இமாம் இப்னு தைமியா (ரஹ்) வரலாறு

இப்னு தைமிய்யா (ரஹ்) வரலாறு

தொகுப்பு: அஃப்பஸலுல் உமர் மவ்லவீ அப்துல் ஹமீத் ஆமிர் உமரீ, நாகர்கோவில்


முன்னுரை:

உலகெலாம் படைத்துக் காத்து பரிபாலித்து வரும் அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் உரித்தாகுக! அல்லாஹ்வின் இறுதித் தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தை ஏற்று அதன் வழி நடந்து, அதை மற்றவர்களுக்கும் எடுத்துரைத்து, அவ்வழியில் தங்களை அர்ப்பணித்த சஹாபாக்கள், இறைநேசர்கள் அனைவரின் மீதும் இறைவனின் கருணையும் சாந்தியும் உண்டாவதாக.

அன்று முதல் இன்று வரை உலகில் குழப்பமும் சீர்கேடுகளும் ஏற்படுவது பரவலாக நடந்து கொண்டு தான் வருகின்றது. அதை மாற்றுவான் வேண்டி காலா காலங்களில் வழிகாட்டிகளை அல்லாஹ் அனுப்பி வந்துள்ளான். அவனால் அனுப்பப்பட்ட தூதர்களே அவ்வழிகாட்டிகள் ஆவர். அவர்களின் மறைவிற்குப் பின் அவர்களால் பயிற்றுவிக்கப்பட்ட மாணவர்கள், மற்றும் அவர்களைப் பின்பற்றியவர்கள் அவர்களது பணியைத் தொடர்கிறார்கள்.

காலப்போக்கில் மக்கள் வழிகாட்டிகளையும் மறந்து, அவர்களது போதனைகளையும் துறந்து, தவறான வழிகளில் செல்ல ஆரம்பித்து விடுகின்றனர்.

இந்நிலைமை உலகத்தில் உள்ள எல்லா சமுதாயங்களிடமும் காணப்படுகின்றது. முதல் மனிதன், முதலாவது நபி ஆதம்(அலை) முதல் இறுதி நபி முஹம்மது(ஸல்) அவர்கள் தோற்றுவித்த சமுதாய மக்கள் வரை எல்லோரும் இதற்குட்பட்டவர்களே! அல்லாஹ் தனது தூதர்களுள் இறுதித் தூதராகவும், கடைசி வழிகாட்டியாகவும் முஹம்மது முஸ்தபா(ஸல்) அவர்களை அனுப்பினான். இறுதி வேதமான திருக்குர்ஆனை அவர்களுக்கு அருளினான்.

நாளடைவில் முஸ்லிம் சமுதாயத்திலும் முன்னைய சமுதாயங்களில் ஏற்பட்ட சீர்கேடுகளும், குழப்பங்களும் விளையுமென நாயகம்(ஸல்) அவர்கள் தம் சமுதாயத்தாரை எச்சரித்துள்ளார்கள்.

அத்தகைய சீர்கேடுகள் ஏற்படும்போது சமுதாயத்தைத் திருத்தப் பாடுபடும் இறையடியார்களையும், இறைவன் தந்து கொண்டிருப்பான் என்ற நற்செய்தியையும் அவர்கள் அறிவிக்காமலில்லை.

தனிப்பட்ட மனிதர்களாலும், ஆட்சி பீடங்களை அலங்கரித்தவர்களாலும், இஸ்லாமியப் போர்வை போர்த்திய மதத் துரோகிகளாலும் எத்தனையோ இடையூறுகளை இஸ்லாம் சந்தித்தது. அவை முறியடிக்கப்பட்டன.

கல்வித் திறமையால், அறிவாற்றலால், சந்தர்ப்பம் ஏற்படின் பலத்தின் உபயோகத்தால் இஸ்லாத்திற்கு முரணானகொள்கைகளும், விளக்கங்களும் எதிர்க்கப்பட்டன; மறுக்கப்பட்டன.

காலா காலங்களில் அல்லாஹுதஆலா ஒவ்வொரு துறையிலும் ஏற்பட்ட மார்க்க, சமூக விரோத செயல்களை திருத்திச் சமுதாயத்தை நேர்வழியில் கொண்டுவர, பாடுபடக்கூடியவர்களை உருவாக்கினான்.

இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களும், இமாம் ஷாபி(ரஹ்), இமாம் மாலிக்(ரஹ்), இமாம் அஹ்மத்-பின்-ஹன்பல்(ரஹ்), அவர்களும் தம் காலங்களில் புனர்நிர்மாண வேலைகளைச் செய்திருக்காவிட்டால், முஸ்லிம் சமுதாயம் எந்தெந்த வழியிலெல்லாமோ திசைதிருப்பப்பட்டு, சீரழிந்து போயிருக்கும். அம்மகான்கள் தங்கள் அறிவாற்றலாலும் சொல்லாற்றலாலும் எழுத்து வன்மையாலும், இஸ்லாத்தின் தத்துவங்களையும் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் சட்டதிட்டங்களையும் உலகிற்கு விளக்கினார்கள். அவர்களின் விளக்கங்கள். பன்னூறு ஆண்டுகளான பின்பும், இன்னும் அழியாச் செல்வங்களாக நம்மிடம் பாதுகாக்கப்பட்டுள்ளன.

நேர்வழி நடந்த நான்கு கலீபாக்களின் ஆட்சிக்குப் பிறகு உமய்யா கலீபாக்களின் வீழ்ச்சியினாலும், அவர்களுக்குப் பின்னால் தோன்றிய அப்பாஸிய்யா கலீபாக்களின் வீழ்ச்சியானலும் முஸ்லிம் சமுதாயம் பலகுழப்பங்களையும், சமூக, விரோதச் செயல்களையும் சந்திக்க வேண்டிய சூழ்நிலைக்கு இலக்காயிற்று. நாயகம்(ஸல்) அவர்களின் நடைமுறைக்கு மாறான செயல்முறைகள் இஸ்லாத்தின் பெயரால் பரப்பப்பட்டன. எங்கு பார்த்தாலும் அனாச்சாரங்களும், புதிய வழிபாடுகளும் தாண்டவமிடலாயின. இவையனைத்தும் தத்துவரீதியாக மக்கள் முன் சமர்ப்பிக்கப்பட்டன. இஸ்லாமிய அறிவும், ஞானமும் படைத்த மகான்களெல்லாம் இருந்தபபோதிலும் அவைகளைத் தடுக்கவும் மறுக்கவும் துணிவுள்ளவர்கள் மிகக் குறைவாகவே இருந்தார்கள்.

ஹிஜ்ரி 7 ஆம் நூற்றாண்டு இஸ்லாமிய உலகின் மாபெரும் சோதனைக்குரிய காலம். தாத்தாரியர்களின் படையெடுப்பால் இஸ்லாமிய ஆட்சியின் வீழ்ச்சி, இஸ்லாமிய உலகையே சின்னாபின்னப்படுத்தி விட்டிருந்தது. ஆட்சியில் வீற்றிருந்தவர்கள் தங்கள் ஆட்சியைப் பாதுகாத்துக் கொள்வதில் ஈடுபட்டிருந்தார்களேயன்றி, இஸ்லாமியக் கோட்பாடுகளையும் கொள்கைகளையும் காப்பாற்றும் சேவையைச் செய்யத் தவறினார்கள்.

மார்க்கக் கல்வியில் சிறந்த மேதைகளும் அறிவியல் வல்லுனர்களும் தத்துவ ஞானிகளும் தனித்தனியே தங்கள் தகுதிகளுக்கு ஏற்றவாறு சேவை செய்து கொண்டதானிருந்தார்கள். ஆனால், திசை மாறிப்போய்க்கொண்டிருந்த சமுதாயத்தைத் தட்டியெழுப்பி, இஸ்லாத்தின் உண்மையான வழியில் கொண்டுவரப் பாடுபடும் துணிவும் தெம்பும் போதுமான அளவு அவர்களிடம் காணப்படவில்லை. அந்நிலையில் அல்லாஹுதஆலா ஒரு மாமனிதரைத் தோற்றுவித்தான். அவர் தான் மாமேதை அறிவுக் களஞ்சியம், சொல்லின் செல்வர், செயல்வீரர், இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்) அவர்கள் ஆவார்கள்.

இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்) அவர்கள் எத்தகைய சேவைகளைச் செய்தார்கள்? அவர்களின் சேவைகளின்காரணமாக என்ன மாற்றங்கள் உருவாகின? என்பதனை அவர்களின் உண்மையான வாழ்க்கை வரலாறு முழுவதையும் படிப்பதன் மூலமே அறிய வாய்ப்பு ஏற்படும்.

இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்) அவர்களின் காலத்தில் அவர்களைத் தூற்றியவர்களும், போற்றியவர்களும் இருந்தார்கள்; இன்றும் இருக்கின்றனர். சமுதாயச் சீர்திருத்தம் செய்வது அவ்வளவு எளிய காரியமன்று. இத்துறையில் ஈடுபட்டவர்கள் தம் சமுதாய மக்களாலேயே தண்டிக்கப்பட்டுள்ளார்கள்; எதிர்ப்புக்குள்ளாவார்கள; தூற்றப்பட்டும் உள்ளார்கள்.

சுய நலமிகள் தம் சுயநலத்திற்குப் பங்கம் ஏற்படப் போகிறது என்று தெரிந்தவுடன் அவர்கள் அதை எதிர்க்கவே செய்வார்கள். பித்அத்கள் சுன்னத்துகளாகவும், சுன்னத்துகள் பித்அத்களாகவும் மாற்றப்பட்டதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தக் கூடியவர்களாக இருந்தனர். உண்மையான இஸ்லாமியவாதிகள் இதைப்பொறுக்கமாட்டார்கள்.

இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்) அவர்களுக்கும் இதே நிலைதான் ஏற்பட்டது. அன்னார் குர்ஆனையும் ஹதீதுகளையும் மார்க்க மேதைகளின் நூல்களையும் ஆராய்ந்து, தாம் கண்ட உண்மைகளைத் தெளிவாகப் போதனை செய்தார்கள். அவர்கள் காலத்தின் நடைமுறையிலிருந்த மார்க்கக் கலைகளைக் கற்று அவற்றில் தன்னிகரற்ற ஆற்றலைப் பெற்றார்கள்.

நான் மரதஸாவில் பயிலும் காலத்திலிருந்தே இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை தமிழில் எழுத வேண்டும் என்ற எண்ணம் இருந்து வந்தது. ஆனால், அதற்குரிய வாய்ப்பும் வசதியும் கிடைக்கவில்லை.

1977-இல் நான் பயின்ற கல்விக்கூடமான "ஜாமியா தாருஸ்ஸலாம்" அரபிக் கல்லூரியிலேயே ஆசிரியராகப் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றது முதல் அவ்வெண்ணம் ஓரளவு வலுப்பெற்றது. ஒரு நாள் ஜாமியாவின் பொதுச்செயலாளர் அல்ஹாஜ் மௌலவி காகா சயீத் அஹமது சாஹிப் உமர் அவர்கள் ஜனாப் குலாம் ரசூல்மிஹர் அவர்கள் உருதுவில் எழுதியுள்ள, சீரத் இப்னு தைமிய்யாவைத் தமிழில் மெழி பெயர்க்குமாறு கூறினார்கள். நான் அதை மொழி பெயர்க்கத் துவங்கினேன். ஆனால், இமாம் இப்னு தைமிய்யாவைப் பற்றித்தமிழ் உலகிற்கு அறிமுகப்படுத்த அந்நூல் போதுமானதாக எனக்குத் தோன்றவில்லை. எனவே, இப்னு தைமிய்யாவைப் பற்றிப் புதிதாக ஒரு நூலையே எழுதுவது என்ற முடிவுக்கு வந்தேன்.

நான் நினைத்தது போல் அப்பணி அவ்வளவு இலகுவானதாகத் தெரியவில்லை. பன்னூல்களை ஆராயவேண்டியதன் அவசியத்தை உணர்ந்தேன். இத்துறையில் நான் அதிகமாகவும் பயன்படுத்திய நூல் மௌலவி முஹம்மது யூசுப் சாஹிப் கோகன் உமரு, எம். ஏ., அவர்களால் உருதுவில் எழுதப்பட்ட "சீரத்தே இப்னுதைமிய்யா" என்ற நூலாகும். அதன்றி, "அபுஸ்ஸஹ்ரா மிஸ்ரி" அவர்கள் அரபியில் எழுதிய, "ஹயாத்துல் இமாம்இப்னு தைமிய்யா", மௌலானா அபுல்கலாம் ஆஸாத்தின், "தஸ்கிரா" மற்றும் பல நூல்களையும் பார்வையிடும் வாய்ப்பு ஏற்பட்டது.

இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்) அவர்களைப் பற்றி முதன் முதலாகத் தமிழில் வரும் நூலாகையால் படிப்பவர்களைத் தாக்கங்களில் சிக்க வைக்க விரும்பாமல், சாதாரணமான எளியநடையில் எழுதியுள்ளேன். தன்வாழ்நாள் முழுவதையும் மார்க்கத்தின் பாதுகாப்புக்காகவும் பிரச்சாரத்திலும் ஈடுபடுத்தி, அதிலேயே தம்மை அர்ப்பணித்த உத்தமர் ஒருவரின் வரலாற்றினை எல்லாரும அறிய வேண்டும் என்ற எண்ணமே இந்நூல்உருவாகுவதற்குக் காரணமாக அமைந்தது. அல்லாஹ் இதனை அவனது மார்க்கத்திற்குச் செய்யப்படும் ஒரு சேவையாக ஏற்று, ஈருலகிலும் ஈடேற உதவும் ஒரு கருவியாக ஆக்கி வைப்பாயாக!

ஆமீன்!



இருளுக்குப் பின் ஒளி:

இரவின் இருள் முடிந்தபிறகு கிழக்குக் கரையின் ஓரத்தில் காலைக் கதிரவனின் ஒளிக்கற்றைகள் வீச ஆரம்பிக்கின்றன. அத்துடன் இப்பிரபஞ்சத்தின் வரண்டுபோன நரம்புகளில் உறைந்து போயிருந்த இரத்தத்தில் வாழ்க்கையெனும் சூடு பிறக்கிறது.

நீரின் ஆழமும், நிலத்தின் பரப்பும், ஆகாயத்தின் உயரமும் தாங்கியுள்ள ஒவ்வொரு பொருளும் இரவின் இருளிலிருந்து விடுபட்டுப் புத்துயிர் பெற்றுத் தாம் படைக்கப்பட்ட இலட்சியத்தைப் பூர்த்தி செய்வதில் ஈடுபடுகின்றன.

ஒன்பது மாதங்களின் குறிப்பிட்ட கால அளவு முடிந்தபன் உலகில் வசந்தகாலம் பவனி வர ஆரம்பிக்கிறது. பூமியில் எங்கு நோக்கினும் பசுமை தென்படுகிறது. காய்ந்து போயிருந்த மரங்கள் பச்சை வண்ண ஆடைகளைஅணிந்து நிமிர்ந்து நிற்கின்றன. பூந்தோட்டங்களில் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. அமைதி தாண்டவமாடிய சோலைகளில் ஆரவாரம் தோன்றிவிடுகிறது.

ஒவ்வொரு மலையின் அடிவாரமும் தங்கமும் வைரமும் நிறைந்ததாயிருப்பதில்லை; ஒவ்வொரு கடலின் ஆழத்திலும் முத்துக்கள் வளர்ந்துகொண்டு வருவதில்லை என்பது முற்றிலும் உண்மையே. இருப்பினும், மலைகளில் எங்கேனும் சுரங்கம் தோன்றினால், அது சில வைரங்களையும் பவளங்களையும் கொடுத்துவிட்டு ஒதுங்கிக் கொள்வதில்லை. கடல்களின் ஆழத்தில் சில முத்துக்கள் கிடைப்பதோடு அவைகள் முடிந்துவிடுவதில்லை.

ஆனால் மனித சமுதாயத்தின் சட்டதிட்டங்களும் ஒழுங்குமுறைகளும் இதற்கு மாறுபட்டவை. இங்கே, பலநூற்றாண்டுகளுக்குப் பிறகு ஏதோ ஓர் இடத்தில் புண்ணியம் எனும் சுரங்கம் உருவாகத் தொடங்குகிறது. பலநூற்றாண்டுகள் வரை உலகம் எதிர்பார்த்த வண்ணமிருக்கிறது. அதற்குப் பிறகு இறைவன் ஒரு மனிதரைத் தோற்றுவிக்கிறான். அவருடைய தோற்றமெனும் கண்ணாடியை முன்னிறுத்தி மனித உலகம் மருவுற்ற தன் உருவத்தையும் இழந்துவிட்ட அழகையும் அலங்கரித்துக் கொள்ளும் புதிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்கிறது. அவரின் மறைவுக்குப் பிறகு உலகில் இருள் பரவிவிடுகிறது. மானிட சமுதாயத்தின் பண்பு நலன்கள் கெட்டுப்போகின்றன. இம்மாதிரி ஒருநிலை தான் அன்றும் இருந்தது. அது ஹிஜ்ரி ஏழாம் நூற்றாண்டு.

அந்நேரம் தாத்தாரியரின் படையெடுப்பால் இஸ்லாமிய உலகின் புகழும் உயர்வும் பாதிப்படைந்தது. நாலாபக்கமும நம்பிக்கையின்மையும் உறுதியின்மையும் தாண்டவாமாடிற்று.

பின்னர் உணர்வுடைய ஒவ்வோர் உள்ளமும் அல்லாஹ்வின் அருட்கொடையை எதிர்நோக்கிக் கொண்டிருந்தது. மனித வர்க்கத்தில் ஒளிமயமான ஒரு காலைப்பொழுது ஹிஜ்ரி 661ஆம் ஆண்டு ஹர்ரானின் ஓரத்தில் உதயமாயிற்று. அந்தப் பேரொளி தான் இறைவனின் அத்தாட்சிகளுள் ஓர் அத்தாட்சியும், நிகரற்ற சீர்திருத்தவாதியும், புனர் நிர்மாணிகளின் ஆதரவாளரும், சிறந்த மெஞ்ஞானியும், வலிமார்களின்அடிச்சுவட்டைப் பின்பற்றி வாழ்ந்தவருமான நபிமார்களின் வாரிசும், "ஷெய்குல் இஸ்லாம்" இமாம் இப்னுதைமிய்யா(ரஹ்) அவர்களாவார். சந்தேகமின்றி, "சிறந்த நுற்றாண்டுகள்" (கைருல் குரூன்) என வர்ணிக்கப்பட்ட காலத்திற்குப் பிறகு ஏற்பட்ட இருள்மயமான காலத்தில், ஒளி கொடுக்கும் கலங்கரை விளக்காக இருந்தார்கள் இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்) அவர்கள்.

பெயரும் குடும்பமும்;

பெயர் : அஹ்மத்

சிறப்புப் பெயர்: ‘அபுல் அப்பாஸ்’

பட்டப்பெயர் : ‘தகிய்யுத்தீன்’

வழங்கு பெயர் : இப்னு தைமிய்யா

தந்தை பெயர் : அப்துல் ஹலீம் ‘ஷிஹாபுத்தீன்’, ‘அபுல் மஹாசின்’

அவருடைய தந்தை : அஷ்ஷெய்கு அப்துஸ்ஸலாம் ‘முஜித்துத்தீன்’ ‘அபுல் பரகாத்’

அவர் தந்தை: அப்துல்லாஹ்

அவர் தந்தை: அபுல் காசீம் அல்கிள்ர்

அவர் தந்தை: முஹம்மத்

அவர் தந்தை: அல்கிள்ர்

அவர் தந்தை: அப்துல்லாஹ்

அவர் தாயார்: தைமிய்யா


நாடும் முன்னோரும்;

டமாஸ்கஸ் நகரருகே ஹர்ரான் என்ற பிரபலமான நகர் இருந்தது, இமாம் இப்னு தைமிய்யாவின் மூதாதையர் இந்த நகரைச் சேர்ந்தவர்களே. இக்குடும்பம் ஏழெட்டு தலைமுறைகளாகவே கல்வியிலும் அறிவிலும் தனிச்சிறப்புடன் விளங்கி வந்தது. அக்குடும்பத்தின் ஒவ்வொரு நபரும் தத்தம் காலத்தின் சிறந்த அறிஞர்களுள் ஒருவராய்த் திகழ்ந்து இருக்கின்றனர். இமாம் அவர்களின் பாட்டனார் ஷெய்கு அப்துஸ்ஸலாம் அவர்கள் இஸ்லாமியக் கல்வித் துறையில் தம் குடும்பம் பெற்றிருந்த இந்தப் பாரம்பரியப் புகழை இன்னும் மேலோங்க செய்தார்கள்.

அன்னார் ஹிஜ்ரி 560ல் பிறந்தார்கள். ஆரம்பத்தில் தம் சிறியதந்தை பக்ருதீன் கதீப் என்பவரிடம் கல்வி கற்றார்கள். பிறகு தம் சிறிய தந்தையின் மகன் சைபுத்தீன் என்பவருடன் பக்தாத் நகரம் சென்று, அங்கே ஆறாண்டுகள் வரை கல்வி கற்பதில் ஈடுபட்டார்கள். கல்வியை முடித்துக் கொண்ட பிறகு தம் சிறியதந்தையிடமே வந்து சேர்ந்தார்கள்.

"நபி தாவூத்(அலை) அவர்களுக்கு, இரும்பை இறைவன் வசப்படுத்தித் தந்ததைப் போன்று ஷெய்கு அப்துஸ்ஸலாம் அவர்களுக்கு மார்க்கச் சட்ட அறிவை வசப்படுத்தித் தந்தான்" என்று ஷெய்கு ஜமாலுத்தீன்மாலிக் என்பவர் கூறினார் என, இமாம் இப்னு தைமிய்யா அவர்கள் கூறியதாக ஹாபிஸ் தஹபி தன் நூலில் எழுதியுள்ளார்.

ஷெய்கு அப்துஸ்ஸலாம் அவர்கள் ஹிஜாஸ், இராக், ஷாம் முதுலிய நாடுகளிலும், தம் பிறந்தகமான ஹர்ரான் நகரத்திலும் ஆசிரியராகப் பணியாற்றினார்கள். அவர்கள பல நூல்களை இயற்றியுள்ளார்கள். அவற்றுள் மிகப்பிரசித்தி பெற்றது ‘அல் முந்தகா மின் அக்பாரில் முஸ்தபா’ என்பதாகும். இது சரியான நாயக வாக்கியங்களின் ஒழுங்கு முறையிலான ஒரு தொகுப்பாகும்.

‘ஷெய்குல் இஸ்லாம்’ காழீ முஹம்மது பின் அலீ ஷவ்கானி அவர்கள் ‘நைலுல் அவ்தார்’ என்னும் பெயரில் இதற்குவிளக்கவுரை எழுதியுள்ளார்கள். அறிஞர் பெருமக்களின் அபிப்பிராயப்படி ஹாபிஸ் இப்னு ஹஜர்அஸ்கலானியுடைய பத்ஹுல் பாரிக்குப் பிறகு ஹதீதுகளின் விளக்கவுரைகளில் நிகரற்றதாய் விளங்குகிறது.

ஹிஜ்ரி 652ல் நோன்புப் பெருநாளன்று ஜும்ஆத் தொழுகைக்குப் பிறகு ஷெய்கு அப்துஸ்ஸலாம் (ரஹ்) அவர்கள் இவ்வுலகை நீத்தார்கள்.

இமாம் இப்னு தைமிய்யாவின் தந்தை ஷெய்கு ஷிஹாபுத்தீன் அபுல் மஹாசின் அப்துல் ஹலீம்(ரஹ்) அவர்கள் ஹிஜ்ரி 628ல் பிறந்தார்கள். அவர்களும் மாபெரும அறிஞராக இருந்தார்கள்.

அவர் மாபெரும் சிந்தனையாளராய் இருந்தார். பல்கலைகளில் தேர்ச்சி பெற்றிருந்தார். அவர் நேர்வழி காட்டும் நட்சத்திரங்களுள் ஒன்றாய்த் திகழ்ந்தார். ஆனால், சந்திரனின் பிரகாசத்திற்கும், சூரியனின் பேரொளிக்குமிடையே அவர் மங்கிவிட்டார். அதாவது, சந்திரன் என்பது அவருடைய தந்தை ஷெய்கு அப்துஸ்ஸலாமும் சூரியன் என்பது அவரது மகன் இமாம் இப்னு தைமிய்யயவுமாவார்.

ஷெய்கு அப்துல் ஹலீம்(ரஹ்) ஹர்ரான் நகரை விட்டு டமாஸ்கஸ் வந்த பிறகும் ஆசிரியர் தொழிலில் ஈடுபட்டிருந்தார். பல பள்ளிவாயில்களில் பாடம் நடத்தி வந்தார். அவர் காலஞ்சென்ற பிறகு அவருடைய குமாரர் இமாம் இப்னு தைமிய்யாவிடம் அந்தப் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்ன.
ஷெய்கு அப்துல் ஹலீம்(ரஹ்) அவர்கள் ஹிஜ்ரி 682 துல்ஹஜ்ஜில் டமாஸ்கஸில் இவ்வுலகைப் பிரிந்தார்கள். அச்சமயம் இமாம் இப்னு தைமிய்யாவுக்கு வயது இருபத்தொன்று.

இமாமவர்களுக்கு இப்பெயர் வந்ததற்கு இரு காரணங்கள் கூறப்படுகின்றன.

ஒன்று : அவர்களின் முப்பாட்டனார்களில் ஒருவராகிய முஹம்மத்-பின்-கிள்ர் அவர்கள் ஹஜ்ஜிற்குச் சென்று கொண்டிருந்தார்கள். கர்ப்பிணியாய் இருந்த அவர் மனைவியும் அப்போது அவருடன் இருந்தார்.’ தைமா’ என்ற இடத்தையடைந்தபோது முஹம்மத் பின் கிள்ர் ஒரு கிராமவாசியின் கூடார வாசலில் ஒரு அழகான பெண் குழந்தையைப் பார்த்தார். அவர் ஹஜ்ஜை முடித்துவிட்டுச் சொந்த ஊர் திரும்பிய பிறகு அவர் மனைவி ஒரு பெண் குழந்தையைப் பெற்றாள். பிறந்த குழந்தையை அவர் பார்த்த போது, தைமாவிலே அவர் கண்ட குழந்தையைப் போன்ற அழகுடையதாய் இருந்தது. அவர் தன்னையறியாமலே, "யா தைமிய்யா யா தைமிய்யா" என்று அழைத்தார். அதனால் அக்குடும்பம் இந்தப் பெயரால் பிரபலமடைந்தது.

மற்றொன்று: இமாமவர்களின் முன்னோராகிய கிள்ர் உடைய அன்னையின் பெயர் தைமிய்யாவாகும். அவர்கள் நல்லொழுக்கமுள்ள கற்றறிந்த சிறந்த பெண்மணியாய்த் திகழ்ந்தார்கள். மக்களுக்கு உபதேசமும் செய்வார்கள். அவர்களையொட்டி இமாமவர்களின் குடும்பம் இப்பெயரால் பிரபலமடைந்தது.

இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்) அவர்கள் ஹிஜ்ரி 661 ரபீயுல் அவ்வல் மாதம் 10ம் தேதி திங்கட்கிழமையன்று பிறந்தார்கள். அச்சமயம் இரத்த வெறியர்களான தாத்தாரியர்கள் அப்பாஸிய கிலாபத் ஆட்சியின் தலைநகராமாயிருந்து பக்தாதைச் சின்னாபின்னப்படுத்திவிட்டு, ஷாமை (சிரியாவை) நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தார்கள். செல்லும் இடங்களிலெல்லாம் நாசத்தையும் அழிவையும் விளைவித்துப் பல உயிர்களைக்கொன்று குவித்துக் கொண்டு சென்றார்கள். அவர்களின் தாக்குதலுக்கும் வெறியாட்டத்திற்கும் இலக்கான வளமான நாடுகள் அனைத்தும் பாலைவனங்களைப் போல் மாறிவிட்டன.

இக்கொள்ளைக் கூட்டம் ஹர்ரானை நோக்கி வந்தபோது இமாமவர்களின் தந்தை அப்துல் ஹலீம் அவர்கள் தம்குடும்பத்தாரோடு ஊரைவிட்டுப் புறப்பட்டு விட்டார்கள். வீட்டிலுள்ள பொருட்களை எடுத்துச் செல்லவோ அதற்குரிய வாகன வசதிகளைச் செய்யவோ அவர்களுக்குப் போதுமான அவகாசம் இல்லாதிருந்தது. கல்வியிலே சிறந்து விளங்கிய இக்குடும்பம் இந்தப் பரிதாப நிலையிலும் தன்னுடன் சில நூல்களை மட்டுமே எடுத்துச் சென்றது. அவைதாம் அவர்களின் பெருஞ்செல்வமாய் விளங்கின. தாத்தாரியரின் பிடியிலிருந்து தப்பி எப்படியோ டமாஸ்கஸ் வந்தடைந்தனர் அக்குடும்பத்தினர். இந்நிகழ்ச்சி ஹிஜ்ரி 667ல் நடந்தது. அப்பொழுது இமாமவர்கள்ஆறு அல்லது ஏழு வயதினராயும், அவர்களின் இளைய சகோதரர் ஷரபுத்தீன் என்பவர் ஒன்றரை வயதினராயுமிருந்தனர்.


கல்வியும் நினைவாற்றலும்;

இமாம் அவர்கள் டமாஸ்கஸ் நகரில் முறையாகக் கல்வி கற்க ஆரம்பித்தார்கள். இமாமவர்களின் இளம் பருவத்திலிருந்தே அவர்களின் முகத்தில் அவர்களுடைய நிகரற்ற ஆற்றலும் திறமையும் ஒளிவிட்டுப் பிரகாசிக்கலாயின. இளம் வயதிலேயே அன்றைய வழக்கிலிருந்த சகல கலைகளிலும் அவர்கள் சிறந்து விளங்கினார்கள். இருபது வயதினராய் இருக்கும்போதே மார்க்கத் தீர்ப்புகள் (ஃபத்வா) வழங்கும் தகுதியுடையவராய்த் திகழ்ந்தார்கள்.

அவர்கள் அபாரமான மூளையும் சிந்திக்கும் திறனும் உடையவர்களாய்த் திகழ்ந்தார்கள். எந்தக் கலையில் அவர்கள் ஈடுபட்டாலும், அதில் மிகக் குறுகிய காலத்தில் தேர்ச்சி பெற்றுவிடுவார்கள். குறிப்பாக குர்ஆன், ஹதீஸ் சம்பந்தப்பட்ட கலைகளில் அவர்களுக்குத் தனியொரு பற்றும் ஈடுபாடும் இருந்தன. அவர்கள் குர்ஆனை மனனம் செய்துவிட்டு ஹதீதுக் கிரந்தங்கள் பலவற்றில், முஸ்னது இமாம் அஹ்மது பின் ஹன்பல், ஸஹீஹ் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், ஜாமிஉத்திர்மிதி, ஸுனன் அபீதாவூது, ஸுனன் நஸஈ, ஸுனன் இப்னு மாஜாத, ஸுனன்தாருகுத்னீ ஆகியவற்றைப் பலமுறை தம் ஆசிரியர்களிடம் கற்றுக் கொண்டார்கள். ஹதீஸ் கிரந்தங்களில்ம முதன்முதலாக அவர்கள் மனனம் செய்தது இமாம் ஹுமைதி என்பார் தொகுத்த ‘அல்ஜம்உ பைனஸ் ஸஹீஹன்’ என்பதாகும்.

இவர்களின் விரைவாகப் புரிந்து கொள்ளும் ஆற்றல், சிந்தனைத் திறன், நினைவாற்றல், கருத்தை ஈர்த்துக்கொள்ளும் தன்மை இவற்றைக் கண்டு அக்காலத்தில் வாழ்ந்த திறன்மிக்க அறிஞர்களும் வியப்பில் ஆழ்ந்திருக்கிறார்கள்.

இமாமவர்களின் நினைவாற்றலைப் பற்றி பல நிகழ்ச்சிகள் கூறப்பட்டுள்ளன. இப்னு அப்துல் ஹாதி அவர்கள் எழுதுகின்றார் :

ஹலப் நாட்டு அறிஞர் ஒருவர் ஒருமுறை டமாஸ்கஸ் வந்திருந்தார். அங்கே இமாமவர்களின் நினைவாற்றல் மக்களிடையே பிரபலமாக இருந்ததை அவர் அறிந்தார். அதனை சோதித்துப் பார்க்க வேண்டுமென்ற எண்ணம் அவருக்குத் தோன்றியது. அச்சமயம் இமாமவர்கள் மிகக்குறைந்த வயதுடையவராய் இருந்தார்கள். பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்த இமாமவர்கள் பள்ளிக்கூடத்திலிருந்து வந்து கொண்டிருக்கும் போது ஹலப் நகர அறிஞர், இமாமவர்களின் எழுதும் பலகையை வாங்கி அதில் பதிமூன்று நாயக வாக்கியங்களை எழுதினார். இமாமவர்கள் அதை ஒருமுறை படித்துப் பார்த்தார்கள். பிறகு அந்த அறிஞரின் வேண்டு கோளுக்கிணங்க அத்தனை ஹதீஸ்களையும் மனப்பாடமாய் ஒப்பித்துவிட்டார்கள்.

அந்த அறிஞர் மீண்டும் பலகையில் ஹதீஸ் அறிவிப்பாளர்களின் பெயர்ப்பட்டியலை எழுதினார். இமாமவர்கள்அதையும் முன்னதைப் போன்றே ஒருமுறை பார்த்துவிட்டு தடுமாற்றம் சிறிதும் இன்றி அப்படியே ஒப்புவித்தார்கள். அப்பொழுது அந்த அறிஞர்,

"இச் சிறுவன் வருங்காலத்தில் மாபெரும் மேதையாகத் திகழ்வான்’’, என்று கூறினார்.

இத்தகைய நினைவாற்றல் அவர்களுக்கிருந்ததன் காரணமாகத் தான் அவர் காலத்திலிருந்த மாபெரும் அறிஞர்களும், கலை வல்லுனர்களும் இமாம் அவர்களின் நிகரற்ற நினைவாற்றலை ஒப்புக்கொள்வோராய் இருந்திருக்கிறார்கள்.

அவர்கள் ஹதீஸ் நூல்கள் பலவற்றை அநேக வல்லுனர்களிடம் ஓதியுள்ளார்கள். அவர்களின் ஆசிரியர்கள் அனைவரின் பெயர்களையும் இங்கே குறிப்பிட இயலாது. ஹதீஸ் நூல்களை ஆராய்வதில் அவர்கள் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்தார்கள். இமாம் அவர்கள் தம் கரங்களால் பலநூல்களை எடுத்தெழுதியுள்ளார்கள். மார்க்கச் சட்டத்தையும் அதன் அடிப்படைகளைப் பற்றிய அறிவையும் தம் தந்தையிடமும், ஷெய்கு ஷம்சுத்தீன் இப்னு அபீஉமர் என்பவர்களிடமும் பயின்றார்கள். அரபி இலக்கியத்தை இப்னு அப்துல் கனி என்பவரிடமும் பயின்றார்கள்.

இளம் வயதிலேயே புத்தகங்கள் எழுதும் வேலை ஆரம்பமாகிவிட்டது, இருபது வயதினராய் இருக்கும்போது அவர்களின் தந்தை காலமாகிவிட்டார்கள். அவர்கள் பல கல்விக் கூடங்களில் பாடம் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். அவர்களின் மறைவுக்குப் பிறகு சகல பொறுப்புகளும் இமாம் இப்னு தைமிய்யாவிடம் ஒப்படைக்கப்பட்டன.

இமாம் அவர்கள் ஹிஜ்ரி 683ல் டமாஸ்கஸின் பிரபலமான ஹதீஸுக் கூட்டத்தில் முதன் முதலாகப் பாடம் நடத்தினார்கள். வழக்கம் போல் அப்பொழுதிலிருந்தே பெரும் பெரும் அறிஞர்கள் இவர்களின் போதனைக் கூடங்களில் கலந்து கொண்டனர்.

அந்தப் பாடத்தில் இமாம் அவர்கள் பிஸ்மில்லாஹ்வுக்கு விளக்கம் கொடுத்து பல தத்துவங்களையும், கருத்துக்களையும் கூறியதைக் கண்ட அவையினர் இமாம் அவர்களின் அறிவுத் திறனைப் பார்த்து வியந்துபோனார்கள்.

அது முதற்கொண்டு டமாஸ்கஸின் ஜாமிஆ மஸ்ஜிதில் ஜும்ஆத் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் விளக்க உரையை ஆரம்பித்தார்கள் இமாம் அவர்கள். அவர்கள் அத்தியாயம் ‘நூர்’க்கு அளித்த விரிவுரையே பல ஆண்டுகளுக்குப் பின் முடிவுற்றதென்றால் அந்த விளக்கம் எவ்வாறிருந்திருக்கும் என்று நாம் யூகிக்க முடிகிறதல்லவா?

ஆறு, ஏழு ஆண்டுகளில் இமாம் அவர்களின் அறிவும் ஆற்றலும் எல்லா இடங்களிலும் பிரபலமாகிவிட்டன. ஹிஜ்ரி690ல் தலைமை நீதிபதி பதவி இமாமவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் அதை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார்கள். முப்பது வயது கூட முழுமையடையாத ஒருவர் இதைவிட மேலான பதவியை எதிர்பார்க்க இயலுமா? ஆனால் இமாம் அவர்களின் எண்ணத்தில் மார்க்க சேவை தொடர்பான உலகமே வேறாக இருந்தது. அவ்வுலகில் எத்தனையோ நீதிபதிப் பதவிகள் இறைந்து கிடக்கும். அவற்றை எவரும் ஏறெடுத்தும்பார்ப்பதில்லை. நீதிபதிகள் ஆயிரமாயிரம் இல்லாவிட்டாலும், நூற்றுக்கணக்கில் தோன்றிக்கொண்டுதானிருக்கிறது. ஆனால் உலகிற்குச் சீர்திருத்தவாதிகளையும் புனர்நிர்மாண கர்த்தாக்களையும் இறைவன் ஏராளமாக வாரி வழங்குவதில்லை. இமாம் அவர்கள் நீதிபதிப் பதவியை உதறித் தள்ளிவிட்டுச் சுதந்திரமாக இருந்து மார்க்க சேவை செய்வதையே தம் இலட்சியமாகக் கொண்டார்கள்.

ஹிஜ்ரி 691ல் ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றச் சென்றிருந்தார்கள். திரும்பி வந்தபோது இஸ்லாமிய உலகமெங்கும் அவர்களின் கல்வி அறிவைப் பற்றிய புகழ் பரவி விட்டிருந்தது.


சீர்திருத்தப்பணி;

மாபெரும் புகழுக்கிடையே இமாம் அவர்களுக்கு எதிர்ப்பும் வளர்ந்து கொண்டே வந்தது. மெல்ல மெல்ல அவர்களின் எதிரிகள் ஒன்று சேரலாயினர். அவர்களின் எதிர்ப்பினால் இமாம் அவர்களின் பெயரும் புகழும் அண்டை நாடுகளிலும் பரவலாயிற்று.

இமாம் இப்னு தைமிய்யா அவர்கள் பித்அத்துகள் என்ற அனாச்சாரங்களை வெட்டிச் சாய்க்கும் வாளாகத் திகழ்ந்தார்கள். இந்த வாள் உறையின் வெளியே கொண்டு வரப்பட்டதும் பித்அத்துகளையும் அனாச்சாரங்களையும் உறைவிடமாகக் கொண்டிருந்தவர்கள் கூச்சலிடவும் கூக்குரலிடவும் தலைப்பட்டார்கள். இக்கூச்சலும் குழப்பமும் தான் இமாமவர்களின் வாழ்க்கை முழுவதையும் சோதனைகளிலும் குழப்பங்களிலும் சிக்கவைத்து அவர்களின் வாழ்வை ஒரு சோக வரலாறாகவே ஆக்கிவிட்டது. எனினும், மலை போன்ற உறுதிபடைத்த இமாம் அவர்கள் சற்றும் அசைந்து கொடுக்கவில்லை. எதிர்ப்புச் சக்திகளின் தாக்குதல்கள் அனைத்தையும் வாழ்நாள் முழுவதும் தாங்கி வந்தார்கள். அவ்வாறு உறுதியாக இருந்து தூய்மையான சுன்னத்தையும், முன்னோர்களின் வாழ்க்கை முறைகளையும் பகிரங்கமாக விளங்க வைத்தார்கள். விளக்கியதோடு நில்லாமல் அதன்படி நடந்தும் காட்டினார்கள். அதனால், ‘சிறந்த காலங்கள்’ என்று கூறப்பட்டகாலத்திற்குப் பிறகு இஸ்லாத்தின் உண்மையான பொலிவையும் மார்க்கத்தின் சிறப்பையும் உலக மக்கள் விளங்கும்படிச் செய்தார்கள். அதனால் தான் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்குப் பிறகும் பல கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியல் வாழும் நாம் இன்னும் உண்மையான தூய்மையான மார்க்க ஒளியைக் காணமுடிகிறது.


எதிர்ப்புப் புயல்;

அநேகமாக ஹிஜ்ரி 690-ல் தான் இமாம் அவர்களுக்கு எதிராகக் குழப்பங்கள் ஆரம்பமாயின. இமாம் அவர்கள் ஒரு வெள்ளிக்கிழமையன்று தொழுகைக்குப் பிறகு இறைவனின் சிறப்பியல்புகளைப் பற்றி உரை நிகழ்த்தினார்கள். அதில் சில தர்க்க மேதைகளுடையவும், கிரேக்கத் தத்துவங்களின் அடிப்படையில் சிந்திப்பவர்களுடையவும் போக்கிற்கு மாற்றமாக, முற்கால மகான்களின் (ஸலபுகளின்) கொள்கைகளுக்கேற்ப விளக்கம் கொடுத்தார்கள். பல நூற்றாண்டுகளாக அன்னியரின் ஐயத்திற்குரிய விளக்கங்களையே உண்மையென நம்பிவந்த உண்மையறியாதவர்கள், இப்புதிய விளக்கத்தைக் கேட்டுக் கோபாவேசம் கொண்டனர். ஆனால் தலைமை நீதிபதி ஷிஹாபுத்தீன், ஷெய்கு ஷரபுத்துன் என்ற பெரியார்களின் ஆதரவின் காரணமாக இக்குழப்பம் அணைந்து போயிற்று. அதற்குப் பிறகு எட்டு ஆண்டுகள் சுமூகமாகக் கழிந்தன.

ஹிஜ்ரி 698-ல் எதிர்ப்புப் புயல் மிக வேகமாக வீசத் தொடங்கிற்று. அதற்குக் காரணமென்னவெனில், ஒரு மார்க்க வினாவுக்கு பதில் எழுதியதில், இமாம் அவர்கள் ஒரு நீண்ட கட்டுரையை எழுதி முடித்தார்கள். ‘ஹமவீ அகீதா’ என்ற பெயரில் அந்த நூல் மிகவும் பிரபலமாயுள்ளது. இந்தக் கட்டுரை அவர்கள் ஹிஜ்ரி 690-ல் நிகழ்த்திய உரைக்கு விளக்கமாக அமைந்திருந்தது. அதாவது அதில் தர்க்க மேதைகளின் ஐயத்திற்குரிய தவறுகளை எடுத்துக்காட்டி உண்மை அறிஞர்களுடையவும் முந்தைய நல்லோர்களுடையவும் (ஸலபுகளின்) கொள்கைகளை விளக்கியிருந்தார்கள்.

இக்குழப்பத்திற்குக் காரணமாயிருந்தது ஹமவீ அகீதா தான் என்றாலும், மற்ற காரணங்களும் அதற்குத் துணையாக இருந்தன. உதாரணமாக இமாமவர்களின் அறிவுத்திறன், அவர் தம் சிறப்பு, அவர்களின் புகழ் ஆகியவற்றைக் கண்ட ஒரு கூட்டம் அவர்களுக்கெதிராக மாறிக் கொண்டு வந்தது. இமாம் அவர்கள் எந்த அந்தஸ்தையடைந்து செல்வாக்குப் பெற்று வந்தார்களோ அந்த அந்தஸ்தை இக்கூட்டத்தினரால் அடையமுடியாது. எனவே அவர்களின் உள்ளங்களில் பொறாமை தோன்றி அவர்களிடமிருந்த அரைகுறை நியாய உணர்ச்சியையும் நாணயத்தையும் கரிக்கலாயிற்று. இதற்கு மேலாக டமாஸ்கஸில் அரசப் பிரதிநிதியாக இருந்தவர் இமாமவர்களை அதிகம் போற்றக்கூடியவராக இருந்தார். எப்பொழுதும் அவர்களுடனிருந்து அவர்களால் நன்மை பெற வேண்டும் என்ற ஆசை உடையவராய் இருந்தார். பேரும் புகழும் விரும்பும் பேராசை கொண்டவர்களின் நெஞ்சில் இது ஒரு பெரிய முள்ளாகத் தைத்தது. உள்ளுக்குள்ளே எரிந்துகொண்டிருந்த இந்நெருப்பு ‘ஹமவீ அகீதா’ என்ற அந்த நூல் விஷயத்தில் வெளியே வருவதற்கு ஒரு வாய்ப்பாய் அமைந்தது. எனவே குழப்பவாதிகள் ஒருவர் ஒருவராக நீதிபதிகளிடமும் மார்க்கச் சட்ட நிபுணர்களிடமும் சென்று இமாமவர்களுக்கு எதிராக அவர்களைத் தூண்டிவிடலானார்கள். இந்தத் தீய நோக்கத்தை நிறைவேற்றுவான் வேண்டி ‘ஹமவீ அகீதா’ என்ற நூலின் கருத்துக்களையும் பொருள்களையும் மாற்றிச் சொல்லவும் அவர்கள் தயங்கவில்லை. பொய்யும் புரட்டும் சொல்வது கூட அவர்களின் பொறாமை எண்ணம்கொண்ட உள்ளத்துக்கு வெட்கத்திற்குரியதாய்த் தோன்றவில்லை.

அவர்கள், இமாமவர்கள் இறைவனுக்கு உருவம் கற்பிக்கின்றார்கள் என்று கூறலாயினர். இறைவனுக்கு உறுப்புகளும் அவயங்களும் இருக்கின்றன என்று அவர்கள் கூறுவதாகப் பொய்பிரச்சாரம் செய்தனர். ஹனபிகளின் நீதிபதியாக இருந்த ஜலாலுத்தீன் என்பவரும் இவர்களின் வலையில் சிக்கிவிட்டார். அவர்களுக்குத் தலமை தாங்கியவராய் தாருல் ஹதீஸ் அஷ்ரபிய்யா என்ற இடத்தில் வந்து அமர்ந்து கொண்டு இமாமவர்களைக் கூப்பிட்டு அனுப்பினார். இமாம் அவர்கள் வர இயலாதென சொல்லியனுப்பியதுடன், ‘கொள்கைகள் தொடர்பாகத் தீர்ப்பு வழங்கும் பொறுப்பு தங்களைச் சார்ந்ததில்லை, மக்கள் மத்தியில் தீர்ப்புவழங்கும் தகுதி மன்னருக்கே உரியதாகும்’ என்றும் எழுதியனுப்பிவிட்டார்கள். இவ்வாறு அவர்கள் எழுதியனுப்பியது காஜி ஜலாலுத்தீன் அவர்களுக்கு அதிகக் கோபத்தையூட்டியது. எதிரிகள் அதற்கு மேலும் தூபமிட்டார்கள். "தாங்கள் அழைத்தும் இப்னு தைமிய்யா வர மறுத்துவிட்டதைப் பார்த்தீர்களா?" என்றுகூறினார்கள். ஜலாலுத்தீன் வேகப்பட்டு ஆத்திரமுற்று "இப்னு தைமிய்யா உடைய கொள்கைகள் சரியானவையல்ல" என்று பிரகடனப்படுத்திவிட்டார். அரசப் பிரதிநிதியாக இருந்தவருக்கு இக்குழப்பத்தைப் பற்றிய செய்தி வந்தது. உடனே அவர் பிரகடனப்படுத்தக் கூடியவர்களையும், அதன் ஆதரவாளர்களையும் கூப்பிட்டு, தண்டித்து வாயடைக்கச் செய்தார்.

