நாஸிக்‌, மன்ஸுக்



அறபு மொழியில்‌ நஸக்‌ என்ற சொல்லுக்கு நீக்குதல்‌ மாற்றுதல்‌ பிரதிபண்ணுதல்‌ முதலான கருத்துக்கள்‌ வழங்கப்படுகின்றன. இஸ்லாமியப்‌ பரிபாஷையில்‌ முன்னர்‌ வந்த ஆதாரபூர்வமான ஷரீஅத்‌ சட்டமொன்று பின்வந்த ஆதாரபூர்வமான ஷரீஆ சட்டம்‌ ஒன்றினால்‌ மாற்றப்படுவதை இது குறித்து நிற்கிறது. நாஸிக்‌ என்பது மாற்றத்தை ஏற்படுத்திய பின்னர்‌ வந்த சட்டத்தையும்‌ மன்ஸுக்‌ என்பது மாற்றத்துக்குள்ளாகு முன்னர்‌ இருந்த சட்டத்தையும்‌ குறிக்கின்றன. எனவே நாஸிக்‌ மாற்றிய சட்டம்‌ என்றும்‌ மன்ஸுக்‌ மாற்றப்பட்ட சட்டம்‌ என்றும்‌ ஆகும்‌.

அல்குர்‌ஆனில்‌ நாஸிக்‌ இடம்பெற்றுள்ளன என்பதற்கு ஆதாரமாகப்‌ பின்வரும்‌ வசனங்களை அறிஞர்கள்‌ ஆதாரமாக முன்வைப்பர்‌:

யாதொரு ஆயத்தை மாற்றிவிட்டால்‌ அல்லது அதனை மறக்கடித்து விட்டால்‌ அதற்கு ஒப்பானவை அல்லது அதைவிட சிறந்ததைக்‌ கொண்டு வருவோம்‌. (2:106)

நாம்‌ ஓர்‌ ஆயத்தை மற்றொரு ஆயத்தைக்‌ கொண்டு மாற்றினால்‌ அதற்கு ஈடாக எதனை அருளவேண்டும்‌ என்பதனை அல்லாஹ்‌ நன்கறிவான்‌. (16:101)

அல்குர்‌ஆனிலோ ஸுன்னாவிலோ இடம்பெறுகின்ற நாஸிக்‌ மன்ஸுக்‌ என்பவற்றை இனங்காண்பது குறித்து பல வழிமுறைகள்‌ காணப்படுகின்றன.

நபி (ஸல்‌) அவர்களோ அவர்களது தோழர்களோ அது பற்றி விளக்கியிருத்தல்‌

குறித்த ஒரு சட்டம்‌ அல்லது வசனம்‌ நாஸிக்‌ அல்லது மன்ஸுக்‌ என இஸ்லாமிய அறிஞர்கள்‌ ஏகோபித்துக்‌ கூறல்‌

வரலாற்று ஒளியில்‌ காலத்தால்‌ முந்தியது எது பிந்தியது எது என்பதை அறிதல்‌. 

திருக்குர்ஆனில் நாஸிஹ்-மன்ஸூஹ் வசனங்கள் 3 விதங்களில் இருக்கும்.

1. வசனம் இருக்கும்., சட்டம் அமுலில் இருக்காது.,
இந்த வகை வசனங்கள் தான் நாஸிஹ்-மன்ஸூஹில் அதிகமாக உள்ளவையாகும்.

உதாரணமாக, “நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் கூறுவது என்னவென்று அறியாதவாறு நீங்கள் போதையுடையோர்களாக இருக்கும் நிலையில் தொழுகையை நெருங்காதீர்கள்..” (4:43) என்ற வசனத்தின் மது குறித்த சட்டம் மாற்றப்பட்டு விட்டது. பின்னர் இறங்கிய வசனத்தில் பொதுவாக மது தடுக்கப்பட்டது. தொழும் நேரம்-தொழாத நேரம் என்ற பாகுபாடு இன்றி அதை விட்டும் முற்று-முழுதாக விலகிக்கொள்ள வேண்டும் என்ற ஏவல் வந்தது. ஆயினும் அந்த வசனம் குர்ஆனில் இருந்து கொண்டே இருக்கின்றது.

2. வசனம் நீக்கப்பட்டுச் சட்டம் அமுலில் இருக்கும்., வசனம் – அதாவது, வார்த்தை இருக்காது. அதன் சட்டம் இருக்கும்.

உதாரணமாக, திருமணம் முடித்தவர்கள் விபசாரம் செய்தால் அவர்கள் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும் என்ற வசனம் குர்ஆனில் இருந்தது. அந்த வசனம் அல்லாஹ்வால் நீக்கப்பட்டது. ஆயினும் சட்டம் நீக்கப்படவில்லை. இதே போன்றுதான் 5 முறை பால் குடித்தால் தாய்-மகன் என்ற உறவு ஏற்படும் என்ற இந்த வசனம் அல்லாஹ்வால் நீக்கப்பட்டு விட்டது. ஆனால் அதன் சட்டம் நீக்கப்படவில்லை.

