நான்கு பெரும் இமாம்கள் இவ்வும்மத்தின் பெரும் முஜ்தஹித்கள். அவர்கள் செய்த பணி உண்மையில் அளவிட முடியாதவை.
மார்க்கத்தை மக்களுக்கு இலகுவாக புரிய வைக்கும் வண்ணம் தமக்கு கிடைத்த ஹதீஸ்களின் அடிப்படையில் மார்க்கத்தை மக்களுக்கு போதித்த போதும் ஒரு விடயத்தில் நால்வரும் ஒரே கருத்தில் பயணித்துள்ளதை அவர்களது அருமையான வார்த்தைகளின் வாயிலாக அவதானிக்க முடிகிறது.
"ஹதீஸ் ஸஹீஹாக இருந்தால் அதுவே எனது மத்ஹப், எனது கருத்துக்கு மாற்றமாக ஹதீஸை கண்டால் எனது கருத்தை தூக்கி வீசிவிட்டு ஹதீஸை எடுத்துக்கொள்ளுங்கள், நாம் எங்கிருந்து மார்க்கத்தை எடுத்தோமோ அங்கிருந்தே நீங்களும் எடுங்கள்"
இதை நான்கு இமாம்களும் பெருவாரியாக கூறியது மாத்திரமல்லாது தாம் கூறும் விடயங்களுக்கு மாற்றமாக மார்க்க விடயங்கள் இருக்குமெனில் தம்மை பின்பற்ற வேண்டாம் என மிகத் தெளிவாக பிரகடனம் செய்துள்ளனர்.
விடயம் இவ்வாறிருக்க அவர்கள் செய்த சேவைகளை ஒருக்காலும் நாம் குறைத்து மதிப்பிட முடியாது, எனினும் அவர்கள் கூறியது போன்று மக்கள் மார்க்க விடயத்தில் திறந்த மனதோடு செயற்படுமிடத்து எங்கும் பிரச்சினைகள் சாத்தியப்பாடு இருக்காது.
இவ்விமாம்கள் கிளைசார் (பிக்ஹ்) விடயங்களில் தெளிவாக இருந்தது போன்று அடிப்படைசார் (அகீதா) விடயத்திலும் மிகத் தெளிவாக ஸலபுகளது மன்ஹஜில் பயணித்துள்ளதை அவர்களது நடவடிக்கைகள், வார்த்தைகள் மூலம் உறுதியாக அறிந்துகொள்ள முடிகிறது.
அவர்கள் அஹ்லுஸ் ஸுன்னாக்களின் அகீதாவில் பயணித்துள்ளதாக விளங்கியுள்ள நாம், பிக்ஹில் ஷாபிஈ மத்ஹப், அகீதாவில் அஷ்ஆரீ என்று பிடிவாதம் பிடிப்பதைத் தவிர்த்து மத்ஹபில் வரும் சட்டத்திட்டங்கள் அல்குர்ஆன், அஸ்ஸுன்னாவுக்கு ஆதாரங்கள் அடிப்படையில் மிக நெருக்கமாக காண்பவற்றை எடுத்துக்கொள்ளும் நிலைப்பாடும், மத்ஹபில் கூறப்பட்டும் விடயம் அடிப்படை மூலாதாரங்களுக்கு முரணாக தென்படும் பட்சத்தில் அடிப்படை மூலாதாரங்களுக்கு முன்னிலை கொடுக்கும் மனப்பக்குவமும் வருவதோடு, இமாம் ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ் உட்பட நான்கு பெரும் இமாம்களும் எந்த அகீதாவில் பயணித்தார்களோ அதில் பயணிக்கும் மனோநிலையும் வருமென்றால் உண்மையாக எமது மனம் வெறுப்பினும், சூழவுள்ள மக்கள் அறியாமையின் காரணமாக எதிர்த்தாலும் மார்க்கமே முக்கியம் எனும் எண்ணக் கருவோடு பயணிக்கிறோம் என்று அர்த்தமாகும்.
அத்தோடு இரு கருத்துகள், அல்லது பல கருத்துகளுக்கு சாதகமான மஸ்அலாக்களை அதாவது கருத்து முரண்பாடான இஜ்திஹாதுக்குரிய விடயங்களில் நான் செய்வது மட்டும் முற்றிலும் சரி மற்றவர் முற்றாக தவறு செய்கிறார் என்று பிடிவாதமாக நடப்பதை தவிர்த்து நான் செய்யும் விடயமும் சரி, மற்றவர் செய்வதும் சரி என்று விளங்கி நடக்கும் பரந்த மனமும் வரவேண்டும்.
மேற்கூறியவற்றை சுருக்கமாக சொல்லுமிடத்து மூலாதாரங்களுக்கு நெருக்கமான சட்டதிட்டங்களை அமுல்படுத்துவதும், அகீதாவை சரியாக விளங்குவதும், இஸ்திஹாதுக்குரிய விடயங்களில் பரந்த மனதோடு செயற்படுமிடத்து இயன்றளவு பிரச்சினைகளை தவிர்த்து இஸ்லாமிய சமூகம் நேறிய பாதையில் பயணிக்க முடியும்!
அல்லாஹ் அனைவருக்கும் மார்க்கத்தை சரியாக விளங்கி நடக்கும் பேற்றை நல்குவானாக!
- நட்புடன்
Azhan Haneefa