கல்வியை தேடுவதன் ஒழுங்குகள்

 مَنْ يُرِدِ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهْهُ فِي الدِّينِ

’எவருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை மார்க்கத்தில் விளக்கம் பெற்றவராக ஆக்கி விடுகிறான்’. ஸஹீஹ் புகாரி : 71.

’யாருக்கு அல்லாஹ் நலவை நாடுகிறானோ, அவருக்கு மார்க்கத்தில் விளக்கத்தை கொடுக்கிறான்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மார்க்கத்தை படிக்க வேண்டும் என்ற உணர்வை அல்லாஹ் நமக்குத் தருவது, நம்மீது அல்லாஹ் நலவை நாடியிருக்கிறான் என்பதற்குரிய மிகப்பெரிய ஒரு அடையாளமாகும்.

இஸ்லாமியக் கல்வியை தேடுவது என்பது நம்மீது வலியுறுத்தப்பட்ட ஒரு இபாதத்தாக இருக்கிறது,

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்,

طَلَبُ الْعِلْمِ فَرِيضَةٌ عَلَى كُلِّ مُسْلِمٍ

’ஒவ்வொரு முஸ்லிமும் கல்வியை தேடுவது ஃபர்ளாக இருக்கிறது’ என்று கூறினார்கள் (ஸூனன் இப்னு மாஜா 224)

அந்த அடிப்படையில், இஸ்லாமிய கல்வியை தேடுவதன் முயற்சியில் ஒவ்வொரு முஸ்லிமும் ஈடுபட வேண்டும்.

ஃபர்ளு அய்ன்➖ முஸ்லிம்கள் ஒவ்வொருவரின் மீதும் கட்டாயக் கடமை

இஸ்லாமிய கல்வியில் சில பகுதிகள் இருக்கின்றன, அவை கண்டிப்பாக ஒவ்வொரு முஸ்லிமும் கற்கவேண்டிய கல்வியாகும், இதை ‘ஃபர்ளு அய்ன்’ என்று குறிப்பிடுவார்கள், இதிலிருந்து எந்த ஒரு முஸ்லிமும் தப்பிக்க முடியாது

1. ‘ஃபர்ள் அய்ன்’ என்பது அடிப்படையான சில விஷயங்களை குறிக்கும், குறிப்பாக ;

அல்லாஹ்வைப் பற்றி அறிவது,

அல்லாஹ்வுடைய தூதர் நபி (ஸல்) அவர்களைப் பற்றி அறிவது,

இஸ்லாத்தின் முக்கியமான அடிப்படைகளை அறிந்து கொள்வது,

எவ்வாறு தொழ வேண்டும் என்று அறிவது,

போன்ற விஷயங்களை அறிந்து கொள்வது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கட்டாயக் கடமையாகும்.

2. ஃபர்ளு கிஃபாயா - முஸ்லிம் சமுதாயத்தில் சிலராவது அறிந்திருக்க வேண்டும்.

சிலர் அறிந்து கொண்டால், எல்லோருடைய பொறுப்பும் நீங்கிவிடும்,

யாரும் இதை அறியவில்லை என்றால், எல்லோரும் அல்லாஹ்விடத்தில் குற்றவாளிகளாக நிற்க வேண்டி வரும்.

உதாரணமாக

உஸுல்களைப் படிப்பது, உஸுலுல் ஃபிக்ஹ், உஸுலுல் ஹதீஸ், உஸுலுல் தஃப்ஸீர் போன்றவற்றை படிப்பது என்பது ஃபர்ளு கிஃபாயா

நம்முடைய உம்மத்தில் யாராவது ஒருவர் இதை படித்தால், மற்றவர்களும் அதைக் கொண்டு பயன் அடையலாம்.

எனவே, எல்லோரும் இதை படிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

3. சுன்னத்தான கல்வி 

கடமையில்லாத, ஃபர்ளு கிஃபாயா இல்லாத மேலதிகமான விஷயங்களை கற்றுக் கொள்வதாகும்

இந்த மூன்று பகுதிகளையும் கற்றுக் கொள்ளக்கூடிய பாக்கியம் எவருக்கு கிடைக்கிறதோ அவர் மிகப் பெரிய பாக்கியசாலி ஆவார்.

இந்த மூன்று பகுதிகளையும் கற்கிறவர் மாணவர் என்ற நிலையிலிருந்து ஆலிம் என்ற நிலை வரைக்கும் உயர்ந்து செல்லக்கூடிய பாக்கியம் அவருக்கு இருக்கிறது.

மார்க்கத்தில் உலமாக்களுக்கு இருக்கக்கூடிய அந்தஸ்தும் கண்ணியத்தையும் பற்றி அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகிறான் ;

يَرْفَعِ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا مِنْكُمْ ۙ وَالَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَ دَرَجٰتٍ ‌

உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும்; கல்வி ஞானம் அளிக்கப்பட்டவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான். அல்குர்ஆன் : 58:11

உங்களிலே ஈமான் கொடுக்கப் பட்டவர்களையும் கல்வி கொடுக்கப் பட்டவர்களையும் அல்லாஹ் அந்தஸ்தால் உயர்த்துகிறான் என்று கூறுகிறான்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

فضل العالم على العابد كفضلي على أدناكم‏

’உங்களில் ஆலிம்களும் இருக்கிறார்கள், ஆபிதுகளும் (இல்ம் இல்லாமல் வணக்கத்தில் கவனம் செலுத்தக் கூடியவர்கள்) இருக்கிறார்கள், இவர்கள் இருவரையும் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது, எனக்கும் உங்களுக்குமிடையில் என்ன வித்தியாசம் இருக்கிறதோ, உங்களை விட நான் எவ்வளவு சிறந்தவனாக இருக்கிறேனோ அதே போன்று தான், ஆபிதுகளோடு ஒப்பிடும்போது ஆலிம்கள் சிறந்தவர்களாக இருக்கிறார்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மதி, ரியாதுஸ் ஸாலிஹீன் 1387)

ஒரு மனிதன் எப்பொழுதுமே ஒரு மாணவன் என்ற நிலையிலேயே இருக்கக் கூடாது, மாறாக, தன்னுடைய அந்தஸ்தை அவன் கூட்டிக் கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.

