பொய் ஒரு பெரும் பாவம்


இஸ்லாம் நற்பண்புகளின் மார்க்கம். ஒரு முஸ்லிம் அல்லாஹ்விடம் நற்குணங்களால் உயர்வும் தீய குணங்களால் தாழ்வும் அடைகின்றான். இஸ்லாம் நாவொழுக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது. நாவும் மருமஸ்தானமுமே அதிகமான மனிதர்கள் நரகத்தில் நுழைவதற்குக் காரணங்களாக இருக்கின்றன என்று நபி ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள். (திர்மிதி 2004)

நாவினால் வெளிப்படும் மிக மோசமான குணங்களில் ஒன்று தான் பொய் பேசுவது. குர்ஆனும் ஹதீஸும் இதனை மிக வன்மையாக் கண்டித்துள்ளன. பொய் பேசுவதால் இம்மையிலும் மறுமையிலும் பல்வேறு வகையான மோசமான விளைவுகள் ஏற்படுகின்றன. முதலில் பொய் பற்றி மார்க்கம் போதிக்கும் சில உபதேசங்களைப் பார்ப்போம்:

பொய் சொல்பவனுக்கு கேடுதான்:

﴿وَیۡلࣱ لِّكُلِّ أَفَّاكٍ أَثِیمࣲ﴾ [الجاثية ٧]
அதிகம் பொய்கூறுகின்ற, அதிகம் பாவம் செய்கின்ற ஒவ்வொருவருக்கும் கேடுதான். (அல்குர்ஆன் 45:7)

பொய் ஈமான் இல்லாதவர்களின் பண்பு:

﴿إِنَّمَا یَفۡتَرِی ٱلۡكَذِبَ ٱلَّذِینَ لَا یُؤۡمِنُونَ بِـَٔایَـٰتِ ٱللَّهِۖ وَأُو۟لَـٰۤىِٕكَ هُمُ ٱلۡكَـٰذِبُونَ﴾ [النحل ١٠٥]
நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் தாம்; இன்னும் அவர்கள் தாம் பொய்யர்கள். (அல்குர்ஆன் 16:105)

பொய் முனாஃபிக்களின் பண்பு:

பார்க்க: அல்குர்ஆன் 9:107

‏ عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ  آيَةُ المُنافِقِ ثَلاثٌ: إذا حَدَّثَ كَذَبَ، وإذا وعَدَ أخْلَفَ، وإذا اؤْتُمِنَ خانَ.
நபி ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 'நயவஞ்சகனின் அறிகுறிகள் மூன்று. பேசினால் பொய்யே பேசுவான்; வாக்களித்தால் மீறுவான்; நம்பினால் துரோகம் செய்வான்'. (புகாரி 33)
 
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ: أَرْبَعٌ مَن كُنَّ فيه كانَ مُنافِقًا خالِصًا، ومَن كانَتْ فيه خَصْلَةٌ منهنَّ كانَتْ فيه خَصْلَةٌ مِنَ النِّفاقِ حتّى يَدَعَها: إذا اؤْتُمِنَ خانَ، وإذا حَدَّثَ كَذَبَ، وإذا عاهَدَ غَدَرَ، وإذا خاصَمَ فَجَرَ. 
நபி ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 'நான்கு பண்புகள் எவனிடம் உள்ளனவோ அவன் வடிகட்டிய முனாஃபிக் ஆவான். அவற்றில் ஏதேனும் ஒன்று யாரிடமேனும் இருந்தால் அதை விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் ஒரு பண்பு அவனிடம் இருந்து கொண்டே இருக்கும். நம்பினால் துரோகம் செய்வான்; பேசினால் பொய் பேசுவான்; ஒப்பந்தம் செய்தால் அதை மீறுவான்; வாக்குவாதம் புரிந்தால் நேர்மை தவறிப் பேசுவான்'. (புகாரி 34)

பொய் நரகவாசிகளின் பண்பு:

عَنْ عَبْدِ اللَّهِ بن مسعود ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ  إنَّ الصِّدْقَ يَهْدِي إلى البِرِّ، وإنَّ البِرَّ يَهْدِي إلى الجَنَّةِ، وإنَّ الرَّجُلَ لَيَصْدُقُ حتّى يَكونَ صِدِّيقًا. وإنَّ الكَذِبَ يَهْدِي إلى الفُجُورِ، وإنَّ الفُجُورَ يَهْدِي إلى النّارِ، وإنَّ الرَّجُلَ لَيَكْذِبُ حتّى يُكْتَبَ عِنْدَ اللَّهِ كَذّابًا.
நபி ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: உண்மை, நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும், நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும். ஒருவர் உண்மை பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் அவர் 'வாய்மையாளர்' (சித்தீக் எனும் பெயருக்குரியவர்) ஆகிவிடுவார். (இதைப் போன்றே) பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழிவகுக்கும்; தீமை நரகத்திற்கு வழிவகுக்கும். ஒருவர் பொய் பேசிக் கொண்டேயிருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் 'பெரும் பொய்யர்' எனப் பதிவு செய்யப்பட்டுவிடுவார். (புகாரி 6094)

அதிகமாக பொய் பேசுவது ஷைத்தான்களுடன் தொடர்புள்ளவர்களான சூனியக்காரன், குறிசொல்லுபவன் போன்றவர்கள், மற்றும் ஈமானற்ற கவிஞர்கள் ஆகியோரின் பண்பாகும்
பார்க்க: அல்குர்ஆன் 26:221-227


பொய் உள்ளத்தில் நெருடலாக இருக்கும்:

‏سنن الترمذي ‏2518: عن الحسن بن علي بن أبي طالب مرفوعا: دَع ما يَريبُك إلى ما لا يريبُك. فإنّ الصِّدقَ طُمَأنينةٌ وإنَ الكَذِبَ رِيبةٌ
நபி ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: உனக்கு (உள்ளத்தில்) சந்தேகத்தை ஏற்படுத்தக்கூடியதை விட்டு விட்டு, சந்தேகத்தை ஏற்படுத்தாததின் பக்கம் சென்று விடு. ஏனென்றால், உண்மை (உள்ளத்தில் நெருடலற்ற) அமைதியாக இருக்கும்; பொய்யோ சந்தேகமாக இருக்கும். (திர்மிதி 2518, நஸாஈ 5711).

இந்த ஹதீஸை பல ஹதீஸ் துறை அறிஞர்கள் ஆதாரபூர்வமானது என்று கூறியுள்ளனர். உதாரணமாக பார்க்க: 
‏المسند الصحيح للوادعي (218)

பொய்யிற்குரிய சில தண்டனைகள்:

பொய் பேசுவதால் உள்ளதில் நயவஞ்சகத் தன்மை ஏற்படும்:

﴿فَأَعۡقَبَهُمۡ نِفَاقࣰا فِی قُلُوبِهِمۡ إِلَىٰ یَوۡمِ یَلۡقَوۡنَهُۥ بِمَاۤ أَخۡلَفُوا۟ ٱللَّهَ مَا وَعَدُوهُ وَبِمَا كَانُوا۟ یَكۡذِبُونَ﴾ [التوبة ٧٧]
எனவே, அவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிக்கு மாறு செய்ததாலும்; அவர்கள் பொய் சொல்லிக் கொண்டு இருந்ததினாலும் அல்லாஹ், அவர்களுடைய உள்ளங்களில் தன்னைச் சந்திக்கும் (இறுதி) நாள் வரையில் நயவஞ்சகத்தைப் போட்டுவிட்டான். (அல்குர்ஆன் 9:77)

பொய் பேசுபவர்களுக்கு கப்ர் வாழ்க்கையில் வழங்கப்படும் கொடூர தண்டனை:

