அத்தியாயம் 25 ஹஜ்

ஸஹீஹுல் புகாரி
அத்தியாயம் 25

ஹஜ்

அளவற்ற அருளாளனும் கருணையன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.

பகுதி 1

ஹஜ்ஜுக் கடமையும் அதன் சிறப்பும்.

அல்லாஹ் கூறினான்:

''அங்கு சென்றுவர சக்தி பெற்றிருக்கும் மனிதர்கள், அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும், ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப் போவதில்லை ஏனெனில்)-- நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவருடைய தேவையும் அற்றவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 3:97)

1513. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

ஃபழ்ல்(ரலி) நபி(ஸல்) அவர்களுக்குப் பின் (ஒட்டகத்தில்) அமர்ந்து கொண்டிருந்தபோது 'கஸ்அம்' எனும் கோத்திரத்தை சார்ந்த ஒரு பெண் வந்தார். உடனே ஃபழ்ல் அப்பெண்ணைப் பார்க்க அப்பெண்ணும் இவரைப் பார்த்தார். (இதைக் கவனித்த நபி(ஸல்) அவர்கள்) ஃபழ்லின் முகத்தை வேறு திசையில் திருப்பினார்கள். பிறகு அப்பெண் நபி(ஸல்) அவர்களை நோக்கி, 'இறைத்தூதர் அவர்களே! நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களின் மீது ஹஜ்ஜைக் கடமையாக்கியுள்ளான். ஆனால் என்னுடைய வயது முதிர்ந்த தந்தையால் பயணிக்க முடியாது. எனவே நான் அவருக்குப் பகரமாக ஹஜ் செய்யலாமா? எனக் கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'ஆம்!'' என்றார்கள். இது இறுதி ஹஜ்ஜில் நிகழ்ந்தது.

பகுதி 2

அல்லாஹ் கூறினான்:

''தங்களுக்குரிய பலனை அடைவதற்காக அவர்கள் நடந்தும் வெகு தொலைவிலிருந்து மெலிந்த ஒட்டகங்களின் மீதும் உம்மிடம் வருவார்கள்.'' (திருக்குர்ஆன் 22:27, 28)

1514. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் துல்ஹுலைஃபாவில் தம் வாகனத்தில் அமர்ந்தார்கள். அவர்களை ஏற்றிக் கொண்டு வாகனம் சரியாக நின்றபோது இஹ்ராம் அணிந்து தல்பியாக் கூறியதை பார்த்தேன்.

1515. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

துல்ஹுலைஃபாவில் வாகனம் சரியாக நிலைக்கு வந்த பிறகுதான் நபி(ஸல்) இஹ்ராம் அணிந்தார்கள்.

இதைப் போன்று அனஸ்(ரலி)யும் இப்னு அப்பாஸ்(ரலி)யும் அறிவித்தார்கள்.

பகுதி 3

வாகனத்தின் மீதமர்ந்து ஹஜ்ஜுக்குச் செல்லுதல்

1516. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் என் சகோதரர் அப்துர் ரஹ்மானை என்னுடன் அனுப்பி, தன்யீம் எனுமிடத்திலிருந்து இஹ்ராம் அணிந்து உம்ராச் செய்ய ஏவினார்கள். ஒட்டகத் தொட்டியில் என்னை ஏற்றினார்கள்.

ஹஜ்ஜுக்கு வாகனத்தைத் தயார்படுத்துங்கள். ஏனெனில் அது இரண்டு ஜிஹாதுகளில் ஒன்றாகும் என்று உமர்(ரலி) கூறினார்.

1517. ஸுமாமா இப்னு அப்தில்லாஹ் அறிவித்தார்.

அனஸ்(ரலி) ஒட்டகச் சிவிகை அமைக்காமல் ஒட்டகத்தின் சேண(த்துடன் இணைந்த) இருக்கையின் மீதே அமர்ந்து ஹஜ்ஜுக்குச் சென்றார்கள். (அவர் ஒட்டகச் சிவிகை அமைக்காதற்குக் கஞ்சத்தனம் காரணமில்லை) ஏனெனில், அவர் கஞ்சராக இருந்ததில்லை.

நபி(ஸல்) அவர்கள் (ஒட்டகச் சிவிகை அமைக்காமல்) ஒட்டகத்தின் சேண(த்துடன் இணைந்த) இருக்கையின் மீதே அமர்ந்து ஹஜ்ஜுக்குச் சென்றதாகவும் அதுவே அவர்களின் பொதி சுமக்கும் ஒட்டகமாகவும் இருந்ததாகவும் அனஸ்(ரலி) (எங்களுக்கு) அறிவித்தார்கள்.

1518. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

''இறைத்தூதர் அவர்களே! நீங்கள் அனைவரும் உம்ரா செய்து விட்டீர்கள் நான் மட்டும் உம்ரா செய்யவில்லை' எனக் கூறினேன். உடனே நபி(ஸல்) அவர்கள், 'அப்துர் ரஹ்மானே! உம்முடைய சகோதரியை அழைத்துச் சென்று அவருடன் தன்யீமிலிருந்து உம்ரா செய்துவிட்டு வாரும்'' என்றார்கள். அப்துர் ரஹ்மான் என்னை ஒட்டகத்தின் சேண(த்துடன் இணைந்த) இருக்கையின் பின் பகுதியில் ஏற்றினார் நான் உம்ரா செய்தேன்.

பகுதி 4

பாவச் செயல் எதுவும் கலவாத ஹஜ்ஜின் சிறப்பு

1519. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

''செயல்களில் சிறந்தது எது?' என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. 'அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்புவது'' என்றார்கள். 'அதற்குப் பிறகு எது (சிறந்தது)?' எனக் கேட்கப்பட்டபோது, 'இறைவழியில் போர்புரிதல்'' என்றார்கள். 'அதற்குப் பிறகு எது (சிறந்தது?)' எனக் கேட்கப்பட்டபோது 'பாவச் செயல் எதுவும் கலவாத ஹஜ்'' என்று பதிலளித்தார்கள்.

1520. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

''இறைத்தூதர் அவர்களே! இறைவழியில் போர் புரிவதையே நாங்கள் சிறந்த செயலாகக் கருதுகிறோம் எனவே நாங்களும் ஜிஹாத் செய்யலாமா?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் '(அவ்வாறு) இல்லை. எனினும் (பெண்களுக்குச்) சிறந்த ஜிஹாத் பாவச் செயல் எதுவும் கலவாத ஹஜ் தான்'' என்றார்கள்.

1521. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''உடலுறவு மற்றும் பாவமான செயல்களில் ஈடுபடாமல் ஒருவன் அல்லாஹ்வுக்காகவே ஹஜ் செய்தால் அவன் அவனுடைய தாய் அவனைப் பெற்றெடுத்த நாளில் இருந்ததைப் போன்று (பாவமறியாயப் பாலகனாகத்) திரும்புவான்.''

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பகுதி 5

ஹஜ், உம்ராவினுடைய (இஹ்ராமின்) எல்லைகளை நிர்ணயித்தல்.

1522. ஸைத் இப்னு ஜுபைர் அறிவித்தார்.

நான் அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) வீட்டிற்கு வந்தேன். ஒரு கூடாரம்தான் அவரின் வீடாக இருந்தது. நான் அவரிடம் உம்ராவுக்காக எந்த இடத்திலிருந்து இஹ்ராம் அணிவது கூடும்? எனக் கேட்டேன். அதற்கு, 'நஜ்த் வாசிகள் கர்ன் எனும் இடத்திலிருந்தும் மதீனா வாசிகள் துல் ஹுலைஃபாவிலிருந்தும் ஷாம் வாசிகள் ஜுஹ்ஃபாவிலிருந்தும் இஹ்ராம் அணிய வேண்டுமென நபி(ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள்'' என இப்னு உமர்(ரலி) பதிலளித்தார்கள்.

பகுதி 6

அல்லாஹ் கூறினான்:

''மேலும் (ஹஜ்ஜுக்குத் தேவையான) பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள் நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் நன்மையானது, தக்வா (என்னும் பயபக்தியே) ஆகும்.'' (திருக்குர்ஆன் 02:197)

1523. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

யமன் வாசிகள் (ஹஜ்ஜுக்குத் தேவையான) பொருள்களைச் சேகரிக்காமல் ஹஜ்ஜுக்கு வருவார்கள் மேலும் நாங்கள் இறைவன் மீது நம்பிக்கை வைத்துள்ளோம் என்றும் கூறுவார்கள். மக்கா வந்தடைந்தால் மக்களிடம் யாசகம் கேட்பார்கள். இது குறித்தே அல்லாஹ் (ஹஜ்ஜுக்குத் தேவையான) பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள், நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் நன்மையானது தக்வா (என்னும் பயபக்தியே) ஆகும்'' என்ற வசனத்தை இறக்கினான்.

பகுதி 7

மக்காவாசிகள் ஹஜ், உம்ராவுக்காக எங்கிருந்து இஹ்ராம் அணிய வேண்டும்?

1524. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மதீனாவாசிகளுக்கு துல்ஹுலைஃபாவையும் ஷாம் வாசிகளுக்கு ஜுஹ்ஃபாவையும் நஜ்த்வாசிகளுக்கு கர்னுல் மனாஸீலையும் யமன் 'வாசிகளுக்கு யலம்லமையும் இஹ்ராம் அணியும் எல்லைகளாக நிர்ணயித்தார்கள். இவ்வெல்லைகள் இவர்களுக்கும் ஹஜ் உம்ராவுக்காக இவ்வழியே வருபவர்களுக்கும் உரியனவாகும். இந்த வரையறுக்கப்பட்ட எல்லைக்கு உள்ளே இருப்பவர்கள். தாம் வசிக்கும் இடத்திலேயே இஹ்ராம் அணிந்து கொள்ளலாம் என்றும் மக்காவாசிகள் மக்காவிலேயே இஹ்ராம் அணிந்து கொள்ளலாம் என்றும் கூறினார்கள்.

பகுதி 8

மதீனா வாசிகள் இஹ்ராம் அணியும் எல்லையும் அவர்கள் துல்ஹுலைஃபாவுக்கு முன்னால் இஹ்ராம் அணியக்கூடாது என்பதும்.

1525. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''மதீனாவாசிகள் துல்ஹுலைஃபாவிலிருந்தும் ஷாம்வாசிகள் ஜுஹ்ஃபாவிலிருந்தும் நஜ்த்வாசிகள் கர்னிலிருந்தும் இஹ்ராம் அணிவார்கள்.''

என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

''யமன்வாசிகள் யலம்லம் எனுமிடத்திலிருந்து இஹ்ராம் அணிவார்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என எனக்குச் செய்தி கிடைத்தது'' என்றும் இப்னு உமர்(ரலி) கூறினார்.

பகுதி 9

ஷாம் வாசிகள் இஹ்ராம் அணியுமிடம்.

1526. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மதீனாவாசிகளுக்கு துல்ஹுலைஃபாவையும் ஷாம் வாசிகளுக்கு ஜுஹ்பாவையும்யும் நஜ்த் வாசிகளுக்கு கர்னுல் மனாஸீலையும் யமன் வாசிகளுக்கு யலம்லமையும் இஹ்ராம் அணியும் எல்லைகளாக நிர்ணயித்தார்கள். இவ்வெல்லைகள் இவர்களுக்கும் ஹஜ் உம்ராவுக்காக இவ்வழியே வருபவர்களுக்கும் உரியனவாகும். இந்த வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குள் இருப்பவர்கள், தாம் வசிக்குமிடத்திலேயே எங்கேனும் இஹ்ராம் அணிந்து கொள்ளலாம் என்றும் மக்காவாசிகள் மக்காவிலேயே இஹ்ராம் அணிந்து கொள்ளலாம் என்றும் கூறினார்கள்.

பகுதி 10

நஜ்த் வாசிகள் இஹ்ராம் அணியுமிடம்

1527 / 1528. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''மதீனா வாசிகள் துல்ஹுலை ஃபாவிலிருந்தும் ஷாம் வாசிகள் மஹ்யஆ எனும் ஜுஹ்ஃபாவிலிருந்தும் நஜ்த் வாசிகள் கர்னிலிருந்தும் இஹ்ராம் அணிவார்கள்.

என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

''யமன் வாசிகள் யலம்லம் எனுமிடத்திலிருந்து இஹ்ராம் அணிவார்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என நபித்தோழர்கள் கூறுகிறார்கள்: ஆனால், நான் (நேரடியாக) நபி(ஸல்) கூறக் கேட்கவில்லை என இப்னு உமர்(ரலி) கூறினார்.

பகுதி 11

இஹ்ராமின் எல்லைகளுக்குட்பட்ட பகுதியில் வசிப்போர் இஹ்ராம் அணியுமிடம்.

1529. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மதீனா வாசிகளுக்கு துல்ஹுலைஃபாவையும் ஷாம் வாசிகளுக்கு ஜுஹ்ஃபாவையும் யமன் வாசிகளுக்கு யலம்லமையும் நஜ்த் வாசிகளுக்கு கர்னையும் இஹ்ராம் அணியும் எல்லைகளாக நிர்ணயித்தார்கள். இவ்வெல்லைகள் இவர்களுக்கும் ஹஜ் உம்ராவுக்காக இவ்வழியே வருபவர்களுக்கும் உரியனவாகும். இந்த வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குள் இருப்பவர்கள், தாம் வசிக்குமிடத்திலேயே எங்கேனும் இஹ்ராம் அணிந்து கொள்ளலாம் என்றும் மக்கவாசிகள் மக்காவிலேயே இஹ்ராம் அணிந்து கொள்ளலாம் என்றும் கூறினார்கள்.

பகுதி 12

யமன் வாசிகள் இஹ்ராம் அணியுமிடம்.

1530. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மதீனா வாசிகளுக்கு துல்ஹுலைஃபாவையும் ஷாம் வாசிகளுக்கு ஜுஹ்ஃபாவையும் நஜ்த் வாசிகளுக்கு கர்னுல் மனாஸீலையும் யமன் வாசிகளுக்கு யலம்லமையும் இஹ்ராம் அணியும் எல்லைகளாக நிர்ணயித்தார்கள். இவ்வெல்லைகள் இவர்களுக்கும் ஹஜ் உம்ராவுக்காக இவ்வழியே வருபவர்களுக்கும் உரியனவாகும் இந்த வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குள் இருப்பவர்கள், தாம் வசிக்குமிடத்திலேயே எங்கேனும் இஹ்ராம் அணிந்து கொள்ளலாம் என்றும் மக்காவாசிகள் மக்காவிலேயே இஹ்ராம் அணிந்து கொள்ளலாம் என்றும் கூறினார்கள்.

பகுதி 13

இராக் வாசிகளின் எல்லை 'தாத்து இர்க்'' ஆகும்.

(கூஃபா, பஸரா எனும்) இந்த இரண்டு நகரங்கள் வெற்றி கொள்ளப்பட்டபோது, அங்குள்ளோர் உமர்(ரலி) அவர்களிடம் வந்து, 'இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! நபி(ஸல்) அவர்கள் நஜ்த்வாசிகளுக்குக் கர்ன் எனும் இடத்தையும் (இஹ்ராம் அணியும் எல்லையாக) நிர்ணயித்துள்ளார்கள். நாங்கள் (மக்காவிற்கு) செல்லும் பாதை அதுவன்று. நாங்கள் கர்ன் வழியாகச் செல்வதானால் அது மிகவும் சிரமமாகும்'' என்றனர். அதற்கு உமர்(ரலி) 'அந்த அளவு தொலைவுள்ள ஓரிடத்தை உங்களின் பாதையிலே கூறுங்கள்' என்றார். பின்பு தாதுல் இர்க் என எல்லை நிர்ணயித்தார்.

பகுதி 14

1532. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் துல்ஹுலைஃபாவில் கற்கள் நிறைந்த இடத்தில் தம் ஒட்டகத்தை அமர வைத்து, அங்கேயே (இரண்டு ரக்அத்கள்) தொழுதார்கள்.

இப்னு உமர்(ரலி), இது போன்றே செய்வார் என நாஃபிஉ கூறுகிறார்.

பகுதி 15

ஷஜரா எனும் பாதை வழியாக (ஹஜ்ஜுக்கு) நபி(ஸல்) அவர்கள் செல்லல்.

1533. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஷஜரா எனும் இடத்தின் வழியாக (மதீனாவிலிருந்து) வெளியேறுவார்கள். திரும்பும்போது முஅர்ரஸ் எனும் இடத்தின் வழியாக (மதீனாவினுள்) நுழைவார்கள். நபி(ஸல்) அவர்கள் மக்காவுக்கு செல்லும்போது ஷஜராவிலுள்ள பள்ளிவாசலில் தொழுவார்கள். அங்கிருந்து திரும்பும்போது பத்னுல் வாதியிலுள்ள துல்ஹுலைஃபாவில் தொழுதுவிட்டு விடியும் வரை அங்கேயே தங்குவார்கள்.

பகுதி 16

அகீக் (எனும் பள்ளத்தாக்கு) அபிவிருத்தி மிக்க பள்ளத்தாக்கு என்று நபி(ஸல்) அவர்கள் கூறியது.

1534. உமர்(ரலி) அறிவித்தார்.

''என்னுடைய இறைவனிடத்திலிருந்து வரக்கூடிய(வான)வர் இன்றிரவு வந்தது 'இந்த அபிவிருத்தி மிக்க பள்ளத்தாக்கில் தொழுவீராக! இன்னும் ஹஜ்ஜுடன் உம்ராவைச் சேர்த்துவிட்டதாக மொழிவீராக!' எனக் கட்டளையிட்டார்'' என்று நபி(ஸல்) அவர்கள் அகீக் எனும் பள்ளத்தாக்கில் கூற, கேட்டேன்.

1535. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பத்னுல் வாதியிலுள்ள துல்ஹுலைஃபாவில் முஅர்ரஸ் எனுமிடத்தில் நபி(ஸல்) அவர்கள் இருந்தபோது கனவு கண்டார்கள் (அக்கனவில்) 'நீங்கள் அபிவிருத்தி மிக்க அழகிய பள்ளத்தாக்கில் இருக்கிறீர்கள்'' என்று (வானவரால்) கூறப்பட்டது.

நபி(ஸல்) அவர்கள் முஅர்ரஸ் எனுமிடத்தைத் தேர்வு செய்தது போல் இப்னு உமரும் அங்கேயே தம் ஒட்டகத்தை உட்கார வைப்பார். அவரின் மகன் ஸாலிமும் அவ்வாறே செய்வார். முஅர்ரஸ் எனுமிடம் பத்னுல் வாதியிலுள்ள பள்ளி வாசலின் கீழ்ப் புறத்தில் சாலைக்கும் மக்கள் தங்குமிடத்திற்கும் நடுவிலுள்ளது என்று மூஸா இப்னு உக்பா கூறுகிறார்.

பகுதி 17

(இஹ்ராம் அணியும்) ஆடையில் (முன்னர் பூசப்பட்ட) நறுமணமிருந்தால் மூன்று முறை கழுவுதல்.

1536. யஃலா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களுக்கு வஹீ (இறைச்செய்தி) (இறைச்செய்தி) வரும்பொழுது எனக்குக் காட்டுங்கள் என்று உமர்(ரலி) அவர்களிடம் கேட்டேன். நபி(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களில் சிலரும் ஜிஇர்ரானா எனுமிடத்தில் இருந்தபோது ஒருவர் வந்து 'இறைத்தூதர் அவர்களே! நறுமணம் பூசிய நிலையில் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்தவர் பற்றி என்ன கூறுகிறீர்கள்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் சற்று நேரம் மௌனமாக இருந்தார்கள். அப்போது அவர்களுக்கு வஹீ (இறைச்செய்தி) (இறைச்செய்தி) வந்தது. உமர்(ரலி) என்னை சைகை செய்து அழைத்ததும் நான் சென்றேன். நபி(ஸல்) அவர்களுக்கு நிழல் தருவதற்காக ஒரு துணி கட்டப்பட்டிருந்தது. அத் துணிக்குள் நான் தலையை நுழைத்தேன். நபி(ஸல்) அவர்கள் முகம் சிவந்த நிலையில் குறட்டைவிட்டுக் கொண்டிருந்தார்கள். பிறகு (சிறிது சிறிதாக) அந்த நிலை மாறியது. அப்போது நபி(ஸல்) அவர்கள் 'உம்ராவைப் பற்றிக் கேட்டவர் எங்கே?' என்றார்கள். கேட்ட மனிதர் அழைத்து வரப்பட்டார். அவரிடம் 'உம் மீதுள்ள நறுமணத்தை மூன்று முறை கழுவுவீராக! தைக்கப்பட்ட உடைகளைக் களைவீராக! உம்முடைய ஹஜ்ஜில் செய்வது போன்றே உம்முடைய உம்ராவிலும் செய்வீராக!'' என்று கூறினார்கள்.

''மும்முறை கழுவச் சொன்னது நன்கு சுத்தப்படுத்தவா?' என்று (அறிவிப்பாளரான) அதா(ரஹ்) அவர்களிடம் கேட்டேன். அவர் 'ஆம்!'' என்றார்'' என இப்னு ஜுரைஜ் கூறுகிறார்.

பகுதி 18

இஹ்ராம் அணியும்போது நறுமணம் பூசுவதும் இஹ்ராம் அணிய நாடும்போது அணிய வேண்டிய ஆடையும் தலைக்கு எண்ணெய் தடவுவதும் தலை வாருவதும்.

இஹ்ராம் அணிபவன் நறுமணத்தை முகரலாம் கண்ணாடி பார்க்கலாம் உட்கொள்ளும் எண்ணெய், நெய் போன்றவற்றை மருந்தாகப் பயன்படுத்தலாம் என இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.

மோதிரம் அணியலாம், பையுள்ள இடுப்புவரை அணியலாம் என அதாவு கூறுகிறார்.

இப்னு உமர்(ரலி) இஹ்ராம் அணிந்த நிலையில் தம் வயிற்றில் துணியைக் கட்டிக் கொண்டு கஅபாவை வலம் வந்தார்.

ஒட்டகத் தொட்டியில் பயணிப்பவர் அரைக்கால் சட்டை அணிவதில் குற்றமில்லை என ஆயிஷா(ரலி) கூறினார்.

1537 / 1538 ஸயீத் இப்னு ஜுபைர் அறிவித்தார்.

இப்னு உமர்(ரலி) (இஹ்ராம் அணிந்த நிலையில், நறுமண எண்ணெய் பூசாமல் நறுமணமற்ற) ஆலிவ் எண்ணெய்யைப் பூசியதாக இப்ராஹீமிடம் நான் கூறியபோது, 'அவர் என்ன சொல்வது? (இது நபி(ஸல்) அவர்களின் நடைமுறைக்கு மாற்றமாக இருக்கிறதே) என்றார். (மேலும் தொடர்ந்து) நபி(ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிந்திருக்கும் பொழுது அவர்களின் தலையின் வகிட்டில் பார்த்த நறுமண எண்ணெய்யின் மினுமினுப்பு நான் இன்று பார்ப்பது போலுள்ளது என்று ஆயிஷா(ரலி) கூறியிருக்கிறாரே' என இப்ராஹீம் கூறினார்.

1539. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

இஹ்ராம் அணியும் நேரத்தில், நபி(ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிவதற்காக நான் நறுமணம் பூசினேன். இதுபோல் இஹ்ராமிலிருந்து விடுபடும்போது கஅபாவை வலம் வருவதற்கு முன்னால் நறுமணம் பூசுவேன்.

பகுதி 19

(தலை முடி காற்றில் பறக்காமலிருக்கக்) களிம்பைத் தடவி இஹ்ராம் அணிவது.

1540. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் தம் முடியில் களிம்பு தடவியிருந்த நிலையில் தல்பியாக் கூறியதைக் கேட்டேன்.

பகுதி 20

துல்ஹுலைஃபாவின் பள்ளியில் இஹ்ராம் அணிவது.

1541. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் துல்ஹுலைஃபாவின் பள்ளியைத் தவிர வேறெங்கும் இஹ்ராம் அணிந்ததில்லை.

பகுதி 21

இஹ்ராம் அணிந்தவர் அணியக் கூடாத ஆடைகள்.

1542. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'இறைத்தூதர் அவர்களே! இஹ்ராம் அணிந்தவர் எதையெதை அணியலாம்?' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் 'சட்டை, தலைப்பாகை, முழுக்கால் சட்டை, தொப்பி, காலுறை ஆகியவற்றை அணியக்கூடாது. செருப்பு கிடைக்காதவர், தம் காலுறையின் (மேலிருந்து) கரண்டைக்குக் கீழ் வரையுள்ள பகுதியை வெட்டிவிட்டு அதை அணிந்து கொள்ளலாம் குங்குமப்பூச் சாயம் மற்றும் வர்ஸ் எனும் செடியின் சாயம் தோய்க்கப்பட்ட ஆடையை அணியாதீர்!'' என்றார்கள்.

பகுதி 22

ஹஜ்ஜின்போது சவாரி செய்வதும் தம் வாகனத்தில் பிறரை ஏற்றிச் செல்வதும்.

1543 / 1544. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

உஸாமா(ரலி) நபி(ஸல்) அவர்களோடு வாகனத்தின் பின் அமர்ந்து அரஃபாவிலிருந்து முஸ்தலிஃபா வரை சென்றார். பிறகு ஃபழ்ல்(ரலி) முஸ்தலிஃபாவிலிருந்து மினாவரை சென்றார். 'நபி(ஸல்) அவர்கள் ஜம்ரதுல் அகபாவில் கல்லெறியும் வரை தல்பியாவை நிறுத்தவில்லை' என இவ்விருவருமே கூறினார்கள்.

பகுதி 23

இஹ்ராம் அணிந்த நிலையில் வேட்டி, மேல் துண்டு போன்றவற்றை அணிதல்.

ஆயிஷா(ரலி) இஹ்ராமோடு இருந்தபோது மஞ்சள் நிற ஆடையணிந்தார்கள். 'பெண்கள் தங்கள் வாய்களை (துணியால்) மூடவோ, முகத்தை முழுவதும் மூடவோ கூடாது: குங்குமப்பூச்சாயம் மற்றும் வர்ஸ் எனும் செடியின் சாயம் பூசப்பட்ட ஆடைகளை அணியக் கூடாது'' என ஆயிஷா(ரலி) கூறினார். 'நகைகள், கருப்பு மற்றும் ரோஜா நிற ஆடை காலுறை ஆகியவற்றை பெண்கள் அணிவதில் தவறில்லை'' என்றும் சொன்னார்.

''குசும்பச் செடியின் சிவப்புச் சாயத்தை நான் வாசனைப் பொருளாக கருதவில்லை'' என ஜாபிர் கூறுகிறார்.

(இஹ்ராமுடைய ஆடையை மாற்றி அணிவதில் தவறில்லை என இப்ராஹீம் கூறுகிறார்.

1545. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் எண்ணெய் தடவித் தலைசீவி வேட்டியும் துண்டும் அணிந்து தம் தோழர்களோடு மதீனாவிலிருந்து (இறுதி ஹஜ்ஜுக்குப்) புறப்பட்டார்கள். உடல் மீது ஒட்டிக் கொள்ளும் அளவு குங்குமப்பூ தோய்க்கப்பட்ட ஆடையைத் தடை செய்தார்களேயன்றி வேட்டி, துண்டு அணிவதைத் தடுக்கவில்லை - துல்ஹுதைஃபாவிற்குக் காலை நேரத்தில் வந்தடைந்தார்கள். பிறகு தம் வாகனத்தில் ஏறியமர்ந்து பய்தா எனும் (குன்றுப்) பகுதியின் சமதளத்தை அடைந்ததும் அவர்களும் அவர்களின் தோழர்களும் இஹ்ராம் அணிந்தார்கள். நபி(ஸல்) தம் ஒட்டகத்தில் அடையாளமாகச் சிலவற்றைத் தொங்கவிட்டார்கள். இந்நிகழ்ச்சி துல்கஅதாவில் ஐந்து நாள்களின் மீதுமிருக்கும்போது நடந்தது. துல்ஹஜ் ஐந்தாம் நாள் மக்கா சென்றடைந்தபோது கஅவானை வலம் வந்து ஸஃபா மர்வாவிற்கு மத்தியில் ஓடினார்கள். (உம்ராவை முடித்தாலும்) அவர்கள் குர்பானியின் ஒட்டகத்தைத் தம்மோடு கொண்டு வந்ததனால், (தலை முடி களைந்து) இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை. பிறகு ஹஜ்ஜுக்கு இஹ்ராம் அணிந்த நிலையில் மக்காவின் மேற்பகுதி ஹஜுன் எனும் மலையில் இறங்கினார்கள். மக்கா வந்ததும் கஅபாவை வலம் வந்தவர்கள் அரஃபாவிலிருந்து திரும்பிய பின்னரே மீண்டும் கஅபாவிற்கு வந்தார்கள். இதற்கு இடையில் கஅபாவை நெருங்கவில்லை. தம் தோழர்களுக்குக் கஅபாவை வலம் வரவும் ஸஃபா, மர்வாவில் ஓடவும், பிறகு தலை முடியைக் குறைக்கவும் இஹ்ராமிலிருந்து விடுபடவும் கட்டளையிட்டார்கள். இது தம்மோடு குர்பானிக்கான ஒட்டகங்களைக் கொண்டு வராதவர்களுக்குச் சொல்லப்பட்டதாகும். இவர்களில் மனைவியோடு வந்தவர்கள் உடலுறவு கொள்வது, நறுமணங்கள், (வண்ண) ஆடைகள் அணிவது ஹலாலாகும்.

பகுதி 24

விடியும்வரை துல்ஹுலை ஃபாவில் தங்குவது

இதுபற்றி நபி(ஸல்) அவர்களிடமிருந்து இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

1546. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (ஹஜ்ஜுக்கு செல்லும்போது) மதீனாவில் நான்கு ரக்அத்கள் தொழுதார்கள். பின்பு துல் ஹுலைஃபாவில் இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு அங்கேயே விடியும் வரை தங்கினார்கள். பிறகு வாகனத்தில் அமர்ந்து வாகனம் நிலைக்கு வந்தபோது இஹ்ராம் அணிந்தார்கள்.

1547. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் நான்கு ரக்அத்கள் லுஹர் தொழுதார்கள். பிறகு துல்ஹுலைஃபாவில் இரண்டு ரக்அத்கள் அஸர் தொழுதார்கள். அவர்கள் அங்கேயே விடியும் வரை தங்கினார்கள் என எண்ணுகிறேன்.

பகுதி 25

தல்பியாவை சப்தமாகக் கூறுவது.

1548. அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் நான்கு ரக்அத்கள் லுஹர் தொழுதார்கள். துல்ஹுதைஃபாவில் இரண்டு ரக்அத்கள் அஸர் தொழுதார்கள். அனைவரும் ஹஜ், உம்ராவிற்கான தல்பியாவை சப்தமாகக் கூற கேட்டேன்.

பகுதி 26

தல்பியா கூறுதல்

1549. அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) அறிவித்தார்.

''இதோ, உன் அழைப்பை ஏற்று வந்து விட்டேன்! இறைவா! உனக்கே நான் கீழ்ப்படிகிறேன்! இணையில்லாதோனே! உனக்கே நான் கீழ்ப்படிகிறேன்! புகழும், அருட்கொடையும், ஆட்சியும் உனக்கே உரியன! உனக்கு இணையானவர் எவருமில்லை.''

இதுவே நபி(ஸல்) அவர்களின் தல்பியாவாகும்.

1550. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களின் தல்பியா எவ்வாறு இருந்தது என்பதை நான் நன்கறிவேன்.

''இதோ, உன் அழைப்பை ஏற்று வந்து விட்டேன்! இறைவா! உனக்கே நான் கீழ்ப்படிகிறேன்! இணையில்லாதோனே! உனக்கே நான் கீழ்ப்படிகிறேன்! உன் அழைப்பை ஏற்று வந்து விட்டேன்! புகழும் அருட்கொடையும் உனக்கே உரியன!''

இதுவே நபி(ஸல்) அவர்களின் தல்பியாவாகும்.

பகுதி 27

இஹ்ராம் அணிவதற்கு முன்னால் வாகனத்தின் மீதமர்ந்த நிலையிலே அல்ஹம்துலில்லாஹ், ஸுப்ஹானல்லாஹ், அல்லாஹ் அக்பர், கூறுவது.

1551. அனஸ்(ரலி) அறிவித்தார்.

நாங்கள் நபி(ஸல்) அவர்களோடு இருந்தோம். அவர்கள் மதீனாவில் நான்கு ரக்அத்கள் லுஹர் தொழுதார்கள். துல் ஹுலைஃபாவில் இரண்டு ரக்அத்கள் அஸர் தொழுதார்கள். பிறகு விடியும் வரை அங்கேயே தங்கிவிட்டு மீண்டும் வாகனத்தின் மீதமர்ந்து பைதா எனுமிடத்தில் வாகனம் நிலைக்கு வந்தபோது 'அல்ஹம்துலில்லாஹ், ஸுப்ஹானல்லாஹ், அல்லாஹு அக்பர்' எனக் கூறினார்கள். பிறகு ஹஜ், உம்ரா இரண்டிற்காகவும் இஹ்ராம் அணிந்து, தல்பியா கூறினார். நாங்கள் மக்கா வந்து (உம்ராவை முடித்த போது) இஹ்ராமிலிருந்து விடுபடும்படி மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். மக்கள் துல்ஹஜ் பிறை எட்டு அன்று ஹஜ்ஜுக்காக மீண்டும் இஹ்ராம் அணிந்தார்கள்.

நபி(ஸல்) அவர்கள் ஒட்டகங்களை நிற்கவைத்துத் தம் கைகளாலேயே அறுத்தார்கள். இன்னும் நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் பெருநாளில் இரண்டு கருப்பு நிறம் கலந்த வெள்ளை நிற ஆடுகளை அறுத்தார்கள்.

