வஹீயிலே இரண்டாவது இடத்தைப் பிடிக்கக்கூடிய ஹதீஸை நாம் இரண்டாகப் பிரிக்கலாம்.
1. அல்ஹதீஸுந் நபவி
2. அல்ஹதீஸுல் குத்ஸீ
அல்ஹதீஸுந் நபவி என்றால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொல், செயல், அங்கீகாரம், பண்பு ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கும் ஹதீஸ்களாகும்.
அல்ஹதீஸுல் குத்ஸீ என்றால் என்னவென்பதை இங்கு விரிவாகக் குறிப்பிடுகின்றோம்.
அல்ஹதீஸுல் குத்ஸீயின் வரைவிலக்கணம்
ஜுர்ஜானீ என்ற அறிஞர் கூறுகின்றார்: அல்ஹதீஸுல் குத்ஸீ கருத்தடிப்படையில் அல்லாஹ்விடமிருந்து வந்த ஒன்றாகவும் சொல் அடிப்படையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து வந்த ஒன்றாகவும் இருக்கும். மேலும், அல்லாஹ் தனது நபிக்கு உள்ளுணர்வு அல்லது கனவின் மூலம் தெரிவித்த ஒன்றே அதுவாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அக்கருத்தை தனது வாக்கியத்தைக்கொண்டு அறிவிப்பார்கள்.
அல்ஹதீஸுல் குத்ஸீயின் மறுபெயர்கள்
1. அல்ஹதீஸுல் இலாஹீ: இவ்வாறான ஹதீஸுக்கு அல்ஹதீஸுல் இலாஹீ என்று உபயோகித்த அறிஞர்களில் இமாம் இப்னு தைமியா, இப்னு ஹஜர், முல்லா அலீ அல்காரீ போன்றவர்கள் உள்ளடங்குவார்கள்.
2. அல்ஹதீஸுர் ரப்பானீ: அல்ஹதீஸுர் ரப்பானீ என்று ஜலாலுத்தீன் அல்மஹல்லீ என்பவரும் அல்முபாரக்பூரி அவர்களும் அவர்களுடைய நூட்களில் உபயோகித்துள்ளார்கள்.
அல்குர்ஆனுக்கும் அல்ஹதீஸுல் குத்ஸீயிற்கும் இடையிலான வேறுபாடுகள்
அல்குர்ஆனும் அல்ஹதீஸுல் குத்ஸீயும் அல்லாஹ்விடமிருந்து வந்தவைகளாக இருக்கின்றன. என்றாலும் பல விடயங்களில் அவ்விரண்டும் வேறுபடுகின்றன. அவற்றில் சில வேறுபாடுகளை நாம் பார்க்கலாம்
1. அல்குர்ஆன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலம் அல்லாஹ்விடமிருந்து இறக்கியருளப்பட்டதாகும். அல்ஹதீஸுல் குத்ஸீயில் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மூலம் தெரிவிக்கப்பட்டதும் உள்ளடங்கியிருக்கும் அல்லது அல்லாஹ் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு உள்ளுணர்வு அல்லது கனவின் மூலம் தெரிவித்ததும் உள்ளடங்கியிருக்கும்.
2. அல்குர்ஆனிய வசனங்கள் உறுதியானவைகளாகும். அவற்றில் எந்த ஒன்றையும் நாம் மறுக்க முடியாது. அல்ஹதீஸுல் குத்ஸீயைப் பொறுத்த வரையில் அவற்றில் சரியானவைகள், பலவீனமானவைகள், இட்டுக்கட்டப்பட்டவைகள் ஆகியன உள்ளடங்கியிருக்கும்.
3. அல்குர்ஆனை ஓதுவதின் மூலம் நன்மை கிடைக்கின்றது. அல்ஹதீஸுல் குத்ஸீயை ஓதி நன்மையை அடைய முடியாது.
4. அல்குர்ஆன் சூராக்கள், ஹிஸ்புகள், ஜுஸ்உகள், வசனங்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளது. அல்ஹதீஸுல் குத்ஸீயில் இப்பிரிவுகள் காணப்படமாட்டாது.
5. அல்குர்ஆன் சொல் ரீதியாகவும் கருத்து ரீதியாகவும் அல்லாஹ்வுடைய அற்புதமாகும். அல்ஹதீஸுல் குத்ஸீ அவ்வாறான அற்புதத்தைக் கொண்டதல்ல.
