அல்குர்ஆன், அஸ்ஸுன்னாவின் பார்வையில் மலாஇகாமார்கள்

-     அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்

ஆறு விடயங்களை நம்புவதின் மீது இஸ்லாமிய அகீதா கட்டியெழுப்பப்பட்டுள்ளது. ஒரு முஸ்லிம் கட்டாயம் நம்ப வேண்டிய ஆறு விடயங்களில் ஒன்றே மலாஇகாமார்களாவர். அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டதன் பின்பு நாம் நம்ப வேண்டிய இரண்டாவது அம்சம் மலாஇகாமார்கள் குறித்தாகும் என்பது யாவரும் அறிந்ததே. ஆகவே, அல்லாஹ்வின் படைப்பினங்களில் ஒன்றாகிய இந்த மலாஇகாமார்களைப்பற்றி ஒரு சில விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்.

மலாஇகாமார்களை நம்புவது ஈமானுடைய தூண்களில் ஒன்றாகும் என்பதை நாம் தெரிந்து வைத்துள்ளோம். எனவே, மலாஇகாமார்களை நம்புவது அனைவரின் மீதும் கடமையாகும். அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான்: தூதர் தனக்கு தனது இறைவனிடமிருந்து இறக்கிவைக்கப்பட்டதை ஈமான் கொண்டார். அதனை முஃமின்களும் ஈமான் கொண்டார்கள். அனைவரும் அல்லாஹ், அவனது மலாஇகாமார்கள், அவனது வேதங்கள், அவனுடைய தூதர்கள் ஆகியவற்றை ஈமான் கொண்டுவிட்டார்கள். -     அல்பகறா: 285

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ஈமான் என்றால் நீ அல்லாஹ்வை, அவனுடைய மலாஇகாமார்களை, அவனுடைய வேதங்களை, அவனுடைய தூதர்களை, மறுமை நாளை நம்புவதாகும். இன்னும், கத்ரின்படி நலவு மற்றும் தீங்கு நிகழும் என்பதை நீ நம்புவதாகும். - புஹாரீ

இவ்விரு ஆதாரங்களும் மலாஇகாமார்களை உள்ளடக்கிய ஆறு அம்சங்களை நம்புவது கட்டாயம் என்பதை தெளிவுபடுத்துகின்றன.

எவ்வாறு மலாஇகாமார்களை ஈமான் கொள்வது கட்டாயமாகுமோ அதேபோல் அவர்களை நம்பிக்கை கொள்ளாதவர்கள் மார்க்கத்தைவிட்டும் வெளியேறியவர்களாகக் கருதப்படுவார்கள்.

அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான்: விசுவாசம் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வை, அவனது தூதர்களை, அவன் தனது தூதருக்கு இறக்கியதை, இதற்கு முன்பு இறக்கப்பட்ட வேதத்தை ஈமான் கொள்ளுங்கள். யார் அல்லாஹ்வை, அவனது மலாஇகாமார்களை, அவனது வேதங்களை, அவனது தூதர்களை, மறுமை நாளை நிராகரிக்கின்றாரோ அவர் வெகு தூரமான வழிகேட்டில் சென்றுவிட்டார். -     அந்நிஸா: 136

யார் மலாஇகாமார்களை நிராகரிக்கின்றாரோ அவருடைய வழிகேட்டை இவ்வசனம் உறுதிப்படுத்துகின்றது.

மலாஇகாமார்கள் நாம் பார்க்க முடியாத மறைவானவர்கள். நாம் அவர்களைப் பார்க்காவிட்டாலும் அவர்களை நம்புவது எமது கடமையாகும். நாம் எமது புத்தியை நம்புகின்றோம். ஆனால், அதனை எங்களால் பார்க்க முடியாது. நாம் மின்சாரத்தை நம்புகின்றோம். ஆனால், அதனை எங்களால் பார்க்க முடியாது. அதேபோல் நாம் பார்க்க முடியாவிட்டாலும் மலாஇகாமார்களை நம்ப வேண்டும்.

