ஆதம் (அலை) நபி வரலாறு

ஆதி மனிதர், முதல் நபி, மானிடவர்க்கத்தின் மூலப்பிதா என சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுவர்தான் நபி ஆதம்(அலை) அவர்கள். அல்லாஹ் நபி ஆதம்(அலை) அவர்களை மண்ணிலிருந்து படைத்தான். அவனின் பிரதிநிதியாக இப்பூவுலகிற்கு அனுப்பி கண்ணிப்படுத்தினான். அவனால் படைக்கப்பட்ட பொருட்களின் பெயர்களை நபி ஆதம்(அலை) அவர்களுக்கு கற்று கொடுத்தான். அவ்வாறு கற்றுக்கொடுத்த பொருட்களின் பெயர்களை அதனை அறியாத மலக்குகள் முன்பு விவரிக்குமாறு பணித்தான். பின்னர் மலக்குகளை நபி ஆதம்(அலை) அவர்களுக்கு சிரம்பணிய அல்லாஹ் உத்தரவிட்டான். மலக்குகளுடன் இருந்த இப்லீஸ் தவிர. மற்ற அனைவரும் அல்லாஹ்வின் ஆணைக்கிணங்க சிரம்பணிந்தனர். இப்லீஸ் மனித வர்க்கத்தின் மீது கொண்ட பொறாமையினால் ஆணவம் கொண்டு சிரம்பணிய மறுத்ததுடன் கியாமநாள் வரை அல்லாஹ் அவகாசம் கொடுத்தால் ஆதமின் சந்ததியினரை நேரான பாதையில் செல்வதைத் தடுத்து அவர்களுக்கு முன்னும் பின்னும் இடமும் வலமும் சென்று வழிகெடுத்து விடுவேன் எனக்கூறினான். அல்லாஹ் இப்லீஸ் கோரியவாரே அவனுக்கு கியாமநாள் வரை அவகாசம் வழங்கி அவனையும் அவனால் வழிகெடுக்கப்பட்டோரையும் கொண்டு நரகினை நிரப்புவதாகக் கூறினான்.

நபி ஆதம்(அலை) அவர்களிலிருந்தே அவரது துணைவியார் ஹவ்வா(அலை) அவர்களை வல்ல அல்லாஹ் படைத்தான். அருள்மறை 4:1 இதனை தெளிவு படுத்துகின்றது.

ஆதம்(அலை) அவர்களை தாய் தந்தை இன்றியும் அவரது துணைவியார் ஹவ்வா(அலை) அவர்களை ஆதம்(அலை) அவர்களிலிருந்தும் அல்லாஹ்வால் படைக்கப்பட்டனர். பிறகு அவர்கள் இருவரையும் சுவர்க்கத்தில் வசிக்கச் செய்தான். அங்கு நீங்கள் சுதந்திரமாக சுற்றித்திரியுங்கள் ஆனால் இந்த மரத்தினை மட்டும் நெருங்க வேண்டாம் என்று சுற்றிக் காட்டிய இறைவன் அவ்வாறு நெருங்கினால் நீங்கள் இருவரும் அநியாயம் செய்தவர்களில் ஒருவராக ஆகிவிடுவீர்கள் என எச்சரித்தான்.

மானிட சமுதாயத்தின் பயங்கர விரோதியான ஷைத்தான் அவர்களிடம் அம்மரத்தின் கனியை நீங்கள் இருவரும் சாப்பிட்டால் நிரந்தரமாக இச்சுவர்க்கத்தில் தங்கி விடுவீர்கள் அல்லது மலக்குகளாக ஆகிவிடுவீர்கள் என்ற தவறான ஊசலாட்டத்தை எண்ணத்தில் புகுத்தி அக்கனியை உண்பதற்கு வழிவகுத்தான். அல்லாஹ்வின் கட்டளையை மறந்து உறுதிப்பாட்டை இழந்த ஆதம்(அலை) அவர்களும் அவரது துணைவியாரும் அம்மரத்தின் கனியை உண்டதால் அவர்களின் மறைவிடங்கள் வெளியாகி சுவனத்துச் சோலையின் இலைகளால் அவர்களை மறைத்துக் கொண்டனர். பின்னர் அவ்விருவரையும் வல்ல அல்லாஹ் சுவர்க்கத்திலிருந்து வெளியேற்றி பூமியில் சில காலம் தங்கி நேர்வழி காட்டும் அறிவுரைகள் பெற்று அதன்படி நடப்பவர்கள் மகிழ்வுறுவர் எனக் கூறி பூமிக்கு அனுப்பி வைத்தான். தவறிழைத்த நபி ஆதம்(அலை) அவர்களும் அவரது துணைவியாரும் வல்ல அல்லாஹ்விடமிருந்து சில வார்த்தைகளை கற்றுக்கொண்டு கருணையாளன் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரினர். அவர்களின் பாவமீட்சியை ஏற்றுக்கொண்ட இறைவன் அவர்களை மன்னித்து கண்ணியப் படுத்தினான்.

மேற்கண்ட வரலாற்றினை சற்று விளக்கமாக ஆதாரத்துடன் பார்ப்போம்:

இவ்வுலகில் மனித வாழ்வின் துவக்கம்-வானவர்களின் உரையாடல்.

2:30. (நபியே) இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி ”நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்” என்று கூறியபோது, அவர்கள் ”(இறைவா!) நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்? இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னைத் துதித்து, உன் பரிசுத்ததைப் போற்றியவர்களாக இருக்கின்றோம் என்று கூறினார்கள் அ(தற்கு இறை)வன் ”நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்” எனக் கூறினான்.

2:31. இன்னும், (இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான் பின் அவற்றை வானவர்கள் முன் எடுத்துக்காட்டி, ”நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாயிருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு விவரியுங்கள்” என்றான்.

