بــــــــــــــــســـــم الله الرحـــــــمــــن الرحـــــــــيــم
الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده اما بعد
ஒரு ஆராய்ச்சித் திறனுள்ள ஆலிமின் ஆராய்ச்சி தவறாக அமைய முடியாது என்பது சூஃபி உலமாக்களின் அடிப்படையான கருத்தாக இருக்கிறது. இவ்வடிப்படைதான் பிக்ஹிலும் கையாளப்பட்டிருக்கிறது. எனவே, ஒரு ஆலிம் கூறுவதில் தவறுகள் இருக்க முடியாது என்ற அடிப்படையில், ஆலிம் கூறுகின்ற அனைத்தும் மார்க்கம் என்ற நிலை உருவாகிவிட்டது.
இதில் இஸ்லாத்தின் நிலைப்பாட்டை நாம் கவனித்தால், அதற்கு ரஸுலுல்லாஹி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் ஹதீஸ் தெளிவான பதிலாக இருக்கிறது.
إذا حكم الحاكم فاجتهد ثم أصاب فله أجران وإذا حكم فاجتهد ثم أخطأ فله أجر
ஆராய்ச்சி செய்யும் ஓர் ஆய்வாளர், அவரது ஆராய்ச்சியில் சரியான முடிவை அடைந்தால் அவருக்கு இரு கூலிகள் உண்டு. அவர் அதில் தவறாகிவிட்டால், அவருக்கு ஒரு கூலி உண்டு.
(ஸஹீஹுல் புஹாரி)
இந்த ஹதீஸில் ரஸுலுல்லாஹி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தெளிவாகக் கூறியுள்ளதன் அடிப்படையில் ஆய்வாளர்களின் தீர்ப்பு சரியானதாகவும் அமையலாம். தவறாகவும் அமையலாம்.
தீர்ப்பு சரியாக அமைந்தால் அவருக்கு இரு கூலிகள் கிடைக்கும். தவறாகி விட்டால் ஒரு கூலி கிடைக்கும். அவர் ஆராய்ச்சி செய்து சரியான தீர்வைக் காண்பதற்கு முயற்சி செய்ததற்காகவும், அதன் மூலம் சரியான முடிவை எட்டியதற்காகவும் அவர் இரு கூலிகளைப் பெற்றுக் கொள்கிறார்.
அதே வேளை, அவரது ஆராய்ச்சியில் சிரமத்துடன் முயற்சி செய்தாலும், அவரது ஆய்வைத் தரமாகச் செய்து சரியான முடிவை அவர் எட்டாததன் காரணமாக, அவரது முயற்சிக்காக ஒரு கூலியைப் பெற்றுக் கொள்கிறார். எனவே, அவரது தவறு மன்னிக்கப்படுகிறது.
ஆனால், அவரது தவறை அவர் வேண்டுமென்றே செய்திருந்தால்,அவருக்கு அது பாவமாக அமையும். அவ்வாறு, வேண்டுமென்றே ஆராய்ச்சியில் தவறு செய்பவர், மாா்க்கத்தில் புதிய ஷரீஅத்தை உருவாக்கியவாக ஆகிவிடுவார்.
அல்குர்ஆன், அஸ்ஸுன்னாவின் கல்வியை பெற்று, ஆராய்ச்சி செய்வதற்கு தரத்தில் இருக்கும் இமாம்களுடைய விஷயத்தில் இரண்டு தீவிரமான போக்கு இன்றைய முஸ்லிம்களிடம் காணப்படுகிறது
ஒரு கூட்டம் இமாம்களின் ஒரு வார்த்தையிலும் குறை காணக் கூடாது என்றும், அவர்கள் கூறுவதையெல்லாம் நாம் பின்பற்ற வேண்டும் என்று கூறுகிறார்கள். அதாவது, இமாம்களை நபியைப் பின்பற்றுவது போன்று பின்பற்றுகிறது. இதுவே கண்மூடித்தனமாகப் பின்பற்றுதல் அல்லது தக்லீத் எனப்படுகிறது. இவ்வடிப்படையில் தக்லீத் செய்வது ஹராமாகும். இவ்வாறு நபியை மட்டுமே பின்பற்ற முடியும். இங்கு கவனிக்கப்பட வேண்டியவை என்னவெனில், ஒரு ஆலிம் ஆராய்ச்சி செய்யும் தகுதியில் இருக்கும் காரணத்தினால், அவர் கூறுவதெல்லாம் மார்க்கமாகக் கருதப்பட்டு, அதனை மார்க்கமாகப் பின்பற்றும் நிலைப்பாட்டை மத்ஹப்வாதிகள் தங்களின் அடிப்படையாக்கி விட்டார்கள்.