‏عنْ سَمُرَةَ بْنِ جُنْدبٍ، قال: كانَ النبيُّ ﷺ إذا صَلّى صَلاةً أقْبَلَ عَلَيْنا بوَجْهِهِ فَقالَ: مَن رَأى مِنكُمُ اللَّيْلَةَ رُؤْيا؟ قالَ: فإنْ رَأى أحَدٌ قَصَّها، فيَقولُ: ما شاءَ اللهُ فَسَأَلَنا يَوْمًا فَقالَ: هلْ رَأى أحَدٌ مِنكُم رُؤْيا؟ قُلْنا: لا، قالَ: لَكِنِّي رَأَيْتُ اللَّيْلَةَ رَجُلَيْنِ أتَيانِي فأخَذا بيَدِي، فأخْرَجانِي إلى الأرْضِ المُقَدَّسَةِ، فَإذا رَجُلٌ جالِسٌ، ورَجُلٌ قائِمٌ، بيَدِهِ كَلُّوبٌ مِن حَدِيدٍ قالَ بَعْضُ أصْحابِنا عن مُوسى: إنّه يُدْخِلُ ذلكَ الكَلُّوبَ في شِدْقِهِ حتّى يَبْلُغَ قَفاهُ، ثُمَّ يَفْعَلُ بشِدْقِهِ الآخَرِ مِثْلَ ذلكَ، ويَلْتَئِمُ شِدْقُهُ هذا، فَيَعُودُ فَيَصْنَعُ مِثْلَهُ، قُلتُ: ما هذا؟ قالا: انْطَلِقْ، ... 
قُلتُ: طَوَّفْتُمانِي اللَّيْلَةَ، فأخْبِرانِي عَمّا رَأَيْتُ، قالا: نَعَمْ، أمّا الذي رَأَيْتَهُ يُشَقُّ شِدْقُهُ، فَكَذّابٌ يُحَدِّثُ بالكَذْبَةِ، فَتُحْمَلُ عنْه حتّى تَبْلُغَ الآفاقَ، فيُصْنَعُ به إلى يَومِ القِيامَةِ... 
ஸமுரஹ் இப்னு ஜுன்தப் (றளியல்லாஹு அன்ஹு) கூறினார்கள்: நபி ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் தொழுது முடித்ததும் எங்களை நோக்கி, 'இன்றிரவு உங்களில் யாரும் கனவு கண்டீர்களா?' என்று கேட்கும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். எவரேனும் கனவு கண்டு அதைக் கூறினால், அல்லாஹ் நாடியதை (விளக்கமாக) கூறுவார்கள். ஒரு நாள், 'உங்களில் யாரும் இன்றிரவு கனவு கண்டீர்களா?' என்று கேட்டதும் நாங்கள் இல்லை என்றோம். அவர்கள், 'நான் இன்றிரவு ஒரு கனவு கண்டேன்; அதில் இருவர் என்னிடம் வந்து என்னுடைய கைகளைப் பிடித்து என்னைப் புனித பூமியொன்றுக்கு அழைத்துச் சென்றனர். அங்கே ஒருவர் உட்கார்ந்திருந்தார். நின்றிருந்த இன்னொருவரின் கையில் இரும்பாலான கொக்கிகள் இருந்தன. அவர் அதைக் கொண்டு உட்கார்ந்திருப்பவரின் கீழ்த்தாடையின் ஒருபுறம் குத்த அது அவரின் பிடரி வழியாக வெளியேறியது. இப்படியே தாடையின் இன்னொரு புறமும் செய்தார். இதற்குள் தாடையின் முதற் பகுதி ஒழுங்காகிவிட்டது. பின்பு இது குத்தப்பட்டதும் அது பழைய நிலையை அடைந்தது. உடனே நான் இது என்ன? என்று கேட்டேன். அதற்கு அவ்விருவரும் 'நடங்கள்' என்றனர். அப்படியே நடந்தபோது... பிறகு நான் இருவரிடமும் 'இரவு முழுவதும் என்னை நீங்கள் சுற்றிக் காண்பித்தீர்களே, அப்போது நான் கண்டவற்றைப் பற்றி சொல்லுங்கள்!' எனக் கேட்டேன். அதற்கு இருவரும் 'ஆம்! முதலில் தாடை சிதைக்கப்பட்டவரைப் பார்த்தீரே! அவர் பெரும் பொய்யர். அவர் பொய் பேச அது பலர் வழியாக உலகம் முழுவதையும் அடையும். நீர் பார்த்த அத்தண்டனை அவருக்கு மறுமை நாள் வரை கொடுக்கப்படும். ... நான் ஜிப்ரீல். இவர் மீக்காயில்' என்று கூறினார்கள்... (புகாரி 1386) 

இங்கே சுருக்கமாக கூறப்பட்டுள்ள சம்பவத்தை பின்வரும் புகாரியின் மேற்படி இலக்கத்திற்குச் சென்று முழுமையாக வாசிக்கவும்.

பொய்யின் வடிவங்களில் சில:

காணாததைக் கண்டதாகக் கூறுவது ஒரு மிகப்பெரிய பொய்:

‏صحيح البخاري ‏7043: عن ابن عمر، أن رسول الله ﷺ قال: من أفرى الفرى أن يري عينيه ما لم تر .
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: தம் கண் காணாத ஒன்றை அது கண்டதாகக் கூறுவது மாபெரும் பொய்களில் ஒன்றாகும். (புகாரி 7043)

கேட்பதையெல்லாம் உறுதி செய்யாமல் பேசுபவன் பொய்யனாக ஆகிவிடுகிறான்:
‏صحيح مسلم5: عن حفص بن عاصم قال: قال رسول الله ﷺ: كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع. 
ஒரு மனிதன் தான் செவிமடுத்த அனைத்தையும் பேசுவது பொய் சொல்வதற்குப் போதுமானது என்று நபி ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் 5)

காணாத கனவைக் கண்டதாகப் பொய் உரைப்பவருக்குரிய தண்டனை:

‏صحيح البخاري ‏7042: عن ابن عباس، عن النبي ﷺ قال: من تحلم بحلم لم يره، كلف أن يعقد بين شعيرتين، ولن يفعل، ومن استمع إلى حديث قوم وهم له كارهون - أو يفرون منه - صب في أذنه الآنك يوم القيامة، ومن صور صورة، عذب وكلف أن ينفخ فيها، وليس بنافخ.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 'ஒருவர் தாம் காணாத கனவைக் கண்டதாக திட்டமிட்டு சொன்னால், அவர் (மறுமையில்) இரண்டு வாற்கோதுமைகளை (ஒன்றுடன் ஒன்றைச் சேர்த்து) முடிச்சுப் போடும்படி நிர்ப்பந்திக்கப்படுவார். ஆனால், அவரால் ஒருபோதும் (அப்படிச்) செய்ய முடியாது. (அவருக்கு அளிக்கப்படும் வேதனையும் நிற்காது.) 'எவன் தான் செவிமடுப்பதை விரும்பாத மக்களின் அல்லது தன்னை விட்டு வெருண்டோடும் மக்களின் உரையாடைலைக் காது தாழ்த்தி (ஒட்டு)க் கேட்கிறானோ அவனது காதில் மறுமை நாளில் ஈயம் உருக்கி ஊற்றப்படும். (உயிரினத்தின்) உருவப் படத்தை வரைகிறவர் அதற்கு உயிர் கொடுக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டு வேதனை செய்யப்படுவார். ஆனால், அவரால் உயிர் கொடுக்க முடியாது'. (புகாரி 7042)

நடத்தையில் பொய்யனாக இருப்பவன் மனிதர்களிலே கெட்டவன்:

‏صحيح البخاري ‏7179: عن أبي هريرة، أنه سمع رسول الله ﷺ يقول : إن شر الناس ذو الوجهين، الذي يأتي هؤلاء بوجه، وهؤلاء بوجه.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: மனிதர்களிலேயே மிகவும் மோசமானவன் இரட்டை முகத்தான் ஆவான். அவன் இவர்களிடம் செல்லும்போது ஒரு முகத்துடனும் அவர்களிடம் செல்லும்போது இன்னொரு முகத்துடனும் செல்கிறான். (புகாரி 7179)
அதாவது ஒரு விடயத்தில் ஒருவரிடம் ஒரு பேச்சையும் வேறொருவரிடம் அதற்கு மாறான பேச்சையும் பேசுவதை மேற்படி ஹதீஸ் குறிக்கிறது.

