எங்கிருந்து தகவல் வந்தாலும் அதை ஏற்றுக்கொள்வதை சரிகண்ட இமாம் இப்னு தைமியஹ் கூட, அத்தகவலை மக்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டால் அதை நடைமுறைப்படுத்தக் கூடாது; உள்ளுரில் கண்டாலும் பத்துப் பேர் கண்டாலும் அதை நடைமுறைப்படுத்த முடியாது என்பதையும் சரிகண்டுள்ளார்கள்.
இப்னு தைமியஹ் (றஹிமஹுல்லஹ்) அவர்களின் பின்வரும் கூற்றை நடுநிலைமையாக சிந்தித்துப்பார்த்தால் இன்று ஏற்பட்டுள்ள பிரச்சினையில் இமாம் அவர்கள் எப்படிப்பட்ட நிலைப்பாட்டை எடுப்பார்கள் என்பது புரியும்.
"وَحِينَئِذٍ فَشَرْطُ كَوْنِهِ هِلَالًا وَشَهْرًا شُهْرَتُهُ بَيْنَ النَّاسِ وَاسْتِهْلَالُ النَّاسِ بِهِ حَتَّى لَوْ رَآهُ عَشَرَةٌ وَلَمْ يَشْتَهِرْ ذَلِكَ عِنْدَ عَامَّةِ أَهْلِ الْبَلَدِ لِكَوْنِ شَهَادَتِهِمْ مَرْدُودَةً أَوْ لِكَوْنِهِمْ لَمْ يَشْهَدُوا بِهِ كَانَ حُكْمُهُمْ حُكْمَ سَائِرِ الْمُسْلِمِينَ فَكَمَا لَا يَقِفُونَ وَلَا يَنْحَرُونَ وَلَا يُصَلُّونَ الْعِيدَ إلَّا مَعَ الْمُسْلِمِينَ فَكَذَلِكَ لَا يَصُومُونَ إلَّا مَعَ الْمُسْلِمِينَ وَهَذَا مَعْنَى قَوْلِهِ: {صَوْمُكُمْ يَوْمَ تَصُومُونَ وَفِطْرُكُمْ يَوْمَ تُفْطِرُونَ وَأَضْحَاكُمْ يَوْمَ تُضَحُّونَ}. وَلِهَذَا قَالَ أَحْمَد فِي رِوَايَتِهِ: يَصُومُ مَعَ الْإِمَامِ وَجَمَاعَةِ الْمُسْلِمِينَ فِي الصَّحْوِ وَالْغَيْمِ. قَالَ أَحْمَد : يَدُ اللَّهِ عَلَى الْجَمَاعَةِ. وَعَلَى هَذَا تَفْتَرِقُ أَحْكَامُ الشَّهْرِ: هَلْ هُوَ شَهْرٌ فِي حَقِّ أَهْلِ الْبَلَدِ كُلِّهِمْ؟ أَوْ لَيْسَ شَهْرًا فِي حَقِّهِمْ كُلِّهِمْ؟ يُبَيِّنُ ذَلِكَ قَوْله تَعَالَى {فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ} فَإِنَّمَا أَمَرَ بِالصَّوْمِ مَنْ شَهِدَ الشَّهْرَ وَالشُّهُودُ لَا يَكُونُ إلَّا لِشَهْرٍ اشْتَهَرَ بَيْنَ النَّاسِ حَتَّى يُتَصَوَّرَ شُهُودُهُ وَالْغَيْبَةُ عَنْهُ. {وقول النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إذَا رَأَيْتُمُوهُ فَصُومُوا وَإِذَا رَأَيْتُمُوهُ فَأَفْطِرُوا وَصُومُوا مِنْ الْوَضَحِ إلَى الْوَضَحِ} وَنَحْوُ ذَلِكَ خِطَابٌ لِلْجَمَاعَةِ لَكِنْ مَنْ كَانَ فِي مَكَانٍ لَيْسَ فِيهِ غَيْرُهُ إذَا رَآهُ صَامَهُ فَإِنَّهُ لَيْسَ هُنَاكَ غَيْرُهُ" مجموع الفتاوى (25/117)
