மாபெரும் அருளாளன் அன்புடையோன் அல்லாஹ்வின் பெயரால்...
ஸவ்ம் (நோன்பு) என்பதன் அர்த்தம்:
மொழி வழக்கில்: தடுத்துக்கொள்ளல் / தவிர்த்துக்கொள்ளல் என்பதாகும்.
மார்க்க வழக்கில்: ஃபஜ்ர் சாதிக் (எனும் உண்மையான பஜ்ர்) ஆரம்பிக்கும் நேரத்திலிருந்து சூரியன் மறையும் வரை உண்பதையும் குடிப்பதையும் ஏனைய நோன்பை முறிக்கின்ற அனைத்தையும் தவிர்த்துக் கொள்வதன் மூலம் அல்லாஹ்வை வணங்குதல்.
நோன்பின் வகைகள்:
1- பர்ழான (கட்டாயமான) நோன்பு.
உ-ம்: ரமழான் நோன்பு, கப்பாரஹ் (குற்றப்பரிகார) நோன்புகள், நேர்ச்சை நோன்பு.
2- நஃபிலான (உபரியான) நோன்புகள்.
உ-ம்: அறஃபஹ் நோன்பு, ஆஷூராஃ நோன்பு, திங்கள், வியாழன் நோன்புகள்.
நோன்பின் ருகுன்கள்:
(அதில் அத்தியவசியமாகப் பேணவேண்டியவை / அவையின்றி நோன்பு செல்லுபடியற்றது)
1. நிய்யத் (எண்ணம்)
2. நோன்பை முறிக்கும் விடயங்களைத் தவிர்த்தல்
நோன்பின் நிய்யத்களின் வகைகள்:
1- பர்ழான நோன்பின் நிய்யத்:
- பர்ழான நோன்பிற்கு கட்டாயமாக இரவில், அதாவது பஜ்ருக்கு முன்னரே நிய்யத் வைக்கப்பட வேண்டும். நோன்பு பிடிக்கப் போகிறேன் என்ற எண்ணம் பஜ்ருக்கு முன்னர் வர வேண்டும்.
- ரமழான் மாதத்தின் ஆரம்பத்தில் நிய்யத் வைத்தால் (அதாவது இந்த மாதம் நோன்பு பிடிக்கப் போகிறேன் என்ற எண்ணம் ஏற்பட்டால்) போதுமானது.
- நிய்யத் வர வேண்டிய இடம் உள்ளமே; அதனை நாவினால் மொழிவது பித்அத் - மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டதாகும்.
2- நஃபிலான (உபரியான) நோன்பின் நிய்யத்:
- நோன்பை முறிக்கும் எந்த ஒரு காரியத்தையும் பஜ்ரில் இருந்து செய்யாமலிருந்தால் நாளின் எந்த நேரத்திலும் நஃபில் நோன்புக்குரிய நிய்யத்தை வைத்து நோன்பை தொடர முடியும்.
- ஆனால் நிய்யத் வைத்த நேரத்திலிருந்து தான் கூலி-நன்மை கணக்கிடப்படுமா அல்லது முழு நாளுக்கும் கூலி கிடைக்குமா என்று அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது.
ரமழான் நோன்பு கட்டாயமாவதற்கான நிபந்தனைகள்:
1- முஸ்லிமாக இருத்தல்.
2- புத்தி சுவாதீனம் இருத்தல்.
3- பருவ வயதை அடைந்திருத்தல்.
-ஆயினும் 'தம்யீஸ்' எனும் பிரித்தறியும் பருவத்தை அடையும் சிறுவர்களும் நோன்பு பிடிக்க ஆர்வமூட்டப்படுவர். நோன்பு அவர்களுக்குக் கட்டாயம் இல்லாவிட்டாலும் அவர்களது பொறுப்பாளிகள் அவர்களுக்கு ஏவுவார்கள்.-
4- ஊரில் தங்கி இருத்தல்.
-அதாவது பிரயாணத்தில் இருப்பவர் நோன்பு நோற்பது கட்டாயமில்லை. பிரயாணம் முடிந்த பின்னர் விட்ட நோன்புகளை நோற்றுக் கொள்ளவேண்டும். எனினும் சிரமம் இல்லாவிடின் பிரயாணி நோன்பு நோற்றுக் கொள்வதே ஏற்றமானது. காரணம்
1. நபியவர்கள் அவ்வாறு செய்து இருக்கிறார்கள்;
2. இதனால் விரைவாக பொறுப்பு நிறைவேற்றப்பட்டுவிடுகிறது;
3. ஏவல், விலக்கல்களுக்குட்பட்ட மனிதனுக்கு இதுவே இலகுவாகவும் அமைந்திருக்கிறது;
4. மேலும், இதன் மூலம் இம்மாதத்தின் சிறப்பையும் அடைந்து கொள்ளமுடியும்.
