நற்குணங்களை வளர்த்துக் கொள்ள சில வழிமுறைகள்


1. சரியான கொள்கை (அகீதா)  பின்பற்றுவதோடு நற்குணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

2. நற்குணத்தை வளர்த்துக்கொள்ள அதிகம் துஆ செய்ய வேண்டும்.

3. தீயகுணங்களை விட்டுவிட்டு நற்குணங்களைப் பின்பற்றி வாழ போராட வேண்டும்.

4. சுயபரிசோதனை:

தீய குணங்களை நாம் மேற்கொண்டு விட்டால் நாம் செய்தது சரிதானா? என்று நம்மை நாமே சுயபரிசோதனை செய்து பார்க்க வேண்டும். 

தீய குணங்களின் பக்கம் இனி திரும்பக் கூடாது என நம் மனதைத் தூண்ட வேண்டும்.

நம்மை நாமே சுய பரிசோதனை செய்து பார்க்கும் பொழுதுதான் நம்முடைய தவறு நமக்கு புரியும். நம்முடைய தவறு நமக்கு புரிந்தவுடன் அதை விட்டு விலகிவிட வேண்டும்.

நம்முடைய செயலுக்கு நமக்கு  நாமே நியாயம் கற்பிக்க கூடாது.

அல்லாஹ்  سبحانه و تعالى வும், ரசூலும் கற்றுக் கொடுத்தபடி தான்  ஒவ்வொரு செயலையும் செய்ய வேண்டும் இதுவே மறுமையில் வெற்றியை தரும்.

அல்லாஹ்விற்கு அஞ்சி நம்மை நாமே சுய பரிசோதனை செய்து பார்ப்பதோடு அந்த தவறிலிருந்து விலக போராட வேண்டும். 

போராடுவதோடு துஆ செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்யும் பொழுது அல்லாஹ்  தீய செயல்களை  செய்யவிடாமல் நம்மை பாதுகாப்பான்.

5. நற்குணங்களால் விளையக் கூடிய நன்மைகளை எண்ணிப் பார்த்தல்:

நல்ல விஷயங்களின் பலன்களை அறிந்து கொள்வதும், அவற்றின் நல்ல முடிவுகளை நினைவில் கொள்வதும், அவற்றை எடுத்து நடப்பதற்கும் அதற்காக முயற்சிப்பதற்கும் பெரும் காரணமாக ஆகி விடும்.

6. தீயகுணங்களின் முடிவுகளை எண்ணிப்பார்த்தல்:

தீயகுணங்களால் விளையக் கூடிய நிரந்தர கைசேதம், விலகாத கவலை, பேரிழப்பு, துக்கம் மற்றும் மக்களின் உள்ளங்களில் ஏற்படும் வெறுப்பு ஆகியவற்றைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

7. மனதைப் பக்குவப்படுத்துவதை விட்டும் நம்பிக்கை இழந்திடாதிருத்தல்: 

நம்பிக்கை இழந்து விடுவது ஒரு முஸ்லிமுக்கு அழகல்ல. ஒரு போதும் அவனுக்கு அது ஏற்றதும் அல்ல. மாறாக அவன் தனது நாட்டத்தைப் பலப்படுத்தி மனதைப் பரிபூரணமாக்குவதற்கும் தன்னுடைய குறைகளை நிவர்த்தி செய்வதற்கும் முயற்சிப்பது அவனுக்கு அவசியமாகும்.

அல்லாஹ்  سبحانه و تعالى குர்ஆனில் இவ்வாறு கூறுகிறான் :

قُلْ يٰعِبَادِىَ الَّذِيْنَ اَسْرَفُوْا عَلٰٓى اَنْفُسِهِمْ لَا تَقْنَطُوْا مِنْ رَّحْمَةِ اللّٰهِ‌  اِنَّ اللّٰهَ يَغْفِرُ الذُّنُوْبَ جَمِيْعًا‌  اِنَّهٗ هُوَ الْغَفُوْرُ الرَّحِيْمُ‏

(நபியே!) கூறுவீராக: “தங்கள் ஆன்மாக்களுக்குக் கொடுமை இழைத்துக் கொண்ட என் அடிமைகளே! அல்லாஹ்வின் கருணை பற்றி நம்பிக்கை இழந்துவிடாதீர்கள். திண்ணமாக, அல்லாஹ் எல்லாப் பாவங்களையும் மன்னித்து விடுகின்றான். அவன் பெரிதும் மன்னிப்பவனும், கருணையாளனும் ஆவான்.
(அல்குர்ஆன் : 39:53)

அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து நற்குணங்களை பேணி மனதை பக்குவப்படுத்த வேண்டும்.

