மத்ரஸா எனும் அரபிக் சொல்லின் தமிழ் வடிவம் பாடசாலை என்பதாகும். நாம் அரபு பாடசாலைகளை மத்ரஸா, அரபு மத்ரஸா என அழைக்கிறோம்.
அரபு மத்ரஸாக்கள் இந்த காலத்தில் பெரும்பாலும் இரண்டு முக்கிய நோக்கங்களில் செயற்படுகின்றன.
1. ஷரீஆ கல்வியை போதித்தல்.
2. அரச பரீட்சைகளுக்கு மாணவர்களை தயார்படுத்தல்.
முதல் நோக்கத்தை பொருத்தவரையில் இலங்கையில் அரபு மத்ரஸாக்கள் நிறுவப்பட்ட அடிப்படை நோக்கம் அது தான். இலங்கை முஸ்லிம்களில் ஷரீஆ துறையில் துறைபோக கற்றவர்கள் உருவாக வேண்டும், இந்தியா சென்று படிப்பதோ அங்குள்ளவர்களிடம் மார்க்க விளக்கங்களின்பால் மீள்வதோ நின்று நாம் தன்னிறைவை அடைய வேண்டும் போன்ற சமூக அக்கறைகளின் விளைவே மத்ரஸாக்கள்.
அந்த நோக்கத்தை ஆரம்பகால கல்விமான்கள் அழகிய முறையில் வெற்றிகரமாக எட்டிப்பிடித்தார்கள். மஸ்ஊத் ஆலிம், அஜ்வாத் ஆலிம் என்று நாமறிந்த ஓரிரு சிறந்த அறிஞர்கள் மட்டுமன்றி இன்னும் பல மறைந்த, உயிர் வாழ்கின்ற அறிஞர்கள் பலரும் இம்மண்ணில் மிளிர்ந்தார்கள், மிளிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இப்படி ஷரீஆ சார் சேவைகளை அபிரிமிதமாக நிறைவேற்றிய அறிஞர்களின் வாரிசுகள் இன்று தமது அறபுமொழி மற்றும் ஷரீஆவின் ஆழமான அறிவு ஆகியவற்றில் ஒப்பீட்டு ரீதியாக பாரிய வீழ்ச்சிகளை வெளிப்படுத்துகின்றனர் என்பது கசப்பான உண்மை.
இதற்கு பல காரணங்கள் காணப்படுகின்றன.
1. மறுமை நெருங்கும் போது கல்வி உயர்த்தப்படும் எனும் நபிகளாரின் எதிர்வு கூறல்.
2. தனக்கென ஒரு மத்ரஸா எனும் கீழ்த்தரமான பகட்டு, வீம்பு, பொருளாதார நோக்கு கொண்ட மத்ரஸா எனும் பெயரிலான எந்த ஒரு தரமும் இல்லாத அல்லது தரம் குறைந்த கல்விக்கடைகள்.
3. ஷரீஆ கல்வி போதித்தல் எனும் அடிப்படையில் இருந்து சறுக்கி அரச பரீட்சைகளில் கூடுதல் கரிசனை செலுத்தும் கல்விக்கூடங்கள்.
4. விளங்காதவன் என கணித்த பிள்ளையை உனக்கு மத்ரஸா தான் சரி என முடிவு செய்யும் மத்ரஸா பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லாத பெற்றோர்.
5. ஆசிரியர்களின் தரம் விடயத்தில் நிர்வாகங்கள் காட்டும் பொடுபோக்கு.
6. மத்ரஸாக்களிள் உள், ( ஆசிரியர்கள்) வெளி நிர்வாக சர்ச்சைகள் இப்படி பல விடயங்களை குறிப்பிடலாம்.
இன்று இந்த வீழ்ச்சியின் எதிர்வு கூறலை சமூகத்தில் பல வடிவங்களில் பிரச்சினைகளாக பார்க்கிறோம்.
