அறிமுகம்:
‘நேர்வழி நடந்த கலீபாவான அலி (ரழி) அவர்களுக்கு எதிராகப் புரட்சிகளில்
ஈடுபட்டோர் ஹவாரிஜ்கள் ஆவர்’. ஆயினும் அறிஞர்களின் கூற்றுக்களில் இருந்து,
இஸ்லாமிய ஆட்சியாளருக்கு எதிராகப் புரட்சி செய்பவர்கள் அனைவரும் இப்பெயர்
கொண்டு அழைக்கப்படுவார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம். நேர்வழி நடக்கின்ற ஆட்சியாளர்களுக்கு எதிராகப் புரட்சிகளில் ஈடுபடுவோரும் இதில் அடங்குவர்.
உருவாக்கம்:
ஹவாரிஜ்கள் உருவான காலம் தொடர்பாகப் பல கருத்துக்கள் உள்ளன.
அக்கருத்துக்களில் பிரதானமான கருத்தாக பின்வரும் கருத்து கருதப்படுகின்றது.
ஹிஜ்ரி 36 மற்றும் 37ல் நடைபெற்ற ஸிப்பீன் யுத்தத்தை முடிவுக்குக்
கொண்டு வருவதற்காகப் போரில் ஈடுபட்ட இருதரப்பினரும் முடிவு செய்தனர்.
அதற்காக ஸஹாபாக்களான அபூ மூஸா அல் அஷ்அரீ (ரலி), அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி)
ஆகியோரை நடுவர்களாக நியமித்தனர். கலீபா அலி (ரலி) அவர்களின் தரப்பிலிருந்த
சிலர் இதனை ஏற்றுக் கொள்ள மறுத்து அவருக்கெதிராகக் கிளர்ச்சி செய்தனர். தம்
தரப்பிலுள்ள நியாயங்களைத் தெளிவுபடுத்துவதற்காக இவர்களுடன் கலீபா பல
அமர்வுகளை நடத்தினார்கள். எனினும், கிளர்ச்சியாளர்கள் அலி (ரலி) அவர்களின்
தரப்பிலிருந்த நியாயங்களை ஏற்றுக் கொள்ள மறுத்தனர். இதன் பின்னணியில் தான்
கலீபா அலி (ரலி) அவர்களுக்கும் இக்கிளர்ச்சியாளர்களுக்குமிடையில் ஹிஜ்ரி
38ஆம் ஆண்டு ‘நஹ்ர்வான்’ என்ற இடத்தில் யுத்தம் மூண்டது.
பெயர்களும் பிரிவுகளும்:
இஸ்லாமிய அரசியல் வரலாற்றில் இவர்கள் ‘ஹரூரிய்யா’, ‘அஷ்ஷூராத்’,
‘அல்மாரிகா’, ‘அல் முஹக்கிமா’, ‘அந்நவாஸிப்’ போன்ற பல பெயர்களில்
பிரபலமாகியுள்ளனர். மேலும், இவர்களுக்குள் பல உப பிரிவுகள் உள்ளன.
இப்பிரிவுகளில் ‘அல்முஹக்கிமா’, ‘அல்அஸாரிகா’, ‘அந்நஜ்தாத்’, ‘அஸ்ஸஆலிபா’,
‘அல்இபாழிய்யா’, ‘அஸ்ஸபரிய்யா’ ஆகிய பிரிவுகள் முன்னணியில் திகழ்கின்றன.
கொள்கை:
இவர்கள் கலீபாக்களான உஸ்மான் (ரலி), அலி (ரலி) ஆகியோரையும், ஜமல்
யுத்தத்தில் கலந்துகொண்ட ஸஹாபாக்களையும், ஸிப்பீன் யுத்தத்தில் நடுவர்களாக
நியமிக்கப்பட்ட இரு ஸஹாபாக்களையும் இறை நிராகரிப்பாளர்கள் என்று
கூறுகின்றனர். இது மட்டுமின்றி, நடுவர்களாக நியமிக்கப்பட்ட இரு
ஸஹாபாக்களையும் ஏற்றுக் கொண்ட ஏனைய ஸஹாபாக்களையும் இறை நிராகரிப்பாளர்கள்
என்றும் கூறுகின்றனர். அத்துடன் ஆட்சியாளர்களுக்கு எதிராக கிளர்ச்சியில்
ஈடுபடுவதைத் தங்களது அடிப்படைக் கோட்பாடாகக் கொண்டுள்ளனர். மேலும்,
பெரும்பாவங்களில் ஈடுபடுவது இறைநிராகரிப்பை ஏற்படுத்தும் என்பதையும்
தங்களது அடிப்படைக் கோட்பாடாகக் கருதுகின்றனர்.
மார்க்கத் தீர்ப்பு:
கவாரிஜ்கள் இறை விசுவாசிகளா? அல்லது இறை 'இறைநிராகரிப்பாளர்களா? என்பது குறித்து: இஸ்லாமிய அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. கவாரிஜ்கள் இறை நிராகரிப்பாளர்கள் அல்ல என்பதே பெரும்பாலான இஸ்லாமிய அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தும், ஸஹாபாக்களின் ஏகோபித்த முடிவுமாகும். கலீபா அலி(ரலி) அவர்களோ, ஏனைய நபித்தோழர்களோ கவாரிஜ்களை இறை நிராகரிப்பாளர்கள் என்று கூறவில்லை. இவர்கள் முஸ்லிம்கள், ஆனால், எல்லை மீறிய அறியாயக்காரர்கள் என்று மட்டுமே குறிப்பிடுகின்றனர்.
(கவாரிஜ்கள் பற்றிய மேலதிக விபரங்களுக்கு பார்க்க:- இப்னு தைமிய்யா :மஜ்மூஉ பதாவா 3:279, 28:500, இப்னு ஹஜர் :பத்ஹுல் பாரீ 12:299, 3 அல்கல்லால் அல்-ஸுன்னா 1:145)
- மெளலவி. எம். எம். ஸக்கி, B.A(Hons) மதினா