அதற்குப்பிறகு நீதிபதி இமாமுத்தீன் ஷாபிஈ அவர்கள் ஒரு சபையைக் கூட்டி அதில் ‘அகீதா ஹமவிய்யா’ என்ற நூலை படிக்கச் சொல்லிக் கேட்டார். அதில் விளக்கங்கள் தேவையான இடங்களில் இமாமவர்கள் விளக்கங்கள் கொடுத்தார்கள். அங்கு கூடியிருந்த அனைவரும் ஹமவிய்யா கொள்கையின் கருத்துக்கள் சரியானவையென ஒப்புக் கொண்டனர். அந்த நூல் படித்து முடிந்தபிறகு நீதிபதி இமாமுத்தீன் அவர்கள், "இனிமேல் எவராவது இப்னு தைமிய்யாவைப் பற்றி ஆட்சேபம் தெரிவித்தால், நான் அவரைத் தண்டிப்பேன்" என பகிரங்கமாக அறிவித்தார்கள். இத்துடன் குழப்பம் சிறிது அடங்கியது.

சில ஆண்டுகள் வரை இமாம் அவர்களுக்கிருந்த எதிர்ப்புக் கணல் அடங்கி இருந்தது. ஹிஜ்ரி 705-ல் நஸ்ருமன்பஜ என்பவர் எகிப்தில் மறுபடியும் அக்கனலை எரிய வைத்தார். அவ்ர இப்னு அரபீ, இப்னு சப்யீன் முதலானவர்கள் மீது பற்றுதலுடையவராக இருந்தார். அவர்கள் வஹ்தத்துல் வுஜுது (அத்வைத்) கொள்கையை உடையோராக இருந்தார்கள். இச்செய்தி இமாமவர்களுக்கு எட்டியபோது இமாமவர்கள் நஸ்ருக்கு ஒரு நீண்ட தபால் எழுதினார்கள். அது ‘ஜிலா உல் அய்னைத்’ (கண்களின் ஒளி) என்ற நூலுருவில் வெளிவந்துள்ளது. அக்கடிதத்தில் நஸ்ருடைய கொள்கைகளுக்கு விரிவான முறையில் பதில் எழுதினார்கள். அந்த பதிலைப் படித்ததும், நஸ்ரு இமாமவர்களை எதிர்த்துக் குழப்பம் விளைவிப்பதில் ஈடுபட்டார். அவர் ஆட்சியாளர்களிடமும் அதிகாரிகளிடமும் ஆதாரமற்ற புரட்டுகளைத் திரித்தும் சொன்னார். நூதனமான செய்திகளையும் பித்அத்துக்களையும் பிரச்சாரம் செய்கிறார் என்றும், அவருடைய தீங்கிலிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டுமென்றும் கூறினார்.

நீதிபதி இப்னு மக்லூப் மாலிகீ என்பவரும், ருக்னுத்தீன் ஜாஷன்கீர் என்பவரும் நஸ்ருடைய ஆதரவாளராகிவிட்டனர். இப்னு மக்லூப் என்பவர், இப்னு தைமிய்யாவும் - இப்னு தவ்மரத் என்பவரைப் போன்று ஆட்சியைக் கைப்பற்றப் பார்க்கிறார் என்று கூறி, ஆட்சியாளர்களின் மனத்தில் சந்தேகத்தை உருவாக்கிவிட்டு, அவர்களைத் தன் பக்கம் சேர்த்துக் கொண்டார். கெட்ட நடத்தையுள்ள அறிஞர்கள் இத்தகையஆயுதங்களையே கையாளுகின்றனர். இமாமவர்களை எதிர்த்து எண்டாக்கப்பட்ட குழப்பங்கள் அனைத்திலும் இச் சந்தேகம் அதிகமாக வேலை செய்தது.

இமாமவர்களின் மாணவ மணி ஹாபிஸ் இப்னு கய்யிம் (ரஹ்) அவர்கள் தானெழுதிய ஒரு கவிதையில் தீய அறிஞர்களைப் பற்றிக் கூறியிருப்பதைப் பார்க்கும் போது, எந்த அறிஞர்கள் இமாமானவர்களைத் துன்புறுத்துவதில் ஈடுபட்டிருந்தார்களோ, அவர்களைக் குறிப்பிட்டே இதை எழுதியுள்ளார்கள் என்று தெரிகிறது.

இறுதியாக அரச ஆணை வந்தது. "அரசப் பிரதிநிதி அப்ரம் என்பவர் இமாம் அவர்களின் கொள்கைகள் பற்றி விசாரணை நடத்துவார்" என்பதே அந்த ஆணை. எனவே இக்கட்டளைக்கேற்ப அப்ரம் ஹிஜ்ரி 705-ல் ரஜப் மாதம்8ம் தேதி அறிஞர்களையும் நீதிபதிகளையும் ஒன்று கூட்டினார். இமாம் அவர்கள் ‘அகீதத்துல் வாஸிதிய்யா’ என்ற நூலைக் கொண்டு வந்தார்கள். சபையில் அதைப் படித்துக் காட்டினார்கள். அதன் சில பகுதிகளைப் பற்றி விவாதம் நடந்தது. மற்ற பகுதிகள் மறுகட்டத்திற்காக ஒத்தி வைக்கப்பட்டது.

ரஜப் 10 அன்று ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு மறுபடியும் சபை கூடியது. அன்று எதிரிகளுடன் ஸபிய்யுத்தீன் ஹிந்தியும் சேர்ந்து கொண்டார். எதிரிகள் எல்லோரும் ஏகோபித்து ஸபியுத்தீன் ஹிந்தியை விவாதத்திற்குத் தலைவராக நியமித்தார்கள். ஷெய்கு ஸபிய்யுத்தீன் பெருந்திறமையுடையவராயிருந்தாலும், இமாம் இப்னுதைமிய்யாவிடம் அவரால் தாக்குப்பிடிக்க இயலவில்லை. எனவே, எதிரிகள் ஷெய்கு ஸபிய்யுத்தீனை நீக்கிவிட்டு, ஷெய்கு கமாலுத்தீன் இப்னு ஸமல்கான் என்பவரை விவாதத் தலைவராக ஆக்கினார்கள். விவாதத்தில் இமாமவர்கள் எதிரிகளின் வாயை அடைத்துவிட்டார்கள். எல்லோரும் இமாம் இப்னு தைமிய்யாவின் கொள்கைகள் சுன்னத் ஜமாஅத்தின் கொள்கைகள் தான் என்று ஒப்புக் கொண்டனர். எனினும் எதிரிகளின் குழப்பம் விளைவிக்கு மனப்பான்மை ஒழியவில்லை. இமாமவர்களின் பேச்சைத் திரித்துக் கூறினார்கள். அவர்கள் பேச்சுக்குத் தவறான கருத்தைக் கொடுத்தார்கள். இப்னு வகீல் என்பவரும் அவரது சகாக்களும் இமாமவர்கள்தங்கள் அகீதாவை மாற்றிக் கொண்டார்கள் என்று தப்புப் பிரச்சாரம் செய்தார்கள்.

அரச பிரதிநிதியாக இருந்த அப்ரம் என்பவர் அப்போது அங்கு இல்லை. எனவே இப்னு வகீலும் அவரது ஆதரவாளர்களும் இமாமவர்களின் சகாக்களுக்குப் பல தொல்லைகள் கொடுத்தார்கள். அரசப் பிரதிநிதி திரும்பி வந்துவிட்டார். அவரிடம் விபரங்களைத் தெரிவித்தபோது, இப்னு வகீலுடைய ஆதரவாளர்கள் சிலரைக் கடுமையாகத் தண்டித்தார். குழப்பம் அதிகரித்துக் கொண்டே போனதால் இதை அடக்குவதற்காக, கொள்கைகள் தொடர்பாக கருத்து வெளியிடுபவர்களுக்குத் தண்டனை கொடுக்கப்படும் என்று பிரகடனப்படுத்தினார்.

ஷஃபான் 7-ல் மூன்றாவது முறையாக சபை கூடியது. அதில் கலந்துகொண்ட அனைவரும் இமாவர்களின்அகீதாக்கள் (கொள்கைகள்) சரியானவையென ஒப்புக்கொண்டார்கள். ஷஃபான் 16-ல், இமாமவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தவறானவையென்றும், அவர்கள் புனிதமான முன்னோர்களின் (ஸலபுகளின்) வழியிலேயே செல்கிறார்கள் என்றும் சுல்தானின் பிரகடனம் வந்தது. இதனால் சில காலம் வரை எதிர்ப்புக்கள்அமுங்கிவிட்டிருந்தது.


அறப்போர்;

இமாம் இப்னு தைமிய்யா அவர்கள் செய்து குலாம் ரசூல் மீறர் என்பவர் உருதுவில் எழுதிய ஸீரெது இப்னு தைமிய்யாவிலிருந்து எடுக்கப்பட்டது. சீர்திருத்தத்திலேயே மிக உன்னதமான பணியைப் பற்றியும் அறிவது முக்கியமாகும். இப்பணி என்ன தெரியுமா? அறிவியல் ஆராய்ச்சியா? இல்லை. ஆசனத்திலமர்ந்து போதனைபுரிவதா? இல்லை. விவாதம் புரியும் சபைகளை அலங்கரிப்பதா? இல்லை. மூலையிலமர்ந்து வணக்கம்செலுத்துவதா? இல்லை. வேறென்ன? இறைவன் பாதையில் செய்யும் முயற்சிகளிலெல்லாம் மிக முக்கியமானது, மிக உன்னதமானது, மிக இறுதியானது. போர்க்களத்தில் வாளேந்தி அறப்போர் புரிந்து, சத்தியத்திற்குச் சாட்சிபகரும் உன்னத நிலையைப் பெறுவது.

புனர் நிர்மாணப் பணிகளின் மற்றத் துறைகளிலும் இமாம் இப்னு தைமிய்யாவுடைய அந்தஸ்து மற்றெல்லோரைவிடவும் மேலானது என்பதை எவரும் மறுக்க இயலாது. இதில் அவர்களுடன் மற்றெவரும் பங்குகொள்ளவில்லை என்று நாம் கூற இயலாது. ஆனால், முஜாஹிதீன்களுடன் போர்க்களத்தில் குதித்துச் சாதனைபுரியும் பாக்கியம் எல்லோருக்கும் கிட்டுவதில்லை. மாபெரும் எழுத்தாளர்கள், சீர்திருத்தவாதிகள், மார்க்கக்கலை வல்லுனர்கள், வணக்கத்திலும் இறை பக்தியிலும் ஊறிப்போயிருந்த பலருக்கு இந்த பாக்கியம்கிடைக்கவில்லை.

அல்லாமா ஷிப்லீ(ரஹ்) இமாம் இப்னு தைமிய்யாவைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார்கள்.

அதில் சீர்திருத்தவாதியாயிருப்பவர்களுக்கும் புனர் நிர்மாணப்பணி செய்பவர்களுக்கும் மூன்று தகுதிகள்கூறியிருந்தார்கள். அதாவது,

1) மார்க்கத்தில், கல்வியில், அல்லது அரசியலில் ஏதாவது ஒரு புரட்சியை உண்டாக்கி இருக்க வேண்டும்.

2) அவர் மனதில் தோன்றிய சீர்திருத்த எண்ணம் பிறரைப் பின்பற்றியதால் வந்திருக்கக் கூடாது. தானாகவே சொந்த முயற்சியால் வந்திருக்க வேண்டும்.

3) உடலுறுப்புகளாலும் துன்பங்களைத் தாங்கி இருக்க வேண்டும். உயிரையும் தியாகம் செய்ய முன் வந்திருக்கவேண்டும். தலையைக் கொடுக்கவும் தயாராக இருந்திருக்க வேண்டும்.

இந்நிபந்தனைகளை விளக்கிய பின் அல்லாமா ஷிப்லீ எழுதியிருப்பதாவது: "மூன்றாவது நிபந்தனை அவசியமெனக் கொள்ளாவிட்டால், இமாம் அபூஹனிபா(ரஹ்), இமாம் கஸ்ஸாலி(ரஹ்), இமாம் ராஸீ(ரஹ்), ஷாஹ்வலியுல்லாஹ்(ரஹ்) ஆகியோரும் இவ்வட்டத்தில் வருகிறார்கள்.

ஆனால், எவர் உண்மையான சீர்திருத்தவாதி என்ற பெயருக்கு அருகதையுடையவராக இருக்கிறாரோ அவர் இப்னு தைமிய்யாவே ஆவார். முஜத்தித்(சீர்திருத்தவாதி) என்று சொல்லப்படுபிவருக்குள்ள அருகதைகள் அனைத்தும இப்னு தைமிய்யாவிடம் காணப்படும் அளவு மற்றெவரிடத்திலும் காணப்படுவது அரிதே.

இமாம் அவர்களைப் பற்றி ஷிப்லீ (ரஹ்) எழுதியிருப்பது முற்றிலும் உண்மையே. இதனால் மற்ற இமாம்களையோ அல்லது பெரியார்களையே குறைவாக மதிப்பிடுவதாக யாரும் நினைத்து விடக்கூடாது. அவரவர்களும் தங்கள் தங்கள் காலத்தில் அப்போதைய சூழ்நிலைக்கும் அவசியத்திற்குமேற்ப சிறந்த சேவை செய்பவர்களாகவே இருந்தார்கள். ஆனால், இப்னு தைமிய்யா(ரஹ்) அவர்கள் வாழ்க்கையின் பல துறைகளிலும் சீர்திருத்தம் செய்யவேண்டிய பெருஞ்சுமையைச் சுமக்க வேண்டியிருந்தது. அதன் தன்மையே வேறுதான். குறிப்பாக இறைவனின் பாதையில் மேற்கொள்ளப்படும் அறப்போரில் நேரடியாகப் பங்கு கொள்ளும் பெரும்பாக்கியம் இப்னு தைமிய்யாவுக்குக் கிடைத்தது. அது அறிவிலும் சிறந்து விளங்கிய பெரும்பாலாருக்குக் கிடைக்கவில்லை.

இப்னு தைமிய்யா(ரஹ்) அவர்களின் அறப்போர் (ஜிஹாத்) அவர்கள் மட்டோடு முடிந்து போகவில்லை. அவர்களிடமிருந்து எழுந்த அபரிமிதமான வேக உணர்ச்சி, அணைந்து போயிருந்த ஆயிரமாயிரம் உள்ளங்களைப் புதிய வாழ்வின் பக்கம் ஈர்த்தது. சத்திய மார்க்கத்திற்கு உதவி செய்யவும் இறைவனின் மார்க்கத்தை மேலோங்கச் செய்யவும் வாளேந்திப் போர்க் களத்தில் குதிப்பது மிகப் பெரிய பணி. ஒருவன் தன் உயிரை அர்ப்பணிக்க முன்வரலாம். அதற்காகப் பல இன்னல்களையும் இடுக்கண்களையும் தாங்கலாம். இவ்வுலகில் தங்கள் உயிரையும் உடலையும் அர்ப்பணித்த ஆயிரக்கணக்கானவர்களைக் காணலாம். கோழைத்தனத்திலும், பலவீத்திலும் ஊறிப்போன சமுதாயத்தினரிடத்தில் வீரியத்தையும், தைரியத்தையும் தியாக உணர்ச்சியையும் உண்டாக்கும் பணி எல்லோராலு இயலக்கூடியதன்று. சீர்திருத்தவாதிகள் இவ்வேலையைத்தான் செய்கிறார்கள். இமாம் இப்னு தைமிய்யா அவர்கள் இப்பணியில் மின்னல் வேகத்தில் ஈடுபட்டார்கள். கல்வித்துறையில் ஈடுபட்டவர்களில் எவரும் இவர்களுக்கு நிகராக இருந்திருக்க முடியாது. அவர்கள் தம்தியாகத்தின் மூலம் உயிரற்றுப் போயிருந்த உடல்களில் உயிரை ஊதினார்கள். அவர்கள் அனைவரும் இமாமவர்களுடன் தியாகக் களத்தில் குதித்து, அச்சமயக் கடமையைச் சிறந்தமுறையில் செய்து முடித்தார்கள். இப்பணியில் ஈடுபட்டவர்களைப் பற்றி நாம் சிந்திக்கும் போது பல நூற்றாண்டுகளில் இமாம் இப்னுதைமிய்யாவைத் தவிர வேறு எவரையும் காண முடியவில்லை.

இமாம் இப்னு தைமிய்யா அவர்களின் ஆரம்ப நாட்களில் இஸ்லாமிய வரலாறு மிகவும் இருள் மயமானதாய் இருந்தது. தாத்தாரியக் காட்டுமிராண்டிகள் மத்தியக் கிழக்கு நாடுகளிலிருந்த இஸ்லாமிய கிலாபத் ஆட்சியை சின்னா பின்னமாக்கி விட்டிருந்தனர். அறுநூறு ஆண்டுகளாக கம்பீரமாக விளங்கி வந்த இஸ்லாமியப் பண்பாட்டுமாளிகை தூள் தூள் ஆக்கப்பட்டது. தேடிப்பார்த்தாலும அதனுடைய ஒரு செங்கல் கூட கிடைப்பது அரிதாகஇருந்தது. யூரல் கடற்கரையிலிருந்து டைகிரீஸ் நதிக்கரை வரையிருந்த நிலப்பரப்பு முழுவதும் ஐம்பது இலட்சம் ஏத்துவதிகளின் இரத்தக்கறை தோய்ந்ததாக இருந்தது. கல்வியும் கலையும் எங்கும் வியாபித்திருந்த்மிக உன்னத நிலையிலான அழகிய மாநகரம் சீல்குலைக்கப்பட்டது. அதுபோன்ற ஓர் நகரத்தைத் தோற்றுவிக்க இதுவரை உலகால் இயலவில்லை. அதன் அடையாளங்கூடத் தெரியாதபடி அது அழிக்கப்பட்டது. எல்லா இடங்களிலும் முஸ்லிம்களின் இரத்தம் ஆறாய் ஓடிக்கொண்டிருந்தது. முஸ்லிரம்களின் மடிந்துபட்ட உடல்கள் காலடியில் மிதிபட்டன. ஆட்சி எனும் விளக்கு அணைந்து விட்டிருந்தது. கல்விக் கூடங்கள் அழிக்கப்பட்டன. எங்கு பார்த்தாலும் இருள் தான் கவ்விக் கொண்டிருந்தது. நாலா பக்கங்களிலும் அவநம்பிக்கை என்ற கருமேகங்கள் சூழ்ந்து கொண்டிருந்தன. குர்ஆன், ஹதீஸ்கள் சந்தேகம் நிறைந்த கருத்துக்களின் அடிப்படையில் மறைந்துபோய் இருந்தன. அவற்றைப்பற்றி எண்ணிப் பார்க்கவும் அவகாசமில்லாதிருந்தது. இஸ்லாத்திற்கு முரணான பித்அத்துகளும் அனாச்சாரங்களும் தான் மார்க்கக் கிரியைகளாகக் கொள்ளப்பட்டன. மடங்களும் (கான்காஹ்கள்) சூபிகளும் தத்தம் (ஹல்கா) வட்டங்களில் மனிதர்களின் உள்ளங்களையும் மூளைகளையும் தம் வசப்படுத்தி வைத்திருந்தனர். சமுதாயங்களும், சமூகங்களும் அழிவதற்குரிய இறுதி எல்லையை அடைந்துவிட்டன.

இமாம் அவர்கள் புத்தமைப்புப் பணியைத் துவக்கிய சமயத்தில் அறிவும், ஆற்றலும், சொல்லும் செயலும், வாழ்க்கையின் ஒவ்வொரு துறையும் சீர்திருத்தத்தை எதிர்பார்த்த வண்ணமிருந்தன. வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியும் அணைந்து போயிருந்த தன் அணுக்களை ஊதியெடுத்து உயர்வூட்டும் ஒரு சீர்திருத்தவாதியை எதிர்நோக்கிய வண்ணமிருந்தது. இந்நிலையில் இமாம் இப்னு தைமிய்யா முன் வந்தார்கள். ஒரே சமயத்தில் வாழ்க்கையின் ஒவ்வொரு துறையின் அழைப்பையும் ஏற்று, அதன் தேவையை நிறைவு செய்யும் பணியில் ஈடுபட்டார்கள். நாடுகளின் சமுதாயங்களின் விதியையே மாற்றிவிட்டார்கள். அவநம்பிக்கையெனும் மண்ணிலிருந்து நம்பிக்கைச் செடியை உருவாக்கினார்கள். கோழைத்தனத்தைப் போக்கி, வீரத்தையும் உரத்தையும் உருவாக்கினார்கள்.

ஐயப்பாடுகள் என்ற இருளில் நம்பிக்கை உறுதி என்ற ஒளியைப் பரவச்செய்தார்கள். ‘ஷிர்க்’ எனும் இணைவைக்கும் சின்னங்களின் பாழ் நிலங்களில் ‘தவ்ஹீத்’ எனும் ஏகத்துவக்கட்டிடங்களை எழுப்பினார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் ஒன்று சேர்ந்து முயன்றாலும் செய்யமுடியாத சாதனையைத் தனியொரு மனிதராய்ச் செய்து முடித்தார்கள். பல நூற்றாண்டுகள் கழிந்துவிட்ட இருளில் மிக உயர்ந்த சிகரத்தைத் தன்னந்தனியாக அடைந்து சீர்திருத்தச் சேவையில் உயர்ந்த இடத்தைப் பெற்றார்கள் இமாமவர்கள்.

"இமாம் அவர்களின் வீரமும துரமும் உவமானமாகக் கூறப்பட்டது. அவர்கள் போர்க்களத்தில் தலைசிறந்த வீரர்களுக்கு ஒப்பானவர்களாய் இருந்தார்கள். அவர்கள் போர்க்களத்தில் சிங்கமாகத் திகழ்ந்தார்கள்" என்று ஹாபிஸ் தஹபீ கூறியுள்ளார்கள். மற்ற வரலாற்று ஆசிரியர்களும் இதையே உறுதிப்படுத்தியுள்ளனர்.

அவர்கள் எல்லோரையும் விடவும் வீரராகவும், தைரியமுள்ளவராகவுமிருந்தார்கள். எதிரிகளின் எதிரே அவர்களைவிட உறுதியாயிருந்ததாக யாரும் காணப்படவில்லை. சிரியாவில் நடைபெற்ற ஒரு போரில் அவர்கள் காட்டிய வீர சாகசங்கள் சொலற்கரியனவாகும்.

இமாம் அவர்களின் இளமைப்பருவத்திலேயே தாத்தாரியர்கள் சிரியாவை நோக்கி முன்னேறலாயினர். ஹிஜ்ரி678-ல் இமாம் அவர்களின் வயது 18, அல்லது 19 இருக்கும்போது ஹிலாகூகானுடைய கொள்ளுப்பேரன் காஸான்கான் தாக்குதல் நடத்தினான். சுல்தான் நாஸிர் என்ற எகிப்து மன்னர் அவனை எதிர்த்தார். ஆனால் அவருக்குத் தோல்வி ஏற்பட்டது. காஸான் ஹிம்மாஸ் என்ற ஊரைக் கைப்பற்றிக் கொண்டான். இதனால் டமாஸ்கஸில் மாபெரும் குழப்பம் பரவியது. பொதுவான இந்நிலையைக் கண்ட இமாம் இப்னு தைமிய்யா அவர்கள் காஸானிடம் சென்று அவனிடம் எல்லோருக்கும் அமைதி வழங்கப்படுகிறதென்ற பிரகடனத்தைப் பெற்று வந்தார்கள். இதனால் பொதுமக்கள் ஓரளவு நிம்மதி பெற்றனர். எனினும், படையினர் ஊரில் கொள்ளையடிக்கலாயினர். இமாமவர்கள் மாமேதை நிஜாமுத்தீன் மஹ்மூத் என்ற பெரியாரைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு, நகரத்தின் பாதுகாவல் ஏற்பாடுகளைச் செய்து அமைதி நிலவச் செய்தார்கள். பின்னர் தாத்தாரியர்கள் பைத்துல் முகத்திஸை நோக்கி முன்னேறினார்கள்.

அங்கு ஆயிரக்கணக்கானவர்களைச் சிறைப்படுத்தினார்கள். இமாம் அவர்கள் காஸானுடைய படைத்தளபதியிடம் தூது சென்று அநேகக் கைதிகளை விடுவித்து வந்தார்கள்.

ஹிஜ்ரி 699-ல் தாத்தாரியர்கள் மறுபடியும் சிரியாவின் மீது படையெடுக்க ஆயத்தங்களைச் செய்யலாயினர். இமாமவர்கள் சிறிதும் தயக்கமின்றி அறப்போரின் பக்கம் அழைப்பு விடும் கடமையிலீடுபட்டார்கள். அவர்கள் முஸ்லிம்களுக்கு உறுதியையும் வீரத்தையும் தீரத்தையும் கடைப்பிடிக்குமாறு போதித்தார்கள். அவர்களுக்கு தைரியமூட்டினார்கள். "நீங்கள் உறுதியோடு நின்று போராடுவீர்களாயின், துணிவோடு நின்று எதிரிகளை எதிர்ப்பீர்களாயின், வெற்றி உங்கள் பாதங்களை முத்தமிடக் காத்திருக்கிறது. அச்சம் நீங்கி அமைதி எங்கும் துலங்கும்" என்று எடுத்துரைத்தார்கள். பிறகு காஸானிடம் சென்று, இது குறித்துப் பேச்சு நடத்துவதற்காக முக்கியஸ்தர்களின் ஒரு தூதுக்குழு தயாரானது. இத்தூதுக்குழுவில் இமாமவர்களும் கலந்து கொண்டார்கள்.

காஸான் இமாமவர்களைக் கண்டதும், அவனுடைய மனதில் ஒருவகைத் திகில் ஏற்பட்டுவிட்டது. மிகக் கண்ணியத்தோடும், மரியாதையுடனும் அவன் இமாம் அவர்களிடம் நடந்து கொண்டான். இமாமவர்கள்அவனுக்கு முஸ்லீம்களின் இரத்தத்தைச் சிந்துவதிலிருந்து விலகிக் கொள்ளுமாறு உபதேசம் செய்தார்கள். அவனுக்குப் பல வழிகளிலும் விளக்கம் கொடுத்தார்கள். இறுதியில் அவன் இமாமவர்களின் உபதேசத்திற்குப் பணிந்தான். இவ்வாறு இமாமவர்களின் தயவினால் முஸ்லிம்களின் உயிரும் உடமையும் தாத்தாரியர்களின் கொடுமையிலிருந்து காக்கப்பட்டன.

மறு வருடம் ஹிஜ்ரி 700-ல் தாத்தாரியர்களின் படையெடுப்பு மீண்டும் தலை தூக்கலாயிற்று. இமாமவர்கள் எகிப்துக்குச் சென்றார்கள். கெய்ரோவை அடைந்ததும், அரசாங்க ஊழியர்கள் அரசப் பிரமுகர்கள்அனைவரையும் ஒன்றுகூட்டி அவர்களுக்கு அறப்போர் (ஜிஹாத்) செய்ய வேண்டிய அவசியத்தை விளக்கி, அவர்களை ஆயத்தப்படுத்தினார்கள். அந்நகர மக்கள் அனைவரும் இமாவர்களை மிகக் கவுரவத்தோடும் மரியாதையோடும் நடத்தினார்கள். இமாமுல் முஹத்திதீனாகவும், பிரதம நீதிபதியாகவுமிருந்த ஷெய்கு தீக்குல்ஈத என்பாரும் இமாம் அவர்களைச் சந்திக்க வந்திருந்தார்கள். எகிப்துவாசிகளைத் தியாகம் செய்யத் தயார் செய்துவிட்டு, இமாமவர்கள் டமாஸ்கஸ் திரும்பினார்கள். அங்குள்ள மக்களையும் உறுதியைக் கடைப்பிடிக்குமாறு தூண்டினார்கள். முழுமையாக ஜிஹாத்துக்கு வேண்டிய ஆயத்தங்களெல்லாம் ஏற்பாடாகிவிட்டிருந்தன. அதுசமயம் சில இயற்கையான இடையூறுகளினாலும் படைகளில் ஏற்பட்ட உள்நாட்டுக் குழப்பங்களினாலும் தாத்தாரியர்கள் தாக்குதல் நடத்தும் திட்டங்களைக் கைவிட்டு விட்டார்கள். இமாமவர்கள் எகிப்துக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினார்கள். முஸ்லிம்கள் தங்கள் நெஞ்சைத் திடப்படுத்திக் கொண்டதின் காரணமான எதிரிகள் பின்வாங்கிவிட்டனர் என்று அதில் குறிப்பிட்டிருந்தார்கள்.

ஹிஜ்ரி 702-ல் மறுபடியும் தாத்தாரியர்கள் பெரும் ஆயத்தங்களுடன் தாக்க ஆரம்பித்தனர். காஸானின் தளபதிகல்லூ ஷாஹ் என்பவன் தொண்ணுறு ஆயிரம் படைவீரர்கள் கொண்ட படையுடன் முன்னேறினான். இமாமவர்கள் மீண்டும் ஜிஹாதின் தூதுடன் எகிப்துக்குச் சென்று ஜிஹாதின் அவசியத்தை எடுத்துரைத்தார்கள். சுல்தான் நாசிர் தாத்தாரியர்களின் பெரிய படையையும் அவர்களின் அபரிமிதமான தாக்குதலையும் எண்ணி அச்சம் அடைந்திருந்தார். அவருடைய அரசாங்க அதிகாரிகளும் தைரியமிழந்து காணப்பட்டனர். ஆனால் இமாமவர்கள் எதையும் லட்சியம் செய்யாமல் எல்லோருக்கும் உறுதியைக் கடைபிடிக்குமாறு அழைப்புக்கொடுத்துக் கொண்டிருந்தார்கள். சுல்தான் நாசிரும் அவருடைய பிரமுகர்களும் தைரியமிழந்து காணப்பட்டதையறிந்த இமாம் அவர்கள் தைரியமாகவும் துணிச்சலாகவும் அவர்களுக்கு உரோஷம் உண்டாகுமளவு அழுத்தந்திருத்தமாக எச்சரிக்கை விடுத்தார்கள்.

"நீங்கள் இஸ்லாத்தின் உதவிக்காகவும் பாதுகாவலுக்கும் முன் வரவில்லை என்றால், இறைவன் உங்களைஅகற்றிவிட்டு அக்கடமையைச் செய்யக்கூடிய பிற சமுதாயத்தவரை உண்டாக்குவான்" என்று கூறினார்கள். அத்துடன் திருமறையின் ஓர் ஆயத்தையும் ஓதிக்காட்டினார்கள்.

"நீங்கள் புறமுதுகிட்டு ஓடுவீர்களாயின், உங்களுக்கு பதில் அவன் வேறு சமுதாயத்தை உருவாக்குவான். அவர்கள் உங்களைப் போல (கோழைகளாக) இருக்கமாட்டார்கள்". (அல்குர்ஆன் 8:26)
இமாமவர்களின் துணிச்சலான இப்பேருரையும், மலைகளையும் சின்னாபின்னமடையச் செய்யும் அவர்களுடைய உறுதியும் அரசவையையே அதிரச் செய்தது. ‘இத்தகைய துணிச்சலும் அச்சமின்மையும் இதுகாறும் காணப்பட்டதில்லை’ என்று ஷெய்கு தகிய்யுத்தீன் இப்னு தகீக்-அல் ஈத் என்பார் முழங்கினார்கள். இமாமவர்களின் உணர்ச்சிகரமான சொற்பொழிவுகள் ஆட்டங்கண்டிருந்த மாளிகையை பலப்படுத்தியது சுல்தான் நாசிர் படையைத் தயார் செய்து திரட்டிக் கொண்டு சிரியாவை நோக்கிப் புறப்பட்டார். ஷகஹப் என்ற பெயருடைய மர்ஜுஸ்ஸகர் என்னுமிடத்தில் தாத்தாரியர்களுடன் மோத வேண்டியதாயிற்று. இமாமவர்களும் இப்போரில் நேரடியாக பங்கு கொண்டார்கள். களத்தில் சிங்கத்தைப் போன்று வந்தார்கள். சிறிது நேரம் போரிடுவதும், சிறிது நேரம் வீரர்களுக்கு உறுதியைக் கடைபிடிக்குமாறு போதிப்பதும், வெற்றியின் நற்செய்தி கூறுவதும், வெற்றியினால் கிடைக்கும் பொருட்களைப் பற்றி ஆசையூட்டுவதும் அவர்களுடைய வேலையாக இருந்தது. இமாமவர்கள் ஹுஸாமுத்தீன் மஹ்னா பின் ஈஸா என்ற பெரியாரையும் இப்போரில் கலந்து கொள்ளச்செய்தார்கள். போர்க்களத்தில் தாத்தாரியப் படையினர் அதிகமாக இருப்பதைக் கண்ட சுல்தான் நாசிர் - யாகாலித் (ஏ! காலிதே! எங்களுக்கு உதவுங்கள்) என்று உரக்கக் கூறினார்கள்.

இதைச் செவியுற்ற இமாமவர்கள் உடனே அவரைக் கண்டித்தார்கள். "யாகாலித் - என்று கூறாதே! யா அல்லாஹ்! யாமாலிகியவ்மித்தீன்! இய்யாகநஃபுது வ இய்யாக நஸ்தஈன் என்று சொல்! இறைவனிடமே உதவிதேடு" என்று கூறினார்கள்.

"நீ உறுதியைக் கடைப்பிடி! வெற்றி உனக்கே கிடைக்கும்," என சுல்தானிடம் இமாம் கூறினார்கள்.

படைத்தளபதிகளுள் ஒருவர், இன்ஷா அல்லாஹ்வையும் சேர்த்துச் சொல்லுங்கள் என்று கூறினார். "இன்ஷாஅல்லாஹ் - சந்தேகமின்றி நிச்சயமாக" என்று இமாமவர்கள் கூறினார்கள்.

மிக உக்கிரமாகப் போர் நடைபெற்றது. இறுதியில் தாத்தாரியரின் படைகளெல்லாம் அழிந்துபோயின. இஸ்லாமியப் படையினருக்கு மாபெரும் வெற்றி கிடைத்தது. அல்லாஹ்வின் பேரருளாலும், இமாமவர்களின் உறுதியினாலும், வீரதீரத்தினாலுமே இவ்வெற்றி கிடைத்தது. பிளவுண்டு கிடந்த இஸ்லாமியச் சக்திகளனைத்தும் ஒன்றுதிரண்டு வீரத்தோடு போர் செய்ததினால் இவ்வெற்றி கிடைத்தது.

ஷக்ஹப் - என்ற மர்ஜுஸ்ஸிகர் யுத்தத்திற்குப் பிறகு இமாமவர்களின் செல்வாக்கு மக்கள் மத்தியில் உயர்ந்துவிட்டது. வெற்றியாளராக அவர்கள் டமாஸ்கஸில் நுழைந்தபோது டமாஸ்கஸ் நகரமக்கள் மாபெரும் வரவேற்பளித்தனர். மிக மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடந்து கொண்டார்கள். ஆனால் இமாமவர்கள், "நான் இச்சமுதாயத்தின் சாதாரண ஒரு மனிதனே! எனக்கூறிவிட்டார்கள். இச்சம்பவத்திற்குப் பிறகு பொதுமக்களும் படையினரும் அரசு அலுவலர்களும் இமாமவர்கள் மீது அதிக அன்பு செலுத்தக்கூடியவர்களாகிவிட்டனர்.

ஹிஜ்ரி 704-ல் இமாமவர்கள் கஸ்ரவான் மலைவாசிகளுடன் போர் செய்தார்கள். அவர்கள் இஸ்மாயீலிய்ய, நுஸைரிய்யா, ஹாகிமிய்யா, பாதினிய்யா முதுலிய தவறான கொள்கைகளையுடையவர்களாக இருந்தனர். அவர்கள் இஸ்லாத்திலிருந்து வெகுதூரம் சென்றுவிட்டிருந்தனர். சஹாபாக்களைக் காபிர்களெனக் கருதினர். சஹாபாக்களை நல்லவர்கள் என்று கூறக்கூடியவர்களையும், தற்காலிகத் திருமணம் (முத்ஆவை) செய்தலை ஹராம் எனக் கருதக் கூடியவர்களையும் காபிர்களெனக் கூறி வந்தனர். தொழுகையையும் நோன்பையும் விலக்கிவைத்தனர். சுவர்க்கத்தையும் நரகத்தையும் அசத்தியம் என்று கூறிவந்தனர். இரத்தத்தையும் பிணத்தையும் பன்றியையும் உண்பதை ஹலாலாகக் கருதினர். இமாமவர்கள், அந்த மலைவாசிகளுடன் போர் செய்வதற்காகவும் எல்லா இடங்களிலும் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார்கள். அலீ(ரலி) ஹரூரிய்யாக்க(காரிஜீக)ளுடன் போர் செய்ததைப் போன்று, இவர்களுடன் போர் செய்யப்பட வேண்டுமென்று சுல்தானைஊக்குவித்தார்கள். இப்போரிலும் இமாமவர்களுக்கு முழுமையான வெற்றிகிடைத்தது. கஸ்ரவானிலிருந்து குழப்பம் அடங்கியது.

ஹிஜ்ரி 712ல் மற்றுமொரு முறை தாத்தாரியர்களுடன் போர் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. ஹிஜ்ரி 675 முதுல் 702 வரை காழூனிடமும், மற்ற தாத்தாரியர்களிடமும் தூது செல்விதல் இமாம் அவர்கள் செய்த மாபெரும்ச சாதனைகள் மிக விளக்கமாகக் கூறப்பட வேண்டியவை. இமாமவர்களின் வீரத்தையும், துணிச்சலையும் பற்றிய நிகழ்ச்சிகள் மிகப் பிரபலமானவை, அவற்றுள் ஒன்றை மட்டும் இங்கே குறிப்பிட ஆசைப்படுகிறேன்.

ஒருமுறை இமாமவர்கள் தாத்தாரியப் படைத்தளபதி கல்லூகான் என்பவரிடம் மற்றொரு மனிதருக்கு நீதிவழங்கக் கோரிச் சென்றிருந்தார்கள். அப்போது "தாங்கள் இங்கு வரவேண்டிய சிரமத்தைத் தாங்கி இருக்கவேண்டியதில்லையே! என்னைத் தங்களிடம் அழைத்திருக்கலாமே" என்று கிண்டலாக கத்லூகான் சொன்னான். அதற்கு இமாமவர்கள், "மூஸா(அலை) அவர்கள் பிர்அவ்னிடம் போனார்களேயன்றி பிர்அவ்ன் மூஸா(அலை) அவர்களிடம் வரவில்லை", என்று தயக்கமின்றி பதிலுரைத்தார்கள். காட்டுமிராண்டிகளான தாத்தாரியர்களுடன் இத்தகைய துணிச்சலுடன் இமாம் இப்னு தைமிய்யாவால் தான் பேச முடியும்.

ஒருமுறை காஸானிடம் தூது சென்றார்கள். மற்றவர்களும் உடனிருந்தார்கள். இமாமவர்கள் மிகவும் துணிச்சலுடன் பேச்சை ஆரம்பித்தார்கள். காஸான் அதற்கு முன் முஸ்லிமாகிவிட்டிருந்தான் அவனுடன் பலதாத்தாரியர்களும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருந்தார்கள். எனினும், அவர்களின் காட்டுமிராண்டித்தனத்திலும் கொள்ளையடிக்கும் பழக்கவழக்கங்களிலும் எந்த மாறறமும் வரவில்லை. இமாமவர்கள் இக்குறைகளையெல்லாம் காஸானின் முன்னால் எடுத்துரைத்தார்கள். அவனுடைய மூதாதையரின் இறைமறுப்புத் தன்மையும், அநியாய அட்டூழியங்களையும் மிகக் கடினமாகக் கண்டித்துப் பேசினார்கள், உடனிருந்தவர்கள் காஸான் கோபம் கொண்டு எல்லோரையும் கொன்றுவிடுமாறு கட்டளையிடுவானோ என்று அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்தனர். இமாமவர்களோ இதைப்பற்றிச் சிறிதளவும் இலட்சியம் செய்யவில்லை. இமாமவர்களின் துணிச்சலால் திகிலடைந்து போயிருந்த காஸானால் எதுவும் சொல்ல இயலவில்லை. இறுதியாக "எனக்காகத் தாங்கள் துஆ செய்யுங்கள்," என்று வேண்டினான்.

இமாமவர்கள் இரு கரமேந்திகீழ்வருமாறு துஆச் செய்தார்கள் :

"இறைவா! காஸான் அல்லாஹ்வுக்காகவும் அவனது தூதருக்காகவும் அவனது தூதருக்காகவும் போர்செய்கிறானென்றால், நீ அவனுக்கு உதவி செய்வாயாக! அன்றி அவன் பொருளுக்காகவும் நாட்டிற்காகவும் இரத்தத்தைச் சிந்த வைப்பானாகில், நீ அவனைத் தண்டிப்பாயாக!" காஸானும் இரு கரமேந்தியவனாக ஒவ்வொரு சொல்லிலும் ‘ஆமீன்’ என்று சொன்னதாகக் கூறப்படுகிறது.

காஸான் உணவை வரவழைத்தான். எல்லோரும் சாப்பிட்டார்கள். ஆனால் இமாமவர்கள் உணவருந்த மறுத்துவிட்டார்கள். காரணம் கேட்கப்பட்ட போது, "மக்களின் பொருட்களைக் கொள்ளையடித்தும மக்களின் மரங்களை வெட்டியும் சமைக்கப்பட்ட உணவை நான் எவ்வாறு உண்ண முடியும்?" என்று சொல்லிவிட்டார்கள்.

அவர்கள் கூறுவதுண்டு: "எவன் மனத்தில் நோய் இருக்கிறதோ, அவன் தான் அல்லாஹ் அல்லாதவருக்கு பயப்படுவான்," ஒரு மனிதன் இமாம் அஹ்மத் பின் ஹன்பலிடம் வந்து ஒரு குறிப்பிட்ட அதிகாரியிடம் தனக்குபயம் தோன்றுவதாக முறையிட்டான். அதற்கு, "உன் மனத்தில் நோய் இல்லாவிட்டால் ஒருபோதும் அச்சம் உண்டாகாது. இந்த அச்சம் உள்ளத்திலுள்ள நோயின் பிரதி பிம்பமேயாகும்" என்று இமாம் அஹ்மத் பதில்சொன்னார்கள்.


சோதனைக்கு மேல் சோதனை;

இமாமவர்கள், தர்க்க மேதைகள் கண் மூடித்தனமாக கிரேக்க தத்துவார்த்தங்களின் அடிப்படையில் இஸ்லாமியக் கொள்கைகளை விளக்கி வந்ததன் தவறுகளை எடுத்துக்காட்டி, முற்கால நல்லோர்களின் (ஸலபுகளின்) கொள்கை விளக்கத்தைச் சமர்ப்பித்தது தான் அவர்களுக்கெதிராகக் குழப்பம் ஏற்பட்டதற்குக் காரணமாகும். அது மட்டுமன்றி, தர்க்க வாதங்கள், பித்அத்துகள், அனாச்சாரங்கள், மூடப்பழக்க வழக்கங்களை சமுதாயமக்கள் கடைபிடித்ததை இமாமவர்கள் கண்டித்தார்கள். அதனால் பெரும் பெரும் கான்காஹ்களில் பெரும் எதிர்ப்பொலி கிளம்பியது. ஒரு பெரிய கான்காஹின் தலைவராக இருந்த ‘நஸ்ருல் முன்பஜீ’ என்பவர் இமாமவர்களின் பெரிய எதிரியாக இருந்தார் என்பது முதலில் கூறப்பட்டுள்ளது.

எகிப்தைப் பொறுத்தவரை இமாமவர்களுக்கு எதிராகக் குழப்பத்தை விளைவித்தவர் அந்த நஸ்ரு என்பவர் தான். ஆனால் அப்போதைய சுல்தானுடைய ஆணை எதிரிகளுடைய எதிர்ப்பைத் தணித்துவிட்டிருந்தது. எனினும் நஸ்ரு தன்னுடைய விஷமத் தனத்தைக் குறைக்கவில்லை. அரசாங்கத்தில் அதிகச் செல்வாக்குப் பெற்றிருந்த பேபரஸ் ஜாஷங்கீர் என்ற அதிகாரி நஸ்ருடைய அபிமானிகளுள் ஒருவராயிருந்தார். நஸ்ரு அவரை இமாமவர்களுக்கெதிராக தூண்டிவிடலானார்.

இறுதி ஆயுதமாக ஏமாற்றுதலையும், அபாண்டத்தையும் உபயோகிக்கலானார். இத்தகைய சந்தர்ப்பங்களில் இத்தகையவர்கள் நல்ல மனிதர்களுக்கு எதிராகஉபயோகிக்கும் ஆயுதம் இதுவாகத்தானிருக்கும். அதாவது ஆட்சியைக் கைப்பற்றும் ஆசையிருப்பதாக குற்றம் சாட்டப்படுதல்- நஸ்ரு பேபரஸுடைய மனதில் இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்) அவர்கள் ஆட்சியைக் கைப்பற்ற முயற்சிப்பதாகவும் அவர்களனைவரையும் வெளியே அனுப்ப முயற்சிப்பதாகவும் சந்தேகத்தைக் கிளப்பிவிட்டார். ஷக்ஹப், கிஸ்ரவான் ஆகிய போர்களில் இமாம் அவர்களின் அபரிமிதமான தைரியத்தையும், துணிச்சலையும் எல்லோரும் கண்டிருந்தனர். படையினரிடத்திலும், ஆட்சியாளரிடத்திலும் பொதுமக்களிடத்திலும் இமாமவர்களுக்கு மாபெரும் செல்வாக்கு உண்டாகிவிட்டிருந்தது. இந்த நிலையில் நஸ்ருடைய அபாண்டம் உண்மையென்று ஏற்றுக் கொள்ளப்பட்டது. பேபரஸின் முயற்சிகளினால் இப்னு தைமிய்யாவை எகிப்துக்குஅனுப்பி வைக்குமாறு சுல்தானுடைய உத்தரவு டமாஸ்கஸுக்கு அனுப்பப்பட்டது.

