நம் சமூகத்தில் பதுக்கல் மூலம் பொருளீட்டும் முறை பற்றிய சட்டத் தெளிவானது அவசியமாக பேசப்பட வேண்டிய ஒரு அம்சமாகும்.
உலகமயமாக்கல் என்ற பெயரில் Business Strategy, Technic, Intelligence என்றெல்லாம் சொல்லி பல மாயை விம்பங்களை உருவாக்கி, பொதுமக்களின் தேவைகளை வைத்து விளையாடி, பல வர்த்தக நிறுவனங்கள் இந்த பதுக்கல் பொருளீட்டல் முறையையும் டிஜிட்டல் முறையில் கையாண்டு கொண்டுதான் இருக்கின்றன.
அது ஒரு புறமிருக்க, நமது சந்தைகளிலும் கூட இஸ்லாமிய வர்த்தகர்கள் பலர் தடைசெய்யப்பட்ட பல பொருளீட்டல் முறைகளை அறிந்தோ அறியாமலோ செய்துகொண்டு இருக்கின்றனர்.
அந்தவகையில், இக்கட்டுரையினூடாக பதுக்கல் மூலம் பொருளீட்டும் முறை பற்றிய ஷரீஆவின் பார்வை என்ன? மேலும், அதைத் தடுக்கக் கையாள வேண்டிய முறைகள் என்ன? என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
வரைவிலக்கணம்:
"பதுக்கல் மூலம் பொருளீட்டல்" தொடர்பான வரைவிலக்கணத்தைப் பொருத்தவரையில், அறிஞர்களிடம் பல்வேறு விதமான கருத்துக்கள் இருந்தாலும் நோக்கத்தால் பெரும்பாலும் ஒன்றோடொன்று நெருக்கமாகவே காணப்படுகின்றன.
அதில் ஒன்றைப் பார்க்கலாம்:
பதுக்கல் மூலம் பொருளீட்டல் என்பது ஒருவர், வியாபார நோக்குடன் அத்தியாவசியமான பொருளை (சரக்கை) கொள்வனவு செய்து, உடனடியாக விற்காமல், மக்களது தேவை, குறித்த பொருளின் பால் அதிகரிக்கும் போது, (மக்களின் தேவையைப் பயன்படுத்துவதுடன் பொருளும் சந்தையில் குறைந்துகொண்டே செல்லும் போது) தன்வசம் தடுத்து வைத்துக்கொண்டு, அதன் விலைவாசி உயர்வடையும் வரை காத்திருந்து, விற்பதைக் குறிக்கும்.
(பொருள் மட்டுமல்ல சேவைகள் கூட இதில் அடங்கும் என தற்கால அறிஞர்கள் கருதுகின்றனர்)
மார்க்கத் தீப்பு:
இவ்வாறு பொருளீட்டும் முறை பற்றி நபி (ஸல்) அவர்கள்,
"பாவியைத் தவிர வேறுயாரும் பதுக்க(ல் மூலம் பொருளீட்ட)மாட்டார்கள்" என்று கூறியுள்ளார்கள் (முஸ்லிம் 1605)
தடை செய்யப்பட்டதன் காரணங்கள்:
மேற்குறிப்பிட்ட நபிமொழியின் மூலம் பதுக்கலானது சமூகத்தில் நேர்மறையான தாக்கத்தை விளைவிக்கும் என்பதையும் மக்களது பொதுநலன் பாதிப்படையும் எனவும் சமூக உரிமைகள் மீறப்படும் என்றும் புரிந்துகொள்ள முடிகிறது.
பிக்ஹு சட்ட விதிகளின் அடிப்படை :
இஸ்லாமிய சட்டங்கள் எங்கேயும் எப்போதும் பொதுநலன் பாதிப்படையும் முறையில் இருப்பதில்லை. மாறாக, பொதுநலனைக் கருத்தில் கொண்டே சட்டங்களும் வழிகாட்டல்களும் அமைந்திருக்கிறன.
இஸ்லாமிய சட்ட விதிகளின் அடிப்படைகள் கூட இந்த பதுக்கல் மூலம் பொருளீட்டல் முறையை தகர்த்தெறிவதை காணலாம். உதாரணமாக,
தீங்கு (பாதிப்பு) நீக்கப்படல் வேண்டும்,
சுயநலனைக்காட்டிலும் பொதுநலன் முற்படுத்தப்படல் வேண்டும்,
பிறருக்கு தீங்கு விளைவித்தல் தடை
என்பனவற்றைக் குறிப்பிடலாம்.
தடை சட்டம் எந்தப் பொருட்களுக்கு?
"பதுக்கல் மூலம் பொருளீட்டல் தடை" என்ற சட்டம், எல்லாப் பொருட்களுக்கும் பொருந்துமா? அல்லது குறித்த சில பொருட்களுக்கு மாத்திரமா? என்ற கருத்து வேற்றுமை பிக்ஹு பாரம்பரியத்தின் ஆரம்பம் முதலே காணப்படுகின்றன. அவற்றை நாம் பொதுவாக இரண்டு நிலைப்பாடாக நோக்கலாம்.
