இறைத்தூதர் ﷺ அவர்கள் ஓர் பற்றற்ற செல்வந்தர், வறிய ஏழை அல்ல


-நூல் விமர்சனம் : உஸ்தாத் SM.இஸ்மாயீல் நத்வி 

சமீபமாக மௌலவி நூஹ் மஹ்ழரி எழுதி  IFT வெளியிட்டு இருக்கும் "செல்வந்தர் நபிகள் நாயகம் (ஸல்)", புத்தகம் வழமையைப் போல  , வாசகர்களுக்கு மத்தியில் அதிருப்தியையும், முக சுழிப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. எந்தவிதமான வெறுப்பு விருப்புகள் அல்லாமல் அதை எமது விமர்சன எழுத்துக்களால்  பல தடவை யோசித்த பின்பு பதிவு செய்ய விரும்புகிறோம்,

இந்த நூலை முழுவதுமாக வாசிக்க முடியவில்லை என்றாலும் இந்த நூலைப் பற்றிய அறிமுகத்தை வலைதளங்களில் பார்க்க முடிகிறது அது கீழ் வருமாறு 

////////////
செல்வந்தர் நபிகள் நாயகம் (ஸல்)*

நமது உயிரினும் மேலான நபிகளார் பஞ்சப் பராரியாகத்தான் வாழ்ந்தார்களா..?
பரம ஏழையாகத்தான் இருந்தார்களா..?

பசிக் கொடுமையால் வயிற்றில் கல்லைக் கட்டினார்களா..? வயிற்றில் கல்லைக் கட்டினால் பசி போகுமா? 

அவ்வாறெனில் அந்த நபிவழியை (?) ஏழைகள் ஏன் பின்பற்றுவதில்லை…?

நமது நபியை பஞ்சப் பராரி மாதிரி அறிமுகப்படுத்தினால் எந்த மாற்று மத சகோதரராவது ஏற்பாரா…? நெஞ்சில் கை வைத்துச் சொல்லுங்கள்…

நபிகளாரின் வாழ்வில் எப்போதோ ஒரு முறை நடந்த நிகழ்வை வாழ்நாள் முழுவதும் அப்படித்தான் இருந்தார் என்பது போன்று சொல்வது நியாயமா?

வேகமாக வீசும் காற்றைவிட வேகமாக வாரி வழங்கினார்கள் என்று கூறப்படுகிறதே… எதுவும் இல்லாதவர் எப்படி வாரி வழங்கியிருப்பார்?

அவ்வாறெனில் அல்லாஹ்வின் இந்த வாக்குறுதி பொய்யா…?‏
 “மேலும், அவன் உம்மை ஏழையாய்க் கண்டான்; பிறகு செல்வந்தராய் ஆக்கினான்”.
(93:8)

இதுபோன்ற அனைத்து ஐயங்களுக்கும் இந்த நூல் பதில் சொல்கிறது.

நபிகளாரின் பொருளாதாரம் குறித்து முற்றிலும் வேறுபட்ட கோணத்தில் எழுதப்பட்ட நூல்.

////////////////

என்ன வார்த்தைகள்....இது?

தரம் தாழ்நத வார்த்தைகளின் பயன்பாடு..
பஞ்சப் பராரி ... என்ற வார்த்தைகள் ஊடாகவா இறைத்தூதர் ﷺ அவர்கள்
அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

நபியவர்கள் இந்த சமூகத்தை "துன்பம் ஏற்படும் போதெல்லாம் சகித்துக் கொள்ள வேண்டும். இறை உதவியை இது பெற்று தரும்" என்று தர்பிய்யா செய்தது, இந்த முறையிலா கூறப்பட வேண்டும் ??

வித்தியாசமான கருத்தை சமூகத்தில் கூற வேண்டும் என்ற நோக்கிலே மார்க்கம் நமக்கு காட்டித் தராத ஒரு பாதையில் நாம் செல்ல முற்படும்பொழுது அங்கு தான் பிரச்சினைகள் ஆரம்பிக்கிறது....

சில சந்தர்ப்பங்களில் "ஆதாரத்துடன், தெளிவாக எழுதப்பட்ட மூல நூல்களை, தமிழ் மொழியில் தானாகவே, தாங்களாகவே முன்வந்து எழுதியதைப் போன்று" இன்று நமது சமூகத்தில் எழுதப்பட்டு வருவதும், முற்போக்கு சிந்தனைகள் என்ற ரீதியில்  தரம் தாழ்ந்த வார்த்தைகளால் இறைத்தூதர் அவர்களை அவமதிப்பு செய்கின்ற நூல்கள் வெளியிடப்படுவதுன் நடைபெறுகின்றன. இதை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.

இதோ, இந்த அடிப்படையிலாவது எழுதி இருக்கலாமே!! 

