ஜஹம் பின் ஸப்வான் என்பவரைப் பின்பற்றுகின்றவர்கள் 'ஜஹமிய்யாக்கள் எனப்படுவர். ஜஹம் பின் ஸப்வான் குராஸானில் (ஈரான்) உள்ள திர்மித் எனும் பகுதியைச் சேர்ந்தவர். இவர் சில
தத்துவங்களையும், சித்தாந்தங்களையும் அடிப்படையாகக் கொண்டவர். இவர் அல்லாஹ்வைப் பற்றியே அதிகமாகத் தர்க்கம் புரிந்துள்ளார். இவருடைய அடிப்படைக் கொள்கைகள் கீழ்வருமாறு:
1.அருள்மறை குர்ஆன்படைக்கப்பட்டது என்ற நம்பிக்கை.
2. அல்லாஹ் நபி மூஸா(அலை)
அவர்களுடன் பேசவில்லை, அவன் பேசவும் மாட்டான்.
3. அல்லாஹ்வை (மறுமையில்) காணமுடியாது.
4. அல்லாஹ் அர்ஷின் மீது இல்லை என்பன போன்ற குர்ஆனுக்கும் நபிவழிக்கும் நேரடியாக முரண்படுகிற கருத்துக்களை உலகம் முழுவதும் பரவச் செய்ததன் மூலம் குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் எதிராகப் புரட்சி செய்ததுடன் அஹ்லுஸ் ஸுன்னத் வல்
ஜமாஅத்தினரின் கொள்கைகளையும் எதிர்த்து வந்தார். மேற்கூறப்பட்ட அம்சங்களுடன், மேலும் மூன்று முக்கியமான அடிப்படைக் கொள்கைகளையும் அறிமுகம் செய்தார். அவைகளாவன.
1. அல்லாஹ்வின் இயல்புகள், பண்புகள் போன்றவற்றைப் பாழ்படுத்துதல். அதாவது, அல்லாஹ்வை பண்புகள் கூறி வர்ணிப்பது அவனை படைப்புகளுக்கு ஒப்பாக்குவதாகும்
என்ற தவறான கருத்தைச் சொல்வது. இக்கருத்தை நிலைநிறுத்துவதற்காக அல்குர்ஆனிலும், ஹதீஸிலும்
இடம்பெற்றுள்ள அல்லாஹ்வின் பண்புகளை மறுத்துரைக்கின்றனர்.
2. நிர்ப்பந்தம்: மனிதன் எதனையும் தானாகச் செய்ய முடியாது. ஏனெனில், மனிதனுடைய எல்லாச் செயல்களும் அல்லாஹ்வின் நிர்ப்பந்தத்தின் அடிப்படையிலேயே நடைபெறுகின்றன. எனவே, மனிதன் எதனையும் தானாகச் செய்கின்ற ஆற்றலையோ, தேர்வு செய்கின்ற சுதந்திரத்தையோ பெறமாட்டான்.
3. ஈமான் என்பது ஒரு மனிதன் அல்லாஹ்வைப்பற்றி அறிந்து கொள்வதாகும். எனவே, நாவினால் அல்லாஹ்வைப் புறக்கணிக்கின்ற ஒரு மனிதன் இறை நிராகரிப்பாளாராக மாட்டான். ஏனெனில், ஒரு மனிதன் அல்லாஹ்வைப் புறக்கணிப்பதால், அவனிடமிருந்து அல்லாஹ்வைப் பற்றிய
அறிவு நீங்கிவிடுவதில்லை. மேலும், ஈமான் என்பது குறையவும் மாட்டாது. மேலும், முஃமின்கள் அனைவரும் ஈமானில் ஒரே
தரத்தையுடையவர்களாவர். ஈமானைப் பொறுத்தவரை அவர்களிடையே ஏற்றத்தாழ்வு கிடையாது.
மேலே குறிப்பிடப்பட்ட மூன்று அடிப்படைகளுமே ஜஹமிய்யாக்களின் வழிகேட்டுக்கு மிக முக்கியமான காரணங்களாக இருந்துள்ளன.
ஜஹம் பின் ஸப்வானுக்கு இக்கொள்கை ஜஃத் பின் திர்ஹம் மூலம் கிடைத்தது. இவர் தாபியீன்கள் காலத்தில் வாழ்ந்தவர். மேற்கூறப்பட்ட கொள்கைகளால் கவரப்பட்டு வழி கெட்டவர்களில் ஒருவரான ஜஃத் பின் திர்ஹம் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தன்று ஈராக்கில் வைத்துக்கொல்லப்பட்டார். (அல்-தஹமீ மீஸானுல் இஃதிதால் 1:369).
இக்கொள்கையை முதலில் அறிமுகம் செய்தவர் நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்த லபீத் பின் அஃஸம்தான் எனவும் சில வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ஜஹமிய்யாக்கள் காபிர்கள் என்பதே இமாம் அஹ்மத் பின் ஹம்பல்(ரஹ்) அவர்களதும் அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத்தின் அறிஞர்களதும் கருத்தாகும். (இப்னு தைமிய்யா: மஜ்மூ௨ பதாவா 12- 4)
'ஜஹமிய்யாக்கள் இறைநிராகரிப்பாளர்கள் ஆவார்கள்! என லபுஸ்ஸாலிஹீன்களில் 500 அறிஞர்கள் தீர்ப்புக் கூறியுள்ளதாக இமாம் இப்னுல் கையிம்(ரஹ்) கூறுகின்றார்கள். (இப்னுல் கையிம்: நூனிய்யா 1:115)
ஜஹமிய்யாக்கள் என்போர் இன்று உலகத்தில் இல்லை என்று சிலர் கருதுகின்றனர், ஜஹமிய்யாக்கள் என்ற பெயரில் இவர்கள் காணப்படாவிடினும், அவர்களது கொள்கைகளுடனும் கோட்பாடுகளுடனும் வாழக்கூடிய மக்கள் காணப்படுகின்றனர். ஜஹமிய்யாக்களின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் முழுமையாக அஷாஇராக்களும், முஃதஸிலாக்களும் பின்பற்றுகின்றனர்.
ஜமாலுத்தீன் அல்காஸிமீ(ரஹ்) அவர்கள், பின்வருமாறு கூறினார்கள்:
'ஜஹமிய்யாக்கள் அழிந்துவிட்டனர் என்று சிலர் கருதுகின்றனர். ஆனால், முஃதஸிலாக்கள் ஜஹமிய்யாக்களின் ஒரு பிரிவினர் ஆவர். அதேபோன்று, அஷாஇராக்களும், தமது கொள்கை கோட்பாடுகளில் பெரும்பாலும் ஜஹமிய்யாக்களையே பின்பற்றுவர் என்கிற செய்தி, தர்க்கக்கலையில் புலமையும், ஜஹமிய்யாக்களின் கொள்கைகள் பற்றிய அறிவும், ஸலபுஸ்ஸாலிஹீன்களின் கருத்துக்களில் நுணுக்கமும் கொண்டவர்களுக்குத் தெளிவாகத் தெரியும். (நூல்: அல்- காஸிமி: தாரீக் அல்-ஜஹமிய்யா: பக்கம்:6) (றுஹைலீ மவகிஃபு அஹ்லிஸ் ஸுன்னா 1:156).
- மெளலவி. எம். எம். ஸக்கி, B.A(Hons) மதினா