ஒருவர் அலீ (ரழி) அவர்களிடம் கேட்டார்...!!
நாய் ஒரே நேரத்தில் 6, 7 குட்டிகளை ஈன்றெடுக்கின்றது ஆனால் ஆடுகளோ ஒரு நேரத்தில் 2 அல்லது 3 குட்டிகளையே ஈன்றெடுக்கின்றது.
ஆயினும் எல்லா இடங்களிலும் ஆடுகளின் எண்ணிக்கை நாய்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கிறதே..?
நாம் ஆடுகளை நாள்தோறும் பலியிடுகிறோம்,அறுக்கின்றோம். அப்படி இருந்தும் அவை எப்போதும் நாய்களை விட அதிகமாகவே இருக்கின்றன. ஏன்..?
அலீ (ரழி) அவர்கள் பதில் கூறினார்கள்.....!
இதுதான் பரக்கத் (அருள்) ஆகும்.
அதற்கு அவர் பரக்கத் ஆடுகளிடம் மட்டும் ஏன் இருக்கிறது..?
நாய்களிடம் ஏன் இருப்பதில்லை..?? எனக் கேட்டார்...!!
அலீ (ரழி) அவர்கள் கூறினார்கள்...!
ஆடுகள் இரவின் முற்பகுதியிலேயே தூங்கி விடுகின்றன.
மேலும் ரஹ்மத்தின் (அருளின்) வேளையாகிய ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுகின்றன.
எனவே அருளைப் பெற்றுக் கொள்கின்றன.
ஆனால் நாய்கள் இரவு முழுக்க குலைத்து விட்டு ஃபஜ்ர் நேரம் நெருங்கும்போது தூங்குகின்றன.
எனவே அவற்றின் ரிஸ்கில் ரஹ்மத்தும் பரக்கத்தும் இருப்பதில்லை.
எனவே நான் உமக்கு அறிவுரை கூறுகிறேன்...!!
நீர் இரவில் சீக்கிரம் தூங்குவீராக. ஃபஜ்ரில் சீக்கிரம் எழுவீராக.
இதுவே வாழ்வாதாரத்திலும் சந்ததிகளிலும் அபிவிருத்திக்கான வழிமுறையாகும்......!!
இந்த செய்தி சரியானதா ? பதில் தரவும்.
பதில் : மேலுள்ள இந்த செய்தி நபித்தோழர் அலி (ரழி) அவர்களின் பெயரில் இட்டுக்கட்டப்பட்ட பொய்யான ஒரு செய்தியாகும்.
இப்படியான ஒரு செய்தி நம்பத்தகுந்த எந்த நூல்களிலும் பதிவு செய்யப்படவில்லை. ஆதலால் இதனை நபித்தோழர் அலி (ரழி) அவர்களின் பெயரில் மக்களிடையே பரப்புவது மிகப்பெரும் தவறாகும்.
குறிப்பு - காலை நேரத்தின் சிறப்புக்கள் பற்றி வேறு ஸஹீஹான சில நபிமொழிகள் உள்ளன.
முபாரிஸ் இப்னு தாஜுதீன் ரஷாதி