எனவே தான், அல்லாஹ் வஹி மூலம் அவர்களுக்கு கல்வித் கொடுத்துக் கொண்டிருக்கிற நபியைப் பார்த்து கூறுகிறான்,

وَقُلْ رَّبِّ زِدْنِىْ عِلْمًا‏

“இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!” என்றும் நீர் பிரார்த்தனை செய்வீராக! அல்குர்ஆன் : 20:114

நபியே நீங்கள் துஆச் செய்ய வேண்டும், நீங்கள் கூற வேண்டும், என்னுடைய ரப்பே, எனக்கு கல்வியை நீ அதிகமாகத் தருவாயாக என்று நீர் கேட்க வேண்டும், என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

நபி(ஸல்) அவர்களுக்கே அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான் என்றால், மற்ற மக்கள் மிக முக்கியமான முறையில் கண்டிப்பாக இந்தக் கல்வியை தேட வேண்டியவர்களாக இருந்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரு மனிதன் தான் கற்றுவிட்டேன் என்று நினைப்பானாக இருந்தால் அவன்தான் மிகப்பெரிய மடையனாக முட்டாளாக இருக்கிறான் என்று கூறுகிறார்கள்.

நபி மூஸா(அலை) அவர்கள் மிகச் சிறந்த பேச்சாற்றல் கொடுக்கப்பட்ட ஒரு நபி,

அவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் பேசி முடித்துவிட்டு வரும் போது ஒருவர் வந்து கேட்கிறார், நபி மூஸாவே, உங்களை விட அறிவு அதிகமாக உள்ள யாராவது இந்த காலத்தில் இருக்கிறார்களா என்று கேட்டார்கள், மூஸா (அலை) அவர்கள் நினைத்தார்கள், நமக்கு வஹி வருகிறது, நாம் ஒரு ரசூல், ஒரு நபி, நம்மை விட அறிவு கூடியவர்கள் யாரும் இருக்க முடியாது என்ற எண்ணத்தில் யாருமே இல்லை என்று சொல்லிவிடுகிறார்,

நான் தான் மிகவும் அறிந்த ஒருவன் என்று சொல்லும்பொழுது, அல்லாஹ் அவரை சோதித்து, அவர்கள் மிகப்பெரிய அறிவாளி இல்லை என்பதை அல்லாஹ் அவர்களுக்கு உணர்த்திக் காட்டிய அந்த வரலாற்றை சூரா அல் கஹ்ஃபில் இந்த அத்தியாத்தில் ஹிள்ர் என்பவரைக் கொண்டு அல்லாஹ் நபி மூஸா(அலை) அவர்களை சோதித்து அவர்களைவிட அறிந்தவர் யாரும் இல்லை என்ற கருத்து தவறு என்பதை அல்லாஹ் நிரூபித்தான் என்பதை நாம் பார்க்கலாம்.

நம்முடைய காலத்தில் வாழக்கூடிய மிகப்பெரிய ஒரு ஆலிம்தான், அஷ்ஷெய்க் ஸாலிஹல் ஃபவ்ஸான் ஹஃபிதஹுல்லாஹ், சவூதியில் இருக்கிறார்கள், பாகியதுல் ஸலஃப் என்று அடையாளப்படுத்தப்படுகிற மிகப் பெரிய அறிஞர் ஆவார்

இவரிடம் ஒருவர், நான் உங்களைப் போன்ற மிகப் பெரிய அறிஞராக வர விரும்புகிறேன், எனக்காக துஆச் செய்யுங்கள், நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறார்.

அதற்காக ஷேக் அவர்கள் கூறினார்கள், ஷேக் இப்னு பாஸ் (ரஹி), மற்றும் ஷேக் உஸைமின் போன்றவர்கள்தான் ஆலிம்கள், என்னைப் போய் நீங்கள் ஆலிம் என்று கூறுகிறீர்கள், நானும் உங்களைப் போன்ற ஒரு மாணவன் தான் என்று கூறி படிக்கிற முறையை சொல்லிக் கொடுக்கிறார்கள். ஏனென்றால், அவர்கள் தங்களை மிகப்பெரிய ஒரு ஆலிமாக நினைக்கவில்லை.

இன்றைய காலத்தில் மிகப் பெரிய சோதனை என்னவென்றால், உலமாக்களிடம் படித்த மாணவர்கள் தங்களை மாணவர்கள் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்,

ஆனால், அரைகுறையாக படித்தவர்கள் எல்லோரும் அவர்கள் தங்களை ஆலிம்கள் என்று வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும், ஆலிம்கள் என்று தங்களை நினைத்துக்கொள்வதை நாம் பார்க்கிறோம்

ஒரு விஷயத்தை நாம் கற்றுக் கொடுப்பது என்று சொன்னால், அதைப் பற்றின பூரணமான தெளிவும் அறிவும் நமக்கு இருக்க வேண்டும், அப்படி இல்லாதபோது அதை பற்றி நாம் பேசவே கூடாது.

ஆனால் இன்றைக்கு, நிறைய பேர் அவர்களுக்கு அறியாத விஷயங்களை பற்றி பேசுகிறார்கள்;

உதாரணமாக

அரபு மொழி என்பது இலகுவாக கற்கக் கூடியதாக இருந்தாலும் மிக ஆழமான ஒரு மொழியாகும்,

பல வருடங்கள் மதரஸாக்களில் படித்து, அதற்கு பிறகு அரபு நாடுகளுக்கு சென்று படித்தவர்கள் கூட, மேலும் நாம் அரபியில் படிக்க வேண்டியது நிறைய இருக்கிறது என்று கருதும்போது,

நம்முடைய சகோதர சகோதரிகள் சிலர், லுகதுல் அரபி என்ற புத்தகத்தின் மூன்று பாகங்களை மட்டும் படித்துவிட்டு, எனக்கு அரபு மொழி தெரியும் நான் அரபு வகுப்பு நடத்தப் போகிறேன் என்று மாணவர்களை அழைக்கக்கூடிய ஒரு நிலையை நாம் இன்றும் காண முடிகிறது.

