பிறை சம்பந்தமான சில ஐயங்களும் தெளிவுகளும்

பிறை தீர்மானம் அதிகாரம் வழங்கப்பட்ட ஒரு அமைப்பிடமிருந்து வர வேண்டும். அதனை வைத்துத்தான் இஸ்லாமிய மாதம் ஆரம்பமாகும். இதனைப் புரிந்து கொண்டால் சர்வதேசப் பிறை, தேசியப் பிறை என முரண்பட வேண்டிய அவசியமில்லை. 

”மக்கள் நோன்பு நோற்கும் நாளே நோன்பு மக்கள் விடும் நாளே பெருநாள்” என்ற ஹதீஸ் இதனையே கூறுகின்றது. 

பெரும்பான்மையான மக்கள் எந்தத் தீர்மானத்தை எடுக்கின்றனரோ அதன்படியே செயற்பட வேண்டும் என்பதே இதன் கருத்து என்பதாக அறிஞர்கள் இதற்கு விளக்கம் கூறுகின்றனர்.

பெரும்பான்மைாயனவர்கள் எப்போதும் அதிகாரபூர்வமான அறிவித்தல்களை மாத்திரமே பின்பற்றுவர். எனவே அதனைப் பின்பற்றுவதே நபிவழி மற்றும் வரலாறு நெடுகிலும் இஸ்லாமிய சமுதாயம் பின்பற்றி வந்த முறை.

எனது குறுகிய அறிவின்படி இஸ்லாமிய வரலற்றில் ஒரே பிறையா பல பிறையா என்ற கருத்து வேற்றுமை கோட்பாட்டில் இருந்த போதும் நடைமுறையில் கருத்து வேற்றுமை காணப்படவில்லை. தான் எக்கருத்தில் இருந்தாலும் அதிகாரப்பூர்வமான முடிவுக்கே கட்டுப்பட்டுள்ளனர். அதனை மீறி தன்னிச்சையான முடிவுகளுக்குச் சென்றதாக எந்தவொரு வரலாற்றுத் தகவலும் இல்லை. 

அவ்வாறின்றி ஒவ்வொரு அமைப்பும் தாம் பலமானதாகக் கருதும் கருத்தின் படி செயற்படச் சென்றால் எல்லோருமாக சேர்ந்து சந்தோஷமாகக் கொண்டாட வேண்டிய பெருநாளைக் கூட கவலையோடு கழிக்க வேண்டி வரும்.

அதிகாரத்தில் உள்ளவர்கள் சர்வதேச பிறையை நடைமுறைப்படுத்த முன்வந்தால் அரசுகளுக்கிடையிலுள்ள சர்வதேச தொடர்புகளை வைத்து அவர்களால் இலகுவாக அதனைச் சாத்தியப்படுத்த முடியும். அவ்வாறில்லாமல் சிறு சிறு அமைப்புக்கள் இயக்கங்கள் அதனைக் கையிலெடுத்தால் அதனை அவர்களால் நடைமுறைப்படுத்துவது சாத்தியமற்ற ஒன்றாகும் என்பதற்கு பல முறைகள் நடைபெற்ற தடுமாற்றங்கள்  சான்றாகும்.

தேசிய பிறையை ஏற்றுக்கொண்டவர்களும் பிறை கண்ட தகவல்கள் ஆங்காங்கே கிடைத்தாலும் அவற்றைக் கவனத்தில் கொள்ளக்கூடாது. மாறாக உத்தியோகபூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும். முடிவெடுப்பவர்கள் தவறுவிட்டால் அதற்கு நாம் பொறுப்பல்ல. 

எனவே யாரெல்லாம் இந்த விடயத்தில் குழம்பிக்கொள்ளக் கூடாது என நினைக்கிறார்களோ அவர்கள் தத்தமது நாடுகளில் உள்ள உத்தியோகபூர்வ பிறை அறிவித்தல்களைப் பின்பற்றுவதன் மூலம் நிம்மதியாக நோன்பை நோற்கவும் முடியும். பெருநாளையும் கொண்டாடலாம்.

பிறை சம்பந்தமான சில ஐயங்களும் தெளிவுகளும்

ஐயம் 01

பிறைக் குழு ஆட்சியாளர்கள் இல்லையெனும் போது ஏன் அவர்களுக்குக் கட்டுப்பட வேண்டும்?