தூதன் உத்தரவைக் கொண்டு வந்து கொடுத்த போது சிரியாவின் கவர்னராக இருந்த அமீர் அப்ரம் என்பவர், "நான் என் முன்னிலையில் இரண்டு சபைகளைக் கூட்டினேன். அதில் நீதிபதிகள், மார்க்க வல்லுனர்கள் எல்லோரும் வந்திருந்தனர். எவரும் இப்னு தைமிய்யாவுக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டையும் நிரூபிக்கவில்லை. எனவே அவர்களை எகிப்துக்கு அனுப்ப வேண்டிய அவசியமில்லை." என்று கூறினார்.

தூது வந்தவர் கவர்னருக்கு இமாமவர்கள் மீது நஸ்ரும் மற்றவர்களும் உண்டாக்கிவிட்டிருந்த அவதூறைப் பற்றி எடுத்துக்கூறி, சுல்தானுடைய ஆணைக்குக் கீழ்ப்படிவதற்கு பின்வாங்க வேண்டியதில்லை என்று ஆலோசனை கூறினார். கவர்னர் அதை ஏற்றுக் கொண்டார். இமாமவர்கள் ஹிஜ்ரி 705 ரமழான் 12 திங்கட்கிழமையன்று அஞ்சல் வண்டியிலமர்ந்து எகிப்துக்குப் பிரயாணமானார்கள். டமாஸ்கஸ் மக்கள் வழியனுப்பும் போது காட்டியபற்றும் பாசமும் நிகரற்றதாக இருந்தது. பெருமளவில் மக்கள் திரண்டு வந்திருந்தார்கள். ஒரு பெருங்கூட்டம் முதல் தங்குமிடம் வரை சென்று வந்தது. பெரும்பான்மையானவர்கள் அழுத வண்ணம் இமாமவர்களைப் போகவேண்டாமெனக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

அவ்வாண்டு ரமழான் 22-வியாழக்கிழமையன்று இமாமவர்கள் கெய்ரோ வந்தடைந்தார்கள். மறுநாள் ஜும்ஆத்தொழுகைக்குப் பிறகு கோட்டையில் மாபெரும சபை கூடியது. அதில், நீதிபதிகளும் அரசாங்கப் பிரதானிகளும் பங்கு கொண்டனர். காஜீ இப்னு-மக்லூப்-மாலிகி நீதிபதியாக அமர்ந்தார்.

ஷம்சு இப்னு அத்லான் என்பவன் எதிரிகளின் சார்பாக, "இப்னு தைமிய்யா இறைவன் எழுத்துடனும் ஒலியுடனும் பேசுகிறான் என்றும், அவன் பக்கம் விரல்களால் சைகை செய்யப்படலாம் என்றும் ஒப்புக் கொள்கிறார்" என்று குற்றம் சாட்டினான்.

நீதிபதியாக இருந்தவர் அதற்கு பதில் சொல்லுமாறு இமாமிடம் கூறினார். இமாமவர்கள் எழுந்து நின்று உரைநிகழ்த்துவது போன்று பதில் சொல்ல விரும்பினார்கள். சுன்னத்தான முறைப்படி முதலில் "இன்னல் ஹம்தலில்லாஹ்!" என்று தொடங்கினார்கள். நீதிபதியாயிருந்தவர் கோபத்துடன், "பதில் கூறும், நாங்கள் உம்முடையபேச்சைக் கேட்க வரவில்லை" என்று சொன்னார். அதற்கு, இமாமவர்கள், "இங்கே நீதிபதியாக இருந்து தீர்ப்புவழங்குபவர் யார்?" என்று கேட்டார்கள். "காஜி இப்னு மக்லூப்-மாலிகி" என்று குழுமியிருந்தவர்கள் கூறினார்கள். இமாமவர்கள், "அவர் என் வாதியாயிற்றே! அவர் எவ்வாறு இவ்வழக்கில் தீர்ப்புக் கூறும் நீதிபதியாக இருக்க இயலும்?" என வினவினார்கள். அதனால் குழுமியிருந்தவர்கள் ஆத்திரமுற்று இமாமவர்களைச் சபையிலிருந்து எழுந்திருக்க வைத்தார்கள். இமாமவர்களின் இரு சகோதரர்களான ஷெய்கு ஷரபுத்தீனும் அப்துர் ரஹீமும் கூடவே எழுந்துவிட்டார்கள். இவ்வாறு அவர்கள் மோசமாக நடந்து கொண்டதால் ஷெய்கு ஷரபுத்துன் அவர்கள் நாவிலிருந்து சாபமான வார்த்தைகள் வெளி வந்தன. இதற்கு இமாமவர்கள், நாயகம(ஸல்) அவர்கள் தாயிப் நகர மக்கள் அவர்களுக்குத் தீங்கிழைத்த போது எவ்வாறு பொறுமையுடன் நடந்துகொண்டார்களோ அதைப் போன்று அவர்களின் சுன்னத்தைக் கடைப்பிடித்து, சாபமிடாமல் துஆச் செய்யச் சொன்னார்கள்.

"இறைவா! அவர்களுக்கு நேர்வழியைக் காட்டக்கூடிய ஒளியை கொடுப்பாயாக!" என்று கூறுமாறு சொன்னார்கள்.

சிறிது நேரத்திற்கு பிறகு மறுபடியும் இமாமவர்களையும், அவரது இரு சகோதரர்களையும் அங்கிருந்த மக்கள்அழைத்து வந்தார்கள். இமாம் அவர்கள் காஜி இப்னு மக்லூயை நீதிபதியாக ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், எதிர்ப்பு வேகமாக இருந்தது. அவர்கள் தங்களிரு சகோதரர்களுடன் சிறையிலிருந்து வெளியே கொண்டுவரப்பட்டு ‘ஜுப்புல் யூசுபு’ - என்று பிரபலமாயிருந்த ஒரு கோபுரத்தில் அடைத்து வைக்கப்பட்டார்கள். அதே சமயம், "இப்னு தைமிய்யாவின் கொள்கையுடையவர்கள் அதைவிட்டு விலகிக் கொள்ள வேண்டும்: இன்றேல் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்," என்று அரசரின் ஆணை பிறப்பிக்கப்பட்டது. அது வீதிகளிலெல்லாம் பறைசாற்றப்பட்டது. இப்னு ஷிஹாப் மஹ்மூத் என்பவர் இக்கட்டளையை டமாஸ்கஸ் ஜாமிஆ மஸ்ஜிதில் சென்று பிரகடனப்படுத்தினார். இமாம் அஹ்மதிப்னு ஹன்பலின் கொள்கையைச் சார்ந்தவர்கள் இத்துறையில் அதிக இம்சைகளுக்காளானார்கள்.

அரசாங்கப் பிரதிநிதியாக இருந்த சைபுத்துன் சாலார் என்பவர் இமாம் அவர்கள் மீது பற்றுள்ளவராக இருந்தார். ஹிஜ்ரி 706ல் பெருநாளன்று ஷாபிஈ, மாலிகீ, ஹனபீ நீதிபதிகளைக் கூட்டி இமாமவர்களை விடுதலை செய்யவிரும்புவதாகச் சொன்னார். கெய்ரோவின் நீதிபதியாக இருந்த அப்துல்கனி-பின் யஹ்யா-பின் முஹம்மது-அல்ஹற்றானி குறைந்த அறிவு படைத்தவராயிருந்தார். அவர் அறிஞர்களின் ஆலோசனைப்படி சில நிபந்தனைகளைத் தொகுத்து அந்த நிபந்தனைகளை இப்னு தைமிய்யா ஒப்புக் கொள்வதாக இருந்தால், அவர்களை விடுதலை செய்ய இயலும் என்று கூறி சிலாரிடம் அனுப்பி வைத்தார். அந்த நிபந்தனைகளைப் பற்றிப் பேச்சுவார்த்தை நடதுதுவதற்காக இப்னு தைமிய்யா(ரஹ்)விடம் தூதர் ஒருவர் அனுப்பப்பட்டார். ஆனால் இமாமவர்கள் வர இயலாதெனக் கூறிவிட்டார்கள். ஆறுமுறை அத்தூதர் போய் வந்தார். அடுத்தடுத்து இமாமவர்கள் மறுத்துவிட்டார்கள்.

ஹிஜ்ரி 706 துல் ஹஜ்ஜில் சைபுத்துன் இமாமவர்களின் சகோதரர்களைச் சிறையிலிருந்து அழைத்துச் சபையைக்கூட்டினார். அதில் காதஜி ஸைனுத்தீன் இப்னு-மக்லூப் என்பவரையும் அழைத்தார். ஷெய்கு ஷரபுத்துன், இப்னு-மக்லூபுடன் கடுமையான விவாதம் நடத்தினார்கள். அவருடைய தவறுகளை எடுத்துக்காட்டினார்கள். மறுநாள் ஷம்சு-இப்னு-அத்லான் என்பவரும் அழைக்கப்பட்டார். ஷெய்கு ஷரபுத்துன் அவரையும் விவாதத்தில் தோல்வியுறச் செய்தார்கள்.

இமாமவர்கள் சிறையிலிருக்கும் போது அரசாங்க உடை அணிவதையும் அரசாங்க உணவு உட்கொள்வதையும் ஏற்றுக்கொள்ள மறத்துவிட்டார்கள். இந்தச் சோதனைக் காலம் ஒன்றரை ஆண்டுகள் நீடித்தது. ஹிஜ்ரி 707 ரபீஉல் அவ்வல் மாதத்தில், ஹுசாமுததீன் முஹ்னா-இப்னு-ஈஸா என்ற தலைவர் எகிப்துக்கு வந்தார். அவர் இமாமவர்களைச் சிறையிலிருந்து விடுவித்தார்.

அதற்குப் பிறகு பல விவாத அரங்குகள் கூட்டப்பட்டன. மார்க்க வல்லுனர்களான நஜ்முத்தீன்-இப்னு அர்ரிப்ஆ, அலாவுத்துன் அல்பாகீ, பக்றுதின் இப்னு அபீஸஃது, இஸ்ஸுத்தீன் அல்மஸாதீ, ஷம்சுத்தீன் இப்னு அத்லான்ஆகியோர் கலந்து கொண்டனர். நீதிபதிகள் கலந்து கொள்ள முடியாதென்று மறுத்தனர். இந்த விவாதங்கள் சுமூகமான முறையில் முடிவு பெற்றன. இமாமவர்கள் விடுதலைக்குப் பிறகு டமாஸ்கஸுக்குக் கடிதம் எழுதினார்கள். இவ்விடுதலையை அறிந்த பொதுமக்கள் மகிழ்ச்சியுற்றனர். ஷெய்கு நஜ்முததீன் சுலைமான் இப்னு அப்துல் கவிய்யு என்பார் இந்தச் சம்பவத்தைப் பற்றி ஒரு சிறந்த கவிதைத் தொகுப்பை எழுதி முடித்தார்கள்.

விடுதலை செய்யப்பட்ட பிறகு இமாமவர்கள் ஓதிக் கொடுப்பதிலும் மார்க்க போதனையிலும் ஈடுபட்டார்கள். சிறிது காலம் வரை நிம்மதியாகவும் அமைதியுடனும் உண்மையின் துதை எடுத்துச் சொல்லும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்தது. ஜும்ஆ அன்று ஹாகிம் ஜாமிஆ மஸ்ஜிதில் தொழுகையை நிறைவேற்றினார்கள். மக்கள் அவர்களின் நல்லுபதேசத்தைக் கேட்க விரும்பினர். இமாமவர்கள் பாத்திஹா சூராவை ஓதி, அவர் தொழுகை வரை "இய்யாக நஃபுது வஇய்யக நஸ்தஈன்" - என்ற திருவசனத்தின் கருத்துக்களையும் த்த்துவங்களையும் விளக்கிக் கொண்டிருந்தார்கள்.

இமாமவர்கள் போதிக்க ஆரம்பித்ததும் மக்கள் கூட்டம் கூட்டமாக அவர்களின் போதனையில் கலந்து கொள்ளலாயினர். வெள்ளிக்கிழமைகளில் ஜும்ஆத் தொழுகைக்குப் பின், ஜாமிஆ மஸ்ஜிதுகளில் குர்ஆன் விளக்கவுரை நடத்தி வந்தார்கள். நிம்மதியான இவ்வாழ்க்கை சில நாட்கள் வரைதான் நீடித்தது. இந்நாட்களில், இமாமவர்கள் ‘வஹதத்துல் உஜுது’ (அத்வைதக்) கொள்கைக்கு எதிராகப் பிரச்சாரம் செய்யலானார்கள். இக்கொள்கையை உடையவர்கள் பொதுமக்களின் நம்பிக்கைகளையும் கோட்பாடுகளையும் கொடுத்துக்கொண்டு இருந்தனர். இமாமவர்கள் தெரிவிக்கலானார்கள். இதனால் சூபிகள், குரக்கள், தைக்காக்களில்சில்லா இருந்தவர்கள், மடங்களைப் பாதுகாத்தவர்கள் அனைவரும் மிரண்டெழுந்தனர்.

ஷெய்கு அலுமத்தீன்பர்ஸாலி என்பார் கூறி இருப்பதாவது:-

ஹிஜ்ரி 707 - ஷவ்வால் மாதத்தில் கருமுத்தீன் ஆம்லு, இப்னு அதா முதலியோர் சுமார் ஐந்நூறு சூபிகளை அழைத்துக் கொண்டு இமாமவர்களுக்கெதிராக முறையீடு செய்தார்கள். இவர்கள் அனைவரும் ஒரேகூட்டமாகக் கோட்டையை நோக்கிச் சென்றார்கள். கோட்டைக்கு வெளியே நின்று கொண்டு குரல் எழுப்பினார்கள். அதனால் கோட்டையில் சபை கூட்டப்பட்டது. அதில் இமாமவர்கள் மீது சுமத்தப்பட்டகுற்றச்சாட்டுகள் தவறானவை என்று நிரூபிக்கப்பட்டன. இந்த விவாதத்தின்போது இமாமவர்கள் ரசூல்(ஸல்) அவர்களிடம் அபயம் தேடுவது அகுமானதல்ல என்று தான் கருதுவதாகக் கூறினார்கள். இதனால் அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. ஒரு கூட்டத்தினர் இவ்வாறு கூறுவது குற்றமல்ல என்றும், மற்றொரு கூட்டத்தினர் இவ்வாறு கூறுவது நபியவர்களின் மரியாதைக்கு மாற்றமானதாகும் என்றும் கூறினர். இறுதியில்ந நீதிபதியிடம் வழக்கைக் கொண்டு செல்வது என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால், அதனால் குழப்பம் வளர்ந்து கொண்டே போனதால், இமாமவர்கள் விரும்பினால் சில நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு, கெய்ரோவில் அல்லது டமாஸ்கஸில் தங்கி இருக்கட்டும: இன்றேல், சிறையிடப்படுவதை ஏற்றுக் கொள்ளட்டும் என்றுஅரசாங்கத்தின் சார்பாக ஆணை பிறப்பிக்கப்பட்டது. இமாமவர்கள் மகிழ்ச்சியுடன் சிறை செல்வதை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால், அவர்களின் அன்பர்களும் அபிமானிகளும் அரசாங்கத்தின் நிபந்தனைகளை ஒப்புக்கொண்டு, இமாமவர்கள் சார்பாக அவற்றை ஏற்று நடப்பதாக பொறுப்பேற்றுக் கொண்டனர். பிறகு இமாம்அவர்கள் ஷவ்வால் மாதம் 18ம் நாள் அஞ்சல் வண்டியிலமர்ந்து டமாஸ்கஸ் நகருக்குப் பயணமானார்கள். ஆனால் மறுநாளே அவர்களுக்குப் பின்னால் வாகனம் அனுப்பப்பட்டு அவர்களைத் திருப்பி அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டது. பிறகு நீதிபதிகளும் அதிகாரிகளும் கூடிப் பேசினர். பல அபிப்பிராயங்கள் பரிசீலிக்கப்பட்டன. சிலர் சிறையிலடைக்குமாறு யோசனை கூறினர். சிலர் அதற்கு மறுப்புத் தெரிவித்தனர். மாலிகீ மத்ஹபைச்சேர்ந்த நீதிபதி ஷம்சுத்தீன் தூனிசியிடம் சிறையிலிட ஆணை பிறப்பிக்குமாறு கூறப்பட்டது. எந்தக் குற்றமும் நிரூபிக்கப்படவில்லையே என்று அவர் கூறிவிட்டார். நீதிபதி நூறுத்தீன் ஸவ்ரதீ மாரிகீயிடமும் அதே போலவே வேண்டப்பட்டது. என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் திணறலானார்.

இக்கருத்து பேதத்தைக் கண்ட இமாமவர்கள், "நானே சிறைக்குச் செல்கிறேன் : இதில் தான் நன்மை இருக்கிறது" என்று கூறினார்கள். அவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவதாயிருந்தால், அவர்களின் அந்தஸ்திற்கு ஏற்றவாறு அவர்கள் நடத்தப்பட வேண்டுமென்று நீதிபதி நூறுத்தீன் கூறினார்கள். அதற்கு மற்றவர்கள், அரசாங்கம் தனிப்பட்ட சலுகை எதையும் தர இயலாது என்றும், மற்றக் கைதிகள் போன்று தான் அவர்களும் நடத்தப்பட வேண்டுமென்றும் கூறினர். இத்தனைச் சதிகளுக்கும் பின்னால் நஸ்ருல் முன்பஜீ என்பவரின் கரம் வேலைசெய்து கொண்டிருந்தது. எவ்வாறாயினும், இமாமவர்கள் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டார்கள். ஆனால், மரியாதையாக நடத்தப்பட்டார்கள். ஆதலால், அவர்களின் பணியாட்கள் உடனிருக்க அவர்கள் அனுமதிக்கப்ப்டடனர். பொதுமக்களும் தயக்கமின்றி அவர்களைச் சந்திக்க வழி இருந்தது. வெளியிலிருந்து கடினமானதும், முக்கியமானதுமான பிரச்சினைகள் மார்க்கத் தீர்ப்புக் கேட்டு வந்து கொண்டிருந்தன. இமாமவர்களும் அதற்கு பதிலளித்துக் கொண்டிருந்தார்கள்.

இம்முறை சிறையிலிருக்கும் போது யூசுப்(அலை) அவர்களின் முன்மாதிரியை அழகிய முறையில் முழுமையாகப் பின்பற்றும் வாய்ப்பை இமாமவர்கள் பெற்றார்கள். இமாம் அவர்கள் சிறைக்குச் சென்றபோது அங்குச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்களின் நிலை மிக மோசமாக இருந்தது. அவர்கள் பலவிதமான விளையாட்டுகளிலும் கேளிக்கைகளிலும் தங்கள் பொழுதைக் கழித்து வந்தார்கள். தொழுகையைப் பற்றி எவருக்கும் அக்கறை கிடையாது. இமாமவர்கள் அங்கே சென்றதும், சீர்திருத்தம் செய்யும் பணியைத் தொடங்கினார்கள். தஸ்பீஹ் செய்வதிலும், பாவமன்னிப்புத் தேடுவதிலும், இறைவனிடம் இறைஞ்சுவதிலும் அவர்களை ஈடுபடுத்தினார்கள். சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்கள் சுருங்கக் கூறின், சிறைச்சாலை வணக்கத் தலமாக மாறிவிட்டது.

இமாமவர்களைச் சந்திக்க வருபவர்களுக்குப் பொது அனுமதி இருந்தது. எனவே அதிகமான மக்கள் அவர்களிடம் வரலானார்கள். இது எதிரிகளுக்கு வேம்பாய்க் கசந்தது. அவர்கள் போராட்டம் நடத்தி, இமாமவர்களைக் கெய்ரோவிலிருந்து அலெக்ஸாண்டிரியாவுக்கு மாற்றிவிட்டார்கள். இமாமவர்களை அஞ்சல்வண்டி மூலம் அனுப்பி, அங்கே ஒரு மண்டபத்தில் சிறையிட்டார்கள். அங்கே ஒன்றிரண்டு முறை கொலைசெய்து விடுவதாகவும், கடலில் மூழ்கடித்து விடுவதாகவும் பயமுறுத்தினார்கள். சில நாட்களுக்குப் பிறகு இச்செய்தி டமாஸ்கஸுக்கு எட்டியபோது, அங்கே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. மக்கள் அதிகமாக இமாமவர்களின் விடுதலைக்காக துஆ செய்யலாயினர். எட்டு மாதங்கள் வரை அலெக்ஸாண்டிரியாவில் இருந்தார்கள். அந்நாட்களிலும் மக்களுக்கு அவர்களைச் சந்திக்க அனுமதி இருந்தது. மார்க்க அறிஞர்கள், பிரமுகர்கள், பெரியோர்கள் பெரும்பாலும் வந்து போய்க் கொண்டிருந்தனர்.

ஆரம்பத்தில் சுல்தான் நாசிர் என்பவர் எகிப்தில் அரசராக இருந்தார். அவருடைய தளபதிகளில் ஒருவராயிருந்த பேபரஸ் ஷாஜங்கீர் என்பவர் நிர்ப்பந்தமாக அவரை அரச பதவியிலிருந்து நீக்கிவிட்டு, தான் அரசராகப் பட்டம்சூட்டிக் கொண்டார். அவருடைய போக்கு சரியாக இல்லாததால் நாசிர் ஆதரவாளர்களைத் திரட்டிக் கொண்டு படையெடுத்து வந்தார். ஷாஜங்கீர் ஓடிவிட்டார். மறுபடியும் சுல்தான் நாசிர் எகிப்தின் அரசரானார். இச்சம்பவம்ஹிஜ்ரி 709ல் நடந்தது. சுல்தான் நாசிர் இமாமவர்களுக்கு மிக மரியாதை செலுத்தக் கூடியராக இருந்தார். எனவே அவர் எகிப்துக்கு வந்ததும் இமாமவர்களை மிக கண்ணியத்துடனும் கௌரவமாகவும் கெய்ரோவுக்குஅழைத்து வருமாறு உத்தரவிட்டார்.

இமாம் அவர்கள் ஷவ்வால் மாதம் 18ம் நாள் கெய்ரோ வந்து சேர்ந்தார்கள். 24ம் தேதி அரசவையில் சுல்தான் நாசிரைச் சந்தித்தார்கள். அதில் எகிப்து, சிரியா ஆகிய நாடுகளின் பெரிய நீதிபதிகளும், மார்க்க சட்ட நிபுணர்களும் இருந்தார்கள். இமாமவர்கள் அவையில் நுழைந்தபோது நாசிர் எழுந்து நின்று மரியாதை செலுத்தினார். சுல்தான் திறந்த மனத்துடன் இமாமவர்களைப் பாராட்டினார். மக்களுக்கு இமாமவர்களின் அந்தஸ்து தெரிந்து அவர்களை எதிர்ப்பதை மக்கள் விட்டுவிட வேண்டுமென்றே அவ்வாறு செய்தார். இமாமவர்களின் எதிரிகளைத் தண்டிக்கவும் அவர் விரும்பினார். ஏனெனில், அங்கு வந்திருந்தவர்கள், சுல்தான் இல்லாத சமயத்தில் பேபரஸ் ஜாஷங்கீருக்கு பிரமாணம் செய்து கொடுத்திருந்தார்கள். அவர் மலிக் முஸப்பர் என்ற பெயரில் அரசராகப் பதவி பிரமாணம் செய்து கொண்டிருந்தார். இவ்விஷயத்தில் நாசிர் இமாமவர்களிடம் ஆலோசனைக் கேட்டார். இமாமவர்கள் எதிரிகளைப் பழிவாங்க நினைத்திருந்தால் இதைவிடச் சிறந்த வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்திருக்க முடியாது. அவர்களின் ஒரு சாடை நூற்றுக்கணக்கானவர்களின் வாழ்க்கைக்கு முடிவு ஏற்படுத்தி இருக்கும். ஆனால், இமாமவர்களின் உயர்ந்த பண்பையும் விசாலமான மனப்பான்மையையும்ப பாருங்கள். சுல்தானின் நோக்கத்தைப் புரிந்து கொண்ட இமாமவர்கள், தங்கள் எதிரிகளைப் புகழ்ந்து பேச ஆரம்பித்தார்கள். அவர்கள் இல்லாவிடில் அவர்களின் இடம் அரசாங்கத்தில் காலியாகிவிடும். அவர்களைப்போன்றவர்கள் கிடைக்கமாட்டார்கள் என்று கூறிவிட்டார்கள். சுருக்கமாக சொன்னால், அவர்களைத் தண்டிக்கவேண்டுமென்ற சுல்தானின் எண்ணத்தை மாற்றினார்கள்.

காஜி இப்னு மக்லூப் என்பவர் இமாம் இப்னு தைமிய்யாவின் கடுமையான விரோதியாக இருந்தார். எகிப்தில் இமாமவர்களுக்கு இழைக்கப்பட்ட இன்னல்களுக்கும் துன்பங்களுக்கும் காரணமாக இருந்தவர்கள் நஸ்ரு என்பவரும் இப்னு மக்லூப் என்பவருமேயாவர். இமாமவர்களைக் கெய்ரோவை விட்டும் அலெக்ஸாண்டிரியாவுக்கு அனுப்பத் தூண்டியவர் இப்னு மக்லூப் தான். இமாமவர்கள் விரும்பியிருந்தால் மிக எளிதாகப் பழி தீர்த்துக் கொண்டிருக்க முடியும். ஆனால், இமாமவர்கள் அவரை மன்னித்தார்கள்.

"நான் இப்னு தைமிய்யாவை விட உயர்ந்த பண்பும், குற்றத்தை மன்னிக்கும் தன்மையும், வீரமும் உள்ள எவரையும் கண்டதில்லை. எங்களுக்கு அவருக்கெதிராகச் சந்தர்ப்பம் வாய்த்த போது அவருக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதில்ந நாங்கள் சிறிதும் விட்டுக் கொடுத்ததில்லை. ஆனால், அவருக்கு வாய்ப்புக் கிடைத்தபோது அவர் எங்களை மன்னித்துவிட்டார்" என்று பிற்காலத்தில் இப்னு மக்லூப் கூறியுள்ளார்.

பொதுமக்கள் ஆரம்பத்திலிருந்தே இமாமவர்கள் மீது பற்றுள்ளவர்களாக இருந்தார்கள். சுல்தானுக்கிருந்த பற்றைப் பார்த்து, இமாமவர்களின் அபிமானிகளின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருந்தது எல்லாத்துறையினரும், பிரிவினர்களும் அதிகமான அளவில் இமாமவர்களிடம் வரலானார்கள். இவ்வாறிருந்தும் எதிரிகளின் விஷமம் குறைவதாயில்லை. ஹிஜ்ரி 711-ரஜப் மாதத்தில் இமாமவர்கள் தனிமையிலிருக்கும் போது ஒரு கும்பல் அவர்களை அடித்தது. இச்செய்தி இமாம் அவர்களுடைய அபிமானிகளுக்குத் தெரிய வந்தபோது அவர்கள் அடக்க முடியாத கோபம் கொண்டனர். படையினரும் மற்ற தோழர்களுள் ஒரு பகுதியினரும் இமாமவர்களிடம் வந்து பழிவாங்க அனுமதி கேட்டனர். இமாமவர்கள் வந்த மக்களைத் தடுத்துவிட்டார்கள்."–தாங்கள் அனுமதி தந்தால், எகிப்தையே தூள் தூளாக்கி விடுகிறோம்" என்று அவர்கள் கூறினார்கள்.

"எதற்காக அவ்வாறு செய்யப் போகிறீர்கள்?" என்று இமாமவர்கள் கேட்டார்கள். தங்களுக்காகவே! என்று அந்தமக்கள் பதிலளித்தனர். "இது கூடாது" என்று இமாமவர்கள் கூறினார்கள். "எவர் தங்களுக்கு துன்பமிழைத்தார்களோ, அவர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களைத் தீர்த்துக் கட்டுவோம். அவர்களின் இல்லங்களைப் பாழாக்குவோம்" என்று அம்மக்கள் கூறினார்கள்.

"இது ஆகுமானதல்ல" என்று இமாமவர்கள் கூறினார்கள். "அவர்கள் உங்களுக்குத் துன்பமிழைக்கவில்லையா? நாங்கள் அவர்களை ஏன் பழிவாங்கக் கூடாது? அவர்களின் விஷமத்தனத்திற்குரிய தண்டனையை அவர்கள் ஏன் அனுபவிக்கச் செய்யக்கூடாது?" என்று மக்கள் கேட்டார்கள்.

ஆனால் இமாமவர்கள் கடுமையான இவ்வெண்ணத்திலிருந்து அவர்களைத் தடுத்து நிறுத்தி விட்டார்கள். ஆதரவாளர்கள் மிகவும் ஆத்திரத்தை வெளியிட்டபோது இமாமவர்கள் கூறினார்கள்:-
"நீங்கள் எனக்காக இவ்வாறு செய்ய விரும்புவீர்களாயின், நான் அவர்களை மன்னித்துவிட்டேன் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அல்லது, நீங்கள் உங்களுக்காகச் செய்ய விரும்புவீர்களாயின், என்னிடம் ஏன் இதுபற்றிக் கேட்கிறீர்கள்? நீங்கள் விரும்புவதைச் செய்யுங்கள். இதை அல்லாஹ்வுக்காகச் செய்ய விரும்புவீர்களாயின், அல்லாஹ் அவனுக்குரியதை வாங்கிக் கொள்வான்".

அல்லாமா ஷிப்லி அவர்கள் எழுதியுள்ளதாவது:-

இக்கூட்டத்தில் ‘பிக்ரி’ என்று ஒரு மார்க்க அறிஞரும் இருந்தார். அவர் ஒருநாள் இமாமவர்கள் தனிமையிலிருக்கும் போது அவர்களின் சட்டையைப் பிடித்திழுத்து, "வா நீதிமன்றத்துக்கு! உன்னைப் பற்றி வழக்குத் தொடர வேண்டும்", என்று சொன்னார். அதிக சப்தமும் கூச்சலும் ஏற்பட்டதும் இங்குமங்குமிருந்து மக்கள் கூடிவிட்டார்கள். மார்க்கச் சட்ட நிபுணர் பிக்ரி ஓட ஆரம்பித்தார்.

கொஞ்ச காலத்திற்குப் பிறகு சுல்தான் ஏதோ ஒரு விஷயத்தில் பிக்ரீ மீது கோபமடைந்தார். அதனால் அவருடைய நாவைத் துண்டித்து விடுமாறு கட்டளையிட்டார். இமாமவர்களுக்குத் தெரிய வந்தபோது, சுல்தானிடம் சென்று மன்னித்து விடுமாறு பரிந்துரை செய்தார்கள். கடைசியாக பிக்ரீ மார்க்கத் தீர்ப்பு வழங்கக்கூடாது என்று முடிவு செய்யப்பட்டது.

ஹிஜ்ரி 712-ல் சுல்தான் மீண்டும் தாத்தாரியர்களுடன் போர் தொடுப்பதற்காக சிரியாவை நோக்கிப் புறப்பட்டார். இமாமவர்களும் போர் வீரர்களுடன் சிரியாவுக்கு வந்தார்கள். ‘அஸ்கலரான்’ என்ற இடத்தையடைந்து, பைதுல் முகத்தஸின் தரிசனத்திற்காகச் சென்றார்கள். தரிசனத்தை முடித்துக் கொண்டு தன் சகோதரர்களுடனும், சகாக்களுடனும் ஆதரவாளர்களுடனும் டமாஸ்கஸ் வந்தார்கள். மக்கள் உற்சாகமான வரவேற்புக் கொடுத்தார்கள்.

டமாஸ்கஸ் வந்த பிறகு கல்வியைப் பரப்புவதிலும் நூல்கள் எழுதுவதிலும் ஈடுபட்டார்கள். மக்கள் அவர்களிடம் வாய் மூலமாகவும் எழுத்து மூலமாகவும் மார்க்கத் தீர்ப்புகள் கேட்டு வரலாயினர். நிரந்தரமாகப் போதனையும் நடைபெற்று வந்தது.

ஒரு மனிதர், தான் ஒரு வேலையைச் செய்வதாகவோ செய்வதில்லை என்றோ சத்தியம் செய்து அதை மறுத்துவிடுவாரானால், அவர் அதற்குப் பரிகாரம் கொடுக்க வேண்டும். இதன் அடிப்படையில் ஒருவர் சத்தியம்செய்து, அந்தச் சத்தியத்தை முறித்துவிட்டால், தன் மனைவி விவாகரத்து (தலாக்) பெற்றவளாகிவிடுவாள் என்றுகூறினால், அவர் அவ்வாறு செய்வதின் மூலமாக அவருடைய மனைவியை விவாகரத்து (தலாக் செய்தவராகிவிடுவார். அவர் பரிகாரம் கொடுத்துவிட்டு, தலாக்கிலிருந்து விலக முடியாது என்று மற்ற மார்க்கஅறிஞர்களில் பலர் கூறியுள்ளனர். ஆனால் இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்) அவர்களும் அவர்களின் மாணவர் ஹாபிஸ் இப்னுல் கய்யிம் என்பாரும் பிராயச்சித்தம் கொடுத்து விவகாரத்தில் (தலாக்) இருந்து விடுதலைபெறலாம் என்று தீர்ப்பு வழங்கினர்.

இமாம் இப்னுல் கய்யிம் கூறுவதாவது:-

இமாம் இப்னு தைமிய்யா இப்பிரச்சினையில் மிக நீண்டதாகவும், நடுத்தரமாகவும், சுருக்கமானதாகவுமுள்ள நூல்களை எழுதியுள்ளார்கள். அவற்றின் பக்கங்களின் எண்ணிக்கை சுமார் இரண்டாயிரமாகும். அவற்றில் குர்ஆன், ஹதீஸ், சஹாபாக்களின் அபிப்பிராயங்கள், அனுமானம், இமாம் அஹ்மது பின் ஹன்பல் அவர்களின் சட்ட அமைப்புகள், மற்ற இமாம்களின் சட்ட அமைப்புகள் ஆகியவற்றிலிருந்து சுமார் நாற்பது ஆதாரங்களைக் காட்டியுள்ளார்கள். அவர்கள் மறைவது வரை இந்த மார்க்கத் தீர்ப்பை உறுதியக் கடைபிடித்து வந்தார்கள். அவர்களின் முடிவு சரியானது என்பதில் அவர்களுக்கிருந்த உறுதியின் காரணமாக, மற்றவர்களுடன் முபாஹலா செய்யவும் தயாராகி விடுவார்கள். எப்பொழுது யார் கேட்டாலும், தலாக்கின் அடிப்படையில் சத்தியம் செய்து தலாக்கை உண்டாக்காது என்றுதான் ‘பத்வா’ வழங்கி வந்தார்கள்.

இதனால் எதிரிகள் வெகுண்டெழுந்தனர். எவ்வாறெல்லாம் இமாமவர்களைப் பரிகசித்தும் ஏளனம் செய்தும் பார்த்தனர். அவர்களின் உபாயங்கள் தோல்வியுறவே, அவர்கள் சுல்தானிடம் முறையிட்டனர். சுல்தானிடம் தலாக்கின் அடிப்படையில் எவர் பிரமாணம் எடுத்துக் கொண்டார்களோ அவர்களுக்குப் பிராயச்சித்தம் கொடுத்துவிட்டு தலாக்கைவிட்டு தப்பித்துக் கொள்ள அனுமதி வழங்குவதன் மூலம் , பிரமாணத் (பைஅத்)தைமுறித்துக் கொள்ளத் தூண்டுவதாக இமாமவர்கள் மீது அபாண்டத்தைச் சுமத்தினர்.

அக்காலத்தில் தலாக்கின் அடிப்படையில் சத்தியப் பிரமாணம் செய்வது ஒரு அரசியல் பிரச்சினையாக உருவெடுத்திருந்தது. முதன் முதலாக இதை உருவாக்கியவர் ஹஜ்ஜாஜ்-பின்-யூசுப் ஸலபியாவார். அவர் தயார் செய்த பிரமாண வாக்குமூலத்தின்படி அப்போதைய கலீபாவுக்குக் கட்டுப்பட்டு நடப்பதாகப் பிரமாணம் எடுத்துக்கொள்வதுடன் , அதை முறித்துக் கொண்டால் தன் மனைவி தனக்கு தலாக்காகிவிடுவாள் என்றும் ஒவ்வொருவரும் சத்தியம் செய்வது அவசியமாயிருந்தது. அதற்குப் பிறகு இது ஒரு சம்பிரதாயமாகவே ஆக்கப்பட்டது.

ஆனால், இஸ்லாமிய மேதைகள் யாரும் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. தலாக்கின் அடிப்படையில் பிரமாணம் எடுப்பதை ஏற்றுக் கொள்ளாததின் காரணமாகவே இமாம் மாலிக் (ரஹ்) இமாம் ஷாபிஈ(ரஹ்) ஆகிய இருவருக்கும் பல தொல்லைகளும் துன்பங்களும் இழைக்கப்பட்டன.

இமாம் இப்னு தைமிய்யா அவர்கள் தலாக்கின் அடிப்படையில் செய்யப்படும் சத்தியங்களில் தலாக் நிகழ்வதில்லை என்று தீர்ப்பு வழங்க ஆரம்பித்ததும், அன்றைய மார்க்க அறிஞர்கள் சிலர் வெகுண்டெழுந்தனர். எதிரிகள் சுல்தானையும் ஆட்சியாளர்களையும் இமாமைப் பற்றித் தப்பெண்ணம் கொள்ளச் செய்தனர். இந்த மார்க்கத் தீர்ப்புகளால், தலாக் செய்யப்பட்ட பெண்களை ஹலாலாக்கிக் கொடுக்கும் ஈனத் தொழிலில் ஈடுபட்டிருந்தவர்கள் பாதிக்கப்பட்டனர். ஏனெனில், விவாகரத்துப் பெற்றுவிட்ட பெண்ணை அவளுடைய கணவன் மீண்டும் மனைவியாகப் பெற வேண்டுமாயின், அவளை வேறொருவர் மணந்து விவாகரத்து செய்தால்தான் அவர் திரும்பவும் விவாகம் செய்ய இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதை ஒரு தொழிலாகவே சிலர்செய்து வந்தனர். அத்தகையவர்கள் நீதிபதிகளிடமும் மார்க்கத் தீர்ப்பு வழங்குபவர்களிடமும் சென்று அவர்களை இமாமவர்களுக்கெதிராகத் தூண்டலாயினர். இமாம் அவர்களுக்கு எதிராகப் பிரச்சாரம் அதிகமாகவே, பிரதம நீதிபதியாக இருந்த ஷெய்கு ஷம்சுத்தீன் அபூ அப்துல்லாஹ் முஹம்மதுப்னு முஸ்லிம் ஹன்பலீ அவர்கள் இமாமவர்களை அழைத்து, இவ்விஷயமாக இமாமவர்கள் தங்களது கருத்தை வெளியிடாதிருக்குமாறு பரிந்துரை கூறினார். இமாமவர்கள் மற்றவர்களின் மனதிருப்திக்காக அதை ஏற்றுக் கொண்டாலும், பிறகு நடந்த சம்பவங்களிலிருந்து அவர்கள் தங்கள் கொள்கையில் உறுதியாக இருந்தார்கள் என்று தெரிய வருகிறது.

ஹிஜ்ரி 718-ஜமாதுல் ஆகிர்-சனிக்கிழமையன்று எகிப்து சுல்தானிடமிருந்து இமாம் இப்னு தைமிய்யா எந்த மார்க்கத் தீர்ப்பும் (பத்வா) கொடுக்கக் கூடாதென்று உத்தரவு வந்தது. இரு நாட்களுக்குப் பின் ஒரு சபை கூட்டப்பட்டது. அதில் நீதிபதிகள், பத்வா வழங்குவோர், மற்ற மார்க்க அறிஞர்கள் பலர் கூடியிருந்தனர். அவர்கள் இமாமவர்களுடன் விவாதித்தனர். எல்லோருமாகச் சேர்ந்து இமாமவர்கள் அதற்குப் பிறகு எந்த பத்வாவும் கொடுக்கக் கூடாது என்று தீர்மானித்தனர். காரணம், எதிர்த்தரப்பினர் பெரும்பான்மையினராயிருந்தனர். மறுநாள் மார்க்கத் தீர்ப்புக் கேட்டு அவர்களிடம் வினா அனுப்பக்கூடாதென அறிவிக்கப்பட்டது. அவ்வாறிருந்தும், அவர்களிடம் வினாக்கள் வந்து கொண்டிருந்தன. இமாமவர்கள் அவற்றுக்கு ஆதாரப்பூர்வமான பதில்கள் எழுதி அனுப்பிக் கொண்டிருந்தார்கள். அரசு சார்பாக அவர்களிடம் விசாரிக்கப்பட்ட போது தான், தம் மார்க்க அறிவை மறைப்பதற்கு இயலாது என பதில் கூறிவிட்டார்கள்.

சில மாதங்களுக்குப் பிறகு மறுபடியும் எதிர்ப்புத் தோன்றியது. ஹிஜ்ரி 719 ரமழான் 19ம் நாள் செவ்வாய்க்கிழமையன்று தாரஸ்ஸஆதாவில் இண்டாவது சபை கூட்டப்பட்டது. சிரியாவின் அரசப் பிரதிநிதியின் முன்னிலையில் இமாமவர்களுடன் விவாதம் நடத்தப்பட்டது. சுல்தானின் ஆணை அவர்களுக்குப் படித்துக்க காட்டப்பட்டது. அரசருடைய ஆணையை ஒப்புக் கொள்ளாததற்காக அவர்கள் கண்டிக்கப்பட்டார்கள். அதற்குமேல் பத்வா எதுவும் வழங்கக் கூடாதென்று வற்புறுத்திச் சொல்லப்பட்டது. சட்ட நிபுணர்களின் கண்டிப்போ, சுல்தானின் ஆணையோ அவர்களுடைய அபிப்பிராயத்தை மாற்றவில்லை.

இமாமவர்கள் தங்கள் கொள்கையின்படி மார்க்க வினாக்களுக்குத் தீர்ப்பு வழங்குவதைத் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தார்கள். எனவே ஹிஜ்ரி 720 ரஜப் 22-வியாழக்கிழமையன்று தாருஸ்ஸஆதாவில் மூன்றாவது சபை கூட்டப்பட்டது. அதில் சிரியாவின் அரசப் பிரதிநிதியும் நீதிபதிகளும் இமாம் அவர்களை இருமுறை சுல்தானின் ஆணைக்குக் கீழ்ப்படியாததற்காக நிந்தித்தனர். இமாமவர்கள் அவர்களின் பேச்சுக்களையும் யோசனைகளையும் ஏற்றுக் கொள்ள மறுத்தனர். எனவே அவர்களுக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் டமாஸ்கஸ் கோட்டையில் சிறை வைக்கப்பட்டார்கள். அங்கே ஐந்து மாதங்களும் பதினெட்டு நாட்களும் சிறையிலிருந்தார்கள். கடைசியாக அவர்களை விடுதலை செய்யுமாறு எகிப்து அரசரின் ஆணைவந்தது. ஹிஜ்ரி 721-முஹர்ரம் 10 அன்று அவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். அதற்குப் பிறகு முன் போல்தாருல் ஹதுஸ்-அஸ்ஸீகிரியாவிலும் தாருல்ஹதீஸ் அல் ஹன்பலிய்யாவிலும் பாடம் நடத்தலானார்கள்.


ஷிர்க்கை எதிர்க்கும் சிறந்த பணி;

இறை மறையாம் திருமறை, இறைவனுடையவும் மனிதர்களுடையவும் மற்ற படைப்புகளுடையவும் தன்மைகளையும் அவரவர் பதவிகளையும் தனித்தனியே விளக்கியுள்ளது. இறைவன் எல்லாப் படைப்புகளின் படைப்பாளனாகவும், உடமையாளனாகவும், சுயேச்சையான அதிகாரமுள்ளவனாகவும் இருக்கிறான். அவனுடைய கட்டளைகளுக்கும் ஆணைகளுக்கும் எவரும் மாறு செய்ய இயலாது. மனிதன் இவ்வுலகில் இறைவனின் பிரதிநிதியாவான். எல்லாப் படைப்புகளிலும் சிறந்த படைப்பு மனித இனமேயாகும். பிரபஞ்சம் முழுவதும் அவனுக்கு வாழ்வதற்கு வசதியாக ஆக்கிக் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றப் படைபுகளெல்லாம் அவனை விடத்தாழ்ந்தனவாயும் அவனுக்குக் கீழ்படியக் கூடியனவாயும் உள்ளன.

ஆனால் மனிதன் சில சமயங்களில் தன் அறியாமையாலும் மதியீனத்தாலும் பார்க்கவியலாத புலனுக்கப்பாற்பட்டசக்திகளுக்கு அஞ்சக் கூடியவனாக ஆகிவிடுகிறான். உலகிலுள்ள பல பொருட்களையும் சக்திகளையும் இறைவனின் பிரதி பிம்பமெனக் கருதி அவற்றுக்குச் சிரம் பணியத் தலைபடுகிறான். ஒரு சமயம் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ஆகியவற்றை வணங்குகிறான். மற்றொரு சமயம் தன் கரங்களால் செய்தசிலைகளுக்கு அர்ச்சனை செய்கிறான். இறைமறை குர்ஆனும், திருமறையை உலகுக்கு அறிவித்த இறுதி நபிமுஹம்மது(ஸல்) அவர்களின் போதனை(ஹதீஸ்)களும் இத்தகைய ஷிர்க்கை (இணை வைப்பதை)யும், சிலைவணக்கத்தையும் எதிர்க்கின்றன. இஸ்லாம் வெளிப்படையான சிலை வணக்கத்தை ஒழித்துவிட்டது. முஸ்லிம்களில் பகிரங்கமான (ஷிர்க்) இணைவைத்தல் அழிந்து போயிற்று. ஆனால் மறைமுகமான இணைவைத்தல் தனி மனித வழிபாடு, குருமார்கள் வழிபாடு, சமாதி வழிபாடு என்ற பல வகைகளில் எஞ்சியுள்ளது. நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் ஸஹாபாக்கள், தாபிஈன்கள் முதலியோரின் காலத்திற்குப் பிறகு முஸ்லிம்களில் அறியாமை மிக்க வகுப்பினருள் அவை வழக்கில் வந்துவிட்டன. குர்ஆனும் ஹதீஸும் அவற்றைக்கடுமையாக எதிர்க்கின்றன. உண்மை அறிஞர்கள் எல்லாக் காலங்களிலும் அவற்றை மறுத்து வந்துள்ளனர்.

இறைவனுடைய படைப்புகளனைத்திலும் மிகச் சிறந்தவன் மனிதன். மனிதர்களில் மிகச் சிறந்தோர் இறைநம்பிக்கையுடையவர் (முஃமின்)களும் முஸ்லிம்களுமாவர். அவர்களிலும் மிகச் சிறந்தவர்கள் முழுமையாகக் குர்ஆனுக்கும் நபிகளாரின் நடைமுறைக்கும் ஏற்பச் செயல்படுபவர்களாவர். இவர்கள் அனைவரை விடவும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் பதவி மிகமிக மேலானது. அவர்களை விட உயர்ந்த அந்தஸ்து வேறெவருக்கும் இருக்க முடியாது. இருந்தபோதிலும் அவர்கள் இறைவனுடைய அடியாரும் தூதருமேயாவார்கள். அவர்களுக்கு இறைவனுடைய அந்தஸ்து கொடுக்கப்படமாட்டாது.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மொழிந்துள்ளார்கள்:
‘கிருஸ்தவர்கள் மர்யமின் மகன் ஈஸா(அலை) அவர்களை அளவுக்கதிகமாகப் புகழ்த்து போல் என்னையும் புகழாதீர்கள். நான் இறைவனின் அடிமையே, எனவே (என்னை) அல்லாஹ்வின் அடியானென்றும் அவனுடையதூதர் என்றும் சொல்லுங்கள்’ (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்களுள் எவரேனும் ஒருவர் எப்பொழுதேனும் அளவு கடந்து நாயகத்தைப் புகழும் சொற்களை உபயோகித்தாரானால் நாயகம்(ஸல்) உடனே தடுத்து அவ்வாறு சொல்லாதீர்கள் எனக்கூறியுள்ளார்கள்.