உலகில் இரண்டே ஜாதிகள் தான். ஒன்று, ஏழை. மற்றொன்று, பணக்காரன் என்று பரவலாக சொல்லப்படுவதை நாம் காலம் காலமாக கேட்டு வருகிறோம், ஆனால், உண்மை நிலவரம் மனிதனின் மகிழ்ச்சிக்கும் வெற்றிக்கும் "போதும் என்ற மனமே ", இன்றியமையானது.  மகிழ்ச்சியை , சந்தோசத்தை மதிப்பீடு செய்வதில் பொருளாதாரத்தை மையமாக மனிதன் ஆக்கும் பொழுது தான், அவன் மனித மிருகமாக உருமாறுகிறான். மனித நேயம் நசுக்கப்படுகிறது.

இதன் ஊடாகத்தான் ஒரு நிலப்பகுதியின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domestic Product அல்லது GDP) என்பது, அப்பகுதியின் பொருளாதாரத்தின் அளவை அறிய உதவும் அளவைகளுள் ஒன்றாகும். ஒரு குறிப்பிட்ட காலப் பகுதியுள், ஒரு நிலப்பகுதியின் எல்லைக்குள் உற்பத்தி செய்யப்படுகின்ற மொத்தப் பொருட்களினதும், சேவைகளினதும் சந்தைப் பெறுமதியே மொத்த உள்நாட்டு உற்பத்தி என வரைவிலக்கணம் கூறப்படுகிறது 

ஆக, ஒரு நாட்டின் மக்களின் நிம்மதியான வாழ்விற்கு பொருளாதாரம் எந்த அளவுக்கு அவசியமோ, அந்த அளவிற்கு மக்கள் மகிழ்ச்சியும் இன்றியமையாத ஒன்று.

GNH-என்ற தத்துவத்தின் அடிப்படையில் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முன்னுதாரணம், அந்த நாட்டின் பொது மக்களின் மகிழ்ச்சியை வைத்தே கணிக்கப்படும் என்பது, இன்று சர்வதேச அளவில் பேசும் பொருளாக இருக்கிறது.
மொத்த தேசிய மகிழ்ச்சி குறியீடு (GNH) ஒரு நாட்டின் முன்னேற்றத்தை அளவிடுவதற்கு ஒரு மாற்று வழி ஆகும். உதாரணமாக சர்வதேச அளவில் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை அளவிடக்கூடிய ஜிடிபி GDP( மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ) முற்றிலும் வேறுபட்டது. பொருளாதார அளவீடுகளை மட்டுமே அளவிடுவதற்கு பதிலாக, அதன் முக்கிய காரணிகளாக மக்கள் மற்றும் சூழலின் ஆன்மீக, உடல், சமூக மற்றும் சுற்றுச்சூழல் உடல்நலம் அடங்கியுள்ளது.

இதைத்தான் பூட்டான் அரசு சற்று வித்தியாசமாக சிந்தித்து,
பூட்டான் ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, ஒட்டுமொத்த தேசிய மகிழ்ச்சியின் குறியீடானது “முன்னேற்றத்திற்கான கருத்துக்களுக்கு உறுதியான வளர்ச்சிக்கு ஒரு முழுமையான அணுகுமுறையை அரசு உடனடியாக எடுக்க வேண்டும், நல்வாழ்வு அல்லாத பொருளாதார அம்சங்களுக்கு சமமான முக்கியத்துவம் அளிக்க வேண்டும்” (GNH குறியீடு) என்று குறிப்பிடுகின்றது.

மொத்த தேசிய மகிழ்ச்சியின் குறியீடானது (GNH )1972 ஆம் ஆண்டில் பூட்டானின் முன்னாள் மன்னர் ஜிம்மி சிங்காய் இந்த அற்புதமான ஒரு சிந்தனையை நாட்டின் மறுமலர்ச்சிக்காக வழங்கினார். அந்த நேரத்தில் உலகின் பெரும்பகுதி ஒரு நாட்டின் பொருளாதார வெற்றியை அளவிட மொத்த உள்நாட்டு உற்பத்தியில் – (ஜிடிபி) தங்கியிருந்தது.

2004 ஆம் ஆண்டு பூட்டான் GNH மற்றும் பூட்டான் மன்னர் ஜிம்மி கீஷர் இணைந்து ஒரு சர்வதேச கருத்தரங்கு ஒன்றை நடத்தியது. ஒரு நாட்டின் வளர்ச்சி, "பொருளாதாரத்தை மட்டும் சார்ந்ததல்ல. மக்களின் மகிழ்ச்சியை சார்ந்ததே" என்று உணர்த்தியது.

GNH-மொத்த தேசிய மகிழ்ச்சியின் குறியீடானது சர்வதேச அளவில் ஒரு சிந்தனை மாற்றத்தை வழங்கியதை, ஐ நா சபை மார்ச் 20, 2012ல் உலக மகிழ்ச்சி தினமாக கொண்டாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

GNH- தத்துவத்தில் 156 நாடுகள் கணக்கிடப்பட்டு 2019 மார்ச்சில் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது
அதில் முதலாவது மகிழ்ச்சியாக இருக்கக் கூடிய நாடு பின்லாந்தும், 34 ஆம் தரத்தில் இருக்கக் கூடிய நாடு சிங்கப்பூர், 140 தரத்தில் இருக்கக் கூடிய நாடு இந்தியா என்றும் அறிவித்திருக்கிறது.
(Source
https://worldhappiness.report/ed/2019/#read)

ஆக உலகிற்கு மன நிம்மதியும் மகிழ்ச்சியும் அல்லாஹ்வும் தூதரும் காட்டி தந்த வழியை பின்பற்றுவதில் தான் இருக்கிறது. அது, இஸ்லாமிய மார்க்கத்தில் தான் இருக்கிறது என்பதை இஸ்லாம் உரக்கச் சொன்னது.