5- ஆரோக்கியமாக இருத்தல்.
6- மாதவிடாய் மற்றும் குழந்தை பெற்ற பிறகு ஏற்படும் இரத்தப்போக்கிலிருந்து விடுபட்டிருத்தல்.
ரமழான் நோன்பு காலத்தில் நோய்வாய்ப்படுதல்:
இது இரு வகைப்படும்:
1. குணமடைவதை எதிர்பார்க்க முடியாத நோய்.
நோன்பு நோற்க முடியாத முதியவரும் இதில் இணைக்கப்படுவர்.
இவ்வாறானவர்களுக்கு நோன்பு கட்டாயமில்லை.
எனினும் ஒரு நோன்பை விடுவதற்குப் பகரமாக ஒரு ஏழைக்கு உணவளித்தல் என்ற அடிப்படையில் உணவளிக்க வேண்டும்.
விட்ட நோன்புகளின் எண்ணிக்கையின் அளவுக்கு ஏழைகளை அழைத்து இரவு அல்லது பகல் உணவளிக்க முடியும்; அதாவது ஒரு மனிதன் தான் வாழும் சமூகத்தில் சாதாரணமாக உண்ணும் அளவு, நடுத்தரமான சமைத்த உணவை கொடுக்க வேண்டும், அல்லது விட்ட ஒரு நோன்பிற்கு ஒரு "முத்" பிரதான உலர் உணவுப் பொருள் என்ற அடிப்படையில் அந்நாட்களின் எண்ணிக்கைக்கேற்ப ஏழைகளுக்கு உணவைப் பகிர்ந்தளிக்கவும் முடியும். எனினும் அதனுடன் சேர்த்து குழம்பு செய்துகொள்வதற்கான இறைச்சி அல்லது வெண்ணையை கொடுப்பது நல்லது.
நபிகளார் காலத்து ஒரு "முத்" என்பது எமது காலத்து நிறுத்தல் அளவையில்: நல்ல கோதுமையில் 510 கிராமாகும். அல்லது பேணுதல் அடிப்படையில் 600 கிராம் அரிசி கொடுத்தால் அதனுள் ஒரு "முத்" அடங்குவது உறுதி.
2. குணமடையும் என்று எதிர்பார்க்கப்படும் நோயாகவும் இந்நோயுடன் நோன்பு நோற்பது சிரமமாகவும் இருத்தல்.
இந்த சட்டத்தில் மாதவிடாய் ஏற்பட்ட பெண், குழந்தை பெற்றதால் ஏற்படும் இரத்தப் போக்குள்ள பெண், நோன்பு நோற்பதால் பாதிப்பு ஏற்படும் என்று அஞ்சும் பாலூட்டும் தாய் அல்லது கர்ப்பிணி ஆகியோரும் இணைத்துக் கொள்ளப்படுவர்.
இந்நிலையில் உள்ளவர்கள் குணமடைந்த பிறகு விட்ட நோன்புகளின் எண்ணிக்கை அளவுக்கு வேறு நாட்களில் நோன்பு நோற்று கழா செய்துகொள்ள வேண்டும்.
அவர் குணமடைவதற்கு முன்னரே மரணித்துவிட்டால் கடமை நீங்கிவிடும்.
குறிப்பு: கர்ப்பிணி அல்லது பாலூட்டும் தாய் தன் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் என்பதற்காக நோன்பை விட்டதற்கு கழா நோன்பு நோற்காமல் உணவளித்தால் மாத்திரம் போதுமானது என்ற கருத்தை சில அறிஞர்கள் கூறியுள்ளனர். இதற்குக் காரணம் இப்னு அப்பாஸ், இப்னு உமர் -றளியல்லாஹு அன்ஹுமா- ஆகிய இரு நபித்தோழர்களும் இவ்வாறு தீர்ப்பு வழங்கியுள்ளதாக வந்துள்ளமையாகும். மற்ற அறிஞர்களோ, இது அவர்களின் ஆய்வின் அடிப்படையில் எடுக்கப்பட்ட தனிப்பட்ட கருத்து என்று கருதுகின்றனர்.