“ஒரு பிறை, பிறையாகவும் மாதமாகவும் இருப்பதற்கு நிபந்தனை யாதெனில் அது மக்களுக்கு மத்தியில் பிரபல்யமடைய வேண்டும்; (பிறை தென்பட்டுவிட்டது என்று) அதைப் பற்றி அவர்கள் பேசவேண்டும் என்பதாகும். பத்து நபர்கள் தான் பிறையைக் கண்டு அவர்களின் சாட்சியம் மறுக்கப்பட்டு அல்லது அவர்கள் சாட்சிசொல்லாமல் இருந்ததால் அந்தப் பிறை அந்த நகரத்தின் மக்களிடத்தில் பிரபல்யம் அடையவில்லையானால் ஏனைய முஸ்லிம்களுக்குரிய சட்டம் தான் பிறை கண்டவர்களுக்குமுரிய சட்டமாகும். (அவர்கள் தாம் கண்ட பிறை அடிப்படையில் செயற்படக்கூடாது.) அவர்கள் எவ்வாறு முஸ்லிம்களுடன் தான் அறபஹ்வில் தரிப்பார்களோ, அறுத்துப்பழியிடுவார்களோ, பெருநாள் தொழுவார்களோ அவ்வாறே முஸ்லிம்களுடன் தான் நோன்பும் நோற்க வேண்டும். "நீங்கள் நோன்பு நோற்கும் நாளில் தான் உங்களுடைய நோன்பு; நீங்கள் பெருநாள் கொண்டாடும் நாளில் தான் உங்களுடைய பெருநாள்" என்ற ஹதீஸின் கருத்தும் இதுவாகும். இதனால் தான் வானம் தெளிவாக இருக்கும் நிலையிலும் மேகமூட்டம் ஏற்படும் நிலையிலும் இமாமுடனும் முஸ்லிம் ஜமாஅத்துடனும் நோன்பு நோற்க வேண்டும் என்றும், அல்லாஹ்வின் கை ஜமாஅத் (கூட்டத்)தின் மீது இருக்கிறது என்றும் இமாம் அஹ்மத் அவர்கள் கூறியிருக்கிறார்கள். இதனடிப்படையில் தான் அந்த மாதம் அந்த நகரத்தின் அனைத்து மக்களுக்குமுரிய மாதமா? அல்லது அது அவர்கள் அனைவருக்குமுரிய மாதம் இல்லையா? என்ற மாதத்தின் சட்டங்கள் பிரிகின்றன. அதனை அல்லாஹ்வின் கூற்றான {உங்களில் யார் மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு நோற்கட்டும்} என்ற வசனம் தெளிவுபடுத்துகின்றது. அல்லாஹ் நோன்பு நோற்க்குமாறு கட்டளையிட்டது மாதத்தை அடைந்தவருக்குத்தான். மாதத்தை அடைவது அல்லது அடையாமல் இருப்பது என்று கற்பனை செய்வதற்கு அந்த மாதம் மக்களிடத்தில் பிரபல்யம் அடைய வேண்டும். அப்படிப் பிரபல்யம் அடையாத மாதத்தை அடைய முடியாது. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் கூற்றான "நீங்கள் பிறையைக் கண்டால் நோன்பு பிடியுங்கள்; நீங்கள் பிறையைக் கண்டால் நோன்பை விடுங்கள்" என்ற ஹதீஸும் இதனை தெளிவுபடுத்துகின்றது. இது போன்ற கட்டளை ஜமாஅத்-கூட்டத்திற்குரிய கட்டளையாகும். ஆனால் எவருமில்லாத ஒரு இடத்தில் ஒருவர் மாத்திரம் தனியாக இருந்தால் அவர் நோன்பு நோற்க வேண்டும். ஏனெனில் அங்கே அவரைத் தவிர வேறொருவரும் இல்லை."
சுட்டிக்காட்டப்பட்ட கூற்றிலும் வேறு இடங்களிலும் இப்னு தைமியஹ் (றஹிமஹுல்லஹ்) சொல்ல வருவது என்ன என்பதைச் சற்று சிந்தியுங்கள்.
