நோன்பின் சட்டங்கள் - ஒரு சுருக்கம்

-ஷைஃக் அப்துல் அஸீஸ் பின் அப்துல்லாஹ் அர்-ராஜிஹீ 


முன்னுரை: 

அனைத்து புகழும் அல்லாஹ்வுக்கே உரியதாகும். மேலும் ஸலவாத்தும் ஸலாமும் அல்லாஹ்வுடைய தூதர் ﷺ அவர்கள் மீதும், அவர்களுடைய குடும்பத்தார் மீதும், அவர்களுடைய தோழர்கள் மற்றும் கியாமத் நாள்வரை அவர்களை நற்செயல்களில்  பின்பற்றுபவர்கள் மீதும் உண்டாகட்டுமாக. 

இதைத் தொடர்ந்து பின் வருவதாவது:

இது "அல் இல்மாம் பி ஷையின் மின் அஹ்காமிஸ் ஸியாம்" என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட நோன்பின் சட்டங்கள் குறித்த ஒரு சுருக்கம் ஆகும். (மக்களின்) தேவை இதை நோக்கி இருப்பதைக் கண்டு, (இதனைத் தொகுத்துள்ளேன்). மேலும் இது அதன் மூலப் புத்தகத்திலுள்ள அதிகமான சட்டங்களைக் கொண்டுள்ளது. வாசிக்கக்கூடியவருக்கு அர்த்தங்களை நெருக்கமாக்கி வைக்கும் தலைப்புகளின் கீழே (அச்சட்டங்களை) வைத்துள்ளேன். 

அல்லாஹ் இதைக் கொண்டு பயனளிக்க வேண்டுமெனவும், அனைவருக்கும் பயன்தரும் கல்வி மற்றும் ஸாலிஹான அமல்களை வழங்க வேண்டுமெனவும், மேலும் அனைவரையும் நேர்வழியின் மீது உறுதியாக்க வேண்டுமெனவும் அவனிடம் பிரார்த்திக்கின்றேன். நிச்சயமாக அவன் அதற்கு பொறுப்பாளியும், அதன்மீது ஆற்றல் பெற்றவனும் ஆவான். 

மேலும் நம்முடைய நபியவர்கள் ﷺ மீதும், அவர்களின் குடும்பத்தார் மீதும், மேலும் அவர்களின் தோழர்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வுடைய ஸலவாத்தும் ஸலாமும் உண்டாவதாக. 

எழுதியவர்: 
அப்துல் அஸீஸ் பின் அப்துல்லாஹ் அர்-ராஜிஹீ


எதைக் கொண்டு ரமலானுடைய நோன்பு கடமையாகும்?  

ரமலானுடயை நோன்பு இரண்டு விடையங்களில், ஏதேனும் ஒன்றைக் கொண்டு கடமையாகும். இவற்றிற்கு மூன்றாவது என ஒன்று இல்லை.

1. அவ்விரண்டில் ஒன்று: ரமலானின் பிறையைப் பாரப்பதாகும். 

2. இரண்டாவது: ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாக பூர்த்தி செய்வதாகும்.  

மேலும் ரமலானுடயை நோன்புகளை விடுவது என்பது இரண்டு விடையங்களில் ஏதேனும் ஒன்றைக் கொண்டு கடமையாகும். இவற்றிற்கு மூன்றாவது என ஒன்று இல்லை. 

1. அவ்விரண்டில் ஒன்று: ஷவ்வாலின் பிறையைப் பார்ப்பதாகும். இரண்டு நீதியானவர்களுடைய சாட்சியின் மூலம் பிறைப் பார்க்கப்பட்டது உறுதியாகுமெனில் (நோன்பை விட்டுவிடுவது கடமையாகும்). 

2. இரண்டாவது: ரமலான் மாதத்தை முப்பது நாட்களாக பூர்த்தி செய்வதாகும். 

தூய ஸுன்னாஹ்வில் இதற்கான ஆதாரங்கள் அதிகமாக உள்ளன.

அதிலிருந்து (அதற்குரிய ஆதாரங்களிருந்து) உள்ளதாவது, ஸஹீஹுல் புஹாரி மற்றும் முஸ்லிமில் இடம்பெறுகின்ற அப்துல்லாஹ் பின் உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் ஹதீஸாகும். அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்கள் ரமலானைப் பற்றி குறிப்பிட்டு விட்டு கூறினார்கள்: 

لَا تَصُومُوا حَتَّى تَرَوُا الْهِلَالَ، وَلَا تُفْطِرُوا حَتَّى تَرَوْهُ، فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَاقْدُرُوا له

'பிறையைக் காணும் வரை நோன்பு நோற்காதீர்கள்; மேலும் பிறையைக் காணும் வரை நோன்பை விடாதீர்கள்; உங்களுக்கு (வானில்) மேகமூட்டமாக இருந்தால் அதை கணக்கிட்டுக் கொள்ளுங்கள்'.  

الشَّهْرُ تِسْعٌ وَعِشْرُونَ لَيْلَةً، فَلَا تَصُومُوا حَتَّى تَرَوْهُ، فَإِنْ غُم عَلَيْكُمْ فَأَكْمِلُوا العِدَّةَ ثَلَاثِينَ

ஸஹீஹ் புஹாரியில், "ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது இரவுகளாக(வும்) இருக்கும். எனவே, அதை (பிறையைக்) காணும் வரை நோன்பு நோற்காதீர்கள். உங்களுக்கு (வானில்) மேகமூட்டமாக இருந்தால், எண்ணிக்கையை முப்பதாக முழுமைப்படுத்துங்கள்", என்ற வாசகத்தில் வந்துள்ளது. 

فَإِنْ غُمِّي عَلَيْكُمُ الشَّهْرُ فَعُدُّوا ثَلاثِينَ

மேலும் ஸஹீஹ் முஸ்லிமில் இடம்பெறும் அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் ஹதீஸில்: 'உங்களுக்கு மாதம் (அதன் பிறையானது) மறைக்கப்பட்டால் முப்பதாக கணக்கிட்டுக் கொள்ளுங்கள்' என்றுள்ளது.  

'அதைக் கணக்கிட்டுக்கொள்ளுங்கள்' என்ற நபியவர்களின் ﷺ கூற்றைக் கொண்டு நாடப்படுவதாவது - (ஷஅபான்) மாதத்தின் ஆரம்பத்தைக் கவனித்து முப்பது நாட்கள் பூர்த்தியடைவதை கணக்கிட்டுக்கொள்ளுங்கள் என்பதே பெரும்பாலான அறிஞர்களின் கருத்தாகும். (இந்நபிமொழியின் மூலம்) நாடப்படும் பொருளை தெளிவாக காட்டும் அறிவிப்புகள் (பெரும்பாலான அறிஞர்கள் கொடுத்த) இந்த விளக்கத்தை மேலோங்கச்செய்கின்றன. 

சந்தேகத்தின் நாளில் (யௌமுஷ் ஷக்) நோன்பு வைப்பதை தடுக்கும்விதமாக வந்துள்ள ஹதீஸ்களும் இந்த பொருளுக்கு வலு சேர்க்கின்றன. உதாரணத்திற்கு அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) நபி ﷺ அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள்: 

لَا يَتَقَدَّمَنَّ أَحَدُكُمْ رَمَضَانَ بِصَوْم يَوْمٍ أَوْ يَوْمَيْنِ، إِلَّا أنْ يَكُونَ رَجُلٌ كَانَ يَصُومُ صَوْمَهُ، فَلْيَصُمْ ذَلِكَ اليَوْمَ

'உங்களில் எவரும் ரமலானுக்கு முன்னால் ஒரு அல்லது இரண்டு நாட்கள் நோன்பைக் கொண்டு முந்த வேண்டாம். அந்நாளில் வழக்கமாக நோன்பு வைக்கக்கூடிய ஒரு மனிதர் இருப்பாரெனில், அவர் (மட்டும்) அந்நாளில் நோன்பு வைத்துக்கொள்ளட்டும்'.   

மேலும் ஸஹீஹ் புஹாரியில் "முஅல்லகன் மஜ்ஸூமன் பிஹி" என்ற தரத்தில் வந்துள்ள அம்மார் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸில், 

مَنْ صَامَ يَوْمَ الشَّكِ فَقَدْ عَصَى أَبَا القَاسِمِ 

'யார் சந்தேகத்தின் நாளில் (ஷஃபானின் முப்பதாம் நாளில்) நோன்பு வைப்பாரோ, அவர் நிச்சயமாக அபுல் காஸிம் (ﷺ) அவர்களுக்கு மாறுசெய்துவிட்டார்' (என்று வந்துள்ளது).

குறிப்பு: "முஅல்லகன் மஜ்ஸூமன் பிஹி" என்பதன் அர்த்தமாவது இந்த ஹதீஸின் சங்கிலித் தொடரை குறிப்பிடாது, இதன் நம்பகத்தன்மையை உறுதி கொண்ட விதத்தில் இந்த மஸ்அலாவிற்கு ஆதாரமாக இதனைக் குறிப்பிட்டுள்ளார்கள். மேலும் இதை இமாமவர்கள் ஆதாரப்பூர்வமானதாக கண்டுள்ளார்கள் என்பதாகும். 

மேலும் ஸஹீஹ் புஹாரி மற்றும் முஸ்லிமில் இடம்பெறும் இப்னு உமர் அவர்களின் ஹதீஸில், நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: 

إِنَّا أُمَّةٌ أُمَيَّةٌ ، لا نَكْتُبُ وَلَا نَحْسُبُ الشَّهْرُ هَكَذَا وَهَكَذَا يَعْنِي : مَرَّةً تِسْعَةً وَعِشْرِينَ، وَمَرَّةً ثَلَاثِينَ 

'நிச்சயமாக நாம் உம்மியான சமுதாயம் ஆவோம். நாம் எழுதவும் மாட்டோம், கணக்கிடவும் மாட்டோம். (நபியவர்கள் ﷺ தன் கை விரல்களை விரித்துக் காட்டி), மாதம் என்பது இவ்வாறு இவ்வாறாக இருக்கும். அதாவது, சில நேரம் இருபத்து ஒன்பது நாட்களாக இருக்கும் மேலும் சில நேரம் முப்பதாக இருக்கும்' (என்று சமிக்ஞை செய்தார்கள்). 

மாதத்தின் ஆரம்பத்தையும், முடிவையும் தீர்மானிக்கும் விடையத்தில் (வானவியல்) கணக்குகளின் மீது சார்ந்திருப்பதை அசத்தியமாக்குவதற்கு இந்த ஹதீஸ் ஆதாரமாகும்.

மேலும் (பிறையுடைய விடையத்தில்) கண்ணால் பார்ப்பதை மட்டுமே சார்ந்திருக்கவேண்டும் அல்லது மாதத்தை முப்பது நாட்களாக பூர்த்தி செய்ய வேண்டும். 
   
இந்த ஹதீஸானது இஸ்லாமிய மக்களாகிய இந்த உம்மத்தை பெரும்பாலாக (அது எவ்வாறு இருக்கும் என்பதை) வர்ணிக்கின்றது.
அதாவது வியாபாரம் மற்றும் அது போன்ற பிற விடயங்களில் (இந்த உம்மத்) எழுதவும் கணக்கிடவும் செய்தாலும், மாதத்தின் ஆரம்பம் மற்றும் முடிவைத் தீர்மானிப்பதில் எழுதுவதும் கணக்கிடுவதும் அதன் காரியங்களிலிருந்து உள்ளதன்று என்பதனை விளக்குகின்றது. 