ஒரு மனிதர் நாயகம(ஸல்) அவர்களிடம் இவ்வாறு கூறினார்: ‘நாங்கள் தங்கள் மூலமாக அல்லாஹ்விடம் பரிந்துரை வேண்டுகிறோம். மேலும், இறைவன் மூலமாக தங்களிடம் பரிந்துரை வேண்டுகிறோம்.’

இதை செவியுற்ற நாயகம்(ஸல்) அவர்கள் கோபமுற்றார்கள். பின்னர் கூறினார்கள்: ‘அந்தோ பரிதாபம்! அல்லாஹ் யாரென்று அறிவாயா? நிச்சயமாக அல்லாஹ்விடம் அவனுடைய படைப்புகளில் யாரிடமும் பரிந்துரைசெய்யுமாறு கூற முடியாது. அல்லாஹ்வின் அந்தஸ்து இதற்கெல்லாம் மிக மேலானது.’ (ஆதாரம்: அபூதாவூது)

இதே போன்று, ஒருமுறை ஒரு நயவஞ்சகர் கொடுத்த தொல்லையையும் மன வேதனையையும் தாங்க முடியாமல், அபூபக்ரு(ரலீ) அவர்கள், ‘நாயகம்(ஸல்) அவர்களிடம் அபயமளிக்க வேண்டுவோம்’ என்று கூறினார்கள். இதைச்செவியுற்ற நாயகம்(ஸல்) அவர்கள், ‘என்னிடம் அபயமளிக்குமாறு கேட்கக் கூடாது. இறைவனிடமே அபயமளிக்குமாறு வேண்டுங்கள்’ என்று கூறிவிட்டார்கள்.

பிற்காலத்தில் குருமார்களின் வழிபாடு வழக்கில் வந்துவிட்ட பிறகு, மக்கள் இறந்துபோன மகான்களிடம் அபயமளிக்குமாறு கோரலாயினர். இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்) அவர்களிடம் இதுபற்றி மார்க்கத் தீர்ப்புகேட்கப்பட்ட போது அவர்கள், அல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவி கோருவதைக் கடினமாக இகழ்ந்தார்கள். ‘அல்லாஹ் அல்லாதவர்களிடம் அபயமளிக்கக் கோருவது உண்மையில் ஷிர்க்காகும்’ என்று எழுதினார்கள். முஹம்மத் நபி(ஸல்) அவர்களுடைய ஷரீஅத்தில் இதற்கு இடமில்லை. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அவ்வாறு அனுமதிக்கவில்லை. நபித் தோழர்களும் அவர்களுக்குப் பின் வந்த பெரியார்களும் (தாபிஈன்கள்) தங்கள் காலத்தில் அவ்வாறு செய்யவில்லை. முஸ்லிம்களின் இமாம்களாயிருந்தவர்களில் எவரும் இதை அங்கீகரிக்கவில்லை. எந்த நபித்தோழரும் சிரம நேரத்திலோ இன்னலின் போதோ நாயகத்தின்அடக்கஸ்தலத்தில் போய் அபயம் அளிக்குமாறு வேண்டியதில்லை. நபித் தோழர்களின் காலத்தில் முஸ்லிம்களுக்கும் இறைமறுப்பாளர்களுக்குமிடையே கொடூரமான போர்கள் நடந்தன. சில சந்தர்ப்பங்களில் பல சிக்கல்கள் ஏற்பட்டன. இருந்தபோதிலும், நபித்தோழர்களில் எவரும் நபி(ஸல்) அவர்களின் கப்ருக்குச்சென்று அபயமளிக்குமாறு கேட்கவில்லை. படைப்புகளில் எவர் மீதும் சத்தியம் செய்யவுமில்லை. நபித்தோழர்கள் நாயகம்(ஸல்) அவர்களின் கப்ருக்கு சென்றால் ஸலாத்தும் சலாமும் கூறிவிட்டு வருவார்கள். நபி(ஸல்) அவர்களின் கப்ரில் நின்று கொண்டு தனக்காக ஒரு மனிதன் பிரார்த்தனை செய்வதையும் இமாம்மாலிக்(ரஹ்) அவர்கள வெறுத்துள்ளார்கள். ஏனெனில், இத்தகைய செயல் சஹாபாக்களுடையவும் தாபிஈன்களுடையவும் செயல்களில் காணப்படாத ஒரு பித்அத் (அனாச்சாரம்) ஆகும்.

அபயம், இறைவனிடம் மட்டுமே கேட்கப்பட வேண்டிய ஒன்று என்ற திருமறை வற்புறுத்தியது.
‘நீங்கள் உங்கள் இறைவனிடம் உதவி கேட்டதை நினைத்துப் பாருங்கள். அப்போது அவன் உங்களுடைய வேண்டுதலை ஏற்றுக் கொண்டான்.’ (அத்தியாம் 8, வசனம் 9)

ஹதீஸ்களிலும், அபயம் இறைவனிடம் மட்டுமே கேட்கப்பட்டதாக வந்துள்ளது. ஒரு துஆவில் வந்திருப்பதாவது:

‘உயிருள்ளவனே! நிலைத்திருப்பவனே! உன்னை அன்றி வணங்கத்தகுந்தவர் எவருமிலர், உன் கருணையைக்கொண்டு நான் உதவி தேடுகிறேன். நீ என் நிலைமையனைத்தையும் சீராக்குவாயாக! கண்ணிமைக்கும் நேரமும் என்னை என் மனத்திடமும், உன் படைப்பில் எவரிடமும் ஒப்படைத்து விடாதே.’

இந்தப் பிரார்த்தனையில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இறைவனிடமே உதவி தேடும் முறையைக் கற்றுத்தருகிறார்கள் என்பது நினைவு கூறத் தக்கதாகும்.

படைப்பிடத்தில் படைப்பு அபயம் தேடுவது, மூழ்குபவனிடத்தில் மூழ்குபவன் உதவி தேடுவது போலாகும்’ என்று அபூயஸீது புஸ்தாம்(ரஹ்) கூறியுள்ளார்கள்.

படைப்பிடத்தில் படைப்பு அபயம் தேடுவது, சிறையிடப்பட்டவன் ஏற்கனவே சிறையிடப்பட்டவனிடம் உதவிதேடுவது போலாகும்’ என்று ஷெய்கு அப்துல்லாஹில்(ரஹ்) கூறியுள்ளார்கள்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடமே அபயம் தேடுவது கூடாது என்றிருக்கும் போது, அப்துல் காதிர் ஜீலானி(ரஹ்) அவர்களிமோ, மற்றெந்தப் பெரியார்களிடமோ அபயம் தேடுவது எவ்வாறு கூடுமானதாகும் என்பது இதிலிருந்து தெளிவாக விளங்குகிறது.

குர்ஆன் ஷரீஃபில் ஒரு படைப்பிடத்தில் (இஸ்திகாதா) அபயம் தேடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அதுமூஸா(அலை) அவர்களுடைய சம்பவத்தில் இவ்வாறு வந்துள்ளது:-

‘அவர்களின் கூட்டத்தைச் சார்ந்திருந்தவன் அவர்களின் எதிரியாயிருந்தவனுக்குப் பாதகமாக அபயம்தேடினான்’ என்று வந்துள்ளது. (அத் 28 வசனம் 15)

இங்கே நேரில் உதவி தேடினாலேயன்றி, மறைவான முறையில் உதவி தேடவில்லை. மறைவான முறையில்உதவி தேடுவது அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தானதாகும். எனவே இந்த வசனத்தை அடிப்படையாகக் கொண்டு மறைந்த பெரியார்களிடம் உதவி தேடுவது சரியாகாது.


வசீலா என்றால் என்ன?

ஒருவரிடம் ஒரு பொருளை நேரில் கேட்காமல், பிறரிடம் சொல்லிக் கேட்குமாறு சொல்வதற்கு ‘வசீலா’ என்றுசொல்லப்படுகிறது.

நபி(ஸல்) அவர்களின் வாழ்நாட்களில் மக்கள் நாயகம்(ஸல்) அவர்களிடம் வந்து தங்களுக்காகப் பிரார்த்தனைசெய்யுமாறு கூறுவர். நாயகமும் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வார்கள். இறைவனும் மனிதர்களுக்கு இவ்வாறு செய்யுமாறு போதனை செய்துள்ளான்.

அவர்கள் தங்களுக்கு அநீதமிழைத்துக் கொண்டபோது உம்மிடம் அவர்கள் மன்னிப்புக் கோரி, தூதரும் அவர்களை மன்னிக்கக் கோரி இருந்தால், நிச்சயமாக அவர்களுடைய மன்னிப்பை ஏற்றுக் கொள்பவனாகவும் கருணையாளனாகவும் இறைவனை அவர்கள் கண்டிருப்பார்கள்’. (அத். 4 வசனம் 64)

பெருமானாரின் வாழ்க்கையில் அவர்களின் துஆக்களால் மக்களுக்குப் பலன் கிடைத்துக் கொண்டிருந்தது. ஒருமுறை ஒரு கிராமவாசி வந்து பஞ்சத்தைப் பற்றி முறையிட்டார்: ‘நாயகமே! பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. கட்டிடங்கள் விழுந்துவிட்டன. இதை நிறுத்துமாறு இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்’ என்று கூறினார். நாயகம்(ஸல்) அவர்கள், ‘இறைவா! எங்கள் மீதல்லாமல் எங்களைச் சுற்றியுள்ளம லைகளிலும் குன்றுகளிலும் மரங்களின் மூடுகளிலும் பள்ளத்தாக்குகளிலும் இம்மழையை அப்புறப்படுத்துவாயாக!’என்று பிரார்த்தனை செய்தார்கள்.

நாயகம்(ஸல்) அவர்கள் துஆ செய்ததும் வானம் தெளிவடைந்து மேகக் கூட்டம் கலைந்துவிட்டது.
ஆனால் நாயகம்(ஸல்) அவர்கள் இவ்வுலக வாழ்வை நீத்த பிறகு நபித் தோழர்களில் எவரும் மழை பெய்யச்செய்யுமாறு நாயகத்திடம் வசீலா தேடவில்லை. அவர்களுக்குப் பிறகு உயிருடனிருந்த பெரியார்களிடம் வசீலா தேடினார்கள்.

சஹீஹுல் புகாரியில் ஹலரத் இப்னு மாலிக்(ரலி) மூலமாக ஒரு செய்தி கூறப்பட்டுள்ளது. உமர்(ரலி) அவர்கள் காலத்தில் பஞ்சம் ஏற்பட்டபோதெல்லாம் உமர்(ரலி) அவர்கள் நாயகம்(ஸல்) அவர்களின் பெரிய தந்தை அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப்(ரலி) அவர்களை வசீலாவாக்கி துஆ செய்பவர்களாக இருந்தார்கள். அவர்கள்கூறுவார்கள்:-

‘இறைவா! நாங்கள் பஞ்சத்தால் பீடிக்கப்பட்டபோதெல்லாம் உன்னிடம் எங்கள் நபியை வசீலாவாக ஆக்கிக்கொண்டிருந்தோம். நீ மழையை இறக்கி வந்தாய். இப்பொழுது உன்னிடம் எங்கள் நபியின் பெரிய தந்தையைக்கொண்டும் வசீலா தேடுகிறோம். எங்களுக்கு மழையைக் கொடுப்பாயாக!

இதிலிருந்து நாயகத்திடம் அவர்களின் மறைவுக்குப் பிறகு வசீலா தேட அனுமதிக்கப்பட்டிருந்தால் உமர்(ரலி) அவர்கள் நாயகம்(ஸல்) அவர்கள் காலஞ் சென்ற பிறகும் அவர்களிடமே கேட்காது. அவர்களின் பெரியதந்தையை வசீலாவாக ஆக்கியதிலிருந்து, நாயகத்தின் மறைவுக்குப் பின் அவர்களின் மண்ணறையில் வசீலாதேடுவது கூடாது என்பது தெரியவருகிறது அல்லவா? எனவே இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்) அவர்கள் எழுதுகிறார்கள்.

‘நபித்தோழர்கள் நாயகம்(ஸல்) அவர்களை விட்டுவிட்டு அப்பாஸ்(ரலி) அவர்களை வசீலாவாக ஆக்கினார்கள் எனும்போது, நாயகத்தின் வாழ்நாளில் ஆகுமானதாக இருந்தது. அவர்களின் மறைவுக்குப் பின் கூடாததாகிவிட்டது என்று தானே தெரிய வருகிறது. ஆனால் நாயகம்(ஸல்) அவர்கள் மீது நம்பிக்கைகொள்வதும் அவர்களுடைய ஷரீஅத்திற்கு அடிபணிவதும் அவர்களின் ஆயுட்காலத்தில் அவர்களிடம் வசீலாதேடுவதற்குச் சமமாகும்.

இவ்வாறு வசீலா தேடும்படி குர்ஆன் ஷரீபில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

‘விசுவாசிகளே! அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள். அவனிடம் "வசீலா" தேடுங்கள். அவனுடைய பாதையில் முயற்சி செய்யுங்கள். நீங்கள் வெற்றியடையக்கூடும்.’ (அத். 5, வசனம் 35)

இங்கே ‘வசீலா’ என்று கூறப்பட்டிருப்பது தக்வாவையும், அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் (புனிதப்போர்) செய்வதையும் தான் சுட்டிக்காட்டுகிறது என்பது இவ்வசனத்தின் முன்பின் தொடர்புகளிலிருந்து தெரியவருகிறது.

மற்றோர் இடத்தில் இறைவனின் அன்பையும் தண்டனையைப் பற்றிய அச்சத்தையும் ‘வசீலா’ என வர்ணிக்கப்பட்டுள்ளது.

‘நபியே நீர் கூறுவீராக! இறைவனல்லாத எவரை நீங்கள் (கடவுள்களாக) ஆக்கிக் கொண்டீர்களோ அவர்களைஅழையுங்கள். அவர்கள் உங்கள் கஷ்டங்களை அகற்றவோ, மாற்றவோ சக்தி பெறமாட்டார்கள். அவர்கள் எவரை அழைக்கின்றார்களோ அவர்கள் அவர்களில் யார் இறைவனிடம் நெருக்கமானவர்கள் என்பதற்கு வசீலாதேடுகிறார்கள். அவர்கள் இறைவனின் அன்பை நம்புகின்றார்கள். நிச்சயமாக உமது இறைவனுடைய தண்டனை அஞ்சத்தக்கதாகும்’. (அத். 17, வசனம் 56, 57)

நபிகள் நாயகத்தின் வாக்குகளிலும் (ஹதீஸ்) ‘வசீலா’ என்னும் பதம் வந்துள்ளது. அதில், வசீலா என்ற வார்த்தைக்கு ‘சுவனபதியின் ஒரு பதவி’ என்று விளக்கம் தரப்பட்டுள்ளது. நாயகம்(ஸல்) அவர்கள்கூறியுள்ளார்கள்:-

‘நீங்கள் எனக்கு இறைவனிடம் வசீலாவைக் கேளுங்கள். நிச்சயமாக அது சுவனபதியில் ஓரு பதவியாகும். அது இறைவனின் அடியார்களுள் ஓர் அடியாருக்கே உரியதாகும். அந்த அடியாராக நானே இருப்பேன் எனநம்புகிறேன். எவன் எனக்காக அல்லாஹ்விடம் வசீலாவைக் கேட்பானோ, அவனுக்கு மறுமை நாளில் என்னுடைய பரிந்துரை கடமையாகிவிடும்.’. (முஸ்லிம்)

பாங்கு ஒலி கேட்ட பிறகு கீழ் வரும் துஆவையும் ஓதுமாறு நாயகம்(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
‘யா அல்லாஹ்! இந்த அழைப்பினதும் நடக்கப்போகும் தொழுகையினதும் இறைவனே! நீ முஹம்மது(ஸல்) அவர்களுக்கு வசீலாவைக் கொடுப்பாயாக! மேலும் அவர்களுக்கு வாக்களித்திருக்கும் புகழுக்குரிய இடத்தையும்கொடுப்பாயாக! (புகாரி)

முஸ்னது இமாம் அஹ்மது, திர்மிதீ, நஸஈ, இப்னுமாஜா ஆகிய நூல்களில் ஒரு சம்பவம் கூறப்பட்டுள்ளது. ஒரு கண் தெரியாதவர், கண்ணொளி கிடைத்திட இறைவனிடம் இறைஞ்சுமாறு நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம்வேண்டினார். ‘நீர் விரும்பினால் நான் துஆ செய்கிறேன் அல்லது நீர் பொறுமையைக் கடைப்பிடியும்! பொறுமையை கடைப்பிடிப்பது தான் மிகச் சிறந்தது’ என நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

‘இறைவா! நான் உன்னிடம் வேண்டுகிறேன். உன் தூதராகிய கருணை நபி முஹம்மது(ஸல்) அவர்கள் மூலமாக உன்னிடம் வசீலா தேடுகிறேன்: முஹம்மதே! அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்கள் மூலமாக என் இறைவனிடம் என் தேவையை அவன் நிறைவேற்றித் தருவான் வேண்டி வசீலா தேடுகிறேன்: இறைவா! நீ என்விஷயத்தில் அவர்களுடைய பரிந்துரையை ஏற்றுக் கொள்வாயாக!’

இந்த நாயக வாக்கை அடிப்படையாக வைத்து, ‘இறைத்தூதர்(ஸல்) அவர்களின் வாழ்நாளிலும் அவர்களின் மறைவுக்குப் பிறகும் நாயகத்திடம் வசீலா தேடுவது கூடுமானதாகும்’ என்று சிலர் கூறுகின்றனர்.

வசீலா தேடக்கூடியவனுக்காக இறைத்தூதர்(ஸல்) அவர்கள் துஆ செய்ய வேண்டிய அவசியமுமில்லை: வசீலா தேடுவதினாலேயே இறைவன் அவனுடைய துஆவை ஏற்றுக்கொள்வான்.’ என்று அவர்கள் கூறுகிறார்கள். ‘குருடர் எவ்வாறு துஆ செய்தாரோ அதைப் போன்று இன்றும் நாம் துஆ செய்யலாம் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

இவர்களைப் பற்றி இமாம் இப்னு தைமிய்யா அவர்கள் கூறுவதாவது:-

‘இவர்களின் கூற்று மார்க்கச் சட்டத்தின் அடிப்படையிலும், மதிப்பின் அடிப்படையிலும் உண்மைக்குப் புறம்பானதாகும். அவர்கள் இறைவனின் சட்டத்திற்கு உடன்பட்டவர்களில்லை. அவர்கள் சொல்வது இறைவனின் குணங்களுக்கு பொருத்தமானதன்று.’

இமாம் இப்னு தைமிய்யாவின் கருத்துப்படி இத்தகைய வசீலா நாயகம்(ஸல்) அவர்களின் வாழ்நாளில் மட்டும்தான் கூடுமானதாக இருந்தது. அவர்களின் மறைவுக்குப் பிறகு எவரும் இத்தகைய வசீலா தேடவில்லை. ஏனெனில், நாயகத்திடம் வந்து துஆ செய்யுமாறு வேண்டிட முடியாமல் போய்விட்டது. நாயகத்தின் வாழ்நாளிலும், மறைவுக்குப் பிறகும் இத்தகைய வசீலா தேடுவது ஒன்றாகவே இருந்திருந்தாலோ, அல்லது யாருக்காகவும் நாயகம்(ஸல்) துஆச் செய்வதும் செய்யாதிருப்பதும் சமமாகவே இருந்திருந்தாலோ நபித்தோழர்கள் நாயகத்தின் மறைவுக்குப் பிறகு அவர்களை விட்டுவிட்டு மற்ற எவரிடத்திலும் கவனம் செலுத்தியிருக்கமாட்டார்கள்.

நபித்தோழர்களுள் எவரும் அவ்வாறு செய்யாதிருக்க, இத்தகைய வசீலா தேட நமக்கென்ன உரிமை இருக்கிறது? நாயகத்தின் தோழர் பெருமக்கள் நம்மைவிட ஷரீஅத்தை அதிகமாக அறிந்தவர்களாயிற்றே!

எனவே, இமாம் இப்னு தைமிய்யா அவர்கள் கூறினார்கள்:- ‘முஸ்லிம்கள் வள்ளல் நபி(ஸல்) அவர்களின் வாழ்நாளில் அவர்களிடம் வந்து தங்களுக்காக துஆ செய்யுமாறு கேட்டுக் கொண்டார்கள். மறைவுக்குப் பின்அவர்களின் சமாதியில் வந்தோ வேறிடத்திலோ அவர்களிடம் துஆ செய்யுமாறு நபித் தோழர்கள் வேண்டவில்லை; அவ்வாறு இன்று பலர் நல்லோர்களின் சமாதிகளில் வந்து செல்கிறார்கள். சிலர் தங்களுடைய தேவையை நிறைவு செய்மாறு கேட்கின்றனர். அவர்களின் மூலம் அல்லாஹ் மீது சத்தியம் செய்கின்றனர். அல்லது இதைப் போன்ற பல செயல்களைச் செய்கின்றனர். இத்தகைய செயல்களை நபித் தோழர்களோ தாபியீன்களோ, அவர்களைப் பின்பற்றியவர்களோ செய்யவில்லையே! காலஞ்சென்ற மகான்களிடம் தேவைகளைக் கேட்குமாறும் அவர்களிடம் உதவி தேடுமாறும் ஷரீஅத் கூறவில்லை. முன்னோர்களுள் எவரும்அவ்வாறு செய்யவில்லை."

இமாம் இப்னு தைமிய்யா எகிப்திலிருந்து போது ஹிஜ்ரி 711ல் அவர்களிடம், நாயகம்(ஸல்) அவர்கள் மூலம் வசீலா தேடுவது பற்றிக் கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கவர்கள் விளக்கமான பதில்கள் கொடுத்துள்ளார்கள். பிறகு அவர்கள் டமாஸ்கஸ் வந்த பிறகும் அவர்களிடம் அநேக கேள்விகள் இது குறித்துக் கேட்கப்பட்டன. இப்பிரச்சனை தொடர்பாக ‘காயிததுன் ஜலீலதுன் பித்தவஸ்சுலி-வல் வசீலத்தி’, ‘அல்வாசிதத்து பைனஸ்ஹக்கி வல் கலக்கி’ எனும் பெயர்களில் சில நூல்களை எழுதியுள்ளார்கள். அவற்றில் ‘வசீலா’விற்கு இருபொருள்கள் கொடுத்துள்ளார்கள்.

ஒன்று: நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுடைய வாழ்நாளில் அவர்களிடம் துஆ செய்யக் கேருதல்: அவர்களிடம் பரிந்துரை செய்ய வேண்டுதல்.

இரண்டு: நாயகத்தின் மறைவுக்குப் பின் அவர்கள் மீது நம்பிக்கை கொண்டு, அவர்களைப் பின்பற்றி, இறைவனிடம் பிரார்த்தனை செய்வது.

இவ்விரண்டு கருத்துக்களிலும் கருத்து வேறுபாடு எதுவுமில்லை. ஆனால், நபி நாயகம்(ஸல்) அவர்களின் மறைவுக்குப்பின் அவர்களை வசீலாவாக ஆக்கும் பரிச்சனையில் மற்ற அறிஞர்களின் கருத்துக்கு மாறாக இமாம்இப்னு தைமிய்யா அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்கள்."தேவைகளை நிறைவு செய்ய நாயகத்தின் வசீலாதேடும் விஷயத்தில் நபித்தோழர்கள், தாபிஈன்கள் ஆகியோரின் செயல்களிலிருந்து ஆதாரம் காட்டவியலாது. நம் முன்னோர்கள் இந்தச் செயலைச் செய்யாதிருக்க, இத்தகைய வசீலாவைக் கடைப்பிடிக்க நமக்கு என்ன அருகதையுள்ளது?" என்று இமாமவர்கள் வாதிடுகின்றார்கள்.

மறுமைநாளில் நாயகத்தின் பரிந்துரை (ஷபாஅத்) பற்றி இமாம் இப்னு தைமிய்யாவும் மறுக்கவில்லை. "நாயகம்(ஸல்) அவர்கள் பரிந்துரை வழங்குபவர்களுள் முதன்மையானவர்கள்" என்று பல இடங்களில் அவர்கள் எழுதியுள்ளார்கள். நபி(ஸல்) அவர்கள் தங்கள் வாழ்நாளில் மக்களுக்காக துஆ செய்தார்கள்; மன்னிக்கவேண்டினார்கள். மறுமையில் இறைவனின் சம்மதத்துடன் எல்லா முஸ்லிம் பாவிகளுக்காகவும் பரிந்துரைசெய்வார்கள். இப்பரிந்துரையும் முஸ்லிம் பாரிவகளுக்காக மட்டுமேயிருக்கும். அன்றி, காபிர்களுக்குக் கிடையாது. நாயகத்தின் வாழ்க்கையில் இறை மறுப்பாளர்களுக்கும் நயவஞ்சகர்களுக்கும் பாவமன்னிப்புக் கோருவதிலிருந்து அவர்கள் தடுக்கப்பட்டார்கள். அவர்களின் பெரிய தந்தை அபூதாலிப், நாயகத்தின் ஆதரவாளராகவும் உபகாரியாகவுமிருந்தும், அவருக்கு விடுதலை கிடைக்காது. தன் அன்னைக்கு மன்னிப்புக்கோர அனுமதி கேட்டபோது, அவர்களுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. கப்ரை ஜியாரத் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. ஜியாரத்திற்காகச் சென்ற போது நாயகமும் அழுதார்கள்; உடன் இருந்தவர்களும் அழுதார்கள். இந்த விபரங்களனைத்தும் சஹீஹ் முஸ்லிம் என்னும் நூலில் காணப்படுகின்றன.

இமாம் இப்னு தைமிய்யா அவர்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் எல்லாச் சமுதாயத்தார்க்கும் ஷபாஅத்செய்வார்கள் என்பதை மறுக்கவில்லை. "பாவிகளாக உள்ள முஸ்லிம், முஃமின் ஒவ்வொருவருக்கும் நபிகள்நாயகம்(ஸல்) அவர்கள் பரிந்துரை செய்வோர்கள் என்ற பிரச்சனையில் நபிவழி பேணுபவர்களிடத்தில் எந்தக்கருத்து வேறுபாடும் இல்லை." என்று அவர்கள் எழுதியுள்ளார்கள்.

ஒருமுறை அபூஹுரைரா(ரலி) அவர்கள், "கியாமத் நாளன்று தங்களுடைய ஷபாஅத் எவருக்குக் கிடைக்கும்?" என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் கேட்டார்கள்.

"மனப்பூர்வமாக, ‘லாயிலாஹ இல்லல்லாஹு’என்று கூறி அல்லாஹ்வின் ஏகத்துவத்தை ஏற்றுக்கொண்டஒவ்வொரு மனிதனுக்கும் என்னுடைய ஷபாஅத் கிடைக்கும்" என்று நாயகம்(ஸல்) பதில் கூறினார்கள்.

"ஒவ்வொரு நபிக்கும் ஒப்புக் கொள்ளப்பட்ட துஆ(வரம்) கொடுக்கப்பட்டிருந்தது. ஒவ்வொருவரும் அவசரப்பட்டு அந்த துஆவைக் கேட்டுப் பெற்றுக்கொண்டார்கள். ஆனால், நான் என் துஆவைப் பாதுகாத்து வைத்துள்ளேன். மறுமை நாளில், இணை வைக்காமல் இறந்து போன என் உம்மத்திலுள்ளோர் அனைவருக்கும் நான் ஷபாஅத்செய்வேன்" என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

பிற்காலத்தில் மக்கள் மகான்களின் சமாதிகளைக் கட்டி வைத்து அவற்றை வணங்க ஆரம்பித்து விடுவார்கள் என்று நாயகம்(ஸல்) அவர்கள் அஞ்சினார்கள். எனவே தான் கப்றுகளைக் கட்ட வேண்டாம் என்று தடுத்தார்கள். அத்துடன், சமாதிகளைத் தரிசிக்கச் செல்வதையும் தடுத்தார்கள்.

"நான் உங்களைச் சமாதிகளைத் தரிசிப்பதிலிருந்து விலக்கியிருந்தேன். இனி நீங்கள் சமாதிகளைத் தரிசிக்கச் செல்லுங்கள்; ஏனெனில், அவை உங்களுக்கு மறுமையை நினைவூட்டுகின்றன" என நாயகம்(ஸல்) அவர்கள்கூறியுள்ளார்கள்.

அத்துடன், சமாதிகளைச் சந்திக்கச் செல்லும் முறையையும் காட்டியுள்ளார்கள். "சமாதியுள்ள இடங்களில் நீங்கள் பிரவேசித்தால் இந்த துஆவை ஓதுங்கள்" என்று கூறியுள்ளார்கள்.

"முஃமினான முஸ்லிமான சமாதியாளர்களே! உங்களுக்கு சாந்தி உண்டாவதாக! நீங்கள் எங்களுக்கு முன்சென்றுள்ளீர்கள். இறைவன் நாடினால் நாங்களும் உங்களுடன் வந்து சேருவோம். உங்களிலும் எங்களிலும் முன்னால் சென்றவர்களுக்கும், பின்னால் வரக்கூடியவர்களுக்கும் இறைவன் கருணை புரிவானாக. உங்களுக்கும் எங்களுக்கும் சுகத்தைத் தருமாறு இறைவனிடம் வேண்டுகிறோம். இறைவா! எங்களை அவர்களின்க கூலியிலிருந்து விலக்கிவிடாதே. அவர்களுக்குப் பிறகு எங்களைச் சோதிக்காதே!"

இந்தப் பிரார்த்தனை மிகத் தெளிவாகவும் தூய்மையாகவும் உள்ளது. கப்ரைத் தரிசிப்பவர்களின் மனதில் மரணத்தைப் பற்றிய எண்ணத்தையும், நற்கூலி, தண்டனை முதலியன பற்றிய உணர்ச்சியையும் ஏற்படுத்துகின்றது. இந்த துஆவில் இறந்தவர்களிடம் உதவி தேடுவது பற்றி எதுவும் கூறப்படவில்லை.

எனினும், சமாதிகளின் காரணமாகத் தன் சமுதாயத்தவர்கள் பலவிதமான சோதனைகளுக்காளாகி விடுவார்கள் என்னும் அச்சமும் நாயகத்திற்கு இருந்தது. எனவே தான், இறுதி மூச்சுவரை கப்று வணக்கத்தைப் பற்றி எச்சரித்துக் கொண்டிருந்தார்கள்.

"யூதர்களையும், கிருத்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக! அவர்கள் மீது அல்லாஹ்வின் கோபம் இறங்கட்டும். ஏனெனில், அவர்கள் தங்கள் நபிமார்களின் கப்றுகளை மஸ்ஜிதுகளாக(சஜ்தா செய்யும் தலங்களாக) ஆக்கிக்கொண்டார்கள்."

"நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள்; உங்கள் நபியின் கப்றை மஸ்ஜிதாக ஆக்கி விடாதீர்கள்."

"உங்களுக்கு முந்திய சமுதாயத்தினர் தங்கள் நபிமார்களின் கப்றுகளை ‘சஜ்தா’ செய்யும் இடங்களாக ஆக்கிக்கொண்டார்கள். நீங்கள் அவ்வாறு செய்து விடாதீர்கள். நான் உங்களை இதில் இருந்து தடுக்கிறேன்." என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அது மட்டுமின்றி "அல்லாஹ்வே! என் கப்றை வணங்கப்படும் சிலையாக ஆக்கிவிடாதே!" என்று இறைவனிடம் துஆ செய்தார்கள்.

நாயகம்(ஸல்) அவர்கள், மக்களின் மூடத்தனமான நம்பிக்கையின் காரணமாகத் தம் சமுதாயத்தின்ர் மனித வழிபாட்டிலும் கப்றுகளை வணங்குவதிலும் ஈடுபட்டு விடக்கூடாதே என்பதற்காகத் தான் இத்தகைய முன்னேற்பாடான உபாயங்களைக் கையாண்டார்கள்.

"மஸ்ஜிதுல் ஹராம் (கஃபதுல்லாஹ்), எனது இந்த மஸ்ஜிது (மஸ்ஜிதுந்நபவி), மஸ்ஜிதல் அக்ஸா (பைதுல்முகத்தஸ்) ஆகிய மூன்று பள்ளிகளைத் தவிர மற்றெந்தப் பள்ளிகளுக்கும் (தரிசிப்பதற்கென்று) பிரயாணம் மேற்கொள்ளப்படலாகாது" என நபிகள் நாயகம்(ஸல்) கூறியுள்ளார்கள்.

இம்மூன்று தலங்களும் கப்றுகள், உருவங்கள் சிலைகள் எதுவுமின்றி தூய்மைப்படுத்தப் பட்டிருந்தன. இங்கு வருபவர்கள் தங்கள் வரலாற்றை நினைத்து உள்ளங்களில் ஒரு புது உணர்ச்சியைப் பெற வாய்ப்பிருந்தது. அங்குள்ள சாதாரணக் கட்டிடங்களிலிருந்து வழிகேடு பரவும் அச்சம் எதுவுமில்லாதிருந்தது. சஹாபாப்பெருமக்கள், தாபிஈன்கள் ஆகியோர் காலத்தில் கப்றுகள் சாதாரணமானவையாய் இருந்தன. அவற்றின் மீது கட்டிடங்கள் எழுப்பப்படவில்லை. காலச்சூழலின் காரணமான மூட நம்பிக்கை தலை தூக்கலாயிற்று. முதன்முதலாக ஷியாக்கள், கூபா, கர்பலா, நஜஃப், காலிமின் ஆகிய இடங்களில் கப்ருகளையும் சமாதிகளையும் எழுப்பினார்கள். அவற்றை விதவிதமாக அலங்கரிக்கலாயினர்.

எகிப்தில் பாதிமிய்யிகளின் அரசு ஏற்பட்ட போது அவர்கள் இமாம் ஹுசைன்(ரலி) அவர்களின் தலையைக் கெய்ரோவுக்கு எடுத்து வந்து அங்கொரு இடத்தில் அடக்கம் செய்தார்கள். அந்த இடத்தில் இன்று இமாம்ஹுசைன்(ரலி) அவர்கள் பெயரால் மாபெரும் பள்ளிவாசல்(மஸ்ஜித்) ஒன்று இருக்கிறது. ஷியாக்களைப் போல சுன்னத் ஜமாஅத்தார்களும் மகான்களின் சமாதிகளைக் கட்ட ஆரம்பித்தார்கள். அவற்றின் மீது மண்டபங்களும் கோபுரங்களும் எழுப்பலாயினர். சிரியா, எகிப்து மற்ற இஸ்லாமிய நாடுகளைத்திலும் இத்தகைய கட்டிடங்கள் அளவுக்கதிகமாகத் தயாராகிவிட்டன.

நபிமார்களையும் நூஹ்(அலை), ஹூத்(அலை), யூனுஸ்(அலை), இப்ராஹீம்(அலை), தாவூத்(அலை), சுலைமான்(அலை), ஜகரிய்யா(அலை), யஹ்யா(அலை) மற்றும் பலருடைய கப்றுகள் தோன்றலாயின. ஆதாரப்பூர்வமாக அவை அன்னாரிகள் கப்றுகள் என நிரூபிக்க இயலாது. நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் கப்றைத் தவிர மற்றெந்த நபியுடைய கப்றும் இதுதான் என்று குறிப்பாகக் கூறப்படுமளவு எங்குமில்லை.

உமர்(ரலி) அவர்களின் கிலாபத் ஆட்சிக் காலத்தில் தானியால் நபி(அலை) அவர்களின் சமாதி காணப்பட்டது என்று அறிந்த போது, உமர்(ரலி) அவர்கள் பல கப்றுகளைத் தோண்டச் செய்து, ஒரு கப்றில் அந்த உடலைப்புதைக்க ஏற்பாடு செய்தார்கள். பிறகு தானியால்(அலை) உடைய கப்று எது என்று மக்களுக்குத் தெரியாதவாறு ஆகிவிட்டது.

நாயகத் திருமேனியிடம் பற்று வைப்பதும் அன்பு செலுத்துவம் மறுக்கத் தக்கதன்று. ஆனால் அன்பின் பேரால் நாயகம்(ஸல்) சொல்லாத மொழிகளையும் மக்கள் நாயகத்தைப் பற்றி உண்டு பண்ணிக் கொண்டார்கள்.

உதாரணமாக:-

‘எவன் ஹஜ் செய்துவிட்டு என்னை வந்து பார்க்கவில்லையே அவன் எனக்கு அநீதி இழைத்தான்.’ என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு வாக்கியத்தை உருவாக்கிவிட்டார்கள்.

இதேபோன்று மற்றொரு வாக்கையும் உருவாக்கிக் கொண்டார்கள். அதாவது,

"என் மரணத்திற்குப்பின் என்னைத் தரிசித்தவன் என்னை என் வாழ்நாளில் சந்தித்தவன் போலாவான்".

இந்த வாக்கை நாயக வாக்கென ஒப்புக் கொள்வதாயிருந்தால், நபித்தோழர்களும், அவர்களுக்குப் பிறகு வரக்கூடியவர்களும் ஒரே அந்தஸ்துக்கு வந்துவிடுவார்கள். நாயகத்திற்குப் பிறகு அவர்களுடைய கப்ரைத் தரிசிப்பவர்கள் அனைவரும் சஹாபியாகிவிடுவார்கள். இது எந்த நிலைமையிலும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

அவ்லியாக்கள் என்ற இறை நேசர்களின் எண்ணிக்கை மட்டிலடங்காததாகும். அவர்களுள் பிரபலமானவர்களின் கப்றுகள் காலப்போக்கில் பொதுமக்கள் தரிசிக்கும் தலங்களாக மாறிவிட்டன.
மஅரூஃப் கர்கீ, ஜுனைத் பக்தாதி, ராபிஆ அதவிய்யா, சய்யிதா நபீஸா போன்றவர்களின் கப்றுகளின் மீது உன்னதமான கட்டிடங்கள் எழுந்தன. அவர்களின் மகிமையைப் பற்றி விசித்திரமான கட்டுக்கதைகள் பிரபலமாயின. அவர்களைப் பற்றி ஒரு நபிமொழி இட்டுக்கட்டப்பட்டது.

"உங்களுக்குத் துன்பங்கள் நேர்ந்துவிடுமானால், நீங்கள் கப்றுவாசிகளிடம் உதவி தேடுங்கள்".

இமாம் இப்னு தைமிய்யாவின் காலத்தில் நான்கு கப்றுகள் பிரபலமாயிருந்தன. அவற்றிடம் நின்று பிரார்த்தனை செய்தால் அந்தப் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும் என்றும், அநத்ப் பிரார்த்தனை மறுக்கப்படுவதில்லை என்றும் விளம்பரமாகிவிட்டிருந்தது. அதிலும் விசித்திரமென்னவெனில் அவை நான்கும் ஹனபி, ஷாபிஈ, மாலிகீ, ஹன்பலீ ஆகிய மத்ஹபுகளுக்குச் சொந்தமாக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு மத்ஹப்காரரும் தன் மத்ஹபுக்குரிய வலியை விட்டுவிட்டு பிற மத்ஹபுக்குரிய வலியின் பால் தேவையுடையோராய் இருக்க வேண்டியதில்லை என்பதற்காகத் தனித்தனி கப்றுகள் அமைக்கப்பட்டன போலும்!

டமாஸ்கஸில் அபூஅம்று திமிஷ்கி உடைய கப்று பொதுமக்களால் தரிசிக்கப்படும் சமாதியாக அமைந்திருந்தது. இமாம் இப்னு தைமிய்யாவுடைய காலத்தில் அவர்களைப் பற்றி, அவர்கள் எல்லாத் துன்பங்களிலும் கஷ்டங்களிலும் மக்களுக்கு உதவி புரிகின்றார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருந்தது. தாத்தாரியர்களின் படையெடுப்பின் போது, "தாத்தாரியர்களுக்கு அஞ்சக்கூடியவர்களே! நீங்கள் அபூஅம்று அவர்களுடைய கப்றிடத்தில் அபயம் கோருங்கள்! அவர்கள் உங்களைத் துன்பத்திலிருந்து காப்பாற்றுவார்கள்!" என்ற கருத்துப்பட அமைந்த கவிதை ஒன்றை ஒரு கவிஞர் பாடியுள்ளார்.

அந்தச் சமாதிகிளில் ஆண்டுதோறும் விழாக்கள் (உரூஸ்) நடைபெற்று வந்தன. மக்கள் அங்குச் சென்று பலநாட்கள் தங்குவர். கப்றுகள் மீது பூக்களை விரிப்பது, காணிக்கைகள் செலுத்துவது ஆகிய செயல்களைப் புரிந்து வந்தனர். அங்கே தங்கள் தேவைகளை நிறைவு செய்யுமாறு வேண்டுதல்கள் புரிவர். இசைக் கச்சேரிகள் நடைபெறலாயின. பலவிதமான தீய செயல்களும் ஆரம்பமாயின. இவற்றையெல்லாம் இமாம் இப்னுதைமிய்யா(ரஹ்) அவர்கள் எவ்வாறு சகித்துக் கொண்டிருப்பார்கள்? இவற்றைத் தடுக்க முயற்சி செய்தார்கள். மார்க்கத் தீர்ப்புகள் வழங்கி, அவை இஸ்லாத்திற்கு அப்பாற்பட்ட செயல்கள் நிரூபித்தனர்கள்.

தக்லீதைப் பற்றி இமாம் இப்னு தைமிய்யாவின் கருத்து:-

ஹிஜ்ரி நான்காம் நூற்றாண்டு வரை ஒரு தனிப்பட்ட இமாமையோ அல்லது ஒரு தனிப்பட்ட மத்ஹபையோ(கண்மூடி பின்பற்றும்) தக்லீத் செய்யும் நடைமுறை இருந்ததில்லை என்பது வரலாற்று ஆராய்ச்சி மூலமாக தெரிய வருகிறது.

ஒரு குறிப்பிட்ட அறிஞரையோ அல்லது ஒரு குறிப்பிட்ட மத்ஹபையோ தக்லீத் செய்யாமல் முஸ்லிம்கள் செயல்பட்டு வந்தார்கள். இவ்வாறு செய்வது ஷரீஅத்தைப் பின்பற்றுவது என்றும் இரசூல்(ஸல்) அவர்களையே பின்பற்றுவதாகவும் மக்கள் கருதி வந்தார்கள். தேவை ஏற்படும் போது நம்பத்தகுந்த ஒரு ஆலிமிடம் பிரச்சனைகளைக் கேட்டு செயல்பட்டு வந்தனர்.

நான்காம் நூற்றாண்டிலும் ஒரு குறிப்பிட்ட மத்ஹபையே பின்பற்றும் போக்கும் அதனடிப்படையிலேயே மார்க்கத்தீர்ப்பு வழங்கும் நடைமுறையிருந்ததில்லை.


தக்லீதின் ஆரம்பமும் அதன் காரணங்களும்;

நான்காம் நூற்றாண்டிற்குப் பிறகு மார்க்க அறிஞர்களில் அபிப்பிராய பேதமேற்பட்டது. தர்க்கங்களினாலும் வாக்குவாதங்களாலும் அறிஞர்களின் மார்க்க ஒழுக்கங்களில் குறைகள் தோன்றலாயின. அறிவுக் குறைவினாலும், தைரியமின்மையாலும், முயற்சிக்குறைவினாலும் முன்னய அறிஞர்களுடையவும், ஆய்வுகள் பல செய்த இமாம்களால் கோர்வை செய்யப்பட்ட மத்ஹபுகளையும் பின்பற்றும் அவசியம் ஏற்பட்டது.

எனினும் நீண்ட காலம் வரை பிற்காலத்தில் தோன்றிய அளவு கண்மூடித்தனமாக ஒரு தளிப்பட்ட மனிதரைப் பின்பற்றும் போக்கு ஏற்படவில்லை.


தக்லீதின் தன்மை;

தக்லீத் செய்பவர்கள் கூட அவருடைய இமாம் குர்ஆனையும் ஹதீஸையும் பின்பற்றுகிறார் என்று நினைத்து தான்அவரைப் பின்பற்றி வந்தார்கள். அந்த இமாமைத் தனக்கும் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குமிடையில் வழிகாட்டும் ஒரு வழிகாட்டியாகவும் ஆசிரியரைப் போன்றுமே (இடைத்தரகரைப் போன்றில்லாமல்) நினைத்தார்கள். அவரை நேரடியாகச் சட்டங்களை இயற்றுபவராகக் கருதவில்லை. சுன்னத்தையே பின்பற்றக்கூடியவகையிலான இத்தகு தக்லீதை எவரும் ஆட்சேபிப்பாரில்லை. இத்தகைய தக்லீது எல்லாக்காலங்களிலும் இருந்து தான் வந்துள்ளது. ஏனெனில் ஒவ்வொரு மனிதனும் நேரடியாக குர்ஆன் ஹதீஸில் ஆராய்ச்சி செய்து பிரச்சனைகளுக்கு முடிவு தேடிக்கொள்ள வேண்டுமென்று கூறுவது அவன் சக்திக்கப்பாற்பட்டதைத் தாங்குமாறு கூறுவது போலாகும்.

"ஆனால் இறை தூதரின் பொன்மொழி கிடைத்திருந்தும்; அவன் அவர்களைப் பின்பற்றுவதை அல்லாஹ் நமக்குக் கடமையாக ஆக்கியிருந்தும் நாம் பின்பற்றும் இமாமுடைய கருத்துக்கு மற்றமாக நபிமொழி இருந்தும் அந்நபிமொழியை விட்டுவிட்டு சந்தேகத்திற்குட்பட்ட இமாமின் கூற்றைப் பின்பற்வோமாயின் நம்மைவிடப் பெரிய அநியாயக்காரர்கள் யாராக இருக்க முடியும். நாளை மறுமை நாளையில் நாம் அல்லாஹ்வுக்கு என்ன பதில் சொல்வோம்.". இவ்வாறு ஷாஹ்வலியுல்லாஹ் தஹ்லனி(ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(ஹுஜ்ஜதுல்லாஹ் - பாகம் 1, பக்கம் 125)

தக்லீது பற்றியும் இஜ்திஹாது (சுய ஆராய்ச்சி) பற்றியும் இமாம் இப்னு தைமிய்யாவின் அபிப்பிராயம்;

அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் வழிபடுவதும் எவைகளை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஹலாலாக்கி (ஆகுமானதாக்கி)யுள்ளார்களோ அவைகளை ஹலாலாக்குவதும், அவர்கள் ஹராமாக்கி (தடுத்து) உள்ளவைகளை ஹராமாக்கிக் கொள்வதும் அவர்கள் எவைகளைக் கடமையாக ஆக்கியுள்ளார்களோ அவைகளை கடமையானதாக (வாஜிபாக) ஆக்கிக் கொள்வதும் மனித, ஜின் அனைவர் மீதும் கடமையாகும்.

