நபி(ﷺ ) அவர்கள் தூதராக அனுப்பப்படுவதற்கு முன் உள்ள கால சூழ்நிலையை, “”அய்யாமுல் ஜாஹிலிய்யா”” என்று குறிப்பிடப்படுகிறது.
அனைத்து விதமான ஜாஹிலிய்யத்களும் நடைபெற்றது. குறிப்பாக அல்லாஹு தஆலாவிற்கு இணைவைப்பார்கள், ஒவ்வொரு குடும்பமும் தங்களுக்கென்று தெய்வங்களை உருவாக்கிக் கொண்டனர்.
பயணம் செய்யும் போது வணங்க கற்களையும், அது இல்லாத பட்சத்தில், மண்ணை குவித்து போகும் வழியில் வணங்க கூடியவர்களாக இருந்தனர்.
விபச்சாரம், கொலை, கொள்ளை, வட்டி, சூதாட்டம், வீண் சண்டை போன்ற அநியாய செயல்களில் ஈடுபட்ட மோசமான சூழ்நிலை நிலவியது.
இது போன்ற மோசமான பிண்ணனியில் நபி(ﷺ ) அவர்கள் தனிமையில் ஹிரா குகையில் வணக்கத்தில் ஈடுபட்டார்கள்.
அத்தகைய சூழ்நிலையில் தான் அல்லாஹு தஆலா நபி (ஸல்) அவர்களுக்கு வஹீயின் மூலம் அந்த சமுதாயத்தை திருத்த நினைத்தான்.
மனிதர்களின் பார்வையில் இந்த சூழ்நிலையில் எதற்காக முதலில் வஹீ அனுப்புவது? கொள்கையை நிலை நிறுத்தவதற்கா? அல்லது கஃபாவிற்கு அருகே வெளிப்படையாக நடக்கும் விபச்சாரத்தை தடுப்பதற்கா? என்று பலவிதமான குழப்பங்களும், எண்ணங்களும் வந்திருக்கும்.
ஆனால் அல்லாஹுதஆலா முதல் வஹீயாக கல்வியை பற்றி அருளினான்.
ஏனென்றால் மோசமான செயல்களை செய்வதற்கும், பிற ஏனைய பாவங்களுக்கும் அடிப்படைக் காரணம் கல்வியறிவு இல்லாமல் போனதே.
ஒருவனுக்கு கல்வியறிவு இருந்தால், விபச்சாரம் செய்வது , வட்டியின் கொடுக்கல், வாங்கல் ,கொலை செய்வது, அல்லாஹ்விற்கு இணைவைப்பது ஆகியவைகள் தவறு, பெரும் பாவமான செயல்கள் என்று புரிந்திருப்பான்.
எனவே அல்லாஹ் நபி (ﷺ ) அவர்கள் மூலமாக அம்மக்களுக்கு அறியாமை இருள் போக்க,கல்வி என்னும் ஒளியை கொடுத்தான்.
அல்லாஹ் முதன்முதலில் இறக்கிய வசனம்:
اِقْرَاْ بِاسْمِ رَبِّكَ الَّذِىْ خَلَقَ
(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக. (அல்குர்ஆன் : 96:1)
خَلَقَ الْاِنْسَانَ مِنْ عَلَقٍ
“அலக்” என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான். (அல்குர்ஆன் : 96:2)
اِقْرَاْ وَرَبُّكَ الْاَكْرَمُۙ
ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி.(அல்குர்ஆன் : 96:3)
الَّذِىْ عَلَّمَ بِالْقَلَمِۙ
அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். (அல்குர்ஆன் : 96:4)
عَلَّمَ الْاِنْسَانَ مَا لَمْ يَعْلَمْ
மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான். (அல்குர்ஆன் : 96:5)
நபி (ஸல் ) அவர்கள் மூலமாக கல்வியறிவு பெற்று, நேர்வழியில் சென்றவர்கள் இவ்வுலகிலும் மகிழ்ச்சியாக இருந்து, மறுமையிலும் வெற்றி பெற்றவர்களாக இருப்பார்கள்.