சில அறிஞர்கள், கர்ப்பிணி அல்லது பாலூட்டும் தாய் தன் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் என்பதற்காக நோன்பை விட்டால் கழா நோன்பு நோற்பதுடன் உணவளிக்கவும் வேண்டும் என்று கூறியுள்ளார்கள். ஷாஃபிஈ மத்ஹபின் கருத்தும் இதுவாகும்.
மாதம் ஆரம்பிப்பதை எவ்வாறு உறுதி செய்து கொள்வது?
ரமலான் மாதத்தின் ஆரம்பம் இரு வகையில் உறுதிசெய்யப்படும்:
1- பிறை காணுதல்.
2- பிறை தென்படாவிட்டால் ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாகப் பூர்த்தி செய்தல்.
நோன்பை முறிக்கும் காரியங்கள்:
1- தெரிந்துகொண்டே உண்ணுதல் அல்லது பருகுதல்.
எவரும் மறதியாக உண்டால் அல்லது பருகினால் அவருடைய நோன்பு முறியாது.
2- உடலுறவு கொள்ளல்.
நோன்பு நோற்பது கட்டாயமான நிலையில் உள்ளவரால் இது நடந்தால், அவர் கடுமையான குற்றப்பரிகாரம் செய்ய வேண்டும்.
அதாவது ஒரு அடிமையை உரிமையிட வேண்டும்;
அடிமை கிடைக்காவிட்டால் இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக நோன்பு நோற்க வேண்டும்;
அதுவும் முடியாவிட்டால் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்.
3- ஹைழ், நிஃபாஸ்.
அதாவது மாதவிடாய் மற்றும் குழந்தை பெற்ற பின் ஏற்படும் இரத்தப்போக்கு.
4- உண்ணுதல், பருகுதலுக்கு சமமானவை.
உ-ம்: உணவுக்குப் பகரமாக கொடுக்கப்படும் இன்ஜக்ஷன் போன்றது. மருந்துக்காக ஏற்றப்படும் ஏனைய இன்ஜக்ஷன்கள் நோன்பை முறிக்காது.
5- நேரடியாக இந்திரியத்தை வெளிப்படுத்தல்.
பொதுவான ஆதாரங்களின் அடிப்படையில் இதுவும் நோன்பை முறிக்கும் என்பதே பெரும்பாலான அறிஞர்களின் கருத்தாகும்.
6- வேண்டுமென்றே வாந்தி எடுத்தல்.
இது மிகப் பெரும்பாலான அறிஞர்களின் கருத்து. இது சம்பந்தமாக நபி ﷺ அவர்கள் கூறியதாக வரும் ஹதீஸ் பலவீனமானது என்று பல அறிஞர்கள் கூறியிருக்கிறார்கள். எனினும், இப்னு உமர் -றளியல்லாஹு அன்ஹுமா- அவர்கள் இவ்வாறு கூறியதாக வரும் செய்தி பலமானதாக இருக்கிறது. வேண்டுமென்றே வாந்தி எடுப்பது நோன்பை முறிக்கும் என்பதை ஆய்வு செய்து கூற முடியாது; வஹ்யின் மூலமாகத்தான் கூறமுடியும் என்பதனால், இப்னு உமர் -றளியல்லாஹு அன்ஹுமா- அவர்கள் இந்தக் கருத்தை நபி ﷺ அவர்களிடமிருந்து தான் எடுத்திருக்க முடியும் என்று கருத்தப்படுகிறது.
7- பரிசோதனை போன்றதற்காக குறைவான அளவில் இரத்தத்தை வெளியேற்றுவது நோன்பை முறிக்காது. ஹிஜாமஹ் எனும் இரத்தம் குத்தியெடுத்தல் சிகிச்சை முறை நோன்பை முறிக்கின்றது என சில அறிஞர்கள் கருதுகின்றனர். ஹிஜாமஹ் நோன்பை முறிக்காது என்பது அதிகமான அறிஞர்களின் கருத்தாகும். இந்தக் கருத்தே ஹதீஸ்களை ஆய்வு செய்து பார்க்கின்ற போது பலமாகத் தெரிகின்றது. பல நபித்தோழர்களின் நிலைப்பாடுகளும் இதனை வலுப்படுத்துகின்றன. எனினும் தனக்கு ஹிஜாமஹ் செய்வதால் பலவீனம் ஏற்பட்டு நோன்பை விடும் நிலை ஏற்படும் என்று அச்சப்படுபவர் அதனை செய்யக்கூடாது. நோன்பு நோற்ற நிலையில் ஹிஜாமஹ் செய்யக்கூடாது என்ற அர்த்தத்தை தரும் ஹதீஸ் இந்த நிலைக்கே பொருந்துகிறது. எப்படியிருந்ததாலும் பொதுவாக நோன்பு நோற்ற நிலையில் ஹிஜாமஹ்வை தவிர்ப்பது சிறந்தது.
