நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை வணக்கமாகக் கொண்டாடுவோரிடம் அதற்கான சான்றை நபிகளாரின் ஹதீஸ்களிலிருந்து முன்வைக்கும் படி கேட்டமைக்கு அவர்களின் அப்பன், பாட்டன், பூட்டன் மீலாத் விழாக் கொண்டாடியமைக்கான சான்றுகளையே முகநூலெங்கும் பதிவு செய்து கொண்டுள்ளார்கள்.
இன்னும் சிலர் சில இமாம்கள் மீலாத் விழா கொண்டாடியுள்ளதாகவும், மக்கா, மதீனாவில் இக்கொண்டாட்டம் பாதிமிய்யாக்களுக்குப் பிற்பட்ட காலம் முதல் உஸ்மானிய ஹிலாபத்துக்கு இடைப்பட்ட காலங்களில் நடை பெற்றதாகவும், ஹரம் ஷரீபில் மீலாத் விழாக் கொண்டாட்டம் நடை பெற்றதாகவும் சில தகவல்களைப் புகைப்படங்களுடன் பதிவு செய்துள்ளார்கள். அவர்களின் பதிவுகள் உண்மைத் தன்மையுடையதா என்பது ஒரு புறமிருக்கட்டும். இவர்களின் இக்கூற்று மீலாத் விழாக் கொண்டாட்டத்துக்கான சான்றாக அமையுமா..? என்பதை நாம் பார்கலாம்.
நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் ஓரிறைக் கொள்கையைப் பிரச்சாரம் செய்யும் போது சிலை வணங்கிகள் கூறிய பதிலை அல்லாஹ் இவ்வாறு சொல்கிறான்.
قَالُوْا بَلْ وَجَدْنَاۤ اٰبَآءَنَا كَذٰلِكَ يَفْعَلُوْنَ
அதற்கவர்கள் "இல்லை. எனினும் எங்கள் மூதாதைகள் இவ்வாறே (ஆராதனை) செய்துகொண்டிருக்க நாங்கள் கண்டோம் (ஆகவே, நாங்களும் அவைகளை ஆராதனை செய்கிறோம்)" என்றார்கள்.
ஸாலிஹ் நபியின் சமூகம் சொன்னதும் அதே வாதத்தைத்தான்.
قَالُوْا يٰصٰلِحُ قَدْ كُنْتَ فِيْنَا مَرْجُوًّا قَبْلَ هٰذَآ اَتَـنْهٰٮنَاۤ اَنْ نَّـعْبُدَ مَا يَعْبُدُ اٰبَآؤُنَا وَاِنَّنَا لَفِىْ شَكٍّ مِّمَّا تَدْعُوْنَاۤ اِلَيْهِ مُرِيْبٍ
அதற்கவர்கள் (ஸாலிஹ் நபியை நோக்கி) "ஸாலிஹே! இதற்கு முன்னரெல்லாம், நீங்கள் எங்களுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமுடையவராக இருந்தீர்கள். எங்கள் மூதாதைகள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்களை நாங்கள் வணங்கக்கூடாதென்று நீங்கள் எங்களைத் தடை செய்கிறீர்களா? நீங்கள் எங்களை எதனளவில் அழைக்கிறீர்களோ அதனைப் பற்றி நிச்சயமாக நாங்கள் பெரும் சந்தேகத்தில் இருக்கிறோம்" என்று கூறினர்.
(அல்குர்ஆன் : 11:62)
ஷுஐப் (அலை) அவர்களின் சமூகமும் இதே வாதத்தைத்தான் சொன்னார்கள்.
