அல் அகீதா அஸ்ஸஹீஹா வமா யுளாதுஹா

ஆசிரியர்: இமாம் அப்துல் அஜீஸ் இப்னு பாஸ் (رحمه الله) 

தமிழாக்கம்: மௌலவி அபூநசீபா எம். எஃப். அலீ
வெளியீடு: குகைவாசிகள் பதிப்பகம்


நூல் அறிமுகம்

اَلسَلامُ عَلَيْكُم وَرَحْمَةُ اَللهِ وَبَرَكاتُهُ‎

'அல் அகீதா அஸ்ஸஹீஹா வமா யுளாதுஹா' - இஸ்லாமிய உண்மை நம்பிக்கை அடிப்படைகளும் முரணானவையும் எனும் இந்த புத்தகம் இமாம் அப்துல் அஜீஸ் இப்னு பாஸ் (رحمه الله) அவர்களால் எழுதப்பட்டதாகும். இதை தமிழ் மொழியில் மௌலவி அபூநசீபா எம். எஃப். அலீ அவர்கள் மிகவும் எளிமையாகவும், படிப்பதற்கு அழகிய முறையிலும் மொழிபெயர்த்துள்ளார்கள். அல்லாஹ் அவருக்கு பேரருள் புரிவானாக! இந்த புத்தகத்தில் உள்ள கருத்துக்கள் மிகவும் சுருக்கமாகவும் இஸ்லாத்தைக்குறித்த முக்கியமான அடிப்படை விஷயங்களை தெளிவாகவும் விளக்கக் கூடிய விதத்தில் உள்ளது. ஒரு வாசகனாக நாம் படிக்கும் புத்தகங்களில் குகைவாசிகள் பதிப்பகத்தில் வெளியாகும் புத்தகங்களுக்கு ஒரு தனி மதிப்பு உண்டு. இந்த புத்தகத்தின் விலை 25 ரூபாய் மட்டுமே. ஆனால் இந்த புத்தகத்திலுள்ள விளக்கங்களுடைய மதிப்போ கணக்கிட முடியாதவை. ஆகவே, இந்த புத்தத்தை மக்கள் தாமும் வாங்கி இஸ்லாமிய சகோதரர்களுக்கு அவர்கள் படித்துணர கொண்டு சேர்த்தால் இந்த சமூகத்திற்கு மிகப்பெரிய பலன் கிடைக்கும் இன்ஷா அல்லாஹ்!

அல்லாஹ் நமக்கு அருள் புரிவானாக!



بسم الله الرحمن الرحیم

படைப்பின் நோக்கம்

மனிதர்களையும் ஜின்களையும் படைத்ததின் நோக்கம், அவர்கள் தன்னை வணங்க வேண்டும் என்பதற்காகவே என அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவே தவிர நான் படைக்கவில்லை. அவர்களிடம் நான் எந்தப் பொருளையும் கேட்கவில்லை. எனக்கு உணவு கொடுத்துக் கொண்டிருக்குமாறும் கோரவில்லை. நிச்சயம் அல்லாஹ்தான் அனைவருக்கும் உணவளிப்பவன்; பலசாலி; அசைக்க முடியாதவன்.
[அல் குர்ஆன், அத் தாரியாத், 51-56-58]

[(இந்த வசனத்திற்கு விளக்கமாக) அலீ இப்னு அபீதாலிப் (رضی الله عنه) கூறினார்கள்:

என்னையே வணங்க வேண்டும் என அவர்களுக்குக் கட்டளையிடவும், என் வணக்ஙத்தின் பக்கம் அவர்களை அழைக்கவுமே தவிர (அவர்களைப் படைக்கவில்லை). 

ஆதாரம்: தஃப்சீர் அல்பகவீ 7/380]

அல்லாஹ் கூறுகிறான்:

மனிதர்களே! உங்களையும், உங்களுக்கு முன்னிருந்தவர்களையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். இறையச்சம் உடையவர்களாவீர்கள். அவனே பூமியை விரிப்பாகவும், வானத்தை முகடாகவும் அமைத்து, மேகத்திலிருந்து மழையைப் பொழிவித்து, அதன் மூலம் கனிகளிலிருந்து உங்களுக்கு உணவையும் வெளியாக்கினான். எனவே, தெளிவாகத் தெரிந்துகொண்டே அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்.
[அல் குர்ஆன், அல் பகரா, 2:21-22]


தூதர்களின் முதல் அழைப்பு

இந்த உண்மையைத் தெளிவுபடுத்தவும், மனிதர்களை இதன் பக்கம் அழைக்கவும், இதற்கு எதிரானவை பற்றி எச்சரிக்கவுமே, அல்லாஹ் தன் தூதர்களை அனுப்பி வேதங்களை இறக்கினான்.

ஒவ்வொரு சமுதாயத்திற்கும் நிச்சயம் ஒரு தூதரை அனுப்பவே செய்தோம். "அல்லாஹ்வையே வணங்குங்கள்; ஷைத்தான்களை விட்டு விலகுங்கள்" என்றே (அவர்கள்) கூறினார்கள்.
[ அல் குர்ஆன், 16:36]

(நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பிய தூதர்களுகளுக்கெல்லாம், "நிச்சயம் என்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை; என்னையே வணங்குங்கள்" என்று நாம் வஹ்யி அறிவிக்காமலில்லை.
[அல் குர்ஆன், அல் அன்பியா, 21:25]

அலிஃப்; லாம்; றா. (இதுதான்) வேதம். அனைத்தையும் நன்கறிந்த ஞானவானால் இதன் வசனங்கள் (பல ஆதாரங்கள் மூலம்) உறுதி செய்யப்பட்ட பின்னர் விவரிக்கப்பட்டுள்ளன. (நபியே! கூறுவீராக:)
நீங்கள் அல்லாஹ்வைத் தவிர யாரையும் வணங்காதிருக்கும்படி அச்சமூட்டி எச்சரிக்கவும், நற்செய்தி கூறவுமே நிச்சயமாக நான் அவனால் உங்களிடம் அனுப்பப்பட்டுள்ளேன்.
[அல் குர்ஆன், 11:1-2]


வணக்கங்களின் உண்மைநிலை

அடியார்கள் தம் வணக்கங்கள் அனைத்தையும் அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய வேண்டும். அதாவது, பிரார்த்தனை, பயம், எதிர்பார்ப்பு, தொழுகை, நோன்பு பலியிடல், நேர்ச்சை மற்றும் பிற வணக்கங்களையும் அல்லாஹ்வுக்கே செய்ய வேண்டும்.

வணக்கங்களில் அவனுக்கு முன் பணிவை வெளிப்படுத்த வேண்டும். அவனை நேசிக்க வேண்டும். அவனுக்கே பயப்பட வேண்டும். அவனுடைய கண்ணியத்திற்கு முன் ஆசையுடனும் பயத்துடனும் நடக்க வேண்டும். அதிகமான குர்ஆன் வசனங்கள் இந்த மகத்தான அடிப்படையில்தான் இறங்கியுள்ளன.