பல சட்டதிட்டங்கள் பல மனிதர்களாலும் அறிய முடியாதவையாயிருக்கின்றன. அவைகளை எவர்கள் கற்றுத்தருவார்களோ அவர்களிடம் அம்மனிதர்கள் தாங்கள் தெரியாததைத் தெரிந்து கொள்வதற்காகச் செல்வார்கள். ஏனென்றால் அவர்கள் இறை துதரின் போதனைகளை அதிகமாக அறிந்திருப்பார்கள்.

ஒரு குறிப்பிட்ட மத்ஹபையோ அல்லது மார்க்க வழிமுறையையோ பின்பற்றி வளர்வது ஒரு இயற்கை முறையாகும். எனினும் முஸ்லிம்கள் தங்களை உண்மையில் இறைவனுடையவும் இறை தூதருடையவும் வழிமுறையைப் பின்பற்றக்கூடியவர்களாகவே கருத வேண்டும். குர்ஆனிலிருந்தும் ஹதீஸிலிருந்தும் தெரிய வருவதை எந்தத் தடையுமில்லாமல் பின்பற்றுவதற்குத் தயாராக இருக்க வேண்டும்.

இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்) கீழ்வருமாறு எழுதியுள்ளார்கள்:

"சாதாரணமாக மனிதன் தன் பெற்றோர்களுடைய அல்லது முதலாளியுடைய அல்லது தன் ஊராருடைய மத்ஹபை (வழிமுறையை)ப் பின்பற்றி வளர்கிறான். உதாரணமாக குழந்தை மார்க்க விஷயத்தில் தன்பெற்றோர்களையோ அல்லது பராமரிப்பவர்களையோ பின்பற்றுகிறது. ஆனால் வயது வந்த விபரமறிந்ததும் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் வழிபடுவரையே தேர்ந்தெடுக்க வேண்டும்".

"அல்லாஹ் இறக்கியதைப் பின்பற்றுங்கள் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டால், எந்த வழியிலே எங்கள் பெற்றோர்களைக் கண்டோமோ அதையே பிள்பற்றுவோம்" (குர்ஆன் - 31:21) என்று சொல்பவர்களாக ஆகிவிடக்கூடாது. எவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய துதரையும் பின்பற்றாமல் தங்கள் மூதாதையர்களுடைய வழிமுறைகளைப் பின்பற்றுவார்களோ அவர்கள் இறைவனுடைய தண்டனைக்குத் தகுதியுடையவர்களாக ஆகிவிடுவார்கள். எனவே வாழ்க்கையின் எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் அதைப்பற்றிய மார்க்க முடிவு தெரிந்த பிறகு அதை ஏற்றுக் கொள்ளாமல் தங்கள் பழக்கவழக்கங்களையே எவர்கள் பின்பற்றுகிறார்களோ அவர்கள் தண்டனைக்கும் அவமதிப்பிற்கும் ஆளாவார்கள்.
(பதாவா-ஷெய்குல் இஸ்லாம் - பாகம் 2, பக்கம் 202)

கப்றுகளைத் தரிசித்தல் வசீலா தேடுதல் முதலிய வஷயங்களில் இப்னு தைமிய்யா(ரஹ்) அவர்கள் என்ன கருத்துக்களைக் கொண்டிருந்தார்கள் என்பது முன்னால் விளக்கப்பட்டது. மக்கள் அவை குறித்து வினாக்கள் கேட்கும் போது இமாமவர்கள் தங்கள் கருத்தை ஆணித்தரமாக தெரிவித்து வந்தார்கள். அது அக்கால ஆலிம்களுக்குப் பிடிக்கவில்லை. எனவே டமாஸ்கஸிலுள்ள ஆலிம்களுள் சிலர் இப்னு தைமிய்யா, நபி(ஸல்) அவர்களின் கப்றை ஸியாரத் செய்வதை ஹராம் எனக் கருதுவதாகவும் வதந்திகளைப் பரப்பலாயினர். ஆனால், உண்மையில் இமாமவர்கள் அவ்வாறு கூறவில்லை. மஸ்ஜிதுந் நபவியைத் தரிசிக்கவென எண்ணிப் பிரயாணம்செய்து நபி(ஸல்) அவர்கள் கப்றை ஸியாரத் செய்வதை இமாம் இப்னு தைமிய்யா தடுக்கவில்லை. நாயகம்(ஸல்) அவர்களுடைய கப்ரின் ஸியாரத்துக்கென்று மட்டும் செல்வது கூடாது என்று தான் கூறினார்கள். ஆனால், டமாஸ்கஸிலிருந்து ஆலிம்கள், இல்லாத பல குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, அப்போதைய அதிகாரியிடம் முறையிட்டனர். அன்றைய அதிகாரியாயிருந்த ஸைபுத்துன் அவற்றையெல்லாம் எகிப்து சுல்தான் நாசிருக்கு அனுப்பிவைத்தார். அது மாத்திரமின்றி, எகிப்திலிருந்த பதினெட்டு மார்க்க அறிஞர்கள் இப்னு தைமிய்யா‘காஃபிர்’ என்று தீர்ப்பு வழங்கினார்கள். காஜீ தகிய்யுத்துன் முஹம்மது பின் அபீபக்ர் அக்னாஸீ மாலிகீ என்பவர் இவர்களின் தலைவராயிருந்தார். ‘நபிமார்களுடையவும், குறிப்பாக நபிகள் நாயகம் முஹம்மது(ஸல்) அவர்களுடையவும் கப்றுடைய ஸியாரத்(தரிசித்தல்)திற்கென்று பிரயாணம் செய்வதைத் தடுப்பது உண்மையில் நாயகத்தை குறைத்துக் கூறுவதாகும். அது குஃப்றாகும். குஃப்றுக்குத் தண்டனை கொலை செய்வது தான்’ என்று அவர்கள் காரணம் கூறினார்கள்.

ஆனால் நாயகம்(ஸல்) அவர்களுடைய போதனையில் அடிப்படையிலேயே இப்னு தைமிய்யா(ரஹ்) தம் கருத்தை கூறினார்கள்.

சுல்தான் நாசிர் இமாமவர்களின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் நன்றாக அறிந்திருந்தார். எனவே ஆலிம்களுடைய பத்வாக்களின்படி, அவர் செயல்படத் தயாராக இல்லை. எனினும், அவர் நீதிபதிகளையும் அறிஞர்களையும் அதிருப்திப்படுத்தவும் விரும்பவில்லை. எனவே, இமாமவர்களை டமாஸ்கஸ் கோட்டையில் தடுப்புக் காவலில் வைக்குமாறு ஆணை பிறப்பித்தார். பிறகு இது பற்றி மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. "நபிமார்களின் கப்றைத் தரிசிக்கக் கூடாதென இப்னு தைமிய்யா கூறுவதின் காரணமாக அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது. அவர் இனி எந்த மார்க்கத் தீர்ப்பும் கொடுக்க கூடாது" என்றும் அறிவிக்கப்பட்டது.

இமாம் இப்னு தைமிய்யாவுடைய இடத்தில் இமாம் இப்னுல் கய்யீம்(ரஹ்) இருந்தார்கள். அவர்கள் இப்னுதைமிய்யாவின் கருத்துக்கேற்ப எதிரிகளின் கொள்கைகளுக்கு மறுப்புக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அதனால் மறுபடியும் குழப்பம் ஏற்படும் சூழ்நிலை உருவாயிற்று. எனவே, டமாஸ்கஸ் அதிகாரியின் அனுமதிபெற்று, பிரதம நீதிபதியாயிருந்த ஜமாலுத்தீன் பின் ஜும்லா ஷாபிஈ என்பார் இப்னுல் கய்யீம் அவர்களையும்அவர்களுடைய ஆதரவாளர்களையும் பிடித்துவரச் செய்து சிறையில் தள்ளிவிட்டார். பிறகு இப்னுல் கய்யீம்அவர்களைத் தவிர மற்றவர்களை விடுதலை செய்துவிட்டார். இப்னுல் கய்யீம் வெளியிலிருந்தால் தன் ஆசிரியர் இமாம் இப்னு தைமிய்யாவின் இடத்தை நிரப்புமளவு ஆற்றல் பெற்றவர். எனவே அவர்களையும் கோட்டையில் சிறையிலடைத்துவிட்டனர்.

இமாமவர்கள் சிறையிலும் எழுத்து வேலையைத் தொடர்ந்து செய்து வந்தார்கள். குர்ஆன் ஷரீபை மிக ஆழமாகத் துருவி ஆராயலானார்கள். அதன் கருத்துக்களையும் நுட்பங்களையும் பற்றி நிறைய எழுதியுள்ளார்கள்.

"இங்கே எனக்கு விளங்கிய நுட்பமான விளக்கங்களும் கருத்துக்களும் மற்ற சமயங்களில் விளங்கியதில்லை; நான் திருக்குர்ஆனை விட்டு மற்றக் கலைகளில் ஏன் இவ்வளவு அக்கறை எடுத்தேன் என்று கவலைப்படுகிறேன். நான் இந்தக் கோட்டையின் அளவு தங்கத்தைச் செலவு செய்தாலும், அல்லாஹ் எனக்குத் தந்த இந்தப்பேரருளுக்கு நன்றி செலுத்தியவனாக ஆக முடியாது. என் எதிரிகள் என்னைச் சிறையில் தள்ளி, எனக்கு அவர்கள் செய்த உபகாரத்திற்கு நான் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன். அவர்களுக்கு அதன் பிரதிபலனை அளிக்க இயலாதவனாயிருக்கிறேன்" என்று அவர்கள் கூறியுள்ளார்கள்.

சிறையிலிருந்து கொண்டே இமாமவர்கள் திருமறைத் தெளிவுரையுடன் தாம் தண்டனை பெறவும், தமக்கு எதிர்ப்பு உருவாகவும் காரணமாயிருந்த பிரச்சனைகள் பற்றியும் பல நூல்களை எழுதினார்கள்.

1. காஜி தகிய்யுத்தீன் அக்னாயீ மாலிக்கீ உடைய ஆட்சேபனைக்கு மறுப்புக் கடிதம்
2. சில ஷாஃபிஈ நீதிபதிகளுக்கு மறுப்புக் கடிதம்.
3 மாநபி வகுத்த மார்க்க அடிப்படைகள்.
4. உண்மைக்கும் பொய்க்குமிடையிலான வேற்றுமைகள்
5. மறைபொருளுக்கு மனமுரண்டான விளக்கங்கள்
ஆகிய நூல்கள் சிறையில் எழுதப்பட்டவையே.

கப்றுகளைத் தரிசித்தல் சம்பந்தமாகப் பல அறிஞர்கள் இமாமவர்களின் கருத்துக்களுக்கு மறுப்பு எழுதியுள்ளார்கள். அவர்களுள் மிகப் பிரபலமானவ்ர தகிய்யுத்தீன்-அஸ்ஸுப்கி ஷாபிஈ என்பார். இவர், ‘ஷன்னுல்காரா-அலாமன்-அன்கரஸ்ஸியாரா’ என்ற பெயரில் ஒரு நூல் எழுதினார்கள். பிறகு அதன் பெயரை - ‘ஷிபாஉஸ்-ஸிகாம்--பீ-ஸியாரதி கைரில் அனாம்’ என்று மாற்றிவிட்டார். இந்நூல் ‘ஹைதராபாத்-தாயிரதுல் மஆரிப்’ என்ற நூல் வெளியீட்டு ஸ்தாபனத்தின் சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. இந்நூல் இமாம் இப்னு தைமிய்யாவின் காலத்தில் எழுதப்பட்டதா அல்லது அவர்கள் மறைவுக்குப் பின் எழுதப்பட்தா என்பது தெரியவில்லை. எனினும், அவர்களின் மறைவிற்குப் பிறகு தான் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று யூகிக்க முடிகிறது. இமாமவர்களின் அன்புக்குரிய மாணவர் அபூஅப்துல்லாஹ் முஹம்மத் பின் அஹ்மத் பின் அப்துல் ஹாதி அவர்கள்,’ அஸ்ஸாரிமுல்முனக்கி பிர்ரத்தி அலஸ்ஸுப்கி’ என்ற பெயரில் இந்நூலுக்கு மறுப்பு எழுதியுள்ளார்கள். அதுவும் நூல் உருவில் வெளியாகியுள்ளது.

இமாமவர்கள் சிறையிலிடப்பட்ட செய்தி பக்தாதுக்கு எட்டியபோது, அங்குள்ள அறிஞர்களுள் பலர் இமாமவர்களின் தீர்ப்பை ஆதரித்தார்கள். கப்றுகளை ஸியாரத் செய்வது பற்றிய தங்கள் தீர்ப்புகளை எழுதிப் பல அறிஞர்களின் கையெழுத்தைப் பெற்று, சுல்தான் நாசிருக்கு எகிப்துக்கு அனுப்பி வைத்தனர்.

அதில் ஷெய்கு இப்னுல் கதபீ அஷ்ஷாபியீ, அவர்கள் எழுதியது குறிப்பிடத்தக்கதாகும்.

"தன்னிகரற்ற அறிஞர் மாமேதை ஷெய்கு தகிய்யுத்தீன் அபுல் அப்பாஸ் இப்னு தைமிய்யாவிடம் கேட்கப்பட்ட வினாவையும் அவர்கள் அதற்களித்த பதில்களை அறியும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது அவர்களின் விடை அறிஞர் பெருமக்களுடைய அபிப்பிராயங்களின் சாரமாகவும் காலத்திற்கேற்றவாறும் அமைந்துள்ளது. அதில் சரியான நபிமொழிகள் தான் கூறப்பட்டுள்ளன. அதில் தவறான செய்திகள் எதுவும் கூறப்படவில்லை. நபிகள் நாயகம்(ஸல்) அவர்களைக் குறை காணும் எந்தக் கருத்தும் அதில் காணப்படவில்லை. துவேஷ மனப்பான்மையைக் கடைப்பிடிப்பது அறிஞர்களுக்கு அழகல்ல. நாயகம்(ஸல்) அவர்களைக் குறை சொல்லும் போக்கினை உருவாக்குவதும் அவர்களுக்கு உகந்ததல்ல. நாயகம்(ஸல்) அவர்களின் கப்ரைத் தரிசிப்பதினால் அவர்களின் கண்ணியமும் மதிப்பும் உயருவதில்லை. அதை விட்டுவிடுவதினால் அவர்களின் மதிப்பும் மேன்மையும் குறைந்து போவதுமில்லை, நாயகம்(ஸல்) அவர்கள் இவற்றையெல்லாம் விட மிக உயர்ந்தவர்கள்.

ஷெய்கு தகிய்யுத்தீன் அவர்கள் எழுதியுள்ளது எத்தகைய தண்டனைக்கும் சினத்திற்கும் உரியதல்ல் எனவே அரசரின் போக்கு, பரந்த நோக்குடையதாய் இருக்க வேண்டும்; அரசர் ஷெய்கவர்களுடன் அன்பாகவும் கருணையுடனும் நடந்து கொள்ள வேண்டும்."

மற்றோர் அறிஞர் ஷெய்கு முஹம்மத் பின் அப்துர்ரஹ்மான் மாலிகி பக்தாதீ அவர்களும் இந்தத் தீர்ப்பில் கையெழுத்திட்டும் கீழ்வருமாறு எழுதியுள்ளார்கள்.

"இப்பிரச்சனையில் அறிஞர்களின் அபிப்பிராய பேதங்கள் எவையெல்லாம் கூறப்பட்டுள்ளனவோ அவை அனைத்தும் சரியானவையே. அறிஞர்கள் தங்கள் நூல்களில் அவற்றை எடுத்தெழுதியுள்ளார்கள். அவற்றை எவரும் ஆட்சேபிக்க முடியாது. அதில் நாயகம்(ஸல்) அவர்களைக் குறை கூறல் எதுவும் ஏற்படுவதில்லை. ஷெய்கு அபூ முஹம்மதுல் ஜுவைனீ தன் நூல்களில் கப்றுகளைச் சந்திப்பதற்கெனப் பிரயாணம் செய்வது ஹராம் என்று கூறியுள்ளார்கள். இமாம் காழி இயாழ் அவர்களுடைய கருத்தும் இழிவேயாகும். அவர்கள் முந்தைய அறிஞர்களில் மிகச் சிறந்தவர்களாவர்".

பிறகு பல அறிஞர்களின் அபிப்பிராயங்களை எடுத்தெழுதிவிட்டு மேலும் அவர்கள் எழுதியுள்ளதாவது:

"ஷெய்கு அபூ அம்ரு இப்னு அப்துல்பர்ரு தன் நூலான அத்தம்ஹீதில், நபிமார்களுடையவும் நல்லோர்களுடையவும் கப்றுகளை மஸ்ஜிதுகளாக ஆக்குவது ஹராம் எனக் கூறியுள்ளார்கள். எனவே இத்தகையப் பிரயாணங்களைத் தடுக்கப்பட்டதாகக் கூறுபவரைக் காபிர் எனக் கூறுவது சரியன்று. அவ்வாறு அவர்களை காபிர் எனக் கூறுபவர் தான் காபிர் ஆவார்கள்; அவர்கள் காபிர் ஆகாவிட்டாலும் பாவிகள் ஆவர்."

அபூ அப்துல்லாஹ் முஹம்மத் பின் அல்-அல்மாஸர் அவர்கள் எழுதியுள்ள ‘அல் முஃலம்’ என்ற நூலில், ஒரு முஸ்லிமைக் காபிர் ஆக்கக் கூடியவன் அல்லது அவ்வாறு சொல்வதைக் கூடும் எனக் கருதுபவன் காபிர் ஆவான். குறைந்தபட்சம் அவன் பாவியாவான். இத்தகைய மனிதர்களைத் தண்டிப்பது அதிகாரிகள் மீது கடமையாகும். அவ்வாறு சக்தியிருந்தும் அலட்சியம் செய்யும் அதிகாரிகள் பாவிகளாவார்கள்" என்று எழுதியுள்ளார்.

மற்றும் பல அறிஞர்களும் இத்தகைய விடைகளை எழுதினார்கள். ஷாம் தேசத்தின் பல பகுதிகளிலிருந்தும் இமாம் இப்னு தைமிய்யாவுடைய கருத்துக்களை ஆதரித்துத் தீர்ப்புகள் தொகுக்கப்பட்டு அனுப்பப்பட்டன.

அபூ அம்றுப்னு அபில் வலீத் அல்மாலிகீ என்பார் எழுதியிருப்பதாவது:-

"மூன்று மஸ்ஜிதுகளைத் தவிர மற்றவற்றின் பக்கம் பிரயாணம் செய்வது ஷரீஅத்தில் அனுமதிக்கப்படவில்லை. மஸ்ஜிதுந் நபவியில் தொழ வேண்டும் என்ற நோக்கத்துடனும், நாயகத்தின் மீதும் தோழர்கள் மீதும் ஸலாம் கூறவேண்டும் என்ற நோக்கத்துடனும் மதீனாவுக்குப் பிரயாணம் செய்தால் அது ஷரீஅத்தில் அனுமதிக்கப்பட்டதாகும். ஆனால், நாயகம்(ஸல்) அவர்களுடைய கப்றை மட்டும் சந்திக்கும் நோக்கத்துடன் ஒருவன் பிரயாணம் மேற்கொண்டு மஸ்ஜிதுந் நபவியில் தொழ வேண்டும் என்ற நோக்கம் இல்லாவிட்டால், அதைப்பற்றி அறிஞர்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ளார்கள். சிலர் அதைத் தடுத்துள்ளனர்; வேறு சிலர் அதுகூடும் என்று கூறுகின்றனர். ஆனால், இரண்டு கூற்றின்படியும் ஸியாரத்திற்கு மட்டும் செல்வது நன்மைக்குரிய செயலன்று. ஒருவர் அதை நன்மையான செயல் என்று கூறுவாறாயின், சமுதாய அறிஞர்களின் ஏகோபித்த(இஜ்மா) முடிவின்படி, ஹராமாகும். ஒருவர் இவ்விரண்டு பேருடைய அபிப்பிராயங்களையும் எடுத்துக்கூறி, அதில் ஒன்றை ஆதரித்துக் கூறுவாறாயின், அது நாயகம்(ஸல்) அவர்களைக் குறை கூறுவதாக ஆகாது."

"நாயகம்(ஸல்) அவர்களின் கப்ரைச் சந்திக்கச் செல்வதாக ஒருவர் நேர்ந்து கொண்டார் என்றால், அதை நிறைவேற்றுதல் கடமையா? இல்லையா?" என்று இமாம் மாலிக்(ரஹ்) அவர்களிடம் ஒருவர் கேட்டார்

"மஸ்ஜிதுந் நபவியில் தொழ வேண்டும் என்ற எண்ணமிருந்தால், அந்த நேர்ச்சையை நிறைவு செய்யவும்; ஸியாரத் மட்டும்நோக்கம் ஆக இருக்குமானால், அதை நிறைவேற்ற வேண்டியதில்லை. ஏனெனில், நபிமொழிகளில் ‘ஸியாரத்’திற்கென்று பிரயாண ஏற்பாடுகள் செய்வது தடுக்கப்பட்டுள்ளது" என்று இமாம் மாலிக்(ரஹ்) விடை கூறியுள்ளார்கள்.

பக்தாதிலுள்ள அறிஞர்கள், ஒரு பத்வாவுடன் எகிப்து சுல்தானுக்கு ஒரு விண்ணப்பமும் எழுதி அனுப்பினார்கள். அதில் இமாம் அவர்களின் சிறப்புகளை எடுத்துரைத்து, அவர்களை விடுதலை செய்யுமாறு கோரி இருந்தார்கள்.

"இமாம் இபனு தைமிய்யா இக்காலத்தில் கிடைத்தற்கரிய ஒரு முத்து. அவர்களுக்கு நிகர் இக்காலத்தில் எவருமிலர் என ஒருவர் சத்தியம் செய்வாரானால், அது பொய்யாகாது. நாங்கள் அளவுக்கதிகமாக இமாமவர்களைப் புகழவில்லை. அவர்களின் உண்மையான சிறப்புகளை முழுமையாக இயம்புதல் இயலாதகாரியமாகும்.

"உண்மையில் இமாம் இப்னு தைமிய்யா கிடைத்தற்கரிய ஒரு முத்து; அதை ஒவ்வொருவரும் தன்னிடம் வைத்துக்கொள்ள விரும்புவார். அது வாங்குவதற்குரியதேயன்றி, விற்பதற்குரியதன்று. ஏனெனில், இத்த்கைய முத்து அரசர்களின் கருவூலங்களிலும் கிடைக்காது. ஆர்வமும் ஆசையுமுள்ளவர்கள் இத்தகைய முத்தை வாங்க இயலாதென நம்பிக்கை இழந்துவிட்டனர்.

"இப்னு தைமிய்யா(ரஹ்) அவர்கள் சிறை வைக்கப்பட்டதை அறிந்து நாங்கள் பொறுமை இழந்துவிட்டோம். தண்டிக்கக்கூடிய அளவுக்கு இததகைய மேதை எதையும் சொல்லி இருக்க வாய்ப்பில்லை.

"இவ்வுலகில் ஒரு குத்பு இருக்க முடியுமானால், அது அஹ்மது இப்னு தைமிய்யாவாகத் தான் இருக்க முடியும். இவ்வளவு பெரிய மாமேதையை இறைவன் நமக்களிததமைக்கு நாம் அவனுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம்.

"இமாமவர்கள் மாபெரும் வலிமார்களுள் ஒருவர் என்பதையும் சிறந்த சீர்திருத்தவாதிகளுள் ஒருவர் என்பதையும் சுல்தான் அறியவில்லை போலும்.

"ஷெய்குல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யாவின் விடுதலையை நாடியே நாங்கள் இதை எழுதியுளளோம். இதை எழுத எங்களைத் தூண்டியது, ‘மார்க்கம் என்பது நல்லதை நாடுவதே’ என்ற நபிமொழியாகும்."

இராக் ஆலிம்களின் சார்பாக மற்றோர் விண்ணப்பமும் சுல்தான் நாசிருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் சுருக்கம் வருமாறு :-

"இராக் மக்கள் இமாம் இப்னு தைமிய்யாவுக்குத் தொல்லைகள் கொடுக்கப்படுவதை அறிந்து சஞ்சலம் அடைந்துள்ளனர். அவர்கள் சிறையிலடைக்கப்பட்டது பொதுமக்களுக்கு -குறிப்பாக மார்க்க பக்தியுள்ளவர்களுக்கு- பெரும்மனவேதனையைக் கொடுக்கக்கூடியதாக உள்ளது. இதனால் மார்க்க விரோதிகள்தலை நிமிர்ந்துவிட்டனர். அனாச்சாரக்காரர்கள் மிகவும் மகிழ்ச்சியுற்றுள்ளனர். அனாச்சாரக்காரர்கள் சமுதாயத்தின் அறிஞர்களையும் மார்க்க மேதைகளையும் பரிகசிப்பதைப் பார்த்த போது, இங்குள்ள மக்கள் இந்த இழிவான செய்தியை அரசருக்குத் தெரிவிக்க வேண்டுமெனக் கருதினர். ஷெய்குல் இஸ்லாம் இமாம்இப்னு தைமிய்யாவின் கொள்கைகளும் கருத்துக்களும் நேரானவை, சரியானவை எனக கருதக்கூடிய அறிஞர்களின் பதில்களையும் அனுப்பியுள்ளோம். மார்க்க உணர்வின் அடிப்படையிலும் முஸ்லிம்களின் நன்மையைக் கருததிற் கொண்டுமே சுல்தானுக்கு இவ்விண்ணப்பத்தை வரைந்துளளோம்."

அல்கவாகிபுல் துர்ரிய்யா என்ற நூலாசிரியர் ஷெய்கு மரஈ அவர்கள் கீழ்வருமாறு எழுதியுள்ளார்கள்:-
"இந்த பத்வாக்களும் விண்ணப்பங்களும் எகிப்து நாட்டு சுல்தான் வரை போய்ச சேர்ந்ததாகத் தெரியவில்லை; அவ்வாறு சேர்ந்திருந்தால் நல்ல விளைவு ஏதாவது ஏற்பட்டிருக்கும். அதைச் சேர்க்க வேண்டியவர்கள் வேண்டுமென்றே சுல்தான் வரை சேரவிடாமல் செய்திருக்கலாம் அல்லது அது போய்ச் சேருவதற்கு முன்பே இமாமவர்கள் இறந்திருக்கக் கூடும். ஆனால் இந்தக் கடிதங்கள் அனைத்தும் டமாஸ்கஸ் போய்ச்சேர்ந்துவிட்டன என்பது மட்டும் உறுதி".

பிரதம நீதிபதியாக இருந்தஷெய்கு தகிய்யுத்துன் அக்னாயி மாலிகீ, கப்றுகளைச் சந்திக்கச் செல்லும் விஷயத்தில் இமாம் இப்னு தைமிய்யாவுடைய கருத்துக்களுக்கு மறுப்புத் தெரிவித்து, அவர்கள் மீது அடக்குமுறையைக் கையாள விருமபினார். அப்பொழுது இமாமவர்கள், சிறையிலிருந்தவாறே அவருடைய எழுத்துகளுக்கு மிகக் கடுமையான பதில் எழுதினார்கள். அவரை ‘அறிவு ஞானமற்றவர்’ என்று வர்ணித்தார்கள். அதனால், நீதிபதி அக்னாய்க்கு மிகுந்த கோபம் ஏற்பட்டது. எனவே, அவர் எகிப்து சுல்தான் நாசிரிடம் சொல்லி, இமாமவர்களிடமுள்ள காகிதங்களையும் பேனா, மை அனைத்தையும் பறிமுதல் செய்ய ஆணை பிறப்பிக்கச் செய்தார். அவ்வாறே செய்யப்பட்டது. அப்பொழுது இமாமவர்களிடம் அறுபது நூல்களும், பதினான்கு கட்டுக்காகிதங்களும் இருந்தன. அவை அனைத்தும் அங்கிருந்து அகற்றப்பட்டன.

ஓர் அறிஞருக்கு அவர் செய்யும் அறிவுப் பணிகளுக்கு ஏற்படுத்தும் கட்டுப்பாடுகளைவிட அதிகமான துன்பம் வேறென்ன இருக்க முடியும்? அவர்கள் சிறைச்சாலையின் சுவர்களில் கரியைக் கொண்டு எழுதலானார்கள். அவற்றில் தம் நண்பர்களுக்கு இரு கடிதங்களும் எழுதியுள்ளார்கள்.

காகிதங்களும் பேனாவும் பறிக்கப்பட்ட பிறகு, இமாமவர்கள் சுமார் நான்கு மாதங்கள் வரை உயிர்வாழ்ந்தார்கள். இக்காலத்தில் திருக்குர்ஆனை ஒதுவதிலும் வணக்கங்கள் செய்வதிலுமே தம் நேரத்தைக் கழித்து வந்தார்கள். தினமும் மூன்று பகுதிகள் மிகவும் சிநத்னையோடு ஓதிக் கொண்டிருப்பார்கள். இவ்வாறு ஒரு மாதத்தில் மூன்று முறை குர்ஆனை ஓதி முடிப்பார்கள். இதிலும் சுன்னத்தான முறையைக் கடைப்பிடித்து வந்தார்கள். பெரும்பாலும் ஸஜ்தாவில்’அல்லாஹும்ம அஇன்னி அலா திக்ரிக்க வுக்ரிக்க வஹுஸ்னிஇபாதத்திக்க’ என்ற துஆவை ஓதுவார்கள் என்று ஹாபிஸ் இப்னுல் கய்யிம்(ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.


மறுமைப்பயணம்;

ஹிஜ்ரி 726 துலகஃதா மாதத்தின் ஆரம்பத்தில் இமாம் இப்னு தைமிய்யா அவர்கள் நோய்வாய்ப்பட்டார்கள. சுமார் இருபது நாட்கள் நோயாளியாக இருந்தார்கள். மிகக் குறைவான மக்களுக்குத் தான் இது தெரியவநதது. அவர்கள் அதிகமாக நோயுற்றதும் ஷாமின் அமைச்சராக இருந்த ஷம்சுத்தீனுக்குச் செய்தி தெரிவிக்கப்பட்டது. அவர் உடனே வந்து இமாமவர்களை மிக மரியாதையோடு விசாரித்தார். அவர்களிடம் மன்னிப்புக கோரினார்:

"உங்களையும், என் மீது விரோதம் காட்டிய அனைவரையும் மனப்பூர்வமாக மன்னிக்கிறேன். நான் சத்தியத்தையே கடைப்பிடிக்கிறேன் என்பதை இவர்கள் அறியமாட்டார்கள. நான் சுல்தான் நாசிரையும் மன்னிக்கிறேன். ஏனெனில், மற்றவர்களின் தூண்டுதலால் தான் அவர் என்னைச் சிறையிலடைத்தார். அவருடைய சொந்த நோக்கம் எதுவுமில்லை. அவர் தன்னறிவிற்கேற்ப எதை உண்மை எனக் கண்டாரோ, அதன்படி செயல்பட்டுள்ளார். ஆனால் அவருடைய இச்செயல் உண்மைக்குப் புறம்பானது என்பதை இறைவன் அறிவான். அல்லாஹ்வுடையவும் ரசூல்(ஸல்) அவர்களுடையவும் விரோதிகளைத் தவிர, எனக்குத் தீங்கு இழைத்த அனைவரையும் நான் மன்னித்துவிட்டேன்" என்று இமாமவர்கள் அவரிடம் இன்னுரை பகர்ந்தார்கள்.

இமாமவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறையிலிருந்தார்கள். இக்காலக் கட்டத்தில் அவர்கள் எண்பதுமுறை திருக்குர்ஆனை ஓதி முடித்தார்கள். எண்பத்தொன்றாவது முறை ஓதிக் கொண்டிருந்தபோது மரணத்தின்பிடியில் சிக்கிவிட்டார்கள். அப்பொழுது அவர்கள் - சூரத்துல் கமர் - வரை ஓதி முடித்திருந்தார்கள். அதன் இறுதிவசனம்,

"நிச்சயமாக இறைபக்தர்கள் பூஞ்சோலைகளிலும் ஆறுகளிலும் இருப்பார்கள். (அவை) சக்திவாய்ந்த அரசனிடததிலுள்ள சத்தியத்தின் இருப்பிடத்திலிருக்கும்" என்பதாகும். (அத். 54, வசனம் 54, 55)

நோய் அதிகமாகிவிட்ட காரணத்தால் அதற்குப் பிறகு ஓதக்கூடிய வாயப்புக் கிடைக்கவில்லை. இறுதியாக ஹிஜ்ரி 728 துல்கஃதா 28 திங்கட்கிழமை இரவு அவர்களின் ஆன்மா உடலைவிட்டுப் பிரிந்தது. இவ்வாறு கல்வியும் செயலும் பக்தியும் தூய்மையும் நிறைந்த உண்மையின் உருவம் இவ்வுலகிலிருந்து மறைந்தது. ‘இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்’.

அவர்களுடைய மரணம், அவர்களுடைய நிரந்தர உண்மையான வாழ்ககையின் ஆரம்பமாயிருந்தது. ஆனால், விளைவுகளைப் பற்றி சிந்திக்க முடியாத மக்கள் தங்கள் வாழ்வின் சத்திய ஊற்றை நிரந்தரமாக இழந்துவிட்டனர்.

உணர்வற்ற சமுதாயத்தினர், உயர்ந்த மனிதர்கள் உயிருடனிருக்கும் போது தகுந்த முறையில் அவர்களின் மதிப்பையும் அந்தஸ்தையும் அறிந்து கொள்வதில்லை. அவர்களின் மறைவிற்குப் பின் தான் இவர்கள் விழித்தெழுவார்கள். பிறகு மறைந்தவர்களுடன், அவர்களுக்கு வணக்கம் செலுத்தக்கூடிய அளவு, அன்புசெலுத்த ஆரம்பித்துவிடுவார்கள்.

இமாம் இப்னு தைமிய்யாவுக்கு இதே நிலை தான் ஏற்பட்டது. இமாமவர்களுடைய உலக வாழ்க்கையில் அதிகமானோர் அவர்களை மதிக்கத்தான் செய்தாரக்ள். ஆனால், அவர்கள் இறந்துவிட்ட பிறகு அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட மதிப்பும் மரியாதையும் அவர்கள் உயிருடனிருக்கும் போது அவர்களுக்குக் கிடைக்கவில்லை. சுப்ஹுத் தொழுகைக்காக மஸ்ஜிதுகளின் பாங்கு மேடைகளிலிருந்து அறிவிப்பவர்கள குரல் எழுப்பியதும், காவல் நிலைய அதிகாரிகள் கோபுரங்களின் மீது நின்று கொண்டு, இவர்களின மரணச் செய்தியை அறிவித்தனர். அந்நகரம் முழுவதும் சோகம் தாண்டவமாடியது. அக்கம் பக்கங்களிலெல்லாம் செய்தி பரவியது. டமாஸ்கஸ்நகரத்தில் காலையிலேயே கடைகள் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் அன்று ஒருவரும் தன் கடையைத் திறக்கவில்லை. நண்பர்கள், உறவினர்கள், நகரப்பிரமுகர்கள், அதிகாரிகள், தலைவர்கள், நீதிபதிகள், ஆலிம்கள், மார்க்கச் சட்ட மேதைகள், படைவீரர்கள், அரசாங்க அலுவலர்கள் அனைவரும இமாமவர்களின் மரணத்தை அறிந்து கவலையுற்றனர். இமாமவர்கள் தாத்தாரியரின் தாக்குதலிலிருந்து மக்களைக் காப்பாற்றியவர்கள் என்ற காரணத்தால் பொதுமக்களின் உள்ளங்களில் அவர்களின் மதிப்பு உறைந்து போயிருந்தது.

அவர்களின மறைவுச் செய்தியைக் கேட்டு மக்கள் கோட்டையை நோக்கிச் செல்லலாயினர். பலர் டமாஸ்கஸ் ஜாமிஆ மஸ்ஜிதிலேயே குழுமிவிட்டனர்.

இமாமவர்களின் நண்பர் ஷெய்கு ஜமாலுத்தீன் யூசுபு இப்னு அப்துரரஹ்மான் அவர்களும், மாணவர்களுள் ஒருவரான அல்லாமா ஹாபிஸ் அபுல்பிதா இமாதுத்தீன் இஸ்மாயீல் இப்னு உமருப்னு கதீர் அவர்களும் அவர்களைக் குளிப்பாட்டிக் கபன் அணிவித்தார்கள்.

ஜனாஸா தயாரானதும், கோட்டையிலுள்ள கைதிகளும் ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்வதற்காக கோட்டைக்கு வெளியே ஜனாஸா தொழுகை நிறைவேற்றப்படடது. பிறகு மையித்தை தூக்கிச் சென்றபோது மக்கள் திரளின் நெரிசல் காரணமாக, அதைக் கொண்டு செல்வது கடினமாகிவிட்டது. எனவே, போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டு, ஜனாஸாவுக்கு வழிவிட ஏற்பாடு செயயப்ட்டது. பெண்களும் சிறுவர்களும் வீடுகளின் மேல் தளங்களில் நின்று இந்தக் காட்சியைக கண்டு கண்ணீர் வடித்தனர். ஜாமிஆ மஸ்ஜிதை நோக்கி ஜனாஸா நகர ஆரம்பித்தது.

வழியில் மக்கள் நெருக்கம் அதிகமாக இருந்ததால் ஒருவர் குனிவது கூட இயலாததாக இருந்தது.
லுஹர் தொழுகை நேரத்தில் மைய்யித் டமாஸ்கஸ் ஜாமிஆ உமவியை வந்தடைந்தது. அங்கே முன்பிருந்தே மக்கள் கூட்டம் நிறைந்து வழிந்தது. லுஹர் தொழுகைக்குப் பின் ஜனாஸாத் தொழுகை தொழுவிக்கப்பட்டது.

ஜாமிஆ மஸ்ஜிதின் முன்னால் இருந்த மாபெருந்திடலில் தொழுகை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததும, அநேகம் பேர் தொழுகையில் கலந்து கொள்ள இயலாது போயிற்று. எனவே, நகருக்கு வெளியே ஜனாஸாகொண்டு செல்லப்பட்ட போது அங்குள்ள ஒரு திடலில் மறுபடியும் ஜனாஸா தொழுகை நிறைவேற்றப்பட்டது. அந்தத் திடலிலும் கண் பார்வை எட்டுமளவுக்கு மக்கள் நின்று கொணடிருந்தனர்.

ஜனாஸாவில் கலந்து கொண்டவர்கள் ஒர் இலட்சத்திற்கும் அதிகமாக இருந்திருப்பார்கள் என்று ஹாபிஸ் இப்னு கதீர்(ரஹ்) குறிப்பிட்டுள்ளார்கள். பெண்கள் மட்டும் பதினைந்தாயிரம் பேர் இருந்தார்கள் என்று கூறப்படுகிறது. இமாம் அஹ்மத் பின் ஹம்பல்(ரஹ்) அவர்களுக்குப் பிறகு எவருடைய ஜனாஸாவிலும் இவ்வளவு பெருங்கூட்டம் இருந்ததில்லை என்று கூறப்படுகிறது.

இமாமவர்களின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் டமாஸ்கஸின் கடைகளெல்லாம் அடைக்கப்பட்டன ஜனாஸாவில் கலந்து கொள்வதற்காக காலை முதல் மாலை வரை எதுவும் உண்ண இயலவில்லை; சிலர் நோன்பு வைத்துக் கொண்டார்கள. அரசாங்க அலுவலகங்கள் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டன. இவ்வாறு இமாமவர்களை அவர்களுடைய வாழ்நாளில் மதிக்காதவரக்ள் மரணத்திற்குப் பிறகு அவர்களுக்குத் தங்கள் மரியாதையைத்தெரிவித்தனர்.

இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்) அவர்களின் வாழ்க்கை, நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் முன் மாதிரியின் ஒருமாபெரும் பிரகாசமான எடுத்துக்காட்டாக அமைந்து இருந்தது. அவர்கள் தாம் செய்த ஒவ்வொரு செயலிலும் குர்ஆனையும்ச சுன்னத்தையும் கவனத்தில் வைப்பார்கள். கடமையான வணக்கங்களையும் சுன்னத்தான செயல்களையும் தொடர்ச்சியாகப் பின்பற்றி வந்தார்கள்.

பொதுமக்களைப் போன்று அவர்கள் வாழ்ககை நடத்தினார்கள். நடை, உடை, பாவனை, உருவ அமைப்பு ஆகியவற்றில் பொதுமக்களிலிருந்தும் வேறுபட்டிருப்பதில்லை. அவர்களின் பரந்த அறிவுதான் அவர்களுக்குத் தனிச் சிறப்பைக் கொடுப்பதாக இருந்தது. எதிலும் நடுநிலைப் போக்கைக் கடைப்பிடித்து வந்தார்கள். சூபிகள், பகீர்கள், ஆடம்பரத்தை விரும்பும் ஆலிம்கள் கடைப்பிடிப்பது போன்ற ஆடம்பரத தோற்றத்தை அவர்கள் கடைப்பிடிப்பதில்லை.

நடுத்தர உயரமுடையவர்கள் வெண்மை நிறத்தையுடையவர்கள், அவர்களின் மார்பு அகலமானது. குரல் உயர்ந்திருக்கும். தலையிலும் தாடியிலுமுள்ள முடி கறுத்துச் சிறிது வெள்ளை நரையோடிருந்தது. தலைமுடி இரு காதுகளின் சோனை வரைத் தொங்கிக் கொண்டிருக்கும். ஓரளவு வேகமும் ஆவேசமும் உள்ளவர்கள், அவ்வாறிருந்தும் பொறுமையும் சகிப்புத் தன்மையும் அவர்களிடம் குடி கொண்டிருந்தன.

அறிவுப்பசி அவர்கள் உலக இன்பங்களை விட்டுத் தேவையற்றவராய் ஆக்கிவிட்டது. உணவு உட்கொள்வதிலு ம்அதிக சிரத்தை எடுத்துக் கொள்வதில்லை. உணவு அவர்கள் முன்னால் வைக்கப்பட்டிருக்கும். அவர்கள் எழுதுவதிலும் படிப்பதிலும் ஈடுபாடு கொண்டிருப்பதன் காரணமான நினைவூட்டப்படாத வரை உணவின் பக்கம் கவனம் திரும்பவதில்லை. சாதாரண எளிய உணவை விட அதிகமாக அவர்கள் ஒரு போதும் உண்பதில்லை.

இமாமவர்கள் தினமும காலைத் தொழுகைக்குப் பிறகு சூரிய உதயம் வரை தியானம் செய்வதிலும் பாவமன்னிப்புக் கோருவதிலும் பொழுதைப் போக்குவார்கள். இதைப்பற்றி அவர்களிடம் கேட்கப்பட்டால், "அது என் காலை உணவு, நான் இந்த உணவை அருந்தாவிட்டால் என் சக்தி குறைந்துவிடும்" என்று கூறுவார்கள். பிறகு திருக்குர்ஆனை ஆராய்வார்கள். பிறகு மற்ற கிரந்தங்களைப் பார்ப்பார்கள் அல்லது ஃபத்வாக்கள் ஏதாவது இருந்தால் அதற்கு பதில் எழுதுவார்கள். பிறகு குறித்த நேரத்தில் தாருல் ஹதீஸ் அஸ்ஸுக்ரியாவிலும், தாருல்ஹதீஸ் - அல் ஹன்பலிய்யாவிலும் மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பார்கள்.

அஸர் தொழுகைக்குப் பிறகு ஒரு பொது போதனைக் கூட்டம் நடைபெறும். அதில் பலதரப்பட்ட மக்கள் கலந்துகொள்வார்கள். ஒரு குறிப்பிட்ட பொருள் குறித்தல்லாமல் பலவிதமான கருத்துக்களைப் பற்றிக் கலந்துரையாடல் நடைபெறும். மக்ரிப் தொழுகைக்குப் பிறகும் மாணவர்களுக்குப் பாடம் நடத்துவார்கள்.

பெரும்பாலும் காலைத் தொழுகைக்குப் பின்னர் திருக்குர்ஆன் விரிவுரை நடத்துவார்கள். அதில் மற்ற கலைகள் பற்றியும் வாக்குவாதங்கள் நடைபெறும். பலவிதமாக கருத்துக்கள் பரிமாறப்படும். தத்தாரியர்களுடன் போர் நடந்த காலங்களில் பலமுறை ஜிஹாதைப் பற்றி உரைகள் நிகழ்த்தினார்கள். சில சமயங்களில் நண்பர்களைச் சந்திக்கவும் செல்வார்கள். மற்றவர்களும் அவர்களைச் சந்திக்க வருவார்கள். நோயாளிகளை விசாரிக்கச் செல்வார்கள். ஜனாஸாக்களில் கலந்து கொள்வார்கள். செல்வந்தர்களையும் பிரமுகர்களையும் சந்தித்து, தேவையுடையோர் வறியோர் ஆகியவர்களின் தேவைகளை நிறைவுசெய்து கொடுப்பார்கள்.

இமாமவர்கள் இளமை முதலே நூல்களைப் படிப்பதில் அதிக ஆர்வமுடையவர்களாயிருந்தார்கள். பாடப்புத்தகங்களை மட்டுமே படிப்பதோடு அவர்கள் விட்டுவிடுவதில்லை. பல கலைகளிலுள்ள நூல்களையும் படிப்பார்கள். மிகக் கடினமாக நூல்களாய் இருந்தபோதிலும் மிக எளிதாக விளங்கிக் கொள்வார்கள். சீபவைஹ் என்ற இலக்கண ஆசிரியரின் நூலைத் தாமாகவே விளங்கிக் கொண்டார்கள்.

இமாவர்களின் மிக உன்னதமான சிறப்பு அவர்களுக்கிருந்த கடல் போன்ற கல்வியறிவாகும். அவர்கள் மிகப் பரந்த அளவில் நூல்களைத் துருவி ஆராய்ந்திருந்தார்கள். முந்திய பிந்திய அறிஞர்களின் நூல்களில் எது கிடைத்தாலும் அதைப் படிக்காமல் விடுவதில்லை. இரவு பகலாகப் படிப்பதையும் எழுதுவதையும் தவிர மற்றெந்த வேலையும் இருக்கவில்லை. அவர்கள் காலத்தில் வழக்கில் இருந்த சகல கலைகளிலும் முழுமையான நிபுணத்துவம் பெற்றிருந்தார்கள்.

அரபி இலக்கியம், குர்ஆன் விளக்கம், நாயக மொழிகள், மார்க்கச் சட்டக்கலை, அதன் அடிப்படை விதிகள், வரலாறு, தத்துவ ஞானம், தர்க்கக் கலை, விவாதக் கலை, ஆத்ம ஞானக் கலை, கணிதம் - ஆக அக்காலத்தில் நடைமுறையிலிருந்த எந்தக் கலையிலும் அவர்கள் ஆராய்ச்சியறிவு பெறாமல் விடவில்லை.

கலை வல்லுனர்களும் பல்வேறு கொள்கையை உடையவர்களும் அவர்களுடன் உட்கார்ந்து, பல நுட்பமாக கருத்துக்களையும் விளக்கங்களையும் கேட்பார்கள். அவர்கள் ஓர் அவையில் இருந்தார்களானால் மற்றவர்கள் மெளனமாகிவிடுவார்கள். அவர்கள் முன்னால் எதையும் பேசும் துணிவு மற்றவர்களுக்கு வருவதில்லை. பல அறிஞர்கள் இமாமவர்களின் கடல் போன்ற கல்வி அறிவைப் பற்றிப் புகழ்ந்து எழுதி வைத்துள்ளனர்.