பகுதி 28

வாகனம் நிலைக்கு வரும்போது தல்பியா கூறுதல்.

1552. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

வாகனம் நிலைக்கு வந்தபோது நபி(ஸல்) அவர்கள் தல்பியா கூறினார்கள்.

பகுதி 29

கிப்லாவை முன்னோக்கித் தல்பியா கூறுவது:

1553. நாபிவு அறிவித்தார்.

இப்னு உமர்(ரலி) துல்ஹுலைஃபாவில் ஸுப்ஹுத் தொழுதவுடன் புறப்படும்படி கட்டளையிடுவார். வாகனக் கூட்டம் புறப்பட்டதும் அவரும் புறப்படுவார். வாகனம் நிலைக்கு வரும்போது கிப்லாவை முன்னோக்கி நின்று கொள்வார். பின்னர் தல்பியா கூறிக் கொண்டேயிருப்பார். பிறகு ஃதூத்துவா எனுமிடத்தை அடையும்போது தல்பியாவை நிறுத்தி அங்கேயே விடியும் வரை தங்குவார். ஸுப்ஹுத் தொழுதுவிட்டு அங்கேயே குளிப்பார். இவ்வாறே நபி(ஸல்) அவர்கள் செய்ததாகவும் கூறுவார்.

1554. நாஃபிவு அறிவித்தார்.

இப்னு உமர்(ரலி) (ஹஜ், உம்ராவிற்காக) மக்கா செல்ல நாடினால் நறுமணமில்லாத எண்ணெய் தேய்ப்பார். பிறகு துல்ஹுலைஃபா பள்ளிவாசலுக்கு வந்து தொழுதுவிட்டு மீண்டும் (காலையில்) புறப்படுவார். தம் வாகனம் நிலைக்கு வந்துவிட்டால் இஹ்ராம் (ஆடையை) அணிவார். 'இவ்வாறே நபி(ஸல்) அவர்கள் செய்ய கண்டேன்' எனக் கூறுவார்.

பகுதி 30

இஹ்ராம் அணிந்தவர் பள்ளத்தாக்கில் இறங்கும்போது தல்பியா கூறுதல்.

1555. முஜாஹித் அறிவித்தார்.

நாங்கள் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அங்கிருந்தவர்கள் தஜ்ஜாலைப் பற்றிக் கூறும்போது 'அவனுடைய இரண்டு கண்களுக்கு மத்தியில் காஃபிர் என எழுதப்பட்டிருக்கும்'' என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னதாகக் கூறினார்கள். அதற்கு இப்னு அப்பாஸ்(ரலி), 'நான் இதை நபி(ஸல்) அவாக்ள் கூறக் கேட்கவில்லை. எனினும் 'மூஸா (அலை) தல்பியா கூறியவாறு பள்ளத்தாக்கில் இறங்குவதை நான் காண்பது போன்று உள்ளது' என்று நபி(ஸல்) அவர்கள் கூற கேட்டிருக்கிறேன்'' என்றார்.

பகுதி 31

மாதவிடாயுள்ளவளும் பிரசவத் தீட்டுள்ளவளும் இஹ்ராம் எப்படி அணிவது?

1556. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

ஹஜ்ஜத்துல் வதாவில் நபி(ஸல்) அவர்களோடு சென்றிருந்தபோது உம்ராவிற்காக இஹ்ராம் (ஆடையை) அணிந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'யாருடன் குர்பானிப் பிராணி உள்ளதோ அவர் உம்ராவோடு ஹஜ்ஜுக்கும் இஹ்ராம் அணிந்து கொள்ளட்டும். இன்னும் அவர் இவ்விரண்டையும் நிறைவேற்றும் வரை இஹ்ராமிலிருந்து விடுபடக் கூடாது'' என்றார்கள். ஆனால் நான் மக்கா வந்தபோது மாதவிடாய்க் காரியானேன். இதனால் கஅபாவைத் தவாஃபும் செய்யவில்லை. இன்னும் ஸஃபா, மர்வாவுக்கிடையே ஓடவுமில்லை. இதை நபி(ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். அதற்கு அவர்கள் 'உன்னுடைய தலைமுடியை அவிழ்த்துவிட்டு தலைவாரிக் கொள். பிறகு ஹஜ்ஜிற்காக மட்டும் இஹ்ராம் (ஆடையை) அணிந்து உம்ராவைவிட்டு விடு!'' என்றார்கள். நானும் அவ்வாறே செய்தேன். நாங்கள் ஹஜ்ஜை முடித்தபோது, (என் சகோதரர்) அப்துர் ரஹ்மானுடன் என்னை தன்யீம் எனும் இடத்திற்கு நபி(ஸல்) அவர்கள் அனுப்பினார்கள். நான் உம்ரா செய்தேன். 'இது உன்னுடைய விடுபட்ட உம்ராவுக்குப் பகரமாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்தவர்கள் கஅபாவை வலம் வந்து ஸஃபா, வலம் வந்து ஸஃபா, மர்வாவுக்கிடையே ஓடி (சஃயுசெய்து)விட்டு இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிட்டார்கள். மினாவிலிருந்து திரும்பியபோது மீண்டும் ஒரு முறை வலம் வந்தார்கள்.

ஹஜ், உம்ரா இரண்டுக்கும் சேர்த்து இஹ்ராம் அணிந்தவர்கள் ஒருமுறை மட்டுமே வலம்வந்தார்கள்.

பகுதி 32

நபி(ஸல்) அவர்களின் இஹ்ராமைப் போன்றே நானும் இஹ்ராம் அணிகிறேன் என்று நபி(ஸல்) அவர்களின் காலத்தில் ஒருவர் இஹ்ராம் அணிவது.

இது தொடர்பாக இப்னு உமர்(ரலி) நபி(ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்தார்கள்.

1557. அதாவு அறிவித்தார்.

அலீ(ரலி) அவர்களிடம் (ஹஜ்ஜுக்கும் உம்ராவிற்கும் சேர்த்து) அவர் அணிந்திருந்த இஹ்ராமிலேயே நீடிக்கும்படி நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள் என ஜாபிர்(ரலி) கூறினார். மேலும் இது தொடர்பாக (''இது உங்களுக்கு மட்டுமா அல்லது அனைவருக்கும் பொதுவானதா?' என சுராகா கேட்க. 'எப்போதைக்கும் உரியதே! (அனைவருக்கும் பொதுவானதே!)'' என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்த அந்த) செய்தியையும் கூறினார்கள்.

1558. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

யமனிலிருந்து திரும்பிய அலீ(ரலி), நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'எதற்காக இஹ்ராம் அணிந்தீர் (ஹஜ்ஜுடன் உம்ராவிற்கும் சேர்த்தா? உம்ராவிற்கு மட்டுமா)?' எனக் கேட்டார்கள். அதற்கு அலீ(ரலி) 'நீங்கள் இஹ்ராம் அணிந்தது போன்றே நானும் இஹ்ராம் அணிந்துள்ளேன்...'' என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'என்னுடன் குர்பானிப் பிராணி இல்லையெனில் (உம்ராவை முடித்து) நான் இஹ்ராமிலிருந்து விடுபட்டிருப்பேன்'' என்றார்கள்.

இப்னு ஜுரைஜின் அறிவிப்பில் நபி(ஸல்) அவர்கள் அலீ(ரலி) அவர்களிடம் 'நீர் இஹ்ராமிலேயே நீடித்து (ஹஜ்ஜையும் உம்ராவையும் முடித்த பின்) குர்பானி கொடும்!'' என்று கூறினார்கள் எனக் காணப்படுகிறது.

1559. அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் யமன் நாட்டின் ஒரு கூட்டத்தினரிடம் என்னை அனுப்பி வைத்தார்கள். நான் (திரும்பி) வந்தபோது அவர்கள் துல்ஹுலைஃபாவில் பத்ஹா எனும் பள்ளத்தாக்கில் இருந்தார்கள். அவர்கள் என்னிடம் 'நீ எதற்கு இஹ்ராம் அணிந்தாய்? (ஹஜ், உம்ரா இரண்டிற்காகவுமா? உம்ராவிற்கு மட்டுமா?)' எனக் கேட்டார்கள். நான் நபி(ஸல்) அவர்களின் இஹ்ராமைப் போன்றே நான் இஹ்ராம் அணிந்தேன்'' என பதிலளித்தேன். 'உன்னிடத்தில் குர்பானிப் பிராணி ஏதேனும் உண்டா?' என்று நபி(ஸல்) கேட்க நான் 'இல்லை'' என்றேன். அப்போது அவர்கள் கஅபாவைச் சுற்றி வலம் வரவும் ஸஃபா, மர்வாவுக்கிடையே தொங்கோட்டம் ஓடவும் அதன் பிறகு இஹ்ராமிலிருந்து விடுபடவும் எனக்குக் கட்டளையிட்டார்கள். அதன்படி செய்தேன். அதன்பின்னர் என் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் வந்தேன். அவள் என் தலையை வாரினாள் கழுவினாள்.

உமர்(ரலி) (பதவிக்கு) வந்தபோது கூறினார்:

''நாம் இறைவனுடைய வேதத்தின் படி நடப்பதெனில், 'ஹஜ்ஜையும், உம்ராவையும் பூர்த்தி செய்யுங்கள்' என்ற (திருக்குர்ஆன் 02:196) வசனத்தின் படி 'இரண்டையும் சேர்த்து (ஒரே இஹ்ராமில்) செய்ய வேண்டும்' என்றே அது நமக்குக் கட்டளையிடுகிறது. நாம் நபிவழியின் படி நடப்பதென்றாலும், அவர்கள் குர்பானிப் பிராணியை அறுக்கும் வரை இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை. (அது போன்றே செய்யவேண்டும்).''

பகுதி 33

அல்லாஹ் கூறினான்:

''ஹஜ்ஜுக்குரிய காலம் அறியப்பட்ட சில மாதங்களாகும். எனவே, அவற்றில் எவரேனும் ஹஜ்ஜைத் தம் மீது கடமையாக்கினால் ஹஜ்ஜின் காலத்தில் உடலுறவு, மற்றும் பாவங்களில் ஈடுபடல், சச்சரவு செய்தல் ஆகியவை கூடாது.'' (திருக்குர்ஆன் 02:197)

அல்லாஹ் கூறினான்: '(நபியே! தேய்ந்து வளரும்) பிறையைப் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறும்: அவை மக்களுக்குக் காலம் காட்டுபவையாகவும் ஹஜ்ஜுடைய நாள்கள் அறிவிப்பவையாகவும் உள்ளன.'' (திருக்குர்ஆன் 02:189)

''ஷவ்வால், துல்கஅதா இன்னும் துல்ஹஜ்ஜில் முந்திய பத்து நாள்கள் ஆகியவை ஹஜ்ஜுடைய மாதங்களாகும்'' என இப்னு உமர்(ரலி கூறுகிறார்.

''ஹஜ் செய்வதற்காக ஹஜ்ஜுடைய மாதங்களில் மட்டுமே இஹ்ராம் அணிவதே நபி வழியாகும்'' என இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.

குராஸான் அல்லது கர்மான் ஆகீய இடங்களிலிருந்து இஹ்ராம் அணிவதை உஸ்மான்(ரலி) வெறுத்துள்ளார்கள்.

1560. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நாங்கள் நபி(ஸல்) அவர்களோடு ஹஜ் மாதத்தில், ஹஜ் இரவுகளில், ஹஜ் காலத்தில் புறப்பட்டு ஸாரிஃப் எனுமிடத்தில் இறங்கினோம். நபி(ஸல்) அவர்கள் (தம் கூடாரத்திலிருந்து) புறப்பட்டு தம் தோழர்களிடம் வந்து, 'யாருடன் குர்பானிப் பிராணி இல்லையோ அவர் தம் இஹ்ராமை உம்ராவுக்காக ஆக்கிக் கொள்ள விரும்பினால் அவ்வாறே ஆக்கிக் கொள்ளட்டும் யாருடன் குர்பானிப் பிராணி உள்ளதோ அவர் இவ்வாறு செய்ய வேண்டாம்'' என்றார்கள். தோழர்களில் சிலர் இதன்படி செய்தார்கள். சிலர் இதன்படி செய்யவில்லை. நபி(ஸல்) அவர்களுடனும் அவர்களோடிருந்த வசதிபடைத்த தோழர்களில் சிலருடனும் குர்பானிப் பிராணி இருந்ததால் அவர்களால் உம்ராவை மட்டும் செய்து இஹ்ராமிலிருந்து விடுபட முடியவில்லை. என்னிடம் வந்த நபி(ஸல்) அவர்கள் நான் அழுது கொண்டிருப்பதைப் பார்த்து, 'ஏன் அழுகிறாய்?' எனக் கேட்டார்கள். 'நீங்கள் உங்கள் தோழர்களுக்குக் கூறியதைக் கேட்டேன் நான் உம்ரா செய்ய முடியாமலகி விட்டது'' என்றேன். 'உனக்கு என்னவாயிற்று?' எனக் கேட்டார்கள். 'நான் தொழ முடியாத நிலையிலுள்ளேன்'' என்றேன். 'அதனால் கவலை கொள்ள வேண்டாம் ஆதமின் பெண் மக்களில் நீயும் ஒருத்தி! எனவே, இறைவன் அவர்களுக்கு விதியாக்கியதை உனக்கும் விதியாக்கியுள்ளான். நீ ஹஜ் செய்! அல்லாஹ் உனக்கு உம்ரா செய்யும் வாய்ப்பையும் தரலாம்'' என்றார்கள். ஹஜ்ஜுக்காகப் புறப்பட்டு மினாவை வந்தடைந்தபோது நான் தூய்மையானேன். பிறகு மினாவிலிருந்து சென்று வலம்வந்தேன். நபி(ஸல) அவர்களோடு வந்த கடைசிக் கூட்டத்தினரோடு புறப்பட்டு முஹஸ்ஸப் எனுமிடத்தில் நபி(ஸல்) அவர்களுடனேயே தங்கினேன். அப்போது (என்னுடைய சகோதரர்) அப்துர் ரஹ்மானை நபி(ஸல்) அழைத்து, 'உம்முடைய சகோதரியை ஹரமுக்கு வெளியே அழைத்துச் சென்று உம்ராவிற்கு இஹ்ராம் அணிந்து இருவரும் உம்ரா செய்யுங்கள். முடிந்ததும் இதே இடத்திற்குத் திரும்பி வாருங்கள். நான் உங்கள் இருவரையும் எதிர் பார்க்கிறேன்'' என்றார்கள். உடனே நாங்கள் புறப்பட்டோம். தவாஃபை முடித்து ஸஹ்ருடைய நேரத்தில் வந்து சேர்ந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் (''உம்ராவை) முடித்து விட்டீர்களா?' எனக் கேட்க 'ஆம்' என்றேன். பிறகு நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்கள் புறப்பட அனுமதித்தார்கள். மக்கள் அனைவரும் புறப்பட்டதும் மதீனாவை நோக்கி நபி(ஸல்) அவர்கள் வந்தார்கள்.

பகுதி 34

ஹஜ்ஜுக்கு மட்டும் இஹ்ராம் அணிவது (இஃப்ராத்), ஹஜ்ஜுக்கும் உம்ராவிற்கும் சேர்த்து இஹ்ராம் அணிவது (கிரான்), உம்ராவிற்கு இஹ்ராம் அணிந்து ஹஜ்ஜுக்கு இஹ்ராம் அணிவது (தமத்துஉ) பலிப்பிராணியைக் கொண்டு வராதவர் ஹஜ்ஜை (உம்ராவாக) மாற்றுதல்.

1561. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நாங்கள் நபி(ஸல்) அவர்களோடு சென்றோம். அவர்கள் ஹஜ்ஜைத் தவிர வேறெதையும் செய்ய நாங்கள் காணவில்லை. மக்காவை வந்தடைந்ததும் கஅபாவை வலம் வந்தோம். அதன் பிறகு குர்பானிப் பிராணியைக் கொண்டு வராதவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபடுமாறு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். உடனே பிராணியைக் கொண்டு வராதவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டார்கள். நபி(ஸல்) அவர்களின் மனைவியரும் பிராணியைக் கொண்டுவராததால் அவர்களும் இஹ்ராமிலிருந்து விடுபட்டார்கள். ஆனால் நான் மாதவிடாய்க்காரியாக இருந்ததால் நான் வலம்வரவில்லை. (முஹஸ்ஸப் எனும் இடத்தில் தங்கும்) இரவு வந்தபோது நான் நபி(ஸல்) அவர்களிடம், இறைத்தூதர் அவர்களே! மக்கள் ஹஜ், உம்ரா இரண்டையும் முடித்துத் திரும்புகின்றனர் ஆனால் நானோ ஹஜ்ஜுடன் மட்டும் திரும்புகிறேன் என்றேன். நபி(ஸல்) அவர்கள், 'நாம் மக்காவை வந்தடைந்தபோது நீ வலம்வரவில்லையா?' எனக் கேட்டார்கள். நான் இல்லை என்றேன். 'அப்படியானால் உன்னுடைய சகோதரனுடன் தன்யீம் எனும் இடத்திற்குச் சென்று உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்து அதனை முடித்து இன்ன இன்ன இடத்திற்கு வந்துவிடு'' எனக் கூறினார்கள்.

ஸஃபிய்யா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம், 'நானும் உங்கள் அனைவரின் பயணத்தையும் தடுத்துவிட்டதாக உணர்கிறேன்' என்று சொன்னபோது, நபி(ஸல்) 'காரியத்தைக் கெடுத்துவிட்டாயே! பத்தாம் நாளில் நீ வலம்வரவில்லையா?' என்று கேட்டார்கள். ஸஃபீயா 'ஆம், செய்து விட்டேன்!'' என்றார். 'பரவாயில்லை! புறப்படு!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அதன் பிறகு என்னை நபி(ஸல்) அவர்கள் சந்தித்தபோது, அவர்கள் மக்காவிலிருந்து புறப்பட்டு ஒரு குன்றில் ஏறிக் கொண்டிருந்தார்கள். நான் இறங்கிக் கொண்டிருந்தேன் அல்லது அவர்கள் இறங்கிக் கொண்டிருந்தார்கள் நான் ஏறிக் கொண்டிருந்தேன்.

1562. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களின் இறுதி ஹஜ்ஜின்போது நாங்களும் அவர்களுடன் சென்றிருந்தோம். சிலர் உம்ராவிற்கும் ஹஜ்ஜுக்கும் உம்ராவிற்கும் சேர்த்தும் சிலர் ஹஜ்ஜுக்காக மட்டும் இஹ்ராம் அணிந்திருந்தனர். நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்திருந்தார்கள். ஹஜ்ஜுக்காகவோ அல்லது ஹஜ்ஜுக்கும் உம்ராவிற்காகவும் சேர்த்தோ இஹ்ராம் அணிந்தவர்கள் பிராணியைக் குர்பானி கொடுக்கும் (பத்தாம்) நாள் வரும் வரை இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை.

1563. மர்வான் இப்னி ஹகம் அறிவித்தார்.

நான் உஸ்மான்(ரலி) உடனும், அலீ(ரலி) உடனும் ஹஜ் செய்துள்ளேன். உஸ்மான்(ரலி) ஹஜ், உம்ரா இரண்டையும் சேர்த்து (கிரான்) செய்வதையும் உம்ரா முடித்து ஹஜ் (தமத்துஉ) செய்வதையும் தடுத்தார். இதைக்கண்ட அலீ(ரலி), ஹஜ் உம்ரா இரண்டிற்கும் இஹ்ராம் அணிந்து 'லப்பைக் பி உம்ரதின் வ ஹஜ்ஜதின்'' என்று கூறிவிட்டு 'நபி(ஸல்) அவர்களின் வழியை யாருடைய சொல்லிற்காகவும் நான்விட்டு விடமாட்டேன்'' எனக் கூறினார்.

1564. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

ஹஜ்ஜுடைய மாதங்களில் உம்ரா செய்வது பூமியில் நடக்கும் பாவங்களிலேயே மிகக் கொடிய பாவம் என (அறியாமைக்கால) மக்கள் கருதினர். (துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம் என மூன்று மாதங்கள், போரிடத் தடை செய்யப்பட்ட மாதங்களாகத் தொடர்ந்து வந்ததால்) முஹர்ரம் மாதத்திற்கான தடையை ஸஃபருக்கு மாற்றினார்கள். (ஹஜ் பயணத்தில்) ஒட்டகங்களின் முதுகிலுள்ள சுமைகளின் வடு காய்ந்து மறைந்து ஸஃபர் மாதமும் கடந்துவிட்டால் உம்ரா செய்வது கூடும்'' என்று கூறிவந்தனர். நபி(ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் (துல்ஹஜ் மாதம்) நான்காம் நாள் காலை, ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்தவர்களாக மக்கா நகருக்கு வந்தபோது நபி(ஸல்) அவர்கள், மக்களின் இஹ்ராமை உம்ராவிற்குரியதாக மாற்றும்படி கட்டளையிட்டார்கள். இது தோழர்களுக்கு மிகக் கடுமையாகத் தெரிந்தது. இதனால் நபி(ஸல்) அவர்களிடம் 'இறைத்தூதர் அவர்களே! (இவ்வாறு உம்ராவிற்குப் பிறகு) இஹ்ராமிலிருந்து விடுபடுவதால் எச்செயல்கள் அனுமதிக்கப்படும்?' எனக் கேட்டனர். அதற்கு 'அனைத்து (விலக்கப்படாத) செயல்களும் அனுமதிக்கப்படும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

1565. அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். (நான் குர்பானிப் பிராணி கொண்டு வராததால்.. உம்ராவை முடித்து) இஹ்ராமிலிருந்து விடுபடுமாறு அவர்கள் கட்டளையிட்டார்கள்.

1566. ஹஃப்ஸா(ரலி) அறிவித்தார்.

''இறைத்தூதர் அவர்களே! உம்ரா செய்துவிட்டு மக்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிட்டார்கள். ஆனால், நீங்கள் உம்ரா செய்த பிறகும் இஹ்ராமிலிருந்து விடுபட வில்லையே! என்ன காரணம்?' என நான் நபி(ஸல்) அவர்களைக் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'என்னுடைய முடியைக் களிம்பு தடவிப் படியச் செய்து விட்டேன் என்னுடைய குர்பானிப் பிராணியின் கழுத்தில் அடையாளம் தொங்கவிட்டு விட்டேன். எனவே, குர்பானி கொடுக்கும் வரை நான் இஹ்ராமைக் களைவது கூடாது'' என்றார்கள்.

1567. நஸ்ரு இப்னு இம்ரான் அறிவித்தார்.

நான் தமத்துஉ (ஹஜ்ஜும் உம்ராவும் தனித்தனி இஹ்ராமுடன்) செய்தேன். என்னைச் சிலர் தடுத்தார்கள். எனவே, இதை இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கூறினேன். அதற்கு அவர்கள் தமத்துஉ செய்யுமாறே கட்டளையிட்டார். பிறகு ஒரு நாள் ஒருவர் என் கனவில் தோன்றி, 'ஹஜ் ஏற்றுக் கொள்ளப்பட்டது உம்ரா ஒப்புக் கொள்ளப்பட்டது' எனக் கூறினார். நான் இதையும் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கூறியபோது ('தமத்துஉவோ) நபி(ஸல்) அவர்களின் வழிமுறையாகும்' என்று கூறி, 'நீ என்னுடன் தங்கிக் கொள். என்னுடைய செல்வத்திலிருந்து ஒரு பங்கை உனக்குத் தருகிறேன்' எனக் கூறினார்.

இப்னு அப்பாஸ்(ரலி) தம்முடன் தங்கச் சொன்னதன் காரணம் என்ன? என்று நஸ்ர் இப்னு இம்ரானிடம் கேட்டேன். 'நான் கண்ட கனவே காரணம்' என அவர் கூறினார் என்று ஷுஉபா கூறுகிறார்.

1568. அபூ ஷிஹாப் அறிவித்தார்.

நான் ஹஜ்ஜுடன் உம்ராவையும் (தமத்துஉ)... செய்ய நாடி மக்காவிற்குச் சென்றேன். துல்ஹஜ் பிறை எட்டுக்கு மூன்று நாள்களுக்கு முன்னால் (அதாவது பிறை ஐந்தில்) மக்காவில் நுழைந்தோம். அப்போது மக்காவாசிகளில் சிலர் என்னிடம் வந்து 'இப்படித் தமத்துஉ - செய்தால் உம்முடைய ஹஜ் மக்காவாசிகளின் ஹஜ்ஜாக ஆம்விடும் (குறைந்த நன்மைகளே கிடைக்கும்') என்றனர். நான் அதா இடம் சென்று இதைப் பற்றிக் கேட்டேன். அதா கூறினார் 'நபி(ஸல்) அவர்கள் தம்மோடு குர்பானிப் பிராணியான ஒட்டகத்துடன் ஹஜ்ஜுக்கு வந்தபோது நான் நபி(ஸல்) அவர்களோடு இருந்தேன். அப்போது மக்கள் அனைவரிரும் ஹஜ்ஜுக்காகவே இஹ்ராம் அணிந்திருந்தனர். நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி 'நீங்கள் தவாஃபையும், ஸஃபா, மர்வாவிற்கு மத்தியில் ஒடுவதையும் நிறைவேற்றிவிட்டு, முடியைக் குறைத்து இஹ்ராமிலிருந்து விடுபட்டு (மக்காவில்) தங்கிக் கொள்ளுங்கள். பிறை எட்டு அன்று ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்து கொள்ளுங்கள். நீங்கள் இஹ்ராம் அணிந்து, இதற்கு முன்னால் செய்ததை தமத்துஉ (உம்ரா) ஆக ஆக்கிக் கொள்ளுங்கள்'' என்றார்கள். அதற்குத் தோழர்கள் 'நாங்கள் ஹஜ்ஜின் பெயரில் இஹ்ராம் அணிந்து வந்தோம். அதை எவ்வாறு தமத்துஉ (உம்ரா) ஆக ஆக்கிக் கொள்வது?' என்று கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நான் கட்டளையிட்டதை நீங்கள் செய்யுங்கள். நான் என்னுடன் குர்பானிப் பிராணியைக் கொண்டு வரவில்லையெனில் உங்களுக்கு நான் கட்டளையிட்டதைப் போன்று நிச்சயமாக நானும் செய்திருப்பேன் குர்பானிப் பிராணியைக் கொண்டு வந்தால் அதை (பலிப்பிராணியை).. அந்த இடத்தில் சேர்க்கும் வரை (பலியிடும்வரை) இஹ்ராமைக் களைவது எனக்குக் கூடாது'' என்றார்கள். உடனே தோழர்கள் நபி(ஸல்) அவர்களின் கட்டளையின்படி செயலாற்றினார்கள்' என்று ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் என்னிடம் கூறினார்.

1569. ஸயீத் இப்னு முஸய்யப் அறிவித்தார்.

அலீ(ரலி), உஸ்மான்(ரலி) இருவரும் உஸ்ஃபான் எனுமிடத்தில் தமத்துஉவின் விஷயத்தில் கருத்து வேறுபட்டார்கள். அலீ(ரலி) 'நபி(ஸல்) அவர்கள் செய்த செயலிலிருந்து எங்களை நீர் தடுக்க நாடுகிறீர்'' என்று உஸ்மான்(ரலி) அவர்களிடம் கூறி, ஹஜ், உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்தார்.

பகுதி 35

ஹஜ்ஜுக்காக தல்பியா கூறுவதும் அதில் ஹஜ் என்று வாயால் கூறுவதும்.

1570. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

''நாங்கள் நபி(ஸல்) அவர்களோடு ஹஜ்ஜுக்காகச் சென்றோம். அப்போது 'லப்பைக்க, அல்லாஹும்ம லப்பைக்க பில்ஹஜ்' எனக் கூறினோம். பிறகு நபி(ஸல்) அவர்கள் (மக்கா நகருக்கு வந்தபோது) அதை உம்ராவாக ஆக்கும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்... நாங்கள் அவ்வாறே ஆக்கினோம்.''

பகுதி 36

நபி(ஸல்) அவர்களின் காலத்தில் தமத்துஉ செய்தல்

1571. இம்ரான்(ரலி) அறிவித்தார்.

''நாங்கள் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் தமத்துஉ செய்தோம். குர்ஆனின் மூலமே இச்சட்டம் இறங்கியது எனினும் சிலர் 'தமத்துஉ கூடாது' எனத் தம் சுய அறிவால் தாம் நாடியதை எல்லாம் கூறுகின்றனர்.''

பகுதி 37

அல்லாஹ் கூறினான்:

(தமத்துஉ செய்ய அனுமதியளிக்கும்) இச்சலுகை எவருடைய குடும்பம் மஸ்ஜிதுல் ஹராமின் பக்கத்தில் இல்லையோ அவருக்கே (திருக்குர்ஆன் 02:196)

1572. இக்ரிமா அறிவித்தார்.

இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் தமத்துஉ பற்றிக் கேட்கப்பட்டது. 'ஹஜ்ஜத்துல் வதாவில் முஹாஜிரீன்களும் அன்ஸாரிகளும் நபி(ஸல்) அவர்களின் மனைவியர்களும் (ஹஜ்ஜுக்காக) இஹ்ராம் அணிந்தார்கள். நாங்களும் (அதற்காகவே) இஹ்ராம் அணிந்தோம். ஆனால், நாங்கள் மக்கா நகருக்கு வந்தபோது, நபி(ஸல்) 'குர்பானிப் பிராணியைக் கொண்டு வந்தவர்களைத் தவிர, மற்ற அனைவரும் தங்கள் ஹஜ்ஜை உம்ராவாக மாற்றிக் கொள்ளுங்கள்!'' என்றார்கள். நாங்கள் கஅபாவைத் வலம்வந்து ஸஃபா மர்வாவுக்கிடையே ஓடி, மனைவியருடன் கூடி (தைக்கப்பட்ட) ஆடைகளை அணிந்து கொண்டோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'தம்மோடு பிராணி கொண்டு வந்தவர்கள் பிராணி தனக்குரிய இடத்தில் சேரும் வரை... குர்பானி கொடுக்கும் வரை.. இஹ்ராமிலிருந்து விடுபடக் கூடாது' எனக் கட்டளையிட்டார்கள். எட்டாம் நாள் மாலையில் நபி(ஸல்) அவர்கள் எங்களை ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணியக் கட்டளையிட்டார்கள். நாங்கள் ஹஜ்ஜுக்கான மற்ற வழிபாடுகளை முடித்துவிட்டு வலம்வந்தோம். ஸஃபா மர்வாவுக்கிடையே ஓடினோம். எங்களின் ஹஜ் நிறைவு பெற்றுவிட்டது. மேலும், 'எவரேனும் ஹஜ்ஜுடைய காலம் வரும் முன் உம்ரா செய்ய விரும்பினால் அவர் பலிப் பிராணிகளில் தம்மால் இயன்றதை குர்பானி கொடுக்கட்டும். பலிப் பிராணி கிடைக்கப் பெறாதவர்கள் ஹஜ்ஜுக் காலத்தில் மூன்று நாள்களும் (ஹஜ்ஜிலிருந்து தம் ஊர்களுக்கு) திரும்பியதும் ஏழு நாள்களும் நோன்பு நோற்க வேண்டும்.'' (திருக்குர்ஆன் 02: 196) என்ற இறைவசனம் கூறுவது போல் எங்களின் மீது பலி கொடுப்பது கடமையாகிவிட்டது. குர்பானி (பலி) கொடுப்பதற்கு ஆடு போதுமானதாகும்.

எனவே, மக்கள் ஹஜ், உம்ரா என்ற இரண்டு கடமையையும் ஒரே ஆண்டில் நிறைவேற்றினர். (தமத்துஉ செய்ய அனுமதியளிக்கும்) இச்சட்டம் அல்லாஹ் தன் வேதத்தில் அருளியதும், நபி(ஸல்) அவர்களின் நடைமுறையும், மக்காவாசிகளல்லாத மற்ற மக்கள் அனைவருக்கும் நபி(ஸல்) அவர்கள் அனுமதித்ததாகும். ஏனெனில், அல்லாஹ் 'இச்சலுகை எவருடைய குடும்பம் மஸ்ஜிதுல் ஹராமின் பக்கத்தில் இல்லையோ அவர்களுக்குத்தான்'' (திருக்குர்ஆன்:02:196) என்று கூறுகிறான்.

மேலும், அல்லாஹ் ஹஜ்ஜுடைய மாதம் எனக் கூறுவது ஷவ்வால், துல்கஅதா, துல்ஹஜ் ஆகும். இம்மாதங்களில் யார் தமத்துஉ செய்கின்றனரோ அவர்களின் மீது குர்பானியோ அல்லது நோன்போ கடமையாகும் என்றார்கள்.

பகுதி 38

மக்காவில் நுழையும்போது குளிப்பது.

1573. நாஃபிவு அறிவித்தார்.

இப்னு உமர்(ரலி) ஹரம் எல்லையை நெருங்கிவிட்டால் தல்பியாவை நிறுத்திவிடுவார். பிறகு ஃதூத்துவா எனுமிடத்தில் தங்கி ஸுப்ஹுத் தொழுதுவிட்டு குளிப்பார். 'நபி(ஸல்) அவர்கள் இவ்வாறே செய்தார்கள்' என்றும் கூறுவார்.

பகுதி 39

இரவிலோ, பகலிலோ மக்காவில் நுழைவது.

நபி(ஸல்) அவர்கள் ஃதூத்துவாவில் இரவில் தங்கிக் காலையில் மக்காவில் நுழைந்தார்கள். இப்னு உம(ரலி)ரும் அவ்வாறே செய்தார்.

1574. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஃதூத்துவா எனுமிடத்தில் இரவு தங்கிக் காலையில் மக்காவில் நுழைந்தார்கள்.