பதில்

பிறைக்குழுவுக்கு மாறு செய்வது கூடாது என்பது அவர்கள் ஆட்சியாளர்கள் என்பதனால் அல்ல. மாறாக தற்போதைய சூழலில் நோன்பையும் பெருநாளையும் மக்களுடன் சேர்ந்து முடிவெடுங்கள் என்ற ஹதீஸை நடைமுறைப்படுத்துவதற்கு சாத்தியமான முறை அதுமாத்திரமே. ஏனெனில் குறித்த ஹதீஸின் கருத்து பெரும்பான்மை மக்களைக் கவனத்தில் கொள்வதுதான் என ஹதீஸ்கலை அறிஞர்கள் விளக்கம் வழங்கியுள்ளனர். நாட்டின் பெரும்பான்மையானவர்கள் பிறைக்குழுவின் அறிவிப்பின்படியே செயற்படுவதே யதார்த்தமாகும்.

ஐயம் 02
ஹதீஸில் இடம்பெறும் ”மக்கள்”என்ற வார்த்தை பிரயோகம் உலக மக்களா ? நாட்டு மக்களா? 

பதில்
அதன் கருத்து நாட்டு மக்கள்தான் என்றே தற்கால அறிஞர்களின் கூற்றுக்களில் இருந்து புரிய முடிகின்றது. அதுவே அறிவுபூர்வமானதும் கூட. ஏனெனில் நாம் உலகுத்துடன் ஒத்துச் செல்கின்றோம் எனக் கூறி உறவையும் ஊரையும் பிரிந்துசெல்வது எவ்விதத்தில் நியாயம்? மக்கள் உறங்கும் போது இரவுத் தொழுகையில் ஈடுபடுங்கள் என்ற ஹதீஸில் வரும் ”மக்கள்” என்பதை எவ்வாறு நமக்கு அருகாமையில் உள்ளோர் எனப் புரிந்துகொள்கின்றோமோ அது போன்றே இதனையும் புரிய வேண்டும்.

ஐயம் 03
ஒரே நாட்டில் வேறு வேறு நாட்களில் நோன்பையும் பெருநாளையும் முடிவுசெய்யலாம் என்பது இஜ்திஹாதுக்குட்பட்ட பிரச்சினையா?

பதில்
உள்நாட்டுப் பிறை சரியா, சர்வதேசப் பிறை  சரியா? என்பதுதான்  இஜ்திகாதுக்குட்பட்ட பிரச்சினை. ஆனால் அதுவல்ல நமது தலைப்பு. மாறாக ஒரு நாட்டில் பெரும்பான்மை மக்களால் பின்பற்றப்படும் பிறைமுடிவுக்கு மாற்றமாக தமது சொந்தக் கருத்தை சிலர் நடைமுறைப்படுத்தி நோன்பையும் பெருநாளையும் முடிவசெய்வது இஜ்திஹாதுக்குட்பட்ட விடயமா என்பதே கேள்வி. 

ஆம், அதுவும் இஜ்திஹாதுக்குட்பட்டதுதான் என்று கூறினால் ”ஒரே நாட்டில் அவரவர் கருத்துப்படி வெவ்வேறு நாட்களில் பெருநாள் கொண்டாடலாம்” எனக் கூறிய அந்த அறிஞர்கள் பட்டியலை வழங்குங்கள். அவ்வாறு தர முடியாவிட்டால் இது இஜ்திஹாதுக்குட்பட்ட பிரச்சினையில்லை என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் இஜ்திஹாதுக்குட்பட்டதாக இருந்தால் இஸ்லாமிய வரலாற்றில் அதன் தாக்கம் இருந்திருக்க வேண்டும் அறிஞர்கள் அதனைப் பற்றி பேசியிருப்பார்கள். 

ஒரே நாட்டு மக்கள் பிறை விடயத்தில் முரண்பட்டு நடந்து கொள்ளலாம் என என எந்தவொரு இஸ்லாமிய அறிஞரும் புரியவில்லை. இது நமது தமிழுலகில் தோன்றிய ஒரு கலாச்சாரம். 

ஐயம் 04
முஸ்லிமல்லாத நாடுகளின் பிறைக்குழுத் தீர்மானங்களை ஏற்றுக்கொள்ள வேண்டுமா?

