ஸலபுகளிடமிருந்து.. பகுதி 03

ஸலபு & ஸலபிகளின் வாழ்வு/கூற்றுகளிலிருந்து..

-தொகுப்பு: அபூ ஹுனைப் 

بسم الله الرحمن الرحيم


எது உண்மையில் கைசேதத்தை ஏற்படுத்தக் கூடியது?

இப்னுல் ஜவுஸி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:
"ஓர் அடியானுக்கு கைசேதத்தை ஏற்படுத்தக்கூடிய விடயமானது,அவனுடைய பாவங்கள் அதிகரிக்கும் போதெல்லாம் அவனின் பாவமன்னிப்புக் கோரல் குறைந்து காணப்படுவதும், அவன் கபுருக்கு நெருங்கும் போதெல்லாம் அவனிடத்தில் பலவீனத் தன்மை பலம் பெற்றுக் காணப்படுவதுமாகும்".
(அத்தப்ஸிரா: 55)


மார்க்கத்தின் வெளிப்படையான அடையாளங்களில் ஒன்று...!

இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:
"பெருநாள் தினங்களில் சந்தோசத்தை வெளிப்படுத்துவது, மார்க்கத்தின் வெளிப்படையான அடையாளங்களில் நின்றும் உள்ளதாகும்".
(பத்ஹுல் பாரி: 2/443)


நேர்வழி பிரவேசிக்கும் கதவுகள்.

இப்னுல் கையிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:
"நிச்சயமாக நேர் வழியானது மூன்று கதவுகளின் மூலமாக அடியானிடத்தில் நுழைகிறது. அவன் தன்னுடைய காதைக் கொண்டு செவியேற்பதின் மூலமாகவும், அவனுடைய கண்களைக் கொண்டு பார்ப்பதின் மூலமாகவும், அவனுடைய உள்ளத்தைக் கொண்டு விளங்கிக் கொள்வதின் மூலமாகவும் இவ்வாறு நிகழுகிறது".
(இஜ்திமாஉல் ஜுயூஷில் இஸ்லாமிய்யா: 1/40)


தக்பீரின் பெறுமதி!

உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்:
"அடியான் அல்லாஹு அக்பர் என்று கூறுவது, உலகம் மற்றும் அதில் உள்ளவற்றை விட மிகச் சிறந்ததாகும்".
(பத்ஹுல் பாரி இப்னு ரஜப்: 8/9)


துல்ஹஜ் முதல் பத்தில் நபியவர்கள்.

இப்னுல் கையிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:
"நபியவர்கள் துல்ஹஜ் மாதத்தின் பத்து தினங்களில் அதிகமாக துஆ செய்யக் கூடியவர்களாக இருந்தார்கள்.
மேலும், அதனில் லாஇலாஹ இல்லல்லாஹ், தக்பீர், அல்லாஹ்வைப் புகழ்தல் ஆகியவற்றை அதிகரிக்குமாறும் ஏவுவார்கள்".
(ஸாதுல் மஆத்: 2/360)


அதிகமான மக்கள் அறியாதிருக்கக்கூடிய தும்மலுடன் தொடர்புபட்ட ஒழுக்கங்களில் ஒன்று...

அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
"நிச்சயமாக நபியவர்கள் தும்மினால், தனது கையை கொண்டு அல்லது, ஆடையை கொண்டு முகத்தை மூடிக் கொள்வார்கள். மேலும், தனது சத்தத்தை தாழ்த்திக் கொள்வார்கள்".
(திர்மிதி: 2745)


இறைச்சி சாப்பிடுவோம்!

இப்னுல் கையிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:
"நீங்கள் இறைச்சி சாப்பிடுங்கள்! நிச்சயமாக அது நிறத்தை தெளிவாக்கும், வயிற்றை வெறுமையாக்கும்,
தேகத்தை அழகாக்கும்".
(அத்திப்புன் நபவி - பக்கம்: 340)


ஏன் கலக்கம் உண்டாகிறது?

இப்னுல் கையிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:
கலக்கம், அது உண்டாவதற்குக் காரணம் பாவங்களாகும்.
(அத்தாஉ அத்தஆ - பக்கம்: 21)


வதந்திகளுக்கு அஞ்சாத நபர்!

ஸாலிஹ் அல் பவ்ஸான் ஹபிழஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:
"யாரிடத்தில் சரியான அறிவு இருக்கிறதோ, அவருக்கு வதந்திகள் தீங்கிழைக்க மாட்டாது".
(இகாஸதுல் லஹ்பான்)


பிரயோசனமளிக்காத இஸ்திஃக்பார்.

