ஷரீ-அத்தின் அடிப்படையில் மாறுபட்ட கருத்துகளுடன் எவ்வாறு நடந்துகொள்வது

இந்தத் தலைப்பு, இஸ்லாமிய சட்டத்தில் (ஷரீ-அத்) மிக முக்கியமான மற்றும் நுட்பமான விஷயங்களில் ஒன்றாகும். இதை சரியாகப் புரிந்துகொள்வது, உம்மத்தின் ஒற்றுமையைப் பாதுகாக்கவும், அறிஞர்களின் இஜ்திஹாத்களை மதிக்கவும், பாரம்பரிய நூல்களின் பரந்த அர்த்தங்களைப் புரிந்துகொள்ளவும் உதவுகிறது. 

இதைப் பற்றிய சில முக்கியமான விடயங்களைப் பார்ப்போம்;

1- மாறுபட்ட கருத்துகள் என்றால்:
(கருத்து வேற்றுமைகள்)

இஸ்லாமிய அறிஞர்கள் (முஜ்தஹித்கள்) வஹியின் சொல்லாடலைப் புரிந்துகொள்வதில் அல்லது உசூல் (அடிப்படை விதிகள்), மகாஸித் (இலக்குகள்) மற்றும் இல்லத் (காரணிகள்) ஆகியவற்றைப் பயன்படுத்துவதில் சில சந்தர்ப்பங்களில் தங்களுக்குள் முரண்பட்ட போக்கை கொண்டிருப்பதால் ஷரீ-அத் சட்டங்களில் தவிர்க்க முடியாத கருத்து வேற்றுமைகள் ஏற்பட்டன.

இவை, கருத்து வேறுபாடு ஏற்படாத தெளிவான (கத்இய்யா) விஷயங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை.

- இவற்றின் வகைகள்:
(இரண்டு வகைப்படும்)

• ஏற்றுக்கொள்ள முடியுமானா கருத்து வேறுபாடு: சரியான ஆதாரங்கள் மற்றும் விதிகளின் அடிப்படையில் உருவானது.
  
• ஏற்றுக்கொள்ள முடியாத கருத்து வேறுபாடு: பலவீனமான ஆதாரம் அல்லது ஷரீஅத்தின் அடிப்படை விதிகளுக்கு முரணானது.

2- அறிஞர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டமைக்கான காரணங்கள்: 

• வஹியின் சொல்லாடலைப் புரிந்துகொள்வதில் ஏற்பட்ட வேறுபாடு. 
அதாவது பல கோணங்களில் புரிய முடியுமான குர்ஆனிய வசனங்கள் மற்றும் ஹதீஸ்கள்.

• ஹதீஸ் நம்பகத்தன்மை அல்லது அதன் தரத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு. 

- அந்தந்தக் காலப்பகுதியில் அவர்களுக்குக் கிடைத்த ஹதீஸ்களை வைத்துத் தீர்ப்பு வழங்கியமை, குறித்த ஹதீஸை பல கோணங்களில் விளங்குவதற்கு சாத்தியம் இருந்தமை, சிலருக்குக் கிடைத்த ஹதீஸ் சிலருக்குக் கிடைக்காமல் இருந்தமை அல்லது அந்த ஹதீஸின் தரம் அவர்களிடம் வித்தியாசப்பட்டமை.

• உசூல் மற்றும் மகாசித் விதிகளில் வேறுபாடு.  

- குர்ஆனிலும் ஹதீஸிலும் தெளிவாக நேரடியாக சொல்லப்படாத ஒர் பிரச்சினை வரும்போது அதற்கான ஆய்வில் நுழைந்து தத்தமது புரிதலுக்கு ஏற்ப விதிமுறைகளை உபயோகித்து அதனடிப்படையில் வஹியைப் புரிந்து தீர்ப்பு வழங்கியமை.

• அரபு மொழி மற்றும் அதன் உபயோக அர்த்தங்களில் ஏற்பட்ட வேறுபாடு.

• கலாசார வழக்காறுகள் 

- சமூகம் மற்றும் அதன் கலாசார வழக்காறுகள் போன்ற விடயங்களை கவனித்துத் தீர்ப்புகள் வழங்கியமை, சிலர் சில சந்தர்ப்பங்களில் சட்டம் எடுக்கும் விதத்தில் மனிதன் என்ற வகையில் தவறிழைத்திருக்கலாம். இவ்வாறு பல காரணிகளைக் குறிப்பிடலாம்.

அந்த வகையில் ஷரீஆவின் இரண்டாம் நிலை அம்சங்களில் அறிஞர்கள் மத்தியில் கருத்துவேறுபாடுகள் உண்டாக்குவது தவிர்க்க முடியாத இயல்பான விடயமாகும்.

3- கருத்து வேறுபாடு தொடர்பான ஷரீஅத்தின் நிலைப்பாடு: 

• ஏற்றுக்கொள்ள முடியுமான கருத்து வேறுபாட்டை  ஷரீஆ அங்கீகரிக்கிறது.