குறிப்பு: அறியாமை, மறதி, நிர்ப்பந்தம் ஆகிய காரணங்களினால் நோன்பை முறிக்கும் காரியங்களை செய்பவர்களின் நோன்பு முறியாது.
நோன்பு காலத்தில் ஆர்வமூட்டப்பட்ட ஸுன்னத்கள்:
1- ஸஹர் செய்தல்.
2- ஸஹர் உணவை இறுதி நேரம் வரைப் பிற்படுத்தல்.
3- நோன்பு துறப்பதை அவசரப்படுத்தல்.
4- பேரீச்சம் பழங்களைக் கொண்டு நோன்பு துறத்தல். அவை ஒற்றைப்படையாக இருத்தல். அவை கிடைக்காவிட்டால் தண்ணீர் மிடர்களைக் கொண்டு நோன்பை முடித்தல். எதுவும் கிடைக்காவிட்டால் உள்ளத்தினால் நோன்பு துறப்பதாக எண்ணம் கொள்ளுல்.
5- நோன்பு நோற்றதிலிருந்து நோன்பு துறக்கும் வரையுள்ள நேரத்தில் துஆ கேட்டல்.
6- அதிகமாக தர்மம் செய்தல்.
7- இரவுத் தொழுகையில் கூடுதல் ஈடுபாடு காட்டுதல்.
8- குர்ஆனை ஓதுதல்.
9- உம்றஹ் செய்தல்.
10- எம்மைத் திட்டியவருடன் சண்டை போடாமல் "நான் நோன்பாளி" என்று கூறி விலகிச் செல்லல்.
11- லைலதுல் கத்ர் இரவை அடைந்து கொள்வதற்கு முயற்சி செய்தல்.
12- கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாப் இருத்தல்.
நோன்பு நோற்றிருக்கும் போது வெறுக்கப்பட்டவை / விரும்பப்படாதவை:
1- உளுவின் போது மிகையாக / ஆழமாக வாய் கொப்பளிப்பதும் நாசிக்குத் தண்ணீர் செலுத்துவதும்.
2- தேவையில்லாமல் உணவை சுவைபார்ப்பது.
நோன்பு நோற்றிருக்கும் போது அனுமதிக்கப்பட்டவை:
1- உமிழ்நீரை விழுங்குதல்.
2- தேவைக்காக உணவின் சுவையை நாவினால் மாத்திரம் சுவைத்தல். அதனை விழுங்கக் கூடாது.
3- குளித்தல்.
4- பல் துலக்குதல்.
5- மனம் பூசுதல்.
6- குளிர் பெற்றுக் கொள்ளல்.
நோன்பின் போது தடுக்கப்பட்டவை:
1- நோன்பு துறக்காமல் இரண்டு நாட்கள் தொடராக நோன்பு நோற்றிருத்தல்.
2- முத்தமிட்ட பிறகு இச்சையை கட்டுப்படுத்தமுடியாமல் நோன்பு முறிந்துவிடும் என்ற அச்சமுள்ளவர் முத்தமிடுதல்.
3- தடைசெய்யப்பட்ட அனைத்து பேச்சுக்களும் செயல்களும்.
4- மடமையாகவும் நிதானமின்றியும் நடந்து கொள்ளல்.
நஃபிலான - உபரியான நோன்புகள்:
1- ரமழான் மாதத்தின் நோன்புகளை பூரணப்படுத்தியவர் ஷவ்வால் மாதத்தில் ஆறு நாட்கள் நோன்பு நோற்றுக்கொள்ளல். அம்மாதத்தின் இரண்டாவது நாளில் இருந்து தொடர்ந்து நோன்பு நோற்பது ஏற்றமானது.
2- ஹஜ்ஜிற்குச் சமுகமளிக்காதவர் அறபஹ் நோன்பு நோற்றல்.
3- ஆஷூரா, தாஸூஆ (முஹர்ரம் 9, 10) நோன்புகள்.