قَالُوْا يٰشُعَيْبُ اَصَلٰوتُكَ تَاْمُرُكَ اَنْ نَّتْرُكَ مَا يَعْبُدُ اٰبَآؤُنَاۤ اَوْ اَنْ نَّـفْعَلَ فِىْۤ اَمْوَالِنَا مَا نَشٰٓؤُا اِنَّكَ لَاَنْتَ الْحَـلِيْمُ الرَّشِيْدُ
அதற்கவர்கள் "ஷுஐபே! நாங்கள் எங்கள் மூதாதையர்கள்கள் வணங்கிய தெய்வங்களையும், நாங்கள் எங்கள் பொருள்களில் எங்கள் விருப்பப்படி நடந்து கொள்வதையும் விட்டு விடும்படியாக (நீங்கள் எங்களுக்குக் கட்டளை இடும்படி) உங்களுடைய தொழுகையா உங்களைத் தூண்டுகிறது? நிச்சயமாக நீங்கள் மிக்க கண்ணியமுள்ள நேர்மையாளர்தாம்" என்று (பரிகாசமாகக்) கூறினார்கள்.
(அல்குர்ஆன் : 11:87)
மக்கத்துக் காபிர்களும் அதையே தான் சொன்னார்கள்.
وَاِذَا قِيْلَ لَهُمُ اتَّبِعُوْا مَآ اَنْزَلَ اللّٰهُ قَالُوْا بَلْ نَـتَّبِعُ مَآ اَلْفَيْنَا عَلَيْهِ اٰبَآءَنَا اَوَلَوْ كَانَ اٰبَآؤُهُمْ لَا يَعْقِلُوْنَ شَيْـٴًـــا وَّلَا يَهْتَدُوْنَ
மேலும், அல்லாஹ் இறக்கிவைத்த (இவ்வேதத்)தைப் பின்பற்றுங்கள் என அவர்களுக்குக் கூறப்பட்டால் (அவர்கள்) "அவ்வாறன்று. எவற்றின் மீது எங்களுடைய மூதாதையர்கள் (இருந்து, அவர்கள் எவற்றைச் செய்துகொண்டு) இருக்க நாங்கள் கண்டோமோ அவற்றையே நாங்கள் பின்பற்றுவோம்" எனக் கூறுகின்றனர். அவர்களுடைய மூதாதைகள் ஒன்றையுமே அறியாதவர்களாகவும் நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தாலுமா? (அவர்களைப் பின்பற்றுவார்கள்!)
(அல்குர்ஆன் : 2:170)
وَاِذَا قِيْلَ لَهُمْ تَعَالَوْا اِلٰى مَاۤ اَنْزَلَ اللّٰهُ وَاِلَى الرَّسُوْلِ قَالُوْا حَسْبُنَا مَا وَجَدْنَا عَلَيْهِ اٰبَآءَنَا اَوَلَوْ كَانَ اٰبَآؤُهُمْ لَا يَعْلَمُوْنَ شَيْــٴًـــا وَّلَا يَهْتَدُوْنَ
"அல்லாஹ் இறக்கி வைத்த (வேதத்)தின் பக்கமும், (அவனுடைய தூதரின் பக்கமும் வாருங்கள்" என அவர்களுக்குக் கூறப்பட்டால், "எங்களுடைய மூதாதைகள் எதன் மீதிருக்க நாங்கள் கண்டோமோ அதுவே (நாங்கள் பின்பற்ற) எங்களுக்கு போதும்" எனக் கூறுகின்றனர். அவர்களுடைய மூதாதைகள் யாதொன்றையும் அறிந்து கொள்ளாமலும், நேரான வழியில் இல்லாமல் இருந்தாலுமா (அவர்கள் தங்கள் மூதாதைகளைப் பின்பற்றுவார்கள்!)
(அல்குர்ஆன் : 5:104)
ஒவ்வொரு நபிமார்களுக்கும் எதிராக முன் வைக்கப்பட்ட அதே பழமை வாதத்தையே இன்றைய கத்தம், கந்தூரி, கபுரு வணக்க ஆதரவாளர்களும் முன்வைக்கின்றார்கள்.
அல்லாஹ் சொல்கிறான்.
