- ஷைஃக் ஸாலிஹ் அஸ்-ஸுஹய்மீ, ஷைஃக் ஸாலிஹ் அல் ஃபவ்ஸான், இமாம் இப்னு பாஸ்
ஷைஃக் ஸாலிஹ் அஸ்-ஸுஹய்மீ ஹஃபிதஹுல்லாஹ்:
கேள்வி:
கடந்த நாற்களில் அறிஞர்களில் ஒருவர் நடிப்பை நோக்கி அழைக்கக் கூடியவராக இருந்தார். மேலும் அவர் நடிப்பானது மிக வலுவான, மிகச் சிறந்த தாஃவாவுடைய வழிமுறைகளிலிருந்து உள்ளது என்றும் கூறுபவராக இருந்தார்.
பதில்:
இது முற்றிலுமான அறியாமை. ஏனெனில், நடிப்பானது பொய்யாகும். கல்வியில் நுற்பமிக்க உலமாக்களிடத்தில், நடிப்பானது எந்த ஒரு நிலையிலும் தாஃவாவுடைய வழிமுறைகளிலிருந்து உள்ளதாகாது .
இதை நீங்கள் உறுதிசெய்ய நாடினீர்களென்றால், பெருந்தன்மைமிகு முஃப்தீ ஸாலிஹ் அல் ஃபவ்ஸான், ஷைஃக் அப்துல்லாஹ் அல்-ஃகுதய்யான், ஷைஃக் ஸாலிஹ் அல்-லுஹய்தான் - அல்லாஹ் அவர்களைப் பாதுகாப்பானாக - போன்ற பெரும் அறிஞர்களிடத்தில் கேளுங்கள். மேலும் அதற்கு முன்பாக, எம்முடைய முன்சென்ற அறிஞர்களான ஷைஃக் அப்துல் அஸீஸ் பின் பாஸ், ஷைஃக் முஹம்மது அல்-உஸைமீன் மற்றும் அவர்கள் அல்லாதோரின் பேச்சுகளும் (இது விடயமாக உள்ளன).
நிச்சயமாக நடிப்பானது பொய்யாகும். எனவே, தாஃவாவுடைய வழிமுறைகளில் ஒரு வழிமுறையாக பொய் எடுக்கப்படுவதென்பது (ஒரு போதும்) ஆகுமாகாது. நம்மிடத்தில் (நல்ல) இலக்கானது (தவறான) வழிமுறையை நியாயமாக்கி விடாது. நடிப்பின் பக்கம் மீளும் அளவிற்கு, மேலும் அதனை தாஃவாவின் வழிமுறைகளில் ஒன்றாக கருதும் அளவிற்கு, தாஃவாவுடைய அனைத்து வழிமுறைகளையும் நாம் இழந்துவிட்டோமா!? நிச்சயமாக இது மிகப் பெரும் காரியங்களில் ஒன்றாகும். ஆம்.
ஷைஃக் ஸாலிஹ் அல் ஃபவ்ஸான் ஹஃபிதஹுல்லாஹ்:
நடிப்பு என்பது இஸ்லாத்தில் அறியப்பட்ட ஒரு விடயம் அல்ல. இந்த நடிப்பானது ஐரோப்பியாவின் திரையரங்குகளில் இருந்து (வந்த) ஒரு செயலாகும். ஒரு சில ஏமாற்றத்திற்குள்ளானவர்களின் மூலமாக இது நம்மிடத்தில் வந்து விட்டது.
எனவே, இது காஃபிர்களின் செயல்களிலிருந்து உள்ளதாகும், முஸ்லிம்களுடைய செயல்களிலிருந்து உள்ளதல்ல. தாஃவாவுடைய வழிமுறைகளிலிலும் சரி, அதல்லாத மற்றவற்றிலும் சரி, நடிப்பு என்பது ஒருபோதும் சரிவராது. ஏனெனில், அது வீணும், விளையாட்டும் ஆகும்.
