மீலாது விழாவும் மார்க்கத்தில் அதன் நிலைப்பாடும்

நபியவர்கள் பிறந்த நாளைக் கொண்டாடும் ஒரு நடைமுறை நபியவர்கள் காலத்திலோ ஸஹாபாக்கள் தாபியீன்களின் காலத்தில் இருக்கவில்லை என்பது மீலாது விழாவை ஆதரிக்கும் அறிஞர்கள் கூட ஏற்றுக்கொண்ட ஓர் உண்மையாகும். ஷாபிமத்ஹபின் ஹதீஸ் அறிஞர்  ஸஹீஹுல் புகாரியின் விரிவுரையாளர் இமாம் இப்னுஹஜர் அல்அஸ்கலானி (றஹ்)  குறிப்பிடும் போது
சிறந்த காலப்பகுதியென நபியவர்கள் குறிப்பிட்ட முதல் மூன்று நூற்றாண்டு காலப்பகுதியில் நபியவர்கள் பிறப்பைக் கொண்டாடும் வழக்கம் இருக்கவில்லை என்பது உண்மையே!
قال السيوطي - رحمه الله تعالى - في الحاوي (٢٢٩/١):

وَقَدْ سُئِلَ شَيْخُ الْإِسْلَامِ حَافِظُ الْعَصْرِ أبو الفضل ابن حجر عَنْ عَمَلِ الْمَوْلِدِ، فَأَجَابَ بِمَا نَصُّهُ:

أَصْلُ عَمَلِ الْمَوْلِدِ بِدْعَةٌ لَمْ تُنْقَلْ عَنْ أَحَدٍ مِنَ السَّلَفِ الصَّالِحِ مِنَ الْقُرُونِ الثَّلَاثَةِ، وَلَكِنَّهَا مَعَ ذَلِكَ قَدِ اشْتَمَلَتْ عَلَى مَحَاسِنَ وَضِدِّهَا، فَمَنْ تَحَرَّى فِي عَمَلِهَا الْمَحَاسِنَ وَتَجَنَّبَ ضِدَّهَا كَانَ بِدْعَةً حَسَنَةً وَإِلَّا فَلَا
எனவே அதுவும் ஒரு பித்அத்தே! எனினும் மீலாது விழா நல்ல விடயங்களையும் உள்ளடக்கியுள்ளது. மோசமானவற்றையும் கொண்டுள்ளது. ஆகவே மோசமான (வீண்விரயங்கள், களியாட்டங்களைத்) தவிர்த்து நல்லவற்றை மாத்திரம் ( நபியவர்கள் சரிதை கூறல் போன்ற) செய்ய முடியுமாக இருப்பின் அதற்கு பித்ஆ ஹஸனா நல்ல பித்அத் என்று சொல்ல முடியும். நூல் அல்ஹாஜ் 1/229

மேற்படி கருத்தின்படி இமாமவர்கள் சிறப்புமிக்க மூன்று காலப்பகுதியிலும் மீலாது இருக்கவில்லை என்பதைத் தெளிவாகச் சொல்கின்றார்கள். எனவே அதை நன்மை கிடைக்கும் என்ற எண்ணத்தில் இபாதத்தாகச் செய்ய முடியாது காரணம் நபியவர்கள் செய்திராத எதுவும் மார்க்கமாகாது, நபியவர்கள் வாழ்க்கை வரலாறுகளை எடுத்துரைக்கும் சந்தர்ப்பமாக வேண்டுமானால் ஆக்கிக் கொள்ளலாம் என்பதே இமாமவர்களின் கருத்தாகும்,,

இதை நாமும் ஏற்றுக் கொள்கின்றோம்.