فَلَا تَكُ فِىْ مِرْيَةٍ مِّمَّا يَعْبُدُ هٰٓؤُلَاۤءِ مَا يَعْبُدُوْنَ اِلَّا كَمَا يَعْبُدُ اٰبَآؤُهُمْ مِّنْ قَبْلُ وَاِنَّا لَمُوَفُّوْهُمْ نَصِيْبَهُمْ غَيْرَ مَنْقُوْصٍ
(நபியே! இணைவைத்து வணங்கும்) இவர்கள் வணங்குபவைகளைப் பற்றி (இவர்களிடம் ஏதும் ஆதாரம் இருக்குமோ என்று) நீங்கள் சந்தேகப்பட வேண்டாம். (யாதொரு ஆதாரமுமில்லை. எனினும்,) இதற்கு முன்னர் இவர்களுடைய மூதாதைகள் வணங்கிக் கொண்டிருந்தது போன்றே இவர்களும் (யாதொரு ஆதாரமுமின்றியே) வணங்குகின்றனர். இவர்களுடைய (வேதனையின்) பாகத்தை (இவர்களுடைய மூதாதைகளுக்குக் கொடுத்து இருந்தவாறே) இவர்களுக்கும் முழுமையாக யாதொரு குறைவுமின்றி நிச்சயமாக நாம் கொடுப்போம்.
(அல்குர்ஆன் : 11:109)
மேலுள்ள வசனங்கள் அனைத்தும் எந்த வித ஆதாரமுமின்றி மூதாதையர்கள் செய்து வந்த வணக்கங்களைச் செய்வது வழிகேடு எனச் சொல்கின்றது. நாம் மார்க்கத்தின் பெயரால் எந்த ஒரு காரியத்தைச் செய்வதென்றாலும் அதற்கான வழிகாட்டல் நபிகளாரிடம் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில் அது எப்படிப்பட்ட நற்காரியமாக எமக்குத் தெரிந்தாலும் அது பித்அத்தாகும்.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு சொற்பொழிவுக்கு முன்னரும் கூறுவார்கள்.
வார்தைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம் (குர்ஆன்) ஆகும். வழிகாட்டலில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டலாகும். செயல்களில் தீயவை (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக உண்டாக்கப் படுபவை ஆகும். (மார்க்கத்தின் பெயரால் புதிதாக உருவாக்கப்படும்) ஒவ்வொரு புதுமையும் வழிகேடு ஆகும்" என்று கூறுவார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 1573.
வருடங்களில் சிறந்த வருடங்கள் என நபி (ஸல்) அவர்கள் முதல் மூன்று நூற்றாண்டையும் சொன்னார்கள். மாதங்களில் சங்கையான மாதங்களாக துல் கஃதா , துல் ஹிஜ்ஜா, முஹர்ரம், ரஜப் ஆகிய மாதங்களைச் சொன்னார்கள். அமல்களில் விரைந்து செயல்ட வேண்டிய மாதமாக ரமழானைச் சொன்னார்கள். சூரியன் உதிக்கக் கூடிய நாட்களில் மிகச் சிறந்த நாளாக வெள்ளிக் கிழமையை சொன்னார்கள். 1000 மாதங்கள் அமல் செய்வதை விட சிறந்த கூழியைப் பெற்றுத்தரும் நாளாக லைலதுல் கத்ர் இரவைச் சொன்னார்கள்,. எமது அமற்களுக்கு ஜிஹாதை விடச் சிறந்த கூலியைப் பெற்றுத் தரும் நாட்களாக துல் ஹஜ் முதல் பத்து நாட்களைச் சொன்னார்கள்,. இஸ்லாமியர்களின் பண்டிகை நாற்களாக ஈதுல் பித்ரையும், ஈதுல் அழ்ஹாவையும், அய்யாமுத் தஷ்ரீகையும் சொன்னார்காள், ஒரு முஃமினுடைய வாழ்கையில் சிறந்த நேரமாக தஹஜ்ஜத் நேரத்தைச் சொன்னார்கள். எம்மைப் படைத்த றப்புல் ஆலமீனுக்கு நாம் மிக நெருக்கமாக உள்ள இடமாக ஸுஜூதைச் சொன்னார்கள்,. இப்படி அனைத்தையும் கற்றுத் தந்த நபிகளார் ஏன் நபியவர்களை புகழக்கூடிய முக்கிய நாளாக மீலாத் விழாவைப்பற்றி எமக்கு அறிவிக்க வில்லை..?