அல்லாஹ் கூறுகிறான்:

முற்றிலும் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, தூய உள்ளத்துடன் அவனையே வணங்குவீராக. அறிந்துகொள்ளுங்கள்: தூய வணக்கம் அல்லாஹ்வுக்கே சொந்தம்.
[அல் குர்ஆன், 39:2-3]

(நபியே!) உம் இறைவன் தன்னைத் தவிர (யாரையும்) வணங்கக் கூடாதென்று கட்டளையிட்டிருக்கிறான்.
[அல் குர்ஆன், 17:23]

(முஸ்லிம்களே!) அல்லாஹ்வை நிராகரிப்பவர்கள் வெறுத்தாலும் முற்றிலும் அவனுக்கே கீழ்ப்படிந்து, தூய உள்ளத்துடன் அல்லாஹ்வையே (பிரார்த்தித்து) அழையுங்கள்.
[அல் குர்ஆன், 40:14]

அல்லாஹ்வின் தூதர் (ﷺ) சொன்னார்கள்:

அடியார்கள் மீது அல்லாஹ்வுக்குரிய உரிமை, அவர்கள் அவனையே வணங்க வேண்டும்; அவனுக்கு எதையும் இணையாக்காமல் இருக்க வேண்டும்.

[அறிவிப்பாளர்: முஆது இப்னு ஜபல் (رضی الله عنه), ஸஹீஹ் புகாரீ - 128, 7373, ஸஹீஹ் முஸ்லிம் 48, 49, 53]


இஸ்லாமும் ஈமானும் பிரியாதவை

அடியார்களுக்கு அல்லாஹ் கடமையாக்கிய வெளிப்படையான ஐந்து விஷயங்களும் அல்லாஹ்வின் மீதான நம்பிக்கையில் அடங்கும்.

அவை:

1. வணக்கத்திற்குரிய உண்மையான இறைவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை; முஹம்மது (ﷺ) அல்லாஹ்வின் தூதர் என்று உறுதிமொழி கூற வேண்டும்.

2. தொழகையைத் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். 

3. ஸகாத் கொடுக்க வேண்டும்.

4. ரமளான் மாதத்தில் நோன்பிருக்க வேண்டும்.

5. சென்றுவர சக்தி உள்ளவர் அல்லாஹ்வின் வீடு கஅபாவை ஹஜ்ஜு செய்ய வேண்டும்.

இத்துடன், அல்லாஹ்வின் மார்க்கம் கடமையாக்கியுள்ள மற்ற கடமைகளும் இதில் அடங்கும்.

இவை அனைத்திலும் முதன்மையானது, உயர்ந்தது லா இலாஹ இல்லல்லாஹ்; முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்று உறுதிமொழி கூறுவது தான்.


லா இலாஹ இல்லல்லாஹ் - ஒரு விளக்கம்

லா இலாஹ இல்லல்லாஹ் என்று உறுதிமொழி சொல்வது "வணக்கங்கள் அனைத்தையும் அல்லாஹ் ஒருவனுக்கே மனத்தூய்மையாகச் செய்ய வேண்டும்; அவனைத் தவிர யாருக்கும் அவற்றைச் செய்யக் கூடாது" எனக் கட்டளை இடுகிறது. லா இலாஹ இல்லல்லாஹ்வின் அர்த்தம் இதுதான்.

விரிவாகக் கூறுவதென்றால் இப்படிக் கூறலாம்:

"உண்மையில் வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை; அவனைத் தவிர வணங்கப்படும் மனிதர்கள், மலக்குகள், ஜின்கள் மற்றும் பிற தெய்வங்கள் அனைத்தும் தவறாக வணங்கப்படுபவை. அல்லாஹ் மட்டுமே உண்மையில் வணங்கப்படத் தகுதியானவன்."

பின்வரும் ஆதாரங்கள் இதை உறுதி செய்கின்றன.

அல்லாஹ் கூறுகிறான்:

நிச்சயம் அல்லாஹ்தான் உண்மையானவன். நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வை விட்டுவிட்டு பிரார்த்திப்பவை அனைத்தும் பொய்யானவை. காரணம், நிச்சயமாக அல்லாஹ்தான் உயர்ந்தவன்; மிகப் பெரியவன்.
[அல் குர்ஆன், 22:62]

மனிதனையும் ஜின்னையும் அல்லாஹ் படைத்தது.இதற்காகத்தான். இதுவே அவனுடைய முதல் கட்டளை. இதற்காகவே தூதர்களை அனுப்பினான்; வேதங்களை இறக்கினான். இந்த விளக்கம் முன்பே கூறப்பட்டுள்ளது.

இதை நன்கு சிந்தித்தால் இன்றைய முஸ்லிம்களின் அறியாமை உங்களுக்குப் புரிந்துவிடும். அதிகமானவர்கள் இந்த அடிப்படை தெரியாமல் இருக்கின்றனர். எந்தளவு என்றால், அல்லாஹ்வுக்குப் பிறரை இணையாக்குகிறார்கள். அவனுக்குரிய வணக்கங்களை மற்றவர்களுக்கும் செய்கிறார்கள். அல்லாஹ்தான் பாதுகாக்க வேண்டும்.


தவ்ஹீதுர் ருபூபிய்யா

அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதில் இவையும் அடங்கும்:

* அல்லாஹ்தான் இவ்வுலகத்தைப் படைத்தவன்; இதிலுள்ள அனைவரையும் படைத்தவன்.

* மனிதர்களின் எல்லாக் காரியங்களையும் நிர்வகிப்பவன் அவனே.

* தான் நாடியபடி தன் ஆற்றல் மற்றும் அறிவால் அவர்களைச் செயல்பட வைப்பவனும் அவனே.

* இம்மை, மறுமை இரண்டுக்கும் அதிபதி அவனே.

* அகிலங்களைப் படைத்தவன் அவனே; அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை.

அடியார்களைச் சீர்திருத்தத் தூதர்களை அனுப்பி, வேதங்கள் இறக்கியவன் அவனே. மக்கள் நேர்வழி பெற வேண்டும்; இம்மை மறுமையில் வெற்றி அடைய வேண்டும் என்பதே அத்தூதர்களின் ஒரே அழைப்பு.

இவற்றில் எதிலும் அவனுக்கு இணை துணை இல்லை.

அல்லாஹ் கூறுகிறான்:

எல்லாப் பொருட்களையும் படைத்தவன் அல்லாஹ்தான்; அவனே எல்லாப் பொருட்களின் பொறுப்பாளன்.
[அல் குர்ஆன், 39:62]

நிச்சயமாக உங்கள் இறைவன் அல்லாஹ்தான். அவனே வானங்கள், பூமியை ஆறு நாட்களில் படைத்து, அர்ஷ் மீது உயர்ந்துவிட்டான். அவனே இரவால் பகலை மூடுகிறான்; அது தீவிரமாகவே அதனைப் பின்தொடர்கிறது. சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் அனைத்தும் அவனுடைய கட்டளைக்கு உட்பட்டவையே. படைப்புகளும் அதன் ஆட்சியும் அவனுக்கு உரியதல்லவா? அகிலங்களின் இறைவன் அல்லாஹ் மிகவும் பாக்கியமுடையவன்.
[அல்குர்ஆன், 7:54]


தவ்ஹீதுல் அஸ்மா வஸ்ஸிஃபாத்

அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்களும் உயர்ந்த பண்புகளும் உண்டு என நம்புவதும் அல்லாஹ்வின் மீதான நம்பிக்கையில் அடங்கும். அப்பெயர்களும் பண்புகளும் அவனுடைய வேதத்தில் வந்துள்ளன. நம்பிக்கைக்குரிய அவன் தூதர் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளன. அவற்றை அப்படியே நம்ப வேண்டும். அவற்றில்,

* எந்த மாற்றமும் (தஹ்ரீஃப்) செய்யக் கூடாது;

* எதையும் புறக்கணித்து வெறுமையாக்குதல் (தஃதீல்) கூடாது;

* அவற்றின் உண்மை நிலை எப்படியென மேல்விளக்கம் கொடுப்பதோ, கேட்பதோ (தக்யீஃப்) கூடாது;

* அவற்றுக்கு உதாரணங்கள் கூறுதல் (தம்ஸீல்) கூடாது;

எத்தகைய உயர்வான அர்த்தத்தில் அவை வந்துள்ளனவோ அப்படியே நம்ப வேண்டும். ஏனெனில், அவை அல்லாஹ்வின் பண்புகள். அவனுடைய பண்புகளை அவனது படைப்புகளின் எந்தப் பண்புகளுடனும் ஒப்பிடாமல் அவனுக்குத் தகுதியான முறையில் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும்.