இப்னு உமரும்(ரலி) அவ்வாறே செய்தார் என நாபிவு கூறுகிறார்.

பகுதி 40

மக்காவினுள் எவ்வழியே நுழைவது?

1575. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (மதீனாவிலிருந்து) மேற்புறக் கணவாய் வழியாக நுழைந்து கீழ்ப்புறக் கணவாய் வழியாக வெளியேறுவார்கள்.

பகுதி 41

மக்காவிலிருந்து எவ்வழியே வெளியேறுவது?

1576. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் பத்ஹா எனும் இடத்திலுள்ள கதா எனும் மேற்புறக் கணவாய் வழியாக மக்காவில் நுழைந்து கீழ்ப்புறக் கணவாய் வழியாக வெளியேறுவார்கள்.

1577. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மக்கா வந்தால் அதன் மேற்புறத்தின் வழியாக நுழைந்து அதன் கீழ்ப்புறத்தின் வழியாக வெளியேறுவார்கள்.

1578. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

மக்கா வெற்றியின்போது நபி(ஸல்) அவர்கள் 'கதாஉ' (எனும் கணவாய்) வழியாக மக்காவில் நுழைந்து மக்காவின் மேற்பகுதியிலுள்ள 'குதா' (எனும் கணவாய்) வழியாக வெளியேறினார்கள்.

1579. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது மக்காவின் மேற்பகுதியிலுள்ள 'கதாஉ' (எனும் கணவாய் வழியாக) நுழைந்தார்கள்.

'என் தந்தை உர்வா(ரலி) 'கதாஉ' 'குதா' இரண்டின் வழியாகவும் நுழைபவராக இருந்தார். எனினும் அதிகமாக 'கதாஉ' வழியாகவே நுழைவார். ஏனெனில் அவ்விரண்டில் 'கதாஉ' தான் அவர் வீட்டிற்கு அருகிலிருந்தது'' என ஹிஷாம் கூறுகிறார்.

1580. உர்வா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது மக்காவின் மேற்பகுதியிலுள்ள 'கதாஉ எனுமிடத்தின் வழியே நுழைந்தார்கள்.

''என் தந்தை உர்வா(ரலி) அதிகமாக 'கதாஉ' (எனும் மேற்புறக் கணவாயின்) வழியாகவே நுழைபவராக இருந்தார். ஏனெனில், அவ்விரண்டில் 'கதாஅ' தான் அவர் வீட்டிற்கு அருகிலிருந்தது'' என ஹிஷாம் கூறுகிறார்.

1581. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது 'கதாஉ' (எனும் கணவாய்) வழியாக (மக்காவினுள்) நுழைந்தார்கள்.

''என் தந்தை உர்வா(ரலி) 'கதாஉ', 'குதா' இரண்டின் வழியாகவும் (மக்காவினுள்) நுழைபவராக இருந்தார். எனினும் அதிகமாக 'கதாஉ' வழியாகவே நுழைவார். ஏனெனில் அவ்விரண்டில் 'கதாஉ' தான் அவர் வீட்டிற்கு அருகிலிருந்தது'' என ஹிஷாம் கூறுகிறார்.

'கதாஉ' , 'குதா' என்பன இரண்டு இடங்கள் என்று அபூ அப்தில்லாஹ் புகாரி ஆகிய நான் கூறுகிறேன்.

பகுதி 42

மக்காவின் சிறப்பும் கஅபாவின் நிர்மாணமாகும்.

அல்லாஹ் கூறினான்:

''(கஅபா என்னும்) இந்த வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம் 'இப்ராஹீம் நின்ற இடத்தை ... மகாமு இப்ராஹீமை'... தொழும் இடமாக நீங்கள் ஆக்கிக் கொள்ளுங்கள்!'' (என்றும் நாம் சொன்னோம்). மேலும் 'என் வீட்டைச் சுற்றி வருபவர்கள். தங்கியிருப்பவர்கள். ருகூஃ செய்பவர்கள். ஸுஜூது செய்பவர்கள் ஆகியோருக்காகத் தூய்மையாக அதனை வைத்திருக்க வேண்டும் என்று இப்ராஹீமிடமிருந்தும், இஸ்மாயீலிடமிருந்தும் நாம் உறுதிமொழி வாங்கினோம்.

''(இன்னும் நினைவு கூருங்கள்:) இப்ராஹீம் 'அல்லாஹ்வே! இந்தப் பட்டணத்தைப் பாதுகாப்பான இடமாக ஆக்குவாயாக! இதில் வசிப்போரில் யார் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புகிறார்களோ அவர்களுக்குப் பல வகைக் கனி வர்க்கங்களையும் கொண்டு உணவளிப்பாயாக!'' என்று கூறினார். (ஆம்:) யார் நம்பிக்கை கொள்ளவில்லையயோ அவனுக்கும் சிறிது காலம் சுகமனுபவிக்கச் செய்வேன் பின்னர் அவனை நரக நெருப்பின் வேதனையின் பால் இழுத்துச் செல்வேன். அவன் சேரும் இடம் மிகவும் கெட்டதே' என்று அல்லாஹ் கூறினான்.

இப்ராஹீமும் இஸ்மாயீலும் இவ்வீட்டின் அடித்தளத்தை உயர்த்தியபோது, 'எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக் நிச்சயமாக, நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கிறாய்.

எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உனக்கு முற்றிலும் கீழ்ப்படியும் முஸ்லிம்களாக்குவாயாக் எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உனக்கு முற்றிலும் கீழ்ப்படியும் ஒரு கூட்டத்தினரை உருவாக்குவாயாக! நாங்கள் உன்னை வழிபடும் முறைகளையும் அறிவித்தருள்வாயாக: எங்களை மன்னிப்பாயாக் நிச்சயமாக நீயே மிகவும் மன்னிப்போனும். அளவிலா அன்புடையோனுமாய் இருக்கிறாய்!'' (என்று பிரார்த்தித்தனர்.) (திருக்குர்ஆன் 02:125, 128)

1582. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

கஅபா புதுப்பித்துக் கட்டப்பட்டபோது (சிறுவராயிருந்த நபி(ஸல்) அவர்களும் அப்பாஸ்(ரலி) அவர்களும் கற்களைச் சுமந்து சென்றார்கள். அப்போது அப்பாஸ்(ரலி), நபி(ஸல்) அவர்களை நோக்கி (கல்சுமப்பதற்கு வசதியாக), 'உன்னுடைய வேட்டியை அவிழ்த்துத் தோளில் வைத்துக்கொள்!' எனக் கூறினார்கள். நபி(ஸல்) அவர்களும் அவ்வாறே செய்தார்கள்) பிறகு (ஆடையின்றி உள்ளோம் என்றறிந்து) உடனே மயக்கமுற்றுக் கீழே விழுந்தார்கள். அவர்களின் கண்கள் வானத்தை நோக்கியிருந்தன. (அப்பாஸ்(ரலி) அவர்களை நோக்கி) 'என்னுடைய ஆடையை எனக்குக் கொடுங்கள்!'' என்றார்கள். (ஆடையை எடுத்துக் கொடுத்த உடனே) அதை இறுக்கமாகக் கட்டிக் கொண்டார்கள்.

1583. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் என்னிடம், 'ஆயிஷாவே! நிச்சயமாக உன்னுடைய கூட்டத்தினர் கஅபாவைக் கட்டும்போது இப்ராஹீம்(அலை) இட்ட அடித்தளத்தைக் குறைத்துவிட்டார்கள் என்பதை நீ அறியவில்லையா?' என்று கேட்டார்கள். அதற்கு நான், 'இறைத்தூதர் அவர்களே! இப்ராஹீம்(அலை) இட்ட அடித்தளத்தின்படி நீங்கள் அதை மாற்றலாமல்லவா?' எனக் கேட்டேன். 'உன்னுடைய கூட்டத்தினர் இப்போதே இஸ்லாத்தை ஏற்றுள்ளனர். இல்லையெனில் அவ்வாறே நான் செய்திருப்பேன்' என்றார்கள்.

''ஆயிஷா(ரலி) நபி(ஸல்) அவர்களிடமிருந்து மேற்சொன்னவற்றைக் கேட்டிருந்தால் அது சரியே! ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் ஹிஜ்ர் (எனும் வளைந்த) பகுதிக்கு எதிரே உள்ள இரண்டு மூலைகளில் தொட்டு முத்தமிடாததற்குக் காரணம் இறை இல்லமான 'கஅபா'வானது இப்ராஹீம்(அலை) அவர்கள் அமைத்த அடித்தளத்தில் முழுமையாக அமைக்கப்படாமல் (கொஞ்சம்விட்டு அமைக்கப்பட்டு) இருப்பதேயாகும் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறினார்.

1584. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நான் நபி(ஸல்) அவர்களிடம் கஅபாவின் அருகிலுள்ள ஒரு (வளைந்த சிறு) சுவரைப் பற்றி, 'இது கஅபாவில் சேர்ந்ததா?' எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் 'ஆம்!'' என்றார்கள். பிறகு நான் 'எதற்காக அவர்கள் இதனை கஅபாவோடு இணைக்கவில்லை?' எனக் கேட்டேன். அதற்கவர்கள் 'உன்னுடைய சமூகத்தாருக்குப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் தான்!'' என்று பதிலளித்தார்கள். நான் 'கஅபாவின் வாசலை உயரத்தில் வைத்திருப்பதின் காரணம் என்ன?' எனக் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'தங்களுக்கு வேண்டியவர்களை உள்ளே அனுமதிப்பதற்காகவும் தங்களுக்கு வேண்டாதவர்களைத் தடுத்து விடுவதற்காகவுமே உன்னுடைய கூட்டத்தார் அவ்வாறு செய்தார்கள். 'உன் கூட்டத்தினர் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களாயிருப்பதால், அவர்களின் உள்ளத்தில் வெறுப்பு தோன்றும்' என்ற அச்சம் எனக்கில்லாவிட்டால் நான் இச்சுவரை கஅபாவினுள் இணைத்து அதன் கதவைத் கீழிறக்கி பூமியோடு சேர்ந்தால் போலாக்கியிருப்பேன்'' என்று பதிலளித்தார்கள்.

1585. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

என்னிடம் நபி(ஸல்) அவர்கள், 'உன் கூட்டத்தினர் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களாயிருக்கவில்லை என்றால் கஅபாவை இடித்துவிட்டு, (முழுக்க முழுக்க) இப்ராஹீம்(அலை) அவர்கள் அமைத்த அடித்தளத்தின் மீதே நான் அதைக் கட்டியிருப்பேன். ஏனெனில், குறைஷிகள் அதை (அடித்தளத்தை விட)ச் சுருக்கி(சற்று உள்ளடக்கி)க் கட்டிவிட்டனர். மேலும், அதற்கு ஒரு பின்புற வாசலையும் அமைத்திருப்பேன்'' என்று கூறினார்கள்.

1586. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

என்னிடம் நபி(ஸல்) அவர்கள், 'ஆயிஷாவே! உன்னுடைய கூட்டத்தினர் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களாக இல்லையென்றால் கஅபாவை இடிக்குமாறு நான் கட்டளையிட்டிருப்பேன். (இடிக்கப்பட்டதும்) வெளியே விடப்பட்ட பகுதியையும் அதனுள் சேர்த்து(க் கட்டி) இருப்பேன். உயர்ந்திருக்கும் தளத்தைத் தரையோடு தரையாக்கியிருப்பேன் மேலும், கிழக்கே ஒன்றும் மேற்கே ஒன்றுமாக இரண்டு வாசல்களை அமைத்திருப்பேன் இதன் மூலம் இப்ராஹீம்(அலை) அவர்கள் அமைத்த அடித்தளத்தில் (கஅபாவை) எழுப்பியவனாய் ஆகியிருப்பேன்!'' என்றார்கள்.

இப்னு ஸுபைர்(ரலி) அவர்களை கஅபாவை இடிக்கத் தூண்டியது இச்செய்திதான். 'இப்னு ஸுபைர்(ரலி) அதை இடித்துக் கட்டியதையும் ஹிஜ்ர் (எனும் வளைந்த) பகுதியை அதில் சேர்த்ததையும் பார்த்தேன் மேலும் (இடிக்கும் போது) ஒட்டகத்தின் திமில்கள் போன்ற கற்கள் இப்ராஹீம்(அலை) அவர்கள் அமைத்த அடித்தளத்தில் இருப்பதைக் கண்டேன்'' என யஸீத் இப்னு ரூமான் கூறுகிறார்.

''இந்த இடம் எங்கே இருக்கிறது?' என (யஸீதிடம்) கேட்டேன். அதற்கவர் 'இப்போதே அதை உனக்குக் காட்டுகிறேன்' என்றார். அவருடன் ஹிஜ்ர் எனும் வளைந்த பகுதிக்கு நான் சென்றேன். ஓரிடத்தைச் சுட்டிக் காட்டி 'இந்த இடம் தான்' என்றார். நான் அதை அளந்து பார்த்தபோது ஹிஜ்ர் எனும் பகுதியிலிருந்து சுமார் ஆறு முழங்கள் தள்ளி அடித்தளத்தைக் கண்டேன்'' என ஜாரீர் கூறுகிறார்.

பகுதி 43

ஹரமின் சிறப்பு.

அல்லாஹ் கூறினான்:

''இந்த ஊரை எவன் கண்ணியப்படுத்தியுள்ளானோ அந்த இறைவனை வணங்குமாறு நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். எல்லாப் பொருட்களும் அவனுக்கே உரியன் அன்றியும் அவனுக்கே முற்றிலும் கீழ்ப்படிந்தவனாக இருக்கும்படியும் நான் கட்டளையிடப்பட்டுள்ளேன் (என்று நபியே! நீர் கூறும்)'' திருக்குர்ஆன் 27:91)

'நாம் அவர்களை அபயமளிக்கும் புனித பூமியில் (பாதுகாப்பாக) வசிக்கும்படி செய்யவில்லையா? அவ்விடத்தில் ஒவ்வொரு வகைக் கனி வர்க்கமும் நம்மிடமிருந்து ஆகாரமாகக் கொண்டு வரப்படுகிறது எனினும் அவர்களில் பெரும்பாலோர் இதை அறியமாட்டார்கள்.'' (திருக்குர்ஆன் 28:57)

1587. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது, 'அல்லாஹ் இந்த ஊரைப் புனிதமானதாக்கியுள்ளான். இவ்வூரிலுள்ள முட்கள் பிடுங்கப்படக் கூடாது இங்கே வேட்டையாடப்படும் பிராணிகளை விரட்டக் கூடாது இங்கு கீழே விழுந்து கிடக்கும் பொருட்களை அதை (மக்களுக்கு) அறிவிப்பவரைத் தவிர வேறெவரும் எடுக்கக் கூடாது!'' எனக் கூறினார்கள்.

பகுதி 44

மக்காவின் வீடுகள் வாரிசுப் பொருளாவதும் அதை விற்பதும் வாங்குவதும் கூடும்.

(மற்ற இடங்களை விடக் குறிப்பாக) மஸ்ஜிதுல் ஹராமில் மக்கள் அனைவரும் சமமாகக் கருதப்படுவார்கள்.

ஏனெனில், அல்லாஹ் கூறினான்:

நிச்சயமாக, நிராகரித்து, உள்ளுர்வாசிகளும் வெளியூர் வாசிகளும் (ஹரமில் தங்குவதற்குச்) சம உரிமையுடையவர்களாயிருக்கும் நிலையில், நாம் மனித சமுதாயத்திற்காக (புனிதத் தலமாக) ஆக்கியிருக்கிற மஸ்ஜிதுல் ஹராமிலிருந்தும் அல்லாஹ்வின் பாதையிலிருந்தும் (இறை நம்பிக்கையாளர்களைத்) தடுப்பவர்களையும், அதில் (மஸ்ஜிதுல் ஹராமில்) அநியாயம் செய்வதன் மூலம் வரம்பு மீற விரும்புபவனையும் நோவினை தரும் வேதனையைச் சுவைக்கும்படி நாம் செய்வோம்.'' (திருக்குர்ஆன் 22:25)

1588. உஸாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்.

''இறைத்தூதர் அவர்களே! தாங்கள் மக்காவில் எங்கு தங்குவீர்கள்? அங்குள்ள உங்கள் வீட்டிலா?' என நான் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் '(அபூ தாலிபின் மகன்) அகீல், தம் தங்கும் விடுதிகள் அல்லது வீடுகள் எவற்றையாவதுவிட்டுச் சென்றுள்ளாரா என்ன?' எனக் கேட்டார்கள்.

அபூ தாலிபின் சொத்துக்களுக்கு அகீலும்  தாலிபும் வாரிசானார்கள். ஜஅஃபர்(ரலி), அலீ(ரலி) ஆகிய இருவரும் முஸ்லிம்களாக இருந்ததால் (தம் தந்தையின் சொத்துக்கு அவர்களால்) வாரிசாக முடியவில்லை. (அபூ தாலிப் இறந்த போது) அகீலும், தாலிபும் இறைமறுப்பாளர்களாக இருந்தனர். 'இறைநம்பிக்கையாளர், இறைமறுப்பாளாரின் சொத்திற்கு வாரிசாக மாட்டான்'' என உமர்(ரலி) கூறினார்.

''நிச்சயமாக, இறைநம்பிக்கை கொண்டு, மார்க்ககத்துக்காக நாடு துறந்து, தம் செல்வங்களையும், உயிர்களையும் இறைவழியில் தியாகம் செய்தவர்களும், இத்தகையோருக்குப் புகலிடம் கொடுத்து உதவியவர்களும் ஒருவருக்கொருவர் உரிமையுடையவர்களாவார்கள்' என்ற (திருக்குர்ஆன் 08:72) இறைவசனத்தை (மார்க்க அறிஞர்களான) முன்னோர்கள் (நம்பிக்கையாளர்களே நம்பிக்கையாளர்களுக்கு வாரிசாவார்கள் என்கிற) தம் கூற்றுக்கு ஆதாரமாகக் காட்டி வந்தார்கள்'' என இப்னு ஷிஹாப் ஸுஹ்ரீ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

பகுதி 45

நபி(ஸல்) அவர்கள் மக்காவில் தங்கிய இடம்.

1589. நபி(ஸல்) அவர்கள் மக்காவை நெருங்கியபோது, 'அல்லாஹ் நாடினால் நாளை பனூ கினானாவின் பள்ளத்தாக்கை அடைவோம் அது குறைஷிகள் 'குஃப்ரின் (இறை நிராகரிப்பின்) மீது நிலைத்திருப்போம்' என்று சத்தியம் செய்த இடமாகும்'' என்று கூறினார்கள்.

1590. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் துல்ஹஜ் பத்தாம் நாள் காலை மினாவில் இருக்கும் பொழுது, 'நாம் நாளை பனூ கினானாவின் பள்ளத்தாக்கை அடைவோம். அது குறைஷிகள் 'குப்ரின் (இறை நிராகரிப்பின்) மீது நிலைத்திருப்போம்' என்று சத்தியம் செய்த இடம்'' என்றார்கள்.

''பனூஹாஷிமுக்கும் பனுல் முத்தலிபுக்கும் எதிராக நபி(ஸல்) அவர்களைத் தங்களிடம் ஒப்படைக்கும் வரை இவர்களோடு திருமண ஒப்பந்தமோ வியாபாரக் கொடுக்கல் வாங்கலோ செய்யமாட்டோம்' என குறைஷிக் குலத்தாரும் கினானா குலத்தாரும் சத்தியம் செய்ததை இது குறிக்கிறது'' என ஸுஹ்ரீ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

நபி(ஸல்) அவர்கள் 'பள்ளத்தாக்கு' என்று குறிப்பிட்டது. முஹஸ்ஸப் பள்ளத்தாக்காகும்.

பகுதி 46

அல்லாஹ் கூறினான்:

இப்ராஹீம் இவ்வாறு பிரார்த்ததித்தை (நபியே!) நீர் நினைவுகூரும் 'என் இறைவனே! இந்த ஊரை (மக்காவை) அபய பூமியாய் ஆக்குவாயாக! என்னையும் என் மக்களையும் சிலைகளை வணங்குவதிலிருந்து காப்பாற்றுவாயாக!

''(என்) இறைவனே! நிச்சயமாக இவை (சிலைகள்) மக்களில் அநேகரை வழி கெடுத்துவிட்டன எனவே, என்னைப் பின்பற்றுகிறவர் என்னைச் சேர்ந்தவராவார். எனக்கு மாறு செய்கிறவர் என்னைச் சேர்ந்தவரல்லர். இருப்பினும், நிச்சயமாக நீ பெரிதும் மன்னிப்பவனாகவும், மிகக் கருணையுடையவனாகவும் இருக்கிறாய்!

''எங்கள் இறைவனே! நிச்சயமாக நான் என் சந்ததியினரை புனிதமான உன் வீட்டின் (கஅபாவின்) அருகே, விவசாயமில்லாத (இப்) பள்ளத்தாக்கில் குடியமர்த்தியிருக்கிறேன்: எங்கள் இறைவனே!.. தொழுகையை அவர்கள் நிலை நிறுத்துவதற்காகவே (இவ்விதம் குடியமர்த்தியிருக்கிறேன்!) எனவே மக்களில் ஒரு தொகையினரின் இதயங்களை அவர்கள் பால் சாய்ந்திடச் செய்வாயாக! இன்னும் அவர்கள் நன்றி செலுத்தும் பொருட்டு கனிவர்க்கங்களிலிருந்து அவர்களுக்கு நீ ஆகாரமும் அளிப்பாயாக!'' (திருக்குர்ஆன் 04:35 - 37)

பகுதி 47

அல்லாஹ் கூறினான்:

அல்லாஹ், புனிதமிக்க இல்லமாகிய கஅபாவை மனிதர்களுக்கு (மார்க்க உலக விவகாரங்களில்) நிலைபாட்டைத் தரும் தலமாக்கியிருக்கிறான் இன்னும் புனித மாதங்களையும், பலிப்பிராணிகளையும், (பலிக்காக) மாலையிடப்பட்ட பிராணிகளையும் (அபயம் பெற்றிட உதவக் கூடியவையாக) ஆக்கியிருக்கிறான் அல்லாஹ் இவ்வாறு செய்தது, அவன் வானங்களிலும் பூமியிலும் இருப்பவற்றையெல்லாம் நன்கறிவான் என்பதையும் அவன் அனைத்துப் பொருட்களையும் நன்கறிபவன் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காகவேயாகும். (திருக்குர்ஆன் 5:97)

1591. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

அபிஸீனியாவைச் சேர்ந்த, மெலிந்த கால்களுள்ள மனிதர்கள் கஅபாவை இடித்துப் பாழ்படுத்துவார்கள்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

1592. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

ரமளான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்னால் மக்கள் ஆஷூரா (முஹர்ரம் 10ம் நாளில்) நோன்பு நோற்று வந்தார்கள். அதுதான் கஅபாவுக்குப் புதிய திரை போடப்படும் நாளாக இருந்தது. அல்லாஹ் ரமளானுடைய நோன்பைக் கடமையாக்கியபோது, '(ஆஷூராவுடைய) நோன்பு நோற்க விரும்புகிறவர் அதை நோற்றுக் கொள்ளட்டும்! அதைவிட்டுவிட விரும்புகிறவர் அதைவிட்டு விடட்டும்!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

1593. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தார் வந்த பிறகும் இவ்வாலயத்தில் ஹஜ்ஜும் செய்யப்படும். உம்ராவும் செய்யப்படும்.''

என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

''கஅபாவில் ஹஜ் செய்யப்படாத நாள் வந்த பிறகே கியாமத் நாள் வரும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஷுஅபாவின் அறிவிப்பு கூறுகிறது. மேலேயுள்ள முதல் அறிவிப்பே பெரும்பாலோரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

பகுதி 48

கஅபாவுக்குத் திரையிடல்

1594. அபூ வாயில் அறிவித்தார்.

நான் ஷைபாவுடன் கஅபாவினுள் நாற்காலியில் அமர்ந்திருந்தேன். அப்போது ஷைபா 'இந்த இடத்தில் உமர்(ரலி) அமர்ந்து 'இத்திரையில் பதிக்கப்பட்டுள்ள தங்கம், வெள்ளி ஆகியவற்றைப் பங்கு வைத்துவிடலாம் எனத் தீர்மானித்துவிட்டேன்' என்றார்கள். அப்போது நான் அவர்களிடம் 'தங்களின் தோழர்கள் நபி(ஸல்), அபூ பக்ர்(ரலி) இருவரும் இவ்வாறு செய்யவில்லையே' எனக் கூறினேன். அதற்கு 'அந்த இருவரும்தான் நான் பின்பற்றுவதற்கு ஏற்ற மனிதர்கள்' என உமர்(ரலி) சொன்னார்கள்'' என்று கூறினார்கள்.

பகுதி 49

கஅபாவை இடிப்பது.

''ஒரு படை கஅபாவின் மீது படையெடுக்கும் அப்படையை பூமி விழுங்கிவிடும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) கூறினார்.

1595. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''(வெளிப் பக்கமாக) வளைந்த கால்களையுடைய, கருப்பு நிறத்தவர்கள் ஒவ்வொரு கல்லாகப் பிடுங்கி கஅபாவை உடைப்பதை நான் பார்ப்பது போன்றிருக்கிறது.''

என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

1596. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''அபிஸீனியாவைச் சேர்ந்த, மெலிந்த கால்களுள்ள மனிதர்கள் கஅபாவை அடித்துப் பாழ்படுத்துவார்கள்.''

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பகுதி 50

ஹஜருல் அஸ்வத்.

1597. ஆபிஸ் இப்னு ரபீஆ அறிவித்தார்.

உமர்(ரலி) ஹஜருல் அஸ்வத் அருகில் வந்து அதை முத்தமிட்டுவிட்டு, 'நீ தீங்கோ, நன்மையோ அளிக்கமுடியாத ஒரு சுல்தான் என்பதை நான் நன்கறிவேன். நபி(ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதைக் காணவில்லையென்றால் உன்னை நான் முத்தமிட்டிருக்க மாட்டேன்' என்றார்.

பகுதி 51

கஅபாவின் வாசலை மூடுவதும் எந்த இடத்தில் நின்றும் கஅபாவை நோக்கித் தொழுவதும்.

1598. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களும் உஸாமா இப்னு ஜைத்(ரலி), பிலால்(ரலி), உஸ்மான் இப்னு தல்ஹா(ரலி) ஆகியோரும் கஅபாவினுள் சென்று மூடிக் கொண்டார்கள். அவர்கள் தகவைத் திறந்தபோது நானே முதல் முதலில் உள்ளே நுழைந்தேன். பிலால்(ரலி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் தொழுதார்களா? எனக் கேட்டேன். பிலால்(ரலி), 'ஆம்! வலப்புறத்து இரண்டு தூண்களுக்கு மத்தியில்' எனப் பதிலளித்தார்.

பகுதி 52

கஅபாவினுள் தொழுவது

1599. நாஃபிவு அறிவித்தார்.

இப்னு உமர்(ரலி) கஅபாவிற்குள் நுழையும்போது, நேராக நடந்து வாசலை முதுகுக்குப் பின்னலாக்கி, எதிர் சுவருக்கு சுமார் மூன்று முழம் தள்ளி நின்று தொழுவார்கள். நபி(ஸல்) அவர்கள் எந்த இடத்தில் தொழுததாக பிலால்(ரலி) கூறினாரோ அந்த இடத்தில் தொழ விரும்பியே இவ்வாறு செய்வார். கஅபாவிற்குள் எத்திசையிலும் தொழுவதில் தவறில்லை.

பகுதி 53

கஅபாவினுள் செல்லாமலிருப்பது.

இப்னு உமர்(ரலி) அதிகமாக ஹஜ் செய்துள்ளார்கள். ஆனால் (ஹஜ்ஜின்போது கஅபாவினுள்) நுழைய மாட்டார்கள்.

1600. அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் உம்ரா செய்தபோது தவாஃப் செய்துவிட்டு மகாமு இப்ராஹீமுக்குப் பின்னால் நின்று இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அவர்களை மக்களிடமிருந்து மறைத்தவாறு ஒருவர் நின்றிருந்தார். அவரிடம் 'நபி(ஸல்) அவர்கள் கஅபாவினுள் சென்றார்களா?' என ஒருவர் கேட்டதற்கு அவர் இல்லை!'' என பதிலளித்தார்.

பகுதி 54

கஅபாவின் மூலைகளில் நின்று தக்பீர் கூறுதல்.

1601. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (மக்காவுக்கு) வந்தபோது, கஅபாவில் சிலைகள் இருந்ததால் உள்ளே நுழைய மறுத்து அப்புறப்படுத்துமாறு கட்டளையிட்டார்கள். உடனே அவை அப்புறப்படுத்தப்பட்டன. அச் சிலைகளில் (குறி பார்ப்பதற்குரிய) அம்புகளைக் கையில் தாங்கியவாறு இப்ராஹீம் (அலை), இஸ்மாயீல்(அலை) ஆகியோரின் உருவங்களும் இருந்தன. அவற்றையும் வெளியேற்றினார்கள். இதைக்கண்ட நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ் இ(தைச் செய்த)வர்களை அழிப்பானாக! அல்லாஹ்வின் மீது ஆணையாக! இவ்விரு (நபிமார்களு)ம் அம்புகள் மூலமாகக் குறி பார்ப்பவர்களாக ஒருபோதும் இருந்ததில்லை என்பதை இதைச் செய்தவர்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள்'' என்று கூறிவிட்டுக் கஅபாவில் நுழைந்தார்கள். அதன் ஓரங்களில் (நின்று) தக்பீர் கூறினார்கள் அதில் தொழவில்லை.

பகுதி 55

(தவாஃபில்) தோள்களைக் குலுக்கியவாறு ஓடுவது எவ்வாறு துவங்கியது?

1602. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் தோழர்களுடன் (மக்காவுக்கு) வந்தபோது, 'யத்ரிபின் ஜுரத்தால் (மதீனாவில் தோன்றிய காய்ச்சலால்) பலவீனப்பட்ட நிலையில் இவர்கள் வந்துள்ளனர்' என்று இணைவைப்போர் பேசிக் கொண்டனர். அப்போது (பலவீனப்படவில்லை எனக் காட்டுவதற்காக) நபி(ஸல்) அவர்கள் மூன்று சுற்றுக்கள் தோள்களைக் குலுக்கியவாறு ஓட வேண்டும் என்றும் ஹஜருல் அஸ்வதுக்கும் ருக்னுல் யமானிக்கும் இடையே நடந்து செல்ல வேண்டும் என்றும் கட்டளையிட்டார்கள். தவாஃபின் மொத்தச் சுற்றுக்களிலும் தோள்களைக் குலுக்கியவாறு ஓட வேண்டும் என இரக்கத்தின் காரணமாகவே நபி(ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லை.

பகுதி 56

மக்காவிற்கு வந்ததும் முதல் தவாஃபில் ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவதும் மூன்று சுற்றுக்கள் தோள்களைக் குலுக்கி ஓடுவதும்.

1603. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மக்காவிற்கு வந்து, முதலாவது தவாஃபில் ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவார்கள். ஏழு சுற்றுக்களில் முதல் மூன்று சுற்றில் (தோள்களைக் குலுக்கி) வேகமாக ஓடுவார்கள்.

பகுதி 57

ஹஜ்ஜிலும் உம்ராவிலும் தோள்களைக் குலுக்கியவாறு ஓடுவது.

1604. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜிலும் உம்ராவிலும் முதல் மூன்று சுற்றுக்களில் ஓடுவார்கள் (மீதமுள்ள) நான்கு சுற்றுக்களில் நடந்து செல்வார்கள்.

1605. அஸ்லம் அறிவித்தார்.

உமர்(ரலி) ஹஜருல் அஸ்வதை நோக்கி, 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ சுல்தான் உன்னால் எந்த நன்மையோ தீமையோ செய்ய முடியாது என்பதை நானறிவேன் நபி(ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் பார்க்கவில்லை என்றால் நிச்சயமாக நான் முத்தமிட்டிருக்க மாட்டேன்' எனக் கூறிவிட்டு அதை முத்தமிட்டார். பிறகு 'நாம் ஏன் இப்போது தோள்களைக் குலுக்கியவாறு ஓட வேண்டும்? நாம் அன்று செய்தது நம்முடைய பலத்தை முஷ்ரிகீன்களுக்குக் காட்டுவதற்காகத்தானே. ஆனால் இன்று அல்லாஹ் அவர்களை அழித்துவிட்டான். பிறகு ஏன் செய்ய வேண்டும்?' எனக் கூறிவிட்டு, 'எனினும், இதை நபி(ஸல்) அவர்கள் செய்தார்கள். அதனைவிட்டுவிட நாம் விரும்பவில்லை' எனக் கூறினார்கள்.

1606. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

''நெரிசலுள்ள நேரத்திலும் நெரிசலற்ற நேரத்திலும் நபி(ஸல்) அவர்கள் ஹஜருல் அஸ்வத் ருக்னுல் யமானீ ஆகிய இரண்டு மூலைகளையும் முத்தமிட்டதைப் பார்த்ததிலிருந்து நானும் இவ்விரண்டு மூலைகளையும் முத்தமிடுவதைவிட்டதில்லை.''

''இப்னு உமர்(ரலி) அவ்விரு மூலைகளுக்கிடையே நடந்து செல்வாரா?' என நாஃபிஉ(ரஹ்) அவர்களிடம் கேட்டபோது, 'முத்தமிடுவதற்கு எளிதாக இருக்கும் என்பதற்காக நடந்துதான் செல்வார்' எனக் கூறினார்'' என்று உபைதுல்லாஹ் அறிவித்தார்.

பகுதி 58

தலை வளைந்த கம்பின் மூலம் ஹஜருல் அஸ்வதைத் தொடுதல்.

1607. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் தம் இறுதி ஹஜ்ஜில் ஒட்டகத்தின் மீதமர்ந்து வலம்வந்தார்கள். அப்போது தலை வளைந்த கம்பால் ஹஜருல் அஸ்வதைத் தொட்டார்கள்.