ஏன் நாம் மலாஇகாமார்களை நம்ப வேண்டும் என்றால் அல்லாஹ்வும் அவனது தூதரும் மலாஇகாமார்களைப்பற்றி அதிகமான இடங்களில் குறிப்பிட்டிருக்கின்றார்கள் என்பதினாலாகும்.

அவற்றில் சில இடங்களை நான் குறிப்பிடுகின்றேன்.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: நிச்சயமாக அல்லாஹ்வும் அவனது மலாஇகாமார்களும் நபியின் மீது அருள் புரிகின்றனர். விசுவாசம் கொண்டவர்களே! நீங்கள் அவர் மீது ஸலவாத்தும் ஸலாமும் கூறுங்கள். -     அல்அஹ்ஸாப்: 56

இவ்வசனத்தில் அல்லாஹ் தனது மலாஇகாமார்கள் நபியின் மீது அருள் புரிவதாகக் குறிப்பிட்டிருக்கின்றான்.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: நீதியை நிலைநாட்டியவனாக அல்லாஹ்வும் மலாஇகாமார்களும் அறிவுடையவர்களும் வணங்கப்படுவதற்குத் தகுதியானவன் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை என்று சான்று பகர்ந்தார்கள். -     ஆல இம்ரான்: 18

இவ்வசனத்தில் மலாஇகாமார்கள் அல்லாஹ் ஒருவன் என்று சான்று பகர்ந்ததாகக் குறிப்பிட்டிருக்கின்றான்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: நாயும் உருவப்படங்களும் உள்ள வீட்டில் மலாஇகாமார்கள் நுழையமாட்டார்கள். -     புஹாரீ

மேலும், அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக மலாஇகாமார்கள் தனது இறக்கைகளை அறிவைத் தேடக்கூடியவருக்கு அவர் தேடியதைப் பொருந்திக்கொண்டதன் காரணமாக தாழ்த்துகின்றார்கள். - அல்பைஹகீ - அஷ்ஷெய்ஹ் அல்பானீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இந்த ஹதீஸை ஸஹீஹ் என்றும் அஷ்ஷெய்ஹ் முக்பில் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இந்த ஹதீஸை ஹஸன் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.

ஆகவே, தன்னிச்சைப்படி எந்த ஒரு வார்தையேனும் மொழியாத நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மலாஇகாமார்களைப்பற்றி அறிவித்திருக்கின்றார்கள். இவ்வாதாரங்கள் மலாஇகாமார்கள் என்ற ஒரு படைப்பு இருப்பதை உறுதிப்படுத்துகின்றன. ஆகவே, அவர்களை நம்புவது நமது கடமையாகும். ஏனென்றால், மறைவானவற்றை நம்புவது உண்மையான இறையச்சமுடையவர்களின் பண்பாகும் என்பதை அல்லாஹ் அல்குர்ஆனில் குறிப்பிட்டிருக்கின்றான்.

அவன் கூறுகின்றான்: அலிப் லாம் மீம். அது வேதமாகும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அது இறையச்சமுடையவர்களுக்கு நேர்வழியளிக்கக்கூடியதாகும். அவர்கள் எத்தகையவர்கள் என்றால் அவர்கள் மறைவானவற்றை ஈமான் கொள்வார்கள். -     அல்பகறா: 1-3

மலாஇகாமார்கள் எதனால் படைக்கப்பட்டார்கள்? எப்போது படைக்கப்பட்டார்கள்? அவர்களுடைய உடல் ரீதியான பண்புகள் என்ன? குணரீதியான பண்புகள் என்ன? போன்ற விடயங்களை அல்குர்ஆனும் அஸ்ஸுன்னாவும் தெளிவுபடுத்துகின்றன.