(அதனைக் கொண்டு) நாடப்படுவதாவது (மாதங்களின் தொடக்கம் மற்றும் இறுதி தொடர்பான) மார்க்கச் சட்டங்களில் (வானவியல் மூலம்) கணக்கிடுவதைச் சார்ந்திருக்கக்கூடாது, பிறையைப் பார்ப்பதன் மீதே சார்ந்திருக்கவேண்டும். ஏனென்றால், நபி ﷺ அவர்கள் (நோன்பின்) சட்டத்தை (பிறையைப்) பார்ப்பதுடனே தொடர்புபடுத்தினார்கள் கணக்கிடுவதுடனல்ல. மேலும் (பிறையைப்) பார்ப்பது என்பது குறிப்பானவர், பொதுவானவர், அறியாதவர், அறிஞர் (என அனைவராலும்) அதை அறிந்து கொள்ள முடியும்.  

இது ஷரீஅத்தின் இலகுவான மற்றும் எளிதான தன்மையைக் காட்டுகிறது. எனவே அல்லாஹ்வுக்கே, அவன் எளிதாக்கிய மற்றும் இலகுவாக ஆக்கியவற்றிற்காக புகழனைத்தும் உரியதாகும். 

நலவு மற்றும் இரக்கத்திலிருந்து தனது அடியார்களுக்கு (உகந்ததை) அறிந்த காரணத்தினால், அவன் அவர்களுக்கு மார்க்கமாக்கிய அனைத்து விடையங்களிலும் அவனுக்கே பரிபூரணமான ஞானம் உண்டு. அவன் மிக்க ஞானமிக்கவன், யாவற்றையும் அறிந்தவன் ஆவான். அவன் பரிசுத்தமானவன், புகழுக்குரியவன்.

நோன்பு ஆரம்பிப்பதற்கு முன்னால் உள்ள சட்டங்கள் 

1. ரமலானுக்காகப் பேணுதலாக இருத்தல் என்ற நாட்டத்துடன், அது ஆரம்பிப்பதற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு முன் நோன்பு வைப்பது கூடாது. என்றாலும் ஒருவரின் (நோன்பானது) - அவர் குறிப்பிட்ட சில நாட்களில் நோன்பு வைக்கும் பழக்கமுடையவராக இருக்கும் நிலையில் - (ரமலானுக்கு முன்னுள்ள நாட்களில் அந்நோன்பானது) அமையுமெனில், அவர் ரமலானுக்காகப் பேணுதலாக இருத்தலை நாடாதவராக அதில் நோன்பு வைப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. 

ஒருவர் திங்கள் மற்றும் வியாழக்கிழமையில் (வழக்கமாக) நோன்பு வைக்கக் கூடியவர், அது (ஷஃபான்) மாதத்தின் இறுதியில் அமைந்துவிடுவது போல், மேலும் ஒருவர் நத்ர் (நேர்ச்சை), கஃப்பாராஹ் (பரிகாரம்), முந்தய ரமலானின் களாவான நோன்பு போன்ற கடமையான நோன்பை நோற்பது போலாகும். 

ஏனென்றால், ஸஹீஹ் புஹாரி மற்றும் முஸ்லிமில் இடம்பெறுகின்ற, அபூ ஹுரைரா அவர்கள் அறிவித்த ஹதீஸில், 

لا يَتَقَدَّمَنَّ أَحَدُكُمْ رَمَضَانَ بِصَوْمِ يَوْمِ أَوْ يَوْمَيْنِ، إِلَّا يَكُونَ رَجُلٌ كَانَ يَصُومُ صَوْمَهُ، فَلْيَصُمْ ذَلِكَ اليَوْم 

"உங்களில் எவரும் ரமலானுக்கு முன்னால் ஒரு அல்லது இரண்டு நாட்கள் நோன்பைக் கொண்டு முந்த வேண்டாம். அந்நாளில் வழக்கமாக நோன்பு வைக்கக்கூடிய ஒரு மனிதர் இருப்பாரெனில் அவர் (மட்டும்) அந்நாளில் நோன்பு வைத்துக்கொள்ளட்டும்", என நபி ﷺ அவர்கள் கூறினார்கள்.

மேலும் ஸஹீஹ் புஹாரியில் "முஅல்லகன் மஜ்ஸூமன் பிஹி" என்ற தரத்தில் மவ்ஸூல் ஃபிஸ் ஸுனனில், அம்மார் பின் யாஸிர் அவர்களின் ஹதீஸில், 

مَنْ صَامَ يَوْمَ الشَّكْ فَقَدْ عَصَى أبا القَاسِمِ

"யார் சந்தேகத்திற்குரிய நாளில் (ஷஃபானின் முப்பதாம் நாளில்) நோன்பு வைப்பாரோ, அவர் நிச்சயமாக அபுல் காஸிம் (ﷺ) அவர்களுக்கு மாறுசெய்துவிட்டார்" என்று வந்துள்ளது.

குறிப்பு: "மவ்ஸூல் ஃபிஸ் ஸுனன்" என்பது அஹ்மத், அபீதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா, நஸாயீ ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதை குறிக்கின்றது. 

2. இரவிலிருந்து நிய்யத் வைப்பதைக் கொண்டே தவிர கடமையான நோன்பானது கூடாது. ஏனென்றால், நபியவர்கள் ﷺ கூறியதாக வந்துள்ளதாவது:

 من لم يُجْمَعِ الصِّيام قبل الفجرِ فلا صِيامَ له

 "எவரொருவர் ஃபஜ்ருக்கு முன்னால் நோன்பு நோற்க நிய்யத் வைக்கவில்லையோ, அவருக்கு நோன்பு இல்லை." மேலும் (இதே ஹதீஸ் மற்றொரு) வார்த்தையில் வந்துள்ளதாவது:

مَنْ لَمْ يُبَيِّتِ الصِّيَامَ قَبْلَ الْفَجْرِ

 "எவரொருவர் ஃபஜ்ருக்கு முன்னால் நோன்பு நோற்பதாக நிய்யத் வைக்கவில்லையோ …" மேலும் (இதே ஹதீஸ்) மற்றும் சில வார்த்தையில்:

مَنْ لَمْ يُبَيِّتِ الصِّيَامَ مِنَ اللَّيْلِ

 "எவரொருவர் நோன்பு நோற்பதாக இரவிலிருந்தே நிய்யத் வைக்கவில்லையோ…" என்று வந்துள்ளது.

மேலும் ஸஹீஹ் புஹாரி மற்றும் முஸ்லிமில் இடம்பெறும் உமர் பின் அல்-கஃத்தாப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் ஹதீஸில், நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:

إِنَّمَا الْأَعْمَالُ بِالنِّيَّاتِ، وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى

 'நிச்சயமாக செயல்கள் யாவும் எண்ணங்களைக் கொண்டே அமைகின்றன. மேலும் ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியது மட்டுமே கிடைக்கின்றது'. 

3. மேலும் நிய்யத்தைக் கொண்டு நோன்பு பாழாகவும் செய்யும். உலமாக்களின் மத்தியில் இருக்கும் இரு கருத்துகளில் மிகவும் சரியான கருத்தின்படி, எவர் தன் நோன்பை திறக்கவேண்டுமென நாடிவிட்டாரோ, அவர் (உண்மையில்) நோன்பைத் திறந்துவிட்டார். மேலும் அவரின் நோன்பு பாழாகிவிட்டது. ஏனென்றால், நோன்பு ஒரு இபாதத் ஆகும். அதன் (இபாதத்தின்) நிபந்தனைகளில் இருந்துள்ளதாவது, அந்த இபாதத்தின் அனைத்து பகுதிகளிலும் நிய்யத் (தொடர்ந்து) இருப்பதாகும். 

எனவே, அதை (இபாபதத்தை) முறிக்க வேண்டும் என அவர் நாடிவிட்டால், அதிலிருந்து வெளியேறவேண்டும் என நாடியதினால் அந்த இபாதத் பாழாகிவிடும். மேலும் அந்த இபாதத்தும், அதன் சட்டங்களும் போய்விடும். அதனுடைய நிபந்தனை போய்விட்டதால் அந்நோன்பானது பாழாகிவிட்டது. இதற்கு காரணம் முன்சென்ற (ஹதீஸ்) ஆகும்:

إِنَّمَا الْأَعْمَالُ بِالنِّيَّاتِ، وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى

 "நிச்சயமாக செயல்கள் யாவும் எண்ணங்களைக் கொண்டே அமைகின்றன. மேலும் ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியது மட்டுமே கிடைக்கின்றது" எனவே, அமல்கள் அனைத்தும் நிய்யத்துகளின் மீதே கட்டியெழுப்பப்படுகின்றன. மேலும் அமல்கள் அவற்றைக் (நிய்யத்துகளைக்) கொண்டே கணக்கில் கொள்ளப்படுகின்றன. 
மேலும் அவைதான் (நிய்யத்துகள் தான்) அவைகளை (இபாதத்துகளை) கூடுமாக்குகின்றன. எனவே அவற்றை மையமாக வைத்தே அவை உள்ளன.


நோன்பை முறிப்பவைகள்:

1. உண்பது மற்றும் குடிப்பது

அதாவது இரண்டாவது பஜ்ரு (விடியற்காலை) தெளிவான பிறகாகும். எனவே, எவரேனும்  சுயவிருப்பத்துடன், அவருடைய நோன்பு அவருக்கு நினைவிருக்கும் நிலையில், தகுந்த (மார்க்கக்) காரணங்கள் எதுவுமின்றி, உண்டாலோ அல்லது குடித்தாலோ அவருடைய நோன்பு பாழாகிவிடும். மேலும் அவருக்கு கடுமையான எச்சரிக்கையும் உண்டு. 

ஏனெனில், அல்லாஹு தஆலாவின் கூற்றானது: 

( وَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يَتَبَيَّنَ لَكُم الْخَيْطُ الْأَبْيَضُ مِنَ الْخَيْطِ الْأَسْوَدِ مِنَ الْفَجْرِ ثُمَّ أَتِمُّوا الصيَامَ إِلَى الَّيْلِ ﴾

'இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை) நேரத்தில் (இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து (அதிகாலை என்ற) வெள்ளை நூல் உங்களுக்குத் தெளிவாகும் வரை உண்ணுங்கள், இன்னும் பருகுங்கள்;  பின்னர் இரவு (ஆரம்பமாகும்) வரை (மேலே கூறியவைகளைத் தவிர்த்து) நோன்பை (நோற்றுப்) பூரணமாக்குங்கள்'. (அல்குர்ஆன் : 2:187) என்பதாகும்.

உண்மையான தவ்பா,
மனவருத்தம் மற்றும் அவ்வாறு செய்வதை விட்டுவிடுவதுடன், அந்நாளுடைய நோன்பை களா செய்வது அவர் மீது கடமையாகும்.

2. யார் ஒருவர் நோன்பு வைத்தவராக ரமலானின் பகலில் தன் மனைவியுடன் உடலுறவு கொள்வாரோ, அவருடைய நோன்பு முறிந்து விடும். இது அவர் வேண்டுமென்றே, அறிந்த நிலையில் செய்யும் பட்சத்தில் ஆகும். 

உண்மையான தவ்பா,
மனவருத்தம் மற்றும் அவ்வாறு செய்வதை விட்டுவிடுவதுடன், அந்நாளுடைய நோன்பை களா செய்வது அவர் மீது கடமையாகும்.

 அத்துடன், அவர் மீது கஃப்பாராஹ் (பரிகாரம்) கடமையாகும். அது ஒரு அடிமையை விடுவிப்பதாகும், அதனை அவர் பெற்றுக்கொள்ளவில்லை எனில், இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக நோன்பு நோற்க வேண்டும், அதற்கும் அவர் சக்தி பெறவில்லையெனில் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். 

ஏனெனில், ஸஹீஹ் புஹாரி மற்றும் முஸ்லிமில் பதிவாகியுள்ள ஹதீஸில் அபூஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறினார்கள்: 

بَيْنَمَا نَحْنُ جُلوس عِندَ النَّبِي ﷺ ، إِذْ جَاءَهُ رَجُلٌ فَقَالَ : يَا رَسُولَ اللَّهِ هَلَكْتُ. قَالَ: «مَا لَكَ؟ - ولفظ مسلم قال: «وَمَا أَهْلَكَكَ؟» 

நாங்கள் நபி ﷺ அவர்களுடன் அமர்ந்திருந்தபோது அவர்களிடம் ﷺ ஒரு மனிதர் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் அழிந்துவிட்டேன்” என்றார். நபி ﷺ அவர்கள், ‘‘உமக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். ஸஹீஹ் முஸ்லிமின் அறிவிப்பில் "உம்மை அழித்தது எது?" என்று கேட்டதாக உள்ளது.

