக் கொண்டே, நானே உன்னுடைய செல்வம் நானே உன்னுடைய புதையல் என்று கூறும்.நபி(ஸல்) இதைக் கூறிவிட்டு, அல்லாஹ் தன் அருளினால் தங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருட்களில் உலோபித்தனம் செய்கிறவர்கள் அது தமக்கு நல்லதென எண்ணவே வேண்டாம். அவ்வாறன்று! அது அவர்களுக்குத் தீங்குதான் அவர்கள் உலோபித்தனத்தால் சேர்த்துவைத்த (பொருள்கள்) எல்லாம் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக போடப்படும். என்ற (திருக்குர்ஆன் 03:180) வசனத்தை ஓதினார்கள். என அபூஹரைரா (ரலி) அறிவித்தார் புகாரி 4565.

ஜக்காத் மற்றும் தானதர்மம் செய்வதினால் ஏற்படும் சிறப்புகளும் பலன்களும்:

வானவர்களின் பிரார்த்தனை:

ஒவ்வொரு நாளும் இரண்டு வானவர்கள் இறங்குகின்றனர். அவ்விருவரில் ஒருவர்,அல்லாஹ்வே! தர்மம் செய்பவருக்குக் பிரதிபலனை அளித்திடுவாயாக! என்று கூறுவார்.இன்னொருவர் அல்லாஹ்வே! (தர்மம் செய்யாமல் பொருளைத்) தடுத்து வைத்துக்கொள்பவர்களுக்கு அழிவை ஏற்படுத்துவாயாக! என்று கூறுவார் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.புகாரி 1442.

அல்லாஹ் தருவான்:

அல்லாஹ், ஆதமின் மகனே! (மனிதனே! மற்றவர்களுக்காகச்) செலவிடு உனக்கு செலவிடுவேன் என்று கூறினான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். புகாரி 5352

இறை நேசம் கிட்டும்:

(பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும் துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள், தவிர கோபத்தை அடக்கிக் கொள்வார்கள், மனிதர் (கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள், (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்ல்லாஹ் நேசிக்கின்றான். 3;:134

தர்மம் வளரும்

யார் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரிச்சம் பழத்தின் மதிப்புக்குத் தர்மம் செய்தாரோ.. அல்லாஹ் பரிசுத்தமானவற்றைத் தவிர வேறெதையும் ஏற்றுக் கொள்வதில்லை – அதை நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய வலது கரத்தால் ஏற்று, பிறகு நீங்கள் உங்களின் குதிரைக் குட்டியை வளர்ப்பது போன்று அதன் நன்மையை மலைபோல் உயரும் அளவுக்கு வளர்த்து விடுவான்.. என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.புகாரி 1410

பல மடங்காக ஆக்கப்படும்:

 (கஷ்டத்திலிருப்போருக்காக) அல்லாஹ்வுக்கு அழகியக் கடன் எவர்கொடுக்கின்றாரோ அதை அவருக்கு அவன் இருமடங்காக்கிப் பன்மடங்காகச் செய்வான் – அல்லாஹ் தான் (உங்கள் செல்வத்தைச்)சுருக்குகிறான், (அவனே அதைப்) பெருக்கியும் தருகிறான், (2:245, 261, 265)

இறை நெருக்கம் உண்டாகும்:

தாம் (தர்மத்திற்காகச்)செலவு செய்வது தங்களுக்கு அல்லாஹ்வின் நெருக்கத் தையும் இறைதூதரின் பிரார்த்தனையையும் (தங்களுக்குப்) பெற்றுத் தரும் என நம்புகிறார்கள், நிச்சயமாக அது அவர்களை (அல்லாஹ்வின்) அண்மையில் கொண்டு சேர்ப்பது தான், அதி சீக்கிரத்தில் அல்லாஹ் அவர்களைத் தன் ரஹ்மத்தில் (பேரருளில்) புகுத்துவான் – நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் பெரும் கிருபையாளனாகவும் இருக்கின்றான் (9:99)

அதுதான் அழியாத நஷ்டமடையாத வியாபாரம்:

நாம் அவர்களுக்கு அளித்திருப்பதிலிருந்து இரகசியமாகவும் வெளிப்படையாகவும் (அல்லாஹ் வின் பாதையில்) செலவு செய்கிறார்களோ (ஆகிய இவர்கள்) என்றும் அழியாத ஒரு வியாபரத்தையே ஆதரவுவைக்கிறார்கள் 35:29