மலாஇகாமார்கள் ஒளியால் படைக்கப்பட்டுள்ளார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: மலாஇகாமார்கள் ஒளியால் படைக்கப்பட்டுள்ளார்கள். இன்னும், ஜின்கள் கடுமையான தீச்சுவாலையுடைய நெருப்பால் படைக்கப்பட்டுள்ளார்கள். -     முஸ்லிம்

மலாஇகாமார்கள் எப்போது படைக்கப்பட்டார்கள் என்பதை அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் அறியமாட்டார்கள். ஆனால், ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு முன்பே மலாஇகாமார்கள் படைக்கப்பட்டார்கள் என்ற உண்மையை மாத்திரம் நாம் தெரிந்து கொள்ளலாம். ஏனென்றால், அல்லாஹுத்தஆலா பின்வருமாறு கூறுகின்றான்: நபியே! இன்னும் உமது இரட்சகன் மலாஇகாமார்களிடம் நிச்சயமாக பூமியில் நான் ஒரு தலைமுறையை தோற்றுவிக்கப்போகின்றேன் என்று கூறியபோது, நாங்கள் உன் புகழைத் துதித்துக் கொண்டும் உன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டுமிருக்க, அதில் குழப்பத்தை விளைவித்து, இரத்தங்களை சிந்துவோரையா தோற்றுவிக்கப் போகின்றாய்? என்று கூறினார்கள். -     அல்பகறா: 30

இவ்வசனம் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் படைக்கப்படுவதற்கு முன்பே மலாஇகாமார்கள் படைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை உறுதிப்படுத்துகின்றது. ஆனால், அவர்கள் படைக்கப்பட்ட நாள் எதுவென்பதில் எந்தவொரு ஆதாரத்தையும் நாம் காணமுடியாது.

மலாஇகாமார்கள் மிகவும் மகத்தான படைப்பினம் என்பதை நாம் பல ஆதாரங்களின் மூலம் புரிந்து கொள்ளலாம். அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: விசுவாசம் கொண்டவர்களே உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரக நெருப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். அதன் எரிபொருட்கள் மனிதர்களும் கற்களுமாகும். அதன் மீது கடின சித்தம் கொண்ட பலசாலிகளான மலாஇகமார்கள் இருப்பார்கள். அல்லாஹ்வுக்கு அவர்கள் அவன் ஏவியவற்றில் மாறுசெய்யமாட்டார்கள். அவர்கள் ஏவப்படுவதை அவர்கள் செய்வார்கள். -     அத்தஹ்ரீம்: 6

இவ்வசனத்தில் அல்லாஹுத்தஆலா மலாஇகாமார்களில் நரகத்திற்குப் பொறுப்பானவர்களின் பண்புகளை வர்ணித்திருக்கின்றான். மேலும், மலாஇகாமார்களுக்கு இறக்கைகள் உள்ளன என்பதையும் நாம் பல ஆதாரங்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: வானங்களையும் பூமியையும் ஆரம்பமாகப் படைத்த, மலாஇகாமார்களை இரண்டிரண்டு மும்மூன்று நன்நான்கு இறக்கைகளை உடைய தூதர்களாக ஆக்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். -     அல்பாதிர்: 1

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அவருடைய சுயரூபத்தில் இரு முறை கண்டார்கள். மக்காவில் ஒரு முறையும் அவர்கள் மிஃராஜ் பயணத்தை மேற்கொண்டபோது சித்ரதுல் முன்தஹா என்ற இடத்தில் மற்றொரு முறையும் கண்டார்கள். அப்போது ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு 600 இறக்கைகள் காணப்பட்டதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

மலாஇகாமார்கள் மகத்தான படைப்பினம் என்பதைப் பின்வரும் ஹதீஸும் தெளிவுபடுத்துகின்றது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: அர்ஷை சுமக்கக்கூடிய அல்லாஹ்வுடைய மலாஇகாமார்களில் ஒரு மலக்கைப்பற்றிப் பேசுவதற்கு எனக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவருடைய காதுச்சோனைக்கும் தோள்பட்டைக்கும் இடையில் உள்ள தூரம் 700 ஆண்டுகள் பிரயாணம் மேற்கொள்ளும் தூரமாகும். -     ஸஹீஹ் அபீதாவூத்