நபி (ஸல் ) அவர்கள் கல்வியின் முக்கியத்துவத்தை பல கோணங்களில் உணர்த்தி இருக்கிறார்கள். தன்னுடைய சஹாபாக்களிடம், அவர்களுக்கு முன் வாழ்ந்த சமுதாயத்தின் வரலாறுகளை அவர்கள் அதிலிருந்து படிப்பினை பெற வேண்டும் என்பதற்காக சொல்லிக் காட்டுவார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களில் ஒரு மனிதர் இருந்தார். அவர் தொண்ணூற்று ஒன்பது மனிதர்களைக் கொன்றுவிட்டிருந்தார்.
பிறகு அவர் அக்கால மக்களில் நன்கறிந்த அறிஞர் யார் என விசாரித்தார். அவருக்கு ஒரு வணக்கசாலி காட்டப்பட்டார். அவர் அந்தப் வணக்கசாலியிடம் சென்று, “நான் தொண்ணூற்று ஒன்பது மனிதர்களைக் கொன்றுவிட்டேன். எனக்குப் பாவமன்னிப்புக் கிடைக்குமா?” என்று கேட்டார். அந்தப் வணக்கசாலி, “கிடைக்காது” என்று கூறவே, அவரையும் அந்த மனிதர் கொன்று, எண்ணிக்கையை நூறாக முழுமையாக்கிவிட்டார்.
பிறகு மீண்டும் அக்கால மக்களில் மார்க்கத்தை நன்கறிந்த அறிஞரைப் பற்றி அவர் விசாரித்தார். அப்போது மார்க்க அறிஞர் ஒருவர் அவருக்குக் காட்டப்பட்டார். (அவரிடம் சென்று) அந்த மனிதர், “நான் நூறு கொலைகள் செய்துவிட்டேன். எனக்குப் பாவமன்னிப்புக் கிடைக்குமா?” என்று கேட்டார். அதற்கு அந்த அறிஞர், “ஆம் (கிடைக்கும்). இறைவனுக்கும் பாவமன்னிப்புக் கோரிக்கைக்கும் இடையே யார் குறுக்கே வந்து நிற்க முடியும்? நீ (நல்லோர் வாழும்) இன்ன ஊருக்குப் போ. அங்கு மக்கள் சிலர் இருப்பார்கள். அவர்கள் இறைவனை வழிபட்டுக் கொண்டிருப்பார்கள். அவர்களுடன் சேர்ந்து நீயும் இறைவனை வழிபடு. நீ உனது ஊருக்குத் திரும்பிச் செல்லாதே! ஏனெனில், அது தீய ஊராகும்”என்று சொன்னார்.
அவ்வாறே, அந்த மனிதர் (நல்லோர் வாழும்) அந்த ஊரை நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது, பாதி வழியில் இறந்துவிட்டார். அப்போது இறையருளைக் கொண்டுவரும் வானவர்களும் இறை தண்டனைகளை நிறைவேற்றும் வானவர்களும் அவர் விஷயத்தில் (அவரை யார் அழைத்துச் செல்வது) என்று சர்ச்சை செய்துகொண்டனர்.
அப்போது அருளின் வானவர்கள், “இவர் பாவமன்னிப்புக் கோரி பாவத்திலிருந்து மீண்டு தமது உள்ளத்தால் இறைவனை நோக்கி வந்துகொண்டிருந்தார்” என்று கூறினர். தண்டனையின் வானவர்கள், “இவர் சிறிதும் நன்மைகளைச் செய்யாதவர்” என்று கூறினர்.
அப்போது மற்றொரு வானவர் மனிதத் தோற்றத்தில் அங்கு வந்தார். அவரை அவ்விரு வானவர்களும் நடுவராக வைத்துக்கொண்டனர். அப்போது அந்த வானவர், “இவ்விரு ஊர்களுக்குமிடையிலுள்ள தூரத்தைக் கணக்கெடுங்கள். அவற்றில் எந்த ஊருக்கு மிக அருகில் அவரது உடல் இருக்கிறதோ அந்த ஊருக்குரியவராகவே அவர் இருப்பார்”என்று சொன்னார்.