அல்லாஹ் - அர்ஷ் மீது உயர்ந்துவிட்டான்

"நிச்சயமாக உங்கள் இறைவன் அல்லாஹ் தான். அவனே வானங்கள், பூமியை ஆறு நாட்களில் படைத்து, அர்ஷ் மீது உயர்ந்துவிட்டான்."
[அல்குர்ஆன், அல் அஃராஃப், 7:54]

இவ்வசனத்தில் உள்ள அல்இஸ்தவா எனும் சொல்லுக்கு அல்ஹாஃபிள் இப்னு கஸீர்(رحمه الله) எழுதியுள்ள விளக்கம் மிக பயனுள்ளது. அவர்கள் கூறினார்கள்:

இந்த விஷயத்தில் மக்கள் பல கருத்துக்களில் இருக்கிறார்கள். அவற்றை இங்கு விரிவாக எழுத முடியாது. எனினும், இமாம்களாகிய மாலிக், அவ்ஸாயீ, லைஸ் இப்னு சஅது, ஷாஃபிஈ, அஹ்மது, இஸ்ஹாக் இப்னு ராஹவைஹி போன்ற அஸ்ஸலஃபுஸ்ஸாலிஹ்(நல்ல முன்னோர்கள்) என்ன கூறினார்களோ அதுவே நம் வழிமுறை. அவ்வழிமுறை இதுதான்:

அல்இஸ்தவா என்பதற்கு அது எப்படி என மேல்விளக்கம்(தக்யீஃப்) தரக் கூடாது; எதையும் அதற்கு ஒப்பீடு(தஷ்பீஹ்) செய்யக் கூடாது; அதை மறுத்து (தஃதீல்) வெறுமையாக்கக் கூடாது. அது கூறப்பட்டபடியே கூறிவிட வேண்டும். 

அல்லாஹ்வுக்கு அவன் படைப்பில் எதுவும் ஒப்பாகாது. இதைக் காரணமாக வைத்து இஸ்திவாவை நம்பி ஒப்பு ஏற்பட்டுவிடும் என்று கற்பனை செய்பவர்கள் இஸ்திவாவையே மறுக்கிறார்கள்.

"அவனுக்கு ஒப்பானது எதுவுமில்லை. அவன் நன்கு செவியுறுபவன்; உற்று நோக்குபவன்."
[அல் குர்ஆன், அஷ் ஷுரா, 42:11]

என்று அல்லாஹ் கூறுவதை தவறாக எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் இமாம்கள் கூறுயதே சரியானதாகும்.

குறிப்பாக, இமாம் புகாரீ(رحمه الله) அவர்களின் ஆசிரியர் நுஅய்ம் இப்னு ஹம்மாது அல்குஸாயீ(رحمه الله) கூறினார்கள்:

எவன் அல்லாஹ்வை அவனுடைய படைப்புகளில் ஒன்றுடன் ஒப்பிடுகிறானோ அவன் காஃபிர். அல்லாஹ் தனக்கெனக் கூறிய பண்புகளில் ஒன்றை மறுப்பவனும் காஃபிர்தான். அல்லாஹ்வும் அவன் தூதரும் அல்லாஹ்வுக்கென கூறியுள்ள பண்புகளுக்கு ஒப்பும் இல்லை; உதாரணமும் இல்லை. தெளிவான குர்ஆன் வசனங்களிலும் ஆதாரமிக்க நபிமொழிகளிலும் வந்துள்ள பண்புகள், அல்லாஹ்வின் கண்ணியத்திற்குத் தகுதியான முறையில் இருக்கின்றன என்று கூறுபவர்கள்தாம் நேர்வழி நடப்பவர்கள்.
[தஃப்சீர் இப்னு கஸீர், 3/426-427]


மலக்குகள் மீது நம்பிக்கை

மலக்குகள் மீதான நம்பிக்கையில் இரண்டு அம்சங்கள் உண்டு.

1. இஜ்மால் - சுருக்கமான நம்பிக்கை
2. தஃப்ஸீல் - விரிவான நம்பிக்கை

சுருக்கமான நம்பிக்கை:

மலக்குகளைத் தனக்குக் கட்டுப்பட்டவர்களாக அல்லாஹ் படைத்துள்ளான். "அவர்கள் கண்ணியமான அடிமைகள்; தங்கள் பேச்சில் அவனை முந்திப் பேச மாட்டார்கள்; அவன் கட்டளைப்படி நடப்பவர்கள்" என்று அல்லாஹ்வினால் புகழப்பட்டவர்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ﷺ) கூறினார்கள்:

மலக்குகள் ஔியிலிருந்து படைக்கப்பட்டனர். ஜின்கள் நெருப்பு கொழுந்திலிருந்து படைக்கப்பட்டனர். உங்களை எதிலிருந்து படைத்ததாக வருணித்துள்ளானோ அதிலிருந்து (மண்ணிலிருந்து) ஆதம் படைக்கப்பட்டார்.
[அறிவிப்பு: ஆயிஷா (رضی الله عنها), ஸஹீஹ் முஸ்லிம் 5722]

அல்லாஹ் கூறுகிறான்:
அவர்கள் எந்த வார்த்தையும் மீறிப் பேச மாட்டார்கள். அவனுடைய கட்டளைப்படியே செயல்படுவார்கள். அவர்களுக்கு முன்(னே) உள்ள (எதிர்காலத்)தையும் அவர்களுக்குப் பின்(னே) உள்ள (இறந்த காலத்)தையும் அவன் நன்கறிவான். அவன் விரும்பியவர்களைத் தவிர மற்றெவருக்கும் அவர்கள் பரிந்துரை செய்ய மாட்டார்கள். அவனுக்கு பயந்து நடுங்கிக் கொண்டே இருப்பார்கள்.
[அல் குர்ஆன், 21: 27-28]

அவர்களில் பல வகையினர் உண்டு.

* சிலர், அல்லாஹ்வின் அர்ஷைச் சுமப்பவர்கள்
* சிலர் சொர்க்கம், நரகத்தின் காவலர்கள்.
* சிலர், அடியார்களின் செயல்களைக் கண்காணிப்பவர்கள்.

விரிவான நம்பிக்கை:

ஜிப்ரீல், மீக்காயீல், நரகக் காவலர் மாலிக், சூர் ஊதும் பொறுப்பாளர் இஸ்ராஃபீல் போன்ற பெயர் அறியப்பட்ட மலக்குகளையும் நம்பிக்கை கொள்ள வேண்டும். அல்லாஹ்வும் அவன் தூதரும் இவர்களைப் பற்றி கூறும்போது இவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளனர். எனவே இவர்கள் மீதான நம்பிக்கை விரிவானதாகும்.