‏صحيح البخاري ‏7178: قال أناس لابن عمر: إنا ندخل على سلطاننا، فنقول لهم خلاف ما نتكلم إذا خرجنا من عندهم. قال: كنا نعدها نفاقا.
முஹம்மத் இப்னு ஸைத் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் அறிவித்தார்: மக்கள் சிலர் (எங்கள் பாட்டனார்) அப்துல்லாஹ் இப்னு உமர் (றளியல்லாஹு அன்ஹுமா) அவர்களிடம், 'நாங்கள் எங்கள் மன்னர்களிடம் செல்கிறோம். அவர்களிடமிருந்து வெளியேறியதும் (அவர்களைப் பற்றி) நாங்கள் என்ன பேசிக் கொள்வோமோ அதற்கு நேர் மாறானதையே அவர்களுக்கு (முன்னிலையில்) நாங்கள் கூறுவோம்' என்றார்கள். அப்துல்லாஹ் இப்னு உமர் (றளியல்லாஹு அன்ஹுமா) அவர்கள், 'இப்படி (முன்னால் ஒன்று பின்னால் ஒன்று பேசுவதை (நபி ﷺ அவர்களின் காலத்தில்) நாங்கள் நயவஞ்சகமாகக் கருதிவந்தோம்' என்று பதிலளித்தார்கள். (புகாரி 7178)

உறுதி செய்யாமல் ஹதீஸ்களைப் பரப்புபவனும் பொய் கூறிய பாவத்திற்கு ஆளாகிறான்:

‏مقدمة صحيح مسلم‏ عن سمرة بن جندب والمغيرة بن شعبة عن رسول الله ﷺ: من حدث عني بحديث يرى أنه كذب، فهو أحد الكاذبين. 
யார் பொய்யென எண்ணப்படும் ஒரு ஹதீஸை என்னைத் தொட்டும் அறிவிக்கிறாரோ அவர் பொய்யர்களில் ஒருவரே என்று நபி ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் - முன்னுரை)

தனக்கில்லாத ஒன்றைத் தனக்கிருப்பதாகக் காட்டிக்கொள்பவர் பொய்யரே:

‏صحيح البخاري ‏5219: عن أسماء، أن امرأة قالت: يا رسول الله، إن لي ضرة، فهل عليّ جناح إن تشبعت من زوجي غير الذي يعطيني؟ فقال رسول الله ﷺ: المتشبع بما لم يعط كلابس ثوبي زور.
ஒரு பெண்மணி நபி  அவர்களிடம், 'அல்லாஹ்வின் தூதர் அவர்களே! எனக்குச் சக்களத்தி ஒருவர் இருக்கிறார். நான் (அவரிடம்) என் கணவர் எனக்கு வழங்காத ஒன்றை வழங்கியதாகக் காட்டிக் கொண்டால், அது குற்றமாகுமா?' என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள், 'கிடைக்கப் பெறாத ஒன்றைக் கிடைத்ததாகக் காட்டிக் கொள்கிறவர், பொய்யின் (போலியான) இரண்டு ஆடைகளை அணிந்துகொண்டவர் போலாவார்'' என்று கூறினார்கள். (புகாரி 5219)

பொய்யர்களுடனான தொடர்பு எவ்வாறு இருக்க வேண்டும்?

பொய்யர்களுடன் இருக்கக்கூடாது:

﴿یَـٰۤأَیُّهَا ٱلَّذِینَ ءَامَنُوا۟ ٱتَّقُوا۟ ٱللَّهَ وَكُونُوا۟ مَعَ ٱلصَّـٰدِقِینَ﴾ التوبة ١١٩
ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும் உண்மையாளர்களுடன் நீங்களும் இருங்கள். (அல்குர்ஆன் 9:119)
இப்னு மஸ்ஊத் (றளியல்லாஹு அன்ஹு) அவர்கள், எதார்த்தமாகவோ பரிகாசமாகவோ பொய்யுரைப்பது ஆகுமானதல்ல என்று கூறிவிட்டு, மேற்படி வசனத்தை ஓதிக் காட்டினார்கள். (தபரி, இப்னு கஸீர்)

தனக்கு உரிமை இல்லாததைப் பொய்யாக வாதிடுபவனுக்குச் சார்பாகப் பேசுவதும் குற்றமே:

﴿إِنَّاۤ أَنزَلۡنَاۤ إِلَیۡكَ ٱلۡكِتَـٰبَ بِٱلۡحَقِّ لِتَحۡكُمَ بَیۡنَ ٱلنَّاسِ بِمَاۤ أَرَىٰكَ ٱللَّهُۚ وَلَا تَكُن لِّلۡخَاۤىِٕنِینَ خَصِیمࣰا ۝١٠٥ وَٱسۡتَغۡفِرِ ٱللَّهَۖ إِنَّ ٱللَّهَ كَانَ غَفُورࣰا رَّحِیمࣰا ۝١٠٦ وَلَا تُجَـٰدِلۡ عَنِ ٱلَّذِینَ یَخۡتَانُونَ أَنفُسَهُمۡۚ إِنَّ ٱللَّهَ لَا یُحِبُّ مَن كَانَ خَوَّانًا أَثِیمࣰا ۝١٠٧ یَسۡتَخۡفُونَ مِنَ ٱلنَّاسِ وَلَا یَسۡتَخۡفُونَ مِنَ ٱللَّهِ وَهُوَ مَعَهُمۡ إِذۡ یُبَیِّتُونَ مَا لَا یَرۡضَىٰ مِنَ ٱلۡقَوۡلِۚ وَكَانَ ٱللَّهُ بِمَا یَعۡمَلُونَ مُحِیطًا ۝١٠٨ هَـٰۤأَنتُمۡ هَـٰۤؤُلَاۤءِ جَـٰدَلۡتُمۡ عَنۡهُمۡ فِی ٱلۡحَیَوٰةِ ٱلدُّنۡیَا فَمَن یُجَـٰدِلُ ٱللَّهَ عَنۡهُمۡ یَوۡمَ ٱلۡقِیَـٰمَةِ أَم مَّن یَكُونُ عَلَیۡهِمۡ وَكِیلࣰا ۝١٠٩﴾ النساء ١٠٥-١٠٩
(நபியே!) அல்லாஹ் உமக்கு அறிவித்ததைக் கொண்டு, நீர் மனிதர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக, முற்றிலும் உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நிச்சயமாக நாம் உம்மீது இறக்கியுள்ளோம்; எனவே *மோசடிக்காரர்கள் சார்பில் வாதாடுபவராக ஆகிவிட வேண்டாம்.* (4:105) (தவறுகளுக்காக) நீர் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரும், நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான். (4:106) (நபியே! பிறருக்கு தீமை செய்து அதனால்) எவர் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்களோ *அவர்களுக்காக நீர் வாதாட வேண்டாம்;* ஏனென்றால் கொடிய பாவியான மோசடி செய்து கொண்டிருப்பவரை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை. (4:107) இவர்கள் (தங்கள் மோசடிகளை) மனிதர்களிடமிருந்து மறைத்து விடுகின்றனர்; ஆனால் (அவற்றை) அல்லாஹ்விடமிருந்து மறைக்க முடியாது; ஏனெனில் அவன் பொருந்திக் கொள்ளாத சொற்களில் அவர்கள் இரவில் (சதி) ஆலோசனை செய்யும் போது அவன் அவர்களுடன் இருக்கின்றான். மேலும் அவர்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் சூழ்ந்து அறிந்தவனாக இருக்கின்றான். (4:108) (முஃமின்களே!) என்னே! *இத்தகைய மனிதர்களுக்காகவா இவ்வுலகில் நீங்கள் வாதாடுகிறீர்கள்.* நியாயத் தீர்ப்பு நாளில் அவர்களுக்காக அல்லாஹ்விடம் யார் வாதாடுவார்கள்? அல்லது (அந்நாளில்) அவர்களுக்காக பொறுப்பாளியாக ஆகுபவன் யார்? (அல்குர்ஆன் 4:105-109).