பகுதி 59

ஹஜருல் அஸ்வத், ருக்னுல் யமானீ ஆகிய இரண்டு மூலைகள் தவிர மற்ற இரண்டு மூலைகளை தொடாதிருத்தல்.

1608. அம்ர் இப்னு தீனார்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

''கஅபாவில் எந்தப் பகுதியையும் யார் (முத்தமிடாமல்) தவிர்க்க முடியும்? முஆவியா(ரலி) எல்லா மூலைகளையும் முத்தமிடுபவராக இருந்தார்கள்'' என்று அபூ ஷஅஸா கூறினார். முஆவியா(ரலி) அவர்களிடம் இப்னு அப்பாஸ்(ரலி), '(ஹஜருல் அஸ்வத், ருக்னுல் யமானீயைத் தவிரவுள்ள) இந்த இரண்டு மூலைகளை முத்தமிடக் கூடாது'' என்றார்கள். அதற்கு அபூ ஷஅஸா 'இந்த ஆலயத்தில் முத்தமிடத் தடுக்கப்பட்ட பகுதி ஏதுமில்லை'' என்றார். இப்னுஸ் ஸுபைர்(ரலி) எல்லா மூலைகளையும் முத்தமிடுவார்கள்.

1609. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

''ஹஜருல் அஸ்வத், ருக்னுல் யமானீ ஆகிய இரண்டு மூலைகளைத் தவிர இந்த ஆலயத்தில் எந்த இடத்தையும் நபி(ஸல்) அவர்கள் முத்தமிட்டதை நான் பார்த்ததில்லை.''

பகுதி 60

ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவது.

1610. அஸ்லம் அறிவித்தார்.

ஹஜருல் அஸ்வத் (எனும் கருப்பு நிறக்) கல்லை உமர்(ரலி) முத்தமிடுவதை பார்த்தேன். அப்பொழுது அவர்கள், 'நபி(ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் கண்டிராவிட்டால், நான் உன்னை முத்தமிட்டிருக்க மாட்டேன்!'' என்று கூறினார்கள்.

1611. ஸுபைர் இப்னு அரபி அறிவித்தார்.

ஒருவர் இப்னு உமர்(ரலி) அவர்களிடம் வந்து ஹஜருல் அஸ்வத் (எனும் கருப்பு நிறக்) கல்லை முத்தமிடுவதைப் பற்றிக் கேட்டதற்கு இப்னு உமர்(ரலி), 'நான், நபி(ஸல்) அவர்கள் அதைத் தொட்டு முத்தமிடக் கண்டேன்!' எனக் கூறினார்கள். அப்போது நான், 'கூட்டம் அதிகமாக இருந்தாலும், நாம் அதனை நெருங்க முடியாது என்றாலும் முத்தமிட வேண்டும் என நீங்கள் கருதுகிறீர்களா?' எனக் கேட்டேன். அதற்கவர்கள், 'கருதுகிறீர்களா, நினைக்கிறீர்களா என்பதையெல்லாம் (உன்னுடைய ஊராகிய) யமனில் வைத்துக் கொள்! நான் நபி(ஸல்) அவர்கள் அதைத் தொட்டு முத்தமிடக் கண்டேன்!'' என (மீண்டும்) கூறினார்கள்.

பகுதி 61

ஹஜருல் அஸ்வதிற்கு நேராக வரும்போது சைகை செய்வது.

1612. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

''நபி(ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீதமர்ந்து கஅபாவை வலம்வந்தார்கள் ஹஜருல் அஸ்வதின் பக்கம் வரும் போதெல்லாம் சைகை செய்தார்கள்.''

பகுதி 62

ஹஜருல் அஸ்வதின் அருகில் தக்பீர் கூறுவது:

1613. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

''நபி(ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீதமர்ந்து கஅபாவை வலம்வந்தார்கள். ஹஜருல் அஸ்வதின் பக்கம் வரும்போதெல்லாம் தம்மிடம் இருந்த ஏதோ ஒரு பொருளைக் கொண்டு ஹஜருல் அஸ்வதை நோக்கிச் சைகை செய்துவிட்டு 'அல்லாஹு அக்பர்' 'அல்லாஹ் மிகப் பெரியவன்' என்று கூறினார்கள்.''

பகுதி 63

மக்காவிற்கு வந்தவர் தம் இருப்பிடத்திற்குச் செல்வதற்கு முன்னால் வலம்வந்து, இரண்டு ரக்அத் தொழுது, பிறகு ஸஃபாவிற்குச் செல்வது.

1614 / 1615. உர்வா இப்னு ஸுபைர்(ரலி) அறிவித்தார்.

''நபி(ஸல்) அவர்கள் மக்கா வந்தவுடன் முதல் வேலையாக உளுச் செய்து, 'தவாஃப் உளு'ச் செய்து, வலம்வந்தார்கள். அது (வெறும்) உம்ராவாக இருக்கவில்லை. அபூ பக்ர்(ரலி), உமர்(ரலி) ஆகியோரும் இது போன்றே ஹஜ் செய்தார்கள்'' என்று ஆயிஷா(ரலி) கூறினார்.

''நான் என் தந்தை ஸுபைர்(ரலி) அவர்களுடன் ஹஜ் செய்தேன். அவரும் முதன்முதலாக வந்தார். முஹாஜிரீன்களும் அன்ஸாரிகளும் இவ்வாறு செய்ததையே பார்த்தேன். மேலும் 'நானும், என் சகோதரியும், தந்தை ஸுபைரும், இன்னாரும், இன்னாரும் உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்தோம். நாங்கள் ஹஜருல் அஸ்வதைத் தொட்ட பின் இஹ்ராமிலிருந்து விடுபட்டோம்'' என்று என் தாய் (அஸ்மா) கூறினார்.

1616. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்காகவோ உம்ராவுக்காகவோ வந்தால் முதன்முதலாக தவாஃப் செய்வார்கள்.  அதில் முதல் மூன்று சுற்றுக்களில் விரைந்து ஓடுவார்கள் பிந்திய நான்கு சுற்றுக்களில் நடப்பார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு, ஸஃபா, மர்வாவிற்கு மத்தியில் ஓடுவார்கள்.

1617. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் முதல் வலம்வரும்போது முதல் மூன்று சுற்றுக்களில் ஓடுவார்கள். பிந்திய நான்கு சுற்றுக்களில் நடப்பார்கள். மேலும் ஸஃபா, மர்வாவுக்கிடையே உள்ள நீரோடைப் பகுதியில் மட்டும் விரைந்து ஓடுவார்கள்.

பகுதி 64

பெண்கள் ஆண்களோடு வலம்வருவது

1618. இப்னு ஜுரைஜ் அறிவித்தார்.

பெண்கள் ஆண்களோடு வலம்வருவதை இப்னு ஹிஷாம் தடுத்தது பற்றி நான் அதாவிடம் கூறியபோது, 'அவர் எப்படித் தடுக்கலாம்? நபி(ஸல்) அவர்களின் மனைவியர்கள் ஆண்களோடு வலம்வந்துள்ளனரே!'' என அதா கூறினார். அதற்கு நான் 'இ(வ்வாறு செய்த)து ஹிஜாபின் சட்டம் அருளப்படுவதற்கு முன்னரா அல்லது பின்னரா?' எனக் கேட்க, அவர் 'ஆம்! என் வாழ்நாளின் (அதிபதி) மீது சத்தியமாக! ஹிஜாபுடைய சட்டம் அருளப்பட்டதற்குப் பின்னரே இந்நிகழ்ச்சியை கண்டேன்!'' என்றார். மீண்டும் நான் 'அது எப்படி? பெண்கள் ஆண்களோடு (ஒருவரோடொருவர்) கலந்து விடுவார்களோ?' என்று கேட்டேன். அதற்கு, 'கலந்து விட மாட்டார்கள் ஆயிஷா(ரலி) ஆண்களோடு கலக்காமல் ஓரமாக வலம்வருவார்கள் அப்போது ஒரு பெண், 'இறைநம்பிக்கையாளர்களின் தாயே! நடங்கள்! நாம் சென்று ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவோம்!' என்றார். அதற்கு ஆயிஷா(ரலி), 'நீ போ(ய் முத்தமிடு)!' என்றார்கள். அப்பெண் செல்ல மறுத்துவிட்டார். இரவிலும் பெண்கள் தம்மைத் திரையிட்டு மறைத்துக் கொண்டு சென்று ஆண்களோடு வலம்வருவார்கள், ஆனால், பெண்கள் கஅபாவினுள் நுழைய நாடினால், உள்ளே இருக்கும் ஆண்கள் வெளியேறும் வரை அதற்காகக் காத்திருப்பார்கள் நானும் உபைத் இப்னு உமைரும் ஆயிஷா(ரலி) அவர்களைச் சந்திப்போம் அப்போது அவர் ஸபீர் எனும் மலையின் நடுப்பகுதியில் தங்கியிருந்தார்'' என்று அதா கூறினார். நான் அதாவிடம் 'அவர்களின் ஹிஜாப் (தம்மைத் திரையிட்டு மறைத்துக் கொள்ளும் முறை) எப்படி இருந்தது?' எனக் கேட்டேன். 'ஆயிஷா(ரலி), துருக்கி நாட்டுத் துணியாலான ஒரு கூடாரத்தில் இருந்தார்கள். அதில் ஒரு திரை தொங்கவிடப்பட்டிருந்தது. எங்களுக்கும் அவர்களுக்கும் மத்தியில் அதைத் தவிர வேறொன்றும் இல்லை. மேலும், ஆயிஷா(ரலி) ரோஜாப்பூ நிறமுள்ள ஆடை அணிந்திருந்ததை பார்த்தேன்'' எனக் கூறினார்.

1619. உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.

(ஒரு முறை) 'நான் நோயுற்றுள்ளேன்'' என்று நபி(ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். அதற்கவர்கள், 'நீ மக்களுக்குப் பின்னால் வாகனத்தில் அமர்ந்து வலம்வா'' என்றார்கள். நான் அது போன்றே வலம்வந்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'அத்தூர்' எனும் அத்தியாயத்தை ஓதியவாறு கஅபாவின் ஒரு பக்கத்தில் தொழுது கொண்டிருந்தார்கள்.

பகுதி 65

வலம்வரும்போது பேசுவது

1620. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் கஅபாவை வலம்வந்து கொண்டிருந்தபோது, அவர்களுக்கு அருகே ஒருவர் தம் கையை ஒட்டக வாரினாலோ, கயிற்றினாலோ, வேறு ஏதோ ஒன்றினாலோ மற்றொருவரின் கையோடு இணைத்துக் கட்டிக் கொண்டு (வலம்வந்த வண்ணம்) சென்றார். உடனே நபி(ஸல்) அவர்கள் அதைத் தம் கையால் துண்டித்துவிட்டு 'இவருடைய கையைப் பிடித்துக் கூட்டிச் செல்லும்!'' என்று அந்த மற்றொருவரிடம் கூறினார்கள்.

பகுதி 66

ஒருவர் (ஒட்டக) வாரையோ அல்லது வெறுக்கத் தக்க வேறு ஏதாவதொன்றையோ பார்த்தால் அதைத் துண்டித்து விடுவது.

1621. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

ஒருவர் தம் கையில் (ஒட்டக) வாரையோ (சேணக் கச்சையோ) அல்லது வேறு ஏதோ ஒன்றையோ கட்டியவராக வலம்வருவதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் அதனைத் துண்டித்தார்கள்.

பகுதி 67

கஅபாவை நிர்வாணமாக வலம்வரக் கூடாது இணைவைப்பவர்கள் ஹஜ் செய்வது கூடாது.

1622. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஹஜ்ஜத்துல் வதாவுக்கு முந்தைய வருடம் நபி(ஸல்) அவர்கள் அபூ பக்ர்(ரலி) தலைமையில் மக்களை ஹஜ்ஜுக்கு அனுப்பி வைத்தார்கள். துல்ஹஜ் பிறை பத்தாம் நாள், 'எச்சரிக்கை! இந்த ஆண்டிற்குப் பின்னர் இணைவைப்பவர்கள் யாரும் ஹஜ் செய்யக்கூடாது. கஅபாவை நிர்வாணமாகத் வலம்வரக் கூடாது' என அறிவிக்கச் செய்தார்கள்.

பகுதி 68

வலம்வந்தவாறே (தொழுகைக்கு) நின்று விடுதல்.

ஒருவர் வலம்வரும்போது தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டால் அல்லது அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டால் தொழுகை முடிந்து ஸலாம் கொடுத்தவுடன்விட்ட இடத்திலிருந்து தவாஃபைத் தொடர வேண்டும் என அதா கூறுகிறார்.

இப்னு உமர்(ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு அபூ பக்ர்(ரலி) ஆகியோரும் இவ்வாறு கூறினார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பகுதி 69

நபி(ஸல்) அவர்கள் ஏழுசுற்று சுற்றியதற்குப் பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்.

இப்னு உமர்(ரலி) ஒவ்வொரு ஏழு சுற்றிற்கும் இரண்டு ரக்அத் தொழுவார்கள் என நாஃபிவு கூறுகிறார்.

'வலம்வந்தபின் கடமையான தொழுகை தொழுதால், அது தவாஃபின் இரண்டு ரக்அத்களுக்குப் போதுமாகும் என அதா கூறுவதாக நான் ஸுஹ்ரீயிடம் கூறினேன். அதற்கு அவர் 'நபிவழியே சிறந்தது நபி(ஸல்) அவர்கள், ஒவ்வொரு ஏழு சுற்றுக்குப் பிறகும் இரண்டு ரக்அத்கள் தொழாமலிருந்ததில்லை' என்றார்' என இஸ்மாயீல் இப்னு உமய்யா கூறுகிறார்.

1623 / 1624 அம்ர் அறிவித்தார்.

உம்ராச் செய்யும் மனிதன் ஸஃபா, மர்வாவுக்கு மத்தியில் ஓடுவதற்கு முன்னால் தன் மனைவியோடு கூடலாமா? என இப்னு உமர்(ரலி) அவர்களிடம் கேட்டோம். 'நபி(ஸல்) அவர்கள் மக்கா வந்தபோது கஅபாவை ஏழு முறை சுற்றினார்கள் பிறகு மகாமு இப்ராஹீமுக்குப் பின்னால் இரண்டு ரக்அத் தொழுதுவிட்டு, ஸஃபா, மர்வாவிற்கு இடையில் ஓடினார்கள்' என்று கூறிவிட்டு, இப்னு உமர்(ரலி) 'உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உள்ளது'' என்ற வசனத்தை ஓதினார்.

நான் இதே கேள்வியை ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு, 'ஸஃபா, மர்வாவுக்கு இடையில் ஓடுவதற்கு முன்னால் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொள்ளக்கூடாது'' என அவர்கள் பதிலளித்தார்கள்.

பகுதி 70

ஒருவர் முதலாம் வலம்வந்துவிட்டு பிறகு அரஃபாவுக்குச் சென்று திரும்பும் வரை கஅபாவிற்குச் செல்லாமலும் வலம்வராமலும் இருப்பது.

1625. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

''நபி(ஸல்) அவர்கள் மக்கா வந்தபோது வலம்வந்தார்கள் ஸஃபா மர்வாவிற்கு இடையில் ஓடினார்கள். இந்தத் வலம் வருவதற்குப் பின்னால் அரஃபாவிலிருந்து திரும்பும் வரை கஅபாவிற்குச் செல்லவில்லை.''

பகுதி 71

பள்ளிவாசலுக்கு வெளியே, தவாஃபிற்கான இரண்டு ரக்அத்கள் தொழுதல்.

ஹரமுக்கு வெளியே உமர்(ரலி) தொழுதிருக்கிறார்கள்.

1626 உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (தம் ஹஜ்ஜை முடித்து) மக்காவிலிருந்து புறப்பட நாடினார்கள். வலம்வராத நிலையில் நானும் புறப்பட ஆயத்தமானேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'ஸுப்ஹுத் தொழுகைக்காக இகாமத் - சொல்லப்பட்டவுடன் மக்கள் தொழுது கொண்டிருக்கும்போது நீ ஒட்டகத்தின் மீதமர்ந்து வலம்வந்து கொள்' எனக் கூறினார்கள். அவ்வாறே செய்தேன். இதனால் (இரண்டு ரக் அத்களை) பள்ளிக்கு வெளியே வந்த பிறகே தொழுதேன்.''

பகுதி 72

மகாமு இப்ராஹீமுக்குப் பின்னால் நின்று தவாஃபுடைய இரண்டு ரக்அத்கள் தொழுதல்

1627. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மக்கா வந்தபோது கஅபாவை ஏழு முறை வலம் வந்தார்கள். பிறகு மகாமு இப்ராஹீமுக்குப் பின்னால் இரண்டு ரக்அத் தொழுதார்கள். பிறகு ஸஃபாவி(ல் ஓடுவத)ற்காகப் புறப்பட்டார்கள். 'நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரியுள்ளது'' என இறைவன் கூறுகிறான்.

பகுதி 73

ஸுப்ஹு அல்லது அஸர் தொழுகைக்குப் பின்னால் வலம்வருவது.

இப்னு உமர்(ரலி) சூரியன் உதிப்பதற்கு முன்னால் தவாஃபின் இரண்டு ரக்அத்களைத் தொழுதார்.

உமர்(ரலி) ஸுப்ஹுத் தொழுகைக்குப் பின்னால் (வலம்வந்துவிட்டு) ஃதூத்துவாவில் சென்று தவாஃபுடைய இரண்டு ரக்அத்கள் தொழுபவராக இருந்தார்.

1628. உர்வா அறிவித்தார்.

சிலர் ஸுப்ஹுத் தொழுகைக்குப் பின்னர் வலம்வந்துவிட்டு, மார்க்கப் பிரசங்கம் செய்பவரிடம் போய் அமர்ந்துவிட்டார்கள். பிறகு சூரியன் உதயமானபோது எழுந்து (தவாஃபுடைய இரண்டு ரக்அத்) தொழுதார்கள்.

ஆயிஷா(ரலி), பிரசங்கத்தில் அமர்ந்தவர்களைக் குறித்து, 'இவ்வளவு நேரம் உட்கார்ந்திருந்துவிட்டு, தொழுவது வெறுக்கப்படும் நேரத்தில் எழுந்து தொழுகிறார்களா?' எனக் கண்டித்தார்கள்.

1629. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

சூரியன் உதிக்கும் போதும் மறையும் போதும் தொழுவதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்ததை நான் செவியுற்றிருக்கிறேன்.

1630. அப்துல் அஸீஸ் இப்னு ருஃபை(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

''அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி), ஸுப்ஹுக்குப் பின்னர் வலம்வந்துவிட்டு இரண்டு ரக்அத்கள் தொழுவதை கண்டேன்.''

1631. அப்துல் அஸீஸ் அறிவித்தார்.

அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) அதாவது அஸருக்குப் பின்னும் இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு, 'நபி(ஸல்) அவர்கள் என் வீட்டில் நுழையும்போதெல்லாம் இந்த இரண்டு ரக்அத்கள் தொழாமல் இருந்ததில்லை'' என ஆயிஷா(ரலி) கூறினார் என்றும் அறிவித்தார்கள்.

பகுதி 74

நோயாளி வாகனத்தில் அமர்ந்து தவாஃப செய்யலாம்.

1632. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீதமர்ந்து கஅபாவை வலம்வந்தார்கள். ஹஜருல் அஸ்வதின் பக்கம் வரும்போதெல்லாம் தம் கையிலுள்ள ஏதேனும் ஒன்றைக் கொண்டு ஹஜ்ருல் அஸ்வதை நோக்கிச் சைகை செய்துவிட்டுத் தக்பீரும் கூறுவார்கள்.

1633. உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.

''நான் நோயுற்றுள்ளேன்!'' என்று நபி(ஸல்) அவர்களிடம் நான் முறையிட்டேன். அதற்கவர்கள் 'நீ மக்களுக்குப் பின்னால் வாகனத்தில் அமர்ந்து வலம்வா!'' என்றார்கள். நான் அது போன்றே வலம்வந்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'அத்தூர்'' எனும் அத்தியாயத்தை ஓதியவாறு கஅபாவின் ஒரு பகுதியில் தொழுது கொண்டிருந்தார்கள்.

பகுதி 75

ஹாஜிகளுக்குத் தண்ணீர் வினியோகித்தல்.

1634. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

அப்பாஸ் இப்னு அப்தில் முத்தலிப்(ரலி). (ஹாஜிகளுக்குத்) தண்ணீர் வினியோகிப்பதற்காக மினாவுடைய இரவுகளில் மக்காவில் தங்கிக் கொள்ள, நபி(ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார்கள். அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள்.

1635. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் தண்ணீர் வழங்கும் இடத்திற்கு வந்து தண்ணீர் கேட்டார்கள். அப்போது அப்பாஸ்(ரலி) (தம் மகன்) ஃபள்ல்(ரலி) அவர்களிடம் 'ஃபள்லே! நீ உன் தாயிடம் சென்று அவர்களிடமுள்ள தண்ணீரை எடுத்து வந்து நபி(ஸல்) அவர்களுக்குக் கொடு!'' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'இந்தத் தண்ணீரையே எனக்குக் கொடுங்கள்!'' எனக் கேட்க, அப்பாஸ்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! மக்கள் தங்கள் கரங்களை இதனுள் போடுகிறார்கள்'' என்று கூறினார்கள். இறுதியாக அதிலிருந்தே தண்ணீர் குடித்துவிட்டு, ஸம்ஸம் கிணற்றிற்கு வந்தார்கள். அங்கு சிலர், தண்ணீர் வழங்கும் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அவர்களிடம், 'செய்யுங்கள்! நீங்கள் நல்ல வேலையில் ஈடுபட்டுள்ளீர்கள்!' எனக் கூறிவிட்டு 'மக்கள் உங்களை மிகைத்துவிட மாட்டார்கள் என்றிருந்தால் ஒட்டகத்திலிருந்து இறங்கி நான் இதில் தண்ணீரைச் சுமப்பேன்'' என்று தம் தோளின் பக்கம் சைகை செய்து கூறினார்கள்.

பகுதி 76

ஸம் ஸம்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

''நான் மக்காவில் இருக்கும்போது என்னுடைய (வீட்டுக்) கூரை திறக்கப்பட்டது. (அதன் வழியாக) ஜிப்ரீல்(அலை) இறங்கி என்னுடைய நெஞ்சைப் பிளந்தார். பிறகு அதை ஸம் ஸம் நீரால் கழுவினார். பிறகு ஈமானும் ஞானமும் நிரம்பிய தங்கத் தட்டு ஒன்றைக் கொண்டு வந்து, அதிலுள்ளதை என் நெஞ்சில் நிரப்பி, நெஞ்சை மூடினார். பிறகு என்கையைப் பிடித்து முதல் வானத்திற்கு ஏற்றிச் சென்றார். முதல் வானத்தின் காவலரிடம், 'திறப்பீராக,!' என்றார். 'தட்டுவது யார்?' என அக்காவலர் கேட்க 'ஜிப்ரீல்' என்று ஜிப்ரீல் கூறினார்.

1637. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நான் நபி(ஸல்) அவர்களுக்கு ஸம்ஸம் தண்ணீர் கொடுத்தேன். அதை அவர்கள் நின்று கொண்டு குடித்தார்கள்.

அன்றைய தினம் நபி(ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீதுதான் இருந்தார்கள் என இக்ரிமா சத்தியம் செய்து கூறுகிறார் என ஆஸிம் கூறுகிறார்.

பகுதி 77

ஒரே இஹ்ராமில் ஹஜ், உம்ராவைச் செய்பவர் வலம்வரும் முறை.

1638. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நாங்கள் இறுதி ஹஜ்ஜின்போது நபி(ஸல்) அவர்களுடன் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து, புறப்பட்டோம். நபி(ஸல்) அவர்கள், 'யாரிடம் குர்பானிப் பிராணி உள்ளதோ அவர் ஹஜ்ஜுக்கும் உம்ராவுக்கும் சேர்த்து இஹ்ராம் அணிந்து கொள்ளட்டும்! இரண்டும் நிறைவேற்றப்பட்ட பின்பே அவர் இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டும்!' எனக் கூறினார்கள். எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்த நிலையில் நான் மக்காவுக்கு வந்தேன். நாங்கள் எங்கள் ஹஜ்ஜை முடித்ததும் நபி(ஸல்) அவர்கள் என்னை (என்னுடைய சகோதரர்) அப்துர் ரஹ்மான்(ரலி) அவர்களுடன் தன்யீம் என்ற இடத்துக்கு அனுப்பி வைத்தார்கள். நான் (அங்கு போய்) உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'இதுவே உன் (விடுபட்ட) உம்ராவுக்குப் பகரமாகும்' எனக் கூறினார்கள். உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்தவர்கள் வலம்வந்தார்கள். ஆனால், ஹஜ்ஜையும், உம்ராவை சேர்த்துச் செய்தவர்கள் ஒரே வலம்தான்வந்தார்கள்.

1639. நாஃபிவு அறிவித்தார்.

இப்னு உமர்(ரலி) அவர்களிடம் அவர்களின் மகன் அப்துல்லாஹ் இப்னு அப்தில்லாஹ் வந்தார். இப்னு உமர்(ரலி) ஹஜ்ஜுக்குச் செல்ல வாகனம் வீட்டில் தயாராக இருந்த நிலையில், அப்துல்லாஹ் 'நிச்சயமாக, இவ்வருடம் மக்களுக்கிடையே போர் ஏற்படும் என்று நான் அஞ்சுகிறேன் எனவே, உங்களை மக்கள் கஅபாவுக்குச் செல்லவிடாமல் தடுப்பார்கள். அதனால் நீங்கள் (ஹஜ்ஜுக்குப் போகாமல்) இங்கேயே தங்கிவிட்டால் நல்லது' எனக் கூறினார். அதற்கு இப்னு உமர்(ரலி), 'நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்காகப் புறப்பட்டபோது கஅபாவுக்குச் செல்ல விடாமல் குறைஷிகளில் இறைமறுப்பாளர்கள் அவர்களைத் தடுத்தனர். எனவே, நான் கஅபாவிற்குச் செல்லவிடாமல் தடுக்கப்பட்டாலும் நபி(ஸல்) அவர்கள் (அன்று) செய்ததைப் போன்றே நானும் செய்வேன். உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி உள்ளது. நான் ஹஜ்ஜுக்கும் உம்ராவுக்கும் சேர்த்தே இஹ்ராம் அணிகிறேன் என்பதற்கு உன்னையே சாட்சியாக்குகிறேன்'' என்று கூறினார்கள். பிறகு இப்னு உமர்(ரலி) மக்காவுக்குச் சென்று (ஹஜ், உம்ரா) இரண்டிற்கும் சேர்த்து ஒரேயொரு தவாஃப செய்தார்கள்.

1640. நாஃபிவு(ரஹ்) அறிவித்தார்.

இப்னு ஸுபைர்(ரலி) அவர்களுடன் ஹஜ்ஜாஜ் போரிட்ட ஆண்டில், இப்னு உமர்(ரலி) ஹஜ் செய்ய நாடினார்கள். அப்போது அவர்களிடம் 'மக்களிடையே போர் மூண்டுள்ளது. எனவே, உங்களை ஹஜ் செய்ய விடாமல் அவர்கள் தடுப்பார்கள் என நாங்கள் அஞ்சுகிறோம்' எனக் கூறப்பட்டது. உடனே அவர்கள், 'அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன் மாதிரி உள்ளது! எனவே, அந்த நேரத்தில் நபி(ஸல்) அவர்கள் செய்ததைப் போன்றே நானும் செய்வேன். நான் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து விட்டேன் என்பதற்கு உங்களையே சாட்சியாக்குகிறேன்' எனக் கூறினார்கள். பின்னர் புறப்பட்டு பைதா என்னுமிடத்திற்கு வெளியே வந்ததும் 'ஹஜ்ஜின் நிலையும் உம்ராவின் நிலையும் ஒன்றே தான் (எனவே) நான் என்னுடைய உம்ராவுடன் ஹஜ்ஜுக்கும் சேர்த்தே இஹ்ராம் அணிந்துள்ளேன் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்' எனக் கூறினார்கள். மேலும் குதைத் என்னுமிடத்தில் குர்பானிக்கென்று ஒரு பிராணியை வாங்கி அதைத் தம்முடன் கொண்டு சென்றார். அதற்கு மேல் வேறெதுவும் செய்யவில்லை. யவ்முன் நஹ்ர் (துல்ஹஜ் பத்தாம் நாள்) வரை பலியிடவில்லை இஹ்ராம் அணிந்திருக்கும்போது விலக்கப்பட்டவற்றில் எதையும் செய்யவுமில்லை தலையை மழிக்கவோ (முடியைக்) குறைக்கவோ இல்லை. துல்ஹஜ் பத்தாம் நாளில்தான் (பலிப் பிராணியை) பலியிட்டுவிட்டுத் தலை முடியை மழித்தார்கள். முதலில் தாம் நிறைவேற்றிவிட்ட தவாஃபே, ஹஜ் மற்றும் உம்ரா இரண்டிற்கும் போதும் என்றும் கருதினார்கள். மேலும், 'இப்படித்தான் நபி(ஸல்) அவர்கள் செய்தார்கள்'' என்றும் கூறினார்கள்.

பகுதி 78

உளுவுடன் வலம்வருதல் (தவாஃப் செய்தல்)

1641. முஹம்மத் இப்னு அப்திர் ரஹ்மான் அறிவித்தார்.

நான், உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அவர்களிடம் (நபி(ஸல்) அவர்களின் ஹஜ் பற்றிக்) கேட்டேன். அதற்கு உர்வா(ரலி), 'நபி(ஸல்) அவர்கள் ஹஜ் செய்துள்ளார்கள். ஆயிஷா(ரலி) அதுபற்றி என்னிடம், கூறினார்: நபி(ஸல்) அவர்கள் (மக்காவுக்கு) வந்ததும் முதன் முதலாக உளுச் செய்தார்கள் பிறகு கஅபாவைத் வலம்வந்தார்கள் பிறகு உம்ராவுக்காக தனித்து வலம் வரவில்லை'.

மேலும் உர்வா, அபூ பக்ர்(ரலி) ஹஜ் செய்தார். அவரும் முதன் முதலாகக் கஅபாவைத் வலம்தான் வந்தார். பிறகு உம்ராவுக்கென்று வலம் ஏதும் வரவில்லை. உமர்(ரலி) அவ்வாறேதான் செய்தார். பிறகு உஸ்மான்(ரலி) ஹஜ் செய்தார். அவரும் முதன் முதலாகக் கஅபாவையே வலம்வந்ததைப் பார்த்தேன். அவர் உம்ராவுக்காக வலம் ஏதும் வரவில்லை. பிறகு முஆவியா(ரலி), அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) ஆகியோரும் ஹஜ் செய்துள்ளனர். என்னுடைய தந்தை ஸுபைர் இப்னு அல்அவ்வாம்(ரலி) உடன் நான் ஹஜ் செய்திருக்கிறேன். அவரும் முதன் முதலாக கஅபாவைத் வலம்வந்தார். பிறகு உம்ராவுக்காக அவர் தனியாக வலம் ஏதும் வரவில்லை. முஹாஜிர்களும் அன்ஸாரிகளும் இவ்வாறே செய்வதை பார்த்திருக்கிறேன். பிறகு உம்ராவுக்காக அவர்கள் (தவாஃபு) செய்யவில்லை. நான் கடைசியாக இப்னு உமர்(ரலி) இவ்வாறு செய்ததைப் பார்த்தேன். அவர் அந்த ஹஜ்ஜை முறித்து உம்ராவாக ஆக்கவில்லை. இதோ அவர்களிடம் இப்னு உமர்(ரலி) இருக்கத்தானே செய்கிறார். அவரிடம் அவர்கள் கேட்க மாட்டார்களா? முன் சென்வர்களில் யாரும் ஹஜ்ஜை முறித்துவிட்டு உம்ராவாக எதையும் ஆக்கவில்லை. மேலும் அவர்கள் (மக்காவில்) கால் வைத்ததும் வலம்தான் வந்தார்கள். பிறகு அவர்கள் இஹ்ராமைக் களைவதில்லை. என்னுடைய தாயாரும் என் சிறிய தாயாரும் மக்கா வந்ததும் வலம் வருவதற்கு முன்னர் எதையும் செய்வதில்லை. இஹ்ராமிலிருந்து விடுபடுவதுமில்லை' என்று கூறினார்.

1642. உர்வா இப்னு ஸுபைர் அறிவித்தார்.

என்னுடைய தாயார் அவரின் சகோதரி, (தந்தை) ஸுபைர்(ரலி) மற்றும் இன்னார் இன்னாரெல்லாம் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்தார்கள். ருக்னுல்யமானியைத் தொட்டதும் இஹ்ராமிலிருந்து விடுபட்டார்கள். இதை என்னுடைய தாயார் எனக்கு அறிவித்தார்.

பகுதி 79

ஸஃபா, மர்வாவுக்கிடையே ஓடுவது கடமை அது அல்லாஹ்வின் சின்னமாகும்.

1643. உர்வா அறிவித்தார்.

நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் 'நிச்சயமாக ஸஃபா மர்வா (என்னும் மலைகள்) அல்லாஹ்வின் அடையாளங்களில் உள்ளவை. எனவே, (கஅபா என்னும்) அவ்வீட்டை ஹஜ் அல்லது உம்ராச் செய்பவர்கள் அவ்விரண்டையும் வலம் வருவது குற்றமில்லை'' என்ற (திருக்குர்ஆன் 02:158) இறைவசனப்படி, அல்லாஹ்வின் மீது ஆணையாக! ஸஃபா வலம் வருவது குற்றமில்லை'' என்ற (திருக்குர்ஆன் 02:158) இறைவசனப்படி, அல்லாஹ்வின் மீது ஆணையாக! ஸஃபா மர்வாவுக்கிடையே வலம் வராவிட்டாலும் குற்றமில்லை என்பது பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? எனக் கேட்டேன். அதற்கு ஆயிஷா(ரலி), 'என்னுடைய சகோதரியின் மகனே! நீர் சொன்னது தவறு. அந்த வசனத்தில் அவ்விரண்டையும் வலம் வராமலிருப்பது குற்றமில்லை என்றிருந்தாலே நீர் கூறும் கருத்து வரும். ஆனால், இவ்வசனம் அன்ஸாரிகளின் விஷயத்தில் இறங்கியதாகும். அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் முன் அவர்கள் வணங்கி வந்த முஷல்லல் என்னும் குன்றிலுள்ள மனாத் என்னும் சிலைக்காக இஹ்ராம் அணியும் வழக்கம் உள்ளவர்களாக இருந்தனர். எனவே, இப்போது (இஸ்லாத்தை ஏற்றபின்) அந்த ஸஃபா, மர்வாவை வலம் வருவது பாவமாகும் எனக் கருதினார்கள். எனவே, இஸ்லாத்தை அவர்கள் ஏற்றதும் நபி(ஸல்) அவர்களிடம் இது பற்றி, இறைத்தூதர் அவர்களே! நாங்கள் ஸஃபா - மர்வாவை வலம் வருவதைப் பாவமாகக் கருதுகிறோம்? எனக் கேட்டார்கள். அப்போதுதான் அல்லாஹ், 'நிச்சயமாக ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவை'' என்ற (திருக்குர்ஆன் 02:158) வசனத்தை அருளினான். மேலும் நபி(ஸல்) அவர்கள் அவ்விரண்டுக்குமிடையே வலம் வருவதைச் செயல்படுத்திக் காட்டியுள்ளனர். எனவே, அவ்விரண்டிற்குமிடையே வலம் வருவதை விடுவதற்கு யாருக்கும் அனுமதியில்லை' எனக் கூறினார்.

ஸுஹ்ரி கூறுகிறார்:

நான் அபூ பக்ர் இப்னு அப்திர் ரஹ்மானிடம் இதுபற்றித் தெரிவித்தேன். அதற்கவர் கூறினார்: நான் கேள்விப்படாத விளக்கமாகும் இது! மனாத் எனும் சிலைக்காக இஹ்ராம் அணிவார்கள் என்று ஆயிஷா(ரலி) குறிப்பிட்டவர்களைத் தவிர மற்றவர்கள் ஸஃபா மர்வாவுக்கிடையே ஓடிக் கொண்டிருந்தார்கள். குர்ஆனில் கஅபாவைத் வலம்வரவேண்டும் என்று கூறி அல்லாஹ் ஸஃபா, மர்வாவைப் பற்றிக் குறிப்பிடாததால், 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் ஸஃபா மர்வாவுக்கிடையே ஓடுகிறோம். அல்லாஹ்வோ ஸஃபாவைப் பற்றிக் கூறாமல் கஅபாவைத் வலம்வருவது பற்றிக் கூறுகிறானோ? ஸஃபா மர்வாவுக்கிடையே நாங்கள் ஓடுவது எங்களின் மீது குற்றமாகுமா?' என்று நபித்தோழர்கள் கேட்டனர். அப்போது 'ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளாகும்'' என்ற (திருக்குர்ஆன் 02:158) வசனத்தை அல்லாஹ் அருளினான் என்று பல அறிஞர்கள் கூறியதை கேட்டுள்ளேன். நான் இந்த வசனம் இரண்டு சாரார் விஷயத்தில் இறங்கியது எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு சாரார் மடமைக் காலத்தில் ஸஃபா, மர்வாவை வலம் வருவதைப் பாவமாகக் கருதியவர்கள். இன்னொரு சாரார் ஏற்கெனவே அவ்வாறு வலம் வந்து கொண்டிருந்து இஸ்லாத்தில் நுழைந்த பின்பு அல்லாஹ் கஅபாவைப் பற்றிக் குறிப்பிட்ட பின்பும் ஸஃபாவைக் குறிப்பிடாமல் கஅபாவை மட்டும் வலம் வருமாறு கூறியதால் இப்போது அவ்விரண்டையும் வலம் வருவது பாவமாகுமோ எனக் கருதியவர்கள்.

பகுதி 80

ஸஃபா மர்வாவிற்கிடையே ஓடுதல்.

இந்த ஒட்டம் பனூ அப்பாதின் வீட்டிற்கும் பனூ அபீ ஹுஸைனின் வீட்டிற்குமிடையேயாகும் என்று இப்னு உமர்(ரலி) கூறினார்.

1644. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள், முதல் வலம்வரும்போது மூன்று சுற்றுக்களில் வேகமாக ஓடுவார்கள் நான்கு சுற்றுக்களில் நடப்பார்கள். மேலும், ஸஃபா - மர்வாவுக்கிடையே வலம்வரும்போது ஓடைப் பகுதியில் மட்டும் ஓடுவார்கள்.

உபைதில்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறினார்:

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) (தவாஃபின் போது) ருக்னுல் யமானியை அடைந்ததும் நடந்து தானே செல்வார்கள்? என நாஃபிவு இடம் கேட்டேன். அதற்காகவா 'ருக்னுல் யமானியில் ஜன நெருக்கடி ஏற்பட்டாலே தவிர அவர் நடந்து செல்லமாட்டார் ஏனெனில் அவர் ருக்னுல் யமானியைத் தொட்டு முத்தமிடாமல் விடுவதில்லை'' எனக் கூறினார்.

1645 / 1646. அம்ர்ப்னு தீனார்(ரஹ்) அறிவித்தார்.

''ஒருவர் உம்ரா செய்யும்போது இறையில்லம் கஅபாவை வலம் வந்துவிட்டார் ஸஃபா மர்வாவுக்கிடையே சஃயு செய்யவில்லை. இந்நிலையில் அவர் தம் மனைவியுடன் உறவு கொள்ளலாமா?' என இப்னு உமர்(ரலி) அவர்களிடம் நாங்கள் கேட்டோம். அதற்கு 'நபி(ஸல்) அவர்கள் (மக்காவுக்கு) வந்தபோது இறையில்லம் கஅபாவை ஏழு முறை வலம் வந்தார்கள். பிறகு மகாமு இப்ராஹீமில் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள் பிறகு ஸஃபா மர்வாவுக்கிடையே ஏழு முறை சஃயு செய்தார்கள் அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி உள்ளது!' என இப்னு உமர்(ரலி) கூறினார்.

இது பற்றி ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்களிடம் கேட்டோம். அதற்கவர்கள், 'ஸஃபா மர்வாவுக்கிடையே சஃயு செய்யாமல் மனைவியிடம் நெருங்கவே (தாம்பத்திய உறவு கொள்ளவே) கூடாது' என்றார்கள்.

1647. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மக்காவுக்கு வந்தபோது, இறையில்லம் கஅபாவை வலம் வந்த பின் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்பு ஸஃபா மர்வாவுக்கிடையே ஓடினார்கள்.

''இதை அறிவித்த பிறகு, 'நிச்சயமாக, அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன் மாதிரி இருக்கிறது' என்னும் இறைவசனத்தை இப்னு உமர்(ரலி) ஓதினார்கள்'' என அம்ர்ப்னு தீனார்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

1648. ஆஸிம்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

''ஸஃபா, மர்வாவுக்கிடையே ஓடுவதை நீங்கள் வெறுக்கக் கூடியவர்களாக இருந்தீர்களா?' என நான் அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர், 'ஆம்! ஏனெனில் ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளாகும். எனவே, யார் ஹஜ்ஜோ உம்ராவோ செய்கிறார்களோ அவர்கள் அவ்விரண்டையும் வலம் வருவதில் எந்தக் குற்றமுமில்லை'' என்னும் (திருக்குர்ஆன் 02:158) வசனம் அருளப்படும் வரை அவ்விரண்டும் (எங்கள் பழைய நம்பிக்கைப்படி) அறியாமைக் காலச் சின்னங்களாகவே இருந்தன'' எனக் கூறினார்.

1649. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவையும் ஸஃபா மர்வாயையும் வலம் வரும்போது தொங்கோட்டம் ஓடியது இணைவைப்போருக்குத் தம் பலத்தைக் காட்டுவதற்காகத்தான்.

பகுதி 81

மாதவிடாயுள்ள பெண் ஹஜ்ஜில் இறையில்லம் கஅபாவை வலம் வருவதைத் தவிர மற்றெல்லா வழிபாடுகளையும் செய்யலாம்.

ஸஃபா, மர்வாவுக்கிடையே உளுவின்றி தொங்கோட்டம் ஓடுதல்.

1650. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

எனக்கு மாதவிடாய் வந்தபோது நான் மக்காவுக்கு வந்தேன். அப்போது நான் இறையில்லம் கஅபாவை வலம்வரவுமில்லை. ஸஃபா, மர்வாவுக்கிடையே சஃயு செய்யவுமில்லை. இதுபற்றி நபி(ஸல்) அவர்களிடம் நான் முறையிட்டபோது, அவர்கள் 'ஹஜ்ஜு செய்பவர் செய்வதைப் போன்றே நீயும் செய்! ஆயினும் நீ தூய்மையடையும் வரை இறையில்லம் கஅபாவை வலம் வராதே! எனக் கூறினார்கள்.

1651. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் மற்றும் தல்ஹா(ரலி) ஆகிய இருவரைத் தவிர வேறு யாரிடமும் குர்பானிப் பிராணி இல்லை. யமனிலிருந்து அலீ(ரலி) குர்பானிப் பிராணியுடன் வந்தார்கள். 'நபி(ஸல்) அவர்கள் எதற்காக இஹ்ராம் அணிந்தார்களோ அதற்காகவே நானும் இஹ்ராம் அணிகிறேன்'' என அவர்கள் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் பலிப்பிராணி கொண்டு வராதவர்களிடம், இதை உம்ராவாக ஆக்கிக் கொள்ளுமாறும் வலம்வந்து தலை முடியைக் குறைத்து இஹ்ராமிலிருந்து விடுபடுமாறும் கட்டளையிட்டார்கள். (மக்கள் சிலர்) 'எங்கள் இன உறுப்பில் விந்து சொட்டிக் கொண்டிருக்கும் நிலையில் (மனைவியுடன் கூடிய பின் உடனடியாக) எப்படி மினாவுக்குச் செல்வது?' என்று பேசிய செய்தி, நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியதும் அவர்கள் '(ஹஜ் மாதங்களில் உம்ரா செய்வது கூடும் என) நான் இப்போது அறிந்ததை முன்கூட்டியே அறிந்திருந்தால் பலிப்பிராணி கொண்டு வந்திருக்க மாட்டேன் நான் பலிப்பிராணியை மட்டும் என்னுடன் கொண்டு வந்திருக்கவில்லையாயின் இஹ்ராமிலிருந்து விடுபட்டிருப்பேன்' எனக் கூறினார்கள். மேலும் ஆயிஷா(ரலி) அவர்களுக்கு மாதவிடாய் வந்திருந்தது. எனவே, அவர் இறையில்லம் கஅபாவை வலம்வருவதைத் தவிர ஹஜ்ஜின் மற்றெல்லா வழிபாடுகளையும் நிறைவேற்றினார். மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்ததும் இறையில்லம் கஅபாவை வலம்வந்தார். மேலும், ஆயிஷா(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் எல்லோரும் ஹஜ்ஜையும் உம்ராவையும் நிறைவேற்றிச் செல்கிறீர்கள். நான் ஹஜ்ஜை மட்டும் நிறைவேற்றிவிட்டுச் செல்கிறேனே!' எனக் கூறியதும் நபி(ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மான் இப்னு அபீ பக்ரை ஆயிஷா(ரலி) அவர்களுடன் தன்யீம் என்ற இடத்திற்குச் செல்லுமாறு கட்டளையிட்டார்கள். ஆயிஷா(ரலி) ஹஜ் செய்த பின் உம்ராவையும் நிறைவேற்றினர்கள்.

1652. ஹஃப்ஸா(ரலி) அறிவித்தார்.

நாங்கள் (இரண்டு பெருநாள்களிலும் தொழும் இடத்திற்கு) எங்கள் குமரிப் பெண்கள் செல்வதைத் தடுத்துக் கொண்டிருந்தோம். அந்தச் சமயத்தில் ஒரு பெண் வந்து பனீகலஃப் வம்சத்தினரின் இல்லத்தில் தங்கி இருந்தார். அந்தப் பெண் 'என் சகோதரி (உம்மு அதிய்யா(ரலி), நபி(ஸல்) அவர்களின் தோழர் ஒருவரின் மனைவியாக இருந்தார் அவரின் கணவர், இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் பன்னிரண்டு போர்களில் பங்கெடுத்தார்: அவற்றில் ஆறு போர்களில் என் சகோதரியும் தன் கணவருடன் பங்கெடுத்தார். ஒரு முறை என் சகோதரி உம்மு அதிய்யா(ரலி), என்னிடம் 'நாங்கள் போர்க்களத்தில் காயமுற்றவர்களுக்கு சிகிச்சையளித்து வந்தோம் நான், நபி(ஸல்) அவர்களிடம் 'எங்களில் ஒருத்திக்கு மேலங்கி இல்லாவிட்டால் (பெருநாள் தொழுகைக்குச்) செல்லாமல் இருப்பது குற்றமா?' எனக் கேட்டேன். அதற்கு, 'அவளுடைய தோழி, தன்னுடைய (உபரியான) மேலங்கியை அவளுக்கு அணியக் கொடுக்கட்டும் அவள் நன்மையான காரியங்களிலும் இறைநம்பிக்கையாளர்களின் பிரச்சாரத்திலும் கலந்து கொள்ளட்டும்!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றார்'' என்று அறிவித்தார்.

உம்மு அதிய்யா(ரலி) (என்னிடம்) வந்தபோது, 'நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூற நீங்கள் கேட்டீர்களா?' என நாங்கள் அவரிடம் கேட்டோம். 'என்னுடைய தந்தை அர்ப்பணமாகட்டும் ஆம்!கேட்டேன்!'' என அவர் பதிலளித்தார். இவர் நபி(ஸல்) அவர்களின் பெயரைக் கூறும் போதெல்லாம் 'என்னுடைய தந்தை அர்ப்பணமாகட்டும்!'' என்பதையும் சேர்த்தே கூறுவார்.

''கன்னிப் பெண்களும், திரைக்குள் இருக்கும் (பருவமடைந்த) பெண்களும், மாதவிடாயுள்ள பெண்களும் (பெருநாள் அன்று) வெளியே சென்று நன்மையான காரியங்களிலும் முஸ்லிம்களுடைய பிரச்சாரத்திலும் பங்கு கொள்ளவார்கள். மாதவிடாயுள்ள பெண்கள் தொழும் இடத்தைவிட்டு ஒதுங்கி இருப்பார்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என்று உம்மு அதிய்யா(ரலி) கூறினார். இதைக் கேட்ட நான் 'மாதவிடாய்ப் பெண்களுமா (பெருநாள் தொழுகை நடக்கும் இடத்திற்குச் செல்வார்கள்)?' என அவரிடம் வினவினேன். அதற்கு 'மாதவிடாயுள்ள பெண் அரஃபாவுக்கு மற்ற (மினா, முஸ்தலிஃபா போன்ற) இடங்களுக்கும் செல்வதில்லையா?' என உம்மு அதிய்யா(ரலி) திருப்பிக் கேட்டார்.

பகுதி 82

மக்காவில் வசிப்போரும், (உம்ரா செய்துவிட்டு) மினாவுக்குப் புறப்படுவோரும் பத்ஹா போன்ற இடங்களிலிருந்து இஹ்ராம் அணியவேண்டும்.

மக்காவில் இருப்போர் ஹஜ்ஜுக்காக தல்பியா கூறுவது பற்றி அதா(ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர், 'இப்னு உமர்(ரலி) துல்ஹஜ் 8ஆம் நாள் லுஹர் தொழுதுவிட்டு, தம் வாகனத்தில் ஏறியமர்ந்து தல்பியா கூறுவார்கள்'' என பதிலளித்தார்.

''நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் வந்து (உம்ராவை முடித்து) இஹ்ராமிலிருந்து விடுபட்டோம். துல்ஹஜ் 8-ஆம் நாளில் மக்காவிலிருந்து புறப்பட்டு ஹஜ்ஜுக்காக தல்பியா கூறினோம்'' என ஜாபிர்(ரலி) கூறினார்.

''நாங்கள் பத்ஹாவிலிருந்து இஹ்ராம் அணிந்தோம்'' என ஜாபிர்(ரலி) கூறினார் என அபுஸ் ஸுபைர் அறிவித்தார்.

உபைத் இப்னு ஜுரைஜ், இப்னு உமர்(ரலி) அவர்களிடம், 'நீங்கள் மக்காவில் இருக்கும்போது, மக்கள் துல்ஹஜ் பிறையைப் பார்த்ததும் இஹ்ராம் அணிந்தார்கள். ஆனால் நீங்கள் மட்டும் துல்ஹஜ் 8-ஆம் நாள் வரை இஹ்ராம் அணியவில்லையே, ஏன்?' எனக் கேட்டதற்குவர்கள், 'நபி(ஸல்) அவர்கள் (மினா செல்வதற்காக, துல்ஹஜ் 8-ம் ஆம் நாள்) தம் வாகனத்தில் ஏறும் வரை அவர்கள் இஹ்ராம் அணிந்து நான் பார்த்ததில்லை'' எனக் கூறினார்கள்.

பகுதி 83

(ஹஜ்ஜுக்கு செல்வோர்) துல்ஹஜ் 8ஆம் நாள் லுஹரை எங்கே தொழுவது?

1653. அப்துல் அஸீஸ் இப்னு ருஃபை(ரஹ்) கூறினார்:

நான் அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம், நபி(ஸல்) அவர்கள் துல்ஹஜ் 8-ஆம் நாள் லுஹர், அஸ்ர் தொழுகைகளை எங்கு தொழுதார்கள் என்பதைப் பற்றித் தாங்கள் அறிந்ததை எனக்குத் தெரிவியுங்களேன் எனக் கேட்டேன். அதற்கவர் 'மினாவில்' என்றார். பிறகு நான், (ஹஜ் முடித்து மினாவிலிருந்து) திரும்பும்போது எங்கு அஸர் தொழுதார்கள் எனக் கேட்டதும் 'அப்தஹ்' எனுமிடத்தில் என்று கூறிவிட்டு, 'உம்முடைய தலைவர்கள் செய்வது போன்றே செய்வீராக!' என்றும் கூறினார்.

1654. அப்துல் அஸீஸ் அறிவித்தார்.

நான் துல்ஹஜ் 8-ஆம் நாள் மினாவுக்குப் புறப்பட்டேன். அப்போது கழுதையில் அமர்ந்து சென்று கொண்டிருந்த அனஸை(ரலி)ச் சந்தித்தேன். நான் அவரிடம் இன்றைய (துல்ஹஜ் 8-ஆம் நாள்) தினம் நபி(ஸல்) அவர்கள் எங்கு லுஹ்ர் தொழுதார்கள்? என்று கேட்டேன். அதற்கவர், 'இதோ கவனிப்பீராக!' உம்முடைய தலைவர்கள் எவ்வாறு தொழுகிறார்களோ அவ்வாறு தொழுவீராக' என்றார்.

பகுதி 84

மினாவில் தொழுதல்

1655. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களும் அபூ பக்ர்(ரலி), உமர்(ரலி) ஆகியோரும் உஸ்மான்(ரலி), தம் ஆட்சியின் ஆரம்பக் காலத்திலும் (கடமையான நான்கு ரக்அத்களை சுருக்கி) மினாவில் இரண்டு ரக்அத்களாகத் தொழுதார்கள்.

1656. ஹாரிஸா இப்னு வஹ்ப் அல்குஸாயீ(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மினாவில் எங்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தினார்கள். அந்நாளில் எப்போதுமில்லாத அளவுக்கு நாங்கள் அதிகமாகவும் இருந்தோம். எந்த அச்சமுமில்லாமலும் இருந்தோம்.

1657. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

''நான் நபி(ஸல்) அவர்களுடனும், அபூ பக்ர்(ரலி) அவர்களுடனும், உமர்(ரலி) அவர்களுடனும் (மினாவில்) (கடமையான நான்கு ரக்அத்களை சுருக்கி) இரண்டு ரக்அத்களாகத் தொழுதுள்ளேன். பின்னர் நீங்கள் அதில் குழம்பிப் போய் பல்வேறு கருத்துக்கள் கொண்டீர்கள். (நான் தொழுத) நான்கு ரக்அத்களிலிருந்து ஏற்றுக் கொள்ளப்படும் இரண்டு ரக்அத்கள் எனக்குப் போதுமே!''

பகுதி 85

அரஃபா நாளில் நோன்பு நோற்றல்.

1658. உம்முல் ஃபள்ல்(ரலி) அறிவித்தார்.

அரஃபா நாளில் நபி(ஸல்) அவர்கள் நோன்பு வைத்திருக்கிறார்களோ என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டது. எனவே, நான் நபி(ஸல்) அவர்களுக்கு பானம் அனுப்பி வைத்தேன் அதையவர்கள் குடித்தார்கள்.

பகுதி 86

மினாவிலிருந்து அரஃபாவுக்குப் புறப்பட்டதும் தல்பியாவும் தக்பீரும் கூறல்.

1659. மாலிக் அறிவித்தார்.

முஹம்மத் இப்னு அபீ பக்ர் அஸ்ஸகஃபீ, அனஸ் இப்னு மாலிக்(ரலி) இருவரும் மினாவிலிருந்து அரஃபாவுக்குப் போகும்போது முஹம்மத் இப்னு அபீ பக்ர், அனஸ்(ரலி) அவர்களிடம் 'நீங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தபோது இன்றைய தினம் என்ன செய்தீர்கள்?' எனக் கேட்டார். 'அன்று எங்களில் சிலர் தல்பியாக் கூறிக் கொண்டிருந்தனர் நபி(ஸல்) அவர்கள் அதைத் தடுக்கவில்லை. இன்னும் சிலர் தக்பீர் கூறினார்கள் அதையும் நபி(ஸல்) அவர்கள் தடுக்கவில்லை' என அனஸ்(ரலி) கூறினார்.

பகுதி 87

அரஃபா நாளில் பகல் பொழுதில் புறப்படுதல்.

1660. ஸாலிம் அறிவித்தார்.

அப்துல் மலிக்(பின் மர்வான்), ஹஜ்ஜின்போது இப்னு உமருக்கு மாற்றமாக நடந்து கொள்ள வேண்டாம் என ஹஜ்ஜாஜுக்குக் கடிதம் எழுதினார். அரஃபா நாளில் சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்தபோது இப்னு உமர்(ரலி) (ஹஜ்ஜுக்கு) வந்தார். அப்போது நானும் அவருடன் இருந்தேன். அவர் ஹஜ்ஜாஜின் கூடாரத்திற்குச் சென்று (புறப்படுமாறு) சப்தமிட்டார். உடனே ஹஜ்ஜாஜ் சாயம் பூசப்பட்ட போர்வையுடன் வெளிவந்து, 'அபூ அப்திர் ரஹ்மானே (இப்னு உமரே)! என்ன விஷயம்?' எனக் கேட்டதற்கு இப்னு உமர்(ரலி), 'நீர் நபிவழியைப் பின்பற்ற நாடினால் இங்கிருந்து புறப்பட வேண்டியது தான்' என்றார். ஹஜ்ஜாஜ் 'இப்போதேவா?' எனக் கேட்டதற்கு அவர் 'ஆம்' என்றார். ஹஜ்ஜாஜ் 'நான் இதோ குளித்துவிட்டுப் புறப்படுகிறேன் அவகாசம் கொடுங்கள்' எனக் கூறினார். இப்னு உமர்(ரலி) ஹஜ்ஜாஜ் புறப்படுவதுவரை (தம் வாகனத்தைவிட்டு) இறங்கி நின்றார். ஹஜ்ஜாஜ் எனக்கும் என்னுடைய தந்தை (இப்னு உமரு)க்குமிடையே நடந்து கொண்டிருந்தபோது நான் ஹஜ்ஜாஜிடம், நீர் நபிவழியைப் பின்பற்ற நாடினால் உரையைச் சுருக்கி, (அரஃபாவில்) தங்குவதைத் துரிதப்படுத்தும் என்றேன். உடனே அவர் அப்துல்லாஹ் இப்னு உமரைப் பார்த்தார். இப்னு உமர்(ரலி), '(ஸாலிம்) உண்மையே கூறினார்' என்றார்.

பகுதி 88

அரஃபாவில் வாகனத்திலேயே அமர்ந்திருத்தல்.

1661. உம்முல் ஃபழ்ல் பின்த் அல்ஹாரிஸ்(ரலி) அறிவித்தார்.

அரஃபா நாளில் நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருப்பது சம்பந்தமாக மக்கள் என்னிடம் சர்ச்சை செய்து கொண்டிருந்தனர். சிலர், 'நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றுள்ளார்கள்' என்றும் இன்னும் சிலர், 'இல்லை' என்றும் கூறிக் கொண்டிருந்தனர். எனவே நான் நபி(ஸல்) அவர்களுக்கு ஒரு பாத்திரத்தில் பாலைக் கொடுத்தனுப்பினேன் அவர்கள் தங்களின் ஒட்டகத்தின் மீதமர்ந்து கொண்டே அதைக் குடித்தார்கள்.

பகுதி 89

அரஃபாவில் இரண்டு வேளைத் தொழுகைகளைச் சேர்த்துத் தொழுதல்.

இப்னு உமர்(ரலி) தமக்கு இமாமுடன் சேர்ந்து தொழும் வாய்ப்புத் தவறிவிட்டாலும் இரண்டு வேளைத் தொழுகைகளைச் சேர்த்தே தொழுவார்.

1662. இப்னு ஷிஹாப் அறிவித்தார்.

இப்னுஸ் ஸுபைர்(ரலி) உடன் தாம் போர் தொடுத்த ஆண்டு ஹஜ்ஜுக்கு வந்த ஹஜ்ஜாஜ், இப்னு உமர்(ரலி) அவர்களிடம், 'அரஃபாவில் தங்கும்போது நீங்கள் எவ்வாறு செயல்பட்டீர்கள்?' எனக் கேட்டதற்கு ஸாலிம், 'நீர் நபிவழியைப் பின்பற்றநாடினால் அரஃபா நாளில் நடுப்பகலில் தொழுதுவிடுவீராக! என்றார். அப்போது இப்னு உமர்(ரலி), 'ஸாலிம் கூறியது உண்மைதான். (நபித்தோழர்கள் அரஃபாவில்) லுஹரையும் அஸரையும் நபி வழிப்படி சேர்த்தே தொழுபவர்களாக இருந்தனர்'' என்றார்.

நான் நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளார்களா? என ஸாலிமிடம் கேட்டேன். அதற்கவர், 'இந்த விஷயத்தில் நபிவழியைத் தவிர வேறு யாருடைய வழிகாட்டுதலை நீங்கள் பின்பற்றுவீர்கள் எனக் கேட்டார்.

பகுதி 90

அரஃபாவில் உரையைச் சுருக்கிக் கொள்ளல்.

1663. ஸாலிம் இப்னு அப்தில்லாஹ் அறிவித்தார்.

அப்துல் மலிக் இப்னு மர்வான், ஹஜ்ஜின்போது இப்னு உமரைப் பின்பற்றுமாறு ஹஜ்ஜாஜுக்குக் கடிதம் எழுதினார். அரஃபா நாளில் சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்தபோது இப்னு உமர்(ரலி) வந்தார். அப்போது நானும் அவருடன் இருந்தேன். அவர் ஹஜ்ஜாஜின் கூடாரத்திற்குச் சென்று 'எங்கே அவர்?' என்று சப்தமிட்டார். உடனே ஹஜ்ஜாஜ் வெளிவந்தார். இப்னு உமர்(ரலி), 'நீர் இங்கிருந்து புறப்படுவீராக!' என்றார். ஹஜ்ஜாஜ், 'இப்போதேவா? எனக் கேட்டதற்கு, 'ஆம்' என்றார். ஹஜ்ஜாஜ் 'நான் இதோ குளித்துவிட்டுப் புறப்படுகிறேன் அவகாசம் கொடுங்கள்' எனக் கூறினார். இப்னு உமர்(ரலி) ஹஜ்ஜாஜ் வரும்வரை, (தம் வாகனத்திலிருந்து) இறங்கிக் காத்திருந்தார். ஹஜ்ஜாஜ் எனக்கும் என்னுடைய தந்தை (இப்னு உமரு)க்குமிடையே நடந்து கொண்டிருந்தபோது நான், ஹஜ்ஜாஜிடம், நீர் நபிவழியைப் பின்பற்ற நாடினால் உரையைச் சுருக்கி (அரஃபாவில்) தங்குவதைத் துரிதப்படுத்தும் என்றேன். இப்னு உமர்(ரலி) '(ஸாலிம்) உண்மையே கூறினார்' என்றார்.

பகுதி 91

அரஃபாவில் தங்குதல்

1664. ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார்.

(நான் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன் ஒரு முறை) அரஃபா தினத்தில் என்னுடைய ஒட்டகம் காணாமல் போனது. அதைத் தேடி வந்தபோது நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்தில் நின்றிருந்ததைப் பார்த்தேன். அப்போது நான், இவர் (நபி(ஸல்)) குரைஷிக் குலத்தவராயிற்றே!' இவருக்கு இங்கு என்ன வேலை? என என்னுள் கூறிக் கொண்டேன். (ஏனெனில் மக்காக் குறைஷிகள் ஹரம் எல்லைக்கு வெளியே ஹஜ்ஜின் எந்தக் கிரியைகளையும் செய்வதில்லை).

1665. உர்வா அறிவித்தார்.

மடமைக் காலத்தில் மக்கள் நிர்வாணமாகவே (கஅபாவை) வலம் வந்துள்ளனர். ஹும்ஸ் கிளையார்களைத் தவிர! ஹும்ஸ் என்றால் குறைஷியர்களும் அவர்களின் சந்ததியர்களுமாவர். இந்த ஹும்ஸ் கிளையார்கள் மக்களுக்கு நற்பணி புரிபவர்களாவர். அவர்களில் ஒர் ஆண் இன்னொரு பெண்ணுக்கு, தவாஃபு செய்வதற்காக ஆடை கொடுப்பார். இந்த ஹும்ஸ் கிளையார் யாருக்கு ஆடை கொடுக்க வில்லையோ அவர் நிர்வாணமாகத் வலம்வருவார். மேலும், மக்கள் அரஃபாவிலிருந்து திரும்பி விடுவார்கள். ஆனால், குறைஷிகளோ எல்லாம் முடிந்த பின்பு முஸ்தலிஃபாவிலிருந்துதான் திரும்புவார்கள்.

'மேலும் மற்றவர்கள் திரும்புகிற (அரஃபா என்னும்) இடத்திலிருந்து நீங்களும் திரும்பிச் செல்லுங்கள்'' என்ற (திருக்குர்ஆன் 02:199) வசனம் குரைஷிகள் பற்றி இறங்கியதுதான். அவர்கள் முஸ்தலிஃபா என்னும் இடத்திலிருந்து திரும்பிச் செல்பவர்களாயிருந்தனர். எனவே, அரஃபாவிலிருந்து திரும்பிச் செல்லுமாறு திருப்பி விடப்பட்டனர். என ஆயிஷா(ரலி) கூறினார் என என்னுடைய தந்தை (ஸுபைர்) எனக்கு அறிவித்தார்.

பகுதி 92

அரஃபாவிலிருந்து திரும்பும்போது நடுத்தர(வேக)த்தில் நடத்தல்.

1666. உர்வா அறிவித்தார்.

நான் உஸாமா(ரலி)வுடன் அமர்ந்திருக்கும்போது, உஸாமாவிடம், 'கடைசி ஹஜ்ஜில் அரஃபாவிலிருந்து திரும்பிய நபி(ஸல்) அவர்களின் நடை எவ்வாறிருந்தது?' எனக் கேட்கப்பட்டது. அதற்கவர், 'நபி(ஸல்) அவர்கள் சாதாரணமாக நடப்பார்கள். (மக்கள் நெருக்கடியில்லாத) விசாலமான இடம் வந்ததும் விரைந்து நடப்பார்கள்' எனக் கூறினார்.

பகுதி 93

அரஃபாவுக்கும் முஸ்தலிஃபாவுக்குமிடையே (சற்று) ஓய்வெடுத்தல்.

1667. உஸாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் அரஃபாவிலிருந்து திரும்பும்போது ஒரு பள்ளத்தாக்கிற்குப் போய் தம் (மலஜலத்) தேவைகளை நிறைவேற்றிவிட்டு, உளுச் செய்தார்கள். அப்போது நான், இறைத்தூதர் அவர்களே! நீங்கள் தொழவா போகிறீர்கள்?' எனக் கேட்டேன். அதற்கவர்கள், 'தொழுகை உனக்கு முன்னால் (உள்ள முஸ்தலிஃபாவில்) தான்'' எனக் கூறினார்கள்.

1668. நாஃபிவு அறிவித்தார்.

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) மஃரிபையும் இஷாவையும் சேர்த்து முஸ்தலிஃபாவில் தொழுபவராக இருந்தார். ஆயினும் அவர், வழியில் நபி(ஸல்) அவர்கள் தேவையை நிறைவேற்ற ஒதுங்கிய பள்ளத்தாக்குக்குச் சென்று தம் தேவையை நிறைவேற்றி, உளுவும் செய்து முஸ்தலிஃபாவுக்கு வந்த பிறகுதான் தொழுவார்.

1669. உஸாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்.

