ஷஃபான் மாதம் நடுப்பகுதிக்கு பிறகு நோன்பு நோற்பது தடையா?


«إذا انتصف شعبان فلا تصوموا»  أبو داود (٢٣٣٧) واللفظ له، والترمذي (٧٣٨)، وابن ماجه (١٦٥١)

"ஷஃபான் மாதம் நடுப்பகுதியை அடைந்து விட்டால் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள்" என்ற ஒரு ஹதீஸ் அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜஹ் போன்ற கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஹதீஸ் பலவீனமான  ஒரு ஹதீஸ்  என்பதை ஆரம்பகால ஹதீஸ் துறை வல்லுனர்களான அபூ  சுர்அஹ்   அர்-றாஸி, இப்னு மஈன், அஹ்மத் இப்னு ஹன்பல், அப்துர் றஹ்மான் இப்னு மஹ்தி போன்றவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். 

இதற்குக் காரணம் இதன் அறிவிப்பாளர்கள் வரிசையில் இடம் பெறும் அறிவிப்பாளரான அலா இப்னு அப்திர் றஹ்மான் என்பவர் தன் தந்தையிடம் இருந்து இதனை அறிவிக்கின்றார். வேறு எவரும் அறிவிக்காமல் அவர் மாத்திரம் தனித்து அறிவிக்கும் அறிவிப்பை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு அவர் பலமானவர் இல்லை என்பது அந்த அறிஞர்களின் நிலைப்பாடாகும். 

அது மாத்திரமல்லாமல் வேறு பலமான  ஹதீஸ்கள் அதற்கு மாற்றமாக இடம்பெற்றுள்ளன. அதாவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஷஃபானின் பெரும்பாலான பகுதியில் நோன்பு நோற்றுள்ளார்கள். அதே போன்று றமளானுக்கு முன்னால் ஓரிரு நாட்களுக்கு  நோன்பு நோற்பதையும் தடை செய்துள்ளார்கள். அதன் அடிப்படையில் அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னுள்ள நாட்களில் நோன்பு நோற்பது தடை இல்லை என்று புரிந்து கொள்ளலாம்.

ஆனாலும் இந்த ஹதீஸ் பலமானது என்று சில அறிஞர்கள் கருதுகிறார்கள். அவர்கள் அடுத்த ஹதீஸ்களுடன் முரண்படாமல் இதனை விளங்கலாம் என்றும் கூறுகிறார்கள். 

அவ்வாறு இதனை சரி காணக்கூடிய அறிஞர்களுள் திர்மிதி, இப்னு ஹிப்பான் போன்றவர்கள் இருக்கிறார்கள். ஷாஃபிஈ மத்ஹபினரும் இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு ஷஃபான் மாதத்தின் 15க்குப் பிறகு நோன்பை ஆரம்பிப்பது கூடாது என்று கூறுகின்றனர். 

அதாவது இந்த ஹதீஸ் ஆதாரபூர்வமானது என்று கருதக்கூடியவர்கள், ஒருவர் ஷஃபான் மாதத்தின் நடுப்பகுதிக்கு முன்னர் அம்மாதத்தில் சில நோன்புகளையேனும் நோற்றிருந்தால் ஷஃபான் மாதத்தின் நடுப்பகுதிக்குப் பிறகு அவர் நோன்பு பிடிப்பதில் பிரச்சனை இல்லை; ஆனால் ஷஃபான் மாதத்தின் நடு பகுதிக்குப் பிறகு நோன்பை ஆரம்பிக்கக் கூடாது என்று விளக்கம் கூறியுள்ளனர். 

ஆனாலும் அதிகமான அறிஞர்களின் நிலைப்பாடு பலமானதாகத் தெரிகிறது. ஏனெனில், இதனைச் சரி காணும் அறிஞர்களை விட பலவீனமானது என்று கூறும் அறிஞர்கள் ஹதீஸ் துறையில் பெரியவர்களாகவும் மிக அறிவுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். 

இதனை இமாம் இப்னு றஜப் அவர்கள் தன்னுடைய 'லதாஇபுல் மஆரிப்' (பக்136) எனும் நூலில் சுட்டிக்காட்டியுள்ளார்கள். எனவே இந்த ஹதீஸ் பலவீனமானது என்பதே பலமான கருத்தாகும்.

அதன் அடிப்படையில் ஒருவர் ஷஃபான் மாதத்தின் நடுப்பகுதிக்குப் பிறகு ஸுன்னத்தான நோன்புகளை நோற்க ஆரம்பித்தாலும் தவறில்லை. 

ஆனால் றமளானுக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னால் அவர் நோன்பை நிறுத்தி விட வேண்டும்.

திங்கள், வியாழன் நாட்களில் நோன்பு நோற்கும் வழமையுள்ளவர்கள் அம்மாததிலும் 15க்குப் பிறகு திங்கள், வியாழன் நாட்களில்  நோன்பு நோற்பது அல்லது கடமையான நோன்புகளை நோற்பது பிரச்சனை இல்லை என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. 


