ஆசிரியர்: முஹம்மத் யூசுஃப் மிஸ்பாஹி,
வெளியிடு : புர்கான் டிரஸ்ட்
சாந்தியும் சமாதானமும் நிலவட்டும்! அமைதி தழைக்கட்டும்!
இஸ்லாம் வாழ்வின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மிகச் சரியான வழியைக் காட்டியுள்ளது. இது சில்லறைப் பிரச்சினை என்று எந்த விஷயங்களையும் விட்டுவிடாமல், அவற்றிற்கும் கூட தெளிவான விளக்கத்தை இஸ்லாம் வழங்கியுள்ளது. அவ்வாறே ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமைச் சந்திக்கும்போது நடந்துகொள்ளும் முறையையும் அறிவுப் பூர்வமாகக் கூறியுள்ளது. அது பற்றி நாம் ஆராயக் கடமைப்பட்டுள்ளோம்.
உலகில் ஒருவர் மற்றொருவரைச் சந்திக்கும்போது பல வகையான சொற்களைக் கூறுகின்றனர். வணக்கம் என்றும், நமஸ்தே என்றும் நமஸ்காரம் என்றும், ஹலோ என்றும், (Good Morning, Good Evening, Good Night) என்றும் பல வகையான சொற்களைப் பயன்படுத்துகின்றனர்.
சல்யூட் அடிப்பது, குனிவது, பணிவது போன்றவை ஒருபுறமும் கீழ் ஜாதியினராகிய ஒருபிரிவினர் மேல் சாதியினரான இன்னொரு பிரிவினரைக் காணும்போது தம் மேல் துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொள்வது ஒரு புறமும், மூக்குடன் மூக்கை உரசிக் கொள்வது, எழுந்து நிற்பது, நெடுஞ்சாண்கிடையாக தரையில் வீழ்ந்துவிடுவது போன்ற செயல்கள் இன்னொரு புறமுமாக மக்கள் தம் முகமன்களைத் தெரிவித்துக் கொள்கின்றனர். இவற்றுள் மிகச் சிறப்பானதொரு முறையை இஸ்லாம் கற்றுத் தருகிறது.
நேரம், காலம், இடம் போன்ற அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டதாகவும், மனிதனின் சுயமரியாதையைப் பாதிக்கும் பணிதல், குனிதல் போன்ற எதுவும் அற்ற ஒரு சமத்துவமான சந்திப்பு முறையைக் கொண்டதாகவும் இருக்கிறது.
Good Morning என்றால் காலை நலமாகட்டும் என்று பொருள். Good Evening என்றால் மாலை நலமாகட்டும் என்று பொருள். சவூதி அரேபியர்கள் கூடத் தற்காலத்தில் அதே பொருள் கொண்ட (ஸபாஹல் கைர்) எனும் வார்த்தையை முகமன் கூறும் போது பயன்படுத்துகின்றனர். இதைக் கேட்பவர் அதேமாதிரியான பதில் கூறுகிறார். இவர்கள் மேலை நாட்டவர்களைப் பார்த்துத் தம் உன்னதக் கோட்பாடுகளை மாற்றுகின்றனர்.
உலகிலேயே சீரிய கோட்பாடுகளுக்கும் பழக்க வழக்கங்களுக்கும், பண்பாட்டிற்கும், உயர்ந்த கலாச்சாரத்துக்கும் சொந்தக்காரர்கள் முஸ்லிம்கள், இவர்கள் தான் உலகிற்கே நாகரீகத்தைக் கற்றுத் தந்தவர்கள், இன்றும் கற்றுத்தர வேண்டியவர்கள். இவர்கள் தங்கள் சிறந்த கலாச்சாரத்தை விட்டுவிட்டு, மாற்றாரின் கலாச்சாரத்தைப் பின்பற்ற ஆரம்பித்துள்ளது வேதனையளிக்கிறது. இவர்கள் பின்பற்றும் மாற்றாரின் கலாச்சாரம் இஸ்லாமியக் கலாச்சாரத்தை விட எந்த வகையிலும் உயர்ந்ததாக இல்லை என்பது கவனிக்கத் தக்கது.
காலை நலமாகட்டும் (ஸபாகல் கைர்) என்று முகமன் கூறுவது எல்லா நேரத்திற்கும் பொருந்தாது. இவ்வுலகில் எல்லோருக்கும் எல்லா நேரத்திலும் நல்ல காலையாக, நல்ல மாலையாக அவை அமைந்திருப்பதில்லை. ஒருவரின் வாழ்வில் அன்று துக்கமான நிகழ்ச்சி நடந்திருக்கலாம். அது மனித வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்று. அவரிடம் நாம் காலை நலமாகட்டும் புழழன ஆழசniபெ என்று கூறினால், அது பொருத்தமாக அமையாது. ஏனெனில் அன்று அவருக்கு அது கெட்ட காலையாக அல்லவா இருக்கிறது?
எனவே, இதுபோன்ற கருத்துப் பிழை இல்லாத, எந்நேரத்திற்கும் பொருந்துகின்ற வாக்கியம்தான் “அஸ்ஸலாமு அலைக்கும்" என்பதாகும். இதன் பொருள் சாந்தி உங்கள் மீது நிலவட்டும் என்பதாகும்.
எந்த நேரத்திலும், எவரைச் சந்திக்கும் போதும் நாம் இந்த வாக்கியத்தைக் கூறலாம், எல்லா நேரத்திற்கும் மிகப்பொருத்தமாகவே இது அமைந்துள்ளது. இறந்தவருடைய குடும்பத்தைச் சார்ந்த வீடு என்றோ, திருமண இல்லத்தார் என்றோ வித்தியாசம் பார்க்கவேண்டியதில்லை.
மனித வாழ்வில் சோகமான நிகழ்ச்சிகள் நடந்தாலும், மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடந்தாலும் அவனுக்கு அமைதி தேவையான ஒன்றாகவே இருக்கிறது. எப்போதும் இறையருள் தேவைப்பட்டவனாகவே மனிதன் இருக்கிறான். சாந்தி, சமாதானம் இன்றித் தவிக்கும் இக்காலச் சூழலிலும் சரி, எக்காலச் சூழலிலும் சரி இதுவே மனித சமூகத்திற்கு மிகவும் பொருத்தமான வாக்கியமாகும் என்பதில் எள்ளவும் ஐயமில்லை.
'அஸ்ஸலாமு அலைக்கும்" எனும் வாக்கியத்தின் பொருளை உணர்ந்து ஒருவர் அதைக் கூறினால், நிச்சயமாக இவ்வுலகில் சண்டைகளோ, சச்சரவுகளோ, மனக்கசப்புகளோ அறவே தோன்றாது.
ஒரு மனிதன் மற்றொரு மனிதனைச் சந்திக்கும் போதெல்லாம் ஒருவருக்கொருவர் சாந்தி நிலவ வேண்டும் என்று உளப்பூர்வமாகப் பிரார்த்தித்துக் கொண்டால், அவர்கள் ஊறுவிளைவித்துக் கொள்ள எப்படி எண்ணுவார்கள்?
சிலர் வணக்கம் என்று முகமன் கூறுகின்றனர். உண்மையில் வணங்கி வழிபடத் தகுதியானவன் நம் அனைவரையும் படைத்துப் பரிபாலிக்கின்ற இறைவன் ஒருவனே என்பதை உணர வேண்டும், வணக்கத்திற்குரிவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமே இல்லை. நம்மைப் போன்ற மனிதர்களிடம் நாம் அன்பு பாராட்ட வேண்டும், மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கக்கூடாது. ஒருவன் தன்னைப் போன்ற மனிதனுக்கு வணக்கம் செலுத்தவே கூடாது.
ஒருவர் மற்றொருவரைச் சந்திக்கும்போது; கைகூப்பி வணங்கிக் கொள்கின்றனர். அது, என்னைத் தொட்டு விடாதே, தள்ளி நில் என்பதைப் போன்றுள்ளது (!) இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் ஒருவரையொருவர் சந்திக்கும்போது சாந்தி நிலவப் பிரார்த்திப்பதுடன் இருவரும் கை கொடுத்து ஒருவரையொருவர் வரவேற்றுக் கொள்கின்றனர்.
''நபி(ஸல்) அவர்களின் தோழர்களிடம் (இருவர் சந்தித்துக் கொள்ளும்போது) (முஸாஃபஹா எனும்) கை கொடுத்தல் இருந்ததா என்று நான் அனஸ்(ரலி) அவர்களிடம் கேட்டதற்கு, அவர்கள் ''ஆம்"" என்றார்கள்"" என கதாதா(ரலி) அறிவிக்கிறார். நூல்: புகாரி, திர்மிதி
உன் சகோதரன் முகத்தைப் புன்முறுவலுடன் பார்ப்பது உட்பட எந்தவொரு நற்காரியத்தையும் தாழ்வானதாகக் கருதாதே என்று என்னிடம் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூதர்(ரலி) அறிவிக்கிறார். நூல்: முஸ்லிம்
இவ்வாறு இருவர் சந்திக்கும்போதே தீண்டாமையைக் களைந்தெறிகிறது இஸ்லாம். மேலும், ஸலாமைப்பரப்புவது சுவனத்தில் சேர்க்கின்ற செயல் என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஸலாமைப் பரப்புவதால் நீங்கள் ஒருவரையொருவர் மிக அதிகமாக நேசிக்க ஆரம்பிக்கிறீர்கள். அதனால் உங்களுக்கிடையில் பகைமை, போட்டி, பொறாமை தோன்ற வழியில்லை. எனவே, உலகில் தீமைகள் நிகழாமல் அமைதியாக வாழ முற்படுகிறீர்கள். இதனால் சுவனம் செல்வது எளிதாகிவிடுகிறது என்று இஸ்லாம் குறிப்பிடுகின்றது.
''உங்களுக்கு நம்பிக்கை (ஈமான்) பிறக்கும் வரை நீங்கள் சுவனத்தில் நுழைய முடியாது. உங்களில் ஒருவரை யொருவர் உளமாற நேசிக்கும் வரை நீங்கள் நம்பிக்கை (ஈமான்) கொண்டவர்களாக ஆக முடியாது. எச்செயல் பிறரை உளமாற நேசிக்கவைக்கும் என்பதை உங்களுக்கு நான் சொல்லட்டுமா? உங்களுக்கிடையில் ஸலாமைப் பரப்புங்கள். (அது உங்களுக்கிடையில் நேசத்தை ஏற்படுத்தி (ஈமானை) நம்பிக்கையைப் பலப்படுத்தி, சுவனத்தில் நுழைவதற்கு வழி வகுத்துவிடுகிறது) என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்"" என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். (நூல்: முஸ்லிம், அபூதாவூது, மற்றும் திர்மிதீ)
''அல்லாஹ் உங்களை தாருஸ்ஸலாம் எனும் சாந்தி நிலவும் இல்லத்திற்கு அழைக்கின்றான். அவன், தான் நாடியவர்களை நேர்வழியில் நடத்துகின்றான்."" அல்குர்ஆன் 10:25
சுவனவாசிகளைப் பற்றி அல்லாஹ் சொல்வதைப் பாருங்கள்!;
''அங்கு அவர்கள் ஸலாம், ஸலாம் (சாந்தி, சாந்தி) என்ற சொல்லைத் தவிர, வீணான மற்றும் பாவத்தை உண்டாக்கும் சொற்களைச் செவியுறமாட்டார்கள்"" அல்குர்ஆன் 56:25,26
மற்றோர் இடத்தில் கருணையாளனான இறைவனிடமிருந்தே ஸலாமுன் என்ற சொல்லைச் செவியுறுவது உண்டு என திருமறை குறிப்பிடுகிறது.
''இறைவன் ஆதம்(அலை) அவர்களைப் படைத்து, அங்கே இருந்த வானவர் (மலக்கு)களிடம் சென்று அவர்களுக்கு ஸலாம் கூறும்படியும், அதற்கு அவர்கள் என்ன பதில் கூறுகின்றார்கள் என்று செவியேற்கும்படியும், அதுதான் உமக்கும் உமது வழித்தோன்றல்களுக்கும், முகமன் (கூறும் முறை) என்றும் சொன்னான். அப்போது ஆதம்(அலை) அவர்கள், அவ்வாறே 'அஸ்ஸலாமு அலைக்கும்" என்று கூற, வானவர்கள் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி என்று கூறி ரஹ்மதுல்லாஹி என்பதை அதிகப்படுத்திச் சொன்னார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்"" என அபூ ஹுரைரா(ரலி) அறிவிக்கிறார், (நூல்: புகாரி, முஸ்லிம்)
''நபி(ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, அஸ்ஸலாமு அலைக்கும் (இறைவனின் அருள், சாந்தி உங்களுக்கு உண்டாகட்டும்!) என்று சொன்னார். அதற்கு, நபி(ஸல்) அவர்கள் பதில் சொன்னார்கள். அவர் அமர்ந்தார், நபி(ஸல்) அவர்கள், பத்து (நன்மைகள்) என்றனர். பின்பு மற்றொருவர் வந்து, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி என்றார் அதற்கு, நபி(ஸல்) அவர்கள் பதில் சொன்னார்கள். அவரும் உட்கார்ந்துவிட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள் இருபது (நன்மைகள்) என்றார்கள். மேலும் ஒருவர் வந்து, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு (அல்லாஹ்வின் சாந்தியும், அருளும் பாக்கியமும் உங்கள் மீது உண்டாகட்டும்!) என்றார். அதற்கு, நபி(ஸல்) அவர்கள் பதில் சொன்னார்கள். அவரும் அமர்ந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் முப்பது (நன்மைகள்) என்றார்கள்"" என இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அறிவிக்கிறார். நூல்: திர்மிதீ, நஸயி மற்றும் அபூதாவூது
மேற்கண்ட ஹதீஸின் மூலம் 'அஸ்ஸலாமு அலைக்கும்" என்பதை விட, வார்த்தைகளை அதிகப்படுத்திக் கூறும்போது, நன்மைகளும் அதிகமாகின்றன என்பது புரிகிறது, என்றாலும், ஹதீஸ்களில் 'வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு" என்பதை விட அது அதிகப்படுத்தப்படவில்லை, எனவே, அத்தோடு நிறுத்திக் கொள்வதே சரியானது.
அபூதாவூதில் நான்காவதாக ஒரு மனிதர் வந்ததாகவும், அவர் 'அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு வமக்ஃபிரதுஹு" (அல்லாஹ்வின் சாந்தியும் அருளும் நன்மைகளும், பாவமன்னிப்பும் உங்கள் மீது உண்டாகட்டும்) என்று கூறியதாகவும், அதற்கு நபி(ஸல்) அவர்கள் நாற்பது என்று கூறியதாகவும் ஹதீஸ் ஒன்று இடம் பெற்றுள்ளது, ஆனால் அது பலவீனமான ஹதீஸாகும். எனவே அதை ஆதாரமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
அல்லாஹ்வும், தன் திருமறையில், மேலும், உங்களுக்கு வாழ்த்துக் கூறப்பட்டால், அதைவிட அழகான (வார்த்தைகளைக் கொண்டு) மறுவாழ்த்துக் கூறுங்கள். நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் கணக்கெடுப்பவனாக இருக்கின்றான், (அல்குர்ஆன் 4:86) என்று கூறுவதிலிருந்து ஸலாம் சொல்லப்பட்டால், 'வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு" என்று அதிகப்படுத்தலாம்; அல்லது அவர் கூறியவாறே கூறலாம் என்பதை அறிய முடிகிறது.
இஸ்லாத்தில் மிகச் சிறந்த நற்செயல் எது என்று ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு, ''பசித்தோருக்கும், ஏழைகளுக்கும் உணவு வழங்குவது. இன்னும் உனக்கு அறிமுகமான, அறிமுகமல்லாத அனைவருக்கும் 'ஸலாம் சொல்வதுமாகும்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்"" என அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி அல் ஆஸ்(ரலி) அறிவிக்கிறார். (நூல்: புகாரி, முஸ்லிம் மற்றும் அபூதாவூத்)
நமக்குத் தெரிந்தவர்களுக்கும், தெரியாதவர்களுக்கும் 'ஸலாம்" கூற வேண்டும் என்றும், ';ஸலாம்" சொல்வது மிகச்சிறந்த நற்செயல் என்றும் இந்த நபிமொழியின் மூலம் அறிந்துகொள்ளலாம்.