1. மாதம் என்பதைக் குறிக்கும் 'ஷஹ்ர்’ என்ற அரபுச் சொல் பிரபல்யம் என்ற அர்தத்தை உள்ளடக்கியுள்ளது. ஒரு கூட்டத்திற்கு மாதம் ஏற்பட்டுவிட்டது என்று சொல்வதற்கு அவர்களிடத்தில் அது பிரபல்யமடைய வேண்டும்.
2. பிறையைக் குறிக்கும் ‘ஹிலால்’ என்ற அறபுப் பதம் சப்தமிடுதல், பேசுதல் என்ற அர்த்தத்தைத் தருகிறது. ஒரு கூட்டம் எந்தப் பிறையைப் பற்றி எங்களுக்குப் பிறை பிறந்துவிட்டது என்று பரவலாகப் பேசிக்கொள்ளவில்லையோ அது அந்த கூட்டத்திற்குப் பிறையாக அமையாது. அதனைப் பத்து நபர்கள் தான் கண்டாலும் பரவாயில்லை. இப்படியான நிலையில் பிறை கண்டவர்களும் அவர்களின் தகவலை நம்பியவர்களும் கூட்டத்தை விட்டுப்பிளவுபடமுடியாது.
3. ஒரு கூட்டம் துல்ஹஜ் பிறையை மக்கஹ்வில் தென்படுவதற்கு ஒரு நாளைக்கு முன்னால் கண்டுவிட்டால் அது மக்கஹ்வில் ஏற்றுக்கொள்ளப்படாத போது அவர்கள் ஹஜ்ஜின் கிரியைகளைத் தமது பிறையின் அடிப்படையில் செயற்படுத்தமுடியாது. அங்கே உள்ள முஸ்லிம்கள் அறபஹ்வில் தரிக்கும் நாளாகிய இவர்களின் பிறையின் அடிப்படையில் பத்தாவது நாளில் தான் இவர்களும் அறபஹ்வில் தரிக்க வேண்டும். ஏனைய கிரிகைகளையும் அவ்வாறே நிறைவேற்ற வேண்டும். இதில் எவருக்கும் கருத்து வேறுபாடில்லை. எனவே இதே தீர்ப்புத் தான் நோன்பு, நோன்புப் பெருநாள் ஆகிய தினங்களுக்கும் சரியாகும். ஹஜ்ஜில் மக்களுக்கு மாற்றம் செய்ய முடியாது என்று கூறிவிட்டு நோன்பிலும் நோன்புப்பெருநாளிலும் மக்களுக்கு மாற்றமாக நடக்க முடியும் என்று கூறுவது முரண்பாடாகும்.
4. பெரும்பான்மை மக்களுடன் தான் பிறைவிடயத்தில் சேர்ந்து நடக்க வேண்டும் என்பதற்கு “நீங்கள் நோன்பு நோற்கும் நாளில் தான் உங்களின் நோன்பு; நீங்கள் பெருநாள் எடுக்கும் நாளில் தான் உங்களின் பெருநாள்’’ என்ற நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் ஹதீஸ் ஆதாரமாகும்.
5. {உங்களில் மாதத்தை அடைந்தவர் நோன்பு நோற்கட்டும்} என்ற அல்லாஹ்வின் வசனத்திலிருந்து ஒரு கூட்டத்தாரிடத்தில் ஒருவரோ பலரோ பிறையைக் கண்டு அது ரமழான் மாதம் என்று மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு பிரபல்யம் அடையவில்லை என்றால் அந்த நாளில் அவர்களில் ஒருவரும் நோன்பு பிடிக்கமுடியாது. ஏனெனில் மக்களிடம் அந்த மாதம் பிரபல்யம் அடைந்தால் தான் அதனை அடையமுடியும்.
6. “நீங்கள் பிறை கண்டு நோன்பு பிடியுங்கள்" என்ற ஹதீஸ் தனிப்பட்டவர்களுக்கு உரியதல்ல. ஒரு கூட்டத்திற்கு உரியது. கூட்டத்திற்கு மாற்றமாக ஒருவரோ இருவரோ நோன்பையோ பெருநாளையோ எடுக்க முடியாது.
எனவே சிலர் நினைப்பதைப் போல ஒரு பிரதேசத்தின் பெரும்பான்மை மக்களுக்கு மாற்றமாக நோன்பையோ பெருநாளையோ எடுக்க வேண்டும் என்று இப்னு தைமியா (றஹிமஹுல்லஹ்) அவர்கள் கூறவில்லை.