ஷஃபான் மாதத்தின் கடைசி இரு நாட்களில் நோன்பு நோற்கக் கூடாது

عن أبي هريرة رضي الله عنه مرفوعا: «لا تَقَدَّمُوا رَمَضانَ بصَوْمِ يَومٍ ولا يَومَيْنِ إلَّا رَجُلٌ كانَ يَصُومُ صَوْمًا، فَلْيَصُمْهُ» البخاري ١٩١٤، ومسلم ١٠٨٢، واللفظ له. 

நபி ஸல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "றமளானுக்கு முன்னால் ஓரிரு நாட்கள்  நோன்பு நோற்று முந்திக் கொள்ளாதீர்கள். ஆனால் ஒரு மனிதர் நோற்று வரும் நோன்பை அவர் நோற்றுக்கொள்ளட்டும்". (புகாரி 1914, முஸ்லிம் 1082)

றமளான் மாதம் ஆரம்பிப்பதற்கு முன்னுள்ள இரு நாட்களில் நோன்பு நோற்பது இந்த ஹதீஸில் தடை செய்யப்பட்டுள்ளது.

றமளான் ஆரம்பிப்பதற்கு மூன்று நாட்கள் இருந்தால் அந்நாளில் அல்லது அதைவிட அதிகமான நாட்கள் இருந்தால்  அந்நாட்களில் நோன்பு நோற்பது அனுமதிக்கப்பட்டது என்பதை இந்த ஹதீஸிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

திங்கள் அல்லது வியாழன் ஆகிய நாட்களில் நோன்பு நோற்கும் அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு நோற்கும் வழமையுள்ளோர் போன்றோர், அவர்கள் நோன்பு நோற்று வரும் அந்நாட்கள் றமளானுக்கு முன்னுள்ள நாட்களாக அமைந்தால்   அந்நாட்களில் நோன்பு நோற்பது அவர்களுக்கு அனுமதிக்கப்படும் என்பதையும் இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

அதேபோன்று ஒருவர் மாதத்தின் மூன்று நாட்கள் நோன்பு பிடிக்கும் வழமையுள்ளவராக இருந்தால் அவரால் ஷஃபான் மாதத்தின் இறுதியில் 27, 28, 29 ஆகிய நாட்களில்தான் நோன்பு நோற்பதற்கு வசதி ஏற்பட்டது என்றால் அவருக்கு அந்த நாட்களில் நோன்பு நோற்றுக் கொள்ளமுடியும். அதேபோன்றுதான் கடந்த றமளான் மாதத்தில் விடுபட்ட நோன்புகளை களா செய்து கொள்வதற்கும் முடியும். நேர்ச்சை, கப்பாறஹ் போன்ற கடமையான நோன்புகளை நோற்றுக் கொள்வதற்கும் அனுமதியுண்டு. ஏனெனில் இத்தகைய நோன்புகள் றமளானை அடைந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காக நோற்கப்படுபவையல்ல. இவை வேறு காரணங்களுக்காக நோக்கப்படுகின்றன.

கட்டாயமான நோன்பு, ஹஜ் போன்ற வணக்க வழிபாடுகள் சந்திரமாதத்தை அடிப்படையாகக் கொண்டு நிறைவேற்றப்படுகின்றன. பிறை பார்த்ததின் அடிப்படையிலேயே ஒரு மாதத்தின் ஆரம்பமும் முடிவும் அமைகின்றது. இந்த அடிப்படையை மீறி, மாதம் ஆரம்பிப்பதற்கு முன்னர் பேணுதல் கருதி நாம் றமளானுடைய மாதத்தின் நோன்பை ஆரம்பிக்க முடியாது. மார்க்கம் வரையறுத்திருக்கக்கூடிய அடையாளத்தைக் கொண்டுதான் மாதத்தை ஆரம்பிக்க வேண்டும். அதை மீறி பேணுதல் என்ற அடிப்படையில் றமளானை சரியாக அடைந்து கொள்வதற்காக நாம் முந்திக் கொள்வது வரம்பு மீறலான ஒரு செயலாகும்.

எனவே வானம் தெளிவாக இருந்தாலும் வானத்தில் மேகமூட்டம் இருந்தாலும் றமளானுக்கு முன்னுள்ள இரு நாட்களிலும் றமளானை அடைந்து கொள்ளும் நோக்கில் நோன்பு நோற்க முடியாது.

றமளான் மாதத்தில் அடங்காத ஒரு நாள் அந்த மாதத்திற்குள் சேர்த்துக்கொள்ளப்படக் கூடாது. இஸ்லாத்திற்கு முன்வாழ்ந்தவர்கள் மாதங்களில் மாற்றங்கள் செய்து, தங்களுடைய மனோ இச்சைப் பிரகாரமும் சுய கருத்துக்களின் அடிப்படையிலும் கூடுதல், குறைவு செய்தார்கள். முஸ்லிம்களாகிய நாம் இஸ்லாத்துடைய வரையறைகளைப் பேணுவது அவசியம் முன்சென்றவர்களைப் போன்று நடந்துகொள்ளக்கூடாது

மேற்படி ஹதீஸின் பிரகாரம் றமளான் மாதத்தின் ஆரம்பம்  தெளிவானதாக விளங்கவேண்டும்.  சிறப்புமிக்க இம்மாதத்தின் நோன்பு தனித்துவமான அடையாளமாக இருக்கவேண்டும்.