அவ்வாறே கணக்கெடுத்தபோது, (அவர் வசித்துவந்த ஊரைவிட) அவர் நாடிவந்த ஊரே அவருக்கு மிகவும் சமீபமாக இருப்பதைக் கண்டனர். ஆகவே, அவரை அருளின் வானவர்கள் கைப்பற்றிக்கொண்டனர்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 5339.
நபி ﷺ அவர்கள் இந்த ஹதீஸின் மூலம் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறார்கள்.
இந்த மார்க்கக்கல்வி மனிதனுக்கு அடிப்படையான ஒன்றாக இருக்கிறது. மார்க்க கல்வியில் மனிதன் ஆர்வம் காட்ட வேண்டும் என்பதனால்தான் நபியை பார்த்து அல்லாஹ் கூறுகிறான் :
رب زذني علما
என்ற பிரார்த்தனை செய் என்று.
இந்த மார்க்க கல்வி நம்மிடம் இல்லாத காரணத்தினால் தான், நம்மிடம் மார்க்க விஷயத்தில் பொடுபோக்கு தனம் காணப்படுகிறது. மார்க்கக்கல்வி நம்மிடத்தில் இரண்டாம் நிலையை அடைந்துவிட்டது.
சில காலத்திற்கு முன்னால் மதரஸாவில் மட்டும் தான் மார்க்க கல்வி கற்பது என்ற நிலை இருந்தது.
படிப்பு ஏறவில்லை கேட்காத பிள்ளைகள் இவ்வாறான பிள்ளைகளை மதரஸாவுக்கு அனுப்பினார்கள்.
இதுதான் மார்க்கக்கல்வி தேடக்கூடிய நிலையாக இருக்கிறது. இந்த நிலையில் நம்முடைய சமுதாயம் இருந்துகொண்டு கல்வி ரீதியாகவும் மார்க்க ரீதியாகவும் முன்னேறுவது மிகவும் கடினம். இவ்வாறு மார்க்க கல்வி தேடி வந்தவர்கள் பயான் சொல்வார்கள். அவற்றோடு அவர்கள் கடமை முடிந்து விடும் சமுதாயத்தை மாற்ற வேண்டிய முறையில் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று அறிவு இருக்கவில்லை.
நபி ஸல் அவர்கள் கூறினார்கள் ஒவ்வொரு குழந்தையும் பிறக்கும் நேரத்தில் நல்ல இயல்போடு பிறக்கிறது என்று கூறினார்கள் நல்ல இயல்பு இருக்கும் நிலையில் ஜும்மா க்கு வருகிறோம் மக்கள் நிறைய பேர் வருகிறார்கள் பெருநாள் தொழுகை முஸ்லிம் மத்தியில் யாரும் விடாத தொழுகையாக இருக்கிறது.
ஜனாசா, திருமணம் போன்ற விஷயங்களில் மார்க்க சாயல்கள் பூசிக் கொள்கிறார்கள்.
ஆனால் அடிப்படையில் நம் வாழ்க்கையை பார்த்தால் எதார்த்த வாழ்க்கைக்கு சமூகத்தில் வாழும் வாழ்க்கைக்கும் முரண்பாட்டை பார்க்கலாம்
இன்றைக்கு பெரும்பாலோனோர் இரண்டு முகத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம் எல்லோருக்கும் அடுத்தவர் திருந்த வேண்டும் என்ற ஆசை.
ஒருவர் பேச ஆரம்பித்தால் மற்றவர்களை பற்றி அவன் வட்டி கொடுக்கிறான் விபச்சாரம் செய்கிறான் புறம் பேசுகிறான் என்று வருத்தம் ஆனால் பேசக்கூடிய அவர் அன்று ஃபஜ்ர் தொழுதிருக்க மாட்டார். இரவு சினிமா பார்த்திருப்பார். அவதூறு பேசியிருப்பார்.