அஷ்ஷெய்க் அல்பானீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்: இவர்கள் மகத்தான படைப்பினம். இரவிலும் பகலிலும் அல்லாஹ்வை வணங்குகின்றார்கள். இவர்களில் ஒருவருடைய காதுச்சோனைக்கும் தோள்பட்டைக்கும் மத்தியில் இப் பெரிய தூரம் உள்ளது. இவர்கள் ஒரு மகத்தான படைப்பினம். அல்லாஹ்வுக்கு ஸுஜூதும் ருகூஉம் செய்கின்றார்கள். ஆதமின் மகனே! நீயோ களிமண்ணால் படைக்கப்பட்டுள்ளாய். அல்லாஹ்வுக்கு ஸுஜூது செய்வதைவிட்டும் பெருமையடிக்கின்றாய். நீ வெட்கப்படமாட்டாயா? -     அல்அகீதது அவ்வலன்

அல்லாஹுத்தஆலா மலாஇகாமார்களை கண்ணியமிக்க நல்லவர்கள் என்று வர்ணித்திருக்கின்றான். அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: அவ்வாறல்ல, நிச்சயமாக அது உபதேசமாகும். யார் நாடுகிறாரோ அவர் அதில் படிப்பினை பெறுவார். அது பரிசுத்தமாக்கப்பட்ட உயர்ந்த கண்ணியமிக்க ஏடுகளில் காணப்படுகின்றது. இவ்வேடுகள் கண்ணியமிக்க மிகுந்த நல்லோர்களான வானவர்கள் எனும் எழுதுவோரின் கைகளில் உள்ளதாகும். -     அபஸ: 11-16

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: யார் திறன்பட அல்குர்ஆனை ஓதுகின்றாரோ அவர் கண்ணியமிக்க நல்லோர்களாகிய எழுதுவோருடன் இருப்பார்கள். -     முஸ்லிம்

இவ்வீர் ஆதாரங்களும் மலாஇகாமார்கள் சங்கையானவர்கள் மற்றும் நல்லவர்கள் என்பதை தெளிவுபடுத்துகின்றன.

மலாஇகாமார்களுக்கு காணப்படும் ஒரு பண்பே வெட்கமாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு முறை தனது தொடையை வெளிக்காட்டியவர்களாக இருந்தார்கள். அப்போது அபூபக்ர் பின்பு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அவர்களிடம் நுழைந்தார்கள். அப்போதும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த அமைப்பிலேயே இருந்தார்கள். உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நுழைந்தபோது அவர்கள் தனது தொடையை மூடினார்கள். பின்பு நபியவர்கள் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களிடம் மலாஇகாமார்கள் வெட்கப்படுகின்ற ஒரு மனிதருடைய விடயத்தில் நான் வெட்கப்படக்கூடாதா? என வினவினார்கள். - ஸஹீஹு அதபில் முப்ரத்

உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அதிக வெட்க சுபாவமுடையவர்களாக காணப்பட்டார்கள். அதனால் மலாஇகாமார்களும் அவர்கள் குறித்து வெட்கப்படுவதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டார்கள். எனவே, மலாஇகாமார்களுக்கு வெட்கம் எனும் பண்பு இருப்பதை நாம் தெளிவாக விளங்கிக்கொள்ளலாம்.

மலாஇகாமார்களில் ஆண்கள், பெண்கள் என்ற வேறுபாடு காணப்படமாட்டாது. ஜாஹிலிய்யா மக்கள் மலாஇகாமார்களை அல்லாஹ்வுடைய பெண்மக்கள் என்று வர்ணித்தார்கள். அதற்கு அல்லாஹ் அல்குர்ஆனில் பின்வருமாறு மறுப்பளித்தான்.