4:105 ஆவது ஆயத்தில் *மோசடிக்கார்கள்* என்று குறிப்பிடப்படுபவர்கள் யாரேனில்: தமக்கு உரிமையில்லாததை வாதிடுபவர்கள் அல்லது தம்மீது இருக்கும் கடமையை மறுப்பவர்கள். (பார்க்க: தஃப்ஸீருஸ் ஸஃதீ)

பொய்களைச் செவிமடுப்பதும் பாவமே. பொய்களை அதிகமாகச் செவிமடுப்பது முனாபிக்களின் பண்பு: 

﴿سَمَّـٰعُونَ لِلۡكَذِبِ أَكَّـٰلُونَ لِلسُّحۡتِۚ فَإِن جَاۤءُوكَ فَٱحۡكُم بَیۡنَهُمۡ أَوۡ أَعۡرِضۡ عَنۡهُمۡۖ وَإِن تُعۡرِضۡ عَنۡهُمۡ فَلَن یَضُرُّوكَ شَیۡـࣰٔاۖ وَإِنۡ حَكَمۡتَ فَٱحۡكُم بَیۡنَهُم بِٱلۡقِسۡطِۚ إِنَّ ٱللَّهَ یُحِبُّ ٱلۡمُقۡسِطِینَ﴾ المائدة 42 
(முனாஃபிக்கள்)  பொய்யையே அதிகமாக செவிமடுக்கின்றவர்கள்; – பாவமான (தடுக்கப்பட்ட)தையே அதிகமாக உண்பவர்கள், ஆகவே, அவர்கள் (தீர்ப்புத்தேடி) உம்மிடம் வந்தார்களானால், அவர்களுக்கிடையில், தீர்ப்பளிப்பீராக! அல்லது அவர்களைப் புறக்கணித்து விடுவீராக! நீர், அவர்களைப் புறக்கணித்துவிட்டாலும் அவர்கள் யாதொரு தீங்கும் ஒருபோதும் உமக்குச் செய்ய முடியாது, இன்னும், நீர் தீர்ப்பளித்தால் நீதியைக்கொண்டு அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பீராக! (ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ் நீதிமான்களை நேசிக்கின்றான். (அல்குர்ஆன் 5:42)

மார்க்கத்தில் பொய் சொல்வது பாரதூரமான குற்றச்செயலாகும்:

மார்க்கச் சட்டங்களில் அறிவின்றிப் பொய் பேசுவது மறுமை வாழ்வை அழித்துவிடும்:

﴿وَلَا تَقُولُوا۟ لِمَا تَصِفُ أَلۡسِنَتُكُمُ ٱلۡكَذِبَ هَـٰذَا حَلَـٰلࣱ وَهَـٰذَا حَرَامࣱ لِّتَفۡتَرُوا۟ عَلَى ٱللَّهِ ٱلۡكَذِبَۚ إِنَّ ٱلَّذِینَ یَفۡتَرُونَ عَلَى ٱللَّهِ ٱلۡكَذِبَ لَا یُفۡلِحُونَ﴾ [النحل ١١٦]
அல்லாஹ்வின் மீது பொய்யைக் கற்பனை செய்வதற்காக உங்கள் நாவுகள் பொய்யாக வர்ணிப்பதை, (சில பிராணிகள் பற்றி) இது ஹலால் (ஆகுமானது), இது ஹராம் (ஆகாதது) என்று கூறாதீர்கள், நிச்சயமாக அல்லாஹ்வின் மீது பொய்யைக் கற்பனை செய்கின்றவர்கள் வெற்றியடைய மாட்டார்கள். (அல்குர்ஆன் 16:116)

அல்லாஹ்வின் பெயரால் கூறப்படும் பொய்யே மிக மோசமான பொய்யாகும்:

﴿وَمَنۡ أَظۡلَمُ مِمَّنِ ٱفۡتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبًا أَوۡ قَالَ أُوحِیَ إِلَیَّ وَلَمۡ یُوحَ إِلَیۡهِ شَیۡءࣱ وَمَن قَالَ سَأُنزِلُ مِثۡلَ مَاۤ أَنزَلَ ٱللَّهُۗ وَلَوۡ تَرَىٰۤ إِذِ ٱلظَّـٰلِمُونَ فِی غَمَرَ ٰ⁠تِ ٱلۡمَوۡتِ وَٱلۡمَلَـٰۤىِٕكَةُ بَاسِطُوۤا۟ أَیۡدِیهِمۡ أَخۡرِجُوۤا۟ أَنفُسَكُمُۖ ٱلۡیَوۡمَ تُجۡزَوۡنَ عَذَابَ ٱلۡهُونِ بِمَا كُنتُمۡ تَقُولُونَ عَلَى ٱللَّهِ غَیۡرَ ٱلۡحَقِّ وَكُنتُمۡ عَنۡ ءَایَـٰتِهِۦ تَسۡتَكۡبِرُونَ﴾ [الأنعام ٩٣]
அல்லாஹ்வின் மீது பொய்யைக் கற்பனை செய்து கூறுபவனைவிட அல்லது வஹீ மூலம் அவனுக்கொன்றுமே அறிவிக்கப்படாமலிருக்க “எனக்கும் வஹீ அறிவிக்கப்பட்டது” என்று கூறுபவனை விட அல்லது “அல்லாஹ் இறக்கிய (வேதத்)தைப் போல் நானும் இறக்குவேன்” என்று கூறுபவனை விட மிகப் பெரிய அநியாயக்காரன் யார்? இன்னும், இவ்வநியாயக்காரர்கள் மரண வேதனையிலிருக்கும் சமயத்தில் நீர் அவர்களைப் பார்ப்பீராயின், மலக்குகள் தங்கள் கைகளை நீட்டி (அவர்களிடம்) உங்களுடைய உயிர்களை வெளியேற்றுங்கள், நீங்கள் உண்மையல்லாததை அல்லாஹ்வின்மீது (பொய்யாகக்) கூறிக் கொண்டிருந்ததாலும், இன்னும் அவனது வசனங்களை விட்டும் (அவற்றை ஏற்க மறுத்து) நீங்கள் பெருமையடித்துக் கொண்டிருந்ததாலும் (அதற்குப் பகரமாக) இன்றைய தினம் இழிவான வேதனையை நீங்கள் கொடுக்கப்படுகிறீர்கள் (என்று கூறுவதை நீர் காண்பீர்.) (அல்குர்ஆன் 6:93)
﴿وَمَنۡ أَظۡلَمُ مِمَّنِ ٱفۡتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبًاۚ أُو۟لَـٰۤىِٕكَ یُعۡرَضُونَ عَلَىٰ رَبِّهِمۡ وَیَقُولُ ٱلۡأَشۡهَـٰدُ هَـٰۤؤُلَاۤءِ ٱلَّذِینَ كَذَبُوا۟ عَلَىٰ رَبِّهِمۡۚ أَلَا لَعۡنَةُ ٱللَّهِ عَلَى ٱلظَّـٰلِمِینَ﴾ [هود ١٨]
மேலும், அல்லாஹ்வின்மீது பொய்யைக் கற்பனை செய்பவரைவிட மிகப் பெரிய அநியாயக்காரர் யார்? அத்தகையோர் (மறுமையில்) தங்கள் இரட்சகன் முன் நிறுத்தப்படுவர், மேலும், “இவர்கள் தாம் தங்கள் இரட்சகன் மீது பொய்யுரைத்தவர்கள்” என்று (மலக்குகளான) சாட்சிகள் கூறுவார்கள், அநியாயக்காரர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டென்பதை (நபியே! நீர்) அறிந்து கொள்வீராக! (அல்குர்ஆன் 11:18)

நபி ﷺ அவர்கள் பெயரால் பொய்கூறவது அல்லாஹ்வின் பெயரால் கூறப்படும் பொய்யை அடுத்து மிகப் பெரிய பொய்யாகும்:

‏صحيح البخاري: ‏عَنْ سَلَمَةَ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ:  مَن يَقُلْ عَلَيَّ ما لَمْ أقُلْ فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النّارِ.
நான் கூறாததை நான் கூறியதாகக் கூறுபவர் தன்னுடைய இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும்' என நபி ﷺ அவர்கள் கூறினார்கள். (புகாரி 109)

பொய் சாட்சி சொல்வது ஒரு மகா பாதகம்:

சாட்சியம் சம்பந்தமான பல வழிகாட்டல்களை குர்ஆன் வழங்கியுள்ளது. நீதிக்கே சாட்சியாக இருக்க வேண்டும்; ஆள் பார்த்து சாட்சியம் கூறுதல், சாட்சியத்தை மறைத்தல், சாட்சியம் கூற மறுத்தல், சாட்சியத்தை மாற்றிக் கூறுதல், சாட்சிகளைக் கலைத்தல், சாட்சிகளைத் துன்புறுத்தல், பொய் சாட்சி கூறுதல் போன்ற பல விடயங்கள் குர்ஆனில் பல இடங்களில் கண்டிக்கப்பட்டுள்ளன. இங்கு சில ஆயத்களை மாத்திரம் பார்ப்போம்.