4- திங்கள், வியாழன் நோன்புகள். அவ்விரண்டில் திங்கள் நோன்பே அதிகம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
5- ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்றல். அவற்றை 13, 14, 15 ஆகிய வெள்ளை இரவுகளைக் கொண்ட நாட்களில் நோற்பது சிறந்தது.
6- ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு நோற்பது. (இதற்கான உடல் வலிமையுள்ளவர்கள் மாத்திரம் இவ்வாறு செய்துகொள்ளலாம்.)
7- அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தில் நோன்பு நோற்பது.
8- துல்ஹஜ் மாதத்தின் முதல் ஒன்பது நாட்களில் நோன்பு நோற்பது. (ஏனெனில், இந்நாட்களில் பொதுவாக அனைத்து நல்ல அமல்களும் செய்து கொள்வதற்கு ஆர்வமூட்டப்பட்டுள்ளது.)
9- ஷஃபான் மாதம் நோன்பு நோற்றல். எனினும் முழு மாதமும் நோன்பு நோற்கக் கூடாது.
விரும்பப்படாத நோன்புகள்:
வெள்ளிக்கிழமையில் மாத்திரம் நோன்பு நோற்பது.
ஆனால் காரணம் இருந்தால் அந்நாளில் மாத்திரம் நோன்பு நோற்பது வெறுக்கப்பட்டதல்ல. உதாரணமாக: அறபஹ் நோன்பு வெள்ளியில் வருதல்.
வியாழனுடன் அல்லது சனியுடன் இணைத்து வெள்ளிக்கிழமை நோன்பு பிடிப்பதும் அனுமதிக்கப்பட்டது.
சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் தனித்து நோன்பு பிடிப்பது சம்பந்தமாக கருத்து வேறுபாடு உள்ளது. யூதர்கள் சனிக்கிழமையையும் கிறிஸ்தவர்கள் ஞாயிற்றுக்கிழமையையும் கண்ணியப்படுத்துவதனாலும் அவர்களுக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று இருப்பதாலும் அந்த நாட்களில் ஒரு நாளை நாங்கள் தேர்ந்தெடுத்து நோன்பு பிடிக்கக் கூடாது என்று பிக்ஹுத்துறை வல்லுனர்கள் பலர் கூறியுள்ளனர். மேலும், அவ்விரு நாட்களையும் ஒருசேர நோன்பு நோற்பது பிரச்சினையில்லை என்றும் கூறியுள்ளனர். அதற்குக் காரணம் எந்த ஒரு கூட்டமும் அவ்விரு நாட்களையும் ஒன்றாக சேர்த்து கண்ணியப்படுத்துவதில்லை என்பதாகும்.
எனினும் வேறு பல அறிஞர்கள் சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் நோன்பு நோற்பதற்கு ஆதாரபூர்வமான எந்தத் தடையும் இல்லை என்பதனால் அவற்றில் நோன்பு நோற்பது அனுமதிக்கப்பட்டதே என்று கூறியுள்ளனர்.
சனிக்கிழமையில் பர்ளான நோன்பை தவிர வேறு எந்த நோன்பும் நோற்கக் கூடாது என்று வந்துள்ள ஹதீஸ் பலவீனமானது என்பதே பெரும்பாலான ஹதீஸ் துறை அறிஞர்களின் நிலைப்பாடாகும்.
ஞாயிற்றுக் கிழமையில் நோன்பு பிடிக்கக்கூடாது என்பதற்கு நேரடியான ஹதீஸ் இல்லை.
எனவே, சனி அல்லது ஞாயிறு தனியாகவோ அல்லது இருநாட்களிலும் சேர்த்தோ அந்த நாட்களுக்கு விசேடம் இருப்பதாகக் கருதாமல் நோன்பு நோற்பதற்கு எந்தத் தடையுமில்லை என்பதே பலமான கருத்தாகும்.
ஹறாமாக்கப்பட்ட நோன்புகள்:
1- ஷக்குடைய நாளில் (ஷஃபான் 30 இல்) நோன்பு நோற்றல். ஒருவர் வழமையாக நோன்பு நோற்றுவரும் நாளில் ஷக்குடைய நாள் அமைந்தால், அப்போது அவர் அந்நாளில் நோன்பு நோற்பது தவறல்ல.
2- ஈதுல் அழ்ஹா, ஈதுல் பித்ர் பெருநாட்களில் நோன்பு நோற்றல்.