01- "மக்கள் தத்தமது அன்றாட உணவாக உட்கொள்ளும் உணவுப் பொருட்களை பதுக்கி வைத்து வியாபாரம் செய்வது தடையாகும்."
இந்தக் கருத்தில் நான்கு மத்ஹபுகளும் உடன்படுகிறன. இது தொடர்பாக பின்வரும் அறிஞர்களது கருத்துக்கள் இதற்கு வலுசேர்க்கின்றன.
இமாம் காஸானி {ஹனபி} (ரஹ்) அவர்கள் விலங்குகளினது அன்றாட உணவையும் சேர்த்துள்ளார்கள்.
(பதாஇஉஸ் ஸனாஇஃ - 129/5)
இமாம் மாலிக் (ரஹ்) (அல்முதவ்வனா - 313/03)
இமாம் நவவி {ஷாஃபி} (ரஹ்) அவர்கள் "அன்றாட உணவுகளுடன் பேரீச்சை மற்றும் திராட்சையையும் சேர்த்து வேறு உணவுப் பொருட்கள் அடங்காது" எனக் கூறியுள்ளார்கள்.
(ரவ்ழதுத் தாலிபீன் - 75/3)
இமாம் இப்னு குதாமா {ஹன்பலி} (ரஹ்) மக்களின் அன்றாட உணவுகள் என்று மூன்று நிபந்தனைகளுடன் கூறியுள்ளார்கள் (முங்னி - 305/4)
02 - "எல்லாவற்றிலும் பதுக்கி வைத்து வியாபாரம் செய்வது தடையாகும்.(பொருள், சேவை)"
இந்நிலைப்பாட்டில் மாலிகி மத்ஹப் காணாப்படுவதோடு இமாம் அபூயூஸுப் {ஹனபி} (ரஹ்), சில ஹன்பலி மத்ஹப் அறிஞர்கள், இமாம் இப்னு ஹஸ்ம்(ரஹ்), மற்றும் சமகால அறிஞர்களில் பலரும் காணப்படுகின்றன.
சமகால அறிஞர்களில் அணுகுமுறை:
இரு நிலைப்பாடுகளையும் தற்கால சூழ்நிலைகளுடன் ஒப்பீடு செய்து பார்க்கும் அறிஞர்களில் பெரும்பாலானவர்கள், இரண்டாம் நிலைப்பாட்டையே ஆதரிக்கின்றனர்.
அதற்கான அவர்களது நியாயமான காரணங்கள் பின்வருமாறு
உணவுப் பொருட்களை மாத்திரமே பதுக்கி வியாபாரம் செய்வது கூடாது என்று கூறும் நிலைப்பாட்டிற்கு ஆதாரமாகக் கொள்ளும் நேரடியான ஹதீஸ்களைப் பொருத்தமட்டில் அவை பலவீனமானவை.
அவ்வாறு அவை ஸஹீஹானவை என்று ஒரு வாதத்திற்கு வைத்தாலும் பதுக்கல் கூடாது எனப் பொதுப்படையாக வந்த ஸஹீஹான ஹதீஸ்கள் மூலம் எல்லாவற்றையும் அடங்கும் என்று புரிய வாய்ப்புள்ளது.
அக்காலத்தில் உணவுப்பொருட்களை மையமாக வைத்து பல அறிஞர்கள் முடிவெடுத்தமை அந்த காலச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டுதான். தற்காலத்தைப் பொருத்தமட்டில் மக்களது வாழ்வியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதால் உணவுப் பொருட்களுடன் சுருக்கிக்கொள்ள முடியாது.
தீங்கு (பாதிப்பு) நீக்கப்படல், பொதுநலன் காத்தல் என்ற சட்ட விதிகள் வெறுமனே உணவுப் பொருட்களில் மாத்திரம் பொருந்தாது, மாறாக மனிதவாழ்வில் தாக்கம் செலுத்தும் சகல அம்சங்களிலும் (பொருளோ , சேவையோ) அவற்றை பொருத்திப் பார்க்க வேண்டும்.
என பல காரணங்களை முன்வைக்கின்றனர்.
பரவலாக நடைமுறையில் உள்ள ஒரு முறை:
ஆக, ஆரம்பத்தில் கூறிய வரைவிலக்கணத்திற்கமைய மற்றுமோர் விடயத்தையும் இவ்விடத்தில் புரிந்துகொள்ள வேண்டும் .
