தொழுகையே வெற்றியின் இரகசியம்

இமாம் இப்னு கதிர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள்
கீழ் காணும் வசனத்திற்கு இவ்வாறு விளக்கம் கூறுகிறார்கள்

فَخَلَفَ مِنْ بَعْدِهِمْ خَلْفٌ اَضَاعُوا الصَّلٰوةَ وَاتَّبَعُوا الشَّهَوٰتِ‌ فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا ۙ‏
அவர்களுக்குப் பிறகு, சீர்கெட்ட மக்கள் அவர்களுடைய பிற்சந்ததிகளாகத் தோன்றினார்கள். அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள். மன இச்சைகளைப் பின்பற்றினார்கள்! அத்தகையவர்கள் தங்கள் வழிகேட்டின் தீயவிளைவை விரைவில் சந்திப்பார்கள்.
(அல்குர்ஆன் : மர்யம்-19:59)

உயர்ந்த அந்தஸ்தை பெற்றிருக்கும் நபிமார்களின் பட்டியலை குறிப்பிட்ட பின் மறுமை நாள் நெருங்கும் போது சிலர் மன இச்சையை பின்பற்றி, தங்கள் மனம் போக்கில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு தொழுகையை பேணித் தொழாமல் இருப்பார்கள், அவர்கள் இவ்வுலகத்தில் மறு உலகத்திலும் தீய விளைவை சந்திப்பார்கள் என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

தொழுகை மார்கத்தின் தூணாகும் அதை பொடுபோக்காக நிறைவேற்றும் பொழுது அவர்கள் செய்ய வேண்டிய மற்ற கடமைகளில் மிகவும் பொடுபோக்காக இருப்பார்கள் என்பதை அல்லாஹ் இங்கு சுட்டிக்காட்டுகிறான்.

 இறைவனின் கட்டளைகளை செவி சாய்க்காமல் மனதை இறைவனாக மாற்றிக் கொண்டு வழிகேட்டில் பயணிப்பது தான்  இவ்வுலகிலே கிடைக்கும் இறைத் தண்டனை என்று நம்மால் இந்த வசனத்தின் ஊடாக விளங்க முடிகிறது.

இப்னு ஸெய்து,முஹம்மது இப்னு கஃபு
போன்ற சான்றோர்கள் தொழுகையை முற்றிலுமாக விட்டு விடுவது தான் இந்த வசனத்தின் நோக்கம் என்று கூறுகிறார்கள்.

கீழ்காணும் நபிமொழியை காணும் பொழுது தொழுகையை முற்றிலும் விட்டுவிட்டு ஒதுங்கி வாழ்பவர்கள் முஸ்லிம்கள் அல்ல இறை மறுப்பாளர்கள் என்று நம்மால் சற்று அச்சத்துடன் விளங்க முடிகிறது.

إنَّ العهدَ الذي بيننا وبينهم الصلاةُ . فمن تركها فقد كفر
الراوي : بريدة بن الحصيب الأسلمي | المحدث : الألباني | المصدر : صحيح النسائي
الصفحة أو الرقم: 462 | خلاصة حكم المحدث : صحيح

அவர்களுக்கும் (நயவஞ்சகர்களும் & இறைமறுப்பாளர்களும்) நமக்கும்  மத்தியில் உள்ள வேறுபாடு தொழுகை தான் யார் தொழுகையை விட்டு விடுவாரோ அவர் நிராகரித்து விட்டார்.

நூல்  ஸஹீஹ் நஸஃஈ
எண்-462
தரம் - ஸஹீஹ்
அறிவிப்பாளர் -புரைதா பின் அல்ஹுஸைப் அல்அஸ்லமி

இந்த  வசனமும், நபிமொழியும் தொழுகையை வேண்டுமென்றே விட்டவர்கள் இறை நிராகரிப்பாளர்கள் என்று நமக்கு தெளிவாக உணர்த்துகிறது.

அறிஞர்கள் இதற்கு விளக்கம் அளிக்கும் போது சோம்பேறித்தனமாக பொடுபோக்காக தொழுகையை குறைவாக தொழுபவர்கள் நிராகரிப்பாளர்களில் கணக்கிடப்பட மாட்டார்கள் என்றாலும் அவர்கள் கவனம் இழந்து இருக்கும் பொழுது நிராகரிப்பை அடைவதற்கு இதுவே வழிவகுத்து விடும்.

இந்தக் கருத்தை இமாம் அஹ்மது பின் ஹம்பல் ,முஹம்மது பின் இத்ரீஸ் அஷ்ஷாபிஃ ரஹிமஹுமுல்லாஹ் போன்ற இந்த கருத்தை கூறுகிறார்கள்.

தொழுகையை தொழுபர்கள் ஆனால் நேரத்தில் தொழாதவர்கள் என்று இமாம் அவ்ஸாஃஈ,மூஸா பின் ஸுலைமான் ரஹிமஹுமுல்லாஹ்
போன்றோர் இந்த வசனத்திற்கு விளக்கம் கூறுகிறார்கள் .

இமாம் மஸ்ரூக் ரஹிமஹுல்லாஹ்
கூறும் பொழுது ஐவேளைத் தொழுகைகளில் பேணுதல் இல்லாமல் இருப்பவர்கள் கவனம் இல்லாதவர்களின் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என்ற கருத்தை கூறுகிறார்கள்.

ஆக இந்த வசனத்தில் நாம் பெறவேண்டிய படிப்பினைகளில் மிக முக்கியமான ஒன்று நமது வாழ்க்கைகான வெற்றியின் இரகசியம் தொழுகையில்தான் இருக்கிறது,
அதை வீணாக்கும் பொழுது கவனக்குறைவாக இருக்கும் பொழுது மன இச்சைகளை வழிபடக் கூடியவர்களாக மாறிவிடுவோம்.

கொஞ்சம் கொஞ்சமாக இறை திருப்தியிலிருந்து நீங்கி  இறை அதிருப்திக்குள் சென்று விடுவோம்.

அல்லாஹ் அடுத்த வசனத்தில் இவ்வாறு இந்த பிரச்சனைக்கு தீர்வை குறிப்பிடுகிறான்.....

اِلَّا مَنْ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ صَالِحًـا فَاُولٰٓٮِٕكَ يَدْخُلُوْنَ الْجَـنَّةَ وَلَا يُظْلَمُوْنَ شَيْــٴًـــا ۙ‏
ஆயினும், எவர்கள் பாவமன்னிப்புக் கோரி, இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்களும் புரிந்தார்களோ, அவர்கள் சுவனத்தில் நுழைவார்கள். மேலும், அவர்களுக்கு இம்மியளவும் அநீதி இழைக்கப்பட மாட்டாது.
(அல்குர்ஆன் : 19:60)

இன்று முதல் தொழுகையில் கவனக்குறைவாக இருக்கும் நாம்
தவ்பா செய்து அல்லாஹ்வை முறையாக நம்பிக்கை கொண்டு ஸாலிஹான அமல்களை செய்து (வணக்க வழிபாடுகளில் சுன்னத்துகளை பேணி பித்அத்துகள் செய்யாமல்)
சுவனத்தை பெறுவோமாக வாருங்கள் !!

-உஸ்தாத் SM இஸ்மாயீல் நத்வி

أحدث أقدم