3- அய்யாமுத் தஷ்ரீக் எனப்படும் துல்ஹிஜ்ஜஹ் 11, 12, 13 ஆகிய நாட்களில் நோன்பு நோற்பது. எனினும் ஹஜ் செய்பவர் 'ஹதீ' (பலிப் பிராணி) கிடைக்கப்பெறாத போது நோன்பு நோற்கலாம்.
4- குறிப்பாக றஜப் மாதத்தில் நோன்பு நோற்பதற்கு தனிச்சிறப்பு இருப்பதாகக் கருதி அம்மாதத்தில் நோன்பு நோற்றல். (றஜப் மாதம் யுத்தம் செய்ய தடை செய்யப்பட்ட சங்கையான நான்கு மாதங்களில் ஒன்று. அந்த மாதத்தில் செய்வதற்கு என்று தனிப்பட்ட எந்த வணக்கமும் கிடையாது.)
5- முழுக்காலமும் தொடராக நோன்பு நோற்றல்.
எனினும் விடுபட்ட நோன்புகளை கழா செய்யும் போது தொடர்ச்சியாக அவற்றை நோற்பது விரும்பத்தக்கது. பெருநாள் தினத்திற்கு மறுநாளிலிருந்தே அவற்றை தொடர்வது நல்லது. அடுத்த ரமழான் வரை அதனை பிற்படுத்தக்கூடாது. காரணமில்லாமல் இவ்வாறு பிற்படுத்துபவர் மீது தவறிய நோன்பை நோற்பதை விட மேலதிகமான எந்தக் கடமையும் இல்லை. ஆனாலும் அடுத்த வருடத்திற்கு பிற்படுத்தியதால் அவர் பாவம் செய்தவராக கருதப்டுவார்.
குறிப்பு: காரணமின்றி அடுத்த ரமழான் வரை கழா நோன்பை நிறைவேற்றாதவர் விட்ட நோன்பை நோற்பது மற்றுமல்லாது பிஃத்யா-உணவளிக்க வேண்டும் என்றும் அதிகமான அறிஞர்கள் கூறியுள்ளனர். அதற்குக் காரணம் சில நபித்தோழர்கள் இவ்வாறு தீர்ப்பு வழங்கியுள்ளதும், அவர்களின் காலத்தில் அதற்கு மாற்றுக்கருத்து நிலவியதாக அறியப்படாததுமாகும். ஆனாலும் இப்னு உஸைமீன் றஹிமஹுல்லாஹ் அவர்கள், இவ்வாறு உணவளிப்பது விரும்பத்தக்கது என்று அவர்கள் கருதியிருக்கக்கூடும் என்று கூறுகிறார்கள்.
ஸகாத்துல் பித்ர்:
ரமழான் மாதத்தின் கடைசி நாள் சூரியன் மறையும் பொழுது எவர் உயிரோடு முஸ்லிமாக இருந்து, பெருநாள் இரவு மற்றும் அதன் பகல் வேளைகளுக்கு தனக்கும் தன் குடும்பத்துக்கும் தேவையான உணவை விடவும் மற்றும் தன் அடிப்படைத் தேவைகளை விடவும் மேலதிகமாக ஒரு 'ஸாஃ' உணவு இருந்தால் அவர் மீது அது கடமையாகி விடுகிறது.
குறிப்பு: கர்ப்பப் பையில் இருக்கும் சிசுவுக்காக அதனை நிறைவேற்றுவது கட்டாயமில்லை. எனினும் அது விரும்பத்தக்கது என சில அறிஞர்கள் கூறுகின்றனர். காரணம் உஸ்மான் (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அவ்வாறு நிறைவேற்றியதாக கதாதஹ், பக்ர் அல்முஸனி ஆகிய இரு தாபிஈகள் கூறியுள்ளனர். இவ்விருவரும் உஸ்மான் (றழியல்லாஹு அன்ஹு) அவர்களைச் சந்தித்ததில்லை. அதனால் இத்தகவலின் அறிவிப்பாளர் வரிசை துண்டிக்கப்பட்டுள்ளது.
* ஆனாலும் பல நபித்தோழர்களைக் கண்ட அபூ கிலாபஹ் (றஹிமஹுல்லாஹ்) என்ற அறிஞர்: "சிசுவுக்காகவும் ஸகாதுல் பித்ரை நிறைவேற்றுவது அவர்களுக்கு விருப்பமானதாக இருந்தது" என்று கூறியுள்ளார். (பார்க்க: முஸன்னப்ஃ அப்திர்ரஸ்ஸாக், எண்:5788)
"அவர்களுக்கு" என்று அவர் குறிப்பிடுவது அவருக்கு முன் சென்ற அறிஞர்களான ஸஹாபாக்களாவும் தாபிஈன்களில் தன்னை விட மூத்த அறிஞர்களாகவும் தான் இருக்க முடியும்.