2:32. அவர்கள் ”(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன் விவேகமிக்கோன்” எனக் கூறினார்கள்.

2:33. ”ஆதமே! அப் பொருட்களின் பெயர்களை அவர்களுக்கு விவரிப்பீராக!” என்று (இறைவன்) சொன்னான் அவர் அப்பெயர்களை அவர்களுக்கு விவரித்தபோது ”நிச்சயமாக நான் வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை அறிவேன் என்றும், நீங்கள் வெளிப்படுத்துவதையும், நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பதையும் நான் அறிவேன் என்றும் உங்களிடம் நான் சொல்லவில்லையா?” என்று (இறைவன்) கூறினான்.

மலக்குகளுக்கும், மனிதனுக்கும் உள்ள வித்தியாசம்

மலக்குகள் அல்லாஹ் ஏவியதை அப்படியே நிறைவேற்றுபவர்கள். மனிதன் தவறிழைக்கக் கூடியவன். எனவே மலக்குகள் அவ்வாறு கேட்டார்கள். ஆனால் தவறிழைத்த மனிதன் செய்யும் பாவமீட்சியை இறைவன் விரும்புகிறான் என்பதை கீழ்கண்ட நபிமொழிகள் உணர்த்துகின்றது. எனவே மனிதன் படைக்கப்பட்ட நோக்கத்தை மலக்குகள் அறியாததை இறைவன் 2:30-ல் விளக்குகின்றான்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவனின் கைவசம் என் உயிர் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! நீங்கள் பாவம் செய்யவில்லையாயின், அல்லாஹ் உங்களை போக்கி விட்டு, பாவம் செய்யும் வேறொரு கூட்டத்தாரைக் கொண்டு வருவான். அவர்கள் அல்லாஹுதஆலாவிடம் பிழை பொறுப்பு இறைஞ்சுவார்கள். அவர்களுக்கு அவன் மன்னிப்பளிப்பான். (முஸ்லிம் : அபூஹுரைரா(ரலி))

அல்லாஹுதஆலா கூறியதாக நபி(ஸல்) கூறினார்கள்: அடியான் ஒரு பாவத்தைச் செய்து விடுகிறான். பிறகு ”யா அல்லாஹ்! என் பாவத்தை மன்னிப்பாயாக!” என்று கூறுகிறான். அப்பொழுது அல்லாஹுதஆலா, என் அடியான் ஒரு பாவத்தைச் செய்து விட்டான். பாவத்தை மன்னிக்கும், மற்றும் பாவத்தைக் கொண்டு பிடிக்கும் இரட்சகன் தனக்கு உண்டு என்று அறிகிறான் என்று கூறுகிறான். பிறகு அடியான் மீண்டும் பாவம் செய்து விடுகிறான், பிறகு ”என் இரட்சகனே! என் பாவத்தை மன்னிப்பாயாக!” என்று கூறுகிறான். அப்பொழுது அல்லாஹுதஆலா, என் அடியான் பாவம் செய்து விட்டான். பாவத்தை மன்னிக்கும் மற்றும் பாவத்தைக் கொண்டு பிடிக்கும் இரட்சகன் தனக்கு உண்டு என அறிந்துள்ளான் எனக் கூறுகிறான். பிறகு மீண்டும் பாவம் செய்து விடுகிறான். பிறகு என் இரட்சகனே! என் பாவத்தை மன்னிப்பாயாக! என்று கூறுகிறான். அப்பொழுது அல்லாஹுதஆலா, என் அடியான் பாவம் செய்து விட்டான். பாவங்களை மன்னிக்கும் மற்றும் பாவங்களைக் கொண்டு பிடிக்கும் இரட்சகன் தனக்கு உண்டு என அறிந்துள்ளான். என் அடியான் நான் மன்னித்து விட்டேன். அவன் விரும்பியதை அவன் செய்யட்டும் என கூறுகிறான். (புகாரி, முஸ்லிம் : அபூஹுரைரா(ரலி))

அல்லாஹ் ஆதமுக்கு கற்றுக்கொடுத்தான்

இன்னும், (இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான் பின் அவற்றை வானவர்கள் முன் எடுத்துக்காட்டி, ”நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாயிருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு விவரியுங்கள்” என்றான். அவர்கள் ”(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன் விவேகமிக்கோன்” எனக் கூறினார்கள்.(2:31-32)

நபி(ஸல்) கூறினார்கள்: அல்லாஹுதஆலா, ஆதம்(அலை) அவர்களைப் படைத்த பொழுது அவர்களுக்குக் கூறினான்: (ஆதமே) நீர் சென்று, அங்கு அமர்ந்திருக்கும் மலக்குகளின் கூட்டத்தினருக்கு ஸலாம் கூறுவீராக! (அதற்குப் பதிலாக) அவர்கள் உமக்கு வழங்கும் காணிக்கையை செவிமடுப்பீராக! நிச்சயமாக அது உமக்கும், உம் சந்ததியினருக்கும் உரிய காணிக்கையாகும். அதன்படி ஆதம்(அலை), (அம்மலக்குகளின் கூட்டத்தினரிடம் சென்று) ”அஸ்ஸலாமு அலைக்கும்”- உங்களின் மீது அல்லாஹ்வின் சாந்தி உண்டாவதாக என்று கூறினார்கள். அதற்கு அம்மலக்குகள், ”அஸ்ஸலாமு அலைக வரஹ்மதுல்லாஹி” உங்களின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் அவனின் கருணையும் உண்டாவதாக என்று கூறினார்கள், ”வரஹமதுல்லாஹி”என்ற சொல்லை ஸலாமின் மறுமொழியில் அவர்கள் அதிகப்படுத்தினார்கள். (புகாரி, முஸ்லிம் :அபூஹுரைரா(ரலி))