அல்லாஹ்விடமே எல்லாப் பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டும்.

இம்மையிலும் , மறுமையிலும் வெற்றி அளிக்கக் கூடிய நல்லமல்களை தொடர்ந்து செய்ய போராட வேண்டும்.

8. மலர்ந்த முகம் காட்டுவதும், முகம் சுளிப்பதைத் தவிர்ப்பதும்:

ஒருவன் தன் சகோதர முஸ்லிமை மலர்ந்த முகத்துடன் பார்ப்பது தர்மமாகும். அதற்குக் கூலி கொடுக்கப்படும். 

"உனது சகோதரனை மலர்ந்த முகத்துடன் பார்ப்பதும் உனக்குத் தர்மமாகும்" என நபி(ﷺ) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)

அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என்னிடம் நபி (ﷺ) அவர்கள், "நல்லறங்களில் எதையும் அற்பமாகக் கருதாதீர்; உம்முடைய சகோதரரை மலர்ந்த முகத்துடன் நீர் சந்திப்பதானாலும் சரியே" என்று கூறினார்கள். ஸஹீஹ் முஸ்லிம் : 5122. 

நமக்கு தீங்கு இழைத்தவர்களை பார்க்க நேரிட்டாலும் சிரித்த முகத்தோடு அவர்களுக்கு ஸலாம் கூற வேண்டும்.

அல்லாஹ் سبحانه و تعالى

ஆதம்(அலை) அவர்களுக்கு “அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு!” என்ற அழகிய முகமனை  கற்றுத் தந்துள்ளான். உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும், அன்பும், அருளும் உண்டாகட்டும் என்பது இதன் அர்த்தமாகும். 

முகமனை மகிழ்ச்சியோடு மற்றவர்களுக்கு கூற வேண்டும். இந்த ஸலாம் அன்பை வளர்க்கும். பிறரை நம் பால் ஈர்க்கும்.

புதிய உறவுகளை ஏற்படுத்திக்கொள்ளவும், இருக்கும் உறவுகளைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஸலாம் பெரிதும் உதவும். எனவே, தெரிந்த- தெரியாத அனைத்து முஸ்லிம் களுக்கும் ஸலாம் கூறவேண்டும்..'

ஒருவர் இறைத்தூதர்(ﷺ) அவர்களிடம் 'இஸ்லாத்தில் சிறந்தது எது' எனக் கேட்டதற்கு, '(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும் நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும்' என்றார்கள்' என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். ஸஹீஹ் புகாரி : 12. 

நபி(ﷺ) அவர்கள் புன்முகத்தோடு வாழ்ந்தது போல் நாமும் மற்றவர்களிடம் புன்னகை பூத்தவர்களாக இருக்க வேண்டும்.

மற்றவர்கள் செய்யும் தவறுகளை பெரிது படுத்தாமல் மன்னிக்க கூடியவர்களாக இருந்தார்கள்.

9. தவறுகளைக் கண்டும் காணாமலும், கவனித்தும் கவனிக்காமலும் இருத்தல்:

இறைத்தூதர்(ﷺ) அவர்கள் அறிவித்தார்கள்: 

(பிறர் மீது) கெட்ட எண்ணம் கொள்வது குறித்த உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில், கெட்ட எண்ணம் தான் பேச்சுகளிலேயே மிகவும் பொய்யானதாகும். (மற்றவர்களின் குற்றங் குறைகளை) துருவித் தருவி ஆராயாதீர்கள். ஒட்டுக்கேட்காதீர்கள். ஒருவரோடொருவர் பகைத்துக்கொள்ளாதீர்கள். (அல்லாஹ்வின் அடியார்களே!) சகோதரர்களாய் இருங்கள். ஸஹீஹ் புகாரி : 5143. 

மனிதர்களில் யாரும் தவறுக்கும், குறைகளுக்கும் அப்பாற்பட்டவர்கள் கிடையாது. 