''(இருவர் சந்திக்கும்போது) யார் ஸலாமை முதலில் சொல்கிறாரோ, அவர் மக்களிலேயே அல்லாஹ்விடம் மிகுந்த சிறப்பிற்குரியவர் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ உமாமா(ரலி) அறிவிக்கிறார்.""
நூல்: அபூதாவூது, அஹ்மத்
''இரண்டு பேர் சந்திக்கும்போது யார் முதலில் ஸலாம் கூறுவார் என, நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு, ''அவ்விருவரில் அல்லாஹ்விடம் மிக மேன்மைக்குரியவர் முதலில் ஸலாம் கூறுவார்"" என்று அவர்கள் பதிலளித்தார்கள்"" என அபூ உமாமா(ரலி) அறிவிக்கிறார். (நூல்: திர்மிதீ)
''வாகனத்தில் செல்பவர், நடந்து வருபவருக்கு ஸலாம் கூறுவார். நடந்து வருபவர், அமர்ந்திருப்பவருக்கு ஸலாம் கூறுவார். சிறுகூட்டம் பெருங்கூட்டத்திற்கு ஸலாம் கூறும்"" என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்.
நூல்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத் மற்றும் திர்மிதீ
புகாரியின் மற்றோர் அறிவிப்பில் சிறியவர்கள், பெரியவர்களுக்கு ஸலாம் கூறுவர் என்று உள்ளது.
மேற்கண்ட நபி மொழியில் கூறப்பட்டது போல சிறுகூட்டம் பெருங்கூட்டத்திற்கும், வயதில் சிறியவர்கள் பெரியவர்களுக்கும் வாகனத்தில் செல்பவர் நடந்து செல்பவருக்கும் ஸலாம் கூறவேண்டும். இவையனைத்தும் ஒழுக்க விதி முறைகளும் மரியாதையை வெளிப்படுத்தும் வகையிலும் கூறப்பட்ட ஒரு மரபாகும். ஆனால் இதற்கு மாற்றமாக மற்றவர் 'ஸலாம்" சொல்லலாகாது எனப் புரிந்து கொள்ளக் கூடாது. ஏனெனில் முதலில் 'ஸலாம்" கூறுபவரே சிறந்தவர் என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
மற்றவர்களைச் சந்திக்கும்போது நாம் முந்திக் கொண்டு 'ஸலாம்" கூறுவதால், இறைவனிடத்தில் சிறப்புக்குரியவராக நாம் ஆகி விடுகிறோம். நாம் 'ஸலாம்" கூறுவதால், பதிலுக்கு 'ஸலாம்" கூறுபவரிடமிருந்து ஒரு நல்ல பிரார்த்தனையையும் பெற்றுக் கொள்கிறோம்.
சில பிரச்சினைகளின் காரணத்தால் இரு முஸ்லிம் சகோதரர்கள் பேச்சு வார்த்தையில்லாமல் இருந்தால், அவ்விருவரும் தம் மனக்கசப்பையும் வெறுப்பையும் 'ஸலாம்" கூறி அதன் மூலம் நீக்கிக் கொள்ள வேண்டுமென இஸ்லாம் கூறுகிறது.
''இரண்டு பேர் சந்தித்து இவர் அவரைப் புறக்கணித்து; அவர் இவரைப் புறக்கணித்து (இப்படி) ஒரு முஸ்லிம் தன் சகோதரரான இன்னொரு முஸ்லிமை மூன்று நாட்களுக்கு மேல் வெறுப்பது கூடாது. (இந்நிலையில்) அவ்விருவரில் எவர் முதலில் 'ஸலாம்" (சொல்லிப் பேச்சை) ஆரம்பிக்கிறாரோ, அவரே சிறந்தவர் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஅய்யூ அல் அன்ஸாரி(ரலி) அறிவிக்கிறார். (நூல்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத்)
''இறைநம்பிக்கையாளர் ஒருவர் மற்றோர் இறைநம்பிக்கையாளரை மூன்று நாட்களுக்கு மேல் வெறுத்து (பேசாமல்) இருப்பது ஆகுமானதல்ல. மூன்று நாட்கள் இப்படிக் கழிந்துவிட்டால் (ஒருவர் மற்றொருவரைச்) சந்தித்து 'ஸலாம்" கூறட்டும். (மற்றொருவர்) பதில் 'ஸலாம்" கூறிவிட்டால், இருவருமே சன்மானத்தில் கூட்டாகி விடுகின்றனர். பதில் 'ஸலாம்" கூறாவிட்டால் (பதில் கூறாதவர்) பாவத்திற்கே திரும்பிவிடுகிறார். ஆரம்பமாக 'ஸலாம்" கூறியவர் (இறைவனுடைய) வெறுப்பை விட்டும் நீங்கி விடுகிறார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்"" என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். (நூல்: அபூதாவூத்)
மேற்கண்ட ஹதீஸ்களின் மூலம் ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமோடு மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் மனக்கசப்போடு இருக்கக் கூடாது என்பதையும், மூன்று நாட்களுக்குப் பின், சந்தித்து 'ஸலாம்" கூறுபவர்தான் சிறந்தவர் என்பதையும் அறியலாம்.
இரண்டாவது ஹதீஸை இமாம் அபூதாவூத் அவர்கள் அறிவித்துவிட்டு, பதில் 'ஸலாம்" கூறாமலிருப்பவர் அல்லாஹ்வுக்காகவே அவரை வெறுத்து; அதனால் பதில் கூறாமலிருந்தால், அவர் மீது குற்றமில்லை என்றும் குறிப்பிடுகிறார்கள்.
''எவர் அல்லாஹ்வுக்காகவே (ஒருவரை) நேசித்து. அல்லாஹ்வுக்காகவே (ஒருவரை) வெறுத்தாரோ. அல்லாஹ்வுக்காகவே (ஒருவருக்குக்) கொடுத்து. அல்லாஹ்வுக்காகவே (கொடுக்காமல்) தடுத்துக் கொண்டாரோ அவர் தன் இறைநம்பிக்கையை (ஈமானைப்) பரிபூரணப்படுத்திக் கொண்டார்"" என்று நபி (ஸல்) கூறினார்கள்"" என அபூ உமாமா(ரலி) அறிவிக்கிறார். (நூல்: அபூதாவூது, அஹ்மது மற்றும் திர்மிதீ)
மேற்கண்ட நபிமொழியில் அல்லாஹ்வுக்காகவே ஒருவரை நேசிக்க வேண்டும், அல்லாஹ்வுக்காகவே ஒருவரை வெறுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளதால், இமாம் அபூதாவூது அவர்கள் அப்படிக் குறிப்பிடுகின்றார்கள்.
ஒரு முஸ்லிம் இறைவனுக்கு மாற்றமான காரியங்களிலும், நபிவழிக்கு முரணான செயல்களிலும் ஈடுபட்டிருந்தால், அவர் திருந்த வேண்டும் என்ற எண்ணத்தில் அவருடன் பேசாமல் வெறுத்திருப்பதுதான் அல்லாஹ்வுக்காகவே வெறுப்பது என்பதன் பொருளாகும்.
மற்ற முஸ்லிம்கள் தன்னுடன் பேசாமலிருப்பது. ஸலாமுக்குப் பதில் கூறாமலிருப்பது. நாம் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாற்றமாக நடக்கிறோம் என்பதால்தான் என்று அறிந்து, அவன் திருந்திவிட்டால், அவனுடன் மீண்டும் நாம் முன்பு போலவே அன்போடும், பிரியத்தோடும் பழகவேண்டும். அவனது ஸலாத்திற்குப் பதில் கூற வேண்டும்.
கஅப் இப்னு மாலிகி அல் அன்ஸாரி(ரலி) அவர்களும், அவர்களுடைய இரு தோழர்களும் தபூக் போருக்கு வராமல் இருந்துவிட்ட காரணத்தால் அவர்களுடன் நபி(ஸல்) அவர்கள், 50 நாட்கள் பேசாமலிருந்தார்கள். மற்ற நபித்தோழர்கள் பேசுவதையும் தடுத்திருந்தார்கள். பின்பு அல்லாஹ் அவர்களின் பாவமன்னிப்பை ஏற்றுக்கொண்டபோது, மீண்டும் முன் போலவே சகோதர பாசத்துடன் பழக ஆரம்பித்தார்கள். அந்நிகழ்ச்சி இதோ...
கஅப் இப்னு மாலிக்(ரலி) அறிவிக்கின்றார்கள்:
தபூக் போரின்போது நான் வசதி வாய்ப்புப் பெற்றிருந்த அளவுக்கு வேறு எப்போதும் நான் வசதி வாய்ப்புப் பெற்றிருக்கவில்லை. என்னிடம் இரண்டு வாகனங்கள் இருந்தன. அப்போது கடுமையான கோடை காலம். அப்போரில் நீண்ட தூரப் பயணத்தையும் வலுவான எதிரிகளையும் நபி(ஸல்) அவர்கள் எதிர்கொள்ள வேண்டியதிருந்தது. நபி(ஸல்) அவர்களும், நபித் தோழர்களும் போருக்காகப் புறப்பட்டனர். அச்சமயம் மதீனாவில் பேரீத்தம் பழ அறுவடைக் காலமாக இருந்தது. கடுமையான கோடையில் பயணம் செய்வதைத் தவிர்த்து மதீனாவின் நிழலில் தங்கியிருப்பது எனக்கு இனிமையாக இருந்தது.
நானும் போருக்காகக் புறப்படுவேன். பிறகு எந்த ஏற்பாடும் செய்யாமல் திரும்பி விடுவேன். நம்மிடம் வாகனங்கள் உள்ளதால் உடனே போருக்குப் புறப்பட்டு விரைந்து சென்று சேர்ந்து விட முடியும் என்று எனக்குள் நான் சமாதானம் கூறிக்கொள்வேன். இவ்வாறு என் பயணம் தடைப்பட்டுக்கொண்டே இருந்தது. அவர்கள் விரைந்து சென்று விட்டனர். போரில் எப்படியும் சென்று கலந்து கொள்ள முடியும் என எண்ணினேன்; என்றாலும் நான் செல்லவில்லை.
நயவஞ்சகர்கள் என்று கூறப்பட்டவர்களும், போரில் கலந்து கொள்ள முடியாத பலவீனமானவர்களும் தவிர என் போன்றவர்கள் யாரையும் மதீனாவில் காணமுடியவில்லை. இது எனக்குக் கவலையை அளித்தது.
“தபூக்” எனும் இடம் சென்றடையும் வரை நபி(ஸல்) அவர்கள் என்னைப் பற்றி நினைக்கவில்லை. “தபூக்" எனும் இடத்தில் அவர்கள் தம் தோழர்களுடன் அமர்ந்திருந்த போது, கஅப் இப்னு மாலிக் எங்கே என்று கேட்டார்கள். அதற்கு பனூஸலமா கோத்திரத்தைச் சார்ந்த ஒருவர், அவரின் செல்வச் செருக்கு அவரைத் தடுத்து விட்டது என்றார்.
அப்போது அதை மறுத்து முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்கள், நீர் சொல்வது தவறு என்று கூறிவிட்டு, ''இறைத்தூதர் அவர்களே! அவரைப் பற்றி நல்லவற்றையே கேட்டிருக்கிறோம்"" என்று கூறினார்கள். அதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், அமைதியாக இருந்து விட்டார்கள்.
நபி(ஸல்) அவர்கள் போர் முடிந்து தபூக்கிலிருந்து திரும்பி விட்டார்கள் என்ற செய்தி வந்தபோது, எனக்கு மிகவும் கவலை ஏற்பட்டது. நபி(ஸல்) அவர்களிடம் உண்மையைக் கூற வேண்டுமென நான் உறுதி பூண்டேன்.
நபி(ஸல்) அவர்கள் மதீனாவை அடைந்து; பள்ளியில் இரண்டு ரக்அத்துகள் தொழுதுவிட்டு, மக்களைச் சந்தித்தார்கள். போருக்குச் செல்லாமல் பின் தங்கிவிட்ட சுமார் 80 பேர் அதற்கான காரணங்களைக் கூறிச் சத்தியம் செய்துவிட்டுச் சென்றனர். நபி(ஸல்) அவர்கள் அவர்களின் புறக் காரணங்களை ஏற்றுக் கொண்டு, அவர்களுக்காகப் பிழைபொறுக்க வேண்டி, அவர்களின் அகக் காரணங்களை அல்லாஹ்விடம் ஒப்படைத்து விட்டார்கள்.
நான் வந்தேன். அவர்களுக்கு 'ஸலாம்" கூறியபோது கோபப்படுபவர் புன்சிரிப்புச் சிரிப்பது போன்று சிரித்து விட்டு, ஏன் போருக்கு வரவில்லை என்று என்னிடம் கேட்டார்கள். அதற்கு நான், இறைத்தூதர் அவர்களே! உலகியல் தலைவர்களுக்கு முன்னால் நான் இருந்தால், ஏதாவதொரு காரணத்தைக் கூறி, தப்பித்துக் கொள்வேன். வாதாடி வெற்றி பெறும் திறமையும் எனக்கு உண்டு. அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் பொய் கூறினால், என்னைத் தாங்கள் பொருந்திக் கொள்வீர்கள். ஆனால், அல்லாஹ் என்னைப் பற்றித் தங்களுக்கு அறிவிப்பான், கோபம் கொள்வான். தங்களிடம் உண்மை கூறினால் தாங்கள் என் மீது கோபப்படுவீர்கள் என நான் அறிவேன். நிச்சயமாக நான் இதுபற்றி அல்லாஹ்வின் முடிவை எதிர்பார்க்கிறேன் அல்லாஹ்வின் மீது ஆணையாக, எனக்குப் போரில் கலந்து கொள்ள எந்த இடையூறும் இல்லை. நான் அப்போது போல எப்போதும் வசதியும் ஆற்றலும் பெற்றதில்லை என்று கூறினேன்.
இவர் உண்மையே உரைத்தார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு, அல்லாஹ் உம் விஷயத்தில் தீர்ப்பளிப்பான் என்றார்கள். அப்போது பனூஸலமா கோத்திரத்தைச் சார்ந்த சிலர், நீர் இதற்கு முன்பு எந்தக் குற்றமும் புரியவில்லையே! நபி(ஸல்) அவர்களிடம் பொய்க் காரணங்களைக் கூறியிருக்கலாமே என்று கூறினர்.
பின்னர் நான் அவர்களிடம் என்னைப் போன்று யாராவது உள்ளனரா என்று கேட்க, ஆம் முராரா இப்னு ரபீவு, ஹிலால் இப்னு உமையா என்ற இருவர் உள்ளனர் என்று கூறினார்கள். அதன்பின் நான் சென்று விட்டேன். போருக்கு வராமல் பின்தங்கி விட்ட எங்கள் மூவரிடத்தில் மற்றவர்கள் பேசுவதற்கு நபி(ஸல்) தடை விதித்தார்கள். இதனால் இந்த உலகமே எனக்கு வெறுப்பாகத் தோன்றியது. இந்த உலகம் எனக்கு வேறொரு உலகம் போன்றும் காணப்பட்டது.
என்னைத் தவிர மற்ற இருவரும் வீட்டிலேயே உட்கார்ந்து விட்டனர். நான் வாலிபனாகவும் தைரியசாலியாகவும் இருந்ததால், வெளியே சென்று தொழுகையில் கலந்து கொள்வேன். கடை வீதியில் சுற்றிவருவேன். என்னிடம் யாரும் பேசமாட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் தொழுது விட்டு அதே இடத்தில் அமர்ந்திருப்பார்கள். அவர்களுக்கு 'ஸலாம்" கூறிவிட்டு, அவர்கள் பதில் சொல்கிறார்களா என அறிய அவர்களின் உதடுகள் அசைகின்றனவா என்று பார்ப்பேன். அவர்களுக்கு அருகிலேயே தொழுவேன் நான் தொழும்போது என்னை அவர்கள் கவனிப்பார்கள். நான் அவர்கள் பக்கம் திரும்பினால் அவர்கள் என்னைப் புறக்கணித்து வேறுபக்கம் திரும்பிக் கொள்வார்கள்.