இந்த மாதிரியான நிலை தான் சமுதாயத்தில் காணப்படுகிறது எல்லோருக்கும் அடுத்தவரை பற்றி கவலை. தன்னை பற்றிய கவலை இல்லை.
இந்த முரண்பட்டு நிலைக்கு அடிப்படைக் காரணம் நம்மிடம் மார்க்க கல்வி விஷயத்தில் பொடுபோக்கு தான்.
இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் முதலில் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் அல்லாஹ்வைப் பற்றிய அறிவு. அல்லாஹுதஆலா அமல்கள் செய்வதற்கு முன்னால் அவனைப் பற்றி அறிய வேண்டும் என்று கட்டளையிடுகிறான்.
فَاعْلَمْ اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّا اللّٰهُ وَاسْتَغْفِرْ لِذَنْبِكَ وَلِلْمُؤْمِنِيْنَ وَ الْمُؤْمِنٰتِ
ஆகவே (நபியே!) நிச்சயமாக, அல்லாஹ்வைத் தவிர (வணக்கத்திற்குரிய வேறு) நாயன் இல்லை என்பதை நீர் அறிந்துகொள்வீராக! உம்முடைய பாவத்திற்காகவும், விசுவாசங்கொண்ட ஆண்களுக்காகவும், விசுவாசங்கொண்ட பெண்களுக்காகவும் பாவ மன்னிப்புக் கோருவீராக!
(அல்குர்ஆன் : 47:19)
புகாரி (ரஹ்) அவர்கள் இந்த வசனத்திற்கு விளக்கம் கொடுக்கிறார்கள். அமல் செய்வதற்கும், தாவா செய்வதற்கும் முன்னால் இல்மு அவசியம்.
அல்லாஹ் குர்ஆனில் 33 இடத்தில் அல்லாஹ்வை அறிய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறான். அல்லாஹ்வைப் பற்றி அறிவது ஒரு பொருட்டாகவே நமக்கு கிடையாது.
அல்லாஹ் யார்?
அல்லாஹ்வுடைய பண்பு என்ன?
திருநாமம் என்ன?
அல்லாஹ்வுடைய வார்த்தைகள் என்ன சொல்கிறது?
அல்லாஹ்வுடைய தூதர் என்ன சொல்கிறார்கள்?
இதை படிக்க வேண்டிய கவலை நம்மில் இல்லாமல் போய்விட்டது.
அல்லாஹ்வைப் பற்றி அறிய நாம் முயற்சி செய்ய ஆர்வம் இல்லாமல் இருக்கிறோம்.
நபி ஸல் அவர்கள் ஒரு பயங்கரமான எச்சரிக்கை செய்தார்கள் மறுமை நெருங்கும் போது அறிவு உயர்த்தப்படும் அறியாமை வெளிப்படும் என்று கூறினார்கள்.
கல்வி உயர்த்தப்படும் இது மறுமை நாளின் ஒரு அடையாளம். கல்வி எவ்வாறு உயர்த்தப்படும் நபி ஸல் அவர்கள் கூறும் போது நிச்சயமாக அல்லாஹ் கல்வியை ஒரேயடியாக உயர்த்துவது இல்லை. கல்வியை உயர்த்தும் முறை எப்படி என்றால் உலமாக்களை மரணிக்கச் செய்வான் ஆலிம்கள் இல்லாமல் போவார்கள்.
அல்லாஹ்வின் வீடுகளான மஸ்ஜிதுகளில் அமர்ந்து இறைவன் கூறியுள்ள கருத்துகளைப் படிப்பவர்களுக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஸகீனத் என்ற அமைதி இறங்குகிறது.
அவர்களை அல்லாஹ்வின் மலக்குமார்கள் சூழ்ந்து கொள்வார்கள்.
மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் வசனங்களைப் படிப்பவர்களை அல்லாஹ் தன்னிடம் உள்ள மலக்குகளிடம் நினைவு கூறுவான், என்று முஹம்மது நபி ﷺ அவர்கள் கூறினார்கள்.