ரஹ்மானுடைய அடியார்களாகிய மலாஇகாமார்களை அவர்கள் பெண்களாக ஆக்கிவிட்டார்கள். அவர்கள் படைக்கப்பட்டதை அவர்கள் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்களா? அவர்களுடைய சாட்சிகள் எழுதப்படும். இன்னும் அவர்கள் கேட்கப்படுவார்கள். -     ஸுஹ்ரூப்: 19

மலாஇகாமார்கள் சாப்பிடவோ குடிக்கவோமாட்டார்கள். நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடத்தில் மலாஇகாமார்கள் மனித ரூபத்தில் சமூகமளித்தார்கள். அப்போது இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வந்திருந்தவர்களை விருந்தாளிகள் என்று நினைத்து அவர்களுக்கு உணவை முன்வைத்தார்கள். ஆனால் அவர்கள் அதனை சாப்பிடவில்லை.

இச்சம்பவத்தை அல்லாஹ் பின்வருமாறு அல்குர்ஆனில் கூறுகின்றான்:

இப்றாஹீமின் கண்ணியத்திற்குரிய விருந்தாளிகளின் செய்தி நபியே! உம்மிடம் வந்ததா? அவர்கள் அவரிடம் நுழைந்தபோது ஸலாம் சாந்தி உண்டாகட்டும் என்று கூறினர். அவரும் ஸலாம் எனக்கூறி அறிமுகமற்ற கூட்டத்தினர் என தனக்குள் எண்ணிக்கொண்டார். பின்னர் தனது குடும்பத்தாரிடம் விரைந்து சென்று கொழுத்த காளைக் கன்றை பொரித்து கொண்டுவந்தார். பின்னர் அதனை அவர்களுக்கு முன்னால் வைத்து நீங்கள் சாப்பிட மாட்டீர்களா? எனக்கேட்டார். அவர்கள் உண்ணாதிருக்கவே அவர்கள் குறித்து அச்சம் கொண்டார். நீர் பயப்பட வேண்டாம் என அவர்கள் கூறி, அறிவுள்ள ஒரு குழந்தையைக் கொண்டு அவருக்கு அவர்கள் நன்மாராயம் கூறினர். -     அத்தாரியாத்: 24-28

மனிதர்கள் எந்த விடயங்களில் நோவினை அடைகின்றார்களோ அந்த விடயங்களில் மலாஇகாமார்களும் நோவினை அடைகின்றார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: வெள்ளைப்பூடு, வெங்காயம், லீஸ் ஆகிய கீரை வகைகளிலிருந்து யார் சாப்பிட்டாரோ அவர் எங்களுடைய பள்ளிவாசல்களில் எங்களை நெருங்க வேண்டாம். ஏனென்றால், ஆதமுடைய மக்கள் எது குறித்து நோவினை அடைகின்றார்களோ அது குறித்து மலாஇகாமார்களும் நோவினை அடைகின்றார்கள். -     முஸ்லிம்

மலாஇகாமார்களின் தங்குமிடம் வானமாகும். அதனை பின்வரும் வசனம் தெளிவுபடுத்துகின்றது. அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: உமது இரட்சகனிடம் இருப்போர் இரவிலும் பகலிலும் அவனைத் துதிக்கின்றனர். மேலும், அவர்கள் சோர்வடையமாட்டார்கள். -     புஸ்ஸிலத்: 38

நிச்சயமாக அல்லாஹ் ஏழு வானங்களுக்கு மேலால் அர்ஷின் மீது இருக்கின்றான் என்பது நாமனைவரும் அறிந்த விடயமே. இவ்வசனத்தில் அல்லாஹ் மலாஇகாமார்களை தன்னோடு இருப்பவர்கள் என்று வர்ணித்துள்ளான். எனவே, மலாஇகாமார்கள் வானத்தில் இருக்கின்றார்கள் என்பதை இதன் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம்.

