“பறவைகளின் உள்ளங்களைப் போல் உள்ளம் கொண்டவர்களே மறுமையில் சுவர்க்கம் நுழைவார்கள்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி)
நூல்: முஸ்லிம் 2840 / பாடம் 40, ஹதீஸ் 6808
.
இந்த ஹதீஸின் அர்த்தம் என்ன?
பறவை போல் உள்ளம் கொண்டவர்கள் என்று இந்த ஹதீஸில் குறிப்பிடப் படுவோர் யார்?
இதற்கான பதிலையும் நபியவர்கள் வேறொரு ஹதீஸில் சொல்லியுள்ளார்கள்.
“இறைவன் மீது நம்பிக்கை வைக்க வேண்டிய விதத்தில் நம்பி, அவன் மீது நீங்கள் மெய்யாகவே சார்ந்திருந்தால், பறவைகளுக்கு உணவளிப்பதைப் போல் உங்களுக்கும் அவன் உணவளிப்பான். (எந்த முன்னேற்பாடும் இல்லாமல், இறைவன் மீது நம்பிக்கை வைத்துப்) பசி வயிற்றோடு பறவைகள் காலைப் பொழுதில் (உணவு தேடி) வெளிக்கிளம்புகின்றன. மாலையில் அவை நிரம்பிய வயிறுகளோடு கூடு திரும்புகின்றன.” என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: உமர் (ரழி)
நூல்: இப்னுமாஜா 4303 / முஸ்னத் அஹ்மத் 370 (ஹஸன்)
முழு நம்பிக்கையோடு இறைவனை மட்டுமே சார்ந்திருப்பது தான் பறவையுள்ளம். இந்தப் பறவையுள்ளத்துக்குத் தான் சுவர்க்கத்தில் இடமுண்டு.
“நான் கஷ்டப்பட்டுத் திட்டமிட்டு இயங்குவதாலேயே எனது காரியங்கள் நிறைவேறுகின்றன” என்று நம்பி, நீண்ட திட்டங்களோடு உழைப்பது பறவையுள்ளம் அல்ல.
- அபூ மலிக்