நபிகளாரின் பிறப்பைக் கொண்டாட வேண்டுமெனில் அதற்கான வழிகாட்டளை நபிகளாரே எமக்குக் கற்றுத் தந்திருப்பார்கள். எம்மை விட நபிகள் நாயகத்தை உயிரைவிட மேலாக நேசித்த நபித் தோழர்கள் மீலாத் விழாக்களை வெகு விமர்சையாகக் கொண்டாடி இருப்பார்கள். அதைத் தொடர்ந்து வந்த தாபிஈன்கள், தபஉத் தாபிஈன்கள், இமாம்கள் என மிகச் சிறந்த முதல் மூன்று நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள் மீலாத் விழாவைக் கொண்டாடி இருப்பார்கள். இப்படி இவர்களில் யாருமே அறியாத, கொண்டாடாத ஒன்று எப்படி மார்க்கமாக ஆனது..? இதனூடாக மீலாத் ஆதரவாளர்கள் எதைச் சொல்ல வருகின்றார்கள்..? நபிகளார் மீலாத் என்ற வணக்கத்தைப் பிரச்சாரம் செய்யாமல் மறைத்து விட்டார்கள் என்றா..? அல்லது நபித் தோழர்களை விட நாம் தான் நபிகளாரை நேசிக்கிறோம் என்றா..?
நபிகளாரின் பிறப்பிளோ, இறப்பிளோ எந்த வித சந்தோசகரமான கொண்டாட்டமோ வருடாந்த, துக்ககர நிகழ்வோ கிடையாது என்பதால் தான் அப்படியான நிகழ்வுகளை நபித்தோழர்கள் ஏற்பாடு செய்யவில்லை.
நபிகளாரின் பிறந்த ஆண்டைத் தெளிவாக அறிந்து வைத்திருந்த நபித் தோழர்கள் கிரிஸ்தவர்களைப் போல் நபிகளார் பிறந்த ஆண்டையோ, நபித்துவம் கிடைத்த ஆண்டையோ இஸ்லாமியப் புது வருடமாக் கணக்கிட வில்லை. மாறாக சத்தியத்தையும், அசத்தியத்தையும் பிரித்துக் காட்டிய ஹிஜ்ரத்தை அடிப்படையாகக் கொண்டே இஸ்லாமியப் புது வருடத்தைக் கணக்கிட்டார்கள்.
حدثنا عبد الله بن مسلمة، ثنا عبد العزيز، عن أبيه، عن سهل بن سعد، قال: ما عدُّوا مِن مَبعث النبي صلى الله عليه وسلم، ولا مِن وفاته، ما عدُّوا إلا من مقدمه المدينة»
رواه البخاري في كتاب مناقب الأنصار، باب التاريخ من أين أرخوا التاريخ، برقم (3934).
ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி) அறிவித்தார்.
மக்கள் (ஆண்டுக்கணக்கை) நபி(ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட (அவர்களின் 40-ம் வய)திலிருந்தோ அவர்களின் மறைவிலிருந்தோ கணக்கிடவில்லை; மதீனாவுக்கு நபி(ஸல்) அவர்கள் (ஹிஜ்ரத் செய்து) வந்ததிலிருந்தே கணக்கிட்டார்கள்.
ஸஹீஹ் புகாரி : 3934.
இரண்டு பெருநாட்களைத் தவிர வேறு எந்தத் தினத்தையும் நபிகளார் கொண்டாட்டத்துக்குரிய தினமாக முஸ்லிம்களுக்கு அடையாளப் படுத்தவில்லை என்பதால் நபித்தோழர்களும் அவ்வாறான வேலைகளைச் செய்யவில்லை என்பதற்கு யூதனின் கேள்வி சான்று.
தாரிக் இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
யூதர்களில் ஒருவர் உமர் (ரலி) அவர்களிடம், 'இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே!