வானத்தில் இருக்கக்கூடிய மலாஇகாமார்கள் அல்லாஹ்வின் கட்டளைகளின் பிரகாரம் பூமிக்கு இறங்குவார்கள். அவர்கள் இறங்கக்கூடிய காலங்களில் ஒன்றே லைலதுல் கத்ருடைய இரவாகும். இதற்குப் பின்வரும் வசனம் ஆதாரமாகும். அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்:

நிச்சயமாக நாம் குர்ஆனாகிய இதனை மகத்துவமிக்க இரவாகிய லைலதுல் கத்ரில் இறக்கி வைத்தோம். லைலதுல் கத்ர் என்னவென்பதை நபியே! உமக்கு அறிவித்தது எது? லைலதுல் கத்ர் என்பது ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்ததாகும். வானவர்களும் ரூஹு எனும் ஜிப்ரீலும் சகல கட்டளைகளுடன் தமது இரட்சகனின் அனுமதிப் பிராகரம் அதில் இறங்குகின்றனர். அதிகாலை உதயமாகும் வரை அது அமைதி பொதிந்திருக்கும். -     அல்கத்ர்: 1-5

மேலும், மலாஇகாமார்கள் மார்க்க அறிவு போதிக்கப்படுகின்ற சபைகளுக்காக வேண்டி வானத்திலிருந்து இறங்குகின்றார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ஒரு கூட்டம் அல்லாஹ்வுடைய வீடுகளில் ஒரு வீட்டில் அல்லாஹ்வுடைய வேதத்தை ஓதி அதனை அவர்களுக்கு மத்தியில் கற்பவர்களாக இருந்தால் அவர்களுக்கு அமைதி இறங்கிவிடும். ரஹ்மத் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும். மலாஇகாமார்கள் அவர்களைச் சூழ்ந்துகொள்வார்கள். அவர்களைப்பற்றி அல்லாஹ் தன்னிடம் இருப்பவர்களிடத்தில் பேசுவான். -     ஸஹீஹு அபீதாவூத்

இந்த மகத்தான சிறப்பை எம்மில் பலர் இழந்துவிடுகின்றனர். பள்ளிவாசல்களில் இடம்பெறுகின்ற பயான் நிகழ்ச்சிகளில் கலந்து பயன்பெறக்கூடியவர்கள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றனர். மேற்குறிப்பிடப்பட்ட ஹதீஸில் உள்ள சிறப்புக்களை அவர்கள் அறியாதவர்களாக இருக்கின்றார்கள். அல்லது அறிந்தும் அதிலே பொடுபோக்காகக் காணப்படுகின்றார்கள்.

பள்ளிவாசல்களில் நடைபெறும் பயான் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்கு அவர்களுக்கு தடையாக அமைவது தொலைக்காட்சித் தொடர் நாடகங்களாகும். அல்லாஹ்வுடைய ரஹ்மத் கிடைக்கும் இடங்களைப் புறக்கணித்து அல்லாஹ்வின் கோபம் இறங்கக்கூடிய இடங்களை நாடிச்செல்கின்றனர்.

மலாஇகாமார்கள் அல்குர்ஆனை யாராவது ஓதினால் அதனைச் செவிமடுப்பதற்காக வேண்டி வானத்திலிருந்து இறங்குவார்கள். இதற்கு பின்வரும் சம்பவம் தெளிவான ஆதாரமாகக் காணப்படுகின்றது.