இந்நிலையில் ஒரு நாள் அபூகதாதா(ரலி) அவர்களின் தோப்புக்குச் சென்றேன். அவருக்கு 'ஸலாம்" கூறினேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக அவர் எனக்குப் பதிலளிக்க வில்லை. நான் அவரிடம், அபூகதாதாவே! அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கேட்கிறேன். அல்லாஹ்வையும், அவனின் தூதரையும் நான் நேசிப்பவன்தான் என்பதை நீர் அறியவில்லையா எனக் கேட்டேன். அவர் (அதற்கும்) பதில் கூறவில்லை. மீண்டும் கேட்டேன். அவர் (அப்போதும்) பதிலளிக்கவில்லை. மீண்டும் கேட்டேன். அதற்கு அவர், அல்லாஹ்வும் அவனின் தூதருமே அறிந்தவர்கள் என்று பதிலளித்தார். அதைக் கேட்டதும் என் கண்களில் கண்ணீர் மல்கியது பின்னர் நான் அந்தத் தோப்பிலிருந்து திரும்பிவிட்டேன்.
ஒரு நாள் மதீனாவின் கடைத்தெருவில் நான் சென்று கொண்டிருந்தேன். அப்போது மதீனாவில் உணவு தானியங்களை விற்பதற்காக சிரியாவிலிருந்து வந்திருந்த விவசாயி ஒருவர். கஅப் இப்னு மாலிக் யார்’என்று விசாரித்துக் கொண்டிருந்தார். அப்போது மக்கள் இவர்தான் என என்னைச் சுட்டிக்காட்டினார்கள். உடனே அந்த விவசாயி என்னிடம் வந்து, கஸ்ஸான் மன்னர் எழுதிய கடிதத்தைக் கொடுத்தார். அதை நான் பெற்று வாசித்தேன். அதில் (நபியாகிய) உம் தோழர் உம்மை வெறுத்து ஒதுக்கியதாக அறிந்தோம். கேவலமான முறையில் இழிவான பூமியில் வசிக்குமாறு அல்லாஹ் உம்மை ஆக்கவில்லை. நம்முடன் வந்து சேர்ந்து கொள்வீராக’என எழுதப்பட்டிருந்தது. நான் அதைப் படித்துவிட்டு, இதுவும் ஒரு சோதனையே என்று கூறிவிட்டு, அக்கடிதத்தை அடுப்பில் போட்டுப் பொசுக்கிவிட்டேன்.
இவ்வாறு 40 நாட்கள் கடந்துவிட்டன. எங்கள் விஷயத்தில் இறைச்செய்தி ஏதும் வரவில்லை. அப்போது நபி(ஸல்) அனுப்பிய தூதர் ஒருவர் என்னிடம் வந்து, உம் மனைவியை விட்டும் விலகியிருக்குமாறு நபி(ஸல்) அவர்கள் உமக்குக் கட்டளையிட்டுள்ளார்கள் என்று கூறினார். நான் என் மனைவியை விவாரத்துச் செய்து விடவா என்று கேட்டேன். அதற்கு அவர், இல்லை, பிரிந்திருக்க வேண்டும் என்றும், அவளை நெருங்க வேண்டாம் என்றும் பதிலளித்தார். இவ்வாறு என் மற்ற இரண்டு தோழர்களிடமும் கூறப்பட்டது. அவ்வாறே நான் என் மனைவியிடம், அல்லாஹ் இவ்விஷயத்தில் தீர்ப்பளிக்கும் வரை நீ உன் குடும்பத்தாருடன் சென்று தங்கி இரு என்று கூறினேன்.
இவ்வேளையில் ஹிலால் இப்னு உமைய்யாவின் மனைவி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ஹிலால் இப்னு உமைய்யா பலவீனமானவர். வயது முதிர்ந்தவர்: அவருக்குப் பணிவிடை செய்ய யாரும் இல்லை. எனவே, நான் பணிவிடை செய்யலாமா என்று கேட்க, பணிவிடை செய்யலாம். ஆனால், அவர் உன்னை நெருங்கக் கூடாது’என்றார்கள். அதற்கு அப்பெண்மணி, அவருக்கு எதிலும் நாட்டமில்லை. அன்று முதல் இன்று வரை அவர் அழுதவராகவே இருக்கிறார் என்று கூறினார்.
என் குடும்பத்தினரில் சிலர் என்னிடம், நீயும் இதுபோன்று உன் மனைவியை உன்னுடன் வைத்துக் கொள்ள அனுமதி கேட்டால் என்ன என்று கேட்டார்கள். நான் வாலிபனாக இருக்கிறேன். நான் அனுமதி கேட்டால் நபி(ஸல்) என்ன சொல்வார்களோ, நான் அறியேன் என்று கூறிவிட்டேன். இவ்வாறு 50 நாட்கள் கடந்து விட்டன.
அதிகாலை ஃபஜ்ரு தொழுகையை நான் என் வீட்டின் மேல் தளத்தில் தொழுதேன். இந்த உலகம் விரிவானதாக இருந்தும், எனக்கு அது நெருக்கடியாகி சுருங்கிவிட்ட நிலையில் கவலையுடன் அமர்ந்திருந்தேன். அப்போது ஒருவர் மதீனாவின் ஸல்வு எனும் குன்றின் மீது ஏறி உரத்த குரலில், கஅப் இப்னு மாலிகே! நற்செய்தி என்றார். உடனே நான் சஜ்தாவில் வீழ்ந்து விட்டேன்.
அல்லாஹ் எங்களை மன்னித்து விட்ட செய்தியை, ஃபஜ்ரு நேரத்தில் நபி(ஸல்) அறிவித்தார்கள். உடனே மக்கள் அனவரும் எங்களுக்கு வாழ்த்துச் சொல்ல வந்தனர்.
பின்னர் நான் நபி(ஸல்) அவர்களைச் சந்திக்கப் புறப்பட்டேன். நான் மஸ்ஜிதின் நடுவில் நுழைந்தேன். அங்கு நபி(ஸல்) அவர்கள் அமர்ந்திருந்தார்கள். என்னைக் கண்டதும் தல்ஹா இப்னு உபைதில்லாஹ்(ரலி) ஒடி வந்து எனக்குக் கைகொடுத்து வாழ்த்துச் சொன்னார்.
நான் உண்மையே பேசிய காரணத்தால், நிச்சயமாக அல்லாஹ் நபியையும் கஷ்ட காலத்தில் அவரைப் பின் பற்றி ஹிஜ்ரத் செய்த முஹாஜிர்களையும், அவர்களுக்கு உதவிய அன்சாரிகளையும் மன்னித்தான். அவர்களில் ஒரு பிரிவினருடைய இதயம் தடுமாறத் துவங்கிய பின்னர், அவர்களை மன்னித்து அருள்புரிந்தான். நிச்சயமாக அவர்கள் மீது மிக்க கருணையும் கிருபையும் உடையவனாக அல்லாஹ் இருக்கின்றான்.
''அல்லாஹ்வின் உத்தரவை எதிர்பார்த்து விட்டு வைக்கப்பட்டிருந்த மூவரையும் அல்லாஹ் மன்னித்துவிட்டான். பூமி விசாலமாக இருந்தும் அது அவர்களுக்குச் சுருங்கி, அவர்கள் உயிர் வாழ்வதும் சிரமமாகி விட்டது. அல்லாஹ்வின் புகல் அன்றி, அவனை விட்டுத் தப்புமிடம் வேறெங்கும் இல்லை என்பதையும் அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆகவே, அவர்கள் பாவத்திலிருந்து விலகிக் கொள்ளும் பொருட்டு அவர்களை அல்லாஹ் மன்னித்து விட்டான். நிச்சயமாக அல்லாஹ் பாவமன்னிப்பை ஏற்று, மன்னிப்பவனாகவும் மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கிறான் என்ற (9:117,118வது) வசனம் எங்களுக்காக இறக்கியருளப்பட்டது"" என கஅப் இப்னு மாலிக்(ரலி) அறிவிக்கிறார். நூல்: புகாரி, முஸ்லிம்
''நபி(ஸல்) அவர்கள் மதீனா பள்ளியில் அமர்ந்திருக்கும்போது, ஒரு மனிதர் வந்து தொழுதார். பின்பு நபி (ஸல்) அவர்களிடம் வந்து 'ஸலாம்" கூறினார். நபி(ஸல்) அவர்கள் பதில் 'ஸலாம்" கூறிவிட்டு, நீர் திரும்பிச் சென்று மீண்டும் தொழும். நீர் (சரியாகத்) தொழவில்லை என்றார்கள். அவர் திரும்பிச் சென்று தொழுதார். பின்பு வந்து நபி(ஸல்) அவர்களுக்கு 'ஸலாம்" சொன்னார். நபி(ஸல்) அவர்கள் பதில் 'ஸலாம்" கூறிவிட்டு, நீர் திரும்பிச் சென்று தொழும். நீர் (சரியாகத்) தொழவில்லை என்றார்கள். அவர் மீண்டும் தொழுதார். இப்படியே மூன்று முறை செய்தார்"" என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். (நூல்: புகாரி, முஸ்லிம்)
''உங்களில் ஒருவர், தன் சகோதர முஸ்லிமைச் சந்தித்தால், அவருக்கு 'ஸலாம்" கூறட்டும். (ஸலாம் கூறிய பின்னர் அவர்களை ஒரு மரமோ சுவரோ, கல்தூணோ மறைத்து,) பின்பு சந்தித்தால் அப்போது(ம்) அவருக்கு 'ஸலாம்" கூறட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்"" என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். நூல்: அபூதாவூது
இந்த இருநபி மொழிகளின் மூலம் நீண்ட இடை வெளியின்றி, குறுகிய நேர இடைவெளிக்குப் பின்னர் ஏற்படும் சந்திப்புகளின்போதும் 'ஸலாம்" கூற வேண்டும் என்பதை அறியலாம். ஆனால், அப்படி அடிக்கடி 'ஸலாம்" கூறுவதை விளையாட்டாகவோ, வேடிக்கையாகவோ, விவகாரமாகவோ ஆக்காமல் நபிவழி என்ற ரீதியில் செயல்படுத்த வேண்டும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
இஸ்லாம் என்றாலே சாந்தி, சமாதானம் என்று பொருள். எனவே, ஒருவன் மற்றொருவனது வீட்டில் எடுத்த எடுப்பிலேயே புகுந்து விடாமல் அனுமதி பெற்று அதன் பின்னரே உள்ளே செல்ல வேண்டுமென இஸ்லாம் குறிப்பிடுகிறது. அதாவது தற்காலத்தில் காலிங் பெல் (அழைப்பு மணி) வைத்திருக்கிறார்கள். அழைப்பு மணி இல்லாத வீடுகளில் கதவைத் தட்டிச் செல்கின்றனர்; அல்லது தான் வந்திருப்பதை சப்தத்தின் மூலம் தெரிவிக்கின்றனர்.
இஸ்லாமிய மார்க்கம் இந்த முறைகளையெல்லாம் விட, தனியொரு வழிமுறையைக் கையாளும்படிக் கூறுகிறது. வீடுகளில் நுழைவதற்கு முன்பு. அது தன்சொந்த வீடாக இருந்தாலும் சரி, 'அஸ்ஸலாமு அலைக்கும்" (உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!) என்று கூறிவிட்டு, நான் உள்ளே வரலாமா’என்று கேட்ட பின்னர் உள்ளே செல்லும்படி கூறுகிறது. வெளியிலிருந்து வரும் நான் உங்களுக்குச் சாந்தியை, சமாதானத்தை நாடுபவனே தவிர. உங்களுக்கு இடையூறாக நான் வருகை தரவில்லை என்று அறிவிக்கும் கருத்தில் உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக என்று கூறி அனுமதி பெற்றுப் புகும்படி இஸ்லாம் கட்டளையிடுகிறது.
ஒரு மனிதன் தன் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும்போது, பிறர் தன்னைக் காணவிரும்பாத கோலத்தில் அவன் இருக்கலாம்; அல்லது மனைவியுடன் கலந்துறவாடிக் கொண்டும் இருக்கலாம். வீட்டிலுள்ள பெண்கள் நாம் நம்முடய வீட்டிற்குள் தானே இருக்கின்றோம் என்று கருதி, மேலாடை இன்றியோ கவனக் குறைவாகவோ இருக்கலாம். இது போன்ற நேரங்களில் அந்நியர் அவ்வீட்டினுள் அனுமதி பெறாமல் திடீரெனப் புகுந்தால், வீட்டினர் தர்ம சங்கடத்திற்கு ஆளாவார்கள். வீட்டின் அமைதியும் கெட்டுப்போகும். எனவே, அத்தகைய தீங்குகள் ஏற்படுவதற்கு வாய்ப்பளிக்காமல், வருமுன்னர் காத்துக்கொள்ள வேண்டிய வழிமுறைகள் அனைத்தையும் இஸ்லாம் காட்டியுள்ளது. இது இஸ்லாத்தின் தனிச் சிறப்பாகும்.
''இறைநம்பிக்கையாளர்களே! உங்கள் வீடுகளல்லாத பிறர்வீடுகளில் அ(வ்வீட்டிலுள்ள)வர்களிடம் அனுமதி பெற்று அவர்களுக்கு 'ஸலாம்" சொல்லாத வரை (அவற்றினுள்) நுழையாதீர்கள். நீங்கள் அங்கு எவரையும் காணாவிட்டால், உங்களுக்கு அனுமதி கொடுக்கப்படும் வரை அதில் பிரவேசிக்காதீர்கள். அன்றியும், திரும்பப் போய்விடுங்கள் என்று உங்களிடம் கூறப் பட்டால், அவ்வாறே திரும்பிவிடுங்கள். அதுவே உங்களுக்கு மிகவும் பரிசுத்தமானதாகும்..."" (அல்குர்ஆன் 24:27, 28)
பிறருடைய வீடுகளில் திடீரெனப் புகுந்துவிடாமல், 'ஸலாம்" கூறி அனுமதி பெற்றே நுழைய வேண்டும். அவ்வீட்டிலிருந்து பதில் வராவிட்டாலும் அல்லது திரும்பிப் போய்விடுங்கள் என்று கூறப்பட்டாலும், திரும்பி வந்துவிட வேண்டும் என்பதை மேற்கண்ட குர்ஆன் வசனத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
ஒருவர் மற்றவருடைய வீட்டிற்குச் சென்று உள்ளே நுழைவதற்கு அனுமதி கேட்கும் போது பதில் வரவில்லை என்றால் அவர் எத்தனை முறை அனுமதி கேட்டுக் காத்திருக்கலாம் என்பதைப் பின்வரும் நபிமொழி நமக்குக் கற்றுத் தருகிறது.