அல்லாஹ்வின் அருள் பிரத்யேகமாக கிடைக்கும்

ஆனால் என்னுடைய அருளானது எல்லாப் பொருள்களிலும்(விரிந்து பரந்து) சூழ்ந்து நிற்கிறது, எனினும் அதனை பயபக்தியுடன்(பேணி) நடப்போருக்கும் (முறையாக) ஜகாத்து கொடுத்து வருவோருக்கும் நம்முடைய வசனங்களை நம்புகிறவர்களுக்கும் நான்விதித்தருள் செய்வேன் என்று கூறினான்.5:156

ஒரு மனிதன் திறந்த பாலைவெளியில் நடந்து செல்கிறான் திடீரென வானில் ஒரு அசரீரி கேட்கிறது இன்னாருடைய நிலத்தில் மழை பொழிய வேண்டும் என்று. உடனே மேகங்கள் திரள ஆரம்பிக்கிறது.அவைகள் செல்லவே அந்த மனிதரும் அவைகளை பின் தொடர்நது செல்கிறார். மழை பொழிகிறது. தண்ணீர் ஓடையாக செல்கிறது. அங்கே ஒரு மனிதர் வயலில் வேலை செய்து கொண்டிருக்கிறார் அவர் வரப்பை வெட்ட அந்த மழை நீர்நேராக அந்த விவசாயியின் விளை நிலத்தில் சென்று சேர்கிறது.வந்தவருக்கு ஆச்சரியம்.அவரிடம் அவர் பெயரைக் கேட்க வானத்தில் கேட்ட அதே பெயர். ஏன் மற்றவர்களுக்கல்லாமல் உங்களுக்கு மட்டும் மழை பொழிந்தது என்று கேட்க அதற்கு அவர் நான் அறுவடை செய்யும் போது விளைச்சலை மூன்று பங்காக வைப்பேன் ஒரு பங்கை எனக்கும் என்குடும்பத்திற்கும், இன்னொரு பங்கை மீண்டும் விவசாயம் செய்வதற்கும் மற்றொரு பங்கை ஏழை எளியவர்களுக்கும் கொடுத்துவிவேன் என்று சொல்கிறார் என நபியவர்கள் சொன்னார்கள் .முஸ்லிம்

இறைவனுடைய மன்னிப்பும், அருளும், செல்வமும் கிடைக்கும்:

(தான தர்மங்கள் செய்வதினால்) வறுமை உண்டாகிவிடும் என்று அதைக்) கொண்டு உங்களை ஷைத்தான் பயமுறுத்துகிறான், ஒழுக்க மில்லாச் செயல்களைச் செய்யுமாறும் உங்களை ஏவுகிறான், ஆனால் அல்லாஹ் (நீங்கள் தான தருமங்கள் செய்தால்) தன்னிடமிருந்து மன்னிப்பும் (அருளும் பொருளும்) மிக்க செல்வமும் (கிடைக்கும் என்று) வாக்களிக்கின்றான் 2:268

நரக விடுதலை கிடைக்கும்

பேரீச்சம் பழத்தின் சிறு துண்டையேனும் (தர்மம்) செய்து நரகத்திலிருந்து(உங்களைப்) பாதுகாத்துக் கொள்ளுங்கள். என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அதீ இப்னு ஹாத்திம்(ரலி) அறிவித்தார்.புகாரி 1417.

மறுக்கப்படும் முன் தர்மம் செய்யுங்கள்

உங்களிடையே செல்வம் பெரும்க் கொழிக்காதவரை மறுமை நாள் ஏற்படாது.எந்தளவுக்கெனில் அந்நாளில் பொருளுடையவன் தன்னுடைய தர்மத்தை யார்தான் வாங்கப் போகிறார் என்று கவலை கொள்வான். மேலும், யாரிடமாவது அதைக் கொடுக்க முனைந்தால் அவன் எனக்குத் தேவையில்லை என்று கூறுவான்.என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

புகாரி 1412

தனது மரணத்துக்குப் பின்பும் நடந்து கொண்டிருக்கக் கூடிய தர்மத்தைச் செய்தவர்  ஸதகத்துல் ஜாரியா என்ற நிரந்தர நற்கூலியைப் பெருகிறார்

இறைவனின் அர்ஷின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத அந்நாளில் தானதர்மம் செய்தவர் இறைவனின் அர்ஷின் நிழலில் இருப்பார்.

ஸதக்கா என்ற வாசல் வழியாக சொர்க்கத்திற்குள் அழைக்கப்படுவார்

எனவே கஞ்சத் தனம் கொள்ளாமல் நமக்கு அல்லாஹ் வழங்கிய செல்வங்களிலிருந்து தானதர்மம் மற்றும் ஜக்காத் வழங்கி எல்லா நன்மைகளையும் பெறுவோமாக.

- ஹாஜா முஹ்யித்தீன் ஃபிர;தௌஸி
أحدث أقدم