பதில்
ஆம், ஏற்றுக்கொள்ள வேண்டும் அதற்கு மாறு செய்யலாம் என முஜ்தஹிதுகளான எந்தவொரு ஆய்வாளரோ அறிஞரோ கூறியதாக நமக்குத் தெரியவில்லை. 

சவூதி அரேபியாவின் உலமாக்கள் சபைகூட தமது பத்வாவில் ஒரு நாட்டில் ஆட்சியாளர் முஸ்லிமாக இல்லாவிட்டால் அங்குள்ள முஸ்லிம்கள் அந்நாட்டிலுள்ள இஸ்லாமிய மையத்தின் தீர்ப்பின் படி செயற்பட்டு நோன்பிலும் பெருநாள் தொழுகையிலும் ஒற்றுமை பேண வேண்டும் என்றே தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

ஐயம் 05
பிறை கண்ட சாட்சியை விசாரித்து நாம் சொந்தமாக முடிவெடுப்பது எவ்வாறு தவறாகும்?

பதில்
இக்கேள்வி தனிநபர் செயற்பாடுகளுக்கு வேண்டுமானால் பொருந்தலாம். இது ஒரு சமூக நிகழ்வு. எனவே இங்கு பொதுநலவே கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்பதனால்தான் காழியின் தீர்ப்புக்கெதிராக நடந்துகொள்ளக் கூடாது என இஸ்லாம் வழிகாட்டுகின்றது. காழியினால் சாட்சி மறுக்கப்பட்டவர் தான் கண்ட பிறையில் உறுதியாக இருந்தால் அவர் தன்னிச்சையாக முடிவெடுக்கலாமா இல்லையா என்றுதான் பிரச்சினை உள்ளதே தவிர, அவர் கூறுவதை வைத்து மற்றவர்கள் கூட்டாக முடிவெடுக்குமாறு இஸ்லாமிய உலகில் ஏற்கத்தக்க எந்தவொரு அறிஞரும் கூறியதாகத் தெரியவில்லை.

இவ்வளவு கூறியும் யார் கூறினாலும் நாம் கேட்கமாட்டோம், நமது இஜ்திஹாதின் படி நடப்பதில் உங்களுக்கென்ன பிரச்சினை? எனக் கேட்பதாக இருந்தால் அவர்களுக்கும் பிஜேவாதிகளுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை. ஏனெனில் அவர்களும் சூனியம் மற்றும் ஹதீஸ் விடயங்களில் தமது சொந்த இஜ்திஹாதையே முன்வைக்கின்றனர். அதற்கு மறுப்பு வழங்கும் போது அவர்களுக்கெதிராக முன்வைக்கப்பட்ட பலமான ஆதாரம் உங்களைப் போன்று இந்தக் குர்ஆன் வசனத்தை ஹதீஸை யாரும் புரியவில்லை என்பதுதான். 
நாமும் அதே வாதத்தையே தமது நாட்டில் பிறைவிடயத்தை தன்னிச்சையாக முடிவெடுப்போரிடத்திலும் முன்வைக்கின்றோம். மக்களுடன் சேர்ந்து நோன்பும் பெருநாளும் எடுங்கள் என்ற ஹதீஸை நீங்கள் புரிந்து நடைமுறைப்படுத்துமாறு ஏதாவது ஒரு இஜ்திஹாத் செய்யத்தகுதியான ஒரு அறிஞராவது கூறியுள்ளாரா?

அப்படிக்கூறாவிட்டால் இந்த விளக்கத்தை எங்கிருந்து பெற்றீர்கள்? 

ஐயம் 06
நமக்கு சரியானது எனத் தெரியும் விடயத்துக்குத் தெரிந்துகொண்டே மாற்றம் செய்யலாமா?

பதில்
ஆம், பிறை விடயத்தில் அவ்வாறுதான் செயற்பட வேண்டும். 
உதாரணமாக துல்ஹஜ் மாதப் பிறை காண்பதில் சவூதி அரேபியாவில் தாமதம் ஏற்பட்டு சர்வதேசப் பிறையை விட ஒரு நாள் தாமதித்தாலும் நாம் நமது இஜ்திஹாதை விட்டுக்கொடுத்து சவூதி எதனை ஹஜ்ஜுடைய தினங்களாக முடிவெடுக்கின்றதோ அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லை இங்கும் நமது இஜ்திஹாதுக்கு மாற்றம் செய்யமாட்டோம் அனைவருக்கும் மாற்றமாக முடிவெடுப்போமா? அல்லது ஹஜ்ஜையே தவிர்ப்போமா? 