قَالَ : وَقَعْتُ عَلَى امْرَأَتِي وَأَنَا صَائِمٌ - لفظ مسلم : وَقَعْتُ عَلَى امْرَأَتِي فِي رَمَضَانَ،

‘‘நான் நோன்பு நோற்ற நிலையில் என் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டு விட்டேன்!” என்று அவர் சொன்னார். ஸஹீஹ் முஸ்லிமின் அறிவிப்பில் "ரமலானின் (பகற் பொழுதில்) என் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டு விட்டேன்" என்றுள்ளது.

 فَقَالَ رَسُولُ اللهِ ﷺ : هَلْ تَجِدُ رَقَبَةٌ تُعْتِقُهَا؟ قَالَ: لَا ، قَالَ: فَهَلْ تَسْتَطِيعُ أَنْ تَصُومَ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ، قَالَ: لَا ، فَقَالَ: «فَهَلْ تَجِدُ إِطْعَامَ سِتِّينَ مِسْكِينًا». قَالَ: لَا ، قَالَ : فَمَكَثَ النَّبِيُّ ﷺ ،

நபி ﷺ அவர்கள், ‘‘(இதற்குப் பரிகாரமாக) விடுதலை செய்ய ஓர் அடிமையை நீ பெற்றிருக்கிறாயா?” என்று கேட்டார்கள். அவர் ‘‘இல்லை” என்றார். ‘‘இரு மாதங்கள் தொடர்ச்சியாக உம்மால் நோன்பு நோற்க முடியுமா?” என்று நபி ﷺ அவர்கள் கேட்டார்கள். அவர், ‘‘இல்லை” என்றார். ‘‘அறுபது ஏழைகளுக்கு உம்மால் உணவளிக்க இயலுமா?” என்று நபி ﷺ அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர் ‘‘இல்லை” என்றார். பின்பு நபி ﷺ அவர்கள் (சற்று நேரம்) தாமதித்ததாக அவர் கூறினார்.

 فَبَيْنَا نَحْنُ عَلَى ذَلِكَ أُتِيَ النَّبِيُّ ﷺ بِعَرَقٍ فِيهَا تَمْرٌ - وَالعَرَقُ المِكْتَلُ - قَالَ : أَيْنَ السَّائِلُ؟ فَقَالَ أَنَا، قَالَ: «خُذْهَا، فَتَصَدَّقْ بِهِ فَقَالَ الرَّجُلُ : أَعَلَى أَفْقَرَ مِنِّي يَا رَسُولَ اللَّهِ؟ فَوَاللَّهِ مَا بَيْنَ لَابَتَيْهَا - يُرِيدُ الحَرَّتَيْنِ - أَهْلُ بَيْتٍ أَفْقَرُ مِنْ أَهْلِ بَيْتِي، فَضَحِكَ النَّبِيُّ  ﷺ حَتَّى بَدَتْ أَنْيَابُهُ ، ثُمَّ قَالَ: «أَطْعِمْهُ أَهْلَكَ ). 

நாங்கள் இவ்வாறு இருக்கும்போது, நபி ﷺ அவர்களிடம் பேரீச்சம் பழம் நிறைந்த ‘அரக்' - பெரிய கூடை - கொண்டுவரப்பட்டது. அப்போது நபி ﷺ அவர்கள், ‘‘கேள்வி கேட்டவர் எங்கே?” என்றார்கள். ‘‘நான் (இங்கு உள்ளேன்)” என்று அவர் கூறினார். ‘‘இதைப் பெற்று தர்மம் செய்வீராக!” என்று நபி ﷺ அவர்கள் கூறினார்கள்.

அப்போது அம்மனிதர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! என்னைவிட ஏழையாக இருப்போருக்கா (நான் தர்மம் செய்ய வேண்டும்)? மதீனாவின் இரண்டு மலைகளுக்கு (கருங்கற்கள் நிறைந்த இரு பகுதிகளுக்கு) இடையே என் குடும்பத்தாரைவிடப் பரம ஏழைகள் வேறு வீட்டார் யாருமில்லை” என்று கூறினார். அப்போது, நபி ﷺ அவர்கள் தம் கடைவாய்ப் பற்கள் தெரியும் அளவுக்குச் சிரித்தார்கள்; பிறகு ‘‘இதை (கொண்டு) உம் குடும்பத்தாருக்கே உணவளிப்பாயாக!” என்றார்கள்.

நோன்பு கடமையாக்கப்பட்ட, பயணியல்லாத, உடல் ஆரோக்கியம் மற்றும் (சுய) நினைவுள்ள ஒரு நோன்பாளி, வேண்டுமென்றே ரமலான் மாதத்தின் பகல் வேளையில் தன் மனைவியுடன் உடலுறவு கொள்வது, பெரும் பாவங்களிலிருந்து உள்ளதாகும் என்பதற்கு இந்த ஹதீஸில் ஆதாரம் உள்ளது. இதற்குக் காரணம், இந்த நபி மொழியில் 'நான் அழிந்து விட்டேன்' என்று அந்த மனிதர் கூறியதை நபி ﷺ அவர்கள் அங்கீகரித்ததாகும். ஸஹீஹ் முஸ்லிமில் இடம் பெறக்கூடிய ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களுடைய அறிவிப்பில்" நான் நாசமாகி விட்டேன்" என வந்துள்ளது.

அதுவே அவர் மறதியான நிலையில் உடலுறவு கொள்வாரெனில், உலமாக்களின் மத்தியில் இருக்கும் இரு (வேறுபட்ட) கருத்துகளில் மிகவும் சரியான கருத்தின்படி, அவருடைய நோன்பு சரியானதாகும். அவர் மீது களாவோ, பரிகாரமோ இல்லை.

3. உண்ணுதல், குடித்தல் ஆகியவற்றோடு அவ்விரண்டின் பொருளில் உள்ள மற்றவைகளும் சேரும். எனவே அவைகளைக் கொண்டும் ஒரு நோன்பாளி (நோன்பை) முறித்து விடுவார். உதாரணத்திற்கு, ஊட்டச்சத்து ஊசிகள் ஆகும். ஏனென்றால், இவைகளைக் கொண்டு அவர் உணவின்பால் தேவையற்றவராக ஆகிவிடுவார். இதைப் போலவே, இரத்தம் ஏற்றப்படுவது மூலமும் நோன்பை முறித்துவிடுவார். ஏனென்றால் இரத்தம் என்பது உணவு மற்றும் குடிபானத்தின் சாரம்சம் ஆகும்.

ஆனால் ஊட்டச்சத்து ஊசிகள் மற்றும் இரத்தம் ஏற்றுதலின் பால் தேவையுடையவர், பெரும்பாலும் நோன்பு திறக்க அனுமதியளிக்கப்பட்ட நோயாளியாகவே இருப்பார். ஆனால் நோய் தடுப்பு ஊசிகளை போட்டுக் கொள்வதால் நோன்பை முறித்துவிடமாட்டார். அது நரம்பில் போட்டுக் கொண்டாலும் சரி அல்லது தசையில் போட்டுக் கொண்டாலும் சரி. ஏனென்றால் அது உண்ணுவதும் அல்ல, குடிப்பதும் அல்ல. மேலும் அவ்விரண்டின் பொருளில் உள்ளவையும் அல்ல. என்றாலும் (அதை) இரவு வரை தாமதிப்பது  ஒரு நோன்பாளிக்கு பேணுதலாகும்.

4. அறிந்தவராக, வேண்டுமென்றே ஊதுபத்திகள் மற்றும் சாம்பிராணிகளை நுகர்வதைக் கொண்டு நோன்பை முறித்து விடுவார். இதுவே மார்க்கச் சட்ட அறிஞர்களில் அதிகமானவர்களின் கருத்தாகும். ஏனென்றால், அதற்கு மூளை வரை சென்றடையும் ஆற்றல் உள்ளது. அதுவே ஒரு நோன்பாளியின் மூக்கில், (ஊதுபத்திகள், சாம்பிராணி போன்றவை எதேர்ச்சையாக) நுழைந்தாலோ அல்லது நாட்டமின்றி அவர் அதை நுகர்ந்தாலோ அவரின் நோன்பை முறித்து விட மாட்டார். இது (அவருடைய) சுயவிருப்பமும், நாட்டமும் இல்லாத காரணத்தினால் ஆகும்.

 (குறிப்பு: ஷைஃக் இப்னு பாஸ் அவர்கள் சாம்பிராணி போன்றவைகளை நுகர்வது நோன்பை முறித்துவிடாது, எனினும் உலமாக்கள் மத்தியிலுள்ள கருத்துவேறுபாட்டிலிருந்து வெளியேறும் வண்ணம், வேண்டுமென்றே மூக்கில் உள்ளிழுக்காமல் இருப்பதே மிகவும் பேணுதலான விடயமாகும் என்று கூறியுள்ளார்கள்). 

5. ஹிஜாமாவின் மூலம் ஒரு நோன்பாளியிடமிருந்து இரத்தத்தை வெளியேற்றுவது நோன்பை பாழாக்கும். இதனால் அந்த நோன்பாளி நோன்பை முறித்து விடுவார். இதுவே மார்க்க அறிஞர்களின் இரு (வேறுபட்ட) கருத்துக்களில் மிகவும் சரியான கருத்தாகும். ஏனெனில், சௌபான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடமிருந்து அபூதாவூத் அவர்கள் சங்கிலித் தொடருடன் அறிவிக்கின்ற ஹதீஸில், நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:

(أَفْطَرَ الْحَاجِمُ وَالْمَحْجُومُ ) 

 "ஹிஜாமா செய்தவர், செய்யப்பட்டவர் (என இருவரும்) நோன்பை முறித்துவிட்டனர்."

மேலும் ஷத்தாத் இப்னு அவ்ஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவித்த ஹதீஸில்,

أن رسول الله ﷺ أتى على رَجُل بالبقيع، وهو يحتجم ،وهو آخِذُ بيدي لثمان عشرة خَلَتْ من رمضان، فقال: أفطر الحاجِمُ والمحجوم

 'ஒரு முறை அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் என் கையைப் பிடித்த வண்ணம், பகீய்' என்னும் இடத்தில், ரமலான் மாதத்தின் பதினெட்டு பிறைகள் நிறைவடைந்த நிலையில், ஹிஜாமா செய்து கொண்டிருந்த ஒரு மனிதரை கடந்து சென்றார்கள். அப்பொழுது நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: "ஹிஜாமா செய்தவர் செய்யப்பட்டவர் (என இருவரும்) நோன்பை முறித்துவிட்டனர்".

இந்த விடயத்தில் நபித்தோழர்களில் ஒரு கூட்டத்தினரிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளன.

அஹ்மது பின் ஹம்பல், இஸ்ஹாக் இப்னு ராஹவைஹ், அபூ ஸௌர் போன்ற மார்க்க அறிஞர்களுள் ஒரு வகுப்பினர், ஹிஜாமாவைக் கொண்டு நோன்பாளி நோன்பை முறித்து விடுவார் என்னும் கருத்தைக் கொண்டுள்ளனர். மேலும் இதுவே அதா, அப்துர் ரஹ்மான் இப்னு மஹ்தி, அல்-அவ்ஸாஈ, ஹசன் அல்பஸரி, மற்றும் இப்னு சீரீன் ஆகியோரின் கருத்தாகும். ஷாஃபி'ஈ மத்ஹபின் அறிஞர்களும் இதையே கூறியுள்ளனர். மேலும் இதுவே ஷைய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா மற்றும் அவருடைய மாணவர் இப்னுல் கைய்யிம் (ஆகிய இருவரும்) தேர்ந்தெடுத்துள்ள கருத்தாகும்.