﴿وَلا تَلبِسُوا الحَقَّ بِالباطِلِ وَتَكتُمُوا الحَقَّ وَأَنتُم تَعلَمونَ﴾
நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள். (அல்குர்ஆன் 2:42)

﴿...وَإِذا قُلتُم فَاعدِلوا وَلَو كانَ ذا قُربى وَبِعَهدِ اللَّهِ أَوفوا ذلِكُم وَصّاكُم بِهِ لَعَلَّكُم تَذَكَّرونَ﴾
...நீங்கள் பேசினால் (அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய) உறவினராயினும் (சரியே) நியாயமே பேசுங்கள்; நீங்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுங்கள். நீங்கள் நல்லுணர்ச்சி பெறுவதற்காகவே இவற்றை அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான். (அல்குர்ஆன் 6:152)

[النساء: ١٣٥]
விசுவாசங்கொண்டோரே! (நீங்கள் சாட்சி கூறினால், அது உங்களுக்கோ, அல்லது உங்கள் பெற்றோருக்கோ, அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருந்த போதிலும், நீதியை நிலைநிறுத்தியவர்களாக அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாக இருங்கள், (சாட்சி கூறப்படும்) அவர் பணக்காரராக இருந்தாலும் சரி, அல்லது ஏழையாக இருந்தாலும் சரி (உண்மையையே கூறுங்கள்.) அல்லாஹ் அவ்விருவருக்கும் (அவர்களைக் காப்பாற்றுவதற்கு) மிக உரியவன், இன்னும், நீங்கள் நியாயம் வழங்குவதில் (உங்கள் மனோ) இச்சையைப் பின்பற்றாதீர்கள், நீங்கள் (சாட்சியத்தை) மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறாது) புறக்கணித்தாலும், நிச்சயமாக அல்லாஹ், நீங்கள் செய்பவற்றை நன்குணர்பவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 4:135)

﴿وَالَّذينَ لا يَشهَدونَ الزّورَ وَإِذا مَرّوا بِاللَّغوِ مَرّوا كِرامًا﴾ 
மேலும் (ரஹ்மானின் அடியார்கள் யாரெனில்) அவர்கள் பொய்மைக்கு சாட்சியாக இருப்பதில்லை. (அல்குர்ஆன் 25:72)

﴿فَإِن أَمِنَ بَعضُكُم بَعضًا فَليُؤَدِّ الَّذِي اؤتُمِنَ أَمانَتَهُ وَليَتَّقِ اللَّهَ رَبَّهُ وَلا تَكتُمُوا الشَّهادَةَ وَمَن يَكتُمها فَإِنَّهُ آثِمٌ قَلبُهُ وَاللَّهُ بِما تَعمَلونَ عَليمٌ﴾ 
...உங்களில் ஒருவர் மற்றவரை நம்பி (இவ்வாறு ஒரு பொருளைக் காப்பாக வைத்தால்,) யாரிடத்தில் அமானிதம் வைக்கப்பட்டதோ அவன் அதனை ஒழுங்காகத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும்; அவன் தன் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும்; அன்றியும், *நீங்கள் சாட்சியத்தை மறைக்க வேண்டாம் - எவன் ஒருவன் அதை மறைக்கின்றானோ நிச்சயமாக அவனுடைய இருதயம் பாவத்திற்குள்ளாகிறது - இன்னும் நீங்கள் செய்வதையெல்லாம் அல்லாஹ் நன்கறிவான்.* (அல்குர்ஆன் 2:283)

ص البخاري: سمعت أنس بن مالك قال: ذكر رسول الله ﷺ الكبائر أو سئل عن الكبائر، فقال: الشرك بالله، وقتل النفس، وعقوق الوالدين. فقال: ألا أنبئكم بأكبر الكبائر؟ قال: قول الزور. أو قال: شهادة الزور. قال شعبة وأكثر ظني أنه قال: شهادة الزور.
அனஸ் (றளியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்: அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் 'பெரும்பாவங்கள் தொடர்பாகக் குறிப்பிட்டார்கள்' அல்லது 'அவர்களிடம் பெரும் பாவங்கள் பற்றிக் கேட்கப்பட்டது'. அப்போது நபி ﷺ அவர்கள், 'அல்லாஹ்வுக்கு இணைவைப்பது, கொலை செய்வது, பெற்றோரைப் புண்படுத்துவது ஆகியன (பெரும்பாவங்களாகும்)' என்று கூறிவிட்டு, 'பெரும்பாவங்களிலேயே மிகப் பெரும் பாவத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?' என்று கேட்டார்கள். 'பொய் பேசுவது' அல்லது 'பொய் சாட்சியம்' (மிகப் பெரும் பாவமாகும்)' என்று கூறினார்கள். (புகாரி 5977)

 ص البخاري: عن أبي بكرة، قال: قال النبي ﷺ: ألا أنبئكم بأكبر الكبائر. ثلاثا، قالوا: بلى يا رسول الله. قال: الإشراك بالله، وعقوق الوالدين. وجلس وكان متكئا فقال: ألا وقول الزور. قال: فما زال يكررها حتى قلنا: ليته سكت.
அபூ பக்றஹ் (றளியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்: (ஒரு முறை) 'பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?' என்று நபி ﷺ அவர்கள் (மூன்று முறை) கேட்டார்கள். மக்கள், 'ஆம், அல்லாஹ்வின் தூதர் அவர்களே! (அறிவியுங்கள்)' என்றார்கள். உடனே, நபி ﷺ அவர்கள், 'அல்லாஹ்வுக்கு இணைவைப்பதும், பெற்றோருக்குத் துன்பம் தருவதும் (தான் அவை)' என்று கூறிவிட்டு, சாய்ந்து கொண்டிருந்தவர்கள் எழுந்து அமர்ந்து, 'அறிந்து கொள்ளுங்கள்; பொய் சாட்சியமும் (மிகப் பெரும்பாவம்) தான்' என்று கூறினார்கள். அவர்கள் 'சொல்வதை நிறுத்திக் கொள்ளக் கூடாதா' என்று நாங்கள் (மனதிற்குள்) சொல்கின்ற அளவுக்கு அதை (இறுதியாகச் சொன்னதை) திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டேயிருந்தார்கள். (புகாரி 2654)

பொய்ச் சத்தியம்:

ஒரு விடயத்தை உறுதி செய்வதற்காக அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி சத்தியம் செய்ய இஸ்லாம் அனுமதிக்கின்றது. குறிப்பாக ஆதாரம் இல்லாத சந்தர்ப்பங்களில் சத்தியம் செய்து உரிமையைப் பெற்றுக்கொள்வதற்கு மார்க்கம் வழிகாட்டுகிறது. எனவே, இதில் விளையாடுதல், ஏமாற்றுதல், பொய்யுரைத்தல் போன்றவை மிகப் பெரிய குற்றங்களாகும்.

பொய்ச் சத்தியம் செய்வது நரகில் மூழ்கடிக்கும் பாவமாகும்:

‏صحيح البخاري: عن عبد الله بن عمرو، قال: جاء أعرابي إلى النبي ﷺ، فقال: يا رسول الله، ما الكبائر؟ قال: الإشراك بالله. قال: ثم ماذا؟ قال: ثم عقوق الوالدين. قال: ثم ماذا؟ قال: اليمين الغموس. قلت: وما اليمين الغموس؟ قال: الذي يقتطع مال امرئ مسلم، هو فيها كاذب.
அப்துல்லாஹ் இப்னு அம்ர் (றளியல்லாஹு அன்ஹு) கூறினார்: ஒரு கிராமவாசி நபி ﷺ அவர்களிடம் வந்து, ' அல்லாஹ்வின் தூதரே! பெரும் பாவங்கள் எவை?' என்று கேட்டார். நபி ﷺ அவர்கள், 'அல்லாஹ்விற்கு இணை கற்பிப்பது' என்றார்கள். அவர், 'பிறகு எது?' என்றார். நபி ﷺ அவர்கள், 'பிறகு தாய் தந்தையரைப் புண்படுத்துவது' என்றார்கள். அவர், 'பிறகு எது?' எனக் கேட்க நபி ﷺ அவர்கள், '(நரகில்) மூழ்கடிக்கும் (பொய்ச்) சத்தியம் செய்வது' என்றார்கள். 'மூழ்கடிக்கும் சத்தியம்' என்றால் என்ன?' என்று கேட்டேன். நபி ﷺ அவர்கள், 'பொய் சொல்லி ஒரு முஸ்லிமான மனிதரின் செல்வத்தைக் கைப்பற்றுவதற்காகச் சத்தியம் செய்வது' என்றார்கள். (புகாரி 6920)