நான் அன்ஸாரிகளின் கூட்டத்தினருடன் அமர்ந்திருந்தேன். அப்போது அபூ மூஸா அல் அஷ்அரி(ரலி) திடுக்கிட்டு பயந்தவர்போல வந்து, நான் உமர்(ரலி) அவர்களின் வீட்டில் புக உமரிடம் மூன்று முறை (ஸலாம் கூறி) அனுமதி கேட்டேன். அவர் அனுமதி அளிக்கவில்லை. (உமர்(ரலி) ஏதோ வேலையில் ஈடுபட்டிருந்ததால், பதிலளிக்கவில்லை என மற்றோர் அறிவிப்பில் உள்ளது) நான் திரும்பி வந்துவிட்டேன் என்றார். அப்போது அவர் வீட்டில் நுழைவதை விட்டும் உன்னைத் தடுத்தது எது என்று (ஒருவர்) கேட்டார். அதற்கு, நான் மூன்று முறை (ஸலாம் கூறி) அனுமதி கேட்டேன். எனக்கு அவர் அனுமதி அளிக்கவில்லை. எனவே, திரும்பி வந்துவிட்டேன். ஏனெனில், உங்களில் ஒருவர் (மற்றொருவரிடம் அவர் வீட்டிற்குள் செல்ல) மூன்று முறை அனுமதி கேட்டும் அவருக்கு அனுமதி அளிக்கப்படாவிட்டால். அவர் திரும்பி வந்துவிடட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (எனவேதான் நான் திரும்பிவிட்டேன்) என்றார். அதற்கு உமர்(ரலி) அவர்கள், அல்லாஹ்வின் மீது ஆணையாக! இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் கூறியதற்கு நீங்கள் சாட்சியைக் கொண்டு வரவேண்டும் என்று கூறினார்கள். இதை நபி(ஸல்) அவர்களிடமிருந்து கேட்டவர் யாரேனும் உங்களில் இருக்கிறாரா என்று கேட்டார்கள்.
''அதற்கு அங்கிருந்த உபை இப்னு கஅப்(ரலி) அவர்கள், அல்லாஹ்வின் மீது ஆணையாக மக்களில் மிகச்சிறியவரே உங்களுக்கு சாட்சி சொல்ல வருவார் என்று கூறினார்கள். அங்கு நான்தான் மக்களில் சிறியவனாக இருந்தேன். எனவே நான் அபூமூஸா(ரலி) அவர்களுடன் சென்று நபி(ஸல்) அவர்கள் அவ்வாறு கூறினார்கள் என்று உமர்(ரலி) அவர்களிடம் கூறினேன்"" என அபூஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவிக்கிறார். (நூல்: புகாரி, முஸ்லிம்)
(முக்கிய தேவைகளின் காரணத்தால், அடுத்தவர் வீட்டினுள் செல்ல) அனுமதி கேட்பது மூன்று தடவையே. உனக்கு (மூன்று தடவைகளுக்குள்) அனுமதி அளிக்கப்பட்டுவிட்டால், (அவ்வீட்டில் நுழையலாம்) அவ்வாறு அனுமதி கிடைக்கவில்லையெனில், திரும்பிவிடு என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்"" என அபூ மூஸா அல் அஷ்அரி(ரலி) அறிவிக்கிறார். (நூல்: புகாரி, முஸ்லிம், அஹ்மது, முஅத்தா, அபூதாவூது மற்றும் திர்மிதீ)
மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து மூன்று முறை 'ஸலாம்" கூறி அனுமதி கேட்க வேண்டும். மூன்று முறையும் பதிலேதும் வராவிட்டால், திரும்பி விட வேண்டும் என்பதை அறியலாம்.
''நபி(ஸல்) அவர்கள் வீட்டிலிருக்கும்போது, பனூ ஆமீர் கிளையைச் சேர்ந்த ஒரு மனிதர் வந்து, நான் உள்ளே வரலாமா என்று அனுமதி கேட்டார். (அவர் அனுமதி கேட்ட முறை சரியில்லை என்பதற்காக) நபி(ஸல்) அவர்கள் தம் பணியாளரிடம், நீ சென்று அனுமதி கேட்கும் முறையை அவருக்குச் சொல்லிக்கொடு (அதாவது) 'அஸ்ஸலாமு அலைக்கும்" நான் உள்ளே வரலாமா என்று கேட்கும்படிச்சொல் என்று கூறினார்கள். இதைச் செவிமடுத்த அம்மனிதர், 'அஸ்ஸலாமு அலைக்கும்" நான் உள்ளே வரலாமா என்று கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள் அனுமதி வழங்க, அவர் உள்ளே வந்தார்"" என ரிப்யீ இப்னு ஹிராஷ்(ரலி) அறிவிக்கிறார். (நூல்: அபூதாவூத்)
''நான் நபி(ஸல்) அவர்களிடம் வந்து. 'ஸலாம்' கூறாமல், அவர்கள் இருந்த அறையில் நுழைந்துவிட்டேன். நீ திரும்பச் சென்று, 'அஸ்ஸலாமு அலைக்கும்" நான் உள்ளே வரலாமா என்று கேட்டுவிட்டு, பின்னர் உள்ளே வா என்று நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்"" என கில்தா இப்னு ஹன்பல்(ரலி) அறிவிக்கிறார். (நூல்கள்: அஹ்மது, அபூதாவூது மற்றும் திர்மிதீ)
அனுமதி பெறும் முன் ஸலாம் கூற வேண்டுமென இவற்றின் மூலம் தெரிகிறது.
''ஸலாமைக் கூறி ஆரம்பிக்காதவர்களுக்கு (வீட்டில் நுழைய) அனுமதி வழங்காதீர்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜாபிர்(ரலி) அறிவிக்கிறார். (நூல்: அபூநயீம்)
ஒரு வீட்டில் நுழைய அனுமதி கேட்கும்போது, கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகளும் உள்ளன. அவற்றில் மிகமிக முக்கியமானது பார்வையைப் பேணிக் கொள்வதாகும். கண்போன போக்கிலே பார்வையை அலைய விடாமல் கட்டுப்படுத்திக் கொள்ளவேண்டும். பிறரின் வீடுகளில் நுழைவதற்கு அனுமதி பெற்றே ஆகவேண்டும் என்ற சட்டத்தை மார்க்கக் கடமையாக ஏற்படுத்தியது, பார்வையின் மூலம் ஏற்படும் தீங்குகளை விட்டும் தடுப்பதற்காகத்தான் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.
''அனுமதி பெறுவது (மார்க்கச்) சட்டமாக ஆக்கப்பட்டது பார்வையின் காரணத்தால்தான் என்று நபி(ஸல்) கூறினார்கள்"" என ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவிக்கிறார். (நூல்: புகாரி, முஸ்லிம், அஹ்மது, திர்மிதீ மற்றும் நஸயீ)
விபசாரத்திற்கு மூல காரணமே ஆண்களும், பெண்களும் தம் கண்களைப் பார்வையின் மூலம் சந்திக்கவிடுவதுதான், எனவே எப்போதும் பார்வைகளைப் பேணிக்கொள்ள வேண்டும்.
''விபச்சாரத்தின் வாடையை ஏதேனும் ஒரு வகையில் அடைந்துவிடுவது ஆதமுடைய மகன் மீது நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறது. (பார்க்கத் தகாதவர்களைப்) பார்ப்பது, கண்கள் இரண்டின் விபசாரமாகும். (கேட்கத் தகாதவற்றைக்) கேட்பது, காதுகள் இரண்டின் விபசாரமாகும். (பேசத் தகாத வற்றைப்) பேசுவது, நாவின் விபசாரமாகும். (தொடத் தகாதவற்றைத்) தொடுவது கையின் விபசாரமாகும். (போகக் கூடாத இடங்களுக்குப் போவது) கால்களின் விபசாரமாகும். (இவற்றை யெல்லாம்) உள்ளம் விரும்புகிறது. மர்மஸ்தானம் அதை யதார்த்தமாக்கி (நிகழ்த்தி)விடுகிறது அல்லது பொய்ப்படுத்திவிடுகிறது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்"" என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார் (நூல்ள்: புகாரி, முஸ்லிம் மற்றும் அபூதாவூத்)
எனவே, பார்க்கத்தகாதவற்றை, குறிப்பாக அன்னியப் பெண்களைப் பார்ப்பது, கண்கள் செய்யும் விபசாரமாகும். பிறரின் வீடுகளுக்குச் செல்ல நேரிட்டால் பார்வையைப் பேணிக் கொள்ள வேண்டும்.
தெருக்களிலோ, சாலைகளிலோ நடந்து செல்லும்போது பிற பெண்கள் மீது பார்வை பட்டுவிட்டால், உடனே பார்வையைத் திருப்பிக்கொள்ள வேண்டும்; தலையைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்.
''அவர்கள் தங்கள் பார்வையைத் தாழ்த்திக் கொள்ளட்டும்"" என (நபியே!) நீர் இறைநம்பிக்கையுள்ள ஆண்களிடம் கூறும்!. (அல்குர்ஆன் 24:30)
இச்சட்டம் ஆண்களுக்கு மட்டும் உரித்தானதல்ல. பெண்களுக்கும்தான் என்பதைப் பின்வரும் இறைவசனம் விளக்குகிறது.
''இறைநம்பிக்கையுள்ள பெண்களும் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைக் காக்க வேண்டும். தங்களின் அழகு அலங்காரங்களை அதிலிருந்து இயற்கையாக (வெளியில்) தெரியக்கூடியது தவிர்த்து, வேறு எதையும் வெளிக் காட்டலாகாது. இன்னும் தங்கள் முந்தானைகளால் அவர்கள் தம் மார்பை நன்கு மறைத்துக் கொள்ள வேண்டும் என்று நபியே நீர் கூறும்!"" (அல்குர்ஆன் 24:31)
எனவே, பெண்களும் பேணுதலாக இருக்க வேண்டும். அவர்களும் தங்கள் பார்வையைப் பேணுவது மட்டுமின்றி, பிற ஆடவர்களைக் கவரும் விதத்தில், தம் அழகை வெளிப்படுத்தக்கூடாது என்று அல்லாஹ் இத்திருவசனத்தில் குறிப்பிடுகிறான்.
''திடீரென எதிர்பாராத விதமாக, கண்பார்வையில் (பார்க்கத் தகாத அன்னியப் பெண்கள், மற்றும் பார்க்கக் கூடாத அங்கங்கள்) பட்டு விடுவது (அப்படிப் பார்த்துவிடுவது) குற்றமா என, நபி(ஸல்) அவர்களிடம் நான் கேட்டதற்கு, அப்படிப் பார்க்க நேரிட்டால், உடனே பார்வையை (வேறு பக்கம்) திருப்பி விடும்படி எனக்கு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்."" என ஜரீர் இப்னு அப்துல்லாஹ்(ரலி) அறிவிக்கிறார். (நூல்: முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ மற்றும் நஸயீ)
எனவே, முறையற்ற பார்வைகளை விட்டும், ஆண்களும், பெண்களும் கண்களைக் காத்து, பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளவேண்டும்.
வாசலுக்கு நேராக நிற்காமல், வாசலின் வலப்புறத்திலோ, இடப்புறத்திலோ ஒதுங்கி நிற்பது பிறரின் வீடுகளில் நுழைய அனுமதி பெறும் ஒழுங்கு முறைகளில் ஒன்றாகும்.
கதவைத் திறப்பவர் சற்று அசட்டையாகத் திடீரென திறந்து விட்டால் வீட்டினுள் பெண்களை அலங்காரத்துடனோஅரைகுறை ஆடைகளுடனோ கதவின் எதிரில் நிற்பவர் பார்த்துவிடக்கூடும்; அல்லது அவ்வீட்டிலுள்ள பெண்களே யாரேனும் வந்து கதவைத் திறக்கக்கூடும்.
''நபி(ஸல்) அவர்கள் ஒரு சமுகத்தாரின் (வீட்டு) வாசலுக்கு வந்தால், வாசலுக்கு நேராக நின்று அனுமதி பெறாமல், வாசலுக்கு வலப்புறமோ, இடப்புறமோ ஒதுங்கி நின்று, 'அஸ்ஸலாமு அலைக்கும்" என்று சொல்வார்கள்"" என அப்துல்லாஹ் இப்னு பிஷ்ர்(ரலி) அறிவிக்கிறார். (நூல்: அபூதாவூத்)
(ஏனெனில், அக்காலத்தில் வீடுகளுக்கு திரையிடும் வழக்கம் அதிகமான மக்களிடத்தில் இல்லை என இந்த ஹதீஸை அறிவிப்பவர் குறிப்பிடுகிறார்)
எனவே, மேற்கண்ட ஹதீஸிலிருந்து வாசலுக்கு நேராக நிற்பது கூடாது, வாசலுக்கு வலப்புறத்திலோ இடப்புறத்திலோ ஒதுங்கி நின்று அனுமதி பெறவேண்டும் என்பது விளங்கும்.
அனுமதி பெறும் ஒழுங்கு முறையில் மற்றொன்று, அனுமதி பெறுவதற்கு முன்பு அவ்வீட்டின் உட்பகுதிகளை உற்றுப் பார்க்காமல் இருப்பதாகும்.
கதவுகள், திரைகள் இருப்பதால் வீட்டினுள் உற்றுப் பார்க்க இயலாது என்றாலும், சில வீடுகளில் திரைகள் போடப்படாமல் கதவு, சன்னல்கள் திறந்தே இருக்கலாம். அது போன்ற வீடுகளில் அனுமதி பெறுவதற்கு முன் வீட்டின் உட்பகுதிகளை உற்றுப் பார்க்கக் கூடாது. அது மட்டுமின்றி, தெருவில் நடந்து செல்லும்போதும் பிற வீடுகளின் முன்பாக நின்று பேசிக் கொண்டிருக்கும்போதும், பார்வையைப் பேணிக்கொள்ள வேண்டும். பிற வீடுகளை உற்றுப் பார்ப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.
''முன் அனுமதி பெறாமல் பிறருடைய வீட்டின் உட்பகுதிகளைப் பார்ப்பது ஒரு முஸ்லிமுக்கு அனுமதிக்கப்பட்டதல்ல. அப்படி ஒரு முஸ்லிம் (பிறருடைய வீட்டின் உட்பகுதிகளை) பார்த்துவிட்டால் (அவர் அனுமதி பெறாமல்) அவ்வீட்டில் புகுந்தவர் போன்று ஆகிவிடுகிறார்"" என தவ்பான்(ரலி) அறிவிக்கிறார் .(நூல்: அபூதாவூத், திர்மிதீ)
மேற்கண்ட நபிமொழியை இமாம் புகாரி அவர்கள், தம் 'அல்அதபுல் முஃப்ரத்" எனும் நூலில் பதிவு செய்துள்ளார்கள்.
பிறரின் வீடு திறந்து இருக்கும் நிலையில் அனுமதியின்றி நுழைவது எவ்வாறு குற்றமோ, அவ்வாறே அனுமதி பெற்று வீட்டினுள் நுழையும் முன்பு, அவ்வீட்டின் உட்பகுதிகளைப் பார்ப்பதும் குற்றமாகும் என்பதை மேற்கண்ட நபிமொழி உணர்த்துகிறது. பிறரின் வீட்டினுள் அனுமதி பெற்று நுழைய வேண்டும் என்பதே முறையற்ற பார்வைகளைத் தடுப்பதற்காகத்தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
''ஒரு கூட்டத்தாருடைய வீடுகளின் (உட்பகுதியை) அவர்களின் அனுமதியின்றி ஒருவன் பார்ப்பானேயானால், அவர்கள் அவனுடைய கண்ணைப் பறிக்கும் அதிகாரம் பெறுகிறார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்"" என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார் .(நூல் : முஸ்லிம் அஹ்மத் மற்றும் அபூதாவூத்)
''உன் அனுமதியின்றி உன்னுடைய வீட்டை (அதன் உட்பகுதியை) ஒருவன் உற்று நோக்கியதற்காகக் கல்லெறிந்து அவனுடைய கண்ணை நீ பறித்துவிட்டாலு:ம் அது உன் மீது குற்றமாகாது என்றே நான் கருதுகிறேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்"" என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்.
(நூல்: புகாரி, முஸ்லிம்)
பிறரின் வீடுகளின் உட்பகுதிகளை, அனுமதி பெற்று நுழையும் முன்பு பார்வையிடுவது பெறும் குற்றம், அப்படிப் பார்ப்பவரின் கண்களை அவர் பார்க்கும் போது பறித்தால்கூட, அது குற்றமாகாது என்ற நபி(ஸல்) அவர்களின் கடும் எச்சரிக்கையை எண்ணிப் பார்க்கவேண்டும்.