6. அல்குர்ஆனை மறுப்பவர் காபிராகிவிடுவார். அவற்றில் ஒரு எழுத்தையேனும் அவர் மறுத்தாலும் காபிராகிவிடுவார். அல்ஹதீஸுல் குத்ஸீயை அறிவிப்பாளர் வரிசையின் சிக்கலின் காரணமாக ஒருவர் மறுத்தால் அவர் காபிராகமாட்டார்.
7. அல்குர்ஆனை கருத்து ரீதியாக ஓதவோ அறிவிக்கவோ முடியாது. அல்ஹதீஸுல் குத்ஸீயை கருத்து ரீதியாக அறிவிக்கலாம்.
8. அல்குர்ஆன் சொல் ரீதியாகவும் கருத்து ரீதியாகவும் அல்லாஹ்வுடைய பேச்சாகும். அல்ஹதீஸுல் குத்ஸீயுடைய கருத்து மாத்திரம் அல்லாஹ்வுடையதாகும் அதனுடைய சொல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு உரியதாகும்.
9. அல்குர்ஆனைக்கொண்டு அல்லாஹ் அதைப்போன்ற ஒன்றைக் கொண்டுவருமாறு காபிர்களிடம் சவால்விட்டான். அல்ஹதீஸுல் குத்ஸீயின் விடயத்தில் அவ்வாறான சவால்கள் இல்லை.
அல்ஹதீஸுல் குத்ஸீயிற்கும் அல்ஹதீஸுந் நபவியிற்கும் இடையிலான வேறுபாடுகள்
1. அல்ஹதீஸுல் குத்ஸஸீயை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின்பால் சேர்ப்பார்கள். அல்ஹதீஸுந் நபவியை அவர்கள் அவ்வாறு சேர்க்கமாட்டார்கள்.
2. அல்ஹதீஸுல் குத்ஸீ மிகக்குறைவாகவே காணப்படுகின்றது. அல்ஹதீஸுந் நபவி மிக அதிகமாகக் காணப்படுகின்றது.
3. அல்ஹதீஸுல் குத்ஸீ அனைத்தும் சொல் ரீதியான ஹதீஸ்களாகும். அல்ஹதீஸுந் நபவி சொல், செயல், அங்கீகாரம் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கும்.
அல்ஹதீஸுல் குத்ஸீயின் எண்ணிக்கை
அல்ஹதீஸுல் குத்ஸீ நூறையும் தாண்டியுள்ளது என்று ஒரு சில அறிஞர்களும் இன்னும் சிலர் இருநூறையும் தாண்டியுள்ளது என்றும் இன்னும் சிலர் ஆயிரத்தையும் தாண்டியுள்ளது என்றும் கூறியுள்ளார்கள்.
அல்முனாவீ என்ற அறிஞர் 272 ஹதீஸ்களை ஒன்று சேர்த்துள்ளார். முஹம்மத் அல்மதனீ என்ற அறிஞர் 863 ஹதீஸ்களை ஒன்று சேர்த்துள்ளார். இஸாமுத்தீன் என்பவர் 1150 ஹதீஸ்களை ஒன்று சேர்த்துள்ளார்.
அல்ஹதீஸுல் குத்ஸீ குறித்து தொகுக்கப்பட்ட நூட்கள்
1. அஸ்ஸஹீஹுல் முஸ்னத் மினல் அஹாதீஸில் குத்ஸிய்யா, தொகுத்தவர்: முஸ்தபா அல்அதவீ.
2. கிதாபு மவ்ஸூஅதில் அஹாதீஸில் குத்ஸிய்யா அஸ்ஸஹீஹா வழ்ழஈபா, தொகுத்தவர்: யூஸுப் அல்ஹாஜ் அஹ்மத்.
3. ஜாமிஉல் அஹாதீஸில் குத்ஸிய்யா, தொகுத்தவர்: இஸாமுத்தீன்.
4. அல்இத்திஹாபாதுஸ் ஸனிய்யா பில் அஹாதீஸில் குத்ஸிய்யா, தொகுத்தவர்: அப்துர்ரஸ்ஸாக் அல்முனாவீ.
5. அல்இத்திஹாபாதுஸ் ஸனிய்யா பில் அஹாதீஸில் குத்ஸிய்யா, தொகுத்தவர்: முஹம்மத் அல்மதனீ.
- அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்