3. சட்டமும், வசனமும் நீக்கப்படுவது.,
சட்டமும் மாற்றப்பட்டு, வசனமும் நீக்கப்படுவது என்பது மற்றொரு வகையாகும்.

இதற்கு குறிப்பிட்ட 10 முறை பால் அருந்தினால்தான் உறவு முறை உண்டாகும் என்ற வசனம் உதாரணமாகும். இந்த வசனமும் நீக்கப்பட்டுவிட்டது. இதன் சட்டமும் 5 முறை பாலூட்டினாலும் உறவு முறை உண்டாகும் என்று மாற்றப்பட்டு விட்டது.


ஒட்டு மொத்த ஷரீஅத்திலும் நாஸிஹ்-மன்ஸூஹ் 4 வகைகளில் இருக்கும்.

1. அல்குர்‌ஆன்‌ வசனம்‌ ஒன்று இன்னொரு அல்குர்‌ஆன்‌ வசனத்தால்‌ மாற்றப்படுதல்‌

ஒரு பெண்ணின்‌ கணவன்‌ இறந்துவிட்டால்‌ அவளது இத்தாக்காலம்‌ ஒரு வருடம்‌ என அல்குர்‌ஆன்‌ (2:240) குறிப்பிடுகிறது. பின்னர்‌ அச்சட்டம்‌ 4 மாதங்களும்‌ 10 நாட்களும்‌ (2:234) என்ற வசனத்தால்‌ மாற்றப்பட்டது.

2. அல்குர்‌ஆனின்‌ சட்டம்‌ ஒன்று அஸ்ஸுன்னாவினால்‌ மாற்றப்படுதல்‌

இது குறித்து இமாம்களிடையே அபிப்பிராய பேதங்கள்‌ காணப்படுகின்றன. இமாம்களான அபூஹனீபா, மாலிக்‌, அஹ்மத்‌ ஆகியோர்‌ இது சாத்தியமானது எனக்‌ கூறுகின்றனர்‌. காரணம்‌ இரண்டுமே வஹி என்பதனாலாகும்‌. இமாம்‌ ஷாபி அவர்களும்‌ லாஹிரி மத்ஹபைச்‌ சேர்ந்தோரும்‌ சாத்தியமற்றது என வாதிக்கின்றனர்‌. இதற்கு ஆதாரமாக அல்குர்‌ஆனின்‌ (2:106) ஆம்‌ வசனத்தை முன்வைக்கின்றனர்‌.

3. ஸுன்னாவின்‌ சட்டம்‌ ஒன்றை அல்குர்‌ஆன்‌ மாற்றுதல்‌

ஸுன்னாவின்‌ வழிகாட்டலில்‌ இஸ்லாத்தின்‌ ஆரம்ப நாட்களில்‌ கிப்லாவாக மஸ்ஜிதுல்‌ அக்ஸாவை நோக்கியே முஸ்லிம்கள்‌ தொழுதனர்‌. பின்னர்‌ (2:14) வசனத்தின்‌ மூலம்‌ அது மஸ்ஜிதுல்‌ ஹராமின்‌ திசையில்‌ மாற்றப்பட்டது.

4. ஸுன்னாவின்‌ சட்டம்‌ ஒன்று ஸுன்னாவினால்‌ மாற்றப்படுதல்‌

“நான்‌ ஆரம்பத்தில்‌ கப்ருகளை‌ தரிசிப்பதை உங்களுக்குத்‌ தடை செய்திருந்தேன்‌. இப்போது நீங்கள்‌ அதனைத்‌ தரிசிக்கலாம்‌" என்று வரக்கூடிய ஹதீஸை இதற்கு ஆதாரமாக குறிப்பிடலாம்.


நாஸிக்‌ மன்ஸுக்‌ பற்றிய அறிவு மிகவும்‌ முக்கியமானது. சட்டங்களைப்‌ பிழையின்றி வகுக்கவும்‌ அல்குர்‌ஆனின்‌ வசனங்களுக்குத்‌ தெளிவான விளக்கங்களை வழங்கவும்‌ இக்கலை இன்றியமையாதது. 

இதனை உணர்த்தப்‌ பின்வரும்‌ சம்பவம்‌ போதிய சான்றாகும்‌:

ஒரு முறை அலி (ரழி) அவர்கள்‌ ஒரு நீதிபதியிடம்‌ உமக்கு “அந்நாஸிக்‌ எது? அல்மன்ஸுக்‌ எது எனப்‌ பிரித்தறியத்‌ தெரியுமா எனக்‌ கேட்டார்கள்‌. அதற்கு அவர்‌ இல்லை எனப்‌ பதிலளித்தார்‌. அதற்கு அலி (ரழி) அவர்கள்‌ நீயும்‌ அழிந்தாய்‌. மற்றவர்களையும்‌ அழித்துவிட்டாய்‌ என எச்சரித்தார்கள்‌.

أحدث أقدم