ஆனால் இன்று மீலாது விழா ஏற்பாட்டாளர்கள், அதை ஆதரிக்கும் பாமர வர்க்கத்தினர் இந்த நிலைப்பாட்டிலா இதைக் கொண்டாடுகிறார்கள்.? இல்லை.. ஸுப்ஹான மெளலித் வித்ரியா மெளலீது றபீஉல்அவ்வல் மெளலீது இப்படி பல மெளலிதுகளை பக்திப் பரவசத்துடன் ஓதி நான் மீலாது விழாக் கொண்டாடியதால் எனக்கு அல்லாஹ் சுவர்க்கத்தைத் தருவான் என்ற நம்பிக்கையில்லல்லவா   பாமர சமூகத்தினர் இதைக் கொண்டாடுகின்றனர்.? அப்படியாயின் இவர்கள் மார்க்கத்தின் பெயரால் ஏமாறுகிறார்கள். இவர்களை ஏமாற்றியவர்களே இதற்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்கள்.

நபியவர்கள் றபீஉல் அவ்வல் மாதத்தில் பிறந்தார்களா அல்லது மரணித்தார்களா?
நபியவர்கள் திங்களன்று பிறந்தார்கள் என்பது மட்டுமே ஹதீஸில் இடம்பெறுகின்றது. எந்த மாதம் திகதி என்பதில் கருத்து வேறுபாடுள்ளது.அதிலும் எந்தத் திகதியில் ? என்பதில் ஏகப்பட்ட கருத்துக்கள் உள்ளன. 1,2,3,5,9,12,21,24  இப்படியாக பல கருத்துக்கள். 

அர்றஹீக் எனும் நூலில் ஆசிரியர்  உறுதிப்படுத்தப்பட்ட செய்தியின் படி நபியவர்கள் 09ல் பிறந்தார்கள் என உறுதிப்படுத்துகின்றார்கள்.

இதேநேரத்தில் நபியவர்கள் றபீஉல் அவ்வல் 12ல் மரணித்தார்கள் என்பது வரலாற்றாசிரியர்கள் மத்தியில் கருத்தொருமித்த விடயமாக உள்ளது. இந்நிலையில் 12ல் பிறந்ததில் கருத்துவேற்றுமை. அதில் மரணித்தமை உறுதி. இந்நிலை உங்கள் தனிப்பட்ட விடயத்தில் ஏற்பட்டால் உங்கள் முடிவு எவ்வாறு அமையுமென மனச்சாட்சியை தொட்டுச் சொல்லுங்கள்.

ஒருபேச்சுக்காக நபிகள் 12ல்தான் பிறந்ததாக ஏற்றுக் கொண்டாலும் ஒருவர் தன்வீட்டில் மகனுக்கு பிறந்தநாள் கொண்டாட இருந்த நிலையில்  அதே தினத்தில் அம்மகன் மரணத்தால் வாப்பா என்ன செய்வார்....?  பிள்ளைகள் ஒன்றுகூடி வயதான தம் தந்தைக்கு பிறந்தநாள் கொண்டாட இருந்த சமயத்தில் மறுநாள் தந்தை மரணித்த விட்டால் பிள்ளைகள் அன்று என்ன செய்வார்கள்? தந்தைக்கு பிறந்த நாள் கொண்டாடுவார்களா துக்கம் அனுஷ்டிப்பார்களா..? 
உஙகளுக்கு இப்படி நடந்தால் என்ன செய்வீர்கள்?

ஆக நமதுஆன்மீக தந்தை இறந்தமை நமக்குத் துக்கமில்லை.. அப்படித்தானே?..

சிலர் இப்படியொரு தர்க்கபூர்வ கேள்வியொன்றை முன்வைக்கின்றனர்.
இன்று அன்னையர்தினம் சிறுவர்தினம், மூத்தவர்தினம், ஆசிரியர் தினம், பிறந்த நாள் ஏன் காதலர் தினம் கூட கொண்டாடுகின்றனர். அதையெல்லாம் தடுக்காத இந்த முல்லாக்கள் ஏன் நபியவர்களின் பிறந்த தினத்தை மட்டும் கொண்டாடும் போது இப்படி மல்லுக்கு நிற்கின்றனர்.??