ஒரு நாள் இரவு உஸைத் இப்னு ஹுதைர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தன்னுடைய குதிரையை அடைத்து வைக்கும் இடத்தில் ஓதிக்கொண்டிருந்தார்கள். அப்போது அவருடைய குதிரை தடுமாறியது. பின்பு அவர்கள் ஓதினார்கள். மீண்டும் ஒருமுறை அது தடுமாறியது. பின்பு அவர்கள் ஓதினார்கள். மீண்டும் அது தடுமாறியது. உஸைத் இப்னு ஹுதைர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்: அக்குதிரை என்னுடைய மகன் யஹ்யாவை மிதித்துவிடுமோ என நான் பயந்தேன். அப்போது நான் அதனிடம் எழுந்து சென்றேன். அதன்போது என்னுடைய தலைக்கு மேலால் நிழல் தரக்கூடிய மேகத்தைப்போன்று ஒன்றைக் கண்டேன். அதிலே விளக்குகள் போன்று காணப்பட்டன. அது ஆகாயத்தில் நான் பார்க்க முடியாத அளவிற்கு ஏறிச்சென்றது. நான் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! நேற்று நடு இரவில்  நான் என்னுடைய குதிரையை அடைத்து வைக்கும் இடத்தில் ஓதிக்கொண்டிருந்தேன். அப்போது என்னுடைய குதிரை தடுமாறியது என்று கூறினேன். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்னு ஹுதைரே! நீங்கள் ஓதுங்கள் எனக்கூறினார்கள். அதற்கவர்கள் நான் ஓதினேன். அது மீண்டும் தடுமாறியது எனக்கூறினார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்னு ஹுதைரே! நீங்கள் ஓதுங்கள் எனக்கூறினார்கள். அதற்கவர்கள் நான் ஓதினேன். அது மீண்டும் தடுமாறியது எனக்கூறினார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்னு ஹுதைரே! நீங்கள் ஓதுங்கள் எனக்கூறினார்கள். அதற்கவர்கள் நான் திரும்பிப் பார்த்தேன். யஹ்யா அதற்கு அருகில் இருந்தான். அது அவனை மிதித்துவிடும் என்று நான் பயந்தேன். அப்போது நான் நிழல் தரக்கூடிய மேகத்தைப் போன்று ஒன்றைக் கண்டேன். அதிலே விளக்குகள் போன்று காணப்பட்டன. நான் பார்க்க முடியாத அளவிற்கு அது ஆகாயத்தில் ஏறிச்சென்றது எனக்கூறினார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: அது மலாஇகாமார்களாகும். உங்களைச் செவிமடுத்துக்கொண்டிருந்தார்கள். நீங்கள் இன்னும் ஓதியிருந்தால் அவர்களில் மறைந்திருப்பவற்றை மனிதர்கள் பார்த்தவர்களாக ஆகிவிடுவார்கள். -     புஹாரீ

அல்குர்ஆன் ஒதலைச் செவிமடுப்பதற்காக வேண்டி மலாஇகாமார்கள் வருகை தருவார்கள் என்பதை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

மலாஇகாமார்கள் வானத்திலிருந்து அல்லாஹ்வின் அடியார்களின் உயிர்களைக் கைப்பற்றுவதற்காகவும் முஃமின்களுக்கு சுவர்க்கத்தைக்கொண்டு நன்மாராயம் கூறுவதற்காகவும் இறங்குவார்கள்.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: நிச்சயமாக யாரெல்லாம் எங்கள் இறைவன் அல்லாஹ் எனக்கூறி அதிலே நிலைத்திருந்தார்களோ அவர்களிடம் மலாஇகாமார்கள் - பின்வருமாறு கூறியவர்களாக - இறங்குவார்கள். நீங்கள் பயப்படவேண்டாம். இன்னும் கவலைப்படவும் வேண்டாம். நீங்கள் வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கத்தைக்கொண்டு நன்மாராயம் பெறுங்கள். இவ்வுலகிலும் மறுமையிலும் நாங்கள் உங்களது நேசர்களாக இருக்கின்றோம். அதிலே உங்கள் உள்ளங்கள் ஆசைப்படும் அனைத்தும் உங்களுக்கு உண்டு அதிலே நீங்கள் கேட்பதெல்லாம் உங்களுக்கு உண்டு. இது மன்னிக்கக்கூடியவனும் இரக்கமுடையவனுமான - அல்லாஹ்விடமிருந்தான - ஒரு விருந்தாகும். -     புஸ்ஸிலத்: 30-32

மலாஇகாமார்கள் அல்லாஹ்வின் கட்டளைகளின் பிரகாரம் நாடிய உருவத்தில் தோற்றமளிப்பார்கள். மலாஇகாமார்கள் மனித ரூபத்தில் தோற்றமளிப்பார்கள் என்பதற்கு அதிகமான ஆதாரங்கள் காணப்படுகின்றன.

மர்யம் அலைஹஸ்ஸலாம் அவர்களிடத்தில் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மனித ரூபத்தில்  தோற்றம் பெற்றார். அதனை அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.