ஸாலிஹ் அல் பவ்ஸான் ஹபிழஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:
"தனது செயல்கள் மூலம் பாவங்களில் நிலைத்து நின்று, நாவின் மூலம் மாத்திரம் அஸ்தஃபிருல்லாஹ் என்று கூறுபவனைப் பொருத்தளவில், அவன் ஒரு பொய்யனாவான். அவனுடைய பாவமன்னிப்பு அவனுக்கு பிரயோசனமளிக்க மாட்டாது".
(அல்குதப் அல்மின்பரிய்யா: 1/226)


பொய்யர்களின் தவ்பா!

புளைழ் இப்னு இயாழ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:
"பாவங்களைக் களையாத பாவமன்னிப்புத் தேடல், பொய்யர்களின் தவ்பாவாகும்".
(அல்குதப் அல்மின்பரிய்யா: 1/226)


நீங்கள் இதைச் செய்யாவிட்டால் தண்டிக்கப்படுவீர்கள்!

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
"என்னுடைய ஆத்மா எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! நீங்கள் நன்மையை கொண்டு ஏவுங்கள்! மேலும், தீமையை விட்டும் தடுங்கள்! அல்லது, அல்லாஹ் தனது புறத்திலிருந்து உங்கள் மீது ஒரு வேதனையை இறக்கி வைப்பான். பிறகு நீங்கள் அவனை அழைத்தாலும் உங்களுக்கு பதிலளிக்கப்படமாட்டாது" - திர்மிதி


உள்ளங்கள் நிவாரணம் பெற!

இப்னுல் கையிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: 
"உள்ளங்களின் நிவாரணத்திற்கு அல்குர்ஆனை விட மிகப் பிரயோசனம் அளிக்கக்கூடிய ஒரு மருந்து இருக்க முடியாது".
- அல்பதாஇஉ ஃபீ உலூமில் குர்ஆன்: 413


எதுவுமின்றி மனிதன் வெறுமையாக இருக்க முடியாது!

இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: 
"உலக காரியத்திலோ, மறுமை தொடர்பான காரியத்திலோ எவ்வித ஈடுபாடுமின்றி மனிதன் வெறுமையாக இருப்பதை, நான் காண வெறுக்கிறேன்".
- அஸ்ஸுஹ்துல் கபீர்: 577


கண் குளிர்ச்சி மிக்க கணவனும் மனைவியும்!

அஷ்-ஷெய்க் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ்வை வழிபடுவதன் மீது கணவன் தனது மனைவியை காணும்போது, அவளைக் கொண்டு அவனுடைய கண் குளிர்ச்சியடையும். அவ்வாறே, அல்லாஹ்வை வழிபடுவதன் மீது மனைவி தனது கணவனை காணும்போது, அவனைக் கொண்டு அவளுடைய கண் குளிர்ச்சியடையும்".
- மஜ்மூஉல் ஃபதாவா: 4/44


கணவன் அனுமதித்தாலும் முடியாது!

அஷ்-ஷெய்க் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: 
"நிச்சயமாக மனைவியாகிறவள், மணம் பூசியவளாகவும், தன்னை அலங்கரித்தவளாகவும் தனது வீட்டை விட்டு வெளியேறுவது, பெரும் பாவங்களை சேர்ந்ததாகும். அவளுடைய கணவன் அவளுக்கு அனுமதி வழங்கினாலும் சரியே!"
- ஜில்பாபுல் மர்அதில் முஸ்லிமா: 144


உன்னிடத்தில் புறம் பேசுபவனை அஞ்சிக்கொள்!

ஹஸன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:
"உன்னிடத்தில் புறம் பேசுபவன், உன்னை பற்றி புறம் பேசுவான்".
- அல்பbஹ்ருர் ராஇக்: 54


பொறுமை ஒன்றே தீர்வு!

அல்லாமா இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:
"முஸ்லிமான ஒருவருக்கு வாழ்க்கையை வெறுக்க முடியாது. மேலும், அல்லாஹ்வின் புறத்திலுள்ள விடுதலை, நலவு போன்றவற்றில் நிராசையடைய முடியாது. எனவே, அல்லாஹ்வுடைய ஏற்பாட்டில் அவன் சந்திக்கக் கூடிய விடயங்களில் பொறுமையாக இருப்பதே அவன் மீதுள்ள கடமையாகும்".
- ஃபதாவா அல் லஜ்னதித் தாஇமா: 25/398


வானவில் தோன்றுவதால் நமக்கென்ன நலவு உண்டாகிறது?

இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள்:
"வானவில்லானது, பூமியில் வாழ்வோருக்கு அவர்கள் மூழ்கடிக்கப்படுவதில் இருந்தும் பாதுகாப்பு உத்தரவாதமாகும்".
- அல் அதபுல் முஃப்ரத், இல: 767


மார்க்கத்தில் பற்றாய் இருந்து கொள்!

அல்லாமா ஸாலிஹ் அல்பவ்ஸான் ஹஃபிழஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: 
"மனிதர்களில் அனேகமானோர் வழிதவறிச் சென்றாலும் உன்னுடைய மார்க்கத்தை பற்றிப் பிடித்துக் கொள்! மனிதர்களுக்கு மத்தியில் நீ அனாதரவானவனாக மாறிவிட்டாலும் (அவ்வாறே) உன்னுடைய மார்க்கத்தில் பற்றாய் இருந்து கொள்! நிச்சயமாக, நீ சத்தியத்தில் நிலைத்திருக்கும் காலமெல்லாம் அதன்மீது பொறுமையாக இருந்து கொள்!"
ஷர்ஹ் கிதாபில் ஃபிதன் வல்ஹவாதிஸ்: 192


உங்கள் பிள்ளைகளின் பிறப்புக்கு முன்னதாக அவர்களுக்கு நீங்கள் நல்லுபகாரம் செய்ய வேண்டுமா?

அபுல் அஸ்வத் என்ற அறிஞர் தனது மகன்களை நோக்கி பின்வருமாறு கூறினார்: 
"நீங்கள் பெரியவர்களாக இருக்கும் போதும், சிறியவர்களாக இருக்கும் போதும், நீங்கள் பிறப்பதற்கு முன்னரும் நான் உங்களுக்கு நல்லுகாரம் செய்திருக்கிறேன்". அதற்கு அவர்கள்: "நாங்கள் பிறப்பதற்கு முன்னர் நீங்கள் எங்களுக்கு எப்படி நல்லுபகாரம் செய்திருக்கிறீர்கள்?" என வினவ, "நீங்கள் (பிற்காலத்தில்) திட்டாத விதத்தில் தாய்மார்களை நான் உங்களுக்காகத் தெரிவு செய்து தந்துள்ளேன்" என்றார்.
அதபுத் துன்யா வத்தீன்: 15


எமது நாவு எப்படிப்பட்டது தெரியுமா?

அஷ்ஷெய்க் ஸாலிஹ் அல் பவ்ஸான் ஹஃபிழஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:
"நாவானது மிகவும் ஆபத்துமிக்கது. நாவானது வாளை விட மிகக் கடுமையானது. வாளின் மூலம் ஒருவரை அல்லது, இருவரை உன்னால் கொன்றுவிட முடியும். ஆனால், நாவின் மூலம் ஒட்டுமொத்த சமூகத்தையே நீ கொன்றுவிடுவாய்!"
- ஷர்ஹ் கிதாபில் ஃபிதன் வல் ஹவாதிஸ்: 238


உங்களது குறைகளை அல்லாஹ் மறைக்க வேண்டுமா?

அல்லாமா ஸஃதி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:
"யார் மனிதர்களின் குறைகளை விட்டும் பராமுகமாக இருக்கிறாரோ, மேலும் அவர்கள் வெளிப்படுத்துவதை விரும்பாத நிலைகளை துருவித் துருவி ஆராய்வதை விட்டும் தனது நாவை பாதுகாத்துக் கொள்கிறாரோ, அவரின் மார்க்கமும் மானமும் ஈடேற்றம் அடைந்து விட்டது. இன்னும், அடியார்களின் உள்ளங்களில் அல்லாஹ் தனது நேசத்தை போட்டுவிடுவான். அத்தோடு, அவனுடைய அந்தரங்கத்தை அல்லாஹ் மறைத்து விடுவான்".
- அல்ஃபவாகிஹுஷ் ஷஹிய்யா: 1/112


நெருக்கடியான சூழலில் இருந்து வெளியேறி, சிறந்த வாழ்வாதாரத்தை பெற விரும்புகிறீர்களா?

அல்லாஹுத்தஆலா கூறுகிறான்:
"எவர் அல்லாஹ்வுக்குப் பயந்து நடக்கிறாரோ, அவருக்கு (ஒவ்வொரு சங்கடத்திலிருந்தும்) வெளியேறும் வழியை அவன் ஆக்குவான். மேலும், அவர் எண்ணியிராத விதத்தில் அவருக்கு வாழ்வாதாரங்களை அவன் வழங்குவான்". 
- அத்தலாக்: 2, 3

أحدث أقدم