அரஃபாவிலிருந்து திரும்பும்போது நான் வாகனத்தில் நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் இருந்தேன். நபி(ஸல்) அவர்கள் முஸ்தலிஃபாவுக்கு அருகிலுள்ள இடது புறப் பள்ளத்தாக்கை அடைந்ததும் ஒட்டகத்தை அமரச் செய்துவிட்டுச் சிறுநீர் கழித்துவிட்டுப் பிறகு வந்தார்கள். நான் அவர்களுக்கு உளுச் செய்யத் தண்ணீர் ஊற்றினேன். சுருக்கமாக உளுச் செய்தார்கள். அப்போது நான், இறைத்தூதர் அவர்களே! தொழப் போகிறீர்களா? எனக் கேட்டேன். அதற்கவர்கள் 'தொழுகை உனக்கு முன்னால் (உள்ள முஸ்தலிஃபாவில்) தான்' எனக் கூறிவிட்டு, வாகனத்தில் ஏறி முஸ்தலிஃபா வந்ததும் தொழுதார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள் முஸ்தலிஃபாவிலிருந்து புறப்படும் நாளில் ஃபழ்ல் இப்னு அப்பாஸைத் தம் வாகனத்தில் தமக்குப் பின்னால் ஏற்றினார்கள்.

1670. ஃபள்ல்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஜம்ர(த்துல் அகபாவை அடையும் வரை தல்பியா கூறிக் கொண்டேயிருந்தார்கள்.

பகுதி 94

(அரஃபாவிலிருந்து) திரும்பும்போது அமைதியாகச் செல்வது பற்றிய நபி(ஸல்) அவர்களின் கட்டளையும் சாட்டையால் அவர்கள் சைகை செய்ததும்.

1671. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

அரஃபா தினத்தில் நபி(ஸல்) அவர்களுடன் நான் திரும்பும்போது, நபி(ஸல்) அவர்கள் தமக்குப் பின்னால் ஒட்டகத்தை அடித்து விரட்டக் கூடிய கடும் (அதட்டல்) சப்தத்தையும் ஒட்டகம் அலறுவதையும் செவியுற்றார்கள். உடனே தம் சாட்டையால் சைகை செய்து, 'மக்களே! அமைதியைக் கடைப்பிடியுங்கள்! நன்மையென்பது விரைவதிலோ விரட்டுவதிலோ இல்லை'' எனக் கூறினார்கள்.

பகுதி 95

முஸ்தலிஃபாவில் இரண்டு வேளைத் தொழுகைகளை சேர்த்துத் தொழுவது.

1672. உஸாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் அரஃபாவிலிருந்து திரும்பினார்கள். வழியிலுள்ள பள்ளத்தாக்கில் இறங்கிச் சிறுநீர் கழித்தார்கள். பிறகு சுருக்கமாக உளுச் செய்தார்கள். நான் அவர்களிடம், 'தொழப் போகிறீர்களா?' என்றேன். அதற்கு அவர்கள் 'தொழுகை உனக்கு முன்னால் (முஸ்தலிஃபாவில் தொழ வேண்டியதாகவே) இருக்கிறது!'' என்றார்கள். பிறகு முஸ்தலிஃபாவிற்கு வந்து முழுமையாக உளுச் செய்தார்கள். இகாமத் சொல்லப்பட்டதும் மக்ரிபு தொழுதார்கள். அவ்விரண்டுக்குமிடையே (வேறு எதுவும்) தொழவில்லை.

பகுதி 96

இரண்டு வேளைத் தொழுகையைச் சேர்த்துத் தொழுபவர் கடமையல்லாத தொழுகைகளைத் தொழ வேண்டியதில்லை.

1673. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் முஸ்தலிஃபாவில், மக்ரிபையும் இஷாவையும் அவை ஒவ்வொன்றுக்கும் (தனித்தனி) இகாமத்துடன் சேர்த்துத் தொழுதார்கள். இரண்டிற்குமிடையிலோ ஒவ்வொன்றுக்கும் பின்போ கடமையல்லாத தொழுகை எதையும் தொழவில்லை.

1674. அபூ அய்யூப் அல் அன்ஸாரி(ரலி) அறிவித்தார்.

இறுதி ஹஜ்ஜின்போது நபி(ஸல்) அவர்கள் முஸ்தலிஃபாவில் மஃரிபையும் இஷாவையும் இணைத்துத் தொழுதார்கள்.

பகுதி 97

(இரண்டு வேளைத் தொழுகைகளைச் சேர்த்துத் தொழும் போது) ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக பாங்கும் இகாமத்தும் கூறுவது.

1675. அப்துர்ரஹ்மான் இப்னு யஸீத் அறிவித்தார்.

''அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) ஹஜ் செய்தார்கள். நாங்கள் இஷாவின் பாங்கு கூறப்படும் நேரத்திலோ, அதற்குச் சற்று முன்னரோ முஸ்தலிஃபாவிற்கு வந்தோம். இப்னு மஸ்வூத்(ரலி), ஒருவரை பாங்கும் இகாமத்தும் கூறுமாறு கட்டளையிட, அவர் பாங்கும் இகாமத்தும் கூறினார். பின்னர் இப்னு மஸ்வூத்(ரலி) மக்ரிப் தொழுதுவிட்டு அதன்பின் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு இரவு உணவைக் கொண்டு வரச் செய்து உண்டார்கள். பிறகு ஒருவரை பாங்கும் இகாமத்தும் கூறுமாறு கட்டளையிட்டார்கள். பின், இஷாவை இரண்டு ரக்அத்களாகத் தொழுதார்கள். விடிந்ததும், 'நபி(ஸல்) அவர்கள் இந்த தினத்தில் இந்த இடத்தில் இந்தத் தொழுகையைத் தவிர வேறெதையும் இந்த நேரத்தில் தொழுததில்லை'' என்று கூறினார்கள். மேலும், 'இவ்விரு தொழுகைகளும் (இங்கு, இந்த தினத்தில் மட்டும்) அவற்றிற்குரிய நேரங்களைவிட்டும் மாற்றப்பட்டுள்ளன. மக்ரிபுத் தொழுகை, மக்கள் முஸ்தலிஃபாவுக்கு வந்த பின்பு என்றும், ஃபஜ்ருத் தொழுகை, ஃபஜ்ரு உதயமாகும் வேளையில் என்றும் (ஹஜ்ஜின்போது முஸ்தலிஃபாவில் மட்டும்) மாற்றப்பட்டுள்ளன. இவ்வாறுதான் நபி(ஸல்) அவர்கள் செய்ய பார்த்திருக்கிறேன்'' என்று கூறினார்கள்.

பகுதி 98

(முஸ்தலிஃபாவில் தங்கவேண்டிய) இரவில் (முதியோர், பெண்கள், குழந்தைகள், நோயாளிகள் போன்ற) பலவீனர்களை மினாவுக்க அனுப்பிவிட்டு மற்றவர்கள் முஸ்தலிஃபாவில் தங்கி பிரார்த்தித்துவிட்டு, சந்திரன் மறைந்ததும் (மினாவுக்குப்) புறப்பட வேண்டும்.

1676. ஸாலிம் அறிவித்தார்.

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) தம் குடும்பத்திலுள்ள பலவீனர்களை முன் கூட்டியே (மினாவிற்கு) அனுப்பி விடுவார். மற்றவர்கள் முஸ்தலிஃபாவில் மஷ்அருல் ஹராம் என்னுமிடத்தில் இரவு தங்குவார்கள். அங்கு விரும்பியவாறு அல்லாஹ்வை நினைவு கூர்வர். பிறகு இமாம் முஸ்தலிஃபாவில் தங்கித் திரும்புவதற்கு முன்னமேயே இவர்கள் (மினாவுக்குத்) திரும்பி விடுவார்கள். அவர்களில் சிலர் ஃபஜ்ருத் தொழுகைக்கு மினாவை அடைவர். இன்னும் சிலர் அதற்குப் பின்னால் வந்தடைவர். அவர்கள் அங்கு வந்ததும் ஜம்ராவில் கல்லெறிவர். பலவீனர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் சலுகை வழங்கியுள்ளார்கள் என இப்னு உமர்(ரலி) கூறுவார்.

1677. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் என்னை முஸ்தலிஃபாவிலிருந்து இரவில் (மினாவுக்கு) அனுப்பி வைத்தார்கள்.

1678. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் தங்களின் குடும்பத்திலுள்ள பலவீனர்களை முஸ்தலிஃபாவில் தங்கும் இரவில் (மினாவுக்கு) முன் கூட்டியே அனுப்பி வைத்தார்கள். அப்படி அவர்கள் அனுப்பிவைத்தவர்களில் நானும் ஒருவன்.

1679. அஸ்மா(ரலி) அவர்களின் ஊழியர் அப்துல்லாஹ் அவர்கள் அறிவித்தார்.

அஸ்மா(ரலி) முஸ்தலிஃபாவில் தங்க வேண்டிய இரவில் அங்கு தங்கினார்கள். பிறகு எழுந்து சிறிது நேரம் தொழுதுவிட்டு, 'மகனே! சந்திரன் மறைந்துவிட்டதா?' எனக் கேட்டார்கள். நான் 'இல்லை!'' என்றதும், சிறிது நேரம் தொழுதார்கள். பிறகு 'சந்திரன் மறைந்துவிட்டதா?' எனக் கேட்டார்கள். நான் 'ஆம்!'' என்றதும் 'புறப்படுங்கள்!' எனக் கூறினார்கள். நாங்கள் புறப்பட்டு வந்ததும் ஜம்ராவில் அவர்கள் கல்றெரிந்தார்கள். பிறகு அங்கிருந்து திரும்பி வந்து தம் கூடாரத்தில் ஸுப்ஹு தொழுதார்கள். அப்போது நான், 'அம்மா! நாம் விஷயம் முன்பே வந்துவிட்டதாகத் தெரிகிறதே!'' என்றேன். அதற்கவர்கள், 'மகனே! நபி(ஸல்) அவர்கள் பெண்களுக்கு இவ்வாறு வர அனுமதி வழங்கியுள்ளார்கள்'' என்றார்கள்.

1680. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

''ஸவ்தா(ரலி), கனத்த சாரீரமுள்ளவராகவும் மெதுவாக நடக்கக் கூடியவராகவும் இருந்ததால், முஸ்தலிஃபாவில் தங்கும் இரவில் (மக்களுக்கு முன்பாகவே மினாவுக்குப் புறப்பட்டுச் செல்ல) நபி(ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார். அவருக்கு நபி(ஸல்) அவர்கள் அனுமதி கொடுத்தார்கள்.''

1681. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நாங்கள் முஸ்தலிஃபாவில் தங்கினோம். அப்போது ஸவ்தா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம், மக்கள் புறப்படுவதற்கு முன்பாக, தாம் அங்கிருந்து (மினாவுக்குப்) புறப்பட அனுமதி கேட்டார். ஏனெனில், அவர் மெதுவாக நடக்கக் கூடியவராக இருந்தார். எனவே, நபி(ஸல்) அவர்கள் அவருக்கு அனுமதி கொடுத்தார்கள். அவ்வாறே, மக்கள் அங்கிருந்து புறப்படும் முன் அவர் புறப்பட்டுவிட்டார். நாங்கள் மட்டும் ஸுப்ஹு வரை அங்கேயே தங்கிவிட்டு, பிறகு நபி(ஸல்) அவர்கள் அங்கிருந்து புறப்பட்டபோது நாங்களும் புறப்பட்டோம். ஸவ்தா(ரலி), நபி(ஸல்) அவர்களிடம் அனுமதி பெற்றுச் சென்றது போன்று நானும் அனுமதி பெற்றிருந்தால் வேறெந்த மகிழ்ச்சியையும் விட அது எனக்கு அதிகப் பிரியமானதாக இருந்திருக்கும்.

பகுதி 99

முஸ்தலிஃபாவில் ஃபஜ்ர் தொழுவது எப்போது?

1682. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

''நபி(ஸல்) அவர்கள் எந்தத் தொழுகையையும் (அதற்குரிய நேரத்தில் தொழாமல்) வேறு நேரத்தில் தொழுததை நான் பார்த்ததில்லை... இரண்டு தொழுகைகளைத் தவிர! ஒன்று : (முஸ்தலிஃபாவில்) மக்ரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழுதது இன்னொன்று ஃபஜ்ரை அதற்கான (வழக்கமான) நேரத்திற்கு முன் (முஸ்தலிஃபாவிலேயே) தொழுதது,''

1683. அப்துர் ரஹ்மான் இப்னு யஸீத் அறிவித்தார்.

நாங்கள் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களுடன் மக்காவுக்குப் புறப்பட்டோம். பிறகு முஸ்தலிஃபாவுக்கு நாங்கள் வந்தபோது, அவர் தனித்தனியாக இரண்டு தொழுகைகளை தனித்தனி பாங்கு, இகாமத்துடன் தொழுதார்கள். இரண்டு தொழுகைகளுக்கிடையே இரவு உணவு அருந்தினார்கள். பிறகு ஃபஜ்ர் உதயமான வேளையில் ஃபஜ்ர் தொழுதார்கள். அப்போது சிலர் 'ஃபஜ்ர் உதயமாகிவிட்டது' என்றும் சிலர் 'ஃபஜ்ரு உதயமாகவில்லை'' என்று கூறிக் கொண்டிருந்தனர். பிறகு அவர் 'இந்த இடத்தில் இவ்விரு தொழுகைகளுக்கான நேரங்கள் நமக்கு மாற்றப்பட்டுள்ளன. ஒன்று மக்ரிப், மற்றயது இஷாவாகும். ஏனெனில், மக்கள் இருள் சூழ்ந்த பின்புதான் (இஷாவின் நேரத்தில் தான்) முஸ்தலிஃபாவை அடைவார்கள். இன்னொன்று இந்த நேரத்தின் ஃபஜ்ருத் தொழுகை' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' எனக் கூறினார். பிறகு அவர் விடியும்வரை தங்கியிருந்துவிட்டு, 'இறைநம்பிக்கையாளர்களின் தலைவர் இப்போது இங்கிருந்து திரும்பினால் நபி வழியைச் செயல்படுத்தியவராவார்!' எனக் கூறினார்.

'இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் இக்கூற்று விரைவானதா அல்லது உஸ்மான்(ரலி) புறப்பட்டது விரைவானதா?' என்று எனக்குத் தெரியவில்லை. (அந்த அளவுக்கு விரைவாக உஸ்மான்(ரலி) திரும்பிவிட்டார்கள்.) பிறகு இப்னு மஸ்வூத்(ரலி) துல்ஹஜ் 10-ஆம் நாள் ஜம்ரத்துல் அகபாவுக்கு வந்து கல்லெறியும் வரை தல்பியா சொல்லிக் கொண்டேயிருந்தார்.

பகுதி 100

முஸ்தலிஃபாவிலிருந்து எப்போது திரும்புவது?

1684. அம்ர்ப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார்.

உமர்(ரலி) முஸ்தலிஃபாவில் ஃபஜ்ரு தொழுததை கண்டேன். அங்கு தங்கிய அவர், 'இணைவைப்போர் சூரியன் உதயமாகும் வரை இங்கிருந்து திரும்பிச் செய்வதில்லை மேலும் அவர்கள் 'ஸபீரு மலை (சூரிய உதயத்தால்) ஒளிரட்டும்!' என்றும் கூறுவார்கள்: ஆனால் நபி(ஸல்) அவர்களோ, இணை வைப்போருக்கு மாற்றமாக நடந்துள்ளனர்!'' என்று கூறிவிட்டு சூரியன் உதிக்கும் முன்பே அங்கிருந்து திரும்பிவிட்டார்கள்.

பகுதி 101

துல்ஹஜ் 10ஆம் நாள் காலையிலிருந்து ஜம்ராவில் கல்லெறியும் வரை தல்பியாவும் தக்பீரும் கூறுவதும், வழியில் யாரையேனும் தம் வாகனத்தில் எற்றிக் கொள்வதும்.

1685. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

''நபி(ஸல்) அவர்கள் ஃபள்ல் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களை (தம் வாகனத்தில்) தமக்குப் பின்னால் ஏற்றினார்கள்.''

''நபி(ஸல்) அவர்கள் ஜம்ராவில் கல்லெறிகிற வரை தல்பியா கூறிக் கொண்டேயிருந்தார்கள்'' என ஃபள்ல்(ரலி) தெரிவித்தார்கள்.

1686 / 1687. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

அரஃபாவிலிருந்து முஸ்தலிஃபா வரை நபி(ஸல்) அவர்களின் பின்னால் (வாகனத்தில்) உஸாமா இப்னு ஸைத்(ரலி) அமர்ந்திருந்தார்கள். பிறகு முஸ்தலிஃபாவிலிருந்து மினா வரை ஃபள்ல்(ரலி) அவர்களை நபி(ஸல்) (தம் வாகனத்தில்) தமக்குப் பின்னால் ஏற்றினார்கள்.

''நபி(ஸல்) அவர்கள் ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறியும் வரை தல்பியா கூறிக் கொண்டேயிருந்தார்கள்'' என அவ்விருவரும் கூறினார்கள்.

பகுதி 102

அல்லாஹ் கூறினான்:

''ஹஜ்ஜையும் உம்ராவையும் சேர்த்துச் செய்பவர் (மீது) அவரால் இயன்ற பலிப் பிராணி(யை பலியிடுவது) கடமையாகும். (பலிப்பிராணி) கிடைக்காதவர் ஹஜ்ஜுக் காலத்தில் மூன்று நாள்களும், ஊர் சென்றதும் ஏழு நாள்களும் நோன்பு நோற்க வேண்டும். இது முழுமையான பத்து (நோன்புகள்) ஆகும். இச்சட்டம் யாருடைய குடும்பம் மஸ்ஜிதுல் ஹராமின் எல்லைக்குள் இல்லையோ அவர்களுக்குரியதாகும்.'' (திருக்குர்ஆன் 02:196)

1688. அபூ ஜம்ரா(ரஹ்) அறிவித்தார்.

நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் ஹஜ்ஜுத் தமத்துஉ பற்றிக் கேட்டேன். அவர் அதையே நிறைவேற்றுமாறு எனக்குக் கூறினார். பிறகு நான் அவர்களிடம், குர்பானி கொடுப்பது பற்றிக் கேட்டேன். அதற்கவர்கள், 'ஒட்டகத்தை அல்லது மாட்டை அல்லது ஆட்டை பலியிடலாம் அல்லது ஒரு (ஒட்டகத்தின் அல்லது மாட்டின்) பலியில் ஒரு பங்காளியாகச் சேரலாம்'' என்று கூறினார்கள். மக்களோ, ஹஜ்ஜுத் தமத்துஉவை வெறுத்தது போலிருந்தது. நான் உறங்கியபோது கனவில் ஒருவர் '(உம்முடைய) ஹஜ்(ஜில் குற்றம் ஏதுமில்லை: அது) ஏற்கப்படக் கூடியதே! தமத்துஉவும் ஏற்கப்பட்டது!'' என உரத்துக் கூவினார். உடனே நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் வந்து என் கனவைக் கூறினேன். அதற்கு அவர்கள் 'அல்லாஹ் மிகப்பெரியவன் அபுல்காஸிம் நபி(ஸல்) அவர்களின் வழிமுறையே இது!'' எனக் கூறினார்கள்.

பகுதி 103

(குர்பானி) ஒட்டகங்களில் சவாரி செய்தல்.

அல்லாஹ் கூறினான்:

''இன்னும் (குர்பானிக்கான) ஒட்டகங்களை உங்களுக்காக அல்லாஹ்வின் அடையாளங்களில் ஒன்றாக நாம் ஆக்கியிருக்கிறோம். உங்களுக்கு அவற்றில் மிகுந்த நன்மை உள்ளது. 'எனவே (அவை உரிய முறையில்) நிற்கும்போது அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி (குர்பானி கொடுத்து விடு)வீர்களாக! பிறகு, அவை பக்கவாட்டில் சாய்ந்த கீழே விழுந்(து உயிர் நீத்)த பின் அவற்றிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்! (வறுமையிலும் கையேந்தாமல்) கிடைப்பதைக் கொண்டு திருப்தியாய் இருப்போருக்கும் இரப்போருக்கும் உண்ணக் கொடுங்கள்! இவ்விதம் நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறோம். நிச்சயமாக, பலிப்பிராணிகளின் மாமிசங்களோ, அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை ஒருபோதும் அடைவதில்லை ஆனால், உங்களுடைய தக்வா (பயபக்தி)தான் அவனை அடையும்! இவ்வாறே, உங்களுக்கு நேர்வழி காண்பித்தற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்தும் பொருட்டு, அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான். எனவே, நன்மை செய்வோருக்கு நீர் நற்செய்தி கூறும்!'' (திருக்குர்ஆன் 22:36, 37)

1689. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஒருவர் தம் குர்பானி ஒட்டகத்தை இழுத்துச் செல்வதைப் பார்த்த நபி(ஸல்) அவர்கள் 'அதில் ஏறிக் கொள்வீராக!'' என்று கூறினார்கள். அதற்கவர் 'இது குர்பானி ஒட்டகமாயிற்றே!'' என்றார். நபி(ஸல்) அவர்கள் '(பரவாயில்லை) நீர் அதில் ஏறிக் கொள்ளும்!'' என்றார்கள். (அவர் அதில் ஏறாததால்) இரண்டாவது முறையிலோ, மூன்றாவது முறையிலோ நபி(ஸல்) அவர்கள் 'உமக்குக் கேடு உண்டாகட்டும்! ஏறுவீராக!'' என்று கூறினார்கள்.

1690. அனஸ்(ரலி) அறிவித்தார்.

ஒருவர் தம் குர்பானி ஒட்டகத்தை இழுத்துச் செல்வதைப் பார்த்த நபி(ஸல்) அவர்கள் 'அதில் ஏறிக் கொள்ளும்!'' என்றார்கள். அதற்கவர், 'இது குர்பானி ஒட்டகமாயிற்றே?' என்றதும். '(பரவாயில்லை) அதில் ஏறிக் கொள்ளும்!'' என்றார்கள். மீண்டும் அவர் 'இது குர்பானி ஒட்டகமாயிற்றே!'' என்றதும் '(பரவாயில்லை) அதில் ஏறிக் கொள்ளும்!'' என மூன்றாம் முறையும் கூறினார்கள்.

பகுதி 104

குர்பானி ஒட்டகங்களை ஒட்டிச் செல்லல்.

1691. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

இறுதி ஹஜ்ஜின்போது நபி(ஸல்) அவர்கள் உம்ராவுடன் ஹஜ்ஜையும் செய்தார்கள். (மதீனாவாசிகளின் எல்லையான துல்ஹுலைஃபாவிலிருந்தே தம்முடன் குர்பானிப் பிராணியை ஓட்டிச் சென்று குர்பானியையும் கொடுத்தார்கள். முதலில் உம்ராவுக்காக தல்பியா கூறி, பிறகு ஹஜ்ஜுக்காக தல்பியா கூறினார்கள். மக்களும் நபி(ஸல்) அவர்களுடன் உம்ராவுக்கும் ஹஜ்ஜுக்குமாகச் சேர்த்து இஹ்ராம் அணிந்தார்கள். மக்களில் சிலர் குர்பானி கொடுப்பவர்களாக இருந்தனர். எனவே, குர்பானிப் பிராணியைக் கொண்டு வந்திருந்தனர். இன்னும் சிலரோ, குர்பானி கொடுப்பவர்களாக இல்லை. (எனவே, அவர்கள் குர்பானிப் பிராணியைத் தம்முடன் கொண்டு வரவில்லை) நபி(ஸல்) அவர்கள் மக்காவுக்கு வந்ததும் மக்களிடம், 'உங்களில் யார் குர்பானிப் பிராணியைக் கொண்டு வந்துள்ளார்களோ அவர் தம் ஹஜ்ஜை நிறைவேற்றாத வரை இஹ்ராமிருந்து விடுபடக் கூடாது யார் குர்பானிப் பிராணி கிடைக்கவில்லையோ அவர் ஹஜ்ஜு நாள்களில் மூன்று நோன்புகளும் (ஹஜ்ஜை நிறைவு செய்துவிட்டு) தம் வீடு திரும்பியதும் ஏழு நோன்புகளும் நோற்கட்டும்!'' என்று கூறினார்கள். பிறகு மக்காவுக்கு நபி(ஸல்) அவர்கள் வந்ததும், இறையில்லம் கஅபாவை வலம்வந்துவிட்டு முதலாவதாக ருக்னை (ஹஜருல் அஸ்வதை) முத்தமிட்டார்கள். பிறகு மூன்று சுற்றுக்கள் (தோள்களைக் குலுக்கி) ஓடியும் நான்கு சுற்றுக்கள் நடந்தும் வலம்வந்தார்கள். வலம்வந்து முடித்ததும், மகாமு இப்ராஹீமில் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். ஸலாம் கொடுத்தும் ஸஃபாவுக்கு வந்து, ஸஃபா, மர்வாவுக்கிடையே ஏழு முறை சஃயு செய்தார்கள். பிறகு, தம் ஹஜ்ஜை நிறைவேற்றும் வரை இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை. மேலும் அவர்கள் துல்ஹஜ் 10-ஆம் நாள் தம் குர்பானிப் பிராணியை பலியிட்டார்கள். பிறகு அங்கிருந்து திரும்பி இறையில்லம் கஅபாவை வலம்வந்துவிட்டு இஹ்ராமிலிருந்து விடுபட்டார்கள்.

மக்களில், குர்பானி கொடுப்பதற்காகப் பிராணியைக் கொண்டு வந்தவர்களும் நபி(ஸல்) அவர்கள் செய்தது போன்றே செய்தார்கள்.

1692. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

இறுதி ஹஜ்ஜினபோது நபி(ஸல்) அவர்கள் உம்ராவுடன் ஹஜ்ஜையும் செய்தார்கள். மக்களும் அவர்களுடன் ஹஜ், உம்ராச் செய்தார்கள்.

இப்னு உமர்(ரலி) கூறிய (முன் ஹதீஸிலுள்ள) செய்தியையே ஆயிஷா(ரலி) எனக்குக் கூறினார் என உர்வா அறிவித்தார்.

பகுதி 105

வழியில் குர்பானிப் பிராணியை விலைக்கு வாங்குதல்.

1693. நாஃபிவு அறிவித்தார்.

அப்துல்லாஹ், தம் தந்தை இப்னு உமர்(ரலி) அவர்களிடம், 'நீங்கள் (ஹஜ்ஜுக்குப் போகாமல்) இங்கே இருங்கள். ஏனெனில் பைத்துல்லாஹ்வை நெருங்க விடாமல் நீங்கள் தடுக்கப்படுவீர்கள் என்ற அச்சம் எனக்கு ஏற்படுகிறது' எனக் கூறினார். அதற்கு இப்னு உமர்(ரலி), 'அப்படியாயின் நான் நபி(ஸல்) அவர்கள் செய்ததைப் போன்றே செய்வேன். மேலும் நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி உள்ளது என அல்லாஹ் கூறியுள்ளான். எனவே, நான் என் மீது உம்ராவைக் கடமையாக்கிக் கொண்டேன் என்பதற்கு உங்களையே நான் சாட்சியாக்குகிறேன்' எனக் கூறிவிட்டு, உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்தார்கள். பிறகு அங்கிருந்து புறப்பட்டு பைதா என்னுமிடத்தை அடைந்ததும் ஹஜ்ஜுக்கும் உம்ராவுக்கும் சேர்த்து தல்பியா கூறினார்கள். பிறகு அவர்கள் 'ஹஜ்ஜும் உம்ராவும் ஒரே மாதிரியானவையே!'' எனக் கூறிவிட்டு, குதைத் என்னுமிடத்தில் குர்பானிப் பிராணியை விலைக்கு வாங்கிக் கொண்டு இறையில்லம் கஅபாவுக்கு வந்து, அவ்விரண்டிற்காகவும் (ஹஜ்ஜுக்காகவும் உம்ராவிற்காகவும்) ஒரேயொரு வலம்வந்தார்கள். ஹஜ்ஜையும் உம்ராவையும் நிறைவேற்றும் வரை அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை.

பகுதி 106

துல்ஹுலைஃபாவில் குர்பானிப் பிராணிக்கு அடையாளமிட்டு அதன் கழுத்தில் எதையேனும் தொங்கவிட்டு, பிறகு இஹ்ராம் அணிதல்.

நாஃபிவு(ரஹ்) கூறினார்: மதீனாவிலிருந்து இப்னு உமர்(ரலி) குர்பானிப் பிராணியைக் கொண்டு செல்லும்போது, துல்ஹுலைஃபாவுக்குப் போனதும் குர்பானிப் பிராணியின் கழுத்தில் மாலை போன்றவற்றைத் தொங்க விடுவதுடன் அடையாளமும் இடுவார். அதாவது பிராணியைக் கிப்லாவை நோக்கி உட்காரவைத்து அதன் வலப்புறத் திமிலில் கத்தியால் கீறிவிடுவார்.

1694 / 1695. மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி), மர்வான்(ரலி) ஆகியோர் அறிவித்தார்.

ஹுதைபிய்யா உடன்படிக்கை நடந்த ஆண்டு நபி(ஸல்) அவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தோழர்களுடன் மதீனாவிலிருந்து புறப்பட்டு துல்ஹுலைஃபாவுக்கு வந்ததும் குர்பானிப் பிராணியின் கழுத்தில் மாலை போன்றவற்றைத் தொங்கவிட்டு அடையாளமும் இட்டுவிட்டு, பின்னர் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்தார்கள்.

1696. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களின் குர்பானி ஒட்டகங்களின் கழுத்து மாலைகளை நான் என்னுடைய கைகளாலேயே கோர்த்தேன். அதை நபி(ஸல்) அவர்கள் தங்களின் பிராணியின் கழுத்தில் போட்டு அதற்கு அடையாளமுமிட்டு அதை பலியிட்டார்கள். அதன் பிறகு அவர்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டிருந்த எந்தப் பொருளும் அவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருக்கவில்லை. (அதாவது இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிட்டார்கள்.)

பகுதி 107

குர்பானி ஒட்டகங்களுக்காகவும் மாடுகளுக்காகவும் கழுத்து மாலைகள் கோர்த்தல்.

1697. ஹஃப்ஸா(ரலி) அறிவித்தார்.

நான் நபி(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! மக்களுக்கென்ன நேர்ந்தது? அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிட்டார்களே! ஆனால் நீங்கள் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லையே!' எனக் கேட்டேன். அதற்கவர்கள் 'நான் தலை முடியில் களிம்பு தடவிப் படிய வைத்துவிட்டேன். என்னுடைய பலிப்பிராணியின் கழுத்தில் அடையாளம் தொங்கவிட்டுள்ளேன் எனவே நான் ஹஜ்ஜை நிறைவேற்றாதவரை இஹ்ராமிலிருந்து விடுபட மாட்டேன்!'' எனக் கூறினார்கள்.

1698. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மதீனாவிலிருந்தே பலிப்பிராணியைக் கொண்டு செல்பவர்களாக இருந்தார்கள். எனவே, நான் அவர்களின் பலிப்பிராணியின் கழுத்தில் தொங்கவிடப்படும் மாலையைக் கோர்த்துக் கொடுப்பேன். (பலிப்பிராணியை அனுப்பிவிட்டு) அவர்கள் இஹ்ராம் அணிந்தவர் தவிர்த்துக் கொள்ளும் எதையும் தவிர்த்துக் கொள்ள மாட்டார்கள்.

பகுதி 108

பலிப்பிராணிக்குக் காயம் ஏற்படுத்தி அடையாளமிடல்.

''நபி(ஸல்) அவர்கள் பலிப்பிராணியின் கழுத்தில் மாலைகளைத் தொங்கவிட்டு அதைக் (கீறி) காயப்படுத்தி அடையாளமிட்டுவிட்டு உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்தார்கள்'' என மிஸ்வர்(ரலி) கூறினார்.

1699. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களின் பலிப்பிராணிகளுக்கு, (அவற்றின்) கழுத்தில் தொங்கவிடும் அடையாள மாலையை நான் என் கையால் கோர்த்தேன். அவற்றை அவர்கள் பலிப்பிராணிகளின் கழுத்தில் தொங்கவிட்டார்கள்... அல்லது நான் அவற்றைப் பிராணிகளின் கழுத்தில் தொங்கவிட்டேன்.. பிறகு அதை கீறிக் காயப்படுத்தி அடையாளமிட்டார்கள். பிறகு அதை இறையில்லம் கஅபாவின் பக்கமாக அனுப்பி வைத்துவிட்டு, மதீனாவில் தங்கியிருந்தார்கள். அப்போது அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட எதுவும் விலக்கப்படவில்லை.

பகுதி 109

ஒருவர் தம் கையாலேயே பலிப் பிராணியின் கழுத்தில் மாலைகளைத் தொங்கவிடுதல்.

1700. அம்ர் பின்த் அப்திர் ரஹ்மான் அறிவித்தார்.

''(மக்காவுக்கு) குர்பானி பிராணியை அனுப்பிவைப்பவருக்கும், அப்பிராணி அறுக்கப்படும்வரை ஹாஜிகளுக்குத் தடை செய்யப்படும் அனைத்தும் தடை செய்யப்படும்' என இப்னு அப்பாஸ்(ரலி) கூறுகிறாரே!'' என்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் ஸியாத் இப்னு அபீ சுஃப்யான் எழுதிக் கேட்டதற்கு ஆயிஷா(ரலி) சொல்வது போலில்லை நான் நபி(ஸல்) அவர்களின் பலிப்பிராணிக்கு, கழுத்தில் தொங்கவிடப்படும் அடையாள மாலையை என்னுடைய கையாலேயே கோர்த்திருக்கிறேன் நபி(ஸல்) அவர்கள் அதைத் தம் கையால் அதன் கழுத்தில் தொங்கவிட்டார்கள். பிறகு, பிராணியை என்னுடைய தந்தையுடன் (மக்காவுக்கு) அனுப்பி வைத்தார்கள் ஆனால் அந்த பலிப்பிராணி பலியிடப்படும் வரை அவர்கள், தமக்கு அல்லாஹ் அனுமதித்த எவரையும் தடுத்துக் கொள்ளவில்லை!'' எனக் கூறினார்.