மற்றுமொரு கூட்டத்தினர், இமாம்களும் நம்மைப் போன்ற மனிதர்கள்தானே என்று கூறி, அவர்கள் கூறியவற்றை நாம் பின்பற்றத் தேவையில்லையெனக் கூறுகிறார்கள். ஒரு ஆலிம் ஒரு விடயத்தை ஹராம் என்று கூறியதற்காக, நாம் ஏன் அதனை நம்பிப் பின்பற்ற வேண்டும் என நினைக்கிறார்கள். நம்மைப் போன்ற ஒரு மனிதனின் வார்த்தைகளுக்கு, நாம் ஏன் உயர்ந்த மதிப்பைக் கொடுக்க வேண்டும் என அவர்கள் சிந்திக்கிறார்கள். அந்த ஆலிம் எதனையாவது கூறினால், அதில் நமக்கு விரும்பியதை எடுத்துக் கொள்வோம், விரும்பியதை விட்டுவிடுவோம் என்று ஒரு நிலைப்பாட்டை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இது தவறான போக்காகும்.
இமாம்கள் என்பவர்கள் மனிதர்கள்தான். அவர்கள் நபிமார்களல்ல. அவர்களுக்கு வஹி வரவில்லை. அவ்வாறு இருப்பினும் அவர்கள் பொது மனிதர்களைப் போன்றவர்களோ அல்லது மடையர்களோ அல்ல. மாறாக, இமாம்கள் எனப்படுபவர்கள் மார்க்கக் கல்வியைக் கற்று, மார்க்கத்தை விளங்கி ஆதாரங்களைப் புரிந்து பேசக்கூடியவர்களாகும்.
அவர்கள் பேசும் போது, கல்வியின் அடிப்படையில் பேசக்கூடியவர்கள். இதன் காரணமாக, இமாம்களை மதிப்பது கடமையாகும். அதே போன்று, அவர்கள் கூறியவற்றில் உண்மையானவற்றைப் பின்பற்றுவதும் கடமையாகும். அவர்கள் எங்கு ஆதாரத்தை நிரூபிக்கவில்லையோ, அப்போது அவர்களைப் பின்பற்றுவது கடமையாகாது.
ஒரு ஆலிம், ஒரு விடயத்தை ஏன் ஹராமென்று கூறினார் என்பதைக் கவனிப்பது முக்கியமானதாகும். அவர் அல் குர்ஆனிலிருந்தும், ஹதீஸிலிருந்தும் ஆதாரபூர்வமாக ஒரு விடயத்தை நிரூபித்தால், அதனை எடுத்துக் கொள்வது கடமையாகும். அது அவருடைய தனிப்பட்ட கருத்தல்ல. மாறாக, அவர் பொது மக்களுக்குத் தெரியாத விஷயங்களை, கல்வியின் அடிப்படையில் அதனைக் கூறியிருக்கிறார். அதற்குரிய நன்மையை அவர் பெற்றுக் கொள்வார்.
அந்த ஆலிம் உண்மையை கல்வியின் மூலமாக கூறிய பின்னாலும், அதனைப் பின்பற்றாமல் இருப்பவர்கள் பாவத்தைச் சுமந்து கொள்ள நேரிடும். அதே வேளை, ஒரு ஆலிம் அல் குர்ஆன், அஸ்ஸுன்னாவிலிருந்து ஆதாரத்தைக் காட்டவில்லை என்றால் அது பின்பற்றுவதற்கு தகுதியற்றதாக அமைகிறது.
அல்லாஹ்வே மிக அறிந்தவன்
-அஷ்ஷெய்க் அபூ அப்திர் ரஹ்மான் யஹ்யா ஸில்மி ஹபிழஹுல்லாஹ்