குர்ஆனைப் பின்பற்றுவது கட்டாயம்

குர்ஆனைப் பின்பற்றுவது எல்லாச் சமுதாயங்கள் மீதும் கட்டாயக் கடமை. அத்துடன், ஆதாரமிக்க நபிமொழிகள் அடிப்படையில் சட்டங்களை வகுத்துச் செயல்படுவதும் அனைவருக்கும் கடமை. காரணம், முஹம்மது (ﷺ) அவர்களை மனிதர்கள், ஜின்கள் அனைவருக்கும் தூதராகவே அல்லாஹ் அனுப்பினான். இவர்களிடையே தீர்ப்பளிப்பதற்கு குர்ஆனை அவர்களிடம் இறக்கினான்.

குர்ஆன் -

* உள்ளங்களின் நோய்களுக்கு அருமருந்து;
* ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவுபடுத்தக்கூடியது;
* நேர்வழி காட்டி;
* நம்பிக்கையாளர்களுக்கு அருட்கொடை.

அல்லாஹ் கூறுகிறான்:

"இதுதான் வேதம். இதை நாமே இறக்கினோம். இது பாக்கிய மிக்கது. இதையே பின்பற்றுங்கள். அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள். அவனால் அருள்செய்யப்படுவீர்கள்."
[அல்குர்ஆன், 6:155]

(நபியே!) ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாக விவரிக்கும் இவ்வேதத்தை நாமே இறக்கினோம். இது நேர்வழியாகவும், அருளாகவும் இருப்பதுடன் முற்றிலும் கட்டுப்படுபவர்களுக்கு நற்செய்தியாகவும் இருக்கிறது.
[அல் குர்ஆன், 16:89]

(நபியே!) கூறுவீராக: "மனிதர்களே! நிச்சயமாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட ஒரு தூதர். வானங்கள், பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது. வணக்கத்திற்குரிய இறைவன் அவனைத் தவிர யாருமில்லை. அவனே உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கச் செய்கிறான்." எனவே, அந்த அல்லாஹ்வையும் எழுதப் படிக்கத் தெரியா அவனுடைய இத்தூதரையும் நம்பிக்கை கொள்ளுங்கள். அவரும் அல்லாஹ்வையும் அவனுடைய வார்த்தைகளையும் நம்பிக்கை கொள்கிறார். நேர்வழியை அடைய அவரையே பின்பற்றுங்கள்.
[அல்குர்ஆன், 07:158]

இக்கருத்தில் பல வசனங்கள் உண்டு.


தூதர்கள் மீது நம்பிக்கை

அல்லாஹ்வின் தூதர்களையும் சுருக்கமாகவும் விரிவாகவும் நம்பிக்கை கொள்வது நம் கடமை.

சுருக்கமான நம்பிக்கை:

அல்லாஹ் தன் தூதர்களைத் தன் அடியார்களிடம் அனுப்பினான். அத்தூதர்கள் அவர்களுக்கு நற்செயதி கூறினார்கள்; அவர்களை அச்சமூட்டி எச்சரித்தார்கள்; அவர்களை சத்தியத்தின் பக்கம் அழைத்தார்கள். எவர்கள் அத்தூதர்களின் அழைப்பை ஏற்றார்களோ அவர்கள் பாக்கியசாலிகள்; வெற்றியாளர்கள். எவர்கள் அவர்களை ஏற்க மறுத்தார்களோ அவர்கள் இழிந்தவர்கள்; நஷ்டவாளிகள். நம்முடைய நபி முஹம்மது இப்னு அப்துல்லாஹ் (ﷺ) அவர்கள் தான் தூதர்களில் இறுதியானவர்; மிகச் சிறந்தவர்.

அல்லாஹ் கூறுகிறான்:

ஒவ்வொரு சமுதாயத்திற்கும் நிச்சயம் ஒரு தூதரை அனுப்பவே செய்தோம். "அல்லாஹ்வையே வணங்குங்கள்; ஷைத்தான்களை விட்டு விலகுங்கள்" என்றே (அவர்கள்) கூறினார்கள்.
[அல் குர்ஆன், 16:36]

அல்லாஹ் மீது (குற்றம் கூற) மனிதர்களுக்கு எந்த ஆதாரமும் இல்லாதிருக்க, இத்தூதர்களுக்குப் பிறகும் பல தூதர்களை நற்செய்தி கூறுபவர்களாக, எச்சரிப்பவர்களாக (அனுப்பினோம்). அல்லாஹ் மிகைத்தவன். ஞானமுடையவன்.
[அல் குர்ஆன், 4:165]

உங்கள் ஆண்களில் எவருக்கும் முஹம்மது தந்தையாக இருக்கவில்லை. எனினும், அவர் அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கு இறுதியாகவும் இருக்கிறார்.
[அல் குர்ஆன், 33:40]

விரிவான நம்பிக்கை:

தூதர்களில் நூஹ், ஹுது, ஸாலிஹ், இப்றாஹீம் மற்றும் பலரை அல்லாஹ்வும் நபி (ﷺ) அவர்களும் அவரவர்களின் பெயர்களுடன் குறிப்பிட்டுள்ளார்கள். அத்தூதர்களை அவர்களின் பெயர்களுடன் குறிப்பாக நம்பிக்கை கொள்ள வேண்டும். அவர்கள் அனைவர் மீதும், நம் நபி முஹம்மது மீதும் ஈடேற்றம் உண்டாவதாக!


மறுமை நாள் மீது நம்பிக்கை

அல்லாஹ்வும் அவன் தூதரும் இறுதிநாள் பற்றி அறிவித்த அனைத்தையும் நம்பிக்கை கொள்வது இதில் அடங்கும். அவை:

* மனிதன் இறந்த பின் மண்ணறையில் நடக்கும் சோதனை.

* மண்ணறையின் துன்பங்கள்.

* மண்ணறையின் இன்பங்கள்.

* மறுமை நாளின் திடுங்க்கங்கள், தண்டனைகள், துன்பங்கள்.

* சிறாத் பாலம்.

* மீஸான் தராசு.

* கேள்விக்கணக்கு.

* கூலி வழங்கப்படுதல்.

* நன்மை தீமைகளின் பதிவேடு விரிக்கப்படுதல், அந்த ஏடுகளை வலக்கையிலோ இடக்கையிலோ முதுகுப் புறமாகவோ கொடுக்கப்படுதல்.

* நம் நபி முஹம்மது (ﷺ) அவர்களுக்கு கவ்ஸர் தடாகம் வழங்கப்படுதல்.

* சொர்க்கம்.

* நரகம்.

* முஃமின்கள் தங்கள் இறைவனைப் பார்த்தல், அவனுடன் பேசுதல்.

இன்னும் இவற்றைப் போல் குர்ஆனிலும் ஆதாரமிக்க நபிமொழிகளிலும் வந்துள்ள அனைத்தையும் அல்லாஹ்வும் அவன் தூதரும் விவரித்தபடியே நம்புதல் கட்டாயம்.


விதி மீது நம்பிக்கை

விதியும் நம்பிக்கையில் அடங்கும். இந்த நம்பிக்கையில் நான்கு அம்சங்கள் உண்டு.

1. அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்.
2. அல்லாஹ் அனைத்தையும் எழுதிவிட்டான்.
3. அல்லாஹ் நாடுகிறான்.
4. அல்லாஹ் படைக்கிறான்.

1. அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்:

இதுவரை நடந்தவை, இனி நடப்பவை அனைத்தையும் அல்லாஹ் நன்கு அறிவான். தன் அடியார்களின் எல்லா நிலைமைகளையும் அவன் அறிவான். அவர்களின் வாழ்வாதாரம், தவணைக்காலம், செயல்பாடுகள் மற்றும் பிற நிலைகளையும் அவன் அறிவான். எதுவும் அவனுக்கு மறைந்ததில்லை என்று நம்ப வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான்:

நிச்சயம் அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவன்.
[அல் குர்ஆன், 29:62]

நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருள் மீதும் ஆற்றலுடையவன் என்பதையும், நிச்சயமாக அல்லாஹ் தன் அறிவால் ஒவ்வொரு பொருளையும் ஆழமாக அறிகிறான் என்பதையும் திட்டமாக அறிந்து கொள்ளுங்கள்.
[அல் குர்ஆன், 65:12]

2. அல்லாஹ் அனைத்தையும் எழுதிவிட்டான்:

அல்லாஹ் எதைச் செய்ய தீர்மானித்தானோ, எதை விதியாக நிர்ணயித்தானோ அவை அனைத்தையும் எழுதிவிட்டான் என்று நம்ப வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான்:

(இறந்த) பிறகு அவர்களின் உடலை மண் தின்று அழிப்பதை நிச்சயம் அறிவோம். (அனைத்தும் எழுதி) பாதுகாக்கப்பட்ட பதிவுப் புத்தகம் நம்மிடம் உண்டு.
[அல் குர்ஆன், 50:4]

இறந்தவர்களை நிச்சயம் உயிர்ப்பித்து எழுப்புவோம். அவர்கள் செய்து அனுப்பிய செயல்களையும், அவர்கள் விட்டுச் சென்ற செயல்களையும் எழுதி வருகிறோம். இவை அனைத்தையும் பதிவுப் புத்தகத்தில் பதிந்தே வைத்திருக்கிறோம்.
[அல் குர்ஆன், 36:12]

(நபியே!) வானத்திலும் பூமியிலும் உள்ளவற்றை நிச்சயம் அல்லாஹ் நன்கறிவான் என்பது உமக்குத் தெரியாதா? நிச்சயம் இவை அனைத்தும் அவனுடைய பதிவுப் புத்தகத்தில் உண்டு. நிச்சயம் இது அல்லாஹ்வுக்கு மிக எளிதுதான்.
[அல் குர்ஆன், 22:70]


3. அல்லாஹ் நாடுகிறான்:

எப்போதும் நடைபெறும் அல்லாஹ்வின் நாட்டத்தை நம்ப வேண்டும். அல்லாஹ் நாடுவது நடந்தே தீரும்; அவன் நாடாதது நடக்கவே நடக்காது.

அல்லாஹ் கூறுகிறான்:

நிச்சயமாக நான் நாடியதையே செய்கிறேன்.
[அல் குர்ஆன், 22:18]

அவன் எதையேனும் நாடினால் அதை ஆகு என்றே கூறுவான். உடனே அது ஆகிவிடும்.
[அல் குர்ஆன், 36:82]

எனினும், அகிலங்களின் இறைவன் அல்லாஹ் நாடினால் தவிர, நீங்கள் நாடமாட்டீர்கள்.
[அல் குர்ஆன், 81:29]


4. அல்லாஹ் படைக்கிறான்:

உலகில் இருக்கும அனைத்தையும் அவனே படைத்தான். அவனைத் தவிர வேறு படைப்பாளனோ, பாதுகாவலனோ யாருமில்லை என்றும் நம்ப வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான்:

அல்லாஹ்தான் ஒவ்வொரு பொருளையும் படைப்பவன். அவனே ஒவ்வொரு பொருளின் பொறுப்பாளன்.
[அல் குர்ஆன், 39:62]

மனிதர்களே! உங்கள் மீதுள்ள அல்லாஹ்வின் அருட்கொடையை நினைத்துப் பாருங்கள். அல்லாஹ்வைத் தவிர வேறு படைப்பாளன் உண்டா? வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் அவனே உங்களுக்கு உணவளிக்கிறான். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அப்படியிருக்க, எப்படித்தான் (இந்த உண்மையை விட்டுத்) திருப்பப்படுகிறீர்கள்?
[அல் குர்ஆன், 35:03]

இந்த நான்கு அம்சங்களும் விதியை நம்புவதில் அடங்கும். இதுவே குர்ஆன் மற்றும்  நபிவழியைப் பின்பற்றும் அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத் அகீதா. பித்அத்வாதிகள் இவற்றில் சிலவற்றை மாற்றுக் கொள்கை கொண்டு மறுக்கிறார்கள்.


சொல்லும் செயலும் ஈமானில் அடங்கும்

ஈமான் என்பது சொல் மற்றும் செயல். அது அல்லாஹ்வுக்குக் கீழ்படிவதால் அதிகரிக்கும்; மாறுசெயவதால் குறையும். இதுவும் அல்லாஹ்வை நம்புவதில் அடங்கும்.

அல்லாஹ்வுக்கு இணைவைத்து அவனை மறுக்காத வரை, எந்த முஸ்லிமையும் அவரின் மற்ற பாவங்களுக்காக காஃபிர் என்று கூறக்கூடாது.

விபசாரம், திருட்டு, வட்டி உண்ணுதல், போதைப் பொருள் பயன்படுத்துதல், தாய் தந்தையைத் துன்புறுத்துதல் இவை போன்ற பெரும் பாவங்ளைச் செய்பவர்கள், அப்பாவங்களைக் கூடும் (ஹலால்) என்று கருதாத வரை அவர்களை காஃபிர் எனக் கூறக் கூடாது.

காரணம், அல்லாஹ் கூறுகிறான்:

நிச்சயம் அல்லாஹ் தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான். இதைத் தவிர எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்.
[அல் குர்ஆன், 4:48]

அல்லாஹ்வின் தூதர் (ﷺ) கூறினார்கள்:

"எவரின் உள்ளத்தில் கடுகளவு ஈமான் உள்ளதோ, அவரை நிச்சயம் அல்லாஹ் நரகிலிருந்து வெளியேற்றுவான்."

[அறிவிப்பாளர்: அபூசயீது அல்குத்ரீ (رضی الله عنه), ஸஹீஹ் புகாரீ - 22]

விரும்புவதும் வெறுப்பதும் அல்லாஹ்வுக்காகவே!:-

ஒருவரை அல்லாஹ்வுக்காகவே விரும்புவதும், அல்லாஹ்வுக்காகவே வெறுப்பதும், அல்லாஹ்வுக்காகவே அவரிடம் நட்பு வைப்பதும், அல்லாஹ்வுக்காகவே அவரைப் பகைப்பதும் ஈமானில் அடங்கும். எனவே, முஃமின்கள் மற்ற முஃமின்களையே விரும்ப வேண்டும். காஃபிர்களை விரும்பக் கூடாது.