''நபி(ஸல்) அவர்கள் ஈர்வலிச் சீப்பினால் தலைவாரிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களுக்குத் தெரியாமல் வீட்டின் உட்பகுதியை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். (அவர் பார்த்தது தெரிய வந்தபோது) நீ உற்றுப் பார்த்ததை நான் அறிந்திருந்தால், உன் இரண்டு கண்களையும் இக்கூரிய சீப்பினால் குத்தி இருப்பேன். ஏனெனில், (இத்தகைய) பார்வையின் காரணத்தால்தான் அனுமதி பெறுவது சட்டமாக்கப்பட்டது என்று கூறினார்கள்"" என ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவிக்கிறார். (நூல்: புகாரி)
''ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களின் அறையினுள் உற்று நோக்கினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் ஈட்டியை எடுத்துக்கொண்டு (வேகமாக) எழுந்தார்கள். அவரைக் குத்துவதற்கு முயன்ற (அக்காட்சி) இப்போதும் பார்ப்பது போன்று உள்ளது"" என அனஸ்(ரலி) அறிவிக்கிறார். (நூல்: புகாரி)
மேற்கண்ட நபிமொழிகள், பிறரின் வீட்டினுள் உற்றுப் பார்ப்பது பெரும் குற்றம் என்பதை அறிவிக்கின்றன. அப்படி உற்றுப் பார்ப்பவர்களின் கண்களைப் பறித்துவிடுவது குற்றமல்ல என்று நபி(ஸல்) அவர்கள் எச்சரித்து இருக்கிறார்கள்.
(பிறரின் வீட்டினுள் நுழைவதற்கு அனுமதிபெறும் முன்னர் அதன் திரையை, அகற்றி;க் கொண்டு அவ்வீட்டினுள் பார்வையைச் செலுத்தி; அங்கேயே அந்தரங்கத்தைப் பார்ப்பது செய்யத்தகாத குற்றம்.)
''ஒருவர் தன் பார்வையை ஒரு வீட்டினுள் முறையற்று செலுத்தும்போது அவ்வீட்டுக்காரர் உற்றுப் பார்த்த அவரின் கண்ணைப் பறித்தால்கூட, அதற்காக அவரை நான் குறைகூறமாட்டேன். அடைக்கப்படாத (திரையிடப்படாத) ஒரு வாசலை, யாரேனும் உற்று நோக்கினால், நோக்கியவர் மீது குற்றம் ஏதுமில்லை. வீட்டுக்காரர்களே குற்றவாளிகளாவர் என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்""என அபூதர்(ரலி) அறிவிக்கிறார். (நூல் : திர்மிதீ)
மேற்கண்ட நபிமொழி மூலம், பிறர் பார்க்கும் வகையில் தங்கள் இல்லங்களைத் திரையிடாமலும், மூடாமலும் திறந்து வைத்தல் கூடாதெனத் தெரிகிறது.
வீட்டில் நுழைய அனுமதி பெற, ஒருவர் வரும் போது அவ்வீட்டில் உள்ளவர்கள் தொழுதுகொண்டிருந்தால் எவ்வாறு அனுமதி அளிப்பது என்பதைப் பின்வரும் ஹதீஸ் விளக்குகிறது.
''வீட்டில் ஓர் ஆண் தொழுது கொண்டிருக்கும்போது அவரின் வீட்டினுள் நுழைய அனுமதி கேட்டால், தொழுது கொண்டிருப்பவர் தஸ்பீஹ் (சுப்ஹானல்லாஹ் என்று) சொல்வதே அனுமதி அளித்ததாகும். பெண் ஒருத்தி தொழுது கொண்டிருக்கும்போது அவ்வீட்டினுள் நுழைவதற்கு அனுமதி கேட்கப்பட்டால், அப்பெண் தன் புறங்கையைப் புறங்கையில் அடித்து சப்தம் உண்டாக்குவதே அனுமதி அளிப்பதாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்"" என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். (நூல்: பைஹகீ)
''நான் நபி(ஸல்) அவர்களிடம் இரவு மற்றும் பகல் நேரங்களில் வருவேன். நான் இரவில் வரும்போது அவர்கள் கனைத்து எனக்கு அனுமதி அளிப்பார்கள். நான் நபி(ஸல்) அவர்களிடம் வந்து அனுமதி கேட்கும்போது அவர்கள் தொழுது கொண்டிருந்தால் கனைப்பார்கள்; நான் நுழைந்துவிடுவேன். அவர்கள் தொழாமல் இருந்தால் எனக்கு (வாய்மொழியில்) அனுமதி அளிப்பார்கள்"" என அலி இப்னு அபீ தாலிப்(ரலி) (நூல்: நஸயீ)
பிறரின் வீடுகளில் நாம் நுழைய அனுமதி கோரும்போது; அடையாளம் காட்டும் வகையில், நான்தான் என்று சொல்லலாகாது. இதனால் வீட்டில் உள்ளவர்களுக்குக் குழப்பம் ஏற்படலாம். எனவே, நுழைபவர் தன் பெயரை மட்டுமோ, அல்லது இன்னார் மகன் இன்னார் என்றோ, சொல்லியே வீட்டில் நுழைய அனுமதி கேட்கவேண்டும்.
''நபி(ஸல்) அவர்களின் மகளார் பாத்திமா(ரலி) அவர்கள், (துணியால்) மறைத்துக் கொண்டிருக்க, நபி(ஸல்) அவர்கள், குளித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கே நான் வந்ததை அறிந்து, யார் அது என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நான், நான்தான் உம்முஹானி என்று கூறினேன்"" என உம்முஹானி(ரலி) அறிவிக்கிறார். (நூல்: புகாரி, முஸ்லிம்)
''நபி(ஸல்) அவர்கள் ஒரு தோட்டத்தில் அமர்ந்திருந்தார்கள். அப்போது அபூபக்ர்(ரலி) அவர்கள் வந்து அனுமதி கோர, யார் அது என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டதற்கு, அபூபக்ர் என்று பதில் சொன்னார்கள். அதன்பிறகு உமர்(ரலி) வந்து அனுமதி கேட்டார்கள். யார் என்று நபி(ஸல்) அவர்கள் கேட்க, உமர் என்றார்கள் அதன் பின்பு வந்த உதுமான்(ரலி) அவர்களும் தம் பெயர் கூறியே அனுமதி பெற்றார்"" என அபூ மூஸா அல் அஷ்அரி(ரலி) அறிவிக்கிறார். (ஹதீஸ் சுருக்கம்) (நூல்: புகாரி, முஸ்லிம்)
ஒருவர் அனுமதி கேட்கும்போது வீட்டிற்குள்ளிருந்தோ, மறைவிடத்திலிருந்தோ, வீட்டில் வர அனுமதி கேட்பது யார் என வினவப்பட்டால், அவர் தன் பெயரைச் சொல்ல வேண்டும். நான்தான் என்றோ அல்லது பரிச்சயமில்லாத தனக்குள்ள வேறு பெயரையோ கூறக்கூடாது என்பதைப் பின்வரும் ஹதீஸ் விளக்குகிறது.
''என் தந்தைக்கு இருந்த கடன் விஷயமாக, நான் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, (அவர்கள் வீட்டுக்) கதவைத் தட்டினேன். (வீட்டிற்குள்) இருந்து நபி(ஸல்) அவர்கள் (கதவைத் தட்டுவது) யார் எனக் கேட்டார்கள். நான்தான் என்று குரல் கொடுத்தேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், நான்தான் ''என்றால் யார்"" என்று அதிருப்தியோடு கேட்டார்கள்"" என ஜாபிர்(ரலி) அறிவிக்கிறார். (நூல்: புகாரி, முஸ்லிம், அபூதாவூது, மற்றும் திர்மிதீ)
விருந்து அழைப்பை ஏற்றவராக ஒருவர் மற்றவருடைய இல்லத்திற்குச் செல்லும்போதும் அனுமதி பெற்றே அதனுள் நுழைய வேண்டும்.
''நபி(ஸல்) அவர்களுடன் நான் சென்ற இடத்தில் ஒரு பாத்திரத்தில் பால் இருந்தது. நபி(ஸல்) அவர்கள், அபூஹுரைராவே, திண்ணைத் தோழர்களை இங்கே அழைத்து வாருங்கள் என்றார்கள். நான் திண்ணைத் தோழர்களிடம் சென்று அவர்களை அழைத்தேன். அவர்கள் வந்து அனுமதி கேட்டனர். அவர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் அவர்கள் உள்ளே நுழைந்தார்கள்"" என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். (நூல்: புகாரி)
அழைத்தவருடன் அவருடைய வீட்டிற்குச் செல்லும்போது வெளியில் நின்றுகொண்டு தனியாக ஓர் அனுமதி பெறத்தேவையில்லை.
''உங்களில் ஒருவர் அழைக்கப்பட்டு, அழைக்க வந்தவருடன் சேர்ந்து வந்தால் அதுவே அவருக்கு அனுமதியாகும்" என்று கூறினார்கள்"" என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். (நூல்: அபூதாவூத்)
ஆள் இல்லாத வீடுகளிலும், சத்திரம், சாவடி, தங்கும் விடுதி போன்றவற்றில் ஏற்கனவே நாம் முதலில் அனுமதி பெற்று நம் பொருட்களை வைத்திருந்து, பின்னர் இரண்டாவது முறையாக நாம் அதில் நுழையும்போது, ஆள் இல்லாத இடம்தானே என்று வெறுமனே நுழையாமல், 'அஸ்ஸலாமு அலைக்கும்" என்று கூறியே நுழைய வேண்டும். உள்ளே வரலாமா என்று தனிப்பட்ட முறையில் அனுமதி பெறவேண்டிய அவசியமில்லை.
''எவரும் வசிக்காத வீடுகளில் உங்களுடைய பொருட்கள் இருந்து அவற்றில் நீங்கள் (அனுமதிபெறாமல்) பிரவேசிப்பது உங்கள் மீது குற்றமாகாது."" (அல்குர்ஆன் 24:29)
நீங்கள் (எந்த வீட்டில்) நுழைந்தாலும் அல்லாஹ்விடமிருந்துள்ள, பாக்கியமான பரிசுத்தமான ஸலாமை உங்களுக்கு நீங்களே கூறிக்கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 24:61)
ஆள் இல்லாத வீட்டினுள் ஒருவர் புகும்போதும், அவர் தமக்குத்தாமே 'ஸலாம்" கூறிக் கொள்ள வேண்டும் என மேற்கண்ட வசனம் கூறுகிறது. ஏனெனில் தனியாக அவ்வீட்டினுள் செல்லும் அவருக்கும் இறைவனின் சாந்தியும் அமைதியும் தேவைப்படுகிறதல்லவா?
வீட்டில் உள்ளவர்கள், நெருங்கிய உறவினர்கள் ஆகியோர், ஒருவருக்கொருவர் தங்களுக்கிடையே அனுமதி பெறவேண்டுமா, எப்படி அனுமதி பெறுவது, யார் யார் அனுமதி பெறத் தேவையில்லை என்பதையும் அறிந்து கொள்ளவேண்டும்.
''இரவில் நபி(ஸல்) அவர்கள் தம் வீட்டிற்குத் திரும்பி வரும்போது, தூங்குபவர்கள் எழுந்துவிடாத முறையிலும் விழித்திருப்பவர்களுக்கு (மட்டும்) கேட்கும்படியாகவும் 'ஸலாம்" கூறுவார்கள்"" என மிக்தாத்(ரலி) அறிவிக்கிறார். (நூல்: முஸ்லிம்)
''ஒரு மனிதன் தன் வீட்டிற்குள் நுழையும்போது, யா அல்லாஹ்! (பிரச்சினைகள் எதுவுமின்றி) நல்ல முறையில் (இவ்வீட்டில்) நுழைவதையும் நல்ல முறையில் வெளியேறுவதையும் உன்னிடம் வேண்டுகிறேன். இறைவா! உன் திருப்பெயர் கொண்டே நுழைகிறோம். உன் திருப்பெயர் கொண்டே வெளியேறுகிறோம். எங்கள் இறைவனாகிய அல்லாஹ்வின் மீதே நாங்கள் நம்பிக்கை வைக்கிறோம் என்று கூறிவிட்டுப் பிறகு தன் வீட்டில் உள்ளவர்களுக்கு 'ஸலாம்" கூறட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்"" என அபூ மாலிக்கில் அஷ்அரி(ரலி) அறிவிக்கிறார். (நூல்: அபூதாவூத்)
மேற்கண்ட ஹதீஸிலிருந்து ஒருவர் தன் வீட்டிற்குள் நுழையும்போதும் 'ஸலாம்" கூற வேண்டும் என்பதை அறிய வேண்டும்.
பருவம் அடையாத ஆனால் விபரமறிந்த சிறுவர்கள்கூட, மூன்று வேளைகளில் ஒருவர் தனித்திருக்கும் இடத்தில் அனுமதி பெற்றே நுழைய வேண்டும். அவ்வாறு அனுமதி பெற வேண்டியதற்கான காரணத்தையும் அல்லாஹ் சொல்கின்றான்.
''இறைநம்பிக்கையாளர்களே! உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட (அடிமைகளும்) உங்களிலுள்ள பருவம் அடையாச் சிறுவர்களும் (உங்களுக்கு முன்னால் வர நினைத்தால்) மூன்று நேரங்களில் உங்களிடம் அனுமதி கேட்க வேண்டும். பஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நீங்கள் (மேல் மிச்சமான) உங்கள் உடைகளைக் களைந்திருக்கும் லுஹர் நேரத்திலும், இஷா தொழுகைக்குப் பின்னரும் ஆக இம்மூன்று நேரங்களிலும் உங்களுக்கு அந்தரங்க வேளைகளாகும். இம்மூன்று நேரங்களைத் தவிர, மற்ற நேரங்களில் அவர்கள் அனுமதி இன்றியே வருவது உங்கள் மீதோ அவர்கள் மீதோ குற்றமாகாது."" (அல்குர்ஆன் 24:58)
1. ஃபஜ்ரு தொழுகைக்கு முந்திய அதிகாலை வேளை
2. வெயில் போன்ற காரணங்களால் அத்தியாவசியமான ஆடைகளை மட்டும் அணிந்து கொண்டு அதிகப்படியான ஆடைகளைக் களைந்த நிலையில் ஓய்வெடுக்கும் மதிய நேரம்.
3. படுக்கத் தயாராகும் இஷா தொழுகைக்குப் பின்னருள்ள இரவு நேரம்.
மேற்குறிப்பிட்ட மூன்று வேளைகளிலும் பருவம் அடையாத விபரம் அறிந்த உறவுக்காரச் சிறுவர்கள் கூட, அனுமதி பெற்ற பின்னரே வரவேண்டும் என்று அல்லாஹ் கூறியுள்ளதிலிருந்து, பருவ வயதை அடைந்துவிட்டால்; எல்லா நேரத்திலும் அது தாயாக சகோதரியாக இருப்பினும், அனுமதி பெற்ற பின்பே அவர்கள் இருக்கும் இடங்களில் புக வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளமுடிகிறது.
''இன்னும் உங்களிலுள்ள குழந்தைகள் பருவ வயதை அடைந்துவிட்டால், அவர்களும் தங்களுக்கு (வயதில்) மூத்தவர்கள் அனுமதி கேட்பது போலவே அனுமதி கேட்க வேண்டும்"" (அல்குர்ஆன் 24:59)
''நபி(ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தபோது, ஒருவர் அவர்களுக்கு 'ஸலாம்" கூறினார். அப்போது (சிறுநீர் கழித்த) பின்பு, ''என்னை இது போன்ற நிலைகளில் கண்டால் எனக்கு 'ஸலாம்" கூறாதீர். அப்படிக் கூறினால், உமக்கு நான் பதில் (ஸலாம்) கூறமாட்டேன்"" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்"" என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவிக்கிறார். (நூல்: இப்னு மாஜா)
ஒருவர் மலஜலம் கழித்துக் கொண்டிருக்கும் நிலையில், அவருக்கு 'ஸலாம்" சொல்லக்கூடாது. அப்படி ஒருவர் அறியாமல் 'ஸலாம்" சொல்லிவிட்டால் அவரும் பதில் சொல்லக் கூடாது என்பதை மேற்கண்ட ஹதீஸின் மூலம் அறிந்து கொள்கிறோம். சாப்பிடும்போது 'ஸலாம்" சொல்லக் கூடாது என்று சிலர் எண்ணுவதுண்டு ஆனால் இதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.