பொய்ச் சத்தியம் செய்து எடுத்துக் கொள்ளப்படும் ஒரு சிறிய பொருள் கூட நரகத்தை கட்டாயமாக்கும்:

‏صحيح مسلم: عن أبي أمامة، أن رسول الله ﷺ قال: من اقتطع حق امرئ مسلم بيمينه فقد أوجب الله له النار، وحرم عليه الجنة، فقال له رجل: وإن كان شيئا يسيرا يا رسول الله، قال: وإن قضيبا من أراك.
அபூஉமாமஹ் (றளியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள், "யார் (பொய்ச்) சத்தியம் செய்து ஒரு முஸ்லிமின் உரிமையை அபகரித்துக்கொள்கிறாரோ அவருக்கு அல்லாஹ் நரகத்தைக் கட்டாயமாக்கி விட்டான்; சொர்க்கத்தை அவருக்குத் தடை செய்துவிட்டான்"என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், "அது ஒரு சிறிய பொருளாய் இருந்தாலுமா, அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள், "மிஸ்வாக் மரத்தின் ஒரு குச்சியாக அது இருந்தாலும் சரியே!" என்று பதிலளித்தார்கள். (முஸ்லிம் 137)

பொய்ச் சத்தியம் இழப்பையே ஏற்படுத்தும்:

‏صحيح مسلم: عن ثابت بن الضحاك، عن النبي ﷺ، قال : ... ومن ادعى دعوى كاذبة ليتكثر بها لم يزده الله إلا قلة، ومن حلف على يمين صبر فاجرة. 
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: ... யார் (தனது செல்வத்தை) அதிகமாக்கிக் கொள்வதற்காகப் பொய்வாதம் புரிகிறாரோ அவருக்கு அல்லாஹ் குறைவையே (இழப்பையே) அதிகப்படுத்துவான். யார் பிரமாண வாக்குமூலத்தின்போது பொய்ச் சத்தியம் செய்கிறாரோ (அவருக்கும் அதே நிலை தான்). (முஸ்லிம் 110)

பொய்ச் சத்தியம் மூலம் அநீதி இழைப்பவனை அல்லாஹ் ஏறெடுத்துப் பார்க்கமாட்டான்:

‏صحيح مسلم: عن وائل بن حجر قال: جاء رجل من حضرموت، ورجل من كندة إلى النبي ﷺ فقال الحضرمي: يا رسول الله، إن هذا قد غلبني على أرض لي كانت لأبي. فقال الكندي: هي أرضي في يدي أزرعها، ليس له فيها حق. فقال رسول الله ﷺ للحضرمي: ألك بينة؟ قال: لا. قال: فلك يمينه. قال: يا رسول الله، إن الرجل فاجر، لا يبالي على ما حلف عليه، وليس يتورع من شيء. فقال: ليس لك منه إلا ذلك. فانطلق ليحلف، فقال رسول الله ﷺ لما أدبر: أما لئن حلف على ماله، ليأكله ظلما ليلقين الله، وهو عنه معرض.
வாயில் இப்னு ஹுஜ்ர் (றளியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதாவது: நபி ﷺ அவர்களிடம் (யமன் நாட்டிலுள்ள) "ஹள்ர மவ்த்" எனும் இடத்தைச் சேர்ந்த மனிதர் ஒருவரும் "கிந்தஹ்" எனும் குலத்தைச் சேர்ந்த இன்னொரு மனிதரும் வந்தனர். அப்போது ஹள்ர மவ்த்தைச் சேர்ந்த அந்த மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! என் தந்தைக்குச் சொந்தமாக இருந்த  எனக்குரிய ஒரு நிலத்தை இவர் ஆக்கிரமித்துவிட்டார்" என்று கூறினார். அதற்கு கிந்தஹ் குலத்தைத் சேர்ந்த அந்த மனிதர், "அது என் கைவசமுள்ள என்னுடைய நிலம்; அதில் நான் விவசாயம் செய்துவருகிறேன்; அதில் இவருக்கு எந்த உரிமையும் கிடையாது" என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் ஹள்ர மவ்த்தைச் சேர்ந்த அந்த மனிதரிடம், "(உமது வாதத்தை நிரூபிப்பதற்கு) உம்மிடம் ஆதாரம் ஏதும் உண்டா?" என்று கேட்டார்கள். அவர் "இல்லை" என்று பதிலளித்தார். அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள், "அப்படியென்றால் இவர் சத்தியம் செய்வதுதான் உமக்கு (வழி)" என்று கூறினார்கள். உடனே ஹள்ர மவ்த்தைச் சேர்ந்த அந்த மனிதர் "அவர் (துணிந்து பொய் சொல்லும்) பொல்லாத மனிதர். அவர் தான் எதற்குச் சத்தியம் செய்கிறார் என்பதைப் பற்றி பொருட்படுத்தமாட்டார். எந்த விவகாரத்திலும் அவர் பேணுதலாக நடப்பவரில்லை" என்று சொன்னார்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள், "இதைத் தவிர உமக்கு வேறு வழி கிடையாது" என்று கூறினார்கள். உடனே (பிரதிவாதியான) அந்த (கிந்தஹ் குலத்து) மனிதர் சத்தியம் செய்வதற்காக (குறிப்பிட்ட இடத்திற்கு)ச் சென்றபோது அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள், "இவருடைய செல்வத்தை உண்பதற்காக அநியாயமாக அவர் பொய்ச் சத்தியம் செய்தால், அல்லாஹ் அவரைப் புறக்கணிக்கும் நிலையிலேயே (மறுமையில்) அவனை அவர் சந்திப்பார்" என்று கூறினார்கள். (முஸ்லிம் 139)
மற்றுமொரு அறிவிப்பில்: "அல்லாஹ் அவர் மீது கோபமடைந்த நிலையில் அவனை அவர் சந்திப்பார்" என்று வந்துள்ளது.

مسند أحمد: عن أبي موسى قال: اختصم رجلان إلى النبي ﷺ في أرض، أحدهما من أهل حضرموت، قال: فجعل يمين أحدهما، قال: فضج الآخر، وقال: إنه إذن يذهب بأرضي. فقال: إن هو اقتطعها بيمينه ظلما، كان ممن لا ينظر الله عز وجل إليه يوم القيامة، ولا يزكيه، وله عذاب أليم. قال: وورع الآخر فردها. قال ش الأرناؤوط: إسناده صحيح.
முஸ்னதில் (19514) ஒரு ஹதீஸில் பின்வருமாறு இடம் பெற்றுள்ளது: "அவர் சத்தியம் செய்து அநியாயமாக அதனை எடுத்தால், அல்லாஹ் மறுமையில் எவர்களைப்  பார்க்காமலும் தூய்மைப்படுத்தாமலும் அவர்களுக்கு நோவினை தரும் தண்டனையையும் வைத்திருக்கிறானோ அத்தகையோரில் அவர் ஆகிவிடுவார்" என்று நபி ﷺ அவர்கள் கூறினார்கள். அப்போது, மற்றவர் அச்சமடைந்து, அந்நிலத்தை திருப்பிக் கொடுத்துவிட்டார்.