*வானியலை அடிப்படையாக வைத்து பிறை சாட்சியம் மறுக்கப்பட்டால் மக்கள் என்ன செய்ய வேண்டும்?*
*இமாம் இப்னு தைமியஹ் (றஹிமஹுல்லாஹ்) அவர்களின் பதிலின் சுருக்கம்*:
ஒருவர் பிறை கண்டதை அதற்குப் பொறுப்பானவர் ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவர் தான் கண்ட பிறையின் அடிப்படையில் செயல்படக்கூடாது. மக்களுடன் சேர்ந்து தான் நோன்பும் பெருநாளும் எடுக்க வேண்டும். சிலவேளை பிறை கண்டதை உறுதிப்படுத்துவதற்காக பொறுப்புக்கொடுக்கப்பட்டுள்ள தலைவர் நம்பகமானவர்களின் சாட்சியத்தை மறுப்பதன் மூலம் திறக்குறைவு செய்பவராக இருக்கலாம். அதாவது சாட்சியாளர்களின் நம்பகத் தன்மையை தேடிப் பார்ப்பதில் கவனயீனமாக இருப்பதன் மூலமாகவோ *தனக்கும் அவர்களுக்கும் மத்தியில் இருக்கும் பகைமை* அல்லது *மார்க்கத்தில் இல்லாத வேறு காரணங்களுக்காக* அவர்களின் சாட்சியத்தை அவர் மறுப்பதன் மூலமாகவோ அல்லது *வானவியலாளரின் அன்று பிறை காண முடியாது என்ற தவறான வாதத்தை ஏற்றுக்கொண்டு சாட்சியத்தை மறுக்கக்கூடியவராகவோ* அவர் இருக்கலாம். அப்போதும் பிறையைத் தீர்மானிப்பதில் அவர் கருத்தை ஏற்கவேண்டுமா? என்று கேள்வி கேட்டால், அதற்குப் பதில்: ஆம் சரியான அல்லது தவறான முடிவுக்கு வரக்கூடிய நேர்மையான ஆய்வாளராக அவர் இருந்தாலும் அல்லது அந்த விடயத்தில் (மேலே கூறப்பட்டதைப் போன்று) குறை செய்யக் கூடியவராக இருந்தாலும் அவரின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளவேண்டும்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் ஆட்சித் தலைவர்கள் விடயத்தில் "அவர்கள் உங்களுக்குத் தொழுகை நடத்துவார்கள். அவர்கள் சரியாகத் தொழுதால் உங்களுக்கும் அவர்களுக்கும் நன்மையுண்டு. அவர்கள் (வேண்டுமென்றே) பிழை செய்தால் உங்களுக்கு நன்மையும் அவர்களுக்குப் பாவமுமுண்டு" என்று கூறியுள்ளார்கள். எனவே அவரின் பிழைக்கும் திறக்குறைவுக்கும் அவர் மீதே குற்றம் ஏற்படுமே தவிர பிழைசெய்யாத திறக்குறைவு செய்யாத முஸ்லிம்கள் மீது குற்றம் ஏற்படாது.
(பார்க்க :- அல்-பதாவா அல்-குப்ரா, பாகம்:- 2, பக்கம்:- 460–464)
பின்னர் இப்னு தைமியஹ் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் வானவியலை அடிப்படையாகக் கொண்டு தலைப்பிறையைத் தீர்மானிப்பதைத் தவறானது; அப்படி செய்பவர் மார்க்கத்தில் வழிகெட்டவர்; பித்அத்செய்பவர் என்று விளக்கிக் கொண்டு செல்கிறார். இதன் மூலம் நாம் விளங்கிக் கொள்வது யாதெனில் முஸ்லிம்களின் பிறையைத் தீர்மானிக்க பொறுப்புச் சுமத்தப்பட்டவர் தவறிழைத்தால் அல்லது வானவியலைப் பயன்படுத்தி இன்று பிறையைக் காணமுடியாது என்று முடிவுசெய்து நம்பகமானவர்களின் சாட்சியத்தை மறுத்தால் அவரின் செயல் பித்அத் ஆக இருந்த போதிலும் அவரையே முஸ்லிம்கள் ஏற்கவேண்டும். அவர் செய்த குற்றத்திற்கு அவர் மாத்திரமே பொறுப்புச் சுமக்க வேண்டும். ஏனைய அவரைப் பின்பற்றிய முஸ்லிம்கள் அல்ல என்பதாகும். இதுவே இமாம் இப்னு தைமியஹ் (றஹிமஹுல்லாஹ்) அவர்களின் கருத்தாகும். இமாம் அவர்கள் பிறை கண்ட தகவல் எங்கிருந்து வந்தாலும் அதை ஏற்க வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருந்தார்கள். எனினும் பிறைத் தகவலை பொறுப்பானவர் மறந்ததால் மக்கள் அவருக்கு மாறு செய்யக்கூடாது என்றும் கூறியுள்ளார்.