ஒருவருடைய பாவத்தை நாம் துருவித் துருவி ஆராய்ச்சி செய்யும் நாமும் கூட தவறுகளுக்கு உட்பட்டவர்கள்தான். அவர்களிடம் ஒரு குறை. ஒரு தவறு இருந்தால் நம்மிடம் வேறொரு குறை, தவறு இருக்கும். இந்த தவறுகள் நாளை மறுமையில் பலருக்கு முன்னால் வெளிப்படுத்தி அவமானப்படாமல் இருக்க வேண்டுமானால் நாம் இம்மையில் நம்முடைய பார்வைக்கு வந்த குறைகளை தவறுகளை மறைத்தாக வேண்டும். அப்படி மறைக்காத பட்சத்தில் நம்முடைய குறைகளை அல்லாஹ்  سبحانه و تعالى வெளிப்படுத்துவான்.

அல்லாஹ்வின் தூதர்  கூறினார்கள்:

ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதி யிழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரது அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடு பட்டிருக்கின்றாரோ அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கின்றான். எவர் ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகின்றாரோ அவரை விட்டு அல்லாஹ்வும் மறுமை நாள் துன்பங்கள் ஒரு துன்பத்தை நீக்குகின்றான். எவர் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கின்றாரோ அவரது குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கின்றான். இதை அப்துல்லாஹ் பின் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்: புகாரி 2442)

உறவுகளுக்கிடையே சின்ன சின்ன தவறுகளை கண்டும் காணாமல் சகித்துக் கொண்டு சென்றால் அது நல்லதாக அமையும்.

தவறுகளைக் கண்டும் காணாமலும், கவனித்தும் கவனிக்காமலும் இருத்தல்

இவ்விரண்டு குணங்களும் பெரியார்கள், சான்றோர்களின் குணங்களிலுள்ளதாகும்.

நேசத்தை வளர்ப்பதற்கும் அதை தக்க வைத்துக் கொள்வதற்கும் மேலும் விரோதத்தைக் குழி தோண்டி புதைப்பதற்கும் இவ்விரண்டும் உதவியாக இருக்கும்.

10. சகிப்புத் தன்மை:

சகிப்புத்தன்மை குணங்களிலேயே மிகச் சிறந்ததும் அறிவுடையோருக்கு மிக ஏற்றதுமாகும். 

சகிப்புத் தன்மை என்பது கோபம் பொங்கியெழும் போது மனதைக் கட்டுப்படுத்துவதாகும். 

சகிப்புத் தன்மையுடையவர் கோப்பப்படக் கூடாது என்பது இதன் சட்டமல்ல. மாறாக அவருக்குக் கோபம் பொங்கியெழும் போது தனது சகிப்புத் தன்மையால் அதனை அடக்கிக் கொள்வார்.

சகிப்புத் தன்மையை ஒருவர் மேற்கொள்ளும் போது அவரை நேசிக்கக் கூடியவர்கள் அதிகமாவார்கள். வெறுக்கக் கூடியவர்கள் குறைந்து விடுவார்கள். மேலும் அவருடைய அந்தஸ்து உயர்ந்து விடும்.

ஷைத்தான் நமக்கு கோபத்தை ஏற்படுத்து கின்றான். நம்மை அறிவில்லாதவனாக மாற்ற முயற்சி செய்கின்றான். 

அறிவுடையோர் சகிப்புத் தன்மையோடு வாழ வேண்டும்.

الَّذِيْنَ يُنْفِقُوْنَ فِى السَّرَّآءِ وَالضَّرَّآءِ وَالْكٰظِمِيْنَ الْغَيْظَ وَالْعَافِيْنَ عَنِ النَّاسِ‌ وَاللّٰهُ يُحِبُّ الْمُحْسِنِيْنَ‌‏

(பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்; தவிர கோபத்தை அடக்கி கொள்வார்கள்; மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள்; (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான். (அல்குர்ஆன் : 3:134)

11. அறிவீனர்களை விட்டும் விலகியிருத்தல் :

யார் அறிவீனர்களை விட்டும் விலகியிருக்கிறாரோ அவர் தனது கண்ணியத்தைக் காத்துக் கொள்வார். 