மேலும் பெரும்பாலான மார்க்க அறிஞர்கள், எவ்வித வரையரையுமின்றி ஹிஜாமாவை கொண்டு நோன்பு முறியாது என்னும் கருத்தை கொண்டுள்ளனர். மேலும் இது நபித் தோழர்கள் மற்றும் தாபியீன்களில் சிலருடைய கருத்தாகும். மேலும் இதுவே இமாம் மாலிக், இமாம் ஷாஃபிஈ' மற்றும் இமாம் அபு ஹனீபா ஆகியோரின் மத்ஹபாகும்.

6. வாந்தி எடுப்பது

மார்க்க அறிஞர்களின் இரு (வேறுபட்ட) கருத்துகளில் மிகவும் சரியான கருத்தின் படி, வேண்டுமென்றே வாந்தியை வரவழைத்து எடுப்பதன் மூலம் ஒரு நோன்பாளி நோன்பை முறிந்து விடுவார். எனினும், அவரின் கட்டுப்பாட்டை மீறி வாந்தி வருமேயானால் அதன் மூலம் நோன்பை முறித்து விடமாட்டார்.

ஏனெனில், அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில் நபி ﷺ அவர்கள்:

«مَنْ ذَرَعَهُ القَيْءُ ، فَلَيْسَ عَلَيْهِ قَضَاءٌ، وَمَنْ اسْتَقَاءَ عَمْدًا فَلْيَقْضِ»

 'எவரை (எந்த ஒரு நோன்பாளியை) மீறி வாந்தி வருமோ, அவர் மீது களா இல்லை. யார் வேண்டுமென்றே வாந்தியை வரவழைத்து எடுக்கின்றாரோ, அவர் களா செய்யட்டும்' என்று கூறியுள்ளார்கள்.

இப்னுல் முன்திர் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் கூறுகிறார்கள்:

"வேண்டுமென்றே வாந்தியை வரவழைத்து எடுப்பவரின் நோன்பு பாழாகிவிடும் என்பதில் மார்க்க அறிஞர்கள் ஒருமித்த கருத்தில் இருக்கின்றார்கள்". 

பிரயாணி மற்றும் நோயாளி தொடர்பான நோன்பின் சட்டங்களிலிருந்து உள்ளவை:

1. ஒரு பயணிக்கு ரமலான் மாதத்தில் அவர் பயணத்தில் உள்ள காலமெல்லாம் நோன்பை நோற்காமல் விட்டு விடுவது அனுமதிக்கப்பட்டதாகும். பின்னர் அவர் (நோன்பு நோற்காமல்) விட்ட நாட்களை (கணக்கிட்டு) களா செய்ய வேண்டும். 

ஏனெனில், அல்லாஹ்வின் கூற்றானது:

﴿فَمَن شَهِدَ مِنكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ وَمَن كَانَ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ)

'ஆகவே உங்களில் எவர் அம்மாதத்தை பெறுகிறாரோ அவர், அதில் நோன்பு நோற்றுவிடவும்; எவரேனும் நோயாளியாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால், மற்ற நாட்களில் ஏற்கனவே விடுபட்ட நோன்பினை) எண்ணி (நோற்று) விடவும்'. (அல்குர்ஆன் : 2:185) என்பதாகும். 

2. ரமலான் மாதத்தில் நோன்பு வைத்திருக்கும் பிரயாணி நோன்பு நோற்பதற்கும், நோன்பை விடுவதற்கும் மத்தியில் தேர்வு செய்து கொள்ள (அனுமதியளிக்கப்பட்டவர்) ஆவார். அது (நோன்பை விடும்பட்சத்தில் அதற்காக) களா செய்வதுடனாகும்.

ஏனெனில், ஸஹீஹ் புஹாரி மற்றும் முஸ்லிமில் பதிவாகியுள்ள ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் ஹதீஸில், ஹம்ஸா பின் அம்ர் அல்அஸ்லமீ (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் நபி ﷺ அவர்களிடம், 

 (أصُومُ فِي السَّفَرِ؟ وَكَانَ كَثِيرَ الصِّيَامِ ، فَقَالَ : إِنْ شِئْتَ فَصُمْ، وَإِنْ شِئْتَ فَأَفْطِرُ) 

‘‘பயணத்தில் நான் நோன்பு நோற்கலாமா?” என்று கேட்டார். அவர் அதிகம் நோன்பு நோற்பவராக இருந்தார். அதற்கு நபி ﷺ அவர்கள், ‘‘நீர் நாடினால் நோன்பு நோற்பீராக; மேலும் நீர் நாடினால் நோன்பை விட்டுவிடுவீராக!” என்று பதிலளித்தார்கள்.

அவ்விரண்டில் (ஒரு பயணி ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது, மேலும் நோன்பை விட்டு விடுவது என்பதற்கு மத்தியில்) எது சிறந்ததென மார்க்க அறிஞர்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர். நோன்பை விட்டு விடுவது சிறந்தது என (அறிஞர்களில்  ஒரு சாராரால்) கூறப்பட்டுள்ளது. அது அவர் அல்லாஹ்வுடைய சலுகையை எடுத்துக்கொண்டதால் ஆகும். மேலும் நோன்பை வைப்பது சிறந்தது எனவும் (ஒரு சாராரால்) கூறப்பட்டுள்ளது. அது அவர் (தன் மீதுள்ள) கடமையை நிறைவேற்றிவிட்டதால் ஆகும். இதுவே (இந்த  இரண்டாவது கருத்தே) சரியானதாகும். அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

3. ரமலான் மாதத்தின் பகல் வேளையில் ஒரு நோயாளி நோன்பை நோற்காமல் விட்டு விடுவது அவருக்கு அனுமதிக்கப்பட்டதாகும். அவர் (நோன்பு நோற்காது) விட்ட நாட்களை (கணக்கிட்டு மற்ற நாட்களில்) களா செய்ய வேண்டும். அதுபோலவே கர்ப்பிணிப்பெண்ணும், பாலூட்டும் தாயும் அவர்களின் உடல்நலம் குறித்தோ அல்லது அவர்களின் குழந்தையின் உடல் நலத்தை குறித்தோ அஞ்சினால் நோன்பு நோற்காமல் விட்டுவிட்டு களா செய்து கொள்ள வேண்டும். ஏனெனில், அவ்விருவரும் நோயாளியின் சட்டத்தைக் கொண்டுள்ளனர்.

 ஏனென்றால், அல்லாஹ்வின் கூற்றானது:

﴿فَمَن كَانَ مِنكُم مَّرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ)

'ஆனால் (அந்நாட்களில்) உங்களில் எவர் நோயாளிகளாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தாரோ (அவருக்கு நோன்பை விட்டுவிட அனுமதியுண்டு; விடுபட்ட நோன்புகளை) மற்ற நாட்களில் எண்ணி(நோற்றுவி)டவும்'. (அல்குர்ஆன் : 2:184) என்பதாகும்.

நோன்பை விட்டுவிடுவதை ஆகுமானதாக்கும் நோயானது, நோன்பு நோற்பதைக் கொண்டு எந்த நோய் அதிகரிக்குமோ அல்லது நிவாரணம் கிடைப்பது தாமதமாகும் என அஞ்சப்படுமோ அத்தகைய கடுமையான நோயே ஆகும்.

{وَمَا جَعَلَ عَلَيْكُمْ فِي الدِّينِ مِنْ حرج} 

'இந்த மார்க்கத்தில் அவன் உங்களுக்கு யாதொரு சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை'. (அல்குர்ஆன் : 22:78) என்ற அல்லாஹ்வுடைய கூற்றின் காரணமாக, மார்க்க அறிஞர்கள் பொதுவாக ஒரு நோயாளி நோன்பை நோற்காமல் விட்டு விடுவது அனுமதிக்கப்பட்டது என்பதில் ஒருமித்த கருத்தில் உள்ளனர்.
 
(எனினும்) எதனுடன் (எந்த நோயுடன்) நோன்பு நோற்பது சிரமமாகாதோ, மேலும் நோன்பிற்கு அதில் (அந்த நோயில்) எந்த ஒரு தாக்கமும் இருக்காதோ அத்தகைய லேசான நோய்க்கு இது மாற்றமானதாகும். 

இது நிச்சயமாக நோன்பை விடுவதை ஆகுமாக்காது. அவர் அல்லாஹ்வுடைய பொதுப்படையான (பின்வரும்) கூற்றில் நுழைந்துவிடுவதால் அவர் மீது நோன்பு நோற்பது கடமையாகும்.

{فَمَن شَهِدَ مِنكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ} 

'ஆகவே உங்களில் எவர் அம்மாதத்தை பெறுகிறாரோ அவர், அதில் நோன்பு நோற்றுவிடவும்.' (அல்குர்ஆன் : 2:185)



நோன்பு திறப்பது மற்றும் ஸஹர் செய்வது தொடர்பான சட்டங்களிலிருந்து உள்ளவை:

1. கண்ணால் பார்ப்பது அல்லது நம்பகத்தன்மை மிக்க நீதமான ஒருவரின் அறிவிப்பை கொண்டு சூரிய அஸ்தமனம் உறுதியானால், நோன்பு திறப்பதை விரைவுப்படுத்துவது விரும்பத்தக்கதாகும்.

ஏனெனில், ஸஹீஹ் புஹாரி மற்றும் முஸ்லிமில் பதிவான ஸஹ்ல் இப்னு ஸஅத் அவர்களின் ஹதீஸில் நபி ﷺ அவர்கள், 

 لَا يَزَالُ النَّاسُ بِخَيْرٍ مَا عَجَّلُوا الفِطْرَ

"மக்கள் நோன்பு திறப்பதை விரைவுப்படுத்தும் காலமெல்லாம் நன்மையிலேயே இருப்பார்கள்" என்று கூறியுள்ளார்கள்.

அது ஏனெனில், நோன்பு திறப்பதை விரைவுப்படுத்துவது என்பது கீழ்ப்படிவதைக் காட்டுகின்றது, மேலும் அதனை தாமதிப்பது என்பது வரம்பு மீறுதலைக் காட்டுகின்றது. (உதாரணமாக) யூதர்கள், கிறிஸ்தவர்கள் செய்வது போல், மேலும் நட்சத்திரங்கள் வெளிப்படும் வரை நோன்பு திறப்பதை தாமதிக்கும் சில வழிதவறிய கூட்டங்கள் செய்வது போலும் ஆகும். 

மேலும் சுனன் அபூதாவூதில் 

 لأن اليهود والنصارى يؤخرون

"ஏனெனில், யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் (நோன்பு திறப்பதை) தாமதிக்கின்றனர்" (என்று) வந்துள்ளது.

மேலும் இமாம் இப்னு ஹிப்பான் மற்றும் அல்-ஹாகிம் அவர்கள், ஸஹ்ல் அவர்களுடைய ஹதீஸை,  

لَا تَزَالُ أُمَّتِي عَلَى سُنَّتِي مَا لَمْ تَنْتَظِرْ بِفِطْرِهَا النُّجُومَ

"நோன்பு திறப்பதில் நட்சத்திரங்களை எதிர்பார்த்திருக்காத காலமெல்லாம், என்னுடைய உம்மத்தினர் என் வழிமுறையின் மீதே இருப்பர்" என்ற வாசகத்தில் அறிவித்துள்ளனர்.

2. ஸஹர் செய்வதன் விரும்பத்தக்கத் தன்மை

அல்லாஹ் கூறுகின்றான்:

{وَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يَتَبَيَّنَ لكم الخيط الأبيضُ مِنَ الْخَيْطِ الْأَسْوَدِ مِنَ الْفَجْرِ} 

'இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை) நேரத்தில் (இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து (அதிகாலை என்ற) வெள்ளை நூல் உங்களுக்குத் தெளிவாகும் வரை உண்ணுங்கள். இன்னும் பருகுங்கள்'. (அல்குர்ஆன் : 2:187) 

மேலும் ஸஹீஹ் புஹாரி மற்றும் முஸ்லிமில் உள்ள ஹதீஸில், இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதாக பதிவாகியுள்ளது. 