இதேபோன்று தஜ்வீத், அகீதா, ஃபிக்ஹ் போன்றவற்றை சிறிதளவு படித்துவிட்டு அவர்கள் அதைப்பற்றி அனைத்தும் அறிந்தவர்களைப் போல் நடந்து கொள்வதை நம்மால் காணமுடிகிறது.

கற்பதை விட கற்றுக் கொடுப்பதில் கூடுதல் ஆர்வம் காட்டக்கூடிய ஒரு சூழ்நிலையை இன்று உலகம் முழுக்க நாம் பார்க்கக் கூடியதாக இருக்கிறது.

கல்வியை நாம் தேட வேண்டிய தேவை நிறைய இருக்கிறது.

மனிதன் தனக்குத் தெரியாது விஷயத்திற்கு அவன் எதிரி என்று கூறுவார்கள்.

புதிதாக ஒரு செய்தி கிடைக்கிறது என்றால் அதை அவன் தேடி உறுதிப்படுத்த வேண்டும், எனக்கு தெரியாது என்பதற்காக உடனே அதை எதிர்க்கவும் கூடாது ஏற்றுக் கொள்ளவும் கூடாது.

எனவே, நாம் நிறைய படிக்க வேண்டும் என்ற ஒரு விஷயம் மட்டும் தெளிவான உண்மையாக இருந்து கொண்டிருக்கிறது.

இன்றைக்கு பலர், கல்வியை தேடுகிற விஷயத்தில் ஆர்வம் இல்லாமல் இருக்கிற அதே நேரத்தில், அல்லாஹ் நம்மைப் போன்ற ஒரு சிலருக்கு இந்தக் கல்வியை தேட வேண்டும் என்ற ஆர்வத்தையும் உணர்வையும் தந்திருக்கிறான் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் அல்ஹம்துலில்லாஹ்.

ஷேக் வஹீத் அப்துஸ் ஸலாம் பாலி அவர்கள், இவ்வாறு கல்வியை தேட வேண்டும் என்ற உணர்வை பெற்று வரக்கூடிய மாணவர்கள் தங்களிடம் கொண்டிருக்க வேண்டிய சில பண்புகளையும், ஒழுங்குகளையும் நமக்கு இந்த கட்டுரையில் சொல்லித் தருகிறார்கள் ;

 أيقصد بعلمه وجه الله

கல்வியைத் தேடி வருகின்ற ஒரு மாணவன், அவன் தன்னுடைய கல்வியின் மூலம் அல்லாஹ்வுடைய திருப்தியையே நாட வேண்டும்.

ஏனென்றால், கல்வி தேடுவது என்பது ஒரு இபாதத்

பொதுவாக இபாதத்களைப் பற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான் ,

وَمَاۤ اُمِرُوْۤا اِلَّا لِيَعْبُدُوا اللّٰهَ مُخْلِصِيْنَ لَـهُ الدِّيْنَ  ۙ حُنَفَآءَ

“அல்லாஹ்வுக்கு வணக்கத்தை தூய்மையாக்கியவர்களாக (தவறான வழியிலிருந்து விலகி சரியான வழியில்) பிடிப்புள்ளவர்களாக அல்லாஹ்வை அவர்கள் வணங்க வேண்டும்; அல்குர்ஆன் : 98:5

கல்வி ஒரு இபாதத் என்று சொன்னால், கல்வியை தேடுகிற மாணவனுடைய உள்ளத்தில் இக்லாஸ் இருக்க வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒரு ஹதீஸ், மார்க்க விஷயத்தில் பணியாற்றக்கூடிய தாயிகள், மாணவர்கள் அடிக்கடி ஒருவருக்கொருவர் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டிய ஒரு ஹதீஸ் ;

மனிதர்களில் மறுமையில் முதலில் தீர்ப்பளிக்கப்படக் கூடியவர் மூன்று பேர் ;

ஷஹீத்

ஆலிம் அல்லது காரீ

கொடைவள்ளல்


சுலைமான் பின் யசார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் மக்கள் (கூடி, அவை) கலைந்தபோது, சிரியாவாசியான நாத்தில் பின் கைஸ் என்பவர், “பெரியவரே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் செவியுற்ற ஹதீஸ் எதையேனும் எங்களுக்குத் தெரிவியுங்கள்” என்று கேட்டார். அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள், “ஆம் (தெரிவிக்கிறேன்).

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்:

மறுமை நாளில் மக்களில் முதல் முதலில் தீர்ப்பு வழங்கப்படுபவர் யாரெனில், இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவரே ஆவார். அவர் இறைவனிடம் கொண்டுவரப் படும்போது, அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்துகொள்வார். பிறகு, “அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?” என்று இறைவன் கேட்பான். அவர், “(இறைவா!) உனக்காக நான் அறப்போரில் ஈடுபட்டு என் உயிரையே தியாகம் செய்தேன்” என்று பதிலளிப்பார்.

அல்லாஹ் கூறுவான் உன்னுடைய உள்ளத்தை அறிந்தவனாக நான் இருக்கிறேன் :

கண் இமைகளை அசைப்பதையும் அவன் அறிவான், உங்களுடைய உள்ளங்களில் நீங்கள் மறைத்து வைத்திருப்பதையும் அவன் அறிவான்.

அந்த அடிப்படையில் அல்லாஹ் நம்முடைய உள்ளத்தில் என்ன உணர்வு இருக்கிறது என்பதை நன்கறிந்தவனாக இருக்கிறான்

நாம் ஒருவருக்கு ஏமாற்றலாம், கை மத்தியில் நாம் நம்மை பெரிதாக காண்பிக்கலாம், பேசும்போது அனைத்தையும் அறிந்தவனாக பேசலாம், ஆனால், நம்முடைய உள்ளத்தில் என்ன இருக்கிறது என்பதை அறிந்தவனாக அல்லாஹ் இருக்கிறான்.

