முஸ்லிம் ஆட்சியாளரின் விடயத்தில் எவ்வாறு நடந்துகொள்வது?

சமீபத்தில் முஸ்லிம் நாடுகளுடைய ஆட்சியாளர்களை பற்றிய விமர்சனங்கள் சமூக ஊடகங்களில் பரவலாக காண முடிகிறது. அவ்வாறான செயற்பாடுகளை ஓர் முஸ்லிம் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டுமென்ற ஓர் ஒழுங்குமுறை உள்ளது. அதனை பேணி நடக்க வேண்டியது ஒவ்வொரு அஹ்லுஸ் ஸுன்னாவை சேர்ந்த சகோதரர்களது கடமையாக உள்ளது. 


ஆட்சியாளர் விடயத்தில் பொறுமை காப்பது :

நபி ﷺ அவர்கள் கூறியதாவது :

 ''தம் (ஆட்சித்) தலைவரிடமிருந்து (மார்க்க விஷயத்தில் குறை) எதையேனும் (கண்டு அதை) வெறுப்பவர் பொறுமையாக இருக்கட்டும்."

- இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு 'அன்ஹு) அறிவித்தார். 
நூல் : ஸஹீஹ் புகாரி 7053.


குஃப்ர் அல்லாத விடயங்களில் ஆட்சியாளருக்கு கீழ்ப்படிவது :

''நாங்கள் உற்சாகமாயிருக்கும் போதும் சோர்ந்திருக்கும்போதும் வசதியாயிருக்கும் போதும் சிரமத்திலிருக்கும் போதும் எங்களை விடப் பிறருக்கு முன்னுரிமை வழங்கப்படும் போதும்கூட (ஆட்சித் தலைவரின் கட்டளையை)ச் செவியேற்று (அவருக்குக்) கீழ்ப்படிந்து நடப்போம்; ஆட்சியதிகாரத்திலிருப்பவர்களுடன் நாங்கள் சண்டையிடமாட்டோம்; எந்த விஷயம் பகிரங்கமான குஃப்ர் (இறைமறுப்பு) என்பதற்கு அல்லாஹ்விடமிருந்து எங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளதோ அத்தகைய விஷயத்தை ஆட்சியாளரிடம் நாங்கள் கண்டாலே தவிர' என்று எங்களிடம் நபி ﷺ அவர்கள் உறுதிமொழி வாங்கியதும் அவர்கள் எங்களிடம் பெற்ற பிரமாணங்களில் அடங்கும்." 
நூல் : ஸஹீஹ் புகாரி 7056. 
 
"உங்களில் யாரேனும்  ஆட்சியாளரிடமிருந்து தாம் வெறுக்கும் செயலைக் கண்டால், அதை அவர் பகிரங்கப்படுத்த வேண்டாம்; மாறாக  ஆட்சியாளருக்கு தனிமையில் அறிவுரை கூற வேண்டும். அவர் அதனை ஏற்றுக்கொண்டால், அது நல்லது; அவர் அதனை  மறுத்தால், நீங்கள் உங்கள் கடமையை நிறைவேற்றிவிட்டீர்கள்."

நூல் : முஸ்னத் அஹ்மத் 3/403 | கிதாபுஸ் ஸுன்னா, இப்னு அபீ ஆஸிம் 3/102 
(இமாம் அல்பானி அவர்கள் இச்செய்தியை ஸஹீஹ் என்கிறார்கள்.) 


ஆட்சியாளர் தீயவராக இருந்தால்...?

அதீ பின் ஹாதிம் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவிப்பதாவது  :

நாங்கள் நபியவர்களிடம் பின்வருமாறு கேள்வி கேட்டோம் :

"இறையச்சமுள்ள, நல்ல ஆட்சியாளர்களுக்கு கீழ்ப்படிவதைப் பற்றி உங்களிடம் நாங்கள் கேட்கவில்லை. மாறாக தீய ஆட்சியாளர்களுக்கு கீழ்ப்படிவதை பற்றி கேட்கிறோம்..?" 

நபி ﷺ அவர்களது பதில் :
"அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள்ளுங்கள். ஆட்சியாளர் சொல்வதை கேட்டு, அதற்கு கீழ்ப்படியுங்கள்."