மனதுக்கு நிம்மதி கிடைப்பதோடு தனக்கு துன்பம் தரக் கூடியவைகளைக் கேட்பதை விட்டும் நீங்கி விடுவார்.

خُذِ الْعَفْوَ وَاْمُرْ بِالْعُرْفِ وَاَعْرِضْ عَنِ الْجٰهِلِيْنَ‏

எனினும் (நபியே) மன்னிப்பைக் கைக் கொள்வீராக! நன்மையைக் கடைபிடிக்குமாறு (மக்களை) ஏவுவீராக மேலும் அறிவீனர்களைப் புறக்கணித்து விடும். (அல்குர்ஆன் : 7:199)

அறிவில்லாமல் ஏதாவது காரியம் செய்து கொண்டு, துன்பம் தரக்கூடியவர்களை விட்டும் விலகி இருப்பது மனதிற்கு நிம்மதி அளிக்கக்கூடியதாக இருக்கிறது.

12. திட்டுவதைத் தவிர்ப்பது: 

நபி(ﷺ)அவர்கள் எவர் தமது இரு தொடைகளுக்கிடையில் உள்ளதையும் இரு தாடைகளுக்கிடையில் உள்ளதையும் பாதுகாத்துக் கொள்கிறாரோ அவர் சுவர்க்கம் செல்வதற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று கூறினார்கள்.

அண்ணல் நபி (ﷺ) அவர்கள் நவின்றதாக  அபு   ஸயீதுல்குத்ரி( ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 

“நாவிடம் மற்ற உறுப்புகள் மன்றாடுகின்றன. ஆதமின் மகன் காலையில் எழுந்ததும் மற்ற உறுப்புகள நாவை நோக்கி கூறும், நாவே இறைவனை பயந்து நடந்து கொள்! நாங்கள் உன்னைக் கொண்டே (உன்னை தழுவியே )உள்ளோம். நீ செவ்வையாக( நன்றாக)இருந்தால்,  நாங்களும் செவ்வையாக இருப்போம். நீ கோணலாகி விட்டால், நாங்களும் கோணலாக ஆகிவிடுவோம். (திர்மிதி)

பாவத்தில் வீழ்ந்து வரம்பு மீறிவிடக் கூடாது என்ற எண்ணத்தில், தகுந்த காரணங்கள் இருப்பினும் பிறரைத் திட்டுவதிலிருந்து உண்மை முஸ்லிம் தனது நாவைப்பேணி, கொழுந்து விட்டெரியும் நரக ஜுவாலையிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

தாய் தன் பிள்ளைகளை திட்டக் கூடியவளாக, சபிக்க கூடியவளாக இருக்கின்றார்கள். நாம் திட்டக்கூடிய  நேரத்தில் 'ஆமீன் 'சொல்லக் கூடிய மலக்கு 'ஆமீன் 'சொல்லிவிட்டால் நம்முடைய பிள்ளைக்கு நம்மை அறியாமல் நாமே கெடுதல் செய்து விடுகின்றோம்.

ஒருவரை ஒருவர் திட்டாமல் நல்ல வார்த்தை பேசக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.

13. துன்பம் மறப்பது :

நமக்கு தீங்கிழைத்தவரின் துன்பத்தை மறந்திட வேண்டும். அதனால் அவனைக் குறித்து உன் உள்ளம் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக. மேலும் அவனை அந்நியனாகக் கருதாதே! ஏனென்றால் தன் சகாக்கள் செய்த தீங்கை நினைத்துப் பார்ப்பவருக்கு அவர்களை அவர் மெய்யாக நேசிக்க முடியாமல் போய்விடும். 

பொதுவாக தனக்கு பிற மக்கள் செய்த தீங்கை எண்ணிப் பார்ப்பவருக்கு அவர்களுடன் ஒழுங்காக வாழ முடியாது. எனவே முடிந்த அளவுக்கு அதை மறந்து விட வேண்டும்.

நாம் பிறருடைய குறைகளை ஆராய்ந்தால், அல்லாஹ்  سبحانه و تعالى நம்முடைய குறைகளை ஆராய்வான்.

நமக்கு பிறர் செய்த துன்பங்களை சொல்லிக் காட்டாமல் மறந்துவிட வேண்டும். நல்லமுறையில் மன்னித்து அவர்களுடன் சுமூகமான முறையில் நடந்து கொள்ள வேண்டும்.