எனவேதான், ஷஹீதை எழுப்பி அல்லாஹ் கூறுகிறான், “(இல்லை) நீ பொய் சொல்கிறாய். (நீ எனக்காக உயிர்த் தியாகம் செய்யவில்லை.) மாறாக, “மாவீரன்” என்று (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ போரிட்டாய். அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது. (உனது நோக்கம் நிறைவேறிவிட்டது)” என்று கூறுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.

பிறகு கல்வியைத் தாமும் கற்று அதைப் பிறருக்கும் கற்பித்தவரும் குர்ஆனைக் கற்றுணர்ந்தவருமான (மார்க்க அறிஞர்) ஒருவர் (இறைவனிடம்) கொண்டுவரப்படுவார். அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்து கொள்வார். பிறகு “அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?” என்று இறைவன் கேட்பான். அவர், “(இறைவா!) கல்வியை நானும் கற்று, பிறருக்கும் அதை நான் கற்பித்தேன். உனக்காகவே குர்ஆனை ஓதினேன்” என்று பதிலளிப்பார்.

அதற்கு இறைவன், “(இல்லை) நீ பொய் சொல்கிறாய். (எனக்காக நீ கல்வியைக் கற்கவுமில்லை; கற்பிக்கவுமில்லை.)”அறிஞர்” என்று சொல்லப்பட வேண்டும் என்பதற்காகவே நீ கல்வி கற்றாய்; “குர்ஆன் அறிஞர்” என (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ குர்ஆனை ஓதினாய். அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது (உனது நோக்கம் நிறைவேறி விட்டது)” என்று கூறுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.

பிறகு இறைவன் தாராளமான வாழ்க்கை வசதிகளும் அனைத்து விதமான செல்வங்களும் வழங்கியிருந்த பெரிய செல்வர் ஒருவர் இறைவனிடம் கொண்டுவரப்படுவார். அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்துகொள்வார். பிறகு, “அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?” என்று இறைவன் கேட்பான். அதற்கு அவர், “நீ எந்தெந்த வழிகளில் எல்லாம் பொருள் செலவழிக்கப்படுவதை விரும்புகிறாயோ, அந்த வழிகளில் எதையும் விட்டுவிடாமல் அனைத்திலும் நான் உனக்காக எனது பொருளைச் செலவிட்டேன்” என்று பதிலளிப்பார்.

அதற்கு இறைவன், “(இல்லை) நீ பொய் சொல்கிறாய் “இவர் ஒரு புரவலர்” என (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ இவ்வாறு (செலவு) செய்தாய். (உன் எண்ணப்படி) அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது. (உனது எண்ணம் நிறைவேறிவிட்டது)” என்று கூறிவிடுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார். ஸஹீஹ் முஸ்லிம் : 3865.

மற்றொரு ஹதீஸ்

மறுமையில் முதலில் நரகம் மூட்டப்படுவது இந்த மூன்று பேரைக் கொண்டுதான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

இது மிகவும் சாதாரண ஒரு விஷயமல்ல.

எனவே, நாம் மாணவர்களுக்கு தாஃவா பற்றி தர்பியா செய்யும் போது, அல்லாஹ்வுடைய திருப்தியை நம்முடைய மனம் எதிர்பார்க்காமல் நாம் இந்த உலக லாபங்கள் ஏதாவது ஒன்றை எதிர்பார்த்தால் நிச்சயமாக நாம் கடுமையான நஷ்டமடைய வேண்டி ஏற்படும்.

நரகம் எரிந்துகொண்டுதான் இருக்கிறது மறுமையில் மீண்டும் ஒரு முறை அல்லாஹ் அதை எரிப்பான் அப்படி இருக்கும்போது, இந்த இஃக்லாஸ் இல்லாத மனிதர்களைக் கொண்டுதான் நரகம் எரிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

எனவே, கல்வி ஒரு இபாதத் என்ற அடிப்படையில், கல்வியை நாம் அல்லாஹ்வுக்காக தேட வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் மற்றொரு ஹதீஸில் கூறுகிறார்கள், அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் ;

யார் ஒருவர் அல்லாஹ்வுக்காக வேண்டி தேட வேண்டிய கல்வியை உலக இலாபங்களில் ஏதாவது ஒன்றை அடைந்து கொள்வதற்காக வேண்டி தேடுகிறாரோ, அவர் மறுமையிலே சுவர்க்கத்தின் வாடையைக் கூட நுகர மாட்டார். (அபூதாவூத்)

அல்லாஹ் கல்வியை தேட ஒரு வாய்ப்பை நமக்கு தந்திருக்கிறான்.

ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது, ஒரு சிறிய குழுவிற்கு தான் அல்லாஹ் இந்த உணர்வை தந்திருக்கிறான்,

நாமும் இக்லாஸ் இல்லாமல் மற்றவர்களிடம் விவாதிப்பதற்காகவும், உலமாக்களை மட்டம் தட்டுவதற்காகவும், பொதுமக்களிடத்தில் ஆலிம் என்ற பெயரை எடுப்பதற்காகவும், நாலு பேர் நம்மைப் பாராட்ட வேண்டும் என்பதற்காகவும் இந்தக் கல்வியை தேடுவோமாக இருந்தால் நிச்சயமாக நாம் மிகப்பெரிய நஷ்டவாளியாக மாறிவிடுவோம்.


இக்லாஸோடு கல்வியை தேடுவது எவ்வாறு?

முதல் நோக்கம்:- நம்மிடம் இருக்கும் அறியாமையை போக்க வேண்டும்.

முதலில் என்னுடைய அகீதா, என்னுடைய இபாதத் சீராக வேண்டும்.

அல்லாஹ்வைப் பற்றி எனக்கு சரியான அறிவில்லை. நபி ﷺ அவர்களின் போதனைகளை பற்றி சரியாக அறியவில்லை. இஸ்லாத்தின் அடிப்படைகளை பற்றி பூரண அறிவு இல்லை எனும் போது என் அறியாமை முதலில் நீங்க வேண்டும் என்பதற்காக கல்வி கற்க வேண்டும்.