மறைவான ஞானம் மலக்குகளுக்கு இல்லை

…”நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாயிருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு விவரியுங்கள்” என்றான். அவர்கள் ”(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை… (2:31-32)

ஆதம்(அலை) அவர்களுக்கு ஸஜ்தா செய்ய ஷைத்தான் மறுத்தான். எனவே இழிவுக்கு ஆளானான்

7:11. நிச்சயமாக நாமே உங்களைப் படைத்தோம் பின்பு உங்களுக்கு உருக்கொடுத்தோம். அதன்பின், ”ஆதமுக்கு ஸுஜுது செய்யுங்கள் (சிரம் பணியுங்கள்)” என்று மலக்குகளிடம் கூறினோம் இப்லீஸைத் தவிர (மற்ற மலக்குகள்) யாவரும் (அவருக்குத்) தலைவணக்கம் செய்தார்கள் அவன் (மட்டும்) தலைவணக்கம் செய்தவர்களில் ஒருவனாக இருக்கவில்லை.

7:12. ”நான் உனக்குக் கட்டளையிட்ட போது, நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது யாது?” என்று அல்லாஹ் கேட்டான் ”நான் அவரை (ஆதமை)விட மேலானவன் – என்னை நீ நெருப்பினால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்தாய்” என்று (இப்லீஸ் பதில்) கூறினான்.

7:13. ”இதிலிருந்து நீ இறங்கிவிடு, நீ பெருமை கொள்வதற்கு இங்கு இடமில்லை, ஆதலால் (இங்கிருந்து) நீ வெளியேறு – நிச்சயமாக நீ சிறுமை அடைந்தோரில் ஒருவனாகி விட்டாய்” என்று அல்லாஹ் கூறினான்.

7:14. ”(இறந்தவர்) எழுப்பப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக” என அவன் (இப்லீஸ்) வேண்டினான்.

7:15. (அதற்கு அல்லாஹ்) ”நிச்சயமாக நீ அவகாசம் கொடுக்கப்பட்டவர்களில் ஒருவனாவாய்” என்று கூறினான்.

7:16. (அதற்கு இப்லீஸ்) ”நீ என்னை வழி கெட்டவனாக (வெளியேற்றி) விட்டதன் காரணத்தால், (ஆதமுடைய சந்ததியரான) அவர்கள் உன்னுடைய நேரான பாதையில் (செல்லாது தடுப்பதற்காக அவ்வழியில்) உட்கார்ந்து கொள்வேன்” என்று கூறினான்.

7:17. ”பின் நிச்சயமாக நான் அவர்கள் முன்னும், அவர்கள் பின்னும், அவர்கள் வலப்பக்கத்திலும், அவர்கள் இடப்பக்கத்திலும் வந்து (அவர்களை வழி கெடுத்துக்) கொண்டிருப்பேன் ஆதலால் நீ அவர்களில் பெரும்பாலோரை (உனக்கு) நன்றி செலுத்துவோர்களாகக் காணமாட்டாய்” (என்றும் கூறினான்).

7:18. அதற்கு இறைவன், ”நீ நிந்திக்கப்பட்டவனாகவும், வெருட்டப்பட்டவனாகவும் இங்கிருந்து வெளியேறி விடு -அவர்களில் உன்னைப் பின்பற்றுவோரையும், உங்கள் யாவரையும் கொண்டு நிச்சயமாக நரகத்தை நிரப்புவேன்” என்று கூறினான்.

இப்லீஸ் சிரம் பணிய மறுத்ததன் நோக்கம்

இப்லீஸ் சிரம்பணிய மறுத்ததன் காரணம் ஆணவமும் மானிட சமுதாயத்தின் மீது கொண்ட பொறாமையும் ஆகும்.

நிச்சயமாக நாமே உங்களைப் படைத்தோம் பின்பு உங்களுக்கு உருக்கொடுத்தோம். அதன்பின், ”ஆதமுக்கு ஸுஜுது செய்யுங்கள் (சிரம் பணியுங்கள்)” என்று மலக்குகளிடம் கூறினோம் இப்லீஸைத் தவிர (மற்ற மலக்குகள்) யாவரும் (அவருக்குத்) தலைவணக்கம் செய்தார்கள் அவன் (மட்டும்) தலைவணக்கம் செய்தவர்களில் ஒருவனாக இருக்கவில்லை. ”நான் உனக்குக் கட்டளையிட்ட போது, நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது யாது?” என்று அல்லாஹ் கேட்டான் ”நான் அவரை (ஆதமை)விட மேலானவன் – என்னை நீ நெருப்பினால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்தாய்” என்று (இப்லீஸ் பதில்) கூறினான். ”இதிலிருந்து நீ இறங்கிவிடு, நீ பெருமை கொள்வதற்கு இங்கு இடமில்லை, ஆதலால் (இங்கிருந்து) நீ வெளியேறு – நிச்சயமாக நீ சிறுமை அடைந்தோரில் ஒருவனாகி விட்டாய்” என்று அல்லாஹ் கூறினான். (7:11-13)

இப்லீஸின் இம்மை மறுமை நிலை

ஆதமின் மகன் செல்லும் ஒவ்வொரு பாதையிலும் ஷைத்தான் காத்திருக்கிறான். (நூல்: அஹ்மத்)

ஆதமின் மகன் குர்ஆனின் சஜ்தா வசனத்தை ஓதி சிரம்பணியும் போது ஷைத்தான் ஒரு புறமாக ஒதுங்கி கதறி கூறுகிறான், ‘என் கைசேதமே! ஆதமின் மகன் சிரம்பணிய கட்டளையிடப்பட்டான். கீழ்ப்படிந்தான். அதனால் சுவர்க்கத்தில் நுழைகிறான். நான் சிரம்பணிய கட்டளையிடப்பட்டேன் ஆனால் கீழ்படிய மறுத்தேன். ஆகவே நரகில் வீழ்வேன். (நூல்: முஸ்லிம்)

ஆதம்(அலை) அவர்களும் அவருடைய துணைவியாரும் சுவர்க்கத்தில் தங்கியிருத்தல்

7:19. (பின்பு இறைவன் ஆதமை நோக்கி) ”ஆதமே! நீரும், உம் மனைவியும் சுவர்க்கத்தில் குடியிருந்து, நீங்கள் இருவரும் உங்கள் விருப்பப்பிரகாரம் புசியுங்கள் ஆனால் இந்த மரத்தை (மட்டும்) நெருங்காதீர்கள் (அப்படிச் செய்தால்) நீங்கள் இருவரும் அநியாயம் செய்தவர்கள் ஆவீர்கள்” (என்று அல்லாஹ் கூறினான்).