ஸகாத்துல் பித்ரின் நோக்கம்:
1- நோன்பாளியிடம் இருந்து வெளிப்பட்ட வீணான மற்றும் மோசமான வார்த்தைகளிலிருந்து நோன்பாளியை சுத்தப்படுத்துவது.
2- ஏழைகள் பெருநாள் தினத்தில் யாசிக்காமல் தன்நிறைவு பெறுவது.
ஸகாத்துல் பித்ரை கொடுப்பதற்குரிய நேரம்:
1- பெருநாள் தினத்திற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பிருந்து அதனை கொடுப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் நேரமாகும்.
2- பெருநாள் தினத்தில் பஜ்ருக்கும் பெருநாள் தொழுகைக்கும் இடைப்பட்ட நேரம் அதனைக் கொடுப்பதற்கு விரும்பத்தக்க நேரமாகும்.
3- பெருநாள் தொழுகைக்குப் பின்னால் நிறைவேற்றுவதற்காக பிற்படுத்துவது கூடாது.
குறிப்பு: பெருநாள் தினத்தின் சூரியன் மறைவதற்கு முன்னால் நிறைவேற்றினால் செல்லுபடியாகும் என பெரும்பாலான அறிஞர்கள் கருதுகின்றனர்.
ஸகாதுல் பித்ர் கொடுக்க வேண்டிய அளவு:
மனிதர்கள் உட்கொள்ளும் ஒரு பிரதான உணவில் இருந்து ஒரு 'ஸாஃ' கொடுக்க வேண்டும். அதற்குப் பகரமாக பணம் கொடுக்க முடியாது. 'ஸாஃ' என்பது நபி ﷺ அவர்களின் காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரு முகத்தல் அளவையாகும். திறமையான பல ஆய்வாளர்களின் ஆய்வுகளின் படி கிட்டத்தட்ட ஒரு 'ஸாஃ' என்பது 2.5 லீட்டராகும். அதனை நிறுத்தலளவைக்கு மாற்றும் பொழுது ஒவ்வொரு பொருட்களின் அடர்த்திக்கேற்ப வித்தியாசம் ஏற்படலாம். திறமையான சில ஆய்வாளர்களின் ஆய்வுகளின் படி நிறுவையில் நல்ல கோதுமையில் 2040 கிராமாகும். எமது நாடுகளில் நடைமுறையில் இருப்பது போன்று எந்த வகையான அரிசியிலிருந்தும் இரண்டரை கிலோ கிராம் கொடுப்பது உகந்து. ஏனெனில் அதில் ஒரு 'ஸாஃ' அளவை விட அதிகமாக உள்ளடங்கியிருப்பது உறுதி.
பெருநாள் தொழுகை:
இது ஒவ்வொருவர் மீதும் கட்டாயக் கடமை என்பது எம்மிடம் பலமான கருத்தாகும்.
இதனை சூரியன் ஒரு ஈட்டிப் பிரமானம் உயர்ந்ததிலிருந்து, அது உச்சிக்கு வந்து சாயும் ழுஹரின் துவக்க நேரத்திற்கு முன்னர் தொழ வேண்டும்.
பெருநாள் தொழுகையை ஜமாஅத்துடன் நிறைவேற்ற தவறி விட்டால் அதனை கழா செய்யலாம் என்பது பெரும்பாலான அறிஞர்களின் கருத்தாகும்.
நியாயமான காரணத்தால் மக்கள் அனைவருக்கும் ழுஹர் நேரத்திற்கு முன் அதனை ஜமாஅத்தாக நிறைவேற்ற தவறி விட்டால் அதனை அடுத்த நாள் ஜமாஅத்தாக கழா செய்ய வேண்டும்.
இத்தொழுகையை
1. கட்டிடங்களுக்கு வெளியால் திறந்தவெளியில் நிறைவேற்றுவதும்,
2. தொழுகைக்கு செல்வதற்கு முன்னால் ஒற்றைப்படையாக சில பேரீச்சம் பழங்களை சாப்பிடுவதும்,
3. சுத்தம் செய்து கொள்வதும்,
4. மனம் பூசிக் கொள்வதும்,
5. இருக்கும் ஆடைகளில் அழகானதை அணிவதும்,
6. தொழுகைக்காக ஒரு பாதையால் சென்று வேறு பாதையால் திரும்பி வருவதும் ஸுன்னத்தாகும்.