'ஸலாம்" கூறுவதற்கு உளு தேவையா என்பதைப் பற்றியும் நாம் ஆராய வேண்டும்.
''ஸலாம்" எனும் சொல் அல்லாஹ்வின் திருப்பெயர்களில் ஒன்று என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்"" என வஹ்பு(ரலி) அறிவிக்கிறார். (நூல்: பஸ்ஸார்)
மேற்கண்ட ஹதீஸின்படி 'ஸலாம்" அல்லாஹ்வின் பெயராக இருப்பதால் அது ஒரு திக்ராகும். அல்லாஹ்வை உளுவுடன்தான் திக்ரு செய்ய வேண்டும்; எனவே 'ஸலாம்" சொல்வதற்கோ அதற்குப் பதில் சொல்வதற்கோ உளு அவசியம் என்பது சிலரின் வாதமாக உள்ளது. அதற்கு அவர்கள் சில ஆதாரங்களை முன்வைக்கின்றனர்.
நபி(ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்துக் கொண்டிருக்க அவ்வழியே சென்ற ஒரு மனிதர், அவர்களுக்கு 'ஸலாம்" கூறினார். அவருக்கு நபி(ஸல்) அவர்கள், பதில் (ஸலாம்) கூறவில்லை. சிறுநீர் கழித்து முடித்த பின்பு தம் இரு உள்ளங்கைகளையும் தரையில் அடித்து, தயம்மும் செய்த பின்பு அவரின் ஸலாத்திற்குப் பதில் கூறினார்கள்"" என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்.
(நூல்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத் மற்றும் இப்னுமாஜா)
''நான் ஒரு தடவை நபி(ஸல்) அவர்களிடம் வந்தபோது, அவர்கள் உளு செய்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு நான் 'ஸலாம்" கூறினேன். அவர்கள் எனக்குப் பதில் 'ஸலாம்" கூறவில்லை. உளு செய்து முடித்த பின்பு, தூய்மையான நிலையில் இறைவனை திக்ரு செய்வதையே நான் விரும்புகிறேன். எனவேதான் உமக்கு நான் பதில் கூறவில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்"" என முஹாஜிர்(ரலி) அறிவிக்கிறார். (நூல்: அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத் மற்றும் நஸயீ)
மேற்கண்ட இரண்டு ஹதீஸ்களிலும் நபி(ஸல்) அவர்கள் உளுவோ, தயம்முமோ செய்த பின்பே ஸலாத்திற்குப் பதில் கூறியுள்ளனர். எனவே அப்படித்தான் 'ஸலாம்" கூற வேண்டுமெனத் தோன்றுகிறது.
ஆனால் இன்னும் சில ஹதீஸ்களைப் பார்க்கும்போது 'ஸலாம்" கூறுவதற்கு உளு அவசியமில்லை என்பதே இறுதி முடிவாகிறது.
''நபி(ஸல்) அவர்கள் தம் மலஜல உபாதைகளைக் கழித்த பின்பு வெளியேறி, (உளுவோ தயம்முமோ செய்யாமல்) குர்ஆனை ஓதுவார்கள். தடையின்றி எங்களுடன் சேர்ந்து இறைச்சியையும் உண்பார்கள். ஜனாபத் (என்ற கடமையான குளிப்பைத்) தவிர, வேறெதுவும் நபி(ஸல்) அவர்களைக் குர்ஆன் ஓதுவதை விட்டும் தடுக்காது"" என அலீ(ரலி) அறிவிக்கிறார்.
(நூல்: அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா, திர்மிதீ, ஹாகிம், இப்னுஹிப்பான், இப்னுகுஸைமா)
திர்மிதீயில் ஜனாபத் என்ற குளிப்புக் கடமையான நிலையைத் தவிர, வேறு எல்லா நிலைகளிலும் எங்களுக்குக் குர்ஆனை ஓதிக் காட்டுவார்கள் என இடம் பெற்றுள்ளது.
எனவே, திக்ருகளிலேயே உயர்ந்த இறைவனின் திருக்குர்ஆனையே உளுவின்றி ஓதும்போது, ஸலாமையும், உளுவின்றிக் கூறலாம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
குறிப்பு: இந்த ஹதீஸில் வரும் அறிவிப்பாளர்களில் ஒருவராகிய அப்துல்லாஹ் இப்னு ஸலமா என்பவர் நல்லவராக இருந்து, வயோதிகக் காலத்தில் மாறிவிட்டார். அந்தக் காலத்தில் அறிவித்த ஹதீஸாக இது இருக்கலாம் என ஹதீஸ் அறிவிப்பாளர்களில் ஒரு சிலர் கருதுகின்றனர். என்றாலும், பின் வரும் பலமான ஹதீஸின் மூலமும், அவையல்லாது வேறுசில ஹதீஸ்கள் மூலமும் இது ஹஸன் என்ற நிலையை அடைந்து ஏற்றுக் கொள்ளத்தக்கதாக ஆகிவிடுகிறது.
''நபி(ஸல்) அவர்கள் எல்லா நேரத்திலும் இறைவனை நினைப்பவர்களாகவே! (திக்ரு செய்பவர்களாகவே) இருந்தார்கள்."" (நூல்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத், அஹ்மத் மற்றும் இப்னுமாஜா)
ஹதீஸ் எண் 2ல் நபி(ஸல்) அவர்கள் தூய்மையான நிலையில் இறைவனை திக்ரு செய்வதையே நான் விரும்புகிறேன் என்று கூறியதன் மூலம், அது சொந்த விருப்பம் தானே தவிர, கட்டாயமான கட்டளை அல்ல என்பதை உணர்த்தியுள்ளார்கள். எனவே உளுவின்றி 'ஸலாம்" கூறுவதும் அதற்குப் பதிலளிப்பதும் குற்றமாகாது; கூடும் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். மேலும் உளுவுடன்தான் 'ஸலாம்" கூற வேண்டுமென எந்தக் கட்டளையும் குர்ஆனிலோ நபி வழியிலோ காணப்படவில்லை.
''தொழுகை என்பது அல்லாஹ்வுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு உரையாடுவதாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்"" (நூல்: புகாரி)
தொழும்போது மனிதர்கள் தமக்கு மத்தியில் பேசக்கூடாது: 'ஸலாம்" கூறக்கூடாது. என்பதை மேற்கண்ட ஹதீஸ் நமக்கு உணர்த்துகிறது.
ஒரு மனிதர் தொழுது கொண்டிருப்பது தெரிந்தும், நாம் அவருக்கு 'ஸலாம்" கூறக்கூடாது. இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் தொழுகையில் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதும், 'ஸலாம்" கூறிக்கொள்வதும் நடைமுறையில் இருந்தது; பின்னர் அது மாற்றப்பட்டுவிட்டது.
''நபி(ஸல்) அவர்கள் (பனூமுஸ்தலிக் போர்க்களத்தில்) என்னை ஒரு வேலைக்காக ஒர் இடத்திற்கு அனுப்பினார்கள். நான் அவ்வேலையை முடித்துவிட்டு வந்தபோது அவர்கள் (தங்கள் ஒட்டகத்தில் அமர்ந்து) தொழுது கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு நான் 'ஸலாம்" கூறினேன். எனக்கு அவர்கள் பதில் 'ஸலாம்" கூறவில்லை. நான் காலம் தாழ்த்தி வந்ததால், என் மீது அதிருப்தி யுற்றிருக்கிறார்களோ என்று என் மனதில் (சிறு அச்சம்) தோன்றியது. இன்னும் மனதினுள் பலவாறு நான் எண்ணலானேன். அவற்றை அல்லாஹ்வே அறிவான். மீண்டும் 'ஸலாம்" கூறினேன். அப்போதும் அவர்கள் எனக்குப் பதில அளிக்கவில்லை. இப்போது எனக்கு முதல் முறையை விட அதிகக் கவலை ஏற்பட்டது. மீண்டும் (ஒரு முறை 'ஸலாம்" கூறினேன், எனக்கு (இப்போது) பதிலளித்துவிட்டு, ''நான் தொழுது கொண்டிருந்த காரணத்தால்தான், உம் ஸலாத்திற்குப் பதில அளிக்கவில்லை"" என்று கூறினார்கள். அப்போது அவர்கள் அமர்ந்திருந்த ஒட்டகை “கிப்லா" அல்லாத வேறு திசையை முன்னோக்கி நின்று கொண்டிருந்தது"" என ஜாபிர்(ரலி) அறிவிக்கிறார். (நூல்: புகாரி, முஸ்லிம்)
எனவே, தொழுது கொண்டிருப்பவருக்கு 'ஸலாம்" கூறக்கூடாது. நபி(ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருந்த காரணத்தால்தான், ஜாபிர்(ரலி) அவர்களின் ஸலாத்திற்குப் பதில அளிக்கவில்லை. ஆனால், கையால் சமிக்ஞை செய்ததாக முஸ்லிமின் இன்னொரு அறிவிப்பில் காணப்படுகிறது. எனவே, தொழுபவருக்கு 'ஸலாம்" சொல்லக்கூடாது என்ற சட்டம் தெரியாதவர்கள் 'ஸலாம்" கூறினால், தான் தொழுது கொண்டிருப்பதைக் கையால் உணர்த்தலாம் என்பதை மேற்கண்ட நிகழ்விலிருந்து அறிந்து கொள்கிறோம்.
''பள்ளியில் உட்கார்ந்திருந்த எங்களை நபி(ஸல்) அவர்கள் கடந்து சென்றபோது, எங்களுக்குக் கையசைத்து 'ஸலாம்" கூறினார்கள்"" என அஸ்மா பின்த் யஸீத்(ரலி) அறிவிக்கிறார். (நூல்: திர்மிதீ)
'ஸலாம்" கூறும்போது கையசைக்கலாம் என்பதை மேற்கண்ட ஹதீஸ் தெரிவித்தாலு:ம் கையசைக்கும் முறைகளில் சில தடுக்கப்பட்டுள்ளன.
''யூதர்கள் மற்றும் கிறித்தவர்கள் 'ஸலாம்" கூறுவது போன்று நீங்கள் கூறாதீர்கள். கைகளாலும், தலையாலும், சமிக்ஞையாலும் 'ஸலாம்" கூறுவதே அவர்களின் வழக்கமாகும்"" என ஜாபிர்(ரலி) அறிவிக்கிறார். (நூல்: நஸயீ, தைலமீ)
''ஒரு விரலைக் கொண்டு சமிக்ஞை செய்து 'ஸலாம்" கூறுவது யூதர்களின் செயலாகும்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்"" என ஜாபிர்(ரலி) அறிவிக்கிறார். (நூல்: தப்ரானீ, அபூயஃலா)
மேற்கண்ட ஹதீஸில் யூதர்கள் மற்றும் கிறித்தவர்களைப் போல 'ஸலாம்" கூறுவதை நபி(ஸல்) அவர்கள் தடுத்திருப்பதால் அவர்களின் 'ஸலாம்" கூறும் முறையை மட்டும்தான் பின்பற்றக் கூடாது என்று அர்த்தமல்ல. உலகில் முஸ்லிம்கள் அல்லாத வேறு எந்த சமூகத்தாரின் 'ஸலாம்" கூறும் முறையையும் நாம் பின்பற்றக் கூடாது என்பதை அறியவேண்டும். மேலும் கீழ்வரும் இன்னொரு ஹதீஸையும் கவனிக்க வேண்டும்.
''ஒரு கூட்டத்தாரின் செயல்களைப் போல ஒருவர் செயல்பட்டால், அவரும் அக் கூட்டத்தாரில் ஒருவராக ஆகிவிடுகிறார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்" '(நூல்: அபூதாவூத்)
மாற்றாரைப் போன்று கைகுவித்து வணங்குவதேர் நெற்றியில் கைவைத்து சல்யூட் அடிப்பதேர் தலையைத் தாழ்த்தி வணக்கம் தெரிவிப்பதேர் யூதர்கள் மற்றும் கிறித்தவர்களைப் போன்று ஒரு விரலாலும், தலை, மற்றும் கைகளாலும் சமிக்ஞை செய்வதோ முஸ்லிமாக இருக்கும் ஒருவருக்கு ஆகுமானதல்ல. இவையல்லாத முறையில் கையசைத்து 'ஸலாம்" கூறுவதற்கு எவ்விதத் தடையுமில்லை.
தாம் முந்திக் கொண்டு 'ஸலாம்" கூற வேண்டுமென்பதற்காகத் தூரத்தில் வருபவருக்கு 'ஸலாம்" கூறும்போது சிலர் கையை உயர்த்தி தம் ஸலாத்தை உணர்த்துவதுண்டு. அவ்வாறு கூறுவதற்கும் தடையேதுமில்லை.
பெண்களுக்கு 'ஸலாம்" கூறலாமா, கூடாதா என்பது பற்றி மக்கள் மத்தியில் பல்வேறு கருத்துக்கள் காணப்படுகின்றன. அவற்றை சற்று விரிவாகவே காணவேண்டும்.
''நபித் தோழர்கள் ஜும்ஆ தொழுது விட்டுச் செல்லும்போது, வழக்கமாக வழியில் வயது முதிர்ந்த ஒரு மூதாட்டியைக் கடந்து செல்வார்கள். அம்மூதாட்டிக்கு 'ஸலாம்" கூறுவார்கள். அம்மூதாட்டி அந்த நபித் தோழர்களுக்கு கீரை, கோதுமையைக் கொண்டு சமைக்கப்பட்ட உணவை உண்ணக் கொடுப்பாள்"" என (ஹதீஸ் சுருக்கம்) என ஸஹ்ல்(ரலி) அறிவிக்கிறார். (நூல்: புகாரி)
''நபி(ஸல்) அவர்களிடம் நான் வந்தேன். பாத்திமா(ரலி) அவர்கள் துணியால் திரையிட்டு மறைத்துக் கொண்டிருக்கும் நிலையில், நபி(ஸல்) அவர்கள் குளித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது, நபி(ஸல்) அவர்களுக்கு நான் 'ஸலாம்" சொன்னேன்"" என உம்மு ஹானி(ரலி) அறிவிக்கிறார். (நூல்: முஸ்லிம், திர்மிதீ)
''பள்ளியில் பெண்கள் கூட்டத்தை நபி(ஸல்) அவர்கள் கடந்து சென்றபோது, எங்களுக்குக் கையசைத்து 'ஸலாம்" கூறினார்கள்"" என அஸ்மா பின்த் யஸீத்(ரலி) அறிவிக்கிறார். (நூல்: திர்மிதீ)
அபூதாவூதில் 'கையசைத்து" என்பது மட்டும் இடம் பெறாமல், பொதுவாக பெண்களுக்கு 'ஸலாம்" கூறியதாக இடம் பெற்றுள்ளது
ஹதீஸ் எண் 1 ல் வயதான மூதாட்டிக்கும், ஹதீஸ் எண் 2 ல் உம்மு ஹானி(ரலி) அவர்களுக்கும், ஹதீஸ் எண் 3 ல் கூட்டமாக இருந்த பெண்களுக்கும் நபி(ஸல்) அவர்கள் 'ஸலாம்" கூறியுள்ளார்கள். எனவே தவறு நிகழ வாய்ப்பில்லாத இது போன்ற நிலையில்தான் பெண்களுக்கு 'ஸலாம்" கூற வேண்டும் என்பது சில அறிஞர்களின் வாதமாக இருந்து வருகிறது. ஆண்கள் பெண்களுக்கும், பெண்கள் ஆண்களுக்கும் 'ஸலாம்" கூறக்கூடாது என்றொரு தவறான எண்ணம் நமக்கு மத்தியில் நிலவுவதே இதற்கு முக்கியக் காரணமாகும். உண்மையில் பெண்களுக்கு 'ஸலாம்" கூறக்கூடாது என்று ஹதீஸ்களில் எவ்விதத் தடையுமில்லை. மாறாக ஸலாத்தைப் பரப்புமாறுதான் ஹதீஸ்கள் உள்ளன.
