வஹியை சமகால நிகழ்வுகளோடு கண்மூடித்தனமாக ஒப்பீடு செய்தலும், பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும்.

குழப்பங்கள் மற்றும் இறுதி நாளின் அடையாளங்கள் தொடர்பான குர்ஆனிய வசனம் மற்றும் ஹதீஸ்களை, சமகாலத்தில் ஏற்படும் நிகழ்வுகளோடு கவனமின்றி சாதாரணமாக ஒப்பீடு செய்து வஹியில் சொல்லப்படும் நிகழ்வுகள் இவைதான் என்று, சொல்லிக்கொண்டிருக்கும்  கூட்டம் காலத்துக்கு காலம் உருவாகிக்கொண்டிருப்பதைக் காணக்கிடைக்கிறது.

இறுதிநாள் அடையாளங்கள் மற்றும் குழப்பங்கள் தொடர்பான வஹியின் வசனங்களை, நம்மைச் சூழ ஏற்படும் நிகழ்வுகளோடு ஒப்பீடு செய்து புரிந்து கொள்வதைப் பொருத்தவரை, இரு பிரிவினர் காணப்படுகின்றனர் 

01. சாதாரணமாக தீர்ப்புகளை வழங்கி மக்கள் மத்தியில் தடுமாற்றத்தை உருவாக்கி வருகின்றனர். 
(இவர்களே சமூகத்தில் அதிகம் காணப்படுகின்றனர்) 

02. வஹியில் சொல்லப்பட்ட சகல அம்சங்களையும் உள்ளடக்கிய ஓர் நிகழ்வு ஏற்பட்டாலும் அதை ஒப்பீடு செய்வதை முழுமையாக தவிர்க்கும் சிலர். (அது தொடர்பான வஹி வசனங்களுக்கு அர்த்தமே இல்லை என்ற அமைப்பில் உருவாகும் பிழையான அணுகுமுறை) 

இவ்விடயத்தை பொருத்தவரை அறிஞர்கள், சில விதிகள் மற்றும் அணுகுமுறைகளை எழுதியுள்ளனர். 

ஓர் நிகழ்வு ஏற்படும் போது அது இறைவன் அல்லது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய நிகழ்வுதான் (கூறிய நபர்தான்) அல்லது இறுதிநாள் அடையாளங்களில் உள்ள ஒன்றுதான் என்று உறுதிப்படுத்துவதற்கு பின்வரும் அணுகுமுறை மற்றும் விதிமுறைகளை அறிந்திருத்தல் அவசியம்.

வசனங்களை, குறித்த நிகழ்வுகள் அல்லது குறித்த நபருக்கு பொருத்திப் பார்ப்பதை ஆரம்பத்தில் தவிர்த்தல். 

(அது தொடர்பான பூரண தெளிவின்றி குறித்த நிகழ்வுகளோடும் நபர்களுடனும் பொருத்திப் பார்ப்பது, வஹிக்கு அறிவின்றி விளக்கமளித்தல் மற்றும் நோக்கமாகக் கருதப்படாத எல்லா நிகழ்வுகளையும் வஹியுடன் ஒப்பீடு செய்தல் போன்ற தவறுகளுக்கு வழிவகுக்கும்)

01 - வஹியுடன் (குர்ஆன், ஹதீஸ்) சுருக்கிக்கொண்டு (ஹதீஸ்கள்) அவை ஸஹீஹானவையா என பார்த்தல் வேண்டும். (தற்காலத்தில், பெரும்பாலான நிகழ்வுகளை பலவீனமான ஹதீஸ்களுடன் பொருத்திப் பார்க்கும் அணுகுமுறைதான் அரங்கேறிக் கொண்டிருக்கிறது) 

ஸஹாபாக்களின் கூற்றுகளைப் பொருத்தவரை இஜ்திஹாதிற்கு அப்பாற்பட்ட விடயங்கள், ஹதீஸின் தரத்தில் வைத்துப் பார்க்கப்படும்.
(உதாரணமாக முன்சென்ற சமூகத்தவர்கள், மறைவான விடயங்கள், சுவனம் நரகம், பின் நிகழக்கூடிய விடயங்கள்)  

02- வஹியுடன் நிகழ்வுகளைப் பொருத்திப் பார்ப்பது இலகுவான முறையில் அமையப்பெறல் வேண்டும். 

தன்னை வருத்தி கஷ்டப்பட்டு அர்த்தங்களைக் புரிந்துகொள்வதில் சிரமப்பட்டு அலட்டிக் கொள்ளாமல் இருக்க வேண்டும், ஏனெனில் வஹியில் இது தொடர்பாக சொல்லப்பட்ட நிகழ்வுகள் தெளிவாகப் பதியப்பட்டுள்ளன.
(தொடர்பில்லாத, நோக்கமாகக் கருதப்படாத நிகழ்வுகளை அளவுக்கு மீறி சிந்தித்து உருவாக்கவேண்டிய அவசியம் இல்லை) 

03- நிகழ்வுகளின் தன்மைகளையும் வஹியில் கூறப்பட்ட அம்சங்களையும் அறிவுபூர்வமாக ஒப்பீடு செய்து  நூறு வீதம் ஒத்துப் போகின்றனவா என  உறுதிப்படுத்தல் வேண்டும்.
(பெரும்பாலான தன்மைகள் பொருந்திப் போகிறன என்பதற்கான குறித்த நிகழ்வு வஹியுடன் பொருந்த போவதில்லை. அத்தோடு தன்மைகளை அறிவதற்கு அத்துறைசார்ந்த அறிவும் அனுபவமும் அவசியம்) 

04- வஹியுடன் நிகழ்வுகளைப் பொருத்திப் பார்க்கும் போது, நிதானமாக நடந்துகொள்வதோடு துறைசார்ந்த அறிஞர்களை நாடுதல் வேண்டும். 

முழுமையாக வஹியுடன் பொருந்திப் போகின்ற நிகழ்வுகள் உறுதியான பின்னர், அவற்றை சமூகத்தில் வெளிப்படுத்தலாமா இல்லையா என்பதை பொதுநலன் கருதி கற்றறிந்த ஆலிம்களுடன் ஆலோசனை செய்யவேண்டும். 

இவ்வாறான அணுகுமுறைகளைக் கையாளத் தவறும் பட்சத்தில் சமூகத்தில் பாதிப்புகள் உருவாகும் என்பதில் ஐயமில்லை.

தான்தோன்றித்தனமாக தத்தமது அறிவுக்கு எட்டிய விதத்தில் வ‌ஹிக்கு விளக்கம் கொடுத்து சமூகத்தில் குழப்பங்களையும் சந்தேகங்களையும் ஏற்படுத்த முயலும் ஒரு சாரார்  இருக்கும் வரை அறியாமையும் வாழ்ந்து கொண்டே இருக்கும்.

- Ahsan Ibnu Asman Muhajiri
أحدث أقدم