ஆனால் சிலர் கல்வி பெறுவது மற்றவர்களின் அறியாமையைப் போக்க வேண்டும் என்பதற்காக.

நாம் படிப்பது சமுதாயத்திற்காகவும் மக்களுக்காகவும் படிக்கிறோம் என்று அவர்கள் படிக்கும் போதே அவர்களுக்கு கூறப்படுவது தான் இந்த நிலைக்கு முக்கிய காரணம்.

இரண்டாவது நோக்கம்:-‌சரியான முறையில், தெளிவான ஆதாரங்களோடு நான் என் ரப்பை வணங்க வேண்டும்.

நம்முடைய தொழுகை, ஸகாத் ,திக்ரு போன்ற நாம் செய்யக்கூடிய எல்லா அமல்களையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இஸ்லாமிய கல்வியை நாம் கற்பது அல்லாஹ்வை சரியான முறையில் வணங்க கற்றுக் கொள்ள வேண்டும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எவ்வாறு தொழுதார்கள் என்பதை அறிந்தால் தான் சரியான முறையில் நாம் அல்லாஹ்வுக்கு தொழுகையை நிறைவேற்ற முடியும்.

மூன்றாவதாக:- கல்வியை தேடுவதன் மூலம் அல்லாஹ்வின் நெருக்கத்தை நாம் பெறவேண்டும்.

ஏனென்றால் கல்வி ஒரு இபாதத் கல்வி ஒரு ஜிஹாத்.

நபி ﷺ அவர்கள் கூறுகிறார்கள்,

‘யார் ஒருவர் கல்வி தேடி வெளியேறுகிறாரோ, அவர் அல்லாஹ்வின் பாதையில் இருக்கிறார்.’

அல்லாஹ் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். அவனை அவனுக்கு விருப்பமான முறையில் நான் வணங்கும் போது அவன் என்னை கொண்டு திருப்தி அடைவான்.

அல்லாஹ்வுடைய நெருக்கம் எனக்கு கிடைக்கும் என்ற நோக்கத்தில் கல்வியை பெறவேண்டும்.

நான்காவது:- அல்லாஹ்வை அதிகமாக நான் அஞ்ச வேண்டும் என்ற நோக்கத்தில் கல்வியை தேட வேண்டும்.

وَمِنَ ٱلنَّاسِ وَٱلدَّوَآبِّ وَٱلْأَنْعَٰمِ مُخْتَلِفٌ أَلْوَٰنُهُۥ كَذَٰلِكَۗ إِنَّمَا يَخْشَى ٱللَّهَ مِنْ عِبَادِهِ ٱلْعُلَمَٰٓؤُا۟ۗ إِنَّ ٱللَّهَ عَزِيزٌ غَفُورٌ

மனிதர்களிலும், உயிருள்ளவற்றிலும் (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) கால்நடைகளிலும் இவ்வாறே பல நிறங்கள் இருக்கின்றன. நிச்சயமாக அல்லாஹ்வுடைய அடியார்களில் அவனுக்குப் பயப்படுபவர்களெல்லாம் (அறிவுடைய) கல்விமான்கள்தான். நிச்சயமாக அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவனும் மிக்க மன்னிப்புடையவனும் ஆவான். (அல்குர்ஆன் 35:28)

நான் அதிகமாக அல்லாஹ்வை நெருங்குகிற நேரத்தில் அவனுடைய அச்சம் உள்ளத்தில் ஆழமாகப் பதிய வேண்டும் என்ற நோக்கத்தில் கல்வியை தேட வேண்டும்.

ஐந்தாவது:- அல்லாஹ்விடத்தில் நம்முடைய அந்தஸ்து அதிகரிக்கவேண்டும். மாறாக மக்கள் மனதில் அல்ல

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِذَا قِيلَ لَكُمۡ تَفَسَّحُواْ فِي ٱلۡمَجَٰلِسِ فَٱفۡسَحُواْ يَفۡسَحِ ٱللَّهُ لَكُمۡۖ وَإِذَا قِيلَ ٱنشُزُواْ فَٱنشُزُواْ يَرۡفَعِ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُواْ مِنكُمۡ وَٱلَّذِينَ أُوتُواْ ٱلۡعِلۡمَ دَرَجَٰتٖۚ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ خَبِيرٞ

நம்பிக்கையாளர்களே! (நீங்கள் ஒரு சபையிலிருக்கும் பொழுது, எவரேனும்) உங்களை நோக்கிச் ‘‘சபையில் நகர்ந்து இடம் கொடுங்கள்” என்று கூறினால், (அவ்வாறே) நீங்கள் நகர்ந்து இடம் கொடுங்கள். இடத்தை அல்லாஹ் உங்களுக்கு விசாலமாக்கி கொடுப்பான். தவிர, (சபையில் ஒரு காரணத்திற்காக உங்களை நோக்கி) ‘‘எழுந்து (சென்று) விடுங்கள்” என்று கூறப்பட்டால், அவ்வாறே நீங்கள் எழுந்து (சென்று) விடுங்கள். (இவ்வாறு நடந்துகொள்ளும்) உங்களிலுள்ள நம்பிக்கையாளர்களுக்கும், கல்வி ஞானம் உடையவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிவான். (அல்குர்ஆன் 58:11)

நாம் கல்வியை தேட தேட அல்லாஹ்விடத்தில் அந்தஸ்துக்குரியவனாக நான் மாறுவேன் என்ற நோக்கம் வேண்டும்.

கல்வியைத் தேடுவதில் நம் பிரதானமான நோக்கம் இஃக்லாஸ்.

கல்வியைத் தேடி பயணிக்க வேண்டும்.

கல்வி என்பது பெறுமதியான ஒன்று.

ஹதீஸ்களில் மன் ஸலக தரீகன்,

தலபுல் இல்ம் என்று வருகிறது…… இதற்கு கல்வியை தேடி செல்வது என்று அர்த்தம்.