''உங்களுக்கிடையில் ஸலாத்தைப் பரப்புங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்"" (நூல்: முஸ்லிம், அபூதாவூத் மற்றும் திர்மிதீ)
''உனக்குத் தெரிந்தவர்களுக்கும், தெரியாதவர்களுக்கும் 'ஸலாம்" கூறுவது இஸ்லாத்தில் சிறந்த செயல் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்."" (புகாரி, முஸ்லிம்)
மேற்கண்ட ஹதீஸ்கள் அனைத்தையும் காணும்போது பெண்களுக்கும் 'ஸலாம்" கூறலாம், கூறவேண்டும் என்பதே சரியான கருத்தாகும்.
தவறுகள் நிகழ்ந்துவிடுமோ என்று அஞ்சுகின்ற சசூழலில் பெண் ஆணுடனேர் ஆண் பெண்ணுடனோ பேசுவது மற்றும் தனித்திருப்பது அனுமதிக்கப்பட்டதல்ல என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அப்போதும்கூட தூய எண்ணத்துடன் 'ஸலாம்" மட்டும் கூறலாம், அதில் தவறில்லை. அதிலும் தவறு நிகழ்ந்துவிடும் என்று பயந்தால் மட்டுமே அப்போது ஸலாத்தைத் தவிர்த்துக் கொள்ளவேண்டும் என்பதை நினைவில் கொள்ளக!
ஒருவர் மற்றொருவரிடம், இன்னாருக்கு நான் 'ஸலாம்" கூறியதாகச் சொல்லுங்கள் என்று 'ஸலாம்" சொல்லி அனுப்பலாம்.
''உனக்கு ஜிப்ரீல்(அலை) அவர்கள் 'ஸலாம்" கூறினார்கள் என்று அன்னை ஆயிஷா(ரலி) அவர்களிடம், நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு, வஅலைஹிஸ்ஸலாமு வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு (அவர் மீது சாந்தியும், அல்லாஹ்வின் அருளும் நன்மையும் உண்டாகட்டும்) என்று ஆயிஷா(ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்"" என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். (நூல்: புகாரி, முஸ்லிம் மற்றும் திர்மிதீ )
ஒருவர் மற்றொருவரிடம், உமக்கு இன்னார் 'ஸலாம்" கூறினார் என்று சொன்னால், 'ஸலாம்" சொல்லிவிட்டவருக்காக மட்டும் பதில் 'ஸலாம்" கூறுவது ஒரு வகை. இது மேற்கண்ட ஹதீஸில் தெளிவாகிறது.
ஒருவர் மற்றொருவரிடம் இன்னாருக்கு என் 'ஸலாம்" சொல்லுங்கள் என்று சொல்லி அனுப்பி, அவர் சென்று குறிப்பிட்ட நபரிடம் 'ஸலாம்" கூறும்போது; அவர் ஸலாமை கேட்டு வந்து சொன்னவருக்கும், யாரிடமிருந்து 'ஸலாம்" சொல்லிவிடப்பட்டதோ அவருக்கும் பதில் சொல்வது இன்னொரு வகை. இதைப் பின்வரும் ஹதீஸிலிருந்து அறிந்து கொள்ளலாம்,
''நபி(ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் என் தந்தை தங்களுக்கு 'ஸலாம்" கூறினார் என்று சொன்னதற்கு, 'அலைக்க வஅலா அபீகஸ்ஸலாம்" (உனக்கும் உன் தந்தைக்கும் சாந்தி உண்டாகட்டும்) என்று நபி(ஸல்) அவர்கள் பதில் சொன்னார்கள்."" (நூல்: அபூதாவூத்)
''ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம், இதோ கதீஜா, உணவும் தண்ணீரும் கொண்டு வருகிறார் என்று சொன்னார்கள். அப்போது கதீஜா(ரலி) அவர்கள் வந்துவிட்டார்கள். அவர்களுக்கு (கதீஜாவுக்கு) அவர்களின் இறைவனாகிய அல்லாஹ்வும், நானும் 'ஸலாம்" சொன்னதாகச் சொல்லுங்கள் என்று ஜிப்ரீல்(அலை) அவர்கள் கூறினார்கள்"" என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். (நூல்: புகாரி)
''கதீஜா(ரலி) அவர்களுக்கு அல்லாஹ், 'ஸலாம்" கூறியதாக ஜிப்ரீல்(அலை) கூறியபோது, கதீஜா(ரலி) அவர்கள், ''இன்னல்லாஹ ஹுவஸ் ஸலாம் வஅலா ஜிப்ரீலஸ் ஸலாம் வ அலைக யா ரஸுலல்லாஹிஸ் ஸலாம் வரஹ் மத்துல்லாஹி வ பரகாத்துஹு"" (அல்லாஹ் சாந்தியளிப்பவன்: ஜிப்ரீலீன் மீது சாந்தி உண்டாகட்டும்! இறைத்தூதர் அவர்களே! தங்கள் மீதும் சாந்தி உண்டாகட்டும். மேலும் அல்லாஹ்வின் அருளும், அவனுடைய அபிவிருத்தியும் உண்டாகட்டும்) என்று பதில் கூறினார்கள்"" என அனஸ்(ரலி) அறிவிக்கிறார். (நூல்: நஸயீ)
நபி(ஸல்) அவர்கள் ரோம, பாரசீகப் பேரரசர்களுக்கு இஸ்லாத்தின் பக்கம் அழைத்து எழுதிய கடிதங்களில்...
வஸ்ஸலாமு அலா மனித்தபஅல் ஹுதா
''நேர்வழியைப் பின்பற்றியவர் மீது சாந்தியும் சமாதானமும் நிலவட்டும் என்ற (திருகுர்ஆனின் 20:47வது வசனத்தில் வரும்) வாசகத்தை எழுதினார்கள்"" என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். .(நூல்: புகாரி, முஸ்லிம், திர்மிதீ.)
ஒருவர் இறக்கும் தறுவாயில் இருக்கும்போது, அவரிடம் இறந்துவிட்ட என் மூதாதையருக்கு என் 'ஸலாம்" கூறிவிடு என்று சொல்லி அனுப்பலாமா? இது பற்றி மார்க்கம் என்ன சொல்கிறது? ஹஜ்ஜுக்குச் செல்வோரிடம், நபி(ஸல்) அவர்களுக்கு என் ஸலாத்தைச் சொல்லுங்கள் என்று சொல்லி அனுப்பலாமா? இது மக்களிடம் காணப்படும் வழக்கமாக உள்ளது. எனவே அவற்றை விரிவாக ஆராய வேண்டும்;
கஅபு இப்னு மாலிக்(ரலி) அவர்களின், மரணவேளையில் உம்மு பிஷ்ரு என்ற பெண்மணி வந்து, இன்ன மனிதரை நீ சந்தித்தால், என் ஸலாத்தைச் சொல்! என்று கூறினார். அதற்கு கஅபு(ரலி) அவர்கள், அல்லாஹ் உன்னை மன்னிப்பானாக! நாங்கள் அதைவிட வேறு பல முக்கிய வேலைகளில் ஈடுபட்டிருப்போம், என்று கூறியதாக இப்னுமாஜா, பைஹகீ ஆகிய நூல்களில் ஒரு வரலாற்றுச் சம்பவம் காணப்படுகிறது. இச்சம்பவம் பலவீனமானதாகும்.
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்களின் மரணத் தருவாயில் முஹம்மத் இப்னு முன்கதிர் என்பவர் வந்து, நபி(ஸல்) அவர்களுக்கு என் ஸலாத்தை எத்தி வைத்து விடு என்று கூறியதாக இப்னு மாஜாவில் ஒரு வரலாற்றுச் சம்பவம் காணப்படுகிறது. இதுவும் பலவீனமான சம்பவமாகும். இவை இரண்டும் ஹதீஸ்கள் அல்ல, வரலாற்றுச் சம்பவம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். வரலாற்றுச் சம்பவங்கள் மார்க்கச் சட்டமாகாது என்பதையும் புரிந்து கொள்ளவேண்டும்.
நபி(ஸல்) அவர்கள் தம் மனைவி கதீஜா(ரலி) அவர்களின் மரண நேரத்தில், நீ ஃபிர்அவுனுடைய மனைவிக்கு என் 'ஸலாம்" சொல்! என்று சொன்னதாகக் கூறப்படும் கதை ஒன்று இருக்கிறது அதற்கு ஹதீஸ்களில் எவ்வித ஆதாரமும் இல்லை என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
எனவே, ஒருவர் இறக்கும்போது அவரிடம் 'ஸலாம்" கூறிவிடுவதோ, அவ்வாறே ஹஜ்ஜுக்காகச் செல்வோரிடம் நபி(ஸல்) அவர்களுக்கு என் ஸலாத்தை எத்தி வைத்து விடுங்கள் என்று கூறுவதற்கு மார்க்கம் எவ்விதத்திலும் இடம் தரவில்லை என்பதையும், நபி(ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த நபித்தோழர்களில் எவரும் இப்படிக் கூறி அனுப்பியதில்லை என்பதையும் நன்றாகப் புரிந்து கொள்ளவேண்டும்.
''இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் நபியின் மீது ஸலவாத்துக் கூறி ஸலாமும் சொல்லுங்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்."" (அல்குர்ஆன் 33:56)
நபி(ஸல்) அவர்களுக்கு நாம் இப்பொழுதும் எப்பொழுதும் 'ஸலாம்" கூறலாம். உலகின் எந்த மூலையிலிருந்து நாம் 'ஸலாம்" கூறினாலும், அது அவர்களுக்கு எடுத்துக் காட்டப்படுகிறது. எனவே, நாம் யாரிடமும் சொல்லி அனுப்ப வேண்டிய அவசியமில்லை.
''என்னுடைய மண்ணறையை விழா கொண்டாடும் இடமாக ஆக்கிவிடாதீர்கள். என் மீது 'ஸலவாத்" கூறுங்கள். நீங்கள் எங்கிருந்து என் மீது 'ஸலவாத்" சொன்னாலும், அது எனக்கு எடுத்துக் காட்டப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்."" (நூல்: அபூதாவூத்)
மேலும், நாம் தொழும்போது 'அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன் நபிய்யு" (நபியே! தங்கள் மீது ம்சாந்தி" உண்டாவதாக!) என்று கூறுகிறோம். அவ்வாறு கூறும்படி நமக்கு ஏவப்பட்டுள்ளது. அப்படி நாம் 'ஸலாம்" கூறும்போது, நமக்கு நபி(ஸல்) அவர்கள் பதிலளிக்கிறார்கள் எனவும் பின்வரும் ஹதீஸ் அறிவிக்கிறது.
''யாரேனும் எனக்கு 'ஸலாம்" கூறினால், அல்லாஹ் என் உயிரை எனக்குத் திரும்பக் கொடுக்கிறான். நான் அவருடைய ஸலாத்துக்குப் பதிலளிப்பேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்"" என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். (நூல்: அபூதாவூத்)
''இஸ்லாத்தில் சிறந்த நற்செயல் எது என்று நபி(ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் கேட்டதற்கு, நீ அறிந்தவர்களுக்கும், அறியாதவர்களுக்கும் 'ஸலாம்" கூறுவது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்"" என அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி அல் ஆஸ்(ரலி) அறிவிக்கிறார். (நூல்: புகாரி)
மேற்கண்ட ஹதீஸில் தெரிந்தவர், தெரியாதவர் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் 'ஸலாம்" கூறுமாறு கூறப்படுவதால், முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் 'ஸலாம்" கூறலாம் என்று புரிந்து கொள்ள முடிகிறது. உலக மக்கள் அனைவருக்கும் 'ஸலாம்" கூறுவது இறைநம்பிக்கையின் அடையாளங்களில் ஒன்றாகும் என, நபித்தோழர் அம்மார்(ரலி) அவர்கள் குறிப்பிடும் செய்தி ஒன்று அஹ்மத் எனும் நூலில் இடம் பெற்றுள்ளது, 'ஸலாம்" என்பதற்கு சாந்தி என்று பொருள். இறைவனுடைய சாந்தி இல்லாமல் மண்ணுலகில் எந்தப் படைப்பினமும் வாழமுடியாது. இறைவனுடைய சாந்தியைப் படைப்பினங்களுக்கு நாம் வேண்டினாலும் வேண்டாவிட்டாலும் அது கிடைத்துக் கொண்டுதான் இருக்கும் என்பதையும் விளங்கிக்கொள்ள வேண்டும்.
''1. ஸலாமுக்குப் பதில் கூறுவது
2. நோயாளியை நலம் விசாரிக்கச் செல்வது
3. ஜனாஸாவைப் பின் தொடர்ந்து செல்வது
4. விருந்தழைப்பை ஏற்றுக் கொள்வது
5. தும்மிய பின் அல்ஹம்துலில்லாஹ் என்று கூறினால் அதைக் கேட்பவர் யர்ஹமுகல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை காட்டுவானாக)
என்று கூறுவது ஆகியவை ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமையாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்"" என அபூஹீரைரா(ரலி) அறிவிக்கிறார். (நூல்: புகாரி, முஸ்லிம் மற்றும் அஹ்மத்.)
''இணைவைப்பவர்களை நீங்கள் வழியில் சந்தித்தால் ஸலாமைக் கொண்டு (பேச்சை) ஆரம்பிக்காதீர்கள்! (அதாவது ஆரம்பமாக முந்திக் கொண்டு நீங்கள் 'ஸலாம்" கூறாதீர்கள்!) என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்"" என ஸுஹைல் இப்னு அபீஸாலிஹ்(ரலி) அறிவிக்கிறார். (நூல்: முஸ்லிம், அஹ்மத்)
''யூதர்கள் ஒரு முறை நபி(ஸல்) அவர்களுக்கு, 'அஸ்ஸாமு அலைக்க" (உமக்கு மரணம் உண்டாகட்டும்!) என்று கூறினார்கள். இவர்கள் 'ஸலாம்" கூறினால், 'அஸ்ஸாமு அலைக" என்றே கூறுகிறார்கள். எனவே, நீங்கள் ம்வஅலைக்க" (உனக்கும் அவ்வாறே ஆகட்டும்) என கூறிவிடுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்."" (நூல்: புகாரி, முஸ்லிம்))
மேலே மூன்று ஹதீஸ்கள் எடுத்துவைக்கப்ப:ட்டுள்ளன. அவற்றைக் காணும்போது முஸ்லிம் அல்லாத எவருக்கும் முஸ்லிம்கள் முதலில் 'ஸலாம்" கூறக்கூடாது; அவர்கள் முறையாக 'ஸலாம்" சொன்னால் மட்டுமே நாம் அதற்குப் பதில் அளித்துக் கொள்ளலாம் என்பது போன்று சட்டம் விளங்குகிறது. ஆனாலும் நாம் மேற்கண்ட ஹதீஸ்களை நன்றாக ஆராய வேண்டும்.
'ஸலாமைக் கிண்டல் செய்து, 'ஸலாம்" (சாந்தி) என்பதை 'ஸாம்" (மரணம்) என்று மாற்றி யூதர்கள் கூறியதால், வஅலைக்க" என்று மட்டும் கூறவேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்குத் தெரிவிக்கிறார்கள். முறையாக, 'அஸ்ஸலாமு அலைக்கும்" என்று முஸ்லிம் அல்லாதோர் கூறினால், நாமும் ம்வஅலைக்குமுஸ்ஸலாம்" என்று முறையாகக் பதில் கூற வேண்டும் என்பதற்கோ, ஸலாத்தைக் கிண்டல் செய்யாத இறைமறுப்பாளர்களுக்கு 'ஸலாம்" கூறக்கூடாது என்றோ ஹதீஸ்களில் காணப்படவில்லை என்பதை அறியவேண்டும். இன்னும் ஸலாத்தைப் பரப்புங்கள் என்ற ஹதீஸின் விளக்கமும், அறிந்தவர் அறியாதவர் அனைவருக்கும் ஸலாம் கூறுவதே இஸ்லாத்தில் சிறந்த செயல் என்ற ஹதீஸின் விளக்கமும் ஒரு முஸ்லிம் மற்ற மக்களுக்குத் தாரளமாக 'ஸலாம்" சொல்லலாம் என்பதாகத்தான் இருக்கிறது. அறியாதவர்களுக்கும் ஸலாம் என்றால் வரக்கூடிய நபர் முஸ்லிமா அல்லது முஸ்லிம் அல்லாதவரா என்பதை நாம் எப்படி அறிந்து கொள்ளமுடியும் என்பதையும் சிந்திக்க வேண்டும். இதுதொடர்பான இறைவசனங்களையும் நாம் காணவேண்டும்.