7. மக்கள் பஜ்ரிற்கு பிறகு முன்கூட்டியே சமுகமளிப்பதும்,
8. இமாம் தொழுகையை ஆரம்பிக்கும் நேரத்தில் வருவதும்,
9. தொழுகைக்காக நடந்து செல்வதும் விரும்பத்தக்கதாகும்.
அனைத்துப் பெண்களும் பெருநாள் திடலுக்கு வருவதற்கு மார்க்கம் ஆர்வமூட்டியுள்ளது.
பெருநாள் தொழுகைக்காக அதான், இகாமத், அஸ்ஸலாது ஜாமிஅஹ் போன்ற வார்த்தைகளைக் கொண்டு அழைப்பது ஸுன்னஹ்வில் கிடையாது.
அதற்கு முன், பின் ஸுன்னத் தொழுகைகளும் கிடையாது.
(தகப்பலல்லாஹு மின்னா வமின்கும்)
(تقبل الله منا ومنكم)
என்ற வார்த்தையைக் கூறி வாழ்த்து கூறுவது பிரச்சினை இல்லை.
(அதன் அர்த்தம்: அல்லாஹ் எம்மிடம் இருந்தும் உங்களிடம் இருந்தும் அமல்களை ஏற்றுக் கொள்வானாக).
பெருநாள் இரவிலும் தொழுகைகளுக்கு இமாம் சமுகமளிக்கும் வரையில் பொதுவாக தக்பீர் கூறுவது ஸுன்னஹ்வாகும்.
"அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், லாஇலாஹ இல்லல்லாஹு, வல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், வலில்லாஹில் ஹம்த்" என்றும் கூறமுடியும்.
அதுவல்லாத அல்லாஹ்வை பெருமைப்படுத்தும் ஏனைய வார்த்தைகளையும் கூற முடியும்.
பெருநாள் தொழுகை: குத்பஹ்வுக்கு முன்னால் இரு ரக்அத்துகள் தொழப்படும்.
முதல் ரக்அத்தில் தக்பீரதுல் இஹ்ராம் எனும் தொழுகையை ஆரம்பிக்கும் தக்பீரிற்குப் பின்னர் ஆறு தக்பீர்கள் மேலதிகமாக கூறப்படும்.
இரண்டாம் ரக்அத்தில் ஸுஜூதிலிருந்து எழும்பும் போது கூறப்படும் தக்பீரிற்குப் பிறகு, குர்ஆனை ஓதுவதற்கு முன்னர் ஐந்து தக்பீர்கள் கூறப்படும்.
மேலதிகமான தக்பீர்களுக்கிடையில் எந்த திக்ரும் ஸுன்னஹ்வில் இடம் பெறவில்லை. எனவே இடைவிடாது தக்பீர்கள் தொடர்ந்து சொல்லப்படும்.
தொழுகையில் அல்-அஃலா, அல்காஷியஹ் ஆகிய ஸூறஹ்களை அல்லது காஃப், அல்-கமர் ஆகிய ஸூறாக்களை வெளிப்படையாக ஓதுவது ஸுன்னத்தாகும்.
விளையாட்டு போன்ற மார்க்கம் அனுமதித்த விடயங்களில் பெருநாளில் சற்று விசாலமாக நடந்துகொள்ளலாம்.
பெருநாளில் நோன்பு நோற்பதோ, ஒவ்வொரு பெருநாளிலும் கப்ர்களை ஸியாரத் செய்வதோ கூடாது. வாய்ப்பு கிடைக்கும் போது கப்ர்களை ஸியாரத் செய்ய வேண்டுமே தவிர அதற்கென குறிப்பிட்ட நாளை வைத்துக் கொள்ளக்கூடாது.
___
இந்த ஆக்கம் அஷ்ஷெய்க் கலாநிதி ஹைஸம் ஸர்ஹான் என்பவரின் "பிக்ஹுஸ் ஸவ்ம்" என்ற கையேட்டின் மொழி பெயர்ப்பாகும். எனினும் அதில் கருத்து வேறுபாடுள்ள சில விடயங்களில் சில மாற்றங்கள் செய்துள்ளோம். மேலும் சில விடயங்களை இணைத்துள்ளோம்.
-ஸுன்னஹ் அகாடமி