அதாவது வழமையாக காலநிலை மற்றும் நாட்டின் பொருளாதார மாற்றம் காரணமாக விலைவாசி ஏற்றம் இறக்கம் இருக்கும் போது குறைந்த விலையில் சரக்குகளை கொள்வனவு செய்து சந்தையில் விலைவாசி உயரும் சந்தர்ப்பத்தில் (சந்தையில் பொருட்கள் இருக்கும் போது , மக்களது தேவையையும் பயன்படுத்தாமல், தேவை அதிகரிக்காமல்) விற்பது, எந்தவகையிலும் தடையாகக் கருதப்பட மாட்டாது என பல மார்க்கத் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இதைக் கட்டுப்படுத்தும் வகையில் ஆரம்பகால அறிஞர்களின் தீர்வு:
அத்துடன் இந்த பதுக்கல் மூலம் பொருளீட்டும் முறையைக் கட்டுப்படுத்தும் முகமாக, பிக்ஹுத் துறை அறிஞர்கள் ஆரம்பத்திலேயே பொதுநலன் கருதி, கால சூழ்நிலையக் கருத்தில் கொண்டு, பாதிப்பை நீக்கவேண்டும் என சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வழிவகைகளை ஏற்படுத்தினர்.
அதாவது பதுக்கல் மூலம் பொருளீட்டும் வியாபாரிகளை அடையாளம் கண்டு பதுக்கி வைத்த பொருட்களை கைப்பற்றி பொருத்தமான விலையை நிர்ணயம் செய்து இருதரப்பினரும் பாதிப்படையாமல் விற்பதற்கு ஆட்சியாளருக்கு அதிகாரம் இருப்பதாக ஏகமனதாக முடிவு செய்தமையைக் கூறலாம்.
பார்க்க :
(பதாஇஉஸ் ஸனாஇஃ - 129/05)
(அல்முன்கா ஷர்ஹு முஅத்தா - 423/03)
(ஷர்ஹு ஸஹீஹி முஸ்லிம் - 43/11)
(அல்புரூஃ - 180/06)
தற்போதைய தீர்வுகள் மற்றும் வழிகாட்டுதல்கள்:
தற்போதைய சூழ்நிலையில் இந்நடைமுறையைக் கட்டுப்படுத்தும் முகமாக அரசு அங்கீகாரம் பெற்ற, அதிகாரம் வழங்கப்பட்ட அமைப்புக்கள் தத்தமது பொறுப்புகளை திறம்பட செய்தாலே போதுமானது எனக் கூறலாம். அத்துடன் சமூக ஒத்துழைப்பும் மிகமிக அவசியம் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
அவற்றில் சிலவற்றை பின்வருமாறு சிந்திக்கலாம்.
அரசு பொதுநலன் கருதி
தான் இயற்றிய சட்டங்களை திறம்பட நடைமுறைப் படுத்தலாம், அல்லது உலகில் நடைமுறையில் இருக்கும் சட்டங்களை, சட்ட ஒழுங்கைப் பேணி நடைமுறைப்படுத்த முயலலாம். (ஷரீஆவுக்கு பொருத்தலாம் பொருந்தாமலும் இருக்கலாம் - பெரும்பாலும் பொதுநலன் என்ற வகையில் பொருந்தவே வாய்ப்புகள் அதிகம்)
விலைக் கட்டுப்பாடு:
இஸ்லாத்தைப் பொருத்தமட்டில் பல கருத்து வேற்றுமைகள் நிலவினாலும், பதுக்கல் மூலம் பொருளீட்டும் வியாபாரிகளை அடையாளம் கண்டு விலை நிர்ணயம் செய்ய அனுமதிக்கிறது.
பல வர்த்தக நிறுவனங்கள் சந்தைக்குள் வரவேண்டிய நடவடிக்கைகளை செய்யலாம்.
(உற்பத்தி அதிகரிக்கும், நிறுவனங்கள் மத்தியில் போட்டி மனப்பான்மை அதிகரிக்கும்)
நுகர்வோர் உரிமைகள் உத்தரவாதம் சார் பாதுகாப்பு சங்கங்கள் மற்றும் நடவடிக்கைகள் சமூக மட்டத்தில் உருவாக்குதல்.
உள்ளூராட்சி மன்றங்களின் கண்காணிப்புத் திட்டங்கள்.
காவல்துறையினரிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தும் முகமான நகர்வுகள்
வர்த்தக சங்கங்களின் ஒத்துழைப்பு மற்றும் கண்காணிப்பு
மக்களுக்கு அவர்களுக்கான உரிமைகள் மற்றும் சமூகநீதி, பொதுநலன் போன்ற அடிப்படை அம்சங்களில் விழிப்புணர்வு வழங்குதல்
அரசாங்கத்தின் முழு வழிகாட்டிகள் மற்றும் ஒத்துழைப்புகளை வர்த்தகம் மற்றும் பொருளாதார பல்துறைசார் நிபுணர்கள் மூலம் வழங்குதல் என பல திட்டங்களை சிந்திக்கலாம்.
இவ்வாறு பல அம்சங்களைக் கருத்தில் கொண்டு விழிப்புணர்வுடனும் மார்க்கத் தெளிவுடனும் பயணிக்கும் போது வறுமை, அநீதி, சுயநலன் போன்ற சமூகத்தைத் தகர்க்கும் பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பாக வாழலாம்.
அல்லாஹ் நன்கறிந்தவன்
- Ahsan Asman Muhajiri