ஷெய்கு பஹாஉத்தீன் காஸிம் இப்னு-மஹ்மூது இப்னு அஸாகிர் அவர்கள் இமாமவர்களின் வாழ்நாளிலேயே அவர்களைப் பற்றி இரு அடிகள் எழுதியுள்ளார்கள்.

"தகிய்யுத்தீன் கல்விக் கடலாய்த் திகழ்கிறார்; கேள்வி கேட்பவர்களுக்குத் தங்கு தடையின்றி, சடைவின்றி பதில் கூறுகிறார்; பயனுள்ள கலைகளையெல்லாம் முழுமையாகக் கற்றுள்ளார். அத்தகைய பெருங்கடலைப்பற்றி நீ விரும்பியவாறெல்லாம் புகழ்ந்து கூறுவாயாக!"

இமாம் அவர்கள் மாபெரும் அறிஞர் மட்டுமல்லர்; பெரிய பேச்சாளராகவுமிருந்தார்கள். கருத்து வேறுபாடு மிகுந்த பிரச்சினைகளையும் மிக லாவகமாக எடுத்துக் கூறுவார்கள். அதனால் நீண்ட உரையாக இருந்தாலும் கேட்பவர்கள் சோர்வடைவதில்லை. இலக்கண இலக்கிய நயத்தோடு உரையாற்றும் ஆற்றலுள்ளவர்களாய் இருந்தார்கள். மற்ற ஆசிரியர்களால் விளக்க முடியாத விஷயங்களையும் மிக எளிய முறையில் விளக்கிவிடுவார்கள்.

உண்மையை எடுத்துக்கூறும் விஷயத்தில் அவர்கள் எந்த அரசனையும் அமைச்சரையும் செல்வந்தரையும் தலைவரையும் பொருட்படுத்துவதில்லை. தாத்தாரியர்களுடன் நடந்த போரின் போது காஸான் என்ற மன்னனிடம் அவர்கள் துணிச்சலுடனும் தைரியத்துடனும் பேசிய நிகழ்ச்சி ஒரு சிறந்த உதாரணமாகும்.

‘அநீதமான அரசனிடம் உண்மையை எடுத்துக் கூறுவதே சிறந்த ஜிஹாத் ஆகும்’ என்ற நபி மொழியின்படி செயல்பட்டார்கள்.

கத்லூ பெக் மன்சூரி என்பவர் சிரியாவிலுள்ள ஒரு துருக்கியச் செல்வந்தராய் இருந்தார். அரசாங்கத்திலும் அவருக்கு நல்ல செல்வாக்கு இருந்தது. வியாபாரிகளிடமிருந்து பொருள்களை வாங்குவார். ஆனால் உடனே அவற்றின் விலையைக் கொடுப்பதில்லை. வியாபாரிகள் பணம் வசூலிப்பதற்காகப் பலமுறை அவரிடம் செல்லவேண்டியிருந்தது. யாராவது கோபித்துக் கொண்டால் அவருக்குச் சாட்டையடியும் கொடுப்பார்.

ஒருமுறை ஒரு வியாபாரியிடம் இவ்வாறே நடந்து கொண்டார். அவரைப் பல தடவை திருப்பித் திருப்பி அனுப்பிவிட்டார். அவருக்குரிய பணத்தைக் கொடுத்தாரில்லை. பாதிக்கப்பட்டவர் இமாமவர்களிடம் வந்து விவரத்தைக் கூறினார். இமாமவர்கள் அவரைக் கூட்டிக்கொண்டு கத்லூ பெக்கிடம் சென்றார்கள். இமாமவர்களைப் பார்த்ததும், அவர்கள் அந்த வியாபாரியின் உதவிக்கு வந்திருக்கிறார்கள் என்பதை கத்லூபெக் விளங்கிக் கொண்டார்.

சந்திப்பு முடிந்ததும் பரிகாசமாக அவர், "நீ ஒரு செல்வந்தனை ஒரு பரதேசியின் வாசலில் கண்டால், செல்வந்தனும் பரதேசியும் நல்லவர்கள் என்று நம்பு; ஆனால் ஒரு பரதேசியை ஒரு செல்வந்தனின் வாசலில்கண்டால், இருவருமே கெட்டவர்கள் என்று நம்பு;" என்று கூறினார். உடனே இமாமவர்கள்க கூறினார்கள்: "ஃபிர்அவ்ன் உன்னைவிடக் கெட்டவனாக இருந்தான். மூஸ(அலை) அவர்களோ என்னைவிடச் சிறந்தவர்கள். அவ்வாறிருந்தும் மூஸா(அலை) அவர்களே தினமும் ஃபிர்அவ்னுடைய இல்லத்திற்குச் சென்று அவனுக்கு இறைவனை ஏற்றுக் கொள்ளுமாறு அழைப்புக் கொடுத்தார்கள். ஒருபோதும் ஃபிர்அவ்ன்மூஸா(அலை) அவர்களுடைய வீட்டிற்குச் சென்றதாக வரலாறு இல்லை." என்று பதிலடி கொடுத்துவிட்டு, "நீ இந்த வியாபாரியின் பணத்தைக் கொடுத்துவிடு" என்று கூறினார்கள்.

இமாமவர்களின் இந்த பதிலைக் கேட்டதும், கத்லூப் வெட்கித்துப் போனார். பதிலேதும் சொல்ல முடியவில்லை. உடனடியாக அந்த வியாபாரியின் பணத்தைக் கொடுத்துவிட்டார்.

இமாமவர்கள் பெரிய அதிகாரத்திலிருப்பவர்களிடமும் வேகமாகவும் அபத்தமாகவும் பேசுவார்கள். அதைக்கேட்பவர்கள் அசந்து விடுவார்கள். இவ்வாறு உண்மையைத் துணிவுடன் கூறி வந்ததின் காரணமாத்தான் அவர்கள் பல இன்னல்களுக்கும் இடர்களுக்கும் இலக்காக வேண்டியதாயிற்று. மற்ற அறிஞர்கள் சமய சந்தர்ப்பத்தைப் பார்த்து, சில சமயங்களில் மௌனம் சாதித்துவிடுவார்கள். ஆனால் இமாமவர்கள் யாரையும் இலட்சியம் செய்யாமல், பிரச்சினையில் உண்மையை எடுத்துக் கூறுவார்கள்.

இமாமவர்கள் அலெக்ஸாந்திரியா சிறையிலிருந்து விடுதலையாகி வந்த நிகழ்ச்சி முன்னால் சொல்லப்பட்டுள்ளது. அப்போது சுல்தான் நாசிரும் அவருடைய அமைச்சரும் கிருஸ்தவர்களிடம் ஒரு பெருந்தொகையைப் பெற்றுக்கொண்டு அவர்களுக்குச் சலுகை காட்ட விரும்பினர். சுல்தான் மார்க்க அறிஞர்களிடம் தீர்ப்பு வழங்கக் கோரினார். அவருடைய போக்கைக் கண்ட அறிஞர்கள் மௌனம் சாதித்தனர். ஆனால் இமாமவர்கள் அந்த முதல் சபையிலேயே சுல்தானைக் கண்டித்துப் பேசினார்கள். தாம் அவருடைய தயவினாலேயே சிறையில் இருந்து விடுதலையாகி வந்திருந்தார்கள் என்பதை அவர்கள் சிறிதும் எண்ணிப்பார்க்கவில்லை.

இமாம் இப்னு தைமிய்யா அவர்கள் அறிவிலும் பேச்சிலும் எழுத்திலும் சிறந்து விளங்கியதோடு மட்டுமின்றி, வாளேந்தும் வீரராகவுமிருந்தார்கள். தாத்தாரியர்களுடன் நடந்த போரில் அவர்களுடைய வீரம் வெளிப்பட்டது. உடல் பலத்தைப் பொறுத்தவரை அவர்கள் ஒரு சாதாரண மனிதர்தான். ஆனால் துணிவு, தைரியம், இறைநம்பிக்கையினால் ஏற்படும் உணர்ச்சி முதலியவற்றின் காரணத்தால் அவர்கள் ஒரு தீரமுள்ள வீரராகத் தகழ்ந்தார்கள். அவர்களுக்கு மரணத்தைப் பற்றிய பயமே இருந்ததில்லை.

தாத்தாரியர்களின் படையெடுப்பின்போது பல அறிஞர்களும் சட்ட மேதைகளும் எகிப்துக்கு ஓடிவிட்டார்கள். இமாமவர்கள், "எங்கு சென்றாலும் மரணம் உங்கள் விதியிலிருக்குமானால், நீங்கள் தப்ப முடியாது" என்று உபதேசம் செய்வார்கள். அவ்வாறே நிகழவும் செய்தது. டமாஸ்கஸில் தங்கியிருந்தவர்கள் பலர் தப்பித்துக்கொண்டனர்.

ஷெய்கு சிராஜுத்தீன் அபுஹப்ஸ் என்பார் எழுதுகிறார்கள்: "இமாம் அவர்கள் மிகப்பெரிய வீரராகவும் உறுதிபடைத்த மனிதராகவும் இருந்தார்கள். பயம் அபாயமும் நிறைந்த இடங்களிலும், அவர்களைவிட உறுதியான தன்மையும் நிலையான போக்குமுள்ளவராய் எவரையும் நான் பார்க்கவில்லை. போரின்போது முன்னேறிச்சென்று எதிரிகளைத் தாக்குவார்கள். அல்லாஹ்வின் பாதையில் அவர்கள் தம் நாவாலும் பேனாவாலும் கரத்தாலும் ஜிஹாத் செய்து வந்தார்கள். பழிப்போர் எவருடைய பழி சொல்லுக்கும் அஞ்சமாட்டார்கள். போர்க்காலத்தில் படையினரின் ஒரு பகுதி பின்வாங்கிப் போவதைக் கண்டார்களானால், உடனே தம்குதிரையை விரட்டி அங்கே போவார்கள். ‘வெற்றி கிடைப்பது நிச்சயம்’ என்று கூறி, வீரர்களுக்கு ஊக்கமளிப்பார்கள். போரில் சிதறுண்டுவிடாமல் இருக்குமாறு உபதேசம் செய்வார்கள் என்று நேரில் கண்ட பலர் சாட்சியமளித்துள்ளனர்.

"இமாம் அவர்களின் குடும்பத்தில் எவரும் படையில் இருந்ததில்லை. வாள் வீசும் கலையையும் அவர்கள் கற்றுக்கொள்ளவில்லை. இறை நம்பிக்கையால் எழுந்த தெம்பு தான் அவர்களை வாளேந்தச் செய்தது. போர்க்களத்தில் அனுபவமுள்ள வீரர்களைவிட அவர்கள் எவ்விதத்திலும் குறைந்தவர்களாய் இல்லை. இச்சிறப்புத் தன்மையில் ஆலிம்களுள் எவரும் அவர்களுக்கு இணையாகக் காணப்படவில்லை. எந்தப் பிரபலமான அறிஞரும் அவர்களைப் போன்று போர்க்களத்தில் வாளேந்தியதில்லை".

இமாமவர்களிடம் ஓரளவு வேகமும் கடுமையும் இருந்தது. ஷரீஅத்திற்கு மாற்றமாக ஒரு செயலைக் காணும்போது அவர்கள் கோபித்துக் கொள்வார்கள். இக்கடின சித்தத்தின் காரணமாகவே தம் எதிரிகளை மடையன், முட்டாள், விளக்கமற்றவன் என்று கூறிவிடுவார்கள். இதனால் எதிர்ப்பாளர்களின் மனம் புண்பட்டுவிடும். அதனால் அவர்கள் இன்னல்கள் இழைக்க முற்படுவார்கள்.
அவர்கள் முதன் முதலில் எகிப்து சென்றிருந்த போது அவர்களின் கருத்துக்களைக் கேட்ட அபூஹய்யான் அந்தலூஸி அவர்கள் இமாமைப் புகழ்ந்து ஒரு கவிதை எழுதினார்கள். ஆனால் இரண்டாவது சந்திப்பிலேயே, முதலில் கூறியிருப்பது போல், அவர்களுடைய கடினமாக பேச்சின் காரணமாக அவர் இமாமவர்களுக்கெதிராக மாறிவிட்டார். ஓரளவு மென்மையான போக்கைக் கடைப்பிடித்திருப்பார்களேயானால், அவர்களுக்கெதிராக இத்தகைய போராட்டங்கள் நடைபெற்றிருக்கமாட்டா. அவர்கள் ஆயுள் முழுவதும் பிரம்மச்சாரியத்தைக் கடைப்பிடித்திருந்ததாலும் கூட இவ்வளவு வேகம் அவர்களிடம் இருந்திருக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர்.

அல்லாஹ் ரசூலுடைய கட்டளைகளுக்கு மாறுபட்டு நடப்பதைக் கண்டால் தான் இமாவர்களிடம் கடுமையும் வேகமும் தென்படும். மற்ற சமயங்களில் அவர்கள் தனிப்பட்ட முறையில் மிக்க பணிவுள்ளவர்களாய் தான் இருந்தார்கள். அவர்களை யாராவது புகழ்ந்தார்களானால், "நான் ஒரு சாதாரண மனிதன்; முஸ்லிம் சமுதாயத்தின் ஓர் அடிமட்டத் தொண்டன்; தலைவர்கள், செல்வந்தர்களைச் சார்ந்தவனல்லன்; நான் எந்நேரமும் எனது இஸ்லாத்தைப் புதுப்பித்துக் கொண்டிருக்கிறேன். இதுவரை நான் முழுமையான முஸ்லிமாக ஆகவுமில்லையே!" என்று அங்கலாய்த்துக் கொள்வார்கள். அவர்களின் இறுதி நாட்களில் பணிவும் எளிமையும் அவர்களிடம் அதிகமாகிவிட்டிருந்தது.

அவர்களுடைய மாணவர் அல்லாமா இப்னுல் கய்யிம், "நான் ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யாவை விட எவரிடத்திலும் எளிமையையும் பணிவையும் கண்டதில்லை." என்று கூறியுள்ளார்.

இமாம் அவர்கள் படிப்பதையும் படித்துக் கொடுப்பதையும் தவிர வேறெந்தத் தொழிலையும் செய்யவில்லை. உலகச் செல்வத்தையும் அந்தஸ்தையும் ஒருபோதும் விரும்பியதில்லை. அக்கால அறிஞர்களுள் பலர் அரசாங்க உத்தியோகங்களின் மூலம் அதிகமதிகம் செல்வத்தைத் தேட முயற்சித்து வந்தனர்.

ஷெய்கு தகிய்த்தீன் ஷாபிஈ - அவர்கள் ஒரே நேரத்தில் பதினேழு அரசாங்க உத்தியோகங்களை வகித்து வந்தார்கள். அவர்கள் எகிப்தின் தலைமை நீதிபதியாகவும், ஜாமிஉல் அஸ்ஹரின் கதீபாகவும், அரசாங்கக் கருவூலத்தின் பொறுப்பாளராகவும் சிறைச்சாலைகளின் கண்காணிப்பாளராகவும், அறச்சொத்துக்களின் மேற்பார்வையாளராகவும் இருந்து வந்தார். பல கல்வி நிறுவனங்களின் ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார். இவ்வாறு நன்றாக செல்வத்தைத் தேடிப்பெரும் கௌரவமான வாழ்க்கை வாழ்ந்து வந்தார். இறுதியாக அரசரின் கோபத்திற்காளாகி சிறையிலடைக்கப்பட்டனர்.

இமாமவர்கள் விரும்பியிருந்தால் இத்தகைய பல பதவிகளை அடைந்திருக்க முடியும் கற்பிப்பதைத் தவிர அவர்கள் மற்றெந்த வேலையையும் ஏற்றுக்கொள்ளவில்லை. நீதிபதிப் பதவி அவர்களுக்களிக்கப்பட்ட போது அதை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார்கள். தகாத பொருள் சம்பாதிப்பதை விட்டு விலகிக் கொள்வார்கள். மற்றவர்களையும் அதிலிருந்து தடுக்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள். சுல்தான் நாசிரிடம் சொல்லி, உத்தியோகங்கள் பெறுவதற்காக அரசாங்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதைத் தடுத்தார்கள். அதற்குத் தண்டனை கொடுக்கவும் யோசனை கூறினார்கள்.

தாத்தாரியர்களுடன் போர் நடந்த போது, தாத்தாரியத் தலைவன் காஸானுடைய சபையில் ஆலிம்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. எல்லோரும் உணவருந்தினார்கள். ஆனால் இமாமவர்கள் சாப்பிட மறுத்துவிட்டார்கள். கொள்ளையடித்த பொருளால் சமைக்கப்பட்டமையால் தான் சாப்பிடுவதற்கில்லை என வெளிப்படையாககூறினார்கள்.

இமாமவர்கள் செல்வந்தரல்லர். அவர்களின் ஆசிரியத் தொழிலில் சாதாரண ஊதியம் கிடைத்து வந்தது. அவர்களோ திருமணம் செய்து கொள்ளவில்லை. அவர்கள் சகோதரர் ஷரபுத்தீனுடைய வீட்டில் தான் பெரும்பாலும் சப்பிடுவார்கள். அவர்கள் எகிப்தில் இருந்தபோது தம் சிறிய தந்தையின் மகன் வீட்டில் தங்கினார்கள். எனினும், தம் தகுதிக்கேற்றவாறு மற்றவர்களுக்கு உதவியும் உபகாரமும் செய்யத் தயாராக இருப்பார்கள். தன்னிடமுள்ளகாசு, பணம், துணி எதுவாயிருந்தாலும் தேவையுடையவர்களுக்குக் கொடுத்துவிடுவார்கள். எவரிடமிருந்தேனும் அன்பளிப்புகள் வந்தால் அதில் எல்லோரையும் சேர்த்துக் கொள்வார்கள்.

ஆண்டுதோறும் அவர்களிடம் கொடைகளாக நிறையப் பணம் வந்து குவியும். அவையனைத்தையும் ஏழை எளியமக்களுக்குப் பகிர்ந்து கொடுத்துவிடுவார்கள். தமக்கென அதில் எதையும் வைத்துக் கொள்வதில்லை.

ஒருமுறை ஒரு மனிதர் வந்து சலாம் சொன்னார். அவருடைய தோற்றத்தைக் கண்டவுடனேயே அவருக்கு தலைப்பாகை தேவைப்படுகிறது என்பதனை உணர்ந்து கொண்டார்கள். உடனே தம் தலைப்பாகையை எடுத்து அதில் பாதியைக் கிழித்து அவருக்குக் கொடுத்துவிட்டார்கள்.

ஒருநாள் வழியில் போய்க் கொண்டிருந்த ஒருவர் அவர்களை வாழ்த்தினார். அவர்கள் தம் உடையின் ஒரு பகுதியைக் கொடுத்து அதைக் கொண்டு சென்று தன் தேவையை நிறைவு செய்து கொள்ளும்படிக் கூறினார்கள்.

ஒரு முறை ஒரு மனிதர் புத்தகம் ஒன்று தருமாறு வேண்டினார். "உன் முன்னால் நூல்களெல்லாம் உள்ள. நீ விரும்பியதை எடுத்துக் கொள்" என்று இமாமவர்கள் கூறினார்கள். அம்மனிதர், இமாமவர்கள் அதிகப் பணம்கொடுத்து வாங்கி வைத்திருந்த திருக்குர்ஆனைத் தேர்ந்தெடுத்தார். அவர் அதைக் கொண்டு சென்றுவிட்ட பிறகு அவர்களின் தோழர்கள் அந்த மனிதரைப் பழித்துக் கூறினர்.

"அவர் வேண்டிய பின் நான் கொடுக்காதிருப்பது முறையாகுமா? அதனால் அவருக்கு ஏதாவது பலன் ஏற்படும். ஒருவரிடம் அறிவு கேட்கப்படுமானால், அவர் அதை மறுத்தலாகாது" என்று கூறினார்கள்.
இமாமவர்கள் ஃபர்ளுகளையும் சுன்னத்துகளையும் முழுக்கப் பேணி வருவார்கள். நாயகம்(ஸல்) அவர்களுடைய வணக்க முறைகளை எப்போதும் தம் கவனத்தில் வைத்து வந்தார்கள். தூய்மை நிறைந்த வணக்கத்தால் தான் மனத் தூய்மையும் உள்ளத் தெளிவும் ஏற்படுவதாகக் கருதினார்கள். வணக்கத்தினால் உள்ளத்தில் ஒளி தோன்றுவதையும், ஒரு விசுவாசி இறைவனின் ஒளியின் மூலம் இவ்வுலகில் மறைந்துள்ள அநேகப் பொருள்களைப் பார்க்கும் ஆற்றலைப் பெறுகின்றான் என்றும் நம்பினார்கள். இது தொடர்பாக இமாமவர்களின் நூல்களைத் தவிர, அவர்களின் மாணவர் ஹாபிஸ் இப்னுல் கக்யிம் அவர்களின் பிரபலமான நூல் மதாரிஜிஸ்ஸாலிக்கீனையும் பார்கக் வேண்டும். அதில் அவர்கள் மனத் தூய்மை குறித்து இமாமவர்களின் கருத்துக்களை விளக்கியுள்ளார்கள். அதிலிருந்து ஒரு தூய்மையான ஆத்மஞானியின் வாழ்க்கை எம்முறையில் அமையவேண்டும் என்பது தென்படுகிறது.

இமாம் இப்னு தைமிய்யாவின் வாழ்க்கை முழுவதும் போராட்டங்கள் நிறைந்ததாகவே இருந்தது. எப்பொழுதும் எதிர்ப்புப் புயல்கள் நிறைந்ததாகவே இருந்தது. நீதிபதிகளும் அறிஞர்களும்அவர்களின் எதிரிகளாக இருந்தார்கள்; இமாமவர்களைத் தாழ்மைப்படுத்தும் முயற்சிகளைச் செய்து வந்தார்கள்; அவர்களை எதிர்த்து முழக்கங்களை எழுப்பினார்கள்; பலமுறை ஏசினார்கள்; அவர்களை அடித்தார்கள்; அவ்ரகளைக் கொல்லவும் சதிசெய்தார்கள்; அவர்களைச் சிறையிலடைக்கச் செய்தார்கள். ஆனால் இமாமவர்கள் யாரையும் பழிவாங்க முயலவில்லை. மனப்பூர்வமாக அனைவரையும் மன்னித்துவிட்டார்கள். இதற்குரிய சான்றுகள் பல ஆங்காங்கே முன்னால் கூறப்பட்டுள்ளன.

தூய்மையான வணக்கங்களைச் செய்வதால் இறை விசுவாசியின் மனத்தில் ஒளி பிறக்கிறது. அதன் மூலம் அவன் வருங்காலத்தில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகளைப் பார்க்க இயலும் என்று இமாமவர்கள் கருதி வந்தார்கள். இமாமவர்கள் கஷ்பு-கறாமத்-நுண்ணறிவு ஆகியவற்றை உடையவர்களாய் இருந்தார்கள்.

"நான் ஷெய்குல் இஸ்லாமுடைய நுண்ணறிவின் பல வினோதமான நிகழ்ச்சிகளைக் கண்டுள்ளேன். நான் காணமால் நம்பத்தகுந்த மனிதர்களின் வாயினால் கேள்விப்பட்ட நிகழ்ச்சிகளோ, நானறிந்தவற்றைவிட மிக அதிகம். அவர்களின் நுண்ணறிவு பற்றிய நிகழ்ச்சிகளை எழுதவதாயின் ஒரு தனி நூலே தயாராகிவிடும்" என்று அவர்களின் சிறந்த மாணவர் ஹாபிஸ் இப்னுல் கய்யிம் அவர்கள் ‘மதாரிஜுஸ்ஸாலிகீன்’ என்ற தமது நூலில் வரைந்துள்ளார்கள்.

அவர்களுடைய வாழ்க்கையின் பல ஆதாரப்பூர்வமான நிகழ்ச்சிகள், வருங்காலச் சம்பவங்களை விளங்கிச் சொல்லும் ஆற்றல் அவர்களிடம் இருந்தது என்பதற்குச் சான்று பகர்கின்றன.

மன்னன் கரஸான், இருமுறை சிரியாவின் மீது படையெடுத்தான். இமாமவர்கள், ‘முதல் தடவையில் இன்ஷாஅல்லாஹ் முஸ்லிம்களுக்குத் தோல்வி தான் ஏற்படும்’ என்று முன்னறிவிப்புச் செய்திருந்தார்கள்; அவ்வாறே நிகழ்ந்தது. மறுமுறை வெற்றி கிடைக்கும் என்று அறிவித்தார்கள்; அவ்வாறே நடந்தது.

ஹிஜ்ரி 705ல் இமாமவர்களின் கொள்கைகள் பற்றி விளக்கம் கூறுவதற்காக, அவர்கள் எகிப்துக்கு வரவழைக்கப்பட்டபோது அவர்களின் அபிமானிகள், அவர்கள் அங்கே கொல்லப்படுவார்கள் என்ற அச்சத்தைத் தெரிவித்தனர். அப்பொழுது இமாமவர்கள் இறைவன் மீது ஆணையிட்டுக் கூறினார்கள்:

"அவர்கள் தங்கள் திட்டத்தில் வெற்றி பெறமாட்டார்கள்."

"அப்படியானால் என்ன நடக்கலாம்? என்று மக்கள் கேட்டனர்."

"நான் கைது செய்யப்படுவேன். நீண்ட நாட்கள் சிறையிலிருப்பேன். பிறகு பகிரங்கமாக குர்ஆனையும் சுன்னத்தையும் ஆதரிக்கும் பணியைச் செய்வேன்" என்று கூறினார்கள்.

அவ்வாறே நடந்தது.

இதே போன்று பேப்ரஸ் ஜாஷங்கீர் உடைய காலத்தில், நாசில் வெற்றியடைவார் என்று முன்னறிவிப்புக் கொடுத்தார்கள். அதுவும் அப்படியே நிகழ்ந்தது.

ஷெய்கு அபூஹப்ஸ் உமர் கூறுகிறார்கள் : "ஒருநாள் எனக்கும் என் நண்பர் ஒருவருக்குமிடையில் ஒரு பிரச்சினை சம்பந்தமாக அபிப்பிராய பேதம் ஏற்பட்டது. நாங்களிருவரும் அப்பிரச்சினை பற்றி இமாம் அவர்களின் அபிப்பிராயத்தைத் தெரிந்து கொள்வதற்காக இமாம் அவர்களிடம் சென்றோம். நாங்கள் சொல்வதற்கு முன்பாகவே அவர்கள் இந்தப் பிரச்சினை பற்றிப் பேச ஆரம்பித்தார்கள். எங்களுக்குத் திருப்தி ஏற்படுமளவு அவர்கள் அதைப்பற்றி விளக்கினார்கள். அவர்களின் மதியூகத்தைப் பற்றி நாங்கள் பெரிதும் ஆச்சரியப்பட்டோம்."

ஷெய்கு சாலிஹ் முக்ரீ என்பார் கூறுகிறார்கள் :-

"ஒருமுறை நான் டமாஸ்கஸ் நகரத்திற்குச் சென்றேன். அங்குள்ள எவரையும் நான் அறியேன். என்னிடமிருந்த பணம் தீர்ந்து போன போது எனக்குப் பெரிய தடுமாற்றம் ஏற்பட்டது. டமாஸ்கஸின் ஒரு வீதியில் நான் தடுமாறித் திரிந்து கொண்டிருக்கும் போது ஒரு பெரியார் என்னிடம் வந்தார். அவர் என்னிடம் சில திர்ஹம்களைத் தந்து, இவற்றை நீங்கள் உங்கள் தேவைகளுக்குச் செலவு செய்யுங்கள். இறைவன் உங்களை ஆதரவற்றராய் விட்டுவிடமாட்டான் என்று கூறினார். இதைக் கூறிவிட்டு அப்பெரியார் சென்றுவிட்டார். நான் மற்ற மனிதர்களிடம் விசாரித்த போது, அவர்கள் தான் ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா என்று தெரிய வந்தது. அன்னால் வெகு நாட்களுக்குப் பிறகு அங்கே வந்திருந்தார்கள். நான் அவர்களை மறுபடியும் சந்தித்து, அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்தேன். நான் டமாஸ்கஸில் இருந்தவரை அவர்கள் எனக்கு உதவி செய்து கொண்டே இருந்தார்கள். எனக்கு எந்தக் கஷ்டமும் ஏற்படவில்லை."

ஒருமுறை டமாஸ்கஸில் ஒரு வாலிபர் நோயுற்றிருந்தார். இமாமவர்கள் அவரிடம் சென்று, அவர் குணமடைய துஆ செய்தார்கள். அவர் குணமடைந்த போது, "நீ உன் ஊருக்குத் திரும்பி போவதாக வாக்குக் கொடு; உன் மனைவி மக்களை ஆதரவற்றவர்களாய் விட்டுவிட்டு இங்கே வந்திருப்பது ஆகுமா?" என்று கூறினார்கள். அவர்களின் இந்த தூர நோக்கைப் பற்றி அந்த வாலிபருக்குப் பெரும் வியப்பு ஏற்பட்டது. உடன் அவ்வாலிபர் தன் நாட்டிற்குத் திரும்பிப் போய் விடுவதாக வாக்களித்தார்.

ஒருவர் நீதிபதி பதவியைப் பெறுவதற்காக எகிப்துக்குப் புறப்பட்டார். அவருடைய எண்ணம் தவறானதாய் இருந்தது. அதாவது அவர் ஒரு நீதிபதியைக் கொன்று தான் அப்பதவியை அடைய விரும்பினார். இதைச் சிலர் இமாம் அவர்களிடம் கூறியபோது, "அவர் தன் எண்ணத்தில் வெற்றிபெறமாட்டார்" என இமாமவர்கள் கூறினார்கள். அவர் எகிப்து சேரும் முன்பே காலமாகிவிட்டார்.

மஜ்மூவுத் துரர், அல் உகூதுத் துரரிய்யா முதலிய பெரு நூல்களில் இத்தகைய நிகழ்ச்சிகள் பல எழுதப்பட்டுள்ளன. ஒரு சில மிகைப்படுத்தியும் கூறப்பட்டிருக்கலாம். எனினும் இமாம் அவர்களின் தூரநோக்கு அக்காலத்தில் பிரபலமடைந்தது.

ஹாபிஸ் இப்னுல் கய்யிம் அவர்கள் தம் நூலில் கூறியுள்ளார்கள்: "ஒருமுறை ஷெய்குல் இஸ்லாம் இப்னுதைமிய்யா அவர்கள் என்னிடம் கூறினார்கள்: ‘என் தோழர்களுள் நண்பர்களும் என்னிடம் வருகிறார்கள். நான் கூற முடியாத சில காட்சிகளை அவர்களின் கண்களிலும் முகங்களிலும் காண்கிறேன்.’ ‘அதைத் தாங்கள்அவர்களுக்கறிவித்தால் நன்றாக இருக்கும்’ என்று நான் கூறினேன். ‘அரசாங்க ஒற்றர்களைப் போல மனிதர்களின் மறைவான காரியங்களைத் துரவிப் பார்த்து நான் அவற்றை வெளிப்படுத்துவதா? நான் அவ்வாறு செய்வேனாயின், என் தோழர்கள் ஒருவாரம் கூட என்னுடனிருக்க விரும்பமாட்டார்கள்’ என்று பதில் கூறினார்கள். ஷெய்குல் இஸ்லாம் அவர்கள் என்னிடம் சில இரகசியங்களைக் கூறியிருந்தார்கள். வருங்காலத்தில் நிகழவிருக்கும் சில நிகழ்ச்சிகளைப் பற்றியும் அறிவித்திருந்தார்கள். ஆனால் அவற்றுக்குரிய நாட்களைக் குறிப்பிடவில்லை. அவற்றுள் சிலவற்றை நான் என் கண்களால் கண்டுள்ளேன். மற்றவை நிகழ்வதை எதிர்பார்க்கிறேன்."
(நூல்: மதாரிஜுஸ் ஸாலிஹீன் பாகம்-2, பக். 250-251)

சமகால மக்களின் பொறாமை மிகவும் பொல்லாதது. தன் காலத்தில் வாழ்வோரின் சிறப்புகளையும் நிறைவுகளையும் எடுத்துக் கூறத் தடையாக அமைவது இப்பொறாமையே. சில சமயங்களில் எதிரியாயுள்ளவர் மிகத் தறமை மிக்கவராகவும் பிரபலமானவராகவும் இருப்பதின் காரணத்தால் அவருடைய அறிவு நிறைகளைத்த திரையிட்டு மறைக்க முடிவதில்லை. இத்தகைய அறிவுப் பொறமை சில சமயங்களில் அத்தகைய மனிதர்களின் குறைகளையும் வெளிப்படுத்தும் வாய்ப்பை உண்டாக்குகிறது.

இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்) அவர்களின் சிறப்புகளையும் மேன்மைகளையும் அவர்களின் எதிரிகளும் மறுக்கவில்லை. ஒவ்வொருவரும் அவர்களைப் பற்றிப் புகழ்ந்து கூறியுள்ளார்கள். அவர்களிடத்திலிருந்து பெருங்குறை, கடுமையான போக்கேயாகும்.

இமாமவர்கள் கல்வி மிகுந்த குடும்பத்தில் பிறந்தவர்கள். அவர்களின் குடும்பத்தில் மூன்று தலைமுறைகளாக நூல்கள் எழுதுவதும் போதனை செய்வதும் உபதேசங்கள் நல்குவதும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டேயிருந்தன. எனினும் அவர்கள் அனைவரிலும் கல்வியையும் செயலையும் பொறுத்தவரை இமாமவர்களிடத்திலிருந்த முழுமை வேறு யாரிடத்திலும் இருந்ததில்லை.

அவர்கள் தம் வாலிப வயதிலேயே தங்கள் காலத்து மூதறிஞர்களிடம் பாராட்டையும் புகழையும் பெற்றுக்கொண்டார்கள். தம் தந்தை அப்துல் ஹலீமின் மறைவிற்குப் பிறகு இமாமவர்கள் முதல் பாடம் நடத்தினார்கள். அப்பொழுது அவர்களின் வயது இருபத்தொன்று தான். இந்த முதல் பாடத்திலேயே அந்நகரத்தின் நீதிபதி, அதிகாரிகள், அறிஞர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அதில் அவர்கள் கற்பித்த கருத்துக்களைக் கேட்டவர்கள் அனைவரும் அறிவாழத்தை உணர்ந்து வியந்தனர்.

தாத்தாரியர்களின் போர் தொடர்பாக முதல்முறை இமாம் இப்னு தைமிய்யா அவர்கள் ஹிஜ்ரி 700ல் எகிப்துக்குச் சென்று, அங்கு அரசர் நாசிருடன் உற்சாகமாகவும் ஆர்வத்துடனும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது எகிப்தின் பிரதம நீதிபதியாய் இருந்த தகிய்யுத்தீன் இப்னு தகீக் அல் ஈத் ஷாபிஈ என்பாரும் உடனிருந்தார்கள். அவர்கள் இமாமவர்களிடம், "உங்களைப் போன்ற மனிதரையும் இறைவன் படைப்பான் என்று நான் கருதவில்லை." என்று கூறினார்கள். மக்கள் இப்னு தகீக் அவர்களிடம் "நீங்கள் ஏன் இமாமவர்களுடன் விவாதம் செய்யவில்லை?" எனக் கேட்டதற்கு, "அவர்கள் பேசுவதை விரும்புகிறார்கள். நான் மௌனமாய் இருப்பதை விரும்புகிறேன்" என்று அவர்கள் பதில் கூறினார்கள்.

தாத்தாரியர்களோடு நடந்த போர்களில் முஸ்லிம்களின் நன்மைக்காகப் பணியாற்றியதின் காரணமாக இமாமவர்கள் மக்களிடம் கண்ணியத்திற்கும் மதிப்பிற்குமுரியவர்களாய் ஆகிவிட்டிருந்தார்கள். சிலர் அவர்களிடம் பொறாமை காட்டி வந்தார்கள். ஆனால் ஒவ்வொருவரும் அவர்களின் கல்வித் தகுதிகளை முழுக்கமுழுக்க ஏற்றுக் கொண்டிருந்தார்கள். ஹிஜ்ரி 705ல் ரிபா பகீர்களுடன் தர்க்கம் நடந்து, கொள்கைகள் குறித்து கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, இமாம் கஸ்ஸாலி, இமாம் ராஸீ, இப்னு அரபீ மற்ற தத்துவ ஞானிகள், தர்க்கமேதைகள், சூபிகள் ஆகியோரைக் கண்டித்து எழுதிய போது அவர்கள் காலத்து உலமாக்கள் அவர்களைக் கடுமையாக எதிர்க்கலாயினர். இந்தக் கடுமையான எதிர்ப்புகளின் காரணமாக அவர்கள் சிறைத் தண்டனைகளையும் அனுபவிக்க வேண்டியதாயிற்று. எதிரிகளில் பிரபலமானவர்கள், ஷெய்கு ஸத்ருத்துன் இப்னு அல்வக்கீல், ஷெய்கு ஸபிய்யுத்தீன் ஹிந்தி, காஜி கமாலுத்தீன் இப்னு அஸ்ஸமல்கானி, காஜி ஸைனுத்தீன் இப்னுமக்லூப் மாலிக்கீ, ஷெய்கு அலாவுத்தீன் கவ்நவீ, காஜி தகிய்யுத்தீன் சுப்கீ முதலியோராவர். ஆனால் இவ்வளவு எதிர்ப்பிருந்த போதிலும் அவர்களில் ஒவ்வொருவரும் இமாமவர்களின் அறிவுத்திறனை ஆமோதிக்கக்கூடியவர்களாய் இருந்தார்கள் என்று வரலாற்று வல்லுநர்கள் அனைவரும் ஒருமித்துக் கூறியுள்ளனர்.

ஷெய்கு ஸத்ருத்தீன் இப்னு வக்கீல் இமாம் இப்னு தைமிய்யாவின் பெரும் எதிரிகளுள் ஒருவர். இவர் ஒவ்வொரு சபையிலும் இமாமவர்களுடன் தர்க்கம் செய்வதற்கு முயற்சி செய்வார். இவர் ஷாபிஈ மத்ஹப்காரர்களின் சார்பாகக் கருத்துச் சொல்ல முயற்சிப்பார். இவர் ஹிஜ்ரி 716ல் மரணமடைந்தார். ஹாபிஸ் இப்னு கதீர் எழுதுவதாவது: "ஷெய்கு ஸத்ருத்தீன் அவர்கள் இமாமவர்களின் கல்வித் திறமையை முழுக்க முழுக்க ஏற்றிருந்தார்கள். அவர்களின் கல்வியையும் அறிவுத் திறனையும் புகழ்ந்துள்ளார்கள்."

ஷெய்கு ஸபிய்யுத்தீன் ஹிந்தி அவர்கள் இமாமவர்களுடன் பலமுறை தர்க்கம் செய்துள்ளார்கள். அந்தத்தர்க்கத்திற்குப் பிறகு இமாமவர்களைப் பற்றி ஹிந்தி அவர்களிடம் கேட்கப்பட்ட போது," அவரைப்பற்றி நீங்கள் எந்த ஆட்சேபனையும் செய்யக்கூடாது; ஏனெனில், அவர் சார்புக் கருத்து(தஃவீல்) கூற மறுத்து வந்தார். நீங்கள் சார்புக் கருத்துக்களை ஏற்றுக் கொள்கிறீர்கள். இமாம் அபுல் ஹசன் அஷ்அரு அரீ அவர்கள் இரண்டு கருத்துக்களையும் ஆதரித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் சார்புக் கருத்தைத் தவிர்ப்பதையே விரும்புகிறேன்" என்று கூறினார்கள். (அல்முனாளரா-பீ-ஸிபாதில் பாரீ இப்னு தைமிய்யா-கைப்பிரதி) காஜி கமாலுத்தீன் இப்னு ஸமல்கானி அவர்கள் ஆரம்பத்தில் இமாமவர்களின் நண்பராக இருந்தார்கள். அவர்களின் அறிவுத் திறமையை முழுமையாகப் பாராட்டியுள்ளார்கள்.

இமாமவர்களின் வயது முப்பது இருக்கும் போது காஜி ஸமல்கானி அவர்கள் இமாமவர்களின் ‘ரஃபஉல் மலாம்அன் அஇம்மதில் அஃலாம்’ என்ற ஒரு நூலுக்கு மதிப்புரை வழங்கியுள்ளார்கள்.

அம்மதிப்புரையில் இமாமவர்களை, "மாபெரும் அறிஞர், தன்னிகரற்றவர், ஆராய்ச்சியாளர், பற்றற்ற பண்பாளர், வணக்கஸ்தர், முழுமையான முன் மாதிரி, நிறைவுடைய ஆத்ம ஞானி, இமாம்களுக்கெல்லாம் இமாம், சமுதாயத்தின் வழிகாட்டி, அறிஞர்களுள் மாபெரும் அறிஞர், நபிமார்களின் வாரிசு, ஆராய்ச்சியாளர்களுள் சிறந்தவர், மக்களின் வாழ்வு வளம் பெறத் துணை நிற்பவர், இஸ்லாத்தின் ஆதாரம், இஸ்லாமிய தர்க்கவாதிகளின் அத்தாட்சி, அனாச்சாரங்களை ஒழிப்பவர், பாதை மாறிச் செல்பவர்களைத் திருத்துபவர், கன்னத்துக்கு உயிர் கொடுப்பவர்," என்றெல்லாம் புகழ்ந்துள்ளார்.

ஷெய்கு கமாலுத்தீன் இப்னு அஸ்ஸமல்கானி அவர்களிடம் இமாமவர்களைப் பற்றிக் கேட்கப்பட்ட போது அவர்கள் சொன்னதாவது: "நாலைந்து நூற்றாண்டுகளாக இப்னு தைமிய்யாவை விட ஒரு சிறந்த ஹதீஸுக்கலை நிபுணர் பிறந்ததில்லை. மற்றொரு அறிவிப்பின்படி, ஆராய்ச்சியாளருக்கான எல்லாத் தகுதிகளும் இமாம் அவர்களிடம் ஒன்று சேர்ந்திருந்தன.

"இமாமவர்களிடம் ஏதாவது ஒரு கலையிலுள்ள ஏதேனும் ஒரு செய்தி கேட்கப்பட்டால், அவர்கள் அதற்கு பதில்கூறுவார்கள். அதைக் கேட்பவர், அந்தக் கலையில் தான் அவர்களுக்த் தேர்ச்சியுண்டு என்றும், மற்ற கலை எதையும் அவர்கள் அறியமாட்டார்கள் என்றும் நினைப்பார்கள். ஒவ்வொரு சிந்தனை வழியையுமுடைய மார்க்க அறிஞர்கள் இமாமவர்களுடன் அமர்ந்து தங்கள் சிந்தனைத் தடங்களின் சட்ட திட்டங்களையும், விவகாரங்களையும் கற்பதுண்டு. அவர்கள் எவருடனாவது தர்க்கம் செய்து, அதில் தோல்வியுற்றார்களென்று எவரும் சொல்ல இயலாது அல்லது ஷரீஅத் தொடர்பு கேள்வி பற்றியோ அவர்கள் தர்க்கம் செய்து அதில் மற்ற திறமையானவர்கள் இவர்கள் வெற்றி பெறாமல் இருந்ததில்லை." (அல்லாமா இப்னு ரஜப் அவர்களின் ‘தபகாத்’ என்ற நூல்)

காஜி ஸைனுத்தீன் இப்னு மக்லூப் மாலிக்கி அவர்கள் இமாம் இப்னு தைமிய்யாவை எகிப்தில் அதிகமாகத் துன்புறுத்திட முயற்சிகள் செய்தார்கள். எகிப்து மன்னர் நாசிர் அவரைப் பழிவாங்க நினைத்தார். அப்பொழுது இமாமவர்கள் அவரைத் தடுத்து, இப்னு மக்லூப் அவர்களைக் காப்பாற்றினார்கள். எனவே, இப்னு மக்லூப்அவர்கள் கூறியுள்ளார்கள்:

"இப்னு தைமிய்யாவை விடச் சிறந்த மன்னிப்போரை நான் கண்டதில்லை; நாம் அவரைக் கொல்ல எல்லா வழிமுறைகளையும் கையாண்டோம். ஆனால், அவரோ எங்களை ஒழிக்கச் சந்தர்ப்பம் கிடைத்தும், பெருந்தன்மையோடு எங்களை மன்னித்துவிட்டார்.

தகிய்யுத்தீன் ஸுப்கி ஷாபிஈ அவர்களும் இமாம் இப்னு தைமிய்யாவின் பெரிய எதிரிகளுள் ஒருவரானார். இமாமவர்களை விட அவர் அவர் இருபத்திரண்டு வயது இளையவர். இவர் அபூஹய்யான் உந்தலூஸீயுடைய மாணவர். அவரைப்பற்றி இவர் பல சிறு நூல்களும் கவிதைகளும் எழுதியுள்ளார். இருந்தபோதிலும், அவர் இமாமவர்களை அதிகமாகப் புகழ்ந்துமிருக்கிறார். ஹாபிஸ் ஷம்சுத்துன் தகஃபியவர்கள், தகிய்யுத்தீன் ஸுப்கி, இமாம் அவர்களை எதிர்ப்பதைப் பற்றிக் கண்டித்த போது ஸுப்கி அவர்கள் எழுதியதாவது:

"இமாம் இப்னு தைமிய்யாவைப் பற்றி தாங்கள் கூறுவதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். ஷரீஅத்துடைய அறிவு, அறிவுக்கலை, ஆகியவற்றில் அவர்களுடைய அறிவும், சிந்தனையும் மிக விசாலமானதும் ஆழமானதுமாகும். அவர்களின் விவேகமும் ஆராய்ச்சித் திறனும் எல்லாக் கலைகளிலும் அவர்களுக்கிருக்கும் அசாதாரண ஆற்றலும் நம் புகழ் உரைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவை. நான் அவர்களின் ஆற்றல்களை மனமார மெச்சுகின்றேன். வெளியில் தெரிவதைவிட எனதுள்ளத்தில் அவர்களுக்கு தனிப்பெரும் மதிப்பும் மரியாதையும் உள்ளது. இறைவன் அவர்களிடம் பக்தி, இயைச்சம் மார்க்கப்பற்று, சுயநலமின்மை, உண்மைப்பற்று ஆகிய உயர்பண்புகளை வைத்துள்ளான். அவர்கள் தமது வாழ்க்கைக்கு முந்தைய நல்லோர்களின் வாழ்க்கையை முன்மாதிரியாக ஆக்கிக் கொண்டார்கள்.