இதற்கும் முதல் சொன்ன பதில்தான்.  சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர்களுக்கு ஏதும் பரிசு கொடுப்பது அன்னையர் தினத்தில் தாயின் மகத்துவம் பற்றி பேசுவதோ ஆசிரியர் தினத்தில் அவர்களின் அர்ப்பணிப்புக்களை நினைவுகூரல்  அதுவொரு சாதாரண நிகழ்வாகப்  பார்க்கப்படுகின்றதேயன்றி மார்க்க அனுஷ்டானமாக- இபாதத்தாகப் பார்க்கப் படுவதில்லை. தொழுகை, நோன்பு, ஹஜ் போன்று நிய்யத் வைத்து பக்தியோடு இவற்றைச் செய்வதில்லை. ஆனால் மீலாது விழா நிகழ்வு அதில் ஓதப்படும் மெளலூது கந்தூரியெல்லாம் பக்திப்பரவசத்தோடு ஊதுபத்தி வாசனையோடு இபாதத் - நன்மை கிட்டுமென்ற, இதனால் சுவர்க்கம் செல்லலாமென்ற நம்பிக்கையுடன் அல்லவா செய்யப்படுகின்றது.

மற்றும் சிலர் இந்தக் கூட்டத்துக்கு வேலையில்ல...   மது சூது, மாது களவு என்று தடுக்கப்பட - பேசப்பட வேண்டிய விடயங்கள் ஏராளமிருக்க இவர்களுக்கு எப்ப பார்த்தாலும் மீலாதை எதிர்ப்பது வேலையாய்ப் போச்சு 

ஆம்! மது,மாது,சூது போன்றன  பெரும்பாவங்கள்தான். ஆனால் அவற்றை விட மார்க்கத்தின் பெயரால் செய்யப்படும் பாவங்கள் ஆபத்தானவை. காரணம் இப்பாவங்கள் செய்வோரும்சரி அதைப் பார்ப்பவரின் சரி
 அதைபு பெரும்பாவம் என்று தெரிந்து தமது மனச்சாட்சிக்கு விரோதமாகவே அதில் ஈடுபடுகின்றனர், என்றாவதொரு நாள் மன உறுத்தலால் அதிலிருந்து திருந்தி தவ்பாச் செய்யச் சந்தர்ப்பம்  உள்ளது. ஆனால் மீலாது விழா போன்ற பித்அத்துக்கள் இபாதத் என்ற நம்பிக்கையில் செய்யப்படுவதால் அவர்களுக்கு தாம் செய்வது மார்க்கவிரோதச் செயல் எனும் மனஉறுத்தலே இருப்பதில்லை.  அதனால் அவர் தவ்பாச் செய்வதற்கான வாய்ப்பும் மிகக் குறைவு. இதனால்தான் மக்களுக்கு இதுபற்றி அதிகம் தெளிவூட்டும் அவசியம் ஏற்படுகின்றது.

அடுத்து மீலாது கொண்டாட்டம் உருவான வரலாறும் பின்னணியும்....

மீலாது விழாவை உருவாக்கி நடைமுறைப் படுத்தியவர்கள் ஷீஆக்கள். திட்டம் தீட்டியவர்கள் யூதர்கள் .. இதுதான் உண்மை..

அதாவது முஸ்லிம்களை பிளவுபடுத்தி, பலவீனப்படுத்தி மார்க்கத்தை விட்டு தூரமாக்கி கிருஸ்தவர்களை  பல பிரிவுகளாகப் பிரித்து மூடநம்பிக்ஙைகளுக்குள்   வீழ்த்திட போட்ட திட்டத்தைப் போல் யுதர்கள் முஸ்லிம்களை ஷீஆ முஸ்லிம் - சுன்னி முஸ்லிம் என வேறுபடுத்தி அதில் வெவற்றிகண்டபின்  ஷீஆக்கள் மூலம் தூய இஸ்லாத்தின் வழிகாட்டலிலிருந்து முஸ்லிம்களைத் துரமாக்க  ஷீஆக்களை வைத்து உருவாக்கிய ஒரு நிகழ்ச்சியே மீலாது விழாக் கொண்டாட்டம்.