'இன்று உங்களின் மார்க்கத்தை உங்களுக்காக நான் முழுமையாக்கிவிட்டேன். என்னுடைய அருட்கொடையையும் உங்களின் மீது நான் நிறைவு செய்துவிட்டேன். இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை மார்க்கமாக அங்கீகரித்துவிட்டேன்' (திருக்குர்ஆன் 05:3 வது) எனும் இந்த இறைவசனம் எங்களுக்கு அருளப்பட்டிருந்தால் நாங்கள் (வசனம் அருளப்பட்ட) அந்த நாளைப் பண்டிகை நாளாக ஆக்கிக்கெண்டிருப்போம்' என்றார்.
அப்போது உமர் (ரலி) அவர்கள், 'இந்த வசனம் எந்த நாளில் இறங்கியது என்பதை அறிவேன். இது அரஃபா (துல்ஹஜ் 9ஆம்) நாள் வெள்ளிக்கிழமையன்று அருளப்பெற்றது' என்றார்கள்.
ஸஹீஹ் புகாரி : 7268.
நாம் நினைத்த விதத்தில் இந்த மார்க்கத்தில் கொண்டாட்ட தினங்களை உருவாக்கலாம் என்றால் நபித்தோழர்கள் "இக்ரஃ" என நபிகளாரைப் பார்த்து ஜிப்ரீல் (அலை) அவர்கள் முதல் வசனத்தை ஓதிக்காண்பித்த அந்நாளையோ, இம்மார்க்கம் பூர்த்தி செய்யப்பட்ட நாளையோ கொண்டாட்ட தினமாக எடுத்திருப்பார்கள்.
திங்கட்கிழமை நோன்பு நோற்பது பற்றிக் கேட்கப்பட்ட போது நபிகளார் அன்று தான் அவர்கள் பிறந்ததாகவும், அன்று தான் அல் குர்ஆன் முதன் முதலில் அருளப் பெற்றதாகவும் கூறினார்கள்.
அபூகத்தாதா அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், திங்கட்கிழமை நோன்பு நோற்பது குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு "அன்று தான் நான் பிறந்தேன்; அதில் தான் எனக்குக் குர்ஆன் (முதன்முதலில்) அருளப்பெற்றது" என்று கூறினார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 2153.
இந்த ஹதீஸை மீலாத் விழாக் கொண்டாடுவோர் தமது வாதத்துக்கான சான்றாக முன்வைப்பார்கள். ஆனால் இந்த ஹதீஸ் அவர்களின் நிலைப்பாட்டுக்கு எதிரானதாகும்.
முஸ்லிம்களுக்கான கொண்டாடும் தினமாக இரண்டு நாட்களையே இஸ்லாம் பிரகடனம் செய்துள்ளது. அவை நோன்புப் பெருநாளும், ஹஜ்ஜுப் பெருநாளுமாகும். இந்நாட்களில் நோன்பு நோற்பதைத் தடை செய்த நபி (ஸல்) அவர்கள் தான் பிறந்த தினமான திங்கட்கிழமை நோன்பு நோற்குமாறு கூறியுள்ளார்கள் என்றால் அந்நாள் கொண்டாடத் தகுந்த நாளில்லை என்பது தெளிவாகின்றது. பண்டிகை தினங்களைப் போல் கொண்டாடப்பட வேண்டிய நாளாக நபிகளாரின் பிறந்த தினம் இருக்குமாக இருந்தால் திங்கட்கிழமை நோன்பு நோற்பதற்கு நபிகளார் வழிகாட்டி இருக்க மாட்டார்கள் . அத்தினத்தில் உண்டு, குடித்து, ஏழைகளுக்கும் உணவளித்துக் கொண்டாடச் சொல்லி இருப்பார்கள். ஆனால் அப்படிச் சொன்னமைக்கு எந்தச் சான்றுமில்லை.
எனவே தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். மக்கா , மதீனாப் பள்ளிகளில் நடைபெறும் 23 ரக்ஆத் கியாமுல் லைல் எப்படி எமக்கு ஆதராமில்லையோ அது போன்று தான் அரபிகளே மீலாத் விழாவை நடை முறைப்படுத்தி விட்டாலும் அது எமக்குச் சான்றாக இல்லை . மக்கா வெற்றிக்கு முன்னர் கஃபாவில் சிலைகள் வைக்கப்பட்டிருந்தது என்பதற்காகச் சிலை வணக்கத்தை நாம் ஆதரிக்கலாமா..?