அல்லாஹ் அல்குர்ஆனில் பல இடங்களில் ஜிஹாத் செல்வதற்கு பயன்படுத்தக்கூடிய ‘நஃபர- نفر’ என்ற வார்த்தையை கல்வியைத் தேடி செல்வதற்கு அல்லாஹ் கீழ் வரக்கூடிய வசனத்தில் குறிப்பிடுகிறான்.

وَمَا كَانَ الْمُؤْمِنُوْنَ لِيَنْفِرُوْا كَآفَّةً‌ فَلَوْلَا نَفَرَ مِنْ كُلِّ فِرْقَةٍ مِّنْهُمْ طَآٮِٕفَةٌ لِّيَـتَفَقَّهُوْا فِى الدِّيْنِ وَ لِيُنْذِرُوْا قَوْمَهُمْ اِذَا رَجَعُوْۤا اِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُوْنَ‏

முஃமின்கள் ஒட்டு மொத்தமாக புறப்பட்டுச் செல்லலாகாது. ஆனால் அவர்களில் ஒவ்வொரு வர்க்கத்தாரிலிருந்தும் ஒரு சிறிய கூட்டத்தார் சன்மார்க்க (ஞானத்தைக்) கற்று கொள்வதற்காகவும், (வெளியேறிசென்ற அவர்கள் பின்னே தங்கியவர்களிடம்) திரும்பி வந்தால் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும் புறப்பட வேண்டாமா? இதைக் கொண்டே அவர்கள் தங்களை(த் தீமையினின்றும்) பாதுகாத்துக் கொள்வார்கள். (அல்குர்ஆன் : 9:12)

ஜாபீர் இப்னு அப்தில்லாஹ் (ரஹி) அவர்கள் கூறுகிறார்கள்;

ஷாமில் ஒருவரிடம் ஒரு ஹதீஸ் இருக்கிறது என்று கேள்விப்பட்டேன். அங்கு பயணம் செல்ல எனக்கு ஒரு வாகனம் தேவைப்பட்டது அதற்காக ஒரு ஒட்டகம் வாங்கினேன். பயணத்திற்கான தேவையான ஏற்பாடுகளை செய்து கொண்டு ஷாமை சென்றடைந்தேன்.

அங்கு சென்றபோது அப்துல்லாஹ் இப்னு அனீஸ் (ரலி) அவர்களுடைய வீடு என்று தெரியவந்தது. அந்த வீட்டின் காவலாளியிடம் நான் ஜாபிர் வந்து இருக்கிறேன் என்று சொல்லுங்கள் என்றேன். அப்துல்லாஹ் இப்னு அனஸ் (ரலி) வெளியே வந்தார்கள். என்னை கண்டதும் ஓடி வந்து கட்டி அணைத்து முஆனகா செய்தார்கள்.

அப்போது நான், உங்களிடம் கிஸாஸ் குறித்து ஒரு ஹதீஸ் இருப்பதாக நான் கேள்விப்பட்டேன். அந்த ஹதீஸை உங்களிடம் கேட்பதற்கு முன்னால் நான் மரணிப்பதையோ அல்லது நீ மரணிப்பதையோ நான் பயந்தேன். அதற்குத்தான் நான் வந்திருக்கிறேன்’ என்று கூறினேன் . அதற்கு அவர்கள், ‘மறுமையில் மக்கள் செருப்பு அணியாதவர்களாக….. ஆடை இல்லாதவர்களாக…. கத்னா செய்யாதவர்களாக எழுப்பப்படுவார்கள்’ என்ற ஹதீஸை கூறினார்கள்.

இந்த ஹதீஸை அவர்களிடம் இருந்து எடுத்துக்கொண்டு மீண்டும் மதினாவை வந்தடைந்தேன்.

இப்படி ஸலஃப்களுடைய வாழ்க்கை வரலாற்றில் பல சம்பவங்கள் ‘கல்வியைத் தேடி மேற்கொண்ட பயணங்கள்’ என்ற தலைப்பில் இருக்கும்.

கஷ்டப்பட்டு கல்வியை பெறும் போதுதான் அதன் பெறுமதி புரியும். அந்தக் கல்வியை வாழ்க்கையில் நடைமுறையில் கொண்டு வர வேண்டும் என்ற உணர்வு வரும்.

இன்று கல்வி மிகவும் எளிதாக கிடைப்பதால் அந்த கல்வியின் பெறுமதி புரிவதில்லை. அதனால் அந்தக் கற்ற கல்வியை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த ஆசை கொள்வதில்லை.

அதேபோல் கல்வியும் கஷ்டப்பட்டு அடைந்திருந்தால் முதலில் நாம் அதைக் கொண்டு பயன் அடைந்து பிறகு மற்றவர்களுக்கு கொடுக்க நினைப்போம்.

உதாரணமாக:- கஷ்டப்பட்டு பணம் சம்பாதித்தால் தான் மற்றவர்களுக்குக் கொடுக்கும் போது அளவோடு கொடுப்போம் அள்ளி அள்ளிக் கொடுக்க மாட்டோம்.

ஸலஃப் ஸாலிஹீன்கள் வகுப்பு எடுக்கும்போது இஸ்திஃகாரா தொழுது விட்டு வகுப்பு எடுப்பார்கள்.

இஸ்லாமிய கல்வி என்பது மிக புனிதமானது. பெறுமதியானது. அதைப் பெறுவதற்கு கஷ்டப்பட வேண்டும். பயணம் செய்ய வேண்டும் என்ற விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மாணவர்கள் ஆசிரியர்களோடு எப்படி இருக்க வேண்டும்:-

யாரிடம் நான் கல்வி பெற போகிறேன்? யார் என்னுடைய ஆசிரியர்? என்று தீர்மானிப்பதற்கு முன் இஸ்திஃகாரா செய்ய வேண்டும்.

இமாம் முஸ்லிம் (ரஹி) அவர்கள் அஸர் கொண்டுவருகிறார்கள்.