மேலும் அது காஃபிர்களின் வழக்கங்களிருந்து உள்ளதாகும். நடிப்பென்பது தாஃவாவுடைய வழிமுறைகளில் ஒன்றாக இருந்திருக்குமேயானால், அல்லாஹ்வுடைய தூதர் ﷺ அவர்களும், அவர்களுடைய தோழர்களும், மேலும் அவர்களுக்கு பின்பு வந்த உலமாக்களும் அதனை தெளிவுபடுத்தி இருப்பார்கள்.
நடிப்பென்பது இந்த அண்மைக் காலங்களிலே தவிர (அதற்கு முன்பு) அறியப்படவில்லை. நமக்கு மத்தியில் யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் வழக்கங்கள் வந்த பொழுது, நடிப்பு என்பது நம்மிடத்தில் (பல்வேறு) கலைகளிலிருந்துமுள்ள ஒரு கலையாக மாறிவிட்டது!
இமாம் இப்னு பாஸ் ரஹிமஹீல்லாஹ்:
கேள்வி:
நடிப்பையும், கற்பனைக் கதைகளையும் அல்லாஹ்வை நோக்கி அழைப்புப் பணி செய்வதற்கு ஒரு வழியாக எடுத்துக் கொண்டவர்களுக்கு (வழிகாட்டும்) பேச்சையும், நல்லுபதேசத்தையும் இந்த சங்கையான அவையில் தாங்கள் வழங்குவதை உங்களிடமிருந்து நாங்கள் ஆதரவு வைக்கின்றோம். ஏனென்றால், ஸாலிஹான இளைஞர்களில் நிறையபேர் - அல்லாஹ் அவர்களுக்கு நற்கூலியை வழங்குவானாக - தற்போது இதனை செய்து வருகின்றார்கள்.
பதில்:
நடிப்பது என்பது சரியானதல்ல, மேலும் அது ஒரு பொய் என்பதை நிச்சயமாக நாம் ஒருமுறைக்கு மேல் கூறியுள்ளோம். ஒரு மனிதர் தன்னை உமர் இப்னு அல் கத்தாப் அல்லது அபூ ஜஹ்ல் அல்லது அபூ லஹப் அல்லது இன்னின்னவர் அல்லது இன்னின்னவர் என்று நடிப்பது சரியாகாது. அழைப்புப்பணி, கல்வியைக் கற்றுக் கொடுப்பது, மேலும் வழிகாட்டுவது ஆகியவை அறிஞர் பெருமக்கள், நபித்தோழர்கள் மற்றும் அவர்களைப் பின்பற்றியோர் பயணித்த பாதையின் மீது இருத்தல் கட்டாயமாகும்.
கற்றுக் கொடுப்பவர் அல்லது வழிகாட்டுபவர் அல்லது உபதேசிப்பவர் அல்லாஹ்வைப் பற்றியும், அவனுடைய உரிமைகளைப் பற்றியும் நினைவூட்டுவார். மேலும் அவனுடைய கோபத்தை விட்டும் எச்சரிக்கை செய்வார். (இதல்லாது) நான் இன்னின்னவர், இன்னின்னவர் என்று கூறவோ, (மேலும்) தான் இன்னின்னவர் அல்லது இன்னின்னவர் என்று நடிப்பதற்கோ அவசியம் இல்லை. ஏனெனில், இது பொய்யாகும், அவர் நல்லதை நாடியிருந்தாலும் சரியே.
அதுபோலவே, எந்த ஒரு அடிப்படையும் இல்லாத (கற்பனைக்) கதைகளை உருவாக்குவதுமாகும். இது பொய்களிலிருந்து உள்ளதாக இருக்குமென அஞ்சப்படுகின்றது.
தீமையிலிருந்து எச்சரிக்கையாக இருப்பதற்காக, மேலும் நன்மையானவற்றில் ஆர்வம் கொள்வதற்காக, நன்மையான மற்றும் தீமையான காரியங்களிலிருந்து எது தெளிவாக உள்ளதோ அவற்றை மக்களுக்கு தெளிவுபடுத்துவதே அவருக்கு உகந்ததாகும். அல்லாஹ்வின் தூதர் ﷺ வாயிலாக வந்திருக்கும் வசனங்கள் மற்றும் மார்க்க ஆதாரங்களை கொண்டு (அவை இருந்திட வேண்டும்).