كان لرسول الله ﷺ مؤذنان بلال وابن أم مكتوم الأعمى فقال رسول الله ﷺ : إِنَّ بِلَالًا يُؤَذِّنُ بِلَيْلٍ، فَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يُنَادِيَ ابْنُ أُمِّ مَكْتُومٍ

'அல்லாஹ்வுடைய தூதர் ﷺ அவர்களுக்கு, பிலால் மற்றும் கண் பார்வையற்றவரான இப்னு உம்மி மக்தூம் என இரண்டு முஅத்தின்கள் (பாங்கு சொல்லுபவர்கள்) இருந்தார்கள். அல்லாஹ்வுடைய தூதர் ﷺ அவர்கள், "பிலால் இரவில் (ஃபஜ்ர் வருவதற்கு முன்பாக) பாங்கு சொல்லுகின்றார், எனவே நீங்கள் இப்னு உம்மி மக்தூம் பாங்கு சொல்லும் வரை உண்ணவும், பருகவும் செய்யுங்கள்" என்று கூறினார்கள். 

ஹதீஸ் அறிவிப்பாளர்களில் ஒருவரான காஸிம் பின் முஹம்மது அவர்கள் கூறினார்கள்: 

"அவ்விரண்டு (பாங்குகளு)க்கும் மத்தியில், அவர் (பிலால் பாங்கு மேடையிலிருந்து) இறங்குவதும், இவர் (இப்னு உம்மி மக்தூம் பாங்கு மேடைக்கு) ஏறுவதும் தவிர (அதிக நேரம்) இல்லை."

 (குறிப்பு: ஹதீஸில் இடம்பெறும் இந்த வாக்கியமானது சங்கிலித் தொடர் மற்றும் பொருளின் அடிப்படையில் பலவீனமானது. சங்கிலித் தொடரை பொருத்தவரையில் இது 'முத்ரஜ்' வகையைச் சார்ந்தது, அதாவது அறிவிப்பாளர் தன் புறத்திலிருந்து ஹதீஸுடன் கூடுதலாக சேர்த்ததாகும். மேலும் பொருளைப் பொருத்தமட்டில், நபி ﷺ அவர்கள் கூறிய "நீங்கள் இப்னு உம்மி மக்தூம் பாங்கு சொல்லும் வரை உண்ணவும், பருகவும் செய்யுங்கள்" என்ற விடயத்தை செயல்படுத்துவதற்கு முடியாத ஒன்றாக இருப்பதாலாகும். ஏனெனில், ஹதீஸில் கூடுதலாக வந்துள்ள இந்த வாக்கியத்தின் அடிப்படையில், இவர் ஏறுவதற்கும் அவர் இறங்குவதற்கும் மத்தியிலுள்ள நேரமானது ஒரு நோன்பாளி தூக்கத்திலிருந்து விழித்து ஸஹர் செய்வதற்கு போதுமானதாக இருக்காது - ஷைக் இப்னு உஸைமீன் அவர்களுடைய விளக்கவுரையின் சுருக்கம்) 
 
மேலும் ஸஹர் செய்வது விரும்பத்தக்கது என்பதன் ஆதாரங்களிலிருந்து உள்ளதாவது; ஸஹீஹ் புஹாரி மற்றும் முஸ்லிமில் உள்ள ஹதீஸில், அனஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதாக பதிவாகியுள்ளது. அல்லாஹ்வுடைய தூதர் ﷺ அவர்கள்: 

قال رسول الله ﷺ تَسَحرُوا فَإِنْ فِي السَّحُورِ بَرَكَةً 

"நீங்கள் ஸஹர் செய்யுங்கள். ஏனெனில், ஸஹர் நேர உணவில் நிச்சயமாக பரக்கத் உள்ளது" என்று கூறினார்கள். 

3. ஸஹர் செய்வதை பிற்படுத்துவதன் விரும்பத்தக்கத் தன்மை. 

ஏனெனில், ஸஹீஹ் புஹாரி மற்றும் முஸ்லிமில் (இடம்பெறும்) ஹதீஸில், ஸைத் இப்னு ஸாபித் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள்: 

تَسَحرْنَا مَعَ النَّبِيِّ ﷺ ، ثُمَّ قَامَ إِلَى الصَّلَاةِ، قُلْتُ كَمْ كَانَ بَيْنَ الْأَذَانِ وَالسَّحُورِ؟ قَالَ : قَدْرُ خَمْسِينَ آيَةً

'நாங்கள் நபி ﷺ அவர்களுடன் ஸஹர் செய்தோம், பின்னர் தொழுகைக்காக அவர்கள் எழுந்தார்கள். 'பாங்கிற்கும், ஸஹர் உணவிற்கும் மத்தியில் எவ்வளவு நேரம் இருந்தது?' என்று நான் கேட்டேன். (அதற்கு) 'ஐம்பது வசனங்கள் ஓதும் அளவிற்கான நேரம் இருந்தது' என்று கூறியதாக வந்துள்ளது.

நோன்பில் உள்ள சலுகைகள்:

1. எவரொருவர் மறந்த நிலையில் உண்ணவோ அல்லது பருகவோ செய்வாரோ, அவரது நோன்பு சரியானதாகும். உலமாக்கள் மத்தியிலுள்ள இரு (வேறுபட்ட) கருத்துகளில் மிகவும் சரியான கருத்தின்படி, அவர் மீது களா இல்லை. 

ஏனெனில், ஸஹீஹ் புஹாரி மற்றும் முஸ்லிமில், அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் ஹதீஸில், அல்லாஹ்வுடைய தூதர் ﷺ அவர்கள் கூறியதாக பதிவாகியுள்ளது. 

إِذَا نَسِي فَأَكَلَ وَشَرِبَ ، فَلْيُتِمَّ صَوْمَهُ، فَإِنَّمَا أَطْعَمَهُ اللَّهُ وَسَقَاهُ

''(உங்களில்) ஒருவர் மறந்து சாப்பிட்டாலோ, பருகினாலோ அவர் தன் நோன்பை முழுமைப்படுத்தட்டும். ஏனெனில், நிச்சயமாக அல்லாஹ்தான் அவருக்கு உணவளித்தான், நீர் புகட்டினான்". 

மறதியாளர் மீது களா செய்வது கடமை இல்லை என்று இந்த ஹதீஸ் காட்டிய கருத்தே, பெரும்பான்மையான மார்க்க அறிஞர்கள் கொண்டிருக்கும் சரியான நிலைப்பாடாகும். 

2. எவரொருவர் குளித்து அல்லது வாய் கொப்பளித்து அல்லது நாசிக்கு நீர் செலுத்தி, (அவரது) நாட்டமில்லாமல் (எதிர்பாராதவிதமாக) தண்ணீர் அவரது தொண்டையில் நுழைந்து விடுமோ, அவரது நோன்பு பாழாகிவிடாது. அவ்வாறே கொசு, பாதையில் உள்ள புழுதி, பொடி அல்லது அவைப் போன்றவை எவரது தொண்டையினுள் (எதிர்பாராதவிதமாக) நுழைந்து விடுமோ அவரது நோன்பும் முறிந்து விடாது.  ஏனென்றால், இவற்றை விட்டு தவிர்ந்து இருப்பது இயலாத ஒன்றாகும். மேலும் அவருக்கென எந்த நாட்டமும், சுயவிருப்பமும் இல்லாத காரணத்தினாலுமாகும். 

அல்லாஹ் கூறுகின்றான்:

{ولا يُكَلِّفُ اللهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا} 

"அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவிற்கும் அதன் சக்திக்கு மேல் சிரமம்கொடுப்பதில்லை". (அல்குர்ஆன் : 2:286).

3. ஒரு நோன்பாளிக்கு பெருந்தொடக்கின் காரணத்தினால் குளிப்பது ஆகுமானதாகும்.

ஏனெனில், ஸஹீஹ் புஹாரி மற்றும் முஸ்லிமில் பதிவாகியுள்ள ஹதீஸில் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் கூறியதாவது:

كان النبي ﷺ : يُدْرِكُهُ الفَجْرُ وَهُوَ جُنُبٌ مِنْ أَهْلِهِ، ثُمَّ يَغْتَسِلُ، وَيَصُومُ . 

"நபி ﷺ அவர்கள் தனது  மனைவியுடன் (இல்லறத்தில் ஈடுபட்டதன் காரணமாக) பெருந்தொடக்கு ஏற்பட்டவர்களாக ஃபஜ்ரை அடைவார்கள், பின்னர் குளித்துவிட்டு நோன்பைத் தொடர்வார்கள்".

4. ஒரு நோன்பாளிக்கு குளிர்ச்சிக்காக தனது தலையின் மீது தண்ணீரை ஊற்றுவதும், வாய் கொப்பளிப்பதும் ஆகுமானதாகும்.

நபித்தோழர்களில் ஒருவரிடமிருந்து இமாம் அபூதாவூத் அவர்கள் (பின்வருமாறு) அறிவிக்கின்றார்கள்,

( لَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ﷺ بِالْعَرْجِ يَصُبُّ عَلَى رَأْسِهِ الْمَاءَ، وَهُوَ صَائِمٌ مِنَ الْعَطَشِ، أَوْ مِنَ الْحَر)

 "அல்-அர்ஜ் என்ற இடத்தில் நபி ﷺ அவர்கள் நோன்பு நோற்றிருந்த இருந்த நிலையில், தாகம் அல்லது வெப்பத்தின் காரணமாக தனது தலையின் மீது தண்ணீர் ஊற்றுவதை திட்டமாக நான் கண்டேன்". 

5. எவர் ஃபஜ்ருடைய உதயத்தில் சந்தேகித்தவராக, மேலும் அதன் உதயம் அவருக்கு தெளிவற்று இருந்து, உண்ணவோ அல்லது பருகவோ செய்தால், அவரது நோன்பு சரியானதாகும். அவர் மீது எவ்வித களாவும் இல்லை.

ஏனென்றால், அல்லாஹ்வின் கூற்றானது:

لقوله تعالى : وَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يَتَبَيَّنَ لَكُم الْخَيْطُ الأَبْيَضُ مِنَ الْخَيْطِ الْأَسْوَدِ مِنَ الْفَجْرِ

'இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை) நேரத்தில் (இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து (அதிகாலை என்ற) வெள்ளை நூல் உங்களுக்குத் தெளிவாகும் வரை உண்ணுங்கள். இன்னும் பருகுங்கள்'. (அல்குர்ஆன் : 2:187) என்பதாகும். 

எனினும், எவரொருவர் சூரிய அஸ்தமனத்தில் சந்தேகித்தவராக, அது அஸ்தமித்து விட்டது என்பது அவருக்கு தெளிவற்றிருந்து, மேலும் அவருடைய (உள்ளத்தில்) அதன் அஸ்தமனம் பற்றிய எண்ணம் மிகைக்காத போது உண்ணவோ அல்லது பருகவோ செய்தால், அந்த நாளுடைய (நோன்பை) களா செய்வது அவர் மீது கடமையாகும். ஏனெனில், (இரவு தெளிவாகாத வரை) பகல் தொடர்ந்து இருப்பதே அடிப்படையாகும். 

6. ஒரு நோன்பாளி தனது இச்சை தூண்டப்படுவது மற்றும் (அதன் காரணமாக இச்சை நீர் அல்லது இந்திரியம்) ஏதேனும் தன்னிடமிருந்து வெளிப்படுவதை பயப்படாத வரை, அவருக்கு தனது மனைவியை முத்தமிடுவதும், உடலுறவுக்கு முன்புள்ள செயல்பாடுகளில் ஈடுபடுவதும் ஆகுமானதாகும்.

