-ARM. ரிஸ்வான் (ஷர்க்கி)
பெண்கள் மாதவிடாய் காலத்தில் மார்க்கச் சொற்பொழிவு, அல்குர்ஆன் வகுப்பு போன்ற தேவைகளுக்காக பள்ளிவாசலுக்கு செல்வது தொடர்பில் இஸ்லாமிய அறிஞர்களிடையே இரு நிலைப்பாடுகள் காணப்படுகின்றன. பல அறிஞர்கள் அவ்வாறு செல்வது கூடாது என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் அதே வேளை, மற்றும் சில அறிஞர்கள் மாதவிடாய் காலத்தில் பெண்கள் பள்ளிவாசலுக்கு செல்ல முடியும் என்ற கருத்தைக் கொண்டிருக்கின்றனர்.
இவ்விரு நிலைப்பாடுகளுள் இரண்டாவது நிலைப்பாடே ஆதாரங்களுடன் கூடிய வலுவான நிலைப்பாடாக தெரிகிறது. இதற்கான நியாயங்கள் :
1. பள்ளிவாசலுக்கு செல்வதை தடுக்க கூடிய ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் வரவில்லை. இது தொடர்பில் ஷாபிஈ மத்ஹபின் பிரதான அறிஞர்களுள் ஒருவரான இமாம் நவவி (றஹ்) அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள் : "பள்ளிவாசலுக்கு செல்வதை தடுப்பதற்கு தெளிவான, ஆதாரபூர்வமான ஹதீஸ் எதுவும் இல்லை என்று பள்ளிவாசலுக்கு செல்வதை அனுமதிக்கும் அறிஞர்கள் குறிப்பிடுவதானது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்" (நூல் : 'அல்மஜ்மூஃ', 2/160).
2. பள்ளிவாசலுக்கு செல்லக்கூடாது என்று கூறுவோர் பின்வரும் ஹதீஸை ஆதாரமாக குறிப்பிடுவர் :
"மாதவிடாய்ப் பெண் மற்றும் குளிப்புக் கடமையானோருக்கு நான் பள்ளிவாசலை அனுமதிக்கமாட்டேன்" (அபூதாவூத், இப்னு மாஜா).
ஆயினும் மேற்படி ஹதீஸ் பலவீனமானது என ஹதீஸ்துறை அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் அப்லத், ஜஸ்ரா ஆகிய இருவரும் ஹதீஸ்துறையில் பலவீமானவர்கள் என்பதாக இமாம் ஹத்தாபி, இமாம் பைஹகி, இமாம் இப்னு ஹஸ்ம், இமாம் அப்துல் ஹக் அல்இஷ்பீலி ஆகியோர் குறிப்பிடுகின்றனர்.
ஷாபிஈ மத்ஹப் அறிஞர்களுள் ஒருவரான இமாம் பகவி (றஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : ' இமாம் அஹ்மத் மற்றும் இமாம் முஸனி (இமாம் ஷாபிஈ (றஹ்) அவர்களின் மாணவரும் ஷாபிஈ மத்ஹபின் முன்னணி அறிஞரும்) ஆகியோர் பெண்கள் மாதவிடாய் காலத்தில் பள்ளிவாசலில் தங்கியிருக்கலாம் எனக் கூறியுள்ளனர். ஏனெனில் மேற்படி ஹதீஸில் இடம்பெறும் அப்லத் என்ற அறிவிப்பாளர் 'ஹதீஸ்துறையில் அறிமுகமற்றவர்' என
இமாம் அஹ்மத் அவர்கள் விமர்சித்துள்ளார்கள்" (நூல் : ஷர்ஹுஸ் ஸுன்னா, 2/46).
இமாம் நவவி (றஹ்) அவர்களும் மேற்படி ஹதீஸ் பலவீமானது என குறிப்பிடுகிறார்கள் (நூல் : 'குலாஸதுல் அஹ்காம்', 1/206).
இவ்வாறே மாபெரும் ஹதீஸ்துறை பேரறிஞரும் ஷாபிஈ மத்ஹபின் முக்கிய அறிஞருமான ஹாபிழ் இப்னு ஹஜர் (றஹ்) அவர்களும் மேற்படி ஹதீஸ் அறிவிப்பாளரான அப்லத் என்பவர் 'யாரென அறியப்படாத ஒருவர்' என குறிப்பிடுகிறார்கள் (நூல் : 'அத் தல்ஹீஸுல் ஹபீர்', 1/140).
3. முஸ்லிமல்லாத ஒருவர் பள்ளிவாசலுக்குள் நுழைவதை மார்க்கம் அனுமதித்திருக்கும் போது ஒரு முஸ்லிம் பெண் மாதவிடாய் காரணமாக பள்ளிவாசலுக்கு வர முடியாது என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.
4. மாதவிடாய் காலத்தில் செய்யக்கூடாத காரியங்களாக தொழுவது, நோன்பு நோற்பது, தவாப் செய்வது, குடும்ப உறவில் ஈடுபடுவது போன்றவற்றை தெளிவாகவே தடைசெய்த நபியவர்கள், மாதவிடாயின் போது பள்ளிவாசலுக்கு வர முடியாது என்றிருந்தால் அது பற்றியும் குறிப்பிட்டிருப்பார்கள்.
5. நபியவர்கள் காலத்தில் மஸ்ஜிதுந் நபவியில் ஒரு பெண்மணி கூடாரம் அடித்து தங்கியிருந்தார். அவர் சில வேளைகளில் ஆஇஷா (றழி) அவர்களிடம் சென்று உரையாடிக்கொண்டிருப்பார் என்ற சம்பவம் புஹாரி, முஸ்லிம் உட்பட பல நூல்களில் பதிவாகியுள்ளது. மாதவிடாயின் போது பள்ளிவாசலினுள் இருக்க கூடாது என்றிருந்தால் நபியவர்கள் அது குறித்து இப் பெண்மணிக்கு விளக்கியிருப்பார்கள். ஆனால் இந்தப் பெண்மணிக்கு நபியவர்கள் எந்தவொரு தடையோ, கட்டுப்பாடோ விதித்திருக்கவில்லை. அது மட்டுமன்றி ஆஇஷா (றழி) அவர்கள் நபியவர்களுடன் கஃபாவிலே இருந்த போது மாதவிடாய் ஏற்பட்ட வேளை நபியவர்கள் ஆஇஷா (றழி) அவர்களுக்கு தவாப் செய்வதை மட்டுமே தடுத்தார்கள், பள்ளிவாசலினுள் இருப்பதை தடுக்கவில்லை' என இமாம் இப்னு ஹஸ்ம் (றஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள் (நூல் : 'அல்முஹல்லா', 1/401).
எனவே, பெண்கள் மாதவிடாய் காலத்தில் மார்க்கச்சொற்பொழிவு, அல்குர்ஆன், ஹதீஸ் வகுப்புகள் போன்றவற்றுக்காக ஒழுங்குகளைப் பேணி பள்ளிவாசலுக்குச் செல்ல முடியும் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
அல்லாஹு அஃலம்