நபி (ஸல்) கூறினார்:

   "நீதிபதி இஜ்திஹாத் செய்து சரியான தீர்ப்பு வழங்கினால், அவருக்கு இரண்டு நன்மைகள் கிடைக்கும். தவறான தீர்ப்பு வழங்கினாலும், ஒரு நன்மை கிடைக்கும்." (புகாரி: 7352, முஸ்லிம்: 3240)

• கருத்து வேறுபாட்டை அணுகும் முறை

   - நியாயமான பார்வை: அறிவார்ந்த காரணங்களுடன் கூடிய மாறுபட்ட கருத்தை உணர்ச்சிவசப்பட்டு விமர்சனம் செய்யக் கூடாது.  

   - மரியாதை: எதிர்க்கருத்துடையவரின் நோக்கம் அல்லது அறிவைக் குறைத்து மதிப்பிடக்கூடாது.  

   - நியாயமான கருத்து வேறுபாடு உள்ள விஷயங்களில் கண்டனம் தெரிவிக்காமை:  

     "இஜ்திஹாதுக்குட்பட் விடயங்களில் கண்டனம் தெரிவிக்கக்கூடாது." (ஃபிக்ஹ் விதி)

4- மாறுபட்ட கருத்துகளுடன் நடந்துகொள்வதற்கான விதிமுறைகள்:

• ஏற்கத்தக்க மற்றும் ஏற்கத்தகாத கருத்து வேறுபாட்டை வேறுபடுத்துதல். 
 
• அடிப்படை (பொது) விதிகளின் பால் திரும்புதல்.  

• ஏற்கத்தக்க கருத்து வேறுபாடுகளில் ஒரு கருத்தை மட்டும் மக்களுக்கு பின்பற்றுமாறு கட்டாயப்படுத்தாமை.  

• ஒற்றுமையை நிலைநாட்ட முயற்சித்தல்.  

• வஹியை மதித்தல், மத்ஹபுகளின் வெறுப்பு மற்றும் பிடிவாதத்தைக் குறைத்தல்.  

• ஆதாரங்களின் அடிப்படையில் முன்னுரிமை வழங்குதல், கண்மூடித்தனமாகப் பின்பற்றாமை.

5- மாறுபட்ட கருத்துகளில் கண்டனம் தெரிவிப்பதற்கான வழிமுறை: 

• கண்டனம் தெரிவிக்க வேண்டிய இடங்கள்:

- இஜ்மாவை (ஒருமித்த கருத்து) எதிர்க்கும் போது.
- வெளிப்படையான பித்அத்தில் (நூதனங்கள்) ஈடுபடுபவர்.  

• கண்டனம் தெரிவிக்க முடியாத இடங்கள்:

- ஏற்கத்தக்க கருத்து வேறுபாடுகளில் ஒருவர் (இஜ்திஹாத்) ஆய்வு செய்து நடைமுறைப் படுத்தும் போது (அறிஞர்கள் மற்றும் ஷரீஆ துறை மாணவர்கள்)

6- கருத்து வேறுபாட்டை நல்ல முறையில் அணுகுவதின் பயன்: 

• உம்மத்தின் ஒற்றுமையை வலுப்படுத்துதல்.  

• அறிஞர்களையும் அவர்களின் இஜ்திஹாத்களையும் மதித்தல்.  

• சமரசத்தையும் நடுநிலையையும் பரப்புதல்.  

• வெறுப்பு மற்றும் பிளவைத் தடுத்தல்.

ஆக! மாறுபட்ட கருத்துகள், ஃபிக்ஹில் ஒரு பரந்த துறையாகும். இது, இறைவனின் ரஹ்மத் மற்றும் இஸ்லாமிய சட்டத்தின் பரந்த தன்மையைக் காட்டுகிறது. ஞானமுள்ளவர், பகைமை மற்றும் விரோதம் இல்லாமல் கருத்து வேறுபாட்டைப் புரிந்துகொள்ளும் அறிவோடு பார்க்கிறார். அவர், அறிஞர்களின் விதிமுறைகளின்படி நடந்து, ஒற்றுமையை உருவாக்குகிறார்; பிளவை ஏற்படுத்தாமல், அறிவைப் பரப்புகிறார்; உம்மத்தை ஒன்றுபடுத்த முயற்சிக்கிறார், என்றுதான் சொல்ல முடிகிறது. 

துரதிர்ஷ்டவசமாக போதிய அறிவின்மை மற்றும் குரோதம் காரணமாக சிலர் இவ்வாறான நிலைப்பாட்டில் இருப்பவர்களைப் பார்த்து இரு முகங்கள் கொண்டவர்கள் என்று அசிங்கமாக விமர்சிப்பதைப் பார்க்கிறோம், மேலும் இவர்களுக்கு மாறுபட்ட கருத்துகள் கொண்டவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற அறிவு இல்லையென்றே சொல்லவேண்டும், மேலும் அவர்கள் தம்மைத் தாமே பேரறிஞர்கள் மற்றும் முஜ்தஹிதுகள் என்று எண்ணிக் கொண்டு ஒரு மாயையை உருவாக்கி பயணிக்கிறார்கள். 

அல்லாஹ் நம் அனைவருக்கும் தெளிவான சிறந்த சிந்தனைகளையும் ஒற்றுமையைப் பலப்படுத்தும் வகையில் ஆற்றல்களையும் தந்தருள்வானாக...! (ஆமீன்)

தொகுப்பு: Ahsan Asman Muhajiri
أحدث أقدم