''உங்களுக்கு வாழ்த்துக் கூறப்பட்டால் அதை விடச் சிறந்ததாகவோ, அல்லது அதனையே மறு வாழ்த்தாகவோ கூறுங்கள்!"" (அல்குர்ஆன் 4:86)
இந்த வசனத்தில் மற்றவர்கள் 'ஸலாம்" கூறினால், அதற்கு நிகராகவோ, அல்லது அதற்கு மேலாகவோ, நாம் பதில் கூற வேண்டும் என்று இறைவன் வலியுறுத்துகிறான்.
''மார்க்க விஷயத்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே, அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீங்கள் நீதி செலுத்துவதையும் அல்லாஹ் தடுக்கவில்லை. உண்மையில் அல்லாஹ் நீதிமான்களை நேசிக்கிறான்."" அல்குர்ஆன் 60:8
பகிரங்க எதிரிகளாக அல்லாத, மாற்று மதத்தவர்களுக்கு, நன்மை செய்யவும், நீதி செலுத்தவும் வல்ல அல்லாஹ் இந்த வசனத்தில் கட்டளையிடுகிறான். ஒருவர் முறையாக, 'அஸ்ஸலாமு அலைக்கும்" என்று கூறும்போது, பண்பாட்டோடு பதில் கூறாமல் மௌனம் சாதிப்பதும், அல்லது ம்வஅலைக்க" என்று அரையும் குறையுமாக 'ஸலாம்" கூறுவதும் பெரும் அநீதமன்றோ? இது போன்ற செயல்கள் எவரிடத்தில் காணப்படுகிறதோ அவர் மேற்கூறிய இரண்டு வசனங்களையும் மறுத்தவராகவே கருதப்படுவார்..
ஓர் ஆணைப் பார்த்து, 'அஸ்ஸலாமு அலைக்க" என்று கூறலாம். ஒரு பெண்ணிடம் 'ஸலாம்" கூறும்போது 'அஸ்ஸலாமு அலைக்கி" என்று கூறலாம். 'அஸ்ஸலாமு அலைக்குன்ன" என்று பெண்கள் கூட்டத்தைப் பார்த்துச் சொல்ல வேண்டும். ஆணோ, பெண்ணோ இருவர் மட்டும் இருந்தால், அவர்களுக்கு 'அஸ்ஸலாமு அலைக்குமா" என்று கூற வேண்டும் ஆனால், ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர்கள் ஒருவராக இருந்தாலும் பலராக இருந்தாலும் ஒரே மாதிரி, 'அஸ்ஸலாமு அலைக்கும்" உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் நிலவட்டும் என்று பன்மையில் கூறுகிறோம். இதுவே பரவலாக நடைமுறையில் உள்ளது. இது உலக மக்கள் அனைவருக்காகவும் சாந்தி சமாதானம் வேண்டிப் பிரார்த்திப்பதாக அமைந்த மிகச் சிறந்த நடைமுறையாகும். நபி(ஸல்) அவர்கள் காலத்திலும் பின்னர் நபித்தோழர்கள் காலத்திலும் இவ்வாறு 'ஸலாம்" கூறும் பழக்கம்தான் பெரும்பாலும் நடைமுறையில் இருந்துதது.
இஸ்லாம்தான் உண்மையான இறைமார்க்கம் என்பதை அறிந்து கொண்டே அதற்கு மாற்றமாகச் செல்படுவோருக்கும், இஸ்லாத்தைக் கேளிக்கையாக எண்ணுவோருக்கும் நாம் ஸலாத்தில் முந்தக் கூடாது என்பதை நாம் மேலே கண்டோம். இஸ்லாத்தில் இருந்து கொண்டு, தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொண்டு அதற்கு மாற்றமாகச் செயல்படுவோருக்கு நாம் 'ஸலாம்" கூறலாமா கூடாதா என்பதையும் நபிமொழிகளின் மூலம் நாம் அறியக் கடமைப்பட்டுள்ளோம்.
நபிவழிக்கு மாற்றமாகச்செயல்படுபவர்களுக்கும், தனி மனிதர்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவோருக்கும், வட்டித் தொழில் புரிபவர்களுக்கும், போதைப் பொருள் அடிமைகளுக்கும், விபச்சாரம் புரிவோருக்கும் விலக்கப்பட்ட செயல்களில் ஈடுபடுவோருக்கும் 'ஸலாம்" கூறலாமா, கூடாதா என்பது பற்றி எந்த ஹதீஸும் காணப்படவில்லை. நபி(ஸல்) அவர்கள் இது பற்றி ஏதும் சொல்லவில்லை. ஆனால் தபூக் போரில் கலந்து கொள்ளாது பின்தங்கிவிட்ட கஅப் இப்னு மாலிக்(ரலி) போன்றவர்களுக்கு நபி(ஸல்) அவர்களும், நபித்தோழர்களும் ஸலாத்திற்குப் பதில் கூறாமல் 50 நாட்கள் இருந்துள்ளனர் என்ற நெடிய ஹதீஸ் ஒன்றை இதற்கு முன்பு குறிப்பிட்டுள்ளேன்.
''இப்னு உமர்(ரலி) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, இன்னார் உங்களுக்கு 'ஸலாம்" கூறினார் என்று சொன்னார். 'ஸலாம்" சொல்லி அனுப்பியவர், கத்ரிய்யா என்ற நபிவழிக்கு மாற்றமான கொள்கையில் உள்ளவர் என்று எனக்குத் தகவல் கிடைத்துள்ளது. அப்படி அவர் நபிவழிக்கு மாற்றமான கொள்கையில் உள்ளவர் என்றால், என் ஸலாமை அவருக்குச் சொல்லாதே என்று இப்னு உமர்(ரலி) அவர்கள் பதிலளித்துவிட்டு, இந்த உம்மத்தில் கத்ரிய்யாக்களுக்கு நில அதிர்ச்சியோ, அல்லது உருமாற்றமோ அல்லது கல்லெறியோ ஏற்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கின்றேன் என்றும் கூறினார்கள்"" என நாபிஃ(ரலி) அறிவிக்கிறார். (நூல்: அபூதாவூத், இப்னுமாஜா)
எனவே, மார்க்கத்திற்கு முரணான காரியத்தில் ஈடுபடுவோர், தாம் செய்யும் காரியம் தவறு என்பதை உணர்ந்து அதைவிட்டும் திருந்திக் கொள்ளும் வரை, அவர்களுக்கு நாம் 'ஸலாம்" கூறாதிருக்கலாம். அவர்கள் திருந்திவிட்டால் 'ஸலாம்" கூறலாம் என்பதை அறியவேண்டும்.
''சிறுவர்கள், பெரியவர்களுக்கு 'ஸலாம்" கூறவேண்டும்"" என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்."" (ஹதீஸ் சுருக்கம்) (நூல்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத்)
மேற்கண்ட ஹதீஸின் அடிப்படையில் சிறுவர்கள் பெரியவர்களுக்கு 'ஸலாம்" சொல்லியாக வேண்டும். பெரியவர்கள், சிறுவர்களுக்கு முந்திக்கொண்டு 'ஸலாம்" சொல்லக்கூடாது என்று கருத்து கொள்ளக் கூடாது. பெரியவர்கள் சிறுவர்களுக்கு முந்திக் கொண்டு 'ஸலாம்" சொல்லலாம். இது ஏனென்றால், நபி(ஸல்) அவர்கள் சிறுவர்களைக் கடந்து சென்றபோது, அவர்களுக்குச் 'ஸலாம்" கூறினார்கள் என்ற புகாரி, முஸ்லிம், அபூதாவூத் மற்றும் நஸயீ ஆகிய நூல்களில் காணப்படுகிறது. அது மட்டுமல்லாது சிறுவர்களுக்கு நாம் ஸலாத்தைக் கற்றுத்தரும் அடிப்படையிலும் அமையும் என்பதையும் மனதில் கொள்ளவேண்டும்.
''ஒரு சபைக்கு வருபவர், அங்கிருப்பவருக்கு 'ஸலாம்" சொல்லட்டும். அங்கிருந்து செல்லும் போதும் அவர் 'ஸலாம்" கூற வேண்டும். முந்தியது பிந்தியதை விடச் சிறந்ததல்ல"" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்."" நூல்: அபூதாவூத், திர்மிதீ மற்றும் அஹ்மத்
தனிப்பட்ட நபரிடமோ, அல்லது பலர் அமர்ந்திருக்கும் சபைக்கோ வருபவர், முதலில் 'ஸலாம்" கூறுவது போலவே திரும்பச் செல்லும்போதும் 'ஸலாம்" கூற வேண்டும் என்பதை மேற்கண்ட ஹதீஸ் நமக்குக் கற்றுத் தருகிறது.
நபி(ஸல்) அவர்கள், அடக்கத்தலத்திற்கு வந்தால், 'அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன வஇன்னா இன்ஷா அல்லாஹு பிகும் லாஹிகூன்" (கப்ரில் அடக்கம் செய்யப்பட்டுள்ள இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் சாந்தி உங்கள் மீது நிலவட்டும்! நிச்சயமாக நாங்களும் உங்களுடன் அல்லாஹ் நாடினால் வந்து சேர இருக்கிறோம்). என்று கூறுவார்கள்"" என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். (நூல்: அஹ்மத், முஸ்லிம் மற்றும் நஸயீ)
''அடக்கஸ்தலங்களைக் காணும்போது 'அஸ்ஸலாமு அலைக்கும் அஹ்லத்தியாரி மினல் முஃமினீன வல் முஸ்லிமீன வ இன்னா இன்ஷா அல்லாஹு பிகும் லாஹிகூன், நஸ்அலுல்லாஹ லனா வலகுமுல் ஆஃபியா. (கப்ரில் அடங்கியுள்ள இறைநம்பிக்கையாளர்களே! முஸ்லிம்களே! அல்லாஹ் நாடினால் நிச்சயமாக நாங்களும் (மரணித்து) உங்களுடன் வந்து சேர்ந்து விடுவோம், எங்களுக்கும், உங்களுக்கும் நல்ல நிலையைத் தரவேண்டுமென அல்லாஹ்விடம் நாங்கள் கேட்கிறோம்) என்று கூற வேண்டுமென நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்குக் கற்றுக் கொடுத்துள்ளார்கள்"" என புரைதா(ரலி) அறிவிக்கிறார். (நூல்: அஹ்மத், முஸ்லிம், இப்னுமாஜா மற்றும் திர்மிதி)
மேற்கண்ட இரண்டு ஹதீஸ்களும் ஆதாரப் பூர்வமானவை. இந்த ஹதீஸ்களிலிருந்து அடக்கஸ்தலங்களுக்குச் சென்றால், மேற்கண்டவாறு 'ஸலாம்" கூறவேண்டும் என்பது தெளிவாகிறது.
நாம் ஒருவருக்கொருவர் 'ஸலாம்" கூறிக்கொள்கிறோம். அப்போது மற்றொருவர், அதைக் காதால் கேட்டு அதற்குப் பதில் 'ஸலாம்" கூறுகிறார். அதுபோலவே அடக்கஸ்தலங்களில் அடக்கம் செய்யப்பட்டுள்ளவர்களும் கேட்டு, பதில் 'ஸலாம்" கூறுவார்கள்; அதனால்தான் நபி(ஸல்) அவர்கள் மண்ணறைவாசிகளுக்கு 'ஸலாம்" கூறும்படிக் கட்டளையிட்டுள்ளார்கள் என்று சிலர் எண்ணுகிறார்கள். இந்த எண்ணம் தவறானது. ஏனெனில் குர்ஆன் வசனம் இதை மறுக்கிறது.
அவர்கள் இறந்தவர்களே! உயிருள்ளவர்கள் அல்லர் என்று 16:21 வது வசனத்திலும், கப்ருகளில் (அடக்கமாகி) உள்ளவர்களை நீர் கேட்கச் செய்யக்கூடியவர் அல்லர் என்று 35:22 வது வசனத்திலும், நிச்சயமாக நீர் மரித்தோரைக் கேட்கும்படிச் செய்யமுடியாது என 17:80வது வசனத்திலும் அல்லாஹ் கூறியுள்ளான். எனவே நபி(ஸல்) அவர்களைத் தவிர. கப்ரில் அடக்கம் செய்யப்பட்டுள்ள எவரும் அவர் எவ்வளவு சிறந்த மனிதராக இருந்தாலும் நாம் சொல்லுவதைக் கேட்கும் சக்தியற்றவர் என்பது நன்றாகவே தெரிகிறது. நாம் அவர்களுக்கு 'ஸலாம்" சொன்னால் அவர்கள் கேட்கவும் மாட்டார்கள் அதற்குப் பதில் அளிக்கவும் மாட்டார்கள்.
ஒருவரையொருவர் சந்திக்கும்போது, 'அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு"’என்பது வரை மட்டுமே சொல்ல வேண்டும் அதற்குமேல் எதையும் அதிகமாக்கக் கூடாது என்று ஹதீஸ் உள்ளது. ஆனால், மண்ணறைவாசிகளுக்கு கூறும் ஸலாமில், நாங்களும் மரணமான பின்னர் உங்களுடன் வந்து சேரப் போகிறோம் என்றும், எங்களுக்கும், உங்களுக்கும் நல்ல நிலையைத் தர வேண்டுமென்று அல்லாஹ்விடம் கேட்கிறோம் என்றும் அதிகப்படியாக வந்துள்ளது. உண்மையில் இது மண்ணறைவாசிகளின் நலன் நாடி பிரார்த்திப்பது என்பதை அறியவேண்டும்.
இங்கு இன்னொன்றையும் நினைவில் கொள்ளவேண்டும். இறைநேசர்கள் அடக்கமாகியுள்ள கப்ருகளுக்கு மட்டும்தான் 'ஸலாம்" கூறும்படி ஹதீஸில் வந்துள்ளது என்று எண்ணக் கூடாது. எந்தக் கப்ரைப் பார்த்தாலும் இதைக் கூற வேண்டும் என்றுதான் ஹதீஸ் வலியுறுத்துகிறது.
இஸ்லாம் என்றாலே சாந்தி, சமாதானம் என்றுதான் பொருள். முஸ்லிம் என்றால் சாந்தி, சமாதானத்தை ஏற்படுத்துபவன் என்று பொருள். இவ்வுலகில் உண்மையான முஸ்லிம் சாந்தி சமாதானத்தை விரும்புபவனாகவும் அதைப் பரப்புபவனாகவுமே இருக்கவேண்டும்.
''அறிந்தோருக்கு மட்டும் 'ஸலாம்" கூறுவது இறுதிநாளின் அடையாளம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்."" (நூல்: அஹ்மத், தப்ரானி)
தெரிந்தவர் தெரியாதவர் என்ற எவ்விதப் பாகுபாடுமின்றி, அனைவருக்கும் 'ஸலாம்" கூறி இவ்வுலகில் சாந்தி சமாதானத்தை ஏற்படுத்தி இறையருளைப் பெற முஸ்லிம்கள் அனைவரும் முயற்சிக்க வேண்டும்! நபி வழியில் நடக்க வேண்டும்! வல்ல அல்லாஹ் அதற்கு அருள்புரிவானாக! நம் அனைவர் மீதும், அவனுடைய சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக! அமைதி தழைக்கட்டுமாக!!