மன்னித்தல் என்பது அகிலங்களைப் படைத்து பரிபாலிப்பவனின் தன்மையாகும். அதை மனிதர்களிடையேயும் விசாலப்படுத்த வேண்டும். அவர்கள் தீமையை தீமையால் எதிர்கொள்ளாமல் அறிவீனர்களை மன்னிப்பதன் மூலம் எதிர்கொள்ள வேண்டும். இவ்வாறு அழகிய முறையில் நடந்து கொள்வதையே அல்லாஹ் விரும்புகிறான்.

وَلَا يَاْتَلِ اُولُوا الْـفَضْلِ مِنْكُمْ وَالسَّعَةِ اَنْ يُّؤْتُوْۤا اُولِى الْقُرْبٰى وَالْمَسٰكِيْنَ وَالْمُهٰجِرِيْنَ فِىْ سَبِيْلِ اللّٰهِ ‌‌  وَلْيَـعْفُوْا وَلْيَـصْفَحُوْا‌  اَلَا تُحِبُّوْنَ اَنْ يَّغْفِرَ اللّٰهُ لَـكُمْ‌  وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ‏

இன்னும், உங்களில் (இறைவனின்) கொடை அருளப் பெற்றவர்களும், தக்க வசதி உடையவர்களும், உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும், (தம்மிடங்களை விட்டு) அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் (எதுவும்) கொடுக்க முடியாது என்று சத்தியம் செய்ய வேண்டாம்; (அவர்கள் தவறு செய்திருப்பின்) அதை மன்னித்து (அதைப்) பொருட்படுத்தாமல் இருக்கவும்; அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்ப மாட்டீர்களா? மேலும் அல்லாஹ் (பிழை பொறுப்பவன்) மிக மன்னிப்பவன்; அன்பு மிக்கவன். (அல்குர்ஆன் : 24:22)

அல்லாஹ்  سبحانه و تعالى வுக்காக நாம் பிறரை மன்னிக்கும்பொழுது அல்லாஹ் நம்முடைய பாவங்களை மன்னிக்கின்றான்.

அல்லாஹ் போதுமானவன்.

ஒருவர் மரணித்து விட்டார். அவரிடம் (மண்ணறையில் வைத்து) ‘நீ உலகில் என்ன நன்மை செய்து வந்தாய்?’ என்று விசாரிக்கப்பட்டது. அதற்கு அவர், ‘நான் மக்களிடம் கொடுக்கல், வாங்கல் செய்து வந்தேன். கடன் தொகையை வசூல் செய்யும்போது வசதி உள்ளவருக்கு அவகாசம் கொடுத்து வந்தேன். வசதியற்றவரை மன்னித்து, அவரின் கடனைத் தள்ளுபடி செய்து வந்தேன்’ என்று கூறினார். அவரின் இந்த நற்செயல் அங்கீகரிக்கப்பட்டு அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது என நபி (ﷺ) கூறினார்கள்’. ஸஹிஹ் புகாரி

14. பொறுத்தல், மன்னித்தல், தீமைக்குப் பகரமாக நன்மை செய்தல் :

இவ்வாறு செய்வது அந்தஸ்து உயர்வதற்குக் காரணமாக அமையும். இதில் மனதுக்கு அமைதி ஏற்படும். பழிக்கு பழி வாங்கும் எண்ணதிலிருந்து விலகவும் முடியும்.

மனிதர்களால் நமக்கு சில தீங்கு ஏற்பட்டு இருப்பினும் அவர்களிடம் பழிக்குப் பழி வாங்காமல் பொறுமையாக, மன்னித்து விட வேண்டும். அல்லாஹ்  سبحانه و تعالى நம்மை மன்னிப்பான்.

நாம் பிறரை மன்னித்து வாழ்ந்தால் அது நமக்கு  நன்மையாக அமையும்.

நமக்கு செய்த தீமைக்கு பதிலாக தீமை செய்தவர்க்கு நன்மையே செய்ய வேண்டும்.

நற்குணங்களைப் பேணி வாழக் கூடிய நல்ல மக்களாக நம் அனைவரையும் அல்லாஹ்  سبحانه و تعالى ஆக்கி அருள் புரிவானாக!! 

ஆமீன்!!!
أحدث أقدم