இஸ்லாமிய வரலாற்றில் அப்பாஸியாக்களின் ஆட்சிக்காலம் சுமார் ஐந்து நூற்றாண்டுகளைக் கொண்டது. இதில்  நான்காம் நூற்றாண்டின் நடுப்பபகுதியில் ஆட்சி பலவீனப்பட ஆரம்பித்தது.  இதற்கான காரணிகளில் அரசாங்க உயர்பதவிகளை வகித்த  யூதர்களின் சூழ்ச்சிகள் முக்கியமானதாகும். இவர்கள் ரகசியமாக செய்துவந்த நீண்டகால சதித்திட்டத்தின் விளைவாகவே சாம்ராஜியமாக இருந்துவந்த இஸ்லாமிய ஆட்சிக்குள் பல சிற்றரசுகள்தோன்றின. - குறுநில மன்னர்கள் உருவாகினர்.

இவற்றில் அய்யூபிய்யீன், மமாலிக்கா போன்றன  அப்பாசிய ராஜ்ஜியத்துக்கு கீழ்படிந்த   சிற்றரசுகளாகவும் மற்றும்சில அரசுக்கு எதிராகவும் செயற்பட ஆரம்பித்தன.  அவ்வாறு எதிராக உருவானதோர் சிற்றரசுதான் பாத்திமிய்யாக்கள்- உபைதிய்யூன்  எனும் சிற்றரசு. இவர்கள் சீஆக் கொள்கையில் உள்ளவர்கள். அதாவது நபியவர்களுக்குப்பின் ஆட்சிக்குத் தகுதியானவர் அலீ(றழி)யே! ஏனைய மூன்று கலீபாக்களும் சூழ்ச்சிசெய்து ஆட்சிக்கு வந்தவர்கள்  என்று கூறி அலீயைப் போற்ற ஆரம்பித்து கடைசியில் அலீதான் அல்லாஹ்! என்று கூறுபவர்களே இந்த ஷீஆக்கள்.

இவர்களில் மைமூன் அல் கத்தாஹ் என்பவனே தன்னை பாத்திமா நாயகியின் வழித்தோன்றலில் வந்த இஸ்மாயில் பின் ஜாபர் சாதிக்கின் மகன் என்று வாதிட்டான். ஆனால் வம்ச   ஆராய்ச்சி அறிஞர்கள் இவன் யூத வம்சத்திலிந்து புதிதாக இஸ்லாத்தை ஏற்றவனென்றும் ஜாபர் சாதிக்கின் மகன் இஸ்மாயில் இளவயதிலேயே மரணித்ததால் அவருக்கு வாரிசுகள் இருக்கவில்லையென்றும் உறுதிப்படுத்துகின்றனர்.
பார்க்க: ஷரஹுஸ்ஸுதூர் பீ அஹ்காமில் மஸாஜிதி வல் குபூர்.

இந்நிலையில் அப்பாஸிய சாம்ராஜ்ஜியத்துக்கு எதிராக அரசியல் செய்து ஆட்சியை வீழ்த்த வேண்டுமென்ற யூதர்களின் தூரநோக்கு திட்டத்தின் படி  செயற்பட்ட மைமூன் என்ற இவ்வரசன் முதலில் மொரோக்கோ நாட்டில் தனது விசமப் பிரச்சாரத்தை ஆரம்பித்து தன்னை பாத்திமா நாயகியின் வம்சத்தில் வந்த பேரன் எனப் பாமரர்களை ஏமாற்றி நம்ப வைத்து அங்கு பாத்திமிய்யாக்கள் என்ற பெயரில் ஓர் சிற்றரசை நிறுவுவதில் வெற்றிகண்டான்.  பின்னர் அருகிலுள்ள தூனுஸிய்யா போன்ற சில நாடுகளும் இவ்வரசின் கீழ் உள்வாங்கப்பட்டு  ஹிஜ்ரி 362 ல் இஸ்லாமிய வரலாற்றின் புராதன சின்னமான எகிப்தைக் கைப்பற்றி அதன் தலைநகருக்கு காஹிரா-கெய்ரோ என்றும் பெயர்சூட்டப்பட்டது.

