நவீன விஞ்ஞானமும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளை ஆராய்வதும் ஒன்றல்ல

நவீன விஞ்ஞானமும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளை ஆராய்வதும் ஒன்றல்ல. நவீன விஞ்ஞானம் இல்லாமலே அல்லாஹ்வின் அத்தாட்சிகளைச் சிந்திக்கலாம். படிப்பினைகள் பெறலாம். 

நபியவர்களையும் நபித்தோழர்களையும் பார்த்துத்தான் அல்லாஹ்வின் படைப்பினங்களைச் சிந்திக்குமாறு கூறும் வசனங்கள் அருளப்பட்டன. நவீன விஞ்ஞானமின்றியே அவர்கள் சிந்தித்து அல்லாஹ்வை உரிய முறையில் பரிந்துகொண்டனர். ஈமானில் அவர்களை மிஞ்ச எவராலும் இன்றுவரை முடியாதுள்ளது. நவீன கருவிகள் இன்றி சாதாரண மனிதனால் சிந்திக்க முடியுமான விடயங்களையே அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது.

அதற்காக நவீன விஞ்ஞானத்தை இஸ்லாம் முற்றாகப் புறக்கணிக்குமாறு கூறவில்லை. ஆனால் இன்று சிலர் சித்தரிப்பது போன்ற விஞ்ஞானம் இன்றி குர்ஆன் சுன்னாவைப் புரிய முடியாது விஞ்ஞானம் தெரிந்தவர்கள்தான் அவற்றை நன்கு புரிய முடியும் அதனால் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை அதிகரிக்கும் என்பதெல்லாம் வெறும் பிதற்றல்கள்தான். 

விஞ்ஞானத்தைக் கற்று அல்லாஹ்வைப் புரிந்துகொள்வது எப்படிப்போனாலும் அல்லாஹ்வை நிராகரிக்காமலிருந்தால் பெரிய செய்தி. இன்று விஞ்ஞானம் படித்து குர்ஆன் ஹதீஸில் குறைகாணுவது மாத்திரமின்றி இறைவனையே மறுக்கும் எத்தனையோ பேர் தோன்றியுள்ளமை யாரும் அறியாததல்ல.

விஞ்ஞானிகள்தான் இறைநம்பிக்கையில் உறுதியுள்ளவர்கள் என்று பார்த்தால் அதுவும் இல்லை. 

குர்ஆன் சுன்னாவுக்கு மாற்றமான எத்தனை எத்தனை கோட்பாடுகள். 

யாராவது தமது விஞ்ஞான ஆய்வுகளை வைத்து இறைவன் இருக்கின்றான் என முடிவு கூறினால் அல்லது ஒரு ஊகத்தையாவது வெளியிட்டால் விஞ்ஞான உலகத்தில் அவருக்கு எந்த மதிப்பும் இருக்காது. அவர் விஞ்ஞான உலகில் புகழ் பூத்தவராக இருந்தாலும் சரியே. அவரது ஆய்வை எந்தவொரு அதிகாரபூர்வ சஞ்சிகையும் வெளியிடாது. அவ்வாறு யாராவது வெளியிட்டால் அவர்களை விஞ்ஞான சமுதாயமே பகிஷ்கரிக்கும். குறித்த கருத்திலிருந்து தவ்பா செய்யாவிட்டால் அவரது முன்சென்ற பின்சென்ற ஆய்வுகள் அனைத்தும் கேள்விக்குட்படுத்தப்படும்.

அதே நேரம் பரிணாமக் கொள்கைக்குச் சார்பாக எவ்வித ஆதாரமுமற்ற ஒரு பலவீனமான ஆய்வை நீங்கள் எழுதினாலும் சர்வதேச சஞ்சிகைகள் போட்டிகொண்டு அதனைப் பிரசுரிக்க முன்வருவார்கள். 

இவையெல்லாம் ஆதாரங்களோடு நிரூபிக்கப்பட்டுள்ளன.

இதுதான் இன்று நம்மில் பலர் பாதுகாக்க நினைக்கும் விஞ்ஞான மாபியா. 

-அப்துல்லாஹ் உவைஸ் மீஸானி
أحدث أقدم