தக்லீத் என்றால் என்ன?

بــــــــــــــــســـــم الله الرحـــــــمــــن الرحـــــــــيــم

الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده اما بعد

பிக்ஹ் விடயத்தில் (தக்லீத்) கண்மூடித்தனமாகப் பின்பற்றுதல் என்றால், ஒருவர் ஏழு வானத்தில் இருந்து இறக்கப்பட்ட அல்குர்ஆன்,  அஸ்சுன்னாவின் மொழியான அரபு மொழியை அறியாதவராக இருக்கிறார். இதனால் அல்குர்ஆன், அஸ்சுன்னாவில் இருப்பதை வாசித்து விளங்குவதற்குரிய அறிவு அவரிடத்தில் இல்லை. இருப்பினும் ஒரு முஸ்லிம் என்ற அடிப்படையில் மார்க்கத்தின் சட்டதிட்டங்களைப் பின்பற்றி நடக்க வேண்டிய கடமை அவருக்கு இருக்கின்றது.

அரபு மொழியை அறியாதவர் என்பதற்காக, அவர் மார்க்கத்தைப் பின்பற்றாமல் விட்டுவிட்டு ஒரு காபிரைப் போன்று வாழ முடியாது. மாறாக, அவா் தன் வாழ்வில் மார்க்கத்தைப் பின்பற்றி வாழ்ந்து, சுவனத்தை அடைவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

இந்நிலையில் இவர் செய்ய வேண்டியது என்ன?

அல்லாஹ் கூறுகிறான்,

فَسْئلُوْااَهْلَ الذِّ كْرِاِنْ كُنْتُمْ لاَ تَعْلَمُوْنَ

நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் அறிந்தவர்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள். (அந்நஹ்ல் : 43)

எனவே அறிந்தவர்கள் யாா்? என்பதை அந்த மனிதர் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். சுன்னாவின் அறிஞர்கள் யாரிடம் கல்வியைப் பெற்றுக் கொள்ளும்படி பொது மக்களுக்கு அடையாளம் காட்டித் தந்திருக்கிறார்களோ, அத்தகையவர்களிடம் சென்று அந்த மனிதர் தனக்குத் தெரியாதவைகளைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் அத்தகைய அறிஞர்கள் இடத்தில் அறியாதவைகளைப் பற்றிக் கேள்வி கேட்கும் பொழுது, அந்த அறிஞர்கள் உங்களுக்கு நீங்கள் கேட்டதைப் பற்றிய விளக்கத்தைத் தருவார். அந்த அறிஞர்கள், தங்களுடைய பதில்களை சில வேளைகளில் சுருக்கமாகக் கூறுவிடுவார்கள். சில வேளைகளில் விரிவாக விளக்குவார்கள்.

எனவே இந்த விடயத்தில் உங்கள் மீதுள்ள கடமை என்னவெனில், அந்த அறிஞர்கள் என்ன கூறுகிறார்களோ அதனை விளங்கிக் கொள்வதற்கு முயற்சி செய்ய வேண்டும். அதற்கு மாற்றமாக, நீங்கள் அந்த அறிஞர்களிடம் குறுக்குக் கேள்விகளை உங்கள் புத்தியின் அடிப்படையில் கேட்பது கூடாது. இவ்வாறு கேட்பது உங்களை ஒரு தர்க்கவாதியாக மாற்றிவிடும்.

தர்க்கம் செய்வதை இஸ்லாம் தடுத்திருக்கிறது. உங்களுக்குத் தெரியாத ஒரு விடயத்தைப் பற்றிக் கேள்வி கேட்பதும், உங்கள் புத்திக்குப் பொருந்தாதினால் தர்க்கிப்பதும் சமமல்ல. இருப்பினும், பொது மக்கள் தாங்கள் அறியாத ஒன்றை கல்வியைப் பெற்றவர்களிடம் கேட்கும் போது அம்மக்களுடைய கேள்விகளுக்கு பதில் கூறுவதும், கேட்கப்பட்ட விடயங்களை விளக்குவதும் கல்வியைப் பெற்ற அறிஞர்கள் மீது கடமையாகும்.

அதேபோன்று பொது மக்கள் அறிஞர்கள் வழங்கும் பதிலைப் புரிந்து, அதிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டியவற்றைத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். இவ்வாறு பெற்றுக் கொள்ளும் வழிமுறையைத்தான் அரபியில் தக்லீத் என்று சொல்லப்படுகிறது. இதன் காரணம் என்னவென்றால், நீங்கள் பெற்றுக் கொள்ளுகின்ற விடயங்களை மற்றொருவா் உங்களிடம் மீட்டிக் கூறுமாறு கேட்கப்பட்டால்,  உங்களுக்கு அதற்கான ஆதாரங்கள் அனைத்தும் எடுத்துச் சொல்கின்ற அளவுக்கு நினைவில் இருக்க வாய்ப்பில்லை. அல்லது அதனை விளக்கிக் கூறும் அறிவுத் திறன் உங்களிடம் இருக்காது.

எனவே நீங்கள் இன்னுமொருவருக்கு விளக்கிக் கூற முடியாவிட்டாலும், நீங்கள் செவிமடுத்த ஆதாரங்களைப் புரிந்து அதனடிப்படையில் செயற்படும் போது அது தக்லீதாக அமைந்துவிடுகிறது. இவ்வகையான தக்லீத் பொது மக்களின் மீது அனுமதிக்கப்பட்டதாகும்.

ஆனாலும் இவ்வகையான தக்லீதை செய்பவர்கள் எப்போதுமே அதே நிலையில் இருக்க வேண்டும் என்பதல்ல.  அவர்கள் கல்வியைப் பெற்றுக் கொள்வது கடமையாகும். அதன் அடிப்படையில், அவர்கள் தங்களிடத்தில் உள்ள கல்வியில் முன்னேற்றத்தைக் காண வேண்டும். இவ்வாறு கல்வியோடு நெருங்குவதன் மூலம், இன்று புரியாத ஒரு விடயத்தை நாளை புரிந்து கொள்ள முடியும். நாளையும் புரியாவிட்டால், இன்னுமொரு நாளிலாவது புரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும். இதுவே அவர்களின் முன்னேற்றமாகும்.

அல்லாஹ் மிக அறிந்தவன்.

-அஷ்ஷெய்க் அபூ அப்திர் ரஹ்மான் யஹ்யா ஸில்மி ஹபிழஹுல்லாஹ்
أحدث أقدم