பிற்காலப்பகுதியில் எகிப்தின் பாத்திமிய்ய ஆட்சியாளராக இருந்த அல் முஇஸ் லிதீனில்லாஹ் என்பவர்  பாத்திமிய்யாக்களான தாம் ஆட்சியமைப்பதற்குக் காரணமாகவிருந்த யூதர்களுக்கு அரசின் அமைச்சு மற்றும் முக்கிய பதவிகளைக் கொடுத்திருந்தார். அவர்களின் ஆலோசனைப்படியே ஆட்சியை நடத்தினார். இந்நிலையில் மார்க்க வழிபாடு, பாரம்பரியத்தில் பழக்கப்பட்ட எகிப்தியர்களுக்கு பாத்திமிய்ய ஆட்சியில் -அவர்கள் ஷீஆக் கொள்கையாதலால் ஆதீத அதிருப்தி நிலவியது. அந்த அதிருப்தியை நீக்கி அவர்கள் மனதில் இடம்பிடிக்க அரசியல் நோக்கில் யூத யோசனைப்படி ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த மீலாது விழாக் கொண்டாட்டம். அதுமட்டுமின்றி பொதுமக்களைத் திருப்திப்படுத்த முஹர்ரம் கொண்டாட்டம், ரஜபுமாத சடங்கு , புதுவருடம் கொண்டாட்டம், வருட இறுதிக் கொண்டாட்டம்  , றமழானை வரவேற்கும், வழியனுப்பும் சடங்குகள் இப்படி ஏகப்பட்ட சடங்குகளை மார்க்கம் என்ற பெயரில் அறிமுகப்படுத்தி அதில் பொதுமக்களுக்கு விருந்துகளையும் வெகுமதிகளையும் அள்ளியிறைத்து மக்கள் மத்தியில் அரசியல் ஆதரவு பெற்றனர்.  இந்த அற்ப வெகுமதியில் ஏமாந்த    பாமர பொதுமக்கள் இவ்வாட்சியை எதிர்ப்பதைக் கைவிட்டால் தம் ஆட்சியை எகிப்தில் நன்கு பலப்படுத்திக் கொண்டு பின் தமது ஷீஆ நச்சுக் கொள்கைகளான, மூன்று கலீபாக்களையும் சபித்தல்,நபிக்கு ஏசுதல், அலி(றழி)தான் நபியென வாதிடல், குர்ஆனை மறுத்தல்,  ஹதீஸ்களை நிராகரித்தல்,   ஸஹாபாக்களில் சிலரைத்தவிர அனைவரையும் காபிராக்கல்,  இவைபோன்ற வழிகாட்ட ஷீஆக் கொள்கைகளைப் பரப்பி நாட்டை ஷீஆ அரசாங்கப் பிரகடனப்படுத்தி சீஆக் கொள்கைகளை பின்பற்றுவதைக் கட்டாயமாக்கி  அக்கால சுன்னத் வல் ஜமாஅத் உலமாக்கள் பலரைக் கொலைசெய்து, ஆயிரக்கணக்கான கணக்கானோரைச் சிறையிலடைத்து சித்திரவதை செய்து  ஷீஆ கொள்கைகளை ஏற்காத முஸ்லிம்களை மிகக் கொடூரமாக நடத்தியவர்களே இந்த ஷீஆ இஸ்மாயீலிய்யாக்கள்.

நபிகளாரை முஹப்பத் வைக்கின்றோம் என்ற இவர்களின் கபட நாடகத்தை அறியாது அக்கால சூபி மகான்களின் சிலர் இவர்கள் தொடங்கிவைத்த மீலாது கொண்டாட்டம், மவ்லீது போன்றவற்றை இபாதத் என்ற பார்வையில் செய்ய முற்பட்டனர் . விளைவு இன்று உலக முஸ்லிம்களின் பெரும்பாலானவர்கள் இதை இபாதத்தாகச் செய்யும் நிலையை ஏற்பட்டமை,கசப்பான வரலாற்று உண்மையாகும். 
இன்று இதை எதிர்ப்பவர்கள் மீது  மீலாத் ஆதரவாளர்கள் வஹாபிகள் ,  நபிகளை நேசிக்காதவர்கள்  என்று வசைமாரி பொழிவதும் கவலைப்பட வேண்டிய ஒருவிடயமாகும்.

-ஜலீல் மதனி
أحدث أقدم