மற்றவர்களை ஏமாற்றுவதற்காக சத்தியம் செய்வது பெரும் தண்டனைக்குரிய குற்றமாகும்:

‏﴿وَلا تَكونوا كَالَّتي نَقَضَت غَزلَها مِن بَعدِ قُوَّةٍ أَنكاثًا تَتَّخِذونَ أَيمانَكُم دَخَلًا بَينَكُم أَن تَكونَ أُمَّةٌ هِيَ أَربى مِن أُمَّةٍ إِنَّما يَبلوكُمُ اللَّهُ بِهِ وَلَيُبَيِّنَنَّ لَكُم يَومَ القِيامَةِ ما كُنتُم فيهِ تَختَلِفونَ﴾[النحل: ٩٢] 
நீங்கள் (சத்தியத்தை முறிக்கும் இவ்விஷயத்தில்) நூலை நூற்று நன்கு முறுக்கேற்றிய பிறகு, தானே அதைத் (தறித்து) துண்டு துண்டாக்கி விட்ட (மதிகெட்ட) ஒரு பெண்ணுக்கு ஒப்பாகி விடாதீர்கள்; ஒரு சமூகத்தார் மற்றொரு சமூகத்தாரை விட அதிகமானவர்களாக இருக்கிறார்கள் என்னும் காரணத்தால் நீங்கள் *உங்கள் சத்தியங்களை உங்களுக்கிடையில் ஏமாற்றுவதற்கு சாதனங்களாக்கிக்* கொள்ளாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் உங்களைச் சோதிப்பதெல்லாம் இதன் மூலமாகத்தான். இன்னும் நீங்கள் எ(வ் விஷயத்)தில் பேதப்பட்டுக் கொண்டிருந்தீர்களோ, (அதனை) அவன் உங்களுக்கு கியாமநாளில் நிச்சயமாகத் தெளிவாக்குவான். ‏(அல்குர்ஆன் 16:92)

‏﴿وَلا تَتَّخِذوا أَيمانَكُم دَخَلًا بَينَكُم فَتَزِلَّ قَدَمٌ بَعدَ ثُبوتِها وَتَذوقُوا السّوءَ بِما صَدَدتُم عَن سَبيلِ اللَّهِ وَلَكُم عَذابٌ عَظيمٌ۝وَلا تَشتَروا بِعَهدِ اللَّهِ ثَمَنًا قَليلًا إِنَّما عِندَ اللَّهِ هُوَ خَيرٌ لَكُم إِن كُنتُم تَعلَمونَ۝ما عِندَكُم يَنفَدُ وَما عِندَ اللَّهِ باقٍ وَلَنَجزِيَنَّ الَّذينَ صَبَروا أَجرَهُم بِأَحسَنِ ما كانوا يَعمَلونَ﴾ [النحل: ٩٤-٩٦]
நீங்கள் உங்கள் சத்தியங்களை உங்களுக்கிடையில் (சதி, துரோகம் ஆகியவற்றுக்காக) *ஏமாற்றும் சாதனமாக* ஆக்கிக் கொள்ளாதீர்கள்; (அவ்வாறு செய்வதால்) நிலை பெற்ற (உங்களுடைய) பாதம் சறுகிவிடும்; மேலும், நீங்கள் அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களைத்) தடுத்துக்கொண்டிருந்த காரணத்தால், (இம்மையில் பெருந்) துன்பத்தை அனுபவிக்க நேரிடும்; (மறுமையிலும்) உங்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு. (16:94) 

இன்னும், அல்லாஹ்விடம் செய்து கொண்ட வாக்குறுதியை அற்ப விலைக்கு நீங்கள் விற்று விடாதீர்கள்; நீங்கள் அறிந்தவர்களாக இருப்பின், அல்லாஹ்விடம் இருப்பதுதான் உங்களுக்கு மிகவும் மேலானதாக இருக்கும். (16:95) 

உங்களிடம் இருப்பவை எல்லாம் தீர்ந்துவிடும். அல்லாஹ்விடம் இருப்பதே (அழியாது என்றென்றும்) நிலைத்திருக்கும் - எவர்கள் பொறுமையுடன் (கஷ்டங்களைச்) சகித்துக் கொள்கிறார்களோ, அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம் .‏(அல்குர்ஆன் 16:96-98)

பொய்ச் சத்தியம் மிகவும் ஆபத்தானது:

‏صحيح البخاري: عن ثابت بن الضحاك عن النبي ﷺ قال: من حلف بملة غير الإسلام كاذبا متعمدا فهو كما قال، ...
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: ‏யார் வேண்டுமென்றே பொய்யான விஷயத்தில் சத்தியம் செய்யும்போது (நான் சொல்வது பொய்யென்றால்) இஸ்லாம் அல்லாத வேறு ஒரு மார்க்கத்தில் உள்ளவனாவேன் என்று கூறியவர், தான் கூறியது போல் (வேறு மார்க்கத்தில்) ஆகிவிடுவார். (புகாரி 1363)

மற்றவர்களைச் சிரிப்பூட்டுவதற்காகவும் நகைச்சுவைக்காகவும் பொய் பேசுவதும் பாவமானதே:

عن معاوية بن حيدة القشيري، عن النبي صلى الله عليه وسلم، قال: ويلٌ للذي يُحدِّثُ فيَكذِبُ، ليُضحِكَ به القَومَ، ويلٌ له، ويلٌ له.
أبو داود (٤٩٩٠)، والترمذي (٢٣١٥)، وأحمد (٢٠٠٤٦).  حسنه الألباني، وش الأرنؤوط
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: கதைக்கும் போது மக்களை சிரிப்பூட்டுவதற்காகப் பொய் சொல்கின்றவனுக்குக் கேடுதான். அவனுக்குக் கேடு தான். அவனுக்குக் கேடு தான்.
(அஹ்மத் 20046, அபூதாவூத் 4990, திர்மிதி 2315)

عن أبي أمامة الباهلي، عن النبي صلى الله عليه وسلم، قال: أنا زعيمٌ ببيتِ في رَبَضِ الجنةِ لمَن تَرَكَ المِراءَ وإن كان مُحِقًّا، وببيتِ في وسطِ الجنةِ لمَن تركَ الكذبَ وإن كان مازحًا، وببيتٍ في أعلى الجنةِ لمَن حَسُنَ خُلُقُه.
سنن أبي داود (٤٨٠٠). حسنه الألباني، وش الأرنؤوط
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: யார் தன்னிடம் நியாயமிருந்தும் வாக்கு வாதப்படுவதை விட்டுவிடுகிறாரோ அவருக்கு சுவர்க்கத்தின் ஓரங்கங்களில் ஒரு மாளிகை கிடைப்பதற்கும், *யார் விளையாட்டாகக் கூடப் பொய் பேசுவதை விட்டுவிடுகிறாரோ அவருக்கு சுவர்க்கத்தின் மத்திய பகுதியில் ஒரு மாளிகை கிடைப்பதற்கும்,* யாருடைய குணம் அழகாக இருக்கிறதோ அவருக்கு சுவர்க்கத்தின் உயர்ந்த பகுதியில் ஒரு மாளிகை கிடைப்பதற்கும் நான் பொறுப்பாளியாவேன்.
(அபூதாவூத் 4800)

வியாபாரத்தில் பொய்யுரைப்பது பெரும் குற்றமாகும்:

عن عبد الله بن أبي أوفى: أنّ رَجُلًا أقامَ سِلْعَةً وهو في السُّوقِ، فَحَلَفَ باللهِ لقَدْ أعْطى بها ما لَمْ يُعْطِ لِيُوقِعَ فِيها رَجُلًا مِنَ المُسْلِمِينَ فَنَزَلَتْ: إنّ الَّذِينَ يَشْتَرُونَ بعَهْدِ اللهِ وأَيْمانِهِمْ ثَمَنًا قَلِيلًا {آل عمران: ٧٧ الآيَةَ.. صحيح البخاري ٢٠٨٨ 
அப்துல்லாஹ் இப்னு அபீஅவ்ஃபா (றளியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் சந்தையில் விற்பனைப் பொருட்களை வைத்து, (வாங்க வரும்) ஒரு முஸ்லிமைக் கவர்(ந்து அவரிடம் தமது பொருளை விற்பனை செய்)வதற்காக தான் அந்தப் பொருளை(க் கொள்வனவு செய்தபோது) கொடுக்காத (விலை) ஒன்றைக் கொடுத்து வாங்கியதாக (பொய்யாக அல்லாஹ்வின் மீது) சத்தியம் செய்தார். அப்போது “யார் அல்லாஹ்விடத்தில் செய்த வாக்குறுதியையும் தம் சத்தியப்பிரமாணங்களையும் அற்ப விலைக்கு விற்கிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக மறுமையில் யாதொரு நற்பாக்கியமும் இல்லை” எனும் (3:77) ஆயத் இறங்கியது.  (புகாரி 4551)