ஏனெனில், ஸஹுஹ் புஹாரி மற்றும் முஸ்லிமில் பதிவாகியுள்ள ஹதீஸில், ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் கூறியுள்ளதாவது:

كان النبي ﷺ : (يُقَبِّلُ وَيُبَاشِرُ وَهُوَ صَائِمٌ، وَكَانَ أَمْلَكَكُمْ لإربه)

"நபி ﷺ அவர்கள் நோன்பு நோற்ற நிலையில் (தனது மனைவியை) முத்தமிடவும் கட்டியணைக்கவும் செய்வார்கள். (என்றாலும்), அவர்கள் ﷺ உங்களிலேயே தனது உணர்ச்சிகளை அதிகம் கட்டுப்படுத்தக் கூடியவர்களாக இருந்தார்கள்". 

மேலும் ஸஹீஹ் புஹாரியில் உள்ள ஹதீஸில் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் கூறியதாவது:

إِنْ كَانَ رَسُولُ اللهِ ﷺ لَيُقَبِّلُ بَعْضَ أَزْوَاجِهِ وَهُوَ صَائِمٌ ، ثُمَّ ضَحِكَتْ 

‘'திட்டமாக அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் நோன்பு நோற்ற நிலையில் தம் துணைவியரில் சிலரை முத்தமிடக்கூடியவர்களாக இருந்தார்கள்” என்று சொல்லிவிட்டு பின்னர் அவர்கள் சிரித்தார்கள் (என்றுள்ளது).

மேலும் ஸஹீஹ் முஸ்லிமில் உள்ள ஹதீஸில் ஹஃப்ஸா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் கூறியதாவது: 

كَانَ النَّبِيُّ ﷺ يُقَبِّلُ وَهُوَ صَائِمٌ

"நபி (ﷺ) அவர்கள் நோன்பு நோற்ற நிலையில் (தம் துணைவியரை) முத்தமிடுபவராக இருந்தார்கள்". 

மேலும் ஸஹீஹ் புஹாரியில் உம்மு ஸலமா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களிடமிருந்து, 

كَانَ يُقَبِّلُهَا وَهُوَ صَائِمٌ

"நபி ﷺ அவர்கள் நோன்பு நோற்ற நிலையில் (தம் துணைவியரை) முத்தமிடுபவராக இருந்தார்கள்" என பதிவாகியுள்ளது.

ஒரு நோன்பாளி (தனது மனைவியை) முத்தமிடுவதும் தொடுவதும் ஆகுமானதாகும், மேலும் அவரது நோன்பு சரியானதாகும் என்பதை இந்த ஹதீஸ்கள் காட்டுகின்றன. 

இது அவர் (மதி, மணி) விரைவாக வெளிப்படும் தன்மையுடையவர் என்றிருப்பின், முத்தமிடுவது மற்றும் தொடுவதினால் மணி அல்லது மதியிலிருந்து ஏதேனும் வெளிப்படுவதை பயப்படாத வரையாகும். (மதி அல்லது மணியிலிருந்து) ஏதேனும் வெளியாகுவதை அவர் அஞ்சினால், தொடுவது மற்றும் முத்தமிடுவதை விட்டுவிடுவது அவர் மீது கட்டாயமாகும். 

ஏனெனில் ஹதீஸில், ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் கூற்றானது:

وَلَكِنَّهُ أَمْلَكُكُمْ لإربه

"என்றாலும், அவர்கள் ﷺ உங்களிலேயே தனது உணர்ச்சிகளை அதிகம் கட்டுப்படுத்தக் கூடியவர்களாக இருந்தார்கள்" என்று (வந்துள்ளதாலாகும்). 

இதற்குக் காரணம், பாழாக்குபவற்றை விட்டு நோன்பைப் பாதுகாப்பது கடமையாகும். மேலும் எந்த ஒன்றைக் கொண்டே தவிர ஒரு கடமையான விடயம் முழுமை பெறாதோ, அதுவும் (அந்த விடயமும்) கடமையானதாகும்.

எனவே, ஒரு நோன்பாளி (தனது மனைவியை) முத்தமிட்டு அல்லது தொட்டு, (அதன் காரணமாக) விந்து அவரிடமிருந்து வெளியாகிவிட்டால் அவரது நோன்பு பாழாகிவிடும். 

அது போலவே, (தனது மனைவியை நோக்கி) திரும்பத் திரும்பப் பார்த்து, பின்னர் (அதன் காரணமாக அவரிடமிருந்து மணி) வெளியேறினால், அவரது நோன்பும் பாழாகிவிடும். அவ்வாறே ஒருவர் சுய இன்பத்தில் ஈடுபட்டு மணியை வெளியேற்றினால், அவரது நோன்பும் பாழாகிவிடும். மேலும் அவர் மீது களா செய்வது கடமையாகும். (எனினும்) அவர்மீது எந்த பரிகாரமும் இல்லை. மாறாக பரிகாரம் என்பது உடலுறவில் ஈடுபடுவதற்கு மட்டுமே குறிப்பானதாகும். 

அதுவே, அவர் சிந்தித்து அதனால் (மணி) வெளியேறினால் அல்லது வேண்டுமென்றே என்றில்லாமல், திரும்பத் திரும்பப் (பார்க்காமல்) ஒரே பார்வையில் வெளியேறினால், (என இவ்விரண்டு சந்தர்ப்பங்களிலும்) அவரது நோன்பு பாழாகிவிடாது. ஏனெனில், (இவ்வாறு நடப்பதில்) அவருக்கென எந்த சுயவிருப்பமும் இல்லை. 

7. வயதான ஆண் மற்றும் வயதான பெண், அவ்வாறே நோயிலிருந்து குணமடைவது ஆதரவு வைக்கப்படாத நோயாளி ஆகியோர் நோன்பை விட்டுவிடலாம். மேலும் அவர்களில் ஒவ்வொருவரும் (நோன்பை விட்ட) ஒவ்வொரு நாளுக்கும் பகரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும். 

இது அவர்கள் நோன்பு நோற்க ஆற்றல் பெறாதவர்களாக இருந்தாலாகும் என்பது பெரும்பாலான மார்க்க அறிஞர்களின் கூற்றாகும். 

அவர்கள் கூறியதாவது:

وَعَلَى الَّذِيْنَ يُطِيْقُوْنَهٗ فِدْيَةٌ طَعَامُ مِسْكِيْنٍؕ 

"இன்னும், அதற்கு சக்தி பெற்றிருப்போர் மீது ஓர் ஏழைக்கு உணவளிப்பது பரிகாரமாகும்" (அல்குர்ஆன் : 2:184), என்ற வசனம் (அதிலுள்ள சட்டம்) மாற்றப்பட்டிருந்தாலும், தவிர வயோதிகம் அல்லது குணமடைவது ஆதரவு வைக்கப்படாத நோயின் காரணத்தினால் நோன்பு நோற்க ஆற்றல் பெறாதவர் மீது உணவளிக்கும் சட்டம் இன்னும் (மீதம்) உள்ளது என்பதாகும்.. 

மரணித்த ஒருவரின் (விடுபட்ட நோன்புகளை) நோற்பதென்பது (அவரது) பொறுப்பாளருக்கு விரும்பத்தக்கதாகும். அவருக்காக அவர் நோன்பு நோற்பது கூடும் (செல்லுபடியாகும்). மேலும் இதனால் இறந்தவர் (அவரின் மீதிருந்த கடமையிலிருந்து) நீங்கி விடுவார்.

ஸஹீஹ் புஹாரி மற்றும் முஸ்லிமில் இடம்பெறும் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் ஹதீஸில், நபி ﷺ அவர்கள் கூறியுள்ளதாவது, 

(من مات وَعَلَيْهِ صِيَامٌ صَامَ عَنْهُ وَلِيُّهُ) 

"எவரொருவர் தன் மீது கடமையான நோன்புகள் (மீதம்) இருக்கின்ற நிலையில் மரணித்துவிடுவாரோ, அவருக்கு பதிலாக அவரது பொறுப்பாளி நோன்பு நோற்பார்".

அவர் நாடினால் ஒவ்வொரு நாளும் (நோன்பு வைப்பதற்கு பதிலாக) ஒரு ஏழைக்கு உணவு அளிக்கலாம். ஒரு பொறுப்பாளர் நோன்பு நோற்பதற்கும் உணவளிப்பதற்கும் மத்தியில் (ஏதேனும் ஒன்றை) தேர்வு செய்துகொள்ள (அனுமதியளிக்கப்பட்டவர்) ஆவார்.


நோன்பாளியின் உறக்கம் பற்றியான சட்டங்களிலிருந்து உள்ளவை:

1. எவரொருவர் பகல் முழுவதும் உறங்கிவிடுவாரோ, அவரது நோன்பு சரியானதாகும். ஏனென்றால், உறக்கத்துடன் (எல்லா) உணர்வுகளும் நீங்கி விடுவதில்லை.

மேலும் எவரொருவர் பகல் பொழுது முழுவதும் சுயநினைவை இழந்துவிடுவாரோ, அவர் அந்நாளுடைய நோன்பைக் களா செய்ய வேண்டும். ஏனென்றால், அவர் (நோன்பு நோற்க) கடமையாக்கப்பட்டவர் ஆவார். 

மேலும் சுயநினைவை இழப்பதைக் கொண்டு உணர்ச்சிகளானது முற்றிலுமாக போய்விடும் (எனவே, அவரிடத்தில் நிய்யத் என்பது இருக்காது). புஹாரி மற்றும் முஸ்லிமில் பதிவான "நிச்சயமாக செயல்கள் யாவும் எண்ணங்களைக் கொண்டே அமைகின்றன. மேலும் ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியது மட்டுமே கிடைக்கின்றது" என்ற (நபியவர்களின் ﷺ) பொதுவான கூற்றின் அடிப்படையில் நிய்யத் என்பது அவர் மீது அவசியமான ஒன்றாகும்.

2. ஒரு நோன்பாளிக்கு நோன்பின் பகலிலே ஸ்கலிதம் ஏற்பட்டால்  அவர் குளித்துக் கொள்வார், மேலும் அவரது நோன்பானது சரியானதாகும். அது அதனை (நோன்பை) பாதிக்காது. ஏனென்றால், அவருக்கென அதிலே சுயவிருப்பமும், நாட்டமும் இல்லை. 

நிச்சயமாக அல்லாஹ் கூறியுள்ளான்:

وَلَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا

"அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவிற்கும் அதன் சக்திக்கு மேல் சிரமம் கொடுப்பதில்லை". (அல்-குர்ஆன் 2:286). 

3. ஒரு நோன்பாளி பெருந்தொடக்கு உடையவராக காலைப்பொழுதை அடைவாரெனில், அதாவது உடலுறவு அல்லது (உறக்கத்தில்) ஸ்கலிதம் ஏற்பட்டதன் காரணமாக பெருந்தொடக்கு உடையவராக அவர்மீது ஃபஜ்ர் உதயமாகி, அதன் உதயத்திற்கு பின்னரே தவிர அவர் குளிக்கவில்லை என்றாலும் சரியே, (நோன்பின்) நிய்யத்துடன், ஃபஜ்ர் உதயத்திற்கு முன்பு உணவு, குடிபானம் மற்றும் (நோன்பை) முறிக்கக் கூடிய விடயங்களை விட்டும் (தன்னைத்) தடுத்துக்கொள்வாரெனில்  அவரது நோன்பானது சரியானதாகும்.    

ஏனெனில், ஸஹீஹ் புஹாரி மற்றும் முஸ்லிமில் பதிவாகியுள்ள ஆயிஷா மற்றும் உம்மு ஸலமா (ரழியல்லாஹு அன்ஹுமா) ஹதீஸில், 

يُدْرِكُهُ الفَجْرُ وَهُوَ جُنُب مِنْ أَهْلِهِ، ثُمَّ يَغْتَسِلُ، وَيَصُومُ

"நபி ﷺ அவர்கள் தனது துணைவியாருடன் உடலுறவு கொண்டதன் காரணமாக பெருந்தொடக்குடையவராக ஃபஜ்ரை அடைவார்கள், பின்னர் குளித்துவிட்டு நோன்பைத் தொடர்வார்கள்", (என்றுள்ளது).  

ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: 

كَانَ النَّبِيُّ ﷺ: يُدْرِكُهُ الفَجْرُ فِي رَمَضَانَ مِنْ غَيْرِ حُلْمٍ، فَيَغْتَسِلُ وَيَصُومُ 

"நபி ﷺ அவர்கள் ரமலானில் தூக்கத்தில் ஏற்படும் ஸ்கலிதத்தினால் அன்றி (உடலுறவின் காரணமாக பெருந்தொடக்கு ஏற்பட்டவர்களாக) ஃபஜ்ர் பொழுது அவர்களை அடையும். பின்னர் குளித்துவிட்டு நோன்பைத் தொடர்வார்கள்".

மேலும் இந்த ஹதீஸ் காட்டுவதே சரியான கருத்தாகும். அதுவேபெரும்பாலான மார்க்க அறிஞர்கள் கொண்டிருக்கும் கருத்தாகும். 

அவருக்கு (காலைப் பொழுதை பெருந்தொடக்குடன் அடைபவருக்கு) நோன்பே கிடையாது என்ற மாற்றுக் கருத்து சில தாபியீன்களுக்கு இருந்தது.

பின்னர் இவ்வாறு மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள் தங்களின் நிலைபாட்டை விட்டு திரும்பியதால் கருத்து வேறுபாடு நீங்கி, இந்த ஹதீஸ் காட்டுவதன் மீதே (உலமாக்களின்) ஏகோபித்த முடிவானது நிலைபெற்றது. அது காலைப் பொழுதை பெருந்தொடக்குடன் அடைபவரின் நோன்பு சரியானதுதான் (என்பதாகும்).

4. அதுபோலவே மாதவிடாய் மற்றும் பிரசவ இரத்தப் போக்குடைய பெண், அவளின் இரத்தப் போக்கு நின்று, அவள் ஃபஜ்ர் உதயத்திற்குப் பின்பே தவிர குளிக்கவில்லை என்றாலும், அவளின் நோன்பு சரியானதாகும். 

நோன்பாளி கட்டாயமாக தவிர்ந்துக் கொள்ள வேண்டிய விடயங்களிலிருந்து உள்ளவை:

1. ரஃபஸ், மடமைத்தனம் மற்றும் பொய்யான பேச்சு. 

நோன்பாளியின் மீது ரஃபஸ் - அதாவது ஆபாசமான/அசிங்கமான பேச்சு, உடலுறவு மற்றும் அதற்கு முன்புள்ளவை - சப்தத்தை உயர்த்துதல், மடமைத்தனம், பொய்யான பேச்சு மற்றும் அதன்படி நடத்தல், திட்டுவது ஆகிய விடயங்கள் ஹராமாகும். அவரை எவரேனும் திட்டினால் அல்லது அவரிடத்தில் எவரேனும் சண்டையிட்டால், அவர் 'நிச்சயமாக நான் நோன்பாளி' என்று கூறட்டும். அதற்கு ஒப்பானதைக் கொண்டு அவரை எதிர்க்கொள்ள வேண்டாம்.

ஏனெனில் ஸஹீஹ் புஹாரி மற்றும் முஸ்லிமில், அபூஹுரைராவின் ஹதீஸில் நபி ﷺ அவர்கள் கூறியதாக பதிவாகியுள்ளது. 

«الصَّيَامُ جُنَّةٌ، وَإِذَا كَانَ يَوْمُ صَوْمِ أَحَدِكُمْ فَلَا يَرْفُثْ وَلَا يَصْخَبْ، فَإِنْ سَابَّهُ أَحَدٌ أَوْ قَاتَلَهُ، فَلْيَقُلْ إِنِّي امْرُؤٌ صَائِمٌ 

"நோன்பு என்பது கேடயமாகும். உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருந்தால், அவர் ஆபாசமாக/அசிங்கமாக பேசவோ, சப்தத்தை உயர்த்தவோ கூச்சலிடவோ வேண்டாம். அவரை யாரேனும் திட்டினால் அல்லது அவரிடத்தில் சண்டையிட்டால், 'நிச்சயமாக நான் நோன்பாளி' என்று கூறவும்". 

புஹாரியின் மற்றொரு அறிவிப்பில் அபூஹுரைராவின் ஹதீஸில் நபி ﷺ அவர்கள் கூறியதாக மற்றொரு வாசகத்தில் வந்துள்ளது.

الصِّيَامُ جُنَّةٌ فَلا يَرْفُث وَلَا يَجْهَلْ، وَإِنِ امْرُؤٌ قَاتَلَهُ أَوْ شَاتَمَهُ فَلْيَقُلْ : إِنِّي صَائِمٌ مَرَّتَيْنِ

"நோன்பு என்பது கேடயமாகும். எனவே அவர் ஆபாசமாக/அசிங்கமாக பேசவோ, மடமைத்தனத்துடன் நடந்துகொள்ளவோ வேண்டாம். அவரிடத்தில் யாரேனும் சண்டையிட்டால் அல்லது அவரைத் திட்டினால், "நிச்சயமாக நான் நோன்பாளி", என இரண்டு முறை கூறவும்". 

மேலும் ஸஹீஹ் புஹாரியில் அபூஹுரைரா கூறியதாக (மற்றொரு) ஹதீஸில் பதிவாகியுள்ளது. 

நபி ﷺ கூறினார்கள்: 

«مَنْ لَمْ يَدَعْ قَوْلَ الزورِ وَالعَمَلَ بِهِ، فَلَيْسَ لِلَّهِ حَاجَةٌ فِي أَنْ يَدَعَ طَعَامَهُ وَشَرَابَهُ 

"யார் பொய்யான பேச்சையும் மற்றும் அதன்படி நடப்பதையும் கைவிடவில்லையோ, அவர் அவருடைய உணவையும் பானத்தையும் விடுவதில் அல்லாஹ்விற்கு எவ்விதத் தேவையுமில்லை". 

இமாம் புஹாரியின் ஸஹீஹில் 'கிதாபுல் அதப்' எனும் தலைப்பினுள் (மற்றொரு) வாசகத்தில் (இவ்வாறாக) பதிவாகியுள்ளது. 

مَنْ لَمْ يَدَعْ قَوْلَ النُّورِ وَالعَمَلَ بِهِ وَالجَهْلَ، فَلَيْسَ لِلَّهِ حَاجَةٌ أَنْ يَدَعَ طَعَامَهُ وَشَرَابَهُ

"யார் (நோன்பு நோற்றுக்கொண்டு) பொய்யான பேச்சையும் அதன்படி செயல்படுவதையும், மடமைத்தனத்தையும் கைவிடவில்லையோ, அவர் (வெறுமனே) தமது உணவையும் பானத்தையும் விடுவதில் அல்லாஹ்விற்கு எந்தத் தேவையுமில்லை".

2. (உளூ செய்யும் தருணம்) நாசிக்கு நீர் செலுத்தும் போது, அது (அந்-நீரானது) ஆழமாக செல்லும் அளவிற்கு மிகைப்படுத்தி செய்வதென்பது ஒரு நோன்பாளிக்கு (ஆகுமானதாக) இல்லை. இது அவரது தொண்டைக் குழியினுள் நீர் சென்று விடும் என்ற அச்சத்தின் காரணத்தினால் ஆகும்.

ஏனெனில், லகீத் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் ஹதீஸை ஸுனனுடைய மக்கள் அறிவிக்கின்றார்கள். மேலும் இப்னு குஃஸைமா இதனை ஸஹீஹ் என்று கூறியுள்ளார்கள்.

நபி ﷺ அவர்கள் அவரிடத்தில் கூறியதாவது:

وَبَالِغُ فِي الاسْتِنْشَاقِ إِلَّا أَنْ تَكُونَ صَائِمًا

"நாசிக்கு நீர் செலுத்தும் போது ஆழமாக செல்லும் அளவிற்கு செய், (அத்தருணம்) நீ நோன்பாளியாக இருந்தாலே தவிர".

3. அவரின் தொண்டைக் குழியை அடைந்துவிடாமல் இருப்பதற்காக, மூக்கில் இடப்படும் சொட்டு மருந்து/பொடி (போன்றவைகளை) பயன்படுத்துவதை விட்டுவிடுவது உகந்ததாகும். ஏனெனில், மூக்கு (அதன் துவாரமானது தொண்டைக் குழியின்) திறப்பாகும். 

கண் மற்றும் காதில் இடப்படும் சொட்டு மருந்துகள், அதைப்போன்று கண்ணில் போடப்படும் சுர்மா முதலியவற்றைப் பொறுத்தவரையில், உலமாக்களில் அவற்றைத் தடைசெய்பவர்களின் கருத்துக்கு வேறுபடுவதிலிருந்து வெளியேறும் நிமித்தம், இரவு வரைக்கும் அவைற்றைப் பயன்படுத்துவதைத் தாமத்தப்படுத்துவதே உகந்ததாகும். அவை நோன்பை முறிக்கும் என்பதற்கு ஆதாரம் ஏதும் இல்லாததன் காரணத்தினால், இவற்றால் (ஒரு நோன்பாளி) நோன்பை முறித்துவிட மாட்டார் என்பதே சரியான கூற்றாக இருந்த போதிலும், இந்த மிகப்பெரும் இபாதத்தில் பேணுதலாக இருப்பதே உகந்ததாகும். 

நோன்பாளிக்கு ஷரீஅத்தாக்கப்பட்ட விடயங்களிலிருந்து உள்ளவை:

1. மிஸ்வாக் செய்வது நோன்பாளிக்கு மார்க்கமாக்கப்பட்ட ஒன்றாகும், மேலும் ஒவ்வொரு தொழுகை மற்றும் உளூவின் பொழுதும் (அதனைச் செய்வது) விரும்பத்தக்கதாகும். 

ஏனெனில், ஸஹீஹில் அபூஹுரைராவின் ஹதீஸில் நபி ﷺ அவர்கள் கூறியதாக பதிவாகியுள்ளது. 

لَوْلَا أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي أَوْ عَلَى النَّاسِ لَأَمَرْتُهُمْ بِالسَّوَاكِ مَعَ كُلِّ صَلَاةِ 

"என்னுடைய உம்மத்தின் மீது அல்லது மக்களின் மீது நான் சிரமத்தை ஏற்படுத்திவிடுவேனோ என்ற (அச்சம் மட்டும்) இல்லையாயின், ஒவ்வொரு தொழைகைக்கும் மிஸ்வாக் செய்யுமாறு நிச்சயமாக அவர்களை நான் ஏவியிருப்பேன்".

மேலும் (மற்றொரு) வாசகத்தில், 

لَوْلَا أَنْ أَشقّ عَلَى أُمَّتِي لَأَمَرْتُهُمْ بِالسَّوَاكِ عِنْدَ كُلِّ وُضوء

"என்னுடைய உம்மத்தின் மீது நான் சிரமத்தை ஏற்படுத்திவிடுவேனோ என்ற (அச்சம் மட்டும்) இல்லையாயின், ஒவ்வொரு உளூவின் போதும் மிஸ்வாக் செய்யுமாறு நிச்சயமாக அவர்களை நான் ஏவியிருப்பேன்" என்றுள்ளது.  

இப்னு குஃஸைமா அவர்களுடைய ஸஹீஹில் கூறியுள்ளார்கள்: நோன்பாளி, நோன்பு வைக்காதவர் என (மிஸ்வாக் செய்வதில் நபி ﷺ அவர்கள் பிரித்துபார்த்து) விதிவிலக்கு அளிக்கவில்லை.

திர்மிதி, அபூதாவூத் மற்றும் அஹ்மத் ஆகியோர் ஆமிர் பின் ரபீஆ கூறியதாக அறிவிக்கின்றார்கள். 

رَأَيْتُ النَّبِيِّ ﷺ مَا لَا أُحْصِي يَتَسَوَّك وَهُوَ صَائِمٌ 

"நபி ﷺ அவர்களை நோன்பு வைத்த நிலையில், நான் எண்ணமுடியாத அளவிற்கு (அதிகமாக) அவர்கள் ﷺ மிஸ்வாக் செய்வதை கண்டேன்". 