இச்சந்தர்ப்பத்தில் எவ்வாறு அரபா நாள் இல்லை என்று நாம் நம்பும் ஒருநாளில் அரபாவில் தங்குவோமோ அது போன்றே நோன்பிலும் பெருநாளிலும் செயற்பட வேண்டும்.

எனவே நாம் சரியெனக் கருதும் சில இஜ்திஹாதுக்குட்பட்ட மஸ்அலாக்களில் பொது நலனைக் கருத்திற்கொண்டு விட்டுக்கொடுத்து நடப்பதே இஸ்லாம் காட்டித்தரும் வழிமுறையாகும் என்பதை இலகுவாக புரிந்துகொள்ள முடியும். 

ஐயம் 07
பிறைக் குழுவினர் தவறான கொள்கையிலே இருந்தாலும் அவர்களின் தீர்ப்புக்கள் செல்லுபடியாகுமா?

பதில்
ஆம். இதுவே இஸ்லாமிய வரலாறு நெடுகிலும் இடம்பெற்று வரும் ஒரு விடயமாகும்.

இன்றுள்ள பிறைக்குழுக்களை விட மோசமான நிராகரிப்பை உண்டாக்கும் கொள்கையில் இருந்த வழிகெட்ட முஃதஸிலாக்களின் காழிமார்களுக்குக் கூட கட்டுப்பட்டுத்தான் அஹ்லுஸ் ஸுன்னா அறிஞர்களும் முடிவுகளை எடுத்துள்ளனர். இதற்க மாற்றமாக அவர்களின் நீதிபதிகளை நாம் நம்ப முடியாது என பிறைகண்டவர்களிடம் இமாம்கள் நேரடியாகவோ கழுவமைத்தோ பிறையை ஊர்ஜிதம் செய்து உறுதிப்படுத்துவதற்கு முயற்சித்ததாக எந்தவொரு வரலாற்றுச் சான்றையும் காட்ட முடியாது. 

ஐயம் 08
பல்வேறு விடயங்களில் நாம் பிரிந்துசெயற்படும் போது, நோன்பிலும் பெருநாளிலும் பிரிந்து செயற்பட்டால் என்ன பிரச்சினை?

பதில்

இஜ்திஹாதுக்கு அப்பாற்பட்ட மார்க்கத்தில் தெளிவாக வழிகாட்டப்பட்ட விடயங்களில் தவறான கருத்தைவிட்டும் பிரிந்திருப்பது வரவேற்கத்தக்கதே. ஆனால் இங்கு இஜ்திஹாதுக்குட்பட்ட ஹதீஸில் ஒற்றுமையாக முடிவெடுக்குமாறு கூறப்பட்ட விடயத்தில் ஒற்றுமையைப் பாதிக்கும் விதத்தில் நடந்துகொள்ளக் கூடாது. ஐவேளை மற்றும் ஜும்மாத் தொழுகைகளிலும் பிரிந்திருந்தாலும் அங்கு நாளில் எந்த மாற்றமும் இல்லை. இங்கு நாளே மாறுவதோடு பெருநாள் சந்தோசத்தையே இழக்கச்செய்துவிடுகின்றது. 

பிறை கண்ட சாட்சியத்தை ஒரு நாட்டிலுள்ள குறிப்பிட்ட ஒரு பிறைக்குழு மாத்திரமின்றி விரும்பியவர்கள் ஊர்ஜிதம் செய்யலாம் என்றால் நோன்பும் பெருநாளும் கூட்டமல்களாக இன்றி தனிப்பட்ட அமல்களாக மாறிவிடும். 

ஏனெனில் ஒரு பிறைக்குழுவுக்குக் கட்டுப்படுவது அவசியமில்லை என்றால் எந்தப் பிறைக்குழுவுக்கும் கட்டுப்பட வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொருவரும் பிறைச் சாட்சியத்தை தான் விரும்பினால் ஏற்கவும் மறுக்கவும் முடியும்.

எனவே பிறைக்குழுவுக்குக் கட்டுப்படாது ஒவ்வொருவரும் தான்தோன்றித்தனமாக முடிவெடுப்பதற்கே இவ்வாறான நிலைப்பாடுகள் மக்களை இட்டுச்செல்லும்.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

-அப்துல்லாஹ் உவைஸ் மீஸானி

Previous Post Next Post