நபித்தோழர்கள் நபிமார்களுக்கு அடுத்தவர்கள்

அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்களுடைய தோழர்கள்தாம் இச்சமுதாயத்தின் முஃமின்களில் முதல் தரமானவர்கள். நபிவழியைப் பின்பற்றுவோர் அவர்களை நேசிப்பார்கள்; அவர்களையே நண்பர்களாகக் கொள்வார்கள்; நபிமார்களுக்கு அடுத்து மனிதர்களில் மிகச் சிறந்தவர்கள் அவர்களே என்றும் நம்புவார்கள்.

காரணம், அல்லாஹ்வின் தூதர் (ﷺ) கூறினார்கள்:

என் சமுதாயத்தில் மிகச் சிறந்தவர்கள் எனது தலைமுறையே. அவர்களுக்குப் பின், அவர்களை அடுத்து வருவோர் சிறந்தவர்கள். அவர்களுக்குப் பின், அவர்களை அடுத்து வருவோர் சிறந்தவர்கள்.
[அறிவிப்பாளர்: இம்ரான் இப்னு ஹுசைன் (رضی الله عنه), ஸஹீஹ் புகாரீ - 3650]

இந்த நபிமொழி உண்மை என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.

நபித்தோழர்களில் மிகச் சிறந்தவர் அபூபக்ர் அஸ்ஸித்தீக் (رضی الله عنه), அவர்களுக்கு அடுத்து உமர் அல்ஃபாரூக் (رضی الله عنه), அவர்களை அடுத்து உஸ்மான் துன்னூரைன் (رضی الله عنه), பின்பு அலீ அல்முர்தளா (رضی الله عنه).

இந்த நான்கு பேரை அடுத்து, சொர்க்க நற்செய்தி பெற்ற பத்துப் பேர்களில் மீதமுள்ளவர்கள் சிறந்தவர்கள். அதன் பிறகு மற்ற நபித்தோழர்கள் அனைவருமே சிறந்தவர்கள். அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் இதில் உறுதியாக இருக்கிறார்கள்.


நபித்தோழர்கள் - இறுதிவரை நேர்வழியில் நிலைத்தவர்கள்

நபித்தோழர்கள் மத்தியில் ஏற்பட்ட சில கருத்துவேறுபாடுகளை உண்மையில் நபிவழி நடப்போர் விமர்சிக்க மாட்டார்கள். அப்போதைய பிரச்சனைகளை ஆராய்ந்து, அவற்றில் சரியான தீர்ப்பை அடைந்த நபித்தோழர்களுக்கு இரட்டைக் கூலிகள் உண்டு. ஆராய்ந்த பிறகும் சரியான தீர்ப்பை அடையாதவர்களுக்கு ஒரு கூலி உண்டு. 

நபி (ﷺ) அவர்களின் குடும்பத்தினர் மற்றும் அவர்களின் மனைவியரான முஃமின்களின் தாய்கள் அனைவரையும் நபிவழிக்காரர்கள் நேசிப்பார்கள்; அவர்கள் அனைவரையும் பொருந்திக்கொள்வார்கள்.

ராஃபிளா மற்றும் நவாஸிப் கூட்டங்களின் பாதையிலிருந்து விலகியிருப்பார்கள். இவற்றில்,

* ராஃபிளா (ஷிஆ) கூட்டத்தினர் நபித்தோழர்களைத் திட்டுவார்கள்; பழிப்பார்கள்; நபியின் குடும்பத்தாரை அல்லாஹ் வரையறுத்த தகுதியைவிட அளவுக்கு மீறி உயர்த்துவார்கள்.

* நவாஸிப் கூட்டத்தினர் நபியின் குடும்பத்தாரைச் சொல்லாலும் செயலாலும் துன்புறுத்துவார்கள்.

இந்த இரண்டு வழிகெட்ட கூட்டங்களை விட்டு நபிவழிக்காரர்கள் விலகியிருப்பார்கள்.


நபித்தோழர்களைப் பின்பற்றியோரே பாதுகாப்பு பெற்றவர்கள்

சுருக்கமாக நாம் குறிப்பிட்ட இவை அனைத்தும் இஸ்லாமின் உண்மைக் கொள்கையில் அடங்கியவை. இதற்காகத்தான் முஹம்மது (ﷺ) அவர்களை அல்லாஹ் அனுப்பினான். பாதுகாப்பு பெற்ற கூட்டமாகிய அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத் அகீதா இதுதான்.

அல்லாஹ்வின் தூதர் (ﷺ) கூறினார்கள்:

என் சமுதாயத்தில் ஒரு கூட்டம் (அல்லாஹ்வினால்) உதவி செய்யப்பட்ட நிலையில், அல்லாஹ்வின் கட்டளை (மறுமை) வரும் வரை, எப்போதும் உண்மையில் நிலைத்திருக்கும். வழிகேடர்கள் அவர்களுக்கு தீங்கு செய்ய முடியாது.
[அறிவிப்பாளர்: முஆவியா (رضی الله عنه), ஸஹீஹ் புகாரீ - 71, 7460]

"யூதர்கள், எழுபத்தொன்று கூட்டங்களாகப் பிரிந்தார்கள். ஒன்று சொர்க்கத்திலும் எழுபது நரகத்திலும் இருக்கும். கிறித்துவர்கள், எழுபத்திரண்டு கூட்டங்களாகப் பிரிந்தார்கள். ஒன்று சொர்க்கத்திலும் எழுபத்தொன்று நரகத்திலும் இருக்கும். முஹம்மதின் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக! என் சமுதாயம் எழுபத்து மூன்று கூட்டங்களாகப் பிரியும். ஒன்று சொர்க்கத்திலும் எழுபத்திரண்டு நரகத்திலும் இருக்கும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ﷺ) கூறினார்கள். அப்போது "அல்லாஹ்வின் தூதரே! அந்த ஒரு கூட்டம் யார்?" எனக் கேட்கப்பட்டது. அவர்கள், "அல்ஜமாஆ" என்றார்கள்.

மற்றோர் அறிவிப்பில்,

"ஒரு கூட்டம் தவிர மற்றவர்கள் அனைவரும் நரகம் செல்வார்கள். நானும் என் தோழர்களும் எந்த வழியில் இருக்கிறோமோ அவ்வழியில் இருப்பவர்களே அந்த ஒரு கூட்டம்" என்று நபியவர்கள் கூறினார்கள்.
[ஜாமிவுத் திர்மிதீ 2853, அஸ்ஸஹீஹா - 204]

அந்த அடிப்படையிலான அகீதாதான் பின்பற்றத் தகுதியானது; மிகச் சரியானது. இதற்கு முரணான அனைத்தையும் விட்டுவிட வேண்டும். இந்த அகீதாவை விட்டு வழிதவறி, இதற்கு எதிரான அகீதாக்களில் செல்லும் கூட்டங்கள் ஏராளம்.


வழிகெட்ட கூட்டங்கள்

இணைவைப்பவர்கள்:

* சிலைகளையும் உருவப்படங்களையும் வணங்குபவர்கள்,

* இறந்தவர்களின் சமாதியை வணங்குபவர்கள்,

* மலக்குகள், நல்லடியார்கள், ஜின்கள், மரங்கள், கற்கள் மற்றும் படைப்புகள் அனைத்தையும் வணங்குபவர்கள்.

இவர்கள் தாம் வழிதவறிய கூட்டங்கள்.

இவர்கள் அனைவருமே நபிமார்களின் அழைப்பை ஏற்க மறுத்தவர்கள்.