இத்தகைய நன்மைகளை அல்லாஹ் நமக்கு தந்து இருந்தும், நம்மை மஸ்ஜிதுகளில் ஓத விடாமல் தடுப்பவை எவை என்று சிந்தியுங்கள்?
அல்லாஹ்வின் அருளால் நமக்கு பல்வேறு உரைகள், பல்வேறு உலமாக்களின் அறிவுரைகள் கிடைக்கின்றன.
இருந்தும் அந்த நேரங்களில் வீணான காரியங்களை செய்து கொண்டிருக்கிறோம்.
முஹம்மது நபி ﷺ அவர்கள் கூறுகிறார்கள் : அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான இடம் மஸ்ஜிது, அவனுக்கு வெறுப்பைத் தரக்கூடிய இடம் கடைத் தெருவும் சந்தைகளும் ஆகும்.
நம்மால் ஏன் அல்லாஹ்வின் அமைதியை பெற முடியவில்லை என்று சிந்தியுங்கள்?
இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ்விடம் சில வானவர்கள் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றுவோரைத் தேடியவண்ணம் தெருக்களில் சுற்றி வருகின்றனர். அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றிக்கொண்டிருக்கும் ஒரு குழுவினரை அவர்கள் கண்டால் ‘உங்கள் தேவையைப் பூர்த்தி செய்ய வாருங்கள்’ என்று அவர்கள் (தம்மில்) ஒருவரை ஒருவர் அழைக்கின்றனர். பின்னர் அந்த வானவர்கள் அல்லாஹ்வைப் போற்றுகிறவர்களைத் தம் இறக்கைகளால் முதல் வானம் வரை சூழ்ந்து கொள்கின்றனர். அப்போது அவ்வானவர்களிடம் அவர்களின் இறைவன் ‘என் அடியார்கள் என்ன கூறுகின்றனர்?’ என்று கேட்கிறான். அவ்வானவர்களை விட அவனே தம் அடியார்களை நன்கறிந்தவனாவன் என்று கூறி துதிக்கின்றனர். உன்னைப் பெருமைப்படுத்திக்கொண்டும், உன்னைப் புகழ்ந்துகொண்டும், உன்னைப் போற்றிக் கொண்டும் இருக்கின்றர்’ என்று வானவர்கள் கூறுகின்றனர்.
அதற்கு இறைவன், ‘அவர்கள் என்னைப் பார்த்திருக்கிறார்களா?’ என்று கேட்பான். அதற்கு வானவர்கள், ‘இல்லை; உன் மீதாணையாக! அவர்கள் உன்னைப் பார்த்ததில்லை’ என்று பதிலளிப்பார்கள். அதற்கு இறைவன், ‘என்னைப் பார்த்திருந்தால் எப்படியிருப்பார்கள்?’ என்று கேட்பான். வானவர்கள், ‘உன்னை அவர்கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக உன்னை வழிபடுவார்கள்; இன்னும் கூடுதலாக உன்னைப் போற்றிப் புகழ்ந்து துதிப்பார்கள்’ என்று பதிலளிப்பார்கள். அதற்கு இறைவன், ‘என்னிடம் அவர்கள் என்ன வேண்டுகிறார்கள்?’ என்று (தனக்குத் தெரியாதது போன்று) கேட்பான். வானவர்கள், ‘அவர்கள் உன்னிடம் சொர்க்கத்தைக் கேட்கின்றனர்’ என்பார்கள். அதற்கு இறைவன், ‘அவர்கள் அதைப் பார்த்ததுண்டா?’ என்று கேட்பான். அதற்கு வானவர்கள், ‘இல்லை; உன் மீதாணையாக! அதிபதியே! அவர்கள் அதனைப் பார்த்ததில்லை’ என்பர். அதற்கு இறைவன், ‘அவ்வாறாயின் அதனை அவர்கள் பார்த்திருந்தால் அவர்கள் நிலை எப்படியிருக்கும்?’ என்று கேட்பான். வானவர்கள், ‘சொர்க்கத்தை அவர்கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக அதன் மீது ஆசைகொண்டு, அதிக வேட்கையுடன் தீவிரமாக அதைத் தேடுவார்கள்’ என்று பதிலளிப்பார்கள்.
