அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்:
وَقُلْ رَّبِّ زِدْنِىْ عِلْمًا
“இன்னும், என் இரட்சகனே! எனக்கு அறிவை அதிகப்படுத்துவாயாக” என்று நீர் (பிரார்த்தனை செய்து) கூறுவீராக! (அல்குர்ஆன் : 20:114)
அறிந்தோரின் அந்தஸ்தை அல்லாஹ் கூறுகிறான்:
قُلْ هَلْ يَسْتَوِى الَّذِيْنَ يَعْلَمُوْنَ وَالَّذِيْنَ لَا يَعْلَمُوْنَ
அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா?(அல்குர்ஆன் : 39:9)
அல்லாஹ் அறிந்தவர்களின் பதவியை உயர்த்துவதாக கூறுகிறான்:
يَرْفَعِ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا مِنْكُمْ ۙ وَالَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَ دَرَجٰتٍ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ
உங்களிலுள்ள விசுவாசிகளுக்கும், கல்வி அறிவு கொடுக்கப்பட்டோருக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான், மேலும், அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிகிறவன். (அல்குர்ஆன் : 58:11)
மார்க்க கல்வியை தேடுவது சுவர்க்கத்தின் பாதையை எளிதாக்குகிறது
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘யார் கல்வியைத் தேடி ஒரு பாதையில் நடக்கிறாரோ அவருக்கு அதன் மூலம் சொர்க்கத்திற்குச் செல்லும் பாதையை அல்லாஹ் எளிதாக்குகிறான்.’ அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஸஹீஹ் முஸ்லிம் : 5231.
அல்லாஹ் நமக்கு நன்மையை நாடுகிறான்.
’எவருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை மார்க்கத்தில் விளக்கம் பெற்றவராக ஆக்கி விடுகிறான்.’ இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என முஆவியா(ரலி) தம் சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள். ஸஹீஹ் புகாரி : 71.
கல்வியை தேடும்போது கேட்க கூடிய துஆ:
َللّٰهُمَّ انْفَعْنِيْ بِمَا عَلَّمْتَنِيْ وَعَلِّمْنِيْ مَا يَنْفَعُنِيْ وَزِدْنِيْ عِلْمًا
أخرجه الترمذي، برقم ۳٥۹۹، وابن ماجه، برقم ۲٥۹
அல்லாஹ்வே! எனக்கு நீ கற்றுக் கொடுத்தக் கல்வியைக் கொண்டு எனக்குப் பலன் தா! எனக்குப் பலன் தருவதை எனக்குக் கற்றுக் கொடு! கல்வியை எனக்கு அதிகரித்துக் கொடு (ஸுனன் இப்னுமாஜா)
َللّٰهُمَّ فَقِّهْنِيْ فِى الدِّينِ
البخاري، برقم ۱٤۳، ومسلم، برقم ۲٤٧٧.
அல்லாஹ்வே! மார்க்கத்தில் எனக்கு ஞானத்தைக் கொடு! (ஸஹீஹூல் புகாரி)
اَللّٰهُمَّ إِنِّـيْ أَسْأَلُكَ عِلْمًا نَّافِعًا وَّرِزْقًا طَيِّبًا وَّعَمَلًا مُّتَقَبَّلًا
அல்லாஹ்வே! நிச்சயமாக நான் உன்னிடம் பயனுள்ள கல்வியை, தூய்மையான (ஆகுமான) உணவை, ஏற்றுக் கொள்ளப்பட்ட அமலைக் கேட்கிறேன். (ஸுனன் இப்னுமாஜா)
கல்வி கற்பவருக்கு உள்ள மற்றொரு சிறப்பு:
அபூதர்தா (ரலி) அறிவிக்கிறார்கள்: “கல்வியை தேடும் வழியில் ஒருவர் நடந்தால் சொர்க்கத்தின் வழியை அவருக்கு அல்லாஹ் லேசாக்குகிறான். நிச்சயமாக வானவர்கள் கல்வி கற்பவருக்காக அவரின் செயலை திருப்தி அடைந்து தன் இறக்கைகளை பூமியில் வைக்கின்றனர். நிச்சயமாக ஒரு அறிஞருக்காக வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்கள் மற்றும் தண்ணீரில் உள்ள மீன்கள் உட்பட பாவ மன்னிப்பு கேட்கின்றனர். வணக்கசாலியை விட ஒரு அறிஞரின் சிறப்பு மற்ற நட்சத்திரங்களை விட சந்திரனின் சிறப்பு போலாகும். மேலும் அறிஞர்கள் என்போர் நபிமார்களின் வாரிசுகள் ஆவார். மேலும் நபிமார்கள் தங்க காசுகளை வெள்ளி காசுகளையும் வாரிசாக விட்டுச் செல்லவில்லை. அவர்கள் விட்டுச் சென்றதில்லாம் அறிவு ஞானத்தையே. அதை எடுத்துக் கொண்டவர் நற்பங்கை எடுத்துக் கொண்டவர் ஆவார் என்று நபி ஸல் கூறினார்கள் (அபூதாவூத் 3641, திர்மிதீ 2682)
சபிக்கப்பட்டதில் இல்லாமல் நம்மை பாதுகாக்கும்.
அபூஹுரைரா ரலி அறிவிக்கிறார்கள்: ‘இவ்வுலகம் சபிக்கப்பட்டதாகும். அதில் உள்ளவைகள் சபிக்கப்பட்டவைகளாகும். ஆனால் அல்லாஹ்வை நினைவு கூறுதல் மற்றும் அதை சார்ந்தவை, அறிஞர் அல்லது கற்றுக் கொள்பவர் ஆகியவற்றைத் தவிர என்று நபி ஸல் கூறினார்கள் (திர்மிதி 2322)