மக்களுக்கு கண்டபடி ஃபத்வா கொடுத்தல், ஷிர்க் பித்ஆக்களை எந்தவொரு கவலையுமின்றி சமூக அக்கறையின்றி சமூக மயப்படுத்தல், மக்களை வைத்தியம் அது இது எனும் பெயரில் பிழையாக வழிநடத்தல், தொழுகைகளில் பிழையான மொழிச்சலில் குர்ஆன் ஓதுதல் (பாரிய ஒரு சமூக பிரச்சினை)
இப்படி பல விடயங்களையும் கூறலாம்.
சுருங்கக் கூறின் ஷரீஆ கல்வி என்பது இன்று மிகப் பாரிய வீழ்ச்சிப் பாதையில் பரிதாபகரமாக சென்றுக் கொண்டிருக்கிறது. சராசரியாக மத்ரஸாக்களின் எண்ணிக்கை சடுதியாக கூடியுள்ளதே தவிர திறமைகள் கேள்விக்கிடமே.
இந்த நிலையில் கூட திறமையான ஆசிரியர் குழாமுடன் சிறந்த முறையில் கல்வி போதிக்கும் மத்ரஸாக்கள் இன்றும் இலங்கையில் காணப்படுகின்றன என்பது மனதுக்கு ஆறுதலே.
சிறந்த பாடத்திட்டம், திறமையான ஆசான்கள், இக்லாஸ், மாணவர்களின் ஆர்வம் என்பன அந்த மத்ரஸாக்களின் வளர்ச்சிப் பாதையை வலுப்படுத்துகின்றன.
ஷரீஆ கல்வி இந்த நிலையில் இருக்க அரச பரீட்சைகளுக்கு மாணவர்களை தயார்படுத்தும் விடயத்தையும் மத்ரஸாக்கள் மேலதிக பணியாக செய்து வருவதை அவதானிக்கிறோம். மாணவர்களும் ஆர்வமாக கற்று சிறந்த பெறுபேறுகளை எடுக்கிறார்கள்.
ஒப்பீட்டளவில் பாடசாலை மாணவர்களை விட மிக குறைந்த நேரம் இந்த பாடங்களை கற்றாலும் பெறுபேறுகள் அபாரமாக இருக்கின்றன.
உதாரணமாக, ஒரு பாடசாலை மாணவன் கணித பாடத்தை 5 நாட்களிலும் கிட்டத்தட்ட 5-9 வரையான பாடடவேளைகள் கற்கிறான். மேலதிகமாக தனியார் வகுப்புகளில் வாரத்துக்கு 4 மணி நேரம் கற்கிறான். வீட்டில் வாரத்துக்கு 3 மணி நேரம் என்றால் மொத்தமாக ஒரு வாரத்துக்கு கிட்டத்தட்ட 10 மணி நேரம் அந்த பாடத்தை படிக்கிறான். ஆனால் ஒரு மத்ரஸா மாணவர் கணித பாடத்துக்கு வாரத்துக்கு ஒதுக்கும் நேரம் 2-3 மணி நேரம் மாத்திரமே. இது போன்று தான் தனது மத்ரஸா பாடத்திட்டத்துடன் இணைந்து இந்த பாடங்களையும் ஒரு மத்ரஸா மாணவர் கற்கிறார். அத்தோடு மேலதிக கருத்தரங்குகள், வினாத்தாள் வழிகாட்டல்கள் என்பன மத்ரஸாக்களில் எட்டாக்கனிகளே.
அப்படியானால் பெறுபேறுகளின் இரகசியம் என்ன?
1. சிறந்த நேர முகாமைத்துவம்: மத்ரஸா மாணவர்களுக்கு நேரத்தை வீணடிக்கும் எந்த வீணான வாய்ப்புகளும் இல்லை. அவர்களின் விளையாட்டு, தூக்கம், தொழுகை, அடிப்படை தேவைகளுக்கான நேரங்கள் போக மீதி நேரங்களில் அவர்கள் படிப்பதையே பொழுதுபோக்காக கொண்டிருக்கிறார்கள். எனவே பரீட்சைகள் நெருங்கும் போது அவர்கள் முழு கவனம் செலுத்தி படிக்கிறார்கள்.