இமாம் முஹம்மது இப்னு சீரின் (ரஹி) அவர்கள் கூறுகிறார்கள்:

“கல்வி என்பது மார்க்கமாகும். எனவே யாரிடம் இந்த மார்க்கத்தை எடுப்பது என்பதை பார்த்து எடுத்துக் கொள்ளுங்கள்”.

இன்று நிறைய ஆலிம்கள் இருக்கிறார்கள்.. ஷியாக்களிடம், ஹவாரிஜ்களிடம், முஃதஸிலாக்களிடம், சூஃபியாக்களிடம், காதியானிகளிடம், அஹ்லுல் குர்ஆன்களிடம்.. இப்படி எல்லாரிடமும் ஆலிம்கள் இருக்கிறார்கள்.

எனவே யாரிடமும் நாம் கல்வியை தேடுவோம் என்று முடிவெடுப்பது மிகப்பெரிய தவறாகும்.

நம்முடைய தீன் என்ன என்று ஸலஃபுகளிடம் தேடும்போது, உன்னுடைய தீன் என்பது உன்னுடைய ரத்தம், உன்னுடைய சதை என்று கூறினார்கள்.

இந்த உலகத்தில் அல்லாஹ் உன்னை படைத்தது இந்த தீனுக்காக குறைந்த காலத்தில் நாம் மரணிக்க போகிறோம்

இந்த உலகத்தில் குறைந்த காலம் தான் வாழப் போகிறோம். மவ்திற்கு பிறகு பர்ஸஃகிலும் . மஹ்ஷரில் நீண்ட காலம் பயணம் இருக்கிறது.

இந்தப் பயணத்திற்கு தயார் செய்யும் இடம் நான் இந்த உலகம்.

தீன் தான் இந்த உலகத்தில் லட்சியம்.

நம் பணம் செல்வாக்கு என்பது நிரந்தரமானது அல்ல. நம் மார்க்கம் மட்டும் நம்மோடு தொடர்ந்து வரும். மார்க்கம் என்பது சிறிய விஷயம் கிடையாது.

மார்க்கத்தை யாரிடம் படிப்பது என்பது தெளிவான அடையாளம் காணவேண்டும்.

சிறிது அரபு அறிவுள்ளவர்கள். பேச்சாளர்கள் எல்லாம் ஆலிம்கள் கிடையாது. நிறைய ஆதரவாளர்கள் உள்ளவர்களும் ஆலிம் கிடையாது. கவர்ச்சியான பேச்சாற்றல் உள்ளவர்கள் அதிகரித்து இருக்கிறார்கள்.

அல்லாஹ்விடம் நம்முடைய தீனை பெற தவ்ஃபீக் செய்வாயாக என்று நிறைய துஆ கேட்க வேண்டும்.

யா அல்லாஹ் இந்த தீன் என் வாழ்க்கையின் லட்சியம் இந்த தீனை கற்றுக் கொள்வதற்காக நான் புறப்படுகிறேன். இந்த மார்க்கத்தை சரியாக கற்றுக் கொடுக்கக் கூடிய சரியான ஆலிமிடம் இந்த மார்க்கத்தை அறிந்து கொள்வதற்கு எனக்கு தவ்ஃபீக் செய்வாயாக. என்று கேட்க வேண்டும்.

நமக்கு கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் நம்மோடு சிறியவராக இருந்தாலும் பெரியவராக இருந்தாலும் செல்வாக்கில் அதிகமாக இருந்தாலும் குறைவாக இருந்தாலும் அவருடன் நாம் பணிவாக நடந்து கொள்ள வேண்டும்.

ஸைது பின் ஸாபித் (ரலி) அவர்கள் நபி ﷺ அவர்களின் வஃபாத்திற்க்கு பிறகு குர்ஆனை ஒன்று சேர்ப்பதற்கு பொறுப்பு கொடுக்கப்பட்டவர் .

ஒருநாள் இவர் தம் வாகனத்தில் ஏறி உட்காருகிறார்கள். இதைப்பார்த்த இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், (இஸ்லாத்தின் ஞானி) ஓடிவந்து அந்த வாகனத்தின் (ஒட்டகத்தின்) கயிற்றைப் பிடித்துக் கொண்டார்கள்.

(இவருக்கும் நபி ﷺ அவர்கள், யா அல்லாஹ் இவருக்கு குர்ஆனின் தஃப்ஸீர்க்கான ஆற்றலை கொடு என்று நேரடியாக துஆ செய்தார்கள்).

இவர் ஓடிவந்து கயிற்றை பிடிக்கிறார். அதற்கு ஸைது பின் சாபித் (ரலி) அவர்கள் இதை விட்டு தூரம் ஆகுங்கள் ரசூலுல்லாஹ்வின் சாச்சாவின் மகனே என்று சொல்கிறார்கள்.

அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்… “நபி ﷺ அவர்கள் எங்களுக்கு உலமாக்களோடு இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்று கட்டளையிட்டார்கள்”என்று சொல்லி கயிற்றை பிடித்து நடந்து வரும்போது ஸைது பின் சாபித் (ரலி) இப்னு அப்பாஸே! உங்கள் கையை நீட்டுங்கள் என்று கூறினார்கள், .

அவர் கையை காண்பிப்பதும் இவர்கள் முத்தமிட்டு சொன்னார்கள்”எங்களுடைய நபி ﷺ அவர்களின் குடும்பத்தாரோடு நாங்கள் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் ஏவப்பட்டு உள்ளோம் என்று கூறினார்கள்”.

அதே வேளை உலமாக்கள் பொருத்தவரை மாணவர்கள் தங்களுக்கு கண்ணியம் தர வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது என்று நபி ﷺ அவர்கள் கூறினார்கள்.

உலமாக்களிடம் மாணவர்கள் பணிவோடும் கண்ணியத்தோடும் நடந்து கொள்ள வேண்டும்.