பகுதி 110

ஆட்டின் கழுத்தில் மாலைகளைத் தொங்கவிடல்.

1701. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஒருமுறை ஆட்டைப் பலியிட்டார்கள்.

1702. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நான் நபி(ஸல்) அவர்களின் பலிப்பிராணிகளுக்காகக் கழுத்தில் தொங்கவிடப்படும் மாலைகளைக் கோர்த்திருக்கிறேன். நபி(ஸல்) அவர்கள் அதை ஆட்டின் கழுத்தில் தொங்கவிட்டார்கள். (பிராணியை மக்காவுக்கு அனுப்பிவிட்டுத்) தம் வீட்டில் இஹ்ராம் அணியாத நிலையில் தங்கினார்கள்.

1703. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நான் நபி(ஸல்) அவர்களின் பலிப் பிராணியின் ஆட்டிற்குக் கழுத்தில் தொங்கவிடப்படும் மாலையொன்றைத் தொடுத்தேன். அந்த (கழுத்தில் அடையாளம் தொங்கவிடப்பட்ட) ஆட்டை நபி(ஸல்) அவர்கள் (மக்காவுக்கு) அனுப்பிவிட்டு அவர்கள் (வீட்டில்) இஹ்ராமில்லாத நிலையில் தங்கினார்கள்.

1704. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிவதற்கு முன்பாக, அவர்களின் பலிப்பிராணிக்கு கழுத்தில் தொங்கவிடப்படும் மாலையைத் தொடுத்தேன்.

பகுதி 111

கம்பளியாலான கழுத்து மாலைகள்

1705. உம்முல் மூமினீன் (ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நான் பலிப்பிராணிகளின் கழுத்தில் தொங்கவிடப்படும் மாலைகளை என்னிடத்திலிருந்த கம்பளியால் செய்தேன்.

பகுதி 112

செருப்பைக் கழுத்தில் தொங்கவிடல்.

1706. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பலிப்பிராணியை இழுத்துச் சென்ற ஒருவரைப் பார்த்த நபி(ஸல்) அவர்கள் 'அதில் ஏறிக் கொள்ளும்'' என்றார்கள். அதற்கு அவர், 'இது பலிப்பிராணி' என்றதும் 'அதில் ஏறுவீராக!'' என்றனர். பிறகு அவர் அதில் ஏறிச் சென்றதை பார்த்தேன். அவர் நபி(ஸல்) அவர்களுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பிராணியின் கழுத்தில் செருப்பு கிடந்தது.

பகுதி 113

பலிப்பிராணிக்குச் சேணம் பூட்டல்.

இப்னு உமர்(ரலி) திமில் தெரிகிற அளவுக்கு மட்டும் சேணத்தைக் கிழிப்பார்கள். பலிப்பிராணியை பலியிட்டதும் சேணத்தில் இரத்தம் பட்டுவிடும் என்று அஞ்சி அதை உடனேயே கழற்றி விடுவார்கள். பிறகு சேணத்தை தர்மம் செய்வார்கள்.

1707. அலீ(ரலி) அறிவித்தார்.

பலியிடும் பிராணியின் சேணத்தையும் அதன் தோலையும் தர்மம் செய்து விடவேண்டுமென நபி(ஸல்) அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள்.

பகுதி 114

செல்லும் வழியில் பலிப்பிராணியியை விலைக்கு வாங்கி அதன் கழுத்தில் மாலையைத் தொங்கவிடல்.

1708. நாஃபிவு அறிவித்தார்.

இப்னுஸ் ஸுபைர்(ரலி) உடன் ஹஜ்ஜாஜ் போரிட்ட ஆண்டு, இப்னு உமர்(ரலி) ஹஜ் செய்ய நாடினார். அப்போது அவரிடம், 'மக்களிடையே போர் மூண்டுள்ளது எனவே உங்களை ஹஜ் செய்யவிடாமல் அவர்கள் தடுப்பார்கள் என நாங்கள் அஞ்சுகிறோம்' எனக் கூறப்பட்டது. உடனே அவர், 'அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி உள்ளது! எனவே அந்த நேரத்தில் (நபி(ஸல்) அவர்கள் செய்ததையே நானும் செய்வேன். நான் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து விட்டேன் என்பதற்கு உங்களையே சாட்சியாக்குகிறேன்' எனக் கூறிப் புறப்பட்டு 'பைதா' என்னுமிடத்திற்கு வந்ததும் 'ஹஜ்ஜின் நிலையும் உம்ராவின் நிலையும் ஒன்றேதான் (எனவே) நான் உம்ராவுடன் ஹஜ்ஜுக்கும் சேர்த்தே இஹ்ராம் அணிந்துள்ளேன் என்பதற்கு நீங்களே சாட்சியாக இருங்கள்!' எனக் கூறினார். மேலும் அடையாள மாலையிடப்பட்ட பலிப்பிராணியை வாங்கினார். மக்கா வந்து கஅபாவைத் வலம்வந்துவிட்டு, ஸஃபா மர்வாவுக்கிடையே ஓடி சஃயு செய்தார். இதை விட வேறெதுவும் அதிகமாகச் செய்யவில்லை.

துல்ஹஜ் 10ஆம் நாளில்தான் குர்பானிப் பிராணியை பலியிட்டுவிட்டுத் தலைமுடியை மழித்தார். அதுவரை, இஹ்ராம் அணிந்த நிலையில் விலக்கப்பட்ட எதையும் செய்யவில்லை. 'முதலில் தாம் நிறைவேற்றிவிட்ட தவாஃபே ஹஜ் - உம்ரா இரண்டிற்கும் போதும்' என்றும் கருதினார். மேலும், 'இப்படித்தான் நபி(ஸல்) அவர்கள் செய்தார்கள்'' என்றும் கூறினார்.

பகுதி 115

ஒருவர் தம் மனைவியரின் சார்பாக அவர்களின் அனுமதியின்றி மாட்டைப் பலியிடுவது.

1709. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

ஹஜ்ஜை மட்டுமே நிறைவேற்றும் எண்ணத்தில் துல்கஅதா மாதத்தின் இருபத்தைந்தாம் நாள், நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். நாங்கள் மக்காவை நெருங்கியதும் 'பலிப்பிராணியைக் கொண்டு வராதவர்கள் வலம்வந்துவிட்டு, ஸஃபா மர்வாவுக்கிடையே ஓடி முடித்தவுடன், இஹ்ராமைக் களைந்து விடவேண்டும்' என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். பிறகு துல்ஹஜ் 10-ஆம் நாள் மாட்டின் இறைச்சி எங்களுக்கு வந்தது. 'இது என்ன?' என கேட்டேன். மக்கள் 'நபி(ஸல்) அவர்கள் தங்களின் மனைவியரின் சார்பாக பலியிட்டார்கள்'' என்றனர்.

பகுதி 116

மினாவில் நபி(ஸல்) அவர்கள் பலியிட்ட இடத்தில் பலியிடுவது.

1710. நாஃபிவு அறிவித்தார்.

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) வழக்கமாக நபி(ஸல்) அவர்கள் பலியிட்ட இடத்தில் பலியிடுவார்.

1711. நாஃபிவு அறிவித்தார்.

இப்னு உமர்(ரலி) முஸ்தலிஃபாவிலிருந்து இரவின் கடைசிப் பகுதியில் தம் பலிப் பிராணியை நபி(ஸல்) அவர்கள் பலியிட்ட இடத்தில் சேர்ப்பதற்காக ஹஜ் செய்வோருடன் அனுப்புவார். அவர்களுள் அடிமைகளும் சுதந்திரமானவர்களும் இருந்தனர்.

பகுதி 117

தம் கையாலேயே பலியிடுதல்.

1712. அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஏழு ஒட்டகங்களை நிற்க வைத்துத் தம் கையாலேயே அறுத்தார்கள். மேலும் அவர்கள் மதீனாவில், பெரிய கொம்புகளையுடைய, கருப்பு நிறம் கலந்த வெள்ளை நிற ஆடுகள் இரண்டையும் குர்பானி கொடுத்தார்கள்.

பகுதி 118

ஒட்டகத்தைக் கட்டிப் போட்டு அறுத்தல்.

1713. ஸியாத் இப்னு ஜுபைர் அறிவித்தார்.

''இப்னு உமர்(ரலி), அறுப்பதற்காகத் தம் ஒட்டகத்தைப் படுக்க வைத்திருந்த ஒருவரிடம் வந்து, 'அதைக் கட்டி நிற்க வைத்து அறுப்பீராக! அதுவே முஹம்மத்(ஸல்) அவர்களின் வழிமுறை!' என்று கூறியதை பார்த்தேன்.''

பகுதி 119

ஒட்டகத்தை நிற்க வைத்து அறுத்தல்.

இப்னு உமர்(ரலி) 'அதுவே (ஒட்டகத்தை நிற்கவைத்து அறுப்பதே) முஹம்மத்(ஸல்) அவர்களின் வழிமுறை!'' என்று கூறுகிறார்கள்.

''குர்ஆனின் 22:36 வசனத்திலுள்ள 'ஸவாஃப்ப' என்னும் வார்த்தைக்கு 'நிற்கும் நிலையில்' என்றே பொருள்'' என இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.

1714. அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் நான்கு ரக்அத்கள் லுஹர் தொழு(வித்)தார்கள். துல்ஹுலைஃபாவில் இரண்டு ரக்அத்கள் அஸர் தொழுதுவிட்டு அங்கேயே இரவு தங்கினார்கள். காலை விடிந்ததும் தம் வாகனத்தில் ஏறிக் கொண்டு 'லா இலாஹ இல்லல்லாஹ்'வும் 'ஸுப்ஹானல்லாஹ்'வும் கூறிக் கொண்டே சென்றார்கள். பைதா என்னுமிடத்தைச் சென்றடைந்ததும் ஹஜ் - உம்ராவுக்காக தல்பியா கூறலானார்கள். மக்காவை அடைந்ததும் இஹ்ராமிலிருந்து விடுபடுமாறு மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். மேலும், நபி(ஸல்) அவர்கள் தங்களின் கையாலேயே ஏழு ஒட்டகங்களை நிற்க வைத்து அறுத்து பலியிட்டார்கள். (பெருநாளில்) பெரிய கொம்புகளையுடைய, கருப்புநிறம் கலந்த வெள்ளைநிற ஆடுகள் இரண்டை மதீனாவில் குர்பானி கொடுத்தார்கள்.

1715. அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் நான்கு ரக்அத்கள் லுஹர் தொழுதார்கள். துல்ஹுலைஃபாவில் இரண்டு ரக்அத்கள் அஸர் தொழுதார்கள். இரவில் அங்கேயே தங்கிவிட்டு, விடிந்ததும் ஸுப்ஹு தொழுதார்கள். பிறகு தம் வாகனத்தில் ஏறி பைதா எனுமிடத்தை அடைந்தபோது ஹஜ்ஜுக்கும் உம்ராவுக்கும் தல்பியா கூறினார்கள்.

பகுதி 120

அறுப்பவருக்குக் கூலியாக பலிப்பிராணியில் எதையும் கொடுக்கக் கூடாது.

1716. அலீ(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (குர்பானி ஒட்டகங்களை பலியிடுவதற்கு) என்னை நியமித்தார்கள். பிறகு அவற்றின் இறைச்சிகளைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே செய்தேன். அவற்றின் சேணங்களையும் தோல்களையும் பங்கிட்டுவிடுமாறும் எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே செய்தேன்.

இன்னொரு அறிவிப்பில் 'பலிப் பிராணிகளை கவனித்துக் கொள்ளுமாறும் அவற்றை அறுப்பதற்குக் கூலியாக அவற்றில் எதையும் கொடுக்கக்கூடாது என்றும் எனக்கு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்'' என அலீ(ரலி) கூறினார் என உள்ளது.

பகுதி 121

பலிப்பிராணிகளின் தோல்களை தர்மம் செய்ய வேண்டும்.

1717. அலீ(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் தங்களின் குர்பானி ஒட்டகங்களை பலியிடுமாறும் அவற்றின் இறைச்சி, தோல், சேணம் ஆகிய அனைத்தையும் பங்கிடுமாறும் உரிப்பதற்குக் கூலியாக, அவற்றில் எதையும் கொடுக்கக் கூடாது என்றும் எனக்குக் கட்டளையிட்டார்கள்.

பகுதி 122

பலிப்பிராணியின் சேணங்கள் தர்மம் செய்யப்பட வேண்டும்.

1718. அலீ(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் நூறு ஒட்டகங்களை குர்பானி கொடுத்தார்கள். அப்போது அவற்றின் இறைச்சிகளைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் அவற்றைப் பங்கிட்டேன். பின்பு அவற்றின் சேணங்களைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் அவற்றைப் பங்கிட்டேன். பிறகு அவற்றின் தோல்களைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள் அவ்வாறே நான் அவற்றைப் பங்கிட்டேன்.

பகுதி 123

அல்லாஹ் கூறினான்:

(நபியே!) நீர் நினைவு கூரும்:

''நாம் இப்ராஹீமுக்குப் புனித ஆலயத்தின் இடத்தை நிர்ணயித்துப் பின்வருமாறு கட்டளையிட்டோம் 'நீர் எனக்கு எதனையும் இணைவைக்காதீர் என்னுடைய (இந்த) ஆலயத்தைச் சுற்றி வருவோருக்கும் அதில் ருகூஉ, ஸுஜூது செய்(து தொழு)வோருக்கும் அதைத் தூய்மை செய்து வைப்பீராக! மேலும், ஹஜ் செய்ய வரும்படி மக்களிடையே அறிவிப்புச் செய்வீராக! அவர்கள் நடந்தும் வெகு தொலைவான இடங்களில் இருந்தெல்லாம் வரும் மெலிந்த ஒட்டகங்களில் சவாரி செய்தும் உம்மிடம் வரட்டும்! தங்களுக்குரிய பலன்களைக் காணட்டும்! குறிப்பிட்ட நாள்களில், அல்லாஹ் அவர்களுக்கு அளித்துள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) நாற்கால் பிராணிகளின் மீது அவன் பெயரைச் சொல்லி குர்பானி கொடுக்கட்டும்! எனவே, அவற்றிலிருந்து நீங்களும் உண்ணுங்கள் கஷ்டப்படும் ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள்! பின்னர் அவர்கள் (தலைமுடி மழித்து, நகம் வெட்டி, குளித்துத்) தம் அழுக்குகளை நீக்கி, தங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றி (அந்தப் புனிதமான) புராதன ஆலயத்தை தவாஃபும் செய்யட்டும்!'

''இதுவே (ஹஜ்ஜின் வழிபாட்டு முறையாகும்)! மேலும் அல்லாஹ்வினால் புனிதப்படுத்தப் பட்டவற்றுக்கு கண்ணியமளிக்கிறவருக்கு அவரின் இறைவனிடத்தில் அது சிறந்ததாகும்!'' (திருக்குர்ஆன் 22:26-30)

பகுதி 124

பலிப் பிராணியில் உண்ணப்பட வேண்டியவையும் தர்மம் செய்யப்பட வேண்டியவையும்.

இஹ்ராம் அணிந்த நிலையில் வேட்டையாடிய குற்றத்திற்குப் பரிகாரமாகவோ நேர்ச்சையாகவோ பலி கொடுப்பவர்கள் அவற்றின் இறைச்சியைச் சாப்பிடலாகாது மற்ற பிராணிகளைச் சாப்பிடலாம் என இப்னு உமர்(ரலி) கூறினார்.

ஹஜ்ஜுத் தமத்துஉவில் (கொடுக்கப்படும் குர்பானியை) உண்ணலாம் பிறருக்கு உண்ணக் கொடுக்கலாம் என அதா கூறுகிறார்.

1719. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

நாங்கள் மினாவில் தங்கும் நாளிலிருந்து மூன்று நாள்களுக்கு மேல் குர்பானிப் பிராணிகளின் இறைச்சியைப் சாப்பிட மாட்டோம். பிறகு நபி(ஸல்) அவர்கள், 'சாப்பிடுங்கள் சேமித்தும் வைத்துக் கொள்ளுங்கள்'' என்று கூறி எங்களுக்குச் சலுகை வழங்கியதும் நாங்கள் சாப்பிட்டு, சேமித்து வைக்கலானோம்.

'மதீனா வரும்வரை (சாப்பிட்டோம்)' என்று ஜாபிர்(ரலி) கூறினாரா என அதாவிடம் கேட்டேன். அதற்கவர் 'இல்லை' என்றார் என இப்னு ஜுரைஜ் கூறுகிறார்.

1720. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

ஹஜ்ஜை மட்டும் எண்ணத்தில் கொண்டு துல்கஅதா மாதத்தின் இருபத்தைந்தாம் நாள் நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். நாங்கள் மக்காவை நெருங்கியதும், பலிப்பிராணியைக் கொண்டு வராதவர் வலம்வந்துவிட்டு இஹ்ராமிலிருந்து விடுபட நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். பிறகு துல்ஹஜ் 10-ஆம் நாள் மாட்டின் இறைச்சி எங்களுக்கு வந்தது. இது என்ன? என கேட்டேன். மக்கள், 'நபி(ஸல்) அவர்கள் தங்களின் மனைவிகளின் சார்பாகப் பலியிட்டார்கள்' என்றனர்.

பகுதி 125

தலைமுடியை மழிப்பதற்கு முன் பலியிடுதல்.

1721. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

பலியிடுவதற்கு முன் தலைமுடியை மழித்துவிடுதல் மற்றும் அது போன்றவற்றைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'குற்றமில்லை! குற்றமில்லை! என்றனர்.

1722. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், 'நான் கல்லெறிவதற்கு முன்பே தவாஃபுஸ் ஸியாரத் செய்து விட்டேன்' என்றார். அதற்கவர்கள் 'குற்றமில்லை!'' என்றார்கள். பிறகு அவர், 'நான் பலியிடுவதறகு முன்பாகத் தலையை மழித்து விட்டேன்' என்றதும் அவர்கள் 'குற்றமில்லை!'' என்றார்கள். மேலும் அவர் 'நான் கல்லெறிவதற்கு முன்பாகப் பலியிட்டு விட்டேன்' என்ற போதும் அவர்கள் 'குற்றமில்லை'' என்றார்கள்.

1723. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

''நான் மாலை நேரம் வந்த பின் கல்லெறிந்தேன்!'' என்று நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் கேட்டதும். அவர்கள் 'குற்றமில்லை!'' என்று கூறினார்கள். பிறகு அவர், 'நான் பலியிடும் முன்பாகத் தலையை மழித்து விட்டேன்!'' என்ற போதும் அவர்கள் 'குற்றமில்லை!'' என்றே கூறினார்கள்.

1724. அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் பத்ஹாவில் இருக்கும்போது நான் அங்கு வந்தேன். அப்போது அவர்கள், 'ஹஜ் செய்ய நாடி விட்டீரா?' எனக் கேட்க, நான் 'ஆம்!'' என்றேன். 'எதற்காக இஹ்ராம் அணிந்தீர்?' என அவர்கள் கேட்டதும் 'நபி(ஸல்) அவர்கள் எதற்காக இஹ்ராம் அணிந்தார்களோ அதற்காக!'' என்றேன். உடனே அவர்கள், 'நல்லகாரியம் செய்தீர்! போய் இறையில்லம் கஅபாவையும் ஸஃபாமர்வாவையும் வலம்வாரும்!'' என்றார்கள். பிறகு நான் கைஸ் கோத்திரத்தரின் பெண்களில் (மஹ்ரமான) ஒருவரிடம் வந்தேன். அவர் என்னுடைய தலையில் பேன் பார்த்தார். பிறகு நான் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்தேன். இந்த அடிப்படையிலேயே உமர்(ரலி) அவர்களின் ஆட்சிக் காலம் வரை நான் மக்களுக்குத் தீர்ப்புக் கூறி வந்தேன்! உமர்(ரலி) அவர்களிடம் இதுபற்றி நான் கூறியதும் அவர்கள், 'நாம் இறைவேதத்தை எடுத்துக் கொண்டால், அதுவோ (ஹஜ் உம்ராவை) முழுமையாக நிறைவேற்றுமாறு நமக்குக் கட்டளையிடுகிறது நபி(ஸல்) அவர்களின் வழிமுறையை எடுத்துக் கொண்டால், நபி(ஸல்) அவர்கள் பலிப் பிராணி பலியிடப்படும் இடத்தை அடையாத வரை இஹ்ராமிலிருந்து விடுபட்டதில்லை என்று தெரிகிறது!'' எனக் கூறினார்கள்.

பகுதி 126

இஹ்ராமின்போது தலை முடியில் களிம்பு தடவிப் படிய வைப்பதும் தலையை மழித்துக் கொள்வதும்.

1725. ஹஃப்ஸா(ரலி) அறிவித்தார்.

நான் நபி(ஸல்) அவர்களிடம் 'இறைத்தூதர் அவர்களே! உம்ரா செய்துவிட்டு மக்கள் தங்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிட்டார்கள் ஆனால், நீங்கள் உம்ரா செய்த பிறகும் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லையே. என்ன காரணம்?' எனக் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'என்னுடைய முடியைக் களிம்பு தடவிப் படிய வைத்து விட்டேன் என்னுடைய குர்பானிப் பிராணியின் கழுத்தில் மாலையும் தொங்கவிட்டு விட்டேன் எனவே, குர்பானி கொடுக்கும்வரை நான் இஹ்ராமிலிருந்து விடுபடக் கூடாது!'' என்றார்கள்.

பகுதி 127

இஹ்ராமிலிருந்து விடுபடும்போது முடியைக் குறைத்துக் கொள்வதும் மழித்துக் கொள்வதும்.

1726 / 1727 இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் தங்களின் ஹஜ்ஜின்போது தலையை மழித்தார்கள். அவர்கள், 'இறைவா! தலையை மழித்துக் கொள்பவர்களுக்கு நீ கருணை புரி!' எனக் கூறியதும் தோழர்கள் 'இறைத்தூதர் அவர்களே! முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும்'' என்றனர். பிறகு நபி(ஸல்) அவர்கள் 'இறைவா! தலையை மழித்துக் கொள்பவர்களுக்கு நீ கிருபை செய்வாயாக!'' எனப் பிரார்த்தித்தார்கள். உடனே தோழர்கள் 'இறைத்தூதர் அவர்களே! முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும்..'' என்றனர். நபி(ஸல்) அவர்கள் 'முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும் (கருணை புரிவாயாக!)'' என்று கூறினார்கள்.

இன்னொரு அறிவிப்பின்படி 'அல்லாஹ் தலையை மழித்துக் கொள்பவர்களுக்குக் கருணை புரிவானாக!'' என்று ஒரு முறையோ இரண்டு முறையோ கூறினார்கள் என உள்ளது.

இன்னுமொரு அறிவிப்பில் நான்காவது முறையில், 'முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும்...'' எனக் கூறினார்கள் என உள்ளது.

1728. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள், 'இறைவா! தலையை மழித்துக் கொள்பவர்களை மன்னிப்பாயாக!'' எனப் பிரார்த்தித்தார்கள் உடனே, தோழர்கள் 'முடியைக் குறைத்துக் கொள்பவர்களையும்...'' என்றனர். (மீண்டும்) நபி(ஸல்) அவர்கள் 'இறைவா! தலையை மழித்துக் கொள்பவர்களை மன்னிப்பாயாக!'' என்று பிரார்த்தித்தபோது தோழர்கள் 'முடியைக் குறைத்துக் கொள்பவர்களையும்...'' என்றனர். நபி(ஸல்) அவர்கள் மூன்றாவது முறையாகவும் அதைக் கூறியபோது 'முடியைக் குறைத்துக் கொள்பவர்களையும் (மன்னிப்பாயாக!)'' எனக் கூறினார்கள்.

1729. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களில் ஒரு கூட்டத்தாரும் தலையை மழித்தனர். இன்னும் சிலர் முடியைக் குறைத்தனர்.

1730. முஆவியா(ரலி) அறிவித்தார்.

நான் நபி(ஸல்) அவர்களின் முடியைக் கத்தரிக் கோலால் (கத்தரித்துக்) குறைத்துள்ளேன்.

பகுதி 128

ஹஜ்ஜுத் தமத்துஉ செய்பவர்கள் உம்ராவுக்குப் பின் முடியைக் குறைத்துக் கொள்ளல்.

1731. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மக்காவுக்கு வந்தபோது, இறையில்லம் கஅபாவை வலம்வந்து, ஸஃபா மர்வாவுக்கிடையே சஃயு செய்த பின், இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டுமென்றும் பிறகு தலையை மழித்துக் கொள்ளவோ, முடியைக் குறைத்துக் கொள்ளவோ வேண்டுமென்றும் தம் தோழர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

பகுதி 129

துல்ஹஜ் பத்தாம் நாள் தவாஃபுஸ் ஸியாரத் செய்தல்.

நபி(ஸல்) அவர்கள் தவாஃபுஸ் ஸியாரத்தை இரவு வரை தாமதமாக்கினார்கள் என ஆயிஷா(ரலி), இப்னு அப்பாஸ்(ரலி) ஆகியோர் அறிவிக்கின்றனர்.

நபி(ஸல்) அவர்கள் மினாவில் தங்கும் நாள்களில் தவாஃபுஸ் ஸியாரத் செய்தார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.

1732. நாஃபிவு அறிவித்தார்.

இப்னு உமர்(ரலி) ஒரேயொரு வலம் வந்துவிட்டுப் பகல் தூக்கமடைந்தார். பிறகு துல்ஹஜ் பத்தாம்நாள் மினாவுக்கு வந்தார்.

நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு செய்ததாக (இப்னு உமர்(ரலி) கூறினார் என) மற்றோர் அறிவிப்பில் காணப்படுகிறது.

1733. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்தோம். துல்ஹஜ் பத்தாம் நாள் நாங்கள் தவாஃபுஸ் ஸியாரத் செய்தபோது ஸஃபியா(ரலி)வுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. நபி(ஸல்) அவர்கள் ஸஃபியாவிடம் உறவு கொள்ள நாடினார்கள். நான், இறைத்தூதர் அவர்களே! அவருக்கு மாதவிடாய் வந்துள்ளதே! என்றேன் அதற்கவர்கள், 'அவர் (நம்முடைய பயணத்தைத்) தடுத்துவிட்டாரா?' எனக் கேட்டார்கள். உடனே தோழர்கள், 'அவர் துல்ஹஜ் பத்தாம் நாளே தவாஃபுஸ் ஸியாரத் செய்துவிட்டார்!' என்றதும் 'அப்படியாயின் புறப்படுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பகுதி 130

மறதியினாலோ அறியாமையினாலோ, மாலை நேரத்தில் கல்லெறிந்தும் பலியிடுவதற்கு முன்பு தலையை மழிப்பதும்.

1734. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களிடம் பலியிடுவது, தலையை மழிப்பது, கல்லெறிவது ஆகியவற்றை முற்படுத்தியோ பிற்படுத்தியோ நிறைவேற்றுவது சம்பந்தமாக வினவப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் 'குற்றமில்லை!'' எனக் கூறினார்கள்.

1735. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மினாவில் இருந்தபோது துல்ஹஜ் 10ஆம் நாள் பல கேள்விகள் கேட்கப்பட்டதற்கு 'குற்றமில்லை!'' என்றே பதில் கூறினார்கள். ஒருவர் 'நான் பலியிடுவதற்கு முன் தலையை மழித்து விட்டேன்!'' என்று கூறியபோது, நபி(ஸல்) அவர்கள் 'குற்றமில்லை! (இப்போது) பலியிடுவீராக!' எனக் கூறினார்கள். பிறகு அவர் 'நான் மாலை நேரமான பின்பே கல்லெறிந்தேன்!'' என்றதும் நபி(ஸல்) அவர்கள் 'குற்றமில்லை!'' என்றார்கள்.

பகுதி 131

ஜம்ராவில், வாகனத்தின் மீது அமர்ந்து கொண்டிருக்கும்போது (மக்களுக்குத்) தீர்ப்பளித்தல்.

1736. அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் விடைபெறும் ஹஜ்ஜின்போது (தம் வாகனத்தின் மீது) அமர்ந்திருந்தார்கள். அப்போது மக்கள் அவர்களிடம் (சில சந்தேகங்களை) கேட்கத் தொடங்கினர். ஒருவர், 'நான் பலியிடுவதற்கு முன்பாக, உணராமல் தலையை மழித்து விட்டேன்!'' என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'குற்றமில்லை! (இப்போது பலிப்பிராணியை) அறுப்பீராக!'' என்று கூறினார்கள். பிறகு இன்னொருவர் வந்து 'கல்லெறிவதற்கு முன்பு அறியாமையினால் அறுத்து பலியிட்டுவிட்டேன்' எனக் கூறியதும் அவர்கள் 'குற்றமில்லை! இப்போது கல்லெறிவீராக!'' என்று கூறினார்கள். அன்றைய தினம் (பிற்படுத்திச் செய்யப்பட வேண்டிய) சில வழிபாடுகள் முன்னதாகச் செய்யப்பட்டுவிட்டதாகவும் (முன்னதாகச் செய்யப்படவேண்டிய) சில வழிபாடுகள் பிற்படுத்திச் செய்யப்பட்டுவிட்டதாகவும் கேட்கப்பட்ட அனைத்திற்கும் நபி(ஸல்) அவர்கள் 'குற்றமில்லை! (விடுபட்டத்தைச்) செய்வீராக!'' என்றே கூறினார்கள்.

1737 / 1738 அப்துல்லாஹ் இப்னு அம்ர்ப்னுல் ஆஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் துல்ஹஜ் பத்தாம் நாள் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது வந்தேன். அப்போது ஒருவர் எழுந்து, 'நான் இதற்கு முன் இது என நினைத்தேன்!'' என்றார். இன்னொருவர் எழுந்து, 'நான் இதற்கு முன் இது என நினைத்தேன்! பலியிட்டு விட்டேன்!'' என இது போன்றவற்றைக் கூறலானார். அவ்வனைத்திற்குமே நபி(ஸல்) அவர்கள் 'குற்றமில்லை! (விடுபட்டதைச்) செய்யுங்கள்!'' என்றே கூறினார்கள். அன்றைய தினம் வினவப்பட்ட எல்லாவற்றிற்குமே அவர்கள் 'குற்றமில்லை! (விடுபட்டதைச்) செய்யுங்கள்!'' என்றே கூறினார்கள்.

பகுதி 132

மினாவில் தங்கும் நாள்களில் உரை நிகழ்த்துதல்.

1739 / 1740. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் துல்ஹஜ் 10-ஆம் நாள் உரை நிகழ்த்தினார்கள். அப்போது, 'மக்களே! இது எந்த நாள்?' எனக் கேட்டார்கள். மக்கள் 'புனிதமிக்க தினம்' என்றனர். பிறகு நபி(ஸல்) அவர்கள் 'இது எந்த நகரம்?' எனக் கேட்டதும் மக்கள் 'புனிதமிக்க நகரம்' என்றனர். பிறகு அவர்கள் 'இது எந்த மாதம்?' எனக் கேட்டதும் மக்கள் 'புனிதமிக்க மாதம்!'' என்றனர். பிறகு நபி(ஸல்) அவர்கள், 'நிச்சயமாக உங்களுடைய இந்த மாதத்தில், உங்களுடைய இந்த நாள் எவ்வாறு புனிதம் பெற்று விளங்குகிறதோ அவ்வாறே உங்களின் உயிர்களும் உடைமைகளும் கண்ணியமும் உங்களுக்குப் புனிதமானவையாகும்!'' எனப் பல முறை கூறினார்கள். பிறகு தலையை உயர்த்தி, 'இறைவா! நான் (உன் மார்க்கத்தை) சேர்ப்பித்து விட்டேனா? இறைவா! நான் (உன் மார்க்கத்தை) சேர்ப்பித்து விட்டேனா?' என்றும் கூறினார்கள்.

என்னுடைய உயிர் யாருடைய கைவசம் உள்ளதோ அ(வ்விறை)வன் மீது ஆணையாக! இது அவர்கள் தங்களின் சமுதாயத்திற்கு வழங்கிய இறுதி உபதேசமாகும்.

பின்னர் 'இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு அறிவித்து விடுங்கள்! என்னுடைய மரணத்திற்குப் பின் நீங்கள் ஒருவரோடொருவர் சண்டையிட்டு நிராகரிப்பவர்களாகி விட வேண்டாம்!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில் 'நபி(ஸல்) அவர்கள் அரஃபாவில் உரை நிகழ்த்த கேட்டேன்'' என்ற வாக்கியம் அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.