ஆக, நாம் நமது கருத்துக்கு வருவோம்.
இறைத்தூதர் ﷺ அவர்கள் ஏழையாக இருந்து களப்பனி செய்தார்களா ? 
அல்லது செல்வந்தராக இருந்தார்களா என்றால் ?

இறைத்தூதர் ﷺ அவர்கள் ஓர் பற்றற்ற செல்வந்தர், வறிய ஏழை அல்ல.

என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்!!

நபியவர்கள் வாழ்ந்த 23 ஆண்டு காலங்களில் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்காமல் ஆன்மீக ரீதியான இறைத்தொடர்பை வலுப்படுத்தும் விடயத்தில் மிகவும் அக்கறை கொண்டிருக்கிறார்கள். அதனால், அவர்கள் பொருளாதாரத்தை தவிர்க்கவும் இல்லை. ஆனால், அதில் பாரிய முக்கியத்துவத்தையும் அளிக்கவில்லை என்பது நமக்கு தெரிய வருகிறது.

"இறைத்தூதர் ﷺ அவர்கள் ஓர் பற்றற்ற செல்வந்தர் , வறிய ஏழை அல்ல",

என்று இஸ்லாமிய ஆய்வாளர் அஷ்ஷேக் அப்துல் ஃபத்தாஹ் முஹம்மது சமான்
அவர்கள், நபி அவர்கள் பொருளாதாரத்தை கையாண்ட விதம் என்ற தனது ஆய்வில் ஏழாவது பக்கத்தில் இந்த தலைப்பின் கீழ் குறிப்பிடுகிறார்கள்.

وَوَجَدَكَ عَآٮِٕلًا فَاَغْنٰى‏
மேலும், தேவையுடையவராக அவன் உம்மைக் கண்டான், ஆகவே, (உமது தேவையை நிறைவேற்றி உம்மை) தேவையற்றவராக (செல்வந்தராக)ஆக்கிவிட்டான்.
(அல்குர்ஆன் : 93:8)

என்ற வசனத்தையும் நாம் பார்க்க முடிகிறது.
இதற்கு அறிஞர் இப்னு ஆசூர் அவர்கள் தங்கள் புத்தகமான தஹ்ரீர் வத் தன்வீரில் 
30/402 ல் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்
இறைத்தூதர் ﷺ அவர்களுக்கு இரண்டு விதமான செல்வத்தை கொடுத்திருந்தான். முதலாவது சிறந்த நற்குணமுடைய உள்ளத்தால் செல்வந்தராகவும் , அன்னை கதீஜா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் ஊடாக, வியாபாரத்தில் பொருளாதார செல்வத்தை பெற்றிருந்தார்கள்.

பைஹக்கியில் வரும் ஒரு நபிமொழி
ஒருமுறை நபியவர்களிடம் ஆறு பொற்காசுகள் வந்தன. அதை (முறையாக) பிரித்துக் கொடுத்து விட்டார்கள். ஒரே ஒரு பொற்காசு மட்டும் மிஞ்சி இருந்தது. அதை சில மனைவிமார்களிடத்தில் கொடுத்தார்கள். அதை தாங்களே பிரித்துக் கொடுத்து, "தூக்கமின்றி இருந்த நான், இப்பொழுதுதான் நிம்மதியை அடைந்தேன்" என்றும் கூறுகிறார்கள்
أخرجه البيهقي في شعب الإيمان (13/58) من حديث عائشة رضي الله عنها.

 நபி(ஸல்) அவர்கள் செல்வ சீமானாக இருந்து  பற்றற்றவர்களாக வாழ்ந்தார்கள் என்பதற்கு இன்னும் ஏராளமான பல ஆதாரங்கள் உண்டு.

ஆக, இவ்வுலகத்தில் நாம் நமது தேவைக்கேற்ப பொருளாதாரத்தை ஈட்டிக்கொள்வது மார்க்கத்தில் தடை இல்லை. அதே நேரத்தில், மறுமை தான் நமது இலக்கு. இறைத்தொடர்பை வலுப்படுத்தும் பொருளாதாரமே சிறந்தது என்ற கருத்தை ஆழமாக கூற வேண்டி இருக்கிறது.

இதுவரை, இவ்வாறு தான், நமது முன்னோர்களான சஹாபாக்கள், சங்கையான  இமாம்கள், நமக்கு நபி(ஸல்) அவர்களை பற்றி அறிமுகம் செய்திருக்கிறார்கள். ஆனால் இந்த புத்தகம் செல்வத்தை தமது முதல் இலக்காக நபியவர்கள் ஆக்கினார்கள் என்ற ஒரு தோரணையை காட்டி விடுமோ என்று அஞ்சுகிறோம்,

அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக!!
Previous Post Next Post