2. சிறந்த சூழல்: மத்ரஸா மாணவர்களுக்கு பார்க்கும் இடமெல்லாம் வகுப்புகளும் நூலகமும் கற்கும் மாணவர்களுமே தென்படுவர். எனவே இயல்பாகவே அவர்கள் கற்றலின் பால் ஈர்க்கப்படுகிறார்கள்.
3. பாடம் சொல்லிக் கொடுத்தல்: (மத்ரஸாவில் இருக்கும் அதே பாவனையை இங்கும் உபயோகித்தேன்) ஒரு மாணவருக்கு குறிப்பிட்ட ஒரு பாடத்தில் சந்தேகம் இருந்தாலோ திறமை குன்றி காணப்பட்டாலோ தனது வகுப்புத் தோழன் அல்லது மூத்த சகோதரர்களிடத்தில் போய் அதை சொல்லித் தருமாறு கேட்பார்கள். அவர்களும் ஆர்வமாக முன்வந்து தமது கடமை போன்று அதை செய்வார்கள். சில திறமையான மாணவர்கள் திறமையில் அதிக வெளிப்பாடு குறைந்தவர்களை தாமாக அழைத்து பாடம் சொல்லிக் கொடுப்பார்கள். இந்த சிறந்த பண்பு கற்றுக்கொடுப்பவர், கற்பவர் இருபாலாருக்கும் மிகச் சிறந்த பிரதிபலிப்பை கொடுக்கும்.
4. ஆன்மீக சூழல்: தஹஜ்ஜுத், லுஹா, சுன்னத் தொழுகை, அவ்ராதுகள், குர்ஆன் திலாவத், நற்சிந்தனை என முழுக்க முழுக்க நன்மைகளை செய்யும் அந்த மங்கலகரமான அழகிய, மன நிம்மதி, அல்லாஹ்வின் அருட்பார்வை, இஸ்லாமிய உறவுகள் என நறுமணம் கமழும் சூழல் அது. (இன்றும் அந்த சூழலை அதிகம் இழக்கிறேன்)
5. அவசரமாக விளங்கும் திறன்: குர்ஆன், ஹதீஸ் ஆகியவற்றை மனனமிடுவதன் மூலமும் சிறந்த பாடம் மீட்டும் நுட்பங்களை கையாள்வதன் மூலமும் அவசரமாக விளங்கும் திறன் மத்ரஸா மாணவர்களுக்கு உண்டு.
இப்படி பல விடயங்களும் மத்ரஸா மாணவர்களுக்கு அவர்களின் முன்னேற்றப் பாதைக்கு கரம் கொடுக்கின்றன.
இப்போதைய சூழலில் பிள்ளைகளின் எதிர்காலம் (பாடசாலை கல்வி, சூழல் நடத்தைகளின் மோசமான நிலவரங்கள்) தீயில் நடப்பதை போல் கடினமாக இருப்பதாலும், சமூக நலன்களையும் கருத்திற் கொண்டு இன்று பல கல்விக்கூடங்கள் மத்ரஸாக்களின் பாடத்திட்டம் தவிர்ந்த ஏனைய அனைத்து செயற்பாடுகளையும் பின்பற்றி அரச பரீட்சைகளுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வேலைத்திட்டங்களை செய்து வருகின்றன.
எனவே எமது சமூகத்தின் ஆரோக்கியமான எதிர்காலம் முழுக்க முழுக்க மார்க்க விழுமியங்களுடன் இணைந்த மார்க்க கல்விக்கூடங்கள் அல்லது மார்க்க விழுமியங்களுடன் இணைந்த ஏனைய கல்விக்கூடங்களில் தான் தங்கியுள்ளது.
-மெளலவி ஷாகிர் (அப்பாஸி)