قال الإمام ابن تيمية (رحمه الله) في الفتاوى الكبرى (2/460-464 ): *فَإِنْ قِيلَ: قَدْ يَكُونُ الْإِمَامُ الَّذِي فُوِّضَ إلَيْهِ إثْبَاتُ الْهِلَالِ مُقَصِّرًا، لِرَدِّهِ شَهَادَةَ الْعُدُولِ، إمَّا لِتَقْصِيرِهِ فِي الْبَحْثِ عَنْ عَدَالَتِهِمْ، وَإِمَّا رَدَّ شَهَادَتَهُمْ لِعَدَاوَةٍ بَيْنَهُ وَبَيْنَهُمْ، أَوْ غَيْرُ ذَلِكَ مِنْ الْأَسْبَابِ، الَّتِي لَيْسَتْ بِشَرْعِيَّةٍ، أَوْ لِاعْتِمَادِهِ عَلَى قَوْلِ الْمُنَجِّمِ الَّذِي زَعَمَ أَنَّهُ لَا يُرَى. قِيلَ: مَا يَثْبُتُ مِنْ الْحُكْمِ لَا يَخْتَلِفُ الْحَالُ فِيهِ بَيْنَ الَّذِي يُؤْتَمُّ بِهِ فِي رُؤْيَةِ الْهِلَالِ، مُجْتَهِدًا مُصِيبًا كَانَ أَوْ مُخْطِئًا، أَوْ مُفَرِّطًا، فَإِنَّهُ إذَا لَمْ يَظْهَرْ الْهِلَالُ وَيُشْتَهَرْ بِحَيْثُ يَتَحَرَّى النَّاسُ فِيهِ. وَقَدْ ثَبَتَ فِي الصَّحِيحِ أَنَّ {النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: فِي الْأَئِمَّةِ: يُصَلُّونَ لَكُمْ، فَإِنْ أَصَابُوا فَلَكُمْ وَلَهُمْ، وَإِنْ أَخْطَئُوا فَلَكُمْ وَعَلَيْهِمْ}". فَخَطَؤُهُ وَتَفْرِيطُهُ عَلَيْهِ، لَا عَلَى الْمُسْلِمِينَ الَّذِينَ لَمْ يُفَرِّطُوا، وَلَمْ يُخْطِئُوا. وَلَا رَيْبَ أَنَّهُ ثَبَتَ بِالسُّنَّةِ الصَّحِيحَةِ وَاتِّفَاقِ الصَّحَابَةِ أَنَّهُ لَا يَجُوزُ الِاعْتِمَادُ عَلَى حِسَابِ النُّجُومِ، كَمَا ثَبَتَ عَنْهُ فِي الصَّحِيحَيْنِ أَنَّهُ قَالَ: {إنَّا أُمَّةٌ أُمِّيَّةٌ لَا نَكْتُبُ، وَلَا نَحْسُبُ، صُومُوا لِرُؤْيَتِهِ، وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ}". وَالْمُعْتَمِدُ عَلَى الْحِسَابِ فِي الْهِلَالِ، كَمَا أَنَّهُ ضَالٌّ فِي الشَّرِيعَةِ، مُبْتَدِعٌ فِي الدِّينِ، فَهُوَ مُخْطِئٌ فِي الْعَقْلِ وَعِلْمِ الْحِسَاب...*
-ஸுன்னாஹ் அகாடமி