7:20. எனினும் அவ்விருவருக்கும் மறைந்திருந்த அவர்களுடைய (உடலை) மானத்தை அவர்களுக்கு வெளிப்படுத்தும் பொருட்டு ஷைத்தான் அவ்விருவரின் உள்ளங்களில் (தவறான எண்ணங்களை) ஊசலாடச் செய்தான் (அவர்களை நோக்கி, ”அதன் கனியை நீங்கள் புசித்தால்) நீங்கள் இருவரும் மலக்குகளாய் விடுவீர்கள், அல்லது (இச்சுவனபதியில்) என்றென்னும் தங்கிவிடுவீர்கள் என்பதற்காகவேயன்றி (வேறெதற்கும்,) இந்த மரத்தை விட்டும் உங்களை உங்கள் இறைவன் தடுக்கவில்லை” என்று கூறினான்.

7:21. ”நிச்சயமாக நான் உங்களிருவருக்கும் நற்போதனை செய்பவனாக இருக்கிறேன்” என்று சத்தியம் செய்து கூறினான்.

ஆதம்(அலை) அவர்களும் அவருடைய துணைவியாரும் ஷைத்தானால் ஏமாற்றப்படுதல்

7:22. இவ்வாறு, அவன் அவ்விருவரையும் ஏமாற்றி, அவர்கள் (தங்கள் நிலையிலிருந்து) கீழே இறங்கும்படிச் செய்தான் – அவர்களிருவரும் அம்மரத்தினை (அம்மரத்தின் கனியை)ச் சுவைத்தபோது – அவர்களுடைய வெட்கத்தலங்கள் அவர்களுக்கு வெளியாயிற்று அவர்கள் சுவனபதியின் இலைகளால் தங்களை மூடிக்கொள்ள முயன்றனர்; (அப்போது) அவர்களை அவர்கள் இறைவன் கூப்பிட்டு; ”உங்களிருவரையும் அம்மரத்தை விட்டும் நான் தடுக்கவில்லையா? நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் என்று நான் உங்களுக்கு சொல்லவில்லையா?” என்று கேட்டான்.

ஆதம்(அலை) அவர்களுக்கு அல்லாஹ் கற்றுத்தந்த பாவமீட்சிக்கான பிரார்த்தனை

7:23. அதற்கு அவர்கள் ”எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் – நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்” என்று கூறினார்கள்.

ஆதம்(அலை) அவர்கள் தான் செய்திருந்த வாக்குறுதியை மறந்துவிட்டார்கள்

20:115. முன்னர், நாம் ஆதமுக்கு நிச்சயமாக கட்டளையிட்டிருந்தோம் ஆனால் (அதனை) அவர் மறந்து விட்டார் (அக்கட்டளைபடி நடக்கும்) உறுதிப்பாட்டை நாம் அவரிடம் காணவில்லை.

ஆதம்(அலை) அவர்களும் அவருடைய துணைவியாரும் பூமிக்கு இறக்கப்படுதல்

7:24. (அதற்கு இறைவன், ”இதிலிருந்து) நீங்கள் இறங்குங்கள் – உங்களில் ஒருவர் மற்றவருக்குப் பகைவராயிருப்பீர்கள் உங்களுக்கு பூமியில் தங்குமிடம் இருக்கிறது அதில் ஒரு (குறிப்பிட்ட) காலம் வரை நீங்கள் சுகம் அனுபவித்தலும் உண்டு” என்று கூறினான்.

7:25. ”அங்கேயே நீங்கள் வாழ்ந்திருப்பீர்கள் அங்கேயே நீங்கள் மரணமடைவீர்கள் (இறுதியாக) நீங்கள் அங்கிருந்தே எழுப்பப்படுவீர்கள்” என்றும் கூறினான்.

மாந்தர்கள் அனைவரும் ஓரே ஆன்மாவிலிந்து தோன்றியவர்கள்

மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான். பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும், பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான். ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள். அவனைக் கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள். மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்). – நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். (4:1)

அவனே, உங்களை ஒரே மனிதரிலிருந்து படைத்தான், அவருடன் கூடி (இணைந்து) வாழ்வதற்காக அவருடைய துணைவியை (அவரிலிருந்தே) படைத்தான் – அவன் அவளை நெருங்கிய போது அவள் இலேசான கர்ப்பவதியானாள் பின்பு அதனைச் சுமந்து நடமாடிக் கொண்டிருந்தாள் பின்பு அது பளுவாகவே, அவர்களிருவரும் தம்மிருவரின் இறைவனிடம், ”(இறைவனே!) எங்களுக்கு நீ நல்ல (சந்ததியைக்) கொடுத்தால், நிச்சயமாக நாங்கள் இருவரும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்” என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தனர். (7:189)

அல்லாஹ் மனிதனை பேதகடைந்த களிமண்ணிலிருந்து படைத்தான்

15:26. ஓசை தரக்கூடிய கருப்பான களி மண்ணால் மனிதனை நிச்சயமாக நாமே படைத்தோம்.