அதாவது, ஒரு முஃமினுக்கு தான், கல்வியை கற்றுக் கொடுப்பது, உபதேசம் செய்வது, நினைவூட்டுவது ஆகியவற்றில் பொய்யாக இருக்கக்கூடிய இந்த நடிப்பையும், எந்த ஒரு அடிப்படையும் அற்ற கதைகளையும் விட்டும் தூரமாக இருப்பதோடு, முன்சென்றவர்களுக்கு எது போதுமானதாக இருந்ததோ அதுவே அவருக்குப் போதுமானதாகும்
நிகழாத கதைகள், இன்னின்னவாறு இன்னின்னவாறு நடந்தது, இன்னின்னாருக்கு இவ்வாறு நடந்தது, இவ்வாறு நடந்தது, அவருக்கோ எந்த ஒர் எதார்த்தமும் இருக்காது. இன்னின்னவளுக்கு இவ்வாறு நடந்தது, இவ்வாறு நடந்தது, அவளுக்கோ எந்த ஒர் எதார்த்தமும் இருக்காது. அல்லாஹ் தடுத்திருக்கக்கூடிய பொய்களிலிருந்து இது இருக்குமென நான் அஞ்சுகிறேன்.
يقول النبي ﷺ : ويل للذي يحدث فيكذب ليضحك به القوم، ويل له، ثم ويل له هكذا الذي يحدث ليزجر القوم، أو ليعظ القوم فيكذب، أخشى عليه من هذا، هذا هو الذي ظهر لي.
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: "எவனொருவன் பேசி, மக்களை சிரிக்க வைப்பதற்காக பொய்யுரைப்பானோ அவனுக்கு நாசம் உண்டாகட்டும், அவனுக்கு நாசம் உண்டாகட்டும், பின்பும் அவனுக்கு நாசம் உண்டாகட்டும்". அவ்வாறே மக்களை (தீமையிலிருந்து) தடுப்பதற்காக, அல்லது மக்களுக்கு உபதேசம் செய்வதற்காக பேசி பொய்யுரைப்பவரும் ஆவார். அவர் விஷயத்தில் இதை நான் அஞ்சுகிறேன்.இதுவே எனக்கு (இந்த நடிப்பின் விடயத்தில்) வெளிப்படுவதாகும்.
இஸ்லாமிய திரைப்படங்கள் எடுப்பதன் சட்டம் என்ன?
காஃபிர்களைப் போன்று நடிப்பது கூடுமா?
- ஷைஃக் அல்பானி, ஷைஃக் முஹம்மது ஹிஷாம் தாஹிரீ
ஷைஃக் அல்பானி ரஹிமஹுல்லாஹ்:
கேள்வியாளர்:
காஃபிருடைய கதாபாத்திரத்தை முஸ்லிம்களில் ஒருவரை நடிக்குமாறு செய்வது ஒரு மனிதருக்கு ஆகுமானதா? அவரோ நடிப்பை ஆதாரமாக வைத்து அல்லது நடிப்பின் அடிப்படையில், வரலாற்றின் ஒரு பகுதிக்காக லாத்தின் மீது சத்தியம் செய்வார், நபி ﷺ அவர்களை திட்டக் கூடியவராக இருப்பார்!
பதில்:
இந்த விடயமானது, நிச்சயமாக எந்த ஒரு கோணத்திலும் அனுமதிக்கப்பட்டதல்ல. மாறாக, கேள்வியானது "இந்த குஃப்ருடைய விடயங்கள் இல்லாமல் நடிப்பது கூடுமா?" என்றிருந்தால், பதிலானது அனுமதிக்கப்பட்டதில்லை என்றே இருந்திருக்கும். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் கேள்வியிலோ, அவர் குஃப்ரை பேசக்கூடியவராக இருக்கின்றார் என்றுள்ளது! எப்படி (இது அனுமதிக்கப்பட்டதாக இருக்கும்?)