பார்க்க : தபரானி ஃபில் கபீர் 17/101 (ஹதீஸ்கலை இமாம் அல்பானி அவர்கள் இச்செய்தியை 'ஸஹீஹ்' என்று 'திலால் அல்-ஜன்னா'-வில் பதிந்துள்ளார்கள்)


இப்னு மஸ்வூத் (ரலியல்லாஹு 'அன்ஹு) அவர்களிடம் மக்கள் வந்து வலீத் இப்னு உக்பா எனும் ஆட்சியாளரைப் பற்றி ஆட்சேபனை தெரிவித்தபோது, 

இப்னு மஸ்வூத் (ரலியல்லாஹு 'அன்ஹு) அவர்கள் கொடுத்த பதில் : 
"நீங்கள் பொறுமையாக இருங்கள். 50 ஆண்டுகள் அநீதி இழைக்கும் ஆட்சியாளர் இருப்பது, 1 மாத கால குழப்பத்தை விட சிறந்தது."

- இமாம் முஸனி அவர்களின் ஷரஹ் ஸுன்னா 13


முஸ்லிம் ஆட்சியாளருக்குக் கட்டுப்படும் விடயத்தில் அஹ்லுஸ் ஸுன்னாவினரின் நிலைப்பாடு :

1) முஸ்லிம் ஆட்சியாளர் தெளிவான குஃப்ரை செய்து காஃபிராக மாறாமல் இருக்கும் வரை அவருக்குக் கட்டுப்பட வேண்டும்.

2) அவர் பாவமான ஒரு காரியத்தைச் செய்யுமாறு ஏவினால் அந்த விடயத்தில் மாத்திரம் அவருக்குக் கட்டுப்படக் கூடாது.

3) முஸ்லிம் ஆட்சியாளர் சரியான முறையில் ஆட்சிக்கு வந்தாலும் தவறான முறையில் ஆட்சியைக் கைப்பற்றினாலும் மக்கள் அவரது கட்டுப்பாட்டிற்குள் வந்த பிறகு அந்த ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி/யுத்தம் செய்வது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.

4) அநியாயக்கார ஆட்சியாளராக இருந்தாலும் அவருக்கு எதிராக கிளர்ச்சி செய்ய முடியாது.
 
5) நல்ல அணுகுமுறையில் அவரை சீர்திருத்துவதற்குரிய முயற்சியையும் அவரின் சீர்திருத்தத்திற்காக அல்லாஹ்விடம்  பிரார்த்தனையும் செய்யவேண்டும்; அவர் விடயத்தில் பொறுமையைக் கடைபிடிக்க வேண்டும். 

6) மக்களை சீர்திருத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டும். பொதுவாக மக்கள் சீராகும்பொழுது ஆட்சியாளரும் சீராகிவிடுவார். 

7) நாம் நல்ல முறையில் சொல்லியும் அவர் திருந்தாவிட்டால் எமது கடமை முடிந்துவிடும். எமது உரிமைகளை நாம் அல்லாஹ்விடம் கேட்டுப் பிரார்த்திக்க வேண்டும்.

8) அவர் தெளிவான குஃப்ரின் பக்கம் சென்று விட்டால் அவருக்கு எதிராக கிளர்ச்சி செய்ய முடியும். ஆனால் அந்த இடத்தில் இமாம்கள் ஒரு நிபந்தனையை வலியுறுத்தியுள்ளார்கள். 

நிபந்தனை : 
அதாவது அவரை நீக்கிவிட்டு அவரை விட சிறந்த ஒருவரை அந்த இடத்தில் நியமிப்பதற்குரிய சக்தி மக்களிடத்தில் இருக்கவேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தாமல் கிளர்ச்சியைத் தவிர்க்க வேண்டும்.

9) முஸ்லிம் ஆட்சியாளர் தவறு செய்யும் பொழுது அவருக்கு எதிராக கிளர்ச்சியை தூண்டுவதும், கிளர்ச்சி செய்வதும் ஹவாரிஜ்கள் எனும் வழிதவறிய பிரிவின் பண்பாகும்.

(பார்க்க:
• இமாம் இப்னு பாஸ் அவர்களின்..
 مجموع فتاوى ومقالات سماحة 7/119

• இமாம் ஸாலிஹ் அல்-ஃபவ்ஸான் அவர்களின் ...
واجبنا تجاه ولاة الأمر والعلماء - الموقع الرسمي لمعالي

தொகுப்பு: Rayyan
أحدث أقدم