15:27. (அதற்கு) முன்னர் ஜின்னை (ஜின்களின் மூல பிதாவை) கடிய சூடுள்ள நெருப்பிலிருந்து நாம் படைத்தோம்.

15:28. (நபியே!) உம்முடைய இறைவன் மலக்குகளிடம் ”ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்து, மனிதனை நிச்சயமாக நான் படைக்கப்போகிறேன்” என்றும்,

15:29. அவரை நான் செவ்வையாக உருவாக்கி, அவரில் என் ஆவியிலிருந்து ஊதியதும், ”அவருக்கு சிரம் பணியுங்கள்” என்றும் கூறியதை (நினைவு கூர்வீராக)!

மலக்குகள் நூர் எனும் ஒளியால் படைக்கப்பட்டார்கள். ஜின்கள் நெருப்பின் ஜூவாலையால் படைக்கப்பட்டார்கள். ஆதம் (அலை) உங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ள பொருளால் (மண்ணால்) படைக்கப்ட்டார்கள். முஸ்லிம்: ஆயிஷா(ரலி)

அல்லாஹ் ஆதமை பூமி முழுவதும் திரட்டப்பட்ட மண்ணின் ஒரு கை அளவிலிருந்து படைத்தான். எனவே ஆதமின் மக்கள் பூமியின் நிறம் மற்றும் தன்மைக்கு ஏற்றவாறு அமைகின்றனர். அவர்களில் சிலர் வெள்ளையாகவும் சிலர் சிவப்பாகவும் சிலர் கறுப்பாகவும் சிலர் இரண்டும் கலந்துமுள்ளனர். அவர்களில் சிலர் கெட்ட குணமுடையோராகவும் சிலர் மென்மையான குணமுடையோராகவும் சிலர் கடின சித்தமுடையோராகவும் சிலர் நடுநிலையிலும் உள்ளனர். அஹ்மத்: அபூமூஸா(ரலி).

ஆதம்(அலை) அவர்கள் படைக்கப்பட்ட நாள்

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்: சூரியன் உதயமாகும் நாட்களில் மிகச் சிறந்தது, ஜும்ஆ நாளாகும். அன்று தான் ஆதம் அலைஹிஸ்ஸலாம் படைக்கப்பட்டார்கள். அன்று தான் அவர்கள் சுவர்க்கத்தில் நுழைந்தார்கள். அன்றுதான் அவர்கள் சுவர்க்கதில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். (முஸ்லிம் : அபூஹுரைரா(ரலி))

இன்னும் ஆதம்(அலை) அவர்கள் சம்பந்தமாக வந்த ஹதிஸ்கள்

நாங்கள் நபி(ஸல்)அவர்களுடன் ஒரு விருந்திற்குச் சென்றிருந்தோம். ஆட்டின் முன்பக்கச் சப்பையை சமைத்து வைக்கப்பட்டிருந்தது. அதனை நபி(ஸல்)அவர்கள் விரம்பிச் சாப்பிடுவார்கள். அந்த இறைச்சியை தங்கள் பற்களால்(மென்று) கடித்து சுவைத்துச் சாப்பிட்டார்கள்.

பிறகு கூறினார்கள். கியாமத் நாளில் நான் மக்களின் தலைவனாக இருப்பேன். அது எதனால் என்று நீங்கள் அறிவீர்களா? அந்த நாளில் முன்னோர்களையும் பின்னோர்களையும் ஒரே வெளியில் அல்லாஹ் ஒன்று கூட்டுவான். அப்போது பார்ப்பவர் அனைவரையும் ஒன்று சேர்க்க பார்க்கமுடியும். அழைப்பவர் அவருடைய அழைப்பின் சப்தத்தை அனைவருக்கும் கேட்கச் செய்ய முடியும். (அவ்விதமாக அனைவரும் ஒரே இடத்தில் ஒன்று கூடி இருப்பார்கள்.)

சூரியன் அவர்களுக்கு மிக நெருக்கமாக இருக்கும். இந்நிலையில் மக்களுக்குத் தாங்கமுடியாத அளவிற்கு கஷ்டங்களும், கவலைகளும் ஏற்படும். அப்பொழுது மக்கள் நமக்கு நேர்ந்த கஷ்டங்களை யாரும் பார்க்க கூடாதா? யாராவது சென்று உங்களுடைய ரப்பிடம் சிபாரிசு செய்யக் கூடமாதா? என்று தங்களுக்குள் கூறிக் கொள்வார்கள்)

அப்பொழுது சிலர் சிலரிடம் இதோ! உங்கள் தந்தை ஆதம்(அலை)அவர்கள் இருக்கிறார்கள். (அவர்களிடம் செல்வீர்களாக!) எனக் கூறுவர். அதன் படி அவரிடம் மக்கள் வந்து நீங்கள் மனிதர்களின் தந்தையாக உள்ளீர்கள். அல்லாஹ் உங்களை தன் கரத்தால் படைத்தான். தன் ரூஹில் இருந்து ரூஹை தங்களுக்கு ஊதினான். உங்களுக்கு சஜ்தாச் செய்யுமாறு மலக்குகளுக்கு கட்டளையிட்டான். மலக்குகள் உங்களுக்கு ஸஜ்தாச் செய்தனர். சொர்க்கத்தில் அல்லாஹ் உங்களை குடியமரச் செய்தான். ஆகவே நீங்கள் எங்களுக்காக உங்கள் ரப்பிடம் சிபாரிசு செய்யக் கூடாதா? நாங்கள் அனுபவிக்கும் கஷ்டங்களையும் , துன்பங்களையும் நீங்கள் பார்க்கவில்லையா? எனக் கூறுவார்கள்.