குறைஷிகளும் சில அரபுக் கூட்டங்களும் நபியவர்களை மறுத்து மாறுசெய்தார்களே அவர்களைப் போன்றவர்கள்.

- அந்த மக்கள் தாங்கள் வணங்கிய பொய் தெய்வங்களிடம் தேவைகளைக் கேட்டார்கள்.

- நோயாளிகளைக் குணப்படுத்தவும், எதிரிகளை வெற்றி கொள்ளவும் அத்தெய்வங்களிடமே உதவி தேடினார்கள்.

- அவற்றுக்காக அறுத்துப் பலியிட்டார்கள்; நேர்ச்சை செய்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ﷺ) இவை அனைத்தையும் மறுத்து, வணக்கங்களை அல்லாஹ்வுக்கு மட்டுமே தூய்மையாகச் செய்யும்படி கட்டளையிட்டபோது, அதைப் பெரும் ஆச்சரியமாகக் கூறி நிராகரித்தார்கள்.

அவர்கள் கூறியதை அல்லாஹ் கூறுகிறான்:

(இணைவைப்போர் கூறினார்கள்:) என்ன! எல்லாத் தெய்வங்களையும் இவர் ஒரே தெய்வம் ஆக்கிவிட்டாரா? உண்மையில், இது ஓர் ஆச்சரியமான விஷயம்தான்.
[அல் குர்ஆன், 38:5]

ஆயினும் நபி (ﷺ) அவர்கள் தொடர்ந்து அம்மக்களை அல்லாஹ்வின் பக்கம் அழைத்தார்கள். இணைவைப்பதைப் பற்றி எச்சரித்தார்கள். தமது அழைப்பில் இருக்கும் உண்மையை விளக்கிச் சொன்னார்கள். இறுதியில் அல்லாஹ்வினால் நேர்வழி காட்டப்பட்டோர் நேர்வழி அடைந்தார்கள். மக்கள் கூட்டம் கூட்டமாக இம்மார்க்கத்தில் நுழைந்தார்கள்.

நபியும் நபித்தோழர்களும் அவர்களைப் பின்பற்றிய நல்லவர்களும் மேற்கொண்ட தொடர் அழைப்பினாலும், கடும் போராட்டத்தினாலும் அல்லாஹ்வின் இம்மார்க்கம், பொய் மார்க்கங்கள் அனைத்தையும் மிகைத்து உயர்ந்தது.

காலங்கள் சென்றன. நிலைமைகள் மாறின. மக்களிடம் அறியாமை அதிகமானது. பெரும்பாலோர் அறியாமைக் கால மார்க்கத்திற்குத் திரும்பினார்கள். நபிமார்களையும் நல்லோர்களையும் கண்ணியப்படுத்துவதில் வரம்பு மீறினார்கள்.  தங்கள் தேவைகளை அவர்களிடம் கேட்டார்கள். அவர்களிடம் பாதுகாவல் தேடினார்கள். இதுபோன்ற பல இணைவைப்புச் செயல்களைச் செய்தார்கள். லா இலாஹ இல்லல்லாஹ் உடைய அர்த்தத்தை அறியாமைக்கால அரபுக் காஃபிர்கள் தெரிந்திருந்த அளவு கூட, அர்த்தம் தெரியாத மக்களாகிவிட்டார்கள். அல்லாஹ்வே போதுமானவன்.

படைப்புகளிடம் பரிந்துரை கேட்பவர்கள்

அறியாமை அதிகமானது. நபித்துவக் காலத்தை விட்டு நமது காலம் தூரமானது. இதனால் இணைவைக்கும் காரியங்கள் பரவலாகி மக்களிடம் நீங்கா இடம்பெற்றுவிட்டது. எது முற்கால மக்களின் வாதமாக இருந்ததோ, அதுவே பிற்கால மக்களின் வாதமாகவும் ஆகிவிட்டது.

அவர்கள் கூறியதைக் குர்ஆன் இப்படி குறிப்பிடுகிறது:

இந்த தெய்வங்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவை.
[அல் குர்ஆன், 10:18]

இவர்கள் எங்களை அல்லாஹ்வுக்கு மிக நெருக்கமாக்குவார்கள் என்பதற்கே தவிர நாங்கள் இவர்களை வணங்கவில்லை.
[அல் குர்ஆன், 39:03]

இந்த வாதங்கள் அனைத்திற்கும் பதிலடி கொடுத்த அல்லாஹ் தன்னுடன் எதை வணங்கினாலும் அது இணைவைப்பே, அவ்வாறு வணங்கியவன் காஃபிரே என்று தெளிவுபடுத்தினான்.

தங்களுக்கு எந்த நன்மையும் தீமையும் செய்ய முடியாத அல்லாஹ் அல்லாதவற்றை வணங்குவதுடன், "அல்லாஹ்விடம் இவை எங்களுக்குப் பரிந்துரை செய்பவை" என்றும் கூறுகிறார்கள்.
[அல் குர்ஆன், 10:18]

அவர்களின் இக்கூற்றுக்கு அல்லாஹ் பின்வரும் மறுப்பைக் கூறினான்:

(நபியே! அவர்களுக்குக்) கூறுவீராக: வானங்களிலோ பூமியிலோ அல்லாஹ்வுக்குத் தெரியாதவற்றையா அவனுக்கு அறிவிக்கிறீர்கள்? அவனோ மிகத் தூயவன்; அவர்கள் இணைவைப்பதை விட்டு மிக உயர்ந்தவன்.
[அல் குர்ஆன், 10:18]

அல்லாஹ்வுடன் நபிமார்களையும் நல்லடியார்களையும் வணங்குவது பெரிய ஷிர்க். அதைச் செய்பவர்கள் அதற்கு வேறு பெயர் சொன்னாலும், அது பகிரங்க ஷிர்க்கே என்று இவ்வசனத்தில் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

அல்லாஹ் கூறுகிறான்:

எவர்கள் அல்லாஹ் அல்லாதவர்களை, தங்கள் பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள், "அத்தெய்வங்கள் எங்களை அல்லாஹ்வுக்கு மிக நெருக்கமாக்குவார்கள் என்பற்கே தவிர நாங்கள் இவர்களை வணங்கவில்லை" என்றார்கள்.
[அல் குர்ஆன், 39:03]

இப்படி கூறியோருக்கு அல்லாஹ் பின்வரும் பதிலடி கொடுத்தான்:

அவர்கள் தர்கித்துக் கொண்டிருக்கும் இவ்விஷயத்தைப் பற்றி அல்லாஹ் அவர்களுக்கிடையே (மறுமையில்) தீர்பளிப்பான். நிச்சயமாக அல்லாஹ் (இந்தப்) பொய்யர்களையும் காஃபிர்களையும் நேர்வழி செலுத்தமாட்டான்.
[அல் குர்ஆன், 39:03]

அல்லாஹ் அல்லாதவர்களிடம் துஆ கேட்டால், அவன் அல்லாதவர்களுக்குப் பயப்படுதல், அவர்களிடம் ஆதரவு வைத்தல் மற்றும் இது போன்ற எந்தக் காரியம் செய்தாலும், அது அல்லாஹ்வை நிராகரிக்கும் காரியமே என்று அவன் தெளிவுபடுத்திவிட்டான்.

தாங்கள் வணங்கும் தெய்வங்கள் தங்களை அல்லாஹ்விடம் நெருக்கமாக்கும் என்ற அவர்களின் கூற்று பெரும் பொய்யே என்றும் கூறிவிட்டான்.