ஷைஃக் முஹம்மது ஹிஷாம் தாஹிரீ ஹஃபிதஹுல்லாஹ்:
கேள்வி:
சிலைக்கு ஸஜ்தா செய்வது, தீனை திட்டுவது என அபூ ஜஹ்லின் கதாபாத்திரத்தில் நடிப்பது கூடுமா?
பதில்:
இது அனுமதிக்கப்பட்டதல்ல. இரண்டு காரணத்திற்காக இது ஒருபோதும் அனுமதிக்கப்பட்டதல்ல.
1 முதலாவது:
"எனக்கு இன்னின்ன கூலி கொடுக்கப்படும் என்றிருந்தாலும் நான் (வேறு) ஒரு மனிதரைப் போன்று (போலியாக) செய்துகாட்டுவதை நான் விரும்பவில்லை", என்ற (நபி ﷺ) அவர்களின் கூற்றின் காரணத்தினால் நடிப்பு என்பதே தடுக்கப்பட்டதாகும்.
2 இரண்டாவது:
இந்த நடிப்புகள், அல்லாஹ்வை திட்டுவது, அவனுடைய தூதர் ﷺ அவர்கள் மற்றும் அவனுடைய தீனைத் திட்டுவது ஆகியவற்றை கொண்டிருக்கின்றன. இதுவே (இந்த செயலே) குஃப்ராகும், ஒரு மனிதர் (அதனை) நாடி செய்தாலும் சரி அல்லது அவர் நாடாமல் செய்தாலும் சரியே.
எனவே, இது போன்ற விடயங்களை வைத்து கேலி, கிண்டல் செய்வது அனுமதிக்கப்பட்டதல்ல, (அதனை வேறோருவர்) தெரிவிக்கும் பாணியில் கூறினாலும் சரியே. அது அவர் கூறும் அவ்விடயத்தின் அசத்தியத்தன்மையை தெளிவுபடுத்துவதுடன் இருந்தாலே தவிர. உதாரணத்திற்கு, நபி ﷺ அவர்களை அபூஜஹ்ல் எவ்வாறு திட்டினான் என்று சொல்லிக் காட்டுவதென்பது (நடித்துக் காட்டுவது) ஒரு மனிதருக்கு அனுமதியில்லை. இது ஹராம் ஆகும். அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
மலக்குமார்கள் மற்றவர்களின் ரூபத்தில் வந்தது நடிப்புக்கு ஆதாரமாகுமா? - ஷைஃக் முஹம்மது பின் ஹாதீ ஹஃபிதஹுல்லாஹ்
கேள்வி:
தொழுநோயாளர், குருடர் மற்றும் வழுக்கைத் தலையர் ஆகியோரின் ஹதீஸை (அடிப்படையாகக்) கொண்டு நடிப்பது ஆகுமானது என்று ஆதாரம் காட்டுவோரின் தீர்ப்பு என்ன? நடிப்பென்பது அழைப்புப்பணியின் வழிமுறைகளிலிருந்து உள்ளதா? அழைப்புப் பணியின் வழிமுறைகள் தவ்கீஃபிய்யாஹ்வா (குர்ஆன் மற்றும் ஸுன்னாஹ்வோடு நின்று கொள்ள வேண்டிய ஒன்றா) அல்லது இஜ்திஹாதிய்யாஹ்வா (ஒருவரின் ஆராய்ச்சிக்கு உட்பட்டதா?)
பதில்:
இவை பல கேள்விகளாகும் ஒரு கேள்வி அல்ல.
முதலாவதாக நாம் இவர்களுக்குக் கூறுவது, இது உங்களுக்குரிய ஆதாரமன்று, மாறாக உங்களுக்கு எதிரான ஆதாரமாகும்.
ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் அந்த வானவரை ஒரு (நிஜமான) மனிதரின் தோற்றத்தில் அனுப்பினான். மக்களில் ஒருவரான ஸைத் வேறொரு நபராக நடிக்கும் பொழுது அவருடைய நிஜமான தோற்றத்தில் வரவில்லை, (மாறாக) ஸைதுடைய தோற்றத்திலேயே இருக்கின்றார், மாறவில்லை. அதிலிருந்து (தன்னுடைய தோற்றத்திலிருந்து அவர்) வெளியாகவில்லை. இவர்களால் தங்களுடைய தோற்றத்திலிருந்து யாராக நடிக்கின்றார்களோ அவர்களுடைய தோற்றத்திற்கு (நிஜமாகவே) மாற இயலுமா?! இவர்களால் முடியாது.
இரண்டாவது கண்ணோட்டம்: அதில் (அந்த ஹதீஸில் இவர்களுக்கு) எந்த ஒரு ஆதாரமும் இல்லை. ஏனென்றால், நிச்சயமாக அந்த வழுக்கைத் தலையர் நிஜமாக வழுக்கை தலையராகவே இருந்தார், அந்த தொழுநோயாளர் நிஜமாக தொழுநோயாளராகவே இருந்தார், மேலும் அந்த குருடர் நிஜமாக குருடராகவே இருந்தார்.
பின்னர் அவர் (அந்த தொழுநோயாளர்) நிஜமாகவே அழகிய தோலுடையவராக மாறினார், அவர் (அந்த வழுக்கை தலையர்) நிஜமாகவே தலை முடியுடையவராக மாறினார், மேலும் அவர் (அந்த குருடர்) நிஜமாகவே பார்வையுடையவராக மாறினார். நடிக்கக்கூடிய இவர்கள் பழைய நிலையிலிருந்து மாறி அதற்கு நேர்மறையான நிலைக்கு திரும்புகிறார்களா?! இது இரண்டாவது கண்ணோட்டமாகும்.
மூன்றாவதாக, நாம் கூறுவதாவது இது அல்லாஹ் தனது தூதருக்கு சோதனையாக மற்றும் சோதிப்பதற்காக (வந்த) இந்த வானவர் பற்றி அறிவித்ததாகும். ஆனால், தற்போது பேசப்பட்டு வரும் இந்த நடிப்பானது, அதில் அதிகமானது பொய்யும், நகைச்சுவையும் ஆகும். ஆனால் இது நிஜமான சம்பவமாகும். ஆக, இம்மூன்று கண்ணோட்டங்களில் இது போன்ற ஹதீஸை வைத்து இவர்கள் (நடிப்பு கூடும்) எனக் கூறி, மேலும் ஆதாரமும் காட்டுகிறார்களோ (அந்த நடிப்பும் நிஜமான சம்பவமும்) வேறுபட்டு இருக்கின்றது.
ஆக, நடிப்பு கூடும் என்பவர்களுக்கு இந்த ஹதீஸில் எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்பதும், அதற்கு இதோடு (இந்த ஹதீஸோடு) எந்த சம்மந்தமும் இல்லை என்பதும் தெரியவருகின்றது.
"அழைப்பு பணியின் வழிமுறைகள் தவ்கீஃபிய்யாவா?" என்ற கேள்வியை பொருத்தமட்டில் நாம் கூறுவது, அழைப்பு பணி என்பது இபாதத், மேலும் இபாதத் என்பது தவ்கீஃபிய்யாவாகும் (குர்ஆனில் அல்லது ஸுன்னாஹ்விலிருந்து அதற்கு ஆதாரம் இருத்தல் வேண்டும்). நேற்றைய தினம் எது மார்க்கமாக இருக்கவில்லையோ அது இன்றைய தினம் மார்க்கமாகிவிடாது.
அல்லாஹ்வே மிக்க அறிந்தவன்.
மக்தபாஹ் அஸ்ஸுன்னாஹ் வ அஸ்ஸலஃபிய்யாஹ், மேலப்பாளையம்.