- நபியே! - நீங்கள் இவ்வேதத்தில் மர்யமை நினைவு கூறுங்கள். அவள் தனது குடும்பத்தினரைவிட்டு கிழக்குப் பக்கத்தில் தனித்தபோது. அவர்களை விட்டும் அவள் ஒரு திரையை எடுத்துக்கொண்டாள். அப்போது எங்களுடைய ரூஹ் - ஜிப்ரீலை - நாம் அவளிடம் அனுப்பினோம். அவர் அவளுக்கு நேர்த்தியான ஒரு மனிதராகத் தோற்றமளித்தார். அதற்கவள் நீ அல்லாஹ்வை அஞ்சக்கூடியவனாக இருந்தால் உன்னைவிட்டும் நான் ரஹ்மானைக் கொண்டு பாதுகாவல் தேடுகின்றேன் எனக்கூறினாள். - மர்யம்: 16-18

இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடத்தில் வந்த மலாஇகாமார்கள் மனித ரூபத்தில் தோற்றமளித்தார்கள் என்பது முன்பு குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மற்றும் ஸஹாபாக்களுக்கு மத்தியில் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மனித ரூபத்தில் தோற்றமளித்துள்ளார்கள்.

உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்: நாம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அமர்ந்திருந்தபோது கடும் வெள்ளை நிற ஆடையுடைய கடும் கறுப்பு முடியுடைய ஒரு மனிதர் தோன்றினார். அவரிடம் பிரயாணத்தின் அடையாளம் காணப்படவில்லை. எங்களில் யாரும் அவரை அறிந்திருக்கவில்லை. - ஹதீஸின் கடைசியில் - நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவர்தான் ஜிப்ரீல் உங்களுக்கு உங்களுடைய மார்க்கத்தைக் கற்றுக்கொடுப்பதற்கு வந்தார் எனக்கூறினார்கள். -     முஸ்லிம்

மலாஇகாமார்களின் எண்ணிக்கையை அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் அறியமாட்டார்கள். அவர்களுடைய எண்ணிக்கை எண்ணிவிட முடியாத அளவாகும் என்பதை பல ஆதாரங்கள் தெளிவுபடுத்துகின்றன.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: உமது இரட்சகனின் படையை அவனைத்தவிர வேறு யாரும் அறியமாட்டார்கள். -     அல்முத்தஸ்ஸிர்: 31

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: அந்நாளில் நரகம் கொண்டுவரப்படும். அதற்கு எழுபதாயிரம் கடிவாளங்கள் காணப்படும். ஒவ்வொரு கடிவாளங்களுடன் எழுபதாயிரம் மலாஇகாமார்கள் அதனை இழுத்தவர்களாக இருப்பார்கள். -     முஸ்லிம்

மிஃராஜுடைய சம்பவத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்பைதுல் மஃமூருக்கு உயர்த்தப்பட்டபோது அங்கே ஒரு நாளைக்கு எழுபதாயிரம் மலாஇகாமார்கள் அதனைத் தவாப் செய்வதாகவும் ஒரு நாளில் தவாப் செய்த மலாஇகாமார்கள் மீண்டும் தவாப் செய்யமாட்டார்கள் என்றும் கூறினார்கள். -     புஹாரீ, முஸ்லிம்

ஆகவே, இந்த ஆதாரங்கள் மலாஇகாமார்களின் எண்ணிக்கையை அல்லாஹ்வைத்தவிர வேறு யாராலும் கணக்கிட முடியாது என்பதை அறிவிக்கின்றன.

மலாஇகாமார்களைப்பற்றிய சில தகவல்களை அல்லாஹ்வின் உதவியால் உங்களோடு நான் பகிர்ந்து கொண்டேன். அல்லாஹுத்தஆலா எங்களையும் அவர்களைப்போன்று கண்ணியமிக்க நல்லவர்களாகவும் அல்லாஹ்வை வணங்குபவர்களாகவும் ஆக்கிவைப்பானாக!



أحدث أقدم