புனித ஹரம் ஷரீபில் பல வகையான பித்அத்களை அவ்வப்போது இருந்த ஆட்சியாளர்கள் அரங்கேற்றி உள்ளார்கள். அது போன்று உஸ்மானிய கிலாபத்தில் பல ஷிர்கான காரியங்களும், பித்ஆக்களும் அதிகாரத்தில் இருந்தவர்களின் தலைமையின் கீழ் அரங்கேற்றப்பட்டது . அவை அவர்கள் செய்த தவறுகளாகும்.
இஸ்லாம் எந்தவொரு சந்தோச தினத்தையும் கண் மூடித்தனமாகப் பாடல்களைப் பாடி மஸ்ஜித்களை மாற்றுமத தேவாலயங்களைப் போல் அழங்கரித்துக் கொண்டாடக் கற்றுத் தரவில்லை. மாறக மாற்றுமக் கலாச்சாரங்களுக்கு ஒப்பாக நடப்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள். மூஸா (அலை) அவர்களும் அவர்களின் சமூகமும் கொடுங்கோலன் பிர்அவ்னிடமிருந்து காப்பாற்றப்பட்டு பிர்அவ்னும் அவனின் படையும் அழிக்கப்பட்ட வெற்றி நாளை நினைவு கூறும் முகமாக நபி மூஸா (அலை) அவர்கள் கொண்டாட்ட நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய வில்லை. மாறாக ஒவ்வொரு வருடமும் அந்நாளில் (முஹர்ரம் 10 ) நோன்பு நோற்று அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் மூஸா (அலை) அவர்களின் சமூகம் பெற்ற வெற்றியை நினைவு கூறும் முகமாக அன்னதானம் வழங்கி பாடல்கள் பாடிக் கொண்டாடக் கற்றுத் தரவில்லை. மாறாக அந்நாளில் நோன்பு நோற்பதைத் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வழியுறுத்தினார்கள். அதில் கூட யூத கிரிஸ்தவர்களுக்கு மாறு செய்யும் முகமாக முஹர்ரம் பிறை ஒன்பதும் பத்தும் நோன்பு நோற்கச் சொன்னார்கள்.
யூதர்களுக்கும் , கிரிஸ்தவர்களுக்கும் , மஜூஸிகளுக்கும், முஷ்ரிகீன்களுக்கும் மாறு செய்வதை மார்க்கமாகப் பிரகடனப்படுத்திய கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் பெயரால் கிரிஸ்தவர்கள் ஈஸா (அலை) அவர்களின் பிறந்த தினத்தைக் கொண்டாடுவதற்கு ஒப்பாக நபிகள் நாயகத்தின் பிறந்த தினக் கொண்டாட்டத்தைக் கொண்டாடுவது மாபெரும் மோசடியாகும்.
மீலாத் விழாக் கொண்டாட்டம் பாதிமிய்யாக்களின் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு பித்அத்தாகும். நபிகளார் யானை வருடம் திங்கட்க் கிழமை பிறந்தார்கள். என்ன திகதி என்பதற்கு தெளிவான சான்றுகளில்லை. என்றாலும் நபிகளார் ரபீஉனில் அவ்வல் பிறை 12ல் வபாத்தானார்கள் என்பது ஊர்ஜிதமான தகவலாகும். ஷீஆக்கள் நபிகளார் வபாத்தான தினத்தை (ரபீஉல் அவ்வல் 12) நபிகளாரின் பிறந்த தினமாகக் கொண்டாடத் தெரிவு செய்திருப்பது சில வேலை நபிகளாரின் இறப்பைக் கொண்டாடும் நோக்கில் கூட இருக்கலாம்.
அல்லாஹ் மிக அறிந்தவன்.
நட்புடன்:
அல் ஹாபில் இன்திகாப் உமரீ
அட்டுலுகம
இலங்கை