அப்பொழுது ஆதம்(அலை) அவர்கள் கூறுவார்கள். (என் மக்களே!) என் இரட்சகன் இன்று இதற்கு முன்பும் பின்பும், கோபித்திராத அளவு கடும் கோபப்பட்டு விட்டான். என்னை அம்மரத்தை விட்டும் (அதன் கனியை புசிப்பதை விட்டும்) தடுத்திருந்தான். அவனுக்கு மாறு செய்து விட்டேன்.

நப்ஸி! , நப்ஸி! , நப்ஸி! என் ஆன்மாவே! – என் ஆன்மாவே! – என் ஆன்மாவே! என்னைத் தவிர வேறு யாரிடமாவது செல்லுங்கள். நபி நூஹ்(அலை) அவர்களிடம் செல்லுங்கள் எனக் கூறுவார்கள்.

அதனை தொடர்ந்து மக்கள் நூஹ்(அலை)அவர்களிடதம் செல்லுவார்கள். அவர்களிடம் நூஹ்(அலை) அவர்களே! நீங்கள் பூமியில் அல்லாஹ்வின் முதல் ரஸுல் ஆவீர்கள். (தூதர் ஆவீர்கள்) அல்லாஹ் உங்களுக்கு அப்துன் ஷகூருன் நன்றியுள்ள அடியார் என்று சிறப்புப் பெயர் சூட்டியுள்ளான். நாங்கள் அல்லல்களையும் கஷ்டங்களையும் தாங்கள் பார்க்கிவில்லையா? தாங்கள் எங்களுக்காக தங்கள் இரட்சகனிடம் சிபாரிசு செய்யக் கூடாதா? எனக் கூறுவார்கள். அதற்கு அவர்கள் என் இரட்சகன் இதற்கு முன்னும் பின்னும் கோபப்படாத அளவிற்கு கடுமையாக கோபித்து விட்டான். எனக்கு ஒரு ஒப்புக் கொள்ளப்பட்ட துஆவை வழங்கி இருந்தான். அந்த துஆவை(வரம்பு மீறிய)என் கூட்டத்தார் அழிவதற்காக செய்து விட்டேன். நப்ஸி! , நப்ஸி! , நப்ஸி! நீங்கள் என்னைத் தவிர மற்றவரிடம் செல்வுங்கள் நப் இபுறாஹீம்(அலை)அவர்களிடம் செல்லுங்கள்.

அதன்படி மக்கள் நபி இபுராஹீம்(அலை) அவர்களிடம் வருவார்கள். நபி இபுராஹீம்(அலை) அவர்களே! தாங்கள் பூமியில் அல்லாஹ்வின் நபியாகவும் நேசராகவும் இருக்கின்றீர்கள் எங்களுக்காக உங்கள் இரட்சகனிடம் சிபாரிசு செய்வீர்களாக! நாங்கள் படும் அல்லல்களை தாங்கள் பார்க்கின்றீhகளே! எனக் கூறுவார்கள்.

அதற்கு நபி இபுராஹீம்(அலை) அவர்கள் என் இரட்சகன் இன்று இதற்கு முன்னும் பின்னும் கோபிக்காத அளவு கடுமையாக கோபித்துக் கொண்டான். நான் மூன்று பொய்களைக் கூறியுள்ளேன். நப்ஸி! , நப்ஸி! , நப்ஸி! என்னைத் தவிர மற்றவர்களிடம் செல்லுங்கள். நபிமூஸா(அலை)அவர்களிடம் செல்லுங்கள் எனக் கூறுவார்கள்.

மக்கள் நபி மூஸா(அலை) அவர்களிடம் செல்லுவார்கள். நபி மூஸா(அலை) அவர்களே! நீங்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் ஆவீர்கள். அல்லாஹ் தன் திருத்தூதைக் கொண்டும் தன் பேச்சை (உறையாடலை) க்கொண்டும் மற்றமக்களைப் பார்க்கினும் உங்களைச் சிறப்பாக்கி இருக்கிறான். ஆகவே எங்களுக்காக உங்கள் இரட்சகனிடம் சிபாரிசு செய்வீர்களாக! நாங்கள் படும் அல்லல்களை தாங்கள் பார்க்கவில்லையா? என்று கூறுவர்.

அதற்கு நபி மூஸா(அலை) அவர்கள் என் இரட்சகன் இன்று இதற்கு முன்னும் பின்னும் இல்லாத அளவுக்கு கடும் கோபத்தில் உ;ளளான். (நான் அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஏவல் இல்லாமல் (தவறுதலாக) ஒருவரைக் கொன்று விட்டேன். நப்ஸி!, நப்ஸி!, நப்ஸி! என்னைத் தவிர (நீங்கள்)மற்றவர்களிடம் செல்லுங்கள். ஈசா(அலை) அவர்களிடம் செல்லுங்கள். என்று கூறுவார்கள். உடனே மக்கள் ஈசா (அலை)அவர்களிடம் வந்து ஈசா(அலை) அவர்களே! நீங்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் ஆவீர்கள். மரியம்(அலை) அவர்கள் அளவில் போடப்பட்ட அவனின் சொல்லும் அவனிடம் இருந்தும் உள்ள ரூஹும் ஆவீர்கள். தாயின் மடியில் நீங்கள் மக்களிடம் பேசினீர்கள். நீங்கள் எங்களுக்காக உங்கள் இரடசகனிடம் சிபாரிசு செய்வீர்களாக ! நாங்கள் படும் அல்லல்களை நீங்கள் பார்க்கவில்லையா? என்பார்கள்.

அதற்கு ஈசா(அலை) அவர்கள் அதற்கு என் இரட்சகன் இதற்கு முன்னும் பின்னும் இல்லாத அளவிற்கு கடும் கோபமாக உள்ளான் என்று கூறுவார்கள். அவர்கள் எப்பாவத்தையும் கூறவில்லை. மேலும் நப்ஸி! , நப்ஸி! , நப்ஸி! என்னைத் தவிர மற்றவர்களினடம் செல்லுங்கள் முஹம்மது(ஸல்) அவர்களிடம் செல்லுங்கள் என்று கூறுவார்கள்.