عن أبي هريرة مرفوعا :ثَلاثَةٌ لا يُكَلِّمُهُمُ اللهُ يَومَ القِيامَةِ، ولا يَنْظُر إلَيْهِمْ : رَجُلٌ حَلَفَ على سِلْعَةٍ ممّا أعْطى وهو كاذِبٌ، ورَجُلٌ حَلَفَ على يَمِينٍ كاذِبَةٍ بَعْدَ العَصْرِ، لِيَقْتَطِعَ بها مالَ رَجُلٍ مُسْلِمٍ، ورَجُلٌ مَنَعَ فَضْلَ ماءٍ فيَقولُ اللهُ: اليومَ أمْنَعُكَ فَضْلِي كما مَنَعْتَ فَضْلَ ما لَمْ تَعْمَلْ يَداكَ. البخاري (٢٣٦٩)، ومسلم (١٠٨) 
நபி (ஸல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: மூவருடன் மறுமையில் அல்லாஹ் பேசவும்மாட்டான்; அவர்களைப் பார்க்கவும்மாட்டான். (அவர்களில்) ஒருவன், (தன்) பொருளுக்காக (அதைக் கொள்முதல் செய்தபோது) தான் கொடுத்த (உண்மை) விலையைவிட அதிக விலை கொடுத்(து கொள்முதல் செய்)ததாக விற்பனை செய்யும் போது (பொய்) சத்தியம் செய்தவனாவான். மற்றொருவன், அஸ்ர் தொழுகைக்குப்பின் முஸ்லிம் ஒருவருடைய செல்வத்தை அபகரித்துக்கொள்வதற்காகப் பொய்ச் சத்தியம் செய்தவனாவான். இன்னொருவன், (தன் தேவைக்கு மேல்) எஞ்சியிருந்த தண்ணீரை (மக்கள் உபயோகிக்க விடாமல்) தடுத்தவனாவான். (மறுமையில்) அவனை நோக்கி, ‘‘உன் கரங்கள் உருவாக்காத தண்ணீரின் மீதத்தை மக்கள் உபயோகிக்க விடாமல் தடுத்ததைப் போன்றே இன்று நான் எனது அருளிலிருந்து உன்னைத் தடுக்கின்றேன்” என்று அல்லாஹ் கூறுவான். (புகாரி 2369, முஸ்லிம் 108)

عن حكيم بن حزام مرفوعا:  البَيِّعانِ بالخِيارِ ما لَمْ يَتَفَرَّقا، فإنْ صَدَقا وبَيَّنا بُورِكَ لهما في بَيْعِهِما، وإنْ كَذَبا وكَتَما مُحِقَتْ بَرَكَةُ بَيْعِهِما. رواه البخاري (2079) ومسلم (1532) 
நபி (ஸல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: விற்பவரும் வாங்குபவரும் (அவ்விடத்திலிருந்து) பிரியாமலிருக்கும்வரை (வியாபாரத்தை முறித்துக்கொள்ளும்) உரிமை இருவருக்கும் உண்டு. அவ்விருவரும் வியாபாரத்தில் உண்மை பேசி, (குறைகளைத்) தெளிவுபடுத்தினால் அவர்களது வியாபாரத்தில் பறகத் செய்யப்படும். அவர்கள்  குறைகளை மறைத்துப் பொய் பேசினால் அவர்களின் வியாபாரத்தின் பறகத் அழிக்கப்பட்டுவிடும். (புகாரி 2079, முஸ்லிம் 1532)

عن أبي هريرة مرفوعا: أربعةٌ يُبغِضُهم اللهُ: البيّاعُ الحلّافُ والفقيرُ المُختالُ والشَّيخُ الزّاني والإمامُ الجائرُ.
 النسائي (٢٥٧٦)، والبزار (٨٤٥٣)، وابن حبان (٥٥٥٨). صححه الألباني، وش الأرنؤوط
நபி (ஸல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: நான்கு பேரை அல்லாஹ் வெறுக்கின்றான். )அவர்கள்:( அதிகமாக (பொய்) சத்தியம் செய்யும் வியாபாரி, பெருமையடிக்கும் ஏழை, விபச்சாரம் செய்யும் வயோதிபன், அநீதி இழைக்கும் ஆட்சியாளன்.  (நஸாஈ 2576)

பொய் பேசுவதால் விளையும் விளைவுகள்:

ஏற்கனவே நாம் பார்த்த ஆதாரங்களில் இருந்தும் வேறு பல ஆதாரங்களில் இருந்தும் நடைமுறையில் இருந்தும் பொய்யினால் விளையும் பல்வேறுபட்ட மோசமான விளைவுகளைத் தெரிந்து கொள்ளலாம். 

1- பொய்யானது தூரமாக இருக்கும் ஒன்றை நெருக்கமாகவும் நெருக்கமாக இருக்கும் ஒன்றை தூரமாகவும் சித்தரித்து நிதர்சனத்திற்கு மாற்றமான விளைவை ஏற்படுத்தும்.

2- பொய்யானது பொய்பேசுபவனின் மதிப்பையும் மரியாதையையும் இழக்கச் செய்யும்; மனிதர்களின் வெறுப்பையும் ஈட்டித்தரும்.

3- பொய்யானது பொய் பேசுபவரை இழிவுக்குள்ளாக்கும்.

4- பொய்யானது பொய் பேசுபவனின் சிந்தனைத் திறனை, அதாவது உள்ளதை உள்ளபடி மனதில் பதிவு செய்துகொள்ளும் ஆற்றலையும் மற்றவர்களுக்குத் தகவல்களைச் சரியான முறையில் சித்தரித்துப்  புரியவைக்கும் ஆற்றலையும் பாதிக்கின்றது. இது பொய்யிற்கு இவ்வுலகிலேயே வழங்கப்படும் ஒருவகைத் தண்டனை என்று சொல்லலாம்.

5- பொய்யானது பாவங்கள் செய்வதற்கும், சத்தியத்தை விட்டும் தூரமாவதற்கும், அசத்தியத்தை நியாயப்படுத்துவதற்கும் இட்டுச் செல்லும். 

6- பொய்யனிடத்தில் மற்றவர்களின் உள்ளங்கள் மன அமைதியடையமாட்டா, அவை அவனை விட்டும் வெறுத்து ஒதுங்கிவிடும்.

7- பொய்யுரைப்பவன் ஒருபோதும் வெற்றி அடையமாட்டான்.

8- பொய்யானது நயவஞ்சகத்தின் அடையாளங்களில் ஒன்றாகும். மேலும், நயவஞ்சகத் தன்மை ஏற்படுவது பொய் பேசுவதின்  விளைவுகளில் ஒன்றாகும்.

9- பொய் பேசுபவனுக்கு நரகம் உண்டு என்று அல்லாஹ் எச்சரிக்கை விடுத்துள்ளான்.

10- பொய்யானது பொய்பேசுபவனின் உள்ளத்தில் தடுமாற்றத்தையும் சந்தேகத்தையும் தான் மறைக்கும் எதார்த்தம் வெளிப்பட்டு விடுமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தும்.

11- பொய்யானது உள்ளத்தை நோய்வாய்ப் படுத்திவிடும்; இதனால் பொய்பேசுபவன் மன அழுத்தத்திற்கு உள்ளாவான்.

12- பொய்யானது பறகத் எனும் வளத்தை அழித்துவிடும் வாழ்வாதாரத்தைக் குறைத்துவிடும். 

13- பொய்யுரைப்பவன் அல்லாஹ்வின் ஹிதாயத்தையும் (வழிகாட்டலையும்), அனுகூலத்தையும் இழக்க நேரிடும்.
{நிச்சயமாக அல்லாஹ் வரம்புமீறுகின்றவனாகவும் பெரும் பொய்யனாகவும் இருப்பவனை நேர்வழியில் செலுத்தமாட்டான்.} [அல்குர்ஆன் 40:28]

14- வியாபாரத்தில் பொய் சத்தியம் செய்பவன், மற்றவர்களின் பொருளை / சொத்தை அநீதியான முறையில் பெற்றுக் கொள்வதற்காக பொய் சத்தியம் செய்பவன் போன்றவர்களை அல்லாஹ் மறுமையில் பார்க்க மாட்டான், அவர்களுடன் பேசவும் மாட்டான்.

15- பொய்யானது அல்லாஹ்வின் கோபத்தை ஈட்டித்தரும்.

-ஸுன்னஹ் அகாடமி

أحدث أقدم