இமாம் இப்னு தைமிய்யாவின் நண்பர்களும் மாணவர்களும் அவர்களைப் பற்றி எழுதியவற்றிலிருந்து, இஸ்லாமிய வரலாற்றின் ஏழு நூற்றாண்டுகளில் அவர்களைப் போன்ற ஓர் அறிஞர் தோன்றியதில்லை என்று தெரியவருகிறது. நண்பர்கள் மிகைப்படுத்தி ஒன்றும் புகழ்ந்திடவில்லை. இமாமவர்களின் நண்பர்களிடையேயும் ஆதரவாளர்களிடையேயும் ஹாபிஸ் ஜமாலுத்தீன் யூசுபுல் மிஸ்ஸீ, ஷெய்கு அலமுத்தீன் அல்காஸிமுல் பர்ஸாலீ, ஷெய்கு ஷம்சுத்தீன் தகபீ ஆகியோர் சிறப்பாகக் குறிப்பிடப்பட வேண்டியவர்களாவர். இம்மூவரும் தங்கள்காலத்திலிருந்து சிறந்த வரலாற்று வல்லுனர்களும் ஆசிரியர்களும் ஆவர். அவர்கள் பல வரலாற்று தொகுப்புகளையும், வாழ்க்கைக் குறிப்புகளையும் விட்டுச் சென்றுள்ளனர். வரலாற்றுத் துறையில் அவர்கள்ச சுட்டிக் காட்டிய குறைகளும் நீக்கங்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இம்மூவரும் இமாம் இப்னுதைமிய்யாவை மிக அதிகமாகப் புகழ்ந்துள்ளனர். ஷெய்கு ஷம்சுத்தீன் தகபீ அவர்கள் புகழ்ச்சியோடு நின்றுவிடாமல், இமாமுடைய குறைகளையும் எடுத்துக்காட்டியுள்ளார்கள். எனவே இம்மூவரும் தங்கள் காலத்து நண்பர் ஒருவரை அளவுக்கதிகமாகப் புகழ்ந்திருப்பார்கள் என்று கூறமுடியாது. காரணம், அவர்கள் கூறும அனைத்தும் இமாமவர்களிடம் காணப்படும் போது, அவர்கள் புகழ்ந்துள்ளதை ‘மிகைப்படுத்தல்’ என்று ஏன் கூறவேண்டும்?

ஹாபிஸ் அபுல் ஹஜ்ஜாஜ் மிஸ்ஸி கூறியுள்ளதாவது : ‘நான் அவர் போன்று இன்னொருவரைக் கண்டதில்லை; அவருக்கு நிகர் அவரே என்பதை உலகறியச் செய்தவர்; அவரை விட அதிகமாக குர்ஆனையும் நபிமமொழிகளையும் அறிந்தவர், அதன்படி ஓழுகுபவர் எவரையும் நான் கண்டதில்லை.

ஷெய்கு அலமுத்தீன் பர்ஸாலீ அவர்கள் எழுதியுள்ளதாவது:

"ஷெய்கு தகிய்யுத்தீன் இப்னு தைமிய்யா அவர்கள் மாபெரும் மேதையாவார்கள். அவர்களுடைய சிறப்பும் மேன்மையும் மார்க்கப் பற்றும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அவர்கள் மார்க்கச் சட்டங்களைக் கற்று, அதில் திறமை பெற்றார்கள். அரபி இலக்கியத்திலும் திருக்குர்ஆன் விரிவுரையிலும், நபிமொழிக்கலையிலும் அவர்கள் வல்லமை அடைந்தார்கள். அவர்கள் ‘இஜ்திஹாத்’ எனும் மார்க்க ஆராய்ச்சித் திறனைப் பெற்றிருந்தார்கள். முஜ்தஹிதுடைய எல்லா நிபந்தனைகளும் அவர்களிடம் நிரம்பியிருந்தன. அவர்கள் திருக்குர்ஆனுக்கு விரிவுரை நிகழ்த்த ஆரம்பித்தால், அவர்களின் அபார நினைவாற்றலைப் பார்த்து மக்கள் வியந்துவிடுவார்கள்."

ஷெய்கு பர்ஸாலீ அவர்கள் ஹஜ்ஜுக்குச் சென்றிருந்தார்கள். அவர்கள் திரும்பி வந்தபோது இமாமின் மரணச்செய்தியை அறிந்தார்; உடனே கண் கலங்கினார்கள்; இறுதி நேரத்தில் தான் இல்லாதிருப்பதை நினைத்து வருந்தினார்கள்.

"எனக்கும் அவர்களுக்குமிடையில் இளமை முதலே நட்பு இருந்து வந்தது. சுமார் ஐம்பதாண்டுகள் வரை அவர்களுடனிருக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது" என்று எழுதியுள்ளார்கள்.

ஷெய்கு ஷம்சுத்தீன் தகபீ பல நூல்களில் இமாம் இப்னு தைமிய்யாவைப் பற்றி எழுதியுள்ளார்கள்.
"ஷெய்கு தகிய்யுத்தீன், முழுமையான நன்மை, தூய்மை, வணக்கம், பயிற்சி, உண்ணுவதிலும் குடிப்பதிலும் நடுநிலைமை ஆகிய அடிப்படைகளின் மீது வளர்ந்தார்கள். இளமையிலேயே பள்ளிகளிலும் சபைகளிலும் பங்குபெற்று வந்தார்கள். பெரும் பெரும் அறிஞர்களுடன் தர்க்கம் செய்வார்கள். வாதத்தில் அவர்களை மௌனிக்கச்செய்து விடுவார்கள்."

"அறிவுத் தொடர்பான முத்துக்களை அவர்கள் அள்ளி வீசும்போது நாட்டிலுள்ள பெரும் பெரும் மனிதர்களும் அவற்றைக் கேட்டு வியப்பார்கள். பத்தொன்பதாவது வயதிலேயே அவர்கள் மார்க்கத் தீர்ப்பு(பத்வா) வழங்கியுள்ளார்கள். அப்பொழுதிலிருந்தே நூல்கள் எழுதுவதிலும் போதிப்பதிலும் ஈடுபட்டு வந்ததுள்ளார்கள்."

"அவர்களின் தந்தை ஹன்பலீ கொள்கையைப் பின்பற்றக் கூடியவர்களின் இமாமாக இருந்தார்கள். அவர்கள் மரணமெய்திய பின், அவர்களுடைய இடத்தில் இப்னு தைமிய்யா அவர்கள் அமர்த்தப்பட்டார்கள். அப்போது அவர்களின் வயது இருபத்தொன்று தான்."

இமாம் இப்னு தைமிய்யாவின் நண்பர்களுள் ஷெய்கு இமாதுத்தீன் வாஸிதீ அவர்களும் ஒருவராவார். இமாமவர்கள் செய்த பிரச்சாரம், புத்தமைப்புப் பணி ஆகியவற்றில் இமாமவர்களுடன் சேர்ந்து ஊக்கமாக உழைத்துள்ளார்கள். இமாம் இவர்களை விட நான்காண்டுகள் மூத்தவர். இவருடைய தந்தை தகிய்யுத்தீன்வாஸிதீ அவர்களும் மாபெரும் மேதை.

ஷெய்கு இமாதுத்தீன் வாஸிதீ இறைப்பற்றிலும் இறைவணக்கத்திலும் வளர்ந்தார்கள். சில காலம் வரை மார்க்கச்சட்டம், தர்க்கக்கலை, தத்துவ ஞானம் ஆகிய கலைகளில் ஈடுபாடு கொண்டார்கள். அவற்றில் அவர்களுக்கு நிம்மதி கிடைக்கவில்லை.

இமாம் இப்னு தைமிய்யாவுடைய கலைக் கூடத்தையடைந்த போது, இமாம் அவர்களின் பரந்த அறிவினாலும் போதனை முறையாலும் கவர்ந்திழுக்கப்பட்டார்கள். இமாமவர்கள் நபி(ஸல்) அவர்களின் வரலாற்றை அதிகம்படிக்குமாறு அவர்களுக்கு ஆசையூட்டினார்கள்.

இமாம் இப்னு தைமிய்யா எகிப்திலிருந்த போது வாஸிதீயவர்கள் தம் நண்பர்களுக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினார்கள். அதில் அவர்கள், "இமாம் இப்னு தைமிய்யாவுக்கு நிகர் இவ்வானத்தில் கீழ் வேறு யாரும் காணப்படவில்லை" என்று ஆணையிட்டு எழுதியுள்ளார்கள்.

இவற்றைத் தவிர, இன்னும் பல அறிஞர்களும் இமாம் அவர்களைப் புகழ்ந்து எழுதியுள்ளார்கள்.

இமாம் இப்னு தைமிய்யா இறந்த பிறகும் அவர்களைப் பற்றி புகழ்வதும் இகழ்வதும் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. ஒவ்வொரு காலத்திலும் துவேஷ மனப்பான்மையுள்ள அறிஞர்களும் மார்க்கச் சட்டத்தில் ஈடுபாடுள்ளவர்களும் இமாம் அவர்களைப் பற்றி இல்லாதவற்றையெல்லாம் இட்டுக்கட்டி கூறியுள்ளனர். ஒரு சிலர்அவர்களைக் ‘காபிர்’ என்றும் மதவிரோதி என்றும் கூட எழுதியுள்ளனர். கொள்கைகள் தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக அறிஞர்களின் ஒரு கூட்டம் எப்போதும் அவர்கள் எழுதிய நூல்களைக் குறிவைத்து குறை கூறி வந்தனர்

ஹிஜ்ரி 835ல் டமாஸ்கஸில் ஹன்பலிகளுக்கு அஷ்அரீகளுக்குமிடையில் கொள்கை தொடர்பான தர்க்கம் ஏற்பட்ட போது ஷெய்கு அலாவுத்தீன் புகாரீ என்பார். "எவர் இப்னு தைமிய்யாவை ‘ஷெய்குல் இஸ்லாம்’ என்று இப்னு தைமிய்யாவைக் கூறுபவன் காபிர் என்று சொன்னவருக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் ஒரு நூல் எழுதி‘அர்ரத்துல் வாஃபிர் அலாமன் ஸஅம அன்னமன் ஸம்மா இப்னு தைமிய்யா ஷைகல் இஸ்லாமி காபி’ எனஅந்நூலுக்குப் பெயர் சூட்டினார். அதில் இமாம் இப்னு தைமிய்யாவைப் பற்றி அவர்கள் காலத்திய சுமார் ஐம்பதுக்கும் அதிகமான அறிஞர் பெருமக்களின் அபிப்பிராயங்களையும் புகழ் மாலைகளையும் எடுத்தெழுதியுள்ளார்கள். அவர்களில் பிரபலமான, அதிகமான அறிஞர்கள் ஷாபிஈ மத்ஹபைச் சார்ந்தவர்களாவர். அவர்கள் அனைவரும் இமாம் தைமிய்யாவைப் பாராட்டியே எழுதியுள்ளார்கள். அவர்களின் எதிரிகளைச் சாடியுள்ளார்கள்." ஹாபிஸ் இப்னு ஹஜர் அஸ்கலான்(ரஹ்) எழுதியுள்ளதாவது:

"இமாம் இப்னு தைமிய்யா அவர்களுடைய மாணவர் அல்லாமா இப்னுல் கய்யிம்(ரஹ்) அவர்கள் என்ற ஒரு சிறப்பே இமாம் அவர்களுடைய மகத்துவத்திற்குப் போதுமாகும்."

"எதிரிகள் பொறாமையின் காரணமாகவே இப்னு தைமிய்யாவை ‘காபிர்’ என்றும், ‘ஊக்கமற்றவர்’ என்றும் எழுதியுள்ளார்கள். அவர்களின் நூல்களில் இதற்கு எந்த ஆதாரமும் கிடையாது" என்ற ஸாலிஹ் இப்னு உமர்பல்கீஸ் ஷாபிஈ என்பார் எழுதியுள்ளார்கள்.

ஷெய்கு மஹ்மூது பின் அஹ்மது அல்ஐனி ஹனபீ அவர்கள் எழுதியுள்ளதாவது :

"எவர் இப்னு தைமிய்யாவை ‘காபிர்’ என்றும் ‘வழிகெட்டவர்’ என்றும் கூறுகிறாரோ அவர்தான் காபிர்; வழிகெட்டவராவார். அவர்களைக் காபிர் என்று கூறுபவர் முட்டாளாயிருக்க வேண்டும்; அல்லது பைத்தியக்காரராக இருக்க வேண்டும். முதலாமவரை முகத்தில் கரியைப் பூசி சிறையிட வேண்டியதே அவருக்குரிய தண்டனையாகும். இரண்டாவது தன்மையுடையவருக்குத் தண்டனை, அவரை உதைத்து அவருடைய முனையைச் சரிப்படுத்துவதாகும்."

இப்னு அரபீ முதலானோர் மீது இப்னு தைமிய்யா அவர்கள் குறை கூறியதன் காரணமான அவர்களைப் பற்றி அல்லாமா இப்னு ஹஜர் ஹதமீ மக்கீ அவர்கள் காரசாரமாகக் கண்டித்துள்ளார்கள்.

"அவரை அல்லாஹ் கேவலப்படுத்திவிட்டான். வழி கெடுத்துவிட்டான். அவரைச் செவிடராகவும் குருடராகவும் ஆக்கி இழிவுபடுத்திவிட்டான்" என்று கூறியுள்ளார்கள். இந்தப் பத்வாவின் காரணமாகப் பெரும் குழப்பம் ஏற்பட்டது. பக்தாது நகரின் மிகப் பிரபலமான அறிஞர் கைருத்தீன் நுஃமான் ஆலூஸீ ஸாதஹ் என்பார். ‘ஜியாஉல் ஐனன்ஃபீ முஹாக்கமத்தில் அஹ்மதைன்’ என்ற பெயரில் அதற்கு மறுப்பாக ஒரு நூல் எழுதினார்கள். அதில் இப்னு ஹஜர் மக்கீயின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்குப் பதில் கொடுத்துள்ளார்கள்.

இதில் ஒரு வினோதம் என்னவெனில், இப்னு ஹஜர் மக்கீ அவர்களின் மாணவர் முல்லா அலீகாரு அவர்கள் தம் ஆசிரியரின் அபிப்பிராயத்துக்கு நேர்மாற்றமான அபிப்பிராயம் கூறி இருப்பதாகும்.

அவர்கள் மிஷ்காத்தின் விரிவுரையில், "இப்னு தைமிய்யா, இப்னுல் கய்யிம் இருவரும் இந்த உம்மத்தின்இறைநேசர்கள்(அவ்லியாக்கள்) ஆவர்" என்று கூறியுள்ளார்கள்.

"எவர்கள், ‘மனாஸிலுஸ் ஸாஇரீன்’ என்ற நூலின் விரிவுரையைப் படிப்பார்களோ, அவர்களுக்கு அவ்விருவரும்(இப்னு தைமிய்யா, இப்னுல் கய்யிம்) சுன்னத் ஜமாஅத்தையுடையோர்களின் மாபெரும் மகான்களைச் சேர்நத்வர்கள் என்பதும், இந்த உம்மத்தின் அவ்லியாக்களைச் சேர்ந்தவர்களென்பதும் தெரியவரும்" என்றுகூறியுள்ளார்கள்.

இந்தியாவிலும் இப்னு தைமிய்யா அவர்களைப் பற்றி அநேகத் தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டன. ஷாஹ்வலியுல்லாஹ் முஹத்திஸ் தெஹ்லவீ அவர்கள் அதைப் போக்கப் பெரும் பாடுபட்டுள்ளார்கள். ஷெய்கு மக்தூம்ம முஈனுத்துன் என்பார் இமாம் இப்னு தைமிய்யாவுடைய கொள்கைகளையும் எண்ணங்களையும் பற்றி, ஷாஹ்வலியுல்லாஹ் அவர்களின் கருத்தைக் கேட்டிருந்தார். அதற்கவர்கள் கீழ்வருமாறு எழுதியனுப்பினார்கள்:

"நாம் அவர்களின் நிலைமைகளைப் பற்றி ஆராய்ந்தோம்; அவர்கள் இறைவேதத்தின் அகராதிப் பொருளையும் அதன் ஷரீஅத் தொடர்பான பொருளையும் நன்கு அறிந்திருந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்களின் நடைமுறை, முந்தைய நல்லோர்களின் பொன்மொழிகள் ஆகியவற்றின் அகராதிப் பொருளையும் ஷரீஅத்தில் அதற்கான பொருளையும் நன்றாக உணர்ந்திருந்தார்கள். இலக்கண இலக்கியத்தில் பெரும் மேதையாக இருந்தார்கள். ஹன்பலீ மத்ஹபின் அடிப்படைச் சட்டங்களையும், உட்பிரிவுகளையும் பலப்படுத்தக் கூடியவர்களாய் இருந்தார்கள். அதிக நான்மை படைத்தவர்களாயும் மொழி வல்லுனராயுமிருந்தார்கள். சுன்னத் ஜமாஅத்தாருடைய கொள்கைகளின் சார்பில் வாதாடுவோராயிருந்தார்கள். அவர்கள் பாவச்செயல்களில் ஈடுபட்டார்களென்றோ அல்லது அனாச்சாரங்கள் செய்தார்களென்றோ வரலாற்றில் சொல்லப்படவில்லை. சில செயல்களின் காரணமான அவர்கள் இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டார்கள். ஆனால் அவர்கள் குர்ஆன், ஹதீஸ், முன்னோர்களின் மொழிகள் இவற்றின் ஆதாரமின்றி எதையும் கூறவில்லை. அவர்களைப் போன்ற ஒரு மகான் கிடைப்பது அரிது. எழுத்து வன்மையிலும் பேச்சு வன்மையிலும் அவர்களுக்கு நிகராக எவர் வர இயலும்? எவர் அவர்களை எதிர்த்தார்களோ அவர்கள் இமாமவர்களிடமிருந்த கல்வி அறிவில் பத்தில் ஒரு பங்கைக் கூடப் பெற்றிருக்கவில்லை. அந்த அறிவு அவர்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்டதாகும். அவர்களின் ஆராய்ச்சித் திறனின் காரணமாக அவர்களுக்குத் தொல்லைகள் கொடுக்கப்பட்டன. இத்தகைய விஷயங்களில் அறிஞர்களுக்கிடையே ஏற்படுகின்ற சச்சரவுகள் நபித்தோழர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைப் போன்றவையே. இத்தகைய விஷயங்களில் நாவை அடக்கிக் கொள்ள வேண்டியது. அவசியம். நல்லதையே சொல்ல வேண்டும்."

ஷாஹ் வலியுல்லாஹ் தஹ்லவி அவர்களின் இத்தகைய சாட்சியத்திற்குப் பிறகு வேறெந்த சாட்சியத்திற்கும் அவசியமில்லை.


நூல்கள்;

இமாம், இப்னு தைமிய்யாவுடைய வாழ்க்கையின் இறுதி 30 ஆண்டுகள் பல சோதனைகள் நிறைந்தனவாய் விளங்கின. அந்நாட்களில் அவர்களின் நாவுக்கும் பேனாவுக்கும் இரவு பகல் ஓய்வில்லாதிருந்தது. நூல் எழுதவேண்டும் என்ற நோக்கத்தோடு அவர்கள் எந்த நூலையும் எழுதியதில்லை. சமய சந்தர்ப்பத்திற்கேற்ப அவர்கள் எழுதலானார்கள். அவர்கள் சந்தர்ப்ப சூழ்நிலைகளின் காரணமாக, கருத்து வேறுபாடுள்ள விஷயங்களில் தம் கருத்துக்களைத் தெரிவிக்கலானார்கள்; அல்லது மக்களின் கேள்விகளுக்கு பதில் எழுதினார்கள்; அல்லது மற்றவர்களின் தூண்டுதலால் ஷியாக்கள், கிருஸ்த்தவர்கள், அத்வைதவாதிகள், தத்துவ ஞானிகள், தர்க்கமேதைகள் ஆகியோருக்கு மறுப்புத் தெரிவித்து எழுதியுள்ளார்கள்; அல்லது அக்காலத்தின் தேவையையொட்டி மற்றவர்களுக்குக் கடிதங்கள் எழுதியுள்ளார்கள்.

அவர்கள் எழுதிய நூல்களின் எண்ணிக்கையை வரையறுத்துக் கூறுவதற்கில்லை. அவர்கள் எழுதிய நூல்கள்ம முன்னூறு என்று சிலரும், ஐந்நூறு என்று சிலரும், ஆயிரம் என்று வேறு சிலரும் கணித்துள்ளனர். ஆனால் இவையனைத்தும் அவரவர்களின் கணிப்பேயாகும். இமாமவர்கள் அதிவேகமாக எழுதக்கூடியவர்களாய் இருந்தார்கள் என்பதில் ஐயமில்லை. அவர்களிடம் ஆதாரம் காட்டிட, எடுத்துக்காட்டுகளையும் மேற்கோள்களையும் கொண்ட நூல்கள் இருப்பதில்லை. அவர்களின் மூளையே ஒரு நூல் நிலையமாய்த்தானிருந்தது. எனவே எடுத்துக்காட்டுகளைத் தேடுவதற்கென அவர்கள் சிரமப்பட வேண்டியிருப்பதில்லை.

அதிகமாக அவர்களிடம் பலரும் கேள்வி கேட்கவே வருவார்கள். இருந்த இடத்திலேயே சொற்ப நேரத்தில் அதற்குரிய பதிலை எழுதிக் கொடுத்து விடுவார்கள்.

"அல் அகீதத்துல் ஹமவிய்யத்துல் குப்ரா’ என்ற நூல் ஐம்பத்தாறு பக்கங்களைக் கொண்ட ஒரு நூல் ஆகும். இதை அவர்கள் லுஹர் தொழுகைக்கும் அஸர் தொழுகைக்குமிடையில் எழுதி முடித்தார்கள்."

இவ்வளவு வேகமாக எழுதக் கூடியவர்களின் நூல்களும் அதிகமாகத்தானிருக்கும் என்பது தெளிவு. "முந்திய, பிந்திய அறிஞர்களுள் இமாமவர்களை விட அதிகமாக நூல்களை இயற்றியவர் எவரையும் நான் கண்டதில்லை" என்று ஹாபிஸ் இப்னு அப்துல்ஹாதி என்பார் கூறியுள்ளார்கள்.

இமாமவர்கள் தமது நினைவாற்றலைக் கொண்டே பல நூல்களை எழுதினார்கள் என்பது உண்மை. அதுவும் அவர்களின் பல நூல்கள் சிறைச்சாலையில் எழுதப்பட்டவை. அவர்களிடம் அப்பொழுது மேற்பார்வைக்குரிய நூல்கள் எதுவுமிருந்ததில்லை.

இறுதி நாட்களில் இமாமவர்களிடம் திருக்குர்ஆனுக்கு விளக்கவுரை எழுதுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. அதற்கவர்கள், "திருக்குர்ஆனின் சில வசனங்கள் மிகத் தெளிவாக உள்ளன. சிலவற்றிற்கு விரிவுரையாளர்கள் தங்கள் நூல்களில் விளக்கம் கொடுத்துள்ளார்கள். சில வசனங்களுக்கு இன்னும் விளக்கம் சரியாகத் தெரியவில்லை. அவற்றை விளங்குவதற்காக ஒரு மனிதர் பல விரிவுரைகளைப் படிக்கிறார். அவ்வாறிருந்தும், அநத் வசனங்களை விளங்க இயலாமல் போய்விடுகிறது. பல வசனங்கள் விரிவுரையாளர்களின் கருத்துவேறுபாடு காரணமாக விளங்க இயலாமல் போய்விடுகின்றன. எனவே இத்தகைய இக்கட்டான வசனங்களுக்கு மட்டும் விளக்கமளித்து ஆதாரங்களும் கொடுக்க ஆசைப்படுகிறேன். ஏனெனில், மற்ற வசனங்களை விட இத்தகைய நுட்பமான வசனங்களுக்கு விளக்கமளிப்பது மிக மிக அவசியம். இப்போது இறைவன் எனக்கு திருமறையின் பொருள்களையும் அடிப்படை அறிவுகளையும் விளங்கும் வாயிலைத் திறந்து விடடான். திருக்குர்ஆனை விட்டு விட்டு மற்றக் கலைகளில் நம் நேரத்தை ஏன் வீணாக்கினோம் என நான் நினைக்கிறேன்." என்று கூறினார்கள்.

கடைசி முறையாக அவர்கள் சிறையிலிடப்பட்ட போது அவர்களுடைய நண்பர்களும் ஆதரவாளர்களும், அரசாங்கம் தங்களிடமுள்ள நூல்களைப் பறிமுதல் செய்துவிடக்கூடாதே எனப் பயந்து, அவற்றை மறைத்துவைத்தனர். இமாமவர்கள் சிறையிலிருந்து போது நிறைய எழுதினார்கள். எதிரிகள் அவற்றைக் கைப்பற்றிக்கொண்டதாகக் கூறப்படுகின்றது. அவை பதினான்கு கட்டுகளிலிருந்தன. அவற்றில் திருக்குர்ஆனின் நுணுக்கமான வசனங்களின் விளக்க உரையுமிருந்தது.

அவை மட்டும் நாற்பது பாகங்களிருந்தன" என்று பிரபலமான பயணி இப்னு பதூத்தா எழுதியுள்ளார்.

சமாதிகளைத் தரிசிப்பது குறித்தும் இமாமவர்கள் பல சிறிய நூல்கள் எழுதி இருந்தார்கள். அவை அனைத்தும் அரசாங்கத்தால் பறிக்கப்பட்டன. பதினான்கு ஆண்டுகளாக அவை அரசாங்கத்தின் பிடியிலிருந்தன. அமீர்ஸைபுத்தீன் என்பவர் டமாஸ்கஸின் அரசுப் பிரதிநிதியாக வந்தபோது அந்நூல்களையெல்லாம் திரும்பக்கொடுக்க ஏற்பாடு செய்தார். ஏனெனில், அவர் இமாமவர்களை மதிக்கக் கூடியவராய் இருந்தார். இமாமவர்களின் சகோதரர் அப்துர்ரஹ்மான் அவர்களையும் ஹாபிஸ் இப்னுல் கையிம் அவர்களையும் அழைத்து, நூல்களனைத்தையும் அவர்களிடம் ஒப்படைத்தார். அவர்களிருவரும் அந்த அதிகாரிக்கு நன்றி கூறி, நூல்களைப் பெற்றுச் சென்றனர்.

இமாம் இப்னு தைமிய்யா அவர்கள் மார்க்கச் சட்டம், தத்துவ ஞானம், தர்க்க சாத்திரம் போனற பொருள்கள் பற்றி நிறைய எழுதியுள்ளார்கள். ஒவ்வொரு பிரச்சினையையும் குர்ஆன் ஹதீஸின் ஆதாரங்கள் மூலமாகவே நிரூபிப்பார்கள். ஆதலால் அவர்களின் எழுத்தில் அசாதாரண வேகம் உண்டாகிவிடுகின்றது. அவர்களின் கருத்துக்களை விளங்குவதில் எந்தக் கஷ்டமுமில்லாத முறையில் அவர்களின் உரைநடைப் பாணி அமைந்துள்ளது.

இமாமவர்களின் சில நூல்கள் அச்சாகிவிட்டன. சில கையெழுத்துப் பிரதிகளாகவே இன்னும் உள்ளன. அநேகநூல்களின் பெயர்கள் மற்ற நூல்களிலும் வரலாற்றேடுகளிலும் காணப்படுகின்றன. ஆனால், அவை எங்கும் காணக் கிடைக்கவில்லை. இவ்வகையில் இமாமவர்களின் எழுத்துப் படைப்புகளை மூன்று வகையாகப்பிரிக்கலாம் அவை.

1)அச்சிடப்பட்டவை 
2) கையெழுத்து பிரதிகள் 
3) கிடைக்க அரிதாகிவிட்டவை.


அச்சிடப்பட்ட நூல்கள் :-

பதிப்பில் வந்துவிட்ட நூல்களின் ஒரு பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. ‘இப்னு தைமிய்யாவின் மார்க்கத் தீர்ப்புகள்’ இந்த நூல் ஐந்து தொகுப்புகளில் வெளிவந்துள்ளது.

2. ‘விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்ணை ஹலாலாக்கிக் கொடுப்பது’.

3. மற்ற அறிஞர்களின் கருத்துக்களுக்கு மாற்றமாக இமாம் அவர்கள் குர்ஆன், ஹதீதின் ஆதார அடிப்படையில் கூறிய கருத்துக்கள்.

4. இந்நூலில் நாயகம்(ஸல்) அவர்களைத் திட்டக்கூடியவனைப் பற்றிய எல்லா விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் ‘தாயிரதுல் மஆரிப்’-என்ற ஹைதராபாத் நூல் வெளியீட்டு நிறுவனம் இதைபிரசுரமாக்கியுள்ளது.

5. ஸைதா, அந்தாகியா ஆகிய நகரங்களின் பாதிரியாயிருந்த பால் என்பவரின் ஒரு நூலுக்கு மறுப்பாக எழுதப்பட்டது இந்நூல். இது நான்கு பாகங்களாக வெளிவந்துள்ளது. இவற்றின் மொத்த பக்கங்கள் சுமார் 1400 ஆகும்.

6. இந்நூலில் ஷியாக்களின் தவறான கொள்கைகளுக்கு மறுப்பு எழுதப்பட்டுள்ளது. இதுவரை இத்துறையில் எழுதப்பட்ட நூல்களுள் இது நிகரற்று விளங்குகிறது.

7. இந்நூலில் இஸ்லாமியப் போதனைகள் அறிவுக்கப்பாற்பட்டவை அல்ல மனித அறிவுக்குப் பொருத்தமானவையே என்பது விளக்கப்பட்டுள்ளது.

8. பல சந்தர்ப்பங்களில் எழுதப்பட்ட சிறு சிறு நூல்களின் தொகுப்பு இது. இரண்டு பாகங்களாக இந்நூல் அமைந்துள்ளது. சுமார் 875 பக்கங்களைக் கொண்டது.

9. இதிலும் பல கேள்விகளுக்குக் கொடுக்கப்பட்ட பதில்கள் சிறு சிறு நூல்களாகத்தொ குப்பட்பெற்றுள்ளன. சுமார் 220 பக்கங்களைக் கொண்டது.

10. ஐந்து பாகங்களாக இந்நூல் பிரசுரமாகியுள்ளது. மொத்தம் 900 பக்கங்களைக் கொண்டது.

11. இஸ்லாமியக் கொள்கைகள் தொடர்பான விளக்கங்ளக் இதில் கொடுக்கப்பட்டுள்ளன.

12. இந்நூலில் தர்க்கக் கலையின் குறைபாடுகளை எடுத்துக்காட்டியுள்ளார்கள் இமாமவர்கள்.

13. இந்நூலில் ஈமான் - இஸ்லாம் என்பதின் பொருள் விளக்கம், குர்ஆன், ஹதீதின் ஒளியில் கொடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய கருத்து வேறுபாடுகளை எடுத்துக்கூறி, தம் கருத்துக்களையும் விளக்கியுள்ளார்கள் இமாமவர்கள்.

14. சூரத்துல் இக்லாஸ்-குர்ஆனின் மூன்றிலொரு பங்கு என்று கூறப்பட்டதின் கருத்தென்ன? அதைப் பற்றிய சாதக பாதகமான கேள்விகளுக்கு இந்நூலில் பதில் கொடுக்கப்பட்டுள்ளது.

15. இந்நூலில் காபிர்களுடனும் முஷ்ரிக்களுடனும் ஒப்புமை ஏற்படுத்தக்கூடிய ஆசாரங்களையும் அனாச்சாரக்ளையும் இமாமவர்கள் கூறியுள்ளார்கள்.
இந்நூலின் மூலம் இமாமவர்களின் காலத்து முஸ்லிம்களின் சமுதாய வார்க்கையைப் பற்றி நாம் அறியமுடிகின்றது. அக்காலத்தில் முஸ்லிம்களிடம் தோன்றிவிட்டிருந்த பித்அத்களை (அனாச்சாரங்களை)ப்பற்றியும் தெரிந்து கொள்ள முடிகின்றது.

16. நுபுவ்வத்-முஃஜிஸா, கராமத் ஆகியவை பற்றி விபரமாக ஆராயும் நூல் இது. சுமார் 300 பக்கங்களைக்கொண்டது.

17. 80 பக்கங்களுள்ள இந்நூலில், ஆட்சியாளருடையவும் அதிகாரிகளுடையவும் பொதுமக்களுடையவும் கடமைகள் கூறப்பட்டுள்ளன.

18. இந்நூலில் சூரதுல் இக்லாஸ் உடைய விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. 140 பக்கங்கள் கொண்டது.

19. சூரதுன்னூருடைய விளக்க நூல். 132 பக்கங்களில் அமைந்துள்ளது.

20. சூரத்துல் அஃலா, அஷ்ஷம்சு, அல்லைல், அல்அலக், அல்பய்யினா, அல்காபிரூன் ஆகிய சூரத்துகளின்விளக்கவுரை. இது சுமார் 500 பக்கங்களைக் கொண்டது.

21. இதில் நபி(ஸல்) அவர்கள் தினமும் ஓதி வந்த ‘திக்ருகள்’ எழுதப்பட்டுள்ளன. இதன் பக்கங்கள் 104 ஆகும்.

22. நபி(ஸல்) மற்ற நபிமார்கள், நல்லோர் ஆகியோரைக் கொண்டு வஸீலா தேடுவது ஆகுமா? ஆகாதா? என்பதுபற்றி இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது. தமிழில் செய்யது முஹம்மது மதனீ இதைத் தமிழாக்கம் செய்துள்ளார்.

23. சைப்ரஸ் நாட்டைச் சேர்ந்த கிருத்தவர்களுக்கு எழுதப்பட்ட கடிதம். இருபத்து மூன்று பக்கங்களைக்கொண்ட ஒரு சிறிய நூல்.

24. ‘இறை நேசச் செல்வர்களும் ஷைத்தானின் தோழர்களும்’ என்ற பெயரில் கமாலுத்தீன் மதனீயால் தமிழில்மொழி பெயர்க்கப்பட்டுள்ள இந்நூல், இறைநேசர்களையும் ஷைத்தானுடைய நேசர்களையும் பிரித்தறியும்முறைகள் பற்றி விவரிக்கிறது.

25. மனைவியை விவாகரத்து செய்வேன் என்று ஒருவன் சத்தியம் செய்தால், அவன் அதற்குப் பிராயச்சித்தம்கொடுக்கலாமா? கூடாதா? என்பது பற்றி இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது.

26. இமாமுத்தீன் அல்வானீ என்பவர் இமாமவர்களிடம் கேட்ட நாற்பது நபி மொழிகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.

27. இதில் பல சிறு சிறு நூல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

28. அறுபத்தெட்டு பக்கங்களைக் கொண்ட இந்நூலில் ஈமானின் அடிப்படைகள், தீனுடைய சட்டங்கள், இறைநேசம், தூதர் மீது அன்பு ஆகிய பொருள்கள் பற்றி விளக்கப்பட்டுள்ளது.

29. இந்நூலில் சூபிய்யாக்களைப் பற்றியும் பகீர்கள் பற்றியும் விவரிக்கப்பட்டுள்ளது. 32 பக்கங்களைக் கொண்ட ஒரு சிறு நூல் இது.

30. ஹகீகத் - மஜாஸ் என்பதற்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ள ஒரு சிறிய நூல்.

31. "செயல்கள் எண்ணங்களைப் பொறுத்தே அமைந்துள்ளன." என்ற நபிமொழிக்கு விளக்கம் தரும் சிறிய நூல். 30 பக்கங்களைக் கொண்டது.

32. 129-பக்கங்களுள்ள இந்நூலில் இறைவனின் திருநாமங்களைப் பற்றியும் பண்புகளைப் பற்றியும் தர்க்கரீதியான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

33. நாயகம்(ஸல்) அவர்களைக் கொண்டு பாதுகாப்பு தேடுதல் பற்றி நூருத்தீன் பிக்ரீ என்பார் கூறிய கருத்துக்களுக்கு இந்நூலில் மறுப்பு எழுதப்பட்டுள்ளது.

34. காஜி தகிய்யுத்தீன் அக்னாயீ மாலிக்கீ உடைய ஆட்சேபனைகளுக்கு மறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

35. 32 பக்கங்களையுடைய இந்நூலில் மூஸா(அலை) அவர்களுடைய உரைகளிலுள்ள ஆதாரக்ள் பற்றிக்கூறப்பட்டுள்ளது.

36. குர்ஆன் இறைவனுடைய சொல்லேயன்றி, முஹம்மத்(ஸல்) அவர்களுடைய சொல்லோ அல்லது
ஜிப்ரயீலுடைய சொல்லோ அல்ல என்ற விஷயம் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது.

37. "குர்ஆன் ஏழுவகை உச்சரிப்புகளில் இறக்கப்பட்டுள்ளது" என்ற நபிமொழி பற்றிய ஒரு வினாவுக்கு விளக்கமான விடை இந்நூல். 116 பக்கங்களைக் கொண்டது.

38. இந்நூலில் இப்னு ருஷ்துடைய கருத்துக்களைப் பற்றிய இமாமவர்களின் கண்டனம் விளக்கப்பட்டுள்ளது. 14 பக்கங்களுள்ள ஒரு சிறிய நூலிது.

39
40
41
42
43
இந்த ஐந்து சிறு நூல்களும் குர்ஆனைப் பற்றி தர்க்க ரீதியான சர்ச்சைகளுக்கு விளக்கமாக அமைந்துள்ளன.

44. இலக்கணம் தொடர்பான ஒரு விளக்கம்.

45. தாத்தாரியர்களுடன் போர் புரிமாறு முஸ்லிம்களைத் தூண்டி எழுதப்பட்ட நூல் இது.

46. இதில் தக்தீர்(விதி) பற்றிய சில ஆட்சேபனைகளுக்கு கவிதை வடிவில் பதில் கொடுக்கப்பட்டுள்ளது.


கையெழுத்துப் பிரதிகள்.

இமாமவர்களுடைய சில நூல்களில் கையெழுத்துப் பிரதிகள் இன்றும் நூல் நிலையங்களுக்கு அழகூட்டிக்கொண்டிருக்கின்றன. அவற்றில் சில சிறுக சிறுக வெளிவர ஆரம்பித்துள்ளன.

1. 508 பக்கங்களிலுள்ள இந்நூலில் எகிப்து, சிரியா அறிஞர்களுடன் இமாமவர்கள் நிகழ்த்திய விவாதங்கள்தொகுப்பட்டுள்ளன. இந்தப் பிரதிநித்வதுல் உலமா-லக்னோ-வில் உள்ளது.

2. விதியைப் பற்றிக் கேட்கப்பட்ட வினாவுக்கு இதில் பதில் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் பிரதியும் லக்னோ-நத்வதுல் உலமா நூல் நிலையத்திலுமுள்ளது.

3. நரகம் முடிந்து போவதைப் பற்றி இப்னுல் கய்யிம் அவர்கள் இமாமவர்களிடம் ஒரு வினா விடுத்தார்கள். உடனே பதில் கூறவில்லை.

"இது ஒரு சிக்கலான பிரச்சினை" என்று மட்டும் கூறினார்கள். பிறகு இந்த நுலை எழுதினார்கள் என்று தெரிகிறது. இது ஒரு சிறிய நூல் தான். நத்வதுல் உலமா-லக்னோ நூல் நிலையத்தில் இதன் கையெழுத்துப் பிரதிஉள்ளது.

இவையன்றி மற்றும் பல நூல்கள் பல நூல் நிலையங்களில் உள்ளன.

4. இந்நூல்போட்லின் நூலகத்திலுள்ளது.
5. இந்நூல் லண்டனிலுள்ள ‘பிரிட்டிஷ் மியூசியத்தில்’ உள்ளது.
6.
7.
8. இந்நூல் பாரிஸில் உள்ளது.
9. இந்நூல் பெர்லினில் உள்ளது.
10.
11.
12.
13.
14.
15.
16. இந்தியா ஆபீஸ் லைப்ரரி லண்டன்
17.
இன்னும் பல நூல்கள் கையெழுத்துப் பிரதிகளாக பல நூல் நிலையங்களில் காணப்படுகின்றன.
கிடைக்க அரிதாகிவிட்ட நூல்கள்.

ஹாபிஸ் இப்னு அப்துல் ஹாதி என்பார் அல்உகூத்துத் துர்ரிய்யா என்ற தமது நூலில் இமாமவர்களின் பலநூல்களுடைய அட்டவணை கொடுத்துள்ளார்கள். அவற்றில் சில பதிப்பிக்கப்பட்டு வந்துள்ளன. ஆனால் அநேக நூல்களைப் பற்றி துப்பே கிடைக்கவில்லை. இத்தகைய நூல்களைப் பற்றி விளக்கமாக அறிய வேண்டுமாயின்மேலே குறிப்பிடப்பட்ட நூலில் அதைப்பற்றி விரிவாகப் பார்க்கலாம். விரிவஞ்சி இத்துடன் விடுகிறேன்.


இமாமவர்களின் மாணவர்கள்:

இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்) அவர்கள் தம் தந்தை அப்துலஹலீம் அவர்களின் மறைவுக்குப் பிறகு ஹிஜ்ரி 682-முதல் ஆசிரியப் பணியைத் தொடங்கினார்கள். அன்று முதுல் அவர்கள் இறந்தஜ்ரி 728 வரை இப்பணிதொடர்ந்து நடந்து கொண்டே இருந்தது. டமாஸ்கஸ், கெய்ரோ, அலெக்ஸாண்டிரியா முதலான இடங்களில்சிறையிலிருந்த போதும் பல மனிதர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தார்கள்.

அவர்களுள் சிலர் முறையாக அவர்களுடைய மாணவர்களாகவே இருந்தனர். சிலர் அவர்களின் நண்பர்கள்; எனினும் சிறப்பைக் கருதி, அவர்களின் மாணவர் குழுவில் சேர்ந்து கொண்டார்கள். மற்றும் சிலரோ, இமாமவர்களின் மாணவர் என்று சொல்லிக் கொள்வதற்காக அவர்களுடைய நூல்களை விளக்கி எடுத்துச்சொல்ல அனுமதி பெற்றுக் கொண்டனர். இவ்வாறு சப்தா நாட்டு அதிகாரி, இஸ்பஹான், கார்டோவா, தப்ரோஸ்போன்ற நகரங்களிலுள்ள சில மனிதர்கள் மூன்றாவது பிரிவைச் சேர்ந்தவர்களே!

இரண்டாவது பிரிவைச் சேர்நத்வர்கள் ஷெய்கு பர்ஸால், ஷெய்கு அபுல் ஹஜ்ஜாஜ் மிஸ்ஸீ, ஷெய்கு அப்பாஸ்வாஸிதீ போதன்றவர்களாவர். அவர்கள் அனைவரும் மாபெரும் மேதைகளாவர். அத்தகையோர் இமாம்அவர்களின் மாணவர் குழாமில் தங்களையும் இணைத்துக் கொள்ள விரும்பினார்களென்றால், இமாமவர்களின்அறிவுத் திறனுக்கு இதைவிட மேலான ஆதாரம் வேறு என்ன வேண்டும்?

(1) ஹாபிஸ் இப்னுல் கய்யிம்(ரஹ்)

இமாமவர்களின் மாணவர்களுள் மிகச் சிறப்பிற்குரியவர்கள் அல்லாமா இப்னுல் கய்யிம் அவர்களாகவார். அவர்கள் தம் நாவாலும் எழுத்தாலும் இமாவர்களின் கருத்துக்களைப் பரப்புவதில் அதிக ஈடுபாடுஉடையவர்களாய் இருந்தார்கள். இப்னுல் கக்யிம் அவர்கள் வயதால் மற்ற மாணவர்களை விட இளையவர். மாணவராயிருந்த காலமும் குறைவு. இவ்வளவு குறைந்த காலத்தில் அன்றைய நடைமுறையிலிருந்த கலைகளில் இப்னுல் கய்யிம் அவர்கள் தேர்ச்சி பெற்ற வேகம் வியக்கத்தக்கது. இமாமவர்களின் கலைத்திறன் முழுவதற்கும் இவர்கள் மிகச் சிறந்த பிரதி பிம்பமாகத் தோன்றினார்கள். அவர்களிருவரும் ஓருயிரும், ஈருடலுமாய் இருந்தார்கள் என்று கூறினால், அது மிகையாகாது.

இப்னுல் கய்யிம் அவர்களுக்கு எழுத்துத் துறையில் நல்ல ஆற்றிலிருந்து தம் ஆசிரியரின் ஆராய்ச்சிக் கருத்துக்களைத் தமது நூல்களில் அழகிய முறையில் வடித்துத் தந்தார்கள்.

அவர்களின் இயற்பெயர் முஹம்மத்; கூப்பிடு பெயர் அபூ அப்துல்லாஹ்; சிறப்புப் பெயர் ஷம்சுத்தீன்; புனை பெயர் இப்னுல் கய்யிம். அவர்களின் தந்தை அபூபக்ர் என்பார் ஜவ்ஸிய்யா மத்ரஸாவின் (கய்யிம்) நிர்வாகியாக இருந்தார்கள். எனவே இவர்களுக்கு இப்னுல் கய்யிம் (நிர்வாகியின் மகன்) என்ற புனை பெயர் ஏற்பட்டது.

இப்னுல் கய்யிம் அவர்கள் ஹிஜ்ரி 691ல் டமாஸ்கஸில் பிறந்தார்கள். முதலில் திருக்குர்ஆனை மனனம் செய்தார்கள். பிறகு தம் தந்தையிடமும் மற்ற ஆசிரியர்களிடமும் நடைமுறையிலிருந்த கலைகளில் தேர்ச்சிபெற்றார்கள். இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்) அவர்கள் ஹிஜ்ரி 712ல் எகிப்திலிருந்து டமாஸ்கஸ் வந்த பின்அவர்களுடைய மாணவர் குழுவில் சேர்ந்தார்கள் இப்னுல் கய்யிம். இறுதிவரை இமாமவர்களுடனேயே இருநத்தார்கள். ஹிஜ்ரி 723ல் இவர்களின் தந்தை இறந்த பிறகு, ஜவ்ஸிய்யா மத்ரஸாவின் பணியில் சேர்ந்தார்கள்.

ஹாபிஸ் இப்னுல் கய்யிமின் ஆசிரியர்களுள் ஷெய்கு ஸபிய்யுத்தீன் ஹிந்தியும் ஒருவர். அவர் இப்னு தைமிய்யாஅவர்களின் எதிரிகளுள் ஒருவர். இப்னு தைமிய்யாவிடம் வாக்குவாதமும் புரிந்துள்ளார்.
ஹாபிஸ் இப்னுல் கய்யிம் ஷெய்கு ஸபிய்யுத்தீனிடம் அடிப்படை விதிகளின் கலையைப் பயின்றார்கள். 715-ஹிஜ்ரியில் அவர்கள் காலஞ்சென்ற பிறகு இப்னு தைமிய்யா அவர்களுடனேயே இருக்கலானார்கள்.

ஹிஜ்ரி 726ல் சமாதிகளைத் தரிசித்தல், வசீலா தேடுதல், அபயம் தேடுதல் தொடர்பான பிரச்சினைகளில் குழப்பம் ஏற்பட்ட போது, இப்னுல் கய்யிம் அவர்கள் தம் ஆசிரியரின் கருத்துக்களை பலமாக ஆதரித்தார்கள். முடிவாக டமாஸ்கஸ் அரசு இவர்களையும் கைது செய்து சிறையில் தள்ளியது.

இவர்களின் ஆசிரியர் இமாமவர்கள் மரணமெய்திய பின் ஹிஜ்ரி 728ல் விடுதலையானார்கள்.

ஹாபிஸ் இப்னுல் கய்யிம் மத்ரஸா ஸத்ரிய்யாவில் பாடம் நடத்தி வந்தார்கள். ஜவ்ஸிய்யா மத்ரஸாவின் மஸ்ஜிதில்இமாமாகவும் பணியாற்றி வந்தார்கள். மற்ற ஓய்வு நேரங்களில் நூல்கள் எழுதி வந்தார்கள்.