மற்றொரு அறிவிப்பில்: மக்கள் என்னிடம் வருவார்கள். முஹம்மதே! நீங்கள் அல்லாஹ்வின் திருத்தூதராக உள்ளீர்கள். தாங்கள் நபிமார்களின் முத்திரையாவீர்கள். தங்களின் முன் பின் பாவங்களை அல்லாஹ் மன்னித்து விட்டான். உங்கள் இரட்சகனிடம் எங்களுக்கு சிபாரிசு செய்வீர்களாக! நாங்கள் படும் அல்லல்களை தாங்கள் பார்க்கவில்லையா! எனக் கூறுவார்கள்.

உடனே நான் புறப்பட்டு அர்ஸுக்குக் கீழ்வருவேன் என் இரட்சகனுக்கு அடிபணிந்தவனாக ஸஜ்தாவில் வீழ்வேன். எனக்கு முன் எந்த ஒருவருக்கும் திறந்திராத அளவு அல்லாஹ் தன் புகழ் மற்றும் பெறுமைகளை எனக்குத் திறப்பான். (என் உள்ளத்தில் போடுவான்) பின்னர் முஹம்மதே! உம் தலையை உயர்த்துவீராக! நீர் கேட்பீராக! கொடுக்கப்படுவீர்! சுpபாரிசு செய்வீராக! சுpபாரிசு ஏற்கப்படும்! என எனக்குக் கூறப்படும்.

உடனே நான் என் தலையை உயர்த்துவேன். அப்பொழுது உம்மதி யாரப்பி! உம்மத்தி யாரப்பி! என் உம்மத்தின் நிலை! என் இரட்சகனே! என் உம்மத்தின் நிலை! என் இரட்சகனே ! என்று கூறுவேன்.

அப்பொழுது முஹம்மதே! உன் உம்மத்தில் நின்றும் கேள்வி கணக்கு இன்றி சுவர்க்கத்தில நுழைவோரை சொர்க்கத்தின் வலது பக்க வாயில்கள் வழியில் நுழைவிப்பீராக! மேலும் மற்ற மக்களோடு சேர்ந்து மற்ற வாயில் கள் வழியாகவும். சுவனில் நுழைய அவர்களுக்கு அனுமதியுண்டு. என்று கூறப்படும்.

பின்னர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ! அந்த அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நிச்சயமாக சொர்க்கத்தின் வாயில்களில் இரண்டு வாயில்களுக்கு மத்தியில் உள்ள இடைவெளி தூரம் மக்காவிற்கும் ‘ஹஜ்ரு’ என்ற ஊருக்கும் மத்தியில் உள்ள தூரத்தைப் போன்றதாகும். அல்லது மக்காவிற்கும் ‘புஸ்ரா’ என்ற ஊறுக்கும் மத்தியில் உள்ள தூரத்தைப் போன்றதாகும். புகாரி, முஸ்லிம்: அபூஹூரைரா(ரலி)

விதிக்கப்பட்டது நடந்துவிட்டது

மூசா(அலை) அவர்கள் ஆதம்(அலை) அவர்களிடம் வாதிட்டார்கள். அப்போது உங்கள் பாவத்தின் காரணமாக மக்களைச் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றி அவர்களைத் துர்பாக்கியசாலிகளாய் ஆக்கியவர்கள் நீங்கள்தாமே! என்று மூசா(அலை) அவர்கள் ஆதம்(அலை) அவர்களிடம் கேட்டார்கள். (பதிலுக்கு) ஆதம்(அலை) அவர்கள், அல்லாஹ் மூசா! தன் தூதுச் செய்திகளை (மக்களிடம்) எடுத்துரைப்பதற்காகவும் தன்னுடன் உரையாடுவதற்காகவும் அல்லாஹ் தேர்ந்தெடுத்த மனிதர் நீங்கள் தாமே? என்னைப் படைப்பதற்கு முன்பே என் மீது அல்லாஹ் எழுதிவிட்ட அல்லது விதித்துவிட்ட ஒரு விஷயத்திற்காகவா என்னை நீங்கள் குறை கூறுகிறீர்கள் என்று திருப்பிக் கேட்டார்கள். இதைக் கூறிவிட்டு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், ஆதம்(அலை) அவர்கள் (தமது இந்த பதிலால்) மூசா(அலை) அவர்களைத் தோற்கடித்துவிட்டார்கள் என்று சொன்னார்கள். இதை அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம்) புகாரி

ஆதம்(அலை) அவர்களின் மனைவி ஹவ்வா(அலை) அவர்கள் படைக்கப்பட்ட விதம்

…அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான். பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்… (4:1)

அவனே, உங்களை ஒரே மனிதரிலிருந்து படைத்தான், அவருடன் கூடி (இணைந்து) வாழ்வதற்காக அவருடைய துணைவியை (அவரிலிருந்தே) படைத்தான்… (7:189)

பெண்களுக்கு நலவை நாடுங்கள்! நிச்சயமாக பெண், விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டாள். விலா எலும்புகளின் மேல்பகுதி, மற்றவைகளைவிட மிக வளைவாக உள்ளது. அந்த எலும்பை நேராக்க நீர் முயன்றால் அதனை முறித்து விடுவீர்! அதனை அப்படியே விட்டு விடுவீரானால் அது வளைவாகவே இருக்கும். (ஆகவே நடுநிலையைக் கடைப்பிடியுங்கள்!) பெண்களுக்கு நலம் நாடுங்கள். (புகாரி, முஸ்லிம் :அபூஹுரைரா(ரலி))