இதனுடைய சங்கிலித் தொடரில் ஆஸிம் பின் உபய்த் பின் ஆஸிம் பின் உமர் பின் கஃத்தாப் உள்ளார். இவரை புஹாரி, இப்னு மயீன் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட அறிஞர்கள் பலவீனமானவர் எனக் கூறியுள்ளனர்.

எனினும் திர்மிதி அவர்கள் கூறியுள்ளதாவது: உலமாக்களிடத்தில் இந்த (ஹதீஸின்)படி அமல் செய்வது; நாளின் ஆரம்பத்திலோ, இறுதியிலோ ஒரு நோன்பாளி மிஸ்வாக் செய்வதில் எவ்வித பிரச்சனையையும் அவர்கள் (உலமாக்கள்) காணவில்லை என்பதாகும்.

எனவே, நாளின் ஆரம்பத்திலும் இறுதியிலும் மிஸ்வாக் செய்வது ஷரீஅத் ஆக்கப்பட்ட ஒன்றாகும் என்பதே சரியான கருத்தாகும். எனினும், நிபந்தனையானது; மிஸ்வாக் சிதைந்து விடாமல் இருத்தலும் மேலும் (அச்)சிதைந்த துண்டுகள் தொண்டையினுள் சென்று விடாமல் இருத்தலும் வேண்டும். அதைப்போன்று ஈறுகளை காயப்படுத்துமளவுக்கு கடினமாக இல்லாமலும் மேலும் அதில் மக்கள் சுவைக்காக இடக்கூடிய வேறேதேனும் இல்லாதிருத்தலும் வேண்டும்.  

2. ஒருவர் ரமழானின் பகல் நேரத்தில், எவரையேனும் நோன்பு வைத்த நிலையில் மறந்தவராக சாப்பிடுவதை அல்லது குடிப்பதைக் கண்டால், அவரிடம் (அதுகுறித்து) தெரியப்படுத்துவது அவர் மீது கடமையாகும். ஒரு சில பாமர மக்கள் எண்ணுவது போன்று, அது விடயத்தில் அமைதியாக இருப்பது ஆகுமானதல்ல. ஏனெனில், இது நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பதாகும். மேலும் ரமலானின் பகல் நேரத்தில் சாப்பிடுவதும், குடிப்பதும் ஒரு நோன்பாளியிடமிருந்து (நிகழ்வது) என்பது தீமையான விடயமாகும். ஆயினும், மறந்தவர் குற்றம்பிடிக்கப்பட மாட்டார். எனவே, அவரிடத்தில் தெரியப்படுத்துவது கடமையாகும். ஏனெனில், இது நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வதிலிருந்து உள்ள விடயமாகும். 

வெளியேரும் இரத்தம் தொடர்பான நோன்பின் சட்டங்கள்:

மனிதனிடமிருந்து வெளியேறும் இரத்தமானது (வெவ்வேறு) வகைகளில் உள்ளன: 

1. மூக்கு அல்லது காயங்களிலிருந்து வெளியேறும் இரத்தம், கொப்பளங்களிலிருந்து வெளியேறும் இரத்தம் மேலும் அது போன்றவை. இவை நோன்பில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. மாறாக, நோன்பானது சரியானதாகும். 

2. பெண்ணிடத்திலிருந்து வெளியேறும் தொடர் உதிரப்போக்கானது, நோன்பில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. அது வெளியேறினாலும் கூட அவளுடைய நோன்பானது சரியானதாகும். எவ்வாறு (அவள்) தொழுவது மற்றும் கஃபாவை தவாஃப் செய்வதை விட்டும் தடுக்கப்படமாட்டாளோ, மேலும் அவளுடைய கணவன் அவளுடன் (உடலுறவு கொள்வதிலிருந்து) தடுக்கப்பட மாட்டாரோ, (அவ்வாறே நோன்பு நோற்பதை விட்டும் அவள் தடுக்கப்படமாட்டாள்).   

ஏனென்றால், அதற்கென ஒரு விதி என்பது இல்லை. அது தொடர்ந்து வரக்கூடிய ஒன்றாகும். எனவே, அது மூக்கு மற்றும் காயங்களிலிருந்து வெளியேறும் இரத்தத்தை போன்றதாகும்.

எவ்வாறு மாதவிடாய் மற்றும் பிரசவ (இரத்தப் போக்குடன்) அவள் இந்த வணக்கவழிபாடுகள் மற்றும் விடயங்களிலிருந்து தடுக்கப்படுவதை ஆதாரங்கள் காட்டுகின்றதோ அது போன்று, அவளை இந்த வணக்கவழிபாடுகளில் இருந்து தடுக்கும் எந்தவொரு ஆதாரமும் அதனுடன் (தொடர் உதிரப்போக்குடன்) இல்லை. 

3. நோன்பாளியுடைய பல்லானது பிடுங்கப்பட்டு/விழுந்து, அவர் அந்த இரத்தத்தை விழுங்காமல் உமிழ்ந்துவிட்டாரெனில், அவருடைய நோன்பானது சரியானதாகும். ஏனெனில், இது விடயங்களில் அவருக்கென எந்த சுயவிருப்பமும் இல்லை. 

அதைக் கொண்டு நோன்பு பாதிப்படையும், மேலும் அது நோன்பை பாதிக்கும் என்பதற்கும் எந்த ஒரு ஆதாரமும் இல்லை. அடிப்படை என்னவென்றால் ஒரு முஸ்லிமுடைய நோன்பு சரியானதாகும், அது பாழாகிவிடும் என்பதைக் காட்டும் ஆதாரம் இருந்தாலே தவிர. இங்கே எந்தவொரு ஆதாரமும் இல்லை.

4. மாதவிடாய் மற்றும் பிரசவ இரத்தப் போக்குடைய பெண் ஆகிய இருவருக்கும், நோன்பு வைப்பது ஆகுமானதல்ல. அவர்கள் இருவரும் ரமலானில் நோன்பை விட்டுவிட்டு களா செய்து கொள்ள வேண்டும். மேலும் அவ்விருவரும் நோன்பு நோற்றார்களெனில், அது அவர்களுக்கு பயனளிக்காது.  இது விடயத்தில் உலமாக்கள் ஒருமித்த கருத்தில் இருக்கின்றார்கள்.  

ஏனெனில், ஸஹீஹ் புஹாரி மற்றும் முஸ்லிமில் முஆதா (ரழியல்லாஹு அன்ஹா) கூறியுள்ளதாக பதிவாகியுள்ளது. 

سَأَلْتُ عَائِشَةَ فَقُلْتُ : مَا بَالُ الْحَائِضِ تَقْضِي الصَّوْمَ، وَلَا تَقْضِي الصَّلَاةَ. فَقَالَتْ: أَحَرُورِيَّةٌ أَنْتِ؟ قُلْتُ : لَسْتُ بِحَرُورِيَّةٍ، وَلَكِنِّي أَسْأَلُ. قَالَتْ : كَانَ يُصِيبُنَا ذَلِكَ، فَنُؤْمَرُ بِقَضَاءِ الصَّوْمِ، وَلَا نُؤْمَرُ بِقَضَاءِ الصَّلَاةِ (۳).

"ஏன் ஒரு மாதவிடாய் பெண் நோன்பை களா செய்கிறாள், (ஆனால்) தொழுகையை களா செய்வதில்லை?" என்று நான் ஆயிஷாவிடம் கேட்டேன். அவர்கள்: "நீ ஹரூரிய்யாஹ் (கூட்டத்தைச் சேர்ந்தவளா)?" என்று கேட்டார்கள். "நான் ஹரூரிய்யாஹ் (கூட்டத்தைச் சேர்ந்தவள்) அல்ல. எனினும் (அறிந்து கொள்வதற்காக) கேட்கின்றேன்", எனக் கூறினேன். "அது (மாதவிடாய்) எங்களுக்கு ஏற்படக்கூடியதாக இருந்தது. நாங்கள் நோன்பை களா செய்யுமாறு ஏவப்பட்டோம், மேலும் தொழுகையை களா செய்யுமாறு ஏவப்படவில்லை", என பதிலளித்தார்கள்.  

மேலும் ஸஹீஹ் புஹாரியில் உள்ள ஹதீஸில் அபூ ஸயீத் (ரழியல்லாஹு அன்ஹு) கூறியதாக பதிவாகியுள்ளது.

قال النبي ﷺ أَلَيْسَ إِذَا حَاضَتْ لَمْ تُصَلِّ وَلَمْ تَصُمْ قُلْنَ: بَلَى، قَالَ: فَذَلِكِ مِنْ نُقْصَان دِينِهَا 

"(ஒரு பெண்) மாதவிடாய் ஏற்படும் போது தொழாமலும் நோன்பு நோற்காமல் இருப்பதில்லையா?" என்று நபி ﷺ அவர்கள் கேட்டார்கள். அவர்கள் (அப்பெண்கள்): 'ஆம்' என்று பதிலளித்தார்கள். "அதுவே அவளுடைய மார்க்கத்தில் உள்ள குறைபாடாகும்", என நபி ﷺ அவர்கள் கூறினார்கள்". 

இது பெண்களுக்கு அல்லாஹ் செய்திருக்கும் ரஹ்மத்திலிருந்து உள்ளதாகும். ஏனெனில், தொழுகையானது பகலிலும் இரவிலும் ஐந்து முறை திரும்பத் திரும்ப வரக்கூடியது. எனவே, அதனைக் களா செய்வதென்பது சிரமத்தை ஏற்படுத்தும். ஆனால், நோன்போ வருடாந்திர வழிபாடாகும்; ஒரு வருடத்தில் ஒரு முறையே தவிர இல்லை. எனவே, அதனைக் களா செய்வது கடமையாகும். மேலும் அது (ஒருவருக்கு) சிரமத்தையும் ஏற்படுத்தாது. இதில் (இத்தகைய சட்டத்தில்) ஒரு பெண்ணுக்கு நலனுள்ளது.

ஒரு நோன்பாளியான பெண்ணிடமிருந்து பகல் நேரத்தின் ஏதேனும் ஒரு பகுதியில், மாதவிடாய் அல்லது பிரசவ இரத்தம் வந்தால் - அது (பகலின்) ஆரம்பத்தில் அல்லது அதன் இறுதியில் வந்தாலும் சரி, சூரிய அஸ்தமனத்திற்கு ஒருகணம் முன்பாக வந்தாலும் சரி - அந்த நாள் (அந்நாளில் நோன்பானது) பாழாகிவிடும். 

மேலும் அந்த நாளுடைய நோன்பைக் களா செய்வது அவள் மீது கடமையாகும். 

அல்லாஹ்விடத்தில், அமல்களில் நமக்கு இஃக்லாஸையும், மேலும் எதை செய்கின்றோமோ, எதை விட்டு விடுகிறோமோ அவற்றில் நல்ல நாட்டத்தையும், சரியான நிய்யத்தையும், நல்லமலையும், மேலும் சொற்களிலும், செயல்களிலும் உண்மைத்தனத்தையும் கேட்கின்றோம். நிச்சயமாக அவன் மிகப்பெரும் கொடையாளியும், பெரும் தயாளனும் ஆவான். 

அல்லாஹ்வே ஈடேற்றமளிப்பவனும் , நேரான பாதையின் பக்கம் வழிகாட்டுபவனும் ஆவான். அல்லாஹ்வுடைய சலாத்தும், ஸலவாத்தும் நம்முடைய நபி ﷺ அவர்கள் மீதும், அவர்களுடைய குடும்பத்தார் மற்றும் அவர்களுடைய தோழர்கள் யாவரின் மீதும் உண்டாவதாக.


- தமிழாக்கம்:
மக்தபாஹ் அஸ்ஸுன்னாஹ் வ அஸ்ஸலஃபிய்யாஹ், மேலப்பாளையம்.
أحدث أقدم