இறைவன், ‘அவர்கள் எதிலிருந்து (என்னிடம்) பாதுகாப்புக் கோருகின்றனர்?’ என்று வினவுவான். வானவர்கள், ‘நரகத்திலிருந்து (பாதுகாப்புக் கோருகின்றனர்)’ என்று பதிலளிப்பார். இறைவன், ‘அதனை அவர்கள் பார்த்திருக்கிறார்களா?’ என்று கேட்பான். வானவர்கள், ‘இல்லை; உன் மீதாணையாக! அதனை அவர்கள் பார்த்தில்லை’ என்பர். அதற்கு இறைவன், ‘அவ்வாறாயின் அவர்கள் அதைப் பார்த்திருந்தால் அவர்கள் நிலை என்னவாக இருந்திருக்கும்?’ என்று கேட்பான் வானவர்கள், ‘நரகத்தை அவர்கள் பார்த்திருந்தால் நிச்சயம் அதிலிருந்து கடுமையாக வெருண்டோடுபவர்களாகவும் அதனை மிகவும் அஞ்சுபவர்களாகவும் இருப்பார்கள்’ என்பர். அப்போது இறைவன், ‘எனவே (வானவர்களே!) அவர்களை நான் மன்னித்து விட்டேன் என்பதற்கு உங்களை நான் சாட்சிகளாக ஆக்குகிறேன்’ என்று கூறுவான்.
அந்த வானவர்களிடையே உள்ள ஒரு வானவர், ‘(அந்தக் குழுவினரிடையே அமர்ந்திருந்த) இன்ன மனிதன், உன்னைப் போற்றுகிற அவர்களில் உள்ளவன் அல்லன். அவன் ஏதோ தேவை நிமித்தமாகவே அங்கு வந்தான்’ என்பார். அதற்கு இறைவன், ‘அவர்கள் ஒன்றாக அமர்ந்துள்ள நண்பர்கள். அவர்களுடன் வந்து அமர்ந்த ஒருவன் அவர்களால் (பாக்கியம் பெறுவானே தவிர,) பாக்கியமற்றவனாக ஆகமாட்டான்’ என்று கூறுவான்.
அறிவிப்பாளர் :அபூ ஹுரைரா(ரலி)
ஸஹீஹ் புகாரி : 6408
மஸ்ஜிதுகளில் உட்கார்ந்து மார்க்கம் படிப்பது ஒரு இபாதத்.
அதை இபாதத் என்று புரிந்துகொண்டால் நாம் உலமாக்களிடம் கல்வி கற்பதை தவிர்க்க மாட்டோம்.
மார்க்கக் கல்வியை கற்றால் தான் நாம் கப்ருகளில் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும்.
அதுமட்டுமின்றி மனக் குழப்பத்திலிருந்து வெளி வருவதற்கும், ஒரு பொருளை வாங்கி உண்ணும் போதும், உம்ரா செல்வதற்கும் இன்னும் பலவிதமான செயல்களை நாம் குழப்பமின்றி செய்வதற்கும் கல்வி அவசியம்.
கடந்த காலங்கள் சென்று விட்டன. ஆனால் இனிவரும் காலங்களில் நாம் கல்வி கற்போம்.
இவ்வுலகத்தில் ஏற்படும் வெற்றியும் தோல்வியும் நமக்கு முக்கியமல்ல. ஆனால் மறுமையின் தோல்வி ஆபத்தானது.
பல ஊர்களில் உலமாக்கள் இல்லாமல் மார்க்கக் கல்வி கற்க முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
ஆனால் நமக்கு அல்லாஹ் கல்வி பெறுவதற்கு பல வகுப்புகளை அளித்துள்ளான். அவற்றை நாம் பயன்படுத்தி கல்வி பெறுவோம்.