1741. அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் நஹ்ருடைய (துல்ஹஜ் 10-ஆம்) நாளில் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது, 'இது எந்த நாள் என்பதை நீங்கள் அறிவீர்களா?' எனக் கேட்டார்கள். நாங்கள் 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்!'' என்றோம். அந்நாளுக்கு அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்துவிட்டு, 'இது (பலியிடுவதற்குரிய) நஹ்ருடைய நாளல்லவா?' என்றனர். நாங்கள் 'ஆம்!'' என்றோம். பிறகு 'இது எந்த மாதம்?' என அவர்கள் கேட்டதும் நாங்கள் 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்!'' என்றோம். அப்போதும் அம்மாதத்துக்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்தார்கள். பிறகு, 'இது துல்ஹஜ் மாதம் அல்லவா?' என அவர்கள் கேட்க, நாங்கள் 'ஆம்!'' என்றோம். பிறகு 'இது எந்த நகரம்?' எனக் கேட்டார்கள். அதற்கு நாங்கள் 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்!'' என்றோம். அப்போதும் அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்தார்கள். பிறகு 'இது புனிதமிக்க நகரமல்லவா?' எனக் கேட்க, நாங்கள் 'ஆம்!'' என்றோம். பிறகு 'உங்களுடைய (புனிதமான) இந்த நகரத்தில் உங்களுடைய (புனிதமான) இந்த மாதத்தில் இன்றைய தினம் எவ்வளவு புனிதமானதோ அந்த அளவுக்கு உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் உங்கள் இரட்சகனைச் சந்திக்கும் நாள்வரை புனிதமானவையாகும்!'' என்று கூறிவிட்டு, 'நான் உங்களிடம் (இறைச் செய்திகள் அனைத்தையும்) சேர்ப்பித்து விட்டேனா?' எனக் கேட்டார்கள். மக்கள் 'ஆம்!'' என்றனர். பிறகு அவர்கள் 'இறைவா! இதற்கு நீயே சாட்சியாயிரு! இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு அறிவித்து விடுங்கள்! ஏனெனில், செவியேற்பவரை விட அறிவிக்கப்படுபவர் (இந்த இறைச் செய்தியை) நன்கு புரிந்து கொள்பவராயிருக்கலாம் எனக்குப் பின்னால் நீங்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு நிராகரிப்பவர்களாகி விடவேண்டாம்!'' எனக் கூறினார்கள்.

1742. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மினாவில் இருந்தபோது, 'இது எந்த நாள் என்பதை நீங்கள் அறிவீர்களா?' எனக் கேட்டார்கள். அதற்கு மக்கள் 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்!'' என்றனர். உடனே அவர்கள் 'இது புனிதமிக்க தினமாகும்! இது எந்த நகரம் என்பதை நீங்கள் அறிவீர்களா?' என்று கேட்க மக்கள் 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்!'' என்றனர். உடனே அவர்கள் '(இது) புனித மிக்க நகரமாகும்! இது எந்த மாதம் என்பதை அறிவீர்களா?' என்றதும் மக்கள், 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்!'' என்றனர். பிறகு நபி(ஸல்) அவர்கள் '(இது) புனிதமிக்க மாதமாகும்!' எனக் கூறிவிட்டு, 'உங்களுடைய இந்த (புனித) நகரத்தில் உங்களுடைய இந்த (புனித) மாதத்தில் உங்களுடைய இந்த நாள் எவ்வளவு புனிதமானதோ அது போன்றே, அல்லாஹ் உங்கள் உயிர்களையும் உடைமைகளையும் உங்கள் மானம் மரியாதைகளையும் புனிதமாக்கியுள்ளான்!'' எனக் கூறினார்கள்.

மற்றோர் அறிவிப்பில் 'நபி(ஸல்) அவர்கள், தாம் ஹஜ் செய்தபோது நஹ்ருடைய நாளில் ஜம்ராக்களுக்கிடையே நின்று கொண்டு, 'இது மாபெரும் ஹஜ்ஜின் தினமாகும்!' எனக் கூறினார்கள். மேலும், 'இறைவா! நீயே சாட்சி!'' என்றும் கூறி மக்களிடம் இறுதி விடை பெற்றார்கள். எனவே, மக்களும் 'இது நபி(ஸல்) அவர்கள் (நம்மிடம்) விடை பெற்று (உலகைவிட்டு)ச் செல்கிற ஹஜ்ஜாகும்!'' எனப் பேசிக் கொண்டார்கள்.''

பகுதி 133

தண்ணீர் வழங்குபவர்களும் மற்றவர்களும் மினாவில் தங்கவேண்டிய இரவுகளில் மக்காவில் தங்கலாமா?

1743, 1744 / 1745. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

மக்காவில் (ஹாஜிகளுக்கு) தண்ணீர் வழங்க வேண்டியிருப்பதால் மினாவில் தங்க வேண்டிய இரவுகளில் மக்காவில் தங்குவதற்கு அப்பாஸ்(ரலி), அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார்கள். அவருக்கு நபி(ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள்.

பகுதி 134

கல்லெறிதல்

நபி(ஸல்) அவர்கள் நஹ்ருடைய நாளில் முற்பகல் நேரத்தில் கல்லெறிந்தார்கள். மறு நாள்களில் சூரியன் உச்சி சாய்ந்ததும் கல்லெறிந்தார்கள் என ஜாபிர்(ரலி) கூறினார்.

1746. வபரா(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

''நான் எப்போது கல்லெறிவது?' என இப்னு உமர்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் 'உம்முடைய தலைவர் எறியும்போது நீரும் எறியும்!'' என்றார்கள். நான் மீண்டும் அதே கேள்வி கேட்டபோது, 'நாங்கள் சூரியன் உச்சி சாயும் வரை காத்திருப்போம் பிறகு கல்எறிவோம்!'' எனக் கூறினார்கள்.

பகுதி 135

பத்னுல் வாதி என்னுமிடத்திலிருந்து கல்லெறிதல்.

1747. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி), பத்னுல்வாதி என்னுமிடத்திலிருந்து கல்லெறிந்தார்கள். அப்போது நான், 'அப்துர் ரஹ்மானின் தந்தையே! மக்கள் மேற்பரப்பில் இருந்தல்லவா கல்லெறிகின்றனர்?' எனக் கேட்டேன். அதற்கவர்கள், 'எவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறெவனும் இல்லையோ அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்பகரா அத்தியாயம் யாருக்கு அருளப்பட்டதோ அந்த நபி(ஸல்) அவர்கள் (கல் எறிந்த வண்ணம்) நின்றிருந்த இடம் இதுதான்!'' எனக் கூறினார்கள்.

பகுதி 136

(ஜம்ராக்களின் மீது கல்லெறியும் போது) ஏழு சிறு கற்களை எறிய வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு எறிந்ததாக இப்னு உமர்(ரலி) கூறினார்.

1748. அப்துர் ரஹ்மான் இப்னு யஸீத்(ரஹ்) அறிவித்தார்.

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) ஜம்ரத்துல் அகபாவுக்கு வந்ததும், தம் இடப் பக்கத்தில் இறையில்லம் கஅபாவும் வலப் பக்கத்தில் மினாவும் இருக்கும் படி நின்று கொண்டு, ஏழு சிறு கற்களை எறிந்தார். பிறகு 'இவ்வாறுதான், பகரா அத்தியாயம் யாருக்கு அருளப்பட்டதோ அந்த நபி(ஸல்) அவர்களும் எறிந்தார்கள்!'' என்று கூறினார்கள்.

பகுதி 137

ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறியும்போது இறையில்லம் கஅபா, தம் இடப்பக்கமிருக்கும்படி நிற்பது.

1749. அப்துர் ரஹ்மான் இப்னு யஸீத்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

நான் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களுடன் ஹஜ் செய்தேன் அப்போது அவர்கள் ஜம்ரத்துல் அகபாவில் ஏழு சிறு கற்களை எறிந்தார்கள். அவர்கள் தங்களின் இடப்பக்கத்தில் கஅபாவும் வலப்பக்கத்தில் மினாவும் இருக்குமாறு நின்றார்கள். பிறகு அவர்கள் 'இதுவே பகரா அத்தியாயம் யாருக்கு அருளப்பட்டதோ அவர்கள் எறிந்த இடமாகும்!'' என்று கூறினார்கள்.

பகுதி 138

ஒவ்வொரு கல்லையும் எறியும்போது தக்பீர் கூறவேண்டும்.

இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் செய்ததாக இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

1750. அஃமஷ்(ரஹ்) அறிவித்தார்.

ஹஜ்ஜாஜ் மிம்பர் மீது ஏறி, 'பசுமாடு பற்றிக் கூறப்படுகிற அத்தியாயம். இம்ரானின் சந்ததிகள் பற்றிக் கூறப்படுகிற அத்தியாயம். பெண்கள் பற்றிக் கூறப்படும் அத்தியாயம்'' என்று கூறியதை நான் செவியேற்றிருக்கிறேன். இதுபற்றி நான் இப்ராஹீமிடம் கூறியபோது அவர். இதுபற்றி அப்துர் ரஹ்மான் இப்னு யஸீத் பின்வருமாறு கூறினார்கள் என குறிப்பிட்டார்.

''நான் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களுடன் இருக்கும்போது, இப்னு மஸ்வூத்(ரலி) ஜம்ரத்துல் அகபாவில் ஏழு சிறு கற்களை எறிந்தார்கள். அவர்கள் தங்களின் இடப்பக்கத்தில் கஅபாவும் வலப்பக்கத்தில் மினாவும் இருக்குமாறு நின்றார்கள். பிறகு அவர்கள் 'இதுவே பகரா அத்தியாயம் யாருக்கு அருளப்பட்டதோ அவர்கள் எறிந்த இடமாகும்!'' என்று கூறினார்கள்.

பகுதி 138

ஒவ்வொரு கல்லையும் எறியும்போது தக்பீர் கூறவேண்டும்.

இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் செய்ததாக இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

1750. அஃமஷ்(ரஹ்) அறிவித்தார்.

ஹஜ்ஜாஜ் மிம்பர் மீது ஏறி, 'பசுமாடு பற்றிக் கூறப்படுகிற அத்தியாயம். இம்ரானின் சந்ததிகள் பற்றிக் கூறப்படுகிற அத்தியாயம், பெண்கள் பற்றிக் கூறப்படும் அத்தியாயம்'' என்று கூறியதை நான் செவியேற்றிருக்கிறேன். இதுபற்றி நான் இப்ராஹீமிடம் கூறியபோது அவர், இதுபற்றி அப்துர் ரஹ்மான் இப்னு யஸீத் பின்வருமாறு கூறினார்கள் என குறிப்பிட்டார்.

''நான் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களுடன் இருக்கும்போது, இப்னு மஸ்வூத்(ரலி) ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறியும்போது பத்னுல்வாதி என்னும் இடத்தை அடைந்து, அதிலுள்ள மரத்திற்கு நேராக வந்ததும் அதன் குறுக்கே நின்று கொண்டு, ஏழுகற்களை (ஒவ்வொன்றாக) எறிந்தார்கள். ஒவ்வொரு கல்லை எறியும்போதும் தக்பீர் கூறினார்கள். 'பிறகு அல்லாஹ்வின் மீது ஆணையாக! யாருக்கு அல்பகரா அத்தியாயம் அருளப்பட்டதோ அந்த நபி(ஸல்) அவர்கள் இந்த இடத்தில்தான் (கல்லெறிந்தபடி) நின்றார்கள்!'' என இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார்.

பகுதி 139

ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறிந்த பின்பு அங்கு நிற்காமல் வந்து விடுவது.

இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் செய்ததாக (அதாவது, நபி(ஸல்) அவர்கள் கடைசி ஜம்ராவில் கல்லெறிந்த பின்பு அங்கு நிற்காமல் திரும்பிவிட்டதாக) இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பகுதி 140

இரண்டு ஜம்ராக்களில் கல்லெறிந்த பின்பு கிப்லாவை முன்னோக்கி, சமதளமான தரையில் நிற்பது.

1751. ஸாலிம்(ரஹ்) அறிவித்தார்.

இப்னு உமர்(ரலி) முதல் ஜம்ராவில் ஏழுகற்களை எறிவார்கள். ஒவ்வொன்றையும் எறிந்ததும் தக்பீர் கூறுவார்கள். பிறகு சமதளமான தரைப் பகுதிக்கு வந்து கிப்லாவை முன்னோக்கி நிற்பார்கள். தம் கைகளை உயர்த்தி, நீண்ட நேரம் நின்று பிரார்த்திப்பார்கள். பின்பு, இரண்டாவது ஜம்ராவில் கல்லெறிவார்கள். பிறகு இடப்பக்கமாக நகர்ந்து, சமதளமான இடத்திற்குப் போய், கிப்லாவை முன்னோக்கி, நீண்ட நேரம் நின்று, கைகளை உயர்த்தி பிரார்த்திப்பார்கள். பின்பு பத்னுல் வாதி என்னுமிடத்திலிருந்து கடைசி ஜம்ராவில் கல்லெறிவார்கள் அங்கு நிற்கமாட்டார்கள். பிறகு திரும்பி வந்து, 'இவ்வாறுதான் நபி(ஸல்) அவர்கள் செய்ய பார்த்திருக்கிறேன்!'' எனக் கூறுவார்கள்.

பகுதி 141

முதல் ஜம்ராவிலும் இரண்டாவது ஜம்ராவிலும் கைகளை உயர்த்துதல்.

1752. ஸாலிம்(ரஹ்) அறிவித்தார்.

இப்னு உமர்(ரலி) முதல் ஜம்ராவில் ஏழு கற்களை எறிவார்கள்.

ஒவ்வொன்றையும் எறிந்ததும் தக்பீர் கூறுவார்கள். பிறகு சமதளமான தரைப் பகுதிக்கு வந்து கிப்லாவை முன்னோக்கிக் கைகளை உயர்த்தி, நீண்ட நேரம் நின்று பிரார்த்திப்பார்கள். பின்பு இரண்டாவது ஜம்ராவில் அவ்வாறே கல்லெறிவார்கள். பிறகு இடப்பக்கமாக நகர்ந்து, சமதளமான இடத்திற்குப் போய் கிப்லாவை முன்னோக்கி மிக நீண்ட நேரம் நின்று கொண்டு கைகளை உயர்த்தி பிரார்த்திப்பார்கள். பின்பு பத்னுல் வாதி என்னுமிடத்திலிருந்து கடைசி ஜம்ராவில் கல்லெறிவார்கள். அங்கு நிற்க மாட்டார்கள். பிறகு திரும்பி வந்து, 'இவ்வாறுதான் நபி(ஸல்) அவர்கள் செய்ய பார்த்திருக்கிறேன்!'' எனக் கூறுவார்கள்.

பகுதி 142

முதலிரண்டு ஜம்ராக்களிலும் பிரார்த்தித்தல்

1753. ஸுஹ்ரீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மினா பள்ளிவாசலை அடுத்திருக்கும் (முதல்) ஜம்ராவில் கல்லெறியும்போது ஏழு கற்களை எறிவார்கள். ஒவ்வொரு கல்லை எறியும் போதும் தக்பீர் கூறுவார்கள். பிறகு, சற்று முன்னால் சென்று, கிப்லாவை முன்னோக்கி, நீண்ட நேரம் நின்று கைகளை உயர்த்தி பிரார்த்திப்பார்கள். பிறகு இரண்டாவது ஜம்ராவுக்கு வந்து அங்கும் ஏழு கற்களை எறிவார்கள். ஒவ்வொரு கல்லை எறியும் போதும் தக்பீர் கூறுவார்கள். பிறகு இடப்பக்கமாக, பள்ளத்தாக்கிற்கு அடுத்துள்ள பகுதிக்கு வந்து, கிப்லாவை முன்னோக்கி நின்று கைகளை உயர்த்தி பிரார்த்திப்பார்கள். பிறகு ஜம்ரத்துல் அகபாவுக்கு வந்து ஏழு சிறுகற்களை எறிவார்கள். ஒவ்வொரு கல்லை எறியும்போது தக்பீர் கூறுவார்கள். பின்பு அங்கிருந்து திரும்பி விடுவார்கள். அங்கு நிற்க மாட்டார்கள்.

ஸாலிம்(ரஹ்) அவர்கள், நபி(ஸல்) அவர்களின் இச்செயலை, தம் தந்தை இப்னு உமர்(ரலி) வழியாக அறிவித்ததை செவியுற்றுள்ளேன். இப்னு உமர்(ரலி)யும் இவ்வாறே செய்பவராக இருந்தார்.

பகுதி 143

கல்லெறிந்த பின் நறுமணம் பூசிக் கொள்வதும் தவாஃபுஸ் ஸியாரத்திற்கு முன்பு தலை மழித்துக் கொள்வதும்.

1754. காஸிம்(ரஹ்) அறிவித்தார்.

ஆயிஷா(ரலி) 'நபி(ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிய நாடிய போதும், தவாஃபுஸ் ஸியாரத் செய்யும் முன்னர், (ஜம்ராக்களில் கல்லெறிந்துவிட்டு, தலை மழித்துக் கொண்டு) இஹ்ராமிலிருந்து அவர்கள் விடுபட்டு விட்டிருந்த வேளையிலும், நான் அவர்களுக்கு என்னுடைய இவ்விரு கைகளால் நறுமணம் பூசியிருக்கிறேன்!' எனக் கூறித் தம் இரண்டு கைகளையும் விரித்துக் காட்டினார்கள்.

பகுதி 144

தவாஃபுல் வதா (விடை பெறும் வலம்)

1755. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

''இறையில்லம் கஅபாவை வலம்வருவதை ஹஜ்ஜின் கடைசி வழிபாடாக ஆக்கிக் கொள்ள வேண்டும்' என மக்கள் கட்டளையிடப்பட்டுள்ளனர். ஆயினும் மாதவிடாய்ப் பெண்களுக்கு மட்டும் அதில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. (கடைசி தவாஃபான தவாஃபுல் வதாவை மட்டும் விட்டுவிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.)

1756. அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் லுஹர், அஸர், மக்ரிபு, இஷா ஆகிய தொழுகைகளைத் தொழுதுவிட்டு முஹஸ்ஸப் என்னும் (மக்காவுக்கும் மினாவுக்குமிடையேயுள்ள) ஓரிடத்தில் உறங்கினார்கள். பின்பு வாகனத்தில் ஏறி இறையில்லம் கஅபாவிற்குச் சென்று அங்கு வலம்வந்தார்கள்.

பகுதி 145

தவாஃபுஸ் ஸியாரத் செய்த பின்பு ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டால்...?

1757. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களின் மனைவி ஸஃபிய்யா பின்த் ஹுயை(ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது பற்றி நான் நபி(ஸல்) அவர்களிடம் கூறினேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'அவர் நம்மை (மக்காவிலிருந்து செல்லவிடாமல்) தடுத்துவிட்டாரா?' எனக் கேட்டார்கள். அதற்கு தோழர்கள் 'அவர் தவாஃபுஸ் ஸியாரத் செய்துவிட்டார்கள்!'' என்று கூற, நபி(ஸல்) அவர்கள் 'அப்படியானால் பரவாயில்லை! (நாம் போகலாம்!)'' என்றார்கள்.

1758 / 1759 இக்ரிமா(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

மதீனாவாசிகள் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம், 'ஒரு பெண் வலம்வந்த பிறகு அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் என்ன செய்வது?' எனக் கேட்டனர். அதற்கவர்கள், 'அவள் (தவாஃபுல்வதா செய்யாமல்) போய் விட வேண்டியது தான்!'' என்றார்கள். அப்போது அவர்கள், 'உம்முடைய சொல்லை எடுத்துக் கொண்டு ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களின் கூற்றைவிட்டுவிட நாங்கள் தயாரில்லை!'' என்றனர். அதற்கு இப்னு அப்பாஸ்(ரலி) 'அப்படியாயின் நீங்கள் மதீனா சென்றால் அங்கு(ள்ளோரிடம்) கேட்டுப் பாருங்கள்!'' என்றார்.

அவர்கள் மதீனா சென்றதும் இது பற்றிக் கேட்டார்கள். அவர்களால் கேட்கப்பட்டவர்களில் உம்மு ஸுலைம்(ரலி) அவர்களும் ஒருவராவார்கள். அவர்கள் ஸஃபிய்யா(ரலி) அவர்களின் நிகழ்ச்சியைக் கூறினார்கள்.

1760. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

மாதவிடாய் ஏற்பட்ட பெண் தவாஃபுஸ் ஸியாரத் செய்தால் (மக்காவைவிட்டுச்) சென்று விடுவதற்கு அவளுக்கு சலுகை வழங்கப்பட்டிருந்தது.

1761. தாவூஸ்(ரஹ்) அறிவித்தார்.

இப்னு உமர்(ரலி) 'மாதவிடாய் ஏற்பட்ட பெண் மக்காவைவிட்டுச் செல்லக்கூடாது!'' என்று ஆரம்பத்தில் கூறிக் கொண்டிருந்தார்கள். பிறகு அவர்களே, 'நபி(ஸல்) அவர்கள் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுக்கு சலுகை வழங்கியுள்ளார்கள்!'' எனக் கூறினார்கள்.

1762. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜை மட்டுமே நிறைவேற்றும் எண்ணத்தோடு புறப்பட்டோம். நபி (ஸல்) அவர்கள் (மக்காவுக்கு) வந்ததும் இறை யில்லம் கஅபாவையும் ஸஃபா-மர்வா வையும் தவாஃப் செய்தார்கள்; ஆனால், இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை. அவர்கள் குர்பானி பிராணியைக் கொண்டு வந்திருந்தார்கள்.  நபி (ஸல்) அவர்களுடன் இருந்த அவர்களுடைய துணைவியர், அவர் களுடைய தோழர்கள் அனைவரும் தவாஃப் செய்தார்கள். பிறகு அவர்களில் குர்பானி பிராணி கொண்டுவராதவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிட்டனர். அப்போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டது. நாங்கள் ஹஜ்ஜின் எல்லா கிரியைகளையும் செய்தோம்.  நபி (ஸல்) அவர்கள் ‘அல்முஹஸ்ஸப்’ எனுமிடத்தில் தங்கியிருந்த - (மினாவிலி ருந்து) திரும்ப வேண்டிய- இரவில் நான், “அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தவிர, உங்களுடைய மற்ற எல்லாத் தோழர்களும் ஹஜ்ஜையும் உம்ராவையும் முடித்துவிட்டு (ஊர்) திரும்புகின்றனர்” என்றேன். அதற்கு அவர்கள், “நாம் மக்காவுக்கு வந்கு சேர்ந்த இரவில் நீ தவாஃப் செய்யவில்லையா?” என்று கேட்டார்கள். நான் “இல்லை” என்றேன். நபி (ஸல்) அவர்கள் “நீ உன் சகோதரருடன் ‘தன்யீம்’ என்ற இடத்திற்குப் போய், உம்ராவுக்காக இஹ்ராம் கட்டிக்கொள்! மேலும், இன்ன இன்ன இடத்திற்கு வந்துவிடு” எனக் கூறினார்கள்.  நான் (என் சகோதரர்) அப்துர் ரஹ்மானுடன் ‘தன்யீம்’ சென்று உம்ராவுக்காக இஹ்ராம் கட்டினேன். அப்போது, ஸஃபிய்யா பின்த் ஹுயை (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. நபி (ஸல்) அவர்கள், “உன் கழுத்து அறுந்துபோக! உனக்குத் தொண்டை வலி வர! (காரியத்தைக் கெடுத்துவிட்டாயே!) நீ எங்களை (மக்காவிலிருந்து செல்ல விடாமல்) தடுத்துவிட்டாய். நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாம்) நாளில் தவாஃப் செய்துவிட்டாயல்லவா?” எனக் கேட்டார் கள். அதற்கு அவர்கள் “ஆம்” என்றதும், “அப்படியாயின் பரவாயில்லை; புறப்படு!” என்றார்கள்.  பிறகு நபி (ஸல்) அவர்கள் மக்காவாசி களுடன் மேலே ஏறும்போது அவர்களை நான் சந்தித்தேன்; அப்போது நான் கீழே இறங்கிக்கொண்டிருந்தேன். அல்லது, நான் மேலே ஏறிக்கொண்டிருந்தேன்; அவர்கள் கீழே இறங்கிக்கொண்டிருந்தார்கள்.  இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. எல்லாத் தொடர்களிலும் (மக்காவுக்கு வந்து சேர்ந்த இரவில் நீ தவாஃப் செய்யவில்லையா என்று கேட்டதற்கு, ஆயிஷா (ரலி) அவர்கள் ‘இல்லை’ என்று பதிலளித்ததைக் குறிக்க) ‘லா’ எனும் சொல்லே இடம்பெறுகிறது. (வேறுசில அறிவிப்புகளில் ‘பலா’ எனும் சொல் காணப்படுகிறது.)

பகுதி 146

மக்காவிலிருந்து புறப்படும் நாளில் 'அப்தஹ்' என்னுமிடத்தில் அஸர் தொழல்.

1763. அப்துல் அஸீஸ் இப்னு ருஃபை(ரஹ்) அறிவித்தார்.

''நபி(ஸல்) அவர்கள் துல்ஹஜ் 8ஆம் நாள் எங்கு லுஹர் தொழுதார்கள்?' என நான் அனஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் 'மினாவில்!'' என்று பதிலளித்தார்கள். அடுத்து நான், '(மக்காவிலிருந்து) புறப்படும் (துல்ஹஜ் 12 அல்லது 13 வது) நாளில் நபி(ஸல்) அவர்கள் எங்கே அஸர் தொழுதார்கள்?' என்று கேட்டதற்கு. 'அப்தஹில்!'' என்று கூறிவிட்டு, 'உன்னுடைய தலைவர்கள் செய்வது போல் நீயும் செய்து கொள்!'' என்று கூறினார்கள்.

1764. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் லுஹர், அஸர், மஃரிபு, இஷா ஆகிய தொழுகைகளை நிறைவேற்றியதும் முஹஸ்ஸப் என்னுமிடத்தில் சற்று உறங்கிவிட்டு, பிறகு வாகனத்தில் ஏறி, இறையில்லம் கஅபாவை வலம்வந்தார்கள்.

பகுதி 147

முஹஸ்ஸபில் தங்குதல்.

1765. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

''(முஹஸ்ஸபில் தங்குவது ஹஜ்ஜின் வழிபாடுகளில் ஒன்றல்ல) பயணம் எளிதாவதற்காக நபி(ஸல்) அவர்கள் தங்கி ஓய்வெடுத்த ஓர் இடமே முஹஸ்ஸப் ஆகும்!''

1766. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

''முஹஸ்ஸபில் தங்குவது ஹஜ்ஜின் வழிபாடுகளில் ஒன்றல்ல அது நபி(ஸல்) அவர்கள் தங்கிய ஓரிடம் அவ்வளவுதான்!''

பகுதி 148

மக்காவிற்குள் நுழைவதற்கு முன் ஃதூத்துவாவில் தங்குவதும் மக்காவைவிட்டுத் திரும்பும்போது துல்ஹுலைஃபாவிலுள்ள பத்ஹாவில் தங்குவதும்.

1767. நாஃபிவு(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

இப்னு உமர்(ரலி) ஃதூத்துவாவிலுள்ள இரண்டு கணவாய்களுக்கிடையே இரவில் தங்குவார்கள். பிறகு மக்காவின் மேற்பகுதியிலுள்ள கணவாய் வழியாக மக்காவிற்குள் நுழைவார்கள். அவர்கள் ஹஜ்ஜுக்காகவோ உம்ராவுக்காகவோ மக்காவிற்கு வந்ததும் மஸ்ஜிதுல் ஹராமின் வாசலருகேதான் ஒட்டகத்தைப் படுக்க வைப்பார்கள். பிறகு, மஸ்ஜிதில் நுழைந்து, ஹஜருல் அஸ்வதுக்கு வந்து, அங்கிருந்து தவாஃபை ஆரம்பிப்பார்கள். அந்த ஏழு சுற்றுக்களில் மூன்றில் ஓடியும் நான்கில் நடந்தும் வலம்வருவார்கள். பிறகு அங்கிருந்து திரும்பி இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். பிறகு, தம் கூடாரத்திற்குத் திரும்புவதற்கு முன்பாக ஸஃபா மர்வாவுக்கிடையே ஓடுவார்கள்.

மேலும், அவர்கள் ஹஜ்ஜையோ உம்ராவையோ முடித்துவிட்டு (மதீனாவுக்குத்) திரும்பும்போது, நபி(ஸல்) அவர்கள் தம் ஒட்டகத்தை உட்கார வைத்துத் தங்கிய, துல்ஹு லைஃபாவிலுள்ள பத்ஹா என்னுமிடத்தில் வாகனத்தை உட்கார வைத்துத் தங்குவார்கள்.

1768. காலித் இப்னு ஹாரிஸ்(ரஹ்) அறிவித்தார்.

உபைதுல்லாஹ்(ரஹ்) அவர்களிடம் முஹஸ்ஸப் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கவர், 'நபி(ஸல்) அவர்கள், உமர்(ரலி), இப்னு உமர்(ரலி) ஆகியோர் அந்த இடத்தில் தங்கியிருக்கிறார்கள்!'' என நாஃபிவு(ரஹ்) அறிவித்தாக எங்களிடம் கூறினார்.

''இப்னு உமர்(ரலி) முஹஸ்ஸபில் லுஹர், அஸர் தொழுகைகளைத் தொழுவது வழக்கம்!'' என நாஃபிவு(ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

''மக்ரிபு தொழுகையையும் இப்னு உமர்(ரலி) அங்கு தொழுவார்கள்' என்றும் நாஃபிஉ(ரஹ்) அவர்கள் கூறினார்கள் என்று நான் நினைக்கிறேன்'' என்றும் உபைதுல்லாஹ்(ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

இஷாவையும் இப்னு உமர்(ரலி) அங்கு தொழுதார்கள் (என நாஃபிஉ(ரஹ்), உபைதுல்லாஹ்(ரஹ்) அவர்களிடம் கூறினார்கள்) என்பதில் எனக்கு சந்தேகமில்லை.

''(இஷாவைத் தொழுத) பிறகு, இப்னு உமர்(ரலி) சிறிது நேரம் (அங்கேயே) உறங்கி விடுவார்கள் பிறகு, 'நபி(ஸல்) அவர்கள் இப்படிச் செய்தார்கள்' என்றும் கூறுவார்கள்'' என்றும் நாஃபிவு(ரஹ்) கூறினார்கள் என, உபைதுல்லாஹ்(ரஹ்) அவர்கள் சொன்னார்கள்.

பகுதி 149

மக்காவிலிருந்து திரும்பும்போது ஃதூத்துவாவில் தங்குதல்.

1769. நாஃபிவு(ரஹ்) அறிவித்தார்.

இப்னு உமர்(ரலி) (மக்காவுக்கு) வரும்போது ஃதூத்துவாவில் இரவு தங்குவார், விடிந்ததும் (மக்காவுக்குள்) பிரவேசிப்பார். (மக்காவிலிருந்து) திரும்பும் போதும் ஃதூத்துவாவில் விடியும்வரை தங்குவார். மேலும், 'இப்படித்தான் நபி(ஸல்) அவர்கள் செய்வார்கள்' என்றும் கூறுவார்.

பகுதி 150

ஹஜ்ஜுக் காலத்தில் வியாபாரம் செய்தலும் அறியாமைக்கால கடைத் தெருக்களில் வாங்குதலும்.

1770. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

துல்மஜாஸ், உக்காழ் ஆகியவை அறியாமைக்கால வியாபாரத் தலங்களாகும். இஸ்லாம் வந்ததும் மக்கள் அவ்வணிகத் தலங்களை வெறுக்கலானார்கள்.  அப்போது '(ஹஜ்ஜின் போது) உங்களுடைய இறைவனுடைய அருளை நாடுதல் (அதாவது வியாபாரம் போன்றவற்றின் மூலமாக நேர்மையான பலன்களை அடைதல்) உங்களின் மீது குற்றமாகாது'' என்ற 02:198வது வசனம் அருளப்பட்டது. இது ஹஜ்ஜுக் காலங்களில் வியாபாரம் செய்வதைக் குறிக்கிறது.

பகுதி 151

முஹஸ்ஸபிலிருந்து இரவின் கடைசி நேரத்தில் புறப்படுதல்.

1771. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

ஹஜ் முடித்துப் புறப்படும் நாளில் ஸஃபிய்யா(ரலி)வுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. அப்போது அவர் 'நான் உங்களை (புறப்படுவதைவிட்டும்) தடுத்துவிட்டேன் எனக் கருதுகிறேன்' என்றார். உடனே நபி(ஸல்) அவர்கள் 'காரியத்தைக் கெடுத்து விட்டீரே!'' என்று கூறிவிட்டு 'இவர் நஹ்ருடைய (10-ஆம்) நாளில் வலம்வந்துவிட்டாரா?' எனக் கேட்டார்கள். அதற்கு 'ஆம்' எனச் சொல்லப்பட்டதும் 'அப்படியாயின் புறப்படு!'' என்றார்கள்.

1772. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக்குப் புறப்பட்டோம். ஹஜ்ஜை மட்டுமே எண்ணத்தில் கொண்டு (மக்காவிற்கு) வந்ததும் நபி(ஸல்) அவர்கள் எங்களை இஹ்ராமிலிருந்து விடுபடுமாறு ஏவினார்கள். நாங்கள் ஊர் திரும்பும் (நஃபருடைய) நாளின் இரவில் ஸஃபிய்யா பின்த் ஹுயை(ரலி)வுக்கு மாதவிடாய் வந்துவிட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள், 'காரியத்தைக் கெடுத்து விட்டீரே!'' என்று கூறிவிட்டு 'இவர் நம்மைத் தடுத்தேவிட்டாரே'' என்றார்கள். பிறகு அவர்கள், 'நஹ்ருடைய (10-ஆம்) நாளில், நீ வலம்வந்தாயா?' எனக் கேட்டதும் அவர் 'ஆம்' என்றார். '(அப்படியாயின்) நீ புறப்படு'' என்றார்கள்.

அப்போது நான் இறைத்தூதர் அவர்களே! நான் இன்னும் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லையே என்றேன். அதற்கவர்கள், 'தன்யீம் என்ற இடத்திற்கு போய் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து கொள்'' என்றார்கள்.

--நான் என் சகோதரருடன் புறப்பட்டு (தன்யீமுக்கு)ச் சென்றேன்.

பிறகு நாங்கள் நபி(ஸல்) அவர்களை இரவின் கடைசி நேரத்தில் - போய்க் கொண்டிருக்கும் நிலையில் சந்தித்தோம். அப்போதவர்கள் 'இன்னின்ன இடங்களில் நீ என்னைச் சந்திக்க வேண்டும்'' என்றனர்.
Previous Post Next Post