ஆசிரியர்களோடு மாணவர்கள் நடந்து கொள்ள வேண்டிய முறை:

சில ஆசிரியர்களின் சுபாவம் கடுகடுப்பானவராக இருக்கும். அவர்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். ஆசிரியராக இருப்பவருக்கு இது பொருத்தமில்லை.

 நபி ஸல் அவர்களைப் பற்றி அல்லாஹ் அல்குர்ஆனில் சொல்லும்போது:

فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللّٰهِ لِنْتَ لَهُمْ‌ وَلَوْ كُنْتَ فَظًّا غَلِيْظَ الْقَلْبِ لَانْفَضُّوْا

அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்; (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்; (அல்குர்ஆன் : 3:159)

நபி (ஸல்)அவர்களின் முகத்தில் எப்பொழுதும் புன்முறுவல் தான் இருக்கும். இவர்கள்தான் நமக்கு முன்மாதிரியான ஆசிரியர்,

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பத்து ஆண்டுகள் பணிவிடை செய்தேன். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் என்னை “ச்சீ” என்றோ “இதை ஏன் செய்தாய்?” என்றோ, “நீ இப்படிச் செய்திருக்கக் கூடாதா?” என்றோ எதற்காகவும் அவர்கள் சொன்னதில்லை. ஸஹீஹ் முஸ்லிம் : 4623.

ஆசிரியர்கள் மாணவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும் .மாணவர்கள் ஆசிரியரின் கடுகடுப்பான தன்மையை பொறுத்து கொண்டு அவர்களிடம் இருந்து அறிவை பெற்றுக்கொள்ள வேண்டும்.

ஆசிரியருக்கு முன்னால் மாணவர்கள் உட்காரும்போது ஒழுக்கத்தோடு உட்கார வேண்டும் .

அவர்கள் சொல்வதை கேட்கும் நிலையில் இருக்க வேண்டும் .

அவருடன் பேச வேண்டி வந்தால் அழகிய முறையில் பேச வேண்டும்.

ஆசிரியர் பாடம் கற்பிக்கும் போது விளக்கம் கொடுக்கும் போது குறிக்கிட்டு இடையில் பேசுவது கூடாது.

ஆசிரியருடன் முடியுமானவரை நல்ல பண்போடு மாணவர்கள் நடந்து கொள்ள வேண்டும்.

இது தான் இஸ்லாம்

நபி(ஸல்)அவர்களுக்கு முன்னால் ஜிப்ரீல் (அலை)அவர்கள் மாணவராக உட்கார்ந்து காட்டினார்கள்.

ஜிப்ரீல் (அலை)அவர்களுக்கு முன்னால் நபி(ஸல்) அவர்கள் மாணவராக உட்கார்ந்து காட்டினார்கள் .

நபி (ஸல் )அவர்களுக்கு முன்னால் சஹாபாக்கள் மாணவராக உட்கார்ந்து காட்டினார்கள்.

சஹாபாக்களுக்கு முன்னால் மற்ற சஹாபாக்களும் தாபியீன்களும் மாணவராக உட்கார்ந்து காட்டினார்கள்.

அங்கு பூரணமான அதபை பார்க்கலாம்.

மஜ்லிஸ்களில் ஆசிரியருக்கு முன்னால் மாணவர்கள் போன் பார்ப்பதும், சாப்பிடுவதும், தூங்குவதும் கூடாது. இவ்வாறு செய்வது சூவுல் அதப் எனும் கெட்ட ஒழுக்கமாகும்.

நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: வகுப்பில் அமரும்போது தூக்கம் வந்தால் இடத்தை மாற்றி உட்கார வேண்டும், மீண்டும் தூக்கம் வந்தால் உளு செய்து விட்டு வந்து உட்கார வேண்டும். அப்படியும் தூக்கம் வந்தால் படிக்க வேண்டாம்.

வகுப்பில் உட்கார்ந்து தூங்குவது வகுப்பின் ஒழுக்கத்தை நிச்சயமாக பாதிக்கும்.

ஆசிரியர் சொல்வதை கவனமாக கேட்க வேண்டும், சில நேரங்களில்சொல்வது புரியவில்லை என்றால், ஆசிரியரின் அனுமதியை பெற்றுக் கேள்வி கேட்கவேண்டும்.

ஆசிரியர் வகுப்பு எடுக்கும் போது குழப்புவது போன்ற கேள்விகள் கேட்க கூடாது. இது மாணவர்களின் வேலை அல்ல. ஜாஹில்களின் வேலையாகும்.

ஆசிரியர்களிடம் தர்கிப்பது கூடாது. நபி ஸல் அவர்கள் பொதுவாகவே தர்கிப்பதை விரும்பவில்லை என்பதை பல ஹதீஸ்களில் பார்க்கலாம்.

இந்தக் கல்வியை நாம் தேட வந்திருக்கிறோம் என்றால் அது நம்முடைய திறமையின் காரணமாக அல்ல. அது அல்லாஹ்வுடைய தவ்ஃபீக் என்பதை நாம் உணர வேண்டும்.

நம்மை சுற்றி உள்ள பலர் இந்த கல்வியில் நாட்டம் இல்லாமல் , துன்யாவின் பலனில்லா விஷயத்தில் கழிக்கும்போது; நாம் கல்வியைத் தேடி புறப்படுகிறோம் என்றால் அல்லாஹ் நமக்கு நலவை நாடி இருக்கிறான் என்பதை புரிந்து ,இந்த கல்வியின் மூலம் அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுக் கொள்ள வேண்டும என்ற உயர்ந்த சிந்தனையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும் .

கல்வியை தேடி நரகம் போன கூட்டத்தில் நாம் சேர்ந்து விடக்கூடாது.

கல்வியை சரியான முறையில் கற்போம்

கற்ற கல்வியை நம்முடைய வாழ்க்கையில் நடைமுறைப் படுத்துவோம்.

கற்ற கல்வியயை அதற்குரிய சதக்காவாக மற்றவர்களுக்கும் பரப்புவோம்.

அல்லாஹ் பொருந்திக் கொண்ட மாணவராக நம் அனைவரையும் ஆக்குவானாக.

أحدث أقدم