பனூ இஸ்ராயீல் குலத்தார் (யூதர்கள்) இருந்திராவிட்டால் இறைச்சி துர்நாற்றமடித்திருக்காது. ஹவ்வா (ஆதி மனிதர் ஆதம்(அலை) அவர்களின் மனைவி ஏவாள்) இருந்திராவிட்டால் எந்த பெண்ணும் தன் கணவனை ஏமாற்றியிருக்கமாட்டார்கள். இதை அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம்: புகாரி

ஆதம்(அலை) அவர்களின் மகன்கள் பற்றி

5:27. (நபியே!) ஆதமுடைய இரு குமாரர்களின் உண்மை வரலாற்றை நீர் அவர்களுக்கு ஓதிக்காண்பியும். அவ்விருவரும் (ஒப்வொருவரும்) குர்பானி கொடுத்த போது, ஒருவரிடமிருந்து அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. மற்றவரிடமிருந்து அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. (பின்னவர்) ”நான் நிச்சயமாக உன்னைக் கொலை செய்து விடுவேன்” என்று கூறினார். அதற்கு (முன்னவர்) ”மெய்யாகவே அல்லாஹ் ஏற்றுக் கொள்வது பயபக்தியுடையவர்களிடமிருந்து தான்” என்று கூறினார்.

5:28. அன்றியும், ”நீ என்னை வெட்டுவதற்காக என்னளவில் உன் கையை நீட்டு வாயானால் நான் உன்னை வெட்டுவற்காக என் கையை உன்னளவில் நீட்ட மாட்டேன் – ஏனெனில் நான் நிச்சயமாக உலகங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்” (என்றும் கூறினார்).

5:29. என்னுடைய பாவத்தையும் உன்னுடைய பாவத்துடன் நீ சுமந்து கொண்டு வருவதையே நிச்சயமாக நான் விரும்புகிறேன். அப்பொழுது நீ நரகவாசிகளில் ஒருவனாகிவிடுவாய். இது தான் அநியாயக்காரர்களின் கூலியாகும் (என்றும் கூறினார்),

5:30. (இதன் பின்னரும்) அவருடைய மனம் தம் சகோதரரைக் கொன்றுவிடுமாறு தூண்டிற்று. ஆகவே அவர் (தம்) சகோதரரைக் கொலை செய்துவிட்டார். அதனால் அவர் நஷ்டமடைந்தவர்களில் ஒருவர் ஆகிவிட்டார்.

5:31. பின்னர் தம் சதோதரரின் பிரேதத்தை (அடக்குவதற்காக) எவ்வாறு மறைக்க வேண்டுமென்பதை அவர்க்கு அறிவிப்பதற்காக அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான். அது பூமியை தோண்டிற்று (இதைப் பார்த்த) அவர் ”அந்தோ! நான் இந்த காகத்தைப் போல் கூட இல்லாதாகி விட்டேனே! அப்படியிருந்திருந்தால் என் சகோதரனுடைய பிரேதத்தை நான் மறைத்திருப்பேனே!” என்று கூறி, கை சேதப்படக் கூடியவராகி விட்டார்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அநியாயமாகக் கொல்லப்படும் ஒவ்வொரு ஆன்மாவின் இரத்தத்திலும் (பாவத்தில்) ஆதமுடைய முதல் மகனுக்கு (காபிலுக்கு) பங்கு உண்டு ஏனெனில் அவர்தான் உலகில் முதன் முதலாக கொலை செய்து வழிகாட்டியவர். (புகாரி, முஸ்லிம் : அப்துல்லாஹ் பின் மஸ்வூது(ரலி))

ஷைத்தான் மனிதனை வழிகெடுப்பவன்

நிபந்தனையை மலக்குகள் ஏற்றனர், இப்லீஸ் (ஜின் இனத்தின் மூலப்பிதா(15:27)) மறுத்தான் அல்லாஹ்வின் கட்டளையை மீறிவிட்டான். இப்லீஸ் அவனுடைய சந்ததினர் மூஃமின்களுக்கு பகைவர்கள். காஃபிர்களுக்கு உற்ற நண்பர்கள்.

ஷைத்தான்கள் யார்? ஜின் இனத்தின் மூலப்பிதாவாகிய இப்லீஸ் மற்றும் ஜின் இனத்திலுள்ள நிராகரிப்பாளர்களுக்கு ஷைத்தான்கள் என்று பெயர்.

ஜின் இனத்தில் ஈமான் கொண்டவர்கள் உள்ளனர்

”அது நேர்மையின் பால் வழிகாட்டுகிறது, ஆகவே அதைக் கொண்டு நாங்கள் ஈமான் கொண்டோம் அன்றியும் எங்கள் இறைவனுக்கு ஒருவனையும் நாங்கள் இணையாக்கமாட்டோம்” (என்று அந்த ஜின் கூறலாயிற்று). 72:2.

ஆதம்(அலை) வரலாற்றிலிருந்து பெறும் படிப்பினை:

மனிதன் தவறு இழைப்பவனே (பரிகாரம் தவ்பா செய்து பாவமீட்சிப் பெற வேண்டும்).
பிரதிநிதி (ஆதமின் மக்கள் அல்லாஹ்வின் பிரதிநிதி)
அல்லாஹ்விற்கு பயப்பட வேண்டிய முறைப்படி பயப்பட வேண்டும். ஷைத்தானின் நோக்கம் வழிகெடுப்பது பெருமை, திமிர், செருக்கு கொள்ளுவது கூடாது. (அது ஷைத்தானின் செயல்)
மனித சமூகத்தின் ஆரம்பம் கல்வியே. பார்க்க (2:31)

Translated & Compiled from ‘Stories Of the Prophets (peace be upon them)’ by Imam Imaduddun Abdul-Fida Ismail Ibn Kathir Ad-Damishqi (700-774H), Rendered into English by – Rashad Ahmad Azami, Published by DARUSSALAM, Riyadh, Saudi Arabia.

நெல்லை இப்னு கலாம் ரசூல்
Previous Post Next Post