தலாக், ஸியாரத்துல் குபூர் வஹ்ததுல் உஜுத் போன்ற பிரச்சினைகளில் அவர்களின் ஆசிரியருடைய கருத்துக்களையே பின்பற்றி வந்தார்கள். அதன் காரணமாக அவர்கள் பல இன்னல்களுக்காளானார்கள்.

பிரதம நீதிபதி தகிய்யுத்தீன் சுப்கீ ஷாபிஈ அவர்கள் நீதிபதியாக டமாஸ்கஸ் வந்தபோது இப்னுல் கய்யிம் அவர்கள் தலாக் விஷயத்தில் தம் ஆசிரியருக்கு ஆதரவு தெரிவித்த காரணத்தால், ஸுப்கீயின் கோபத்திற்காளானார்கள். ஒருமுறை சிறை செல்லவும் நேரிட்டது.

ஹாபிஸ் இப்னுல் கய்யிம் அவர்கள் ஹிஜ்ரி 751 ரஜப் 13-ம் நாள் வியாழனிரவில் இவ்வுலகை நீத்தார்கள். அல்ஜாமிஉல் உமவியில் தொழுகை நடத்தப்பட்டு அன்று பிற்பகல் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.

இப்னுல் கய்யிம் அவர்கள் இரவு பகலாக அறிவைத் தேடுவதிலேயே ஈடுபட்டு வந்தார்கள். அவர்கள் மிக அழகாககுர்ஆன் ஓதுவார்கள். அவர்களின் குணங்கள் மிக உயர்ந்தவை. எவர் மீதும் பொறாமை கொள்ள மாட்டார்கள். எவருக்கும் தொல்லை கொடுக்கவும் முயலுவதில்லை. மற்றெவரும் அவர்களைப் பற்றிக் குறை கூறுவதுமில்லை.

இப்னுல் கய்யிம் அவர்களுக்கும் அவர்களுடைய ஆசிரியரைப் போன்று எல்லாக் கலைகளிலும் ஈடுபாடு இருந்தது. எல்லாவகையான நூல்களையும் அவர்கள் படித்து வந்தார்கள். நூல்களைச் சேகரிப்பதில் மிக ஆர்வமுடையவர்களாக இருந்தார்கள்.

ஹாபிஸ் இப்னுல் கய்யிம் மார்க்க விஷயத்தில் தீவிரமானவர்களாய் இருந்தபோதிலும், சிறந்த பண்பாளராகவும் பணிவுள்ளராகவுமிருந்தார்கள். அவர்களிடம் தம் ஆசிரியரைப் போன்று கடின சுபாவம் இருந்ததில்லை. எதிரிகளிடம் அவர்கள் நல்லமுறையில் நடந்து கொள்வார்கள். இவ்வகையில் அவர்கள் தம் ஆசிரியரைவிடச் சிறந்து விளங்கினார்கள். அதனால் எதிரிகளும் அவர்களுக்கு மரியாதையும் மதிப்பும் கொடுத்தார்கள்.

இமாம் இப்னு தைமிய்யாவுடன் இருக்கும் பேறு பெற்றதனால், இப்னுல் கய்யிமுக்கும் குர்ஆன் ஷரீபில் சிந்தனை செலுத்தவும் அதைப்பற்றி ஆராயவும் வாய்ப்புக் கிடைத்தது. அதில் தம் கவனத்தைச் செலுத்தினார்கள். அதில் ஏற்படும் ஐயப்பாடுகளைத் தம் ஆசிரியரிடம் கேட்டு, அதற்குத் தெளிவு பெற முயற்சி செய்து வந்தார்கள்.

ஹாபிஸ் இப்னுல் கய்யிம் அவர்கள் மிகப் பொறுமையுடையவர்களாயும் சிக்கனச் செலவு செய்பவர்களாயுமிருந்தார்கள். அவர்கள், "சிக்கனத்தைக் கடைப்பிடிப்பதினாலும் பொறுமையினாலுமேவமார்க்கத்தின் தலைமைப் பதவி கிட்டுகின்றது" என்று கூறுவார்கள்.

"இறைவனின் பாதையில் பயணம் செய்யும் (சாலிஹ்) ஒருவனுக்குப் பொறுமையும் சிக்கனமும் தேவைப்படுவதுடன், ஊக்கமும் அறிவும் இருப்பது அவசியம். மிகக் கடினமான தொல்லைகளிலும் அவனுடைய கால்கள் சத்தியப் பாதையைவிட்டுச் சறுகிவிடாமல் இருக்க ஊக்கம் அவசியம். இறைஞானத்தைப் பெறுவதற்கு கல்வியெனும் ஒளியும் அவசியமாகும்" என்றும் கூறியுள்ளார்கள்.


(2) ஹாபிஸ் இப்னு கதீர்.

இப்னு கதீர் அவர்களின் இயற்பெயர் இஸ்மாயீல். கூப்பிடு பெயர் அபுஃபிதா. பட்டப்பெயர் இமாதுத்தீன். அவர்களின் புனைப்பெயர் இப்னு கதீர். இவர்கள் இப்பெயரால் தான் பிரபலமடைந்தார்கள்.

இவர்கள் மூனறு வயதுப் பாலகனாக இருக்கும்போது இவர்களின் தந்தை மரணமடைந்துவிட்டார்கள். பிறகு இவர்களுடைய மூத்த சகோதரர் ‘கமாலுத்தீன்’ அப்துல் வஹ்ஹாப் அவர்கள் குடும்பத்தார் அனைவரையும் அழைத்துக் கொண்டு ஹிஜ்ரி 707-ல் டமாஸ்கஸ் சென்றுவிட்டார்கள்.

ஹாபிஸ் இப்னு கதீர் அவர்கள் இங்கிருக்கும் போது தான் கல்வி கற்கலானார்கள். தமது சகோதரர் அப்துல்வஹ்ஹாபிடம் ஆரம்பக் கல்வி பயின்றார்கள். பிறகு ஷெய்கு அலமுத்தீன் பர்ஸாலீ, ஷெய்கு அபுல் ஹஜ்ஜாஜ்மிஸ்ஸீ ஆகியோரிடம் பாடம் கேட்டார்கள். ஹிஜ்ரி 712ல் இமாம் இப்னு தைமிய்யா அவர்கள் எகிப்திலிருந்து வந்துவிட்ட பிறகு அவர்களுடைய மாணவராக ஆனார்கள். பல கலைகளில் தேர்ச்சி பெற்றார்கள்.

ஹாபிஸ் இப்னு கதீர் அவர்கள் அபுல் ஹஜ்ஜாஜ் மிஸ்ஸீயுடைய மகளை மணந்திருந்தார்கள். அபுல் ஹஜ்ஜாஜ் இப்னு தைமிய்யாவுக்கு அதிக மதிப்பும் மரியாதையும் கொடுத்து வந்தார்கள். அதனாலும் இப்னு கதீருக்கு இப்னுதைமிய்யா அவர்கள் மீது அதிக அன்பும் பற்றும் ஏற்பட்டது.

இமாம் இப்னு தைமிய்யா இறந்தபோது இப்னு கதீர் அவர்கள் தம் மாமனாருடன் சிறைச்சாலைக்குச் சென்று, அவர்களின் முகத்திலிருந்த திரையை நீக்கிவிட்டு அவர்களின் நெற்றியை முத்தமிட்டார்கள். அவர்கள் தலாக், மற்றும் பல பிரச்சனைகளில் தம் ஆசிரியரின் கருத்துக்களையே பின்பற்றக் கூடியவர்களாய் இருந்தார்கள். அதனால் அவர்களும் பல துன்பங்களைத் தாங்க வேண்டியதாயிற்று. இவர்கள் ஹிஜ்ரி 774ல் இறந்தார்கள். ‘தப்ஸீர் இப்னு கதீர்’, ‘தாருகு இப்னு கதீர்’ ஆகியவை இவர்களுடைய நூல்களுள் மிகச் சிறந்தவையாகும். தப்ஸீர் இப்னு கதீர் பல பாகங்களாகவும், தாரீகு இப்னு கதீர், ‘அல்பிதாயா வன்னிஹாயா’ என்ற பெயரில் பதினான்கு பாகங்களாகவும் அச்சாகியுள்ளது.


(3) ஹாபிஸ் இப்னு அப்துல் ஹாதீ.

இவர்கள் ஹிஜ்ரி 705ல் பிறந்தார்கள். இவர்களின் இயற்பெயர் முஹம்மத். கூப்பிடு பெயர் அபூ அப்துல்லாஹ். பட்டப்பெயர் ஷம்சுத்தீன் என்பதாகும்.

இப்னு அப்துல் ஹாதீ அவர்கள் பல ஆசிரியர்களிடம் பாடம் பயின்றுள்ளார்கள். இமாம் இப்னு தைமிய்யா அவர்கள் எகிப்திலிருந்து திரும்பி வந்து டமாஸ்கஸில் படித்துக் கொடுக்க ஆரம்பித்த போது இவர்களும் இமாவமர்களின் மாணவர் குழுவில் இணைந்து கொண்டார்கள். எப்போதும் இமாம் அவர்களுடனேயே இருந்துவந்தார்கள். இமாம் ராஸீ உடைய நூலான ‘கிதாபுல் அர்பஈனிலிருந்து’ ஒரு பகுதியை அவர்களிடம் படித்தார்கள். இமாம் இப்னு தைமிய்யா அவர்கள் அதற்கு விரிவுரையும் அவர்களுக்காக எழுதினார்கள்.

இமாமவர்களின் மறைவுக்குப் பிறகு இப்னு அப்துல் ஹாதீ, ஷெய்கு அபுல் ஹஜ்ஜாஜ் மிஸ்ஸீ அவர்களிடம்ப
 படிக்கலானார்கள். ஹதீதுக் கலையில் ஆழ்ந்த சிந்தனையை உருவாக்கினார்கள்.

ஹாபிஸ் இப்னு அப்துல் ஹாதீ இமாம் இப்னு தைமிய்யாவுடைய உணர்ச்சி நிறைந்த மாணவர்களுள் ஒருவராவார்கள். ஷெய்கு தகிய்யுத்தீன் ஸுப்கீ ‘ஷிஃபாஉஸ்ஸிகாம்-பீ-ஜியாரத்தி கைரில் அநாம்’ - என்ற பெயரில் ஒரு நூல் இமாம் இப்னு தைமிய்யாவின் கருத்துக்களுக்கெதிராக எழுதினார்கள். இப்னு அப்துல் ஹாது அவர்கள்‘அஜ்ஜாரில் முனக்கீ பிர்ரத்தி அலஸ்ஸுப்கீ’ என்ற பெயரில் அதற்கு மறுப்பு எழுதினார்கள். அதில் ஸுப்கீயின் ஆட்சேபனைகளுக்கு அவர்கள் அளித்துள்ள ஆணித்தரமான பதில்களைப் பார்க்கும் போது அவர்களின் அறிவு அதிக விசாலமானதும் ஆழமானதும் என்பது புலப்படுகிறது. ஷெய்கு ஷம்சுத்தீன் தகபீ அவர்கள் கூட இவர்களிடம் நபிமொழிகளைக் கேட்டு அறிவித்துள்ளார்கள் என்றால், இவர்களின் மகிமைக்கு வேறொரு ஆதாரமும் வேண்டுமோ?

ஹாபிஸ் இப்னு அப்துல ஹாதீ சிறுவயதிலேயே மரணமடைந்துவிட்டார்கள். அப்போது அவர்களுக்கு வயது 39. இவ்வளவு குறுகிய வயதிலும் அவர்கள் எழுதிய நூல்கள் எழுபதுக்கும் அதிகமாக இருந்தன. அவர்கள் எழுதிய நூல்களுள் பல அச்சில் வந்துள்ளன. குறிப்பிடத்தக்கவை: ‘அல் முஹர்ரிறு ஃபில் ஹதீத்’ -’அஸ்ஸாரிமுல்முனக்கி பிர்ரத்தி அலஸ்ஸுப்கி’ ‘அல் உகூதுத் துர்ரிய்யா’. இந்நூலில் இமாம் இப்னு தைமிய்யாவின் வாழ்க்கைவரலாற்றை விரிவாக எழுதியுள்ளார்கள்.

(4) இப்னுல் வர்தீ.

இவர்களின் இயற்பெயர் உமர். பட்டப்பெயர் ஸைனுத்துன். இமாம் இப்னு தைமிய்யாவுடைய கல்வி நிலையத்தில் இவர்களும் சேர்ந்திருந்தார்கள். மொழி, மார்க்கச் சட்ட அறிவு, இலக்கியம் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருந்தார்கள்.

இப்னு தைமிய்யா அவர்களுக்கு இப்னுல் வர்தீ மீது அதிக அன்பு இருந்து வந்தது. ஒருநாள் இமாமவர்களின் கல்வி நிலையத்திற்கு இவர்கள் வந்திருந்தார்கள். பாடம் நடக்கும் போது இவர்களின் விரைவாகப் புரிந்துகொள்ளும் ஆற்றலைப் பார்த்துப் பெரிதும மகிழ்ச்சியுற்று இவர்களின் நெற்றியில் முத்தமிட்டார்கள். உடனே இப்னுல்ர வர்தீ கீழ்வருமாறு பாடினார்கள்:

"நிச்சயமாக இப்னு தைமிய்யா அனைத்துக் கலைகளிலும் தனித்தவர், அஹ்மதே! நீங்கள் அஹ்மத்(ஸல்) அவர்களின் தீனுக்கு உயிர் கொடுத்துள்ளீர்கள்."

இமாம் இப்னு தைமிய்யா அவர்கள் மரணமடைந்த போது மிகச் சோகமாக ஓர் இரங்கற்பா எழுதினார்கள். அதுமட்டுமின்றி, தாம் எழுதிய நூல்கள் அனைத்திலும் அவர்கள் மீது தமக்கிருந்த அன்பையும் பாசத்தையும்வெளிப்படுத்தியுள்ளார்கள்.

இப்னுல் வர்தீ அவர்கள் ஹிஜ்ரி 749ல் மரணமடைந்தார்கள். 1) அஹ்வாலுல் கியாமா 2) அல்ஃபிய்யாத்துப்னுல்வர்தீஃபீ-தஅபீரில் மனாமாத் 3) பஹ்ஜத்துல் ஹாவி 4) ததிம்மதுல் முக்தஸர் ஃபீ அக்பாரில் பஷர் 5) அத்துஹ்பத்துல் வர்திய்யா 6) கரீதத்துல் அஜாஇப், வஃபரீதத்துல் கராயிப், 7) ஸாமிய்யதுப்னுல் வர்தீ 8) நஸீஹதுல் இக்வான் ஆகியவை இப்னுல் வர்தீ அவர்கள் எழுதிய நூல்களுள் சில.

(5) ஷெய்கு தப்பாஹீ

இவர்கள் இயற்பெயர் முஹம்மத். கூப்பிடு பெயர் அபூ அப்துல்லாஹ். பட்டப்பெயர் ஷம்சுத்தீன் என்பதாகும். ஹிஜ்ரி 666ல் பக்தாது என்ற நகரில் பிறந்தார்கள்.

இவர்கள் இமாம் இப்னு தைமிய்யாவை விட ஐந்தே வயது இளையவர். ஆரம்பத்தில் வியாபாரம் செய்துவந்தார்கள். கல்வியில் ஆர்வம் தோன்றிய போது வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார்கள். பத்தாண்டுகள் மக்காவில் இருந்தார்கள். பிறகு பல ஊர்களையும் சுற்றிவிட்டு டமாஸ்கஸ் வந்து சேர்ந்தார்கள்.

அங்கே இமாம் இப்னு தைமிய்யா அவர்களின் புகழ் பரவிவிட்டிருந்தது. அவர்கள் வாலிபராக இருந்த போதிலும்அவர்களின் கல்வியும் சிறப்பும் எல்லா இடங்களிலும் பரவிவிட்டிருந்தது. ஷெய்கு தப்பாஹு அவர்கள் கிட்டத்தட்ட சம வயதினராக ஆசிரியரிடம் மாணவராகச் சேர்ந்தார்கள்.

நல்லுரைகள் வழங்குவதிலும் வணக்கங்கள் புரிவதிலும் அதிகமாக ஈடுபட்டு வந்தார்கள். நல்லுரைகள் பற்றிய ஒரு நூலும் எழுதினார்கள். ஹிஜ்ரி 711ல் டமாஸ்கஸில் அவர்கள் மரணமடைந்தார்கள். அப்பொழுது இப்னு தைமிய்யா அவர்கள் எகிப்திலிருந்தார்கள்.

(6) ஷெய்கு பத்ருதீன் - இப்னுல் -ஸாயிக்.

இவர்களும் இமாம் இப்னு தைமிய்யாவுடைய ஆரம்ப கால மாணவர்களைச் சேர்ந்தவராயிருந்தார்கள். இவர்களின் இயற்பெயர் முஹம்மத். கூப்பிடு பெயர் அபுல் யுஸ்ர். பட்டப் பெயர் பத்ருத்தீன் என்பதாகும். இவர்கள் இப்னுஸ்ஸாயிக் ஷாபிஈ-என்ற பெயரில் பல ஆசிரியர்களிடமும் அன்றைய வழக்கிலிருந்த கலைகளைக் கற்றார்கள். காஜி ஜமாலுத்தீன் கஜ்வீன் பதவியிலிருந்து வலிக்கப்பட்ட போது இவர்கள் அந்த இடத்தில் நியமிக்கப்பட்டார்கள். ஆனால் இவர்களோ அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்கள்.

தேடிவந்த பதவியை இப்படி அலட்சியப்படுத்தி விட்டதின் காரணமாக அமீர் ஸைபுத்தீனுடைய மனத்தில் இவர்களின் மதிப்பு அதிகமாகிவிட்டது. எனவே இவர்களை பைதுல் முகத்தஸின் உபதேசகராகப் பதவி ஏற்றுக்கொளும்படி அமீர் ஸைபுத்துன் வற்புறுத்தினார். எதிரிகள் அவர்களுக்கெதிராக அமீர் ஸைபுத்தீனிடம் கோள்சொல்லியுள்ளார்கள் என்று தெரிந்தபோது, உடனேயே உபதேசம் செய்யும் வேலையை விட்டு விலகிவிட்டார்கள். ஹிஜ்ரி 739ல் டமாஸ்கஸில் காலமானார்கள்.

(7) ஷெய்கு நூருத்தீனுப்னுஸ்ஸாயிக்.

இவர்கள் மேற்சொன்ன பத்ருத்தீன் ஸாயிக் உடைய சிறிய தந்தை மகனாவார். இவருடைய தந்தையின் பெயர்முஹம்மத், ஹிஜ்ரி 696ல் பிறந்தார்கள். இமாம் இப்னு தைமிய்யாவிடம் பாடம் கேட்டார்கள். எகிப்திலும்அவர்களுடன் இருந்தார்கள். எகிப்து அரசின் இம்சைகளையும் தொல்லைகளையும் தாங்கிக் கொண்டு தம்ஆசிரியரின் கொள்கைகளையும் கருத்துக்களையும் அச்சமின்றி ஆதரித்தார்கள். கடைசியாக டமாஸ்கஸ் நகரநீதிபதியாக நியமனம் பெற்றார்கள். ஹிஜ்ரி 744ல் ஹலப் நகர நீதிபதியானார்கள். தம் நன்னடத்தையின் காரணமாக மக்களின் விருப்பத்திற்குரியவர்களாய்த் திகழ்ந்தார்கள். ஹிஜ்ரி 749ல் ஹலப் நகரிலேயே மரணமானார்கள்.

(8) ஷெய்கு அஹ்மத் பின் பஸ்லுல்லாஹ்-அல் உமர்

இவர்களின் பெயர் அஹ்மத், கூப்பிடு பெயர் அபுல் அப்பாஸ், பட்டப்பெயர் ஷிஹாபுத்துன். ஹிஜ்ரி 700ல்டமாஸ்கஸில் பிறந்தார்கள். இமாம் இப்னு தைமிய்யா முதல் முறையாக எகிப்துக்குப் போயிருந்த போதுஇவர்களின் சிறிய தந்தையின் வீட்டில் தான் தங்கினார்கள். அவர்களின் தந்தையும், சிறிய தந்தையும்புலனாய்வுத்துறையின் எழுத்தர்களாக இருந்தனர். அவர்களுடைய தந்தையின் மறைவுக்குப் பிறகு அந்தப் பதவி அவர்களுக்குக் கிடைத்தது. அவர்களின் குடும்பத்தார் அனைவரும் இமாமவர்களின் மீது அபார அன்பு செலுத்தக்கூடியவர்களாகிவிட்டனர். அஹ்மத் அவர்கள் இமாமவர்களிடம் கல்வி கற்றார்கள். அஹ்மத் அவர்கள் ஹிஜ்ரி749ல் இயற்கையெய்தினார்கள்.

‘அத்தஃரீஃப் பில் மஸ்தலகிஷ்ஷரீப்’, ‘மஸாலிகுல் அப்ஸார் ஃபீ மமாலிகில் அம்ஸார்’ ஆகிய நூல்கள் அஹ்மத்அவர்களின் புரபலமான நூல்களாகும்.

(9) ஷெய்கு இப்னு மிர்ரீ

இவர்களின் இயற்பெயர் அஹ்மத். இவர்கள் இப்னு மிர்ரு என்ற பெயரால் பிரபலமடைந்தார்கள். ஆரம்பத்தில் இவர்கள் இமாம் இப்னு தைமிய்யாவின் கொடிய விரோதிகளுள் ஒருவராய் இருந்தார்கள். ஓரிருமுறை எகிப்தில்அவர்களின் உரைகளைக் கேட்ட பிறகு அவர்களின் மீது அன்பு கொண்டுவிட்டார்கள். அத்துடன் தம்மாணவர்களையும் மாற்றிவிட்டார்கள். அவ்ரகளின் கொள்கைகளையும் கருத்துக்களையும் மிக வேகமாக ஆதரிக்கக் கூடியவர்களாய் மாறிவிட்டார்கள். அவர்கள் தம் இறுதி நாட்களில் ஜாமிஃ அம்ருப்னுல் ஆஸிலும், ஜாமிஃஅமீர் ஹுசைனிலும் நல்லுரைகள் வழங்கி வந்தார்கள். ஹிஜ்ரி 725ல் டமாஸ்கஸில் இமாமவர்களுக்கெதிராக ஒரு பெரும் அமளி ஏற்பட்டது. அந்த நேரத்தில் இப்னு மிர்ரீ கெய்ரோவில் ஒருநாள் சொற்பொழிவாற்றினார்கள். அதில் நபி(ஸல்) அவர்கள் மூலமாக வசீலா தேடுவது பற்றியும் ஸியாரத் செய்துபற்றியும் இமாமவர்களின் கருத்துக்களை ஆதரித்து விளக்கம் கொடுத்தார்கள். அதனால் கூட்டத்தினரிடையே குழப்பம் ஏற்பட்டது. சிலர் அவர்களைத் தாக்கவும் முனைந்தனர். ஆனால் அவர்கள் அங்கிருந்து தப்பித்துச்சென்றுவிட்டார்கள். அவர்கள் அரசு அதிகாரியால் தண்டிக்கவும் பட்டார்கள். பிறகு விடுதலை பெற்று, தம் குடும்பசகிதம் எகிப்திலிருந்து டமாஸ்கஸ் வந்துவிட்டார்கள். அங்கேயே காலமானார்கள்.

(10) இப்னு குதாமா முகத்தஸூ

இவர்களின் இயற்பெயர் அஹ்மத், கூப்பிடு பெயர் அபுல் அப்பாஸ், பட்டப்பெயர் ஷரபுத்தீன். இவர்களின் ஹிஜ்ரி693ல் பிறந்தார்கள். இமாமவர்கள் எகிப்திலிருந்து டமாஸ்கஸ் வந்தபோது அவர்களிடம் ஹதுஸுக் கலையும் பிக்ஹும் கற்றார்கள். இமாமவர்களின் மாணவராக இருக்கும் பேறு பெற்றதைப் பற்றிப் பெருமையாகக்க கூறுவார்கள்.

"என் நபியும் அஹ்மத்; என இமாமும் என் ஆசிரியரும் அஹமத்; என் பெயரும் அஹ்மத். இதன் மூலம் கண்ணியமிக்கத் தூதர்களின் தலைவருடைய ஷபாஅத்தை நான் நம்புகிறேன்" என்று இவர்கள் அடிக்கடிக்கூறுவார்கள்.

இவர்களின் திறமையைக் கண்டு, இமாம் இப்னு தைமிய்யா அவர்கள் இவர்களுக்கு மர்க்கத் தீர்ப்பு(பத்வா) வழங்கும் அனுமதி கொடுத்தார்கள். ஹிஜ்ரி 761ல் காலமானார்கள்.

இதுவரை குறிப்பிடப்பட்டவர்களைத் தவிர மற்றும் பலரும் இமாம் இப்னு தைமிய்யா அவர்களிடம் கல்விகற்றுள்ளனர். அவர்களனைவரின் வரலாற்றையும் இந்நூலிலேயே எழுதுவது சாத்தியமன்று. எனவே இத்துடன்மாணவர்களைப் பற்றிய வரலாற்றை முடித்துக் கொள்வோம்.


மார்க்கப் புத்தகமைப்பு;

ஒவ்வொரு மனிதனிடத்திலும் அசாதாரண ஆற்றல்கள் இருக்கவே செய்கின்றன. அவற்றின் மூலம் அவன் முன்னேற்றப்பாதையில் சென்று கொண்டுதானிருப்பான். அதனால் உலகத்தில் பெயரையும் புகழையும் பெறவும்ம முடியும். மக்கள் வியக்குமளவு அவன் பல சாதனைகளையும் சாதிக்கலாம். இருந்தபோதிலும், அத்தகைய மனிதனிடம் உடல் பலவீனம், சோம்பல், மறதி, அலட்சியத்தன்மை, கவனமின்மை, விரோதம், குரோதம் ஆகியவையும் இருக்கலாம். இவற்றின் காரணமாக அம்மனிதன் கீழ்த்தரமான வாழ்க்கை வாழவும் முனையவலாம்.

எனவே ஒவ்வொரு கல கட்டத்திலும் இத்தகைய மனிதர்களைச் சிறந்த வாழ்க்கை வாழும்படி ஆர்வமூட்டவும், இழிவான நடத்தைகளிலிருந்து அவர்களைத் தூய்மைப்படுத்தவும், அவர்களைச் சிறந்த முழுமைபெற்ற மனிதர்களாக ஆக்கிடப் பாடுபடவும் தகுந்த மனிதப்புனிதர் ஒருவர் தேவைப்படுகிறார்.

இறைத்தூதர்கள் அனைவரும் இதே பணியைத்தான் செய்துவந்தனர். நபிகள் நாயகம்(ஸல்) அவர்களும் தமது நிகரற்ற வாழ்க்கையை முன் மாதிரியாக வைத்துத் தம்மை நம்பக் கூடியவர்களைச் சிறந்த சமுதாயத்தவராய் ஆக்கிவிட்டார்கள். நாயகத் தோழர்களும் மக்களை இழிகுணங்களை விட்டுத் தூய்மைப்படுத்தினார்கள். அவர்களுக்குப் பிறகும் ஒவ்வொரு காலத்திலும் புத்தகமைப்புச் சேவைகளும் சீர்திருத்தப் பணிகளும் நடந்துகொண்டே வருகின்றன.

இமாம் இப்னு தைமிய்யா அவர்களுக்கு முன் மாபெரும் தத்துவஞானிகளும், அறிவியல் நிபுணர்களும், அறிஞர்பெருமக்களும் இருந்திருக்கின்றனர். அவர்களின் கருத்துக்களும் முஸ்லிம்களின் வாழ்க்கையில் நீடித்து நிற்கும் மாற்றங்களை உருவாக்கியுள்ளன. அவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் தகுதிக்கும் ஆற்றலுக்கும் ஏற்ப வாழ்க்கையின் ஏதேனுமொரு துறையிலோ அல்லது பல துறைகளிலோ புரட்சியை ஏற்படுத்தினர். அவரவர் காலத்திலிருந்த தீமைகளைக் களைந்திடப் பாடுபட்டனர். அதற்காகத் தம் உடல் பொருள் ஆவியால் தியாகங்களையும் செய்துள்ளனர். சொல்லாலும் செயலாலும் முஸ்லிம்களை உயர்நிலைக்குக் கொண்டுவர எல்லா முயற்சிகளையும் செய்துள்ளனர்.

ஆனால் மனித வாழ்க்கையின் பல துறைகளிலும் சிந்தனையைச் செலுத்தும் போது, வாழ்க்கையின் எல்லாத்துறைகளிலும் பல பகுதிகளிலும் ஒரு மாபெரும் புரட்சியை உருவாக்கிய மனிதராக இமாம் இப்னுதைமிய்யாவைத் தவிர வேறு எவரும் தென்படவில்லை. அவர்களுக்கு முன்னுள்ள அறிஞர்களின் வாழ்க்கையோடு அவர்களின் வாழ்க்கையை நாம் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, இமாம் அவர்களின் வாழ்க்கை முற்றிலும்வேறுபட்டதாகத் தோன்றுகிறது. அவர்கள் காலம் ஞானவான்களும் அறிஞர்களும் நிறைந்திருந்த காலம். அக்காலத்தில் சுமார் எழுபது மார்க்கச் சட்ட நிபுணர்கள், மஜ்தஹிதுகள், இருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால் இமாம் இப்னு தைமிய்யாவுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில், அவர்களின் நிபுணத்துவம் ஒளி மங்கிப்போய்விடுகிறது. எனவே, இமாமவர்களுக்கு நிகராக அக்காலத்தில் யாருமிருக்கவில்லை என்று நாம் ஒப்புக்கொண்டுதானாக வேண்டும்.

இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்) அவர்கள் பேனா மன்னராக இருந்ததோடு, வாளேந்தும் போர்வீரராகவுமிருந்தார்கள். அரசாங்கம் கூட முஸ்லிம்களை அழிவிலிருந்து காப்பாற்ற முன்வராத நேரத்தில் அவர்கள் முஸ்லிம்களைக் காப்பாற்றினார்கள். தாத்தாரியர்கள், வரம்பு மீறிப் போய்க் கொண்டிருந்த ஷியாக்கள், கிருத்தவர்கள் ஆகியோரை எதிர்த்து மாபெரும் அறப்போர்(ஜிஹாத்) நடத்தினார்கள். அவர்கள் செய்த இப்பணியில் முஸ்லிம் அறிஞர்கள் யாரும் அவர்களுக்கு நிகராகத் தோன்றவில்லை. அவர்கள் செய்த இச்சேவையின் காரணமாகவே அவர்கள் அவர்கள் டமாஸ்கஸ் மக்களின் அபிமானத்திற்கும் ஆதரவுக்குமுரியவர்காளாய் திகழ்ந்தார்கள்.

இஸ்லாமியக் கலைகளாக திருக்குர்ஆன் விரிவுரை, நபிமொழிகளை, மார்க்கச் சட்டக்கல்வி, மெய்ஞானம், தத்துவ ஞானம், தர்க்கக் கலை ஆகியவற்றில் ஒருவித மந்த நிலை ஏற்பட்டுவிட்டிருந்தது. இவற்றை மக்கள் கண்மூடித்தனமாகப் படிக்கலாயினர். அவற்றை ஆராய்ச்சி செய்வதையும் ஆய்ந்துணர்ந்து செயல்படுவதையும் மக்கள் விட்டுவிட்டனர். முன்னவர்கள் சொன்னவற்றையும் எழுதியவற்றையும் உண்மை என்று ஒப்புக் கொள்வதே அவசியமென ஆகிவிட்டிருந்தது. இமாமவர்கள் இக்கலைகளை ஒரு புதிய கண்ணோட்டத்துடன் அலசினார்கள். அதில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியதோடு விட்டுவிடாமல், உண்மைக்கப்பாற்பட்ட கருத்துக்கள் குறித்து மக்களின் உள்ளங்களில் ஊறிப்போயிருந்த நம்பிக்கையைப் போக்கினார்கள்.
இஸ்லாமியக் கலைகளில் கிரேக்கத் தத்துவங்களும் கொள்கைகளும் கலந்துவிட்டிருந்தன. சில முஸ்லிம் தத்துவஞானிகளும் தர்க்கக் கலை நிபுணர்களும் அவற்றுக்கு மறுப்புக் கொடுக்க முயன்றுள்ளனர். ஆனால், இவர்களே கிரேக்கர்களின் சில அடிப்படை விதிகளை ஏற்றுக் கொண்டிருந்ததின் காரணமாக, அவர்களுக்குச்சரியான பதில் கொடுக்க இயலாதவர்களாயும் ஆகிவிட்டனர்.

இமாம் இப்னு தைமிய்யாவின் சொல்படி, அவர்கள் ஒரு ‘புதை சேற்றில்’ சிக்கிவிட்டிருந்தனர். அதிலிருந்து தப்புவது அவர்களுகுக் கடினமானதாய் ஆகிவிட்டது. இமாமவர்கள் தர்க்கக் கலை நிபுணர்களின் அடிப்படைவிதிகளையே வெட்டிச் சாய்த்துவிட்டார்கள். முஸ்லிம் அறிஞர்களுள் இருந்த தவறான கொள்கையாளர்களுக்கு மறுப்புக் கொடுத்து அவர்கள் எழுதியுள்ள நூல்களை நாம் பார்க்கும் போது மிகவும் வியப்புறுகிறோம்.

சுல்தான் சலாஹுத்தீன் அய்யூபி, கிருத்தவர்களின் அரசியல் சக்தியைத் தம் போர் பலத்தால் ஒழித்தார் என்றால், இப்னு தைமிய்யா(ரஹ்) அவர்கள் அவர்களுடைய அறிவியல், நாகரீகச் செல்வாக்கைத் தம் அறிவு பலத்தால் முறியடித்தார்கள். அன்று அவர்களுக்கெதிராக இமாமவர்கள் பேனா ஏந்திப் போர் செய்யாதிருந்திருப்பார்களாயின், கிருஸ்தவர்களின் பிரச்சாரம் முஸ்லிம்களிடையே பரவி, அவர்களை மாற்றிவிட்டிருக்கலாம். இதேபோல அவர்கள் ஷியாக் கொள்கைகளை எதிர்த்தும் ஓர் உன்னதமான நூல் எழுதினார்கள். அவர்களுக்கெதிராகப் போரும் செய்தார்கள். முஸ்லிம் மன்னர்களை அவர்களின் தந்திரங்களைக் குறித்து எச்சரித்தார்கள். சுன்னத் ஜமாஅத் முஸ்லிம்களுக்கு ஷியாக்களால் ஏற்பட்டு வந்த அநீதிகளையெல்லாம் தடுத்தார்கள்.

முஸ்லிம்களிடையே சமுதாயம் முழுவதையும் பலவீனப்படுத்தும் தீமைகள் சில தோன்றிவிட்டிருந்தன. முஸ்லிம்களை உண்மையான இஸ்லாத்தைவிட்டு விலக்கி வைக்கும் அனாச்சாரங்களும் அவர்களிடம் உருவாகிவிட்டிருந்தன. இமாமவர்கள் அந்தத் தீமைகளையும் அனாச்சாரங்களையும் அகற்றினார்கள். தங்கள் நாவினாலும் எழுதுகோலாலும் அவர்களுக்கு இஸ்லாத்தின் உண்மையான கொள்கைகளை விளக்கினார்கள்.

ஷஃபான் பதினைந்தாம் நாள் பராஅத் இரவு அன்று டமாஸ்கஸின் ஜாமிஆ மஸ்ஜிதில் மாபெரும் விழாநடைபெறும். அதில் ஆண்களும் பெண்களும் ஒன்று கூடுவார்கள். மஸ்ஜிதில் நிறைய விளக்குகள் ஏற்றப்படும். அவ்விரவில் பல தீமைகளும் நடைபெறும். இந்த அனாச்சாரத்தை இமாமவர்கள் தடுத்து நிறுத்தினார்கள். புனிதமானவை எனக்கருதித் தரிசிக்கப்பட்டு வந்த சில இடங்களைத் தகர்த்தெறிந்தார்கள். தலாக்கொடுக்கப்பட்ட பெண்ணை ஹலாலாக்கி வைக்கும் முறையைக் கடுமையாக எதிர்த்தார்கள். ஒரே தடவையில் மூன்று தலாக்கும் கொடுக்கும் முறையினால் ஏற்பட்டிருந்த பலவிதமான கெடுதிகளை நீக்கிடப் பாடுபட்டார்கள்.

இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்) தஸவ்வுபின் உண்மையான திட்டங்களுக்கெதிரியாக இருக்கவில்லை. ஆனால்போலி சூபியை வேறுபடுத்திக் காட்டினார்கள். ‘தஸவ்வுப்’ ஷரீஅத்தின் வட்டத்திற்குட்பட்டிருந்த வரை முஸ்லிம்களின் பொதுவான கொள்கைகளிலும் கருத்துக்களிலும் செயல்களிலும் நடத்தைகளிலும் எந்தமாற்றமும் ஏற்படவில்லை. அதில் பிற மதங்களின் தவறான கொள்கைகளும் கருத்துக்களும் கலந்துவிட்டதினாலும், பெயரளவிலுள்ள சூபிகளும் போலி சூபிகளும் தவறான பித்அத்களை அதில்நுழைத்துவிட்டதின் காரணமாகவும் தஸவ்வுபின் போக்கு ஷரீஅத்தைவிட்டு விலகிவிட்டது. ஷரீஅத்திற்கெதிராகத் தர்கத்தென்ற ஒரு புதிய பாதை தோன்றியது. இமாமவர்கள் இக்கருத்துக்களையும் அனாச்சாரங்களையும் எதிர்த்து ஒரு மகத்தான போரே நடத்தினார்கள். அதனால் அவர்கள் சிறைத்தண்டனையும் அடையும் சூழ்நிலைக்களானார்கள். போலி சூபிகளை கும்பல் இறுதிவரை அவர்களின் எதிரியாகவே இருந்தது. ஆனால், இமாம் இப்னு தைமிய்யாவின் நாவுக்கும் பேனாவுக்கும் பதில் கொடுக்கும் துணிவு அவர்களுள் யாருக்கும் இருந்ததில்லை.

இப்னு தைமிய்யா(ரஹ்) அவர்களின் காலத்தில் பெயரளவிலுள்ள வழிகேட்டிற்குப் பெரும் கருவிகளாய் அமைந்திருந்தனர். துருக்கிய அதிகாரிகளிடமும் தலைவர்களிடமும இவர்களின் அற்புதச் செயல்(கராமத்)கள் பெரும் மயக்கத்தை உண்டு பண்ணிவிட்டிருந்தன. அவர்கள் எல்லா இடங்களிலும் தங்கள் மந்திர தந்திரவலையை விரித்து வைத்திருந்தனர். அப்பாவி மக்களைத் தங்கள் வலைகளில் சிக்க வைத்து, உலகின் இன்பசுகங்களில் மூழ்கியிருந்தனர்.

இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்) அவர்கள், அவர்களுடைய திரையைக் கிழித்தெறிந்தார்கள். பொதுமக்களுக்கு அவர்களின் ஏமாற்று வித்தைகளை எடுத்துக்கூறி எச்சரித்தார்கள். "உண்மையான தஸவ்வுப் என்பது, ஷரீஅத்துடைய செயல்களுக்கு முரணாக ஒருபோதும் இருப்பதில்லை. ஷரீஅத், தர்கத் என்ற பிரிவினை தவறானதாகும். இவ்விரண்டையும் வேறுபடுத்திக் காட்டுபவர்கள் நேர்வழியை விட்டு விலகிச் செய்பவர்களாவர்" என்று விளக்கியுள்ளார்கள்.

துன்னூன் மிஸ்ரீ, ஜுனைத் பக்தாத், ஷிப்லீ மற்றும் பல அவ்லியாக்களின் வாழ்க்கைகளையும் அவர்களின் பொன்மொழிகளையும் எடுத்துக்காட்டுகளாகக் கூறியுள்ளார்கள். அவர்களின் வாழ்க்கை முறைகளைப் பின்பற்றுமாறு அழைப்பு விடுத்துள்ளார்கள். ஏனெனில், இம்மகான்கள் நாயகம்(ஸல்) அவர்களின் வாழ்க்கையையே தங்கள் வாழ்க்கையின் முன்மாதிரியாக ஆக்கிக் கொண்டிருந்தார்கள்.
உண்மையான தஸவ்வுபைப் பற்றிய இமாமவர்களின் கருத்துக்களை அறிய வேண்டுமானால், அவர்களுடைய பலநூல்களையும் பார்ப்பதோடு, இமாமவர்களின் மாணவர் அல்லாமா இப்னுல் கய்யிம் அவர்களெழுதிய நூலான‘மதாரிஜுஸ்ஸாலிக்ன் ஃபீ ஷரஹி மனாமுஸ்ஸாயிரீன்’ என்ற நூலையும் படிக்க வேண்டும். இந்நுலில் இப்னுல்கய்யிம் அவர்கள் தம் ஆசிரியருடைய கருத்துக்களையே விளக்கியுள்ளார்கள்.

இமாமவர்களுடைய எதிரிகளால் அவர்களின் எழுத்துக்களுக்குச் சரியான பதில் கூற இயலாத போது, "தஸஸவ்வுபுடைய கலையைப் பற்றி அவருக்கென்ன தெரியும்? அதைப்பற்றிய சுவையே அவருக்கில்லை" என்று எதிரிகள் கூறலாயினர்.

‘தஸவ்வுபின் தத்துவத்தை இமாமவர்கள் அறிந்திருப்பார்களாயின், தஸவ்வுப் தொடர்பான ஒரு பிரபலமான நூலுக்கு விளக்கம் எழுதி, அதற்கு மறுப்பும் அவர் எழுதட்டும்’ என ஒரு சூபி அறைகூவல் விடுத்தார். அவரே ஒரு நூலைத் தேர்ந்தெடுத்துத் தருமாறு இமாமவர்கள் கூறினார்கள். அந்த சூபி அதற்கு தஸவ்வுப் கலையின் மிகக்கடினமான ஒரு நூலான, ‘லவ்ஹுல் இசாலா’ என்ற நூலைக் குறிப்பிடடார். இமாம் அவர்கள் அந்நூலுக்கு விளக்கமும் எழுதி, அதிலுள்ள ஷரீஅத்திற்கெதிரான கொள்கைகளையும் செயல்களையும் மறுத்தும் எழுதினார்கள். இதைக்கண்ட போலி சூபிகளனைவரும் பேரதிர்ச்சியுற்றனர். பிறகு அவர்களால் எந்த பதிலும்கூற இயலாது போயிற்று.

இமாமவர்களின் காலத்தில் தனிப்பட்ட மனிதர்களின் கருத்துக்குத் தலைசாய்ப்பது அதிகமாகிவிட்டிருந்தது. எவரும் தன்னுடைய மத்ஹபை விட்டு மாறி மார்க்கத் தீர்ப்பு வழங்குவது இயலாதிருந்தது. ஒவ்வொரு முப்தியும் தன்னுடைய மத்ஹபின் நுல்களையே கடைப்பிடிப்பது அவசியம் எனக் கருதப்பட்டது. அக்காலத்தில் குர்ஆனையும் ஹதீஸ்களையும் மக்கள் படிக்கத்தான் செய்தனர். ஆனால் அவர்களுள் ஒரு சிலைத் தவிர வேறு எவரும் அவற்றைப் பற்றிச் சிந்திப்பதோ ஆராய்வதோ இல்லை. எல்லாப் பிரச்சினைகளுக்கும் குர்ஆனிலிருந்தும் ஹதீஸிலிருந்தும் ஆதாரங்களைத் தேடிட முயற்சி செய்வதுமில்லை. இமாமவர்கள் தாம் முதன் முதுலாக முன்னோரைப் பின்பற்றும் இம்முறையை மாற்றினார்கள். பலவகையான கலைகளின் சிறிய பிரச்சினையாக இருந்தாலும், முதன் முதலில் திருக்குர்ஆனிலிருந்து அதற்குப் பரிகாரம் காண முற்படுவார்கள். அதற்குப் பிறகு ஹதீஸ்களிலும் பிக்ஹு நூல்களிலும் கவனம் செலுத்துவார்கள். அவர்களின் இப்புதிய முறை அறிஞர்களிடையே குர்ஆனிலும் நபிமொழிகளிலும் சிந்தனை செலுத்திட வேண்டும் என்னும் ஒரு தனி ஆர்வத்தையே உருவாக்கிவிட்டது. அவர்களின் நூல்களின் மூலம் அவர் காலத்து அறிஞர்களின் சிந்தனைப் போக்கில் மாற்றம் ஏற்பட்டது மட்டுமன்றி, அவர்கள் காலத்திற்குப் பிறகும் ஒவ்வொரு காலத்திலுள்ள அறிஞர்களின் எண்ணங்களிலும் எழுத்துக்களிலும் இமாம் அவர்களின் பாணி பிரதிபலிக்கலானது.

இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்) அவர்கள் மன்னர் நாசிருக்கு எழுதிய கடிதங்களைப் படிப்பதின் மூலம், அக்காலத்திலிருந்து இக்காலம் வரை முஸ்லிம் பொதுமக்களின் முரணான வாழ்க்கைக்குக் காரணம், குர்ஆன்ஹதீஸின் சரியான போதனைகளை அவர்கள் அறியாதிருந்தது தான் என்பது தெளிவாகத் தெரியவரும. அவர்கள் ஷாம், மிஸ்ரு ஆகிய நாடுகளிலுள்ள எல்லா ஊர்களிலும் கிராமங்களிலும் குர்ஆனையும் ஹதீஸையும் கற்றுக்கொடுக்கும் கலைக் கூடங்களை நிறுவிட மக்களின் கவனத்தைத் திருப்பிவிட்டார்கள். இந்த வழி ஒன்றின் மூலமாகவே மடமையெனும் இருளைப் போக்க முடியும் என்று எழுதினார்கள். நகரங்களில் பெரும் பெரும் அரசுக்கலைக்கூடங்கள் இருந்தன. கிராமங்களில் அந்த அளவிற்குப் போதுமான ஏற்பாடுகள் இருக்கவில்லை. சின்னஞ்சிறிய பள்ளிக்கூடங்களும் கலைக்கூடங்களும் இருந்தன என்றாலும், அங்கே போதுமான அளவு குர்ஆனுடையவும் ஹதீஸுகளுடையவும் போதனைகளுக்குரிய வசதிகள் இருக்கவில்லை. இமாம் இப்னுதைமிய்யா(ரஹ்) அவர்கள் தாமும் குர்ஆன் ஹதீஸின் அறிவைப்பரப்பினார்கள்; பொதுமக்களையும் அதன் பக்கம்கவனம் செலுத்துமாற வேண்டினார்கள். அதனால் முஸ்லிம் பொதுமக்களிடையே இஸ்லாமிய ஷரீஅத்தின்படிச்செயல்பட வேண்டும் என்ற ஓர் உணர்வு ஏற்பட்டது. பொதுமக்கள் மீது ஒவ்வொரு கலையிலும் ஒரு மகத்தானபுரட்சியை உண்டுபண்ணிய ஒரு மாமனிதரை இஸ்லாமிய வரலாற்றில் நாம் காண்பது மிக மிக அரிதாகும்.
Previous Post Next Post