கட்டாயமான வணக்கங்களுக்கும் உபரியான வணக்கங்களுக்கும் இடையில் இஸ்லாம் வித்தியாசப்படுத்தச் சொல்கிறது. அதன் அடிப்படையில் பர்ளான தொழுகையோடு சேர்த்து ஸுன்னத்தான தொழுகையைத் தொழவேண்டாம் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழிகாட்டியிருக்கிறார்கள். இரு தொழுகைகளுக்கிடையில் பேசுவதன் மூலம் அல்லது இடம் மாறுவதன் மூலம் பிரிக்கப்பட வேண்டும். அந்த அடிப்படையே இந்த ஹதீஸில் வந்துள்ள தடைக்குக் காரணமாக இருக்கலாம். அதாவது ஸுன்னத்தான நோன்புக்கும் பர்ளான நோன்பிற்கும் இடையில் ஒரு இடைவெளி, பிரிவு இருக்கவேண்டும்.

இப்னு உஸைமீன் றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: "இந்த ஹதீஸில் வந்திருக்கும் தடை மக்றூஹுக்குரியதா? ஹறாமுக்குரியதா? என்று அறிஞர்கள் கருத்து வேறுபட்டுள்ளனர். இது ஹறாமான தடை என்பதே சரியான கருத்தாகும். அவற்றிலும் விசேடமாக ஷக்குடைய நாளில் நோன்பு நோற்பதற்கான தடை". (பார்க்க: 2023/03/20: https://binothaimeen.net/content/10774)

அல்பானி றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: "றமளானுக்கு முன் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் நோன்பு நோற்கக் கூடாது என்ற தடையானது ஒரு இபாதத் - வணக்க வழிபாடு எவ்வாறு கடமையாக்கப்பட்டு இருக்கிறதோ அவ்வாறே கூடுதல், குறைவின்றிப் பேணப்படுவது கட்டாயம் என்பதை உறுதி செய்கிறது. அல்லாஹ் தனது மூஃமினான அடியார்கள் மீது கடமையாக்கியிருப்பது றமளான் மாதத்தில் நோன்பு நோற்பதைத்தான். அது சில தடவைகளில் 30 நாட்களாகவும் இன்னும் சில தடவைகளில் 29 நாட்களாகவும் இருக்கும். எனவே அதற்கு முன்னுள்ள நாளில் அல்லது இரு நாட்களில் நோன்பு நோற்கப்பது கூடாது. அவ்வாறு நோன்பு நோற்றால் காலப்போக்கில் முஸ்லிம்களிடம் குர்ஆன், ஸுன்னஹ் பற்றிய அறிவு மங்கிப்போகும் பொழுது றமளான் 30 நாளை விட அதிகமாகிவிடும். ...இவ்வாறுதான் ஒவ்வொரு இபாதத்திலும் அதற்கு முன்னாலோ பின்னாலோ அதில் இல்லாத எந்த ஒன்றும் சேர்க்கப்படக்கூடாது. றமளான் நோன்பாகிய இந்த பர்ளான நோன்பின் தனித்துவம் உறுதி செய்யப்படும் விதத்தில் அதற்கு முன்னாலும் பின்னாலும் நோன்பு நோற்கப்படாமல், அது பிரிக்கப்பட்டு, தனியாக வித்தியாசப்படுத்தப்பட வேண்டும். அதற்குக் காரணம் இது மாத்திரம் தான் றமளானுடைய பர்ள்; அதற்கு முன்னாலோ பின்னாலோ உள்ள எதுவும் அதில் சேர்ந்தவையல்ல என்று உறுதியாக வேண்டும்". (பார்க்க: 2023/03/20: https://www.alathar.net/home/esound/index.php?op=codevi&coid=156196)

இஸ்லாத்தின் அர்கான்களான - தூண்களான தொழுகை, ஸகாத், நோன்பு, ஹஜ் ஆகிய அனைத்து கட்டாயக் கடமைகளும் காலத்தால் வரையறுக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் றமளான் மாதத்தில் நோற்கப்படும் பர்ளான நோன்பும் காலத்தால் வரையறுக்கப்பட்டுள்ளது. பேணுதலுக்காக குறிக்கப்பட்ட நாட்களை விட மேலதிகமாக வணக்கத்தில் ஈடுபட முயற்சிப்பது முன்சென்ற சமூகங்கள் வழிகெட்டதைப்போன்று அந்த வணக்கத்திற்குரிய தனித்துவம் இழக்கப்பட்டு, அதில் மாற்றங்கள் வருவதற்குக் காரணமாக அமைந்து விடும். இதனால் மனிதர்கள் அறிவின்றி மார்க்கத்தில் இல்லாததை மார்க்கமாகக் கருதும் நிலை ஏற்பட்டுவிடும். (பார்க்க: شرح بلوغ المرام لعطية سالم)

-ஸுன்னஹ் அகாடமி
أحدث أقدم