அடக்கத்தலங்களைப் பூஜிப்பவர்கள்:

எகிப்து நாட்டில் ஹுசைன், பதவீ மற்றும் பலருடைய அடக்கத்தலங்களிலும், ஏடனில் அய்தரூஸ் என்பவரின் அடக்கத்தலத்திலும எமனில் ஹாதி என்பவரின் அடக்கத்தலத்திலும், சிரியாவில் இப்னு அரபியின் அடக்கத்தலத்திலும், இராக்கில் ஷெய்க். அப்துல் காதிர் ஜீலானி (رحمه الله) அவர்களின் அடக்கத்தலத்திலும் இவை தவிர இன்னும் பல பிரபலங்களின் அடக்கத்தலங்களிலும் எத்தனை எத்தனை கொடுமைகள்! பார்ப்பவர்களுக்குப் புரியும்!

இந்த இடங்களில் மக்கள் வரம்பு மீறுகிறார்கள். அல்லாஹ்வுக்குரிய வணக்கங்களில் அதிகமானவற்றை அங்கு அடங்கியிருப்பவர்களுக்குச் செய்கிறார்கள்.

தன் தூதர் முஹம்மது (ﷺ) அவர்களையும், அவர்களுக்கு முந்திய நபிமார்களையும் எந்தத் தவ்ஹீதை விளக்குவதற்காக அல்லாஹ் அனுப்பினானோ, அதை விளக்கிச் சொல்பவர்களும், மேற்கண்ட பித்அத்களை வெறுத்துத் தடுப்பவர்களும் மிகக் குறைந்துவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்: அவர்களை நேர்வழியில் அல்லாஹ் செலுத்துவானாக! நேர்வழியில் அழைக்கும் அழைப்பாளர்களை அவர்களுக்கு மத்தியில் பெருக்குவானாக! ஷிர்க்கை எதிர்த்துப் போராடும் அறிஞர்களுக்கும் வழிகாட்டிகளுக்கும் அருள்புரிவானாக! அவனே அனைத்தையும் செவியுறுபவன்; அருகிலுள்ளவன்.

நாத்திகம் பேசுபவர்கள்:

காரல் மார்க்ஸ், லெனின் ஆகியோரைப் பின்பற்றும் நாத்திகர் கொள்கையும் இஸ்லாமிய அடிப்படைக்கு முரணானதே. இவர்கள் தாம் இன்று நாத்திகம் பேசி மக்களை இறைநிராகரிப்பின் பக்கம் அழைப்பவர்கள். சோசலிசம், கம்யூனிசம், பாஃதிசம் என்று இவர்களின் கொள்கைக்கு எந்தப் பெயர் சொன்னாலும், அல்லாஹ்வின் தூதர்கள் கொண்டு வந்த கொள்கைக்கு அவை எதிரானதே.

அல்லாஹ் இல்லை, இவ்வுலக வாழ்வே சதம் என்பதுதான் நாத்திகர்களின் அடிப்படை. இவர்களது மற்றோர் அடிப்படை, மறுமை வாழ்வையும், சொர்க்கம், நரகத்தையும் மறுத்து, எல்லா மதங்களையும் நிராகரிக்க வேண்டும் என்பது.

இவர்களின் புத்தகங்களிலும் சொற்பொழிவுகளிலும் இதைத் தெளிவாகப் பார்க்கலாம்.

அல்லாஹ் கொடுத்த மார்க்கங்கள் அனைத்திற்கும் முரண்பட்டதே இவர்கள் கொள்கை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இக்கொள்கையை பின்பற்றுவோர் இம்மையிலும் மறுமையிலும் இழிவையே சந்திப்பர் என்பதிலும் சந்தேகம் இல்லை.

பித்அத் செய்பவர்கள்:

ஜஹ்மிய்யா, முஅதஸிலா கூட்டத்தினரும் அவர்களின் வழியில் செல்வோரும் அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகளை மறுக்கிறார்கள்; முழுமை பெற்ற அவன் பண்புகளை அவனுக்கு இல்லை என்று புறக்கணிக்கிறார்கள். இந்தப் பித்அத்வாதிகளின் கொள்கைகள், இஸ்லாமிய உண்மை அகீதாவுக்கு எதிரானது.

இவர்கள் கொள்கைப்படி, இல்லவே இல்லாதவற்றின் தன்மைகளைக் கொண்டும், ஜடப் பொருட்களின் தன்மைகளைக் கொண்டும் அல்லாஹ்வை வருணிக்கிறார்கள். அல்லாஹ்வோ இவர்களின் தவறான கூற்றுகளை விட்டு மிக உயர்ந்தவன்.

அஷ்அரிய்யா கூட்டத்தினர் அல்லாஹ்வின் பண்புகளில் சிலவற்றை ஏற்கிறார்கள்; சிலவற்றை மறுக்கிறார்கள். இவர்களும் இஸ்லாமிய உண்மை அகீதாவுக்கு மாற்றமானவர்கள்தாம். எதிலிருந்து தப்பிப்பதற்காக சில பண்புகளை மறுத்து, அவற்றின் ஆதாரங்களுக்குச் சுயவிளக்கம் தந்தார்களோ, அது அவர்கள் ஏற்றுக்கொண்ட பண்புகளிலும் நிர்பந்தமாக இருக்கவே செய்கிறது. இதனால் மார்க்கம் மற்றும் தர்க்க ஆதாரங்களுக்கு முரண்பட்டார்கள்; தங்களுக்குள்ளும் தெளிவாக முரண்பட்டார்கள்.



உண்மையான அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத்

* அல்லாஹ் தன்னைப் பற்றி வெளிப்படுத்திய பெயர்கள் பண்புகள் அனைத்தையும் முழுமையாக நம்பிக்கை கொள்வார்கள்.

* அவனுடைய தூதர் (ﷺ) அவர்கள் அல்லாஹ்வுக்கு உண்டென வெளிப்படுத்திய பெயர்கள், பண்புகளையும் முழுமையாக நம்பிக்கை கொள்வார்கள்.

* அல்லாஹ்வை அவனுடைய படைப்புகளுடன் ஒப்பிடுவதை விட்டுத் தூய்மைப்படுத்துவார்கள்.

* அவனுடைய பெயர்கள் பண்புகளில் எதையும் புறக்கணிக்க மாட்டார்கள்.

* அவற்றை மாற்ற மாட்டார்கள். எல்லா ஆதாரங்களையும் செயல்படுத்துவார்கள்.

* எனவேதான், மற்றவர்கள் வீழ்ந்து கிடக்கும் முரண்பாடுகளை விட்டுப் பாதுகாப்பு பெற்றார்கள்.

இதுதான் வெற்றிப் பாதை.

இம்மை மறுமையின் பாக்கிய பாதை.

முந்திய சமுதாயமும், இமாம்களும் சென்ற நேரான பாதை.

அந்த முன்னோர்கள் எந்தப் பாதையில் நடந்து சீர்திருத்தம் பெற்றார்களோ, அப்பாதையில் நடந்தாலே தவிர பின்னோர்கள் சீர்பெற முடியாது.

குர்ஆனையும் நபிவழியையும் பின்பற்றி நடந்து, அதற்கு மாற்றமான அனைத்தையும் விட்டு விலகுவதே அப்பாதை.

أحدث أقدم